ரமலானில் கடைபிடிக்க வேண்டிய 10 வழிமுறைகள்.........
🗒️ இந்த வார தலைப்பு-:- புனித ரமளானில் நாம் செய்ய வேண்டிய பத்து அமல்கள்..!
இஸ்லாத்தின் 5 கடமைகளான கலிமா, தொழுகை, நோன்பு, ஜக்காத் ஹஜ், ஆகியவற்றில் தொழுகைதான் மிகவும் முக்கிய கடமையாக திகழ்கிறது. இதற்கு அடுத்த கடமையாக நோன்பு திகழ்கிறது.
ரமளான் மாதம் என்பது இஸ்லாமிய சமூகத்திற்கு இறைவனால் வழங்கப்பட்ட "வசந்த காலம்" என்றே கூறலாம். அந்த அளவிற்கு ரமளானின் மாதம் மகத்துவம் பொருந்திய மாதமாக திகழ்கிறது.
நன்மைகள் நிரம்பி வழிகின்ற புனிதமான ரமளானை தற்போது நாம் அடைந்திருப்பது "நிஃமத்துன் அழீமத்துன்" மிகப்பெரிய அருட்கொடையாகும். எனவே இந்த மாதத்தில் அல்லாஹ்விற்கு மாறு செய்வதிலிருந்து மனந்திருந்தி, அவனை வழிப்படுதின்பால் நாம் திரும்புவதோடு, அல்லாஹ்வை அதிகம் நினைவு கூறுவதின் பக்கம் நாம் முன்னோக்குவது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் அவசியமானதாகும்.
அருள்மறை குர்ஆனில் அல்லாஹ் கூறும்போது,
وَرَبُّكَ يَخْلُقُ مَا يَشَآءُ وَيَخْتَارُ
"உமது இறைவன் விரும்பியதை படைக்கிறான். மேலும் (சிறப்பிற்குரியதை) தேர்ந்தெடுக்கிறான்" என்று என்று பதிவு செய்கின்றான்.
அல்குர்ஆன்-:- 28:68.
இந்த வசனத்தின் கூற்றின்படி மலக்குகளில் ஹள்ரத் ஜிப்ரயீல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களையும், இறைத்தூதர்களில் ஹள்ரத் முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களையும், மனிதசமூகத்தில் மிகச்சிறந்த மனிதராய் ஹள்ரத் அபூபக்கர் சித்தீக் (ரளியல்லாஹு அன்ஹு) அவர்களையும், இறைவனால் அருளப்பட்ட வேதங்களில் கியாமத் நாள்வரை வழிகாட்டும் அற்புதமான வேதமாக அல்குர்ஆனையும், நாட்களில் ஜும்ஆ நாளான வெள்ளிக்கிழமையையும், பகல்களில் அரஃபாவுடைய பகலையும், இரவுகளில் லைலத்துல் கத்ர் இரவையும், மாதங்களில் புனித ரமளான் மாதத்தையும் சிறப்பாக்கி இருக்கின்றான்.
ரமளான் மாதத்தின் சிறப்பைப் பற்றி திருமறையில் சிறப்பித்துக் கூறும்போது,
شَهْرُ رَمَضَانَ الَّذِىْٓ اُنْزِلَ فِيْهِ الْقُرْاٰنُ هُدًى لِّلنَّاسِ وَ بَيِّنٰتٍ مِّنَ الْهُدٰى وَالْفُرْقَانِ فَمَنْ شَهِدَ مِنْكُمُ الشَّهْرَ فَلْيَـصُمْهُ.
ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும், (நன்மை - தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது. ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்" என்று கூறுகின்றான்.
அல்குர்ஆன்-:- 2:185.
அருள்மறை குர்ஆனில் 12 மாதங்களில் "ஷஹ்ரு ரமளான்" என்று ரமளான் மாதத்தை மட்டும் குறிப்பாக கூறி, அந்த மாதத்தின் சிறப்பையும், மத்துவத்தையும், நமக்கு
உணர்த்திக் காட்டுகின்றான்.
நன்மைகளை வாரிவாரி வழங்கும் வள்ளலாய் வந்திருக்கின்ற புனித ரமளான் மாதத்தின் பகல், இரவின் அத்தனை தருணங்களும் நமக்கு அல்லாஹ்வினால் கொடுக்கப்பட்ட அருள்மயமான வரப்பிரசாதமாகும். அல்லாஹ் நமக்கு வழங்கிய முப்பது தினங்களும் Blank Cheque போன்றதாகும். அதில் நாம் விரும்பிய நன்மைகளையும், வணக்கங்களையும் எவ்வளவு வேண்டுமானாலும் நிரப்பிக்கொண்டு, அதன் நற்கூலிகளை இம்மையிலும் மறுமையிலும் தாராளமானதாக பெற்றுக்கொள்ளலாம்.
புண்ணியங்கள் பூத்துக்குலுங்கும் புனித ரமளானில் செய்யப்படும் ஒவ்வொரு அமல்களுக்கும் வழங்கப்படும் நற்கூலியைப் பற்றி பெருமானார் (ﷺ) அவர்கள் கூறிய ஒரு தகவலை நபித்தோழர் அபூஹுரைரா (ரளியல்லாஹு அன்ஹு) கூறுகின்றார்கள்.
كُلُّ عَمَلِ ابْنِ آدَمَ يُضاعَفُ الحَسَنَةُ عَشْرُ أَمْثالِها إلى سَبْعمِئَة ضِعْفٍ قالَ اللَّهُ عَزَّ وَجَلَّ إلّا الصَّوْمَ فإنَّه لي وَأَنا أَجْزِي به يَدَعُ شَهْوَتَهُ وَطَعامَهُ مِن أَجْلِي لِلصّائِمِ فَرْحَتانِ فَرْحَةٌ عِنْدَ فِطْرِهِ وَفَرْحَةٌ عِنْدَ لِقاءِ رَبِّهِ وَلَخُلُوفُ فيه أَطْيَبُ عِنْدَ اللهِ مِن رِيحِ المِسْكِ. رواه صحيح مسلم ١١٥١.
ஆதமின் மகனுடைய (மனிதனுடைய) ஒவ்வொரு நற்செயலுக்கும் ஒன்றுக்குப் பத்து முதல் எழுநூறு மடங்குகள்வரை நன்மைகள் வழங்கப்படுகின்றன; அல்லாஹ் கூறுகின்றான்: நோன்பைத் தவிர. ஏனெனில், நோன்பு எனக்கு உரியதாகும். அதற்கு நானே நற்பலன் வழங்குகிறேன். அவன் எனக்காகவே தனது உணர்வையும் உணவையும் கைவிடுகிறான் (என அல்லாஹ் கூறுகின்றான்). நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. அவர் நோன்பைத் துறக்கும்போது ஒரு மகிழ்ச்சியும், தம் இறைவனைச் சந்திக்கும் போது மற்றொரு மகிழ்ச்சியும் (அடைகிறார்). நோன்பாளியின் வாயிலிருந்து வரும் வாடை, அல்லாஹ்விடம் கஸ்தூரியின் மணத்தைவிட நறுமணமிக்கதாகும்.
நூல்-:- ஸஹீஹ் முஸ்லிம் 1151.
கணக்கிடலங்கா நன்மைகளை வாரிவழங்கும் புனித ரமளான் மாதத்தில், எத்தனையோ நல்அமல்கள் இருப்பினும், தனித்துவமான பத்து விதமான அமல்களை நாளும் பேணுதலோடு செய்வது அவசியம்.
முதலாவது காரியம் الصيام நோன்பு நோற்றல்.
இந்த அமல் ரமளானின் பகல் பொழுதில் நிகழுகிறது. இது உலகில் வாழும் கோடிக்கணக்கான முஸ்லிம்களின் மீதும் ஃபர்ழு அய்ன் கட்டாய கடமையாகும்.
நோன்பின் நோக்கம் தான் என்ன?
எதற்காக நோன்பு நோற்க வேண்டும்? இக்கேள்விக்குப் பலர் பலவிதமாக விடையளிக்கின்றனர்.
பசியின் கொடுமையைப் பணம் படைத்தவர்கள் உணர வேண்டும் என்பதற்காகத் தான் நோன்பு கடமையாக்கப்பட்டது என்பர் சிலர்.
பசியை உணர்வது தான் காரணம் என்று அல்லாஹ்வும் கூறவில்லை; அவனது தூதரும் கூறவில்லை. இது இவர்களின் கற்பனையே தவிர வேறில்லை.
பசியை உணர்வது தான் காரணம் என்றால் செல்வந்தர்களுக்கு மட்டும் நோன்பு கடமையாக்கப்பட்டிருக்க வேண்டும். அன்றாடம் பசியிலேயே உழல்பவனுக்கு நோன்பு கடமையில்லை என்று அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும்.
