ஹிஜ்ரி 1444 (29-07-2022) (21-07-23) (05-07-2024) (27-06-2025).


ஹிஜ்ரத் ஓர் புதிய பரிமாணம்!!!


பன்முகங்கள் கொண்ட பாக்கியங்கள் பல நிறைந்த இஸ்லாமியப் புத்தாண்டில் நாமெல்லாம் தவழ்ந்து கொண்டு  இருக்கின்றோம். 

அல்லாஹ்வின் பேரருளால் புனிதமிக்க ஹிஜ்ரி புத்தாண்டு  துவங்கி ஹிஜ்ரி 1447 ஆம் ஆண்டில் இனிதே அடி எடுத்து வைத்திருக்க காத்திருக்கக்கூடிய ஒரு சிறப்பு மிக்க தருணத்தில் நாம் அனைவரும் இருந்து கொண்டிருக்கிறோம்

உலகிலுள்ள பெரும்பாலான மனித சமூகங்கள் ஆண்டின் துவக்கத்தை வெகு விமரிசையாக கேளிக்கை, கூத்து, கும்மாளம், ஆட்டம், பாட்டம் போன்றவற்றால் கொண்டாடி வருகின்றனர்.

ஆண்டின் துவக்க நாளில் சந்தோஷமாக இருந்தால் அதே போன்று வருடம் முழுவதும் சந்தோஷம் இருக்கும் என்ற அறிவுக்குப் புறம்பான முறையில் மூடநம்பிக்கைகளை வளர்த்துக் கொள்வதை பார்க்கின்றோம்.

ஆனால் நம்முடைய இஸ்லாமிய வருடப் பிறப்போ ஹிஜ்ரத் எனும் தியாகச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்பட்டதாகும். 

அல்லாஹ்வுக்காக அவனது அடியார்கள் அனைத்து விதமான தியாகங்களையும் செய்த மிகப்பெரும் வரலாற்றுச் சம்பவமே ஹிஜ்ரத் ஆகும். 

வரலாற்றுச் சிறப்புமிக்க அந்த தியாகங்களை நினைவு கூறி அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் நன்மக்களாக நம் அனைவரையும் வல்ல அல்லாஹ் ஆக்கி அருள் புரிவானாக! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!!


ஹிஜ்ரத் இல்லை என்றால்?

இன்று நாம் நம்மை முஸ்லிமாக அடையாளப்படுத்துவதில் அடைகிற பெருமிதமும், ஆனந்தமும் அளவிட முடியாதது.

அந்த ஆனந்தத்தை, அந்த பெருமிதத்தை நாம் அடைய எவ்வளவு பெரிய தியாகங்களை அர்ப்பணிப்புகளை முதல் நிலை முஸ்லிம்களாக வாழத்துவங்கிய நபி (ஸல்) அவர்களின் காலத்து முஸ்லிம்களான நபித்தோழர்கள் செய்துள்ளார்கள் என்பதை நாம் அவதானிக்க கடமைப் பட்டிருக்கின்றோம்.

அவர்கள் இஸ்லாமிய வாழ்க்கையை துவக்கிய கால கட்டத்தில் தாம் ஒரு முஸ்லிம் என்று கூட தங்களால் சொல்ல முடியாத அளவுக்கு அவஸ்தை பட்டார்கள். தங்கள் ஈமானை மறைத்து, பிறர் கண்ணில் இருந்து இஸ்லாமிய அடையாளத்தை மறைத்து அவர்கள் வாழ்ந்தார்கள்.

அன்றைய இஸ்லாமிய வாழ்வை மூன்று பாகங்களாக இஸ்லாமிய வரலாறு நமக்கு அறிமுகப்படுத்துகின்றது.

ஒன்று மக்கா வாழ்க்கை, இரண்டு மதீனா வாழ்க்கை, மூன்று மக்கா வெற்றி பெற்ற பின்னர் உள்ள பரந்து விரிந்த இப்பிரபஞ்சத்தின் இஸ்லாம் பட்டொளி வீசி சுடர் விட்டு ஒளிர்ந்த வாழ்க்கை.

முந்தைய வாழ்க்கையில் இஸ்லாமிய வாழ்க்கையை வாழ்ந்து விட மாட்டோமா? என்கிற கனவுகளும், ஏக்கங்களும் மட்டுமே இருந்தது.

இரண்டாம் வாழ்க்கை கனவுகளை அடைய, ஏக்கங்களை கைவசமாக்கிட போராட்டங்களையும், உயிர் தியாகங்களையும் முழு மூச்சாக கொண்டு பயணிக்க வேண்டி இருந்தது.

மூன்றாம் வாழ்க்கை இந்த தீன் முழுமையடைந்து எல்லோருக்கும் எல்லாமும் சாத்தியம் என்கிற வாழ்க்கை.

இந்த வாழ்க்கையை சாத்தியமாக்கிய பூமி மதீனா எனும் புண்ணிய பூமி.

ஆம்! இஸ்லாத்திற்கு பெரும் பெரும் வெற்றிகள் இம்மண்ணில் இருந்தே ஆரம்பிக்கப்ட்டன. 

முழு மனித சமுதாயத்திற்கும் ‘இணைவைப்பு எனும் இருளில் இருந்து ஏகத்துவம் எனும் ஒளியை’ ஏற்படுத்தி மனிதர்கள் கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தின் பக்கமும் இம்மண்ணின் பக்கமும் விரைந்தனர். 

பூமியில் உள்ளவர்களுக்காக வெளியாக்கப்பட்ட அவ்வளவு நண்மையும் இந்த கண்ணியமான பூமியில் இருந்தே வெளியானது. 

‘இஸ்லாமிய சாம்ராஜியம் இங்கு தான் ஆரம்பத்தில் கட்டியெழுப்பப்பட்டு பெரும் வல்லரசுகள் கூட இம்மண்ணில் மண்டியிட வேண்டிய நிலை ஏற்பட்டது.

இவைகள் எல்லாம் எங்கிருந்து கிடைத்தது இந்த உம்மத்துக்கு? இதன் அஸ்திவாரம் எங்கு அமைக்கப்பட்டது?

அதற்கான விடை இஸ்லாமிய வரலாற்றில் ஒற்றை வார்த்தையில் கிடைக்கும். ஆம்! "ஹிஜ்ரத்" எனும் தூய பயணத்தில் இருந்து தான் இத்தனையும் இந்த உம்மத்துக்கு சாத்தியமானது.

 

ஹிஜ்ரத் இல்லாத இஸ்லாம் என்பது கற்பனை செய்து பார்க்க முடியாத ஒன்றாகும்.

ஹிஜிரி 1446 முடிந்து இன்னும் ஓரிரு நாட்களில் ஹிஜிரி 1447 துவங்கி உள்ளது.

இஸ்லாமியர்களின் புத்தாண்டாகத்தான் நம்மில் பெரும்பாலானவர்களால் ஹிஜ்ரத் பார்க்கப்படுகிறது.

மாறாக,. இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களும், நபித்தோழர்களும் தாங்கள் பிறந்து வளர்ந்த பூர்வீக பூமியான மக்காவை துறந்து வெளியேறி 1447 ஆண்டுகள் ஆகி விட்டது.

வெறுத்தல், துறத்தல், வெளியேறுதல் என்ற பொருள் தரக் கூடிய பெருமானாரின் ஹிஜ்ரத் நடந்து 1446ஆண்டுகள் முடிந்து 1447 ஆவது ஆண்டு துவங்கி இருக்கிறது.

இந்த செய்தியைத்தான் ஹிஜிரி ஆண்டின் துவக்கம் முதலில் நினைவு கூறுகிறது.

அடுத்து நெருக்கடியை சந்திக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் "ஹிஜ்ரத்தை" நினைவு கூர்ந்து நமக்கான மீட்சியை அங்கிருந்து ஆய்வு செய்து பெற்றுக் கொள்ளுமாறு ஹிஜ்ரத் தூண்டுகிறது.

அடுத்து, இந்த உலகம் முஸ்லிம்களுக்கு சுறுங்கி விடும் என்று கருதக்கூடாது மாறாக, முஸ்லிம்களுக்காக விசாலமாகிக் கொண்டே செல்லும் என்பதையும் ஹிஜ்ரத் நமக்கு சொல்கிறது.

قُلْ يٰعِبَادِ الَّذِيْنَ اٰمَنُوا اتَّقُوْا رَبَّكُمْ‌ لِلَّذِيْنَ اَحْسَنُوْا فِىْ هٰذِهِ الدُّنْيَا حَسَنَةٌ ‌ وَاَرْضُ اللّٰهِ وَاسِعَةٌ ‌ اِنَّمَا يُوَفَّى الصّٰبِرُوْنَ اَجْرَهُمْ بِغَيْرِ حِسَابٍ‏

(நபியே!) நீர் கூறும்: “ஈமான் கொண்ட நல்லடியார்களே! உங்களுடைய இறைவனுக்கு பயபக்தியாக இருங்கள்; இவ்வுலகில் அழகாய் நன்மை செய்தோருக்கு அழகிய நன்மையே கிடைக்கும் - அல்லாஹ்வுடைய பூமி விசாலமானது; பொறுமையுள்ளவர்கள் தங்கள் கூலியை நிச்சயமாகக் கணக்கின்றிப் பெறுவார்கள். ( அல்குர்ஆன்: 39: 10 )

ஹிஜ்ராவின் தொடக்க காலம் தொட்டு மாநபி ஸல் அவர்கள் இந்த உலகை விட்டு விடை பெறும் வரை இறைச் செய்தி எனும் வஹியின் மூலம் இந்த உம்மத்தை ஆன்மீக வளர்ச்சியிலும் லௌகீக வளர்ச்சியிலும் வார்த்தெடுத்தார்கள். 

இன்று உலகெங்கும் ரீங்காரமிடும் உயர்ந்த, கண்ணியமிக்க ‘அதான்' (பாங்கு) தான் முதன் முதலாக மார்க்கமாக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, தொழுகை அமைப்பு, நோன்பு, ஜிஹாத், ஜகாத், ஸதகா, ஹஜ், போன்ற உயரிய வழிபாடும் வழிபாட்டு முறைகளும் கடமையாக்கப்பட்டது.

மனிதவள மேம்பாட்டுடன் தொடர்பான நல்லொழுக்க விழுமியங்கள் போதிக்கப்பட்டது.

 

மனிதவளத்தை நாசமாக்கும் பல்வேறுபட்ட தீய பண்பாடுகள் அடையாளப்படுத்தப்பட்டு வேரறுக்கப்பட்டது.

ஒரு மனிதன் மனிதனாக வாழ தேவையான அனைத்து வழிகாட்டலும் வழங்கப்பட்டது.

சுமார் பத்தாண்டுகால ஹிஜ்ரத்துக்கு பிந்தைய மதீனா வாழ்க்கை தான் உலக அழிவு நாள் வரையிலான அனைத்து மக்களுக்கும் முன்மாதிரியான வாழ்க்கை முறையாக ஆக்கப்பட்டது.

சிறுநீர் கழிப்பது முதற்கொண்டு மனித வாழ்க்கையை சீராக கொண்டு செல்வது வரையிலான வாழ்க்கை முறை கற்றுக் கொடுக்கப்பட்டது. 

சுவர்கத்தைப் பற்றி வாயால் ஓதி காதால் கேட்ட ஒரு சமூகம் தாங்கள் வாழும் காலத்திலேயே சுவனவாசிகளை கண்ணாரக் கண்டது.

ஏன்? கனவில் கூட தம்மோடு வாழ்ந்தவர்கள் சுவர்கத்தில் நுழைவதைப் பார்த்தது. சுவனத்திற்குள் சென்று தம் தோழர்களின் அந்தஸ்துகளைக் கண்டது.

நரகத்தைப் பற்றி வாயால் ஓதி காதால் கேட்ட ஒரு சமூகம் தாங்கள் வாழும் காலத்திலேயே நரகத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பாக எறியப்பட்ட கல் விழும் சப்தத்தைக் கேட்டது. 

ஹிஜ்ரத்துக்குப் பிந்தைய வாழ்க்கை தான் எவ்வளவு விந்தையானது

ஹிஜ்ரத் பயணம் என்பது....

لمنهج القرآن الكريم في إيثار الإجمال والإيجاز في أغلب الشـأن أشارت بعض الآيات الكريمة إلى أسباب الهجرة إشارات تعتمد على اللفظة الموحية والكلمة الجامعة،

ஹிஜ்ரத் பயணம் என்பது உலக ஆசையை, சுக போக வாழ்க்கையை, உயிர் வாழ வேண்டும் என்ற நோக்கில் அமைந்த பயணம் அல்ல அது.

மாறாக, அந்த பயணம் மேற்கொள்வதற்கான அடிப்படை காரணங்களை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அல்குர்ஆனில் பல்வேறு இடங்களில் பதிவு செய்துள்ளான்.

1) வெளியேற்றம் என்பது அந்த மக்களின் மீது வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்டது.

மிகவும் சிறுபான்மையாக இருந்த அவர்கள் இறை நம்பிக்கை கொண்ட ஒரே காரணத்திற்காக பல்வேறு வகைகளில் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டார்கள். எனவே, சித்ரவதையில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.

فقد جاء في الآية 195 من سورة آل عمران ﴿.. فَٱلَّذِينَ ‌هَاجَرُواْ ‌وَأُخۡرِجُواْ ‌مِن ‌دِيَٰرِهِمۡ…﴾
‌ؕ وَ اللّٰهُ عِنْدَهٗ حُسْنُ الثَّوَابِ‏ فَالَّذِيْنَ هَاجَرُوْا وَاُخْرِجُوْا مِنْ دِيَارِهِمْ وَاُوْذُوْا فِىْ سَبِيْلِىْ وَقٰتَلُوْا وَقُتِلُوْا لَاُكَفِّرَنَّ عَنْهُمْ سَيِّاٰتِهِمْ وَلَاُدْخِلَنَّهُمْ جَنّٰتٍ تَجْرِىْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ‌ۚ ثَوَابًا مِّنْ عِنْدِ اللّٰهِ
وبناء الفعل للمجهول في (أخرجوا) يدل على أن المسلمين أجبروا على الخروج من ديارهم بسبب ما أصابهم من أذى على أيدي المشركين.

எனவே யார் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறினார்களோ மேலும் வெளியேற்றப்பட்டார்களோ, மேலும் என் பாதையில் துன்பப்பட்டார்களோ, மேலும் போரிட்டார்களோ, மேலும் (போரில்) கொல்லப்பட்டார்களோ, அவர்களுடைய தீமைகளை அவர்களை விட்டும் நிச்சயமாக அகற்றி விடுவேன்; இன்னும் அவர்களை எவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கின்றனவோ அந்தச் சுவனபதிகளில் நிச்சயமாக நான் புகுத்துவேன்” (என்று கூறுவான்); இது அல்லாஹ்விடமிருந்து (அவர்களுக்குக்) கிட்டும் சன்மானமாகும்; இன்னும் அல்லாஹ்வாகிய அவனிடத்தில் அழகிய சன்மானங்கள் உண்டு. ( அல்குர்ஆன்: 3: 195 )

2) இறைவனின் திருப் பொருத்தத்தை தேடிய நிலையில் வெளியேறிய பயணம் அது.

وورد هذا الفعل بصيغة المبني للمجهول في الآية 8 في سورة الحشر للدلالة على نفس المعنى
لِلْفُقَرَآءِ الْمُهٰجِرِيْنَ الَّذِيْنَ اُخْرِجُوْا مِنْ دِيَارِهِمْ وَاَمْوَالِهِمْ يَبْتَغُوْنَ فَضْلًا مِّنَ اللّٰهِ وَرِضْوَانًا وَّيَنْصُرُوْنَ اللّٰهَ وَرَسُوْلَهٗ‌ؕ اُولٰٓٮِٕكَ هُمُ الصّٰدِقُوْنَ‌ۚ‏

எவர்கள் தம் வீடுகளையும், தம் சொத்துகளையும் விட்டு, அல்லாஹ்வின் அருளையும், அவன் திருப் பொருத்தத்தையும் தேடியவர்களாக வெளியேற்றப்பட்டனரோ அந்த ஏழை முஹாஜிர்களுக்கும் (ஹிஜ்ரத் செய்தவர்களுக்கும் அப்பொருளில் பங்குண்டு); அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் உதவி செய்து கொண்டிருக்கின்றனர் அவர்கள் தாம் உண்மையாளர்கள். ( அல்குர்ஆன்: 59: 8 )

3) இது தான் அது தான் என வரையறுக்கப்படாத பல்வேறு அநியாயங்கள் அவர்களின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட நிலையில் அதிலிருந்து விடுபட்டு வாழ வேண்டிய அவசியத்தில் மேற்கொண்ட பயணம் அது.

وفي سورة النحل جاء في الآية 41 ﴿وَٱلَّذِينَ ‌هَاجَرُواْ ‌فِي ‌ٱللَّهِ ‌مِنۢ ‌بَعۡدِ ‌مَا ‌ظُلِمُواْ…﴾ فالمهاجرون ظلموا قبل هجرتهم، ظلمهم المشركون ظلما متعدد الدرجات متنوع الأشكال، غير أن الآية لم تفصل أنواع الظلم وكيف وقع على هؤلاء المهاجرين الصابرين، وهي بهذا أشمل في الدلالة وأبلغ في المعنى، وأوقع في النفس، وأعمق في الحس.

وَالَّذِيْنَ هَاجَرُوْا فِى اللّٰهِ مِنْۢ بَعْدِ مَا ظُلِمُوْا لَـنُبَوِّئَنَّهُمْ فِى الدُّنْيَا حَسَنَةً وَلَاَجْرُ الْاٰخِرَةِ اَكْبَرُ لَوْ كَانُوْا يَعْلَمُوْنَۙ‏

கொடுமைப்படுத்தப்பட்ட பின்னர், எவர்கள் அல்லாஹ்வுக்காக நாடு துறந்து (ஹிஜ்ரத்) சென்றார்களோ, அவர்களுக்கு, நாம் நிச்சயமாக அழகான தங்குமிடத்தை இவ்வுலகத்தில் கொடுப்போம். இன்னும், அவர்கள் அறிந்து கொண்டார்களேயானால் மறுமையிலுள்ள (நற்) கூலி (இதைவிட) மிகவும் பெரிது; ( அல்குர்ஆன்: 16: 41 )

பிலால் (ரலி) கப்பாப் (ரலி) போன்றோர் வேதனை செய்யப்பட்டது. யாஸிர் (ரலி) சுமைய்யா (ரலி) போன்றோர் கொடுமை படுத்தப்பட்டது. பெருமானார் (ஸல்) அவர்கள் உட்பட பல முஸ்லிம்களுக்கு கொலை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இவையெல்லாம் விட ஒட்டுமொத்த மக்காவும் சேர்ந்து மூன்றாண்டுகள் ஊர் விலக்கம் செய்தது என இழைக்கப்பட்ட அநீதிகளின் பட்டியல் மிக நீண்டது‌

4) இணைவைப்பு, இறைநிராகரிப்பு போன்ற சோதனையில் மீண்டும் வீழ்ந்திடாமல் தம் ஈமானைப் பாதுகாக்க மேற்கொண்ட பயணம் அது.

ஏனெனில், மக்கா குறைஷிகளின் எண்ண ஓட்டம் அப்படியாக இருந்தது. நாம் இழைக்கும் கொடுமைகளை தாங்க முடியாமல் மீண்டும் அவர்கள் பழைய இணைவைப்பு கொள்கைக்கு மாறி விடுவார்கள் என்று.

وأما الآية 110 في سورة النحل أيضا
ثُمَّ اِنَّ رَبَّكَ لِلَّذِيْنَ هَاجَرُوْا مِنْۢ بَعْدِ مَا فُتِنُوْا ثُمَّ جٰهَدُوْا وَصَبَرُوْۤا اِنَّ رَبَّكَ مِنْۢ بَعْدِهَا لَغَفُوْرٌ رَّحِيْم
فتتحدث عن فتنة بعض المهاجرين قبل هجرتهـم، وللمفسرين في تفسير معنى الفتنة الواردة في الآية آراء مختلفة، بعضها يذهب إلى أنها العذاب بقصد الردة، وبعضها الآخر يذهب إلى أن المعنى أن بعض المسلمين أعطى الكفار ما أرادوا بلسانه مكرها فكأنهم بذلك قد فتنوا أنفسهم..

இன்னும் எவர்கள் (துன்பங்களுக்கும்) சோதனைகளுக்கும் உட்படுத்தப்பட்டபின் (தம் வீடுகளைத் துறந்து) ஹிஜ்ரத் செய்து (வெளிக்கிளம்பினார்களோ), பின்பு அறப்போர் புரிந்தார்களோ இன்னும் பொறுமையைக் கையாண்டார்களோ, அவர்களுக்கு (உதவி செய்ய) நிச்சயமாக உம்முடைய இறைவன் இருக்கின்றான்; இவற்றுக்குப் பின்னரும், உம்முடைய இறைவன் மன்னிப்பவனாகவும், கிருபையுடையவனாகவும் இருக்கின்றான். ( அல்குர்ஆன்: 16: 110 )

5) நிம்மதியாக இறைவனை வணங்கி வழிபட வேண்டும் என்ற ஆசைப் பயணம் அது.

உமர் (ரலி) அவர்கள் முஸ்லிமாகும் வரை நாங்கள் கஅபாவுக்கு அருகில் தொழக்கூட முடியாதவர்களாகவே இருந்தோம்” என்று அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரழி) கூறுகிறார்கள். ( நூல்: முக்தஸருஸ்ஸீரா)

இந்த செய்தியை பாருங்கள்! உமர் ரலி அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட அந்த தருணத்தில் சிறிய ஒரு இன்பம் அவர்களுக்கு ஏற்பட்டது. அந்த இன்பம் கூட இறைவனை நிம்மதியாக வணங்கி வழிபடும் விஷயமாகவே அமைந்திருந்தது. நாளடைவில் அதுவும் தடைபட்டது.

எனவே, இனியும் மக்காவில் வாழ்வது இஸ்லாமிய வாழ்க்கை வாழ்வதை கேள்விக்குறியாக்கி விடும் என்ற அச்சத்தால் இறைவனை நிம்மதியோடு வணங்க வேண்டும் என்ற நோக்கில் ஹிஜ்ரத் பயணம் மேற் கொண்டார்கள்.

முதல் படியே வெற்றிப்படி தான்....

அபீசீனியாவிற்குச் சென்ற முதல் ஹிஜ்ரத் ஆகட்டும், மதீனாவிற்கு மேற்கொண்ட இரண்டாம் ஹிஜ்ரத் ஆகட்டும் இரண்டு பயணங்களுமே மகத்தான வெற்றியையே முஸ்லிம் உம்மாவிற்கு பெற்றுத்தந்தது.

அங்கே, அபீசீனிய மன்னர் நஜ்ஜாஷி முஸ்லிம்களுக்கு புகலிடம் வழங்கினார். வாழ வழிவகை செய்தார். முஸ்லிம்களை கண்ணியப்படுத்தினார். தாமும் முஸ்லிமாகி அல்லாஹ் வழங்கிய கண்ணியத்தை பெற்றுக் கொண்டார்.

இங்கே மதீனாவாசிகள் அவர்களின் அற்புதமான பண்பாட்டால் முஸ்லிம்களுக்கு அடைக்கலம் தந்து தங்களுடைய அனைத்திலும் ஹிஜ்ரத் செய்து வந்தவர்களுக்கு சரிசமமாக பங்களித்து இதய சிம்மாசனத்தில் அமர வைத்து அழகு பார்த்தார்கள்.

ஒரு முஸ்லிம் முஹாஜிர்களின் தியாக மனப்பான்மையோடு, அன்ஸாரிகளின் அர்ப்பணிப்பு உணர்வோடு வாழ வேண்டும் என்ற உயரிய அடிப்படையை முன்மாதிரியாக இந்த "ஹிஜ்ரத்" நமக்கு உணர்த்துகிறது.

எந்த இறைவனை வணங்கி வழிபட முடியவில்லை என்று கருதி அச்ச மேலீட்டால் ஹிஜ்ரத் பயணம் மேற்கொண்டார்களோ, அந்த ஹிஜ்ரத் அவர்களின் விருப்பமான “இறைவனை வணங்கிட” வாய்ப்புகளை வளமாக வழங்கிய போது அந்த மேன்மக்கள் எப்படி நடந்து கொண்டார்கள்?..

எதிரிகள் தாக்குதல் நடத்திடும் அச்சம் நிலவிய போதும் தொழுகையில் இன்பம் கண்ட நபித்தோழர்...

வரலாற்று ஆசிரியர் காலித் முஹம்மத் காலித் (ரஹ்) அவர்கள் அப்பாத் இப்னு பிஷ்ர் (ரலி) அவர்களின் வரலாற்றை கூறுகின்ற போது “அல்லாஹ்வின் ஒளி பொருந்திய அப்பாத் இப்னு பிஷ்ர்” என்றே தமது நூலான ரிஜாலுன் ஹவ்லர் ரஸூலில் அறிமுகப்படுத்துவார்கள்.

ஹிஜ்ரி நான்காம் ஆண்டு நடை பெற்ற படையெடுப்புக்கு “தாதுர் ரிகாவு” எனும் பெயர். இந்த யுத்தத்தில் தான் யுத்த கால தொழுகை முறை அறிமுகம் ஆனது.

நபித்தோழர்களின் ஈமானை பரிசோதிக்கும் முகமாக அமைந்து விட்டதோ எனும் எண்ணுமளவிற்கு பல்வேறு சோதனைகள் அங்கே நடைபெற்றன.

முறைவைத்து தான் பயணம் மேற்கொள்ளப்பட்டது. மொத்த படை வீரர்கள் 700 நபர்கள். ஆறு நபருக்கு ஒரு ஒட்டகம் வீதம் பயணத்திற்கு பயன் படுத்தப் பட்டது.

எந்த அளவுக்கெனில், நபித்தோழர்களின் பலருடைய நகங்களெல்லாம் கிழிந்து விழுந்து விட்டன.

பாறைகளையும், பாலைகளையும் கடந்து சென்றதால் பலருக்கு காயம் ஏற்பட்டு தங்களது துணிகளை கிழித்து காயத்திற்கு ஒட்டுப்போட்டுக்கொண்டனர்.

ஆதலால், அந்தப் போருக்கே தாதுர் ரிகாவு – ஒட்டுத்துணிப்போர் என பெயர் வழங்கப்பட்டது.

பெரிய அளவில் போரெல்லாம் நடைபெறவில்லை. எதிரிகளை அச்சுறுத்துவதற்காகவே அந்தப் போர் மேற்கொள்ளப்பட்டது. பின்னர் முஸ்லிம்கள் திரும்பி விட்டனர்.

உமர் (ரலி) அவர்கள் கத்தியால் குத்தப்பட்டு மரணத்தின் மடியில் இருந்த மூன்று நாட்கள் எல்லா அறபோதங்களையும் செய்துகொண்டிருந்தார்கள்.

கலீஃபா உமர் (ரலி) அவர்கள் தொழுகைக்கான அழைப்பொலி கேட்கும்போதெல்லாம் இரத்தம் வடிந்துகொண்டிருந்த நிலையிலேயே தொழுது கொண்டார்கள். “தொழுகையை விட்டவனுக்கு இஸ்லாத்தில் இடம் இல்லை” என்றார்கள் கலீஃபா. ( நூல்: முஸ்னத் அப்துர் ரஜ்ஜாக் )

ஆகவே, தான் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் பின்பற்றத்தகுதியானவர்களின் பட்டியலில் அவர்களையும் இணைத்துக் கூறுகின்றான். அவர்களைப் பின்பற்றினால் அல்லாஹ்வின் பொருத்தம் உண்டு. மேலான ஜன்னத்தும் உண்டு என்று கொண்டாடிக் கூறுகின்றான்.

وَالسّٰبِقُوْنَ الْاَوَّلُوْنَ مِنَ الْمُهٰجِرِيْنَ وَالْاَنْصَارِ وَالَّذِيْنَ اتَّبَعُوْهُمْ بِاِحْسَانٍ رَّضِىَ اللّٰهُ عَنْهُمْ وَرَضُوْا عَنْهُ وَاَعَدَّ لَهُمْ جَنّٰتٍ تَجْرِىْ تَحْتَهَا الْاَنْهٰرُ خٰلِدِيْنَ فِيْهَاۤ اَبَدًا‌ ؕ ذٰ لِكَ الْـفَوْزُ الْعَظِيْمُ‏

இன்னும் முஹாஜிர்களிலும், அன்ஸார்களிலும், முதலாவதாக (ஈமான் கொள்வதில்) முந்திக்கொண்டவர்களும், அவர்களை(எல்லா) நற்கருமங்களிலும் பின் தொடர்ந்தவர்களும் இருக்கின்றார்களே அவர்கள் மீது அல்லாஹ் திருப்தி அடைகிறான்; அவர்களும் அவனிடம் திருப்தியடைகின்றார்கள்; அன்றியும் அவர்களுக்காக, சுவனபதிகளைச் சித்தப்படுத்தியிருக்கின்றான், அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும், அவர்கள் அங்கே என்றென்றும் தங்கியிருப்பார்கள் - இதுவே மகத்தான வெற்றியாகும். ( அல்குர்ஆன்: 9: 100 )

எல்லாவற்றுக்கும் மேலாக உங்களுக்கும் எனக்கும் ஹிஜ்ரத் பெற்றுத் தந்த பேறு ஒன்று இருக்கிறது.

இறைவன் நம்மை அழைக்கும் போது, நமக்கு ஏதேனும் கட்டளைகளை செய்யுமாறு கூறும் போது "இறைநம்பிக்கை கொண்டவர்களே!" என்று அழைக்கும் நற்பேற்றை பெற்றுத்தந்தது இந்த ஹிஜ்ரத் பயணம் தான்.

ஆகவே, பிறக்க இருக்கும் 1446 ஹிஜ்ரி புத்தாண்டை இந்த வரலாற்று நினைவுகளை அசை போட்டு வரவேற்போம்!

ஹிஜ்ரத்தின் நோக்கம்…

அல்லாஹ் காலத்திற்கும், இடத்திற்கும் ஏற்றால் போல் நபிமார்களை தொடராக அனுப்பிக் கொண்டே இருந்தான். இறுதி நபியாக முஹம்மது (ஸல்) அவர்களை மக்கமா நகரை மைய்யப்படுத்தி உலக மக்களுக்கு நபியாக தேர்ந்தெடுத்து அனுப்பினான்.
பொதுவாக அந்தந்த ஊர் மக்கள் நபிமார்களை தனது ஏகத்துவ பிரச்சார பணியை ஒழுங்காக செய்ய விடமாட்டார்கள். இதை ஆரம்ப கால நபி முதல் கடைசி வரையிலான நபிமார்களின் வரலாறுகளில் நாம் காணலாம். நபி கொண்டு வந்த மார்க்த்தை கொச்சைப்படுத்துவது, கிண்டல் அடிப்பது, யாரும் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று ஏனைய சாதாரண மக்களை தடுப்பதும். தூண்டி விடுவதும், அவர் பைத்தியக்காரர், சூனியக்காரர், ஊரை இரண்டாக பிரிக்கவந்துள்ளார், குடும்பத்திற்குள் பிரச்சனைகளை ஏற்ப்படுத்த வந்துள்ளார். புதிய கொள்கையை திணிக்க வந்துள்ளார் என்று நபிக்கு எதிராக பிரச்சாரம் செய்வதோடு,, யார் மீறி நபியை ஏற்றுக் கொள்கிறாரோ அவரை கடுமையான முறையில் சித்தரவதை செய்து உச்சக்கட்ட தண்டனையாக கொலை செய்து விடுவார்கள்.

இதற்கு மத்தியில் தான் இறைவனின் தூய வஹி செய்தியை ஒவ்வொரு நபிமார்களும் கொண்டு சென்றனர். அந்த வரிசையில் தான், நபியவர்களும் தொடராக அல்லாஹ்வின் வஹி செய்தியை மக்களுக்கு மத்தியில் கொண்டு செல்ல முடியாத அளவிற்கு எதிரிகள் பல வகையிலும் இடையூறு செய்துக் கொண்டே இருந்தார்கள்.
நபியின் மார்க்கத்தை ஏற்றுக் கொண்டவர்களை அநியாயமான முறையில் அடித்து, துன்புறுத்தி, சுடு மண்ணில் இழுத்துச் சென்று சித்தரவதை செய்தார்கள். சுமையா (ரலி) அவர்களையும்,மற்றும் அவரது கணவர் யாசிர் (ரலி) அவர்களையும் கடுமையான முறையில் கொடுமைப்படுத்தி, இறுதியில் உயிருடன் கொலை செய்தார்கள்.
நாளுக்கு நாள் எதிரிகளின் அட்டகாசங்கள் அதிகரிக்கவே அல்லாஹ்வின் கட்டளைப்படி நபியவர்கள் மதீனாவை நோக்கி ஹிஜ்ரத் பயணம் செல்வதற்கு தயாராகுகிறார்கள்

படிப்பினைகள்…

(1) யார் அல்லாஹ்வை ஏற்றுக் கொள்கிறாரோ, அவர் பல மனித சோதனைகளுக்கு முகம் கொடுக்க வேண்டும்.

(2) இஸ்லாத்தை ஏற்றப்பின் எதுவும், எந்த நேரத்திலும் நடக்கலாம்.

(3)அல்லாஹ்விற்காக சொந்தம், பந்தம், சொத்து சுகங்களை, ஏன் இறுதியில் ஊரை விட்டும் வெளியேறுவதற்கு தயாராகவே இருக்க வேண்டும்.

(4)உயிரையும் அல்லாஹ்விற்காக அர்ப்பணிக்க வேண்டும்.

நபியவர்களின் அழகிய திட்டமிடல்…

நீங்கள் மதீனாவிற்கு ஹிஜ்ரத் போகலாம் என்ற இறை கட்டளை கனவின் மூலமாக வந்தவுடன் நபியவர்கள் கண்ணை மூடிக் கொண்டு உடனே மதீனாவிற்கு போகவில்லை மக்காவிலிருந்து மதீனாவிற்கு செல்வதற்கான பல ஆயத்தங்களை முதலில் திட்டமிட்டு செய்கிறார்கள்.

தன்னோடு தோழர் அபூபக்கரை அழைத்துச் செல்வதற்கு முடிவு செய்து அவர்களுடன் பயணத்திற்கான முழு ஏற்ப்பாடுகள் சம்பந்தமாக ஆலாசனை செய்கிறார்கள்.
மக்காவிலிருந்து செல்வதற்கு வழிக்காட்டி ஒருவர் தேவை, ஏன் என்றால் நபியவர்களுக்கோ, அபூபக்கர் அவர்களுக்கோ, மதீனா செல்வதற்கு சரியாக பாதை (வழி) தெரியாது. மதீனாவிற்கு வழிக்காட்டியாக “பனு அப்த் பின் அதீ குலத்தில் பனு அத்தீல் எனும் கிளையை சேர்ந்த குறைஷி இறை மறுப்பாளர், “அப்துல்லாஹ் பின் உரைக்கித்தை தங்களின் பயணத் தோழராக தெரிவு செய்கிறார்கள். இவர் நம்பிக்கையானவர் ஆனால் அவர் முஸ்லிம் கிடையாது. தாங்கள் பயணம் செல்வதற்காக இரண்டு ஒட்டகங்களை நான்கு மாதங்களாக தயார் செய்து இறுதியில் “அப்துல்லாஹ் பின் உரைகிதிடம் கொடுத்து மூன்று நாட்கள் கழித்து குறிப்பிட்ட இடத்திற்கு வரும் படி ஒட்டகத்தை அவரிடம் ஒப்படைத்து விட்டார்கள். அபூ பக்கர் அவர்கள் நபியவர்களுக்கு ஒரு ஒட்டகத்தை சும்மா தான் கொடுத்தார்கள். ஆனால் எனக்கு சும்மா வேண்டாம், கிரயத்தை கொடுத்தே நபியவர்கள் அபூபக்கரிடம் அதை விலைக்கு வாங்கினார்கள்.

அடுத்ததாக ஹிஜ்ரத் செல்லும் வழியில் தங்குவற்காக “ஸவ்ர்” குகையை தெரிவு செய்கிறார்கள். அங்கு மூன்று நாட்கள் தங்குவதற்கான பின்வரும் ஏற்ப்பாடுகளையும் முன்னேற்பாடாக செய்கிறார்கள். குகையில் தங்கியிருக்கும் போது உணவை கொண்டு வருவதற்காக அபூபக்கரின் மகளான அஸ்மா அவர்களை தெரிவு செய்கிறார்கள். அஸ்மா அவர்கள் உணவை கொண்டு வரும் போது அவரின் கால் பாத அச்சை (சுவட்டை) ஆடுகளை ஓட்டிச் சென்று அழிப்பதற்காகவும், ஆட்டிலிருந்து பாலை கரந்து குடிப்பதற்காகவும், அபூ பக்கர் அவர்களின் முன்னால் அடிமையான “ஆமிர் இப்னு புஹைரா அவர்களை தெரிவு செய்கிறார்கள். தங்களைப் பற்றி மக்கத்து காபிர்கள் (எதிரிகள்) என்ன பேசிக் கொள்கிறார்கள் என்ற தகவலை இரவு நேரத்தில் கொண்டு வருவதற்காக அபூபக்கரின் மகன் அப்துல்லாவை தெரிவு செய்கிறார்கள். அப்துல்லாஹ் பின் அபீபக்கர் அவரகள் இரவு நேரத்தில் இவர்களுடன் குகையில் தங்கி ஸஹர் நேரத்தில் யாருக்கும் தெரியாமல் மக்காவிற்குள் வந்து விடுவார்கள்.இப்படியே மூன்று இரவுகள் செய்தார்கள். நபியவர்கள் தனது வீட்டிலிருந்து செல்லும் போது வீட்டில் தங்க வைப்பதற்காக அலி (ரலி) அவர்களை தெரிவு செய்கிறார்கள்.

இப்படி பல திட்டங்களை செய்த பின் அபூபக்கர் அவர்களிடம் நீங்கள் தயாராக இருங்கள் எந்த நேரத்திலும் நான் உங்கள் வீட்டை நோக்கி வரலாம் என்று நபியவர்கள் கூறினார்கள்.

ஒரு நாள் பகல் நேரம் நபியவர்கள் தலையை மூடிக் கொண்டு அபூபக்கர் அவர்களின் வீட்டிற்கு சென்று, எனக்கு ஹிஜ்ரத் செல்ல அனுமதி வழங்கப்பட்டு விட்டது, வாருங்கள் நாம் ஹிஜ்ரத் போவோம் என்று மதீனாவை நோக்கி புனித ஹிஜ்ரத் பயணம் செல்கிறார்கள். அல்லாஹ் நபியவர்களையும், அபூபக்கர் அவர்களையும், பாதுகாத்த செய்தியை பின்வருமாறு குறிப்பிடுகிறான்:

“(நபியே!) உம்மைச் சிறைப்படுத்தவோ, அல்லது உம்மைக் கொலை செய்யவோ அல்லது உம்மை (ஊரைவிட்டு) வெளியேற்றிவிடவோ நிராகரிப்போர் சூழ்ச்சிசெய்ததை நினைவு கூறுவீராக; அவர்களும் சூழ்ச்சி செய்து கொண்டிருந்தனர்; அல்லாஹ்வும் (அவர்களுக்கு எதிராகச்) சூழ்ச்சி செய்து கொண்டிருந்தான். சூழ்ச்சி செய்வோரில் எல்லாம் அல்லாஹ் மிகவும் மேன்மையுடையவன்.” (8-30)

எனவே ஒரு மனிதர் ஒரு காரியத்தில் ஈடுபடுவதற்கு முன், அது சம்பந்தமாக பல முன் ஏற்ப்பாடுகளையும், திட்டங்களையும், தயார் செய்து கொள்ள வேண்டும் என்பதையும், அல்லாஹ்வின் மீது கடைசி வரை நம்பிக்கையிருக்க வேண்டும் என்பதையும், இந்த ஹிஜ்ரத் நமக்கு பல முக்கிய பாடங்களையும், படிப்பினைகளையும், கற்றுத் தருகிறது. அல்ஹம்து லில்லாஹ்!


மேற்கத்திய வரலாற்றாசிரியர்கள் சிலர் ஹிஜ்ரத்தை ஒரு சாதாரண நிகழ்வாக குறிப்பிடுகின்றனர். ஹிஜ்ரத் என்பது நபி {ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்} அவர்களும் அவரின் தோழர்களும் மக்காவிலிருந்து மதீனா நோக்கிச் சென்ற ஓர் புலம்பெயர்வு மட்டும் தான் என சித்தரிக்கின்றனர்.

இன்னும் சில வரலாற்றாசிரியர்கள் ஹிஜ்ரத்தை தரம் தாழ்த்தி விமர்சிக்கின்றனர். அதாவது, நபி {ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்} அவர்களும் நபியின் தோழர்களும் மக்காவிலிருந்து மதீனாவுக்கு தப்பியோடிய நிகழ்வு மட்டும் தான் என மோசமாக விமர்சிக்கின்றனர்.

ஆனால், ஹிஜ்ரத் என்பது சவால்களை சாதனைகளாக்கிட மதீனா நோக்கிய வீரமும், துணிச்சலும், இறைக்காதலும் நிறைந்த ஒரு திருப்பு முனைப் பயணம் என்பதும், நபி {ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்} அவர்களது வாழ்விலும் இஸ்லாமிய வரலாற்றிலும் மட்டுமின்றி, மனித வரலாற்றிலேயே ஒரு புதிய பரிமாணத்தை தோற்றுவித்த மாபெரும் வரலாற்று நிகழ்வு என்பதும், ஹிஜ்ரத் உடைய வரலாற்றுப் பிண்ணனியை, ஹிஜ்ரத்திற்கு பிந்தைய முஸ்லிம் சமூகத்தின் பல்வேறுபட்ட ஏற்ற இறக்கங்களை வரலாற்றின் ஊடாக வாசித்துப் பார்க்கும் போது விளங்கிக் கொள்ள இயலும்.

ஹிஜ்ரத் ஏன்?

ஏகத்துவத்தை ஏந்தி அல்லாஹ்வின் மார்க்கத்தின் பால், நேர்வழியின் பால் அறைகூவல் விடுத்த இறைத்தூதர்களான நபிமார்களுக்கு சொந்த மக்களின், சமூகத்தின் வாயிலாக அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன.

அவ்வாறு, எதிரிகளின் அடக்குமுறை கட்டுக்குள் அடங்காமல் எல்லை மீறுகிற போது, ஏகத்துவ சுகந்தத்தை ஏந்தி நின்ற தனது தூதுவர்களை அல்லாஹ் மூன்று விதமான உதவிகள் மூலம் பாதுகாத்தான்.

1} எதிரிகளை அவர்கள் வாழ்ந்த சுவடுகளே இல்லாமல் அழித்தொழிப்பது. 2} தனது தூதுவர்களை ( நாடு விட்டு நாடு ) ஹிஜ்ரத் ( புலம் பெயரச் ) செய்ய வைப்பது. 3} எதிரிகளை அழித்து தனது தூதுவர்களை ஹிஜ்ரத் செய்ய வைப்பது.

முதல் வித இறை உதவியைப் பெற்றவர்கள்: ஹூத் {அலைஹிஸ்ஸலாம்}, ஸாலிஹ் {அலைஹிஸ்ஸலாம்}, லூத் {அலைஹிஸ்ஸலாம்} இன்னும் ஏராளமான நபிமார்களுக்கு இவ்வாறான உதவி வழங்கப்பட்டதாக அல்குர்ஆனில் அல்லாஹ் விவரிப்பான்.

இரண்டாவது வகையில் உதவி செய்யப்பட்டவர்கள்: இப்ராஹீம் {அலைஹிஸ்ஸலாம்}, முஹம்மது {ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்} ஆகிய நபிமார்கள் ஆவார்கள்.

மூன்றாவது வகையில் உதவி செய்யப்பட்டவர்கள்: நூஹ் {அலைஹிஸ்ஸலாம்} மூஸா {அலைஹிஸ்ஸலாம்} ஆகிய நபிமார்கள் ஆவார்கள்.

قال القرطبي في تفسيره عند تفسير قوله تعالى حاكيا عن إبراهيم
 إِنِّي ذَاهِبٌ إِلَى رَبِّي سَيَهْدِينِ {الصافات: 99} قال
 هذه الآية أصل في الهجرة والعزلة. وأول من فعل ذلك إبراهيم عليه السلام، وذلك حين خلصه الله من النار قال إني ذاهب إلى ربي. أي مهاجر من بلد قومي ومولدي إلى حيث أتمكن من عبادة ربي فإنه ( سيهدين ) فيما نويت إلى الصواب.
 قال مقاتل: هو أول من هاجر من الخلق مع لوط وسارة إلى الأرض المقدسة وهي أرض الشام. 

அறிஞர் பெருமக்களிடையே ஹிஜ்ரத் செய்த நபிமார்கள் விஷயத்தில் சில அபிப்பிராய பேதங்களும் இருக்கின்றன.

”தன்னுடைய பரிசுத்த ஆவியின் மூலம் பிறந்த ஈஸா நபி {அலை} அவர்களை மண்ணிலிருந்து விண்ணிற்கும், பரிசுத்த மண்ணிலிருந்து படைக்கப்பட்ட ஆதம் நபி அலை அவர்கள் விண்ணிலிருந்து மண்ணிற்கும் அல்லாஹ் ஹிஜ்ரத் செய்ய வைத்தான் என்று சில அறிஞர்களும்,

நூஹ் {அலைஹிஸ்ஸலாம்} தான் முதலில் ஹிஜ்ரத் செய்தார்கள் என்று சில அறிஞர்களும், லூத் {அலைஹிஸ்ஸலாம்} தான் முதலில் ஹிஜ்ரத் செய்தார்கள் என்று சில அறிஞர்களும், இப்ராஹீம் {அலைஹிஸ்ஸலாம்} தான் முதலில் ஹிஜ்ரத் செய்தார்கள் என்று சிலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.

இப்ராஹீம் {அலைஹிஸ்ஸலாம்} அவர்கள் இராக்கிலிருந்து சிரியாவுக்கும், மூஸா நபி{அலை} அவர்கள் எகிப்திலிருந்து சிரியாவுக்கும், முஹம்மது {ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்} அவர்கள், மக்காவிலிருந்து மதீனாவுக்கும் “ஹிஜ்ரத்” செய்து புலம் பெயர்ந்தார்கள்.

உலகில் முதல் ஹிஜ்ரத் செய்த கூட்டம் நபி நூஹ் அலை அவர்களின் தலைமையில் கப்பலில் பயணம் செய்த 80 முஃமின்கள்.

قُلْنَا احْمِلْ فِيهَا مِنْ كُلٍّ زَوْجَيْنِ اثْنَيْنِ وَأَهْلَكَ إِلاَّ مَنْ سَبَقَ عَلَيْهِ الْقَوْلُ وَمَنْ آمَنَ وَمَا آمَنَ مَعَهُ إِلاَّ قَلِيلٌ ﴾ هود: 40

ஒவ்வொரு வகையிலிருந்தும் (ஆண் பெண் கொண்ட) ஒவ்வொரு ஜோடியை (அக்கப்பலில்) ஏற்றிக் கொள்ளும்; (மூழ்கடிக்கப்படுவார்கள் என்று எவர்களைக் குறித்து முன்பே நம்) வாக்கு ஏற்பட்டுவிட்டதோ அவர்களைத் தவிர் உம் குடும்பத்தாரையும், ஈமான் கொண்டவர்களையும் ஏற்றிக்கொள்ளும்" என்று நாம் கூறினோம்

இதன்படி பார்த்தால், ஹிஜ்ரத் {அகதியாகுதல் - புலம் பெயர்தல்} என்பது அவமானமான ஒன்றல்ல; தன்மானத்தோடும், இறைச் சிந்தனையோடும் வாழ்வதற்கான ஒரு அறிய வாய்ப்பு என்பதும், அது அவ மரியாதையான ஒன்றல்ல; சுய மரியாதை கிடைப்பதற்கான புதிய சூழலை ஏற்படுத்துவதற்கான ஓர் புதிய பரிமாணம் என்பதும், அது அல்லாஹ்வின் வெகுமதிகளில் ஒன்று என்பதும் நமக்கு உணர்த்தப்படுகின்றது.

சவால்களை சாதனைகளாக்கிய ஹிஜ்ரத்...

1. மதீனாவிற்குள் அடியெடுத்து வைத்த அடுத்த நொடியில் மாநபி {ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்} அவர்களுக்கு முன்னால் பெரும் சவாலாக இருந்தது புலம் பெயர்ந்த முஹாஜிர்களை மதீனாவின் முஸ்லிம்கள் எவ்வாறு அணுகுவார்கள் என்பது தான்.

2. மதீனா என்பது வெறும் முஸ்லிம்களை மட்டுமே கொண்டிருக்கிற ஒரு பூமியல்ல. அங்கே, யூதர்கள், கிறிஸ்துவர்கள், நெருப்பு வணங்கிகள் என பெரிய சமூகத்தைச் சார்ந்த மக்கள் சிறுபான்மையினராக வாழ்ந்து வருகின்றார்கள் இவர்கள் விஷயத்தில் எவ்வாறு அணுக வேண்டும் என்பது குறித்த சிந்தனை பெரும் சவாலாக இருந்தது.

3. விவசாயத்தொழிலாளர்களான மதீனா முஸ்லிம்கள், எல்லாவற்றையும் (வீடு, வாசல், சொத்து, மனைவி, மக்கள் என) துறந்து முற்றிலும் நிராயுதபாணிகளாக, ஏழைகளாக மதீனாவிற்குள் அடியெடுத்து வைத்திருக்கும் மக்காவின் முஸ்லிம்கள், இந்த ஏற்றத்தாழ்வுகளை எவ்வாறு சரிசெய்வது என்கிற சிந்தனையும் பெரும் சவாலாக இருந்தது.

4. இறைவனை முற்றிலுமாக வணங்கி வழிபட, எந்தக் குறுக்கீடுகளும் இல்லாமல் சுதந்திரமாக முஸ்லிம்களாய் வாழ்ந்திட, எதிரிகளின் புறத்திலிருந்து வரும் எதிர்ப்புகளை வலுவாக எதிர் கொள்ள, எப்படி முஸ்லிம் சமூகத்தைக் கட்டமைப்பது என்கிற சவாலும் தொடர்ந்து தொக்கி நின்றது.

அல்லாஹ்வின் மாபெரும் உதவி கொண்டும், வழிகாட்டல் கொண்டும் சவால்களை எதிர்கொண்டு சாதனைகளாக்கினார்கள் மாநபி {ஸல்} அவர்கள்.

1. புலம் பெயர்ந்த முஸ்லிம்களும்.... மதீனாவின் முஸ்லிம்களும்....

இன்று உலகளாவிய அளவில் புலம் பெயர்ந்தவர்களின் வாழ்க்கைத்தரம் மிகவும் கேள்விக்குறியாகி இருக்கிறது.

வருடா வருடம் ஜூன் 20 –ஆம் தேதி உலகெங்கிலும் அகதிகள் தினம் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

அதையொட்டி, ஐ.நா. அகதிகள் நல ஆணையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.அதில், கடந்த 2015ம் ஆண்டு இறுதியில் புலம் பெயர்ந்த அகதிகளின் எண்ணிக்கை 6.53 கோடியைத் தாண்டியது.

அகதிகளின் எண்ணிக்கை 6 கோடியைத் தாண்டியது இதுவே முதல் முறை என்று கூறப்பட்டுள்ளது.

உலக மக்கள் தொகையில் 113 பேரில் ஒருவர் அகதி என்பதை, அதாவது உலக மக்கள் தொகையில் 10 சதவீதம் என்று அது குறிக்கிறது.

இந்த அறிக்கையை வெளியிட்டுப் பேசிய ஐ.நா. அகதிகள் நல ஆணையர் ஃபிலிப்போ கிராண்டி கூறுகையில், ”உள்நாட்டுப் போர் அதிகரித்துள்ளதால் மக்கள் அதிக சிரமத்துக்கு உள்ளாக்கப்பட்டு அகதிகளாக வெளியேறுகின்றனர்.

மேலும், அளவுக்கு அதிகமாக அகதிகள் குவிந்து வருவதால் குடியேறும் நாடுகளில் உள்ள பொதுமக்களுக்கு கசப்புணர்வு அதிகரித்துவிட்டது.

இதனால் அவர்கள் அகதிகளுக்கு எதிராக செயல்படுகின்றனர். இது மனிதாபிமான உணர்வை சோதனைக்குள்ளாகியிருக்கிறது” என்று கூறியுள்ளார்.

எல்லா வகையிலும் முன்னேறியிருக்கிற ஒரு காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிற 21 –ஆம் நூற்றாண்டில் இவ்வாறு கவலை தெரிவிக்கப்படுகிறது என்றால் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாத காலத்தில் வாழ்ந்த நபி {ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்} அவர்கள் புலம்பெயர்ந்த முஸ்லிம்கள் விஷயத்தில் கொண்டிருந்த கவலையும் நியாயமானதே!

அந்த சவாலை மாநபியவர்கள் எதிர்கொண்ட விதமும், அதனால் சமூகத்தில் உண்டான மாற்றமும் இன்றளவிலும் உலகளாவிய அகதிகள் பிரச்சனைக்கு மாபெரும் தீர்வாக அமைந்திருப்பதைப் பார்க்க முடிகின்றது.

சகோதரத்துவம் எனும் கட்டமைப்பு….

மாநபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் செய்ததை அடுத்து மக்கத்து நபித்தோழர்கள் மதீனாவில் நுழைந்த போது அகதிகள் என்றழைக்கப்படாமல் முஹாஜிர்கள் என்றும், மதீனாவின் மக்களால் சகோதரர்கள் என்றும் அழைக்கப்பட்டார்கள்.

இரண்டே ஆண்டுகளில், உறவினர்களாகவும், வியாபார கூட்டாளிகளாகவும் பெண் எடுத்து பெண் கொடுத்து உறவு முறையில் மேம்பாடு கண்டவர்களாகவும் மாற்றம் கண்டார்கள்.

மாநபி (ஸல்) அவர்கள் மரணித்த பின் மதீனாவை தலைமையிடமாகக் கொண்டு இஸ்லாமிய ஆட்சியை நிலை நிறுத்திடும் நான்கு ஆட்சியாளர்கள் மக்காவைச் சார்ந்த, மதீனாவைச் நோக்கி வந்த முஹாஜிர்களாக இருந்தும் அதை அங்கீகரிக்கும் மனோநிலைக்கு மதீனமா நகர மக்களை தயார் படுத்திச் சென்றார்கள் மாநபி (ஸல்) அவர்கள்.

சுருங்கச் சொன்னால் அகதிகளாகச் சென்றவர்கள் தான் நேர்வழி நின்ற நான்கு ஆட்சியாளர்களாய் - கலீஃபாக்களாய் வரலாற்றில் வாகாய் மிளிர்ந்தார்கள்.

புலம் பெயர்ந்து வந்த முஹாஜிர்களுக்கு உரிய மதிப்பையும், உதவிகளையும் செய்து வந்த மதீனா முஸ்லிம்கள் குறித்து அல்லாஹ் புகழாரம் சூட்டி மகிழ்ந்தான்.

அவர்களை அன்ஸார்கள் – உதவியாளர்கள் என்று கூறி கௌரவித்தான்.

وَالَّذِينَ تَبَوَّءُوا الدَّارَ وَالْإِيمَانَ مِنْ قَبْلِهِمْ يُحِبُّونَ مَنْ هَاجَرَ إِلَيْهِمْ وَلَا يَجِدُونَ فِي صُدُورِهِمْ حَاجَةً مِمَّا أُوتُوا وَيُؤْثِرُونَ عَلَى أَنْفُسِهِمْ وَلَوْ كَانَ بِهِمْ خَصَاصَةٌ وَمَنْ يُوقَ شُحَّ نَفْسِهِ فَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ ()

“அன்ஸாரிகளான அவர்கள், நாடு துறந்து தங்களிடம் குடியேறி வந்தவர்களை மிகவும் நேசிக்கின்றனர். மேலும், அவ்வாறு குடியேறி வந்தவர்களுக்கு வழங்கப்பட்ட வசதி வாய்ப்புகளில் இருந்து தங்கள் இதயத்தால் கூட தேவைப்பட மாட்டார்கள். மேலும், தங்களுக்கு தேவையிருந்த போதிலும், தங்களை விட அவர்களையே உதவி பெற தகுதியுள்ளவர்களாக தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள். இவ்வாறு எவர்கள் உள்ளத்தின் உலோபித்தனத்திலிருந்து காக்கப்பட்டார்களே, அத்தகையவர்கள் தாம் வெற்றி பெற்றவர்கள் ஆவார்கள்”. ( அல்குர்ஆன்: 59: 9 )




ஆனால், ஹிஜ்ரத்திலிருந்து இந்த உம்மத்தும் பாடம் பெறவில்லை, உலக மனித சமூகமும் படிப்பினை பெற வில்லை.

இன்றளவிலும் கூட தமிழகத்தில் முஸ்லிம் சமூகம் வாழும் பல மஹல்லாக்களில் உள்ளூர் வாசி, வெளியூர் வாசி என்கிற பேதங்கள் கடைபிடிக்கப்படுகிறது.

சில இடங்களில் இந்த பிரிவினைப் போக்கால் ஒரே ஊரில் இரண்டு பள்ளிவாசல்கள் கூட உருவாகி இருக்கின்றது.

ஹிஜ்ரத்திலிருந்து நபித்தோழர்கள் பெற்ற பாடம் தான் அபூஹுரைரா (ரலி), பிலால் (ரலி), ஸல்மானுல் ஃபார்ஸி (ரலி) ஸுஹைப் இப்னு ஸினான் (ரலி) ஜைத் இப்னு ஹாரிஸா (ரலி) போன்ற வெளி ( நாட்டு) யூர்க்காரர்களை தங்களில் ஒருவராக பார்க்கத் தூண்டியது.

அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி), ஸஅத் இப்னு அபீ வக்காஸ் (ரலி), உமர் (ரலி) அபூபக்ர் (ரலி) அலீ (ரலி) உஸ்மான் (ரலி) ஸயீத் (ரலி) தல்ஹா (ரலி) ஜுபைர் (ரலி) அபூ உபைதா (ரலி) போன்ற புலம்பெயர்ந்தவர்களின் பெயரைக் குறிப்பிட்டு இவ்வுலகிலேயே சுவனத்திற்கான சோபனம் பெற்றவர்கள் என்று நபி {ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்} கூறிய போதிலும் மனதில் அணுவளவு கூட குரோதம் இல்லாமல் நேசிக்கத்தூண்டியது.

ஆனாலும் நாம் இது குறித்துப் பேசுகின்றோம், படிக்கின்றோம், கேட்கின்றோம் என்ன பயன்? சகோதரத்துவ கட்டமைப்புக்குள் இன்னமும் நாம் கேள்விக்குறியாக அல்லவா இருக்கின்றோம்.

சகோதரத்துவம் எனும் ஒற்றை வார்த்தை அவர்களுக்குள் பிரிக்க முடியாத ஓர் பிணைப்பை உருவாக்கியது, விட்டுக் கொடுத்தல் எனும் நற்குணத்தை உருவாக்கியது, இதயப்பூர்வமான நேசத்தை உருவாக்கியது.

உணர்ச்சிகளை விட உயர்ந்தது சகோதரத்துவம்….

அபூதர்தா (ரலி) அவர்களும், ஸல்மான் ஃபார்ஸி (ரலி) அவர்களும் நபி {ஸல்} அவர்களால் ஹிஜ்ரத்தின் போது சகோதர உறவு ஏற்படுத்தப்பட்டவர்கள்.

சகோதர உறவு ஏற்படுத்தப்பட்டவர்களில் மிகவும் ஆழமான நட்பும், நேசமும் கொண்டிருந்த பெருமை இவர்களையே சாரும்.

அபூதர்தாவுக்கு திருமணம் முடிந்திருந்தது. ஆனால், ஸல்மான் (ரலி) அவர்களுக்கு திருமணம் ஆகியிருக்கவில்லை.

சத்திய சன்மார்க்கத்தை தேடிய பயணத்தில் பெரும்பாலான காலங்களை கழித்தமையால் திருமணம் செய்ய போதிய அவகாசம் கிடைக்கவில்லை.

இப்போது ஸல்மான் (ரலி) அவர்கள் திருமணம் செய்ய விரும்பினர்கள். ஆனால், வயது சற்றுக் கூடுதலாக இருந்தது.

தன் சகோதரர் அபூதர்தாவிடம் தமது ஆசையை தெரிவித்து விட்டு, பனூ லைஸ் கோத்திரத்தார்களின் அன்ஸாரித்தோழர் ஒருவரின் மகளை திருமணம் செய்ய விரும்புவதாகவும் அவரிடம் நீர் தான் பெண்பேசி திருமணம் செய்து வைக்க வேண்டும் என்றும் ஸல்மான் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

عن ثابت البناني ((أن أبا الدرداء ذهب مع سلمان الفارسي يخطب امرأة من بني ليث فدخل فذكر فضل سلمان وسابقته وإسلامه وذكر أنه يخطب إليهم فتاتهم فلانة، فقالوا أما سلمان فلا نزوجه ولكنا نزوجك، فتزوجها ثم خرج فقال: إنه قد كان شيء وإني استحي أن أذكر ذلك، قال: وما ذاك؟ فأخبره أبو الدرداء بالخير، فقال سلمان: أنا أحق أن استحي منك أن أخطبها، وكان قد قضاها لك)).
ثم قال إني لأرجو أن يجعلني الله ممن قال فيهم ونزعنا ما في صدورهم من غل إخوانا على سرر متقابلين (الحجر:48

அதற்கு சம்மதம் தெரிவித்த அபூதர்தா (ரலி) அவர்கள், ஸல்மானை அழைத்துக் கொண்டு அந்த அன்ஸாரித்தோழரின் வீட்டிற்கு பெண் பேசச் சென்றார்கள்.

அந்த அன்ஸாரித்தோழரிடம் ஸல்மான் (ரலி) அவர்களின் குணநலன்களையும், நபி {ஸல்} அவர்கள் ஸல்மான் (ரலி) அவர்கள் குறித்துக் கூறிய சோபனங்களையும் கூறி ஸல்மான் (ரலி) அவர்களுக்குப் பெண் கேட்டார்.

அந்த அன்ஸாரித்தோழரோ எல்லாவற்றையும் கேட்டுவிட்டு, அழகும், செல்வ வளமும் நிறைந்த அபூதர்தா (ரலி) அவர்களிடம் “ஸல்மான் (ரலி) அவர்களுக்கு எனது மகளை நான் திருமணம் செய்து தரப் போவதில்லை. மாறாக, நீர் விரும்பினால் உமக்கு என் மகளை நான் திருமணம் செய்து தருகின்றேன்” என்று கூறினார். அவ்வாறே திருமணமும் செய்து வைத்தார்.

சற்றும் எதிர்பாராத இந்த சம்பவத்தால் அதிர்ச்சியுற்ற அபூதர்தா (ரலி) அவர்கள் ஸல்மானை நோக்கி “ஸல்மானே! உள்ளே நடைபெற்ற சம்பவத்திற்காக நான் அதிகம் வெட்கப்படுகின்றேன்!” என்றார்கள்.

தமது சகோதரரின் முகவாட்டத்தையும், கவலையையும் கண்ட ஸல்மான் (ரலி) அவர்கள் அபூதர்தாவை நோக்கி “சகோதரரே! உண்மையில் நான் தான் வெட்கப்படுவதற்கு அதிகம் தகுதி உள்ளவன்! ஏனெனில், அல்லாஹ் உமக்காக நிர்ணயித்த பெண்ணை நான் பெண் கேட்டு வந்தமைக்காக!...

சகோதரரே! நானும் நீயும் எப்படிப்பட்ட சகோதரர்கள் தெரியுமா? அல்லாஹ் கூறுகின்றானே “அவர்களின் உள்ளங்களில் படிந்திருக்கும் குரோதங்களை நாம் அகற்றி விடுவோம். ஒருவருக்கொருவர் சகோதரர்களாக கட்டில்களில் எதிரெதிரே அமர்ந்திருப்பார்கள்” ( அல்குர்ஆன்: 15 : 48 ) என்ற இறை வசனத்திற்கு ஏற்ப அல்லாஹ் நம்மை ஆக்கவேண்டும்” என்றே நான் விரும்புகின்றேன்.

                    ( நூல்: ஸிஃபதுஸ் ஸஃப்வா லி இமாமி இப்னுல் ஜவ்ஸீ )

உணர்வுகளை விட மேலானது சகோதரத்துவம்….

உஹத் யுத்தகளத்தின் பரபரப்பான தருணம் அது…

புறமுதுகிட்டு ஓடிய எதிரிகள் மீண்டும் வந்து முஸ்லிம்களை நிலை குலையச் செய்த அபாயகரமானச் சூழல், நாலா புறமும் முஸ்லிம்கள் சிதறி ஓடிக் கொண்டிருந்தனர்.

இப்போது, யுத்தகளம் முழுவதையும் எதிரிகள் தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருந்தனர்.
" وَأَمّا حُسَيْلُ بْنُ جَابِرٍ فَاخْتَلَفَتْ عَلَيْهِ أَسْيَافُ الْمُسْلِمِينَ فَقَتَلُوهُ وَلَا يَعْرِفُونَهُ فَقَالَ حُذَيْفَةُ : أَبِي ! فَقَالُوا : وَاَللّهِ إنْ عَرَفْنَاهُ، وَصَدَقُوا!! قَالَ حُذَيْفَةُ : يَغْفِرُ اللّهُ لَكُمْ وَهُوَ أَرْحَمُ الرّاحِمِينَ . فَأَرَادَ رَسُولُ اللّهِ صَلّى اللّهُ عَلَيْهِ وَسَلّمَ أَنْ يَدِيَهُ، فَتَصَدّقَ حُذَيْفَةُ بِدِيَتِهِ عَلَى الْمُسْلِمِينَ ، فَزَادَهُ ذَلِكَ عِنْدَ رَسُولِ اللّهِ صَلّى اللّهُ عَلَيْهِ وَسَلّمَ خَيْرًا "
"سيرة ابن هشام" (2 / 86)
وروى البخاري (4065) عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ : لَمَّا كَانَ يَوْمَ أُحُدٍ هُزِمَ الْمُشْرِكُونَ فَصَاحَ إِبْلِيسُ : أَيْ عِبَادَ اللَّهِ أُخْرَاكُمْ ! فَرَجَعَتْ أُولَاهُمْ فَاجْتَلَدَتْ هِيَ وَأُخْرَاهُمْ ( أي وهم يظنون أنهم من العدو ) فَنَظَرَ حُذَيْفَةُ فَإِذَا هُوَ بِأَبِيهِ الْيَمَانِ فَقَالَ : أَيْ عِبَادَ اللَّهِ أَبِي أَبِي ! فَوَاللَّهِ مَا احْتَجَزُوا حَتَّى قَتَلُوهُ . فَقَالَ حُذَيْفَةُ : غَفَرَ اللَّهُ لَكُمْ .
 وكان النبي صلى الله عليه وسلم قد أَسَرَّ إلى حذيفة أسماء المنافقين ، وضبط عنه الفتن الكائنة في الأمة .
இந்த யுத்தத்தில் ஹுதைஃபா (ரலி) அவர்கள், தங்களது தந்தை ஹுஸைல் இப்னு ஜாபிர் (ரலி) அவர்களோடு களம் புகுந்திருந்தார்கள்.

இருவரும் இணைந்து எதிரிகளை துவம்சம் செய்து கொண்டிருந்தார்கள். ஒரு கட்டத்தில் ஹுஸைல் (ரலி) அவர்களின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் எதிரி தப்பி ஓடுகின்றான். அவனைத் துரத்திக் கொண்டு ஹுஸைல் (ரலி) அவர்கள் ஓடுகின்றார்கள்.

சற்று தூரத்தில் சண்டையிட்டுக் கொண்டிருந்த நபித்தோழர்களில் சிலர் இந்தக் காட்சியைப் பார்த்து விட்டு, ஹுஸைல் (ரலி) அவர்களை எதிரியாகவும், தப்பி ஓடும் எதிரியை முஸ்லிமாகவும் தவறாக நினைத்துக் கொண்டு ஹுஸைல் (ரலி) அவர்களுக்குப் பின்னால், அவரைத் தாக்க துரத்திக் கொண்டிருந்தார்கள்.

தூரத்தில் நின்று கொண்டு போரிட்டுக் கொண்டிருந்த ஹுதைஃபா (ரலி) அவர்கள் இதைக் கண்ணுற்று நடக்க இருக்கும் விபரீதத்தை உணர்ந்தவர்களாக “தோழர்களே! அவர் என் தந்தை, அவர் ஒரு முஸ்லிம்” என உரக்க சப்தமிட்டவாறே பின்னால் ஓடினார்கள்.

யுத்தகளத்தின் களேபரத்தில் ஹுதைஃபாவின் குரல் நபித்தோழர்களின் செவிகளுக்கு எட்டவில்லை.

எது நடக்கக் கூடாது என நினைத்தார்களோ அது நொடிப்பொழுதில் நடந்து முடிந்து விட்டது. ஆம் நபித்தோழர்கள் ஹுதைஃபாவின் தந்தை ஹுஸைல் (ரலி) அவர்களின் தலையை வெட்டி வீழ்த்தினார்கள்.

ஹுஸைல் (ரலி) அவர்களின் தலை துண்டாக வீழ்ந்த அதே நேரத்தில், அவர்கள் அணிந்திருந்த முகக்கவசமும் உடைந்து தெறித்தது.

நபித்தோழர்கள் அருகே சென்று பார்க்கின்றார்கள். அது ஹுதைஃபா (ரலி) அவர்களின் தந்தை ஹுஸைல் (ரலி) அவர்கள்.

ஒரு முஸ்லிமை சக முஸ்லிமாக இருந்து கொண்டு அநியாயமாக கொன்று விட்டோமே என்ற குற்ற உணர்வோடு தலைகுனிந்தவர்களாக செய்வதறியாது விக்கித்து நின்றார்கள் நபித்தோழர்கள்.

இதே நேரத்தில் ஹுதைஃபா அவர்களும் அங்கு வந்து சேர்ந்தார்கள். செய்வதறியாது விக்கித்து நிற்கும் தோழர்களை இரக்க மனதோடும், வாஞ்சையோடும் நோக்கிய ஹுதைஃபா (ரலி) அவர்கள் “தோழர்களே! நீங்கள் என்ன செய்வீர்கள்! நீங்கள் ஒன்றும் என் தந்தையை திட்டமிட்டுக் கொலை செய்யவில்லை! தவறுதலாகத்தான் செய்து விட்டீர்கள்! கிருபையாளர்களுக்கெல்லாம் கிருபையாளனான அல்லாஹ் உங்களை மன்னிக்கட்டும்! என்று உணர்வுகளை அடக்கி, உயர்ந்த எண்ணத்தோடு வார்த்தைகளை உதிர்த்து விட்டு, யுத்தகளம் நோக்கி எதிரிகளைத் தாக்க விரைந்து சென்றார்கள்.

யுத்தகளம் ஓய்ந்தது. அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களுக்கு நடந்த சம்பவங்களெல்லாம் எடுத்துச் சொல்லப்பட்டது. ஹுதைஃபா (ரலி) அவர்களை அழைத்து கட்டித்தழுவி ஆறுதல் மொழி பகர்ந்தார்கள்.

தந்தையை இழந்த மகனுக்கு தக்க நஷ்ட ஈட்டை வழங்குமாறு ஹுஸைலைக் கொன்ற நபித்தோழர்களைக் கேட்டுக் கொண்டார்கள்.

நஷ்டஈடாக வழங்கப்பட்ட தொகையை அண்ணலாரிடமே திருப்பித்தந்த ஹுதைஃபா (ரலி) அவர்கள் “அல்லாஹ்வின் தூதரே! இந்த தொகையை ஏழை முஸ்லிம்களுக்கு உங்கள் கரங்களாலே வழங்கி விடுங்கள்” என்று கூறி நபி {ஸல்} அவர்களை நெகிழ வைத்தார்கள்.

இந்த சம்பவத்திற்குப் பிறகு ஹுதைஃபா (ரலி) அவர்களின் மீதான அன்பும், நேசமும் நபி {ஸல்} அவர்களுக்குப் பல்கிப் பெருகியது.

அன்றிலிருந்து அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் அந்தரங்கக் காரிய தரிசியாக, இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தின் இரகசியங்களைக் கட்டிக் காக்கும் உயரிய பணியின் தலைமைச் செயலராக நியமனம் பெற்றார்கள்.

( நூல்: ரிஜாலுன் ஹவ்லர்ரஸூல் {ஸல்}…, ஸீரத் இப்னு ஹிஷாம், புகாரி )

தன்மானத்தை விட மகத்துவம் வாய்ந்தது சகோதரத்துவம்….

عن عكرمة، عن ابن عباس قال: أسرت الروم عبد الله بن حذافة السهمي، صاحب النبي صلى الله عليه وسلم، فقال له الطاغية: تنصّر وإلا ألقيتك في البقرة، لبقرة من نحاس، قال: ما أفعل. فدعا بالبقرة النحاس فملئت زيتاً وأغليت، ودعا برجل من أسرى المسلمين فعرض عليه النصرانية، فأبى، فألقاه في البقرة، فغذا عظامه تلوح، وقال لعبد الله: تنصّر وإلا ألقيتك. قال: ما أفعل.

உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக்காலத்தில் ரோமை நோக்கி அனுப்பப்பட்ட ஒரு படைக்கு அப்துல்லாஹ் இப்னு ஹுதாஃபதுஸ் ஸஹ்மீ (ரலி) தளபதியாக நியமிக்கப் பட்டார்கள்.

நீண்ட போராட்டத்திற்கு பின் முஸ்லிம் படையினர் கைதிகளாக பிடிக்கப்பட்டனர்.

முஸ்லிம்கள் கடும் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டனர். அப்துல்லாஹ் (ரலி) தளபதியல்லவா? கொஞ்சம் கூடுதலாகவே சித்ரவதை செய்யப்பட்டார்கள்.

அவர்களுக்கு முன்னால் தோன்றிய ரோம அரசன் இஸ்லாத்தை விட்டு விடுமாறு கூறி கட்டாயப்படுத்தினான். தொடர்ந்து சித்ரவதையை மேற்கொள்ளுமாறு தம் பணியாளர்களுக்கு கட்டளையிட்டான்.

ஆனால், கொஞ்சம் கூட இசைந்து கொடுக்க வில்லை அப்துல்லாஹ் (ரலி) அவர்கள்.

உடனடியாக மிகப்பெரிய அடுப்பு தயார் செய்யப்பட்டு மிகப் பிரமாண்டமான அண்டா வரவழைக்கப்பட்டு அண்டா முழுவதும் நீரால் நிரப்பப்பட்டது.

தீ மூட்டப்பட்டு, தண்ணீர் கொதிக்க வைக்கப்பட்டது. கொதிக்கும் தண்ணீருக்கு முன்னால் கொண்டு வரப்பட்ட அப்துல்லாஹ் (ரலி) அவர்களை நோக்கி “நீர் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிவிட்டால் உம்மை நான் விட்டு விடுகின்றேன்” என்றான் அரசன்.

ஒரு போதும் நான் அத்தகைய இழிவான காரியத்தை செய்ய மாட்டேன் என்று கூறினார் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள்.

கைதிகளாக பிடிக்கப்பட்டிருந்த முஸ்லிம்களில் ஒருவரை பிடித்து கொதிக்கும் வெந்நீருக்கு முன்னால் கொண்டு வந்து நிறுத்தி இஸ்லாத்தை விட்டு விட்டால் உம் உயிரை காப்பாற்றிக் கொள்ளலாம் என்ன சொல்கிறாய்? என்று கேட்டான் அரசன்.

என் உயிரை விட இஸ்லாமே மேலானது என்றார் அவர். உடனே கொதிக்கும் நீரில் தூக்கி போட்டான். கை வேறு கால் வேறு என உடலின் அத்துணை அங்கங்களும் பிரிந்து போனது. இதைக் கண்ணுற்ற அப்துல்லாஹ் (ரலி) அப்படியே கதறுகின்றார்கள்.

மீண்டும் இன்னொரு முஸ்லிம் கொண்டு வரப்பட்டு அது போன்றே கொடூரமாக கொலை செய்யப்படுகின்றார்.

மீண்டும் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் முன் வந்த அரசன் அடுத்து நீ தான் என்ன சொல்கின்றாய்? மதம் மாறுகின்றாயா? இல்லையா? என்று கேட்டான்.

فأمر به أن يلقى في البقرة فبكى، فقالوا: قد جزع، قد بكى: قال ردوه. قال: لا ترى أني بكيت جزعاً مما تريد أن تصنع بي، ولكني بكيت حيث ليس لي إلا نفسٌ واحدة يفعل بها هذا في الله، كنت أحب أن يكون لي من الأنفس عدد كل شعر في، ثم تسلّط علي فتفعل بي ذها.

அவர்கள் மறுக்கவே, தலை கீழாக கட்டப்பட்டு கொதிக்கும் நீரின் மேலாக தொங்க விடப்படுகின்றார்கள். ஒரு கட்டத்தில் தேம்பி தேம்பி அழுகின்றார்கள்.

இந்த செய்தி அரசனுக்கு தெரிவிக்கப்பட்டு, அரசன் அவர்களை அவிழ்த்து விடச் சொல்லி அருகில் அழைத்து அழுததின் காரணம் என்ன என்று கேட்டான்.

நான் ஒன்றும் நீ ஏற்பாடு செய்திருக்கின்ற இந்த தண்டனையைக் கண்டு அஞ்சி நடுங்கி அழவில்லை. மாறாக, என்னிடம் சன்மார்க்கத்திற்காக கொடுப்பதற்கு இந்த உயிரைத் தவிர வேறு உயிரை என்னுள் அல்லாஹ் படைக்கவில்லையே என்று தான்.

