அரஃபா நாள் நோன்பு 08-07-22
(அரபா தினம் நோன்பு) ஹஜ்ஜத்துல் விதா
முன்னுரை
ثُمَّ اَفِيْضُوْا مِنْ حَيْثُ اَفَاضَ النَّاسُ وَاسْتَغْفِرُوا اللّٰهَ اِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ
பின்னர் மனிதர்கள் திரும்புகின்ற (“முஸ்தலிபா” என்னும்) இடத்திலிருந்து நீங்களும் (“மினா”வுக்குத்) திரும்பிவிடுங்கள். மேலும் அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோருங்கள். நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையவனாகவும் இருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 2:199)
அரஃபா தினம் ஓர் உலக மகா மாநாடு
அரஃபா மைதானத்தைப் பொருத்தவரை எப்போதும் வெறுமனே வெட்ட வெளியாகக் காட்சி தரும். ஆனால் துல்ஹஜ் மாதம் ஒன்பதாம் நாள் ஹாஜிகள் ஒன்று கூடும் போது அந்த அரஃபா மைதானம் முக்கியத்துவம் பெறுகிறது.
உலகின் பல பாகங்கலிருந்தும் ஹஜ் கடமையை செய்ய மக்காவுக்கு வருகை தரக்கூடிய அனைத்து முஸ்லிம்களையும் ஒன்றிணைக்கக் கூடிய ஒரு ஒப்பற்ற தினம்தான் ‘அரபா தினம்’. அன்றைய தினத்தில் ‘அரபா திடலில்’ அனைவரும் ஒன்று திரண்டு, நிறம், மொழி, குலம், நாடு, பணம், பதவி, சாதி, அமைப்பு அனைத்தையும் துறந்து, வேற்றுமையை குழிதோண்டி புதைத்து, தீண்டாமையை வேரோடு சாய்த்து உலக ஒற்றுமையை நிலைநாட்டி வைக்கிறார்கள்.
உலக ஒற்றுமையை வலியுறுத்தும் உலக மகா மாநாடு அரபா தினம் ஆகும். அரபாவில் உலக அமைதிக்காகவும், உலக நன்மைக்காகவும், தாய் நாட்டின் வளர்ச்சிக்காகவும், சமய நல்லிணக்கத்திற்காகவும், சமூக ஒற்றுமைக்காகவும், மனித வளத்திற்காகவும், பசியிலிருந்து விடுதலை பெறவும், பயத்திலிருந்து விடுபடவும், நோயிலிருந்து நிவாரணம் பெறவும், கடனிலிருந்து நிம்மதி பெறவும், மனிதவளம் மேம்படவும், மன அமைதி பெறவும் எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்க வேண்டும்.
அரஃபா என்றால் என்ன
மக்காவிற்கு கிழக்கே 12 மைல் தொலைவில் உள்ள ஓர் மலையாகும். அதைச் சுற்றியுள்ள மைதானத்திற்கு சொல்லப்படும் பெயர் அரஃபா ஆகும். அரஃபா என்றால் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளுதல் என்று பொருள்.
அல்லாஹ் விண்ணகத்திலிருந்து ஆதம் (அலை) அவர்களையும், ஹவ்வா (அலை) அவர்களையும் பூமிக்கு இறக்கினான். பிறகு இருவரும் அழுது பாவ மன்னிப்புத்தேடிய பின் இருவரையும் இங்கேதான் சந்திக்க வைத்தான். இங்கே தான் ஒருவரை ஒருவர் அறிந்து கொண்டனர். அதனால் இதற்கு அரஃபா (அறிந்து கொண்ட இடம்) என்னும் பெயர் வந்தது.
