லைலதுல் கத்ரு 18-4-23
ரமலான் மாதம்
பிறை 27
பயான் தலைப்பு
லைலத்துல் கத்ர் இரவின் சிறப்புகள்
முன்னுரை
اِنَّاۤ اَنْزَلْنٰهُ فِىْ لَيْلَةِ الْقَدْرِ
நிச்சயமாக நாம் இந்தக் குர்ஆனை (மிக்க கண்ணியமுள்ள) லைலத்துல் கத்ர் என்னும் ஓர் இரவில் (முதலாவதாக) இறக்கி வைத்தோம்.
(அல்குர்ஆன் : 97:1)
وَمَاۤ اَدْرٰٮكَ مَا لَيْلَةُ الْقَدْرِ
லைலத்துல் கத்ர் இரவு என்னவென்று உமக்குத் தெரியுமா என்ன?
(அல்குர்ஆன் : 97:2)
لَيْلَةُ الْقَدْرِ ۙ خَيْرٌ مِّنْ اَلْفِ شَهْرٍ
கண்ணியமுள்ள அந்த இரவு ஆயிரம் மாதங்களைவிட மிக்க மேலானதாகும்.
(அல்குர்ஆன் : 97:3)
تَنَزَّلُ الْمَلٰٓٮِٕكَةُ وَالرُّوْحُ فِيْهَا بِاِذْنِ رَبِّهِمْ مِّنْ كُلِّ اَمْرٍ ۛۙ
அதில் மலக்குகளும், ஜிப்ரயீலும், தங்கள் இறைவனின் கட்டளையின் பேரில் (நடைபெற வேண்டிய) எல்லா காரியங்களுடன் இறங்குகின்றனர்.
(அல்குர்ஆன் : 97:4)
سَلٰمٌ ۛهِىَ حَتّٰى مَطْلَعِ الْفَجْرِ
ஈடேற்றம் உண்டாகுக! (அவ்விரவின் இச்சிறப்பு) விடியற்காலை உதயமாகும் வரை (நீடிக்கிறது).
(அல்குர்ஆன் : 97:5)
லைலத்துல் கத்ரும் குர்ஆனின் ஆரம்பமும் :-
اِنَّاۤ اَنْزَلْنٰهُ فِىْ لَيْلَةِ الْقَدْرِ
நிச்சயமாக நாம் இந்தக் குர்ஆனை (மிக்க கண்ணியமுள்ள) லைலத்துல் கத்ர் என்னும் ஓர் இரவில் (முதலாவதாக) இறக்கி வைத்தோம்.
(அல்குர்ஆன் : 97:1)
லைலத்துல் கத்ரின் மாபெரிய சிறப்பாக இந்த இரவில் அல்லாஹ் அல்குர்ஆனை அருளினான்
நமக்கு குர் ஆன் கிடைக்க தொடங்கிய நாள் இது என்பதை விட வேறு அதிகமான சிறப்பு என்ன இருக்கிறது.
நமது வாழ்வின் எல்லா
நன்மைகளுக்கும் வழிகாட்டக் கூடியது
திருக்குர்ஆன்.
நமது வாழ்வின் சகல
வெற்றிக்கும்
காரணமானது குர்ஆன்.
எல்லா வகையான
தீமைகளிலிருந்து பின்னடைவுகளிலிருந்தும்
பாதுகாக்ககூடியது குர்ஆன்.
ரமலானுக்கும் அல்குர்ஆனுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு காணப்படுகின்றது.
அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான்.
شَهْرُ رَمَضَانَ الَّذِىْٓ اُنْزِلَ فِيْهِ الْقُرْاٰنُ هُدًى لِّلنَّاسِ وَ بَيِّنٰتٍ مِّنَ الْهُدٰى وَالْفُرْقَانِ فَمَنْ شَهِدَ مِنْكُمُ الشَّهْرَ فَلْيَـصُمْهُ
ரமழான் மாதம் எத்தகைய (மகத்துவமுடைய)தென்றால் அதில்தான் மனிதர்களுக்கு நேர்வழிகாட்டும் திருக்குர்ஆன் (என்னும் வேதம்) இறக்கப்பட்டது. அது (நன்மை, தீமையைப்) பிரித்தறிவித்து நேரான வழியைத் தெளிவாக்கக்கூடிய வசனங்களை உடையதாகவும் இருக்கிறது. ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் அதில் நோன்பு நோற்கவும்.
(அல்குர்ஆன் : 2:185)
எந்த அமலும் அந்தந்த காலத்தின் தேவையை,அவசியத்தை கருதி செய்யப்படவேண்டும்.அப்படி பார்க்கப்போனால் ரமலான் மாதத்தின் அமல்கள் முழுக்க முழுக்க குர்ஆனை மையமாக கொண்டதாகும்.
அதனால் தான் ரமலான் மாதத்தில் நபி ஸல் அவர்களுக்கு ஜிப்ரயீல் அலை அவர்கள் குர்ஆனை ஓதிக்காட்டுவார்கள்.அவ்வாறு நபி ஸல் அவர்கள் ஓத ஜிப்ரயீல் அலை அவர்கள் கேட்பார்கள் எனவும் ஹதீஸ் கிதாபுகளில் காண கிடைக்கிறது.
وكان مالك بن أنس إذا دخل رمضان يفرّ من قراءة الحديث، ومجالسة أهل العلم، ويُقبل على تلاوة القرآن من المصحف، وكان لا يتشاغل إلا بالقرآن، ويعتزل التدريس والفتيا والجلوس للناس، ويقول: “هذا شهر القرآن
இமாம் மாலிக் ரஹ் அவர்கள் ரமலான் மாதம் வந்துவிட்டால் ஹதீஸ் பாடம் மற்றும் இதர மார்க்க கல்வியை விட்டும் ஓய்வு பெற்று முழுக்க முழுக்க திருக்குர்ஆன் மீது கவனம் செலுத்துவார்கள், பாடம் நடத்துவது,பத்வாக்கள் வழங்குவது மக்களுடன் அமர்வது போன்ற அனைத்து காரியங்களை விட்டும் விலகியிருப்பார்கள்.மேலும் இது குர்ஆனின் மாதம் என்று கூறுவார்கள்.
وكان سفيان الثوري إذا دخل رمضان ترك جميع العباد، وترك بعض العبادات، وأقبل على قراءة القرآن.
ரமலான் மாதத்தில் சுப்யான் ஸவ்ரி ரஹ் அவர்கள் அனைத்து வணக்கங்களை விடவும் திருக்குர்ஆன் ஓதுவதற்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
وكانت عائشة -رضي الله عنها- تقرأ في المصحف أول النهار في شهر رمضان، فإذا طلعت الشمس نامت.
ரமலான் மாதத்தின் பகலின் ஆரம்ப பகுதியில் அன்னை ஆயிஷா ரலி அவர்கள் குர்ஆன் ஓதுவார்கள்.சூரியன் உதயமாகிவிட்டால் சிறிதுநேரம் தூங்குவார்கள்.
இவ்வாறு ஸஹாபாக்களும் ஸாலிஹீன்களும் ரமலான் மாதத்தை அல்குராஆனை ஓதுவதின் மூலம்,அதை கேட்பதின் மூலம் சங்கைப்படுத்துவார்கள் என்று வருகிறது.
அருள்மறை அல்குராஆன் இந்த உம்மத்துக்கு வழங்கப்பட்ட மாபெரும் அற்புதமாகும்.அதை தங்கள் வாழ்வில் கடைபிடித்து வாழும் வரை இஸ்லாமிய உம்மத் இந்த உலகில் கண்ணியமாக வாழும்.
அல்குர்ஆன் மட்டுமல்லாது ரமளான் மாதத்திலேதான் எமது முன் சென்ற நபிமார்களுக்கெல்லாம் வஹி அறிவிக்கப்பட்டுள்ளது என்ற செய்தி ரமளான் மாதம் ஆனது அல்லாஹ்வின் வேத கட்டளைகளை பிறப்பிக்க அவனால் தெரிவு செய்யப்பட்ட புனிதமிக்க மாதம் என்பதை நமக்கு உணர்த்தியுள்ளான்.
