மூவரில் ஒரு சமூக உருவாக்கம் 25/10/24
தலைப்பு
மூவரில் ஒரு சமூக உருவாக்கம்
நமது குடும்பங்கள் இஸ்லாமியக் குடும்பங்களாக மாறாதவரை சமூக மாற்றம் என்பதும் சாத்தியம் அற்ற ஒரு கற்பனையாகவே தொடரும்.
ஆரோக்கியமான குடும்பம் தான் வளமான சமூகத்தை உருவாக்கும். அந்த ஆரோக்கியமான குடும்பத்தை உருவாக்குவதில் பெரும்பங்கு குடும்பத் தலைவியான தாய்மார்களுக்கு தான் உள்ளது.
பொதுவாக திருக்குர்ஆன் அனைத்துத் துறைகளைக் குறித்தும் விரிவாக இல்லாமல் பொதுவாகவும் சுருக்கமாகவும் கூறும். ஆனால் குடும்பவியல் குறித்து மட்டும் விரிவாகவும் விளக்கமாகவும் பேசுவதைக் கவனித்திருக்கலாம். காரணம் என்னவென்றால் குடும்பவியலுக்கு இஸ்லாம் கொடுக்கும் முக்கியத்துவத்தை இதிலிருந்து நாம் புரிந்துகொள்ள முடிகிறது.
நல்ல குடும்பம் என்பது அமைதியையும் மகிழ்ச்சியையும் அடித்தளமாகக் கொண்டே அமைக்கப் படுகிறது. குடும்பங்களில் அமைதியும் நிம்மதியும் ஏற்பட வேண்டுமெனில் தலைவனும்- தலைவியும், கணவனும்-மனைவியும் பரஸ்பரம் தமக்கிடையே நிறைவேற்ற வேண்டிய உரிமைகள் கடமைகள் பற்றிய அறிவைப் பெற்றிருக்க வேண்டும்.
சிறந்த சந்ததிகளை உருவாக்குவதுதான் குடும்ப வாழ்வின் இலக்கு. இன்பகரமான குடும்பப் பின்னணியின் மூலம்தான் தூய சந்ததிகளை உருவாக்க முடியும். அந்த இன்பகரமான குடும்பப் பின்னணியைத் தோற்றுவிப்பதில் குடும்பத்தலைவியின் பொறுப்பு பெரும் பங்காக இருக்க வேண்டும் என்பதை குடும்பத் தலைவிகள் புரிந்து கொள்ள வேண்டும்.
1, பெற்றோர்கள்
வரலாற்றில் சாதனை படைத்த ஆளுமைகளுள் பெரும்பாலானோர் சிறு பருவத்திலேயே தாய்மார்களால் பட்டை தீட்டப்பட்டவர்களாகவே இருந்துள்ளனர். தாய்மார்களால் தனிக்கவனம் செலுத்தப்பட்ட பிள்ளைகளே பிற்காலத்தில் பெரும் ஆளுமை மிக்கவர்களாக திகழ்ந்திருக்கிறார்கள்.
அன்றைய தாய்மார்கள் தமது பிள்ளைகளுக்கு ஊட்டும் அமுதுடன் அறிவையும் ஒழுக்கப் பண்பாடுகளையும் சேர்த்தே ஊட்டியுள்ளனர். அதுதான் பிற்காலத்தில் அவர்களது ஊட்டச்சத்தாக அமைந்துள்ளது.
அலி (ரலி) அவர்களை, “அறிவின் தலைவாசல்” என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் சிலாகித்துக் கூறினார்கள். இதற்கான மூலகாரணம், அவரின் தாய் பாத்திமா பின்த் அசத் (ரலி) அவர்கள்தான் என்றால் அது மிகையல்ல.
ஜுபைர் (ரலி) அவர்களின் தாயார் ஓர் முன்மாதிரி
ஸுபைர் (ரலி) அவர்கள் அறிவும் ஞானமும் நற்பண்புகளும் மிக்கவராகவும் பெரும் வீரராகவும் திகழ்ந்தார்கள்.
“ஒவ்வொரு இறைத்தூதருக்கும் ஒரு மெய்க்காப்பாளர் இருப்பார். எனது மெய்க்காப்பாளர் ஸுபைர் (ரலி)” என்று பெருமானார் (ஸல்) அவர்களால் புகழாரம் சூட்டப்பட்டவர். பெரும் போர் வீரர். இரண்டு கைகளிலும் இரண்டு வாள்கள் பிடித்து போர் செய்யும் ஆற்றல் பெற்ற தனிப்பெரும் வீரர்.
இவ்வளவு சிறப்புக்கும் காரணம் யார்? அவரின் தாயார் ஸஃபிய்யா பின்த் அப்துல் முத்தலிப் (ரலி) அவர்கள்தான்.
இவர்களின் தந்தை அவ்வாம் ஜுபைர் (ரலி) அவர்கள் சிறுவயதாக இருக்கும் போது பிஜார் என்ற அறியாமைக் கால யுத்தத்தில் மரணித்து விட்டார்கள்.
தாயார் ஸஃபிய்யா ரலி அவர்கள் தான் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் இவர்களை வளர்த்து ஆளாக்கி பிற்காலத்தில் மிகப்பெரிய இஸ்லாமிய தளபதியாக அழைப்பாளராக நபியவர்களின் சீடராக சாதனை செம்மலாக உருவாக்கினார்கள்.
