குர்பானி ஏற்படுத்தும் மாற்றங்களும்,அரஃபா நாள் நோன்பும், அய்யாமுத் தஷ்ரீக் தக்பீரும்… 13-06-2024



THURSDAY 13 JUNE 2024

 

குர்பானி ஏற்படுத்தும் மாற்றங்களும், அரஃபா நாள் நோன்பும், அய்யாமுத் தஷ்ரீக் தக்பீரும்…




அல்லாஹ்வுடைய மகத்தான கிருபையால் வருடத்தின் மிகச்சிறந்த நாட்கள் என்று மார்க்கம் அடையாளப் படுத்தியிருக்கிற துல்ஹஜ் மாதத்தின் ஆரம்ப நாட்களை அடைந்திருக்கிறோம்.அங்கே ஹாஜிகள் ஹஜ்ஜை நிறைவேற்றுவதற்காக தங்களைத் தயார்படுத்திக் கொண்டிருக்கிற அதே வேளையில் நாம் இங்கே அந்த ஹஜ்ஜின் கடமைகளையும் அந்த புனித இடங்களையும் நினைத்துப் பார்த்து இன்ஷா அல்லாஹ் வரக்கூடிய காலங்களில் அங்கே செல்ல வேண்டும் என்று இறைவனிடத்தில் பிரார்த்தித்துக் கொண்டிருக்கிறோம். அல்லாஹ் நம் அனைவருக்கும் ஹஜ்ஜுடைய பாக்கியத்தைத் தருவானாக

இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஹஜ் என்பது தனித்துவம் வாய்ந்தது. ஹஜ்ஜுடைய கடமைகளுக்கும் மற்ற கடமைகளுக்கும் மிகப்பெரிய வித்தியாசம் உண்டு. தொழுகையை ஒருவர் உலகில் எங்கிருந்தாலும் தொழ முடியும். எங்கிருந்தாலும் ஒருவரால் நோன்பு நோற்க முடியும். ஜகாத் கொடுக்க முடியும். வருடத்தின் எந்த நாட்களிலும் தொழ முடியும். நோன்பு நோற்க முடியும், ஜகாத் கொடுக்க முடியும். ஆனால் ஹஜ்ஜுடைய கடமைகளை அந்த இடங்களில் தான் செய்ய முடியும். அந்த குறிப்பிட்ட நாட்களில் தான் நிறைவேற்ற முடியும்.

ஹஜ்ஜிலும் உம்ராவிலும் தவாஃப் என்பது முக்கிய அமலாக இருக்கிறது. ஒருவர் தங்கத்தால் கஃபாவைப் போன்று ஒரு கட்டிடத்தை எழுப்பி நான் எனது ஊரிலேயே அதனைச் சுற்றி வருவேன் என்று சொல்லி அவ்வாறு செய்தாலும் அது தவாஃபாக ஆகாது.

இப்ராஹிம் அலை அவர்களின் மனைவியான ஹாஜரா அம்மையார் அவர்கள் ஸஃபா - மர்வா மலைகளுக்கு இடையே தண்ணீரைத் தேடி ஓடியதை ஒரு இபாதத்தாகவே அல்லாஹ் ஆக்கி விட்டான்.புற்பூண்டு கூட முளைக்காத சஃபா - மர்வா மலைகளுக்குப் பதிலாக எனது ஊரில் இருக்கிற இரண்டு பசுமையான மலைகளுக்கு இடையே நான் ஓடுகிறேன் என்று ஒருவர் ஓடினாலும் அது ஸஈயாக ஆகாது. அதற்கு அனுமதியும் இல்லை.

ஹஜ்ஜுக்கு செல்லக் கூடியவர்கள் செய்யக்கூடிய மற்றொரு அமல் ஷைத்தானுக்கு கல் எறிதல். அங்கு இருப்பதைப் போன்று ஒரு கல்லைக் கட்டி ஒருவர் கல் எறிந்தால் அது ஷைத்தானுக்கு கல் எறிந்ததாக ஆகாது. இவ்வாறு நாம் சிந்தித்தால் ஹஜ்ஜுடைய கடமைகளை ஹாஜிகள் மட்டுமே செய்ய முடியும். அதுவும் ஹஜ்ஜுடைய காலத்தில் மட்டுமே செய்ய முடியும். அந்த குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே செய்ய முடியும்.

ஆனால் ஹஜ்ஜுடைய காலங்களில் ஹாஜிகள் நிறைவேற்றக்கூடிய அமல்களில் ஒரே ஒரு அமல் மட்டும் ஹாஜிகளுக்கு மட்டும் என்றில்லாமல் அனைவருக்கும் அதை பொதுவாக இறைவன் ஆக்கியிருக்கிறான். அந்த அமலை மட்டும் மக்கள் அவரவர்கள் வாழக்கூடிய பகுதியில் இருந்து கொண்டே நிறைவேற்றும் படி அல்லாஹ் உத்தரவிட்டிருக்கிறான். அது தான் 'குர்பானி. குர்பானி என்ற அறுத்துப் பழியிடுதலை அங்கே ஹாஜிகள் செய்கிறார்கள். அதே அமலை எல்லோரும் எல்லா இடங்களிலிருந்தும் செய்கிறார்கள்.ஹாஜிகள் அங்கிருந்து செய்யும் ஒரு காரியத்தை நாம் இங்கிருந்து அவர்களோடு இணைந்து செய்கிறோம். அந்த வகையில் குர்பானி என்பது தனிச்சிறப்பைப் பெற்ற அமலாக இருக்கிறது. ஹாஜிகளோடு நம்மை இணைக்கின்ற ஒரு அமலாக இருக்கிறது.

قُلْ اِنَّ صَلَاتِىْ وَنُسُكِىْ وَ مَحْيَاىَ وَمَمَاتِىْ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِيْنَۙ‏

நீர் கூறும்: “மெய்யாக என்னுடைய தொழுகையும், என்னுடைய குர்பானியும், என்னுடைய வாழ்வும், என்னுடைய மரணமும் எல்லாமே அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே சொந்தமாகும். (அல்குர்ஆன் : 6:162)

இந்த வசனத்தில் குர்பானி என்பதற்கு நுஸுக் என்ற வார்த்தையை அல்லாஹ் பயன்படுத்தியிருக்கிறான். நுஸுக் என்பதற்கு அஸல் பொருள் வணக்கம் என்பதாகும். தொழுகை நோன்பு ஜகாத் என்று எல்லாமே வணக்கமாக இருந்தாலும் நுஸுக் என்ற வார்த்தையை குர்பானிக்கு அல்லாஹ் பயன்படுத்தியிலிருந்து அது தனித்துவம் பெற்ற அமல் என்பதை இதன் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது.

குர்பானி என்ற தனித்துவம் வாய்ந்த ஒரு அமலை செய்வதற்கான நாட்கள் நெருங்கிக் கொண்டிருக்கிற இந்த நேரத்தில் அந்த குர்பானி எதனால் கடமையாக்கப்பட்டது. அதன் நோக்கம் என்ன ? அதனால் நமக்கு கிடைக்கும் பலன்கள் என்ன ? குர்பானியால் சமூகத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் என்ன ? என்பதை நாம் தெரிந்து கொள்வோம்.  

1 – அல்லாஹ்வின் நிஃமத்துக்களுக்கு நன்றி செலுத்தும் உணர்வை குர்பானி தருகிறது.