வாதிலா பின் அல் அஸ்கஃ என்ற நபித்தோழர் நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக அறிவிக்கின்றார்,,
இப்ராஹிம் நபி அவர்களுக்கு “சுஹுபு” ரமளான் மாத ஆரம்ப இரவிலும் , தெளராத் வேதம் ரமளான் மாதம் 6 நாட்கள் சென்றதன் பிறகும், இஞ்ஜீல் வேதம் ரமளான் மாதம் 13 நாட்கள் சென்றதன் பிறகும், ஸபூர் வேதம் ரமளான் மாதம் 18 நாட்கள் சென்றதன் பிறகும், மற்றும் அல்குர்ஆன் ரமளான் மாதம் 24 நாட்கள் சென்றதன் பிறகும் அருளப்பட்டன .
(ஆதாரம்: தபராணி )
ரமளான் மாதத்தில் நோன்புடன் பயணிக்கும் நாம் அல்குர்ஆனுடன் நெருக்கத்தினை ஏற்படுத்திக் கொள்வதன் மூலமாக இரட்டிப்பு நன்மையினை பெற்றுக் கொள்ளலாம்.
கண்ணியமிக்க மகத்தான இரவு
وَمَاۤ اَدْرٰٮكَ مَا لَيْلَةُ الْقَدْرِ
லைலத்துல் கத்ர் இரவு என்னவென்று உமக்குத் தெரியுமா என்ன?
(அல்குர்ஆன் : 97:2)
இந்த இரவின் மகத்துவம் எத்தைகையது என்பதை நாம்முழுமையாக புரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் அல்லாஹ் எடுத்த எடுப்பில் இந்த இரவு ஆயிரம் மாதங்களை விடச்சிறந்து என்று சொல்லி விட வில்லை
முதலில்
وَمَا أَدْرَاكَ مَا لَيْلَةُ الْقَدْرِ
இது எப்படிப்பட்ட இரவு தெரியுமா? என்று கேட்கிறான்.
இது லைலத்துல் கத்ரின் மகத்துவத்தை நாம் முழுதாக உணர்ந்து கொள்ளவேண்டும் என்ற கருத்தை தெரிவிக்கிறது.
வீட்டில் ஒரு பழைய பொருள் இருந்தது. பிள்ளைகள் அதை விளையாட்டுக்காக எடுத்து பயனபடுத்திவிட்டார்கள் . இதைப்பார்த்து தந்தை ஓடிவருகிறார். இதுஎப்படிப்பட்டது தெரியுமா? என்று அழுத்தமான குரலில் கேட்பார். பிள்ளைகள் அமைதியாகி விடுவார்கள். அது என்ன என்பதை அவர் விளக்கிச்சொல்ல அவர்களுக்கு அதன்மீது ஒருவிளக்கம் பிறக்கும்.
உஸ்மான் ரலி அவர்களைகொல்வதற்காக வீட்டுச் சுவரேறிக்குதித்தவர்களில் அபூபக்கர் (ரலி) அவர்களின் மகன் முஹம்மதுவும் ஒருவர்.. உஸ்மான் ரலியின் தாடியைப்பிடித்து அவரை கண்டிக்க முய்ற்சித்தபோது “ இந்த தாடிக்கு உன்னுடைய தந்தை கொடுத்த மரியாதை என்ன தெரியுமா என்று உஸ்மான் ரலி கேட்டபோது அந்த சூழ்நிலையிலும் தனது தவறை உணர்ந்து திடுக்குற்று வெளியேறினார் அபூபக்கர் ரலி அவர்களின் மகன் முஹம்மது அவர்கள்.
லைலத்துல் கத்ரைப் பற்றி இப்படி அல்லாஹ் கேட்கிற போது அதன் மரியாதையை முழுமையாக செவியேற்பதற்கு நாம் தயாராகி விடவேண்டும்.
ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது .
لَيْلَةُ الْقَدْرِ ۙ خَيْرٌ مِّنْ اَلْفِ شَهْرٍ
கண்ணியமுள்ள அந்த இரவு ஆயிரம் மாதங்களைவிட மிக்க மேலானதாகும்.
(அல்குர்ஆன் : 97:3)
ஒரு சரித்திரத்தில் முக்கியத்துவம் பெற்ற நாளுக்கு , சிறப்பு அளிக்கப்படுவது உலகில் தொன்று தொட்டு கடைபிடிக்கப்படும் நடைமுறையாகும் , இந்திய சுதந்திரம் அடைந்த நாளாகிய ஆகஸ்ட் பதினைந்தாம் நாளில் ஆண்டுதோறும் சுமார் 500 கைதிகளுக்கு விடுதலை வழங்கப்படுவதும் , கல்வி , கலாச்சாரத்துறையில் சாதனை படைத்தோருக்கு பதக்கங்கள் , பரிசில்கள் வழங்கப்படுவதும் வாடிக்கையாகும் . இஸ்லாமிய சகாப்தத்தில் மிக முக்கியத்துவம் பெற்ற நாள் , அல்குர்ஆன் அருளத் துவங்கிய ரமளான் மாதம் இருபத்தி ஏழாம் நாள் ! எனவே , ஆண்டுதோறும் அந்த நாளுக்கு முப்பதாயிரம் பங்கு ‘ சிறப்பளித்து இறைவன் கவுரவிக்கிறான் . ஒரு வகையில் ஹள்ரத் முஹம்மது ( ஸல் ) அவர்களைப் பின்பற்றியவர்களுக்கு , அல்லாஹ் அளித்துள்ள சிறப்புச் சலுகையாகும் இது !
ஒருவர் சுமார் 83 வயது வரை உயிர் வாழ்ந்தாலேயே அவரை ஆயிரம் பிறை கண்டவர் என்று சிறப்பித்துக் கூறுவார்கள் . அப்படியானால் , ஒவ்வொரு வருடமும் அந்த சிறப்பைப் பெறுபவர் எவ்வளவு பாக்கியசாலியானவர் ஆவார்.
நபிகள் நாயகம் ( ஸல் ) அவர்கள் பனூ இஸ்ரவேலர்களில் வாழ்ந்த நான்கு தவ சாலிகளைப் பற்றி தம் தோழர்களிடம் பாராட்டிக் கூறிக் கொண்டிருந்தார்கள் . ஹள்ரத் அய்யூப் நபி ( அலை ) , ஹள்ரத் ஜகரிய்யா நபி அலை ) , ஹள்ரத் ஹிஸ்கில் நபி ( அலை ) , ஹளரத் யூஷன் பின் நூன் ( அலை ) ஆகிய இந்த நால்வரும் ஒரு மணித்துளி கூட பாவம் செய்யாமல் எண்பது ஆண்டுகளை வணக்க வழிப்பாட்டிலே கழித்தார்கள் என்று அறிவித்தார்கள் . நபி ( ஸல் ) அவர்களின் தோழர்கள் நமக்கு அத்தகைய வாய்ப்புக் கிடைக்குமோ ? கிடைக்காதோ ? எனக் கவலைப்பட்ட போது லைலத்துல் கத்ரு பற்றிய அறிவிப்பு வந்ததாக வரலாறு கூறுகிறது.
மலக்குகளின் விஜயம்
تَنَزَّلُ الْمَلٰٓٮِٕكَةُ وَالرُّوْحُ فِيْهَا بِاِذْنِ رَبِّهِمْ مِّنْ كُلِّ اَمْرٍ ۛۙ
அதில் மலக்குகளும், ஜிப்ரயீலும், தங்கள் இறைவனின் கட்டளையின் பேரில் (நடைபெற வேண்டிய) எல்லா காரியங்களுடன் இறங்குகின்றனர்.