மேலும் பணக்காரர்கள் கூட நோன்பு நோற்காமலேயே பசியின் கொடுமையை உணர்ந்து தான் இருக்கின்றனர். பசியை உணர்வதால் தான் சாப்பிடுகின்றனர். நெருப்பு சுடும் என்பதை எப்படிச் சர்வ சாதாரணமாக உணர்கிறோமோ அது போலவே மனிதர்கள் மட்டுமின்றி எல்லா உயிரினங்களும் பசியை உணர்ந்திருக்கின்றன. எனவே பசியை உணர்வதற்காக நோன்பு கடமையாக்கப்பட்டதாகக் கூறுவது முற்றிலும் தவறாகும்.
உடல் ஆரோக்கியம் பேணப்படுவது தான் நோன்பின் நோக்கம் என்று வேறு சிலர் கூறுகின்றனர்.
நோன்பு நோற்பதால் உடல் ஆரோக்கியம் பேணப்படும் என்று அல்லாஹ்வும் கூறவில்லை; அவனது தூதரும் கூறவில்லை. உடல் ஆரோக்கியம் இதனால் ஏற்படும் என்பது காரணம் என்றால் நோயாளிகள் வேறு நாட்களில் நோற்றுக் கொள்ளுங்கள் என்று இறைவன் கூறுவானா?
நோயாளிகளுக்குத் தானே ஆரோக்கியம் அவசியத் தேவை! நோன்பே ஒரு மருந்து என்றிருக்குமானால் நோயாளிகளுக்கு நோன்பிலிருந்து விலக்கு அளிப்பதில் எந்த நியாயமும் இல்லை. எனவே நோன்பு நோற்பதற்கு இதைக் காரணமாகக் கூறுவதும் தவறாகும்.
சில மனிதர்களுக்கு இதனால் ஆரோக்கியம் ஏற்படலாம். அல்சர் போன்ற நோய் ஏற்பட்டவர்களுக்கு இதனால் நோய் அதிகரிக்கவும் செய்யலாம். எனவே இறை திருப்தியை நாடி நிறைவேற்றப்படும் ஒரு வணக்கத்திற்கு இது போன்ற அற்பமான காரணங்களைக் கூறி நோன்பைப் பாழாக்கி விடக் கூடாது.
நோன்பு கடமையாக்கப்பட்டதற்குரிய காரணத்தை அல்லாஹ்வே மிகத் தெளிவாகக் கூறி விட்டான். அந்தக் காரணம் தவிர வேறு எந்தக் காரணத்துக்காகவும் நோன்பு கடமையாக்கப்படவில்லை.
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِن قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ
ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம்.
(அல்குர்ஆன் : 2:183)
மேலே நாம் எடுத்துக் காட்டியுள்ள வசனத்தில், நீங்கள் இறைவனை அஞ்சுவதற்காக நோன்பு கடமையாக்கப்பட்டது என்று இறைவன் குறிப்பிடுகிறான்.
நோன்பு நோற்பதால் இறையச்சம் ஏற்படும். இறையச்சம் ஏற்பட வேண்டும் என்பது தான் அல்லாஹ் கூறுகின்ற காரணம்.
நமக்குச் சொந்தமான உணவைப் பகல் நேரத்தில் அல்லாஹ் கட்டளையிட்டதால் தவிர்த்து விடுகிறோம். நமது வீட்டில் நாம் தனியாக இருக்கும் போது நமக்குப் பசி ஏற்படுகிறது. வீட்டில் உணவு இருக்கிறது. நாம் சாப்பிட்டால் அது யாருக்கும் தெரியப் போவதில்லை. ஆனாலும் நாம் சாப்பிடுவதில்லை. நாம் சாப்பிடக் கூடாது என்று அல்லாஹ் கட்டளையிட்டதால் நாம் சாப்பிடுவதில்லை. யாரும் பார்க்காவிட்டாலும் நாம் சாப்பிடுவது அல்லாஹ்வுக்குத் தெரியும்; அவன் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற எண்ணம் நமது உள்ளத்தில் ஆழமாகப் பதிந்திருப்பதால் தான் நாம் சாப்பிடுவதில்லை.
யாரும் பார்க்காவிட்டாலும் இறைவன் பார்க்கிறான் என்பதற்காக நமக்குச் சொந்தமான உணவை ஒதுக்கும் நாம், ரமளான் அல்லாத மாதங்களிலும் அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்று நம்ப வேண்டும்.
ஹராமான காரியங்களில் ஈடுபட நினைக்கும் போது, ஹலாலான பொருட்களையே இறைவனுக்குப் பயந்து நாம் ஒதுக்கி வந்ததை நினைத்துப் பார்க்க வேண்டும்.
இந்த ஆன்மீகப் பயிற்சி தான் நோன்பு கடமையாக்கப்பட்டதற்கான ஒரே காரணம். இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் விளக்கியுள்ளார்கள்.
யார் பொய்யான பேச்சுக்களையும், பொய்யான நடவடிக்கைகளையும் விடவில்லையோ அவர் பசித்திருப்பதோ, தாகித்திருப்பதோ அல்லாஹ்வுக்குத் தேவையில்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 1903, 6057
பசித்திருப்பது நோன்பின் நோற்கமல்ல என்பதும் இங்கே விளக்கப்படுகிறது. நோன்பின் மூலம் எடுக்கப்படும் பயிற்சி நம்மிடம் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதும் இங்கே விளக்கப்படுகிறது.
நோன்பின் மூலம் பெற்ற பயிற்சி, பொய் சொல்வதிலிருந்தும் தீய நடவடிக்கையிலிருந்தும் தடுக்கவில்லை என்றால் அது நோன்பு அல்ல என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எச்சரிப்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
நாம் நோன்பு நோற்றுள்ள நிலையில் நம்முடன் வீண் வம்புக்கு யாரேனும் வந்தால் கூட சரிக்குச் சரியாக அவர்களுடன் வம்புக்குப் போகக் கூடாது எனவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்கு வலியுறுத்துகிறார்கள்.
உங்களில் ஒருவர் நோன்பு நோற்றிருக்கும் போது யாரேனும் சண்டைக்கு வந்தால், யாரேனும் திட்டினால் நான் நோன்பாளி என்று கூறி விடுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: " الصِّيَامُ جُنَّةٌ فَلاَ يَرْفُثْ وَلاَ يَجْهَلْ، وَإِنِ امْرُؤٌ قَاتَلَهُ أَوْ شَاتَمَهُ فَلْيَقُلْ: إِنِّي صَائِمٌ مَرَّتَيْنِ "
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல்: புகாரி
நோன்பு என்பது ஒரு ஆன்மீகப் பயிற்சி என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம். இது தான் நோன்பின் நோக்கம் என்று உணர்ந்தால் தான் அந்த நோக்கத்தை நாம் அடைய இயலும்.
முப்பது நாட்கள் நோன்பு நோற்றுப் பயிற்சி எடுத்தவர்கள் நோன்பை நிறைவு செய்தவுடன், சினிமாக் கொட்டகைகளில் வரிசையில் நிற்கிறார்கள் என்றால் இவர்கள் பட்டினி கிடந்தார்கள் என்று கூறலாமே தவிர நோன்பு நோற்றார்கள் என்று கூற முடியாது.
இரண்டாவது காரியம் திருக்குர்ஆனை ரமளானில் அதிகமாய் ஓதுவது.
அகில உலகத்தையும் படைத்து பரிபாலித்து கொண்டிருக்கும் இறைவனால் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒவ்வொரு நபிமார்கள் மூலமாக ஒவ்வொரு வேதங்கள் அருளப்பட்டன. ஆனால் அந்த சமுகத்தினர் அதை சரிவர பயன்படுத்தாமல் அதை ஒரு பொருட்டாக கூட மதிக்காமல் விட்டுவிட்டார்கள். மேலும் அதில் சில வேதங்கள் காலப் போக்கில் அழிந்தும் விட்டன. சில வேதங்கள் மாற்றப்பட்டு விட்டன. இறுதியாக, இறுதி நபியான கண்மணி நாயகம் ரஸூல் (ﷺ) அவர்கள் மூலம் முஸ்லிம் சமூகத்திற்கு மட்டுமல்லாது, அனைத்து மத மக்களுக்கும் ஏற்ற முறையில் ஒரு வேதத்தை இறக்கியருளினான். அதுவே இறுதி வேதமான அல்குர்ஆன் ஆகும்.