அரஃபா மைதானம் சுமார் 8 மைல் நீளமும்,4 மைல் அகலமும் கொண்டதாகும்.இங்கே ஜபலே ரஹ்மத் (அருளின் மலை) என்று ஒரு மலையும் உண்டு.இந்த இடத்தில் வைத்து ஆதம், ஹவ்வா (அலை) இருவர் மீதும் இரக்கம் காட்டி பாவங்களை மன்னித்து ஒன்று சேர்த்ததால் அப்பெயர் வந்தது. இந்த மலை சுமார் 200 அடி உயரம் இருக்கும்.இதன் மீது ஏறிச்செல்ல படிகள் உள்ளன. இதன் உச்சியின் மீது ஏறி நின்றுதான் நபி (ஸல்) அவர்கள் இறுதிப் பேருரை நிகழ்த்தினார்கள்.
வரலாற்று சிறப்பு மிக்க தினம்
தாரிக் பின் ஷிஹாப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
யூதர்களில் ஒருவர் (கலீஃபா) உமர் (ரலி) அவர்களிடம் வந்து, “இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! நீங்கள் உங்கள் வேதத்தில் ஓதிக்கொண்டிருக்கும் ஒரு வசனம் யூத சமுதாயமாகிய எங்களுக்கு அருளப்பெற்றிருந்தால், அந்நாளை நாங்கள் பண்டிகை நாளாக ஆக்கியிருப்போம்” என்று கூறினார்.
உமர் (ரலி) அவர்கள், “அது எந்த வசனம்?” என்று கேட்டார்கள். அதற்கு அந்த யூதர்,
اَ لْيَوْمَ اَكْمَلْتُ لَـكُمْ دِيْنَكُمْ وَاَ تْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِىْ وَرَضِيْتُ لَـكُمُ الْاِسْلَامَ دِيْنًا
இன்று உங்களுடைய தீனை உங்களுக்காக நான் முழுமையாக்கி விட்டேன். எனது அருட் கொடையையும் உங்கள் மீது நான் நிறைவு செய்துவிட்டேன். இன்னும் உங்களுக்காக இஸ்லாத்தை உங்களுடைய தீன்வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டு விட்டேன்.
(அல்குர்ஆன் : 5:3)
எனும் இறைவசனம்தான் (அது) என்று கூறினார்.
உமர் (ரலி) அவர்கள், “அந்த வசனம் எந்த நாளில் அருளப்பெற்றது; எந்த இடத்தில் அருளப்பெற்றது என்பதையெல்லாம் நான் அறிவேன். அது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “அரஃபாத்” பெருவெளியில் இருந்தபோது, ஒரு வெள்ளிக்கிழமை தினத்தில் அருளப்பெற்றது” என்று கூறினார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் : 5742.
அத்தியாயம் : 54. திருக்குர்ஆன் விளக்கவுரை
நரக வாசிகள் விடுதலை நாள்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ், அரஃபா (துல்ஹஜ் 9ஆவது) நாளில் அடியார்களுக்கு நரக விடுதலையளிக்கும் அளவிற்கு வேறெந்த நாளிலும் நரக விடுதலை அளிப்பதில்லை. அன்றைய தினம் அவன் (அரஃபாவிலுள்ளவர்களை) நெருங்கி, வானவர்களிடம் அவர்களைக் குறித்துப் பெருமை பாராட்டுகிறான். “இவர்கள் எதை நாடி (இங்கு குழுமி)யுள்ளார்கள்?” என்று (பெருமிதத்தோடு) கேட்கிறான்.
(ஸஹீஹ் முஸ்லிம் : 2623, 3354)
அதிசய பிராணி வெளியாகும் நாள்
அல்லாஹ்வின் அற்புதங்களில் ஒன்றான ‘தாப்பத்துல் அர்ள்’மக்காவிலிருந்த வெளியாகி மனிதர்களிடம் உரையாடி நல்லவர் கெட்டவரை அடையாள படுத்துமே அந்த அதிசய பிராணி வெளியாகும் நாள் இந்த அரஃபா தினம்தான். அல்லது அதற்கு முன்னால் பின்னாலுள்ள இரண்டு தினங்களில் வெளியாகும்
அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)
வெள்ளிக்கிழமை அரஃபா தினம்
அரஃபா நாள் வெள்ளிக்கிழமை வந்துவிட்டால் அதற்கு ஹஜ்ஜுல் அக்பர் என்று சொல்லப்படும்.அது 70 ஹஜ்ஜுகளுக்கு சமமாகும்
ஷைத்தான் தலையில் மண்ணை அள்ளிப் போட்டு அழுகிற நாள் அரஃபா
‘’எனக்கு ஏற்பட்ட அழிவே.. எனக்கு ஏற்பட்ட நாசமே!’’ என்று அவன் அழுகின்ற அந்த பரிதாப நிலை கண்டு மற்ற ஷைத்தான்கள் எல்லாம் “உனக்கு என்ன ஆயிற்று’’என்பார்கள். அறுபது எழுபது ஆண்டுகளாக நான் அழிவிலே (பாவத்திலே) போட்டு வைத்திருந்த ஒரு கூட்டத்தை அல்லாஹ் இன்று ஒரு நொடியிலே மன்னித்து விட்டான் அதை நினைத்துத்தான் அழுகிறேன் என்பானாம்.