(அல்குர்ஆன் : 97:4)
ஒருவன் புது வீடு புகுந்தால் பக்கத்து வீட்டுக்காரர்களின் புதிய நட்பு கிடைக்கிறது . ஒருவர் புதுக்கடை திறந்தால் பல வியாபாரிகளின் நட்புக் கிடைக்கிறது . ஒருவர் கல்லூரியில் சேர்ந்தால் அக்கல்லூரி மாணவர்களின் நட்புக் கிடைக்கிறது . அது போன்று ரமளானை நாம் அடைந்து விட்டால் நாம் புதிய பிரவேசத்தை மேற்கொள்கிறோம் . இரவுத் தொழுகையில் இன்பம் காணுகிறோம் . தருமம் கொடுக்க ஆவல் கொள்கிறோம் , ஏழைகளைப் பார்த்தால் இரக்கம் கொள்கிறோம் . ரமளானில் நமது உள்ளங்கள் பெறும் இத்தகைய மாற்றங்கள் பற்றி நபிகள் நாயகம் ( ஸல் ) அவர்கள் சூசகமாக அறிவித்தார்கள் : முதல் பத்து ரஹ்மத் ( முதற் பத்து நாட்கள் நோன்பிருந்தும் நமக்கு படைப்பினங்களின் மீது இரக்கம் சுரக்கிறது ) இரண்டாம் பத்து மஃபிரத் ( இரண்டாவது பத்து நோன்பையும் நிறைவு செய்யும்போது குறை காணுபவர்களை மன்னிக்கும் மனப்பான்மை உருவாகிறது ) . மூன்றாம் பத்து இத்கும் மினன் நார் ( முப்பது நோன்பையும் நிறைவு செய்யும் போது , தொல்லைகள் தருபவனுக்கு தண்டனை தர நாம் அதிகாரம் பெற்றிருந்தும் , தண்டனை தராதிருக்கவே முடிவு செய்கிறோம் )
நம்மிடத்தில் காணப்படும் இத்தகைய குண மாற்றங்களால் புதுமையான பல நண்பர்கள் நமக்கு அறிமுகமாகிறார்கள் . அத்தகைய நண்பர்களுள் மலக்குகளும் இடம் பெறுவர் . எனவே அவர்கள் நம்மிடம் நட்புப் பாராட்டுவதற்காக லைலத்துல் கத்ரு இரவில் பெருவாரியாக அவர்கள் விஜயம் செய்கிறார்கள் .
வஹியைப் பதிவு செய்பவர்களில் ஒருவராகிய ஹள்ரத் ஹன்லலா ரளி ) அவர்கள் அறிவிக்கிறார்கள் : ” ஒரு நாள் ஹள்ரத் அபூபக்கர் ( ரளி ) அவர்கள் என்னிடம் வந்து ‘ நண்பரே ! எப்படி இருக்கிறீர்கள் ? ‘ என்று விசாரித்தார்கள் . ” வேடதாரியாகவல்லவா இருக்கிறேன் ” என்று பதில் கூறினேன் . சுப்ஹானல்லாஹ் நண்பரே என்ன கூறுகிறீர்கள் ? ‘ என அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள் . ” இல்லை ! நபிகள் நாயகம் ( ஸல் ) அவர்களின் அவையில் நாம் அமர்ந்திருக்கிறோம் . அப்போது அண்ணலார் சுவனத்தைப் பற்றியும் , நரகத்தை பற்றியும்’ பிரஸ்தாபிக்கிறார்கள் . அப்போது நாம் அவற்றைக் கண்ணால் பார்ப்பதைப் போன்று உணர்கிறோம் . ஆனால் , அண்ணலாரின் சந்நிதானத்திலிருந்து நாம் வெளியேறிவிட்டால் மனைவி , மக்கள் , நிலபுலன்கள் இவற்றுடன் கலந்துவிடுகிறோம் . அண்ணலார் அவையில் பெற்ற உணர்வுகளையெல்லாம் அப்போது நாம் மறந்து விடுகிறோம் . இது வேடதாரித்தனம் அல்லவா ? என நான் கூறினேன் .
எனது அங்கலாய்ப்பைக் கூர்ந்து செவியேற்றுக் கொண்டிருந்த ஹள்ரத் அபூபக்கர் ( ரளி ) அவர்கள் அல்லாஹ்வின் மீது ஆணையாக நானும் அப்படித்தான் உணருகிறேன் என்று கூறினார்கள் . பின்பு நாங்கள் இருவரும் அண்ணலார் அவை நோக்கி நடந்தோம் . அண்ணலாரைக் கண்டதும் நான் ஹள்ரத் அபூபக்கர் ( ரளி ) அவர்களிடம் கூறியதைப் போன்றே கூறினேன் . எனது வார்த்தைகளைச் செவியேற்ற அண்ணலார் கூறினார்கள் : ” எனது உயிரை தன் கைவசம் வைத்திருப்பவன் மீது ஆணையாகக் கூறுகிறேன் . என் அவையில் அமர்ந்திருக்கும் போது நீங்கள் இருந்த மனோ நிலையில் மாறாது எப்போதுமே இருப்பீர்களாயின் உங்களின் படுக்கையறையிலும் , நீங்கள் செல்லும் வீதிகளிலும் உங்களை மலக்குகள் வந்து சந்தித்து கைகுலுக்குவார்கள் . இருப்பினும் ஹன்லலா ! அப்படியும்.. இப்படியும் தான் வாழ்க்கை.. என்று சொன்னார்கள்.
இந்த நபிமொழியில் சுட்டிக் காட்டப்படுவதைப் போன்று ரமளானில் நம்மிடம் காணப்பட்ட குணமாற்றங்களால் வானத்து மலக்குள் நம்மோடு நேசம் பாராட்ட , பூமிக்கு விஜயம் செய்கிறார்கள் . இதனால் தான் இக்ரஃ என்ற அத்தியாயத்தை அடுத்து இன்னா அன்ஸல்னா அத்தியாயத்தை குர்ஆனில் அல்லாஹ் இடம் பெறச் செய்திருக்கிறான் . இக்ரஃ என்ற அத்தியாயத்தில் நபிகள் நாயகம் ( ஸல் ) அவர்களுக்கு ஹள்ரத் ஜிப்ரயீல் ( அலை ) அவர்களின் அணைப்பு கிடைத்த வரலாறு எடுத்தோதப்படுகிறது . அது போன்றே அவர்களை பின்பற்றியோருக்கு ஹள்ரத் ஜிப்ரயீல் ( அலை ) அவர்களின் மானசீக அணைப்புக் கிடைப்பதை இன்னா அன்ஸல்னா அத்தியாயத்தில் எடுத்துரைக்கப்படுகிறது . நபிகள் நாயகம் ( ஸல் ) அவர்கள் ” தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் ” என்ற நிலையில் தன்னைப் பின்பற்றியோர்க்கும் அந்தப் பாக்கியம் கை கூடி வர அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்திருக்கக்கூடும் அண்ணலாருக்குக் கிடைத்த அணைப்பு அவர்களைக் கல்விக் கடலாக மாற்றியது . ஞானக் கருவூலமாக உருவாக்கியது . அப்துல்லாஹ்வின் மைந்தனாக இருந்த அவர்களை , அகிலத்தின் தலைவராக மாற்றி யமைத்தது . காலம் உள்ளளவும் , அதற்குப் பின்னரும் அவர்கள் புகழ் மங்காத நிலையை ஏற்படுத்தியது . அல்லாஹ்வின் தனிப்பட்ட அன்புக்குப் பாத்திர மானவர்களாக ஆக்கியது . அது போன்றே லைலத்துல் கத்ருடைய இரவில் ஹள்ரத் ஜிப்ரயீல் ( அலை ) அவர்களின் மானசீகமான அணைப்புக் கிடைக்கப் பெற்றவர்கள் வாழ்க்கையில் சிறிதளவாவது முன்னேற்றம் காணுவார்கள் என்பதில் ஐயப்பாடு கிடையாது .
எனவே கல்வியில் முன்னேற்றம் காணத் துடிப்பவர்கள் , செல்வத்தில் சீர்நிலை பெற ஆசைப்படுபவர்கள் , மக்கள் மத்தியில் கவுரவமாக வாழ்ந்து மறைய விரும்புபவர்கள் , ஆன்மீகத்தில் முன்னேற்றம் காணத் தேட்டம் உள்ளவர்கள் அனைவரும் , எதிர்பார்த்து இருக்க வேண்டியது அந்த லைலத்துல் கத்ரை ! அதில் கிடைக்கும் ஹள்ரத் ஜிப்ரயீல் ( அலை அவர்களின் அணைப்பை !
அல்லாஹ்வின் ஆனந்தம்
அடியார்கள் பகற்காலங்களில் நோன்பிருந்து , இராக் காலங்களில் தொழுது வரும்போது , அவர்களை மலக்குகளுக்கு காட்ட வேண்டுமென்று இறைவன் விரும்புகின்றான் . ” மனித குலத்தைப் படைக்க வேண்டாமென்று கூறினீர்களே ! அவர்களைப் பார்த்தீர்களா ? என்றைய தினம் லைலத்துல் கத்ரு என்று தெரியாமல் , அதைத் தேடுவதில் எவ்வளவு ஆர்வம் காட்டுகிறார்கள் தெரிந்திருந்தால் எவ்வளவு ஈடுபாடு கொள்வார்கள் . பூமிக்குச் சென்று அதை நேரில் கண்டு வாருங்கள் ” என்று பெருமையுடன் இறைவன் கூறுகிறான் . இக்கருத்தை பிஇத்னி ரப்பிஹிம் ( அவர்கள் இறைவனின் உத்தரவின் பேரில் ) என்ற வசனம் சுட்டுகிறது . இவ்வாறே திக்ரு மஜ்லிஸ் நடைபெறும் போது அதில் கலந்து கொள்ளவும் மலக்குகள் வருகை புரிகிறார்கள் . குர்ஆன் ஓதப்படும் அவையிலும் அவர்களின் வருகை நிகழுகிறது .