وَالْبُدْنَ جَعَلْنٰهَا لَـكُمْ مِّنْ شَعَآٮِٕرِ اللّٰهِ لَـكُمْ فِيْهَا خَيْرٌ‌ ‌ فَاذْكُرُوا اسْمَ اللّٰهِ عَلَيْهَا صَوَآفَّ‌ فَاِذَا وَجَبَتْ جُنُوْبُهَا فَكُلُوْا مِنْهَا وَاَطْعِمُوا الْقَانِعَ وَالْمُعْتَـرَّ ‌ كَذٰلِكَ سَخَّرْنٰهَا لَـكُمْ لَعَلَّكُمْ تَشْكُرُوْنَ‏

இன்னும் (குர்பானிக்கான) ஒட்டகங்கள்; அவற்றை உங்களுக்காக அல்லாஹ்வின் அடையாளங்களிலிருந்தும் நாம் ஆக்கியிருக்கிறோம்; உங்களுக்கு அவற்றில் மிக்க நன்மை உள்ளது; எனவே (அவை உரிய முறையில்) நிற்கும் போது அவற்றின் மீது அல்லாஹ்வின் பெயரைச் சொல்(லி குர்பான் செய்)வீர்களாக; பிறகு, அவை தங்கள் பக்கங்களின் மீது சாய்ந்து கீழே விழுந்(து உயிர் நீத்)த பின் அவற்றிலிருந்து நீங்களும் உண்ணுங்கள்; (வறுமையிலும் கையேந்தாமல் இருப்பதைக் கொண்டு) திருப்தியாய் இருப்போருக்கும், இரப்போருக்கும் உண்ணக் கொடுங்கள் - இவ்விதமாகவே, நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டு அவற்றை உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்திருக்கிறோம். (அல்குர்ஆன் : 22:36)

இந்த வசனத்தில் கால்நடைகளை உங்களுக்கு நாம் வசப்படுத்திக் கொடுத்துள்ளோம். விரும்பினால் அதில் நீங்கள் பயணிக்கலாம். அல்லது அதிலிருந்து பால் கறந்து அதனைப் பருகலாம். அல்லது அதை அறுத்து சாப்பிடலாம் என்று கூறி விட்டு இவைகளுக்கெல்லாம் நீங்கள் நன்றி செலுத்த வேண்டும் என்று சொல்கிறான்.எனவே அந்த கால்நடைகளை நமக்கு அளித்ததற்காக அல்லாஹ்விற்கு நன்றி செலுத்த வேண்டும். இறைவன் செய்த நிஃமத்துக்களுக்கு நன்றி செலுத்த வேண்டும் என்ற உணர்வை குர்பானி நமக்கு தருகின்றது.

குர்பானியே ஒரு ஷுக்ர் தான்

اِنَّاۤ اَعْطَيْنٰكَ الْكَوْثَرَ‏

(நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு கவ்ஸர் (என்ற தடாகத்தை) கொடுத்திருக்கின்றோம். (அல்குர்ஆன் : 108:1)

فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ ‏

எனவே, உம் இறைவனுக்கு நீர் தொழுது, குர்பானியும் கொடுப்பீராக. (அல்குர்ஆன் : 108:2)

பெருமானார் ﷺஅவர்களுக்கு கவ்ஸர் என்ற உயர்ந்த நீர் தடாகத்தைக் கொடுத்து விட்டு அதற்கு பதிலாக குர்பானியைக் கொடுக்கும்படி அல்லாஹ் உத்தரவிடுகிறான்.

إنَّ نِعَم الله - عزَّ وجلَّ - كثيرة جدًّا، لا تُعدُّ ولا تُحْصى ﴿ وَإِنْ تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لا تُحْصُوهَا ﴾ [إبراهيم: 34]، كنِعْمة الإيمان والطاعة، والسمع والبصر، والمال والأولاد، وهذه النِّعَم تحتاج إلى شكر؛ لِبَقائها، ومن طرُقِ شكر الله على نِعَمِه الإنفاق في سبيل الله، والأُضْحية من صور شكر الله - سبحانه وتعالى.

நமக்கு அல்லாஹ் வழங்கியிருக்கிற உயிர் உடமைகள், நிம்மதி, அந்தஸ்து, ஈமான், செல்வம், ஆரோக்கியம், செவி,பார்வை,குழந்தைகள் இப்படி எண்ணற்ற நிஃமத்துக்களை செய்திருக்கிறான்.அவைகளுக்காக நாம் நன்றி செலுத்த வேண்டும். நன்றி செலுத்தும் வழிகளில் ஒன்று செலவு செய்தல். அந்த வகையில் நன்றி செலுத்துவதற்கான ஒரு ஏற்பாடு தான் குர்பானி.

2 – அர்ப்பணிக்கும் உணர்வை நமக்குக் கற்றுத்தருகிறது.

என் வாழ்க்கையில் இறைவனுக்காக எந்த ஒரு தருணத்திலும், எதையும் அர்ப்பணிக்க நான் தயாராக இருக்கிறேன்.. அது என் உயிராக, உடமையாக, என் உணர்வாக, எதுவாக இருந்தாலும் சரியே! என இறையின் முன்பாக ஒரு மனிதன் தன் அர்ப்பணிக்கும் உணர்வை வெளிப்படுத்துவதற்குப் பெயர் தான் குர்பானி.

அர்ப்பணித்தல் என்பது பல வகையாக இருக்கிறது. உயிரை அர்ப்பணித்தல், பொருளை அர்ப்பணித்தல், நம் வாழ்வின் பொன்னான நேரங்களையும் காலங்களையும் அர்ப்பணித்தல், நம் அந்தஸ்தை அர்ப்பணித்தல், (அல்லாஹ்விற்காகவும் இந்த மார்க்கத்திற்காகவும் அந்தஸ்தை விட்டுத் தருதல்) குடும்பத்தை அர்ப்பணித்தல். இவை அனைத்திற்கும் முன்னுதாரணமாக திகழ்ந்தவர்கள் ஹழ்ரத் இப்ராஹீம் அலை அவர்கள். 

அந்த அர்ப்பணிப்பு உணர்வு குர்பானியிலும் வெளிப்படும்.ஆடோ மாடோ வாங்கி அதற்கு தீணி போட்டு வளர்த்து, அதன் மீது அன்போ பிரியமோ ஏற்பட்டு, அதை விட்டு நாம் பிரிய முடியாமல் நம்மை விட்டும் அது பிரிய முடியாத நிலை வந்து, அதன் பிறகு அதை அல்லாஹ்விற்காக அறுத்துப் பலியிடுவதில் அந்த அர்ப்பணிப்பு உணர்வு இல்லையென்று சொல்ல முடியாது.

3 – தேவையுடையவர்களின் பசியைப் போக்குகிறது.

ஒருவர் ஒரு ஆட்டையோ மாட்டையோ ஒட்டகத்தையோ குர்பானி கொடுத்து அதை ஏழைகளுக்கும் உறவினர்களுக்கும் பங்கிட்டு கொடுக்கும் போது அதைக் கொண்டு அவர்கள் பயன் பெறுகிறார்கள். பெருநாட்களில் அவர்கள் வயிறாற உண்டு மகிழ்கிறார்கள்.

அதனாலேயே பெரும்பாலான முன்னோர்கள் ஒட்டகத்தை குர்பானி கொடுப்பதையே விரும்பியிருக்கிறார்கள்.

