குர்பானியும் துல் ஹஜ் மாதமும்.......... 01-07-22, 16-06-23 07-06-2024
குர்பானியின் சிறப்புகளும், சட்டங்களும் துல் ஹஜ் மாதமும்
எல்லாம் வல்ல இறைவன் மனிதனின் ஒரு அங்கமாக எப்படி அவ்வப்போது கால சூழ்நிலைக்கு தக்கவாறு காய்கனி மா பலா போன்றவற்றை நேரம் தவறாமல் அந்தந்த கால நிலைக்கு ஏற்ப அதை இந்த சமூகத்திற்கு வழங்கி வருகிறானோ அதேபோன்று நாளை மறுமைக்கும் தேவையான நன்மைகளை சேகரித்து வைக்கக்கூடிய சில கால நிலைகளை அல்லாஹ் ஏற்படுத்தி தந்திருக்கின்றான்
அதில் ஒன்றுதான் இந்த சங்கைக்குரிய துல்ஹஜ் மாதமாகும் இந்த சங்கைக்குரிய மாதத்தைப் பற்றி குறிப்பிடுகையில் இறைவன் இந்த மாதத்தில் துவக்கத்தில் இருக்கக்கூடிய 10 நாட்களை மேன்மைப்படுத்தி அதன் மீது சத்தியமிட்டு கூறுகிறான்
அதிலும் குறிப்பாக பத்தாவது நாளிலே செய்யக்கூடிய அனைத்து வணக்க வழிபாடுகளை விடவும் மிகச் சிறப்புக்குரியதாக அதைவிட வேற எந்த அமலும் சிறந்தது இல்லை என்று கூறும் விதமாக யவ்முன் நஹர் என்று சொல்லக்கூடிய குருபானி கொடுக்கக் கூடிய அமலை அல்லாஹ் நமக்கு ஏற்படுத்தித் தந்திருக்கின்றான்
இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகளில் ஒன்றான "ஹஜ்" கடமையை நிறைவேற்ற உலகின் அனைத்து திசைகளிலுமுள்ள இஸ்லாமியர்கள் கஃபத்துல்லாஹ்வை நோக்கிப் புனிதப் பயணத்தை மேற்கொண்டிருக்கும் இந்நிலையில்,இன்ஷா அல்லாஹ் ஜூம்ஆ நாளான இன்று துல் ஹஜ் மாதத்தின் ஷக்குடைய நாளாக இருக்கிறது
இந்த துல்ஹஜ் மாதமானது ஹஜ் செய்யக்கூடியவர்களுக்கு மட்டும் வணக்கத்திற்குரிய மாதமல்ல!
நமக்கும் அதிகமதிகம் நன்மைகள் செய்யக்கூடிய வணக்க வழிபாடுகள் செய்யக்கூடிய மாதம் தான்
ஆம் இறைவன் தன் திருமறையில் இவ்வாறு கூறுகிறான்
وَالْفَجْرِ وَلَيَالٍ عَشْرٍ الفجر: 1-2
துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களைப் பற்றி அல்லாஹ் இப்படிக் கூறுகிறான். “காலத்தின் மீது சத்தியமாக மேலும் பத்து இரவுகளின் மீது சத்தியமாக” என்று 89 அல் ஃபஜ்ர் அத்தியாயத்தில் குறிப்பிடுகிறான்.
எனவே, படைத்த இறைவனே சத்தியமிட்டுக்கூறி இந்த நாட்களின் கண்ணியத்தை உணர்த்துகின்றான்.
பத்து இரவுகள் என்று இங்கு குறிப்பிடுவது துல் ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களாகும். என இமாம் இப்னு கஸீர் (ரஹ்) அவர்கள் இப்னு அப்பாஸ் (ரழி), இப்னு சுபைர் (ரஹ்), முஜாஹித் (ரஹ்), போன்ற அறிஞர்களின் கூற்றை ஆதாரமாக குறிப்பிடுகின்றார்கள். ( இப்னு கஸீர் : 8 / 413 )
وَيَذْكُرُوا اسْمَ اللَّهِ فِي أَيَّامٍ مَعْلُومَاتٍ
“அல்லாஹ்வின் பெயரை குறிப்பிட்ட நாட்களில் அவர்கள் கூறுவதற்காகவும் …. 22:28 என்ற வசனத்திற்கு விளக்கம் தருகிற போது இப்னு அப்பாஸ் (ரழி) கூறினார்கள்: ”குறிப்பிட்ட நாட்கள் என்பது துல் ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்கள் ஆகும்.
( நூல்: தஃப்ஸீர் இப்னு கஸீர் )
عن ابن عباس رضي الله عنهما قال: قال رسول الله صلى الله عليه وسلم: (ما من أيام العمل الصالح فيها أحب إلى الله من هذه الأيام ـ يعني أيام العشر ـ قالوا: يا رسول الله، ولا الجهاد في سبيل الله؟ قال: ولا الجهاد في سبيل الله، إلا رجل خرج بنفسه وماله ثم لم يرجع من ذلك بشيء) [رواه البخاري].
இந்த பத்து நாட்களைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் இப்படிக் கூறினார்கள்: “ஒரு முறை நபி (ஸல்) அவர்கள் தனது தோழர்களோடு பேசிக்கொண்டிருக்கும்போது தோழர்களே! இந்த துல்ஹஜ் மாதத்தில் முதல் பத்து நாட்களில் செய்யும் அமல்களை நேசிப்பது போல் அல்லாஹ் வேறு எந்த அமல்களையும் நேசிப்பது கிடையாது என்று கூறியவுடன் அங்கிருந்த நபித்தோழர்கள் அல்லாஹ்வின் தோழரே! அல்லாஹ்வின் பாதையில் போராடுவதை விடவும் அல்லாஹ் நேசிக்கின்றானா? என்று கேட்டபோது, ஆம், என்று கூறி விட்டு என்றாலும் ஜிஹாதில் தனது உயிரையும், தனது பொருளையும் அல்லாஹ்வுக்காக அர்ப்பணித்தவர்களைத் தவிர” என்று கூறினார்கள். ( நூல்: புகாரி )
فعن ابن عمر رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال: (ما من أيام أعظم عند الله ولا أحب إليه العمل فيهن من هذه الأيام العشر، فأكثروا فيهن من التهليل والتكبير والتحميد) [رواه أحمد]..
இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ”(துல் ஹஜ் மாத முதல்) பத்து நாட்களில் செய்யக்கூடிய நல் அமல்களுக்கு ஈடாக வேறு எந்த நாட்களில் செய்யும் நல் அமல்களும் அல்லாஹ்வுக்கு மிகப்பிரியமானவைகளாக இல்லை.
ஆகவே, தஹ்லீல் – லாஇலாஹா இல்லல்லாஹ், தக்பீர் – அல்லாஹ் அக்பர், தஹ்மீத் -அல்ஹம்து லில்லாஹ் போன்ற திக்ருகளை அதிகமாக செய்யுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( நூல்: அஹ்மத் 5575 )
قال الحافظ ابن حجر في الفتح: والذي يظهر أن السبب في امتياز عشر ذي الحجة لمكان اجتماع أمهات العبادة فيه، وهي الصلاة والصيام والصدقة والحج، ولا يتأتى ذلك في غيره
இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ”துல் ஹஜ் மாதத்தின் இந்தப் பத்து நாட்களின் சிறப்புக்குக் காரணம் இஸ்லாத்தின் அனைத்து முக்கிய வணக்கவழிபாடுகளும் இந்நாட்களில்ஒருங்கே அமைந்திருப்பதாகும்.
தொழுகை, நோன்பு, தர்மம், ஹஜ் ஆகிய யாவும் இந்நாட்களில் நிறை வேற்றப்படுகின்றன! இந்த நிலை வேறு எந்த நாட்களிலும் அமைவதில்லை! எனவே நாம் இந்நாட்களில் பின் வரும் நல்அமல்களில் அதிக கவனம் செலுத்துவது சிறப்பாகும். ( நூல்: ஃபத்ஹுல் பாரி : 2 / 534 )
وقال البخاري كان ابن عمر وأبو هريرة رضي الله عنهما يخرجان إلى السوق في أيام العشر يكبران ويكبر الناس بتكبيرها. وقال: وكان عمر يكبر في قبته بمنى فيسمعه أهل المسجد فيكبرون، ويكبر أهل الأسواق حتى ترتج منى تكبيراً. وكان ابن عمر يكبر بمنى تلك الأيام وخلف الصلوات وعلى فراشه، وفي فسطاطه ومجلسه وممشاه تلك الأيام جميعاً
அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி), அபூஹுரைரா (ரழி) ஆகிய இரு நபித் தோழர்களும் (துல் ஹஜ்)பத்து நாட்களிலும் கடை வீதிகளுக்குச் சென்று தக்பீர் கூறுவார்கள் இவ்விருவரும் தக்பீர் கூறுவதை செவியுற்ற மக்களும் தக்பீர் கூறுவார்கள். ( நூல்: புகாரி : 1/ 339 )
உமர் (ரழி) அவர்கள் மினாவில் தனது கூடாரத்தில் உரத்த குரலில் தக்பீர் சொல்லிக் கொண்டிருப்பார்கள். இதைக் கேட்ட பள்ளிவாசலில் உள்ளவர்களும், கடைத்தெருக்களில் உள்ளவர்களும் மினாவே அதிரும் அளவுக்கு தக்பீர் சொல்லுவார்கள்.
இப்னு உமர் (ரழி) அவர்கள் மினாவில் ஒவ்வொரு தொழுகைக்குப் பிறகும், கூடாரத்திலும்,படுக்கையிலும், மஜ்லிஸிலும், அனைத்து நாட்களிலும் தக்பீர் சொல்லக் கூடியவர்களாக இருந்தார்கள்…. நூல்: புகாரி 4/123.
எனவே, மேற்கூறிய குர்ஆன் வனத்தின் மூலமும், ஹதீஸின் மூலமும், நபித்தோழர்கள், இமாம்கள் ஆகியோருடைய விளக்கங்களின் மூலமும் துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்கள் மிகவும் சிறப்புக்குரியது. அந்த நாட்களில் அமல்கள் செய்வதை சரியாக அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதை விளங்கிக் கொள்ள முடிகின்றது.
இந்த முதல் பத்து நாட்களும் சிறப்புக்குரியவை என்று சிறப்பித்துக் கூறிய நபி (ஸல்) அவர்கள் இந்த நாட்களில் செய்வதற்கென்று விசேஷமாக எந்தஅமல்களையும் சுட்டிக்கா ஹதீஸ்களில் கிடையாது.
விசேஷமான அமல்கள் இல்லா விட்டாலும் வழமையாக நாம் செய்து வரும் அமல்களை பூரணமாகவும், சரியாகவும் செய்து வர முயற்சி செய்ய வேண்டும்.
பர்ளான தொழுகைகளை ஜமாஅத்தோடு தொழுது வருவது. பர்ளுடைய முன்-பின் ஸுன்னதுக் களை பேணித் தொழுது வருவது, தொழுகைக்குப் பின் ஓதக் கூடிய அவ்ராதுகளை சரியாகத் தொடராக ஓதி வருவது, காலை-மாலை நேரங்களிலும், ஓய்வு கிடைக்கும் போதும் குர்ஆனை ஓதிக் கொள்வது நபி (ஸல்) அவர்களின் மீது ஸலவாத்துகளை ஓதிக் கொள்வது, தான தர்மங்கள் செய்வது, ஏழைக்கு உணவளிப்பது, நோயாளிகளை நலம் விசாரிக்கச் செல்வது இன்னும், குறிப்பாக அந்த பத்து நாட்களிலும் பாவமான சிந்தனைகளை, செயல்பாடுகளை விட்டும் தூரமாகி நல்லறங்கள், வணக்க, வழிபாடுகள் செய்வதில் அதிக முனைப்பு காட்ட வேண்டும்.
மேலும், அரஃபா நாளன்று (துல்ஹஜ் பிறை 9 அன்று) நோன்பு வைப்பது நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த அழகிய நடைமுறையாகும்.
ஆயிஷா (ரலி) அறிவிக்கின்றார்கள்:- ”அல்லாஹ் நரகிலிருந்து தனது அடியார்களை அதிகமாக விடுதலை செய்யும் நாள் அரஃபா நாளாகும்.இதைத் தவிர வேறு எந்த நாட்களிலும் இவ்வாறு விடுதலை செய்வதில்லை. அல்லாஹ் அந்நாளில் இறங்கி வந்து, இவர்கள் என்ன விரும்புகின்றனர்? என்று தனது வானவர்களிடம் பெருமையாகக் கேட்பான்” என்று நபி {ஸல்} கூறினார்கள். ( நூல்: முஸ்லிம் )
فقال
الرسول صلى الله عليه وسلم
(صيامُ يومِ عرفةَ، أَحتسبُ على اللهِ أن يُكفِّرَ السنةَ التي قبلَه. والسنةَ التي بعده) [رواه مسلم
அபூ கத்தாதா (ரலி) அறிவிக்கின்றார்கள்:- அரஃபா நாளன்று நோன்பு வைப்பவருக்கு அந்நாளுக்கு முன் வருட பாவங்களையும், பின் வருட பாவங்களையும் அல்லாஹ் மன்னிப்பான் என்று நம்பிக்கை கொள்கிறேன்” என நபி
{ஸல்} அவர்கள் கூறினார்கள். ( நூல் : முஸ்லிம் )
இது போன்ற சிறப்பு தினங்கள் என்பது அல்லாஹ் அடியார்களின் மீது பொழிகிற அளப்பெரும் அன்புக்கு சான்றாகும்.
இது போன்ற வாய்ப்புகளைப் பயன்படுத்தி வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டு நம் ஈமானையும், இறை நெருக்கத்தையும் வலுப்படுத்திக் கொள்ள வேண்டும்.
வாய்ப்புகளை பயன்படுத்திய மேன்மக்கள்!!
ஹிஜ்ரி நான்காம் ஆண்டு நடை பெற்ற படையெடுப்புக்கு “தாதுர் ரிகாவு” எனும் பெயர். இந்த யுத்தத்தில் தான் யுத்த கால தொழுகை முறை அறிமுகம் ஆனது.
நபித்தோழர்களின் ஈமானை பரிசோதிக்கும் முகமாக அமைந்து விட்டதோ எனும் எண்ணுமளவிற்கு பல்வேறு சோதனைகள் அங்கே நடைபெற்றன.
முறைவைத்து தான் பயணம் மேற்கொள்ளப்பட்டது. மொத்த படை வீரர்கள் 700 நபர்கள். ஆறு நபருக்கு ஒரு ஒட்டகம் வீதம் பயணத்திற்கு பயன் படுத்தப் பட்டது.
எந்த அளவுக்கெனில், நபித்தோழர்களின் பலருடைய நகங்களெல்லாம் கிழிந்து விழுந்து விட்டன.
பாறைகளையும், பாலைகளையும் கடந்து சென்றதால் பலருக்கு காயம் ஏற்பட்டு தங்களது துணிகளை கிழித்து காயத்திற்கு ஒட்டுப்போட்டுக்கொண்டனர்.
ஆதலால், அந்தப் போருக்கே தாதுர் ரிகாவு – ஒட்டுத்துணிப்போர் என பெயர் வழங்கப்பட்டது.
பெரிய அளவில் போரெல்லாம் நடைபெறவில்லை. எதிரிகளை அச்சுறுத்துவதற்காகவே அந்தப் போர் மேற்கொள்ளப்பட்டது. பின்னர் முஸ்லிம்கள் திரும்பி விட்டனர்.
வழியில் ஓரிடத்தில் இளைப்பாருவதற்காக நபிகளார் படையினரை அனுமதித்தார்கள். இந்த இரவில் நமக்காக காவல் காற்பது யார்? என்று நபி {ஸல்} அவர்கள் வினவிய போது…
முஹாஜிர்களில் அம்மார் இப்னு யாஸிர் (ரலி) அவர்களும், அன்ஸார்களில் அப்பாத் இப்னு பிஷ்ர் (ரலி) அவர்களும் முன் வந்தனர்.
நபிகளாரும், நபித்தோழர்களும் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தனர். இரவின் ஒரு பகுதி கழிந்ததும் அப்பாத் (ரலி) அவர்கள், அம்மார் (ரலி) அவர்களிடம் நீங்கள் தூங்கிக் கொள்ளுங்கள். நான் காவல் காக்கின்றேன். பின்னர் நான் உறங்குகின்றேன் நீங்கள் காவல் காத்துக் கொள்ளுங்கள்.
கொஞ்ச நேரம் போனது அவர்களின் மனம் முழுவதும் இந்த ரம்மியமான இரவு வீணாகி விடக்கூடாது. பேசாமல் சிறிது நேரம் தொழுது விடுவோம் என ஆசை கொண்டது.
தொழுகைக்கு தக்பீர் கட்டி நின்றார்கள். ஃபாத்திஹா வுக்குப் பின்னர் சூரா கஹ்ஃப் ஓத ஆரம்பித்தார்கள்.
பின்னால், வேவு பார்த்து வந்த எதிரி ஒருவன் அப்பாத் அவர்களின் மீது அம்பொன்றை எய்தான். பிடுங்கி தூர எறிந்து விட்டு தொழுகையை தொடர்ந்தார்கள்.
மீண்டும் ஒரு அம்பு, மீண்டும் ஒரு அம்பு என மூன்று அம்புகள் எய்யப்பட்டது. ஆனாலும் அசராமல் பிடுங்கி எறிந்து விட்டு தொழுகையைப் பூர்த்தி செய்து விட்டு அம்மார் (ரலி) அவர்களை எழுப்பினார்கள்.
எழுந்து பார்த்த அம்மார், அப்படியே அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்று விட்டார்கள்.
ஏன் முதல் முறை நீங்கள் தாக்கப்படும் போதே என்னை எழுப்பியிருக்க வேண்டாமா? எனக் கேட்டார்கள்.
தொழுகையில், குர்ஆனின் கஹ்ஃப் அத்தியாயத்தை ஓதிக் கொண்டிருந்தேன். இடையில் நிறுத்த என் மனம் விரும்ப வில்லை.
அல்லாஹ்வின் மீது ஆணையிட்டுச் சொல்கின்றேன் அம்மாரே! நான் குர்ஆன் ஓதுவதை நிறுத்துவதை விட மரணித்து போவதையே விரும்பினேன்.
அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் படைக்கு காவலாக இருக்கும் படி கட்டளை இட்டிருந்ததால், என் மரணம் படைக்கு பாதகமாக அமைந்து விடக்கூடாதே என அஞ்சினேன்” என்றார்கள்.
(நூல்: ரிஜாலுன் ஹவ்லர் ரஸூல் {ஸல்}, அல் – மஃகாஸீ லில் வாகிதீ)
அப்துல்லாஹ் இப்னு முபாரக் (ரஹ்) அவர்கள் ஹதீஸ் கலையில் மிகப்பெரிய வல்லுநர். ஒரே நேரத்தில் அவருடைய வகுப்பிலே ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஹதீஸ் பாடம் பயில அமர்ந்திருப்பார்கள்.
ஒரு ஆண்டும் ஹஜ் மற்றும் நபிகளாரை ஜியாரத் செய்யவும் அடுத்த ஆண்டு அல்லாஹ்வின் பாதையில் போருக்காக செல்வதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார்கள்.
அவ்வாறெ அந்த ஆண்டு ஹஜ் செய்ய முடிவெடுத்து, தம் தோழர்களோடு பயணம் செய்ய ஆயத்தமானார்கள்.
பயணம் செய்வதற்காக ஒரு வாகனத்தை வாங்க சந்தைக்கு வருகின்றார்கள். வழியில் அப்துல்லாஹ் இப்னு முபாரக் (ரலி) அவர்கள் கண்ட காட்சி அவர்களின் இதயத்தை ரணமாக்கி, இரு விழிகளில் இருந்தும் கண்ணீரை வரவழைத்து விட்டது.
அங்கே ஒரு பெண்மணி செத்துப் போன ஒரு வாத்து, அல்லது கோழியின் இறக்கைகளை உறித்துக் கொண்டும், அதன் இறைச்சியை எடுத்து தான் கொண்டு வந்திருந்த பாத்திரத்தில் போட்டுக் கொண்டிருப்பதையும் கண்டார்கள்.
அப்பெண்மணியின் அருகே சென்ற இப்னு முபாரக் (ரஹ்) அவர்கள் அப்பெண்மனியை நோக்கி “ஓ அல்லாஹ்வின் அடிமையே! என்ன காரியம் செய்து கொண்டிருக்கின்றாய்?” என்று கேட்டார்கள்.
அதற்கு, அப்பெண்மணி ”படைத்தவனுக்கும், படைக்கப்பட்ட ஒரு படைப்புக்கும் தொடர்பான விவகாரம் இது! இதில் தலையிட உமக்கு அதிகாரமில்லை, உம் வேலையைப் பார்த்து விட்டுச் செல்லும்!” என்றார்.
அதற்கு, அப்துல்லாஹ் (ரஹ்) அவர்கள் “அல்லாஹ்வை முன்னிறுத்திக் கேட்கிறேன்! உம்மைப் பற்றி எமக்கு நீங்கள் அவசியம் சொல்ல வேண்டும்” என்றார்கள்.
அப்பெண்மணி வாயைத் திறந்து வார்த்தைகளைக் கொட்டும் முன்பாக, அவர்களின் கண்கள் கண்ணீரை கொண்டு வந்து கொட்டியது.
தழுதழுத்த குரலில் அப்பெண்மணி “அல்லாஹ் என் போன்ற ஒன்றுமில்லாத ஏழைகளுக்கு இந்த செத்துப்போன பிராணிகளை ஹலாலாக ஆக்கியிருக்கின்றான்.
நானோ கணவன் இல்லாத விதவைப்பெண், அங்கே என் வீட்டிலோ என்னுடைய நான்கு பெண்மக்களும் உண்ண உணவில்லாமல் பசியால் குடல் வெந்து துடித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
நானும், என்னைச் சுற்றியிருக்கிற மனிதர்கள் அனைவரிடத்திலும் உதவி கேட்டு மன்றாடி விட்டேன். ஒருவரின் இதயத்தில் கூட இரக்கம் சுரக்கவில்லையே!?”
ஏதோ, அல்லாஹ்வாவது எங்களின் இந்த பரிதாப நிலை கண்டு, அருள் புரிந்து இந்த செத்தப் பிராணியை தந்திருக்கின்றான்.
ஆனால், நீரோ இப்போது என்னிடம் வந்து தர்க்கித்துக் கொண்டிருக்கின்றீர்” என்று கூறினாள்.
இதைக் கேட்டதும் தான் தாமதம் அப்துல்லாஹ் இப்னு முபாரக் (ரஹ்) அவர்கள் தாரை தாரையாய் கண்ணீர் வடித்தார்கள்.
ஒரு வழியாக, நிதானித்து விட்டு தம் கையிலிருந்த பணப்பையை அந்தப் பெண்மணியிடத்திலே கொடுத்து விட்டு உடனடியாக திரும்பி விட்டார்கள்.
அப்பெண்மணியோ நன்றிப் பெருக்கோடும், மகிழ்ச்சியோடும் அப்துல்லாஹ் (ரஹ்) அவர்கள் செல்லும் திசை நோக்கி அவர்களின் உருவம் மறையும் வரை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
அப்துல்லாஹ் இப்னு முபாரக் (ரஹ்) அவர்களை எதிர் பார்த்துக் காத்துக் கொண்டிருந்த நண்பர்கள் குழு நீண்ட நேரமாகியும் அப்துல்லாஹ் (ரஹ்) அவர்கள் வராததால் வழியில் வந்து சேர்ந்து கொள்வார் எனக் கருதி ஹஜ்ஜுக்கு புறப்பட்டுச் சென்று விட்டனர்.
ஹஜ்ஜுடைய காலம் முடிந்து ஹஜ்ஜுக்குச் சென்ற அவர்களின் நண்பர்கள் ஊர் திரும்பினர்.
வீட்டில் இருந்த அப்துல்லாஹ் இப்னு முபாரக் (ரஹ்) அவர்களைச் சந்தித்த நண்பர்கள் ஒவ்வொருவரும் “அப்துல்லாஹ்வே! அல்லாஹ் உமக்கு அருள் புரியட்டும்! உம்முடைய வழிகாட்டலால் தான் நாங்கள் எங்களின் ஹஜ்ஜை மிக எளிமையாக அமைத்துக் கொள்ள முடிந்தது.
கஅபாவில் வைத்து நீர் எங்களோடு நடந்து கொண்ட அந்த அழகிய பண்பாடுகள் இருக்கிறதே இப்போது நாங்கள் நினைத்தாலும் ஒரு வித சிலிர்ப்பு ஏற்படுகிறது.
அல்லாஹ் உமக்கு வழங்கிய கல்வியறிவைக் கொண்டு எங்களின் எல்லோருடைய ஹஜ்ஜையும் மிகச் சரியாக அமைத்துக் கொள்ள உதவி புரிந்தீர்!
அதே நேரத்தில், ஹஜ்ஜுடைய காலத்தில் நீர் உம்முடைய ரப்பை வணங்கிய அந்த முறை, வணக்க வழிபாட்டில் காட்டிய ஈடுபாடு, ஹஜ்ஜுடைய கிரியைகளில் நீர் செலுத்திய கவனத்தைப் போன்று வேறெவரும் செலுத்தியதை நாங்கள் பார்த்ததில்லை.
மொத்தத்தில் உம்மைப் போன்று ஓர் சிறந்த மனிதரை இந்த உலகத்தில் நாங்கள் பார்த்ததே இல்லை!” என்று கூறி நன்றி சொல்லிக் கொண்டனர்.
அப்துல்லாஹ் இப்னு முபாரக் (ரஹ்) அவர்களுக்கு ஒரே குழப்பமாக இருந்தது. என்ன இவர்களுக்கு என்ன ஆகிவிட்டது? நான் எங்கே ஹஜ்ஜுக்கு சென்றேன்? வந்தார்கள், வாழ்த்தினார்கள், நன்றி கூறினார்கள் என்ன நடக்கிறது?” என்று தமக்குத் தாமே பேசிக் கொண்டார்கள்.
அன்றைய இரவு கனவில் பெருமானார் {ஸல்} அவர்களைக் கனவில் காணும் அரும்பாக்கியத்தை, பெரும்பேற்றை பெற்றார்கள் அப்துல்லாஹ் இப்னு முபாரக் (ரஹ்) அவர்கள்.
கனவில் வந்த பெருமானார் {ஸல்} அவர்கள் “அப்துல்லாஹ்வே உமக்கு அல்லாஹ்வின் புறத்திலிருந்து சாந்தியும் சமாதானமும் நிலவட்டும்! நான் யார் என்று நீர் அறிவீரா? நான் தான் முஹம்மது {ஸல்} இந்த உலகத்தில் நீர் நேசிக்கின்ற, நாளை மறுமையில் உமக்கு பரிந்துரை செய்யவிருக்கின்ற உம்முடைய நபி!
ஆரம்பமாக, என் உம்மத்தினரின் சார்பாக உமக்கு அல்லாஹ் நல்ல நலவுகளைத் தர வேண்டுமென நான் துஆ செய்கிறேன்.
அப்துல்லாஹ் இப்னு முபாரக் அவர்களே! நீர் ஓர் ஆதரவற்ற குடும்பத்திற்கு சந்தோஷத்தை வழங்கியது போன்று அல்லாஹ் உமக்கும் சந்தோஷத்தை வழங்குவான்! நீர் அவர்களின் நிலையைக் கண்டு, அவர்களுக்கு உதவியதை மறைத்தது போன்று அல்லாஹ் நாளை மறுமையில் உம்முடைய குறைகளையும் மறைப்பான்!
நீர் செய்த காரியம் அல்லாஹ்வை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அதன் பலனாக அல்லாஹ் உம்முடைய தோற்றத்தில் ஒரு வானவரை அனுப்பி, உமக்குப் பகரமாக ஹஜ் கிரியைகளைச் செய்ய வைத்தான்.
மேலும், நீர் ஒரு முஸ்லிமின் வாழ்வில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி, தவறான பாதையில் செல்ல இருந்த ஒரு முஸ்லின் குடும்பத்தை நேர்வழியின் பால் திருப்பி விட்டதால் அல்லாஹ் உமக்கு எழுபது ஹஜ் செய்த நன்மையை சன்மானமாக வழங்கி கௌரவிக்கின்றான்!” என்று கூறினார்கள்.
( நூல்: அல் பிதாயா வந் நிஹாயா லி இமாமி இப்னு கஸீர், பாகம்:13, பக்கம்:611 )
வாய்ப்புகளைப் பயன்படுத்தி ஆர்வத்தோடு செய்கிற அமல் தான் மௌத் வரை நம்மிடம் இடம் பெற்றிருக்கும்…
وذكر عبد الرزاق عن معمر عن الزهري عن عروة عن عائشة قالت قال رسول الله صلى الله عليه وسلم: " نمت فرأيتني في الجنة فسمعت صوت قارئ فقلت من هذا قالوا صوت حارثة بن النعمان " . فقال رسول الله صلى الله عليه وسلم: " كذلك البر كذلك البر " . وكان أبر الناس بأمه.
ஆயிஷா (ரலி) அறிவிக்கின்றார்கள்: “ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் என்னிடம் “ஆயிஷாவே! எனக்கு உறக்கத்தில் சுவனம் காட்டப்பட்டது. அப்போது, சுவனத்தின் ஓர் பகுதியிலிருந்து ஒருவர் அழகிய குரலில் குர்ஆனை ஓதுகிற சப்தத்தைக் கேட்டேன்.
அப்போது, நான் “யார் இவர்? இங்கே குர்ஆன் ஓதுகின்றாரே? என்று ஆச்சர்யத்தோடு வினவினேன்.
அப்போது, என்னிடம் ”இந்த சப்தம் ஹாரிஸா இப்னு நுஃமான் (ரலி) அவர்களுடையது என்று கூறப்பட்டது” என்று கூறிய அண்ணலார் தொடர்ந்து, “ நன்மை செய்வோருக்கும் அவ்வாறே பாக்யம் கிடைக்கும்” என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: “ஹாரிஸா இப்னு நுஃமான் (ரலி) அவர்கள் தன் தாய்க்கு மிகவும் உபகாரம் செய்யக் கூடியவர்களாக இருந்தார்கள்.
قال أبو عمر كان حارثة بن النعمان قد ذ هب بصره فاتخذ خيطاً من مصلاه إلى باب حجرته ووضع عنده مكتلاً فيه تمر فكان إذا جاءه المسكين يسأل أخذ من ذلك المكتل ثم بطرف الخيط حتى يناوله وكان أهله يقولون له نحن يكفيك فقال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: " مناولة المسكين تقي ميته السوء " .
இப்னு அப்துல் பர் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: “ஹாரிஸா இப்னு நுஃமான் (ரலி) அவர்களின் இறுதிகாலத்தில் கண்பார்வை இன்றி வாழ்ந்தார்கள்.
தான் தொழுகிற இடத்திலிருந்து வீட்டின் வாசல் வரை கயிறு கட்டியிருப்பார்கள். அருகே ஒரு பாத்திரத்தில் பேரீத்தம் பழங்களை வைத்திருப்பார்கள்.
வீட்டு வாசலில் எவராவது வந்து யாசகம் கேட்டால், கையில் பேரீத்தம் பழங்களை எடுத்துக் கொண்டு வாசல் வரை வந்து அந்த யாசகரின் கையில் கொடுத்து விட்டு மீண்டும் தாங்கள் அமரும் இடத்திற்கு வந்து விடுவார்கள்.
ஒருவர் அல்ல இருவர் அல்ல. எத்தனை பேர் யாசகம் கேட்டு வந்தாலும், கயிற்றைப் பிடித்து வருவதும் போவதுமாக இருப்பார்கள் ஹாரிஸா (ரலி) அவர்கள்.
ஹாரிஸா (ரலி) அவர்கள் படுகிற அவஸ்தைகளையும், சிரமங்களையும் பார்த்து விட்டு அவர்களின் குடும்பத்தினர் “ஓர் யாசகருக்கு இவ்வளவு சிரமப்பட்டு ஏன் இவ்வாறு தர்மம் செய்கின்றீர்கள்? எங்களிடம் தந்தால் நாங்கள் கொண்டு கொடுப்போமே?” என்று கூறினார்கள்.
அதற்கு, ஹாரிஸா (ரலி) அவர்கள் “ஏழை எளியோரை தேடிச் சென்று, அவர்களின் கரங்களில் கொண்டு தர்மப் பொருட்களைக் கொடுப்பதென்பது துர்மரணத்தைத் தடுக்கும்” என நபி {ஸல்} அவர்கள் கூற நான் கேட்டிருக்கின்றேன்.
ஆதலால், தான் இவ்வளவு சிரமத்திற்கு மத்தியிலும் நான் இவ்வாறு நடந்து கொள்கின்றேன்” என்றார்கள்.
( நூல்: அல் இஸ்தீஆப் ஃபீ மஃரிஃபத்தில் அஸ்ஹாப் லி இப்னி அப்தில் பர் )
குர்பானியின் நோக்கம் :-
ஒவ்வொரு வருடமும் துல்ஹஜ் மாதத்தில் ஆடு, மாடு ஒட்டகங்களை அறுத்துப் பலியிடுமாறு நபி (ஸல்) அவர்கள் நமக்கு வழிகாட்டியுள்ளார்கள்.
குர்பானியின் நோக்கத்தைப் புரியாத பலர் புகழுக்காக இந்த வணக்கத்தை நிறைவேற்றுகிறார்கள். ஒரு வருடம் கொடுத்து அடுத்த வருடம் கொடுக்காவிட்டால் மற்றவர்கள் ஏளனமாகப் பார்ப்பார்கள் என்று நினைக்கிறார்கள். படைத்தவனின் திருப்தியை விட மனிதர்களின் திருப்திக்கே முன்னுரிமை தருகிறார்கள். நம்மிடம் இறைவன் எதை மிக முக்கியமாக எதிர்பார்க்கிறானோ அதில் தவறிழைத்து விடுகிறார்கள்.
உள்ஹிய்யா எனும் இந்த இபாதத்- மனிதன் இறைநெருக்கம் பெறுவதற்கும்,தியாக மனப்பான்மையை தன்னுள் வளர்த்துக்கொள்வதற்கும்,அல்லாஹ் தனக்கு வழங்கிய பொருளில் விசாலத்தன்மையை கடைபிடிப்பதற்கும் ,அதை தந்த இறைவனுக்கு நன்றி செலுத்துவதற்கும், -இந்த உம்மத்துக்கு தரப்பட்டிருக்கிறது.
அல்லஹுத்தஆலா திருக்குர்ஆனில் இரண்டு இடங்களில் உள்ஹிய்யா வை முதன்மை வணக்கமான தொழுகையுடன் சேர்த்து கூறுகிறான்.
يقول تعالي: فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ (التكاثر:2)
ويقول -جل شأنه-: (قُلْ إِنَّ صَلاَتِى وَنُسُكِى وَمَحْيَاىَ وَمَمَاتِى للَّهِ رَبّ الْعَـالَمِينَ * لاَ شَرِيكَ لَهُ) [الأنعام:162، 163
அது இந்த தீனின் அடையாளச்சின்னம் மாத்திரமல்ல, நபி இப்ராஹீம் அலை அவர்களுக்கும் இந்த உம்மதுக்கும் இருக்கிற ஆத்மார்த்த தொடர்பின் வெளிப்பாடாகும்.
இப்ராஹீம் அலை அவர்களின் ஷரீஅத்தில் இருந்த 40 சட்டங்கள், நபி ஸல் அவர்களின் உம்மத்துக்கும் சட்டமாக்கப்பட்டிருக்கிறது,அதில் குர்பானியும் ஒன்று என அல்லாமா பத்ர் ஆலம் தங்களின் தர்ஜுமான் சுன்னா என்ற நூலில் குறிப்பிடுகிறார்கள்
அதனால்தான் ஸஹாபிகள் நபி ஸல் அவர்களிடம் இந்த உள்ஹிய்யா என்ன? என்று கேட்கிறார்கள், இது உங்கள் தந்தை இப்ராஹீம் அலை அவர்களின் வழிமுறை என்றார்கள்.அதில் எங்களுக்கு என்ன? என மீண்டும் கேட்டபோது அதன் ஒவ்வொரு முடிக்கும் ஒரு நன்மை உண்டு என்றார்கள்.
عَنْ زَيْدِ بْنِ أَرْقَمَ، قَالَ: قَالَ أَصْحَابُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: يَا رَسُولَ اللَّهِ مَا هَذِهِ الْأَضَاحِيُّ؟ قَالَ: «سُنَّةُ أَبِيكُمْ إِبْرَاهِيمَ» قَالُوا: فَمَا لَنَا فِيهَا يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «بِكُلِّ شَعَرَةٍ، حَسَنَةٌ» قَالُوا: " فَالصُّوفُ؟ يَا رَسُولَ اللَّهِ قَالَ: «بِكُلِّ شَعَرَةٍ مِنَ الصُّوفِ، حَسَنَةٌ» (ابن ماجة)
குர்பானியின் முறைகளில் சிறிது மாற்றம் இருந்தாலும் எல்லா சமூகத்திலும் இந்த அமல் வழக்கத்தில் இருந்து வந்திருக்கிறது என்பதை திருக்குர்ஆன் தெளிவுபடுத்துகிறது.
وَلِكُلِّ أُمَّةٍ جَعَلْنَا مَنْسَكًا ( 22:34)
{وَلِكُلِّ أُمَّة} أَيْ جَمَاعَة مُؤْمِنَة سَلَفَتْ قَبْلكُمْ {جَعَلْنَا مَنْسَكًا} بِفَتْحِ السِّين مَصْدَر وَبِكَسْرِهَا اسْم مَكَان أَيْ ذَبْحًا قُرْبَانًا أَوْ مَكَانه (تفسير الجلالين)
I. குர்பானியின் சிறப்புகள்:
لَنْ يَنَالَ اللَّهَ لُحُومُهَا وَلَا دِمَاؤُهَا وَلَكِنْ يَنَالُهُ التَّقْوَى مِنْكُمْ كَذَلِكَ سَخَّرَهَا لَكُمْ لِتُكَبِّرُوا اللَّهَ عَلَى مَا هَدَاكُمْ وَبَشِّرِ الْمُحْسِنِينَ 22:37
{لَن يَنَالَ الله} لن يصل إِلَى الله {لُحُومُهَا وَلاَ دِمَآؤُهَا} وَكَانُوا فِي الْجَاهِلِيَّة يضْربُونَ لحم الْأَضَاحِي على حَائِط الْبَيْت ويتلطخون بدمها فنهاهم الله عَن ذَلِك وَيُقَال لَا يقبل الله لحومها وَلَا دماءها {وَلَكِن يَنَالُهُ التَّقْوَى مِنكُمْ} وَلَكِن يقبل الْأَعْمَال الزاكية الطاهرة مِنْكُم
அறியாமைக் காலத்தில் குர்பானி பிராணியின் இறைச்சியை தங்கள் வீட்டுச் சுவர்களிலும், மேனிகளிலும் பூசிக் கொள்வார்கள். அல்லாஹ் அதை தடை செய்து அவற்றின் மாமிசங்களோ, அவற்றின் இரத்தங்களோ அல்லாஹ்வை அடைவதில்லை. மாறாக உங்களிடமுள்ள (இறை) அச்சமே அவனைச் சென்றடையும். (22 : 37)
என்ற வசனத்தை இறக்கினான்.
அன்றைய தினத்தின் சிறந்த அமல்
عَنْ عَائِشَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَا عَمِلَ ابْنُ آدَمَ يَوْمَ النَّحْرِ عَمَلًا أَحَبَّ إِلَى اللَّهِ عَزَّ وَجَلَّ، مِنْ هِرَاقَةِ دَمٍ، وَإِنَّهُ لَيَأْتِي يَوْمَ الْقِيَامَةِ، بِقُرُونِهَا، وَأَظْلَافِهَا، وَأَشْعَارِهَا، وَإِنَّ الدَّمَ، لَيَقَعُ مِنَ اللَّهِ عَزَّ وَجَلَّ، بِمَكَانٍ قَبْلَ أَنْ يَقَعَ عَلَى الْأَرْضِ، فَطِيبُوا بِهَا نَفْسًا» (ابن ماجة)
நஹ்ருடைய நாளில் ஆதமுடைய மகன் செய்யும் செயலில் அல்லாஹ்விற்கு பிடித்தமான செயல் இரத்தத்தை ஓட்டுவது ஆகும். மறுமையில் அப்பிராணி கொம்புகள், கால் குளம்புகள், முடிகள் இருக்கும் நிலையில் வரும். (அவன் ஓட்டிய) இரத்தம் தரையில் விழுவதற்கு முன்பு அல்லாஹ்விடத்தில் ((بِمَكَانٍ) يُرِيدُ الْقَبُولَ) அது ஏற்றுக் கொள்ளப்படும். எனவே நல்ல முறையில் இரத்தத்தை ஓட்டுங்கள்.
பாவம் மன்னிக்கப்படும்
عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: " يا فاطمة قومي إلى أضحيتك فاشهديها فإنه يغفر لك عند أول قطرة من دمها كل ذنب عملتيه
( المستدرك علي الصحيحين للحاكم)
பாத்திமாவே எழுந்து உமது குர்பானி பிராணிற்கு அருகில் ஆஜராகுவாயாக, இரத்தத்திலிருந்து விழக்கூடிய ஒவ்வொரு துளிக்கும் உமக்கு பாவம் மன்னிக்கப்படும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
II. குர்பானியின் சட்டங்கள்
குர்பானி கொடுப்பவர் கடைபிடிக்க வேண்டியவை
குர்பானி கொடுக்க நாடியவர் துல்ஹஜ்ஜு மாதம் பிறை ஒன்று முதல் குர்பானி கொடுக்கும் வரை நகம், முடி இவற்றில் எதையும் வெட்டக் கூடாது.
நீங்கள் குர்பானி கொடுப்பவராக இருந்து துல்ஹஜ்ஜு பிறையைக் கண்டால் குர்பானி கொடுக்கும் வரை தனது முடியை, நகத்தை வெட்ட வேண்டாம்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : உம்மு ஸலமா (ரலி) நூல் : முஸ்லிம் (3655),
குர்பானிப் பிராணிகள்
ஒட்டகம், ஆடு, மாடு இம்மூன்றும் குர்பானி கொடுக்கத் தகுதியான பிராணிகள். இதைத் தவிர வேறு எதையும் குர்பானி கொடுக்கக் கூடாது.
கால்நடைகளை அவர்களுக்கு அல்லாஹ் வழங்கியதற்காக அறியப்பட்ட நாட்களே அல்லாஹ்வின் திருநாமத்தை அவர்கள் துதிப்பார்கள். அதில் இருந்து நீங்களும் உண்ணுங்கள், வறிய ஏழைகளுக்கும் வழங்குங்கள்.
(அல்குர்ஆன் 22 : 28)
இந்த வசனத்தில் குர்பானிக்கான பிராணிகளைப்பற்றி அல்லாஹ் குறிப்பிடும் பொழுது அன்ஆம் என்ற வார்த்தையைப் பயன்படுத்துகின்றான். அன்ஆம் என்றால் ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய மூன்று பிராணிகளை மாத்திரம் குறிக்கும். எனவே ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவற்றையே குர்பானி கொடுக்க வேண்டும்.
ஆடுகளில் சில இனத்தைக் கொடுக்கக் கூடாது என்ற தவறான நம்பிக்கை நிலவுகிறது. வெள்ளாடு செம்மறியாடு ஆகிய எதுவானாலும் கொடுப்பதில் குற்றமில்லை..
குர்பானி கொடுப்பதற்கு பெண் பிராணியை பெரும்பாலும் யாரும் தேர்வு செய்வதில்லை. பெண் பிராணியை அறுத்துப் பலியிடுவது தவறானது என்று நினைக்கிறார்கள். தடுக்கப்பட்ட பிராணிகளின் தன்மையை நபி (ஸல்) அவர்கள் விளக்கும் போது பெண்ணினத்தை பலியிடக்கூடாது என்று கூறவில்லை.
நபி (ஸல்) அவர்கள் அவ்வாறு கூறாத போது நாமாக நிபந்தனைகளை விதிப்பது முறையல்ல. பலியிடப்பட வேண்டிய பிராணிகளைப் பற்றி அல்லாஹ் குறிப்பிடும் போது பெண்ணினத்தையும் சேர்த்தே குறிப்பிடுகிறான்.
ثَمَانِيَةَ أَزْوَاجٍ ۖ مِّنَ الضَّأْنِ اثْنَيْنِ وَمِنَ الْمَعْزِ اثْنَيْنِ ۗ قُلْ آلذَّكَرَيْنِ حَرَّمَ أَمِ الْأُنثَيَيْنِ أَمَّا اشْتَمَلَتْ عَلَيْهِ أَرْحَامُ الْأُنثَيَيْنِ ۖ نَبِّئُونِي بِعِلْمٍ إِن كُنتُمْ صَادِقِينَ
(நபியே! அம்மக்களிடம்) “கால்நடைகளில் எட்டு வகைகள் உள்ளன - செம்மறி ஆட்டில் (ஆண், பெண்) இரு வகை வெள்ளாட்டில் (ஆண், பெண்) இரு வகை அவன் (அல்லாஹ்) ஆண் இரண்டையும் ஹராமாக்கி விட்டானா? அல்லது பெட்டை இரண்டையும் ஹராமாக்கி விட்டானா? அல்லது அவ்விரு வகைகளிலுமுள்ள பெண்களின் கர்ப்பங்களில் உள்ளவற்றையா (அவன் தடுத்திருக்கிறான்?) நீங்கள் உண்மை கூறுபவர்களாக இருந்தால், (இதனை) ஆதாரத்துடன் எனக்கு அறிவியுங்கள்” என்று கேட்பீராக.
(அல்குர்ஆன் : 6:143)
மேலும் நபி(ஸல்) அவர்கள் ஒட்டகம், ஆடு, மாடு ஆகியவற்றை மட்டும் குர்பானி கொடுத்ததாக ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் கூறுகின்றன. எனவே இம்மூன்று பிராணிகள் மட்டுமே குர்பானிப் பிராணிகளாகும்.
எருமை மாட்டை குர்பானிக் கொடுப்பதில் அறிஞர்களுக்கிடையே கருத்து வேறுபாடு நிலவுகிறது. நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்த பூமியில் எருமை மாடு இல்லாததால் குர்ஆன் ஹதீஸில் இதைப் பற்றி தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை. எனவே சிலர் ஹதீஸ்களில் இல்லாததை குர்பானி கொடுக்கக்கூடாது என்கின்றனர். இன்னும் சிலர் எருமை மாடு மாட்டு இனத்தில் உள்ளதால் மாட்டை எப்படிக் கொடுக்கலாமோ அதைப் போன்று இதையும் கொடுக்கலாம் என்கின்றனர்.
அல்லாஹ் மிக அறிந்தவன்.
சில ஊர்களில் ஈதுப் பெருநாளில் சேவல், கோழி போன்றவற்றை குர்பானி கொடுக்கின்றனர். இவ்வாறு செய்வது கூடாது. இதற்கு ஹதீஸ்களில் எந்த ஆதாரமும் கிடையாது.
பிராணிகளின் தன்மைகள்
குர்பானிப் பிராணிகள் நல்ல திடகாத்திரமானதாகவும், ஆரோக்கியமானதாகவும் இருக்க வேண்டும். பொதுவாக எந்தக் குறையும் இல்லாததாகவும் இருக்க வேண்டும்.
தெளிவாகத் தெரியும் நொண்டி, தெளிவாகத் தெரியும் பார்வைக் குறை, தெளிவாகத் தெரியும் நோய், எலும்பில் மஜ்ஜை இல்லாத மெலிவு ஆகிய குறைபாடுகளுடையவற்றைக் குர்பானி கொடுப்பது கூடாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அல்பரா பின் ஆசிப் (ரலி) நூல் : திர்மிதீ (1417),
நபி (ஸல்) அவர்கள் தெளிவாகக் குறை தெரியும் பிராணியைத் தடை செய்துள்ளார்கள். உதாரணமாக குருடு நொண்டி போன்ற குறைகள் இருக்கக் கூடாது. அவர்கள் கூறிய தெளிவாகத் தெரியும் என்ற வாசகம் குறை மறைமுகமாகவும் சிறியதாகவும் இருந்தால் பிரச்சனையில்லை என்பதை காட்டுகிறது. எனவே சிறிய அளவில் வெளிப்படையாகத் தெரியாத குறையுள்ள ஆட்டைக் குர்பானிக் கொடுப்பதில் குற்றமில்லை.
நபி(ஸல்) அவர்கள் கொம்புள்ள, கருப்பு நிறத்தால் நடக்கக் கூடிய, கருப்பு நிறத்தால் அமரக் கூடிய, கருப்பு நிறத்தால் பார்க்கக் கூடிய (அதாவது முட்டுக்கால், கால், கண்பகுதி, கருப்பு நிறமுடைய) ஆட்டை குர்பானிக் கொடுக்க வாங்கி வருமாறு கட்டளையிட்டார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா(ரலி) நூல் : முஸ்லிம் (3637)
நபி (ஸல்) அவர்கள் உட்பகுதியில் பாதி கொம்பு உடைந்த ஆடு குர்பானி கொடுக்கப்படுவதை தடுத்தார்கள்.
நூல் : நஸயீ (4301) அறிவிப்பாளர் : அலீ (ரலி)
தலையின் உட்பகுதியில் பாதியளவு கொம்பு உடைந்த ஆட்டிற்கு அல்பா என்று சொல்லப்படும். இவ்வகை பிராணியை குர்பானி கொடுக்க நபி (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள்.
வெளிப்பகுதியில் கொம்பு உடைந்திருந்தால் அதை குர்பானி கொடுப்பதில் தவறில்லை. ஏனென்றால் தடைசெய்யப்பட்ட பிராணிகளின் தன்மைகளை பற்றி நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடும் போது வெளிப்புறத்தில் கொம்பு உடைந்ததை கொடுக்கக்கூடாது என்று தடைவிதிக்கவில்லை.
இந்த ஹதீஸ்களின் அடிப்படையில் ஆடு வாங்குபவர்கள் பெரிய கொம்புள்ள, முகம், மூட்டுக்கால், கண் பகுதி கருப்பு நிறமுடையதாக வாங்குவது சிறப்புக்குரியதாகும். ஆனால் கட்டாயமில்லை.
பெரும்பாலான இடங்களில் அல்லாஹ்விற்காக வாங்கப்பட்ட பிராணிகளுக்கிடையே சண்டையை ஏற்படுத்தி போட்டி வைக்கிறார்கள். இதனால் அப்பிராணிகளின் கொம்புகள் உடைந்து விடுகின்றது. அவற்றுக்கு பலத்த காயமும் ஏற்படுகிறது. இது போன்று குறைகளை ஏற்படுத்தி குர்பானிக் கொடுத்தால் இதில் எள் அளவும் பயனில்லை. இக்கேளிக்கையில் ஈடுபடுபவர் உயிரினங்களை கொடுமைப்படுத்திய குற்றத்தின் கீழ் சேர்க்கப்படுவார். பிராணியை அறுக்கும் போது அதற்குச் சிரமம் ஏற்படாமல் இருப்பதற்காக கத்தியை கூர்மையாக்கிக் கொள்ளும்படி வலியுறுத்தும் நம்மார்க்கம் பிராணிகளுக்கு இழைக்கப்படும் இந்த சித்தரவதையை ஒருபோதும் ஏற்காது.
பாலூட்டும் பிராணி
குட்டியை ஈன்று பால் கொடுத்துக் கொண்டிருக்கும் பிராணியை அறுக்க வேண்டாம் என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஏனென்றால் தாயை அறுத்து விட்டால் குட்டி பாசத்திற்கும் பாலிற்கும் ஏங்கக்கூடிய நிலை ஏற்படும். குர்பானி கொடுப்பவர்கள் இதை கவனத்தில் கொண்டு குட்டிபோட்டு பால்தரும் பிராணிகளை அறுப்பதை தவிர்க்க வேண்டும்.
(ஒரு அன்சாரித் தோழர் நபி (ஸல்) அவர்களுக்காக ஆடு அறுப்பதற்காக) கத்தியை எடுத்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பால்தரும் ஆட்டை அறுக்க வேண்டாம் என நான் உம்மை எச்சரிக்கிறேன் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) முஸ்லிம் : (3799)
குர்பானிப் பிராணியை பயன்படுத்தலாமா?
அவசியம் ஏற்படும் போது குர்பானிப் பிராணிகளை பயன்படுத்திக் கொள்வது தவறல்ல. ஆனால் கொடுமை செய்யாமல் அதன் சக்திக்கு உட்பட்டவாறு அழகிய முறையில் அதைக் கையாள வேண்டும்.
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடம் பலிப்பிராணியில் ஏறிச் செல்வதைப் பற்றிக் கேட்கப்பட்டது., நீங்கள் அதில் ஏறிச் செல்ல வேண்டிய நிலைக்குக் கட்டாயப்படுத்தப்பட்டால் பயண வாகனம் கிடைக்கும் வரை முறையோடு அதில் ஏறிச் செல்க என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதை நான் கேட்டுள்ளேன் என அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு ஜுரைஹ் (ரஹ்) நூல் : முஸ்லிம் (2562 , 2563),
عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى رَجُلًا يَسُوقُ بَدَنَةً فَقَالَ: «ارْكَبْهَا»، قَالَ: إِنَّهَا بَدَنَةٌ قَالَ: «ارْكَبْهَا» قَالَ: إِنَّهَا بَدَنَةٌ قَالَ: «ارْكَبْهَا» ثَلاَثًا ( البخاري)
ஒருவர் தமது குர்பானி ஒட்டகத்தை இழுத்துக் கொண்டு செல்வதைப் பார்த்த நபி (ஸல்) அவர்கள் அதில் ஏறிக் கொள்ளும் என்றார்கள். அதற்கவர் இது குர்பானி ஒட்டகமாயிற்றே என்றதும் (பரவாயில்லை) அதில் ஏறிக் கொள்ளும் என்றார்கள். மீண்டும் அவர் இது குர்பானி ஒட்டகமாயிற்றே என்றதும் (பரவாயில்லை) அதில் ஏறிக்கொள்ளும் என மூன்றாம் தடவையும் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி) நூல் : புகாரி (1690)
சில பிராணிகள் நம் கட்டளைகளுக்கு அடங்காமல் மிரண்டு ஓடும். இப்ராணிகளைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக அவற்றை அடிப்பதில் தவறேதும் இல்லை. அடங்காத பிராணிகளை அம்பெய்து கட்டுப்படுத்த நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள்.
அடங்காத பிராணிகளை கையாள்வது
எங்களுக்கு சில ஒட்டகங்களும் ஆடுகளும் போர்ச் செல்வமாகக் கிடைத்தன. அவற்றிலிருந்து ஓர் ஒட்டகம் மிரண்டு ஓடிவிட்டது. உடனே (நபித்தோழர்களில்) ஒருவர் அந்த ஒட்டகத்தைக் குறிவைத்து அம்பெய்து அதை ஓடவிடாமல் தடுத்து நிறுத்தினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வனவிலங்குகளில் கட்டுக்கடங்காதவை இருப்பதைப் போன்றே இந்தப் பிராணிகளிலும் கட்டுக்கடங்காதவை சில உள்ளன. இவற்றில் உங்களை மீறிச் செல்பவற்றை இவ்வாறே (அம்பெய்து நிற்கச்) செய்யுங்கள்.
அறிவிப்பவர் : ராஃபிஉ பின் கதீஜ் நூல் : புகாரி (2488)
குர்பானி கொடுக்க அனுமதிக்கப்பட்ட நாட்களும். குர்பானி கொடுப்பது மக்ரூஹாக கருதப்படும் நேரமும்
الأضحية جَائِزَةٌ فِي ثَلَاثَةِ أَيَّامٍ : يَوْمُ النَّحْرِ وَيَوْمَانِ بَعْدَهُ وَقَالَ الشَّافِعِيُّ : ثَلَاثَةُ أَيَّامٍ بَعْدَهُ لِقَوْلِهِ عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ { أَيَّامُ التَّشْرِيقِ كُلُّهَا أَيَّامُ ذَبْحٍ } وَلَنَا مَا رُوِيَ عَنْ عُمَرَ وَعَلِيٍّ وَابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمْ أَنَّهُمْ قَالُوا : أَيَّامُ النَّحْرِ ثَلَاثَةٌ أَفْضَلُهَا أَوَّلُهَا- وَيَجُوزُ الذَّبْحُ فِي لَيَالِيِهَا إلَّا أَنَّهُ يُكْرَهُ لِاحْتِمَالِ الْغَلَطِ فِي ظُلْمَةِ اللَّيْلِ (الهداية)
ஷாபி மத்ஹபின் படி பிறை 10, 11, 12, 13 நாட்களில் குர்பானி கொடுக்கலாம். ஹனபி மத்ஹபின் படி பார்க்கும் போது பிறை 10, 11, 12 நாட்கள் மட்டுமே. அவற்றில் முதலாவது நாள் கொடுப்பது சிறந்தது என்று நபி ஸல் அவர்கள் கூறி இருக்கிறார்கள். இரவில் கொடுப்பது கூடும் என்றாலும் அது மக்ரூஹ் ஆகும்.
ஈத் தொழுகை முடிந்த பின்பே குர்பானி கொடுக்க வேண்டும்.
عَنْ الْبَرَاءِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ أَوَّلَ مَا نَبْدَأُ بِهِ فِي يَوْمِنَا هَذَا أَنْ نُصَلِّيَ ثُمَّ نَرْجِعَ فَنَنْحَرَ مَنْ فَعَلَهُ فَقَدْ أَصَابَ سُنَّتَنَا وَمَنْ ذَبَحَ قَبْلُ فَإِنَّمَا هُوَ لَحْمٌ قَدَّمَهُ لِأَهْلِهِ لَيْسَ مِنْ النُّسُكِ فِي شَيْءٍ (بخاري)
பராஉ இப்னு ஆஸிப்(ரலி) கூறினார் (ஈதுல் அள்ஹா பெருநாள் உரையில்) நபி(ஸல்) அவர்கள், “இன்றைய தினம் நாம் முதலாவதாகச் செய்ய வேண்டியது யாதெனில், முதலில் நாம் (பெருநாள் தொழுகை) தொழுவோம்; பிறகு (தொழுகையிலிருந்து திரும்பிச் சென்று குர்பானிப்பிராணிகளை அறுப்போம். இதை செய்கிறவர் நம்முடைய வழியைப் பின்பற்றியவராவார். (பெருநாள் தொழுகைக்கு) முன்பே (குர்பானிப் பிராணியை) அறுக்கிறவருக்கு அது, தம் குடும்பத்தாருக்காக முன்கூட்டியே தயார் செய்த (சாதாரண) இறைச்சியாகவே அமையும்; அது (குர்பானி) வழிபாட்டில் எதிலும் சேராது“ என்று கூறினார்கள்.
சீக்கிரம் குர்பானி கொடுப்பது நல்லது. குத்பா முடிந்து மிம்பரிலிருந்து கீழே இறங்கியுடன் நபி ஸல் குர்பானி கொடுத்துள்ளார்கள்
عَنْ جَابِرِ رضي الله عنه قَالَ شَهِدْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْأَضْحَى بِالْمُصَلَّى فَلَمَّا قَضَى خُطْبَتَهُ نَزَلَ مِنْ مِنْبَرِهِ وَأُتِيَ بِكَبْشٍ فَذَبَحَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِيَدِهِ وَقَالَ بِسْمِ اللَّهِ وَاللَّهُ أَكْبَرُ هَذَا عَنِّي وَعَمَّنْ لَمْ يُضَحِّ مِنْ أُمَّتِي (ابوداود
நபி ஸல் மிம்பரிலிருந்து இறங்கியவுடன் ஆடொன்று கொண்டு வரப்பட்டது. பிஸ்மில்லாஹி வல்லாஹு அக்பர் இது எனக்கும் என் உம்மத்தில் குருபானி கொடுக்காதவர்களுக்காகவும் அறுக்கிறேன் என்று அண்ணலார் அறுத்து பலியிட்டார்கள்.
ஒரு குடும்பத்தலைவர் வயது வந்த தன் பிள்ளைகளுக்காகவோ, அல்லது தன் மனைவிக்காகவோ குர்பானி கொடுப்பது கட்டாயமில்லை. கொடுத்தால் கூடும். தன் சிறு பிள்ளைகளுக்காக கொடுப்பது கடமையா என்பதில் கருத்து வேறுபாடு உள்ளது
குர்பானிப் பிராணியை அறுக்கும் போது நிய்யத்துடன் வஜ்ஜஹ்த்து, பிஸ்மில்லாஹ் ஓதி தக்பீர் சொல்வது
எந்தப்பிராணியை அறுத்தாலும் அறுக்கும் முன் கத்தியை தீட்டுவது, அறுத்தவுடன் உடனே உரிக்காமல் சூடு ஆற விடுவது
عَنْ شَدَّادِ بْنِ أَوْسٍ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ اللَّهَ كَتَبَ الْإِحْسَانَ عَلَى كُلِّ شَيْءٍ فَإِذَا قَتَلْتُمْ فَأَحْسِنُوا الْقِتْلَةَ وَإِذَا ذَبَحْتُمْ فَأَحْسِنُوا الذَّبْحَ وَلْيُحِدَّ أَحَدُكُمْ شَفْرَتَهُ فَلْيُرِحْ ذَبِيحَتَهُ (مسلم) قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا قُطِعَ مِنْ الْبَهِيمَةِ وَهِيَ حَيَّةٌ فَهِيَ مَيْتَةٌ1 (أحمد
எல்லாப் பொருட்களின் மீதும் நல்ல முறையில் நடந்து கொள்வதை அல்லாஹ் கடமையாக்கியுள்ளான். நீங்கள் (கிஸாஸ் பழிக்குப் பழி வாங்கும் போது) கொலை செய்தால் அழகிய முறையில் கொலை செய்யுங்கள். நீங்கள் பிராணிகளை அறுத்தால் அழகிய முறையில் அறுங்கள். உங்கள் கத்தியை நீங்கள் கூர்மையாக்கிக் கொள்ளுங்கள்! (விரைவாக) அறுப்பதன் மூலம் அதற்கு நிம்மதியைக் கொடுங்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஷிதாத் இப்னு அவ்ஸ்(ரலி) அஹ்மது(16490)
அறுக்கப்படும் பிராணிக்கு முன்னால் கத்தியை தீட்டுவது அதனை பல முறை சாகடிப்பதாகும்
عن ابن عباس رضي الله عنه أن رجلا أضجع شاة وهو يحد شفرته2 فقال النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أتريد أن تُمِيتَها موتاتٍ هَلاَّ حَدَدْتَ شَفْرَتك قبل أن تُضْجِعَها (مستدرك الحاكم) كتاب الاضحية)
ஒருவர் ஆட்டை அறுப்பதற்காக அதைப் படுக்க வைத்துக் கொண்டு கத்தியைத் தீட்டிக் கொண்டிருந்தார். நபி (ஸல்) அவர்கள் (அவரிடம்) இப்பிராணியைப் பலமுறை கொல்வதை நீ நாடுகிறாயா? இதை நீ படுக்கவைப்பதற்கு முன்பாகவே உன் கத்தியை நீ கூர்மைப்படுத்தியிருக்கக் கூடாதா? என்று கூறினார்கள். அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) நூல் : ஹாகிம் பாகம் : 4 பக்கம் : 257
இறக்கம் காட்டு இறக்கம் காட்டப்படுவாய்
عن معاوية بن قرة عن أبيه : أن رجلا قال : يا رسول الله إني لأرحم الشاة أن أذبحها فقال رسول الله صلى الله عليه و سلم : إن رَحِمْتَها رحِمَك الله (مستدرك الحاكم) كتاب الاضحية)
மென்மையாக அழைத்துச்செல்வதும், தண்ணீர் கொடுப்பதும், ஒரு ஆட்டின் முன் மற்றொரு ஆட்டை அறுக்காமலிருப்பதும்
والأولى أن تساق إلى المذبح برفق وتضجع برفق ويعرض عليها الماء قبل الذبح ولا يحد الشفرة
قِبَالتها ولا يذبح بعضها قِبالة بعض (بحر الرائق)
மென்மையாக இழுத்துச் சென்று மென்மையாக படுக்க வைத்து அறுப்பதற்கு முன் நீர் புகட்ட வேண்டும் பிராணிக்கு முன் கத்தியை தீட்டவும் கூடாது. ஒரு பிராணிக்கு முன் இன்னொரு பிராணியை அறுக்கவும் கூடாது.
عنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رض قَالَ مَرَّ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِرَجُلٍ وَهُوَ يَجُرُّ شَاةً بِأُذُنِهَا فَقَالَ دَعْ أُذُنَهَا وَخُذْ بِسَالِفَتِهَا3 (ابن ماجة)
மாநபி அருகில் ஆட்டின் காதை இழுத்துக் கொண்டு சென்ற நபரைப் பார்த்து காதை விடும் கழுத்தைப் பிடித்து மென்மையாக கொண்டு செல்லும் என்று நபியவர்கள் கூறினார்கள்.
அறுக்கும் போது குர்பானிப் பிராணியை கிப்லாவை முன்னோக்கி வைத்து அறுப்பது
استقبال الذابح القبلة وتوجيه الذبيحة إليها وذلك في الهدي والأضحية أشد استحبابا لأن الاستقبال مستحب في القربات وفي كيفية توجيهها ثلاثة أوجه أصحها يوجه مذبحها إلى القبلة ولا يوجه وجهها ليمكنه هو أيضا الاستقبال والثاني يوجهها بجميع بدنها والثالث يوجه قوائمها5(مجموع(
அறுக்கத் தெரிந்தால் முடிந்த வரை தானே அறுப்பது, அல்லது அறுப்பவருக்கு பக்கத்தில் நிற்பது
எனவே உல்ஹிய்யாவின் சட்டங்கள் அனைத்தையும் விளங்கி பரிபூரணமான நன்மையைப் பெற்று அல்லாஹ்வின் அருளைப் பெறுவோமாக.
துல் ஹஜ் மாதத்தின் முந்திய பத்து நாட்களின் சிறப்புகள்
துல் ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களும் மிக சிறப்புக்குரிய நாட்களாகும் ஆகவே இந்த நாட்களில் செய்யும் நல் அமல்களை தெரிந்து நாமும் அமல் செய்து அல்லாஹ்வின் அருட்கொடைகளை பெற்றவர்களாகுவோமாக.
சிறப்புகள்1- துல் ஹஜ் மாத முதல் பத்து நாட்களில் செய்யக்கூடிய நல் அமல்களுக்கு ஈடாக வேறு எந்த நாட்களில் செய்யும் நல் அமல்களும் அல்லாஹ்வுக்கு மிகப்பிரியமானவைகளாக இல்லை என நபி (ஸல்) அவர்கள் கூறியபோது அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்வதை விடவுமா? என நபித்தோழர்கள் கேட்டார்கள். அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்வதை விடவும்தான் ஆனால் அல்லாஹ்வின் பாதையில் பொருளையும் உயிரையும் அர்ப்பணித்து வீரமரணம் அடைந்தவரைத் தவிர என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஆதாரம் : புகாரி
2- நாட்களில் மிகச்சிறந்த நாள் அரஃபாவுடைய நாள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஆதாரம் : ஸஹீஹ் இப்னு ஹிப்பான்.
இந்த நாட்களில் செய்யும் அமல்கள்;
1- ஹஜ் உம்ரா:- ஒரு உம்ரா மற்ற உம்ராவுக்கு இடைப்பட்ட பாவங்களுக்கு பரிகாரமாகும். மேலும் ஏற்றுக்கொள்ப்பட்ட ஹஜ்ஜுக்குரிய கூலி சுவர்க்கத்தைத்தவிர வேறு எதுவும் இல்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.ஆதாரம் - புகாரி முஸ்லிம்.
2-உபரியான தொழுகைகள் நோன்புகள் தர்மங்கள் உறவினர்களுக்கு உதவுவது குர்ஆன் ஓதுவது பாவமன்னிப்பு தேடுவது நன்மையை ஏவுவது தீமையை தடுப்பது போன்ற நல் அமல்களில் ஈடுபடுவது.
[குறிப்பு- துல் ஹஜ் மாதத்தின் பத்தாம் நாளாகிய பெருநாளன்று நோன்பு நோற்பது தடை செய்யப்பட்டுள்ளது.ஆதாரம் - புகாரிமுஸ்லிம்]
3- அரஃபா நோன்பு :- அரஃபா நோன்பு (நோற்பவருக்காக) அந்த நாளுக்கு முந்திய வருடத்தின் பாவங்களையும் அதற்கு பின்னுள்ள வருடத்தின் பாவங்களையும் அல்லாஹ் மன்னிப்பான் என நான் நம்புகின்றேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.ஆதாரம்-முஸ்லிம்
[குறிப்பு :- அரஃபா நோன்பை ஹாஜிகள் நோற்க்கக்கூடாது ஹஜ் செய்யாதவர்கள் இந்த நோன்பை நோற்பது மிகவும் சிறந்தது]
அரஃபா தினத்தன்று அரஃபாவில் தங்கியிருந்த நபி (ஸல்) அவர்கள் தன்னிடம் கொண்டுவந்த பாலை அருந்தி தான் நோன்பு நோற்கவில்லை என்பதை மக்களுக்கு அறிவித்திருக்கின்றார்கள்.ஆதாரம் புகாரி முஸ்லிம்.
4- தக்பீர் கூறுவது:- கடமையான தொழுகைகளுக்குப் பின்னரும் பள்ளிவாசல் வீடு கடைவீதி போன்ற எல்லா இடங்களிலும் தக்பீர் கூறுவது ;
ஹஜ் மாத முதல் பத்து நாட்களில் செய்யக்கூடிய நல் அமல்களுக்கு ஈடாக வேறு எந்த நாட்களில் செய்யும் நல் அமல்களும் அல்லாஹ்வுக்கு மிகப்பிரியமானவைகளாக இல்லை. ஆகவே லாஇலாஹா இல்லல்லாஹ், அல்லாஹு அக்பர், அல்ஹம்து லில்லாஹ் போன்ற திக்ருகளை அதிகமாக செய்யுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஆதாரம் : அஹ்மத்.
இப்னு உமர் (ரலி) அபூஹுரைரா (ரலி) ஆகிய இரு நபித்தோழர்களும் துல்ஹஜ் (மாதம் ஆரம்ப) பத்து தினங்களிலும் கடைவீதிகளுக்கு செல்லும் போதெல்லாம் தக்பீர் கூறுவார்கள் இவ்விருவரும் கூறுவதை கேட்கின்ற மற்ற மக்களும் தக்பீர் கூறுவார்கள்.
ஆதாரம் - புஹாரி.
5- ஹஜ் பெருநாள் தொழுகை இன்னும் குத்பா பிரசங்கத்தில் கலந்து கொள்வது.
நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப்பெருநாளிலும் கன்னிப்பெண்கள் மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்கள் (உட்பட) முஸ்லிம்களின் பிரார்த்தனைகளிலும் நல்ல அமல்களிலும் கலந்து கொள்ள வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு கட்டளையிட்டார்கள். மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்கள் தொழுகையில் கலந்து கொள்ளாமல் தொழுகை நடக்கும் பகுதிக்கு வெளியே இருந்து கொள்ள வேண்டும் என்றார்கள்.
ஆதாரம் :- புகாரி முஸ்லிம்.
பாக்கியம் நிறைந்த துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களை அமல்களால் அலங்கரித்து, அல்லாஹ்வின் நெருக்கத்தைப் பெற்றுக் கொள்வதோடு, அவனுடைய மேலான ரஹ்மத்திற்கும், மஃக்ஃபிரத்திற்கும் சொந்தக்காரராகி, கடமையாக்கப்பட்ட குர்பானியை நிறைவேற்றி சுவனத்தை அனந்தரமாக்கிக் கொள்ளும் நல்ல நஸீபை பாக்கியத்தை நம் எல்லோருக்கும் எல்லாம் வல்ல ரஹ்மான் தந்தருள் பாளிப்பானாக!
ஆமீன்! ஆமீன்! யரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!