இவர்களின் தாயார் வீரம் நிறைந்த பெண்மணி ‘ஒரு முறை அஸ்ஹாப் என்ற போர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது ஆண்கள் அனைவர்களும் ஓரிடத்தில் போரிட்டுக் கொண்டிருந்தார்கள் பெண்கள் மற்றொரு இடத்தில் பாதுகாப்பாக இருந்தார்கள் இதை தெரிந்துகொண்ட யூதன் ஒருவன் பெண்களை தாக்கிவிட்டு சென்று விடலாம் என்ற எண்ணத்தோடு அந்த இடத்திற்கு ரகசியமாக வந்த பொழுது சுதாரித்துக்கொண்ட ஸபிய்யா (ரலி) அவர்கள் கூடாரம் நடுவதற்கு பயன்படுத்தும் கம்பை பிடுங்கி அவனது தலையில் அடித்துக் கொன்றார்கள் சின்ன விஷயத்திற்கெல்லாம் பயந்து வெலவெலத்துப் போகின்ற பல பெண்களுக்கு இடையில் பல ஆண்களுக்கு சமமாக இப்படி வீரம் நிறைந்த ஸபிய்யா (ரலி) அவர்கள் தன் மகனையும் வீரம் நிறைந்தவர்களாக உருவாக்கினார்கள்.
தன் மகனை வீரம் நிறைந்தவராக உருவாக்க வேண்டும் என்பதற்காக மிகுந்த கண்டிப்போடு வளர்த்தார்கள் அவரது கண்டிப்பை பற்றி ஊரில் பலரும் பேசுவார்கள் ஒரு சமயம் அவர்களிடம் நீங்கள் ஏன் இவ்வளவு கண்டிப்போடு கடுமையாக உங்கள் குழந்தையை வளர்க்கிறீர்கள் என்று கேட்ட பொழுது
“ஜுபைர் ரலி அவர்கள் வருங்காலத்தில் யாருக்கும் அஞ்சாத ஒரு வீரனாக வரவேண்டுமென்றால் இப்படித்தான் வளர்க்க வேண்டும் என்று பதில் கூறுவார்கள்.
தன் மகனுக்கு பயம் போக வேண்டும் என்பதற்காக சூரிய வெளிச்சம் வருவதற்கு முன்னால் தன் சுய தேவையை நிறைவேற்றுவதற்காக செல்லுகின்ற பொழுது குழந்தையாக இருந்த தன் மகன் அவர்களை அழைத்துச் சென்று கடுமையான இருட்டில் தனியாக ஒரு இடத்தில் நிற்க வைத்து விட்டு சற்று தள்ளி தங்களுடைய தேவையை நிறைவேற்றி வருவார்கள் ஆரம்பத்தில் ஓரிரு நாட்கள் தன் தாயைத் தேடி அந்த இருட்டில் அழுதவர்கள் பிற்காலத்தில் இருட்டைக் கண்டு அஞ்சாத மனிதராக கோழைத்தனம் என்றால் என்னவென்று அறியாதவர்களாக உருவானார்கள்.
‘இரண்டாம் உமர்’ என்றும் ‘நேர்வழி நின்ற ஐந்தாம் கலீபா’ என்றும் வரலாற்று ஆசிரியர்களால் பெருமையுடன் பாராட்டப்படுபவர்தான் உமர் பின் அப்துல் அஸீஸ் (ரஹ்) அவர்கள். இவரது தாயார், உமர் (ரலி) அவர்களுடைய மகனான ஆஸிம் (ரலி) அவர்களுடைய மனைவியாகும். இப்பெண்மணி நற்குணத்திலும் இறையச்சத்திலும் இறை வழிபாட்டிலும் மிகச்சிறந்தவராக விளங்கினார். ஆகவே தமது மகனை ஒரு தலைசிறந்த ஆளுமை மிக்க முன்மாதிரியாக மாற்றிக்காட்ட நாடினார். முயன்றார். அதில் வெற்றியும் பெற்றார்.
இமாம் ஷாபி (ரஹ்) அவர்களை அறியாதவர்கள் இருக்க முடியுமா என்ன? சிறு வயதிலேயே தந்தையை இழந்தவர். ஆயினும் அன்னாரின் தாயார் இமாம் ஷாபி (ரஹ்) அவர்களைப் பேணி வளர்த்து, அமுதோடு அறிவையும் சேர்த்து ஊட்டி உலகம் போற்றும் உத்தம அறிஞராக மாற்றிக்காட்டினார். அனைத்துப் பெருமையும் அன்னாரின் தாயாரையேச் சாரும்.
இமாம் அவர்களின் அன்னை கூறுகின்றார்: “நான் எனது மகன் ஷாபிக்கு எப்பொழுதெல்லாம் பாலூட்ட நினைப்பேனோ அப்போதெல்லாம் உளு (அங்க சுத்தி) செய்துகொள்வேன்”. தமது பிள்ளையை பெரிய ஆளாக வளர்த்தெடுக்க ஒரு தாய் எப்போது எப்படி திட்டம் போட்டுள்ளார்கள் என்பதைக் கவனித்துப் பாருங்கள்.
பாலஸ்தீனைச் சேர்ந்த ‘குஸ்ஸா’ எனும் ஊரில் ஹிஜ்ரி 150 இல் பிறந்தார்கள். ஆனால் இரண்டு வயதுக் குழந்தையாயிருக்கும்போது மக்காவுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கேயே வளர்ந்தார்கள். அக்காலத்தில் மக்காவில் பிரபல்யம் வாய்ந்த முப்தியாகிய இமாம் முஸ்லிம் இப்னு காலித் என்பவரிடம் கல்வி கற்றார்கள். ஏழு வயதில் மாலிக் இமாம் அவர்களின் முவத்தஃ எனும் ஹதீஸ் கிரந்தத்தை மனனம் செய்து முடித்தது மாத்திரமின்றி வேறு ஹதீஸ்களையும் கற்றுத் தேர்ந்தார்கள்.
