பராஅத் பித்அத்தா??


பராஅத் பித்அத்தா ?

அல்லாஹ்வின் பேரருளால் புனிதமான ஜூம்ஆ நாளில் புனித மிக்க பராஅத் இரவில் அல்லாஹ்வின் இறை இல்லத்தில் ஒன்று கூடக்கூடிய பெரும் பாக்கியத்தைப் பெற்றிருக்கிறோம். இந்த பாக்கியத்தைக் கொடுத்த வல்ல இறைவனுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம்.

காரணம், கடந்த ஆண்டுகளில் இதே நாட்களில் கொரோனா தொற்றின் பெரும் தாக்கத்தால் உலகம் முழுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு அதனால் கடந்த வருடத்தின் எண்ணற்ற பாக்கியங்களை இழந்து விட்டோம். 

கடந்த வருடத்தில் மிஃராஜ் இரவு, பராஅத் இரவு, மகத்துவமிக்க ரமலானின் 30 நாட்கள், அதில் குறிப்பாக லைலத்துல் கத்ர் இரவு, ஈதுல் ஃபித்ர், ஹஜ்ஜின் வணக்கங்கள், பாக்கியம் நிறைந்த துல்ஹஜ்ஜுடைய பத்து நாட்களின் அமல்கள், ஈதுல் அள்ஹா, இதுபோன்ற மகத்துவம் நிறைந்த பாக்கியம் மிகுந்த நன்மைகளை அள்ளித்தருகின்ற பல முக்கியமான அமல்களை கூட்டாக, மஸ்ஜிதுகளில் நிறைவேற்ற முடியாத துற்பாக்கிய சூழ்நிலையை நம்மில் பலரும் சந்தித்தோம்.

அல்ஹம்து லில்லாஹ் இவ்வருடம் புனிதமான பராஅத் இரவில் ஒன்று சேரும் பாக்கியத்தைக் கொடுத்த அல்லாஹ்விற்கு அதிகமதிகம் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம். புனிதமான பராஅத்தைக் கொடுத்தது போல் மகத்துவம் மிக்க ரமலானையும் முழுமையாக அடைந்து கொள்வதற்கும் அதன் அத்தனை அமல்களையும் இறை இல்லத்திற்கு வந்து நிறைவாக செய்வதற்கும் அல்லாஹ் தவ்ஃபீக் செய்வானாக 

நிஸ்ஃபு ஷஃபான் என்று சொல்லப்படுகின்ற புனிதமான பராஅத் இரவை இன்ஷா அல்லாஹ் இன்று  நாம் அடைந்திருக்கிறோம்.

 இன்றைக்கு சிலர் பராஅத்தே கிடையாது. அதற்கும் இஸ்லாத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. குர்ஆனிலோ ஹதீஸிலோ அதற்கு எந்த வழிகாட்டுதலும் இல்லை, ஆதரங்களும் இல்லை, இதுவெல்லாம் பித்அத், மார்க்கத்தில் இல்லாத காரியங்கள்,மார்க்கம் இதை வழிகேடு என்று சொல்கிறது. இமாம்கள் மக்களை வழிகேட்டின் பக்கம் அழைத்துச் செல்கிறார்கள் என்றெல்லாம் மக்களை குழப்பி கொண்டிருக்கிறார்கள். எனவே இந்த பித்அத்தைக் குறித்த தெளிவை நாம் பெற்றுக் கொள்ள வேண்டிய தருணத்தில் இருக்கிறோம்.

இந்த  பரக்கத்தான இரவைப் பற்றி ஏன் பேச வேண்டும். இப்போது இதை பேச வேண்டிய அவசியம் என்ன என்று சிலர் நினைக்கலாம். இதைப்பற்றி இப்போது தான் பேச முடியும். ஏனென்றால், இன்றைக்கு பராஅத் என்ற வார்த்தையே பல பேருக்கு அலர்ஜியாக இருக்கிறது. அந்த வார்த்தையைக் கேட்டவுடனே அவர்கள் சொல்லக்கூடிய முதல் வார்த்தை பித்அத். 2 வது பராஅத் இரவை கண்ணியப்படுத்துகின்ற மக்களில் பலருக்கும் அந்த சந்தேகம் இருக்கிறது. பராஅத் பித்அத், பித்அத் என்று சொல்கிறார்கள். நாம் செய்வது சரியா, கூடுமா, கூடாதா,பாவமாக ஆகி விடுமா என்ற சந்தேகம் பலருக்கு இருக்கிறது. இங்கே உட்கார்ந்திருக்கிற நம்மில் பலருக்கும் கூட இந்த சந்தேகம் இருக்கலாம். அதனால் இந்த நேரத்தில் அதைப்பற்றி பேசுவது மிகப்பொருத்தமாக இருக்கும்.

இஸ்லாத்தில் சொல்லப்பட்டிருக்கிற அனைத்து அமல்களும் ஈமானோடு சம்பந்தப்பட்டது. நம்பிக்கையுடன் தொடர்புடையது. ஈமானும் நம்பிக்கையும் இல்லையென்றால் எதுவுமே இல்லை, நாம் செய்யக்கூடிய அமல்களுக்கு எந்த மதிப்பும் இல்லாமல் போய்விடும். குர்ஆனில் நன்மைகளைப் பற்றி சொல்லக்கூடிய எல்லா இடங்களிலும் அதோடு ஈமானை அல்லாஹ் இணைத்து பேசுகிறான்.

ان الذين امنوا وعملوا اللصالحات

ஈமான் இல்லை என்றால் அமல் இல்லை. எத்தனையோ மாற்று மத சகோதரர்களும் நன்மை செய்கிறார்கள். நற்காரியங்கள் செய்கிறார்கள்.ஸதகா செய்கிறார்கள். சிலர் நோன்பு கூட வைக்கிரார்கள். ஆனால் அது அவர்களுக்கு பயன் தருமா மறுமையின் வெற்றிக்கு காரணமாக இருக்குமா என்றால் இருக்காது. ஏனென்றால் நன்மைக்கு அடிப்படையாக இருக்கக்கூடிய ஈமான் அவர்களிடம் இல்லை. ஈமான் ரொம்ப ரொம்ப முக்கியமானது. எனவே இறைவனுடைய முழு நன்மைகளையும் இந்த இரவின் எல்லா பாக்கியங்களையும் முழுமையாய் பெறவேண்டுமென்றால் இந்த இரவு நன்மையைத் தரக்கூடிய இரவு தான். பாக்கியமான இரவு தான் என்கின்ற உறுதியான நம்பிக்கையை உள்ளத்தில் புகுத்திக் கொள்ள வேண்டும்.அந்த ஈமானோடு இங்கே அமர வேண்டும். இல்லையென்றால் அமல் செய்தும் பயனில்லாமல் போய் விடும்.

சுன்னத் என்றால் என்ன பித்அத் என்றால் என்ன என்பதை விளங்கிக் கொள்வதில் ஏற்பட்ட கோளாறு தான் இது மாதிரியான குழப்பங்களுக்கு காரணம்.

பித்அத் என்பதற்கு சிலர் புரிந்திருக்கின்ற விளக்கம் என்னவென்றால்

ما لم يكن في عهد رسول الله

நபியின் காலத்தில் இல்லாதது பித்அத்தாகும்.

இந்த பராஅத்தைப் பற்றி அவர்கள் கேட்கக்கூடிய கேள்வி இது தான். பராஅத் இரவு அன்று நபி ﷺ அவர்கள் இந்த மாதிரி 3 யாஸீன்கள் ஓதினார்களா இந்த மாதிரி பயான் செய்தார்களா இப்படி மக்களை கூட்டி வைத்து அமல் செய்தார்களா துஆ செய்தார்களா அல்லது ஸஹாபாக்களாவது செய்தார்களா? இல்லை., அப்படியென்றால் நீங்கள் எப்படி செய்கிறீர்கள். நபி ﷺ அவர்களும் ஸஹாபாக்களும் செய்யாத ஒரு காரியம் எப்படி மாரக்கமாகும்? அவர்களின் இந்த கேள்வியைப் பார்த்தால் நியாயமாகத்தான் தெரிகிறது. நமக்கு மார்க்கத்தை காட்டியவர்களே அவர்கள் தான். அவர்கள் சொல்லித்தான் நாம் எல்லாத்தையும் செய்து கொண்டிருக்கிறோம். உண்மையில் பராஅத்தென்று ஒன்று மார்க்கத்தில் இருந்திருந்தால் அவர்கள் அதை செய்திருப்பார்கள். இது தான் அவர்கள் வைக்கும் வாதம். பார்க்கும் போது இந்த கேள்வி நியாயமாகத்தான் தெரிகிறது..

ஆனால் பித்அத் என்பதற்கு இந்த விளக்கத்தை நாம் கொடுத்தால் நிறைய பெரும் பெரும் ஸஹாபாக்களை பித்அத் செய்தார்கள். அவர்கள் நரகவாதி என்று சொல்ல வேண்டிய நிலை ஏற்படும். அல்லாஹ் பாதுகாப்பானாக. ஏனென்றால் நிறைய ஸஹாபாக்கள் நபி ﷺ அவர்கள் செய்யாத காரியத்தை செய்திருக்கிறார்கள்.

عن زيد بن ثابت - رضي الله عنه - قال : "أرسل إلى أبوبكر مقتل أهل اليمامة وعنده عمر فقال أبوبكر: إن عمر أتاني فقال إن القتل استحر يوم اليمامة بالناس وإني أخشى أن يستحر القتل بالقراء في المواطن فيذهب كثير من القرآن إلا أن تجمعوه وإني لأرى أن تجمع القرآن قال أبوبكر: فقلت لعمر كيف أفعل شيئا لم يفعله رسول الله ﷺ فقال هو والله خير فلم يزل يراجعني حتى شرح الله لذلك صدري ورأيت الذي رأى عمر".قال زيد: "وعنده عمر جالس لا يتكلم فقال لي أبوبكر: إنك رجل شاب عاقل ولا نتهمك كنت تكتب الوحي لرسول الله ﷺ فتتبع القرآن فأجمعه فوالله لو كلفني نقل جبل من الجبال ما كان أثقل علي مما أمرني به من جمع القرآن قلت: كيف تفعلان شيئا لم يفعله رسول الله ﷺ فقال أبوبكر: هو والله خير فلم أزل أراجعه حتى شرح الله صدري للذي شرح له صدر أبي بكر وعمر فقمت فتتبعت القرآن أجمعه من الرقاع والأكتاف والعسب وصدور الرجال حتى وجدت من سورة التوبة آيتين مع خزيمة الأنصاري لم أجدهما مع غيره {لَقَدْ جَاءَكُمْ رَسُولٌ مِنْ أَنْفُسِكُمْ} إلى آخرها. فكانت الصحف التي جمع فيها القرآن ثم أبي بكر حتى توفاه الله ثم عمر حتى توفاه الله ثم عند حفصة بنت عمر".