அரஃபா தினத்தின் மாலைப் பொழுதில் மாநபி (ஸல்)
அவர்கள் தன சமுதாயத்திற்கு மன்னிப்பு வேண்டியும் அருள் வேண்டியும் அதிக நேரம் துஆ செய்தார்கள். அல்லாஹ் அதற்கு உடனே செவி சாய்த்தான். “நாயகமே நான் ஏற்றுக் கொண்டேன். அதே நேரம் அவர்களுக்குள் ஒருவர் மற்றவருக்கு செய்த அநியாயத்தைத் தவிர.( பாதிக்கப்பட்டவன் மன்னித்தாலே தவிர).’’
“யா அல்லாஹ்! நீ நினைத்தால் பாதிக்கப்பட்டவனுக்கு நன்மையை வழங்கிவிட்டு பாவியை மன்னித்துவிடலாமே’’
இந்த கோரிக்கைக்கு அப்போது பதில் கிடைக்கவில்லை. அனாலும் நபிகளார் விடவில்லை. மறுநாள் மீண்டும் அதே கோரிக்கையை முன் வைத்தார்கள். அல்லாஹ் அதையும் ஏற்றுக் கொண்டான். நபியே! உங்கள் உம்மத்திற்கு மன்னிப்பு வழங்கிவிட்டேன்’’என்றான்.
நபி (ஸல்) முகம் மலர்ந்தார்கள்.
தோழர்கள் வினவினார்கள்: “அல்லாஹ்வின் தூதரே! என்றைக்குமில்லாத புன்சிரிப்பும் பூரிப்பும் பூமானே தங்கள் பூவிதழ்களில் தெரிகிறதே?’’
“இப்லீஸின் இழிநிலை கண்டுதான் இந்த சிரிப்பு! என் சமூகத்திற்கு நான் வைத்த கோரிக்கையை நாயன் அல்லாஹ் ஏற்றுக் கொண்டதை அறிந்த இப்லீஸ் தாங்க முடியாமல் தன் தலையிலே மண்ணை அள்ளிப் போட்டுக்கொண்டு கதறி அழுகிற காட்சியைக் கண்டுதான் புன்சிரிக்கிறேன்’’என்றார்கள்.
அரஃபாவில் தங்குவது தான் ஹஜ்
அரபா மைதானத்தில் குறிப்பிட்ட இடத்தில் தான் தங்கவேண்டும் என்பதில்லை. அரபா மைதானத்தின் எந்த ஒரு இடத்தில் வேண்டுமானாலும் தங்கலாம்.
துல்ஹஜ் 9–ம் நாளின் அதிகாலை ‘சுபுஹ்’ எனும் தொழுகையை முடித்துவிட்டு, சூரியன் உதயமான பின்பு ‘மினா’ எனும் இடத்திலிருந்து அரபாவை நோக்கி புறப்படவேண்டும். அரபாவிற்கு வந்து சேர நண்பகலாக ஆகிவிடும். இந்த நண்பகலில் இருந்து மறுநாள் அதிகாலை வரைக்கும் அரஃபா மைதானத்தில் தரிபடுவதன் மூலம் புனித ஹஜ் நிறைவேறிவிடும்.
