ஹிஜாபும் மூன்றும்
ஹிஜாபும் மூன்றும்...........
கடந்த சில நாட்களாக நம் அண்டை மாநிலமான கார்நாடகா மட்டுமல்லாது நம் மாநிலம் நம் நாடு என்று போய் உலகளாவிய நிலையில் பரபரப்பாக பேசப்படும் பொருளாக சமூக ஊடகங்கள் அனைத்தையும் ஆக்கிரமித்திருக்கும் சொல்லாக இருப்பது ஹிஜாப் என்ற வார்த்தையும் அல்லாஹு அக்பர் என்ற வார்த்தையும் தான்.
கர்நாடக மாநிலத்தில் உடுப்பி மாவட்டத்தில் உள்ள அரசு கல்லூரியில் ஹிஜாப் அணிந்து வந்த இஸ்லாமிய சகோதரிகளை அந்தக் கல்லூரி நிர்வாகம் தடுத்து நிறுத்தி இது போன்று மத அடையாளங்களோடு கல்லூரிக்கு வரக்கூடாது என்று சொல்லி அவர்களை உள்ளே அனுமதிக்க மறுத்தது.
உள்ளே அனுமதிக்கா விட்டாலும் பரவாயில்லை. இது நாங்கள் உயிருக்கு மேலாக மதிக்கிற ஷரீஅத்தின் சட்டம். ஷரீஅத்தின் சட்டத்தில் நாங்கள் எதற்காகவும் யாருக்காகவும் வளைந்து கொடுக்க மாட்டோம். இது பன்முகத்தன்மை கொண்ட நாடு, வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட நாடு. இந்த நாட்டில் ஒவ்வொருவரும் அவரவர் மத விருப்பப்படி வாழ்வதற்கும் வழிபடுவதற்கும் அனுமதி உண்டு.இது எங்களின் உரிமை. எங்கள் உரிமையை நாங்கள் விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று சொல்லி ஒரு மாத காலமாக கல்லூரியின் கேட்டுக்கு வெளியே நின்று கொண்டு தங்கள் உரிமைக்காக அந்த சகோதரிகள் போராடினார்கள்.
அவர்களை ஹிஜாபோடு உள்ளே செல்ல அனுமதித்தால் நாங்கள் காவித் துண்டுகளோடு வருவோம் என்று காவித்துண்டை அணிந்து கொண்டு தீய சக்திகளின் தூண்டுதலால் சங்பரிவார கும்பலின் உந்துதலால் மாணவர்கள் நம் இஸ்லாமிய சகோதரிகளை எதிர்த்து அவர்கள் போராட்டத்தில் குதித்தார்கள். இந்த பிரச்சனை இன்றைக்கு உலக அளவில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
இதற்கிடையில் கர்நாடக மாநிலத்தில் மான்டியா மாவட்டத்தில் முஸ்கான் கான் என்ற சகோதரி தன் கல்லூரிக்கு ஹிஜாப் அணிந்து வந்த போது காவித்துண்டை அணிந்து கொண்டு ஒரு கும்பல் அந்த சகோதரிக்கு எதிராக கோஷம் எழுப்பியது. ஒரு கும்பலே தன்னை எதிர்த்து கோஷம் எழுப்பிய போதும் தன்னை நெருங்கி வந்த போதும் கொஞ்சம் கூட அச்சப்படாமல் பதட்டப்படாமல் அல்லாஹு அக்பர் என்று சொல்லி அந்த சகோதரி வீர முழக்கமிட்டார். ஒரிரு தினங்களாக ஊடகங்கள் அனைத்திலும் ஹிஜாப் என்ற சொல்லும் அல்லாஹு அக்பர் என்ற சொல்லும் ஆக்கிரமித்து நிற்கிறது.
இன்றைக்கு உலக அளவில் மிகப்பெரும் பேசும் பொருளாக விவாதிக்கும் பொருளாக இவ்விரண்டும் தான் இருக்கிறது.