பொதுவாக தந்தையைவிட தாய்தான் பிள்ளை களுடன் மிகவும் நெருக்கமாகவும் அன்பாகவும் பழகுவார். அவர்களுடன் அதிக நேரத்தைச் செலவிடுவார். இதன் காரணமாகத்தான் தாய்-சேய் உறவு பலமடைகிறது.
தாயின் மடியே பிள்ளைகளின் முதல் பள்ளிக்கூடமாகத் திகழ்கிறது. அங்கு கற்பிக்கப்படும் பாடங்களும், கற்றுக்கொள்ளும் ஒழுக்கங்களும்தான் பிள்ளைகளின் எதிர்காலத்தை வடிவமைக்கின்றன, சிறந்த ஆளுமைகளாக அவர்களை உருவாக்குகின்றன என்பதை குடும்பத் தலைவிகள் மறந்துவிடலாகாது.
ஒழுக்கத்தையும் நற்பண்புகளையும் சிறுவயதிலேயே கற்றுக்கொடுத்து அன்னையால் வார்த் தெடுக்கப்படும் பிள்ளைக்கும், தாயால் வளர்க்கப் படாத பிள்ளைக்கும் பெரிய வேறுபாடு உள்ளது. வரலாற்றின் பக்கங்களில் இருந்து இதனை நாம் அழகுறப் புரிந்துகொள்ளலாம். தாய் சரியில்லை என்றால் ஏறக்குறைய பிள்ளையும் சரியில்லாமல் போய்விடும் அபாயம் உள்ளது.
நூஹ் (அலை) அவர்களுடைய காலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின்போது மலை உச்சி மீது ஏறி நின்ற தமது மகனை நபி நூஹ் (அலை) அவர்கள் அழைக்கின்றார்கள். அவனோ கப்பலில் ஏற மறுகின்றான். இக்காட்சியை திருக்குர்ஆன் அழகாகப் படம் பிடித்துக் காட்டுகிறது:
وَهِىَ تَجْرِىْ بِهِمْ فِىْ مَوْجٍ كَالْجِبَالِ وَنَادٰى نُوْحُ اۨبْنَهٗ وَكَانَ فِىْ مَعْزِلٍ يّٰبُنَىَّ ارْكَبْ مَّعَنَا وَلَا تَكُنْ مَّعَ الْكٰفِرِيْنَ
பின்னர் அக்கப்பல், மலைகளைப் போன்ற அலைகளுக் கிடையில் அவர்களைச் சுமந்து செல்ல ஆரம்பித்தது. (அச்சமயம்) நூஹ் தன்னைவிட்டு விலகியிருந்த தன் மகனை நோக்கி “என் மகனே! எங்களுடன் (நம்பிக்கை கொண்டு) நீயும் இதில் ஏறிக்கொள். (எங்களை விட்டு விலகி) நிராகரிப்பவர்களுடன் நீ இருக்க வேண்டாம். (அவ்வாறாயின், நீயும் நீரில் மூழ்கி விடுவாய்)” என்று (சப்தமிட்டு) அழைத்தார்.
(அல்குர்ஆன் : 11:42)
இறுதியில் என்னவாயிற்று..? அதையும் திருக்குர்ஆனே விவரிக்கின்றது:
قَالَ سَاٰوِىْۤ اِلٰى جَبَلٍ يَّعْصِمُنِىْ مِنَ الْمَآءِ قَالَ لَا عَاصِمَ الْيَوْمَ مِنْ اَمْرِ اللّٰهِ اِلَّا مَنْ رَّحِمَ وَحَالَ بَيْنَهُمَا الْمَوْجُ فَكَانَ مِنَ الْمُغْرَقِيْنَ
அதற்கவன் “இந்த வெள்ள(ப் பிரளய)த்திலிருந்து என்னைக் காப்பாற்றக் கூடிய ஒரு மலையின் மேல் நான் சென்று விடுவேன்” என்று கூறினான். அதற்கவர் “அல்லாஹ் அருள் புரிந்தாலன்றி அவனுடைய கட்டளையிலிருந்து பாதுகாத்துக் கொள்ள இன்று ஒருவராலும் முடியாது” என்று கூறினார். (அச்சமயம்) அவர்களுக்கு இடையில் ஓர் அலை எழும்பி குறுக்கிட்டது; அவனும் மூழ்கியவர்களுடன் மூழ்கி விட்டான்.
(அல்குர்ஆன் : 11:43)
வாழ வருமாறு தந்தை அழைக்கின்றார். மகன் மறுக்கின்றான். தந்தையின் அழைப்பை ஏற்காமல் நிராகரித்து தண்ணீரில் மூழ்கிப்போன ஒரு மகனின் பரிதாபக் கதை இது.
காரணம் யார்? நூஹ் (அலை) அவர்களின் மனைவி. அதாவது மகனின் தாயார். அவர் முஸ்லிமாக இருக்கவும் இல்லை, ஒழுக்கப்பண்புகளை மகனுக்குக் கற்றுக்கொடுக்கவும் இல்லை.
