ஜூம்ஆ 08-11-2024.
ஜும்ஆ தினம் (வெள்ளிக்கிழமை)
முன்னுரை
يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِذَا نُوْدِىَ لِلصَّلٰوةِ مِنْ يَّوْمِ الْجُمُعَةِ فَاسْعَوْا اِلٰى ذِكْرِ اللّٰهِ وَذَرُوا الْبَيْعَ ذٰ لِكُمْ خَيْرٌ لَّـكُمْ اِنْ كُنْتُمْ تَعْلَمُوْنَ
நம்பிக்கையாளர்களே! வெள்ளிக்கிழமையன்று ஜுமுஆ தொழுகைக்காக (பாங்கு சொல்லி) நீங்கள் அழைக்கப்பட்டால், வியாபாரத்தை விட்டுவிட்டு, அல்லாஹ்வை நினைவுகூர நீங்கள் விரைந்து செல்லுங்கள். அறிவுடையவர்களாக இருந்தால் இதுவே உங்களுக்கு மிக நன்று. (இதனை நீங்கள் அறிந்து கொள்வீர்களாக!
(அல்குர்ஆன் : 62:9)
فَاِذَا قُضِيَتِ الصَّلٰوةُ فَانْتَشِرُوْا فِى الْاَرْضِ وَابْتَغُوْا مِنْ فَضْلِ اللّٰهِ وَاذْكُرُوا اللّٰهَ كَثِيْرًا لَّعَلَّكُمْ تُفْلِحُوْنَ
(ஜுமுஆ) தொழுகை முடிவு பெற்றால், (பள்ளியிலிருந்து புறப்பட்டுப்) பூமியில் சென்று அல்லாஹ்வுடைய அருளைத் தேடிக்கொள்ளுங்கள். நீங்கள் வெற்றி அடைவதற்காக அதிகமதிகம் அல்லாஹ்வை நினைவுகூருங்கள்.
(அல்குர்ஆன் : 62:10)
ஜும்ஆ என்றால் என்ன
ஜும்ஆ என்ற சொல்லுக்கு ஒன்று கூடுதல் என்று பொருள். தொழுகைக்காக மக்கள் ஒன்று கூடுவதினால் இத்தொழுகைக்கு ஜும்ஆ தொழுகை என்றும் கூறப்படும்
மற்றொரு கருத்து
நபி ஆதம் (அலை) அவர்களும் அவர்கள் துணைவியார் ஹவ்வா (அலை)
அவர்களும் அரஃபா பெருவெளியில் ஒன்று சேர்ந்ததினால் இந்நாளுக்கு ஜும்ஆ நாள் என்றும் பெயர் வழங்கலாயிற்று.
இந்நாளில் அதிகமாக ரஹ்மத்தின் வாயில்கள் திறந்து விடப்படுவதாலும், இந்நாளில் அல்லாஹ்வின் மட்டில்லா அருட்கடாட்சங்கள் வழிந்தோடுவதாலும் இந்நாளை யவ்முல் மஜீது (அதிகம் நற்கூலி பெறும் நாள்) என வானவர்கள் குறிப்பிடுகின்றனர்.
ஜும்ஆ தொழுகை உம்மத்தே முஹம்மதிய்யாவிற்கு மட்டுமே உரிய வணக்கமாகும்.
ஜும்ஆ என்று முதன் முதலில் பெயர் சூட்டியவர் கஅபு இப்னு லுஅய் (ரலி) அவர்கள் என்று கூறப்பட்டிருக்கிறது.
நாட்களில் சிறந்தது வெள்ளிக்கிழமை
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சூரியன் உதிக்கும் நாட்களில் வெள்ளிக்கிழமையே மிகவும் சிறந்த நாளாகும். அன்று தான் (முதல் மனிதர்) ஆதம் (அலை) அவர்கள் படைக்கப்பட்டார்கள். அன்றுதான் சொர்க்கத்திற்குள் அவர்கள் அனுப்பப்பட்டார்கள். அன்றுதான் அவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்கள்.- இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் : 1547,1548
வெள்ளிக்கிழமையன்று மனிதனை படைத்தான்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
கண்ணியமும் மகத்துவமும் மிக்க அல்லாஹ் சனிக்கிழமை பூமியைப் படைத்தான். ஞாயிற்றுக்கிழமை மலையைப் படைத்தான். திங்கட்கிழமை மரங்களைப் படைத்தான். செவ்வாய்க்கிழமை உலோகங்களைப் படைத்தான். புதன்கிழமை ஒளியைப் படைத்தான். வியாழக்கிழமை பூமியிலே உயிரினங்களை பரவச் செய்தான் வெள்ளிக்கிழமை அஸருக்குப் பின் வெள்ளிக்கிழமையின் கடைசி நேரமான அஸர் மற்றும் இஷாவுக்கு மத்தியில் கடைசி படைப்பாக ஆதமைப் படைத்தான்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் (4997)
ஏழைகளின் பெருநாள் வெள்ளிக்கிழமை
62 ஆவது அத்தியாயமாக ஒரு கிழமையின் பெயரை அதாவது வெள்ளிக்கிழமையை சூராவின் பெயராக நமக்கு அல்லாஹ் கொடுத்திருக்கிறான்
வாரத்தில் ஒரு நாள் சிறப்பு வழிபாட்டிற்காக சனிக்கிழமை எங்களுக்கு உண்டு என்று யூதர்கள் பெருமை பேசினார்கள் அவர்களுக்கு பதில் அளிக்கும் வகையில் ” 6 நாட்களில் உலகத்தை படைத்த இறைவன் அதில் இறுதிநாளான வெள்ளிக்கிழமையை முஸ்லிம்களுக்கு சிறப்பு தினமாக அறிவித்தான்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ், நமக்கு முந்தைய (யூதர் மற்றும் கிறித்தவ) சமுதாயத்தாரை (வார வழிபாட்டு நாளான) வெள்ளிக்கிழமையிலிருந்து வழிபிறழ விட்டுவிட்டான். எனவே, யூதர்களுக்குச் சனிக்கிழமையும் கிறித்தவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமையும் (வார வழிபாட்டு நாட்களாக) அமைந்தன. பிறகு அல்லாஹ் நம்மைப் படைத்து நமக்கு வெள்ளிக்கிழமையை அறிவித்தான். (வரிசை முறையில்) வெள்ளி, சனி, ஞாயிறு என அமைந்திருப்பதைப் போன்றே மறுமை நாளிலும் அவர்கள் நம்மைப் பின்தொடர்பவர்களாகவே இருப்பார்கள். உலக மக்களில் நாமே (காலத்தால்) பிந்தியவர்களாக இருக்கிறோம்; மறுமை நாளில் (தகுதியால்) முந்தியவர்களாகவும் படைப்பினங்களில் அனைவருக்கும் முன் தீர்ப்பளிக்கப் படுபவர்களாகவும் இருப்போம்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்களும் ஹுதைஃபா (ரலி) அவர்களும் அறிவிக்கிறார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் :1549,1550,1551, 1552.