பொருளறியாமல் ஓதினாலும், ஆன்மீக ரீதியாக நன்மையை பெற்றுத்தரும் ஒரே வேதம் அல்குர்ஆன் மட்டும்தான். திருக்குர்ஆனை ஓதுவதில் எண்ணிலடங்கா நன்மைகள் கிடைக்கின்றன. எனவே பொருட்செலவோ, கடின உடலுழைப்போ இன்றி குறைந்த நேரத்தில் நிறைந்த நன்மையைப் பெற்றுத் தரும் திருமறையை அதிகமாக ஓதிடவேண்டும்.
குறிப்பாக ரமளான் மாதத்தில் அதிமாக ஓதவேண்டும். *"நபி (ﷺ) அவர்களுக்கு ரமளானில் ஒவ்வொரு வருடமும் ஒரு தடவை குர்ஆனை ஓதிக் காண்பிக்கப்பட்டது. அவர்கள் மரணிக்கும் வருடம் இரண்டு தடவை ஓதிக் காண்பிக்கப்பட்டது"* என்ற புஹாரீயின் ரிவாயத்தின் அடிப்படையில், ரமளான் மாதத்தில் ஒவ்வொரு முஸ்லிமும் ஒரு தடவையாவது குர்ஆனை முழுமையாக ஓதி முடிப்பது நபி (ﷺ) அவர்களின் அழகிய வழிகாட்டுதலில் ஒன்றாகும்.
மேலும் நபி (ﷺ) அவர்கள் அறிவிக்கக்கூடிய நபிமொழியில்,
اَلصِّيَامُ وَالْقُرْآنُ يَشْفَعَانِ لِلْعَبْدِ يَوْمَ الْقِيَامَةِ يَقُولُ الصِّيَامُ أَيْ رَبِّ مَنَعْتُهُ الطَّعَامَ وَالشَّهْوَةَ فَشَفِّعْنِي فِيهِ وَيَقُولُ الْقُرْآنُ مَنَعْتُهُ النَّوْمَ بِاللَّيْلِ فَشَفِّعْنِي فِيهِ قَالَ فَيُشَفَّعَانِ لَهُ.
நோன்பும் குர்ஆனும் கியாமத் நாளில் அடியானுக்காகப் பரிந்து பேசும். இறைவனே! உணவு, மன இச்சைகள் போன்றவற்றை விட்டும் நான் இவரைத் தடுத்திருந்தேன். இவருடைய காரியத்தில் என் பரிந்துரையை ஏற்றுக்கொள்வாயாக!' என்று நோன்பு கூறும், இரவில் தூங்குவதை விட்டும் இவரை நான் தடுத்திருந்தேன். (இவர் இரவில் நஃபில் தொழுகைகளில் என்னை ஓதிவந்தார்) இவருடைய காரியத்தில் என் பரிந்துரையை ஏற்றுக் கொள்வாயாக!' என்று குர்ஆன் சொல்லும். இவ்வாறே அவ்விரண்டும் இவருக்காகப் பரிந்து பேசும்'' என்று நபி (ﷺ) அவர்கள் கூறினார்கள்.
நூல்-:- முஸ்னத் அஹ்மது 6626.
மறுமையில் நமக்காக பரிந்துரைக்கக்கூடிய ரமளான் மாதத்தில், நமக்காக ஷஃபாஅத் செய்யும் குர்ஆனை அதிகமதிகம் ஓதிவருவோம்.
இந்த அமலில் நமது முன்னோர்கள் அதிகம் கவனம் செலுத்தியுள்ளார்கள். இமாம் ஷாஃபிஈ (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்கள் ரமளானின் பகலில் ஒரு முழு குர்ஆனும், இரவில் ஒரு முழு குர்ஆனும் ஆக மொத்தம் குர்ஆனை ரமளானில் மட்டும் 60 முறை கத்தம் செய்து முடிப்பார்கள்.
இமாம் மாலிக் (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்கள் ரமளானிலே குர்ஆன் ஓதுவதைத்தவிர வேறு எந்த ஃபிக்ஹு, ஹதீஸ் ஆய்வுகளில் ஈடுபடமாட்டார்கள். ஹள்ரத் கதாதா (ரளியல்லாஹு அன்ஹு) அவர்கள் ரமளானில் மூன்று நாட்களுக்கு ஒரு முறை ஒரு கத்தமும், ரமளான் இறுதி பத்தில் ஒவ்வொரு நாளும் ஒரு கத்தமும் செய்து விடுவார்கள்.
இந்த நல்லோர்களும், நாதாக்களும், ரமளானில் குர்ஆன் ஓதுவதில் முழுஇன்பம் கண்டார்கள். இன்றைய நமது நிலை என்னவென்பதை நாம் எண்ணிப் பார்க்கவேண்டும். குறைந்த பட்சம் ரமளான் மாதம் முப்பது நாட்களிலாவது ஒரு குர்ஆனை ஓதி கத்தம் செய்யவேண்டும்.
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم اقْرَإِ الْقُرْآنَ فِي شَهْرٍ قُلْتُ إِنِّي أَجِدُ قُوَّةً حَتَّى قَالَ فَاقْرَأْهُ فِي سَبْعٍ وَلاَ تَزِدْ عَلَى ذَلِكَ.
அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவிக்கிறார்கள். என்னிடம் இறைத்தூதர் (ﷺ) அவர்கள் , 'ஒவ்வொரு மாதமும் (ஒருமுறை குர்ஆனை) ஓதி நிறைவுசெய்!' என்று கூறினார்கள். அப்போது நான், '(அதை விடவும் குறைந்த நாள்களில் குர்ஆனை முழுமையாக ஓதி முடிக்கும்) சக்தி எனக்கு உள்ளது' என்று கூறினேன். 'அப்படியானால், ஏழு நாள்களில் (ஒருமுறை) ஓதி நிறைவு செய்; அதைவிட (ஓதுவதை) அதிகமாக்கிவிடாதே' என்று கூறினார்கள்.
நூல்-:- ஸஹீஹுல் புஹாரீ 5054.
இந்த கட்டளை தனிப்பட்ட முறையில் அந்த நபித்தோழரைக் கவனித்து சொல்லப்பட்டதாகும். நாமும் இந்த ஹதீஸின் பிரகாரம் ஒரு குர்ஆனை ஏழு நாட்களிலோ, அல்லது ஒரு மாதத்திலோ ஓதிமுடிக்கும் பழக்கத்தை உண்டாக்க முயற்சிக்கவேண்டும். அதற்கேற்ப குர்ஆனை ஏழு நாட்களில் முடிப்பதற்கு தோதாக ஏழு மன்ஸில்களாகவும், முப்பது நாட்களில் ஓதி முடிப்பதற்கு தோதாக முப்பது ஜுஸ்வுக்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.
மூன்றாவது காரியம் ரமளானில் தன்னால் இயன்றளவு தானதர்மங்களை செய்திட வேண்டும்!
ரமளான் மாதங்களில் கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களும், சஹாபாக்களும் சதகா எனும் தானதர்மங்கள் செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வந்துள்ளார்கள்.
குறிப்பாக நபிகள் நாயகம் (ﷺ) அவர்கள் ரமளான் மாதங்களில் மாபெரும் கொடை வள்ளலாக திகழ்ந்துள்ளார்கள்.
كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَجْوَدَ النَّاسِ وَكَانَ أَجْوَدُ مَا يَكُونُ فِي رَمَضَانَ حِينَ يَلْقَاهُ جِبْرِيلُ وَكَانَ يَلْقَاهُ فِي كُلِّ لَيْلَةٍ مِنْ رَمَضَانَ فَيُدَارِسُهُ الْقُرْآنَ فَلَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَجْوَدُ بِالْخَيْرِ مِنَ الرِّيحِ الْمُرْسَلَةِ.
நபி (ﷺ) அவர்கள் மனிதர்களில் மிகப் பெரும் கொடையாளியாகத் திகழ்ந்தார்கள். (சாதாரண நாள்களை விட) ஜிப்ரீல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் நபி (ﷺ) அவர்களை ரமளான் மாதத்தில் சந்திக்கும்போது நபி (ﷺ) மிக அதிகமாக வாரி வழங்கும் கொடையாளியாகத் திகழ்ந்தார்கள். ஜிப்ரீல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் ரமளான் மாதத்தின் ஒவ்வொரு இரவிலும் நபி (ﷺ) அவர்களைச் சந்தித்து (அது வரை) அருளப்பட்டிருந்த) குர்ஆனை நினைவுபடுத்துவார்கள். இருவருமாகத் திருக்குர்ஆனை ஓதும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள். தொடர்ந்து வீசும் காற்றை விட (வேகமாக) நபி (ﷺ) அவர்கள் நல்ல காரியங்களில் மிக அதிகமாக வாரி வழங்கும் கொடையாளியாகவே திகழ்ந்தார்கள்.
நூல்-:- ஸஹீஹுல் புஹாரீ 6.
புஹாரீயின் மற்றொரு ரிவாயத்தில் வந்துள்ளதாவது,
كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم أَجْوَدَ النَّاسِ بِالْخَيْرِ وَكَانَ أَجْوَدُ مَا يَكُونُ فِي رَمَضَانَ حِينَ يَلْقَاهُ جِبْرِيلُ وَكَانَ جِبْرِيلُ عَلَيْهِ السَّلاَمُ يَلْقَاهُ كُلَّ لَيْلَةٍ فِي رَمَضَانَ حَتَّى يَنْسَلِخَ يَعْرِضُ عَلَيْهِ النَّبِيُّ صلى الله عليه وسلم الْقُرْآنَ فَإِذَا لَقِيَهُ جِبْرِيلُ عَلَيْهِ السَّلاَمُ كَانَ أَجْوَدَ بِالْخَيْرِ مِنَ الرِّيحِ الْمُرْسَلَةِ.
நபி (ﷺ) அவர்கள் மக்களுக்கு நல்லதை வாரி வழங்குபவர்களாக இருந்தார்கள். ஜிப்ரீல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் ரமளான் மாதத்தில் நபி (ﷺ) அவர்களைச் சந்திக்கும் வேளையில் நபி (ﷺ) அவர்கள் அதிகமதிகம் வாரி வாரி வழங்குவார்கள். ஜிப்ரீல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் ரமளானின் ஒவ்வொரு இரவும், ரமளான் முடியும்வரை, நபி (ﷺ) அவர்களைச் சந்திப்பார். நபி (ﷺ) அவர்கள் ஜிப்ரீலிடம் குர்ஆனை ஓதிக் காட்டுவார்கள். ஜிப்ரீல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் தம்மைச் சந்திக்கும்போது மழைக்காற்றை விட அதிகமாக நபி(ஸல்) அவர்கள் வாரி வழங்குவார்கள்.
நூல்-:- ஸஹீஹுல் புஹாரீ 1902.
மழைக் காற்றும், அதனோடு சேர்ந்த புயல் காற்றும் எப்படி வேகமாக வீசுகிறதோ, அதுபோல நபியவர்கள் ரமளான் தர்மத்தை வழங்குவார்கள் என்பது இதன் கருத்தாகும். நாமும் நமக்கு அல்லாஹ் வசதி வாய்ப்பை வழங்கிருப்பின் தாமதிக்காது தர்மம் செய்து ரமளானில் கூடுதலான நன்மையை பெற முன்வர வேண்டும். செல்வந்தர்கள் தமது கடமையான ஜகாத்தை எந்த மாதத்திலும் கொடுக்கலாம் என்ற சட்டமிருப்பினும், புனித ரமளானில் கொடுப்பதற்கு காரணம் எழுபது மடங்கு நன்மை கிடைக்கிறது என்பதினாலாகும்.
ரமளான் முடிந்த பிறகும் சதகா செய்வதில் சஹாபாக்கள் ஆர்வமாய் இருந்துள்ளார்கள்.
أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم صَلَّى يَوْمَ الْعِيدِ رَكْعَتَيْنِ لَمْ يُصَلِّ قَبْلَهَا وَلاَ بَعْدَهَا ثُمَّ أَتَى النِّسَاءَ وَمَعَهُ بِلاَلٌ فَأَمَرَهُنَّ بِالصَّدَقَةِ فَجَعَلَتِ الْمَرْأَةُ تُلْقِي قُرْطَهَا.
(நோன்புப்) பெருநாளில் நபி (ﷺ) அவர்கள் இரண்டு ரக்அத்துகள் தொழுதார்கள். அதற்கு முன்பும் சரி அதற்குப் பின்பும் சரி அவர்கள் (கூடுதலாக) எதையும் தொழவில்லை. பிறகு பிலால் (ரளியல்லாஹு அன்ஹு) அவர்களுடன் பெண்களிடம் (மகளிர் பகுதிக்கு) வந்து தர்மம் செய்யும்படி அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள். உடனே, ஒரு பெண் தன்னுடைய கம்மலை(க் கழற்றி)ப் போடலானார்.
நூல்-:- ஸஹீஹுல் புஹாரீ 5883.
நான்காவது காரியம் சஹர் நேரத்தில் தஹஜ்ஜுத் மற்றும் துஆவில் ஈடுபட வேண்டும்!
நோன்பை தொடங்கும் முகமாக பின்னிரவில், பஜ்ர் நேரம் ஆரம்பமாகும் முன்பு உணவு உட்கொள்ளப்படுவதற்கு ஸஹர் என்று பெயர். இது தொடர்பாக ஏராளமான செய்திகள் ஹதீஸ்களில் காணக்கிடைக்கின்றன. நம்மில் சிலர் தூங்குவதற்கு முன்பே சாப்பிட்டு நோன்பு நிய்யத் வைத்து விடுகின்றனர் இச்செயலானது "ஃகிலாஃபுஸ்ஸுன்னா" நபியுடைய செயலுக்கு முற்றிலும் மாற்றமானதாகும்.
تَسَحَّرُوا فَإِنَّ فِي السَّحُورِ بَرَكَةً.
நீங்கள் ஸஹர் செய்யுங்கள்; நிச்சயமாக ஸஹ்ர் செய்வதில் பரக்கத் இருக்கிறது!
நூல்-:- ஸஹீஹு புஹாரீ 1923.
ஸஹர் நேரத்தில் உண்பது நமது உடலுக்கு சக்தியை அதிகரிக்கும். நமக்கு உடலில் ஏற்படும் சோர்வை குறைக்கும். ஒருவிதமான பரகத்தெனும் இறையுதவி நமக்கு கிடைக்கும். நாம் ஸஹருக்கு எழுந்திருப்பதால் ஸாலிஹீன்களின் முக்கிய அமலான தஹஜ்ஜுத் தொழுகை நமக்கு தொழக்கூடிய மிகப்பெரிய பாக்கியம் கிடைக்கும். எனவே ஸஹருக்கு எழுவதை நாம் அவசியமாக்கிக் கொள்ளவேண்டும்.
فَصْلُ ما بيْنَ صِيامِنا وَصِيامِ أَهْلِ الكِتابِ، أَكْلَةُ السَّحَرِ.
நமது நோன்பிற்கும் வேதக்காரர்களின் நோன்பிற்கும் இடையில் உள்ள வேறுபாடு சஹர் நேரத்தில் உண்பதுதான்.
நூல்-:- ஸஹீஹ் முஸ்லிம் 1096.
இந்த ஹதீஸ் ஸஹர் என்பது அல்லாஹ்வால் உம்மத்தே முஹம்மதிய்யாவான நமக்கு மட்டுமே வழங்கப்பட்ட மிகப்பெரிய நிஃமத்தாகும் என்பதைப் பறைசாட்டுகின்றது.
ஸஹருக்கு பல மணி நேரத்திற்கு முன்பே உணவருந்தி விட்டு படுக்கைக்குச் செல்வோர் சங்கைக்குரிய ஸஹரை இழந்ததோடு சில வேளை ஃபஜ்ர் தொழுகையையும் இழந்து விடுகிறார்கள். ஸஹர் செய்வதில் கவனம் செலுத்த வேண்டும் என்பதை நாம் விளங்கிக் கொள்வோமாக!
அதுமட்டுமல்லாமல் சஹர் நேரம் பிரார்த்தனை ஒப்புக்கொள்ளப்படும் நேரமாக இருக்கிறது.
يَنْزِلُ رَبُّنَا تَبَارَكَ وَتَعَالَى كُلَّ لَيْلَةٍ إِلَى السَّمَاءِ الدُّنْيَا حِينَ يَبْقَى ثُلُثُ اللَّيْلِ الآخِرُ يَقُولُ مَنْ يَدْعُونِي فَأَسْتَجِيبَ لَهُ مَنْ يَسْأَلُنِي فَأُعْطِيَهُ مَنْ يَسْتَغْفِرُنِي فَأَغْفِرَ لَهُ.
இறைத்தூதர் (ﷺ) அவர்கள் கூறினார்கள். 'நம்முடைய இறைவன் ஒவ்வொரு இரவும் கீழ் வானத்திற்கு இறங்கி இரவில் மூன்றில் ஒரு பகுதி இருக்கும்போது, 'என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அதை நான் அங்கீகரிக்கிறேன். யாரேனும் என்னிடம் கேட்டால் அவருக்கு கொடுக்கிறேன். யாரேனும் என்னிடம் பாவமன்னிப்புக் கோரினால் அவரை நான் மன்னிக்கிறேன்' என்று கூறுவான்'.
