குர்பானியும் அரபாவும் அய்யாமுத் தஷ்ரீகும் 08-07-22, 23-06-23.
குர்பானி அரஃபா மற்றும் அய்யாமுத் தஷ்ரீக் பற்றிய குறிப்புகள்
அல்லாஹ்வின் அருள் நிறைந்த மிகச்சிறந்த மாதத்தில், மிகச்சிறந்த நாட்களில் நாம் அமர்ந்திருக்கிறோம். இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை அரஃபா என்ற மகத்தான நாள். நமக்கு இன்ஷா அல்லாஹ் அதற்கு அடுத்த நாள் 17-06-24 திங்கள் அன்று தியாகத்திருநாளாக நாம் கொண்டாடும் பெருநாளாக இருந்தாலும் உண்மையில் நாம் ஈமானிய உணர்வோடு ஒருவொருக்கொருவர் மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும் குதூகலத்தையும் பகிர்ந்து கொள்ள வேண்டிய, பரிமார வேண்டிய ஒரு மகத்தான நாள் இந்த அரஃபாவுடைய நாள்.
அப்படிப்பட்ட பாக்கியமிக்க நாளை பற்றி தெரிந்து கொள்வதற்கு முன் நம்மீது கடமையாக்கப்பட்ட குர்பானியை பற்றி சில விஷயங்களை நாம் அறிந்து கொள்வது சாலச்சிறந்தது ஆகும்
لَنْ يَنَالَ اللَّهَ لُحُومُهَا وَلَا دِمَاؤُهَا وَلَٰكِنْ يَنَالُهُ التَّقْوَىٰ مِنْكُمْ ۚ كَذَٰلِكَ سَخَّرَهَا لَكُمْ لِتُكَبِّرُوا اللَّهَ عَلَىٰ مَا هَدَاكُمْ ۗ وَبَشِّرِ الْمُحْسِنِينَ
குர்பானியின் மாமிசங்களோ, அவற்றின் உதிரங்களோ அல்லாஹ்வை ஒரு போதும் சென்றடைவதில்லை. ஆனால் உங்களுடைய தக்வா (இறையச்சம்) தான் அவனை சென்றடையும்; அல்லாஹ் உங்களுக்கு நேர்வழி காண்பித்ததற்காக அவனை நீங்கள் பெருமைப் படுத்தும் பொருட்டு இவ்வாறாக அவற்றை உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்திருக்கிறான்; ஆகவே நன்மை செய்வோருக்கு நீர் நன்மாராயங் கூறுவீராக!
(அல்குர்ஆன் 22:37)
குர்பானியின் வரலாறு.
நபி இப்ராஹீம் (அலைஹி வஸல்லம்)அவர்கள் சுமார் 86 வருடங்களுக்குப் பிறகு மகன் இஸ்மாயீல் (அலைஹி) அவர்களை பெற்றெடுக்கிறார்கள். தவம் கிடந்து பெற்றெடுத்த அந்த பிள்ளையை அறுத்து பலியிடுமாறு அல்லாஹ் கனவில் கட்டளையிடுகிறான்.
இது இப்ராஹீம் அலைஹி அவர்களுக்கு அல்லாஹ் கொடுத்த மிகப்பெரிய சோதனை என திருமறை குர்ஆன் சொல்கிறது.
ان هذا لهوالبلاء المبىن
இந்த சோதனையை வரலாற்று சாதனையாக மாற்றியது தான் இந்த வரலாற்று பின்னணி.
தான் கண்ட கனவை தன் மகனிடம் சொல்ல, மகனோ சற்றும் தயங்காமல் தந்தையே நீங்கள் கண்ட கனவை நிறைவேற்றுங்கள் என சொல்ல, இப்ராஹீம் (அலை) இறைவன் மீது கொண்ட அன்பினால் தான் ஈன்றெடுத்த மகனை அறுக்க முயல, கத்தி அறுக்கவில்லை.
இந்த தியாகத்தை பார்த்த அல்லாஹ் நபியே நீங்கள் கண்ட கனவை மெய்படுத்திவிட்டீர், சோதனைய வென்று விட்டீர், எனவே இனிமேல் மகனுக்கு பகரமாக ஆட்டை குர்பானி கொடுங்கள் என குர்பானியை கடமையாக்கினான்.
அன்று மகனையே அறுக்க கொடுக்க முயன்றார்கள். ஆனால் இன்று ஆடு, மாடு குர்பானி கொடுக்க கூட ஏதோ ஒரு காரணத்தை சொல்லி தட்டிக் கழிக்கிறார்கள். இது மிகப்பெரிய பாவமாகும்.
குர்பானி என்றால் என்ன?
குர்பானி என்றால் தியாகம் செய்தல், நெருங்குதல் என்றுப்பொருள். நபி இப்ராஹீம் அலைஹி அவர்களும் அவர்களின் குடும்பத்தார்களும் செய்த தியாகத்தை நினைவுக் கூர்ந்து பிராணிகளை அறுக்கும் கடமைதான் குர்பானி. இந்த குர்பானி ஹிஜ்ரி 2-ம் ஆண்டு கடமையாக் கப்பட்டது.
குர்பானியின் சிறப்பு
குர்பானி நபி இப்ராஹீம் (அலைஹி) அவர்களின் அழகிய சுன்னத்தாகும்.
ஒரு தடவை ஸஹாபாக்கள் நபி முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் உள்ஹியா என்றால் என்ன? என்று கேட்கும் போது குர்பானி என்பது உங்கள் தந்தை இப்ராஹீம் (அலை) அவர்களின் சுன்னத்தாகும். மேலும் நீங்கள் கொடுக்கும் குர்பானி பிராணியின் ஒவ்வொரு ரோமத்திற்கும் ஒரு நன்மையுண்டு. மேலும் அதன் இரத்தம் பூமியில் விழுவதற்கு முன் உங்கள் பாவங்கள் மன்னிக்கப்படுகிறது. மேலும் அந்த பிராணி நரகத்திற்கும் அவனுக்கும் மத்தியில் திரையாகிவிடுகிறது என்றார்கள்.
குர்பானி கொடுக்கும் நாளில் சிறந்த அமல் குர்பானி கொடுப்பது தான்.
ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். துல்ஹஜ் பிறை 10-ல் மனிதன் செய்யும்
அமலில் குர்பானியை விட வேறெந்த செயலும் அல்லாஹ்விடம் விருப்பமுடையதாக இருக்காது. குர்பானி கொடுக்கப்பட்ட ஆடு தனது கொம்புடனும் ,குளம்புடனும், முடியுடனும், கியாமத் நாளில் வரும். அதன் இரத்தம் பூமியில் விழுவதற்கு முன்பே அது அல்லாஹ்விடம் ஒப்புக் கொள்ளப்பட்டு விடுகிறது. எனவே பரிபூரணமான மகிழ்வுடன் குர்பானியை நிறை வேற்றுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
(ஆதாரம் -திர்மிதி)
இதுப் போன்று ஆடு, மாடுகளை அறுத்தும் ஒரு மனிதனுக்கு அர்ப்பணிக்கும் தியாக உணர்வு வரவில்லையென்றால் அவன் கொடுத்த அந்த குர்பானி ஒரு சடங்கு தான்.
குர்பானி யார் மீது கடமை?
ஹஜ், ஜகாத் கடமையானவர் மீது குர்பானி கொடுப்பது வாஜிபாகும். மேலும் யார் அன்றைய நாளின் எல்லா வகையான தேவை நீங்க 87 1/2 கிராம் (11 பவுன்) தங்கம் அல்லது 612 1/2 கிராம் வெள்ளி அல்லது அதன் கிரயமான 48,000 ரூபாய் ( அல்லது அதன் அளவு உள்ள வருமான இடங்கள் பெற்றிருக்கிறாரோ அவர் மீது குர்பானி கடமையாகும்.
ஜகாத்தை போன்று குர்பானியில் வருடம் பூர்த்தியாகி இருக்க வேண்டும் என்பதில்லை. எனவே தான் ஒரு ஏழை அன்றைய நாளில் பணக்காரராக ஆனால் அவர் மீதும் குர்பானி கடமையாகும்.
குர்பானி நாளில் அதற்கு பகரமாக வேறு சதகா செய்யக்கூடாது.
குர்பானி பிராணிகள்
1)ஆடு
வெள்ளாடு - ஒரு வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும்.
செம்மறி ஆடு - ஒரு வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். நன்கு கொழுத்ததாக இருந்தால் ஆறு மாதமே இருந்தாலும் போதுமானது.
2) மாடு
இரண்டு வயது முழுமையடைந்து இருக்க வேண்டும். 2 வயதிற்கு குறைவான மாட்டை குர்பானி கொடுப்பது கூடாது.
3) ஒட்டகம்
ஐந்து வயது முழுமையடைந்து இருக்க வேண்டும்.
கோழி, வாத்து, மீன் போன்றவைகளை குர்பானி கொடுப்பது கூடாது.
எதுவரை கொடுக்கலாம்?
ஹனஃபீ மத்ஹபில் துல்ஹஜ் பிறை 10,11,12 ஆகிய மூன்று நாட்கள் வரையிலும்,
ஷாபியி மத்ஹபில் துல்ஹஜ் பிறை 10,11,12,13 ஆகிய நான்கு நாட்கள் வரையிலும் கொடுக்கலாம்.
பிராணியை அறுக்கும் முறை
1) அறுப்பவர் முஸ்லிமாக இருக்க வேண்டும்.
2) பிஸ்மில்லாஹ் சொல்லி அறுக்க வேண்டும்.
اني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا مناالمشركين .لا شريك له وبذلك أمرت وانا اول المسلمىن என்ற இந்த ஆயத்தை ஒதி பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர் என சொல்லி அறுக்க வேண்டும். அறுத்த பின் யா அல்லாஹ் என்னிட மிருந்து இதை ஏற்றுக் கொள்வாயாக! என துஆச் செய்ய வேண்டும்.
3) தொண்டை குழிக்கும், தொண்டைக்கும் மத்தியில் உள்ள இரண்டு இரத்தம் ஒடும் குழாய் , மூச்சுக்குழாய், உணவுக்குழாய், ஆகிய நான்கு குழாய்களை துண்டிக்க வேண்டும்.
4) குர்பானி கொடுப்பதை நிய்யத் செய்துக்கொள்ள வேண்டும்.
5) கிப்லாவின் பக்கம் பிராணியை முன்னோக்கி வைத்து அறுப்பது சுன்னத்.
குர்பானியின் ஒழுக்கம்
1) முன்பே கத்தியை தீட்டி வைத்திருக்க வேண்டும்.
2) ஒரு பிராணிக்கு முன்னால் இன்னொரு பிராணியை அறுப்பது கூடாது.
3) அறுத்த பிறகு பிராணியின் சூடு ஆறுவதற்கு முன் தோலை உரிப்பதோ, கறியை துண்டுப் போடுவதோ கூடாது.
எது கொடுப்பது சிறந்ததது?
1) காயடிக்கப்பட்ட பிராணி, இதன் இறைச்சி நன்றாக இருக்கும்.
2) விலை உயர்ந்த பிராணி.
கர்பம்
இது குறையல்ல,கொடுக்கலாம். எனினும் பேரு காலத்திற்கு நெருக்கமாக உள்ள பிராணியை அறுப்பது மக்ரூஹ்.
மாறு கண், பைத்தியம் பிடித்த பிராணி கொடுக்கலாம்.
மலட்டு தன்மையுள்ள பிராணியும் கொடுக்கலாம்.
எது கொடுப்பது கூடாது?
1)மூக்கு அறுப்பட்டது,
2) புற்பூண்டு சாப்பிட முடியாத அளவு நாக்கு அறுப்பட்டது.
3) ஆட்டிற்கு ஒரு மடியில்
பால் வராமல் இறுத்தல், மாடு ,ஒட்டகம் இவைகளுக்கு இரு மடியில் பால் வராமல் இருப்பது.
4) மடியில் காயம், மடி துண்டிக்கப்பட்டு கன்று பால் குடிக்க முடியாத நிலையில் உள்ள பிராணி.
5) கண்கூடாக தெரியும் நோய் உள்ள பிராணி.
6) அரவாணியான பிராணி கூடாது. (ஷாபியி இடம் கூடும்)
7) குருடாக இருத்தல், ஒற்றை கண் உள்ளதாக இருத்தல், ஒரு கண்ணின் பார்வையில் மூன்றில் ஒரு பாகம் அல்லது அதைவிட அதிகமாக பார்வை குறைப்பட்டிருத்தல் கூடாது.
8) முக்கால் பகுதி அல்லது அதைவிட அதிகமாக வால் துண்டிக்கப்பட்டிருக்கும் பிராணி.
9) கால் ஊனமான பிராணி, மூன்று கால்களில் மட்டுமே நடக்கிறது என்றால் கூடாது. ஊனமுற்ற காலிலும் நடந்தால் கூடும்.
