இறைச்சட்டம் மாற்ற எவருக்கும் உரிமை இல்லை


இறைச் சட்டங்களை மாற்ற..
எவருக்கும் உரிமையில்லை!!!! 

ஹிஜாப் விஷயத்தில் கர்நாடக உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு நாடு முழுவதும் மிகப்பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது; இஸ்லாமியர்களுடைய இறையியல் சட்டங்களில் மூக்கை நுழைத்து அதனை மாற்றியமைக்கும் போக்கையே தற்போது நீதிமன்றம் கையிலெடுத்துள்ளது. 

இந்தப் போக்கு இஸ்லாமியர்களுக்கு எதிரானது என்பதுடன் இந்திய இறையாண்மைக்கும்,
அரசியலமைப்பிற்கும்,ஜனநாயகத்திற்கும் எதிரானது என்பதை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும். 

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி அவரவர் அவரவருடைய மத நம்பிக்கைகளையும் கடைபிடிக்கலாம் என்றிருக்கும்போது முஸ்லிம்களுடைய ஷரீஅத் சட்டங்களை மாற்றியமைக்கும் உரிமை எவருக்குமில்லை;
அது குர்ஆன் பறைசாற்றும் செய்தியும் கூட. 

குர்ஆனிய சட்டங்களை மாற்றியமைக்க முயற்சிக்கும் எவராக இருந்தாலும் அதனையும் புறந்தள்ள வேண்டும்; புறந்தள்ளுவோம் என்பது இஸ்லாமியர்கள் உறுதியான நிலைப்பாடாக இருக்க வேண்டும். 

பின்வரும் இறை வசனத்தை கவனியுங்கள்; 

وَمَا كَانَ لِمُؤْمِنٍ وَّلَا مُؤْمِنَةٍ اِذَا قَضَى اللّٰهُ وَرَسُوْلُهٗۤ اَمْرًا اَنْ يَّكُوْنَ لَهُمُ الْخِيَرَةُ مِنْ اَمْرِهِمْ  وَمَنْ يَّعْصِ اللّٰهَ وَرَسُوْلَهٗ فَقَدْ ضَلَّ ضَلٰلًا مُّبِيْنًا‏ 

மேலும், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப்பற்றிக் கட்டளையிட்டு விட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ பெண்ணுக்கோ உரிமையில்லை; ஆகவே, அல்லாஹ்வுக்கும் அவனுடைய ரஸூலுக்கும் எவரேனும் மாறு செய்தால் நிச்சயமாக அவர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள்.
(அல்குர்ஆன் : 33:36) 

இந்த இறைவசனத்தை நினைவுபடுத்திக் கொண்டு இறைச் சட்டங்களுக்கு சவாலான தற்போதைய சூழலில் அவற்றை பாதுகாப்பதற்கான வழிமுறைகளை மீளாய்வு செய்வதுடன் இந்திய நீதிமன்றங்களைகூட இன்றைய ஃபாசிச அரசியல் சித்தாந்தம் முஸ்லிம்களுக்கு எதிராக மாற்றியுள்ளது என்று நினைக்குமளவிற்குள்ள நிலைகளை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்கின்ற அடிப்படையில் சில செய்திகளை எந்த ஜும்ஆவுடைய தருணத்தில் நாம் பகிர்ந்து கொள்ள கடமைப்பட்டுள்ளோம் 

 *சூழ்ச்சிகள் புதிதல்ல* 

பொய்யை திரும்பத் திரும்ப சொல்லும்போது அது உண்மையாக நம்பப்படுகிறது என்கின்ற செயல் திட்டத்தை இஸ்லாமிய விரோதிகள் இன்றைக்கு செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். 

அந்த வகையில்தான் முத்தலாக் தொடங்கி ஹிஜாப் வரைக்கும் பொய்யான பிரச்சாரங்களை கட்டவிழ்த்துவிட்டார்கள்;அத்துடன் இஸ்லாமிய ஷரீஅத்தின் மையங்களாகத் திகழும் மதரஸாக்கள் வரை அவர்களது ஆதிக்கத்தை செலுத்தினார்கள் . 

இப்படி இஸ்லாமிய ஷரீஅத் சட்டங்களுக்கு எதிரான சூழல் என்பது இஸ்லாத்திற்கு ஒன்றும் புதிதல்ல;கடந்த காலங்களில் இது போன்ற எண்ணற்ற சூழ்ச்சிகளை இஸ்லாமிய வரலாறு கண்டுள்ளது 

நபி(ஸல்)அவர்களுடைய மறைவுக்கு பின்னால் அபூபக்கர்(ரலி)அவர்களுடைய ஆட்சி காலத்தில் கடமையாக்கப்பட்ட ஜகாத்திற்கு எதிராக  பொய் பிரச்சாரங்கள் நடைபெற்றன. 

அலி(ரலி)அவர்களது கிலாஃபத்தில் ஷியாக்கள் மற்றும் கவாரிஜ்களின் குழப்பங்கள் நிறைந்த காணப்பட்டன. 

இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல்(ரஹ்) அவர்களது காலகட்டத்தில் குர்ஆன் படைக்கப்பட்டது என்ற பொய்ப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது 

இந்த எல்லா சூழ்ச்சிகளையும் அர்ப்பணிப்பின் மூலம் முறியடித்து எதிரிகளை தோல்வியடையச் செய்தவர்களே நமது முன்னோர்கள். 

முத்தலாக்,ஹிஜாப் போன்ற இறைச் சட்டங்களுக்கு எதிராக நடத்தப்படும் சூழ்ச்சிகளும் இதன் தொடர்ச்சியாகும்; நமது முன்னோர்களைப் போல இவற்றுக்கு எதிராக உறுதியாக நின்று களமாட வேண்டும். 

நபி(ஸல்)கூறினார்கள்; 

إنَّ اللَّه تَعَالَى فَرَضَ فَرائِضَ فَلاَ تُضَيِّعُوهَا، وحدَّ حُدُودًا فَلا تَعْتَدُوهَا، وحَرَّم أشْياءَ فَلا تَنْتَهِكُوها، 

அல்லாஹ் சில காரியங்களை கடமையாக்கியுள்ளான்,அதனை வீணாக்கி விடாதீர்கள்;சில காரியங்களை தடுத்துள்ளான்,அவற்றின் பக்கம் செல்லாதீர்;மேலும் அல்லாஹ் சில வரம்புகளை வைத்துள்ளான்,அவற்றை மீறாதீர்கள். 

இந்த நபிமொழிக்கேற்ப இறை வரம்புகளை மீறும் உரிமை முஸ்லிம்கள் உட்பட எவருக்கும் இல்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். 

 இறைச் சட்டங்களை பாதுகாக்க இன்றைய முஸ்லிம்கள் செய்ய வேண்டியதென்ன? 

 01.ஷரீஅத்தை முழுமையாக விளங்குதல் 

இஸ்லாமிய ஷரீஅத்தின் அடித்தளமும் அதற்கான கொள்கை பிரகடனமும் லாஇலாஹ இல்லல்லாஹ் என்ற கலிமாதான். 

அதனை மொழிந்தால் மட்டும் போதாது; அல்லாஹ்வைத்தவிர வேறு இறைவன் இல்லை; அவனது சட்டங்கள் மட்டுமே என்றைக்கும் மனித வாழ்வினை நேர்வழிப்படுத்தும் என்பதை அழுத்தம் திருத்தமாக விளங்கியிருக்க வேண்டும். 

இந்த புரிதலை பெற்றவர்களே லாயிலாஹ இல்லல்லாஹ் என்ற கலிமாவிற்கு சாட்சி பகருபவர்கள். 

பின்வரும் இறைவசனம் கூறுகிறது; 

شَهِدَ اللّٰهُ اَنَّهٗ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَۙ وَالْمَلٰٓٮِٕكَةُ وَاُولُوا الْعِلْمِ قَآٮِٕمًا  بِالْقِسْطِ‌ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ الْعَزِيْزُ الْحَكِيْمُ‏
அல்லாஹ் நீதியை நிலைநாட்டக்கூடியவனாக உள்ள நிலையில் அவனைத்தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை என்று சாட்சி கூறுகிறான். மேலும் மலக்குகளும் அறிவுடையோரும் (இவ்வாறே சாட்சி கூறுகின்றனர்.) அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை;  அவன் மிகைத்தவன், ஞானமிக்கவன்.
(அல்குர்ஆன் : 3:18) 

எனவே நாம் சத்திய  இறை விசுவாசிகளாக வாழ வழங்கப்பட்டுள்ள இஸ்லாமிய சட்டத்தை தெளிவாக விளங்க வேண்டும்;விளங்குவது மட்டுமல்ல அவற்றை அப்படியே நடைமுறைப்படுத்துவதற்குJi முன்வரவேண்டும். 

திருமறை கூறுகிறது; 

يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اَطِيْـعُوا اللّٰهَ وَاَطِيْـعُوا الرَّسُوْلَ وَاُولِى الْاَمْرِ مِنْكُمْ‌ فَاِنْ تَنَازَعْتُمْ فِىْ شَىْءٍ فَرُدُّوْهُ اِلَى اللّٰهِ وَالرَّسُوْلِ اِنْ كُنْـتُمْ تُؤْمِنُوْنَ بِاللّٰهِ وَالْيَـوْمِ الْاٰخِرِ‌  ذٰ لِكَ خَيْرٌ وَّاَحْسَنُ تَاْوِيْلًا‏
நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு கீழ்படியுங்கள்; இன்னும் (அல்லாஹ்வின்) தூதருக்கும், உங்களில் (நேர்மையாக) அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ்படியுங்கள்; உங்களில் ஏதாவது ஒரு விஷயத்தில் பிணக்கு ஏற்படுமானால் - மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புபவர்களாக இருப்பின் - அதை அல்லாஹ்விடமும், (அவன்) தூதரிடமும் ஒப்படைத்துவிடுங்கள் - இதுதான் (உங்களுக்கு) மிகவும் சிறப்பான, அழகான முடிவாக இருக்கும்.
(அல்குர்ஆன் : 4:59) 

 02. ஷரீஅத்தை பாதுகாக்க அர்ப்பணமாகுதல் 

1400 ஆண்டுகளை கடந்து இன்று வரை இறைச் சட்டங்கள் மற்றும் ஷரீஅத் சட்டங்கள் சற்றும் மாற்றப்படாமல் முழுமையாக பாதுகாக்கப்பட்டதற்கு முன்னோர்களின் அற்பணம் முக்கிய பங்கு வகித்தது. 