عنْ مالِكِ بْنِ أنَسٍ قالَ: حَجَّ سَعِيدُ بْنُ المُسَيَّبِ، وحَجَّ مَعَهُ ابْنُ حَرْمَلَةَ، فاشْتَرى سَعِيدٌ كَبْشًا فَضَحّى بِهِ، واشْتَرى ابْنُ حَرْمَلَةَ بَدَنَةً بِسِتَّةِ دَنانِيرَ فَنَحَرَها، فَقالَ لَهُ سَعِيدٌ: أما كانَ لَكَ فِينا أُسْوَةٌ؟ فَقالَ: إنِّي سَمِعْتُ اللَّهَ يَقُولُ: ﴿والبُدْنَ جَعَلْناها لَكم مِن شَعائِرِ اللَّهِ لَكم فِيها خَيْرٌ﴾ فَأحْبَبْتُ أنْ آخُذَ الخَيْرَ مِن حَيْثُ دَلَّنِي اللَّهُ عَلَيْهِ، فَأعْجَبَ ذَلِكَ ابْنَ المُسَيَّبِ مِنهُ، وجَعَلَ يُحَدِّثُ بِها عَنْهُ.

ஒரு ஹஜ்ஜின் போது சஈத் பின் முஸய்யப் ரஹ் அவர்கள் ஒரு ஆட்டை அறுத்து குர்பானி கொடுத்தார்கள். அவர்களோடு ஹஜ்ஜுக்கு சென்ற இப்னு ஹர்மலா ரஹ் அவர்கள் (சஈத் பின் முஸய்யப் ரஹ் அவர்களின் மாணவர்களில் ஒருவர்) ஆறு திர்ஹம்களைக் கொண்டு ஒரு ஒட்டகத்தை வாங்கி குர்பானி கொடுத்தார்கள். ஒட்டகத்தை குர்பானி கொடுப்பதற்கு உங்களுக்கு முன்மாதிரி எதுவும் இருக்கிறதா? எதை வைத்து நீங்கள் ஒட்டகத்தை குர்பானி கொடுத்தீர்கள் என்று சஈத் பின் முஸய்யப் ரஹ் அவர்கள் கேட்ட போது, “இன்னும் (குர்பானிக்கான) ஒட்டகங்கள்; அவற்றை உங்களுக்காக அல்லாஹ்வின் அடையாளங்களிலிருந்தும் நாம் ஆக்கியிருக்கிறோம்; உங்களுக்கு அவற்றில் மிக்க நன்மை உள்ளது” (அல்குர்ஆன் : 22:36) அல்லாஹ் இவ்வாறு சொல்கிறான். எனவே அல்லாஹ் அறிவித்ததின் படி அந்த நலவுகளை பெறுவதற்கு நான் விரும்பினேன். எனவே தான் ஒட்டகத்தைக் கொடுத்தேன் என்றார்கள். (அத்துர்ருல் மன்ஸூர்)

عَنِ ابْنِ عُيَيْنَةَ قالَ: حَجَّ صَفْوانُ بْنُ سُلَيْمٍ ومَعَهُ سَبْعَةُ دَنانِيرَ، فاشْتَرى بِها بَدَنَةً، فَقِيلَ لَهُ: لَيْسَ مَعَكَ إلّا سَبْعَةُ دَنانِيرَ تَشْتَرِي بِها بَدَنَةٍ، فَقالَ: إنِّي سَمِعْتُ اللَّهَ يَقُولُ: ﴿لَكم فِيها خَيْرٌ﴾

ஸஃப்வான் பின் சுலைம் ரஹ் அவர்கள் ஹஜ்ஜுக்கு சென்ற நேரத்தில் ஏழு தீனார்களைக் கொடுத்து ஒட்டகம் ஒன்றை வாங்கி குர்பானி கொடுத்தார்கள். உங்களிடத்தில் இப்போது இருப்பதே ஏழு தீனார்கள் தானே! அதை அப்படியே கொடுத்து ஒட்டகத்தை வாங்கி விட்டீர்களே! என்று கேட்கப்பட்ட போது இதில் நன்மை உண்டு என்று இறைவன் சொல்லி விட்டான். எனவே தான் நான் ஒட்டகத்தை கொடுத்தேன் என்று கூறினார்கள். (அத்துர்ருல் மன்ஸூர்)

உலகத்தின் நன்மை மறுமையில் கிடைக்கும் நன்மை இரண்டையும் அந்த வார்த்தை எடுத்துக் கொள்ளும். உலகத்தில் கிடைக்கும் நன்மைகளில் ஒன்று ஒட்டகத்தைக் கொண்டு அதிகம் பேர் பலன் அடைவார்கள் என்பது.

குர்பானி நம் நாட்டு பொருளாதாரத்திலும் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகிறது. நம் நாட்டில் சுமார் 25 கோடி முஸ்லிம்கள் பக்ரித் கொண்டாடுகிறார்கள். அதில் குறைந்தது 20% முஸ்லீம்கள், குறைந்தபட்சம் ரூ 7000 / - க்கு குர்பான் ஆடுகளை வாங்குகிறார்கள். 5 கோடி x ரூ 7000 = ரூ 35 ஆயிரம் கோடி.

குர்பானிப் பிராணிகள் என்பது சீனத் தயாரிப்புகள் அல்ல. முழுக்க முழுக்க இந்திய தேசிய கிராமப்புறங்களிருந்து மட்டுமே இந்த வியாபாரம் மேற்கொள்ளப்படுகிறது.



எனவே பக்ரித் 35 ஆயிரம் கோடி ரூபாய் உள்ளூர் வணிக பொருளாதாரத்திற்கு பங்களிப்பு செய்கிறது என்பது மட்டுமின்றி சுமார் 1 கோடி சிறு விவசாயிகளுக்கு மிக இலகுவான வேலைவாய்ப்பைத் தருகிறது.

அதுமட்டுமில்லாமல்,ஒவ்வொரு ஆட்டின் இறைச்சியும், மூன்றில் இரண்டு மடங்கு ஏழைகளுக்கு மட்டுமே விநியோகிக்கப்படுவதால் - அதாவது ஒருவர் குறைந்தது 10 பேருக்கு பகிர்ந்தளிப்பதால், அதைக் கொண்டு 50 கோடி பேர் சாப்பிடுகிறார்கள், பயனடைகிறார்கள்.

இது மேலோட்டமாக பார்க்கப்பட்ட விசயங்கள் தான். இன்னும் ஆழமாக சிந்தித்தால் அதன் தோளைக் கொண்டு பயன் பெறுபவர்கள், அறுப்பதைக் கொண்டு பயன் பெறுபவர்கள் என குர்பானியின் மூலம் இந்த சமூகம் அடைகின்ற நன்மைகளும் பலன்களும் இன்னும் நீளும்.

ஆக ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் பங்களிப்பு மற்றும் இந்தியாவில் வேலைவாய்ப்பு போன்ற மிகப்பெரிய துறைகளில், நாம் கொண்டாடுகின்ற பக்ரீதும் அதில் நாம் நிறைவேற்றுகின்ற குர்பானியும் மிகப் பெரும் பங்காற்றுகிறது.

இப்படி எண்ணற்ற பலன்களும் பயன்களும் குர்பானியின் மூலம் ஏற்படுகிறது.எனவே தான் குர்பானி கொடுப்பதை இறைவன் மிகவும் விரும்புகிறான்.

ما عمل ابن آدم يوم النحر عملا أحب إلى الله عزوجل من إهراق الدم و إنها لتأتي يوم القيامة بقرونها و أشعارها و أظلافها و أن الدم ليقع من الله بمكان قبل أن يقع من الأرض فطيبوا بها نفسا.

