ரமலானுக்கு பின் நாம் செய்ய வேண்டிய 10 பணிகள்
بسم الله الرحمن الرحيم
ரமழானுக்குப் பின்பு தொடர்ந்து நல்ல அமல்களை செய்வதற்கு பத்து வழிகள்.
வழங்கியவர் : ஷைக் ஜிப்ரீன் ரஹிமஹுல்லாஹ் அவர்கள்
ரமழானுக்குப் பிறகு நமது அமல்களின் நிலைமை எப்படி இருக்கிறது?
ரமலான் மாதத்தில் நான் அதிகம் அல்லாஹ்வை முன்னோக்கியவனாக இருந்தேன்!
நஃபில் வணக்கங்கள் அதிகமாக செய்தேன்! வணக்க வழிபாட்டின் இன்பத்தை உணர்ந்தேன்! ரமழானில் குர்ஆன் அதிகம் ஓதினேன்! கடமையான தொழுகைகளை விடவில்லை! ஹராமாக்கப்பட்ட விஷயங்களை பார்ப்பதை விட்டும் முற்றிலும் விலகி இருந்தேன்! ஆனால், இப்போது ரமழான் முடிந்துவிட்டது. ரமழானில் வணக்க வழிபாட்டில் பெற்ற இன்பத்தை என்னால் இப்போது பெற முடியவில்லை. வணக்க வழிபாடு செய்வதில் ஆர்வம் ஏற்படுவதில்லை. ஃபஜ்ர் உடைய தொழுகையை ஜமாஅத்தாக நிறைவேற்ற முடியவில்லை. நஃபில் வணக்கங்களை அதிகப்படுத்த முடியவில்லை. இப்படியாக. இல்லை... இல்லை... என்று அடுக்கிக்கொண்டே போகலாம்.
இந்த பிரச்சனைக்கு தீர்வு மற்றும் சிகிச்சை ஏதும் இருக்கிறதா?
ஆம், என் சகோதரனே! (என் சகோதரியே!) கண்டிப்பாக சிகிச்சை இருக்கிறது. நல்ல அமல்களை தொடர்ந்து நிரந்தரமாக செய்வதற்கு பத்து வழிகாட்டல்களை இன்னும் ஆலோசனைகளை உனக்கு முன்னால் நான் வைக்கிறேன். அவற்றை பின்பற்றி நடப்பாயாக.
1). முதலாவதாக, எல்லாவற்றிற்க்கும் முன்பாக அல்லாஹ்விடம் நேர்வழிக்கும் நேர்வழியில் உறுதியாக இருப்பதற்கும் உதவி தேடு!
கல்வியில் தேர்ச்சிபெற்ற அறிஞர்களின் துஆவை அல்லாஹ் புகழ்ந்து கூறுகிறான். அந்த துஆவை நீயும் அதிகப்படுத்து!
رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِنْ لَدُنْكَ رَحْمَةً إِنَّكَ أَنْتَ الْوَهَّابُ
பொருள்: எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு நேரான வழியை அறிவித்ததன் பின்னர் எங்கள் உள்ளங்கள் (அதில் இருந்து) தவறி விடுமாறு செய்யாதே. உன் (அன்பான) அருளையும் எங்களுக்கு அளிப்பாயாக! நிச்சயமாக நீயே பெரும் கொடையாளி! (அல்குர்ஆன் 3 : 8)
ஆகவே, நேர்வழியில் நிலைத்திருப்பதற்கும், அதில் உறுதியாக இருப்பதற்கும் அல்லாஹ்விடம் நீ அவனது அருளை வேண்டிக் கொண்டே இரு!
2). ஸாலிஹீன் - நல்லோர் உடைய தொடர்பை அதிகப்படுத்து! அவர்களோடு அதிக நேரத்தை செலவிடு! அறிவுரைகள், உபதேசங்கள் நடைபெறும் சபைகள் மற்றும் மார்க்க கல்வி வகுப்புகள் ஆகியவற்றில் அதிகம் பங்களிப்புத் தா! தனிப்பட்ட முறையிலும் நல்லோரை சந்தித்து வா!
3). நல்லோரின் வாழ்க்கை வரலாற்றை அறிந்து கொள்வாயாக! அதற்காக அவர்களின் வரலாறுகள் எழுதப்பட்ட நூல்களை படிப்பாயாக! அவர்கள் குறித்து பேசப்பட்ட பயான்களை கேட்பாயாக! குறிப்பாக, நபித்தோழர்களின் வரலாறுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அறிந்து கொள்வாயாக! நல்லோர்களின் வரலாறுகளைப் படிப்பதால் உள்ளத்தில் உயர்ந்த மனவுறுதியும் மனவலிமையும் ஏற்படுகிறது.