:யமாமா போர் நடைபெற்ற பின் அபூபக்கர் ரலி அவர்கள் எனக்கு ஆளனுப்பி (என்னை அழைத்து வரச் சொன்)னார்கள். (நான் சென்றேன்.) அங்கே அவர்களுடன் உமர் இப்னு கத்தாப் ரலி அவர்கள் அவர்களும் இருந்தார்கள். அப்போது அபூபக்கர் ரலி அவர்கள் கூறினார்: உமர் ரலி அவர்கள் என்னிடம் வந்து, 'இந்த யமாமா போரில் ஏராளமான குர்ஆன் அறிஞர்கள் கொல்லப்பட்டு விட்டார்கள். பல்வேறு இடங்களில் குர்ஆன் அறிஞர்களில் ஏராளமான பேர் கொல்லப்பட்டு, அதனால் குர்ஆனின் பெரும்பகுதி போய்விடுமோ என நான் அஞ்சுகிறேன். (எனவே,) தாங்கள் குர்ஆனைத் திரட்டி ஒன்று சேர்க்க உத்தர விட வேண்டுமெனக் கூறினார்கள். நான், 'இறைத்தூதர்(ﷺ) அவர்கள் செய்யாத ஒன்றை நாம் எப்படிச் செய்வது?' என உமர் அவர்களிடம் கேட்டேன். அதற்கு உமர் அவர்கள், 'அல்லாஹ்வின் மீதாணையாக! இது நன்மை தான்' என்று கூறினார்கள். இதற்காக என் மனத்தை அல்லாஹ் விரிவாக்கும் வரை இது விஷயத்தில் (தொடர்ந்து) அவர்கள் என்னிடம் வலியுறுத்திக் கொண்டேயிருந்தார்கள். (முடிவில்) உமர் அவர்கள் கருதியதை(யே) நானும் (பொறுத்தமானதாகக்) கண்டேன். (இதை அபூபக்கர் அவர்கள் என்னிடம் தெரிவித்தபோது உமர்ரலி அவர்கள் ஏதும் பேசாமல் அபூபக்கர் ரலி அவர்கள் அவர்களுக்கு அருகில் அமர்ந்துகொண்டிருந்தார்கள்.) (பிறகு) அபூபக்கர் ரலி அவர்கள் (என்னிடம்) '(ஸைதே!) நீங்கள் புத்திசாலியான இளைஞர்; உங்களை நாங்கள் சந்தேகப்படமாட்டோம். நீங்கள் இறைத்தூதர்(ﷺ) அவர்களுக் காக 'வஹீ' எழுதக்கூடிய வராயிருந்தீர்கள். எனவே, நீங்கள் குர்ஆனைத் தேடிக் கண்டுபிடித்து (ஒரே பிரதியில்) ஒன்று திரட்டுங்கள்' என்று கூறினார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! மலைகளில் ஒன்றை நகர்த்த வேண்டுமென எனக்கு அவர்கள் கட்டளையிட்டிருந்தாலும் கூட அது எனக்குப் பளுவாக இருந்திருக்காது. குர்ஆனை ஒன்று திரட்டும்படி எனக்கு அவர்கள் கட்டளையிட்டது அதைவிட எனக்குப் பளுவாக இருந்தது. நான், 'இறைத்தூதர்(ﷺ) அவர்கள் செய்யாத ஒன்றை நீங்கள் எப்படிச் செய்கிறீர்கள்?' என்று கேட்டேன். அதற்கு அபூ பக்ர்ரலி அவர்கள், 'அல்லாஹ்வின் மீதாணையாக! இது நன்மைதான்' என்று பதிலளித்தார்கள். இதையே அன்னார் என்னிடம் தொடர்ந்து வலியு றுத்திக் கொண்டிருந்தார்கள். முடிவில் எதற்காக அபூபக்கர் மற்றும் உமர் ஆகியோரின் மனத்தை அல்லாஹ் விரி வாக்கினானோ அதற்காக என் மனத்தையும் அல்லாஹ் விரிவாக்கினான். எனவே, குர்ஆனைத் தேடினேன். அவற்றை பேரீச்ச மட்டைகள், ஓடுகள் மற்றும் மனிதர்களின் நெஞ்சுகளிலிருந்து திரட்டினேன். (இவ்வாறு திரட் டியபோது) 'அத்தவ்பா' எனும் (9 வது) அத்தியாயத்தின் கடைசி (இரு) வசனங்களை அபூகுஸைமா அல் அன்சாரி ரலி அவர்கள் அவர்களிடமிருந்து பெற்றேன்; அவரல்லாத வேறெவரிடமிருந்தும் இதனை நான் பெறவில்லை. (அவை:) 'உங்களிலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கிறார். நீங்கள் துன்பத்திற்குள்ளாவது அவருக்குக் சிரமமாக இருக்கிறது. மேலும், உங்கள் (வெற்றியின்) விஷயத்தில் பேராவல் கொண்டவராகவும், நம்பிக்கையாளர்களின் மீது அதிகப் பரிவும், கருணையும் உடையோராகவும் இருக்கிறார். (நபியே! இதற்குப்) பின்னரும் அவர்கள் உம்மைப் புறக்கணித்தால் நீர் கூறிவிடும்: அல்லாஹ் எனக்குப் போதுமானவன். அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை. அவனையே நான் முழுமையாகச் சார்ந்திருக்கிறேன். மேலும், அவன் மகத்தான அரியாசனத்தின் அதிபதியாயிருக்கிறான்.' (திருக்குர்ஆன் 09:128, 129) (என் வாயிலாக) திரட்டித் தொகுக்கப்பட்ட குர்ஆன் பிரதிகள் அபூபக்கர்ரலி அவர்கள் அவர்க ளிடம், அவர்களை அல்லாஹ் இறக்கச் செய்யும் வரை இருந்(து வந்)தது. பின்னர் உமர்ரலி அவர்கள் அவர்களிடம் அவர்களின் வாழ்நாளில் இருந்தது. (அவர்களின் இறப்பிற்குப்) பிறகு உமர்ரலி அவர்கள் அவர்களின் புதல்வி ஹஃப்ஸாரலி அவர்கள் அவர்களிடம் இருந்தது. ஸைத் இப்னு ஸாபித் அல் அன்சாரிரலி அவர்கள். (புஹாரி: 4986).

ஜைத் ரலி அவர்கள் வஹியை எழுதுவதற்காக நபி ﷺ அவர்களால் நியமிக்கப்பட்ட ஒரு உயர்ந்த ஸஹாபி. அபூபக்கர் ரலி அவர்கள் நபிமார்களுக்கு அடுத்து மனிதர்களில் மிக உயர்ந்த அந்தஸ்தைப் பெற்றவர், சுவனத்தின் எல்லா வாசல்கள் வழியாகவும் அழைக்கப்படுபவர்.

مَن أنفَق زوجينِ في سبيلِ اللهِ دُعي مِن أبوابِ الجنَّةِ وللجنَّةِ أبوابٌ فمَن كان مِن أهلِ الصَّلاةِ دُعي مِن أبوابِ الصَّلاةِ ومَن كان مِن أهلِ الصَّدقةِ دُعي مِن أبوابِ الصَّدقةِ ومَن كان مِن أهلِ الجهادِ دُعي مِن أبوابِ الجهادِ ومَن كان مِن أهلِ الصِّيامِ دُعي مِن بابِ الرَّيَّانِ ) فقال أبو بكرٍ: يا رسولَ اللهِ ما على أحدٍ مِن ضرورةٍ مِن أيِّها دُعي فهل يُدعى أحدٌ منها كلِّها يا رسولَ اللهِ ؟ قال: نَعم وأرجو أنْ تكونَ منهم

ஒருவர் அல்லாஹ்வின் பாதையில் ஒரு ஜோடிப் பொருட்களைச் செலவு செய்தால் அவர் சொர்க்கத்தின் வாசல்களிலிருந்து அல்லாஹ்வின் அடியாரே இது (பெரும்) நன்மையாகும். (இதன் வழியாகப் பிரவேசியுங்கள்) என்று அழைக்கப்படுவார். (தமது உலக வாழ்வின் போது) தொழுகையாளிகளாய் இருந்தவர்கள் தொழுகையின் வாசல் வழியாக அழைக்கப்படுவர். அறப்போர் புரிந்தவர்கள் ஜிஹாத் என்னும் வாசல் வழியாக அழைக்கப்படுவர். நோன்பாளியாக இருந்தவர்கள் ரய்யான் என்னும் வாசல் வழியாக அழைக்கப்படுவர். தர்மம் செய்தவர் சதகா என்னும் வாசல் வழியாக அழைக்கப்படுவார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரே என் தாயும் தந்தையும் தங்களுக்கு அற்பணமாகட்டும். இந்த வாசல்கள் அனைத்திலிருந்து அழைக்கப்படும் ஒருவருக்கு எந்தத் துன்பமும் இல்லையே எனவே அனைத்து வாசல்கள் வழியாகவும் ஒருவர் அழைக்கப்படுவாரா? என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் ஆம். நீரும் அவர்களில் ஒருவராவீர் என்று நான் நம்புகிறேன் என்று கூறினார்கள். (புகாரி ; 3666)

لو كان بعدي نبي لكان عمر

எனக்கு பின் நபி இல்லை. அப்படி இருந்தால் அது உமர் ரலி அவர்கள் தான். (திர்மிதி ; 3686)

ان الله جعل الحق علي لسان عمر وقلبه

உமர் ரலி அவர்களுடைய நாவிலும் உள்ளத்திலும் அல்லாஹ் சத்தியத்தை வைத்திருக்கிறான். (இப்னு ஹிப்பான் ; 6889)

مَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم سَبَّحَ سُبْحَةَ الضُّحَى وَإِنِّي لأُسَبِّحُهَا ( أي أصليها

நபி அவர்கள் லுஹா தொழுகையை வழமையாக தொழுது நான் பார்த்ததில்லை. ஆனால் நான் வழமையாக தொழுவேன் என அன்னை ஆயிஷா ரலி அவர்கள் கூறினார்கள். (புகாரி ; 1177)

قال الشافعي : رأيت بباب مالك من أفراس خراسان ، وبغال مصر فقلت : ما أحسنها!