யூதர்களை சிறுமைப்படுத்தி பதில் அளிக்கப் பட்ட இந்த வசனங்களும் நபிமொழிகளும் ஜும்ஆ தொழுகையை எப்படி கண்ணியப்படுத்த வேண்டும் எனும் ஒழுங்கு முறைகளை நமக்கு சொல்லித் தருகின்றது.
ஸஹாபாக்கள் நடத்திய முதல் ஜும்ஆ
முதல் ஜும்ஆவை நடத்தும் பாக்கியத்தை அல்லாஹ் ஒரு ஸஹாபிக்குத்தான் கொடுத்தான். அவர் யார் என்று நாம் தெரிந்து கொள்வதற்கு முன்னால் இஸ்லாமிய வரலாற்றை திரும்பி பார்க்க வேண்டும்.
40 ஆவது வயதில் நபியாக ஆன முஹம்மது(ஸல்) அவர்கள் மக்காவில் 13 ஆண்டுகாலம் வாழ்ந்தார்கள். இந்த 13 ஆண்டுகளும் இருண்ட காலம் என்றால் அது மிகையாக ஆகாது.. ஐந்து வேளை தொழுகையைக் கூட பகிரங்கமாக தொழ முடியாத காலம் அது. எனவே நபி(ஸல்) அவர்கள் மக்காவில் ஜும்ஆ நடத்தவே இல்லை. நடத்த முடியவில்லை.
13 ஆண்டுகளாக ஹஜ்ஜுக்கு வரும் மக்களிடம் மடைமைகளுக்கும் சிலை வணக்கங்களுக்கும் எதிரான பிரச்சாரம் செய்வதை வழக்கமாக கொண்டு இருந்தார்கள்.
சிலர் சிந்திப்பார்கள். பலர் நிராகரிப்பார்கள். நபியின் 50 ஆவது வயதில், அதாவது நபியான பின் 10 ஆவது ஆண்டில் மதீனாவில் இருந்து ஒரு குழு ஹஜ் செய்ய வந்தார்கள். அதில் 6 பேர் இடம் பெற்று இருந்தார்கள். அந்த 6 பேருக்கும் நபி(ஸல்) அவர்கள் இஸ்லாத்தை எடுத்துச் சொன்னார்கள்.
மதீனா திரும்பிய அந்த 6 பேரும் இஸ்லாத்தை சிலருக்கு எத்தி வைத்தார்கள். 6 இரட்டிப்பாகி 12 பேராக ஆனார்கள். இஸ்லாத்தை ஏற்க வேண்டும் என்ற முடிவுடன் மக்கா வர முடிவு செய்தார்கள். உடனே நபியை பார்க்க வர முடியாது. வந்தால் மக்கா காபிர்கள் விட மாட்டார்கள். எனவே ஹஜ் நேரத்தில்தான் ஹஜ் செய்வது போல் வந்து நபியை பார்க்க முடியும். ஹஜ் காலத்தில் வந்தால் சந்தேகப்பட மாட்டார்கள்.
நுபுவ்வத்தின் 11ஆம் ஆண்டில் அந்த 12 பேரும் நபியைப் பார்க்க காத்து இருந்தார்கள். ஹஜ்ஜுடைய நேரம் வந்ததும் கஸ்ரஜ் கோத்திரத்தை சார்ந்த அஸ்அத்பின்ஸுராரா அவர்கள் தலைமையில் மக்காவுக்கு வந்தார்கள். வந்து இஸ்லாத்தை ஏற்றார்கள். ஒரு உடன்படிக்கையையும் செய்தார்கள்.
உடன்படிக்கை என்றதும் இப்பொழுது உங்களில் பலருக்கு அகபா உடன்படிக்கை என்ற நிகழ்ச்சி நினைவுக்கு வந்து இருக்கும். இவர்கள்தான் இஸ்லாமிய சாம்ராஜ்யம் எனப்படும் இஸ்லாமிய அரசு அமைய அடித்தளம் வகுத்தவர்கள்.
பத்ருப் போரில் அபுஜஹ்லை கொன்ற முஆது(ரலி) அவர்கள் உட்பட பல முக்கிய தோழர்கள்தான் இந்த 12 பேரில் இடம் பெற்று இருந்தார்கள். இந்த 12 பேரிடமும் நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள். இங்கு ஜும்ஆ நடத்த முடியவில்லை என்று.
குழுவின் தலைவர் அஸ்அத் பின் ஸுராரா (ரலி) அவர்களுக்கு கட்டளை இட்டார்கள். “நீங்கள் போய் உங்கள் ஊரில் ஜும்ஆ நடத்துங்கள்” என்று அவர் போய் நபி(ஸல்) அவர்களின் 52 ஆவது வயதில் மதீனாவில் ஜும்ஆவை நடத்தினார்.
நபியாகி 12 ஆண்டுகள் ஆனதில் இருந்து மதீனாவில் ஜும்ஆ நடக்க ஆரம்பித்து விட்டது. நபி(ஸல்) அவர்கள் இருக்கும் மக்காவில் ஜும்ஆ நடக்கவில்லை. காரணம் நடத்த முடியவில்லை. நடத்த முடியாது.
முதன் முதலில் ஜும்ஆ என்ற இந்த தொழுகையை நபியின் கட்டளைப்படி ஆரம்பித்து வைத்தவர் அஸ்அத்பின்ஸுராரா(ரலி) என்ற நபி தோழர்தான்.
கியாம நாள் வரை உலகில் எத்தனை ஜும்ஆக்கள் நடந்தாலும் அத்தனை ஜும்ஆவிலிருந்தும் ஒரு பங்கு நன்மை அவருக்குப் போய் சேரும். நல்ல காரியத்தை யார் துவக்கி வைத்தாலும் அவருக்கு ஒரு பங்கு கியாம நாள் வரை கிடைக்கும் என்பதுதான் இஸ்லாமிய நியதி. இந்த மஸ்ஜிதே ஃபலாஹ் ஜும்ஆவிலிருந்தும் ஒரு பங்கு அஸ்அத்பின்ஸுராரா(ரலி) என்ற நபி தோழருக்கு கிடைக்கும். அதனால் நமக்கு உள்ள நன்மையில் எதுவும் குறைந்து விடாது.
தபூக் போரில் கலந்து கொள்ளாததால் சமூக பகிஷ்காரம் செய்யப்பட்டவர் கஃபு இப்னு மாலிக்(ரலி) அவர்கள். அவர்களை அல்லாஹ் மன்னித்து ஆயத்துகளை இறக்கினான். அந்த ஸஹாபி வயதான காலத்தில் கண் தெரியாத நிலையை அடைந்தார். அவரை அவரது மகன்தான் பள்ளிக்கு அழைத்துச் செல்வார். இன்று இந்த மாதிரி மகன்களை பார்ப்பது கடினம்.