நூல்-:- ஸஹீஹுல் புஹாரீ 1145.
இந்த ஹதீஸில் இரவின் கடைசி பகுதியைப் பற்றி கூறப்பட்டுள்ளது. அந்நேரம் தஹஜ்ஜுத் மற்றும் ஸஹர் நேரமாகத்தான் இருக்கிறது. பிரார்த்தனையும், தவ்பாவும் ஒப்புக்கொள்ளப்படும் அந்நேரத்தில் இறையடியார்கள் தமது பிரச்சனைகளையும், கஷ்டங்களையும் முன்வைத்து அழுத வண்ணம் கெஞ்சிக்கேட்க வேண்டும். தமது பாவத்தை எண்ணி, அழுது தவ்பாச் செய்யவேண்டும் என இறைஞானிகள் கூறுகின்றார்கள்.
ஐந்தாவது காரியம் இஃப்தார் நேரத்தில் துஆவில் அதிகம் ஈடுபட வேண்டும்!
நோன்பு திறக்கக்கூடிய துஆ ஒப்புக்கொள்ளப்படும் முக்கிய நேரமாக இருக்கிறது. ஆனால் அந்நேரத்தை மக்கள் பெரும்பாலும் கோட்டை விட்டுவிடுகின்றார்கள். நோன்புக்கஞ்சியிலும், அதற்குள் வடைகளை ஊரவைப்பதிலும், குளிர் பானங்களிலும், பழங்களிலும், கவனம் செலுத்துவதால், இஃதாருடைய சிறப்பைப் பெரும்பாலான மக்கள் நழுவவிட்டு விடுகின்றார்கள். இதில் பெண்களுக்கு இஃப்தார் நேரம் பெரும்பாலும் கிச்சனில் தான் கழிகிறது.
நபிகள் நாயகம் (ﷺ) அவர்கள் கூறுகின்றார்கள்.
إنَّ للصّائمِ عندَ فِطرِهِ لدعوةً ما تردُّ. ابن حجر العسقلاني في الفتوحات الربانية ٤/٣٤٢
நோன்பாளி நோன்பு திறக்கும்போது மறுக்கப்படாத ஒரு துஆ இருக்கிறது.
நூல்-:- ஃபுதூஹாத்துர் ரப்பானிய்யா பாகம் 3 பக்கம் 342.
ஒரு நோன்பாளிக்கு தன்னுடைய நோன்பு ஒப்புக்கொள்ளப்படவேண்டும் என்பதே மிகப்பெரிய ஆசையாக இருக்கும். அதனால்தான் நோன்பு திறக்கும் நேரத்தில் பின்வரும் துஆவை ஓதுவது விரும்பத்தக்கதாகும் என்று சொல்லப்படுகின்றது.
اللَّهُمَّ اِنِّى لَكَ صُمْتُ وَبِكَ امنْتُ وَعَلَيْكَ تَوَكَّلْتُ وَعَلَى رِزْقِكَ اَفْطَرْتُ
அல்லாஹும்ம லக்க ஸும்த்து வபிக ஆமன்த்து வஅலைக்க தவக்கல்த்து வஅலா ரிஜ்க்கிக்க அஃப்தர்த்து ஃபதகப்பல்மின்னி.
யா அல்லாஹ் உனக்காகவே நோன்பு நோற்றேன் உன்னைக் கொண்டே ஈமான் கொண்டேன் உன் மீதே பொறுப்பு சாட்டினேன். உன்னுடைய ரிஜ்க்கை கொண்டே நோன்பு திறக்கிறேன். இதை என்னிடமிருந்து ஏற்றுக் கொள்வாயாக.
மேலும் நோன்பாளிகளுக்கு நோன்பு திறக்க ஏற்பாடு செய்வது இன்னொரு நோன்பு நோற்ற நன்மையை பெற்றுத்தருகிறது.
நபிகள் நாயகம் (ﷺ) அவர்கள் இதுசம்பந்தமாக அதிகம் ஆர்வப்படுத்தியுள்ளார்கள்.
من فطَّر صائمًا كان له مثلُ أجره غير أنه لا ينقصُ من أجر الصائمِ شيئًا
யார் ஒரு நோன்பாளியை நோன்பு திறக்கச் செய்கின்றாரோ, அவருக்கு அவருடைய கூலியைப்போன்று கிடைக்கும். என்றாலும் நோன்பாளியின் கூலியிலிருந்து எதுவும் குறைக்கப்படாது.
நூல்-:- திர்மதீ 807.
நபியுடைய சுன்னத்தை அனுபிசகாது பின்பற்றி வாழ்ந்த "முத்தபிவுஸ் ஸுன்னா" என்று போற்றப்பட்ட அப்துல்லாஹிப்னு உமர் (ரளியல்லாஹு அன்ஹு) அவர்கள் எப்போதும் நோன்பு திறக்கும்போது தன்னுடன் மற்றவர்களை சேர்த்துக்கொண்டே தவிர நோன்பு திறக்கமாட்டார்கள் என்று அன்னாரின் வரலாற்றுக் குறிப்புகளில் காணக்கிடைக்கிறது.
ஆதலால் நாமும் நோன்பு திறக்கும் வேளையில் பிற நோன்பாளியையும் இணைத்துக்கொண்டு நோன்பு திறப்பது ஏற்றமானதாகும்
ஆறாவது காரியம் தராவீஹ் 20 ரகஅத்துகள் தொழுதல்.!
ரமளான் மாதத்தில் இஷா தொழுகைக்குப் பின்பு தொழப்படும் சிறப்பு தொழுகையே "தராவீஹ்" தொழுகையாகும். இது வலியுறுத்தப்பட்ட சுன்னத் தொழுகையாகும்.
عن عبد الرحمان ابن عوف قال ذكر رسول الله ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ رمضان فقال شهر فرض الله صيامه وسننت انا قيامه
அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரளியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள். நபி (ﷺ) அவர்கள், "ரமளான் எப்படிப்பட்ட மாதம் என்றால், அதில் நோன்புகளை அல்லாஹ் கடமையாக்கியுள்ளான். அதன் இரவுகளில் நின்று வணங்குவதை நான் (எனது ஸுன்னத்) வழிமுறையாக்கியுள்ளேன்" என்று கூறினார்கள்.
நூல்-:- இப்னு மாஜா பக்கம் 95.
தராவீஹ் தொழுகையைப் பற்றி ஹதீஸில்..
ரமளான் மாதத்தில் இரவுக் காலங்களில் தொழப்படும் தராவீஹ் தொழுகைப் பற்றி ஹதீஸ்களில் குறிப்பிடப்படும்போது "கியாமு ரமளான்" என்பதாகவே குறிப்பிடப்பட்டுள்ளது.
ﻋﻦ ﺃﺑﻲ ﻫﺮﻳﺮﺓ ﺭﺿﻲ اﻟﻠﻪ ﻋﻨﻪ ﺃﻥ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻗﺎﻝ: ﻣﻦ ﻗﺎﻡ ﺭﻣﻀﺎﻥ ﺇﻳﻤﺎﻧﺎ ﻭاﺣﺘﺴﺎﺑﺎ ﻏﻔﺮ ﻟﻪ ﻣﺎ ﺗﻘﺪﻡ ﻣﻦ ﺫﻧﺒﻪ.
"எவரொருவர் ஈமானுடனும், நன்மையை நாடியும் ரமளான் (மாத இரவுகளில்) நின்று வணங்குகின்றாரோ, அவரது முன் செய்த (சிறு) பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.
நூற்கள்-:- புஹாரீ 2009, முஸ்லிமில் 759.
இந்த ஹதீஸில் ரமளான் இரவுத் தொழுகையைப் பற்றி சொல்லும்போது "கியாமு ரமளான்" என்பதாகவே வருகிறது. ஆனால் தாபியீன்கள் தபஅ தாபியீன்கள் காலத்தில் ரமளான் இரவுத் தொழுகைக்கு தராவீஹ் என்றே அறியப்பட்டது.
தராவீஹ் என்பது தர்வீஹா என்பதன் பன்மைச் சொல்லாகும். சற்று ஓய்வு பெறுவதற்காக அமர்வதற்கு தர்வீஹா என்று பெயர். அதனால்தான் தராவீஹில் நான்கு ரகஅத் முடிந்த பிறகு அமர்ந்த வண்ணம் துஆ செய்யப்படுகின்றது. இதில் சற்று ஓய்வும் கிடைத்து விடுகிறது. ஆகையால் இந்த நான்கு ரகஅத்திற்கு ஒரு தர்வீஹா என்று சொல்லப்படலாயிற்று. தராவீஹ் தொழுகை முழுவதிலும் ஐந்து தர்வீஹாக்கள் உள்ளன. ஆதலால் ஐந்து தர்வீஹாக்களையும் ஒன்று சேர்த்து "தராவீஹ்" என்று கூறப்படலாயிற்று.