4). மார்க்க உபதேசங்கள் மற்றும் மறுமை குறித்த நினைவூட்டல்கள் அடங்கிய சொற்பொழிவுகளை அதிகம் கேட்டுக் கொண்டே இருப்பாயாக! அவ்வப்போது நேரம் கிடைக்கும் போதெல்லாம் மாறி மாறி அந்த உபதேசங்களை செவி தாழ்த்தி கேட்பாயாக!
5). ஃபர்ழான தொழுகைகள், மேலும் அல்லாஹ் கடமையாக்கிய கட்டாயமான அமல்களையும் நிறைவேற்றுவதில் அதிகம் ஆர்வத்தோடும் கவனத்தோடும் இருப்பாயாக!
6). நஃபில் வணக்கங்களில் முடிந்த அளவு ஆர்வம் காட்டுவாயாக! நஃப்ஸுக்கு பிடித்தமான குறைவான அளவாவது நஃபிலான அமலை தொடர்ந்து செய்து வருவாயாக! அமல்களில் அல்லாஹ்வுக்கு விருப்பமானது தொடர்ந்து செய்யப்படும் அமல் ஆகும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் கூறி இருக்கின்றார்கள்.
7). அல்லாஹ்வின் வேதமாகிய அல்குர்ஆனை மனனம் செய்ய உடனே ஆரம்பித்து விடு! அதைத் தொடர்ந்து ஓதிக் கொண்டே இரு! நீ மனனம் செய்ததை ஃபர்ளான மற்றும் நஃபிலான தொழுகைகளில் ஓதி வருவாயாக!
8). அல்லாஹுவை அதிகம் திக்ர் செய்வாயாக! استغفار பாவமன்னிப்பு தேடிக் கொண்டே இருப்பாயாக! திக்ர் செய்வது மிக இலகுவான அமலாகும். ஆனால், அதனுடைய நன்மையோ மிகப்பெரியது. திக்ரு செய்வதால் ஈமான் அதிகரிக்கிறது; உள்ளம் வலிமை பெறுகிறது.
9). உள்ளத்தைக் கெடுக்கக்கூடிய அனைத்து காரியங்களை விட்டும் முற்றிலும் விலகி இருப்பாயாக! குறிப்பாக, கெட்ட நண்பர்கள், தொலைக்காட்சிகள், இசைகள், ஆபாச படங்கள் நிறைந்த பத்திரிக்கைகள், நாளிதழ்கள் ஆகியவற்றை விட்டு விலகி இருப்பாயாக!
10). என் அன்பிற்குரிய சகோதரனே! (சகோதரியே!) இறுதியாக, நான் உனக்கு உபதேசிப்பது என்னவென்றால் توبة نصوحة தவ்பா நஸூஹா - உண்மையான முறையில் பரிசுத்தமாக தவ்பா செய்வாயாக! அந்த தவ்பாவிற்கு பிறகு பாவங்களின் பக்கம் திரும்புவது இருக்கக்கூடாது. அடியானின் தவ்பாவைக்கொண்டு அல்லாஹ் மிகவும் மகிழ்ச்சி அடைகிறான்.
இறையருள் பெற்று என் சகோதரனே! (சகோதரியே!) ரமழானில் மட்டும் அல்லாஹுவை அறிந்த கூட்டத்தில் நீ ஆகிவிடாதே! அத்தகையவர்களைப் பற்றித்தான் நமது சான்றோர்கள் கூறினார்கள்: ரமழானில் தவிர அல்லாஹ்வை அறியாத அந்த மக்கள் மிகவும் கெட்டவர்கள்.
அடுத்த ரமழான் வருகின்ற வரை ஆரோக்கியத்தோடும் நலத்தோடும் அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் நிலைத்திருப்பதோடும் நீ இருக்க வேண்டும் என்று பிரார்த்தித்தவனாக உன்னிடமிருந்து விடைபெறுகிறேன்!
இந்த அறிவுரைகளை அறிஞர், ஷைக், அல்லாமா, அப்துல்லாஹ் இப்னு அப்துர் ரஹ்மான் அல்ஜிப்ரீன் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் ஹிஜ்ரி 13/10/1415هـ ல் கூறினார்கள். மற்றும் எழுதினார்கள்.
சைதுல் ஃபவாயித் என்ற வளைய தளத்தில் இருந்து எடுக்கப்பட்டது.