‘அரபா தான் ஹஜ்’ ஹஜ் என்பதே அரபா (வில் தங்குவது) தான். துல்ஹஜ் பத்தாம் இரவில் அதிகாலைக்கு முன்பு ஒருவர் (அரபாவுக்கு) வந்துவிட்டால், அவர் ஹஜ்ஜை அடைந்து கொள்வார் என நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர்: ஹழ்ரத் அப்துர் ரஹ்மான் பின் யஃமுர் (ரலி) அவர்கள்
நூல்கள்: அஹ்மது, அபூதாவூத், நஸயீ, திர்மிதி
அரபாவில் ஹாஜிகள் நோன்பு வைக்க கூடாது
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் அரஃபாவில் உள்ளவர்கள் அரஃபா நாளில் நோன்பு நோற்பதை விட்டும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடுத்தார்கள்.
அபூதாவூத் : 2084
மைமூனா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் அரஃபா நாளில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருக்கிறார்களா என்பதில் மக்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டது. நான் அரஃபாவில் தங்கியிருந்த நபி (ஸல்) அவர்களிடம் பால் பாத்திரத்தைக் கொடுத்தனுப்பினேன். மக்களெல்லாம் பார்த்துக் கொண்டிருக்க அதை நபி (ஸல்) அவர்கள் குடித்தார்கள்.
ஸஹீஹ் புகாரி : 1988,1989
புனித ஹஜ்ஜில் ஈடுபடும் ஹாஜிகள் அரஃபா தினத்தில் அதிகமதிகம் நன்மைகள் பலவற்றை புரிவதற்கும், உத்வேகத்துடனும், விவேகத்துடனும், புத்துணர்ச்சியுடனும் செயல்படுவதற்கும் ஹாஜிகளுக்கு அரஃபா நோன்பு சுன்னத் இல்லை.
ஹஜ் பயணம் செல்லாதவர்கள் நோன்பு வைப்பது சுன்னத்தாகும்.
அரபா நாளின் நோன்பைப் பற்றி நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘அது கடந்துபோன ஓராண்டு மற்றும் எதிர்வரும் ஓராண்டு நிகழும் சிறு பாவங்களுக்கு பரிகாரமாக அமையும்’ என கூறினார்கள்.’
அறிவிப்பாளர்: ஹழ்ரத் அபூகதாதா ரலியல்லாஹு அன்ஹு
நூல்: முஸ்லிம் 2151
அருள் மழை பொழியும் நாள்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”சுவனத்தில் முத்து மாணிக்கம் மரகதம் பவளங்களால் ஆன ஒரு மாளிகை உண்டு”. இதைக்கேட்ட
ஆயிஷா (ரலி) அவர்கள் ”யா ரசூலல்லாஹ் அது யாருக்கு?”
நபியவர்கள் கூறினார்கள் : ”அரஃபா நாளில் நோன்பு வைப்பவருக்கு!”
அரஃபா நாளில் நோன்பு வைத்தவருக்கு கிடைக்கும் மேலும் அன்று காலையில் அல்லாஹ் நன்மையின் வாசல்களில் 30ஐ திறக்கிறான், தீமையின் வாசல்களில் 30ஐ அடைக்கிறான்.”
அரஃபாவில் மரணித்தவரின் சிறப்பு
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் “அரஃபா” பெருவெளியில் தங்கியிருந்த ஒருவர், தமது வாகனத்திலிருந்து விழுந்துவிட்டார். அது அவரது கழுத்தை முறித்துவிட்டது. இதைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சொல்லப்பட்டபோது, “அவரைத் தண்ணீராலும் இலந்தை இலையாலும் நீராட்டுங்கள். இரு ஆடைகளில் அவருக்குப் பிரேத ஆடை (கஃபன்) அணிவியுங்கள். அவருக்கு வாசனைத் தூள் போடாதீர்கள். அவரது தலையை மூடாதீர்கள். ஏனெனில், “தல்பியா” சொல்லிக்கொண்டிருப்பவராக மறுமை நாளில் அவரை அல்லாஹ் எழுப்புவான்” என்று கூறினார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் : 2281.