இமாம் திர்மிதீ (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்கள் தமது ஸுனனில் பின்வருமாறு பதிவு செய்திருக்கிறார்கள்.
ﻭﺃﻛﺜﺮ ﺃﻫﻞ اﻟﻌﻠﻢ ﻋﻠﻰ ﻣﺎ ﺭﻭﻱ ﻋﻦ ﻋﻤﺮ ﻭﻋﻠﻲ ﻭﻏﻴﺮﻫﻤﺎ ﻣﻦ ﺃﺻﺤﺎﺏ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻋﺸﺮﻳﻦ ﺭﻛﻌﺔ ﻭﻫﻮ ﻗﻮﻝ اﻟﺜﻮﺭﻱ ﻭاﺑﻦ اﻟﻤﺒﺎﺭﻙ ﻭاﻟﺸﺎﻓﻌﻲ ﻭﻗﺎﻝ اﻟﺸﺎﻓﻌﻲ: ﻭﻫﻜﺬا ﺃﺩﺭﻛﺖ ﺑﺒﻠﺪﻧﺎ ﺑﻤﻜﺔ ﻳﺼﻠﻮﻥ ﻋﺸﺮﻳﻦ ﺭﻛﻌﺔ
கல்வியுடையவர்களில் பெரும்பாலோர் அலி (ரளி) உமர் (ரளி) நபி (ﷺ) அவர்களின் மற்ற ஸஹாபாக்களின் வாயிலாக அறிவிக்கப்பட்டுள்ள இருபது ரகஅத்துகள் மீதே அறிவிக்கிறார்கள். ஸுஃப்யானுஸ்ஸவ்ரீ, அப்துல்லாஹ் இப்னு முபாரக், இமாம் ஷாஃபிஈ (ரஹ்மத்துல்லாஹி அலைஹிம்) ஆகியோரும் இதையே கூறுகின்றார்கள். இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள், இவ்வாறே நான் எனது சொந்த ஊரான மக்காவில் கண்டேன். அங்கே இருபது ரகஅத்தே தொழுகிறார்கள் என்று கூறுகின்றார்கள்.
நூல் : ஸுனனுத் திர்மிதீ பாகம் 1 பக்கம் 99.
அன்றிலிருந்து இன்றளவும் புனித இரு ஹரம்களான மக்காவிலும், மதீனாவிலும் தராவீஹ் 20 ரகஅத்துகள் தொழப்பட்டு வருகின்றன.
தராவீஹ் தொழுகையை ஜமாஅத்தாகத் தொழுதல்.
خَرَجْتُ مع عُمَرَ بنِ الخَطّابِ رَضِيَ اللَّهُ عنْه، لَيْلَةً في رَمَضانَ إلى المَسْجِدِ، فَإِذا النّاسُ أوْزاعٌ مُتَفَرِّقُونَ، يُصَلِّي الرَّجُلُ لِنَفْسِهِ، ويُصَلِّي الرَّجُلُ فيُصَلِّي بصَلاتِهِ الرَّهْطُ، فَقالَ عُمَرُ: إنِّي أرى لو جَمَعْتُ هَؤُلاءِ على قارِئٍ واحِدٍ، لَكانَ أمْثَلَ ثُمَّ عَزَمَ، فَجَمعهُمْ على أُبَيِّ بنِ كَعْبٍ.
அப்துர்ரஹ்மான் இப்னு அப்தில் காரீ (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நான் உமர் (ரளியல்லாஹு அன்ஹு) அவர்களுடன் ரமளான் மாதத்தின் ஓர் இரவில் பள்ளிவாசலுக்குச் சென்றேன். அங்கே மக்கள் பிரிந்து, பல குழுக்களாக இருந்தனர். சிலர் தனித்துத் தொழுது கொண்டிருந்தனர். அப்போது உமர் (ரளியல்லாஹு அன்ஹு) 'இவர்கள் அனைவரையும் ஓர் இமாமின் கீழ் திரட்டினால் அது சிறப்பாக அமையுமே!' என்று கூறிவிட்டு, அந்த முடிவுக்கு உறுதியாக வந்து, மக்களை உபை இப்னு கஅபு (ரளியல்லாஹு அன்ஹு) அவர்களுக்குப் பின்னால் திரட்டினார்கள்.
நூல்-:- ஸஹீஹுல் புஹாரீ 2010.
உமர் (ரளியல்லாஹு அன்ஹு) அவர்களின் காலத்திலிருந்து இன்று வரை ரமளான் மாதத்தில் தராவீஹ் தொழுகை ஜமாஅத்தாக தொழப்பட்டு வருகிறது.
தராவீஹ் தொழுகை 20 ரகஅத்தே!
ஸஹாபாக்கள் காலந்தொட்டு இன்று வரை உலகம் முழுவதும் தராவீஹ் தொழுகை 20 ரகாஅத்தே தொழப்பட்டு வருகிறது. இதற்கு ஹதீஸ்களில் ஏராளமான சான்றுகள் உள்ளன.
ﻋﻦ ﻳﺰﻳﺪ ﺑﻦ ﺭﻭﻣﺎﻥ ﺃﻧﻪ ﻗﺎﻝ ﻛﺎﻥ اﻟﻨﺎﺱ ﻳﻘﻮﻣﻮﻥ ﻓﻲ ﺯﻣﺎﻥ ﻋﻤﺮ ﺑﻦ اﻟﺨﻄﺎﺏ ﻓﻲ ﺭﻣﻀﺎﻥ ﺑﺜﻼﺙ ﻭﻋﺸﺮﻳﻦ ﺭﻛﻌﺔ.
யஸீது இப்னு ரூமான் (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்கள் அறிவிக்கிறார்கள். உமர் இப்னு ஃகத்தாப் (ரளியல்லாஹு அன்ஹு) அவர்கள் காலத்தில் மனிதர்கள் (ஸஹாபாக்கள், தாபியீன்கள்) இருபத்து மூன்று ரக்அத்கள் (தராவீஹ் 20 வித்ரு 3) தொழுது வந்தார்கள்.
நூல்-:- முஅத்தா இமாம் மாலிக் 380.
ஆதலால் தராவீஹ் என்பது ரமளான் மாத இரவுக் காலங்களில் ஐந்து தர்வீஹாக்களுடன் இருபது ரகஅத்துகள் தொழும் தொழுகைக்கே சொல்லப்படும். ஹதீஸ்களில் வரும் "கியாமு ரமளான்" என்ற வாசகம் "தராவீஹ்" தொழுகையையே குறிக்கும்.
ஏழாவது காரியம் புனித லைலத்துல் கத்ரை தேடுதல்!
வருடம் முழுவதிலுமுள்ள இரவுகளில் மிகவும் சிறந்த இரவு "லைலத்துல் கத்ர்" இரவாகும். அந்த இரவின் சிறப்பைப் பற்றி அல்லாஹ் தனது திருமறையில் கூறும்போது..
لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِّنْ اَلْفِ شَهْرٍ.
"கண்ணியமிக்க (அந்த) இரவு ஆயிரம் மாதங்களை விட மிக்க மேலானதாகும்" என்று சிலாகித்துக் கூறுகின்றான்.
அல்குர்ஆன் : 97:3.
இந்த இரவில் நின்று நஃபிலான தொழுகைகள் தொழுவது, குர்ஆன் ஓதுவது, திக்ரு செய்வது போன்ற அமல்கள் லைலத்துல் கத்ர் அல்லாத மற்ற நாட்களில் ஆயிரம் மாதங்கள் செய்த அமல்களை விடச் சிறந்தது என்பதை இந்த வசனம் சுட்டிக்காட்டுகிறது.
குர்ஆனில் சொல்லப்பட்ட ஆயிரம் மாதங்கள் என்பது 83 வருடங்கள் நான்கு மாதங்களுக்கு சமமானதாகும். இந்த புனித இரவு ஒருவருக்கு கிடைத்து விட்டால், அவர் இத்தனை ஆண்டுகள் வணங்கிய நன்மைக் குவியல்களை பெறும் பாக்கியசாலியார்.
லைலத்துல் கத்ர் இரவின் சிறப்பைப் பற்றி மாநபி (ﷺ) அவர்கள் கூறும்போது...
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مَنْ يَقُمْ لَيْلَةَ الْقَدْرِ إِيمَانًا وَاحْتِسَابًا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ.
*நம்பிக்கை கொண்டவராகவும் நன்மையை எதிர்பார்த்தவராகவும் லைலத்துல் கத்ர் எனும் புனித இரவில் நின்று வணங்குகிறவரின் முந்தைய குற்றங்கள் மன்னிக்கப்படும்' என்று கூறினார்கள்.*
நூல்-:- ஸஹீஹ் புஹாரீ 35.
ரமளான் மாதத்தில் கடைசிப் பத்து இரவுகளில் ஒற்றைப்படையான இரவுகளில் லைலத்துல் கத்ர் இரவு உள்ளது. ஆனால் அந்த இரவு எது என்பதை அல்லாஹ் மறைவாக வைத்துள்ளான். ஆதலால் அந்த இரவு எது என்று தேடுவது ஸுன்னத்தாகும்.
عَنْ عَائِشَةَ رضى الله عنها أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ تَحَرَّوْا لَيْلَةَ الْقَدْرِ فِي الْوِتْرِ مِنَ الْعَشْرِ الأَوَاخِرِ مِنْ رَمَضَانَ.
இறைத்தூதர் (ﷺ) அவர்கள் கூறினார்கள். ரமளானின் கடைசிப் பத்து நாள்களில் உள்ள ஒற்றைப்படை இரவுகளில் லைலத்துல் கத்ரைத் தேடுங்கள்!
நூல்-:- ஸஹீஹ் புஹாரீ 2017.
லைலத்துல் கத்ரு இரவு எது? என்பதில் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. பிந்திய பத்து நாட்களிலுள்ள ஒற்றை இரவுகளில் தேடிக் கொள்ள வேண்டும் என ஆதாரப் பூர்வமான நபிமொழிகள் மூலம் அறியமுடிகிறது. இருப்பினும் அந்த இரவு இருபத்தி ஏழாம் இரவுதான் என பெரும்பான்மையான. இமாம்கள் உறுதிபட கூறுகின்றனர். அதற்கு ஆதாரமாக ஸஹீஹ் முஸ்லிமில் வந்துள்ள உபைய்யுப்னு கஃபு (ரளி) அவர்களின் அறிவிப்பை சுட்டிக்காட்டுகின்றனர்.
واللَّهِ الذي لا إلَهَ إلّا هُوَ إنَّها لَفِي رَمَضانَ يَحْلِفُ ما يَسْتَثْنِي وَواللَّهِ إنِّي لأَعْلَمُ أَيُّ لَيْلَةٍ هي هي اللَّيْلَةُ الَّتي أَمَرَنا بها رَسولُ اللهِ ﷺ بقِيامِها هي لَيْلَةُ صَبِيحَةِ سَبْعٍ وَعِشْرِينَ وَأَمارَتُها أَنْ تَطْلُعَ الشَّمْسُ في صَبِيحَةِ يَومِها بَيْضاءَ لا شُعاعَ لَها.
உபைய்யுப்னு கஃப் (ரளி) அவர்கள், "எவனைத் தவிர வேறு இறைவன் இல்லையோ அவன்மீது சத்தியமாக! அது (லைலத்துல் கத்ர்) ரமளானில்தான் உள்ளது (இவ்வாறு சத்தியம் செய்தபோது அன்னார் "அல்லாஹ் நாடினால்" என்று கூறாமல் உறுதியாகவே குறிப்பிட்டார்கள்) அல்லாஹ்வின் மீதாணையாக! அது எந்த இரவு என்பதை நான் அறிவேன்; அந்த இரவில் நின்று வணங்குமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். அது ரமளானில் இருபத்தி ஏழாம் இரவேயாகும். அ(து லைலத்துல் கத்ர் என்ப)தற்கு அடையாளம், அந்த இரவை அடுத்துவரும் காலைப் பொழுதில் சூரியன் வெண்ணிறத்தில் ஒளியிழந்து (மங்கலாக) உதிக்கும்" என்று கூறினார்கள்.
நூல்-:- ஸஹீஹ் முஸ்லிம் 762.
மற்றொரு ஹதீஸில் முஆவியா (ரளி) அவர்களின் ஸஹீஹான அறிவிப்பு இவ்வாறு வந்துள்ளது.
ﻋﻦ ﻣﻌﺎﻭﻳﺔ ﺑﻦ ﺃﺑﻲ ﺳﻔﻴﺎﻥ ﻋﻦ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻓﻲ ﻟﻴﻠﺔ اﻟﻘﺪﺭ ﻗﺎﻝ ﻟﻴﻠﺔ اﻟﻘﺪﺭ ﻟﻴﻠﺔ ﺳﺒﻊ ﻭﻋﺸﺮﻳﻦ.
லைலத்துல் கத்ர் இரவானது இருபத்தி ஏழாவது இரவாகும் என நபி (ﷺ) அவர்கள் கூறினார்கள்.
நூல்-:- அபூதாவூது 1386.
இதுபோன்ற ஹதீஸ்கள் மட்டுமல்லாமல் வேறு சில சான்றுகளின் மூலமும் "லைலத்துல் கத்ரு" இரவு 27 வது இரவுதான் என்பது உறுதியாகிறது.
இப்னு அப்பாஸ் (ரளியல்லாஹு அன்ஹு) அவர்கள் இரண்டு விதமான விளக்கம் தருகின்றார்கள். 1) அல்லாஹ் லைலத்துல் கத்ரு என்ற வார்த்தையை "ஸூரத்துல் கத்ர்" என்ற அத்தியாயத்தில் மூன்று தடவை சொல்லியுள்ளான். ஒரு வார்த்தையில் ஒன்பது எழுத்துக்கள் உள்ளன. மூன்று வார்த்தையிலும் கூட்டினால் 3+9-27 இருபத்திஏழு வருகிறது. எனவே ரமளானின் 27 ல் லைலத்துல் கத்ர் இரவு வரலாமென்று கூறுகின்றார்கள். 2) இந்த அத்தியாயத்தில் 30 வார்த்தைகள் இடம் பெற்றுள்ளன. அதில் 27 வது வார்த்தை "ஹிய" அது என்று சூசகமாக மேலுள்ள லைலத்துல் கத்ரை சுட்டிக்காட்டுகிறதுஎன்று விளக்கியுள்ளார்கள்!
அன்னை ஆயிஷா (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
يا رَسولَ اللهِ إنْ وافَقتُ لَيلةَ القَدرِ بِمَ أدعو؟ قال قولي اللَّهمَّ إنَّكَ عَفوٌّ تُحِبُّ العَفوَ فاعْفُ عَنِّي.
அல்லாஹ்வின் தூதரே! லைலத்துல் கத்ரின் இரவை நான் அறிந்து கொண்டால் அதில் என்ன கூறவேண்டும் என்று கேட்டேன். இவ்வாறு கூறுமாறு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
اَللَّهُمَّ إِنَّكَ عَفْوٌ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّيْ
இறைவா! நிச்சயமாக நீ மன்னிக்கக்கூடியவன். மன்னிப்பை விரும்புகின்றாய். என்னை மன்னிப்பாயாக.
நூல்-:- முஸ்னத் அஹ்மது 25479.
எட்டாவது காரியம் இஃதிகாஃப் இருத்தல்.
"இஃதிகாஃப்" உகூஃப் என்றால் மற்றெல்லாப் பொருட்களை விட்டும் திரும்பி ஒருமுகத்தோடு ஏதேனும் ஒரு பொருளை நோக்கி விடுவது எனப்பொருள். இதிலிருந்து பிறந்தது தான் ஆகிஃப் என்னும் சொல். அதிலிருந்து பிறந்த இன்னொரு சொல்லான இஃதிகாஃப், தியானம், இறைஞானம், திக்ரு, வழிபாடு, இறைசிந்தனை போன்றவற்றைக் குறிக்கின்றது. அகஃப என்றால் தன்னைத்தானே ஏதேனும் ஒரு பொருளைவிட்டு விலக்கிக் கொள்வது என்றோ ஒன்றையே பற்றியிருப்பது என்றோ பொருள். எல்லாவற்றையும் விட்டுவிலகி ஓரிடத்தில் ஒதுங்கி, அமர்ந்து இறைவனின் நினைவிலேயே ஆழ்ந்து போவதை ஷரீஅத் இஃதிகாஃப் என்கின்றது.
சுருக்கமாக சொல்வதென்றால், இஃதிகாஃப் என்பது அல்லாஹ்வை வணங்கி வழிபடுவதற்காக பள்ளியில் தங்கியிருப்பதற்குச் சொல்லப்படும், ரமளான் மாத காலத்திலும், ரமளான் அல்லாத காலத்திலும் இஃதிகாஃப் இருக்கலாம். ரமளான் மாத காலத்தில் இஃதிகாஃப் இருப்பது மிகச் சிறந்தது. நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு வருடமும் நோன்பு மாதத்தின் கடைசி பத்து நாட்களும் இஃதிகாஃப் இருப்பார்கள். மரணித்த வருடத்தில் இருபது நாட்கள் இஃதிகாஃப் இருந்தார்கள்.