நபிகள் நாயகம் ( ஸல் ) அவர்கள் நவின்றார்கள் :
அல்லாஹ்வின் இல்லங்களில் ஒரு இல்லத்தில் சில மக்கள் ஒன்று கூடி அல்லாஹ்வின் வேதத்தை ஓதுகிறார்கள் . அதை தங்களுக்கிடையில் பாடம் நடத்திக் கொள்கிறார்கள் . அப்போது அவர்களை அமைதி தழுவுகிறது . அவர்கள் மீது அருள் இறங்குகிறது . அவர்களை மலக்குகள் சூழ்ந்து கொள்கிறார்கள் . அவர்களைப் பற்றி அல்லாஹ் தன்னிடம் இருப்பவர்களிடத்தில் பெருமையாகப் பேசிக் கொள்கிறான்
அறிவிப்பாளர் : ஹள்ரத் அபூஹுரைரா ( ரளி )
நூல் : முஸ்லிம்
வானவர்கள் அதிக நன்மை பெறவே பூமிக்கு வருகிறார்கள்
லைலத்துல் கத்ரு இரவு என்பது ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது என்பது இந்த பூமியில் செய்யப்படும் இபாதத்துகளுக்குத்தான் –
கஃபத்துல்லாஹ்வில் தொழுதால் ஒரு லட்சம் பங்கு அதிக நன்மை , பைத்துல் மக்தஸில் தொழுதால் ஐம்பதாயிரம் நன்மை , மஸ்ஜிதுன் நபவிய்யில் தொழுதால் பத்தாயிரம் நன்மை என அறிவிக்கப்பட்டிருப்பதால் , மக்கள் அங்கே சென்று அதிக நன்மையைப் பெற முயற்சிகள் மேற் கொள்கிறார்கள் . அது போன்றே பூமியில் செய்யப்படும் இபாதத்துகளுக்கு முப்பதாயிரம் மடங்கு நன்மையளிக்கப்படுகிறது என்பதை அறிந்த மலக்குகள் , அந்த நன்மையை தாங்களும் அடைவதற்காக அவர்கள் பூமிக்கு விஜயம் செய்கிறார்கள் .
அதைப்போன்றே மலக்குகளின் வருகையால் முஃமின்கள் நன்மையையும் அதிகம் பெறுகிறார்கள்
அத்தகைய நன்மையின் பெருக்கம் தொழுகையில் நிகழுவதை நபிகள் நாயகம் ( ஸல் ) அவர்கள் தெரியப்படுத்தினார்கள் . இமாம் ” வலள் ளால்லீன் ” என்று கூறினால் நீங்கள் ஆமீன் என்று கூறுங்கள் எவருடைய ஆமீன் கூறுவது மலக்குகளின் ஆமீன் கூறுவதோடு ஒன்றி விடுகிறதோ அவருடைய முன் பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டு விடுகின்றன . அறிவிப்பாளர் : ஹள்ரத் அபூஹுரைரா ( ரலி ) நூல் : முஸ்லிம்
முஃமின்கள் நன்மையை அதிகரிப்பதற்காக அவர்கள் செய்யும் இபாதத்துக்களில் கலந்து கொள்ளுமாறு மலக்குகளுக்கு இறைவன் உத்தரவு பிறப்பிக்கிறான் .
பஜ்ரு வேளை வரை சாந்தி
سَلٰمٌ ۛهِىَ حَتّٰى مَطْلَعِ الْفَجْرِ
ஈடேற்றம் உண்டாகுக! (அவ்விரவின் இச்சிறப்பு) விடியற்காலை உதயமாகும் வரை (நீடிக்கிறது).
(அல்குர்ஆன் : 97:5)
பூமிக்கு வருகை புரியும் மலக்குகளும் , ஹள்ரத் ஜிப்ரயீல் ( அலை அவர்களும் தாங்கள் சந்திக்கும் அனைத்து வணக்கசாலிகளுக்கும் ஸலாம் கூறிக்கொண்டே இருக்கிறார்கள் . இந்த நிகழ்வு ( பஜ்ரு ) விடியல் ஆகும் வேளை வரை நீடிக்கிறது .
மேலும் அந்த இரவு முழுவதும் சாந்தி நிறைந்ததாகவே இருக்கிறது . பொதுவாக எல்லா இரவுகளிலும் நல்லவையும் நடக்கும் ; அல்லாதவையும் நடக்கும் . ஆனால் லைலத்துல் கத்ரு இரவில் நல்லது மட்டும் தான் நடக்கும் , ஷைத்தானின் சூழ்ச்சிகள் அந்த இரவில் தோல்வியையே தழுவும் , செய்வினை செய்பவர்களின் செயல்கள் அன்று இரவு பயனைத் தராது . நோய்க்கிருமிகள் வானத்திலிருந்து இறக்கப்படாது . புயல் , இடி , பேய் மழை போன்ற அபாயங்கள் , அன்றிரவு நிகழ்வுறாது . சுருங்கக் கூறுமிடத்து அந்த இரவு அனைத்து மக்களுக்கும் சாந்தியைத் தரும் இரவாகவே இருக்கும் .
அன்று இரவு வணக்கத்தில் ஈடுபட்டு , மலக்குகளின் மானசீகமான அணைப்புக்கு அருகதை பெறுபவர்கள் , நோய் நொடிகளிலிருந்து . ஸலாமத்தையும் , கவலைகள் பிரச்சினைகளிலிருந்து ஸலாமத்தையும் , ஆபத்துக்களிலிருந்து ஸலாமத்தையும் பெறுகிறார்கள் .
ரமளான் மாதத்தின் ஒட்டு மொத்த பலன் !
லைலத்துல் கத்ரு இரவில் கிடைக்கின்ற ஸலாமத்தை விளக்குவதற்கு ரமளான் நோன்பின் பயன்பாடுகள் பற்றி அல்குர்ஆன் வெளியிடும் நற்செய்தி களை ஆதாரமாகக் கொள்ளலாம் . ஏனெனில் ரமளான் மாதத்தின் ஒட்டு மொத்த பலன்கள் லைலத்துல் கத்ரு இரவில் கிடைக்கின்றன . ரமளான் நோன்பு பற்றி இறைவன் குறிப்பிடும் போது :
يٰٓـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا كُتِبَ عَلَيْکُمُ الصِّيَامُ کَمَا كُتِبَ عَلَى الَّذِيْنَ مِنْ قَبْلِکُمْ لَعَلَّكُمْ تَتَّقُوْنَۙ
நம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன்னுள்ளவர்கள் மீது கடமையாக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் நோன்பு நோற்பது கடமையாக்கப்பட்டுள்ளது. (அதனால்) நீங்கள் இறை அச்சமுடைய வர்களாக ஆகலாம்.
(அல்குர்ஆன் : 2:183)
நோன்பு நோற்ற எந்த முன்னாலுள்ளவர்கள் பற்றி அல்குர்ஆன் குறிப்பிடுகிறது என்று ஆய்வு செய்யும் போது , இரண்டு வரலாறுகள் கிடைக்கின்றன .
ஒன்று ஹள்ரத் மூஸா நபி ( அலை ) அவர்கள் பற்றியதாகும் . அவர்களுக்கு எதிர்பாராவண்ணம் அல்லாஹ்விடம் உரையாடும் பாக்கியம் கிட்டுகிறது . அந்த இன்பத்தில் தோய்ந்து போன அவர்கள் மீண்டும் அத்தகைய சந்திப்பை விரும்பகிறார்கள் .
அவர்களை 30 நாட்கள் நோன்பிருந்து வருமாறும் , அப்போது முன்பு போன்றே அவர்களை சந்திப்பதாகவும் அல்லாஹ் வாக்களிக்கிறான் . முப்பதாம் நாளன்று அல்லாஹ்வை சந்திக்கப் போகும் பூரிப்பில் ஹள்ரத் மூஸா நபி ( அலை ) அவர்கள் பல்துலக்கி , சிகை அலங்காரம் செய்து , மணம் பூசி , புத்தாடைகள் புனைந்து வாக்களிக்கப்பட்ட தூர் மலையைச் சென்றடைகிறார்கள் .