இந்த நேரத்தில் மூன்று விஷயங்களை முஸ்லிம் சமூகம் விளங்க வேண்டும்.
1, சத்தியத்தை விளங்க வைப்பதற்குத்தான் இதுமாதிரியான எதிர்மறையான சம்பவங்களை உலகத்தில் அவ்வப்போது இறைவன் நடத்துகிறான்.
எதிர்மறையான கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்ற போது தான் சரியான கருத்துக்கு உயிரோட்டம் ஏற்படும்.
சில வருடங்களுக்கு முன்னால் நபி ஸல் அவர்களை கேலிச்சித்திரம் வரைந்து கார்ட்டூன் வெளியிடப்பட்டது. அதற்குப் பிறகு தான் நபியின் கண்ணியம் என்ன நபியின் மகத்துவம் என்ன என்பதை இந்த உலகம் புரிய ஆரம்பித்தது.
கடந்த வருடம் நபியின் பலதார மணம் குறித்து ஒருவன் கேவலமாக பேசினான். அந்த நிகழ்விற்குப் பிறகு நபியின் தூய்மையான வாழ்க்கை குறித்து அதிகம் பேசப்பட்டு நபியின் தூய்மையான வாழ்க்கையை இந்த உலகம் புரிந்து கொண்டது.
கொஞ்ச நாட்களுக்கு முன்னால் வேளான் குறித்த ஒரு மசோதாவை மத்திய அரசாங்கம் கொண்டு வந்தது. அதனால் டெல்லியில் விவசாயிகள் மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அந்த நிகழ்விற்குப் பிறகு விவசாயிகள் என்றால் யார் அவர்கள் படும் கஷ்டங்கள் என்ன என்பதை இந்த உலகம் உணர்ந்து கொண்டது.
இரண்டு வருடங்களுக்கு முன்பு CAA,NRC,NPR என்று சொல்லி குடியுரிமை திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டு நாடு முழுக்க மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதில் மிகப்பெரிய நன்மை நம் இஸ்லாமிய சமூகத்திற்கு கிடைத்தது. என்றைக்குமே ஒன்று சேராத நம் சமூகம் அந்த பிரச்சனைக்காக ஒன்று சேர்ந்தது. அனைத்து இயக்கங்கள் அந்த கொள்கையைச் சார்ந்தவர்கள் அனைத்து சிந்தனையை உடையவர்கள் என ஒட்டுமொத்த இஸ்லாமிய சமூகத்தையும் ஒரே அணியின் கீழ் ஒன்று சேர்த்தது அந்த குடியுரிமை திருத்த சட்டம் தான் என்பதை யாரும் மறுக்க முடியாது.
முத்தலாக் தடைச்சட்டம் என்ற பிரச்சனை தலைதூக்க ஆரம்பித்த பிறகு தான் தலாக் என்றால் என்ன தலாக்கின் விபரீதம் என்ன என்பதை நம் சமூகம் உணர ஆரம்பித்தது.
கொரோனா என்ற ஒரு பேராபத்து வந்த பிறகு தான் ஆரோக்கியத்தின் மீது நமக்கு அதிகம் கவனம் ஏற்பட்டிருக்கிறது. மரணத்தின் மீது அதிகம் சிந்தனை வந்திருக்கிறது.
அந்த அடிப்படையில் ஹிஜாப் என்ற இந்த பிரச்சனை விஸ்வரூபம் எடுத்த பிறகு ஹிஜாபின் மகத்துவம் என்ன ஹிஜாபை இஸ்லாம் ஏன் கடமையாக்கியது என்ற உண்மையை உலகம் புரிந்திருக்கிறது.ஹிஜாப் என்பது பெண் அடிமைத்தனம் என்று சொன்னவர்கள் கூட ஹிஜாப் அவசியம் என்பதை உணர்ந்து விட்டார்கள். நம் தொப்புல் கொடி உறவுகளாக இருக்கக்கூடிய சகோதரர்கள் கூட தங்கள் பிள்ளைகளுக்கு ஹிஜாபை அணிவித்து நமக்கு ஆதரவு தெரிவித்து பதிவிட்ட போட்டோக்களை சமூக வலைதளங்களில் பார்க்க முடிந்தது.