அல்லாஹ் மாத்திரம் என் தலைமுடியின் அளவுக்கு உயிர் கொடுத்திருப்பானேயானால் அவையனைத்தையும் சத்திய மார்க்கத்திற்கு சன்மானமாக வழங்கியிருப்பேனே! என்று நினைத்து தான் நான் அழுகின்றேன் என்றார்கள்.

قال: فأعجب منه: وأحبّ أن يطلقه، فقال: قبل رأسي وأطلقك. قال: ما أفعل. قال تنصّر وأزوجك بنتي وأقاسمك ملكي. قال: ما أفعل. قال قبل رأسي وأطلقك وأطلق معك ثمانين من المسلمين. قال: أما هذه فنعم. فقبّل رأسه، وأطلقه، وأطلق معه ثمانين من المسلمين.

இதுவரை மரணத்தின் விளிம்பில் நிற்கிற எத்தனையோ மனிதர்களின் கெஞ்சல்களை கேட்டுப் பழகிய அரசனுக்கு அப்துல்லாஹ் (ரலி) அவர்களின் இந்த அணுகுமுறை புதிதாகத் தோன்றியது.

அப்படியே ஆச்சர்யத்தின் உச்சத்திற்கே சென்ற அரசன் அவரை விடுவிக்க ஆசை கொண்டான். அருகில் சென்ற அரசன் “எனது நெற்றியில் முத்தமிடும்! உம்மை விடுதலை செய்கின்றேன்! நீர் கிறிஸ்துவனாக மதம் மாறிவிடு! உமக்கு எனது மகளை திருமணம் செய்து தருகின்றேன். எனது ஆட்சியில் பாதி நிலப்பரப்பை ஆளும் அதிகாரத்தைத் தருகின்றேன்” என்றான். 

ஒரு போதும் நான் அதற்கு சம்மதிக்க மாட்டேன் என்று கூறினார். அதற்கு அந்த அரசன் ”என் நெற்றியில் முத்தமிட்டால் நான் உம்மையும் உம்மோடு சிறை பிடித்திருக்கிற உம்முடைய படை வீரர்கள் 80 நபர்களை விடுதலை செய்து விடுகின்றேன்” என்று கூறினான்.

அதற்கு, அப்துல்லாஹ் இப்னு ஹுதாஃபத்துஸ் ஸஹ்மீ (ரலி) அவர்கள் ”அப்படி என்றால் உலகில் நீ தான் மிகச் சிறந்த மனிதன் இப்போதே உம் நெற்றியின் மீது முத்தமிடுகின்றேன்” என்று கூறி முத்தமிட்டார்கள்.

فلما قدموا على عمر بن الخطاب قام إليه عمر فقبل رأسه، قال: فكان أصحاب رسول الله صلى الله عليه وسلم يمازحون عبد الله فيقولون: قبلت رأس علج، فيقول لهم: أطلق الله بتلك القبلة ثمانين من المسلمين.

சக தோழர்களை விடுவித்த மகிழ்ச்சியில் மதீனா நோக்கி வந்த அப்துல்லாஹ் இப்னு ஹுதாஃபத்துஸ் ஸஹ்மீ (ரலி) அவர்களை மதீனாவின் எல்லையில் பெரும் கூட்டத்தோடு வந்து நின்று வரவேற்றார்கள் கலீஃபா உமர் (ரலி) அவர்கள்.

சுற்றியிருந்த மக்களில் சிலர் “உயிருக்கு பயந்து எதிரியின் நெற்றியில் முத்தமிட்டு வந்த கோழை” என்பதாக விமர்சித்து அப்துல்லாஹ் (ரலி) அவர்களை கேலி பேசினர்.

உடனே, உமர் (ரலி) அவர்கள் “அப்துல்லாஹ் இப்னு ஹுதாஃபா (ரலி) அவர்களின் நெற்றியில் முத்தம் பதித்துவிட்டு சுற்றியிருந்த மக்களை நோக்கி “அவர் கொடுத்த ஒரு முத்தம் தான் 80 முஸ்லிம்களின் உயிரையும், ஈமானையும் காப்பாற்றியுள்ளது” என்று கூறினார்கள்.

                                                  ( நூல்: உஸ்துல் ஃகாபா )
உயிரை விட உவப்பானது சகோதரத்துவம்….

ففي معركة اليرموك استشهد عدد من المسلمين، وأصيب بعضهم بجروح خطيرة، وكان من بين الذين أصيبوا: الحارث بن هشام، وعكرمة بن أبي جهل، وعياش بن ربيعة، فلقد سقط الثلاثة في أرض المعركة جرحى، فأسرع إليهم بعض الصحابة ونقلوهم إلى الخيمة التي يتم فيها علاج الجرحى من المسلمين، وأحسّ الحارث بن هشام بالعطش الشديد، فأشار إلى رجل كان يساعد الجرحى بأن يحضر له الماء، وجلس الرجل بجوار الحارث ليسقيه، فنظر الحارث إلى عكرمة وهو يرقد بجواره فأحسَّ بأنّه يريد الماء، فقال الحارث في نفسه: لو شربت الماء فلن يتبقى ماء لعكرمة، فقال للرجل: خذ الماء لعكرمة فإنّه عطشان، فقال له الرجل: وأنت أيضًا عطشان!! فقال له الحارث: الماء قليل فأعطه لعكرمة، فأخذ الرجل الماء وأعطاه لعكرمة، فنظر عكرمة لـ"عياش ابن ربيعة" فأحسّ أنه يريد الماء، فقال الرجل: الماء قليل فأعطه لعياش!! فنظر عيّاش للرجل الذي كان بجواره، فقد كانوا سبعة في الخيمة قد أصيبوا بجراحٍ خطيرة، فقال الرجل: الماء قليل فأعطه للرجل الذي يرقد بجواري، وهكذا ظلَّ كلَّ واحدٍ من هؤلاء السبعة يطلب من الرجل أن يسقى أخاه الذي بجواره، فلما وصل إلى السابع وجده قد مات، فعاد إلى السادس ليعطيه الماء فوجده قد مات، فعاد إلى الخامس ليجده قد مات، فعاد به إلى الرابع فوجده قد مات، فنظر إلى "عياش" ليعطيه الماء فوجده قد مات، فنظر إلى عكرمة ليعطيه الماء فيجده قد مات، فيسرع إلى الحارث ليعطيه الماء فيجده قد مات..
فآثر كلَّ واحدٍ منهم الآخر على نفسهِ حتى ماتوا جميعًا!!
யர்மூக் யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்த தருணம் அது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபித்தோழர்கள் காயமுற்று வீழ்ந்து கிடக்கின்றார்கள்.

அப்போது, காயமுற்றவர்களுக்கு தண்ணீர் கொடுப்பதற்காக படையில் பங்கெடுத்த தோழர் தண்ணீர் பையோடு விரைகிறார்.

தூரத்தில் ஒரு முனகல் சப்தம் அருகே சென்று பார்க்கிறார். அங்கே, ஹாரிஸ் இப்னு ஹிஷாம் (ரலி) அவர்கள் கடும் தாகத்தோடு காணப்படுகின்றார்கள்.

தண்ணீர் பையை திறந்து ஹாரிஸ் (ரலி) அவர்களின்ன் வாயின் அருகே கொண்டு சென்ற போது, அவருக்கு சற்று தொலைவில் இன்னொருவரின் முனகல் சப்தம் ஹாரிஸ் (ரலி) அவர்கள் சப்தம் கேட்ட திசையை நோக்கி அவரின் தாகத்தை போக்குமாறு சைகை செய்கின்றார்.

தண்ணீர் பையோடு அவருக்கு அருகே சென்ற பார்த்த போது, அங்கே இக்ரிமா இப்னு அபூஜஹ்ல் (ரலி) கடுமையான தாகத்தோடு காணப்படுகின்றார்கள்.

அவருக்கு சற்று தொலைவில் இருந்து இன்னொருவரின் முனகல் சப்தம், இக்ரிமா (ரலி) அவர்கள் அவரின் தாகத்தைப் போக்குமாறு சைகை செய்கின்றார்.

தண்ணீர் பையோடு ஓடிச் சென்று பார்த்தால் அங்கே, அயாஷ் இப்னு ரபீஆ (ரலி) அவர்கள் நாவறண்டு தாகத்தோடு காணப்பட்டார்கள். வாயின் அருகே தண்ணீரை கொண்டு செல்கிற போது அயாஷ் (ரலி) அவர்கள் ஷஹீதாகி விட்டார்.

இக்ரிமா (ரலி) அவர்களை நோக்கி தண்ணீர் பையோடு ஓடிச் சென்று பார்த்தால் அவரும் ஷஹீதாகி விட்டார்.

ஹாரிஸ் (ரலி) அவர்களுக்கு தண்ணீர் கொடுக்கலாம் என்று அங்கே ஓடிச் சென்றால் அவரும் ஷஹீதாகி விட்டார்.

                                 ( நூல்: அல்மஃகாஸீ லிஇமாமி அல்வாகிதீ )

பலத்த காயத்தோடும், தகிக்கும் தாகத்தோடும் மரணத்தின் விளிம்பில் இருந்து கொண்டிருந்த அந்த நபித்தோழர்கள் ஒவ்வொருவரின் உணர்வும் தங்களின் உயிரை விட சகோதரத்துவ உறவே மிகவும் உவப்பானதாக தெரிந்தது.


ஆனால், இன்று முஸ்லிம் சமூகத்தில் ஏற்பட்டுள்ள பிளவுகளும், பிரிவுகளும் சகோதரத்துவம் எனும் கட்டமைப்பில் இருந்து எவ்வளவு தூரம் விலகி நிற்கிறது என்றால் தொலைக்காட்சிப் பெட்டியில் ஏதாவது ஒரு சேனலில் கிடைக்கிற 30 அல்லது 60 நிமிட நேரத்தில் ஒருவருக்கொருவர் மிகக் கேவலமாக விமர்சித்துக் கொள்ளும் நிலை.

இன்னும், ஒரு படி மேலே சென்று பார்த்தால் நான் தான் உண்மை முஸ்லிம், நீ காஃபிர், அவன் காஃபிர் என்று நாளுக்கொரு ஃபத்வா வழங்கி சகோதரத்துவ உறவுக்கு உலை வைக்கிற வேலையைச் செய்து கொண்டிருக்கின்றார்கள்.

ஹிஜ்ரத் உலகிற்கு என்ன பாடம் சொல்கிறது? ஊருக்கு என்ன படிப்பினையைத் தருகிறது என்று பார்ப்பதை விட ஹிஜ்ரத்திற்கும் எனக்குமான ஆத்மார்த்தமான பந்தம் என்ன? என்று சீர் தூக்கி பார்த்து எதிர் வரும் புத்தாண்டில் 1446–இல் சகோதரத்துவ கட்டமைப்போடு என் சக முஸ்லிம் சகோதரனை அணுகுவதற்கு எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக!

ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!


Popular posts from this blog

ஹழ்ரத் அபூபக்கர் சித்திக் (ரலி)

எச்சரிக்கை! இந்த ஐந்து தீய குணங்கள் 30-10-2025

அற்புதங்கள் நிறைந்த ஆஷூரா தினம்...... 12-07-2024 04-07-2025