இந்த மாதிரியான பெண்கள் போன்று யாரும் வந்துவிட கூடாது என்று அல்லாஹ் கூறுகிறான்
ضَرَبَ اللّٰهُ مَثَلًا لِّـلَّذِيْنَ كَفَرُوا امْرَاَتَ نُوْحٍ وَّ امْرَاَتَ لُوْطٍ كَانَـتَا تَحْتَ عَبْدَيْنِ مِنْ عِبَادِنَا صَالِحَـيْنِ فَخَانَتٰهُمَا فَلَمْ يُغْنِيَا عَنْهُمَا مِنَ اللّٰهِ شَيْــٴًــا وَّقِيْلَ ادْخُلَا النَّارَ مَعَ الدّٰخِلِيْنَ
நிராகரிக்கும் பெண்களுக்கு, நூஹ் நபியினுடைய மனைவியையும், லூத் நபியினுடைய மனைவியையும் அல்லாஹ் உதாரணமாக்கி வைக்கின்றான். இவ்விரு பெண்களும், நம் அடியார்களில் இரு நல்லடியார்களின் மனைவிகளாகவே இருந்தனர். எனினும், இவ்விரு பெண்களும் தங்கள் கணவன் மார்களுக்குத் துரோகம் செய்தனர். (ஆகவே, இவர்களிருவரும் நபிமார்களின் மனைவிகளாயிருந்தும்) அல்லாஹ்வுடைய வேதனையிலிருந்து யாதொன்றையும் தடுத்துக்கொள்ள முடியவில்லை. (இவர்கள் துரோகம் செய்ததன் காரணமாக இவர்களை நோக்கி) “நரகத்தில் புகுபவர்களுடன் நீங்கள் இருவரும் புகுங்கள்” என்றே கூறப்பட்டது.
(அல்குர்ஆன் : 66:10)
அதே சமயம் இன்னொரு தந்தையும் தனது மகனை அழைத்தார். அவர் யார் தெரியுமா? ஆம். அவர்தான் இப்ராஹீம் (அலை) அவர்கள். அறுத்துப்பலியிட மகன் இஸ்மாயீல் (அலை) அவர்களை அழைக்கிறார்கள் தந்தையாகிய இப்ராஹீம் (அலை) அவர்கள். மகனின் பதில் என்னவாக இருந்தது?
திருக்குர்ஆன் அழகாக சுட்டிக்காட்டுகிறது
فَلَمَّا بَلَغَ مَعَهُ السَّعْىَ قَالَ يٰبُنَىَّ اِنِّىْۤ اَرٰى فِى الْمَنَامِ اَنِّىْۤ اَذْبَحُكَ فَانْظُرْ مَاذَا تَرٰى قَالَ يٰۤاَبَتِ افْعَلْ مَا تُؤْمَرُ سَتَجِدُنِىْۤ اِنْ شَآءَ اللّٰهُ مِنَ الصّٰبِرِيْنَ
அம்மகன் அவருடன் சேர்ந்து உழைக்கும் வயதினை அடைந்தபோது இப்ராஹீம் (ஒருநாள்) அவரிடம் கூறினார்: “என் அருமை மகனே! நான் உன்னை பலியிடுவதாய்க் கனவு கண்டேன். உனது கருத்து என்ன என்பதைச் சொல்!” அதற்கு அவர் கூறினார்: “என் தந்தையே! உங்களுக்கு என்ன கட்டளையிடப்படுகிறதோ அதைச் செய்துவிடுங்கள். அல்லாஹ் நாடினால், என்னைப் பொறுமையாளர்களில் ஒருவனாகக் காண்பீர்கள்.”
(அல்குர்ஆன் : 37:102)
தந்தை மரணத்தை நோக்கி அழைக்கின்றார். ஆயினும் மகனின் பதிலைப் பாருங்கள். இப்படியொரு வியத்தகு பதிலைக் கூறுவதற்குக் காரணமாக இருந்தவர் யார்? இப்ராஹீம் (அலை) அவர்களுடைய மனைவி, இஸ்மாயீல் (அலை) அவர்களுடைய தாயார் அன்னை ஹாஜிரா அம்மையார் அவர்கள்தானே. காரணம், அந்த அம்மையாரின் தனிப்பெரும் வளர்ப்பு அப்படி இருந்தது.
ஒரு தந்தை தனது மகனை வாழ்வதற்காக அழைக்கின்றார். மகன் அந்த அழைப்பை ஏற்க மறுக்கின்றான், நிராகரிக்கின்றான். அதேசமயம் இன்னொரு தந்தையோ தமது மகனை அறுத்துப் பலியிட மரணத்தை நோக்கி அழைக்கின்றார். மகனோ உடனடியாக அந்த அழைப்புக்குச் செவி சாய்கின்றார்.
இரு மகன்களுக்கும் இடையே நிலவும் இந்த வேறுபாடு உணர்த்துவது என்ன? தாயின் வளர்ப்பு மிகச்சரியாக அமைந்துவிட்டால் பிள்ளைகளின் எதிர்காலம் சிறப்பாக அமையும் என்பதையே இது சுட்டிக்காட்டுகிறது.
தந்தையின் முன்மாதிரி வளர்ப்பு
தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட ஒருவனிடம் உனது கடைசி ஆசை என்ன என்று போலீஸ் அதிகாரிகள் கேட்டார்கள். அப்போது அந்தத் தூக்கு தண்டனை கைதி என்னுடைய தந்தையை கடைசியாக ஒருமுறை பார்க்க வேண்டும் என்று தன்னுடைய பாசத்தை வெளிப்படுத்தினான். அதிகாரிகளும் அவரது தந்தையை அழைத்துக் கொண்டு வந்து சந்திக்க வைத்தார்கள் அப்போது அந்த தூக்கு கைதி தன்னுடைய தந்தையின் முகத்தில் காரி துப்பினான்.