துல்ஹஜ் மாதம் பத்தாம் நாளன்று அடியார்கள் செய்யும் அமல்களில் குர்பானியை அறுத்து இரத்தத்தை ஓட்டுவதை விட அல்லாஹ்விற்கு மிகப்பிரியமான அமல் வேறொன்றும் இல்லை. நிச்சயமாக அவை கியாமத் நாளில் தங்களின் கொம்புகளுடனும், உரோமங்களுடனும், குளம்புகளுடனும் வரும்; நிச்சயமாக குர்பானிக் கொடுக்கப்படும் கால்நடைகளின் இரத்தம் பூமியில் விழுவதற்கு முன் அல்லாஹ்வின் அங்கீகாரத்தை அக்குர்பானி பெற்று விடுகிறது. எனவே அதனை மனமுவந்துச் செய்யுங்கள். (திர்மிதி :180)

அரஃபா நாளின் சிறப்பு:-

அரஃபா நாள் என்பது இஸ்லாமிய வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நாளாக இருக்கிறது. 

 1) அல்லாஹ் புகழ்ந்து பேசும் நாள்..

அபூஹுரைரா மற்றும் அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னுல்ஆஸ் (ரலி) ஆகியோர் போன்றோர் அறிவிக்கிறார்கள் :

عن ابن عمر أن النبي صلى الله عليه وسلم قال: إن الله تعالى يباهي ملائكته عشية عرفة بأهل عرفة، فيقول: انظروا إلى عبادي أتوني شعثا غبرا. رواه أحمد وصححه الألباني.

'நிச்சயமாக அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அரஃபா தினத்தின் மாலையில் அரஃபாவிற்கு வந்திருக்கக்கூடிய மக்களை குறித்து மலக்குமார்களிடம் புகழ்ந்து பேசுகிறான். "எனது மலக்குமார்களே! எனது அடியார்களை நோக்கி பாருங்கள். அவர்களில் அந்தஸ்த்து உள்ளவர்கள்அந்தஸ்து இல்லாதவர்கள் என அனைவரும் பரட்டை தலையுடையவர்களாகவும்புழுதி படிந்தவர்களாகவும் என்னிடம் வந்துள்ளார்கள்" என்று அல்லாஹ் கூறுகிறான் என்று நபி  கூறினார்கள். நூல்: (முஸ்னத் அஹ்மத்)

2) அடியார்கள் நரக விடுதலை பெறும் மகத்தான நாள்:-

عن عائشة رضي الله عنها عن النبي صلى الله عليه وسلم قال: ما من يوم أكثر من أن يعتق الله فيه عبدا من النار من يوم عرفة، 

ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:'அல்லாஹ்  அதிக அதிகமாக  தனது அடியார்களை நரகத்திலிருந்து விடுதலை செய்யக்கூடிய தினம் அரஃபா தினத்தை விட வேறு தினம் இருக்க முடியாதுஎன்று நபி  கூறினார்கள்.

நூல்: (ஸஹீஹ் முஸ்லிம்)

3) சிறந்த துஆ இடம் பெற்றுள்ள நாள்..

அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு ஷுஐபு (ரலி) அறிவிக்கிறார்கள் :

وروى الترمذي عن عمرو بن شعيب عن أبيه عن جده أن النبي صلى الله عليه وسلم قال: خير الدعاء دعاء يوم عرفة، وخير ما قلت أنا والنبيون من قبلي لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير

'துஆக்களில் மிகவும் சிறந்த துஆ அரஃபா தினத்தில் செய்யப்படக்கூடிய துஆ நானும் எனக்கு முன் வந்த நபிமார்களும் கூறிய கூற்றுகளில் மிகச் சிறந்த கூற்று லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக லஹு லஹுல் முல்கு வலஹுல் ஹம்து வஹுவ அலா குல்லி ஷையின் கதீர் ஆகும் என்று நபி  கூறினார்கள். (  நூல்: (திர்மதிமுஸ்னத் அஹ்மத்) 

4) சன்மார்க்கம்  இஸ்லாம் பரிபூரணமாக்கப்பட்ட நாள்...

அன்றைய தினத்தில் தான் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் இஸ்லாமிய மார்க்கத்தை பரிபூரணப் படுத்தி கொடுத்தான்.

உமர் (ரலி) அறிவிக்கின்றார்கள்:

عن عمر بن الخطاب رضي الله عنه أن رجلا من اليهود قال له: يا أمير المؤمنين، آية في كتابكم تقرءونها، لو علينا معشر اليهود نزلت لاتخذنا ذلك اليوم عيدا. قال أي آية؟ قال: اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا المائدة:3. قال عمر: قد عرفنا ذلك اليوم والمكان الذي نزلت فيه على النبي صلى الله عليه وسلم: وهو قائم بعرفة يوم الجمعة

'யூதர் ஒருவர் உமர் (ரலி) அவர்களிடம் வந்து, "யா அமீரல் முஃமினீன்! உங்களுடைய புத்தகத்தில் ஒரு வசனம் இருக்கின்றது. இந்த வசனம் யூதர்களாகிய எங்கள் மீது இறங்கி இருந்தால் அந்த நாளை நாங்கள் பெருநாளாக எடுத்து இருப்போம்" என்று கூறினார்.  அப்பொழுது உமர் (ரலி) அவர்கள் "அது எந்த வசனம்?" என்று கேட்டார்கள். அதற்கு அந்த யூதன்

இன்றைய தினம் உங்களுக்காக உங்களுடைய மார்க்கத்தை நான் பரிபூரணமாக்கி வைத்து விட்டேன்என்னுடைய அருட்கொடையை உங்களின் மீது முழுமையாமாக்கி விட்டேன்இன்னும் உங்களுக்காக இஸ்லாத்தை மார்க்கமாக நான் பொருந்திக் கொண்டேன்.

[சூரா அல் மாயிதா: 3] என்ற வசனத்தை ஓதிக் காட்டினான்.

அதற்கு உமர் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் மீது சத்தியமாக இந்த வசனம் எப்பொழுது நபி  மீது அல்லாஹ் இறக்கி வைத்தான் என்று எனக்குத் தெரியும். நிச்சயமாக இந்த வசனமானது நபி   அரஃபா தினத்தன்று அரபாவில் நின்று கொண்டு இருந்த பொழுது அல்லாஹ் சுப்ஹானஹூ வ தஆலா நபி  மீது இறக்கி வைத்தான். அந்த அரஃபா தினம் ஜும்ஆ தினமாக இருந்தது" என்று கூறினார்கள். நூல்கள்: (ஸஹீஹ் அல்-புஹாரிஸஹீஹ் முஸ்லிம்)

      அரஃபா நோன்பு...

இன்று சமூகத்தில் சில அரஃபா நோன்பு குறித்து பெரும் குழப்பத்தை உண்டு பண்ணி வருகிறார்கள்.

قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثَلَاثٌ مِنْ كُلِّ شَهْرٍ وَرَمَضَانُ إِلَى رَمَضَانَ فَهَذَا صِيَامُ الدَّهْرِ كُلِّهِ صِيَامُ يَوْمِ عَرَفَةَ أَحْتَسِبُ عَلَى اللَّهِ أَنْ يُكَفِّرَ السَّنَةَ الَّتِي قَبْلَهُ وَالسَّنَةَ الَّتِي بَعْدَهُ وَصِيَامُ يَوْمِ عَاشُورَاءَ أَحْتَسِبُ عَلَى اللَّهِ أَنْ يُكَفِّرَ السَّنَةَ الَّتِي قَبْلَهُ رواه مسلم

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "அரஃபா நாள் நோன்பு அதற்கு முந்தைய ஆண்டு மற்றும் அதற்குப் பிந்தைய ஆண்டு பாவங்களுக்குப் பரிகாரமாகும். அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி) ( நூல் : முஸ்லிம் )

மேற்கண்ட ஹதீஸில் அரஃபா நாளில் நோன்பு வைத்தால் பாவங்கள் மன்னிக்கப்படும் என்று கூறப்படுகின்றது.