ஆனால் அவர்கள் அல்லாஹ்வைச் சந்திக்கப் போகும் பூரிப்பில் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு அல்லாஹ்வின் அனுமதியைப் பெற்றிருக்கவில்லை . எனவே மேலும் பத்து நாட்கள் நோன்பிருந்து வருமாறு அல்லாஹ் பணிக்கிறான் . அவ்வாறே நாற்பது நாட்கள் நிறைவு
இக்குறிப்பை அல்குர்ஆன் வசனம் தெரிவிக்கிறது .
وَوٰعَدْنَا مُوْسٰى ثَلٰثِيْنَ لَيْلَةً وَّاَتْمَمْنٰهَا بِعَشْرٍ فَتَمَّ مِيْقَاتُ رَبِّهٖۤ اَرْبَعِيْنَ لَيْلَةً
மூஸாவுக்கு நாம் முப்பது இரவுகளை வாக்களித்தோம்; பின்னர், மேலும் அதை பத்து (இரவுகளைக்) கொண்டு பூர்த்தியாக்கினோம்; இவ்வாறாக அவருடைய இறைவன் (வாக்களித்த) காலக்கெடு நாற்பது இரவுகளாக முழுமை பெற்றது.
(அல்குர்ஆன் : 7:142)
மற்றொரு வரலாறு ஹள்ரத் மர்யம் ( அலைஹா ) பற்றியதாகும் . அவர்கள் அழகான ஆண் குழந்தையொன்று பெற்றெடுக்கிறார்கள் . ஆனால் தான் பெற்றெடுத்த குழந்தையை மக்கள் முன் கொண்டு செல்ல அவர்கள் தயங்குகிறார்கள் . தான் ! துணையின்றி அதிசயமாகப் பெற்றெடுத்த விபரத்தை மக்களின் சிற்றறிவு ஏற்றுக் கொள்ளாதே ! அதனால் தனது புனிதத்துக்கு அவர்கள் களங்கம் கற்பிப்பார்களே ? என்ற எதிர்ப்பார்ப்புத்தான் அவர்களின் தயக்கக் காரணம் .
அதுபோது அவர்களை பெயர் கூவி அழைத்த இறைவன் அவர்களை நோன்பு நோற்குமாறு பணிக்கிறான் . அதுவும் உண்ணா – இருப்பதுடன் , பேசா நோன்பாகவும் அமைய வேண்டுமென்று கூறுகின்றான். அவ்வாறு நோன்பிருந்து கொண்டு குழந்தையை ஏந்தி ஊருக்குள் செல்லுமாறும் , மனிதர்களில் எவராவது பேச்சுக் கொடுத்தால் , தான் இறைவனுக்காக பேசா நோன்பு நோற்றிருக்கிறேன் என்று கூறுமாறு இறைவன் மொழிகிறான் .
இறையழைப்பு கூறியதைப் போன்றே ஹள்ரத் மர்யம் ( அலைஹா ) செயல்படுகிறார்கள் . அவர்கள் எதிர்பார்த்திருந்ததைப் போன்றே மக்கள் பழிச் சொற்களை கட்டவிழ்த்து விடுகிறார்கள் . பிறந்த குழந்தை அப்போது அதிசயமாக வாய் திறந்து பேசி அவர்களின் வாய்களை அடைக்கிறது . தனது தாயின் மீதுள்ள பழியைத் துடைக்கிறது .
நான் அல்லாஹ்வின் அடிமை ! அதுவும் சாதாரண அடிமையல்ல . எனக்கு அவன் வேதம் தந்திருக்கிறான் . நான் எங்கிருந்தாலும் , அங்கு சுபிட்சமும் பரக்கத்தும் நிரம்பி வழியும் , நான் உயிரோடிருக்கும் வரை தொழுகையையும் , ஜக்காத்தையும் நிலையாகச் செய்து வருமாறும் எனது தாய்க்கு தொண்டூழியம் செய்து வருமாறும் எனக்கு அவன் பணித்திருக்கிறான் . அடக்குமுறை செய்பவனாகவோ , துர்பாக்கியசாலி யாகவோ என்னை அவன் ஆக்கவில்லை பிரியும் நாளிலும் , திரும்பவும் உயிர் கொடுத்து எழுப்பப்படவிருக்கும் . நான் பிறந்த நாளிலும் , உயிர் கொடுத்து எழுப்ப பட இருக்கும் நாளிலும் என் மீது சாந்தி நிலவட்டுமாக !
மூச்சுவிடாமல் பேசி முடித்த அந்த அதிசயக் குழந்தைதான் மர்யமின் குமாரர் ஈஸாவாகும்
அல்குர்ஆன் 19 : 20 – 34
இந்த இரண்டு வரலாறுகளும் நோன்பின் மூலம் நாம் அடையும் பாக்கியங்களை கோடிட்டுக் காட்டுகின்றன , ஹள்ரத் மூஸா நபி ( அலை ) அவர்கள் நோன்பிருந்து அல்லாஹ்விடம் , உரையாடும் பாக்கியத்தைப் பெற்றதைப்போன்று , நாமும் நோன்பிருப்பதன் மூலம் இறைவனை மறுமையிலும் , இறைவனின் அன்பை இவ்வுலகிலும் காணக் – கிடைக்கிறோம் ,
ஹள்ரத் மர்யம் ( அலை ) அவர்கள் நோன்பிருப்பதன் மூலமாக அவர்களைச் சூழ்ந்திருந்த துன்பமேகங்கள் அன்றன . பிறந்த குழந்தையை பேச வைத்து இறைவன் பெரிய அதிசயத்தை நிகழ்த்தி அவர்களின் சங்கடங்களைப் போக்கினான் . அதுபோன்று , நாம் நோன்பிருந்தால் நம் ” வாழ்க்கையில் ஒரு மறுமலர்ச்சி ஏற்படும் .
ஒரு அதிசயத்தை நிகழ்த்தித்தான் , அந்த மறுமலர்ச்சியை ஏற்படுத்த முடியுமென்றால் அந்த அதிசயத்தை நிகழ்த்தவும் அல்லாஹ் தயங்க மாட்டான் .
உங்கள் முன்னாலுள்ளவர்கட்கு கடமையாக்கப்பட்டதைப் போன்று உங்களுக்கும் நோன்பு கடமையாக்கப்படுகிறது என்று கூறி அவர்கள் பெற்ற பயன்பாடுகள் நமக்கும் கிடைக்கும் என்பதை அறிவுறுத்துகிறான் .
– ரமளான் மாதத்தின் ஒட்டு மொத்த பலன்களும் பெறக் கிடைக்கும் லைலத்துல் கத்ர் இரவில் , ஹள்ரத் முஸா நபி ( அலை ) . மர்யம் ( அலைஹா ) ஆகிய இருவருக்கும் கிடைத்த பாக்கியங்கள் நிரப்பமாக – ) கிடைக்கும் .
தான் சந்திக்க விரும்பும் அடியார்களிடம் , அல்லாஹ் ஜிப்ரயீல் ( அலை ) அவர்களையே அனுப்பி வைப்பான் என்பது நாம் அறிந்த செய்தி அல்குர்ஆனும் கூறுகிறது :
வஹ்யி , அல்லது திரைமறைவு , அல்லது தூதரை அனுப்புவது ஆகிய முறையிலல்லாது எந்த மனிதரிடத்திலும் அல்லாஹ் உரையாடுவதில் –
அல்குர்ஆன் : 42 : 51
ஹள்ரத் மர்யம் ( அலைஹா ) அவர்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட சாந்தி நோன்பாளிகளுக்கு லைலத்துல் கத்ர் இரவில் மலக்குகள் வழியாகப் பெறக் கிடைக்கிறது .
ஸலாம் என்றால் என்ன ?
லைலத்துல் கத்ரு இரவில் கிடைக்கப்பெறும் ஸ்லாம் என்பது எத்தகையது என்பதை அறிய வேண்டுமானால் , அந்த வார்த்தையை அல்லாஹ் உபயோகித்திருக்கும் இடங்களை அறிவது அவசியமாகும் .
ஹள்ரத் நூஹ் நபி ( அலை ) அவர்கள் காலத்தில் உலக மக்கள் வெள்ளப் பிரளயத்தால் அழிக்கப்பட்டார்கள் . உலகமே கடலாக மாற்றப்பட்ட அந்த நாட்களில் நபி அவர்களும் , அவர்களை ஈமான் கொண்டவர்களும் பல நாட்கள் கப்பலில் மிதந்தார்கள் .