فقال هي هبة مني إليك .

فقلت دع لنفسك منها دابة تركبها .

قال أنا أستحي من الله أن أطأ تربة نبي الله بحافر دابة

 அல்லாமா ஷாஃபிஈ ரஹ் அவர்கள் கூறுகிறார்கள் ; நான் இமாம் மாலிக் ரஹ் அவர்களின் வீட்டின் முன்பு அழகான குதிரைகளையும் கழுதைகளையும் நான் பார்த்தேன். அவர்கள் இதை நீ அன்பளிப்பாக வைத்துக் கொள் என்றார்கள். நீங்கள் வாகனிப்பதற்கு ஒரு குதிரையையாவது வைத்துக் கொள்ளுங்கள் என்று நான் சொன்ன போது, நபியின் பாதங்கள் பட்ட மண்ணை என் குதிரையின் கால் குழம்பைக் கொண்டு மிதிப்பதற்கு நான் வெட்கப்படுகிறேன் என்றார்கள்.

அபூபக்கர், உமர், ஜைத் ஆகிய மூவரும் நபி ஸல் அவர்கள் செய்யாத ஒரு காரியத்தை செய்தார்கள். ஆயிஷா ரலி அவர்கள் நபி வழமையாக செய்யா விட்டாலும் நான் செய்வேன் என்றார்கள். இமாம் மாலிக் ரஹ் அவர்கள் எந்த ஸஹாபியும் செய்யாத ஒரு காரியத்தை செய்தார்கள். நபியின் காலத்தில் இல்லாதவை அனைத்தும் பித்அத் என்று சொன்னால் இதுபோன்ற பெரும் உத்தமர்களை பித்அத்வாதிகள் என்று சொல்ல வேண்டிய நிலை வரும்.

ﷺ அவர்கள் இந்த மாதிரியான காரியங்களை ஏன் செய்யாமல் விட்டார்கள் என்று நீங்கள் கேட்கலாம். அதற்கு பல காரணங்களும் பல நோக்கங்களும் இருக்கலாம். அதில் ஒன்று.

قالت : " وإن كان ليدع العمل وهو يحب أن يعمله خشية أن يعمل به الناس فيفرض عليهم

மக்கள் அதை செய்து அதனால் அது கடமையாக்கப்பட்டு விடுமோ என்று அஞ்சி செய்வதற்கு விருப்பம் இருக்கும் பல காரியங்களை நபி ஸல் அவர்கள் விட்டு விடுபவர்களாக இருந்தார்கள். (இப்னு ஹிப்பான் ; 313)

எனவே ﷺ அவர்கள் விட்டதற்கு இதுபோன்ற பல காரணங்கள் இருக்கலாம். எனவே அவர்கள் செய்யாத, அவர்கள் காலத்தில் இல்லாத அனைத்தும் பித்அத் என்று கூறினால் பெரும் பெரும் ஸஹாபாக் களையும் இமாம்களையும் நரகவாதி என்று சொல்ல வேண்டிய நிலை வரும். நவூது பில்லாஹ்

எனவே பித்அத் என்றால் என்ன ?

قال ابن رجب الحنبلي: «والمراد بالبدعة ما أحدث مما ليس له أصل في الشريعة يدل عليه، وأما ما كان له أصل في الشرع يدلّ عليه فليس ببدعة، وإن كان بدعة لغة». (جامع العلوم والحكم، تأليف: ابن رجب الحنبلي، ص223)

மார்க்கத்தில் அடிப்படை ஆதாரம் இல்லாத ஒரு காரியம் புதிதாக உருவாக்கப்படும் என்றால் அது பித்அத்தாகும். எதற்கு மார்க்கத்தில் அடிப்படை ஆதாரம் இருக்கிறதோ அது பித்அத் இல்லை என இப்னு ரஜப் ரஹ் அவர்கள் கூறுகிறார்கள். (ஜாமிவுல் உலூம் வல்ஹிகம் ; 223)

قال التفتزاني: «ومن الجهل من يجعل كل أمر لم يكن في عهد الصحابة بدعة مذمومة، وإن لم يقم دليل على قبحه، تمسكاً بقوله عليه الصلاة والسلام: "إياكم ومحدثات الأمور" ولا يعلمون أن المراد بذلك هو أن يجعل من الدين ما ليس منه (شرح المقاصد، تأليف: التفتزاني، ج5، ص232) 

ஒரு காரியம் அருவருப்பானது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லாத பொழுது, சஹாபாக்கள் காலத்தில் இல்லை என்கிற காரணத்தினால் அதை பித்அத் என்று சொல்வது அறியாமையாகும். மார்க்கத்தில் எதற்கு அடிப்படை இல்லையோ அதுவே பித்அத்தாகும் என தஃப்தாஜானி ரஹ் அவர்கள் கூறுகிறார்கள். (ஷரஹுல் மகாஸித் ; 5/232)

நபி ﷺ அவர்கள் காலத்தில் நடந்த சில நிகழ்வுகளை இதற்கு உதாரணமாக கூறலாம்.

أن رجلاً أتى النبي صلى الله عليه وسلم فقال: (يا رسول الله، إني إذا أصبت اللحم انتشرت للنساء وأخذتني شهوتي. فحرمت عليَّ اللحم فأنزل الله: يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ لاَ تُحَرِّمُواْ طَيِّبَاتِ مَا أَحَلَّ اللّهُ لَكُمْ وَلاَ تَعْتَدُواْ إِنَّ اللّهَ لاَ يُحِبُّ الْمُعْتَدِينَ وَكُلُواْ مِمَّا رَزَقَكُمُ اللّهُ حَلاَلاً طَيِّبًا

இறைச்சி சாப்பிட்டால் எனக்கு மனோ இச்சைகள் அதிகமாகிறது. எனவே நான் அதை என் மீது ஹராமாக்கிக் கொண்டேன் என்று ஒரு ஸஹாபி சொன்ன போது அல்லாஹ் ஹலாலாக்கிய ஒன்றை ஹராமாக்காதீர்கள் என்ற 5;87 வசனத்தை நபியவர்கள் ஓதிக் காட்டினார்கள். (திர்மிதி ; 3054)

وعن ابن عباس رضي الله عنهما قال: ((بينما النبي صلى الله عليه وسلم يخطب إذا هو برجل قائم فسأل عنه: (فقالوا: أبو إسرائيل نذر أن يقوم ولا يقعد, ولا يستظل, ولا يتكلم, ويصوم، فقال النبي صلى الله عليه وسلم: مروه فليتكلم, وليستظل, وليقعد, وليتم صومه

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எங்கள் மத்தியில் ஒரு நாள் உரை நிகழ்த்திக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு மனிதர் நின்று கொண்டிருந்தார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரைப் பற்றி விசாரித்தனர். ‘அவர் பெயர் அபூ இஸ்ராயீல். அவர் உட்காராமல் நின்று கொண்டிருப்பதாகவும், வெயிலில் நிற்பதாகவும், பேசுவதில்லை எனவும், நோன்பு நோற்பதாகவும் நேர்ச்சை செய்துள்ளார்’ என்று மக்கள் கூறினார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘அவரைப் பேசுமாறும், நிழலுக்கு வருமாறும், உட்காருமாறும் நோன்பை (மட்டும்) முழுமைப்படுத்துமாறும் அவருக்குக் கூறுங்கள்’ என்று கூறினார்கள். (புகாரி ; 6704)

இதற்குப் பெயர் தான் பித்அத்தாகும். எனவே எதற்கு மார்க்கத்தில் அடிப்படை இல்லையோ அது பித்அத் என்ற விளக்கத்தை நாம் கொடுப்பது தான் சரியான நிலைபாடாகும். நல்ல ஈமான் உள்ளவர்களும் ஸஹாபாக்களை மதிப்பவர்களும் கொடுக்கும் விளக்கம் இது தான்.அது தான் பேனுதலாகும். அல்லாஹ் உண்மையை புரிந்து கொள்ளும் பாக்கியத்தைத் தருவானாக.

 அடுத்தபடியாக ஷஃபான் மாதத்தின் சிறப்புகள் பற்றி பார்ப்போம்........

சங்கை மிகுந்த ஷஃபான்:
நபி (ஸல்) அவர்கள் ரமழானைத் தவிரவுள்ள ஏனைய மாதங்களில் கூடுதலாக நோன்பு நோற்ற ஒரு மாதமென்றால் அது ஷஃபான் மாதம் தான் என்பதை ஹதீஸ்களில் மூலம் நாம் காணலாம். இதன் மூலம் ஷஃபான் மாத நோன்பின் சிறப்பையும் அதன் மகத்துவத்தையும் விளங்கிக் கொள்ளலாம்.

روى البخاري ومسلم عن أمِّ المؤمنين عائشة -رضي الله عنها- قالتْ: "ما رأيتُ رسولَ الله صلى الله عليه وسلم استكملَ صيام شهر قطُّ إلا شهر رمضان، وما رأيتُه في شهرٍ أكثر صيامًا منه في شعبان". وفي رواية لأبي داود قالتْ: "كان أحبّ الشهور إلى رسول الله صلى الله عليه وسلم أنْ يصومَه شعبان، ثم يَصِله برمضان".