ஹாஜிகள் அரஃபா நாளில் நோன்பு நோற்பது நபிவழி அல்ல.

حَدَّثَنَا يَحْيَى بْنُ سُلَيْمَانَ حَدَّثَنَا ابْنُ وَهْبٍ أَوْ قُرِئَ عَلَيْهِ قَالَ أَخْبَرَنِي عَمْرٌو عَنْ بُكَيْرٍ عَنْ كُرَيْبٍ عَنْ مَيْمُونَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا أَنَّ النَّاسَ شَكُّوا فِي صِيَامِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ عَرَفَةَ فَأَرْسَلَتْ إِلَيْهِ بِحِلَابٍ وَهُوَ وَاقِفٌ فِي الْمَوْقِفِ فَشَرِبَ مِنْهُ وَالنَّاسُ يَنْظُرُونَ رواه البخاري

மைமூனா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் : "அரஃபா நாளில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருக்கிறார்களா என்பதில் மக்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டது. நான் அரஃபாவில் தங்கியிருந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் பால் பாத்திரத்தைக் கொடுத்தனுப்பினேன். மக்களெல்லாம் பார்த்துக் கொண்டிருக்க அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குடித்தார்கள். ( நூல் : புகாரி )

ஹாஜிகள் அல்லாத மற்றவர்கள் அரஃபா நாளில் நோன்பு வைப்பதற்கு முதலில் கூறிய செய்தி ஆதாரமாக அமைந்துள்ளது.

அரஃபா நாள் எது?

துல்ஹஜ் மாதம் பிறை ஒன்பதாவது நாளே அரஃபாவுடைய நாள். அவரவர் பகுதியில் பிறை பார்க்கப்பட்டு எப்போது துல்ஹஜ் மாதம் பிறை வருகின்றதோ அந்த நாளே அவருக்கு அரஃபாவுடைய நாள் என்பதே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்து நடைமுறையாக இருந்தது.

நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் பதிமூன்று வருட காலங்கள் வாழ்ந்துள்ளார்கள். இக்கால கட்டத்தில் மக்காவில் ஹாஜிகள் எப்போது கூடுகிறார்கள் என்று பார்த்து அன்றைய நாளில் தான் மற்ற பகுதியில் உள்ளவர்களும் நோன்பு நோற்க வேண்டும் என்று கூறியதாக வரலாற்றில் எந்த ஒரு சான்றும் இல்லை .

அப்படி இருக்குமேயானால்நபி (ஸல்) அவர்கள் மதீனாவிலிருந்து ஒருவரை மக்காவிற்கு அனுப்பி ஹாஜிகள் எப்போது கூடுகிறார்கள் என்பதைப் பார்த்து விட்டு வருமாறு கூறியிருப்பார்கள். அவர் வந்த பிறகு அந்த நாளில் நோன்பு நோற்றிருப்பார்கள்.

ஆனால் ஹதீஸ்களில் இவ்வாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்ததாக எந்த ஒரு சம்பவமும் இடம் பெறவில்லை.

முதல் பிறைக்கும்அரஃபவிற்கும் எட்டு நாட்கள் இடைவெளி உள்ளன. இந்த எட்டு நாட்கள் இடைவெளியில் மாநபி (ஸல்) அவர்கள் மக்காவிற்கு ஆளனுப்பி விசாரித்து ஊர்ஜிதப்படுத்த வாய்ப்புகள் இருந்தும் கூட நபி ஸல் அவர்கள் அப்படி செய்தார்களாஎன்றால் அப்படியான எந்த முயற்சியிலும் மாநபி ஸல் அவர்கள் ஈடுபட்டதாக எந்த தரவுகளும் நபிமொழிகளில் இடம் பெற வில்லை.

ஹாஜிகள் அரபாவில் கூடும் நாள் தான் உலகம் முழுமைக்கும் அரஃபா நாள் என்று ஒருவர் கூறினால் இந்த விஷயத்தில் அல்லாஹ்வின் தூதர் தவறிழைத்து விட்டார்கள் என்று நபி ஸல் அவர்கள் மீது அபாண்டமாக பழி சுமத்துகிறார்கள் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எப்படி அரஃபா நாளை முடிவு செய்தார்களோ அப்படி முடிவு செய்வதைத் தவறு என்று சொல்லும் எந்தக் கருத்தும் வழிகேடானபிழையான கருத்தாகும் என்பதை நாம் தெளிவாக புரிந்து கொள்ள கடமைப் பட்டிருக்கின்றோம்.

ஒரு பேச்சுக்கு இவர்கள் சொல்வது போன்று ஹாஜிகள் அரஃபாவில் கூடும் நாளே உலகின் அனைத்து பகுதி மக்களுக்கும் அரஃபா நாள் என்று நாம் வைத்துக் கொண்டால் உலகில் பல பகுதி மக்களுக்கு அரஃபா நோன்பு என்ற பாக்கியம் கிடைக்காமல் போய் விடும். 

ஹாஜிகள் சுப்ஹுக்குப் பிறகிலிருந்து மக்ரிபுக்கு முன்னர் வரை கூடியிருப்பார்கள். மக்ரிபுக்குப் பிறகு அங்கிருந்து புறப்பட்டுச் சென்று விடுவார்கள். இது தான் ஹாஜிகளின் அரஃபா நாள். 

அமெரிக்காவைப் பொறுத்த வரை ஹாஜிகள் அரஃபாவில் கூடும் நேரத்தில் மக்ரிபை அடைந்திருப்பார்கள். ஹாஜிகள் அரஃபாவை விட்டு வெளியேறும் போது அமெரிக்காவில் சுபுஹு நேரத்தை அடைவார்கள். அரஃபாவில் கூடியிருக்கும் நேரத்தில் நோன்பிருக்க வேண்டும் என்று பொருள் செய்தால் அமெரிக்காவில் இரவு நேரத்தில் தான் நோன்பு நோற்க வேண்டும். 

அல்லாஹ் கூறுவது போல் சுபுஹ் நேரத்திலிருந்து மக்ரிப் வரை நோன்பிருக்க வேண்டுமாஅல்லது இவர்கள் கூறுவது போல் மக்ரிபிலிருந்து சுபுஹ் வரை நோன்பிருக்க வேண்டுமா

இஸ்லாம் உலகளாவிய மார்க்கம். அனைவருக்கும் பொதுவான மார்க்கம். இந்த அடிப்படையில் அமெரிக்க முஸ்லிம்களுக்கு நாம் ஒரு வழி சொல்லியாக வேண்டும். அதாவது அரஃபாவில் சுபுஹுக்குப் பின் ஹாஜிகள் தங்குகிறார்கள். அந்த நேரம் அமெரிக்காவில் மக்ரிப் நேரமாகும். மக்ரிப் நேரத்தில் நோன்பு வைக்க முடியாது. அதற்குப் பின் வருகின்ற சுபுஹ் நேரத்திலிருந்து நோன்பை அவர்கள் பிடிக்க வேண்டும் என்று தான் கூறியாக வேண்டும். அவ்வாறு கூறினால் அமெரிக்க மக்கள் சுபுஹை அடைந்து நோன்பு பிடிக்கும் போது ஹாஜிகள் அரஃபா நாளை முடித்து பெருநாள் இரவை அடைந்திருப்பார்கள். 