இறுதியில் கப்பல் தரையிறங்கிய போது அல்லாஹ் கூறினான் : ” ஸலாமுன் அலா நூஹின் ஃபில் ஆலமீன் ” ( உலகத்து மக்களில் நூஹின் மீது ஸலாம் உரித்தாகட்டுமாக ! )
அல்குர்ஆன் 37 : 79 –
ஹள்ரத் இப்ராஹீம் நபி ( அலை ) அவர்கள் நும்ரூத் மன்னன் ஏற்படுத்திய நெருப்புக்குண்டத்திலிருந்து மீண்டு , பின்னர் இறைவன் ஏற்படுத்திய சோதனையாகிய பிள்ளை ஹள்ரத் இஸ்மாயீல் ( அலை ) அவர்களை குர்பானி கொடுப்பதிலும் வெற்றி கண்ட போது , அல்லாஹ் அவர்களுக்கு கூறினான் :
” ஸலாமுன் அலா இப்றாஹீம் ( இப்றாஹீமை ஸலாம் தழுவட்டுமாக ! ) ”
அல்குர்ஆன் 37 : 109
ஃபிர்அவ்னையும் அவனது சகாக்களையும் அழித்து , அவனது கொடுமைகளுக்கு முடிவு கட்டியபின் , தவ்ராத் வேதம் வழங்கி ஹள்ரத் மூஸா ( அலை ) அவர்களை கவுரவித்த போது அல்லாஹ் கூறினான் :
” ஸலாமுன் அலா மூஸா வ ஹாரூன் ( மூஸா ஹாரூன் இருவர் மீதும் ஸலாம் இறங்கட்டுமாக ! ) ”
அல்குர்ஆன் 37 : 120
ஹள்ரத் இல்யாஸ் நபி ( அலை ) அவர்கள் உயிருடனே சுவனத்துக்கு உயர்த்தப்பட்டபோது அல்லாஹ் கூறினான் : ” ஸலாமுன் அலா இல்யாஸீன் ( இல்யாஸின் என்பவர் மீதும் ஸலாம் ” நிகழுவதாக ! ) ” அல்குர்ஆன் 37 : 130
பேரபாயத்திலிருந்து காக்கப்பட்ட போது அவர்களுக்கு ஸலாம் என்ற வார்த்தை கூறி இறைவன் நல்வாழ்த்துக் கூறியிருக்கிறான் , மேலும் அந்த நால்வருக்குமே எஞ்சிய காலத்தில் புகழோடு வாழக் கடவீர் ! என்றும் இறைவன் சோபனம் கூறியிருக்கிறான் . இந்த விபரத்தை அந்த வசனம் தெரிவிக்கிறது .
லைலத்துல் கத்ருடைய இரவில் சொல்லப்படக்கூடிய ஸலாம் சாமானியமானதல்ல . மேற்கூறிய நபிமார்களுக்கு சொன்ன இறைவனே நமக்கும் அந்த வாழ்த்தைக் கூறுகிறான் . அந்த வாழ்த்துக்கு நாம் அருகதையாகி விட்டால் , நாம் மனிதப் பிறவி எடுத்ததன் பயன்பாட்டையே ” பெற்று விடுவோம் ,
நாம் நூறு வயது வாழ்ந்தாலுங்கூட , பருவவயது வரை உள்ள பதினாறு ஆண்டுகளைத் தள்ளி விட்டால் , மீதி 84 ஆண்டுகள் தான் வணக்கத்தில் ! ஈடுபட முடியும் . அந்த 84 ஆண்டுகளை வணக்கத்திலேயே கழித்த பாக்கியம் ஒரு இரவில் பெற்று விடுகிறோமே ! நம் வாழ்நாளை இபாதத்தில் கழிப்பதற்காகத்தானே நாம் மனிதப்பிறவி எடுத்ததாக அல்குர்ஆன் ( 51 : 56 ) கூறுகிறது . இதற்கு மேலும் என்ன வேண்டும் ?
பெயர் வந்த காரணம்
கத்ரு என்ற அரபிச் சொல்லுக்கு மூன்று பொருள் காணக்கிடைக்கிறது .
1 . கண்ணியம் , இந்த அத்தியாயத்தில் லைலத்துல் கத்ரு என்ற சொல் மூன்று தடவை உபயோகிக்கப்பட்டுள்ளது . அதாவது கண்ணியமிக்க வேதம் , கண்ணியம் பொருந்திய மலக்கின் வாயிலாக , கண்ணியம் நிறைந்த சமுதாயத்துக்கு அருளப்பெற்றது என்பது பொருளாகும் .
2 . ( களா – கத்ரு ) அளவு நிர்ணயம் . அதாவது வரும் ஆண்டின் நடவடிக்கை பற்றிய குறிப்புக்களை பராஅத் இரவில் மலக்குகளிடம் அல்லாஹ் ஒப்படைப்பதாகக் கூறப்படுகிறதே அதே தகவல் லைலத்துல் கத்ரு இரவில் நடப்பதாகவும் , இந்த அத்தியாயத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள ” மின்குல்லி அம்ரின் ” என்ற சொல் அதைக் குறிப்பதாகவும் சிலர் கருத்துத் தெரிவிக்கின்றனர் .
3 . நெருக்கடி , பெருவாரியான மலக்குகளின் வருகையால் அன்று பூமி நெருக்கடியாகி விடுவதால் அந்தப் பெயர் கூறப்படுகிறது .
மறைந்த மர்மம் என்ன ?
லைலத்துல் கத்ரு இரவு எப்போது ? என்பதில் எண்பதுக்கும் மேற்பட்ட கருத்துக்கள் காணப்படுகின்றன .
பிந்திய பத்து நாட்களிலுள்ள ஒற்றை இரவுகளில் தேடிக் கொள்ள வேண்டியது என ஆதாரப் பூர்வமான நபி மொழிகள் குறிப்பிடுகின்றன .
ஆனால் , அதுவாக இருக்கலாம் , இதுவாக இருக்கலாம் என்ற யூகங்களை வெளியிடுவதில் தவறில்லை . இருபத்தி ஏழாம் இரவுதான் என பலர் கருதுகின்றனர் . லைலத்துல் கத்ரு என்ற சொல் இந்த அத்தியாயத்தில் மூன்று முறை பயன்படுத்தப்பட்டுள்ளது . ஒரு வார்த்தையில் ஒன்பது எழுத்துக்கள் , எனவே 27 என அவர்கள் கணிப்புச் செய்கின்றனர் .
மேலும் அந்த அத்தியாயம் 30 வார்த்தைகளைக் கொண்டதாகும் . அவற்றுள் 27 ஆம் வார்த்தை ஹிய ( அது ) எனப் பொருள் கொண்டிருக்கிறது . அதைக் கருத்தில் கொண்டால் 27 தான் லைலத்துல் கத்ரு என்று அறியக் கிடைக்கிறது .
அந்த இரவு எல்லா ஆண்டுகளிலும் , ஒரே குறிப்பிட்ட நாளாக இருப்பதில்லை . ஒரு வருடம் 21 ஆக இருந்தால் மற்றொரு வருடம் 25 ஆக இருக்கலாம் . இன்னொரு வருடம் 29 ஆக வரலாம் எனவும் சிலர் . கூறுகின்றனர் .
அதையொட்டி தக்கலை மாமேதை பீர் முஹம்மது அப்பா அவர்கள் ஒரு கணிப்பை வெளியிட்டிருக்கிறார்கள் .
முதல் பிறை ஞாயிறு ஆனால் பிறை 29 லைலத்துல் கத்ரு , திங்கள் என்றால் 21 , செவ்வாய் என்றால் 27 , புதன் என்றால் 29 , வியாழன் என்றால் 25 , வெள்ளி என்றால் 27 , சனி என்றால் 23 .