நபி (ஸல்) அவர்களின் (ஹஜ்ஜத்துல் விதா) உரையை சிறிய தலைப்பில் பார்ப்போம்
நபி (ஸல்) ஒவ்வொன்றாகக் கூறிய போது அதை ரபிஆ இப்னு உமையா இப்னு கலஃப் (ரழி) மக்களுக்குச் சப்தமிட்டு எடுத்துரைத்தார்கள். (இப்னு ஹிஷாம்)
மக்களே! மிகக் கவனமாகக் கேளுங்கள். ஏனெனில், இந்த ஆண்டுக்குப் பிறகு இந்த இடத்தில் உங்களை நான் சந்திப்பேனா! என்று எனக்குத் தெரியாது.
குற்றம் இழைத்தவரே தண்டனை பெறுவார்
மக்களே! இந்த (துல்ஹஜ்) மாதத்தையும், இந்த (பிறை 9ஆம்) நாளையும், இந்த (மக்கா) நகரையும் புனிதமாகக் கருதுவதுபோல் உங்களில் ஒருவர் மற்றவன் உயிரையும் பொருளையும் மானத்தையும் புனிதமாகக் கருதுங்கள்.
ஒருவர் குற்றம் செய்தால் அக்குற்றத்தின் தண்டனை அவருக்கே வழங்கப்படும் அவரது உறவினருக்கு அல்ல. தந்தை தன் பிள்ளைக்கு அநியாயம் செய்ய வேண்டாம் பிள்ளையும் தன் தந்தைக்கு அநியாயம் செய்ய வேண்டாம். தந்தையின் குற்றத்திற்காகப் பிள்ளையை அல்லது பிள்ளையின் குற்றத்திற்காகத் தந்தையை தண்டிக்கப்பட மாட்டாது.
அறியாமை கால நடைமுறையை சரிசெய்தல்
அறிந்துகொள்ளுங்கள்! அறியாமைக் காலத்தின் அனைத்து செயல்களையும் நான் எனது கால்களுக்குக் கீழ் புதைத்து அழித்து விட்டேன்.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(அறியாமைக் காலத்தில் ஹஜ்ஜின்போது) குறைஷியரும் அவர்களுடைய சமயச் சார்புடையோரும் (தங்களை உயர்வாகக் கருதிக்கொண்டு) முஸ்தலிஃபாவிலேயே தங்கிவிடுவார்கள் (“ஹரம்” புனித எல்லையைவிட்டு வெளியேறமாட்டார்கள்). அவர்கள் “கடினமான (சமயப் பற்றுடைய)வர்கள்” (ஹும்ஸ்) எனப் பெயரிடப்பட்டுவந்தனர். மற்ற எல்லா அரபியரும் “அரஃபா”பெருவெளியில் தங்குவார்கள். இஸ்லாம் வந்தபோது வலிவும் மாண்பும் உடைய அல்லாஹ், (குறைஷிக் குலத்தவரான) தன் தூதருக்கு (துல்ஹஜ் ஒன்பதாம் நாளில்) “அரஃபாத்” சென்று, அங்கே தங்கியிருந்துவிட்டு, அங்கிருந்தே புறப்பட வேண்டும் எனக் கட்டளையிட்டான்.
ஸஹீஹ் முஸ்லிம் : 2338.
உயர் குலத்தவரான குறைஷிகள் மட்டும் புனித எல்லையில் தங்கிவிட்டு, அரபா என்பது ஊருக்கு வெளியே ஒதுக்கப்பட்டவர்களுக்கான இடமாக கருதி வந்தார்கள். இத்தகைய தீண்டாமைக் கொடுமையை இஸ்லாம் ஒழித்துக்கட்டியது
ثُمَّ اَفِيْضُوْا مِنْ حَيْثُ اَفَاضَ النَّاسُ وَاسْتَغْفِرُوا اللّٰهَ اِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ
பின்னர் மனிதர்கள் திரும்புகின்ற (“முஸ்தலிபா” என்னும்) இடத்திலிருந்து நீங்களும் (“மினா”வுக்குத்) திரும்பிவிடுங்கள். மேலும் அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோருங்கள். நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையவனாகவும் இருக்கின்றான்.