அமெரிக்க முஸ்லிம்களைப் பொறுத்த வரை சவூதியில் பெருநாள் இரவை அடையும் போது தான் அரஃபா நோன்பு நோற்க வேண்டும் என்ற நிலை ஏற்படுகிறது. 

நோன்பு நோற்பது ஹராமாக்கப்பட்ட பெருநாளில் நோன்பு நோற்கச் சொல்லப் போகிறார்களாஅல்லது அமெரிக்க முஸ்லிம்களுக்கு மட்டும் அரஃபா நோன்பு கிடையாது என்று கூறப் போகிறார்களாஹாஜிகள் அரஃபாவில் தங்கும் போது தான் நோன்பு பிடிக்க வேண்டும் என்று தவறான பொருள் கொண்டதால் தான் இந்த விபரீதம் ஏற்படுகிறது. 

அமெரிக்க முஸ்லிம்கள் சுப்ஹு நேரத்திலிருந்து மக்ரிப் நேரம் வரும் வரை நோன்பிருந்தால் ஒன்று ஹாஜிகள் அரஃபாவில் கூடுவதற்கு முன்னால் நோன்பு வைக்க வேண்டும் அல்லது ஹாஜிகள் அரஃபாவை விட்டு வெளியேறி (யவ்முந் நஹ்ர்) பெருநாளை அடைந்த பின்னால் நோன்பு நோற்க வேண்டும். எப்படிப் பார்த்தாலும் அரஃபாவில் ஹாஜிகள் கூடியிருக்கும் நேரத்தில் நோன்பு வைக்க வேண்டும் என்பது உலகத்தின் ஒரு பகுதி மக்களுக்குச் சாத்தியமில்லாததாக உள்ளது. 

நபி (ஸல்) அவர்களின் போதனை உலக மக்கள் அனைவருக்கும் பொருந்தக் கூடியது. உலகின் ஒரு பகுதி மக்களுக்கு அது பொருந்தவில்லை என்றால் அந்தப் போதனையில் தவறு இருக்காது. நாம் விளங்கிக் கொண்டது தவறு என்ற முடிவுக்குத் தான் வர வேண்டும். 

நாம் புரிந்து கொள்ள இலகுவான ஒரு வழி....  

شَهْرُ رَمَضَانَ الَّذِي أُنْزِلَ فِيهِ الْقُرْآنُ هُدًى لِلنَّاسِ وَبَيِّنَاتٍ مِنَ الْهُدَى وَالْفُرْقَانِ فَمَنْ شَهِدَ مِنْكُمُ الشَّهْرَ فَلْيَصُمْهُ وَمَنْ كَانَ مَرِيضًا أَوْ عَلَى سَفَرٍ فَعِدَّةٌ مِنْ أَيَّامٍ أُخَرَ يُرِيدُ اللَّهُ بِكُمُ الْيُسْرَ وَلَا يُرِيدُ بِكُمُ الْعُسْرَ وَلِتُكْمِلُوا الْعِدَّةَ وَلِتُكَبِّرُوا اللَّهَ عَلَى مَا هَدَاكُمْ وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ

இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது. (அது) மனிதர்களுக்கு நேர்வழி காட்டும். நேர் வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும். உங்களில் யார் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் அதில் நோன்பு நோற்கட்டும். நோயாளியாகவோபயணத்திலோ இருப்பவர் வேறு நாட்களில் கணக்கிட்டுக் கொள்ளலாம். (திருக்குர்ஆன் : 2:185) 

பிறை சம்பந்தமான முக்கியமான ஆதாரமாக இந்த வசனம் அமைந்துள்ளது. 

இந்த வசனத்தில் கூறப்பட்டுள்ள ஃபமன் ஷஹித மின்குமுஷ் ஷஹ்ர என்ற பதத்தை ஆராய்ந்து பார்த்தால். ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பது கடமை என்ற கருத்து 

"உங்களில் யார் அம்மாதத்தை அடைகிறாரோ என்ற வாசகம் இல்லாமலே கிடைத்து விடும். அப்படியானால் இந்தச் சொற்றொடரின் பயன் என்னநடைமுறை வழக்கத்தில் இது போன்ற வார்த்தைகளை யாருமே பயன்படுத்துவதில்லை. 

ஃபமன் ஷஹித மின்குமுஷ் ஷஹ்ர – உங்களில் யார் அம்மாதத்தை அடைகிறாரோ ரமளான் மாதத்தில் நோன்பு கடமை என்பதுடன் வேறு ஏதோ ஒரு செய்தியையும் சொல்வதற்காகவே இந்த வார்த்தைகளை அல்லாஹ் பயன்படுத்தியிருக்க வேண்டும். 

ஏனெனில் தேவையற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை விட்டும் அவன் தூயவன். உங்களில் யார் அம்மாதத்தை அடைகிறாரோ என்ற வாசகத்தில் இறைவன் கூறவரும் செய்தி என்ன என்பதை இப்போது ஆராய்வோம். 

இதைப் புரிந்து கொள்வதற்கு இது போன்ற நடையில் பயன்படுத்தப்பட்ட சொற்றொடர்களை முன்மாதிரியாக நாம் எடுத்துக் கொள்ளலாம். இதற்கு முந்தைய வசனம் கூட இது போன்ற நடையில் தான் அமைந்திருக்கிறது. அதையே எடுத்துக் கொள்வோம். 

أَيَّامًا مَعْدُودَاتٍ فَمَنْ كَانَ مِنْكُمْ مَرِيضًا أَوْ عَلَى سَفَرٍ فَعِدَّةٌ مِنْ أَيَّامٍ أُخَرَ وَعَلَى الَّذِينَ يُطِيقُونَهُ فِدْيَةٌ طَعَامُ مِسْكِينٍ فَمَنْ تَطَوَّعَ خَيْرًا فَهُوَ خَيْرٌ لَهُ وَأَنْ تَصُومُوا خَيْرٌ لَكُمْ إِنْ كُنْتُمْ تَعْلَمُونَ

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக உங்களுக்கு முன் சென்றோர் மீது கடமையாக்கப்பட்டது போல் உங்களுக்கும் குறிப்பிட்ட நாட்களில் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. உங்களில் யார் நோயாளியாக இருக்கிறாரோ அல்லது பயணத்திலிருக்கிறாரோ அவர் வேறு நாட்களில் கணக்கிட்டுக் கொள்ளலாம். அதற்குச் சக்தியுள்ளவர்கள் ஓர் ஏழைக்கு உணவளிப்பது பரிகாரம். நன்மைகளை மேலதிகமாகச் செய்வோருக்கு அது நல்லது. நீங்கள் அறிந்தால் நோன்பு நோற்பதே சிறந்தது. (திருக்குர்ஆன் : 2:184) 

உங்களில் யார் நோயாளியாக இருக்கிறாரோ அல்லது பயணத்திலிருக்கிறாரோ அவர் வேறு நாட்களில் நோன்பு நோற்கட்டும் என்று இந்த வசனத்தில் இறைவன் கூறுகிறான். உங்களில் யார் நோயாளியாக இருக்கிறாரோ என்றால் நோயாளியல்லாதவர்களும் உங்களில் இருப்பார்கள் என்ற கருத்து அதில் அடங்கியுள்ளது. 

எல்லோருமே நோயாளிகளாக இருந்தால் யார் நோயாளியாக இருக்கிறாரோ என்று பயன்படுத்த முடியாது. இந்த வசனத்தைப் புரிந்து கொள்வது போல் தான் யார் அம்மாதத்தை அடைகிறாரோ என்ற வாசகத்தையும் புரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் இரண்டுமே ஒரே மாதிரியான நடையில் அமைந்த சொற்றொடர்களாகும். உங்களில் யார் அம்மாதத்தை அடைகிறாரோ என்றால் உங்களில் அம்மாதத்தை அடையாதவர்களும் இருப்பார்கள் என்று தான் பொருள் கொள்ள வேண்டும். 

فَمَنْ تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ

இந்த வசனங்களில் மட்டுமின்றி திருக்குர்ஆனின் எந்த வசனங்களில் எல்லாம் யார் அடைகிறாரோ யார் போகிறாரோ என்பது போல் பயன்படுத்தப்பட்டுள்ளதோ அத்தனை இடங்களையும் இப்படித் தான் புரிந்து கொள்ள முடியும். நேர்வழி பெறுபவர்கள்பெறாதவர்கள் என இரு சாரார் இருக்கும் போது தான் யார் எனது வழியைப் பின்பற்றுகிறாரோ (திருக்குர்ஆன் 2:38) என்று கூற முடியும். 

فَمَنْ فَرَضَ فِيهِنَّ الْحَجَّ فَلَا رَفَثَ وَلَا فُسُوقَ وَلَا جِدَالَ فِي الْحَجِّ

ஹஜ்ஜை மேற்கொள்பவர்களும் ஹஜ்ஜை மேற்கொள்ளாதவர்களும் இருக்கும் போது தான் யார் ஹஜ்ஜை மேற்கொள்கிறாரோ (திருக்குர்ஆன் 2:197) என்று கூற முடியும். 

فَمَنْ تَمَتَّعَ بِالْعُمْرَةِ إِلَى الْحَجِّ فَمَا اسْتَيْسَرَ مِنَ الْهَدْيِ فَمَنْ لَمْ يَجِدْ فَصِيَامُ ثَلَاثَةِ أَيَّامٍ فِي الْحَجِّ وَسَبْعَةٍ إِذَا رَجَعْتُمْ تِلْكَ عَشَرَةٌ كَامِلَةٌ

குர்பானிப் பிராணியைப் பெற்றுக் கொள்பவர்களும் குர்பானிப் பிராணியைப் பெற்றுக் கொள்ளாதவர்களும் இருக்கும் போது தான் யார் குர்பானிப் பிராணியைப் பெற்றுக் கொள்ளவில்லையோ (திருக்குர்ஆன் 2.196) என்று கூற முடியும். 

இந்த நடையில் இன்னும் பல வசனங்களைக் குர்ஆனிலும்நபிமொழிகளிலும் காணலாம். மனிதர்களின் பேச்சு வழக்கிலும் இத்தகைய வார்த்தைப் பிரயோகங்களைக் காணலாம்.

அல்லாஹ்வின் வேதத்தில் தேவையில்லாத ஒரு வார்த்தை கூட இருக்காது என்பதை நெஞ்சிலிருத்தி ஆராய வேண்டும். 

அம்மாதத்தை ஒருவர் அடைந்திருக்கும் போது மற்றவர் அடைந்திருக்க மாட்டார். ஒருவர் ரமளானை அடைந்த பின் இன்னொருவர் ரமளானை அடைவார். இப்படி இருந்தால் மட்டுமே யார் ரமளானை அடைகிறாரோ என்று கூற முடியும். அனைவரும் ஒரே நேரத்தில் ரமளானை அடைகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். எல்லோருமே அடைந்திருக்கும் போது உங்களில் யார் அடைகிறாரோ எனக் கூறுவது வீணான வார்த்தைப் பிரயோகமாக அமைந்து விடும். 

மரணித்தவர் ரமளானை அடைய மாட்டார்உயிரோடுள்ளவர் ரமளானை அடைவார் அல்லவாஇதை இறைவன் கூறியிருக்கலாம் அல்லவாஎன்று கூற முடியாது. ஏனெனில் குர்ஆன் உயிருள்ளவர்களைப் பார்த்துப் பேசக் கூடியது. உயிருள்ளவர்களை எச்சரிக்கை செய்வதற்காக அருளப்பட்டது. 

உங்களில் என்று முன்னிலையில் பேசப்படுவது உயிருள்ளவர்களை நோக்கித் தான். எனவே உயிருள்ளவர்களில் தான் ரமளானை அடைந்தவர்களும் அடையாதவர்களும் இருப்பார்கள். நோன்பு மட்டுமின்றி குர்ஆனில் கூறப்பட்ட எல்லாக் கட்டளைகளும் உயிரோடு உள்ளவர்களுக்குத் தான். எனவே நுண்ணறிவாளனாகிய அல்லாஹ்உங்களில் உயிரோடு உள்ளவர்கள் நோன்பு நோற்க வேண்டும். செத்தவர்கள் நோன்பு நோற்கத் தேவையில்லை என்று கூறுவானாயார் அம்மாதத்தை அடைகிறாரோ என்பதைக் கண்டு கொள்ளாமல் செல்பவர்களை விட இப்படி விவேகமற்ற விளக்கம் தருபவர்கள் தான் குர்ஆனை அதிகம் அவமதிப்பவர்கள். 

அதாவது உலகில் உயிரோடு வாழக் கூடிய மக்களில் ரமளானை அடைந்தவர்களும் இருக்கலாம். அடையாதவர்களும் இருக்கலாம். அடைந்தவர் நோன்பு பிடியுங்கள். அடையாதவர் எப்போது அடைகிறாரோ அப்போது நோன்பு பிடியுங்கள் என்பதே இதன் கருத்தாக இருக்க முடியும். 

ஒருவர் அடைந்து மற்றவர் அடையாமல் இருப்பாராஅது எப்படிஅறிவியல் அறிவு வளராத காலத்தில் இவ்வாறு கேட்கலாம். உலகம் தட்டை என்று எண்ணிக் கொண்டிருந்த காலத்தில் இவ்வாறு கேட்கலாம். இன்றைக்குக் கேட்க முடியாது. யார் அம்மாதத்தை அடைகிறாரோ என்ற இறை வசனத்திலிருந்தும் விஞ்ஞான அடிப்படையிலும் உலகில் அனைவரும் ஒரே நேரத்தில் மாதத்தை அடைவதில்லை என்பதை தெரிந்து கொண்டோம். 

மாதத்தை அடைவதில் வித்தியாசம் இருக்கிறது என்றால் 9வது பிறையை அடைவதிலும் வித்தியாசம் இருக்கத் தான் செய்யும். எனவே அரஃபா நோன்பை எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும் என்றால் மக்காவில் என்றைக்கு துல்ஹஜ் பிறை 9ஆக இருக்குமோ அன்று மக்காவில் அரஃபா நாள். நமக்கு துல்ஹஜ் பிறை அன்று நமக்கு அரஃபா நாள். இது தான் அந்த ஹதீஸின் பொருள். 

எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அதை நாம் இருக்கின்ற நவீன உலகத்தில் இருந்து மட்டுமே பார்க்கக் கூடாது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய காலத்தில் அவர்கள் எப்படி நடைமுறைப்படுத்தினார்கள் என்பதையும் பார்க்க வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவில் இருந்த போது ஹாஜிகள் அரஃபாவில் கூடியுள்ளார்கள். அரஃபாவில் ஹாஜிகள் கூடிய செய்தியை அறிந்துஅதன் அடிப்படையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோன்பு வைக்கவில்லை. தங்களுடைய பகுதியில் பார்க்கப்பட்ட பிறையின் அடிப்படையில் தான் அரஃபா நாள் நோன்பைத் தீர்மானித்தார்கள். 

அய்யாமுத் தஷ்ரீக் உடைய நாட்களில் தக்பீர் சொல்வது....

قال الله تعالى : {وَاذْكُرُواْ اللّهَ فِي أَيَّامٍ مَّعْدُودَاتٍ ( البقرة 203 )

அல்லாஹ்வின் பெயரை எண்ணப்பட்ட  நாட்களில் நீங்கள் கூறுங்கள் …. 22:203 என்ற வசனத்திற்கு விளக்கம் தருகிற அறிஞர் பெருமக்கள்: எண்ணப்பட்ட  நாட்கள் என்பது துல் ஹஜ் மாதத்தின் 9,10,11,12,13 அஸர் வரையிலான அய்யாமுத் தஷ்ரீக் நாட்கள் ஆகும். என்று கூறுகின்றார்கள் ( நூல்: தஃப்ஸீர் துர்ருல் மன்ஸூர் )

இது தஷ்ரீக் நாட்கள் ஆகும். இது இப்னு உமர் மற்றும் பெரும்பாலான அறிஞர்களின் கருத்து. (:நூல்: லதாயிஃபுல் மஆரிஃப் ப: 500 ) 


அய்யாமுத் தஷ்ரீக் பெயர் வர காரணம் :


இப்பெயரைக் கொண்டு இந்நாட்கள் அழைக்கப்படுவதற்கான காரணம் : ஆரம்ப காலத்தில் இம்மூன்று நாட்களிலும் மனிதர்கள் உழ்ஹிய்யஹ் இறைச்சிகளைப் பாதுகாத்து வைப்பதற்காக! அவற்றை வெட்டித் துண்டாக்கி, உப்பிட்டுப் பதப்படுத்தி வெயிலில் காய்வதற்கு விடக் கூடியவர்களாக இருந்தனர்! இவ்வாறு பதப்படுத்தும் செயல்பாட்டுக்கு தஷ்ரீக் என்று அறபியில் கூறப்படும்!


அய்யாமுத் தஷ்ரீக் நாட்களின் சிறப்புகள் :

1) ஈதுல் அழ்ஹா நாளில் குர்பானி கொடுக்க முடியாதவர்கள் இந்த மூன்று நாட்களில் குர்பானி கொடுக்கலாம்!


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்


தஷ்ரீகுடைய நாட்கள் (துல்ஹஜ் 11, 12, 13) அனைத்தும் அறுப்பதற்குரியதாகும்!


(நூல் : ஸஹீஹ் தாரகுத்னீ : 4 / 284)


2) அய்யாமுத் தஷ்ரீக் மூன்று நாட்களிலும் நாம் நோன்பு வைக்க கூடாது! இந்த மூன்று நாட்களும் உண்ணுவதற்கும் பருகுவதற்கும் உரிய நாட்களாகும்!


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :


அய்யாமுத் தஷ்ரீக் (எனும் ஹஜ்ஜுப் பெருநாளுக்கு அடுத்த மூன்று) நாட்கள், உண்பதற்கும் பருகுவதற்கும், அல்லாஹ்வை நினைவு கூர்(ந்து திக்ர் செய்)வதற்கும் உரிய நாட்களாகும்!


(நூல் : ஸஹீஹ் முஸ்லிம் : 2099)


3) ஹஜ்ஜில் இருப்பவர்களுக்கு 'ஹதீ' (هدي) என்னும் குர்பானிப் பிராணி கிடைக்கவில்லை என்றால் மட்டும் இதற்கு பதிலாக அவர்கள் நோன்பு வைக்க அனுமதி உண்டு!


ஆயிஷா (ரலி), இப்னு உமர்(ரலி) ஆகியோர் கூறியதாவது :


குர்பானிப் பிராணி கிடைக்காதவர் தவிர மற்றவர்கள் தஷ்ரீக்குடைய நாட்களில் நோன்பு நோற்க அனுமதிக்கப்படவில்லை!


(நூல் : ஸஹீஹ் புகாரி : 1998)


4) இந்த மூன்று நாட்களிலும் நாம் அதிகமாக அல்லாஹ்வை திக்ர் செய்வதற்குரிய நாட்களாகும்! அல்லாஹ் நமக்கு கொடுத்து உள்ள உணவிற்கும் மகிழ்ச்சியானா வாழ்விற்கும் அவனுக்கு நன்றி செலுத்த வேண்டும்!


5) இந்த நாட்கள் பற்றி இஸ்லாம் கூறுவதன் மூலம் இஸ்லாத்தின் இலகுவான தன்மைக்கு எடுத்துக்காட்டாக இருக்கின்றது! இந்நாட்களில் நோன்பு நோற்பது தடை செய்யப்பட்டு உள்ளது ! இந்த நாட்களில் தாராளமாக வீண்விரையமின்றி உண்டு, பருகி குடும்பத்தினர் உடன் சந்தோசப்படுவதை இஸ்லாம் வரவேற்கிறது! முழு வருடமும் நோன்பு நோற்பதை இஸ்லாம் தடை செய்துள்ளது!


தக்பீர் சொல்வது எதற்காக:-

وَلِتُکَبِّرُوا اللّٰهَ عَلٰى مَا هَدٰٮكُمْ وَلَعَلَّکُمْ تَشْكُرُوْنَ‏

உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அல்லாஹ்வின் மகத்துவத்தை நீங்கள் போற்றி நன்றி செலுத்துவதற்காகவுமே (அல்லாஹ் இதன் மூலம் நாடுகிறான்).

அல்குர்ஆன்: 2: 185 )

ஒரு முஸ்லிமுடைய வாழ்வில் தக்பீர் அதிகம் தொடர்புடைய மகத்தான வார்த்தையாகும்..

பிறந்த குழந்தையாக இருக்கும் நிலையில் காதுகளில் ஒலிக்கப்படுவதில்  இருந்து குழிக்குள் அடக்கம் செய்யப்படும் முன்பு ஜனாஸா தொழுகை வரை  வாழ்வில் தக்பீர் தொடர்ந்து வருகிறது.

மகிழ்ச்சியின் அடையாளமாகவீரத்தை பறைசாற்றும் முகமாகவெற்றி வாகை சூடும் போது எழுச்சிக் குரலாகஎதிரிகளின் அச்சத்தின் போது அபயக்குரலாகதொழுகைக்கான அழைப்பாகதொழுகையின் அணிகலனாகஹஜ்ஜின் கம்பீர முழக்கமாககுர்பானியின் ஓர் அங்கமாக என்று தக்பீரின் முழக்கம் என்பது நீண்ட பட்டியலைக் கொண்டதாகும்.

நாளொன்றுக்கு ஒரு இறைநம்பிக்கையாளர் கடமையான மற்றும் உபரியான தொழுகை மூலம் மட்டுமே  342 முறையும் அத்தோடு ஐந்து நேர தொழுகைக்குப் பிறகுதூங்கும் முன்பு என அவர் 6×34=204 தடவை அத்தோடு அவர் பாங்குக்கு வழக்கமாக பதில் சொல்பவராக இருந்தால் 30 முறை என மொத்தமாக 596 முறை தக்பீர் சொல்கிறார்.  

இந்த உலகில் இந்த பெரும் பாக்கியம் தொழுகையில் இஃக்லாஸாக ஈடுபடும் ஒரு இறைநம்பிக்கையாளரைத் தவிர வெறெவருக்கும் கிடைப்பதில்லை.


Popular posts from this blog

ஈஸா (அலை) செய்த அற்புதங்களும் நாம்பெறவேண்டிய படிப்பினைகளும். 23-12_22

பைத்துல் முகத்தஸ்