நபி (ஸல்) அவர்கள் ரமழானைத் தவிரவுள்ள வேறு எந்த மாதத்திலும் பூரணமாக நோன்பு நோற்றதை நான் கண்டதில்லை. அவ்வாறே ஷஃபான் மாதத்திலே தவிர வேறு எந்த மாதங்களிலும் அதிகமாக அவர்கள் நோன்பு நோற்றதையும் நான் பார்த்ததில்லை, என அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (புகாரி, முஸ்லிம்).

وقد روى الترمذي والنسائي عن أسامة بن زيد، قَال: قُلتُ: يا رسول الله، لمْ أرَكَ تصوم شهْرًا من الشهور ما تصوم مِنْ شعْبان. قال: «ذلك شهْرٌ يغْفُل الناس عنْه بيْن رجب ورمضان، وهو شهْرٌ تُرْفَع فيه الأعْمال إلى ربِّ العالمين، فأحبُّ أنْ يرْفعَ عملي وأنا صائمٌ».

உஸாமா (ரலி) இந்த ரகசியம் பற்றி இவ்வாறு அறிவிக்கின்றார்கள் :
நான் நபி (ஸல்) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதரே! ஷஃபான் மாதத்தில் நீங்கள் நோன்பு நோற்பதைப் போன்று ஏனைய மாதங்களில் நீங்கள் நோன்பு நோற்பதை நான் காணவில்லையே! என்று கேட்டேன். அதற்கவர்கள், அது ரஜபுக்கும், ரமழானுக்குமிடையில் வரும் மாதமாகும். இம்மாதம் பற்றி மக்கள் கவனக் குறைவாக இருக்கின்றார்கள். இம்மாதத்தில் அடியார்களுடைய அமல்கள் அல்லாஹ்விடம் எடுத்துக் காட்டப்படுகின்றன. இம்மாதத்தில் நோன்புடன் இருக்கும் நிலையில் எனது அமலும் அல்லாஹ்விடம் எடுத்துக் காட்டப்பட வேண்டும் என்றே நான் விரும்புகின்றேன் எனக் கூறினார்கள். (அபுதாவூத், நஸஈ,ஸஹீஹ் இப்னு ஹுஸைமா).

நபித்தோழர்களும் தாபிஈன்களும் இந்த மாதத்தின் நோன்புக்கு முக்கியத்துவம் தந்துள்ளனர் என்பதும் ரமளான் மாத வணக்கத்திற்காக ஷஃபானிலிருந்தே தன்னைத் தாயார் படுத்தி வணக்கத்திலும் குர்ஆன் ஓதுவதிலும் தான தர்மங்கள் செய்வதிலும் கச்சை கட்டிக் கொண்டு இறங்கி விடுவார்கள் அறியலாம் :


அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம் இந்த ஷஃபான் பதினைத்தாவது (இரவான பராஅத்) இரவின் சிறப்பு என்னவென்று தெரியுமா? என அண்ணல் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களிடம் கேட்டு விட்டு கூறினார்கள்; இதில் தான் இந்த வருடத்திற்கான மனித பிறப்பும் இறப்பும் எழுதப்படும். இதில் தான் அவர்களின் அமல்கள் (செயல்கள்) உயர்த்தப்பும். இதில் தான் அவர்களின் ரிஸ்க் (வாழ்வாதரங்கள்) இறங்கும். நபிமொழி. பதிவு: பைஹகி. ஆதாரம் மிஷ்காத்: 1305.

படைத்தவன் போடும் பட்ஜெட் இரவு:

இறப்பு, பிறப்பு, வாழ்வாதாரம் உள்ளிட்ட எல்லா காரியங்களின் தீர்ப்புகள் பராஅத் இரவில் எழுதப்பட்டு, லைலதுல் கத்ருடைய இரவில் அதை மலக்குகளிடம் பிரித்துக் கொடுக்கப்படுகிறது, என்று இபுனு அப்பாஸ் (ரலி) அவர்கள் விளக்கமளிப்பார்கள். இந்த வகையில் பராஅத் இரவு என்பது, அடுத்த ஆண்டுக்கான வரவு செலவு பட்ஜெட், லைலத்துல் கத்ருடைய இரவில் தாக்கல் செய்வதற்குரிய பூர்வாங்கப் பணிகளை துவங்கும் நாளாகும்.

ஏற்கனவே எழுதப்பட்ட விதியை நகல் எடுக்கும் நாள்:

“வானம் பூமி படைப்பதற்கு 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் அல்லாஹ் விதிகளை எழுதி விட்டான்.” நபிமொழிப் பதிவு. முஸ்லிம்: 2653.

குடும்பக் கட்டுப்பாடு சம்பந்தமான ஒரு கேள்விக்கு நாயகம் (ஸல்) அவர்கள் பதிலளிக்கையில்; “நீங்கள் சந்திக்கப்போகும் எல்லா விஷயம் குறித்தும் (விதி) எழுதிய பேனா (மை) உலர்ந்து விட்டது. செய்யுங்கள் அல்லது செய்யாமல் போங்கள்” என்று எச்சரித்தார்கள். 
விதி என்பது இவ்வுலக கட்டமைப்பிற்கான அல்லாஹ் போட்ட பிளான் (திட்ட வரைவு) ஆகும். மனிதன் போட்ட பிளான் மாறும். அல்லாஹ் போட்ட பிளான் மாறாது. முடிவெடுக்கப்பட்ட இத்தீர்மான்கள் யாவும் “லவ்ஹுழ் மஹ்பூழ்” (பாதுகாக்கப்பட்ட பேழையில்), முறையாக முன்னமே பதிவு செய்யப்பட்டுள்ளது. 
அல்லாஹ்வின் இந்த தீர்மானகளை நடைமுறைப் படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் அந்த ஆண்டிற்கான கழா கத்ரு தீர்மானங்களை நகல் எடுக்கும் பணி அதாவது லவ்ஹுல் மஹ்பூழிலிருந்து பிரதியெடுக்கும் பூர்வாங்க வேலைகள் இந்த பராஅத் இரவில் தொடங்கி லைலதுல் கத்ருடைய இரவில் நிறைவு பெறும். இந்த இறை திட்ட மாதிரி வடிவங்களை அது சம்பந்தப்பட்ட இறை மேலதிகாரிகளான வானவர்களிடம் புனித லைலதுல் கத்ருடைய இரவில் ஒப்படைக்கப்படும். இந்த வகையில் தான் இந்த இரண்டு இரவுகளில் காரியங்கள் தீர்மானிக்கப்பட்டு பிரித்துக் கொடுக்கப்படுகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

கழா கத்ரு மாறுமா? மாறாது. ஆனால் சில விஷயங்களை அல்லாஹ் சஸ்பென்ஸாக வைத்திருக்கிறான். அடியான் கேட்டால் (துஆ செய்தால்) கொடுக்கலாம். அல்லது இன்ன நன்மையான செயல் அவன் புரிந்தால் இந்த பாக்கியம் அவனுக்கு வழங்கலாம். அவனது ஆயுளை நீடிக்கலாம். இரண பாக்கியம் கூடுதலாக கொடுக்கலாம். அல்லது குறைத்து விட வேண்டியதுதான், அவன் தர்மம் செய்தால் அவனுக்கு வர வேண்டிய பேராபத்துக்களை, துர்மரணகளை, துர்முடிவுகளை தடுக்கலாம் என இறைவன் தீர்மாநித்திருப்பான். அதன் படி நடந்தால் எல்லா காரியங்களும் சு(ல)பமாக நடந்தேறும். இல்லையெனில் மாறாகத்தான் நடந்தேறும். இதுமாதிரியான கழா கத்ருக்கு “கழா முஅல்லக்” என்று பெயர். இது மேற்படி விதத்தில் மாறும். “கழா முப்ரம்” முடிவான இறை விதி மாறாது.


لِكُلِّ أَجَلٍ كِتَابٌ (38) يَمْحُو اللَّهُ مَا يَشَاءُ وَيُثْبِتُ وَعِنْدَهُ أُمُّ الْكِتَابِ (39)


“ஒவ்வொன்றுக்கும் தவணை (குறிப்பிட்டு) எழுதப்பட்டுள்ளது எனினும் அல்லாஹ் அவன் நாடியதை (அதில்) அழித்து விடுவான். (அவன் நாடியதை) உறுதியாக்கிவிடுவான் அவனிடத்தில் அசல் பதிவு இருக்கிறது” (அல் குர்ஆன். 13:38, 39)
«مَنْ أَحَبَّ أَنْ يُبْسَطَ لَهُ فِي رِزْقِهِ، وَيُنْسَأَ لَهُ فِي أَثَرِهِ، فَلْيَصِلْ رَحِمَهُ»

“எவர் தனது ரிஸ்க் (வாழ்வாதாரம்) விரிவடைய வேண்டும் தனது ஆயுள் நீளமாக வேண்டும் என்று விரும்புவாரோ அவர் தனது உறவுகளை சேர்த்துக்கொள்ளட்டும்” நபி மொழி. புகாரி: 5986. முஸ்லிம்: 1982.
சில அறிவிப்புகளில்., “அல்லாஹுவைப் பயந்து கொள்ளட்டும் தனதுபெற்றோரை மதித்து அவர்களுக்கு நன்மை செய்யட்டும்” என்று கூடுதலாக வந்துள்ளது. இந்த நபிமொழியில் ஒரு மனிதனின் ஆயுள் காலம், அவனது ரிஸ்க் கூடவும் குறையவும் செய்யும் என்று தெரிகிறது.