அந்த மகனார் அப்துர் ரஹ்மான் பின் கஅப் (ரஹ்) அவர்கள் சொல்கிறார். எனது தகப்பனார் கஃபு இப்னு மாலிக்(ரலி) அவர்கள். வெள்ளிக்கிழமை ஜும்ஆ உடைய அழைப்பைக் கேட்டால் ஒரு துஆ செய்வார். வெள்ளிக்கிழமை மட்டும் இந்த துஆ செய்வார். அது என்ன துஆ?
வெள்ளிக்கிழமை ஜும்ஆ உடைய அழைப்பைக் கேட்டால் அஸ்அத்பின்ஸுராராவுக்கு அல்லாஹ் அருள் செய்வானாக என்று கஃபு இப்னு மாலிக்(ரலி) அவர்கள் துஆச் செய்கிறார்கள். மகனாருக்கு ஒன்றும் புரியவில்லை. என்ன வாப்பா யாரும் சொல்லாத கேட்காத ஒரு துஆவை அதுவும் வெள்ளிக்கிழமை தோறும் கேட்கிறாரே என்று வாப்பாவிடம் கேட்டு விட்டார்.
தந்தையே வெள்ளிக்கிழமை தோறும் ஜும்ஆ பாங்கு சொல்லி முடிந்த உடன் அஸ்அத்பின்ஸுராராவுக்கு துஆச் செய்கிறீர்களே என்ன விஷயம் என்று. அதற்கு கஃபு இப்னு மாலிக்(ரலி) அவர்கள் பதில் சொன்னார்கள். அவர்தான் இஸ்லாத்தில் முதன் முதலில் ஜும்ஆவை ஆரம்பித்து வைத்தவர். அவரது ஜும்ஆ உரை மூலம்தான் நாங்கள் இஸ்லாத்தை அறிந்து கொண்டோம் என்று பதில் கூறி உள்ளார்கள்.
முதல் ஜும்ஆ எங்கு நடத்தினார்கள்? மதீனாவிலும் இது புது மார்க்கம்தானே அதனால் அங்கும் ஊருக்குள் நடத்த முடியாது. எனவே ஊருக்கு வெளியில் பனுாபயாளா என்ற சமுதாயத்திற்கு சொந்தமான “ஹஸ்முன் நபீத்” என்ற இடத்தில். அதாவது தனியாருக்கு சொந்தமான கருங்கற்கள் நிறைந்த ஒரு நிலத்தில். மதீனாவிலிருந்து சுமார் ஒண்ணரை கி.மீ. தொலைவில் உள்ள இடத்தில் ஊருக்கு வெளியே அந்த ஜும்ஆவை நடத்தினார்கள். (அபூதாவுத் 903)
நபி (ஸல்) அவர்கள் நடத்திய முதல் ஜும்ஆ
குபாவில் கட்டப்பட்ட பள்ளிதான் நபித்துவத்திற்கு பிறகு இறையச்சத்துடன் கட்டப்பட்ட முதல் பள்ளியாகும். நபி (ஸல்) பயணித்துக் கொண்டிருக்கும்போது ஸாலிம் இப்னு அவ்ஃப் கிளையினர் வசிக்கும் இடம் வந்தபோது ஜுமுஆ” தொழுகைக்கான நேரமும் ஆகிவிட்டதால் ‘பத்னுல் வாதி’ என்ற இடத்தில் அனைவரையும் ஒன்று சேர்த்து நபி (ஸல்) ஜுமுஆ தொழுகை நடத்தினார்கள். (அந்த இடத்தில் இன்று பள்ளிவாசல் கட்டப்பட்டுள்ளது) மொத்தம் நூறு நபர்கள் நபி (ஸல்) அவர்களுடன் தொழுதார்கள்.
(இப்னு ஹிஷாம், ஜாதுல் மஆது)
நூல் : ரஹீக் (முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு)
வெள்ளிக்கிழமை செய்ய வேண்டிய அமல்கள்
அதிகமாக ஸலவாத்து சொல்லுதல்
عَنْ أَبِي أُمَامَةَؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: أَكْثِرُوا عَلَّي مِنَ الصَّلاَةِ فِي كُلِّ يَوْمِ الْجُمُعَةِ فَإِنَّ صَلاَةَ أُمَّتِي تُعْرَضُ عَلَيَّ فِي كُلِّ يَوْمِ جُمُعَةٍ فَمَنْ كَانَ أَكْثَرَهُمْ عَلَيَّ صَلاَةً كَانَ أَقْرَبَهُمْ مِنِّي مَنْزِلَةً.
رواه البيهقي باسناد حسن الاان مكحولا قيل:لم يسمع من ابي امامة الترغيب:٢ /٥٠٣
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையன்றும் மிக அதிகமாக என் மீது ஸலவாத் சொல்லுங்கள், ஏனேனில், என் சமுதாயத்தினர் என் மீது சொல்லும் ஸலவாத் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையன்றும் என்னிடம் சமர்ப்பிக்கப்படுகின்றன. எனவே எவர் எவ்வளவு அதிகமாக என்மீது ஸலவாத் சொல்வாரோ அவர் (கியாமத் நாளன்று) தகுதியால் என்னுடன் மிக நெருக்கமாக இருப்பார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூ உமாமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(பைஹகீ, தர்ஙீப்)
١٥٢- عَنْ أَنَسٍؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: أَكْثِرُوا الصَّلاَةَ عَلَيَّ يَوْمَ الْجُمُعَةِ فَإِنَّهُ أَتَانِي جِبْرِيلُؑ آِنفاً عَنْ رَبِّهِ فَقَالَ: مَا عَلَي اْلاَرْضِ مِنْ مُسْلِمٍ يُصَلِّي عَلَيْكَ مَرَّةً وَاحِدَةً إِلاَّ صَلَّيْتُ أَنَا وَمَلاَئِكَتِي عَلَيْهِ عَشْرًا.
رواه الطبراني عَنْ ابي ظلال عَنْه وابو ظلال وثق ولايضر في المتابعات الترغيب:٢ /٤٩٨
வெள்ளிக்கிழமையன்று என் மீது அதிகமாக ஸலவாத் சொல்லுங்கள். ஏனேனில், பூமியில் யாரேனும் ஒரு முஸ்லிம் தங்கள் மீது ஒருமுறை ஸலவாத் சொன்னால் நான் அவர்மீது பத்து ரஹ்மத்களைப் பொழிவேன். மேலும் என்னுடைய மலக்குகள் அவருக்காகப் பத்து முறை பாவமன்னிப்புத் தேடுகின்றனர்” என்ற செய்தியைச் சற்று முன்புதான் ஹஜ்ரத் ஜிப்ரஈல் (அலை) அவர்கள் அல்லாஹுதஆலா விடமிருந்து கொண்டு வந்தார்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(தபரானீ, தர்ஙீப்)
عَنْ أَوْسِ بْنِ أَوْسٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم-
« إِنَّ مِنْ أَفْضَلِ أَيَّامِكُمْ يَوْمَ الْجُمُعَةِ فِيهِ خُلِقَ آدَمُ وَفِيهِ قُبِضَ وَفِيهِ النَّفْخَةُ وَفِيهِ الصَّعْقَةُ فَأَكْثِرُوا عَلَىَّ مِنَ الصَّلاَةِ فِيهِ فَإِنَّ صَلاَتَكُمْ مَعْرُوضَةٌ عَلَىَّ ». قَالَ قَالُوا يَا رَسُولَ اللَّهِ وَكَيْفَ تُعْرَضُ صَلاَتُنَا عَلَيْكَ وَقَدْ أَرِمْتَ يَقُولُونَ بَلِيتَ. فَقَالَ « إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ حَرَّمَ عَلَى الأَرْضِ أَجْسَادَ الأَنْبِيَاءِ ».
“உங்களது நாட்களில் மிகச் சிறந்த நாள் வெள்ளிக்கிழமையாகும். அந்நாளில் தான் ஆதம் நபி படைக்கப்பட்டார்கள். அந்நாளில் அவர்களது உயிர் கைப்பற்றப்பட்டது. அந்நாளில் ஸூர் ஊதுதல் நிகழும். அந்நாளில் மக்கள் மூர்ச்சையாகுதல் நிகழும். எனவே அந்நாளில் என் மீது ஸலவாத்தை அதிகமாக்குங்கள். உங்களது ஸலவாத் என்னிடம் எடுத்துக் காட்டப்படுகின்றது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். “அல்லாஹ்வின் தூதரே! எங்களது ஸலவாத் உங்களுக்கு எப்படி எடுத்துக் காட்டப்படும்? நீங்கள் தான் வபாஅத் ஆகி இருப்பீர்களே!” என்று நபித்தோழர்கள் கேட்ட போது, ”நிச்சயமாக அல்லாஹ் நபிமார்களின் உடல்களை பூமி அரிப்பதை விட்டும் தடுத்து விட்டான்” என்று பதிலளித்தார்கள்.
அறி: அவ்ஸ் பின் அவ்ஸ்,
நூல்: அபூதாவூத் 883
வெள்ளிக்கிழமை குளிப்பது
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஏழு நாட்களுக்கு ஒரு முறை (வெள்ளிக்கிழமை அன்று) தம் தலையையும் மேனியையும் கழுவிக் குளிப்பது, ஒவ்வொரு முஸ்லிமும் அல்லாஹ்விற்காகச் செய்ய வேண்டிய கடமையாகும்.- இதை அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் :1531,1535, 1539.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் வெள்ளிக்கிழமை (ஜுமுஆ) தினத்தில் மக்களுக்கு உரையாற்றிக்கொண்டிருந்தபோது,உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்கள் (பள்ளிக்குத் தாமதமாக) வந்தார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள் “சிலருக்கு என்ன நேர்ந்தது? அவர்கள் தொழுகை அறிவிப்புச் செய்யப்பட்ட பின் தாமதமாக வருகின்றனர்!” என உஸ்மான் (ரலி) அவர்களைக் குறிப்பிட்டுச் சாடையாகக் கேட்டார்கள். அதற்கு உஸ்மான் (ரலி) அவர்கள், “இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! தொழுகை அறிவிப்பைக் கேட்டவுடன் அங்கத்தூய்மை (“உளூ”) மட்டும் செய்துவிட்டுப் புறப்பட்டுவிட்டேன்” என்று கூறினார்கள். அதற்கு உமர் (ரலி) அவர்கள், “வெறும் “உளூ” மட்டும்தானா? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “உங்களில் ஒருவர் ஜுமுஆவுக்குச் செல்லும்போது குளித்துக்கொள்ளட்டும்” எனக் கூறியதை நீங்கள் செவியுறவில்லையா?” என்று கேட்டார்கள்
ஸஹீஹ் முஸ்லிம் : 1534.
குறிப்பு
கிழக்கு வெளுத்ததிலிருந்து ஜும்ஆவுக்குப் போகும் வரை எந்த நேரத்திலாவது குளிக்கலாம். அது சுன்னத்து முஅக்கதாவாகும். ஆனால் ஜும்ஆவுக்கு நெருக்கமான நேரத்தில் குளிப்பது ஏற்றமாகும். ஜும்ஆவுடைய குளிப்பு தவறிவிட்டால் அந்த நிய்யத்தைக் கொண்டு மறுபடி களா செய்வது சுன்னத்தாகும். தண்ணீரை உபயோகிக்க முடியாவிட்டால் மண்ணைக்கொண்டு தயம்மும் செய்வது சுன்னத்து.
ஹன்பலீ மத்ஹபில் ஜும்ஆவின் குளிப்பு வாஜிபாகும். அதில் தேய்த்துக் குளிப்பதை விட்டாலும் அதனைக் களாச் செய்வது அந்த மத்ஹபில் அவசியமாகும்.
நல்ல ஆடைகளை அணிவது
ஆயிஷா ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள் அல்லாஹ்வின் தூதர் நபி ஸல் அவர்கள் ஜூம்ஆவில் உரை நிகழ்த்திக் கொண்டிருந்தார்கள் அப்போது தோழர்களின் வரிவரியாக கோடிட்ட ஆடைகள் இருப்பதை பார்த்தார்கள் அப்போது கூறினார்கள் உங்களில் ஒருவர் வசதி வாய்ப்பை பெற்றிருந்தால் ஏனைய நாட்களில் பணிக்காக பயன்படுத்தும் ஆடையை விட்டுவிட்டு ஜும் ஆ தொழுகைக்கு என இரண்டு ஆடைகளை அணிவதே அவரின் மீதான கடமையாகும்
இமாம் இப்னுமாஜா (ரஹ்) அவர்கள் இதனை பதிவு செய்திருக்கிறார்கள்.
வியாபாரம் செய்ய கூடாது
يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِذَا نُوْدِىَ لِلصَّلٰوةِ مِنْ يَّوْمِ الْجُمُعَةِ فَاسْعَوْا اِلٰى ذِكْرِ اللّٰهِ وَذَرُوا الْبَيْعَ ذٰ لِكُمْ خَيْرٌ لَّـكُمْ اِنْ كُنْتُمْ تَعْلَمُوْنَ
நம்பிக்கையாளர்களே! வெள்ளிக்கிழமையன்று ஜுமுஆ தொழுகைக்காக (பாங்கு சொல்லி) நீங்கள் அழைக்கப்பட்டால், வியாபாரத்தை விட்டுவிட்டு, அல்லாஹ்வை நினைவுகூர நீங்கள் விரைந்து செல்லுங்கள். அறிவுடையவர்களாக இருந்தால் இதுவே உங்களுக்கு மிக நன்று. (இதனை நீங்கள் அறிந்து கொள்வீர்களாக!