என அல்லாஹ் (அல்குர்ஆனில் 2:199 வது வசனத்தில்) கட்டளையிட்டான்.
(அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி) புகாரி: 4520)
அறியாமை கால கொலை வட்டி ஒழிப்பு
அறியாமைக் காலக் கொலைகளுக்குப் பழி வாங்குவதை விட்டுவிட வேண்டும். முதலாவதாக, எங்கள் குடும்பத்தில் கொலை செய்யப்பட்ட ரபீஆ இப்னு ஹாரிஸின் மகனுக்காகப் பழிவாங்குவதை நான் விட்டு விடுகிறேன். அறியாமைக் கால வட்டியும் தள்ளுபடி செய்யப்பட்டது. முதலாவதாக நான் என் குடும்பத்தாரின் வட்டியிலிருந்து அப்பாஸ் இப்னு அப்துல் முத்தலிபுக்கு உரித்தான வட்டியை முழுமையாக தள்ளுபடி செய்கிறேன்.
பெண்கள் குறித்து எச்சரிக்கை
பெண்கள் குறித்து அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். அல்லாஹ்வின் அமானிதமாக அவர்களை நீங்கள் அடைந்திருக்கிறீர்கள். அவனது நாட்டப்படி அவர்களை நீங்கள் மனைவியராக ஏற்றிருக்கிறீர்கள். அவர்கள் உங்களுக்குச் செய்ய வேண்டிய கடமையாவது நீங்கள் விரும்பாத வர்களை உங்கள் இல்லத்துக்குள் அவர்கள் அனுமதிக்கக் கூடாது. மீறி அனுமதித்தால் காயம் ஏற்படாத வகையில் அடியுங்கள். நீங்கள் அவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமையாதெனில் நல்ல முறையில் அவர்களுக்கு உணவும் ஆடையும் அளிக்க வேண்டும்.
அமல்களை செய்யுங்கள்
நான் உங்களிடம் விட்டுச் செல்வதை நீங்கள் உறுதியாகப் பின்பற்றினால் ஒருபோதும் வழி தவறமாட்டீர்கள். அதுதான் அல்லாஹ்வின் வேதமாகும்.
மக்களே! எனக்குப் பின் எந்தவொரு நபியும் (இறைத்தூதரும்) இல்லை. உங்களுக்குப் பின் எந்தவொரு சமுதாயமும் இல்லை. உங்களைப் படைத்துக் காப்பவனான அல்லாஹ்வையே வணங்குங்கள். உங்களுக்கு விதிக்கப்பட்ட ஐவேளைத் தொழுகையை நிறைவேற்றுங்கள். ரமழான் மாதத்தில் நோன்பு வையுங்கள். மனமுவந்து உங்கள் செல்வத்துக்கான ஜகாத்தை நிறைவேற்றுங்கள். உங்கள் இறைவனின் இல்லத்தை ஹஜ் செய்யுங்கள். உங்கள் தலைவர்களுக்குக் கட்டுப்படுங்கள். (மேற்கூறிய நற்செயல்களால்) இறைவன் உங்களுக்காகப் படைத்துள்ள சுவனத்தில் நுழைவீர்கள்.
உங்கள் இறைவனை அதிவிரைவில் நீங்கள் சந்திப்பீர்கள். அவன் உங்கள் செயல்களைப் பற்றி உங்களிடம் விசாரணை செய்வான். எனக்குப் பிறகு நீங்கள் உங்களுக்குள் கொலை குற்றம் புரிந்து வழிகேடர்களாக மாறிட வேண்டாம். அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக ஷைத்தான் உங்களது இந்த பூமியில் அவனை நீங்கள் வணங்குவதிலிருந்து முற்றிலும் நிராசையடைந்து விட்டான். எனினும், நீங்கள் மிக எளிதாகக் கருதும் செயல்களில் அல்லாஹ்வுக்கு மாறு செய்து ஷைத்தானுக்கு வழிப்படுவீர்கள். அதனால் அவனோ மகிழ்ச்சியடைவான்.
நூல் : ரஹீக் (முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு)
மொழியால் நிறத்தால் உயர்ந்தவன் தாழ்ந்தவன் இல்லை
மக்களே! அறிந்து கொள்ளுங்கள். உங்கள் இறைவன் ஒருவனே. உங்கள் தந்தையும் ஒருவரே. இறையச்சத்தைத் தவிர வேறெந்த வகையிலும் ஓர் அரபியருக்கு அரபி அல்லாதவரை விட, ஓர் அரபி அல்லாதவருக்கு அரபியரை விட, ஒரு வெள்ளையருக்கு கருப்பரை விட, ஒரு கருப்பருக்கு வெள்ளையரை விட எவ்விதச் சிறப்பும் மேன்மையும் இல்லை.
மக்களே சாட்சியாகும்
“மறுமையில் என்னைப் பற்றி உங்களிடம் விசாரிக்கும் போது நீங்கள் என்ன பதில் கூறுவீர்கள்?” என்று கேட்டார்கள்.
கூடியிருந்தோர் “நிச்சயமாக நீங்கள் எடுத்துரைத்தீர்கள் நிறைவேற்றினீர்கள் நன்மையையே நாடினீர்கள் என நாங்கள் சாட்சி கூறுவோம்” என்றார்கள்.
நபியவர்கள் தங்களது ஆட்காட்டி விரலை வானை நோக்கி உயர்த்தி, பின்பு மக்களை நோக்கித் திருப்பி “அல்லாஹ்! இதற்கு நீயே சாட்சி!” என்று மூன்று முறை கூறினார்கள். இங்கு வந்திருப்பவர்கள் அனைவரும் இங்கு வராத மற்றவர்களுக்கும் எடுத்துக் கூறுங்கள். ஏனெனில், செய்தியை கேள்விப்படுபவர்களில் சிலர் நேரடியாகக் கேட்பவர்களைவிட நன்கு விளக்கமுடையவர்களாக இருப்பார்கள். (ஸஹீஹ் முஸ்லிம், ஸுனனுத் திர்மிதி, முஸ்னது அஹ்மது, இப்னு ஜரீர், இப்னு ஹிஷாம்)
இஸ்லாம் பரிபூரணமாகியது
நபி (ஸல்) தங்களது உரையை முழுமையாக முடித்தபோது,
اَ لْيَوْمَ اَكْمَلْتُ لَـكُمْ دِيْنَكُمْ وَاَ تْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِىْ وَرَضِيْتُ لَـكُمُ الْاِسْلَامَ دِيْنًا
இன்றைய தினம் நாம் உங்களுக்கு உங்களுடைய மார்க்கத்தை முழுமையாக்கி வைத்து என்னுடைய அருளையும் உங்கள் மீது முழுமையாக்கி வைத்து விட்டோம். (அல்குர்ஆன் 5:3)
என்ற வசனம் இறங்கியது.
இந்த வசனத்தைக் கேட்ட உமர் (ரழி) கண் கலங்கினார்கள். நபி (ஸல்) “உமரே! நீங்கள் அழுவதற்கு காரணமென்ன?” என வினவினார்கள். “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் ஒவ்வொரு நாளும் மார்க்கத்தை அதிகம் அதிகம் தெரிந்து கொண்டே வந்தோம். இப்போது மார்க்கம் முழுமையாக்கப்பட்டு விட்டது. முழுமையான ஒன்று மீண்டும் குறைய ஆரம்பித்து விடுமே என எண்ணி நான் அழுகிறேன்” என உமர் (ரழி) கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) “நீங்கள் உண்மைதான் கூறினீர்கள்” என்றார்கள். (இப்னு கஸீர், இப்னு ஜரீர், இப்னு அபீ ஷய்பா)
நூல் : ரஹீக் (முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு)
இந்தியாவில் அரபா நாள்
இன்று மக்காவில் அரபா மைதானத்தில் ஹாஜிகள் ஒன்று கூடியிருந்தாலும். உலகம் முழுவதற்கும் இதுவே அரபா நாள் அல்ல.