10) அறுக்கும் இடம் வரை வர முடியாத அளவுள்ள நோய் உள்ள பிராணி.
11) அனைத்து பல்லும் இல்லாமல் இருத்தல், அல்லது தீனியை மெல்ல முடியாத அளவு இருத்தல்.
12) பிராணிக்கு கொம்பு இல்லாவிட்டாலும், ஒடிந்து விட்டாலும் கொடுக்கலாம். மூளைக்கு பாதிப்பு சென்றிருந்தால் கூடாது.
பிராணியில் சாப்பிட கூடாதவை ஏழு
1) இரத்தம்
2) ஆண்குறி
3) பெண்குறி
4) விறைகள்
5) மூத்திரப்பை
6) பித்தப்பை
7) கழலைக் கட்டி (ஆட்டில் இருக்கும் கொழுப்பு கட்டிகள் )
குர்பானி இறைச்சி
குர்பானி பிராணியின் இறைச்சியை மூன்று பங்கு வைக்க வேண்டும்.
1) ஒரு பங்கு தனக்கும்
2) இன்னொரு பங்க சொந்த பந்தங்களுக்கும்
3) இன்னொரு பங்கு ஏழைகளுக்கும் ஆக
மூன்று பங்கு வைக்க வேண்டும்.
பிற மதத்தவர்களுக்கு கொடுப்பது குற்றமல்ல.
குர்பானி தோல்
1) குர்பானி தோலை பதனிட்டு தானே பயன்படுத்தலாம்.
2) ஏழைகளுக்கு தர்மம் செய்து விடலாம்.
3) விற்பது கூடாது, விற்பனை செய்து விட்டால் தர்மம் செய்து விட வேண்டும்.
4) மதரஸா மாணவர்களுக்கு கொடுக்கலாம்.
5) குர்பானி தோல் அல்லது அதன் கிரயத்தை எவ்வகையான கூலியாகவோ, அறுப்பு கூலியாகவோ
கொடுப்பது கூடாது.
6) மஸ்ஜித், மதரஸா கட்டிட நிர்வாகத்திற்கு செலவிட கூடாது.
7) டேக்ஸ், வரி போன்றதற்கு கொடுப்பது கூடாது.
கூட்டுக் குர்பானி
கூட்டுக் குர்பானியை விட தனியான குர்பானி கொடுப்பது தான் சிறந்தது.
1)மாடு, ஒட்டகத்தில் மட்டும் தான் கூட்டு சேர முடியும்.
2) 7 பேர் வரை கூட்டுக் குர்பானியில் இடம் பெறலாம், அதற்கு மேல் கூடாது.
3)கூட்டுக் குர்பானியில் அனைவருக்கும் குர்பானியின் ஒரே நிய்யத் இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. இபாதத் உடைய நிய்யத் இருக்கலாம்.
எனவே தான் கூட்டுக் குர்பானியில் ஒருவர் குர்பானிக்காக, மற்றொருவர் அகீகா விற்காக நிய்யத் வைத்திருந்தாலும் கூடும்.
ஆனால் கறிக்காக , இறைச்சிக்காக மட்டும் சேர்ந்தால் அனைவரின் குர்பானி கூடாது.
4) பிராணியை வாங்கும் முன் அனைவரும் கூட்டு சேர்வது சிறப்பு.
5) எந்த எண்ணமும் இல்லாமல் பிராணி வாங்கி, பின் கூட்டாக்கினாலும் கூடும்.
6) தனக்கே என்று வாங்கி பிறரை கூட்டாக்கினாலும் கூடும். ஆனால் வாங்கியவர் குர்பானி கடமையானவராக இருக்க வேண்டும்.
7) குர்பானி பிராணியை அறுத்த பின் கூட்டாகுதல் கூடாது.
8) யாராவது கூட்டில் இறந்து விட்டால் வாரிசுதாரர் அனுமதியளித்தால் கொடுக்கலாம்.
சில முக்கியமான சட்டங்கள்
1) குர்பானி கடமையல்லாதவர் கடன் வாங்கி கொடுத்தாலும் கூடும். ஆனால் கடனை திருப்பி கொடுப்பது சிரமம் என்றால் கூடாது.
2) குர்பானி பிராணி காணாமல் போனால், திருடப்பட்டால், மரணித்துவிட்டால், குர்பானி கடமை நீங்காது. வேறு பிராணியை வாங்கி அறுப்பது கடமையாகிவிடும்.
3) பிராணி வாங்கிய பின் அதில் ஏதேனும் குறை ஏற்பட்டால் , வசதியுள்ளவர்கள் வேறு பிராணியும், வசதியில்லாதவர் அதே பிராணியை கொடுத்தாலும் கூடி விடும்.
4)வசதி இருந்தும் குர்பானி கொடுக்காமல் விட்டு விட்டால் களா செய்ய வேண்டும், பிராணியின் விலை மதிப்பில் தர்மம் செய்ய வேண்டும். வசதி இருந்தும் யார் குர்பானி கொடுக்கவில்லையோ அவர் ஈதுல் அல்ஹா தொழுமிடத்திற்கு வர வேண்டாம் என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
5)இரவு நேரங்களிலும் குர்பானி கொடுக்கலாம்.
6) கூட்டுக் குர்பானி கறியை கண்டிப்பாக எடை போட்டுத்தான் பிரிக்க வேண்டும்.தோராயமாக பிரிக்க கூடாது.
7) பெருநாள் தொழுத பின் கறி சாப்பிடுவது சுன்னத்.
8) தனது மனைவி, குழந்தைகளுக்காக குர்பானி கொடுப்பது கணவன், தந்தை மீது கடமையல்ல.
9) பெண்கள் நிஸாபுடைய அளவு வசதி பெற்றிருந்தால் குர்பானி கொடுப்பது வாஜிபாகும்.
10)பருவமடையாதவர்களுக்காக குர்பானி கொடுப்பது கடமையல்ல.
11) குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் சேர்த்து ஒரு ஆட்டை கொடுத்தால் போதுமாகாது. மாறாக யார் மீது குர்பானி கடமையோ அவர்கள் அனைவர் மீதும் குர்பானி கொடுப்பது கட்டாயமாகும்.