லைலதுல் கத்ரின் அறிகுறி
உபை பின் கஅப் (ரலி) அவர்களிடம் “ஆண்டு முழுவதும் இரவில் நின்று வணங்கியவர் லைலத்துல்கத்ர் இரவை அடைந்துகொள்வார்” என்று அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள்கூறிவருவதாகச் சொல்லப்பட்டது. அதற்கு உபை (ரலி) அவர்கள், “எவனைத் தவிர வேறுஇறைவன் இல்லையோ அவன்மீது சத்தியமாக! அது (லைலத்துல்கத்ர்) ரமளானில்தான் உள்ளது (இவ்வாறு சத்தியம் செய்தபோது அன்னார் “அல்லாஹ்நாடினால்” என்று கூறாமல் உறுதியாகவே குறிப்பிட்டார்கள்) அல்லாஹ்வின்மீதாணையாக! அது எந்த இரவு என்பதை நான் அறிவேன்; அந்த இரவில் நின்றுவணங்குமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்குக்கட்டளையிட்டார்கள். அது ரமளானில் இருபத்தி ஏழாம் இரவேயாகும். அ(துலைலத்துல்கத்ர்என்ப)தற்கு அடையாளம், அந்த இரவை அடுத்துவரும் காலைப் பொழுதில் சூரியன்வெண்ணிறத்தில் ஒளியிழந்து (மங்கலாக) உதிக்கும்” என்று கூறினார்கள். நூல்: முஸ்லிம் 1397, பாகம்6
உப்பாதா இப்னு ஸாமித் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள்அறிவிக்கின்றார்கள், இறைத்தூதர் நவின்றார்கள், லைலதுல் கத்ரின் அடையாளம் ஒளிவீசும் நிலவுள்ள இரவைப் போன்று தெளிந்த பிரகாசமான அமைதியான இரவு. அதில்சூடோ குளிரோ இருக்காது. உதயக்காலைவரை எரிநட்சத்திரங்கள் எறியப்படுவதில்லை. மேலும், அதன்அறிகுறி அன்றைய காலைச் சூரியன் சந்திரனைப் போன்று ஜுவாலையின்றிக் நேராகக் கிளம்பும். அன்றைய தினச்சூரியனுடன் ஷைத்தானும் கிளம்ப அனுமதி இல்லை. (இமாம் அஹ்மத், மஜ்மஃ அஸ்ஸவாயிது,பாகம் – 04, பக்கம் – 75)
லைலத்துல் கத்ரு இரவுக்கு சில அடையாளங்கள் ஹதீதுகளில் கூறப்பட்டுள்ளன. அவை: அன்றைய இரவில் நட்சத்திரம் எரிந்துத விழாது. நாய் குரைக்காது. சூடும் குளிர்ச்சியும் இல்லாமல் மிதமான தன்மையாக இருக்கும். அன்று சூரியன் உதிக்கும்போது சுடர் அதிகமின்றி பிறையைப் போல் இருக்கும். மேலும் ஷைத்தான் வெளியில் வரமாட்டான் என்றும் கூறப்பட்டுள்ளது. – மஙானி
லைலத்துல் கத்ரின் அமல்கள்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்)அவர்கள் கூறினார்கள்:
எவர் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பாத்தவராகவும் லைலத்துல் கத்ரு இரவில்நின்று வணங்குகிறாரோ அவரது முந்திய பாவங்கள் மன்னிக்கப்படும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 35)
முடிந்த வரை ஸலவாத்தும், இஸ்திக்பாரும், திக்ருகளும், ஓதுங்கள்.
லைலத்துல் கத்ரின் துஆ:
ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா)அவர்கள் அறிவிக்கிறார்கள்:‘அல்லாஹ்வின் திருத்தூதரே! லைலத்துல் கத்ர் இரவு எது என்பதை நான் அறிந்தால் அதில் நான் என்ன சொல்ல வேண்டும்?’ என்று நான் கேட்டேன். அதற்கு
اَللّٰهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي
‘அல்லாஹும்ம இன்னக்க அஃபுவ்வுன் துஹிப்புல் அஃப்வ ஃபஃபுஅன்னி’ )பொருள்:அல்லாஹ்வே! நிச்சயமாக நீ மன்னிக்கக் கூடியவன். மேலும் மன்னிப்பை விரும்பக்கூடியவன் எனவே என்னை மன்னித்து விடுவாயாக!(என்று சொல் என்று கூறினார்கள்.
(நூற்கள்: அஹ்மது, நஸயி, ஹாக்கிம், இப்னுமாஜா 3850, திர்மிதி 3580)
துஆ என்பது ஒரு இபாதத்...
நாம் செய்யும் துஆ கபூல் ஆகிறது,அல்லது இல்லை அதை தாண்டி அது ஒரு தனி வணக்கம் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.
நபி சல் அவர்களுக்கு பல துஆக்கள் உலகில் கபூலாகவில்லை என்பதை நாம் அறிந்த செய்தியே!
நான் என் ரப்பிடம் மூன்று துஆ கேட்டேன்.இரண்டை தந்தான், ஒன்றை மறுத்துவிட்டான் என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.
பிர்அவ்னுக்கு எதிராக நபி மூஸா அலை அவர்கள்கேட்ட துஆ 40 ஆண்டுக்கு பின்னே கபூலானது.
துஆவின் அங்கீகாரம் மறுக்கப்படுவதும் தாமிதமாகுவதும் துஆவின் மீது நமக்கு அவநம்பிக்கையை ஏற்படுத்தி விடக்கூடாது.
துஆ கபூலாகும் ஒழுங்குகளை கவனத்துடன் பேண வேண்டும்.
அல்லாஹ்விடம் கவனத்துடன் கேட்கவேண்டும்.கவனக்குறைவான உள்ளங்களின் பக்கம் அல்லாஹ் ஏறிட்டும் பார்க்க மாட்டான்.துஆ கபூலாகும் என்ற உறுதியுடன் கேட்க வேண்டும்.ஹலால் ஹராமில் பேனுதலை கடைபிடிக்க வேண்டும்.
ஸஃது ரலி அவர்கள் நபி ஸல் அவர்களிடம் யா ரஸூலல்லாஹ்!என் துஆ கபூலாக நான் என்ன செய்ய வேண்டும்?என்று கேட்டபோது-
اطب مطعمك உன் உணவை ஹலாலாக்கு என்று உபதேசம் செய்தார்கள்.
துஆ என்பது மகத்தான ஆற்றல் கொண்டது.
நபி இப்ராஹீம் அலை அவர்களின் துஆவால் நான் உங்களுக்கு கிடைத்தேன் என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.
நபி ஸல் அவர்கள் துஆவின் ஒழுங்கை தம் தோழர்களுக்கு கற்றுக்கொடுத்தார்கள்
عن معاذ قال مر النبي صلى الله عليه وسلم على رجل يقول اللهم إني أسألك تمام النعمة قال هل تدري ما تمام النعمة قال تمام النعمة دخول الجنة والفوز من النار
நபி ஸல் அவர்கள் ஒருவரை கடந்து சென்றார்கள்.அவர் யா அல்லாஹ் பரிபூர்ண நிஃமத்தை உன்னிடம் கேட்கிறேன் என துஆச்செய்தார்.
அப்போது ஸல் அவர்கள் அம்மனிதரை அழைத்து பரிபூர்ண நிஃமத் என்றால் என்னவென்று தெரியுமா?என கேட்டார்கள் அதற்கு அவர் அல்லாஹ்வின் தூதர் அவர்களே!எனக்கு தெரியாது,என்ற போது சுவனத்தில் நுழைவதும் நரகிலிருந்து வெற்றிபெறுவதுமாகும் என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.
ثم مر على رجل يقول اللهم اني أسألك الصبر قال قد سألت ربك البلاء فسله العافية
இன்னொரு தோழர் யா அல்லாஹ் எனக்கு பொருமையை கொடு என்று துஆச்செய்தார்கள்.அப்போது ஸல் அவர்கள் அம்மனிதரிடம்,நீர் உம் ரப்பிடம் சோதனையை கேட்கிறாயா?என்று கண்டித்தார்கள்.அல்லாஹ்விடம் ஆரோக்கியத்தை கேளுங்கள் என்று கூறினார்கள்.
اللهم اني اعوذ بك من الفتنة யா அல்லாஹ் என்னை பித்னாவை விட்டும் பாதுகாப்பாயாக என துஆச்செய்துகொண்டிருந்த ஒருவரை உமர் ரலி அவர்கள் கடந்துசென்றபோது-யா அல்லாஹ் இவர் துஆவை விட்டும் என்னை பாதுகாப்பாயாக என கூறினார்களாம்.
காரணம் கேட்டபோது அல்லாஹ் தன் வான்மறையில் பொருளும் பிள்ளை யும் பித்னா என்று கூறுகிறான்.பொருளும் பிள்ளையும் உனக்கு வேண்டாமா? என விளக்கம் தந்தார்கள்.
நபி ஸல் அவர்கள் தம் தோழர்களுக்கு துஆவின் மீது அபாரமான நம்பிக்கையை ஏற்படுத்தினார்கள்.