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ كانَ يَعْتَكِفُ كُلَّ عامٍ عَشْرًا فاعْتَكَفَ عِشْرِينَ في العامِ الذي قُبِضَ فِيهِ.
நபி (ஸல்) அவர்கள் ஒவ்வோர் ஆண்டும் (ரமளான் மாதத்தின் இறுதிப்)பத்து நாள்கள் 'இஃதிகாஃப்' மேற்கொள்வது வழக்கம். அவர்கள் இறந்த ஆண்டு, (ரமளானில்) இருபது நாள்கள் 'இஃதிகாஃப்' மேற்கொண்டார்கள்.
நூல்-:- ஸஹீஹுல் புஹாரீ : 4998.
இதிலிருந்து கடைசி பத்தின் முக்கிய அமல் இஃதிகாஃப் இருப்பது எனத்தெரிகிறது. இது சுன்னத் முஅக்கதாவாகும். பள்ளிவாசலில் யாரும் இஃதிகாஃப் இருக்காத பட்சத்தில் யாரையாவது ஒருவர் பத்து நாட்கள் இஃதிகாஃப் இருக்க பள்ளி நிர்வாகிகள் ஏற்பாடு செய்து இந்த முக்கிய அமலை பூர்த்தியாக்க வேண்டும். இஃதிகாஃப் இருப்பவர் குளிப்பது, மலஜலம் கழிப்பது போன்ற அவசியத் தேவைகளன்றி பள்ளியை விட்டும் வெளியில் செல்லக்கூடாது, நோன்பின் கடைசிப் பத்தில் இஃதிகாஃப் இருப்பதனால் லைலத்துல் கத்ரின் இரவை அடைந்து கொள்ளலாம். யாருக்கெல்லாம் இஃதிகாஃப் இருப்பதற்கு வாய்ப்பிருக்கின்றதோ, அவர்கள் சந்தர்பத்தை பயன்படுத்திக் கொள்ளட்டும்
ஒன்பதாவது காரியம் ஸதகக்துல் ஃபித்ர் கொடுத்தல்!
ரமளானில் நோன்பாளி எவ்வளவுதான் முயன்றாலும் ஏதேனும் குறை ஏற்படத்தான் செய்கிறது. உண்ணுதல், குடித்தல் போன்ற நோன்பை முறிக்கும் காரியங்களை தவிர்ந்திருத்தல் மிக இலகுவானதாக உள்ளது. ஆனால் வீண் பேச்சுகள், வீண் செயல்கள் போன்ற நோன்பின் நன்மையை குறைத்துவிடக் கூடிய செயல் களை விட்டும் தவிர்ந்திருத்தல் முழுமையான முறையில் ஏற்படுவதில்லை.
வல்ல அல்லாஹ் அக்குறைகளையும் நீக்கி நோன்பை பரிபூரணமாக்கும் பொருட்டு, அதற்கான முழு நன்மையையும் கொடுக்க வேண்டும் என்பதற்காக தன் அடியார்கள் மீது அருள்புரிந்து நோன்பின் முடிவின்போது ஸதகதுல் ஃபித்ரு எனும் தர்மத்தை கடமையாக்கியுள்ளான்.
فرض رسولُ اللهِ ﷺ زكاة الفطرِ طُهرَةً للصائمِ من اللغوِ والرفثِ وطُعْمَةً للمساكينِ من أدّاها قبلَ الصلاةِ فهي زكاةٌ مقبولَةٌ ومنْ أدّاها بعدَ الصلاةِ فهيَ صدقةٌ منَ الصدقاتِ.
பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், பித்ரா ஜகாத்தை நோன்பாளியின் நோன்பை வீண் பேச்சு, வீண் செயல்களை விட்டும் சுத்தப்படுத்துவதற்காகவும், ஏழைகளுக்கு உணவாகவும் (அல்லாஹ்வின் கட்டளையின் பிரகாரம்) கடமையாக்கினார்கள். எனவே எவர் (பெருநாள்) தொழுகைக்கு முன்பே அதனை நிறைவேற்றுகின்றாரோ அது ஒப்புக் கொள்ளப்பட்ட ஜகாத்தாக ஆகும். எவர் தொழுகைக்குப் பின் அதனை நிறைவேற்றுகிறாரோ அது பொதுவான தர்மங்களில் ஒரு தர்மமாக ஆகும்.
நூல்-:- அபூதாவூது 1609.
இந்த ஹதீஸில் ஸதகதுல் ஃபித்ர் கடமையானதற்கான இரு நோக்கங்களை கூறப்பட்டுள்ளது. 1. நோன்பில் ஏற்பட்ட குறைகளுக்கான பரிகாரம், 2. சமுதாயத்தினரின் ஏழைகளும் பெருநாள் அன்று மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காக அவர்களின் உணவிற்கான ஏற்பாடு.
எனவே வசதியுள்ளவர் ஸதகதுல் ஃபித்ரை உரிய நேரத்தில் (தொழுகைக்கு முன்பே) நிறைவேற்றுவது மிக்க அவசியமாகும்.
ﻜﺎﻥ اﺑﻦ ﻋﻤﺮ ﻳﺆﺩﻳﻬﺎ ﻗﺒﻞ ﺫﻟﻚ ﺑﺎﻟﻴﻮﻡ ﻭاﻟﻴﻮﻣﻴﻦ.
அப்துல்லாஹ் இப்னு உமர் (ரளி) அவர்கள் பெருநாளிற்கு இரண்டு நாட்கள் முன்பே ஸதகதுல் ஃபித்ரை நிறைவேற்றுபவர்களாக இருந்துள்ளார்கள்.
நூல்-:- அபூதாவூத் 1610.
இவ்வாறு முன்னரே கொடுப்பது சாலச் சிறந்ததும் கூட ஏனெனில் அந்த ஏழைகள் பெருநாளிற்காக முன்னரே தயாராக இருக்கலாம்.
ஸதக்கத்துல் ஃபித்ர் அளவானது கோதுமை போன்றவற்றில் அரை ஸாவும், பேரீத்தம் பழம், காய்ந்த திராட்சைகளில் ஒரு ஸாவும் அல்லது அவற்றின் கிரயம் கடமையாகும்.
நூல்-:- ஃபதாவா மஹ்மூதிய்யா 9/619.
அரை ஸாவு என்பது தற்கால எடையில் ஒரு கிலோ 633 கிராம் ஆகும். ஷாஃபிஈ மத்ஹபில் எந்த தானியமாக இருந்தாலும் ஒரு ஸாவு கடமையாகும். கிரயம் கொடுப்பது கூடாது. ஒரு ஸாவு என்பது 2 கிலோ 200 கிராமாகும்.
பத்தாவது காரியம் நன்றி செய்து துஆ செய்தல்.
எந்த அமலை செய்தாலும் அதற்காக நன்றி செலுத்தும் பொருட்டு அல்லாஹ்வால் அங்கீகாரம் பெறுவதற்கு இருகரம் ஏந்தி மனமுருகி இறைஞ்ச வேண்டும்.
அல்லாஹ் தனது திருமறையில்..
رَبَّنَا تَقَبَّلْ مِنَّا اِنَّكَ اَنْتَ السَّمِيْعُ الْعَلِيْمُ.
எங்களின் இரட்சகனே! எங்களிலிருந்து (இந்த முயற்சியை) ஏற்றுக்கொள்வாயாக! நிச்சயமாக நீயே கேட்கக்கூடிவன், அறியக்கூடிவன்.
அல்குர்ஆன் : 2:127.
நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் கஃபாவை கட்டி முடித்த பின்பு கேட்ட துஆவைத் தான் நாம் மேலே கண்டோம். எந்த அமலை செய்தாலும், அது அல்லாஹ்வால் அங்கீகரிக்கப் படுவதற்காக துஆ செய்தல் நபிமார்களின் அழகிய வழிமுறையாகும்
புனிதமான ரமளானில் நாம் அல்லும் பகலும் ஆற்றிய நல்அமல்கள் கபூலிய்யத்தை, அங்கீகாரத்தை பெற வேண்டி அல்லாஹ்விடம் இந்த துஆவைக் அதிகமதிகம் கேட்கவேண்டும்
மேற்கண்ட பத்து விதமான நல்லமல்களை பேணுதலோடு கடைபிடித்து, புனித ரமளானின் அனைத்து நன்மைகளையும் பெறுவதற்கு அல்லாஹ் நம்மனைவருக்கும் பேரருள் தந்தருள்வானாக! ஆமீன்!!
வஆகிரு தஃவானா அனில் ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்