தன் வாழ்நாளில் ஒரு நாள் கூட அல்லாஹ் என்ற வார்த்தையை சொல்லாத ஒருவன் வாயால் அல்லாஹு அக்பர் – அல்லாஹ் மிகப்பெரியவன் என்ற வார்த்தையை அல்லாஹ் சொல்ல வைத்து விட்டான். உண்மையில் அவன் மிகப்பெரியவன் தான். ஒரு எதிர்மறையான விஷயத்தின் பின்னனியில் நிச்சயம் ஒரு நன்மை இருக்கும் என்பதற்கு மிகப்பெரிய சான்று தான் இந்த ஹிஜாப்.
சொந்த மண்ணில் தீனுல் இஸ்லாமை நிலை நிறுத்த முடியாத அளவு, சொந்த மண்ணில் அல்லாஹ்வை வணங்க முடியாத அளவு தடுக்கப்பட்டு அங்கிருந்து வெளியேறும் நிலை வருத்தத்திற்குரியதாக இருந்தாலும் அங்கிருந்து அவர்கள் மதீனா வர வில்லையென்றால் தீனுல் இஸ்லாம் இவ்வளவு தூரம் வளர்ச்சியை அடைந்திருக்காது. எந்த சமூகம் அவர்களை விரட்டியடித்ததோ அதே சமூகத்தை ஹிஜ்ரத்திலிருந்து சரியாக எட்டு ஆண்டுகளில் அல்லாஹ் அவர்களுக்கு முன்னால் மண்டியிட வைத்தான். இது இறைவனின் ஏற்பாடு.
2, உலகத்தின் மற்ற சமயத்தவர்கள் கூட ஹிஜாபைக் குறித்து பேச ஆரம்பித்து விட்ட, ஹிஜாபை மாண்பை புரிய ஆரம்பித்து விட்ட இந்த தருணத்தில் நம் இஸ்லாமிய சமூகம் இன்னும் அதன் மாண்பை சரியாக விளங்காமல் அதில் கவனக்குறைவாகத்தான் இருக்கிறது. மக்கள் கூடுகின்ற பொது இடங்களில் நிகாஹ் போன்ற வைபவங்களில் நம் இஸ்லாமியப் பெண்கள் இன்னும் சரியாக ஹிஜாபை கடைபிடிப்பதில்லை என்பது கசப்பான உண்மை.
ஹிஜாப் என்பது பெண்கள் வெளியில் போகும் போது போட்டுக் கொள்ளும் ஒரு போர்வை மட்டுமே என்று நம்மில் சிலர் நினைக்கிறார்கள். வீட்டிலும் சரி, வெளியிலும் சரி பெண்கள் எங்கிருந்தாலும் அந்நிய ஆண்களின் பார்வையிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்குப் பெயர் தான் ஹிஜாப் ஆகும். ஒரு பெண் வீட்டிலிருந்து வெளியே சென்றாலும் அல்லது மற்றவர்கள் அவர்களின் வீடுகளுக்கு வந்தாலும் அந்நிய ஆண்களின் பார்வையிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்குக் கடமைப்பட்டிருக்கிறாள்.
இன்றைக்குள்ள பெண் சமூகம் தன்னை அலங்காரப்படுத்திக் கொள்வதில் தான் அழகு இருக்கிறது என்று விளங்கியிருக்கிறது. ஆனால் அவர்களின் உண்மையான அழகும் சிறப்பும் அவர்கள் தங்களை மறைத்துக் கொள்வதில் தான் இருக்கிறது.