ஈதுல் அல்ஹா பெருநாள்
நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். இரு பெரு நாட்களின் இரவுகளில் யார் நன்மையை நாடியவராக வணக்கம் புரிகிறாரோ அவரது இதயம் மனிதர்கள் இதயங்கள் மரணிக்கும் போது மரணிக்காது.(இப்னுமாஜ
நமக்கு மிகப்பெரும் எதிரியாக இருக்கிற நம்மை வழிகெடுப்பதையே இலட்சியமாகக் கொண்டிருக்கிற எந்நேரமும் எப்போதும் நம்மை ஈமானை விட்டும் இஸ்லாத்தை விட்டும் அல்லாஹ்வின் நினைவை விட்டும் தூரமாக்க வேண்டும் என்ற சிந்தனையிலேயே இருக்கிற, மனிதர்கள் அனைவரையும் நான் வழிகெடுத்து விடுவேன் என்று அல்லாஹ்விடத்தில் சவால் விட்டு வந்திருக்கிற இப்லீஸுக்கு மிகவும் மோசமான, இழிவான நாள் இந்த அரஃபாவுடைய நாள்.
உலகம் தோன்றிய நாள் முதற்கொண்டு முஸ்லிம்களின் பரம எதிரியான இப்லீஸ், என்றைக்கும் இல்லாத அளவுக்கு கதறிக் கதறி தேம்பித் தேம்பி அழுத நாட்களையும் சந்தர்ப்பங்களையும் இமாம்கள் பதிவு செய்திருக்கிறார்கள்.
عن مجاهد. قال: رن إبليس أربع رنات، حين لعن، وحين أهبط، وحين بعث النبي صلى الله عليه وسلم وحين أنزلت الحمد لله رب العالمين
இப்லீஸ் தன் வாழ்வில் நான்கு தடவை கதறி அழுதான். 1, அவன் அல்லாஹ்வினால் சபிக்கப்பட்ட போது. 2, இந்த உலகத்தில் தூக்கி எறியப்பட்ட போது. 3, நபி ﷺ அவர்கள் இந்த உலகிற்கு நபியாக அருளப்பட்ட போது. 4, ஃபாத்திஹா சூரா இறக்கப்பட்ட போது. (அல்பிதாயா வன் நிஹாயா)
إذا قرأ ابنُ آدمَ السَّجدةَ فسجدَ اعتزلَ الشَّيطانُ يبكي يقولُ يا ويلَه أُمرَ ابنُ آدمَ بالسُّجودِ فسجدَ فلَه الجنَّةُ وأمرتُ بالسُّجودِ فأبيتُ فليَ النَّارُ .
மனிதன் குர்ஆனில் ஸஜ்தாவுடைய வசனத்தை ஓதி ஸஜ்தா செய்தால், எனக்கு ஏற்பட்ட கைசேதமே! ஸஜ்தா செய்ய வேண்டும் என்று மனிதன் ஏவப்பட்டான். அவன் செய்து விட்டேன்.அதனால் அவனுக்கு சுவனம் கிடைத்து விடும்.நானும் ஏவப்பட்டேன்.ஆனால் மறுத்து விட்டேன்.அதனால் நான் நரகம் செல்வேனே! என்று ஷைத்தான் அழுது கொண்டே அங்கிருந்து தூரமாகி விடுகிறான். (முஸ்லிம் ; 81)
இப்படி இப்லீஸ் அவன் வாழ்க்கையில் அதிகம் கதறி அழுத நாட்கள் நிறைய உண்டு. அதில் இந்த அரபா நாளும் ஒன்று
مَا رُئِيَ الشَّيْطَانُ يَوْمًا، هُوَ فِيهِ أَصْغَرُ وَلَا أَدْحَرُ وَلَا أَحْقَرُ وَلَا أَغْيَظُ مِنْهُ فِي يَوْمِ عَرَفَةَ. وَمَا ذَاكَ إِلَّا لِمَا رَأَى مِنْ تَنَزُّلِ الرَّحْمَةِ، وَتَجَاوُزِ اللَّهِ عَنِ الذُّنُوبِ الْعِظَامِ، إِلَّا مَا أُرِيَ يَوْمَ بَدْرٍ
அல்லாஹ் தன் அருளை இறக்கி மனிதர்களின் பாவங்களை மன்னிப்பதைப் பார்த்ததின் காரணமாக அரஃபா நாளை விட வேறு எந்த நாளிலும் ஷைத்தான் மிகவும் சிறுமைப்பட்டவனாக தோற்றுப் போனவனாக இழிவடைந்தவனாக கோவமடைந்தவனாக பார்க்கப்படுவதில்லை (பைஹகி ; 81)
உலகத்தில் நாம் யாரையும் நமக்கு எதிரியாக நினைக்கக் கூடாது. ஈமானை உள்ளத்தில் தாங்கியிருக்கிற நம்மைப் பொறுத்த வரை, நமக்கு யாரும் எதிரியல்ல. ஆனால் நம் வாழ்வில் நமக்கு எதிரியாக பார்க்க வேண்டிய ஒரே படைப்பு ஷைத்தான் மட்டும் தான்.
ان الشيكان لكم عدو فاتخذوه عدوا
நிச்சயமாக ஷைத்தான் உங்களுக்கு எதிரி.அவனை நீங்கள் எதிரியாக ஆக்கிக் கொள்ளுங்கள். (அல்குர்ஆன் : 35 ; 6)
எதிரிக்கு ஒரு சந்தோஷம் என்றால், நாம் கவலப்பட வேண்டும்.அவனுக்கு ஒரு கவலை என்றால் நாம சந்தோஷப்பட வேண்டும். இதான் விரோதம் கொள்வதற்கான அர்த்தம். அரஃபா நாள் நம்முடைய விரோதியான ஷைத்தான் கவலைப்படுகின்ற நாளாகவும் அவன் கதறி அழுகின்ற நாளாகவும் அமைந்த விட்ட போது, நிச்சயம் அது நமக்கு மகிழ்ச்சிக்குரிய நாளாகத்தான் இருக்க வேண்டும். அது தான், அவனை நாம் நமக்கு விரோதியாக எடுத்துக் கொண்டதற்காக அர்த்தம்.
எனவே,முஸ்லிம்களாகிய நாம் மகிழ்ச்சியாக ஆனத்தப் பெருவெள்ளத்தில் மூழ்க வேண்டிய ஒரு மகத்தான நாள் இந்த அரஃபா நாள்.
மட்டுமல்ல இஸ்லாத்திற்கு ஒரு நிறைவும் ஒரு பூரணத்துவமும் கிடைத்த நாள் இந்த அரஃபா நாள்.
அரஃபாவின் நோன்பு,
துல்ஹஜ் பிறை ஒன்பதாம் நாளின் நோன்பு. இது சுன்னத்தான நோன்பாகும்.
அரஃபா நோன்பு அந்நாளின் முந்தைய ஆண்டு, பிந்தய ஆண்டு ஆக இரு ஆண்டின் பாவங்களுக்கும் பரிகாரமாகும் என ஆதரவு வைக்கிறேன், என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். நூல் :முஸ்லிம்.
جَاءَ رَجُلٌ مِنَ اليَهُودِ إلى عُمَرَ، فَقالَ: يا أَمِيرَ المُؤْمِنِينَ آيَةٌ في كِتَابِكُمْ تَقْرَؤُونَهَا، لو عَلَيْنَا نَزَلَتْ، مَعْشَرَ اليَهُودِ، لَاتَّخَذْنَا ذلكَ اليومَ عِيدًا، قالَ: وَأَيُّ آيَةٍ؟ قالَ: {الْيَومَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ، وَأَتْمَمْتُ علَيْكُم نِعْمَتِي، وَرَضِيتُ لَكُمُ الإسْلَامَ دِينًا}، فَقالَ عُمَرُ: إنِّي لأَعْلَمُ اليومَ الذي نَزَلَتْ فِيهِ، وَالْمَكانَ الذي نَزَلَتْ فِيهِ، نَزَلَتْ علَى رَسولِ اللهِ صَلَّى اللَّهُ عليه وسلَّمَ بعَرَفَاتٍ في يَومِ جُمُعَةٍ
ஒரு யூதர் ஹள்ரத் உமர் (ரலி) அவர்களிடத்தில் வந்து, உங்கள் வேதத்தில் நீங்கள் ஓதக்கூடிய வசனம் ஒன்று இருக்கிறது. யூதர்களாகிய எங்கள் மீது மட்டும் அது இறக்கப்பட்டிருந்தால், இறங்கிய அந்த நாளை நாங்கள் பெருநாளாக ஆக்கி இருப்போம் என்று கூறினார். அது எந்த வசனம் என்று கேட்டார்கள். அதற்கு அந்த யூதர், “உங்களுக்கு உங்கள் மார்க்கத்தை நான் முழுமைப் படுத்தி விட்டேன்” என்ற (5;3) வசனத்தை சுட்டிக் காட்டினார். அப்போது உமர் (ரலி) அவர்கள், அந்த வசனம் எந்த நாளில் இறங்கியது. எந்த இடத்தில் இறங்கியது என்று எனக்குத் தெரியும். ஜும்ஆவுடைய நாளில் அஃரபாவுடைய தினத்தில் நபி ﷺ அவர்கள் மீது அருளப்பட்ட வசனம் தான் அது என்று கூறினார்கள். (முஸ்லிம் ; 3017)
இப்படி பல வகையிலும் உயர்வான ஒரு நாளை இன்ஷா அல்லாஹ் நாம் எதிர்வரக்கூடிய புதன் கிழமை சந்திக்கயிருக்கிறோம்.
பெருநாளைக்கு அடுத்து வருகின்ற மூன்று தினங்களுக்கு அய்யாமுத் தஷ்ரீக் என்று சொல்லப்படும்.அரஃபா மற்றும் பெருநாளைப் போன்றே இந்த நாட்களும் மகிழ்ச்சியான நாட்கள், மகிழ்ச்சியை வெளிப்படுத்த வேண்டிய நாட்கள், சந்தோஷத்தை வெளிப்படுத்த வேண்டிய நாட்கள், ஒருவொருக் கொருவர் மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும் குதூகலத்தையும் பரிமாரிக் கொள்ள வேண்டிய மகத்தான நாட்கள். அய்யாமுத்தஷ்ரீக் என்று சொல்லப்படுகிற பெருநாளைக்கு அடுத்து வருகிற இந்த மூன்று நாட்களும் பெருநாளைக்கு ஒப்பாக பெருநாளைக்கு நிகராக இருக்கிற காரணத்தினால் தான் பெருநாளைப் போன்றே இந்த மூன்று தினங்களிலும் நோன்பு வைப்பதை மார்க்கம் தடை செய்திருக்கிறது.இந்த நாட்களைக் குறித்து நபி ﷺ அவர்கள் சொல்வார்கள்.
أيام التشريق أيام أكل وشرب
அய்யாமுத் தஷ்ரீக்குடைய நாட்கள் உண்ணக்கூடிய குடிக்கக்கூடிய நாட்கள். (அல்முஃஜமுல் அவ்ஸத் ; 7/188)
இந்த மகத்தான நாட்களில் குர்பானிக்கு அடுத்து நாம் செய்ய வேண்டிய மிக முக்கியமான அமல்களில் ஒன்று தக்பீர்.
ما من أيَّامٍ أفضلُ عند اللهِ ولا العملُ فيهنَّ أحبُّ إلى اللهِ عزَّ وجلَّ من هذه الأيَّامِ يعني من العشرِ فأكثِروا فيهنَّ من التَّهليلِ والتَّكبير
துல்ஹஜ் மாதத்தின் முதல் 10 நாட்களை விட அல்லாஹ்விடம் மிகச்சிறந்த நாட்கள் வேறெதுவும் இல்லை.இந்த நாட்களில் செய்கின்ற அமலை விட அல்லாஹ்விற்கு பிடித்தமான வேறெந்த அமலும் இல்லை.எனவே இந்த நாட்களில் கலிமாவையும் தக்பீரையும் அதிகப்படுத்திக் கொள்ளுங்கள். (அத்தர்கீப் வத்தர்ஹீப் ; 2 /191)
தக்பீருத் தஷ்ரீக்கின் பின்னனி :-
இப்றாஹீம் (அலை) தனது மகனார் இஸ்மாயீல் (அலை) அவர்களை அல்லாஹ்வின் கட்டளைப்படி அறுக்க நாடியபோது சுவர்க்கத்திலிருந்து பகரத்தை (ஆட்டை) ஜிப்ரயீல் (அலை) கொண்டு வந்தார்கள். இப்றாஹீம் (அலை) தனது மகன் இஸ்மாயீல் (அலை)யை அறுத்து விடுவார்களோ என்று பயந்தபோது ஜிப்ரயீல் (அலை) அவர்கள் நாவிலிருந்து “அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்” என்ற வார்த்தை வெளியானது. ஜிப்ரயீல் (அலை)யை பார்த்த உடன் இப்றாஹீம் (அலை) ‘லாஇலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர்’ என்றார்கள். தனக்கு பகரம் (ஆடு) கிடைத்துவிட்டது என்று தெரியவந்த உடன் இஸ்மாயில் (அலை) ‘அல்லாஹு அக்பர் வலில்லாஹில் ஹம்து’ என்றார்கள்.
(ரத்துல் முஹ்தார் பாகம் 2, பக்கம் 178, தஹ்தாவீ)
இப்படித்தான் தக்பீர் உருவானது
இந்த நாட்களில் தொழுகிற ஒவ்வொரு தொழுகைக்குப் பிறகும் தக்பீர் சொல்வது வாஜிபு என்று மார்க்க அறிஞர்கள் சொல்வார்கள்.இந்த நாட்களில் ஒருவர் ஜமாஅத்தாக தொழுதாலும் சரி, தனியாக தொழுதாலும் சரி, அவர் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் தக்பீர் சொல்ல வேண்டும்.மட்டுமல்ல இந்த நாட்களில் தொழாமல் விட்டுவிட்ட ஒரு தொழுகையை பின்னால் ஒருவர் களா செய்தால் அந்த தொழுகைக்குப் பிறகும் தக்பீர் சொல்ல வேண்டும்.மற்ற நேரங்களில் ஜும்ஆவின் குத்பாக்கள் அல்ஹம்து லில்லாஹ் என்று சொல்லி தொடங்கப்படும்.ஆனால் பெருநாள் தொழுகையின் குத்பாக்களை தக்பீர் சொல்லித்தான் தொடங்க வேண்டும். இந்த அளவுக்கு இந்த நாட்களில் தக்பீர் சொல்வதை மார்க்கம் வலியுறுத்திச் சொல்கிறது. எனவே இந்த நாட்கள் தக்பீருக்குரிய நாட்கள்,தக்பீரை முழங்க வேண்டிய நாட்கள், அல்லாஹ்வின் மகத்துவத்தை உரக்கச் சொல்லும் நாட்கள்.
எல்லா நாட்களிலும் நாம் தக்பீர் சொல்லத்தான் செய்கிறோம்,தக்பீரை முழங்கத்தான் செய்கிறோம்.பாங்கிலே தக்பீர் இருக்கிறது, தொழுகையில் தக்பீர் இருக்கிறது,நாம் ஓதக்கூடிய திக்ருகளில் தக்பீர் இருக்கிறது.எல்லா நாட்களும் நாம் தக்பீரோடு இணைந்து தான் இருக்கிறோம்.இருந்தாலும் மற்ற நாட்களில் இல்லாத அளவு இந்த பெருநாள் தினங்களில் மட்டும் அதிகமாக தக்பீர் சொல்ல வேண்டும் என்று வலியுறுத்தி சொல்லப்பட்ட காரணம் என்ன? பெருநாளுக்கும் இந்த தக்பீருக்கும் எந்த தொடர்பு? என்ற கேள்வி, என்ற ஐயம் நம் மனதில் இருக்கிறது.அதற்கான விளக்கத்தைத் தேடுகிற போது மார்க்க அறிஞர்கள் அழகான விளக்கத்தைத் தருகிறார்கள்.
பெருநாள் என்பது மகிழ்ச்சியான தினம் பெருநாள் என்றாலே ஒரு விதமான மகிழ்ச்சியும் சந்தோஷமும் குதூகலமும் நம்மிடம் ஒட்டிக் கொள்ளும். வாழ்க்கையில் எத்தனை கவலைகள் இருந்தாலும் எத்தனை துன்பங்கள் இருந்தாலும் அந்த அத்தனை கவலைகளும் அத்தனை துன்பங்களும் மறந்து நம்மை குதூகலப்படுத்துகிற தினங்கள் பெருநாள் தினங்கள்.
பொதுவாக மனிதன் தன் வாழ்வில் மகிழ்ச்சியான தருணங்களையும் சந்தோஷமான தருணங்களையும் சந்திக்கிற போது படைத்த இறைவனை மறந்து விடுவான்.தன் மனைவி மக்களோடு தன் குடும்பத்தோடு தன் நண்பர்களோடு மகிழ்ச்சியாக இருக்கும் நேரங்களில் இறைவன் நினைவுக்கு வருவதில்லை. குர்ஆனில் இந்த கருத்தை சொல்லும் வசனங்கள் நிறைய உண்டு.
واذا مس الانسان الضر دعانا لجنبه او قاعدا او قائما فلما كشفنا عنه ضره مر كان لم يدعنا الي ضر مسه
மனிதனை ஒரு துன்பம் தொட்டு விட்டால் படுத்துக் கொண்டு உட்கார்ந்து கொண்டு நின்று கொண்டு (அதை நீக்கும்படி) நம்மிடம் பிரார்த்திக்கிறான்.ஆனால் அவனை விட்டும் அவன் துன்பத்தை நீக்கி விட்டால் அவன் தனக்கு ஏற்பட்ட துன்பத்தை நீக்கும்படி நம்மை அழைக்காதது போலவே (அலட்சியமாக) சென்று விடுகிறான். (அல்குர்ஆன் : 10;12)
நமக்கு வரும் மகிழ்ச்சியான நிமிடங்கள் இறைவன் நினைவை நம்மிலிருந்து தூரமாக்கி விடும். கஷ்டம் வரும் போது அல்லாஹ் அல்லாஹ் என்று அழைப்போம், கஷ்டம் தூரமாகி விட்டால் அல்லாஹ்வை மறந்து விடுவோம். குடும்பத்தில் ஏதாவது பிரச்சனை என்றால் அல்லாஹ்வை நினைப்போம், கஷ்டம் நீங்கி விட்டால் அல்லாஹ்வை மறந்து விடுவோம். வியாபாரத்தில் நஷ்டம் என்றால் அல்லாஹ்வை நினைப்போம், வியாபாரம் நன்றாக நடக்கும் போது அல்லாஹ்வை மறந்து விடுவோம், நோய் வரும் போது அல்லாஹ் அல்லாஹ் என்று புலம்புவோம், நோய் நீங்கி விட்டால் அல்லாஹ்வை மறந்து விடுவோம். இது மனித இயல்பு.
ஒரு கதை கூட அழகாகச் சொல்வார்கள்.ஒரு கட்டிட எஞ்சினியர் கட்டிடத்தின் 7 வது மாடியில் நிற்கிறார்,அவருடைய உதவியாளர் அதில் 5 வது மாடியில் நின்று கொண்டிருந்தார்.மேலேயிருந்து அவர் இவரை அழைத்தார்.இவர் பார்க்க வில்லை. ஒரு 10 ரூபாயை எடுத்து அவருக்கு பக்கத்தில் எறிந்தார்.அவர், அதை எடுத்து வைத்துக் கொண்டார்.மேலே பார்க்க வில்லை,மறுபடியும் 100 ரூபாயை கீழே போட்டார்.அதையும் எடுத்து வைத்துக் கொண்டார்.மேலே பார்க்க வில்லை. அதற்குப் பிறகு 500 ரூபாயை போட்டார்.அப்போதும் எடுத்து வைத்துக் கொண்டாரே தவிர மேலே பார்க்க வில்லை.கடைசியில் ஒரு சிறிய கல்லை எடுத்து அவர் தலையில் போட்டார்.அப்போது தான் மேலே பார்த்தார்.
இப்படித்தான் மனிதன். கஷ்டம் வரும் போது தான் மேல பார்ப்பான், நல்லா இருக்கும் போது அவன் பார்வை மேலே போகாது.
மகிழ்ச்சியான நேரங்களில் சந்தோஷமான தருணங்களில் வசதியான காலங்களில் படைத்தவனை மறப்பது மனித இயல்பு.ஆனால் ஒரு முஃமின் எப்படி இருக்க வேண்டுமென்றால் எல்லா காலத்திலும் எல்லா நேரத்திலும் எல்லா சூழ்நிலையிலும் இறை நினைவோடு இருக்க வேண்டும்.இறை நினைவு தான் ஈமானுக்கான அடையாளம். ஒருவரிடத்தில் இருக்கிற இறைநினைவை வைத்து அவரது ஈமானை அளந்து விடலாம். காரணம் அல்லாஹ் குர்ஆனில் முனாஃபிக்களின் அடையாளங்களைப்பற்றி சொல்லும் ஒரு இடத்தில்
إِنَّ الْمُنَافِقِينَ يُخَادِعُونَ اللَّهَ وَهُوَ خَادِعُهُمْ وَإِذَا قَامُوا إِلَى الصَّلاةِ قَامُوا كُسَالَى يُرَاءُونَ النَّاسَ وَلا يَذْكُرُونَ اللَّهَ إِلا قَلِيلا
முனாஃபிக்கள் அல்லாஹ்வை குறைவாகத்தான் நினைவு கூறுவார்கள். (அல்குர்ஆன் : 4 ; 142)
لقِيني أبو بكرٍ فقال : كيف أنت ؟ يا حنظلةُ ! قال قلت : نافق حنظلةُ . قال : سبحان اللهِ ! ما تقول ؟ قال قلتُ : نكون عند رسولِ اللهِ صلَّى اللهُ عليه وسلَّمَ . يُذكِّرنا بالنار والجنةِ . حتى كأنا رأيَ عَينٍ . فإذا خرجنا من عند رسولِ اللهِ صلَّى اللهُ عليه وسلَّمَ ، عافَسْنا الأزواجَ والأولادَ والضَّيعاتِ . فنسِينا كثيرًا . قال أبو بكرٍ : فواللهِ ! إنا لنلقى مثل هذا . فانطلقتُ أنا وأبو بكرٍ ، حتى دخلْنا على رسولِ اللهِ صلَّى اللهُ عليه وسلَّمَ . قلتُ : نافق حنظلةُ . يا رسولَ اللهِ ! فقال رسولُ اللهِ صلَّى اللهُ عليه وسلَّمَ " وما ذاك ؟ " قلتُ : يا رسولَ اللهِ ! نكون عندك . تُذكِّرُنا بالنارِ والجنةِ . حتى كأنا رأىُ عَينٍ . فإذا خرجْنا من عندِك ، عافَسْنا الأزواجَ والأولادَ والضَّيعاتِ . نسينا كثيرًا . فقال رسولُ اللهِ صلَّى اللهُ عليه وسلَّمَ " والذي نفسي بيده ! إن لو تدومون على ما تكونون عندي ، وفي الذِّكر ، لصافحتْكم الملائكةُ على فُرشِكم وفي طرقِكم . ولكن ، يا حنظلةُ ! ساعةٌ وساعةٌ " ثلاثَ مراتٍ . .
ஹன்ளலா (ரலி) அவர்கள் அவர்கள் கூறுகிறார்கள்: அபூபக்ர் (ரலி) அவர்கள் என்னைச் சந்தித்து, ''ஹன்ளலாவே! நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?'' என்று கேட்டார்.அதற்கு நான், ''ஹன்ளலா நயவஞ்சகராக ஆகிவிட்டார்'' என்று கூறினேன். அதற்கு அவர்கள், ''அல்லாஹ் தூய்மையானவன். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?'' என்று கேட்டார்கள்.அதற்கு நான், ''நாம் அல்லாஹ்வின் தூதர் நபி ﷺ அவர்களிடம் இருக்கும் போது அவர்கள் நமக்குச் சொர்க்கத்தையும் நரகத்தையும் நினைவூட்டுகிறார்கள். எந்த அளவிற்கென்றால் கண்கூடாக (அவற்றை) நாம் காண்வதைப் போல் (மார்க்க சிந்தனையில் இருக்கிறோம்). அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்களிடமிருந்து பிரிந்து வந்துவிட்டால் மனைவிமார்களுடனும் குழந்தைகளுடனும் விளையாடுகிறோம். வியாபாரம் போன்ற காரியங்களில் ஈடுபடுகிறோம். அதிகமான (மார்க்க) விஷயங்களை மறந்து விடுகிறோம்'' என்று கூறினேன். அபூபக்கர் (ரலி) அவர்கள், ''அல்லாஹ்வின் மீது சத்தியமாக நாமும் இப்படித் தான் இருக்கிறோம்'' என்று கூறினார்கள். ஆகையால் நானும் அபூபக்கர் (ரலி) அவர்களும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தோம்.
நான், ''அல்லாஹ்வின் தூதரே! ஹன்ளலா நயவஞ்சகனாகி விட்டான்'' என்று கூறினேன். அதற்கு அவர்கள், ''என்ன ஆயிற்று?'' என்று கேட்டார்கள். நான், ''அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் எங்களுக்குச் சொர்க்கத்தையும் நரகத்தையும் நினைவூட்டும் போது கண்கூடாக (சொர்க்கம் நரகத்தை) காணுவதைப் போன்ற நிலையில் உங்களிடம் இருக்கிறோம். ஆனால் உங்களிடமிருந்து பிரிந்து சென்று விட்டால் மனைவி மக்களுடன் விளையாட ஆரம்பித்து விடுகிறோம்.
வியாபாரம் போன்ற காரியங்களில் ஈடுபடுகிறோம். அதிகமான (மார்க்க) விஷயங்களை மறந்து விடுகிறோம்'' என்று கூறினேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ''எனது உயிர் எவனது கைவசம் உள்ளதோ அவன் மீது சத்தியமாக என்னிடம் நீங்கள் இருப்பதைப் போன்றும் இறை தியானத்தில் எப்போதும் திளைத்திருந்தால் வானவர்கள் (போட்டி போட்டுக்கொண்டு) நீங்கள் உறங்கச் செல்லும் இடங்களிலும் செல்லும் வழிகளிலும் உங்களிடம் கை கொடுப்பார்கள்.
எனவே ஹன்ளலாவே! சிறிது நேரம் (மார்க்க விஷயங்களில் கவனத்தைச் செலுத்துங்கள்) சிறிது நேரம் (மனைவி மக்களுடன் மகிழ்ச்சியாக இருங்கள்)'' என்று மூன்று முறை கூறினார்கள். (முஸ்லிம் ; 2750)
மனித வாழ்க்கையில் இரண்டு புறங்களும் உண்டு,இரண்டு சூழ்நிலைகளும் உண்டு. பள்ளியில் இருக்கும் போது மறுமை சிந்தனையோடு இருப்பதும் வீட்டிக்கு போன பிறகு அந்த சிந்தனையில் கொஞ்சம் மாற்றம் வருவதும் எல்லாருக்கும் இருக்கிற நிலை.ஆனால் அதைக்கூட ஸஹாபாக்கள் தங்களிடம் நயவஞ்சகத்தன்மை வந்து விட்டது என்று கருதினார்கள் என்றால், பள்ளிக்குள் இருந்து கொண்டே உலகத்தை சிந்தித்துக் கொண்டிருக்கிற நம்மை என்னவென்று சொல்வது?
பெருநாள் என்பது மகிழ்ச்சியைத் தரும் நாள்,சந்தோஷத்தைத் தரும் நாள்.அந்த மகிழ்ச்சியிலும் சந்தோஷத்திலும் படைத்தவனை மறந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் பெருநாட்களில் தக்பீர் சொல்ல வேண்டும் என்று மார்க்கம் சொல்லியிருக்கிறது.
தக்பீர் தஷ்ரீக்
பிறை ஒன்பதாம் நாள் ஃபஜ்ரு தொழுகையிலிருந்து பிறை 13-ம் நாள் அஸர் தொழுகை வரை (23 வக்துகள்) தொழுகைக்கு பின் ஒரு முறை தக்பீர் கூறுவது வாஜிபாகும். மூன்று முறை சொல்வது சுன்னத்.
தக்பீர்
அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர், லாயிலாஹ இல்லல்லாஹு அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர் வலில்லாஹில் ஹம்து.
நம் வாழ்வில் எந்த நேரமும் அல்லாஹ்வின் நினைவில்லாமல் படைத்தவனின் நினைவில்லாமல் கழிந்து விடக்கூடாது.இறை சிந்தனையோடு இறை நினைவோடு நம் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும்.அல்லாஹ்வை நாம் எப்போது நினைக்கிறோமோ அப்போது அல்லாஹ் நம்மோடு இருக்கிறான்.அல்லாஹ்வை மறக்கிற போது அல்லாஹ்வும் நம்மை விட்டு தூரமாகி விடுகிறான்,
قال موسى: يا ربّ، أقريب أنت فأنا جيك أم بعيد فأُناديك؟ فإنّي أُحسّ صوتك ولا أراك، فأين أنت؟ فقال الله انا خلفك وامامك وعن يمينك وعن شمالك يا موسي انا جليس عبدي حين يذكرني وانا معه اذا دعاني
இறைவா! நீ எங்கே இருக்கிறாய்? பக்கத்திலா? தூரத்திலா? பக்கத்தில் இருந்தால் உன்னை முன்னோக்கி பேசுவேன்.நீ தூரமாக இருந்தால் உன்னை அழைப்பேன். உன் சப்தத்தை உணர்கிறேன்.ஆனால் உன்னை பார்க்க முடிய வில்லை. நீ எங்கே இருக்கிறாய்? என்று மூஸா அலை அவர்கள் கேட்டார்கள்.அதற்கு அல்லாஹ், நான் உனக்கு முன்னாலும் பின்னாலும் வலப்புறத்திலும் இடப்புறத்திலும் இருக்கிறேன். மூஸாவே! என்னை என் அடியான் நினைக்கிற போது அவனுக்கு பக்கத்தில் அமர்ந்திருக்கிறேன்.என்னை அவன் அழைக்கிற போது அவனோடு இருக்கிறேன் என்று கூறினான். (கன்ஜுல் உம்மால் : பக்கம் ; 433)
நபி ﷺ அவர்கள் அல்லாஹ்விடம் கேட்டு நம்மை கேட்கும்படி சொன்ன துஆக்களில் ஒன்று ;
اللهم اعني علي ذكرك وشكرك وحسن عبادتك
உன்னை நினைப்பதின் மீதும் உனக்கு நன்றி செலுத்துவதின் மீதும் உன்னை அழகான முறையில் வணங்குவதின் மீதும் எனக்கு உதவி புரிவாயாக! (அபூதாவூத் ; 1522)
சொர்க்கவாசிகளுக்கு எந்தக் கவலையும் இருக்காது.எந்த சிந்தனையும் இருக்காது.எந்த கைசேதமும் இருக்காது என்பது குர்ஆன் பதிவு செய்திருக்கும் செய்தி.ஆனால் அந்த சொர்க்கவாசிகளுக்கும் ஒரே ஒரு கவலை இருக்கும் என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.
ليس يتحسَّرُ أهلُ الجنَّةِ إلَّا على ساعةٍ مرَّتْ بهم لم يذكُروا اللهَ تعالَى فيها
அல்லாஹ்வை நினைக்காமல் கழித்த நேரத்தை தவிர வேறு எதன் மீதும் சுவனவாசிகள் கைசேதப்பட மாட்டார்கள். (அத்தர்கீப் வத்தர்ஹீப் ; 2/331)
எனவே அல்லாஹ் இந்த நாட்களில் மட்டுமில்லாமல், எல்லா நாட்களிலும் அல்லாஹ்வை நினைவு கூற வேண்டும்.அல்லாஹ் என்றும் அவனை நினைத்து வாழும் நல்லடியார்களில் நம்மை சேர்த்தருள்வானாக