ஏனெனில் அரபா நாள் என்பதற்கு மார்க்கம் கூறும் விளக்கம் ஹாஜிகள் அரபாவில் கூடும் நாள் என்பதல்ல. துல் ஹஜ் மாத்தின் ஒன்பதாம் நாள் என்பதாகும்.
உம்மு வில் இமாம் ஷாபி (ரஹ்) அறிவிக்கிறார்.
ஹிஜ்ரி முதலாம் நூற்றாண்டைச் சார்ந்த இஸ்லாமின் மிகப்பெரிய சட்ட அறிஞரான عطاء بن أبي رباح விடம் بن جريج என்ற عبد الملك بن عبد العزيز بن جريج கேட்டார். ஹாஜிகள் அரபா அல்லாத நாளில் அரபா நாளளென்று தவறுதலாக கூடி தங்கி விட்டால் என்னவாகும் அது கூடுமா ? عطاء بن أبي رباح பதில் சொன்னார்.கூடும் என்று சொல்லி விட்டு பெருமானாரின் இந்த ஹதீஸை சொன்னார்.
قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : ” فِطْرُكُمْ يَوْمَ تُفْطِرُونَ , وَأَضْحَاكُمْ يَوْمَ تُضَحُّونَ أَرَاهُ قَالَ ، وَعَرَفَةُ يَوْمَ تَعْرِفُونَ ” . .372
நீங்கள் எதை தீர்மாணிக்கிறீர்களோ அது தான் ஈது. அது தான் அரபா
உதைமீன் அவர்களின் பதில்:
அரபா நோன்பு நாட்டுக்கு நாடு வித்தியசப்படுமா என்று சவூதி அறிஞர் ஸாலிஹ் அல் உதைமீன் அவர்களிடம் கேட்கப்பட்டபோது அவர் அளித்த பாத்வா இங்கு பதியபப்டுகிறது.
“நாட்டுக்கு நாடு பிறை வித்தியாசப்படுகிறதா இல்லையா?வித்தியசபப்டுகிறது என்பதுவே சரியானதாகும்.
மக்காவில் பிறை கண்ட அடிப்படையில் ஒன்பதாவது தினம் அங்கு அரபா தினம் ஆகும். மக்காவுக்கு முன்தினம் வேறு நாட்டில் பிறை கண்டிருந்தால் மக்காவில் ஒன்பதாவது நாள் முதல் நாள் பிறை கண்ட நாட்டில் பத்தாவது நாள் ஆகும். பத்தாவது நாள் நோன்பு பிடிக்க கூடாத நாள் ஆகும். ஏனென்றால் அது பெருநாள் தினமாகும்.
அதே போன்று மக்காவை விட ஒரு நாள் பிறை தாமதித்து வேறு நாட்டில் காணப்பட்டால் மக்காவில் ஒன்பதாம் நாள் அவர்களுக்கு எட்டாவது நாளாக இருக்கும் அவர்கள் ஒன்பதாவது நாள் நோன்பு நோற்கும்போது மக்காவில் பிறை பத்தாக இருக்கும்.
எனவே எமது கருத்தே சரியான கருத்தாகும்.என்னென்றால் நபி ஸல் அவர்கள் கூறினார்கள் “பிறையை பார்த்து நோன்பு பிடியுங்கள் பிறையை பார்த்து நோன்பை விடுங்கள்”
யார் தமது இடங்களில் பிறை காணவில்லையோ அவர்கள் பிறை கண்டவர்களாக கணிக்கப்படமாட்டார்கள்.
அதே போல் மக்கள் சூரிய உதயத்தையும் சூரிய அஸ்தமனத்தையும் அவரவர்கள் நாட்டுக்கு ஏற்ப கணிப்பதில் ஏகோபித்த கருத்தில் உள்ளனர்.மாதத்தை கணிப்பதும் நேரத்தை கணிப்பது போன்ற ஒன்றுதான்”
அல்லாஹ் மிக அறிந்தவன்.