பாசத்தை வெளிப்படுத்த வேண்டிய இடத்தில் கோபத்தை வெளிப்படுத்தி இருக்கும் இந்த நிகழ்வைப் பார்த்த போலீஸ் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்து அதற்கான காரணத்தை கேட்டார்கள் அப்போது அந்த தூக்கு கைதி சொன்னான் நான் சிறுவயதில் ஒருமுறை ஒரு வியாபாரியிடம் இருந்து ஒரு மாம்பழத்தை திருடினேன் அதை என் தந்தை பார்த்து விட்டார் நான் பயந்து சமாளித்துக் கொண்டிருக்கும்போது என்னுடைய தந்தை உனக்கு மட்டும் ஒரு மாம்பழத்தை எடுத்துக் கொண்டாய் எனக்கு யார் எடுத்து தருவது என்று நான் திருடுவதற்காக ஆர்வத்தை உருவாக்கிக் கொடுத்தார் அதன் விளைவு இன்று ஒரு பெரும் திருடனாக என்னுடைய வாழ்க்கை தூக்கு தண்டனையாக நிறைவேற போகிறது என்று சொன்னான்.
அன்பிற்குரிய பெற்றோர்களே இன்று நாம் ஒவ்வொருவரும் நம்முடைய குழந்தைகளிடம் அவர்களுக்கு முன்னிலையில் சிகரெட் பிடிப்பது மதுபானம் அருந்துவது கெட்ட வார்த்தைகள் பேசுவது தாய்மார்கள் ஏதாவது ஒன்றை தவறாக செய்வதை தன் மகன் அல்லது மகள் பார்க்கும் பொழுது அதை தன் கணவனிடம் சொல்லக்கூடாது என்றும் அதற்கு பதிலாக போய் சொல் என்றும் கற்றுக் கொடுக்கிறார்கள்.
அறிவுரை கூறும் முன்மாதிரி தந்தை லுக்மான் அலை அவர்கள்
وَاِذْ قَالَ لُقْمٰنُ لِا بْنِهٖ وَهُوَ يَعِظُهٗ يٰبُنَىَّ لَا تُشْرِكْ بِاللّٰهِ ؔ اِنَّ الشِّرْكَ لَـظُلْمٌ عَظِيْمٌ
மேலும், லுக்மான் தம் மகனுக்கு அறிவுரை நல்கியபோது கூறியதை நினைவுகூருங்கள்: “என் அன்பு மகனே! நீ இறைவனுக்கு எதையும் இணையாக்கிவிடாதே! உண்மையில் இறைவனுக்கு இணை கற்பிப்பது மாபெரும் அக்கிரமமாகும்”
(அல்குர்ஆன் : 31:13)
وَوَصَّيْنَا الْاِنْسٰنَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ اُمُّهٗ وَهْنًا عَلٰى وَهْنٍ وَّفِصٰلُهٗ فِىْ عَامَيْنِ اَنِ اشْكُرْ لِىْ وَلِـوَالِدَيْكَ اِلَىَّ الْمَصِيْرُ
மேலும், பெற்றோர் நலனைப் பேணவேண்டுமென்று நாம் மனிதனுக்கு அறிவுறுத்தியுள்ளோம். அவனுடைய தாய் நலிவுக்கு மேல் நலிவை ஏற்று அவனைத் தன் வயிற்றில் சுமந்தாள். மேலும், அவன் பால்குடி மறக்க இரண்டு ஆண்டுகள் பிடித்தன. (இதனால்தான் நாம் அவனுக்கு அறிவுரை கூறினோம்.) எனக்கு நன்றி செலுத்து. மேலும், உன் பெற்றோருக்கும் நன்றி செலுத்து. என் பக்கமே நீ திரும்பிவர வேண்டியுள்ளது.
(அல்குர்ஆன் : 31:14)
وَاِنْ جَاهَدٰكَ عَلٰٓى اَنْ تُشْرِكَ بِىْ مَا لَيْسَ لَكَ بِهٖ عِلْمٌ ۙ فَلَا تُطِعْهُمَا وَصَاحِبْهُمَا فِى الدُّنْيَا مَعْرُوْفًا وَّاتَّبِعْ سَبِيْلَ مَنْ اَنَابَ اِلَىَّ ثُمَّ اِلَىَّ مَرْجِعُكُمْ فَاُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ
ஆனால், எதனை நீ அறியமாட்டாயோ, அதனை என்னோடு நீ இணை கற்பிக்க வேண்டுமென்று அவர்கள் இருவரும் உன்னை நிர்ப்பந்தித்தால் அவர்களுடைய பேச்சை நீ ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாதே! இவ்வுலகில் அவர்களுடன் நல்லமுறையில் நீ நடந்துகொள்! மேலும், யார் என் பக்கம் மீண்டுள்ளாரோ அவருடைய வழியை நீ பின்பற்று! பிறகு நீங்கள் அனைவரும் என் பக்கமே திரும்ப வேண்டியுள்ளது. அப்போது நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்பதை நான் உங்களுக்கு அறிவித்துவிடுவேன்.