“அல்லாஹ்வுடைய விதியான ஆயுள் காலம் எப்படி அதிகரிக்கப்படும்” என்று, இந்த நபிமொழித் தொடரில்., இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள்., அல்லாஹ் குர்ஆனில், “அவன் தான் உங்களைக் களிமண்ணால் படைத்து (உங்களுக்குரிய) தவணையை (வாழ்நாளைக்குறிப்பிட்டு) நிர்ணயம் செய்தவன். அவனிடத்தில் ஒரு குறிப்பிட்ட தவணையும் உண்டு” என்று 6:2-ல் கூறுகின்றான். இந்த வசனத்தில் இரண்டு (அஜலை) தவணையை குறிப்பிடுகிறான் முதல் தவணை என்பது பிறப்பிலிருந்து இறப்புவரை உள்ள இவ்வுலக ஆயுள் காலம் ஆகும். இரண்டாவது தவணை என்பது இறந்த பிறகு இறைவனை (மறுமையில்) சந்திக்கும் வரையில் உள்ள கபுறுடைய ஆயுள் காலம் ஆகும். ஒருவன் அல்லாஹ்வுக்குப் பயந்து தனது பெற்றோர்களை ஆதரித்து, உறவினர்களை சேர்த்துக்கொண்டால் அவனுடைய கபுருடைய ஆயுள் காலத்திலிருந்து அவன் நாடுமளவு எடுத்து இவ்வுலக ஆயுள் காலத்தை நீட்டுவான். இதன்படி கபுறுடைய ஆயுள் காலம் அவன் எடுத்த அளவு குறையும். அல்லாஹ்வுக்கு மாறு செய்து உறவுகளைத் துண்டித்து வாழ்ந்தால் இவ்வுலக ஆயுளைக் குறைத்து கபுறுடைய ஆயுளைக் கூட்டிவிடுவான். ஆக, மொத்தத்தில் மாற்றம் நிகழாமல், இவ்வுலக ஆயுள் காலம் கூடவும் குறையவும் செய்யும், என்று அற்புதமான விளக்கத்தை இப்னு அப்பாஸ் (ரலி) வழங்கினார்கள் (தப்ஸீர் குர்துபி: 1339 விரிவுரை)

யாசீன் ஓதி துஆ செய்ய என்ன காரணம்?
وَمَا اجْتَمَعَ قَوْمٌ فِي بَيْتٍ مِنْ بُيُوتِ اللهِ، يَتْلُونَ كِتَابَ اللهِ، وَيَتَدَارَسُونَهُ بَيْنَهُمْ، إِلَّا نَزَلَتْ عَلَيْهِمِ السَّكِينَةُ، وَغَشِيَتْهُمُ الرَّحْمَةُ وَحَفَّتْهُمُ الْمَلَائِكَةُ، وَذَكَرَهُمُ اللهُ فِيمَنْ عِنْدَهُ،
 அண்ணல் நபிகள் நாயகம் (ஸல்) அருளினார்கள்., “அல்லாஹ்வின் இல்லத்தில் கூட்டமாக அமர்ந்து குர்’ஆன் ஓதினால் அவர்கள் மீது சகீனத் என்னும் அமைதி இறங்கும். இறையருள்- ரஹ்மத் அவர்களை மூடிக்கொள்ளும். மலக்குகள் அவர்களைச் சூழ்ந்துகொள்வர். அல்லாஹ் அவர்களைப் பற்றி தன்னிடமிருப்பவர்களிடம் பெருமையாக எடுதுக்கூருகிறான்”. பதிவு- முஸ்லிம்: 2699. அபூ தாவூத்: 1455.

மலக்குகள் இறங்கி இருக்கும் மஜ்லிஸில்- கூட்டத்தில் துஆக் கேட்டால் அதை அல்லாஹ் கபூலக்குவான். “சேவல் கூவும் சப்தம் கேட்டால் நீங்கள் அல்லாஹ்விடம் அவனது அருளைக் கேளுங்கள் ஏனெனில் அது மலக்கைக்கண்டு தான் கூவும்”. நபி மொழி புகாரி: 3303. முஸ்லிம்: 2729. இந்த நபி மொழி மலக் இருக்கும்போது துஆச் செய்வதை பரிந்துரைக்கின்றது என்றால் அப்போது அது கபூலாகும் என்பதால்தானே!. “குர்ஆன் ஒதும் மஜ்லிஸில் மலக்குகள் இறங்குவர்” என்று புகாரி ஷரீபிலும் முஸ்லிம் ஷரீபிலும் ஹதீஸ் வந்துள்ளது. குர்ஆன் ஓதிய பின்னர் மலக்குகள் இருக்கும்போது துஆக் கேட்டால் அது கபூலாகும் என்றால் பத்து முறை குர்’ஆன் ஓதியதற்குச்சமமான யாஸீன் ஓதி துஆச் செய்தால் அது கபூல் ஆகாதா?

«إِنَّ لِكُلِّ شَيْءٍ قَلْبًا، وَقَلْبُ القُرْآنِ يس، وَمَنْ قَرَأَ يس كَتَبَ اللَّهُ لَهُ بِقِرَاءَتِهَا قِرَاءَةَ القُرْآنِ عَشْرَ مَرَّاتٍ»
“ஒவ்வொரு வஸ்துவுக்கும் ஒரு இதயம் உண்டு. குர்ஆனின் இதயம் யாஸீன் ஆகும். எவர் யாஸீனை ஒரு முறை ஓதுவாரோ அவருக்கு பத்து முறை குர்ஆன் ஓதிய நன்மையை அல்லாஹ் எழுதிவிட்டான். (நபி மொழி. திர்மிதி: 2887).
“எவர் முற்பகலில் யாஸீன் ஓதுவாரோ அவருடைய தேவை நிறைவேற்றப்படும்” (நபி மொழி. தாரமி: 3418. மிஷ்காத்: 2171).
“யாஸீனை காலையில் ஓதினால் மாலை வரை, மாலையில் ஓதினால் காலை வரை அன்றைய தினத்தின் காரியங்கள் கைகூடும்” என்று இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கின்றார்கள் (தாரமி) ஆகவே தான் யாஸீன் ஓதி பராஅத் (மக்ரிப்) துஆவை நாம் கேட்டு வருகிறோம்.

பராஅத் இரவில் ஓதப்படும் துஆவிற்கு ஆதாரம்:
மிஷ்காத் ஹதீஸ் எண் 1308. விரிவுரையில், அல்லாமா முல்லா அலி காரி (ரஹ்) அவர்கள் தனது மிர்காதில் எழுதுவதாவது:


وَعَنْ كَثِيرٍ مِنَ السَّلَفِ، كَعُمَرَ بْنِ الْخَطَّابِ، وَابْنِ مَسْعُودٍ وَغَيْرِهِمَا، أَنَّهُمْ كَانُوا يَدْعُونَ بِهَذَا الدُّعَاءِ: اللَّهُمَّ إِنْ كُنْتَ كَتَبْتَنَا أَشْقِيَاءَ فَامْحُهُ وَاكْتُبْنَا سُعَدَاءَ، وَإِنْ كُنْتَ كَتَبْتَنَا سُعَدَاءَ فَأَثْبِتْنَا، فَإِنَّكَ تَمْحُو مَا تَشَاءُ وَتُثْبِتُ وَعِنْدَكَ أُمُّ الْكِتَابِ،
ஹழ்ரத் உமர பின் கத்தாப், ஹழ்ரத் இப்னு மஸ்ஊத் முதலான நாயகத் தோழர்கள் மற்றும் முன்னோர்களான நாதாக்கள் (ரலியல்லாஹு அன்ஹும்) அதிகமானோரும் பின் வரும் துஆவை ஓதி வந்தார்கள்:
அல்லாஹும்ம இன் குந்த கதப்தனா அஷ்கியாஅ /பம்ஹுஹு வக்துப்னா சுஅதாஅ வஇன் குந்த கதப்தனா சுஅதாஅ /பஅஸ்பித்னா /பஇன்னக தம்ஹு மா தஷாஉ வதுஸ்பிது வஇன்தக உம்முல்கிதாப்
(யா அல்லாஹ்! நீ எங்களை அபாக்கியவான்களாக பதிவு செய்து இருந்தால் அதை அழித்து எங்களை பாக்கியவான்களாக எழுது. நீ எங்களைப் பாக்கியவான்களாக எழுதி இருந்தால் அதை அப்படியே உறுதிப்படுத்து ஏனெனில் நீ நாடுவதை அழிப்பாய் (நாடுவதை) உருதிப்படுத்துவாய் உன்னிடம் மூலநூல் உள்ளது).
இந்த துஆவை ஷாஅபான் 15ஆவது (பராஅத்) இரவில் ஓதியதாக ஹதீஸில் வந்துள்ளது. (மிர்காத்: 3/976)
பராஅத் இரவில் நாமும் சஹாபாக்களைப் பின்பற்றி இந்த ஹதீஸில் வந்த துஆவைத் தான் ஓதி வருகிறோம்.


   
மன்னறை ஜியாரத்:
عن عائشة رضي الله عنها قالت: دخل علي رسول الله صلى الله عليه وسلم فرفع عنه ثوبيه ثم لم يستتم أن قام فلبسهما فأخذتني غيرة شديدة ظننت أنه يأتي بعض صويحباتي فخرجت أتبعه فأدركته بالبقيع بقيع الغرقد يستغفر للمؤمنين والمؤمنات والشهداء فقلت: بأبي أنت وأمي أنت في حاجة ربك وأنا في حاجة الدنيا فانصرفت فدخلت في حجرتي ولي نفس عال ولحقني النبي صلى الله عليه وسلم فقال: ما هذا النفس يا عائشة فقلت: بأبي أنت وأمي أتيتني فوضعت عنك ثوبيك ثم لن تستتم أن قمت فلبستهما فأخذتني غيرة شديدة ظننت أنك تأتي بعض صويحباتي حتى رأيتك بالبقيع تصنع ما تصنع
قال يا عائشة: أكنت تخافين أن يحيف الله عليك ورسوله بل أتاني جبريل عليه السلام فقال هذه الليلة ليلة النصف من شعبان ولله فيها عتقاء من النار بعدد شعور غنم كلب لا ينظر الله فيها إلى مشرك ولا إلى مشاحن ولا إلى قاطع رحم ولا إلى مسبل ولا إلى عاق لوالديه ولا إلى مدمن خمر
قالت: ثم وضع عنه ثوبيه فقال لي: يا عائشة أتأذنين لي في القيام هذه الليلة فقلت: نعم بأبي وأمي فقام فسجد ليلا طويلا حتى ظننت أنه قد قبض فقمت ألتمسه ووضعت يدي على باطن قدميه فتحرك وسمعته يقول في سجوده: أعوذ بعفوك من عقوبتك وأعوذ برضاك من سخطك وأعوذ بك منك جل وجهك لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك فلما أصبح ذكرتهن له فقال يا عائشة: تعلمتيهن فقلت: نعم فقال: تعلميهن وعلميهن فإن جبريل عليه السلام علمنيهن وأمرني أن أرددهن في السجود. (تفسير الدر المنثور)

அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்., ஒருநாள் இரவு அண்ணல் நபி (ஸல்) அவர்களைக் காணாமல் தேடி அலைந்தபோது இறுதியில் அவர்கள் ஜன்னத்துல் பகியி (மதீனா கபுறுஸ்தானி)ல் நின்று உருக்கமாக துஆச் செய்து கொண்டிருந்தார்கள். எனது தாயும் தந்தையும் தாங்களுக்கு அர்ப்பணம். நான் (எனது) உலக நலனில் அக்கறை கொண்டு (தேடிவந்து)ள்ளேன். ஆனால் நாயகமே தாங்களோ (மக்கள் நலனுக்காக) உங்கள் இறைவனிடம் தேவையாகி நிற்கிறீர்களே! (என மெய்சிலிர்த்தேன்) அங்கிருந்து வேகமாக கிளம்பி எனது அறைக்கு வந்து சேர்ந்தேன் வேகமாக நடந்து வந்ததால் எனக்கு மூச்சு வாங்கியது எனக்குப்பின் எனது இல்லம் வந்து சேர்ந்த சர்தார் நபி (ஸல்) அவர்கள் இதைக் கவனித்து விட்டு, இதென்ன ஆயிஷா! இப்படி மூச்சு வாங்குது? என வினவினார்கள். அதற்கு, நான் அவர்களை காணமல் தேடி அலைந்து இறுதியில் ஜன்னத்துல் பகியில் கண்டு பிடித்து பிறகு மிக வேகமாக இல்லம் திரும்பிய கதையை அவர்களிடம் சொன்னேன். “என்ன ஆயிஷா! அல்லாஹ்வும் அவனது தூதரும் உங்களுக்கு அநியாயம் செய்வார்கள் என்று எண்ணிக்கொண்டீர்களா? ஜிப்ரீல் (அலை) அவர்கள் என்னிடம் வந்து இது ஷ/பான் 15-வது இரவு. இதில் அல்லாஹ் அடியார்களுக்கு விடுதலை அளிக்கிறான் எனக்கூறினார்கள்”. (எனவே அடியார்களுக்கு மன்னிப்பும் நரக விடுதலையும் கிடைக்க துஆ செய்வதற்காக கபுறு ஜியாரத்திற்கு வந்தேன்). 
 கபுற் ஜியாரத் முடித்து விட்டு இல்லம் திரும்பிய கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள், ஆயிஷா! இன்றிரவு நின்று வணங்க எனக்கு அனுமது அளிப்பீர்களா? என்று என்னிடம் வினவினார்கள் அதற்கு நான், “எனது தாயும் தந்தையும் தாங்களுக்கு அர்ப்பணம் தாங்கள் என்னுடன் எனக்கருகே இருப்பதைத் தான் விரும்புகிறேன் ஆனாலும் உங்களது விருப்பத்தை தேர்வுசெய்கிறேன்” எனக்கூறினேன் உடன் எழுந்து தொழ ஆரம்பித்துவிட்டார்கள் நீண்ட நெடிய நேரம் தொழுகையில் சுஜீதிலேயே இருந்தார்கள். எந்த அளவு நீளமான சுஜீது செய்தார்கள் என்றால் நான் அவர்களுடைய உயிர் கைப்பற்றப்பட்டு விட்டதோ என்று கருதிவிட்டேன். எழுந்து போய் அவர்களின் பாதத்தை தொட்டபோது அதில் உயிர்த்துடிப்பு இருந்தது. அப்போது தான் எனக்கு சந்தோசமே வந்தது சுஜீதில் அவர்கள் ஓதியதை நான் கவனித்து கேட்டேன்., “அஊது பிஅ/ப்விக மின் இகாபிக வஅஊது பிரிழாக்க மின் சகத்திக வஅஊது பிக மின்க இலைக்க ஜல்ல வஜ்ஹுக லா உஹ்ஸீ ஸனாஅன் அலைக்க அந்த கமா அஸ்னைத்த அலா ந/ப்ஸிக”
(யா அல்லாஹ் உனது மன்னிப்பைக்கொண்டு உனது தண்டனையை விட்டும் பாதுகாப்புத்தேடுகிறேன் உனது திருப்பொருத்தத்தை கொண்டு உனது கோபத்தை விட்டும் பாதுகாப்புத்தேடுகிறேன் உன்னைக்கொண்டு உன்னைவிட்டும் உன்னளவில் பாதுகாபுத்தேடுகிறேன் உனது திருமுகம் மகத்தானது நீ உன்னை புகழ்ந்ததைப்போல நான் உன்னைப் புகழ இயலாதவனாக இருக்கிறேன்)
நான் இவ்வாறு செவிமடுத்ததை காலையில் நபி (ஸல்) அவர்களிடம் கூறினேன் அதற்கு அவர்கள், ஆயிஷா! இதைக் கற்றுக்கொண்டாயா (நல்லது) இதைக் கற்று, கற்றுக்கொடுங்கள். ஜிப்ரயீல் (அலை) அவர்கள், இவ்வாறு இதை கற்றுக்கொடுத்து இதை சுஜூதில் திரும்பத் திரும்ப மடக்கி மடக்கி கூறிக்கொண்டிருக்கும்படி எனக்கு உத்தரவிட்டார்கள்.
ஆகவே, இதை நாமும் கற்று மற்றவர்களுக்கும் கற்றுக்கொடுப்போம். பராஅத் இரவில் சுஜுதில் இருந்துகொண்டு இதை நாமும் கூறிக்கொண்டிருப்போம்.
(அன்னலாருக்கும் அன்னை ஆயிஷா ரலி அவர்களுக்கும் இடையே இவ்விரவில் நடந்த உரையாடல் துணுக்கு துணுக்காக பல அறிவிப்புகளில் வந்துள்ளது அவற்றை அடிக் குறிப்பில் காண்க! 1)

கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் :
أن النبي صلى الله عليه وسلم قال: "إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلتها وصوموا يومها، فإن الله تبارك وتعالى ينـزل فيها لغروب الشمس إلى سماء الدنيا، فيقول : ألا من مستغفر فأغفر له ألا من مسترزق فأرزقه ألا من مبتل فأعافيه ألا كذا ألا كذا حتى يطلع الفجر"
பராஅத் இரவிலே முதல் வானம் வரைக்கும் இறங்கி மூன்று அறிக்கைகளை வெளியிடுகிறான்
1.என்னிடம் மன்னிப்பு தேடுபவர் உண்டா? கேளுங்கள் மன்னிக்கிறேன்
2.என்னிடன் இரணம் வேண்டுபவர் உண்டா வேண்டுங்கள் வழங்குகிறேன்
3.நோயில் சிக்கியவர் உண்டா? நிவாரணம் அளிக்கிறேன் (இப்னு மாஜா) 

மன்னிப்பு கேளுங்கள் மன்னிக்கிறேன்: ألا من مستغفر فأغفر له
தவறு செய்வது மனித இயல்புதான் ஆனால் அதை உணர்ந்து மன்னிப்புக் கேட்பதுதான் சிறந்த பண்பு.
كل بني آدم خطاء وخير الخطائين التوابون
இறைவன் கருணையாளன். அவனிடம் மன்னிப்புக் கேட்பதையே அவன் விரும்புகிறான். சில மதங்களில் மதகுருவிடம் மன்னிப்புக்கேட்டால் போதுமானது என்று வைத்துள்ளார்கள்.அப்படி சொல்லி உங்களை நான் ஏமாற்ற விரும்பவில்லை.
ஒரு ஆலயம். மதகுரு மக்களுக்கு முன்பு நின்று மன்னிப்பு சீட்டு வழங்கிக் கொண்டிருந்தார். ''இதோ பாருங்கள் ஒரு சீட்டு 50ரூபாய்தான். ஒன்று வாங்கினால் போதும். இங்கள் அத்தனை பாவங்களும் மன்னிக்கப்பட்டு விடும்'' என்றார்.
''அட 50 ரூபாய் செலவில் அத்தனை பாவங்களும் மன்னிக்கப்படுமா? பரவாயில்லையே..''
மக்கள் கூட்டம் முண்டியடித்துக் கொண்டு வாங்கினர். செம வசூல். 
ஒருத்தன் மட்டும் 100 ரூபாய் கொடுத்து 2 சீட்டு வாங்கினான். பாதிரியாருக்கு ஆச்சரியம். இவன் மட்டும் ஏன் 2 வாங்குகிறான்?சரி. நமக்கு தேவை காசு. யார் எத்தனை வாங்கினால் என்ன?
பாதிரியார் வசூலை அள்ளி முடிந்துகொண்டு அடுத்த ஊருக்கு கிளம்பினார் வசூலுக்கு. 
வழியிலே தன்னந்தனியாக சென்றுகொண்டிருந்தார். ஒருவன் வழிமறித்தான். கையிலே கத்தி.
''யோவ்.. மரியாதையா இந்த பணமூட்டையை கொடுத்திடு.''
''டேய். இது அநியாயம். ஒரு மதகுருவிடமே 'ஆட்டையைப்' போடுவது பெரிய பாவம். இந்த பாவம் உன்னை சும்மா விடாது.''
''அதுலாம் எங்களுக்குத் தெரியும். அதுக்காகத்தான் 100 ரூபாய் கொடுத்து இரண்டு சீட்டு வாங்கி வச்சிருக்கோம். ஒன்று நான்ஏற்கனவே செய்த பாவத்திற்கு. மற்றொன்று இப்ப செய்யப்போற இந்த பாவத்துக்கு'' அப்படின்னான்.
மதகுரு மக்களை ஏமாற்றினார். அவரை ஏமாற்றுவதற்கும் ஒரு ஆள் இருந்திருக்கிறான். பாவம் அவருக்குத் தெரியவில்லை. அந்தமதகுரு மாதிரி நான் சீட்டு விற்க விரும்பவில்லை. உங்கள் அனைவரையும் இறைவனிடம் மன்னிப்புக் கேட்கவே அழைக்கிறேன்வாருங்கள் மக்களே இந்த புனித இரவில் நாம் அனைவரும் சேர்ந்து அவனிடம் மன்னிப்புக் கேட்போம்.
 .-------------------
இரணம் கேளுங்கள்; இரணம் தருகிறேன்: ألا من مسترزق فأرزقه
இந்த இரவு அடியார்களின் ஆயுள். இரணம் நன்மை தீமை முடிவு செய்யப்பட்டு யாருக்கு எவ்வளவு என்று பட்ஜெட் போடப்பட்டுஅந்தந்த துறை அதிகாரிகளிடம் (வானவர்களிடம்) பொறுப்புகள் ஒப்படைக்கப்படுகின்றன. எனவே இந்த பட்ஜெட் இரவில் துஆசெய்து இரணத்தை அள்ளிப் போடலாம் மரணத்தை தள்ளிப் போடலாம்
துஆ விதியை மாற்றும் என்பது நபிமொழி.
இரணத்தை இறைவனிடம் கேட்பதோடு கடமை முடிந்து விடாது; அதற்காக முயற்சி உழைப்பு அவசியம்.
''பறவைகளைப் போன்று நீங்களும் தவக்குல் வைத்தால் அவைகளுக்கு இரணம் அளிப்பதைப் போன்று உங்களுக்குதருவான். அவைகள் காலையில் பசித்த வயிறுடன் பறந்து செல்கின்றன; மாலையில் வயிறு நிரம்பி வந்துசேருகின்றன.''
இந்த நபிமொழியில் பறவைகளின் தவக்குலைப் போன்று நமது தவக்குல் இருக்கவேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. பறவைகள்அல்லாஹ் தருவான் என்று கூட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடப்பதில்லை. நம்பிக்கையோடு பறந்து சென்று பாடுபடுகின்றனமுழங்காலைக் கட்டிக்கொண்டு வீட்டிலேயே முடங்கிக் கிடந்தால் அல்லாஹ் தருவானா?
இன்று அநேகர் அப்படித்தான் நினைக்கிறார்கள்.
ஒருமுறை முல்லா சந்தையிலே ஒரு மேடையேறி நின்றார். படபடவென்று கைகளைத் தட்டி மக்களை அழைத்தார். ''மக்களே!முயற்சி இல்லாமல் முன்னேறவேண்டுமா? பாடுபடாமலேயே பணம் குவியவேண்டுமா? உழைக்காமலேயே ஊதியம்பெறவேண்டுமா? வாருங்கள்''
மக்கள் முண்டியடித்துக்கொண்டு ஒன்று கூடினார்கள். நோகாமலேயே நொங்கு திங்க யாருக்குத்தான் ஆசை இல்லை?
முல்லா சொன்னார்; ரொம்ப நல்லா சொன்னார்: ''அப்படி ஒருவழி எனக்குத் தெரியவரும்போது அவசியம் உங்களுக்குசொல்கிறேன்'' என்று சொல்லிவிட்டு விறுவிறுவென்று நடையைக் கட்டினார். மக்களின் மனநிலையை முல்லா படம் பிடித்துக்காட்டிவிட்டார்.
இன்று நிறைய பேர் இப்படித்தான் உழைக்காமல் திரிகிறார்கள்.
ஒரு சகோதரி கண்ணீரோடு கவிதை எழுதினாள்:
''நான் பீடி சுற்றுகிறேன் 
என் அம்மா முறுக்கு சுற்றுகிறாள் 
என் அண்ணன் பொறுப்பில்லாமல் 
ஊர் சுற்றுவதால்.''
ஒரு வாலிபன் இப்படித்தான் சும்மா சுற்றிக் கொண்டிருந்தான்.
அந்த ஊர் அஜரத் அவனை அழைத்தார்.
''தம்பி உழைத்தால் உயரலாம்''
''அஜரத் நான் என்ன செய்வேன்? இந்த ஊரில் ஒரு வேலையும் அமையலையே?''
''தம்பி இந்த உலகம் விசாலமானது. பரந்து விரிந்தது. கிளம்பிப் போ. தேடிப்பார். வேலை கிடைக்கும்.''
அவன் உடனே புறப்பட்டான் வேலை தேடி.
இரண்டே நாட்களில் ஊருக்கு வந்து விட்டான்
அஜரத் கேட்டார்: ''ஏம்பா திரும்பி வந்துட்டே?
அவன் சொன்னான்: ''நான் போன வழியிலே இளைப்பாறுவதற்காக ஒரு மரத்தடியில் அமர்ந்து இருக்கும்போது ஒரு காட்சியைகண்டேன். திரும்பி வந்துட்டேன்''
''என்ன காட்சி?''
''அந்த மரத்தின் கிளையிலே ஒரு நொண்டிக் குருவி பறந்து செல்ல முடியாமல் பசியுடன் அலறிக்கொண்டிருந்தது. அந்த நேரம்அழகான குருவி ஒன்று வாயில் இரையுடன் வந்து நொண்டிக் குருவிக்கு ஊட்டிவிட்டது. இதைப் பார்த்து ஒரு முடிவுக்கு வந்தேன்இந்த குருவிக்கு எங்கிருந்தோ கொண்டு வந்து ரிஸ்கை கொடுக்கிற நாயன் நமக்கும் கூரையைப் பொத்துக்கிட்டுகொடுக்கமாட்டானா? அதான் வந்துவிட்டேன்''
''தம்பி அந்த இரண்டு குருவிகளில் நீ எந்த குருவி?''
''அஜரத். என்ன சொல்றீங்க?
''ஆமாப்பா. யாராவது வந்து தரமாட்டாங்களா என்று யாசகம் கேட்கும் நொண்டிக் குருவியா? அல்லது உழைத்து தானும் உண்டுபிறருக்கும் உதவிய அந்த நல்ல குருவியா?
வாலிபன் மனம் மாறினான் உடனே ஒரு லட்சியத்தோடு உழைக்க புறப்பட்டான்.

நோயில் சிக்கியவரா? ஆரோக்கியம் தருகிறேன்: ألا من مبتل فأعافيه
நோயற்ற நீண்ட ஆயுளை இந்த இரவில் கேட்கிறோம். ஆயுளை முடிவு செய்பவன் அல்லாஹ். அவனிடமே கேட்டுப்பெறவேண்டும் சில ஏமாற்றுப் பேர்வழிகள் உங்களுக்கு நீண்ட ஆயுளைத் தருகிறோம் வாருங்கள் என்பார்கள்.ஏமாந்துவிடவேண்டாம்.
முதலாம் உலகப் போருக்குப் பின் மத்திய ஐரோப்பாவில் 'இல்யுக்டேட்' எனும் அமைப்பு ஆரம்பிக்கப்பட்டு ஒரு விஷேசமானமருந்தை சப்ளை செய்தது. எல்லா மருந்துக் கடைகளிலும் விளம்பரம் வைக்கப்பட்டிருந்தது.
''மனிதர்களை விட யானைகள் நீண்ட காலம் உயிர் வாழ்கின்றன என்பது அனைவரும் அறிந்த விஷயம். 150வருடத்திற்கு மேல் வாழ்கின்றனவாம். இந்த நீண்ட ஆயுளுக்கு என்ன காரணம் என்ற இரகசியம் இதுவரை யாருக்கும்தெரியாமல் இருந்தது. இப்போது ஆய்வு செய்து நாங்கள் கண்டுபிடித்துள்ளோம். ஒருவித காட்டு மூலிகையையானைகள் சாப்பிடுகின்றன. அந்த மூலிகையைக் கண்டுபிடித்து அதிலிருந்து இந்த 'இல்யூக்டேட்' தயாரித்துள்ளோம்.இதை சாப்பிட்டால் நீண்ட காலம் வாழலாம்''

இந்த விளம்பரத்தில் மயங்கி மக்கள் போட்டி போட்டு வாங்கினர். செம வசூல். காப்பித்தூள், தேயிலைக்குப் பதிலாக மக்கள் இந்த'இல்யூக்டேட்' ஐ பயன்படுத்த தொடங்கினர். அறிவியலார் அந்த மருந்தை ஆய்வுக்குட்படுத்திய பொழுது அதிர்ச்சிக்குள்ளானார்கள். அந்த பாக்கெட்டுகளில் இருந்தது என்ன தெரியுமா? சொன்னால் நம்பமாட்டீர்கள். யானைச் சாணம். நாகரீகம் வாய்ந்த 20-ம் நூற்றாண்டில் மக்கள் யானைச் சாணத்திலிருந்து கசாயம் இறக்கிக் குடித்தது பெரிய வேடிக்கைதான். எனவே நீண்ட ஆயுள் என்பது இறைவனின் கையில். அதை அவனிடம் கேட்டுப் பெறுவதோடு உணவிலும் உணர்விலும் சில வழிமுறைகளைக் கையாண்டால் நீண்ட ஆயுள் பெறலாம்.
வானவர்களின் பெருநாட்கள் :
புவியில் இருக்கும் முஸ்லிம்கள் இரு தினங்களை பெருநாட்களாக எடுப்பதுபோன்று வானத்து மலக்குகளுக்கு இரண்டு இரவுகள் பெருநாட்களாக உள்ளன. வானத்து மலக்குகளுக்கான பெருநாள் பராஅத் இரவும், அதாவது ஷஃபான் பதினைந்தாவது இரவும், லைலத்துல் கத்றுடைய இரவுமாகும்.

புவியில் வாழும் முஸ்லிம்கள் நோன்புப் பெருநாளையும், ஹஜ்ஜுப் பெருநாளையும் கொண்டாடுகின்றனர். இதனால்தான் ஷஃபான் பதினைந்தாவது இரவை மலக்குகள் பெருநாளாகக் கொண்டாடுகின்றனர்.

அல்லாமா ஸுப்கி தனது தப்ஸீரில் இப்படிக் கூறுகின்றார்,

இந்த இரவில் செய்யும் அமல்கள் வருடம் முழுவதும் செய்யும் குற்றத்திற்கு பரிகாரமாக உள்ளது. ஜும்ஆ இரவு அந்த வாரத்தில் செய்யும் குற்றங்களுக்கு பரிகாரமாக இருக்கும். லைலத்துல் கத்று வருடம் முழுவதிற்குமான குற்றங்களுக்கு பரிகாரமாக இருக்கும்.

இந்த இரவுகளை வணக்கத்தால் உயிர்ப்பிப்பதனால் இப்பரிகாரங்களைப் பெற முடியும். இதனால் இந்த இரவுக்கு பரிகாரமளிக்கும் இரவு என்று ஒரு பெயர் உண்டு. உயிர்ப்பிக்கும் இரவு என்றும் கூறப்படுகின்றது.

“பெருநாள் இரவையும் பராஅத் இரவையும் வணக்கத்தால் உயிர்ப்பிப்பவரின் உள்ளம் மற்றவர்கள் இதயங்கள் மரணிக்கும் வேளையில் உயிர் பெற்றிருக்கும்“ என்ற ஹதீஸை மர்பூஆனதாக (அறிவிப்பாளர் பட்டியல் நபியவர்கள் வரை சேர்ந்ததாக) இமாம் முக்திரி அறிவித்துள்ளார்கள்.

பராஅத் இரவுக்கு ‘ஷபாஅத்திற்குரிய இரவு‘ என்றும் ஒரு பெயர் உண்டு. றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்கள் ஷஃபான் பதின்மூன்றாவது இரவு தனது உம்மத்திற்குரிய ஷபாஅத்தை அல்லாஹ்விடம் கேட்டார்கள். மூன்றில் ஒரு பகுதியினருக்குரிய ஷபாஅத்தை வழங்கினான். பதினான்காவது இரவும் அல்லாஹ்விடம் கேட்டார்கள். மூன்றில் இரண்டைக் கொடுத்தான். பதினைந்தாவது இரவும் கேட்டார்கள். எல்லோருக்கும் ஷபாஅத் செய்யும் பாக்கியத்தை வழங்கினான். ஆனால் ஒட்டகத்தைப் போன்று அல்லாஹ்வின் றஹ்மத்தை விட்டும் தூரமாக விரண்டு ஓடியவனைத் தவிர அதாவது குற்றம் புரிந்து தானாகவே அல்லாஹ்வின் அருளை விட்டும் தூரமானவனைத் தவிர,

 “பங்கீடு செய்வதும், விதியைத் தீர்மானிப்பதுமான இரவு“ என்றும் கூறப்படுகி்ன்றது.

ஹளரத் அதா இப்னு யஸார் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கூறுகின்றார்கள்,

ஷஃபான் பதினைந்தாவது இரவன்று மலக்குல் மௌத் இஸ்றாயீல் அலைஹிஸ்ஸலாமை அழைத்து ஷஃபானிலிருந்து எதிர்வரும் ஷஃபான் வரையிலான காலப்பகுதிக்குள்ள மரணிக்க இருப்பவர்களின் பெயர் பட்டியல் வழங்கப்படும்.

ஒருவர் மரம் நாட்டுவார், திருமணம் முடிப்பார், உயர் கட்டிடம் கட்டுவார். ஆனால், அவர் பெயர் மரணிப்பவரின் பட்டியலிலிருக்கும். மலக்குல் மௌத் ஆகிய இஸ்றாயீல் அலைஹிஸ்ஸலாம் அவரின் உயிரை எடுப்பதற்கு, அல்லாஹ்வின் கட்டளையை எதிர்பார்த்துக் கொண்டேயிருப்பார்கள்.

பராஅத் நோன்பு:
1. பொதுவாக ஷஃபானில் அதிகம் அதிகம் நபியவர்கள் நோன்பு வைத்துள்ளார்கள் என்பது நாம் ஆரம்பத்தில் ஆதாரங்களுடன் குறிப்பிட்டுள்ளோம். 
2, இது அய்யாமுல் பீழுடைய (13, 14, 15, ஆகிய வெளுப்பு) நாட்களில் ஒன்று. இந்த மூன்று தினங்கள் நோன்பு பிடிப்பது சுன்னத் ஆகும்.
صَوْمُ ثَلاَثَةِ أَيَّامٍ صَوْمُ الدَّهْرِ كُلِّهِ
“ஒவ்வொரு மாதமும் (இந்த) மூன்று தினங்கள் நோன்பு பிடிப்பது காலமெல்லாம் நோன்பு வைப்பதாகும்” நபிமொழி புகாரி: 1979. முஸ்லிம்: 1159.
3, பராஅத் நோன்பு. நாயகம் (ஸல்) அவர்கள் நவின்றார்கள்.,
إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلتها وصوموا يومها
“ஷ/பான் 15-வது இரவு வந்தால் நின்று வணங்குங்கள், அதன் பகலில் நோன்பு பிடியுங்கள்” (இப்னு மாஜா: 1388)
இப்படி, சாந்த நபி (ஸல்) அவர்கள் முழுமையாக அல்லது அதிகமாக நோன்பு வைக்கும் ஷ/பான் மாதத்தின் வெளுப்பு தினமான 15ல் வரும் பராஅத் நோன்பு பொதுவாகவும் குறிப்பாகவும் நோன்பு வைப்பது ஏற்றம் நிறைந்த நபி மொழியும் வழியும் ஆகும்.

பராஅத் இரவில் பாக்கியமிழக்கும் பாவிகள்:
“ஷ/பான் 15-வது இரவு அல்லாஹ் தனது படைப்புகளுக்கு பிரசன்னமாகி அவனது அனைத்து அடியார்களையும் மன்னிக்கிறான்” என்று அறிவித்த அண்ணலார் (ஸல்) அவர்கள் இதில் விதி விளக்கானவர்களையும் பட்டியலிடுகிறார்கள் அவர்கள் வருமாறு:-
1, இறை மறுப்பாளர்கள்
2, இறைவனுக்கு இணை வைப்பவர்கள்
3, விரோதம் கொண்டிருப்பவர்கள்
4, தற்கொலை செய்தவர்கள்
5, உறவுகளைத் துண்டித்தவர்கள்
6, தாய் தந்தையருக்கு மாறு செய்து நோவினை செய்தவர்கள்
7, குடிகாரர்கள்
8, கரண்டைக்குகீழே உடை உடுத்தி இருப்பவர்கள்
9, சதிகாரர்கள்
10, சூனியம் செயவபர்கள்
(குறிப்பு:
>> பராஅத் சம்மந்தமான அதிகமான அறிவிப்புகள் தனிப்பட்டமுறையில் ளயீ/பானதுதான். என்றாலும் அதிகமான பல அறிவிப்பாளர்கள் தொடர்களில் இது அறிவிக்கப்படுவதால் இது பலமானதாகிவிடும் என்று சட்ட மேதைகளான /புகஹாக்களும் ஹதீஸ் கலை வல்லுனர்களான முஹத்திஸீன்களும் கூறுகிறார்கள்.
>> பராஅத் சம்பந்தமான ஹதீஸ்கள் பத்து நபித்தோழர்கள் வழியாக அறிவிக்கப்பட்டுள்ளது
>> பலவீனமான ஹதீஸ்களைக் கொண்டு அமல்செய்வது கூடும் என்பது ஹதீஸ் கலை ஆய்வாளர்களின் கருத்து
>> இதல்லாமல் காலங்களில் சிறந்த காலத்தவர்களான சஹாபாக்கள், தாபியீன்கள், தபஉத் தாபியீன்கள் காலமுதல் இன்று வரை இந்த பராஅத் இரவு விசேஷம் அனுஷ்டிக்கப்பட்டு இந்த இரவில் அதிகமாக இபாதத் செய்து முக்கியத்துவப்படுத்துவதும் நடைமுறையில் இருந்து வருகிறது.
ஆகவே இதை பித்அத் என்று பிதற்றுவதோ, இது அடிப்படை அற்ற விசயம் என்று ஒதுக்கித்தள்ளுவதோ அர்த்தமற்றதாகும். எனவே சரியான விஷயம் என்னவென்றால் இது சிறப்பிற்குரிய ஒரு இரவாகும். இதற்கு தனிப்பட்ட ஒரு முக்கியத்துவம் இருக்கிறது. இதில் இரவு விழித்து இபாதத்தில் ஈடுபடுவது மிகப்பெரும் கூலியை பெற்றுத்தருவதாகும்.
அல்லாமா முல்லா அலி காரி அவர்கள் தனது மிர்க்காத் (மிஷ்காத் விரிவுரை) யில் கூறுகிறார்கள்,. லயீ/பான ஹதீஸைக் கொண்டு அமல் செய்வது கூடும். பராஅத் இரவில் விஷேசமாக இபாதத் செய்வதை இஸ்லாமிய அறிஞர்கள் எதிர்க்கவோ மறுக்கவோ இல்லை. 

இந்த புனிதத்தை மறுப்பவர்கள் யார்?

أَرَأَيْتَ الَّذِي يَنْهَى (9) عَبْدًا إِذَا صَلَّى (10)
“(நபியே!) ஒர் அடியார் தொழுதால் அதைத் தடை செய்கின்றவனை நீங்கள் பார்த்தீர்களா?” (அல் குர்ஆன்: 96:9,10)

நாம் புரிந்து கொள்ளலாம்  இவர்கள் யார் என்பதை 

எனவே கண்ணிய மிக்க ஜமாஅத்தார்களே பரக்கத்தான இத்தருணத்தில் அதிக அளவில் நன்மைகள் புரிய அல்லாஹ் நற்கிருபை செய்வானாக ஆமீன்

واخر دعواهم ان الحمد الله رب العالمين

 

Popular posts from this blog

ஹழ்ரத் அபூபக்கர் சித்திக் (ரலி)

எச்சரிக்கை! இந்த ஐந்து தீய குணங்கள் 30-10-2025

அற்புதங்கள் நிறைந்த ஆஷூரா தினம்...... 12-07-2024 04-07-2025