மனிதர்களுக்கான மகத்தான கண்ணியங்கள் மாசுபடியாத இஸ்லாத்தில்தான் உள்ளது என்பதை மக்கள் மத்தியில் உரக்கச் சொல்லி இறுதிவரை உறுதியாக நின்றவர்கள் உத்தம நபி(ஸல்)அவர்கள். 

அதற்காக அனேக கஷ்டங்களை அனுபவித்திருக்கிறார்கள்; 

هل اتى عليك يوم كان اشد من يوم احد 

அல்லாஹ்வின் தூதரே!உஹதுடைய நாளைவிட கடினமான நாள் உங்களுக்கு வந்திருக்கிறதா என்ற கேள்விக்கு நபியவர்கள்.. 

ஆம் தாயிஃபுடைய பயணம் அதைவிட கடினமாக இருந்தது என்றார்கள். 

நபி(ஸல்)அவர்கள் மட்டுமல்ல;அவர்களது வளர்ப்பினால் வார்த்தெடுக்கப்பட்ட உத்தம நபித்தோழர்கள் வரை இஸ்லாமிய ஷரீஅத்தை தங்களது வாழ்வில் நிலை நிறுத்துவதற்கும்,அதனை பாதுகாப்பதற்கும் அற்பணிப்புகளையும், தியாகங்களையும் மேற்கொண்டார்கள். 

அந்த அர்ப்பணிப்புகள் வெறும் 313 ஸஹாபாக்கள் என்ற நிலையில் துவங்கி நபி(ஸல்)அவர்கள் இறுதிப்பேருரை மேற்கொள்ளும்போது ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பெரும் சமூகத்தை உருவாக்கியது. 

இதுபோன்ற அர்ப்பணிப்புகள் இன்றைய இந்திய தேசத்தில் இஸ்லாமியர்களுக்கு தேவை என்ற நிலை ஏற்பட்டுள்ளது; காரணம் இஸ்லாம் என்பது பசுமை நிறைந்த தோட்டமாகும்;அதனை பாழாக்கிட பன்னெடுங்காலமாக விரோதிகள் வரிசைகட்டி வரலாற்றில் நின்று கொண்டேதான் இருந்துள்ளனர்; அதன் வரிசையில் இன்றைய இந்திய தேசத்தில் இந்துத்துவ வெறி கொண்ட ஃபாசிசவாதிகள் அணிவகுத்து நிற்கிறார்கள். 

அவர்களை எதிர்கொண்டு ஏக இறைவனின் சட்டங்களை பாதுகாத்திட நாம் தயாராக வேண்டும். 

 *நிறைவாக..* 

இந்திய முஸ்லிம்கள் தங்களது ஷரீஅத் சட்டங்களையும்இறை கட்டளைகளையும் பாதுகாத்திட இரண்டு கோணங்களில் கடமைப்பட்டவர்கள். 

ஒன்று; இஸ்லாம் எனும் கண்ணியத்தை யாருக்காகவும் விட்டுக் கொடுக்ககூடாது என்ற உறுதியுடன் செயலாற்ற வேண்டும். 

இரண்டாவது; இந்திய அரசியலமைப்பு முஸ்லிம்களுக்கு வழங்கியுள்ள உரிமைதான் முஸ்லிம் தனியார் சட்டம் என்பது;அந்த உரிமையை பறித்திட பகைவர்கள் முன்வரும்போது முழுமூச்சுடன் அந்த உரிமைகளை வென்றெடுக்க பாடுபடவேண்டும்.
இவை இரண்டும் இன்றைய முஸ்லிம்கள் முன்னிறுத்த வேண்டிய முக்கிய விஷயங்களாகும்;இப்படிப்பட்ட துடிப்பான உணர்வுகளுடன் முஸ்லிம்கள் செயலாற்றும்போது எத்தனை பெரிய விரோத சக்திகள் அணிவகுத்து நின்றாலும் அவற்றை தவிடுபொடியாக்கும் திறன் பெற்றவர்களே முஸ்லிம்கள் என்பதை சமகால முஸ்லிம்கள் என்றைக்கும் மறந்திடக்கூடாது.

Popular posts from this blog

ஹழ்ரத் அபூபக்கர் சித்திக் (ரலி)

எச்சரிக்கை! இந்த ஐந்து தீய குணங்கள் 30-10-2025

அற்புதங்கள் நிறைந்த ஆஷூரா தினம்...... 12-07-2024 04-07-2025