(அல்குர்ஆன் : 31:15)
يٰبُنَىَّ اِنَّهَاۤ اِنْ تَكُ مِثْقَالَ حَبَّةٍ مِّنْ خَرْدَلٍ فَتَكُنْ فِىْ صَخْرَةٍ اَوْ فِى السَّمٰوٰتِ اَوْ فِى الْاَرْضِ يَاْتِ بِهَا اللّٰهُ اِنَّ اللّٰهَ لَطِيْفٌ خَبِيْرٌ
(மேலும், லுக்மான் கூறினார்:) “என் அருமை மகனே! ஏதேனும் ஒரு பொருள் கடுகளவு இருந்தாலும் சரி, மேலும் அது ஏதேனும் ஒரு பாறையில் அல்லது வானங்களில் அல்லது பூமியில் எங்கு மறைந்திருப்பினும் சரி, அல்லாஹ் அதனை வெளிப்படுத்துவான். அவன் நுண்மையானவனும் எல்லாம் தெரிந்தவனுமாவான்.
(அல்குர்ஆன் : 31:16)
يٰبُنَىَّ اَقِمِ الصَّلٰوةَ وَاْمُرْ بِالْمَعْرُوْفِ وَانْهَ عَنِ الْمُنْكَرِ وَاصْبِرْ عَلٰى مَاۤ اَصَابَكَ اِنَّ ذٰلِكَ مِنْ عَزْمِ الْاُمُوْرِ
என் அருமை மகனே! தொழுகையை நிலைநாட்டு. மேலும், நன்மை புரியும்படி ஏவு; தீமையைத் தடு! மேலும், எந்தத் துன்பம் உனக்கு நேர்ந்தாலும் அதனைப் பொறுத்துக்கொள்! நிச்சயம் இவையெல்லாம் மிகவும் வலியுறுத்தப்பட்டுள்ள விஷயங்களாகும்.
(அல்குர்ஆன் : 31:17)
وَلَا تُصَعِّرْ خَدَّكَ لِلنَّاسِ وَلَا تَمْشِ فِى الْاَرْضِ مَرَحًا اِنَّ اللّٰهَ لَا يُحِبُّ كُلَّ مُخْتَالٍ فَخُوْرٍ
மேலும், மக்களைவிட்டு முகத்தைத் திருப்பியவாறு பேசாதே! பூமியில் செருக்காய் நடக்காதே! அகந்தையும் ஆணவமும் கொண்ட எவனையும் அல்லாஹ் நேசிப்பதில்லை.
(அல்குர்ஆன் : 31:18)
وَاقْصِدْ فِىْ مَشْيِكَ وَاغْضُضْ مِنْ صَوْتِكَ اِنَّ اَنْكَرَ الْاَصْوَاتِ لَصَوْتُ الْحَمِيْرِ
உனது நடையில் மிதமான நிலையை மேற்கொள். உன்னுடைய குரலைச் சற்று தாழ்த்திக்கொள். திண்ணமாக, அனைத்துக் குரல்களிலும் மிகவும் அருவருப்பானது, கழுதைகளின் குரலாகும்.”
(அல்குர்ஆன் : 31:19)
இவ்வாறு லுக்மான் தனது மகனுக்கு அறிவுரைக் கூறுவார். லுக்மான் கூறிய அறிவுரை அவருடைய மகனுக்கு மட்டும் உரியது அல்ல. அது எமக்கும் உரியதுதான். எனவே லுக்மான் கூறிய உபதேசத்தை நாமும் நமது வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டும்.
2, கற்பித்தல் என்பது சமூக கட்டுருவாக்கலுக்கான ஆளுமைகளை உருவாக்கும் பணியாகும். அது ஓர் உயரிய ஸதகதுல் ஜாரியாவாகும். தொழில் என்று கருதாமல் தொண்டு செய்யும் ஓர் அறப்பணி. மறுமையில் அல்லாஹ்விடம் வகைசொல்ல வேண்டிய பொறுப்பு. மாணவர்களை பக்குவப்படுத்தும் ஒரு மகத்தான பணி. மொத்தத்தில் ஆசிரியம் என்பது ஓர் இறைவணக்கம்.
ஆசிரியர்கள் என்பவர்கள் மாணவர்களின் நம்பிக்கை. ஒவ்வொரு மாணவர்களையும் எதிர்கால வாழ்க்கைக்குத் தகுந்தவாறு பட்டைதீட்டி எடுக்கும் அமானிதத்தை சுமந்தவர்கள்.
ஆசிரியம் என்பது சாதாரணமானதொரு பணியல்ல. அர்ப்பணிப்பு, தியாகம், அன்பு, அக்கறை, பொறுமை, கற்பித்தல் மீதான ஈடுபாடு, தொழில் முனைப்பு, தொடர்ச்சியான கற்றல் மற்றும் வாசிப்பு, கற்பித்தல் திறன் என பல்வேறு அம்சங்களை அது வேண்டிநிற்கிறது.
கற்பித்தல் அல்லாஹ்வின் பணிகளில் ஒன்றாகும். மனிதன் அறியாதவற்றையெல்லாம் அல்லாஹ்தான் அவனுக்குக் கற்றுக் கொடுத்தான் என அல்குர்ஆன் குறிப்பிடுகின்றது.