دخل رسول الله صلى الله عليه وسلم، ذات يوم المسجد فإذا هو برجل من الأنصار يقال له: أبو أمامة، فقال يا أبا أمامة: ما لي أراك جالساً في المسجد في غير وقت الصلاة؟ قال: هموم لزمتني وديون يا رسول الله،
قال: أفلا أعلمك كلاماً إذا أنت قلته أذهب الله عز وجل همك وقضى عنك دينك؟ قال: قلت بلى يا رسول الله، قال: قل إذا أصبحت وإذا أمسيت: اللهم إني أعوذ بك من الهم والحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال، قال: ففعلت ذلك فأذهب الله عز وجل همي وقضى عني ديني
அபூ உமாமா ரலி என்ற நபித்தோழரை பள்ளிவாசலில் கண்ட நபி ஸல் அவர்கள்,த்ழுகை அல்லாத நேரத்தில் இங்கு வர காரணம் என்ன?என கேட்டபோது கடன் சுமையும் கவலையும் என்று நபி ஸல் அவர்களிடம் கூறிய போது ஸல் அவர்கள் அவர்களுக்கு கற்றுக்கொடுத்த துஆ இது:
اللهم إني أعوذ بك من الهم والحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال
அதற்கு பிறகு எனக்கு கடன் பிரச்சனையும் தீர்ந்தது கவலையும் போய்விட்டது என்று கூறுகிறார்கள்.
அலி ரலி அவர்கள், அல்லாஹ்வின் கடமையில் குறைவு செய்துவிட்டேன் என்ன செய்யவேண்டும்? என நபியிடம் கேட்டபோது இந்த துஆவை கற்றுக்கொடுத்தார்கள்.அந்த துஆ இது:
"اللَّهُمَّ اكْفِنِي بِحَلَالِكَ عَنْ حَرَامِكَ، وَأَغْنِنِي بِفَضْلِكَ عَمَّنْ سِوَاكَ
காலித் ரலி அவர்கள் நபியிடம் கெட்ட கனவு வருகிறது என முறையிட்ட போது நபி ஸல் அவர்கள் பின்வ்ரும் துஆவை ஓதச்சொன்னார்கள்.
بسم الله أعوذ بكلمات الله التامة من غضبه وعقابه وشر عباده ومن همزات الشياطين وأن يحضرون
وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ ۖ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ ۖ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ
(நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால்; "நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன்;, அவர்கள் என்னிடமே(பிரார்த்தித்துக்) கேட்கட்டும்;, என்னை நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்" என்று கூறுவீராக
குறிப்பு அறியாதது நல்லதே
லைலத்துல் கத்ரு பற்றி அறிவிக்க நபிகள் நாயகம் ( ஸல் ) அவர்கள் வீட்டிலிருந்து வெளி வந்தார்கள் . முஸ்லிம்களில் இருவர் அப்போது சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள் . உடனே அண்ணலார் கூறினார்கள் :
” லைலத்துல் கத்ரு இரவு பற்றி அறிவிக்கத்தான் நான் இப்போது வந்தேன் . இன்னாரும் , இன்னாரும் அப்போது சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள் . ஆகவே அந்த விளக்கம் உயர்த்தப்பட்டு அநேகமாக அது உங்களுக்கு நல்லதாகவே இருக்கும் . எனவே ஏழு . ஐந்தில் அதை தேடிக் கொள்ளுங்கள் . ”
அறிவிப்பாளர் : ஹள்ரத் உபாதத் பின் ஸாமித் ( ரளி )
நாள் குறிப்புக் கிடைக்காத போது அதை அடைவதற்காக பிந்திய 10 நாட்களிலும் இபாதத் செய்பவர்கள் அதிக நன்மையைப் பெறுகிறார் : அல்லவா ? அது போன்றே குறிப்பாக ஒரு நாள் லைலத்துல் கத்ராக அறிவிக்கப்பட்டிருந்தால் , அன்றைய தினம் ஒருவர் அதை மதிக்காமல் ! பாவம் செய்து விட்டால் , மிகப்பெரும் பாவம் செய்தவராகக் கருதப்படுவார்
ஒரு சமயம் நபிகள் நாயகம் ( ஸல் ) அவர்கள் பஜ்ருத் தொழுகைக்கு பள்ளிவாசலுக்கு வந்தார்கள் . அங்கு ஒருவர் உறங்கிக் கொண்டிருந்தார் . உடனே ஹள்ரத் அலீ ( ரளி ) அவர்களை அழைத்து அவரை எழுப்பி விடுமாறு அண்ணலார் பணித்தார்கள் . ” யா ரஸுலல்லாஹ் ! நல்ல காரியங்களை பிறருக்கு முந்திக் கொண்டு தாங்கள் செய்வீர்களே ! இந்தக் காரியத்தை மட்டும் ஏன் தாங்கள் என்னைச் செய்யக் கோருகிறீர்கள் ? ” என ஹள்ரத் அலீ ( ரளி ) விளக்கம் கேட்டார்கள் . ” தூக்கத்திலிருக்கும் மனிதன் தான் செய்வதை அறிய மாட்டான் , நீங்கள் எழுப்பும் போது , அவர் எழ மறுத்துவிட்டால் அது பெரிய குற்றமாகாது . ஆனால் , நான் எழுப்பி அவர் எழ மறுத்துவிட்டால் அது பெரிய குற்றமாகிவிடும் ” என்று அண்ணலார் விளக்கம் தந்தார்கள் .
இந்த நிகழ்வு போன்று லைலத்துல் கத்ரு இன்று தான் என அறிந்தும் , அன்று பாவம் செய்பவர் பெரும் குற்றவாளியாகி விடலாம் அல்லவா ? இத்தகைய நன்மைகளுக்காக பல காரியங்கள் இறைவனால் மறைத்து வைக்கப்பட்டுள்ளன.
1 .அல்லாஹ்வின் திருநாமங்கள் இஸ்முல் அஃலம் மறைத்து வைக்கப்பட்டுள்ளது ( தவறாக பயன்படுத்தக்கூடாது என்பதற்காக )
2 . ஜூம்ஆ நாளில் துஆ அங்கீகரிக்கப்படும் ஒரு குறிப்பிட்ட நேரம் மறைத்து வைக்கப்பட்டுள்ளது .
3 . ஐவேளை தொழுகையில் அதிக நன்மை யளிக்கப்படும் ஸலாத்துல் உஸ்தா நடுத்தொழுகை எதுவென காட்டித் தரப்படவில்லை ,
4 . நாம் செய்யும் வணக்கங்களை அல்லாஹ் பொருந்திக் கொண்டானா ? என்பது பரம ரகசியமாகவே இருக்கிறது . ( அதை அறிந்து கொண்டால் சாமானியன் தலைகால் புரியாமல் பெருமையடிக்க ஆரம்பித்து விடுவான் . )
5 . பாவங்களில் எது அல்லாஹ்வின் கடுமையான கோபத்துக்கு ஒருவனை ஆளாக்குகிறது என்பதும் அறியத் தரப்படவில்லை . ( பாவிகள் . நிராசையர்கிவிடக்கூடாது அல்லவா ? )
6 . நடமாடும் மனிதர்களில் எவர் இறைநேசர் என்பது மறைத்து வைக்கப்பட்டுள்ளது . ( அவரை மக்கள் அல்லாஹ்வாகக் கருத ஆரம்பித்து விடுவார்கள் . )
7 . நாம் கேட்கும் பிரார்த்தனைகளில் எது அங்கீகரிக்கப்பட்டது என்பதைக் காட்டித் தரப்படவில்லை . ( மீண்டும் மீண்டும் துஆச் செய்து கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காக )
8 . எந்த நேரத்தில் மரணம் ஏற்படும் என்பதை மறைத்து வைக்கப்பட்டுள்ளது . ( அதை நினைத்து நினைத்து பயந்து சாகாமல் இருப்பதற்காக ) .
அல்லாஹ் செய்வது எல்லாம் நன்மைக்கே ! என்பதற்கு லைலத்துல் கத்ருடைய மறைவும் ஒரு ஆதாரமாகும் . அந்த நாளில் இபாதத் செய்யும் பாக்கியத்தை அல்லாஹ் நம்மனைவர்க்கும் தருவானாக !
( குறிப்பு : – வாழ்க்கையில் கண்ணியத்தை விரும்புபவர் ஸுரத்துல் கவ்ஸரை அடிக்கடி ஒதி வரவும் . )
வஸ்ஸலாம்.........