(அல்குர்ஆன் : 62:9)
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் (ஒரு) வெள்ளிக்கிழமை அன்று நபி (ஸல்) அவர்களுடன் இருந்தபோது, (வியாபாரப் பொருட்களுடன்) ஒட்டகக் கூட்டம் ஒன்று வந்தது. உடனே அதை நோக்கி மக்கள் அனைவரும் வெளியேறிச் சென்றுவிட்டனர்; பன்னிரண்டு பேர் மட்டுமே எஞ்சினர். அந்தப் பன்னிருவரில் நானும் ஒருவன் ஆவேன். அப்போதுதான் அல்லாஹ் இந்த வசனத்தை அருளினான்
وَاِذَا رَاَوْا تِجَارَةً اَوْ لَهْوَا۟ اۨنْفَضُّوْۤا اِلَيْهَا وَتَرَكُوْكَ قَآٮِٕمًا قُلْ مَا عِنْدَ اللّٰهِ خَيْرٌ مِّنَ اللَّهْوِ وَمِنَ التِّجَارَةِ وَاللّٰهُ خَيْرُ الرّٰزِقِيْنَ
இன்னும், (நபியே!) அவர்களில் (சிலர்) ஒரு வியாபாரத்தையோ, அல்லது ஒரு வேடிக்கையையோ, கண்டால், அதன்பால் அவர்கள் சென்று விடுகின்றனர். மேலும், நின்ற வண்ணமே உம்மை விட்டுவிடுகின்றனர்; “அல்லாஹ்விடத்தில் இருப்பது, வேடிக்கையை விடவும் வியாபாரத்தை விடவும் மிகவும் மேலானதாகும்; மேலும் அல்லாஹ் உணவளிப்பவர்களில் மிகவும் மேலானவன்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.
(அல்குர்ஆன் : 62:11)
எனும் (62:11ஆவது) வசனத்தை முழுமையாக அருளினான்.
ஸஹீஹ் முஸ்லிம் : 1567.
குறிப்பு
ஜும்ஆ தினத்தில் பாங்கு சொல்லப்பட்ட உடன் கொடுக்கல்-வாங்கல் செய்வது ஹராம் ஆகும்
அந்த நேரத்தில் முஸ்லிம் பெண்கள் அல்லது மாற்று மத சகோதரர்களை வேலைக்கு அமர்த்தி வியாபாரம் செய்தாலும் அதன் பலனை அனுபவிப்பது முஸ்லிமான ஒருவர்தான்.
எனவே வியாபாரம் பாங்கு சொன்ன பிறகு நிச்சயம் வியாபாரம் செய்யக் கூடாது என்பதை நாம் விளங்க வேண்டும்.
துஆ (செய்வது) ஏற்றுக்கொள்ளப்படும் நேரம்
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறிய தாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை பற்றிக் குறிப்பிடுகையில் “அதில் ஒரு நேரம் இருக்கிறது. சரியாக அந்த நேரத்தில் ஒரு முஸ்லிம் அடியார் தொழுகையில் ஈடுபட்டு, அல்லாஹ்விடம் எதைக் கோரினாலும் அதை அவருக்கு அல்லாஹ் வழங்காமல் இருப்பதில்லை.-
குதைபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் “அது மிகக் குறைந்த நேரம் என்பதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது கையால் சைகை செய்து உணர்த்தினார்கள்” என அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.
ஸஹீஹ் முஸ்லிம் : 1543.
ஜும்ஆ தினத்தின் சிறப்புகள்
ஜூம்ஆ தொழுகைக்காக நடந்து வருவது
عَنْ يَزِيدَ بْنِ أَبِي مَرْيَمَ ؒ قَالَ: لَحِقَنِي عَبَايَةُ بْنُ رِفَاعَةَ بْنِ رَافِعٍ ؒ وَأَنَا مَاشٍ إِلَي الْجُمُعَةِ فَقَالَ: أَبْشِرْ فَإِنَّ خُطَاكَ هذِهِ فِي سَبِيلِ اللهِ سَمِعْتُ أَبَا عَبْسٍ ؓ يَقُولُ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: مَنِ اغْبَرَّتْ قَدَمَاهُ فِي سَبِيلِ اللهِ فَهُمَا حَرَامٌ عَلَي النَّارِ.
رواه الترمذي وقال: هذا حديث حسن صحيح غريب باب ماجاء في فضل من اغبرت قدماه في سبيل اللّه، رقم:١٦٣٢
நான் ஜும்ஆத் தொழுகைக்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது, வழியில் ஹஜ்ரத் அபாயா இப்னு ரிஃபாஆ (ரஹ்) அவர்களைச் சந்தித்தேன், அவர்கள், உமக்கு ஒரு நற்செய்தி! நீர் எடுத்து வைக்கும் கால் எட்டு அல்லாஹ்வின் பாதையில் எடுத்து வைக்கிறீர்’ என்று கூறினார்கள். அல்லாஹ்வின் பாதையில் எவருடைய பாதங்களின் மீது புழுதி படிகிறதோ அந்தப் பாதத்தை நரக நெருப்புத் தீண்டுவது விலக்காகி விட்டது” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஅப்ஸ் (ரலி) அவர்கள் சொல்ல நான் கேட்டுள்ளேன்” என்பதாக ஹஜ்ரத் யஸீதுப்னு அபூமர்யம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
(திர்மிதீ)
عَنْ أَوْسِ بْنِ أَوْسِ نِ الثَّقَفِيِّ ؓ قَالَ: سَمِعْتُ رَسُولُ اللهِ ﷺ يَقُولُ: مَنْ غَسَّلَ يَوْمَ الْجُمُعَةِ وَاغْتَسَلَ ثُمَّ بَكَّرَ وَابْتَكَرَ وَمَشَي وَلَمْ يَرْكَبْ وَدَنَا مِنَ اْلإِمَامِ فَاسْتَمَعَ وَلَمْ يَلْغُ كَانَ لَهُ بِكُلِّ خُطْوَةٍ عَمَلُ سَنَةٍ أَجْرُ صِيَامِهَا وَقِيَامِهَا.
رواه ابوداؤد باب في الغسل للجمعة،رقم:٣٤٥
எவர் ஜும்ஆ நாளன்று மிக நல்ல முறையில் குளித்து காலை நேரத்தில் வாகனத்தில் செல்லாமல் நடந்து பள்ளிக்கு சென்று இமாமுக்கு அருகில் அமர்ந்து, குத்பாவைக் கவனத்துடன் கேட்டு, அச்சமயம் எந்த விதப் பேச்சும் பேசாமல் இருக்கிறாரோ, அவர் ஜும்ஆத் தொழுகைக்கு எத்தனை எட்டுக்கள் எடுத்துவைத்து வந்தாரோ, அந்த ஒவ்வொரு எட்டுக்கும் ஒரு வருடம் நோன்பு வைத்த நன்மையும், ஒரு வருடம் இரவு நின்று வணங்கிய நன்மையும் கிடைக்கிறது” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறத் தாம் கேட்டதாக ஹஜ்ரத் அவ்ஸிப்னு அவ்ஸ் ஸகஃபீ (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
(அபூதாவூத்)
பயான் கேட்பதன் சிறப்பு
ஜும்ஆவுக்கு வந்தவர்கள் இமாமுக்கு நெருக்கமாக அவரது முகத்தை நேராகப் பார்க்கும் வித்தில் அமர்வது
ஜும்ஆவுக்கு வரும் முதியோர்கள் முதல் சிறுவர்கள், இளைஞர்கள் வரை எல்லாருமே சுவர்களில் சாயந்து இருந்து கொள்கின்றனர். இமாம் மத்தியில் வெற்று இடத்தைப் பார்த்துத்தான் குத்பா பயான் பேச வேண்டியுள்ளது.
இவ்வாறே கீழ் மாடியில் இடமிருக்கும் போது மேல் மாடியில் அமர்வதையும், உள் பள்ளியில் இடமிருக்கும் போது வெளிப் பள்ளியில் அமர்வதையும் அவசியம் தவிர்த்தாக வேண்டும்.
‘ஜும்ஆவுக்கு சமுகமளியுங்கள். இமாமை நெருங்கி அமருங்கள். ஒரு மனிதர் இமாமை விட்டும் தூரமாகிச் சென்றால் அவர் சுவனத்தில் நுழைவதிலும் பிற்படுத்தப்படுவார்’ என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸம்ரதுப்னு ஜுன்தூப்(ரலி) அவர்கள்
நூல்: அபூதாவூத்: 1108, அஹ்மத்: 20118
குறிப்பு
இன்று நம்மில் சிலர் ஜும்மா தொழுகை தினத்தில் இமாம் பயான் செய்ய ஆரம்பிக்கும் போது ஆரம்பத்தில் இரண்டு அல்லது மூன்று நபர்கள் அமர்ந்திருப்பார்கள் சிறிது நேரம் கழித்து ஒவ்வொருவராக வருவார்கள் இமாம் பயான் முடிக்கும்போது பாதி அளவிற்கு தொழுகைக்கு வந்து விடுவார்கள் அதற்குப் பிறகு இமாம் குத்பா ஆரம்பிக்கும் போது மீதமிருக்கும் நபர்கள் ஒவ்வொருவராக வருவார்கள் இமாம் மிம்பரில் இருந்து கீழே இறங்கும் போது சிலர் ஓடிவந்து ஜும்மா தொழுகையில் இணைந்து கொள்கிறார்கள்.
இவர்கள் அனைவரும் ஜும்ஆ தினத்தின் சிறப்பை முழுமையாக அறிந்து கொள்ளவில்லை.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(வெள்ளிக்கிழமை வந்துவிட்டால்) பள்ளிவாசலின் ஒவ்வொரு நுழைவாயிலிலும் ஒரு வானவர் நின்றுகொண்டு, முதன்முதலாக நுழைபவரையும் அடுத்து முதலில் நுழைபவரையும் (அவர்கள் யார், யார் என) எழுதிப் பதிவு செய்கிறார்கள்” என்று கூறினார்கள். பிறகு ஜுமுஆவுக்கு வருபவர்களின் நிலையை, இறைச்சி ஒட்டகத்தைக் குர்பானி கொடுத்தவர் போன்றவர் ஆவார் என்பதிலிருந்து முட்டையை தர்மம் செய்தவர் போன்றவர் ஆவார் என்பதுவரை படிப்படியாகக் குறைத்து ஒப்பிட்டுக் கொண்டே போனார்கள். “இமாம் (மிம்பர்மீது) அமர்ந்துவிட்டால் பெயர்ப்பதிவேடுகள் சுருட்டப்பட்டுவிடுகின்றன; வானவர்கள் (இமாமின்) உரையில் பங்கேற்கின்றனர்” என்றும் கூறினார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் : 1554,1555.
இமாம் அவர்கள் பள்ளிவாசலுக்குள் வந்துவிட்டால் வானவர்கள் நன்மையைப் பதிவு செய்யும் ஏட்டை மூடி வைத்துவிட்டு உரையைக் கேட்பதற்காக உள்ளே வந்து விடுகிறார்கள்.
ஸஹிஹுல் புகாரி 879, ஸஹீஹ் முஸ்லிம் 1539,
பாவங்கள் மன்னிக்கப்படுகிறது
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர் (வெள்ளிக்கிழமை அன்று) குளித்துவிட்டு ஜுமுஆத் தொழுகைக்குச் சென்று, அவரது விதியில் எழுதப்பட்டிருந்த அளவு (கூடுதலாகத்) தொழுதார்; பிறகு இமாம் தமது சொற்பொழிவை (குத்பா) முடிக்கும்வரை வாய்மூடி மௌனமாக உரையைக் கேட்டுவிட்டு, அவருடன் சேர்ந்து தொழுகையை நிறைவேற்றுகிறார். இத்தகையவருக்கு அந்த ஜுமுஆவிலிருந்து அடுத்த ஜுமுஆ வரையும் மேற்கொண்டு மூன்று நாட்கள்வரையும் ஏற்படுகின்ற (சிறு) பாவங்கள் (அனைத்தும்) மன்னிக்கப்படுகின்றன.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் : 1556.
வெள்ளிக்கிழமை மரணிப்பதன் சிறப்பு
யார் வெள்ளிக்கிழமை மரணிக்கிறாரோ அவர் கப்ரு வேதனையிலிருந்து காக்கப்படுவார்
என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்
அபூ யஃலா 7/146, திர்மிதீ 994,
அஹ்மத் 6294,6359
وَفِيهِ سَاعَةٌ لاَيَسْأَلُ اللهَ فِيهَا الْعَبْدُ شَيْئاً إِلاَّ أَعْطَاهُ مَا لَمْ يَسْأَلْ حَرَاماً، وَفِيهِ تَقُومُ السَّاعَةُ، مَامِنْ مَلَكٍ مُقَرَّبٍ وَلاَسَمَاءٍ وَلاَ أَرْضٍ وَلاَرِيَاحٍ وَلاَجِبَالٍ وَلاَ بَحْرٍ إِلاَّ وَهُنَّ يُشْفِقْنَ مِنْ يَوْمِ الْجُمُعَةِ.
رواه ابن ماجه باب في فضل الجمعة،رقم:١٠٨٤
ஜும்ஆ நாளில் தான் கியாமத் நாள் ஏற்படும், அணைத்து நெருக்கமான மலக்குகளும், வானம், பூமி, காற்று, மலை, கடல் யாவும் ஜும்ஆ நாளை பயப்படுகின்றன, (காரணம் உலக அழிவு ஜும்ஆ நாளன்று தான் உண்டாகும்) என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூலுபாபா இப்னு அப்துல்முன்திர் (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
(இப்னுமாஜா)
ஜும்ஆ தினத்தில் செய்யக்கூடாத செயல்கள்
குத்பா ஓதும் நேரத்தில் பேசக்கூடாது
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வெள்ளிக்கிழமை அன்று இமாம் உரையாற்றிக் கொண்டிருக்கும்போது, உன் அருகில் இருப்பவரிடம் நீ “மௌனமாக இரு” என்று கூறினாலும் நீ வீண்பேச்சு பேசியவனாவாய்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் : 1541.
ஜும்ஆ தினத்தில் தொழுகைக்கு வராதவர்களுக்கான எச்சரிக்கை
உள்ளம் முத்திரையிடப்படும்
‘ஜும்ஆ தொழுகைகளை விடுவதை விட்டும் ஒரு கூட்டம் விலகிக் கொள்ளட்டும்! இல்லையேல் அல்லாஹ் அவர்களது உள்ளங்களில் முத்திரையிடுவான் அவர்கள் கவனமற்றவர்களாக ஆவார்கள்!’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மிம்பர் படிகளில் நின்று சொன்னார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் :1432
‘அலட்சியமாக மூன்று ஜும்ஆக்களை யார் விட்டு விட்டாரோ அவரது உள்ளத்தில் அல்லாஹ் முத்திரையிட்டு விடுகின்றான்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபுல் ஜஃது (ரலி), நூல்: திர்மிதி: 460
‘ஒரு கூட்டத்தாருக்கு என்ன நேர்ந்தது? அவர்கள் ஜும்ஆவிற்கு வராமல் இருந்து விடுகின்றனர். நான் ஒருவரை மக்களுக்குத் தொழுவிக்கச் செய்யுமாறு உத்தரவிட்டு விட்டு, ஜும்ஆவிற்கு வராமல் தங்களுடைய வீடுகளில் இருக்கும் ஆட்களை கொழுத்தி விட எண்ணி விட்டேன்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)
நூல்: முஸ்லிம் :1043
ஜும்ஆ தினத்தில் ஓத வேண்டிய அமல்கள்
வெள்ளிக்கிழமை ஃபஜ்ர் தொழுகையில் ஓதும் சூரா.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை ஃபஜ்ர் தொழுகையில் “அலிஃப் லாம் மீம் தன்ஸீல்” (எனத் தொடங்கும்) “அஸ்ஸஜ்தா”எனும் (32ஆவது) அத்தியாயத்தையும் “ஹல் அத்தா அலல் இன்சானி ஹீனும் மினத் தஹ்ர்” எனும் (76ஆவது) அத்தியாயத்தையும் ஓதுவார்கள். மேலும், நபி (ஸல்) அவர்கள் ஜுமுஆத் தொழுகையில் “அல்ஜுமுஆ” எனும் (62 ஆவது) அத்தியாயத்தையும் “அல்முனாஃபிகூன்” எனும் (63ஆவது) அத்தியாயத்தையும் ஓதுவார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் : 1594.
வெள்ளிக்கிழமை ஒரு நாள் நோன்பு கூடாதுஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் வெள்ளிக்கிழமைக்கு முன்பு ஒரு நாள், அல்லது பின்பு ஒரு நாளைச் சேர்க்காமல் (தனியாக) வெள்ளியன்று மட்டும் நோன்பு நோற்கவேண்டாம்.
ஸஹீஹ் முஸ்லிம் : 2102.
வெள்ளிக்கிழமை ஓதக்கூடிய கஃஹ்ப் சூராவின் சிறப்பு
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் சூரத்துல் கஹ்ஃபின் ஆரம்ப வசனங்களையும் அதன் இறுதியையும் ஓதுகிறாரோ அவருக்குக் காலில் இருந்து தலை வரை ஒளி உண்டாகும். யார் அதை முழுவதையும் ஓதுகிறாரோ வானத்திலிருந்து பூமி வரை ஒளி உண்டாகும்
நூல்: அஹ்மத் (15073), முஃஜமுல் கபீர் தப்ரானீ (பாகம்: 2, பக்கம்: 197)
யார் கஹ்ஃப் அத்தியாயத்தை ஓதுவாரோ அவருக்குக் கியாம நாளில் அவருடைய இடத்திலிருந்து மக்கா வரை ஒளி உண்டாகும். யார் அதனுடைய இறுதி பத்து வசனங்களை ஓதிய பின்னர் தஜ்ஜால் வந்தால் அவர் மீது சாட்டப்பட்டாது. (அதாவது தஜ்ஜாலின் தீங்கு ஏற்படாது) என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.
நூல்: ஹாகிம், பாகம்: 2, பக்கம்: 123
தப்ரானீ அவர்களின் அவ்ஸத் (பாகம்: 2, பக்கம்: 123), ஸுனனுல் குப்ரா (பாகம்: 6, பக்கம்: 25) முஸன்னப் இப்னு அப்துர் ரஸ்ஸாக் (பாகம்: 1, பக்கம்: 186)
யார் வெள்ளிக்கிழமை அன்று கஹ்ஃப் அத்தியாயத்தை ஓதி பின்பு தஜ்ஜாலை அடைந்தால் தஜ்ஜால் அவருக்குத் தீங்கு இழைக்க முடியாது. யார் கஹ்ஃப் அத்தியாயத்தியாத்தின் இறுதியை ஓதுவாரோ அவருக்கும் மக்கா வரை ஒளி உண்டாகும் என்று அபூ ஸயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.
நூல்: ஷுஅபுல் ஈமான் பாகம்: 3, பக்கம்: 112
யார் கஹ்ஃப் அத்தியாயத்தை வெள்ளிக்கிழமை ஓதுவாரோ அவருக்கு மறுமை நாளில் அவரின் பாவத்திலிருந்து வானத்தின் மேகம் வரை ஒளியை ஏற்படும். மேலும் இரண்டு வெள்ளிக்கிழமைக்கு இடையில் ஏற்படும் பாவங்கள் மன்னிக்கப்படும்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னுஉமர் (ரலி)
தப்ஸீர் இப்னு மர்தவைஹி, தப்ஸீர் இப்னு கஸீர்
யார் கஹ்ஃப் அத்தியாயத்தை வெள்ளிக்கிழமை அன்று ஓதுவாரோ அவர் ஒவ்வொரு சோதனையில் இருந்தும் எட்டு நாள் பாதுகாக்கப்படுவார். தஜ்ஜால் வெளியேறினால் அவனிடமிருந்து இவர் பாதுகாப்பு பெறுவார்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னுஉமர் (ரலி)
நூல்: அல்அஹாதீஸில் முக்தார் (பாகம்: 2, பக்கம்:50)
யார் கஹ்ஃப் அத்தியாயத்தை வெள்ளிக்கிழமை இரவு ஓதுவாரோ அவர் ஓதிய இடத்திலிருந்து மக்கா வரை ஒளி கொடுக்கப்படும். வெள்ளிக் கிழமையிலிருந்து அடுத்த ஜுமுஆ வரையிலும் மேலும் மூன்று நாட்கள் வரை பாவங்கள் மன்னிக்கப்படும். அவருக்காக காலை வரை வானவர்கள் ஆயிரம் தடவை பாவமன்னிப்புத் தேடுவார்கள். பைத்தியம், அனைத்து தொழுநோய், தஜ்ஜாலின் சோதனையிலிருந்தும் காப்பாற்றப்படுவார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(நூல்: தத்கிரத்துல் மவ்லூஆத் பாகம்: 1, பக்கம்: 565)
கஹ்ஃப் அத்தியாயத்தை ஓதியவரை தவ்ராத் வேதத்தில் அல்ஹாயிலா (தடுப்பு) என்று அழைக்கப்படுகிறது. ஏனென்றால் அவருக்கும் நரகத்திற்கும் மத்தியில் திரையாக அது அமைகிறது.
நூல்: முஸ்னத் அல் பிர்தவ்ஸ்
பாகம்: 3, பக்கம்: 215
வானவர்கள் விரும்பும் அத்தியாயம்
பராவு (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் அல்கஹ்ஃபு எனும் (18 வது)அத்தியாயத்தைத் தமது இல்லத்தில் அமர்ந்து ஓதிக் கொண்டிருந்தார். அவருக்கு அருகில் நீண்ட இரு கயிறுகளால் குதிரையொன்று கட்டப்பட்டிருந்தது. அதை மேகம் சூழ்ந்து வட்டமிட்டபடி நெருங்கத் தொடங்கியது. அதனால் குதிரை மிரள ஆரம்பித்தது. விடிந்தவுடன் அவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து நடந்ததைத் தெரிவித்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், குர்ஆன் ஓதிய காரணத்தால் இறங்கிய அமைதி தான் அது என்று கூறினார்கள்.
நூல்: புகாரி (5011)
மேலும் இந்த ஹதீஸ் ஸஹீஹ் முஸ்லிம் (1325) திர்மிதி (2810) அஹ்மத் (17776) இப்னு ஹிப்பான் (பாகம்: 3, பக்கம்: 46), சுனனுல் குப்ரா (பாகம் 6 பக்கம் 462), முஸ்னத் தயாலிஸி (பாகம்: 1, பக்கம்: 97), முஃஜமுல் கபீர் தப்ரானீ (பாகம்:1, பக்கம்: 208), ஷுஅபுல் ஈமான் (பாகம்:2, பக்கம்: 474)
தஸ்பீஹ் நபீல் தொழுதல்
ஹஜ்ரத் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ரத் அப்பாஸ் (ரலி) அவர்களிடம், அப்பாஸ் அவர்களே! எனது சிறிய தந்தையே! நான் உங்களுக்கு ஒரு நன்கொடை வழங்கட்டுமா? ஓர் அன்பளிப்பைக் கொடுக்கட்டுமா? ஒரு வெகுமதியை அளிக்கட்டுமா?” பத்துப் பலன்களை உங்களுக்கு ஈட்டித்தரும் ஓர் அமலை அறிவிக்கட்டுமா? அதைச் செய்தால் அல்லாஹ் உங்களுடைய முந்தியது பிந்தியது, பழையது புதியது, அறிந்து செய்தது அறியாமல் செய்தது, சிறியது பெரியது, இரகசியமாக செய்தது பகிரங்கமாக செய்தது அணைத்தையும் மன்னித்துவிடுவான். அந்த அமலாவது:- நீர், நான்கு ரக்அத்துகள் (தஸ்பீஹ் தொழுகை) தொழுவதாகும்! ஒவ்வொரு ரக்அத்திலும் சூரத்துல் ஃபாதிஹாவுடன் மற்றொரு சூராவும் ஓதுவீராக. முதல் ரக்அத்தில் கிராஅத் ஓதி முடித்ததும் ருகூ செய்தவற்கு முன் (سُبْحَانَ اللّهِ وَالْحَمْدُ لِلّهِ وَلاَ إِلهَ إِلاَّ اللّهُ وَاللّهُ أَكْبَرُ) என்று 15 முறை ஓதுவீராக. பிறகு ருகூ செய்து, அதிலும் 10 முறை இந்த கலிமாக்களை ஓதுவீராக. பிறகு ருகூவிலிருந்து எழுந்து நின்ற நிலையில் 10 முறை ஓதுவீராக. பின்பு ஸஜ்தாச் செய்வீராக. ஸஜ்தாவிலும் இக்கலிமாக்களைப் 10 முறை ஓதுவீராக. ஸஜ்தாவிலிருந்து எழுந்தமர்ந்து 10 முறையும், பிறகு இரண்டாம் ஸஜ்தாவில் 10 முறையும், இரண்டாம் ஸஜ்தாவிலிருந்து எழுந்து உட்கார்ந்த நிலையில் 10 முறையும் ஓதுவீராக. இவ்வாறே நான்கு ரக்அத்துகளும் தொழுவீராக. இந்த முறையில் ஒவ்வொரு ரக்அத்திலும் எழுபத்தைந்து முறை இக்கலிமாக்களை ஓதிக் கொள்வீராக (சிறிய தந்தையே!) உங்களால் முடிந்தால் ஒவ்வொரு நாளும் ஒரு முறை, இத் தொழுகையைத் தொழவும், ஒவ்வொரு நாளும் தொழ இயலாவிட்டால் ஒவ்வொரு ஜும்ஆ நாளன்றும் தொழவும். அதும் இயலாவிட்டால் மாதம் ஒருமுறை தொழவும், அதற்கும் இயலாவிட்டால் வருடம் ஒரு முறை தொழவும். அதற்கும் இயலாவிட்டால் வாழ் நாளில் ஒருமுறையாவது தொழவும்” என்று கூறினார்கள்.
(அபூதாவூத்)
மணிக்கணக்கில் பயான் செய்வதை தவிர்க்க வேண்டும்
ஜாபிர் பின் ஸமுரா(ரலி அவர்கள், நபியின் ஜும்மா உரையைப் பற்றி அறிவிக்கிறார்கள். ”வெள்ளிக்கிழமை தினத்தில் நபி(ஸல்) அவர்கள் தனது உரையை நீளமாக்காதவர்களாக இருந்தார்கள். சாதாரண வார்த்தைகளைக் (கொண்டதாகவே) அவர்களது உரை அமையப்பெற்றிருந்தது”
(அபூதாவூத் 1107)