'அவனே மனிதனுக்கு குர்ஆனைக் கற்றுக்கொடுத்தான். அவனே மனிதனுக்கு பேசும் மொழியின் விளக்கத்தை கற்றுக்கொடுத்தான்'. (ஸுரா அர்ரஹ்மான்: 2,4)
அல்லாஹுதஆலா நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அறிமுகப்படுத்தும்போது, 'மக்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் போதிப்பவர், கற்றுக்கொடுப்பவர்' என்று அறிமுகப்படுத்துகிறான். (ஸுரா அல் ஜுமுஆ: 2)
அதேபோன்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் தன்னை, 'நான் இந்த உலகத்திற்கு ஓர் ஆசிரியராகவே அனுப்பப்பட்டுள்ளேன்' எனக் குறிப்பிட்டுள்ளார்கள். மற்றொருமுறை 'அல்லாஹ் என்னை கடுமையானவனாகவோ எவரையும் வழிதவறச் செய்பவனாகவோ அனுப்பிவைக்கவில்லை. மாறாக (இறைநெறியை) எளிதாக்கிச் சொல்லும் ஆசானாகவே அனுப்பியுள்ளான்' என்று கூறினார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)
அதேபோன்று ஸஹாபாக்களும் நபியவர்களை தமக்கான ஓர் ஆசானாகவே கருதியிருக்கிறார்கள். உலகில் தோன்றிய எல்லா நபிமார்களும் ஆசான்;களாகவே திகழ்ந்துள்ளனர். அத்தகைய இறைத்தூதர்களின் பிரதிநிதிகளாக இருப்பவர்களே உண்மையான ஆசிரியர்கள்.
உலகிலுள்ள அனைத்து ஆசிரியர்களையும் கௌரவப்படுத்தும் வகையிலும் ஆசிரியப் பணியை ஊக்குவிக்கும் நோக்கிலும் அக்டோபர் 05 ஆம் திகதியை ஐ.நா சபை 'சர்வதேச ஆசிரியர் தினமாக' பிரகடனப்படுத்தியிருக்கிறது. இந்த ஆண்டு சர்வதேச ஆசிரியர் தினமானது, 'கல்வி ரீதியிலான மாற்றம் ஆசிரியர்களிடமிருந்தே துவங்குகிறது' எனும் தொனிப்பொருளில் அனுஷ்டிக்கப்படுகிறது.
ஆரோக்கியமானதோர் ஆசிரியர் சமூகத்தினாலேயே சிறந்ததொரு மாணவர் சமூகத்தைக் கட்டியெழுப்ப முடியும். எனவே அர்ப்பணிப்போடும் சமூக அக்கறையோடும் அல்லாஹ்வுக்காக என்ற தூய எண்ணத்துடன் (இக்லாஸ்) ஆசிரியப் பணி செய்யும் அத்தனை ஆசிரியர்களுக்கும் அல்லாஹ் ஆரோக்கியத்தையும் நல்வாழ்வையும் அருளவேண்டும் எனப் பிரார்த்திக்கிறோம்.
ஆசிரியர்கள் எப்போதும் மதிக்கப்படவேண்டியவர்கள். அவர்களை கண்ணியமாக நடாத்துவதும் சமூகத்தில் அவர்களுக்குரிய இடத்தை வழங்குவதும் எமது தார்மீகக் கடமையாகும். ஆசிரியம் என்பது மனத்திருப்தியையும் மாணவர்களின் பிரார்த்தனைகளையும் பெற்றுத்தருகின்ற மகத்தான பணியாகும். எனவே இவ்வுயர்ந்த சேவையை ஆர்வத்தோடும் விருப்பத்தோடும செய்வதற்கான பக்குவத்தை எமது இளம் சமூகத்தினரிடையே ஏற்படுத்துவது அவசியமாகும்.
அக்கறையுடனும் அன்பு கலந்த கண்டிப்புடனும் நம்பிக்கையூட்டும் வார்த்தைகளுடனும் எந்த ஆசிரியர்கள் தமது மாணவர்களை அணுகுகிறார்களோ அந்த ஆசிரியர்களும் தோற்பதில்லை. அவர்களது மாணவர்களும் தோற்பதில்லை என்பார்கள். அவ்வாறான வினைத்திறன் மிக்க கற்பித்தலை சாத்தியப்படுத்துகின்ற, மாணவர்களின் நடத்தை மற்றும் மனப்பாங்கு மாற்றத்தில் நேர்மறையான செல்வாக்கைச் செலுத்துகின்ற, முன்மாதிரிமிக்க நல்லாசிரியர்களாக மிளிர ஆசிரியர்களுக்கு எமது வாழ்த்துகளையும் பிரார்த்தனைகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
03 நிர்வாகம் மஸ்ஜித் பரிபாலனம்...
இன்று பள்ளிவாசல் நிர்வாக பொறுப்புகளுக்கு போட்டி நிலவுவதை சமூகத்தில் பார்க்க முடிகிறது.
பள்ளிவாசல் நிர்வாகப் பொறுப்புகள் என்பது இன்று சாதாரணமாக பார்க்கப்படுகிறது.
பணியாளர்களுக்கு சம்பளம் வழங்குவது மராமத்து மற்றும் பராமரிப்பு பணிகள் செய்வது நோன்பு காலங்களில் கஞ்சி காய்ச்சுவது ஈதுல் அள்ஹா அன்று கூட்டு குர்பானி கொடுப்பது என்று குறுகிய வட்டத்திற்குள் அமைந்து விட்டது.
இன்னும் சிலர் மண்டபம் கட்டுவது, கடைகள், காம்ப்ளக்ஸ் கட்டி வருமானத்தை பெருக்குவது போன்றவை தான் பிரதானம் என்று கருதத் தொடங்கி விட்டனர்.
இவையெல்லாம் பள்ளிவாசல் பொறுப்புகளில் நூறில் ஒரு பங்கு தான்.