عن علي رضي الله عنه قال: كنا عند رسول الله صلى الله عليه وآله فقال: أخبروني أي شئ خير للنساء، فعيينا بذلك كلنا حتى تفرقنا، فرجعت إلى فاطمة عليها السلام فأخبرتها بالذي قال لنا رسول الله صلى الله عليه وآله وليس أحد منا علمه ولا عرفه، فقالت ولكني أعرفه: خير للنساء أن لا يرين الرجال ولا يراهن الرجال، فرجعت إلى رسول الله صلى الله عليه وآله فقلت: يا رسول الله سألتنا أي شئ خير للنساء خير لهن أن لا يرين الرجال ولا يراهن الرجال، فقال: من أخبرك فلم تعلمه وأنت عندي؟ فقلت: فاطمة، فأعجب ذلك رسول الله صلى الله عليه وآله وقال: ان فاطمة بضعة مني. أقول: وتقدم ما يدل على ذلك، ويأتي ما يدل عليه
பெண்களிடத்தில் எது சிறந்தது என்று நபி ஸல் அவர்கள் கேட்ட போது நாங்கள் பதில் தெரியாமல் மௌனமாக இருந்தோம். நான் உடனே ஃபாத்திமா ரலி அவர்களிடம் விஷயத்தைச் சொன்ன போது அதற்கு அவர்கள், பெண்கள் அந்நிய ஆண்களைப் பார்க்கக்கூடாது. அவர்கள் தங்களைப் பார்ப்பதற்கும் அனுமதிக்கக்கூடாது. அது தான் பெண்களிடத்தில் சிறந்தது என்றார்கள். நானே அதை நபியிடம் வந்து சொன்னேன். முன்பு தெரியாது என்று சொன்னீர்கள். இப்போது எப்படி தெரிந்தது என்று கேட்டார்கள். உங்கள் மகள் ஃபாத்திமா ரலி கூறினார்கள் என்று சொன்னேன். நிச்சயமாக ஃபாத்திமா என்னில் ஒரு பகுதி என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள். (மனாகிபு அமீரில் முஃமினீன்)
அவர்கள் சொன்னதைப் போன்றே வாழ்ந்தும் காட்டினார்கள் ஃபாத்திமா ரலி அவர்கள். வாழும் காலத்தில் யாரும் பார்த்து விடாதவாறு தன்னைப் பாதுகாத்தார்கள். அவர்களின் மரண நேரம் நெருங்கிய சமயம் அஸ்மா பின்த் உமைஸ் ரலி அவர்கள் அவர்களை சந்திக்க வந்தார்கள். அப்போது ஃபாத்திமா ரலி அவர்கள் கவலையோடு இருந்ததைப் பார்த்து காரணம் கேட்ட போது, நான் இறந்து என் உடல் துணியால் சுற்றப்பட்டு எடுத்துச் செல்லப்படும் போது என் உடலின் அமைப்பை அந்நிய ஆண்கள் பார்ப்பார்களே என்பதை நினைத்து கவலைப்படுகிறேன் என்றார்கள்.(அந்த நேரத்தில் ஒருவர் இறந்து விட்டால் அவரின் மீது கஃபன் துணி சுற்றப்பட்டு ஒரு மரப்பலகையில் வைத்து தூக்கி செல்லப்படும். உடல் மறைக்கப்படும். ஆனால் உடலின் அமைப்பு தெரியும் சூழ்நிலை இருந்தது) அதனைக் கேட்ட அஸ்மா பினத் உமைஸ் ரலி அவர்கள் அந்த நேரத்தில் அபீசீனிய நாட்டில் பயன்படுத்தப்பட்டு வந்த உடலை முழுவதும் மறைக்கக்கூடிய ஒரு பெட்டியை செய்து கொண்டு வந்து காட்டினார்கள். அதனைப் பார்த்து மிகவும் மகிழ்ச்சியடைந்த ஃபாத்திமா ரலி அவர்கள் என்னை மறைத்த உன் குறைகளை அல்லாஹ் மறைப்பானாக என்று துஆ செய்தார்கள். இஸ்லாமிய வரலாற்றில் இறந்த உடலை முழுவதும் மறைக்கும் வண்ணம் தூக்கிச் செல்லும் நடைமுறை அன்றிலிருந்து தான் தொடங்கியதாக வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள்.
வாழும் போது மட்டுமல்ல, தான் இறந்த பிறகும் கூட தன் உடல் அந்நிய ஆண்களின் பார்வையில் பட்டு விடக்கூடாது என்ற சிந்தனை அவர்களின் மிக உயர்வான பேணுதலின் எடுத்துக் காட்டாகும்.
சகோதர சமயத்தைச் சார்ந்தவர்களும் தங்கள் பிள்ளைகளுக்கு ஹிஜாபைப் போட்டு அழகு பார்க்க ஆரம்பித்து விட்ட இந்த காலத்தில் நம் பிள்ளைகளுக்கு அதன் அவசியத்தை உணர்த்தி அதன் பாதுகாப்பை விளங்க வைத்து சிறு வயதிலிருந்தே அந்த பேணுதலான வாழ்விற்கு அவர்களைப் பழக்க வேண்டும்.
ذهبت صبية وهي ابنة خمس سنين في حاجة إلى أمير المؤمنين عمر بن الخطاب وكان ثوبها يجر وراءها شبرا أو يزيد فأراد عمر أن يمازحها فرفع ثوبها حتى بدت قدماها فقالت: مه ""يعنى دعه واتركه"" أما إنك لو لم تكن أمير المؤمنين لضربت وجهك
ஐந்து வயது சிறுமி உமர் ரலி அவர்களிடத்தில் வந்தது. கீழாடை நீளமாக இருந்ததால் அது தரையோடு இழுத்துக் கொண்டு சென்றது. அதைப் பார்த்த உமர் ரலி அவர்கள் விளையாட்டாக அந்த ஆடையை சற்று தூக்கிப் பிடித்தார்கள். அதனால் அந்த சிறுமியின் கால் பாதங்கள் வெளியே தெரிந்தது. உடனே அந்த சிறுமி விட்டு விடுங்கள் நீங்கள் மட்டும் அமீருல் முஃமினீனாக இல்லையென்றால் உங்கள் கன்னத்தில் அறைந்திருப்பேன் என்றாள்.
விளையாட்டுப் பருவமாக இருக்கிற அந்த வயதிலிருந்தே அவ்ரத் என்றால் என்ன ஹிஜாப் என்றால் என்ன என்றெல்லாம் தெளிவாக சொல்லி பேணுதலாக வளர்த்தார்கள் அன்றைக்கு வாழ்ந்த பெருமக்கள். இன்றைக்கு அந்த மாதிரியான பேணுதலையும் ஒழுக்கத்தையும் சிறு வயதில் நாம் கொடுக்கத் தவறியதால் தான் இன்றைக்குள்ள பெண் சமூகம் ஒழுக்கமில்லாமல் இருக்கிறது.
பெண்கள் முகத்தையும் இரு மணிக் கட்டுகளையும் தவிர உள்ள முடியும், நகமும் உட்பட மேனி முழுவதையும் மறைப்பது வாஜிபாகும். மேனி தெரியாத கெட்டியான துணியால் மறைத்திட வேண்டும்.
1. '(பெண்களாகிய அவர்கள் தங்கள் உடலில் பெரும்பாலும்) வெளியில் தெரியக் கூடியவை தவிர (ஆடை ஆபரணம் போன்ற) தங்கள் அலங்காரத்தையும் அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம்.' – அல்குர்ஆன் 24:31
இங்கு 'வெளியே தெரிவன' என்பது முகத்தையும் இரு கைகளையும் குறிக்கும் என்பது இப்னு உமர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் கருத்தாகும். ழஹ்ஹாக், இக்ரிமா, அதா (ரலியல்லாஹு அன்ஹும்) ஆகியோரும் இக்கருத்தை ஆதரிக்கின்றனர்
'அஸ்மாவே! ஒரு பெண் பருவமடைந்து விட்டால் அவளின் உடலில் இதனையும், இதனையும் தவிர வேறு எப்பகுதியும் வெளியே தெரியலாகாது' என்று கூறி தனது முகத்தையும் இரு கரங்களையும் காண்பித்தார்கள். ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்கள் அறிவிக்கும் இந்த ஹதீஸ் ஸுனன் அபீதாவூதில் பதிவாகியுள்ளது.
2. 'இரு பிரிவினர் நரகவாதிகள் ஆவர். அவர்களை நான் கண்டதில்லை. (அவர்களுள்) ஒரு சாரார் மாட்டின் வாலைப் போன்ற சாட்டைகளை வைத்திருப்பர். அவற்றைக் கொண்டு மக்களை அவர்கள் அடிப்பர். மறுசாரார் உடை அணிந்த நிலையில் நிர்வாணமாக இருக்கும் பெண்களாவர். அவர்கள் (தீய வழியில்) செல்வதுடன் (பிறரையும்) தீய வழியில் செலுத்துவர். அவர்களின் தலைகள் ஆடி அசையும் ஒட்டகங்களின் திமில்களைப் போன்று காணப்படும். இத்தகையவர்கள் சுவனம் நுழைய மாட்டார்கள். அதன் வாடையைக் கூட நுகரமாட்டார்கள்.' (முஸ்லிம்)
3. பெருமை கொண்டவனாக தன் ஆடையை எவன் இழுத்துச் செல்கிறானோ அவனை அல்லாஹ் மறுமையில் (கருணை பார்வை) பார்க்கமாட்டான் என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அப்போது உம்மு ஸலமா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் பெண்கள் தங்களின் கீழாடையை எவ்வாறு தொங்கவிட்டுக்கொள்வார்கள் என்று கேட்டார்கள். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (முழங்காலிலிருந்து) ஒரு ஜான் தொங்கவிடுவார்கள் என்று கூறினார்கள். அப்படியானால் பெண்களின் கால் தெரியுமே? என்று உம்மு ஸலமா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் கேட்டதற்கு ஒரு முழும் தொங்கவிடுவார்கள். இதற்கு மேல் (ஆடையை) அதிகப்படுத்தக் கூடாது என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் ; இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு,
நூல் : திர்மிதி 1653)
4. 'ஆண்களைப் போன்று ஆடை அணியும் பெண்களும், பெண்களைப் போன்று ஆடை அணியும் ஆண்களும் எங்களைச் சேர்ந்தவர்கள் அல்ல.' (அஹ்மத், நஸாஈ, ஹாகிம்)
'நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் பெண்களுக்குரிய ஆடைகளை அணியும் ஆண்களையும், ஆண்களுக்குரிய ஆடைகளை அணியும் பெண்களையும் சபித்தார்கள்.' (அபூதாவுத், இப்னுமாஜா, ஹாகிம்)
ஓர் ஆடையைப் பொறுத்தவரை அதை அதிகமாக ஆண்கள்தான் அணிந்து கொள்கிறார்கள் என்றிருந்தால் அந்த ஆடையை பெண்கள் அணிவது கூடாது, பெண்கள் அதிகமாக அணிந்து கொள்கிறார்கள் என்றிருந்தால் அதை ஆண்கள் அணியக் கூடாது. ஒரு ஆடையில் உடலை மறைப்பது குறைந்து விடுவதும், ஆணுடன் ஒப்பிடுவதும் சேர்ந்து விடுமானால் இரண்டு விதத்திலும் அவ்வாடை தடை செய்யப்படுகிறது.
5. ஒரு பெண் வெளியில் செல்லும் போது நறுமணம் பூசி செல்வது கூடாது. வீட்டில் தனது கணவனுக்கு முன்னாலும் குழந்தைகள், மஹ்ரமிகளுக்கு மத்தியில் இருக்கும் போதும் நறுமணங்களைப் பூசிக் கொள்வதில் தவறில்லை.
6. 'அவர்கள் தங்களின் அலங்காரத்தில் மறைந்திருப்பதை பிறருக்குக் காட்ட (பூமியில்) கால்களை தட்டி தட்டி நடக்க வேண்டாம்' எனக் கூறுகிறது அல்குர்ஆன்.
அவள் அணிந்திருக்கும் கொலுசு, தண்டை போன்ற ஆபரணங்களையும் வெளியே காட்டக் கூடாது, அவள் அணியும் காலணிகள் விலையுயர்ந்த ஷூக்கள் போன்ற வற்றால் நடந்து ஒலியெழுப்பி ஆண்களின் கவனத்தை ஈர்த்து நிற்பது கூடாது என்று உத்தரவிடுகிறது திருமறை.
'நாங்கள் நபி(ஸல்லலாஹு அலைஹி வஸல்லம்)அவர்களுடன் இஹ்ராம் அணிந்த நிலையில் இருக்கும்போது வாகனக் கூட்டம் ஒன்று எங்களைக் கடந்து செல்லும். எங்களுக்கு நேரே அவர்கள் வரும்போது எங்களில் உள்ள பெண்கள் தங்கள் தலையில் தொங்கிக் கொண்டிருக்கும் துணியால் முகத்தை மறைத்துக் கொள்வார்கள். வாகனக் கூட்டம் எங்களைக் கடந்து சென்றதும் எங்கள் முகத்தைத் திறந்து கொள் வோம்' என ஆயிஷா(ரழியல்லாஹு அன்ஹா) அறிவிக்கிறார்.
(நூற்கள்: அஹ்மத், அபூதாவூத்)
'பெண்கள் முந்தானைகளால் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ளட்டும்' என்ற அல்குர்ஆனின் கட்டளை அருளப்பட்டபோது பெண்கள் தம் மெல்லிய ஆடைகளை கைவிட்டனர். தடித்த (கம்பளி போன்ற) துணிகளால் முந்தானைகளைத் தயாரித்துக் கொண்டனர் என ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்கள் கூறுகின்றார்கள். (அபூதாவுத்)
மறைந்தவர்களை ஜியாரத் செய்யும் விதத்திலும் ஸஹாபிப் பெண்கள் பேணிய ஹிஜாப்பிற்கு ஆதாரமாக உள்ள ஹதீதை பாருங்கள்:
ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் சொல்கிறார்கள்: 'ரஸூலுல்லாஹி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களும் எனது தந்தையும் அடக்கம் செய்யப்பட்ட அறையினுள் நான் எனது மேலாடை இல்லாது பிரவேசிப்பது வழக்கமாக இருந்தது. அவர்கள் இருவரும் எனது கணவரும், தந்தையும் தானே என்ற கருத்திலேயே அப்படி நான் நடந்து கொண்டேன். எனினும் உமர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அங்கு அடக்கப்பட்ட பின்னர் அதனால் எனக்கேற்பட்ட கூச்ச உணர்வின் காரணமாக நான் மேலாடையில்லாது அந்த அறையினுள் பிரவேசிப்பதில்லை.'
(இப்னு அஸாகிர்)
'அல்லாஹ் நாணமிக்கவன். மிகவும் மறைந்திருக்கக் கூடியவன். அவன் வெட்கத்தையும், மறைப்பையும் விரும்புகிறான்.' (அபூதாவூத்)
இந்த ஹதீஸ் வெட்க உணர்விற்கும் மறைத்தலுக்கும் இடையே உள்ள இறுக்கமான தொடர்பை எடுத்துக்காட்ட போதுமானதாகும்.
பனூதமீம் கோத்திரத்தைச் சேர்ந்த சில பெண்கள் ஒரு முறை அன்னை ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்களைச் சந்திக்க வந்தார்கள். அவர்கள் மெல்லிய ஆடை அணிந்திருந்தார்கள். இதை அவதானித்த ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்கள், அவர்களைப் பார்த்து பின்வருமாறு கூறினார்கள்:
'உண்மையில் நீங்கள் முஃமினான பெண்களாயின் அணிந்திருக்கும் இந்த ஆடைகள் ஈமான் கொண்டவர்களுக்குரிய ஆடைகள் அல்ல. நீங்கள் ஈமான் கொள்ளாத பெண்களாயின் இதனை அணியுங்கள்.'
'ஹிஜாப்' என்பது பெண்கள் தமது 'அவ்ரத்'தையும், அழகையும், உடலின் கவர்ச்சியான பகுதிகளையும் மூடிமறைத்துக் கொள்வதற்கு இஸ்லாம் தந்துள்ள உடை அமைப்பாகும்.
மேற்கண்ட குர்ஆன் ஆயத்துக்கள், ஹதீதுகளில் அடிப்படையில் அமையப் பெற்றதே ஹிஜாபாகும்.
பயன்கள்........
இஸ்லாம் வரையறை செய்துள்ள 'ஹிஜாப் உடை அவர்களுக்கு ஒரு கௌரவமாகும். அது அவர்களுக்கு சமூகத்தில் அந்தஸ்த்தையும், மதிப்பையும் பெற்றுக்கொடுக்கிறது. ஒரு பெண்ணின் கற்பொழுக்கத்திற்கும், அடக்கத்திற்கும், நாணத்திற்கும் அவள் அணியும் ஹிஜாப் உடை சான்றாக விளங்குகிறது. இதனால் அவளை காண்போர் அவளை மதிக்கிறார்கள்;. கௌரவிக்கிறார்கள்.....
3, காவித்துண்டை அணிந்து கொண்ட ஒரு பெரும் கும்பல் தன்னை நெருங்கி வந்த போதும் தனி ஒரு பெண்ணாய் நின்று கொண்டு நெஞ்சுறத்தோடு அல்லாஹு அக்பர் என்ற தக்பீர் முழுக்கத்தை மொழிந்தாள் கர்நாடகாவைச் சார்ந்த அந்த முஸ்கான் கான். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடாக இருக்கிற இந்த நாட்டில் பெண்களைச் சுற்றிலும் ஏராளமாக ஆபத்துக்கள் சூழ்ந்திருக்கிற இந்த காலகட்டத்தில் வீரமும் நெஞ்சுறமும் நம் பிள்ளைகளுக்கு நிச்சயம் தேவை.
قال بعض الحكماء: "اعلَم أن كل كريهة تُرفَع أو مَكْرُمة تُكتَسب، لا تتحقَّق إلا بالشجاعة،
துன்பங்கள் நீக்கப்படுவதும் கண்ணியம் கிடைப்பதும் வீரத்தைக் கொண்டு தான் என்று கூறுவார்கள்.
وَلَا تَهِنُوْا وَ لَا تَحْزَنُوْا وَاَنْتُمُ الْاَعْلَوْنَ اِنْ كُنْتُمْ مُّؤْمِنِيْنَ
(நம்பிக்கையாளர்களே!) நீங்கள் தைரியத்தை இழந்திட வேண்டாம். கவலைப்படவும் வேண்டாம். (உண்மையாகவே) நீங்கள் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால் நீங்கள்தான் மேன்மை அடைவீர்கள்.
(அல்குர்ஆன் : 3:139)
يقول أنس - رضي الله عنه -: "كان رسول الله - صلى الله عليه وسلم - أحسن الناس، وأجود الناس، وأشجعَ الناس،
மக்களில் மிகப்பெரும் உபகாரியாகவும் மிகப்பெரும் கொடை வள்ளலாகவும் மிகப்பெரும் வீரராகவும் நபி ஸல் அவர்கள் இருந்தார்கள். (முஸ்லிம் ; 2307)
إن الشجاعة وقاية، والجُبن مَقتلةٌ
வீரம் பாதுகாக்கும்; கோழைத்தனம் கொல்லும் என்று கூறுவார்கள். வீரத்தையும் தைரியத்தையும் கொடுத்து நம் பிள்ளைகளை எதிர் காலத்தின் வீர மங்கைகளாக உருவாக்குவோம். ஒவ்வொரு வீட்டிலும் முஸ்கான் கானைப் போன்று நெஞ்சுறம் கொண்ட பெண்கள் வேண்டும் அல்லாஹ் தவ்ஃபீக் செய்வானாக......
ஆமீன்