மீதமுள்ள 99 சதவீதம் சமூகத்தின் நலன் சார்ந்தது. சமூகத்தின் உயர்வு சார்ந்தது. சமூகத்தின் மேம்பாடு சார்ந்தது. சமூகத்தின் உலக மற்றும் மறுமை சார்ந்த வாழ்க்கை கட்டமைப்புடன் தொடர்புடையது.
பெருமானார் ஸல் அவர்களின் பள்ளிவாசலும், கலீஃபாக்கள் அமைத்த பள்ளிவாசல்களும், இஸ்லாமிய ஆட்சியாளர்கள் நிர்மாணித்த பள்ளிவாசல்களும் அப்படித்தான் அமைந்திருந்தன.
பள்ளிவாசல் கட்டுவது, கட்டுவதற்கு உதவுவது, பள்ளிவாசலில் ஜமாஅத்தோடு தொழுவது, வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவது, இஃதிகாஃப் இருப்பது எவ்வளவு நன்மைகளைப் பெற்றுத்தருமோ அதே போன்று தான் பள்ளிவாசலோடு நெருங்கிய தொடர்பில் இருப்பதும் சதா எப்போதும் பள்ளிவாசலின் நினைவோடு இருப்பதும் அளப்பரிய நன்மைகளைப் பெற்றுத் தரும்.
அபூ ஸயீதுல் குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “இறையில்லத்தோடு அதிக தொடர்பில் இருப்பவரைக் கண்டால் அவர், இறைநம்பிக்கை உள்ளவர் என்று நீங்கள் சாட்சியம் சொல்லுங்கள்” என்று கூறிய மாநபி {ஸல்} அவர்கள் “அல்லாஹ்வின் மீதும், மறுமை நாளின் மீதும் நம்பிக்கை கொண்டவர்களே! இறையில்லங்களை நிர்வகிக்கத் தகுதியுடையோர்” என அல்லாஹ் கூறியுள்ளான், என்று கூறினார்கள். ( நூல்: திர்மிதீ )
وعن أبي هريرة قالَ: قالَ رسُولُ اللَّه ﷺ: سَبْعَةٌ يُظِلُّهُمُ اللَّهُ في ظِلِّهِ يَوْمَ لا ظِلَّ إلَّا ظِلُّهُ: إِمامٌ عادِلٌ، وشابٌّ نَشَأَ فِي عِبَادَةِ اللَّه تَعالى، وَرَجُلٌ قَلْبُهُ مُعَلَّقٌ في المَسَاجِدِ، وَرَجُلانِ تَحَابَّا في اللَّه: اجتَمَعا عَلَيهِ، وتَفَرَّقَا عَلَيهِ، وَرَجُلٌ دَعَتْهُ امْرَأَةٌ ذَاتُ مَنْصِبٍ، وَجَمَالٍ فَقَالَ: إِنِّي أَخافُ اللَّه، ورَجُلٌ تَصَدَّقَ بِصَدَقَةٍ فأَخْفَاها، حتَّى لا تَعْلَمَ شِمالُهُ مَا تُنْفِقُ يَمِينهُ، ورَجُلٌ ذَكَرَ اللَّه خالِيًا فَفَاضَتْ عَيْنَاهُ متفقٌ عَلَيْهِ.
அல்லாஹ்வின் நிழலைத்தவிர வேறு எந்த நிழலுமே இல்லாத நாளில் அல்லாஹ் ஏழு கூட்டத்தாருக்கு மட்டும் அர்ஷின் நிழலில் நிழல் கொடுப்பான். நீதியான அரசன், அல்லாஹ்வின் வணக்கத்தில் திளைத்த (ஊரி திளைத்த) வாலிபன், பள்ளியோடு உள்ளம் தொடர்புள்ள மனிதன், இருவர் அல்லாஹ்விற்காக நேசித்து ஒன்றிணைந்து அல்லாஹ்விற்காகவே பிரிந்தவர்கள், நல்ல குடும்பத்தைச் சேர்ந்த ஒரு அழகி ஒருவரை விபச்சாரத்திற்காக அழைத்தும் நான் அல்லாஹ்வை பயப்படுகின்றேன் என்று கூறிய(ஒதுங்கிக் கொண்ட)வர், வலது கரம் கொடுக்கும் தர்மத்தை இடது கரத்திற்கு தெரியாமல் மறைமுகமாக தர்மம் கொடுத்தவர், தனிமையில் இருந்து அல்லாஹ்வை நினைத்து (அழுது) கண்களால் கண்ணீர் வடித்தவர் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
எனவே, மேற்கூறிய இரண்டு நபி மொழிகளும் பள்ளிவாசலில் பொறுப்புகளைப் பெற்று சதா பள்ளிவாசலின் நினைவோடும் தொடர்போடும் இருப்பவர்களுக்கான நன்மைகள் குறித்து கூறுவதை விளங்கிக் கொள்ளலாம்.
முடிவுரை
ஆகவே, நாமும் நமது குடும்பமும் நரக நெருப்பில் இருந்து காப்பாற்றப்பட வேண்டுமென்றால் அதற்கு தந்தையின் பங்களிப்பைவிட தாயின் பங்களிப்பே அதிகம் தேவைப்படுகிறது. குடும்பத்தலைவி தன்னுடைய பொறுப்பை உணர்ந்து செயல்பட்டாலே போதும், அநேக குடும்பங்கள் சுவனம் செல்லும் குடும்பங்களாக மாறிவிடும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை!