நன்றியுணர்வு 25-08-2022
ஸாலிஹான இஸ்லாமியரிடம் இருக்க வேண்டிய பண்புகளில் நான்காவது :-
நன்றியுணர்வு
நன்றியுணர்வை வெளிப்படுத்துவோம்!!
நன்றியுணர்வை வெளிப்படுத்துகிற பண்பும், குணமும் அது இறைவனின் நல்லடியார்களின் சிறப்பான இயல்புகளாகும்.
வானவர்களின் வணக்கமாகும். நபிமார்களின் அடையாளமாகும். ஒட்டு மொத்தத்தில் அது சுவனவாசிகளின் தன்மையாகும்.
நன்றியுணர்வோடு நடக்கின்ற ஒரு மனிதன் இப் பூமியில் மதிக்கப்படுகின்றான், பாராட்டப்படுகின்றான், வாழ்த்துக்கள் பலதிற்கு சொந்தக்காரனாகின்றான்.
நன்றியுணர்வு இல்லாத ஒரு மனிதன் அவன் வையகத்தில் உள்ளவரை இகழப்படுகின்றான், மக்களால் வெறுக்கப்படுகின்றான், சமூகத்தால் புறக்கணிக்கப்படுகின்றான்.
காரணம் ஆறறிவு இல்லாத மிருகங்களும், பறவைகளும் கூட அந்த இயல்பை வெளிப்படுத்துவதால்…
இந்த நன்றியுணர்வை படைத்த இறைவனிடத்திலும், சக மனிதர்களிடத்திலும் வெளிப்படுத்த வேண்டும் என இஸ்லாம் வலியுறுத்துகின்றது.
அது தான் ஒரு மனிதனின் ஈருலக வாழ்வின் உயர்வுக்கு வழி வகுக்கும், எண்ணற்ற அருட்பேறுகளை அடையச் செய்திடும், என இஸ்லாம் உயர்த்திக் கூறுகின்றது.
படைத்தோனுக்கு நன்றி செலுத்துதல்.
படைத்தோனுக்கு செலுத்தும் நன்றி என்பது நம்முடைய நாவு மற்றும் உள்ளம், உடல் உறுப்புக்கள் ஆகியவைகளுடன் தொடர்புடைய ஓர் இபாதத் வணக்கமாகும்.
உள்ளத்தின் மூலம் வெளிப்படுத்த வேண்டிய நன்றி என்பது “நமக்கு இவ்வுலகில் வழங்கப்பட்டுள்ள எல்லாவகையான சிறப்புக்களும், அருட்கொடைகளும் (அதை நாம் நம்முடைய முயற்சியின் மூலமாகவோ, அல்லது உழைப்பின் மூலமாகவோ பெற்றிருந்தாலும் சரியே!) அல்லாஹ்வினால் மட்டும் தான் வழங்கப்பட்டுள்ளது என உளப்பூர்வமாக ஒத்துக்கொள்ள வேண்டும்.
1.நாவினால் நன்றி செலுத்துவது
அல் ஃபகீஹ் அபுல் லைஸ் அஸ் ஸமர்கந்தீ {ரஹ்} அவர்கள் கூறுகின்றார்கள்: நன்றியுணர்வோடு வாழ்வது என்பது ஒரு வணக்கமாகும். அல்லாஹ்வின் தூதர்களான நபிமார்கள், வானவர்கள், முன்னோர்களான நல்லோர்கள், பூமியில் வாழும் நல்லடியார்கள், சுவனவாசிகள் என இவர்களின் சிறப்பியல்புகளாக இப்பண்பு இருக்கின்றது என்று அல்லாஹ், அல்குர்ஆனின் பல இடங்களில் பேசுகின்றான்.
இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தங்களுக்கு வயதான காலத்தில் வழங்கப்பட்ட குழந்தைப் பேற்றை நினைத்து நெகிழ்ந்து “ முதுமைக் காலத்தில் இஸ்மாயீல், இஸ்ஹாக் ஆகிய மக்கள் செல்வங்களை வழங்கிய அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும்! திண்ணமாக! என்னுடைய இறைவன் பிரார்த்தனையைச் செவியேற்பவனாவான்.” (அல்குர்ஆன்:14:39) என பிரார்த்தித்து அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தினார்கள்.
இவ்வுலகில் பெரும் பேற்றை பெற்றவர்களான இறைத்தூதர்களான தூவூத் அலைஹிஸ்ஸலாம், ஸுலைமான் அலைஹிஸ்ஸலாம் ஆகியோர் தங்களின் உயர்வான நிலையை நினைத்து மனம் மகிழ்ந்து “அல்லாஹ்வுக்கே நன்றி உரித்தாகட்டும்! அவனே, நம்பிக்கை கொண்ட தன் அடியார்கள் பலரை விட, எங்களுக்கு ஏராளமான சிறப்பை வழங்கினான்.” (அல்குர்ஆன்:27:15) என உருகிப் பிரார்த்தித்து அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தினார்கள்.
இறைத்தூதர் நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களையும், அவர்களின் சமூகத்தையும் பெறும் வெள்ளத்தில் இருந்து காப்பாற்றி கப்பலில் ஏறிய பிறகு அல்லாஹ் கூறினானாம் “ நீரும் உம்முடனிருப்பவர்களும் கப்பலில் ஏறிக்கொண்டதும் கூறுவீர்களாக: “கொடுமைபுரியும் மக்களிடமிருந்து எங்களை விடுவித்த அல்லாஹ்வுக்கே அனைத்து நன்றியும்!” (அல்குர்ஆன்:23:28)
சுவனவாசிகள் சுவனத்தில் நுழைந்ததும் இப்படிக் கூறுவார்களாம்: “அல்லாஹ்விற்கே அனைத்துப் புகழும்! அவன் எங்களிடம் தன் வாக்குறுதியை உண்மை படுத்திவிட்டான். மேலும், எங்களைப் பூமிக்கு வாரிசுகளாக்கினான். இனி நாங்கள் சுவனத்தில் விரும்புகின்ற இடத்தில் தங்கிக் கொள்ளலாம். ஆஹா! செயல்படக்கூடியவர்களுக்குத் தான் கூலி எவ்வளவு உயர்வானதாய் இருக்கின்றது!” (அல்குர்ஆன்:39:74)
மற்றோர் இடத்தில்..
சுவனத்து இன்பங்களை அனுபவிக்கும் போது இப்படிக் கூறுவார்களாம்: “நம்மை விட்டும் கவலையை அகற்றிய அல்லாஹ்விற்கே அனைத்துப் புகழும்! திண்ணமாக, நம்முடைய இறைவன் பெரும் மன்னிப்பாளனாகவும், உரிய கண்ணியத்தை வழங்குபவனாகவும் இருக்கின்றான். அவனே தன்னுடைய அருளால் நம்மை நிலையான இருப்பிடத்தில் தங்க வைத்துள்ளான். இங்கு எவ்விதச் சிரமமும் நமக்கு நேருவதில்லை. மேலும், எவ்விதச் சோர்வும் ஏற்படுவதில்லை.” (அல்குர்ஆன்:35:34,35)
மற்றோர் இடத்தில்..
சுவனத்து இன்பங்களை கண்ணாரக் கண்டதும் இப்படிக்கூறுவார்களாம்: “எங்களுக்கு இங்கே வருவதற்கான வழியினைக் காட்டிய அல்லாஹ்வுகே எல்லாப்புகழும்! அல்லாஹ் எங்களை நேர்வழியில் செலுத்திராவிட்டால், நாங்கள் நேர்வழியை ஒரு போதும் அடைந்திருக்க மாட்டோம். உண்மையில், எங்கள் இறைவனால் அனுப்பப்பட்ட தூதர்கள் சத்தியத்தையே கொண்டு வந்தார்கள்.” (அந்நேரம் அவர்களை அழைத்துக்) கூறப்படும்: “நீங்கள் வாரிசுகளாக்கப்பட்ட சுவனம் இது தான். நீங்கள் செய்து வந்த செயல்களுக்கான சிறந்த பகரமாக இது உங்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்றது.” (அல்குர்ஆன்:7:43)
(நூல்:தம்பீஹுல் ஃகாஃபிலீன், பாகம்:2, பக்கம்:350,351)
2.உள்ளத்தால் நன்றியுணர்வை வெளிப்படுத்துவது
இன்றைக்கு எந்த ஒரு மனிதனிடத்தில் அவனுடைய வாழ்வின் முன்னேற்றத்தைக் குறித்து கேட்டாலும், அது என்னுடைய முயற்சியினால் வந்தது. என்னுடைய அறிவாற்றலால் வந்தது. என்னுடைய உழைப்பால் வந்தது எனக்கூறுவதை பார்க்கின்றோம்.
ஆனால், உண்மையில் இது நன்றி மறந்த பேச்சாகும். அல்லாஹ்வை மறந்த உணர்வின் வெளிப்பாடாகும்.
ஏனெனில், அல்லாஹ் கூறுகின்றான்: “மேலும், உங்களுக்கு கிடைத்துள்ள அருட்கொடைகள் அனைத்தும் அல்லாஹ்விடமிருந்து வந்தவைதாம்.
பின்னர், உங்களுக்கு ஏதேனும் கஷ்டகாலம் வந்து விடுமாயின் நீங்களே உங்கள் முறையீடுகளை எடுத்துக் கொண்டு அவனிடமே ஓடுகின்றீர்கள்.
பிறகு அந்த கஷ்ட காலத்தை உங்களை விட்டும் அல்லாஹ் நீக்கிவிட்டால், உடனே உங்களில் சிலர் (அதை நீக்கியதற்காக செலுத்தும் நன்றியில்) தம் இறைவனுடன் மற்றவர்களையும் இணையாக்கத் தொடங்குகின்றனர்; அல்லாஹ் அவர்களுக்குச் செய்த பேருதவிக்கு நன்றி கொல்வதற்காக! சரி, நன்கு அனுபவித்துக் கொள்ளுங்கள்! விரைவில் அதன் விளைவை அறிந்து கொள்வீர்கள். (அல்குர்ஆன்:16:53-55)
இறைத்தூதர் தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்விடம் கேட்டார்களாம்: “அல்லாஹ்வே நீ எனக்கு ஏராளமாக உன் அருட்கொடைகளை வழங்கியிருக்கின்றாய்! உனக்கு எப்படி நான் நன்றி செலுத்த வேண்டும்? அதற்கு அல்லாஹ் “தாவூதே! நீர் இப்போதே நமக்கு நன்றி செலுத்தியவறாவீர்” என்றானாம்.” (நூல்:தஃப்ஸீர் அல் குர்துபீ,1/398)
ஒரு சமயம் முஹம்மத் இப்னு முன்கதிர் {ரஹ்} அவர்கள், தங்களது நண்பர் அபூ ஹாஸிம் {ரஹ்} அவர்களைச் சந்தித்து “அபூ ஹாஸிம் அவர்களே! என்னை நிறைய மக்கள் அடிக்கடி வந்து சந்திக்கின்றனர். அவர்களில் பெரும்பாலனவர்களை நான் யாரென்றே அறியேன்.
ஆனாலும் என்னைச் சந்திக்கும் போதெல்லாம் எனக்காக துஆ செய்கின்றார்கள். நான் நெகிழ்ந்து போகின்றேன். ஆதலால், நான் அவர்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்கின்றேன்.” என்றார்கள்.
அதற்கு, அபூஹாஸிம் {ரஹ்} அவர்கள் “உம் திறமையால் தான் இவ்வாரெல்லாம் நடப்பதாக நினைத்துக் கொள்ளாதீர்; உம் கல்வியால் தான் உமக்கு மரியாதை தருவதாக நீர் கருதிவிடாதீர்கள். ஏனெனில்,
அல்லாஹ் குர்ஆனில் ”எவர்கள் நம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் புரிந்து கொண்டிருக்கின்றார்களோ அவர்களுக்காக விரைவில் கருணைமிக்க இறைவன் மக்களின் உள்ளங்களில் அன்பைத் தோற்றுவிப்பான்.” (அல்குர்ஆன்:19:96) என்று கூறுகின்றான்.
உமக்கு முன்னால் வாழ்ந்த பல முன்னோர்களுக்கும் இது போன்று நடந்துள்ளது. ஆகவே, மக்களின் உள்ளத்தில் உம் மீதான பிரியத்தை ஏற்படுத்தியது அல்லாஹ் தான் என்று உம் இதயத்தில் இருத்துவீராக! இதற்காக அல்லாஹ்விற்காக நீர் நன்றி செலுத்துவீராக!” என்று கூறினார்கள்.
(நூல்:அத்துலாலுல் ஸம்ரதிய்யா, பாபு அஷ் ஷுக்ர்)
இப்னுல் கைய்யூமுல் ஜவ்ஸீ {ரஹ்} அவர்கள் கூறுகின்றார்கள்: “மனதால் நன்றிசெலுத்துவது என்றால் நம்மை படைத்தது முதல் வாழ்வில் எத்தனையோ அருட்கொடைகளை அல்லாஹ் வழங்கியிருக்கின்றான்; வழங்குவான். அவை அனைத்தும் அல்லாஹ் தான் வழங்கியிருக்கின்றான் என்று உறுதியாக நம்புவதும், நினைப்பதுமாகும். (நூல்:அல் அத்கியாஃ, பக்கம்,127)
3.உடல் உறுப்புக்களால் நன்றியுணர்வை வெளிப்படுத்துவது.
அல்லாஹ் வழங்கியுள்ள கண், காது, கை, கால் போன்ற இன்னும் இருக்கின்ற ஏனைய உறுப்புக்கள் அனைத்தையும் அவனுக்குப் பிரியமான வழிகளில் பயன்படுத்துவதும், அவன் விலக்கியிருக்கின்ற வழிகள் அனைத்திலிருந்தும் பகிரங்கமாகவும், இரகசியமான நிலையிலும் விலகியிருப்பதாகும். என்று ஸஹ்ல் இப்னு அப்துல்லாஹ் {ரஹ்} அவர்கள் கூறுகின்றார்கள்.
அல்லாமா இப்னு ஹஜர் {ரஹ்} அவர்கள் கூறுகின்றார்கள்: “எப்படி நாவாலும், உள்ளத்தாலும் நன்றியுணர்வை வெளிப்படுத்த வேண்டுமோ, அது போன்றே உடலாலும் வெளிப்படுத்த வேண்டும்.
நன்றி செலுத்துவதில் பூரணமானது உடலால் செய்யப்படும் அமல்களே ஆகும். ஏனெனில், அல்லாஹ் தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் குடும்பத்தினர்களை நோக்கி “ தாவூதுடைய வழித்தோன்றல்களே! நன்றி செலுத்தும் வகையில் செயலாற்றுங்கள்! என்னுடைய அடிமைகளில் மிகச் சிலர் தான் நன்றி செலுத்துவோராயிருக்கின்றனர்.” (அல்குர்ஆன்:34:13) என்று கூறுகின்றான். (நூல்: ஃபத்ஹுல் பாரீ,3/398)
ஒரு முறை அப்துர்ரஹ்மான் இப்னு ஜரீர் என்பவர்கள் தங்களோடு மகனையும் அழைத்துக் கொண்டு தாபியீ அபூ ஹாஸிம் ஸலமா இப்னு தீனார் {ரஹ்} அவர்களைச் சந்திக்கச் சென்றார்கள்.
நீண்ட நேரம் உரையாடிவிட்டு அபா ஹாஸிம் அவர்களே! நன்றி செலுத்துவதைப் பற்றி நிறைய உரைகளை உலமாக்கள் ஆற்றுகின்றனர்.
ஆனால், அதன் உண்மையான வடிவம் தான் என்ன? அனைத்து உறுப்புக்களின் வாயிலாகவும் நன்றி செலுத்த வேண்டும்” என்றார்கள் அபூஹாஸிம் {ரஹ்} அவர்கள்.
அப்படியா? கொஞ்சம் விவரமாகத்தான் கூறுங்களேன். கண்களின் நன்றியுணர்வை எப்படி வெளிப்படுத்துவது?
பிறரிடம் நீர் நல்ல விஷயங்களைப் பார்த்தால் அதை நீ சொல்லிவிடு, பிறரிடம் நீர் தீய விஷயங்களைப் பார்த்தால் அதை எவரிடமும் சொல்லாமல் மறைத்துவிடு. என்றார்கள் அபூஹாஸிம்.
காதுகளின் மூலம் நன்றி செலுத்துவது எப்படி? என்று அவர் கேட்டார். அதற்கு அபூஹாஸிம் {ரஹ்} “நீர் நல்ல விஷயங்களைக் கேட்டால் பாதுகாத்துக் கொள்ளும்; கெட்ட விஷயங்களைக் கேட்டால் விட்டுவிடுவீராக” என்றார்கள்.
கைகளின் நன்றி எது? என்று அவர் கேட்டார். அதற்கு அபூ ஹாஸிம் {ரஹ்} “அல்லாஹ் தடுத்திருக்கின்ற எதையும் அவைகளால் செய்யாதே! அல்லாஹ்வின் கடமைகளைச் செய்ய விடாமல் அவைகளைத் தடுக்காதே!” என்றார்கள்.
வயிற்றின் நன்றி எது? என்று அவர் கேட்டார். அதற்கு அபூஹாஸிம் {ரஹ்} “அதன் அடிப்பகுதியை உணவால் நிரப்புவீராக! அதன் மேல்பகுதியை அறிவால் நிரப்புவீராக!” என்றார்கள்.
மர்ம உறுப்பின் நன்றி என்ன? என்று அவர் கேட்டார். அதற்கு அபூஹாஸிம் {ரஹ்} “மேலும், தங்களுடைய வெட்கத்தலங்களைப் பாதுகாக்கின்றார்கள்; தங்களுடைய மனைவியரிடமோ, தங்களுடைய வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்ட பெண்களிடமோ தவிர!” (அல்குர்ஆன்:23:5,6.) எனும் இறைவசனத்தை ஓதிக் காண்பித்தார்கள்.
(நூல்:தாரீகே திமிஷ்க் லிஇப்னி அஸாக்கிர்)
உபைத் இப்னு உமைர் {ரஹ்} அவர்கள் அன்னை ஆயிஷா {ரலி} அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் வாழ்க்கையில் நடந்த மிக ஆச்சர்யமான விஷயத்தை எங்களுக்கு சொல்லமுடியுமா? என்று கேட்டார்கள்.
இதைக் கேட்டதும் அன்னை ஆயிஷா {ரலி} அவர்கள் அழுது விட்டார்கள். பின்பு சொன்னார்கள்.
”அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் என்னுடன் தங்கிய ஓர் இரவில் நடு நிசியில் எழுந்தார்கள்; ஆயிஷாவே! என்று அழைத்து “என் இறைவனை வணங்க எனக்கு அனுமதி வழங்குவாயா?” என்று கேட்டார்கள்.
”அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நிச்சயமாக! உங்களின் நெருக்கத்தையும், உங்களுக்கு எதுவெல்லாம் மகிழ்ச்சியை தருமோ அதையும் நான் மிக நேசிக்கின்றேன்.” என்றேன்.
பின்பு எழுந்தார்கள், உளூ செய்தார்கள், தொழுதார்கள். அழுதார்கள், அமர்ந்து அழுதார்கள், பூமியில் முகத்தை புதைத்து அழுதார்கள். அவர்களின் தாடி நனையுமளவுக்கு அழுதார்கள்.
அப்போது பிலால் {ரலி} தொழுகைக்காக அழைக்க வந்தார். அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் அழுது கொண்டிருப்பதைப் பார்த்த அவர்கள் அல்லாஹ்வின் தூதரே! ஏன் அழுகின்றீர்கள்? நீங்கள் தான் முன் பின் பாவங்கள் மன்னிக்கப் பட்டவர்களாக இருக்கின்றீர்களே! என்று கேட்டார்கள்.
அதற்கு, நபி {ஸல்} அவர்கள் “பிலாலே! நான் என் இறைவனுக்கு நன்றியுள்ள அடியானாக இருக்க வேண்டாமா? எப்படி என்னால் அழாமல் இருக்க முடியும்? இப்போது தான் எனக்கு அல்குர்ஆனின் (3:190-191) வசனங்கள் இறக்கியருளப்பட்டது. யார் இந்த வசனங்களை ஓதிவிட்டு சிந்திக்காமல் இருக்கின்றாரோ அவர் நாசமடைந்து போய்விடுவார்.” என்று கூறினார்கள்.
(நூல்: தஃப்ஸீர் இப்னு கஸீர், பாகம்:1, பக்கம்:574)
وَإِنْ تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا
“அல்லாஹ்வின் அருட்கொடைகளை நீங்கள் எண்ணிவிட முயன்றால் அவற்றை உங்களால் எண்ணவே முடியாது”. ( அல்குர்ஆன்: 16: 18 )
ஒன்றுமே இல்லாமல் இருந்த நம்மை நம் தந்தையின் இந்திரியத்துளியாக, பின்னர் நம் தாயின் கருவறையில் இரத்தமாக, சதைக்கட்டியாக அதன் பின்னர் அழகிய மழலையாக என்று இன்று வரை பல்வேறு அருட்கொடைகளை வழங்கி அனுபவிக்க வைத்திருக்கின்றான்.
மணம் முடித்த மனைவிக்காக உழைக்கிறோம். பெற்றெடுத்த பெற்றோருக்காக பாடுபடுகிறோம். நமக்கு பிறந்த பிள்ளைச் செல்வங்களுக்காக சேமிக்கிறோம்.
ஆனால், உலகில் நாம் வாழ நமக்காக எல்லாவற்றையும் படைத்து பரிபாலித்து காத்து வருகிற இறைவனுக்காக நாம் என்ன செய்திருக்கிறோம்?
அருட்கொடைகள் அனுபவிப்பதற்கு மாத்திரமல்ல, அதை அனுபவித்ததற்காக அக மகிழ்வோடு நன்றி செலுத்தவும் தான் என்று இறைமறையில் அல்லாஹ் பல இடங்களில் தெளிவு படுத்துகிறான்.
ஒரு அருட்கொடைக்கே இவ்வளவா?..
ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “ஒரு நாள் நாங்கள் குழுமியிருந்த சபைக்கு வருகை தந்த அண்ணல் நபி {ஸல்} எங்களை நோக்கி “தோழர்களே! கொஞ்ச நேரத்திற்கு முன்பாகத்தான் என் நண்பர் ஜிப்ரயீல் (அலை) அவர்கள் வருகை தந்து வியத்தகு வரலாறு ஒன்றைக் கூறி என்னை நெகிழ்ச்சியில் ஆழ்த்திப்போனார்” என்று கூறி விட்டு..
எங்களிடம் “என்னிடம் வருகை தந்த ஜிப்ரயீல் (அலை) அவர்கள் “முஹம்மத் {ஸல்} அவர்களே! சத்தியத்தைக் கொண்டு உங்களை நபியாக அனுப்பிய அல்லாஹ்வின் மீது ஆணையாக! அல்லாஹ்வின் அடியார்களில் ஒரு நல்லடியார் இருந்தார்.
அந்த அடியார் நாற்புறமும் கடலால் சூழப்பட்ட தீவு ஒன்றில் மலையின் உச்சியில் 500 ஆண்டு காலம் அல்லாஹ்வை வணங்கி வழிபடுவதிலேயே கழித்து வந்தார்.
கடல் சூழ்ந்த – உப்பு நீர் நிறைந்த அந்தப் பகுதியிலும் கூட அல்லாஹ் அவருக்கு மதுரமான ஓர் நீரூற்றை ஓடச் செய்தான். அருகில் ஓர் மாதுளை மரத்தையும் உருவாக்கிக் கொடுத்தான்.
தினமும் மாலை நேரத்தில் மலையின் உச்சியிலிருந்து கீழிறங்கு வரும் அவர் அந்த மாதுளை மரத்திலிருந்து ஒரு கனியை உண்டு விட்டு, அந்த நீரூற்றிலிருந்து சிறிது நீர் அருந்தி விட்டு உளூ செய்து விட்டு மீண்டும் மலை உச்சிக்கு சென்று வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டு விடுவார்.
ஒரு நாள் அந்த நல்லடியார் அல்லாஹ்விடம் பிரார்த்திக்கும் போது “யாஅல்லாஹ்! என் உயிர் பிரியும் தருவாயில் என் ரூஹ் உனக்கு நான் ஸஜ்தா செய்யும் நிலையிலேயே பிரிய வேண்டும் என ஆசிக்கின்றேன்! மேலும், என் உடலை மறுமை நாள் பரியந்தம் வரையில் அந்த நிலையிலேயே நீ பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்! மேலும், அதே நிலையிலேயே நான் எழுப்பப்பட வேண்டும்! என்னுடைய இந்த ஆசையை நீ நிறைவேற்றித் தர வேண்டும்” என்று கோரினார்.
அல்லாஹ்வும் அவரின் கோரிக்கைக்கு செவி சாய்த்து அப்படியே செய்தான்.
வானவர்களாகிய நாங்கள் விண்ணுலகத்திலிருந்து பூமிக்கு வரும் போதும், பூமியிலிருந்து விண்ணுலகிற்கு செல்லும் போதும் அவரை அதே நிலையிலேயே கண்டோம்.
தொடர்ந்து ஜிப்ரயீல் (அலை) அவர்கள் கூறினார்கள்: “ நாளை மறுமையில் மஹ்ஷர் பெருவெளியில் மக்களோடு மக்களாக அந்த நல்லடியார் அல்லாஹ்வின் சந்நிதானத்தில் நின்றிருப்பார்.
அப்போது, அல்லாஹ் வானவர்களிடம், அவரை நோக்கி “இதோ என்னுடைய இந்த அடியானை என் அருளின் துணை கொண்டு சுவனத்திற்கு அழைத்துச் செல்லுங்கள்” என்பான்.
அதற்கு, அவர் அல்லாஹ்விடம் “அல்லாஹ்வே! நான் செய்த என்னுடைய அமலின் துணை கொண்டு என்னை சுவனத்திற்கு அழைத்துச் செல்லுமாறு வானவர்களுக்கு நீ ஆணையிடுவாய் என்றல்லவா நான் எதிர் பார்த்தேன். ஆனால், நீயோ உன் அருளின் துணை கொண்டு சுவனத்திற்கு அழைத்துச் செல்லுமாறு ஆணையிடுகின்றாய்! அப்படியானால், என்னுடைய 500 ஆண்டு கால இபாதத் என்னவாயிற்று?” என்று வினவுவார்.
அப்போது, அல்லாஹ் தன் வானவர்களுக்கு “இந்த அடியானுக்கு நான் வழங்கிய அருட்கொடைகளையும், இந்த அடியான் செய்த இபாதத்களையும் கணக்குப் பாருங்கள்” என்று கட்டளையிடுவான்.
அப்போது வானவர்கள் “இவரின் 500 ஆண்டு கால இபாதத் அனைத்தும் நீ அவருக்கு வழங்கிய அருட்கொடைகளில் ஒன்றான கண்பார்வைக்கு ஈடாகி விட்டது.
நீ வழங்கிய மற்றெந்த அருட்கொடைகளுக்கும் ஈடாக வேறெந்த அமலும் அவரின் பதிவேட்டில் இல்லை” என்று அல்லாஹ்விடம் கூறுவார்கள்.
அது கேட்ட அல்லாஹ் வானவர்களிடம் “இதோ இந்த அடியானை நரகத்திற்கு இழுத்துச் செல்லுங்கள்” என்பான்.
அவர் நரகத்திற்கு இழுத்து செல்லப்படுவார். வழி நெடுக அவர் “இறைவா! உன் அருளின் துணை கொண்டே என்னை சுவனத்தில் நுழையச்செய்!” என அலறுவார்.
அந்த அலறலைக் கேட்டதும் அல்லாஹ் வானவர்களிடம் “அந்த அடியானை என் முன் கொண்டு வந்து நிறுத்துங்கள்!” என்பான். அவர் அல்லாஹ்வின் திருமுன் நிறுத்தப்படுவார்.
அப்போது, அல்லாஹ்வுக்கும் அந்த அடியானுக்கும் இடையே நடக்கின்ற அந்த உரையாடல் இதோ….
அல்லாஹ்: என் அடியானே! ஒன்றுமே இல்லாமல் இருந்த உன்னை படைத்தது யார்?
அடியான்: நீ தான் என் இறைவா!
அல்லாஹ்: என் அடியார்களிலேயே 500 ஆண்டு கால ஆயுளையும், வணக்க வழிபாடுகள் செய்கிற ஆற்றலையும் கொடுத்து உன்னை வாழ வைத்தது யார்?
அடியான்: நீ தான் என் இறைவா!
அல்லாஹ்: கடலும் –உப்பு நீரும் சூழ்ந்த இடத்தில் மதுரமான நீரூற்றையும், புற்பூண்டுகளே முளைத்திடாத பாறையிலிருந்து மாதுளை மரத்தையும் உனக்குக் கொடையாக வழங்கியது யார்?
அடியான்: நீதான் என் இறைவா!
அல்லாஹ்: உன் ரூஹ் ஸஜ்தா – சிரம் பணிந்த நிலையில் பிரிய வேண்டும் என்று நீ ஆசித்த போது உன் விருப்பத்தை நிறைவேற்றிக் கொடுத்தது யார்?
அடியான்: நீதான் என் இறைவா!
இந்த உரையாடலை முடித்து வைக்கும் முகமாக, இறுதியாக அல்லாஹ் அந்த அடியானிடம் “என் அடியானே! இவை அனைத்தும் என் அருளின் மூலமாகத்தான் நீ பெற்றாய்! இப்போதும், நீ என் அருளின் துணை கொண்டு தான் சுவனத்திற்கும் செல்ல இருக்கின்றாய்!
அடியானே! என் அடியார்களில் நீ நல்லவனே” என்று கூறி விட்டு வானவர்களை நோக்கி “இதோ இந்த என் அடியானை என் அருளின் துணை கொண்டு சுவனத்தில் கொண்டு போய் விட்டு விடுங்கள்!” என்பான்.
இதைக் கூறி விட்டு ஜிப்ரயீல் (அலை) அவர்கள் என்னிடம் “முஹம்மத் {ஸல்} அவர்களே! ஓர் அடியானைச் சுற்றி ஈருலகிலும் நடைபெறும் அத்துனை காரியங்களும் அல்லாஹ்வின் அருளின் துணை கொண்டே தான் அமையப் பெறுகின்றது” என்று கூறி விடை பெற்றுச் சென்றார்” என்று நபி {ஸல்} அவர்கள் எங்களிடம் கூறினார்கள். ( நூல்: முஸ்தத்ரக் அலஸ் ஸஹீஹைன் )
வாழ்நாளெல்லாம் நன்றி செலுத்தினாலும் வல்லோன் நமக்களித்த அருட்கொடைகளில் ஒரு அருட்கொடைக்கு நாம் செலுத்தும் நன்றி ஈடாகாது என்பதை நம் மனதினில் நிலை நிறுத்த வேண்டும்.
அப்படியானால் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துவது எப்படி?..
أركان الشكر
أ- الاعتراف بالنعمة بقلبه
நன்றி செலுத்துவதில் மூன்று ஒழுங்குகள் இருக்கின்றன. அவை மூன்றும் மிகவும் முக்கியமாகும்.
1. ஒரு அருட்கொடையை அனுபவிக்கிற போது அல்லாஹ் தான் அதை அனுபவிப்பதற்கு தந்திருக்கின்றான் என்று உளமாற எண்ணுவது.
وَمَا بِكُمْ مِنْ نِعْمَةٍ فَمِنَ اللَّهِ
“மேலும், உங்களுக்கு கிடைத்திருக்கிற வாழ்க்கை வசதிகள் எல்லாமுமே அல்லாஹ்வின் அருட்கொடைகள் தாம்”. ( அல்குர்ஆன்: 16: 53 )
அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், உமர் (ரலி) அவர்கள் சொல்ல தாம் கேட்டதாக அறிவிக்கின்றார்கள்:
“ஒரு நாள் நண்பகல் நேரத்தில் நபி {ஸல்} அவர்கள் மஸ்ஜிதுன் நபவீயில் அமர்ந்திருந்தார்கள். சிறிது நேரத்தில் அங்கே அபூபக்ர் (ரலி) அவர்களும் வருகை தந்திருக்கின்றார்கள். அப்போது, நபி {ஸல்} அவர்கள் “அபூபக்ரே! என்ன இந்த நேரத்தில் இங்கே வருகை தந்திருக்கின்றீர்கள்?” என்று வினவினார்கள். அதற்கு, அபூபக்ர் (ரலி) அவர்கள் “அல்லாஹ்வின் தூதரே! உங்களை இந்த நேரத்தில் இங்கே வரவைத்தது எதுவோ அதுவே என்னையும் வரவைத்தது” என்று பதில் கூறினார்கள்.
சிறிது நேரத்தில் உமர் (ரலி) அவர்களும் அங்கே வருகை தர, நபி {ஸல்} அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் வினவியது போன்று வினவ, உமர் (ரலி) அவர்கள் “அல்லாஹ்வின் தூதரே! கடுமையான பசி ஆதலால் இங்கு வந்தேன்” என்று கூறினார்கள்.
கொஞ்ச நேரம் அண்ணலார் {ஸல்} அவர்கள் அபூபக்ர், உமர் (ரலி –அன்ஹுமா) ஆகியோரோடு உரையாடிவிட்டு “தோழர்களே! வாருங்கள்! மூவரும் சேர்ந்து அபுல் ஹைஸம் (ரலி) அவர்களின் வீட்டிற்குச் சென்று வருவோம்!” என்று கூறினார்கள்.
நபி {ஸல்} அவர்கள் நடுவே வர, அபூபக்ர் (ரலி) அவர்கள் வலது புறத்திலும், உமர் (ரலி) அவர்கள் இடது புறத்திலும் ஒரு சேர நடந்து வந்து அபுல் ஹைஸம் (ரலி) அவர்களின் வீட்டின் முன் வந்து நின்றார்கள்.
மாநபி {ஸல்} அவர்கள் ஸலாம் கூறினார்கள். வீட்டிலிருந்து பதிலேதும் வரவில்லை. இரண்டாம் முறை, மூன்றாம் முறை ஸலாம் கூற உள்ளிருந்து பதிலேதும் வராததால் நபி {ஸல்} அவர்களும், தோழர்களும் திரும்பி வருவதற்கு ஆயத்தமான போது, “வஅலைக்குமுஸ்ஸலாம்… யாரஸூலுல்லாஹ்….” வீட்டின் உள்ளிருந்து உம்மு ஹைஸம் அவர்களின் குரல் கொடுத்தார்கள்.
உம்மு ஹைஸம் அவர்களே! ஏன் மூன்று ஸலாம் வரை மௌனம் காத்தீர்கள்! உடனடியாக பதில் கூறியிருக்க வேண்டாமா? என நபி {ஸல்} அவர்கள் கேட்டார்கள்.
அதற்கு, அல்லாஹ்வின் தூதரே! ஸலாம் கூறியது தாங்கள் அல்லவா? தங்களின் ஸலாம் எத்தனை மகத்துவம் நிறைந்தது?!” ஆதலால் தான் சிறிது தாமதித்து பதில் கூறினேன் என்றார்கள்.
நபி {ஸல்} அவர்கள் புன்னகையை மறுமொழியாய் தந்து விட்டு, அபுல் ஹைஸம் எங்கே? என்று வினவினார்கள்.
”அல்லாஹ்வின் தூதரே! இதோ அருகில் இருக்கிற கிணற்றுக்கு தண்ணீர் கொண்டு வர சென்றிருக்கின்றார். அதோ அந்த மரத்தடியில் சற்று இளைப்பாருங்கள்! இன்னும் சற்று நேரத்தில் வந்து விடுவார்” உம்மு ஹைஸம் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
அபுல் ஹைஸம் (ரலி) அவர்கள் வீட்டிற்கு வருகின்றார்கள். அங்கே மரத்தின் நிழலில் மாநபி {ஸல்} அவர்களையும், அபூபக்ர், உமர் (ரலி) இருவரையும் பார்த்து பூரிப்படைந்தவராக முக மலர்ச்சியோடு வரவேற்றார்கள்.
உடனடியாக, அருகில் இருந்த பேரீத்த மரங்களில் ஏறி காய்ந்த, ஈரமான இளவட்டமான அனைத்து ரக பழங்களையும் பறித்துக் கொண்டு வந்து அண்ணலாரின் முன் வந்து வைத்து விட்டு “அல்லாஹ்வின் தூதரே! தங்களது வருகை எனக்கு கண் குளிர்ச்சியை ஏற்படுத்தி விட்டது” என்று கூறி சாப்பிடுமாறு கூறினார்கள்.
மூவரும் திருப்தியாக சாப்பிட்டனர். அருகே வந்த அபுல் ஹைஸம் (ரலி) அவர்கள் பேரீத்தங்கனியை கொண்டு வரட்டுமா? என்று கேட்டார்கள்.
அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் “போதும், கொஞ்சம் தண்ணீர் கொண்டு வாருங்கள்!” என்று கூறினார்கள்.
நல்ல குளிர்ந்த தண்ணீரை கொண்டு வந்து கொடுத்தார் அபுல் ஹைஸம் (ரலி) அவர்கள். மூவரும் தண்ணீரை அருந்தினார்கள். பின்பு நபி {ஸல்} அவர்கள் “இந்த தண்ணீரும் இறைவனின் அருட்கொடை தான்” இது குறித்தும் நீங்கள் மறுமையில் கேட்கப்படுவீர்கள்” என்று கூறினார்கள்.
அப்போது, அபுல் ஹைஸம் (ரலி) அவர்கள் “அல்லாஹ்வின் தூதரே! சற்று ஓய்வெடுங்கள்! இன்னும் சிறிது நேரத்தில் உணவு தயாரித்து கொண்டு வருகின்றேன்! சாப்பிட்டு விட்டு செல்லுங்கள்!” என்று கூறினார்கள்.
மூவரும் மரத்தின் நிழலில் விரிக்கப்பட்டிருந்த விரிப்பில் உறங்கினார்கள். சற்று நேரத்திற்கெல்லாம் உம்மு ஹைஸம், அபுல் ஹைஸம் இருவரும் உணவை தயாரித்து ஆட்டிறைச்சியும், கோதுமை ரொட்டியும் தயார் செய்து நபி {ஸல்} அவர்களின் முன் கொண்டு வைத்து விட்டு மூவரையும் எழுப்பினார்கள்.
கண்விழித்து எழுந்த மூவரும் கை, கால் முகம் கழுவி விட்டு வயிறார உண்டார்கள்.
மூவரும் சாப்பிட்டு முடித்ததும், அல்லாஹ்வைப் புகழ்ந்தார்கள். அப்போது, உம்மு ஹைஸம் (ரலி) அவர்கள் “அல்லாஹ்வின் தூதரே! எங்களுக்காக துஆ செய்யுங்கள்!” என்று கூறினார்கள்.
அதற்கு, நபி {ஸல்} அவர்கள் “நீங்கள் பூமியில் நடமாடுகின்றவர்களில் நல்லோர்களுக்கு உணவளித்திருக்கின்றீர்கள்! பல நாள் சாப்பிடாமல் பட்டினியாய் இருந்தவர்களுக்கு வயிறு நிறைய உணவளித்து இருக்கின்றீர்கள்! ஆகையால், இறைவன் தன் வானவர்களைக் கொண்டு உங்களுக்கு துஆ செய்ய வைத்திருக்கின்றான்! இதோ! வானவர்கள் உங்களுக்காக துஆ செய்து கொண்டிருக்கின்றார்கள்” என்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள். ( நூல்: திர்மிதீ, தஃப்ஸீர் இப்னு கஸீர் )
கடுமையான பசி, நாட்பட்ட பசி அந்த நேரத்தில் வழங்கப்பட்ட குளிர்ந்த நீர் வயிறையும், மனதையும் எவ்வளவு குளிரூட்டி இருக்கும்.
அபூபக்ர், உமர் ரலியல்லாஹு அன்ஹுமா அந்த நீரின் குளுமையை ரசித்து, மெய்மறந்து இருக்கும் போது இந்த குளிர்ந்த நீரும் அல்லாஹ்வின் அருட்கொடை தான் இதற்காக அல்லாஹ்விடம் பதில் சொல்ல வேண்டி வரும் என்று அந்த நேரத்திலும் கூட அல்லாஹ்வின் அருட்கொடை என்று உளமாற உறுதி கொள்ளுமாறு தூண்டினார்கள் மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.
2. ஒரு அருட்கொடையை அனுபவிக்கிற போது இது என் இறைவன் தந்தான் என வாயால் சொல்வது.
ب- التحدث بها والثناء على المنعم
قال تعالى: {وَأَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّثْ} [الضحى: 11
“மேலும், உம் இறைவன் உமக்களித்திருக்கிற அருட்கொடைகளைப் பற்றி எடுத்துரைப்பீராக!” ( அல்குர்ஆன்: 93: 11 )
அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் நோன்பு நோற்றிருந்தார்கள். இஃப்தாருடைய நேரம் நெருங்கவே பல்வேறு வகையான உணவுகளும், குடிபானங்களும் அவர்களின் முன்பாக பாத்திரங்களிலும், தட்டுகளிலும் கொண்டு வந்து வைக்கப்பட்டன.
அவர்களின் பார்வை அவைகளைக் கடந்து சென்ற போது தேம்பித் தேம்பி அழுதார்கள்.
அருகிலிருந்தவர்கள், “அபூ முன்திர் அவர்களே! ஏன் இவ்வாறு தேம்பித் தேம்பி அழுகின்றீர்கள்? என்று கேட்டனர்.
அதற்கு, அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் “ நாங்கள் இறை நிராகரிப்பிலும், மடமைத்தனத்திலும் மூழ்கியிருந்தோம். அல்லாஹ் எங்களுக்கு ஓர் இறைத்தூதரை { முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை } அனுப்பினான். அவர்களை நாங்கள் ஈமான் கொண்டோம். அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் என அனைத்தையும் பின்பற்றி நடந்தோம். சன்மார்க்கப் போர்களிலும் பங்கெடுத்தோம்.
எங்களில் பலர் எவ்வித உலக சுகங்களையும் அனுபவிக்காமலேயே மரணித்துப் போயினர்.
அவர்களில் உஹதில் வீரமரணம் அடைந்த என் சகோதர முஸ்லிம் முஸ்அப் இப்னு உமைரும் ஒருவர்.
அவர் மரணித்த போது அவரிடம் அவர் அணிந்திருந்த மேலாடை, அவர் போரில் பயன்படுத்திய வாள் இவ்விரண்டையும் தவிர வேறொன்றும் இல்லை.
அவருக்கு நாங்கள் அவரின் மேலாடையையே கஃபனாக அணிவிக்கும் போது, தலையை மறைத்தால், கால்களின் பகுதிகளும், இரு கால்களை மறைத்தால் தலைப் பகுதியும் தெரிந்தது.
இறுதியாக, பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஆணைக்கிணங்க இத்கிர் புல்லைப் போட்டு கால்களின் பகுதியை மறைத்து நல்லடக்கம் செய்தோம்.
அவர்களோடு சமகாலத்தில் வாழ்ந்த நானும், இன்னும் பலரும் இன்று சுக போகமாக வாழ்ந்து வருகின்றோம். அல்லாஹ் எங்களுக்கு உலகின் எட்டுத் திக்குகளின் அருட்கதவுகளையும் திறந்து விட்டிருக்கின்றான். நாங்கள் அருட்கொடைகள் அனைத்தையும் அனுபவித்து வருகின்றோம்.
எனினும், எங்களுக்கு உள்ளூர ஒரு பயம் இருக்கின்றது. அது அல்லாஹ்வைப் பற்றிய, மறுமையைப் பற்றிய பயம், நாளை மறுமையில் சிலரைப்பார்த்து அல்லாஹ் சொல்வானே..
“நீங்கள் உங்கள் பங்கில் உள்ள அருட்கொடைகளை உங்கள் உலக வாழ்க்கையிலேயே அனுபவித்து விட்டீர்கள். அவற்றால் நன்கு பயனும் அடைந்து விட்டீர்கள்” ( அல்குர்ஆன்: 46: 20 ) அவர்களாக நாங்கள் ஆகி விடக்கூடாது என்கிற அந்தப் பயம் தான் இவ்வாறான நேரங்களில் அழுகையைக் கொண்டு வந்து விடுகின்றது” என்று கூறினார்கள். ( நூல்: புகாரி, முஸ்லிம் )
மெய் சிலிர்க்க வைக்கும் நன்றியுணர்வு…
அப்துல்லாஹ் இப்னு முஹம்மத் (ரஹ்) அவர்கள் கூறியதாக இமாம் அவ்ஜாயீ (ரஹ்) அவர்கள் அறிவிக்கும் ஓர் நெகிழ்ச்சியான சம்பவத்தை இமாம் இப்னு ஹிப்பான் (ரஹ்) அவர்கள் தங்களின் “அஸ் – ஸிகாத்” எனும் நூலில் பதிவு செய்திருக்கின்றார்கள்.
அப்துல்லாஹ் இப்னு முஹம்மத் (ரஹ்) அவர்கள் மேற்கொண்ட கடல் பயணம் அது.
அவர்கள் பயணம் செய்த கப்பல் மிஸ்ருக்கு அருகேயுள்ள தீவு ஒன்றில் கரை ஒதுங்கியது.
அப்துல்லாஹ் இப்னு முஹம்மத் (ரஹ்) அவர்கள் கூறுவதை நாம் கேட்போம்.
தீவில் இறங்கி நான் நடந்து சென்றேன். தூரத்தில் ஓர் கூடாரம் தெரிந்தது. அதன் அருகே செல்லச் செல்ல அங்கிருந்து ஒருவர் முனகும் சப்தம் ஒன்று கேட்டது.
கூடாரத்தின் அருகே சென்று சப்தத்திற்கு சொந்தக்காரர் யார்? என்று பார்த்தேன்.
கால்களும், கைகளும், பார்வையும் முற்றிலும் செயலிழந்து போன நிலையில் ஒருவர் கூனிக்குருகி படுத்துக் கொண்டிருப்பதையும், அவர் ஏதோ ஒன்றை முணுமுணுத்துக் கொண்டிருப்பதையும் கண்டேன்.
அவரின் வாயருகே என் காதுகளைக் கொண்டு சென்று என்ன சொல்கின்றார்? என்று கேட்டேன். விக்கித்துப்போனேன்.
ஆம்! அவர் அல்லாஹ்விடம் பிரார்த்தித்துக் கொண்டிருந்தார். “அல்லாஹ்வே! என்னை எல்லாவற்றையும் கொண்டு போதுமாக்கி வைத்திருக்கின்றாய், அதற்காக காலமெல்லாம் உன்னைப் புகழ்ந்து கொண்டே இருக்கும் தவ்ஃபீக்கை எனக்கு நீ வழங்கியருள்வாயாக!
நீ படைத்த படைப்புகள் எல்லாவற்றையும் விட என்னை மேன்மையாக்கி வைத்து, எனக்கு உன் புறத்திலிருந்து உன் அருட்கொடைகளை வழங்கியிருக்கின்றாய் அதற்காக, காலமெல்லாம் உனக்கு நன்றி செலுத்தும் தவ்ஃபீக்கைத் தந்தருள்வாயாக!” என்று அவர் பிரார்த்தித்துக் கொண்டிருந்தார்.
அப்போது, நான் ஸலாம் சொல்லி, என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு “ நீங்கள் இன்னின்னவாறு துஆச் செய்ய நான் என் செவியால் கேட்டேன்.
“அல்லாஹ் உங்களுக்கு என்ன நிஃமத்தை வழங்கி விட்டான்? என்று அவனிடம் அவனைப் புகழ்வதற்கு தவ்ஃபீக்கையும், என்ன மேன்மையை வழங்கி விட்டான்? என்று நன்றி செலுத்துவதற்கு தவ்ஃபீக்கையும் கேட்கின்றீர்கள்” என்றேன்.
அதற்கவர், “அல்லாஹ் என்னோடு நடந்து கொண்டிருக்கும் முறையை நீர் அறிய மாட்டீர்! அவன் நினைத்திருந்தால் வானத்தில் இருந்து என் மேல் நெருப்பை இறக்கி கரித்திருக்கலாம். அவன் நாடியிருந்தால் அருகில் இருக்கிற மலையில் இருந்து ஒரு பாறையை உருளச் செய்து என்னை நசுக்கி இருக்கலாம். அவன் நினைத்திருந்தால் இந்த கடல் நீரால் என்னை மூழ்கடிக்க வைத்திருக்கலாம். அவன் நாடியிருந்தால் இந்த பூமியைக் கொண்டு என்னை விழுங்கச் செய்திருக்கலாம். ஆனால், இப்படியெல்லாம் அவன் செய்யவில்லையே! அதற்காக நான் எவ்வளவு அதிகமாக நன்றி செலுத்த வேண்டும்.
ஏன்? என் உடல் உறுப்புக்கள் எல்லாம் செயலிழந்து போனாலும் இந்த நாவை எவ்வித சேதாரமும் இன்றி தந்திருக்கின்றானே? இது என் மீது என் ரப்பு செய்த மகத்தான அருட்கொடை இல்லையா? என்று கேட்டார்.
பின்னர், அவர் என்னிடம் என் பெயரைக் கூறி எனக்கு ஓர் உதவி செய்வீரா? என்று கேட்டு விட்டு,
நான் எந்த நிலையின் இருக்கின்றேன் என்பது உமக்கு தெரியும். என்னால் எந்த ஒன்றையும் சுயமாக செய்ய இயலாது. எனக்கு ஒரு பணியாள் இருந்தார். அவர் தான் எனக்கு பசிக்கும் போது உணவு கொடுப்பார். நான் தாகித்தால் தண்ணீர் கொடுப்பார். தொழுகை நேரம் வருகிற போது உளூ செய்யவும், தொழுகைக்காக என்னை நிற்க, அமர வைக்கவும் உதவி செய்வார்.
மூன்று நாட்களாக அவரைக் காணவில்லை. அவரைக் கொஞ்சம் தேடி கண்டு பிடித்து என்னிடம் அழைத்து வருவீரா?” என்று கேட்டார்.
அதற்கு நான், அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அல்லாஹ்விடத்தில் மிகப்பெரிய கூலியைப் பெற்றுத்தருகிற ஒரு காரியத்தை எம்மைச் செய்யுமாறு கூறியிருக்கின்றீர்! நிச்சயம் இந்த உதவியை நான் செய்கின்றேன் என்று கூறி விடை பெற்று அவரை தேடி அருகில் இருக்கும் அடர்ந்த காட்டுக்குள் நுழந்தேன்.
சிறிது தூரம் கூட சென்றிருக்கமாட்டேன். அங்கே, காட்டு விலங்குகளால் ஒருவரின் உடல் சின்னா பின்னமாகி கிடப்பதைப் பார்த்தேன். அநேகமாக அவரின் பணியாளராகத் தான் இருப்பார் என முடிவு செய்தேன்.
அங்கிருந்து திரும்பும் போது ஏனோ எனக்கு அய்யூப் நபி அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு ஏற்பட்ட சோதனையும், அவர்கள் காத்த பொறுமையும் நினைவுக்கு வந்தது.
நேராக, அவரிடம் வந்தேன். அவர் என்னிடம் அவரின் பணியாளர் குறித்து கேட்டார்.
நான் அவரிடம் “அல்லாஹ்விடத்தில் நபி அய்யூப் அலைஹிஸ்ஸலாம் சிறந்தவரா? அல்லது நீர் சிறந்தவரா? என்று கேட்டேன்.
அதற்கவர், சந்தேகமற நபி அய்யூப் (அலை) அவர்களே மிகச் சிறந்தவர் என்றார்.
அய்யூப் (அலை) அவர்களோடு ரப்பு எப்படி நடந்து கொண்டான்? என்பதை நீர் அறிவீரா? அவர்களின் பொருளாதாரத்திலும், அவர்களின் குடும்பத்திலும், பிள்ளைச் செல்வத்திலும் அல்லாஹ் சோதனையை ஏற்படுத்த வில்லையா? என்று கேட்டேன்.
அதற்கவர், ஆம்! என்றார். அப்போது நான், அந்த நேரத்தில் அய்யூப் அலை அவர்கள் ரப்போடு எப்படி நடந்து கொண்டார்கள்? என்று கேட்டேன்.
அதற்கவர், அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துபவராகவும், அல்லாஹ்வைப் புகழ்ந்தவராகவும், பொறுமையாளராகவும் நபி அய்யூப் அலை அவர்கள் நடந்து கொண்டார்கள்” என்றார்.
மீண்டும் நான் அவரிடம் “அய்யூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களை அவர்களின் உறவுகளும், சமூகமும் உறவைத் துண்டித்து, பாதைகளில் நடமாடும் போது கேலியும் கிண்டலும் செய்தார்களே! அதை நீர் அறிவீரா? என்றேன்.
அதற்கவர், ஆம்! என்றார். அப்போது நான், அந்த நேரத்தில் அய்யூப் அலை அவர்கள் ரப்போடு எப்படி நடந்து கொண்டார்கள்? என்று கேட்டேன்.
அதற்கவர், அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துபவராகவும், அல்லாஹ்வைப் புகழ்ந்தவராகவும், பொறுமையாளராகவும் நபி அய்யூப் அலை அவர்கள் நடந்து கொண்டார்கள்” என்றார்.
அப்போது நான், அல்லாஹ் உமக்கு நிரப்பமாக அருள் புரிவானாக! உம்முடைய பணியாளரை காட்டு விலங்குகள் கடித்துக் குதறி கொன்று விட்டன. அவரின் உடல்களை தின்று விட்டன.
அல்லாஹ் உமக்கு மகத்தான நற்கூலியை வழங்குவானாக! அல்லாஹ் உமக்கு பொறுமையை வழங்குவானாக! என்றேன்.
அப்போது அவர், இரு கைகளையும் வானை நோக்கி உயர்த்தி “அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்! அவனுக்கு மாறு செய்து நரகத்தை தண்டனையாக பெறுகிற எந்த ஒருவரையும் என் சந்ததியில் படைக்காமல் காத்தருளினானே அத்தகைய அல்லாஹ்வுக்கே! என்று துஆச் செய்து விட்டு இறந்து போன அவரின் பணியாளருக்காக இரங்கல் (இன்னா லில்லாஹ்..) கூறிவிட்டு, உடலை ஒரு உலுக்கு உலுக்கி இறந்து போனார்.
நானும் இன்னா லில்லாஹ்.. சொல்லி விட்டு எனக்கு பெரிய சோதனை ஏற்பட்டு விட்டதாக நான் கருதினேன். ஆம்! ஆள் அரவம் இல்லாத தீவு ஒன்றின் காட்டுக்குள் இறந்து போன ஒரு ஜனாஸாவை எப்படி விட்டுச் செல்வது? என்ன செய்வது? என்று தவியாய் தவித்துக் கொண்டிருந்தேன்.
சிறிது நேரம் என் நிலையை நினைத்து நான் தலை மேல் கை வைத்து அழுது கொண்டிருந்தேன்.
அப்போது, அங்கே நான்கு நபர்கள் அங்கே வந்தார்கள். ஏன் அழுகின்றீர்? என்று விசாரித்தார்கள்.
நான் நடந்த சம்பவத்தை ஒன்று விடாமல் கூறினேன். அப்போது அவர்கள் ஆச்சர்யத்தோடு அந்த நல்ல மனிதரின் முகத்தை ஒரு தடவை திறந்து காட்டுங்களேன்!” என்றார்கள்.
நானும் திறந்து காட்டினேன். வந்த நால்வரும் அவரின் நெற்றியிலும், கண்களிலும் முத்தமிட்டார்கள். இந்தக் கண்கள் அல்லாஹ் ஹராமாக்கியதை விட்டும் தாழ்த்திக் கொண்ட கண்கள். இந்த உடல் மக்களெல்லாம் உறங்கிக் கொண்டிருந்த போது அல்லாஹ்வை வணங்கி வழிபட்ட உடல் என்று வாழ்த்துக் கூறினார்கள்.
எனக்கு ஒன்றுமே புரியவில்லை! என்ன நடக்கிறது இங்கே? யார் இவர்கள்? இறந்து போன அந்த மனிதர் யார்? என்ற கேள்விகள் என்னை துளைத்துக் கொண்டே இருக்க, ஒருவாராக இயல்பு நிலைக்கு திரும்பி அந்த நால்வரிடமும் அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவான்! முதலில் இவர் யார் என்று எனக்குச் சொல்லுங்கள்?!” என்றேன்.
அதற்கவர்கள், “இவர் அபூகிலாபா அப்துல்லாஹ் இப்னு ஜைத் அல் ஜுர்மீ (ரஹ்) அவர்கள் ஆவார்கள். இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மாணவரும், பணியாளரும் ஆவார்கள்.
அல்லாஹ்வின் மீதும், அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீதும் அளவு கடந்த நேசமும், காதலும் கொண்டவர்கள் பஸராவின் மிகப்பெரிய வணக்கசாலியும், உலகப்பற்றற்றவரும் ஆவார்” என்று கூறினார்கள்.
பின்னர், நாங்கள் ஐவரும் சேர்ந்து அவர்களைக் குளிப்பாட்டினோம். நாங்கள் கொண்டு வந்திருந்த எங்களின் ஆடையில் கஃபன் செய்தோம். பின்னர் ஜனாஸா தொழுகை தொழுவித்தோம். பின்னர் நல்லடக்கமும் செய்தோம்.
அதன் பின்னர் அந்த நால்வரும் சென்று விட்டார்கள். நானும் என்னுடைய கூட்டத்தார்கள் தங்கியிருந்த இடத்திற்கு வந்து விட்டேன்.
இரவில் என்னுடைய கனவில் நான் அவரைக் கண்டேன். அவர் சுவனத்தில் இருக்கின்றார். அவர் சுவனத்து பட்டாடைகள் இரண்டு அணிந்திருக்கக் கண்டேன். மேலும், அவர் “உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும்! உலகில் நீங்கள் பொறுமையுடன் வாழ்ந்து வந்த காரணத்தால் இன்று இதற்குத் தகுதி பெற்றிருக்கின்றீர்கள்” என்ற ( அல்குர்ஆன்: 13: 24 ) வசனத்தை ஓதிக் கொண்டிருந்தார்.
நான் அவரிடம் “நீங்கள் இன்ன நபர் தானே? என்று கேட்டேன். அவர் ஆம்! என்றார். இந்த அந்தஸ்துகள் எவ்வாறு உங்களுக்கு கிடைத்தது? என்று கேட்டேன்.
அதற்கவர், “திண்ணமாக! அல்லாஹ்விடத்தில் சில அந்தஸ்துகள் இருக்கின்றன. அவைகளை “சோதனைகளின் போது பொறுமை காப்பதன் மூலமும், நல்ல நிலையில் இருக்கும் போது ரப்புக்கு நன்றி செலுத்துவதன் மூலமும், அந்தரங்கத்திலும், வெளிரங்கத்திலும் அல்லாஹ்வைப் பயப்படுவதன் மூலமும் தவிர பெற்றுக் கொள்ள முடியாது” என்று கூறினார்.
அல்லாஹ் புகழும் சிறப்புப் பண்பு.
“ நிச்சயாக! இப்ராஹீம் ஒரு முழுச் சமுதாயமாகத் திகழ்ந்தார். அவர் ஒரு போதும் இறைவனுக்கு இணைவைப்பவராய் இருந்ததில்லை. மேலும், அல்லாஹ்வின் அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்தக் கூடியவராய் இருந்தார். அல்லாஹ் அவரைத் தேர்ந்தெடுத்துக் கொண்டான். மேலும், நேரிய வழியில் அவரை செலுத்தினான்.” (அல்குர்ஆன்:16:120)
“திண்ணமாக! நூஹ் நன்றியுள்ள ஓர் நல்லடியாராகத் திகழ்ந்தார். (அல்குர்ஆன்:17:3)
”அதற்கு அல்லாஹ் மூஸாவே! என்னுடைய தூதுப் பணிகளுக்காகவும், என்னுடன் உரையாடுவதற்காகவும் மனிதர்கள் யாவரையும் விடவும் உம்மை நான் தேர்ந்தெடுத்து இருக்கின்றேன். எனவே, உமக்கு நான் வழங்கியிருப்பதைப் பெற்றுக் கொள்வீராக! மேலும், நன்றி செலுத்துவோராய்த் திகழ்வீராக!” என்று கூறினான்.
(அல்குர்ஆன்:7:144)
”நீங்கள் நிராகரிப்பீர்களாயின் திண்ணமாக அல்லாஹ் உங்களிடம் தேவையற்றவன். ஆனால், அவன் தன் அடியார்களிடம் நிராகரிப்பை விரும்புவதில்லை. மேலும், நீங்கள் நன்றி செலுத்துவீர்களாயின், அதனை அவன் உங்களுக்காக பொருந்திக் கொள்கின்றான்.” (அல்குர்ஆன்:39:7)
அடியார்களுடன் நன்றியுணர்வுடன் நடப்பது.
அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவது போன்று, அடியார்களிடமும் நன்றியுணர்வோடு நடந்து கொள்வது ஒரு இறை நம்பிக்கையாளனின் கடமையாகும்.
”எவர் மக்களிடம் நன்றியுணர்வோடு நடந்து கொள்ள மாட்டார்களோ, அத்தகையவர்கள் அல்லாஹ்வின் விஷயத்திலும் நன்றியுணர்வோடு நடந்து கொள்ளமாட்டார்கள்” என அருமை நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள். (நூல்:திர்மிதீ)
“எவருக்கு ஒரு உபகாரம் செய்யப்பட்டதோ, அவரிடம் வசதி இருந்தால் உபகாரம் செய்தவருக்கு அவர் பகரம் செய்யட்டும். இல்லையாயின் இன்னார் எனக்கு உபகாரம் செய்தார் என மக்களிடம் கூறி அவருக்காக துஆ செய்யட்டும். எவர் அவ்விதம் நடந்து கொள்கின்றாரோ அவர் நன்றி செலுத்திவிட்டார். எவர் மக்களிடம் மறைத்துப் பேசுவாரோ அவர் நன்றி கொன்றவாகி விட்டார்” என மாநபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.
(நூல்:திர்மிதீ)
“ஒருவருக்கு உபகாரம் செய்யப்பட்டு, அவர் உபகாரம் செய்தவருக்கு “ஜஸாக்கல்லாஹு கைரன்” என்று கூறுவாரானால், அவர் நல்ல முறையில் வாழ்த்துச் சொல்லி விட்டார்” என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள். (நூல்:திர்மிதீ)
ஆனால், இன்று உலகத்தில் பெரும்பாலானவர்கள் தமக்கு உபகாரம் செய்தவரை உதாசீனப்படுத்துகின்ற காட்சியை சாதாரணமாக கண்டுவருகின்றோம்.
ஒரு காலத்தில் இவண் உயர ஏணியாய், வாழ்க்கையில் கரை சேர்க்கும் துடுப்பாய், இருந்தவர்களை எட்டி உதைக்கும் பாவியாய் மாறிப்போனதை அன்றாடம் நம் வாழ்வில் சந்தித்து வருகின்றோம்.
அல்லாஹ் இந்த மனித சமூகத்திற்கு செய்த முதல் வஸிய்யத்தே “எனக்கு நீ நன்றியுணர்வுள்ளவனாய் நடந்து கொள்; உன் பெற்றோருக்கும் நன்றியுணர்வுள்ளவனாய் நடந்து கொள்.” (அல்குர்ஆன்:31:14) என்பது தான்.
ஆகவே, நம்முடைய அடியார்களுடனான தொடர்புகளில் முதலில் நாம் நம்முடைய பெற்றோர்களிடத்திலிருந்து துவங்க வேண்டும்.
அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் தங்களின் வாழ்க்கையில், தங்களுக்கு பக்கபலமாய், ஆதரவாய் உபகாரியாய் இருந்தவர்கள் எவருக்கும் பிரதி உபகாரம் செய்யாமல் இருந்ததில்லை. அவர்கள் எதிரிகளாக இருந்த போதிலும் சரியே!
அலீ {ரலி} அவர்களின் தாயார் அன்னை ஃபாத்திமா பிந்த் அஸத் {ரலி} அவர்கள் இறந்த போது, அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் அலீ {ரலி} அவர்களின் வீட்டிற்கு வந்தார்கள்.
அன்னை ஃபாத்திமா {ரலி} அவர்களின் தலைமாட்டில் அமர்ந்து கொண்டு “அன்னையே! நீங்களும் என் அன்னையைப் போன்றவர்கள் தான்! அல்லாஹ் உங்களுக்கு அருள் செய்வானாக! நீங்கள் பசித்திருந்து என் வயிற்றை நிரப்பினீர்கள்; நல்ல உணவு பதார்த்தங்களை நீங்கள் சாப்பிடாமல் எனக்கு உண்ணத்தருவீர்கள்; நீங்கள் கந்தலாடைகளை அணிந்து கொண்டு எனக்கு அழகிய ஆடைகளை அணிவித்து அழகு பார்த்தீர்கள். இவைகளையெல்லாம் அல்லாஹ்வின் திருப் பொருத்தத்திற்காகவும், அழிவே இல்லாத மறுமை வாழ்விற்காகவும் தான் நீங்கள் செய்தீர்கள் என்பதை நான் மிக அறிவேன்” என்று கூறினார்கள்.
பின்பு, கற்பூரம் கலந்து வைக்கப்பட்டிருக்கின்ற தண்ணீரில் தமது கைகளை முக்கியெடுத்து அதில் குளிப்பாட்டுமாறு ஏவினார்கள். பின்னர் தங்களது மேலாடையை கழற்றிக் கொடுத்து, அவர்களுக்கு கஃபனாக அணிவிக்குமாறு கூறினார்கள்.
பின்னர் மையவாடிக்குச் சென்று, கப்ர் குழியை மார்பளவு தோண்டினார்கள். அங்கு கிடந்த மண்ணை அப்புறப்படுத்தினார்கள். பின்னர் கப்ர் குழிக்குள் இறங்கி அங்கும் இங்குமாக புரண்டார்கள்.
பின்னர், ”அல்லாஹ் தான் உயிர் கொடுக்கின்றான்; அவனே மரணிக்கச் செய்கின்றான்; அவனோ மரணிக்காத நித்திய ஜீவனாக இருக்கின்றான்.”என்று கூறிவிட்டு, “அல்லாஹ்வே! எனது அன்னை ஃபாத்திமா பிந்த் அஸத் அவர்களின் பிழைகள மன்னித்தருள்வாயாக! அவர்களின் ஆதாரத்தை உறுதிபடுத்துவாயாக! அவர்களின் மண்ணறையை உன்னுடைய இந்த தூதரின் பொருட்டாலும், எனக்கு முன் சென்ற தூய நபிமார்களின் பொருட்டாலும் விசாலமாக்கித் தருவாயாக! நீ தான் கிருபையாளர்களுக் கெல்லாம் கிருபையாளனாக இருக்கின்றாய்!” என்று துஆ செய்தார்கள்.
பின்னர் தொழவைத்தார்கள்; அதற்குப் பிறகு அபூபக்ர் {ரலி} அப்பாஸ் {ரலி} ஆகியோருடன் இணைந்து மண்ணறையில் இறங்கி அடக்கம் செய்தார்கள்.
”அல்லாஹ்வின் தூதரே! இதற்கு முன் யாருடைய மண்ணறையின் முன் நீங்கள் இப்படி நடந்து கொண்டதில்லையே! தாங்கள் பிரத்தியேகமாக அன்னையவர்களின் மண்ணறையில் இப்படி நடந்து கொண்டதின் காரணம் என்னவோ?” என்று நபித்தோழர்கள் கேட்டபோது, அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் “அபூ தாலிப் அவர்களுக்குப் பிறகு என்னிடத்தில் அன்னையைப் போன்று வேறு யாரும் உபகாரத்தோடும், அரவணைப்போடும் நடந்து கொள்ளவில்லை.
ஆதலால் தான், சுவனத்து பட்டாடைகள் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டுமென ஆவலில் நான் என் ஆடையை கழற்றிக் கொடுத்தேன். கப்ரின் வேதனை இலகுவாக்கப் பட வேண்டும் என்கிற ஆசையில் நான் மண்னறையில் புரண்டு எழுந்தேன்” என்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.
(நூல்: தப்ரானீ, ஹ.எண்.6935, இஸ்தீஆப், 3/248, உஸ்துல் ஃகாபா, ஸியர் அஃலா மின் நுபலா)
இதே போன்று நயவஞ்சகன் அப்துல்லாஹ் இப்னு உபை இப்னு ஸலூல் மரணத்தின் போதும் மாநபி {ஸல்} அவர்கள் நடந்து கொண்டார்கள். ஆனால், மண்ணறையில் புரள வில்லை. அப்பாஸ் {ரலி} அவர்களுக்கு செய்த உபகாரத்திற்கு பிரதி உபகாரமாக…
(நூல்:இஸ்தீஆப், 2/76. இப்னு கஸீர், தவ்பா 80-ம் வசனத்தின் விளக்கம்)
நபி {ஸல்} அவர்களிடம் பத்ரில் கைதிகளாக பிடிக்கப் பட்ட குஃப்ஃபார்கள் விடுதலை சம்பந்தமாக, குறைஷ் தலைவர்கள் பேச வந்த போது இப்போது முத்இம் இப்னு அதீ அவர்கள் உயிரோடிருந்தால் அனைவரையும் விடுதலை செய்திருப்பேன். ஏனெனில், ஷுஃபே அபூ தாலிபில் அண்ணலாரை சமூக பகிஷ்கரிப்பு செய்து வைத்திருந்த போது அவரின் குதிரை மீதேற்றி ஊர் முழுக்க சுற்றிவந்தார்கள். மக்காவில் தொங்கவிடப்பட்டிருந்த தீர்மானத்தை கிழித்தெறிந்தவர்களில் அவரும் ஒருவர். (நூல்: ரஹீக்)
அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் அபூபக்ர் {ரலி} அவர்கள் குறித்து கூறும் போது, நான் இந்த உலகத்தில் எனக்கு உபகாரம் செய்த அனைவரின் விஷயத்திலும் நன்றியுணர்வோடு நடந்து விட்டேன். ஆனால் அபூபக்ர் {ரலி} அவர்கள் விஷயத்தில் அல்லாஹ் நாளை மறுமையில் வழங்குவான் என குறிப்பிட்டார்கள்.
(நூல்:புகாரி, பாபு ஃபள்லி அபீபக்ர் {ரலி}..)
ஆகவே, அல்லாஹ்வின் விஷயத்திலும், அடியார்கள் விஷயத்திலும் நன்றியுணர்வோடு நடந்து கொள்பவனே சிறந்த ஓர் இறை நம்பிக்கையாளனாவான்.
மனிதனை நன்றிமறந்தவனாக மாற்றும் விஷயத்தில் ஷைத்தான் கடுமையாக போராடிக் கொண்டிருக்கின்றான்.
“அதற்கு இப்லீஸ் கூறினான்: “என்னை நீ வழிகேட்டில் ஆழ்த்திய காரணத்தால், திண்ணமாக, நானும் இம்மனிதர்களை உன்னுடைய நேரான வழியில் செல்ல விடாமல் தடுப்பதற்காக தருணம் பார்த்துக் கொண்டிருப்பேன். பிறகு அவர்களின் முன்னாலும் பின்னாலும், வலப்புறமாகவும் இடப்புறமாகவும், அவர்களிடம் வந்து சுற்றி வளைத்துக் கொள்வேன். மேலும், அவர்களில் பெரும்பாலோரை நீ நன்றி செலுத்துவோராக காணமாட்டாய்.” (அல்குர்ஆன்:7:16,17)
கோபர்ட் கில்லி அமெரிக்காவின் மிகப்பெரிய மருத்துவராக புகழ் பெற்றவர். ஆனால், தனது சிறுவயதில் வறுமையுடன் போராடினார். தனது 13-வது வயதில் தான் வசித்த பகுதியில் உள்ள வீடுகளுக்கு பேப்பர் போடுவது, பால் போடுவது என பகுதி நேர வேலை செய்து வந்தார்.
ஆனாலும் வருமானம் போதவில்லை. ஒருமுறை கையில் இருந்த பணம் முழுவதும் தீர்ந்து போய், உண்ண உணவில்லாமல் திண்டாடினார். ஒரு ரொட்டித்துண்டு கிடைத்தாலும் போதும் பசியமர்த்திவிடலாம் என்று நினைத்தார்.
ஆனால், அதற்கான வழிதான் கிடைக்கவில்லை. ஒருவாறாக, தான் பேப்பர், பால் போடுகிற வீடுகளில் பிச்சையெடுக்கலாம் என்கிற முடிவுக்கு வந்து, ஒரு வீட்டின் கதவை தட்டினார். கதவைத் திறந்தது அவர் வயதில் இருந்த ஒரு சின்னப்பெண்.
அந்தப் பசியிலும் அவரின் சுயமரியாதை விழித்துக் கொண்டது. போயும் போயும் ஒரு சின்னப் பெண்ணிடம் பிச்சைக் கேட்பதா? என்று எண்ணினார். அதனால் நிலையை சமாளித்துக் கொண்டு “எனக்கு ஒரு கிளாஸ் தண்ணீர் கிடைக்குமா?” என்று கேட்டார். அந்த சின்னப்பெண் அவரின் கண்ணில் அவரின் பசியை விளங்கிக் கொண்டார்.
உள்ளே சென்ற அவள் ஒரு கோப்பை நிறைய பாலைக் கொண்டு வந்து கொடுத்தாள். பசியுடன் பாலை அருந்தியவர், “இதற்கு நான் எவ்வளவு பணம் கொடுக்க வேண்டும்?” என்று கேட்டார். தன் கவுரவத்தை சிறிதும் விட்டுக்கொடுக்காமல்.
அந்தச் சிறுமி நாங்கள் ஒன்றும் பால் வியாபாரம் செய்யவில்லை; உன் கண்னில் பசியின் கோரம் தெரிந்தது. அதனால் தான் பாலைக் கொடுத்தேன், காசுக்கு அல்ல என்றாள்.
காலம் தான் எத்தனை முகங்களுடையது. கோபர்ட் டாக்டர் படிப்பை முடித்தார். டாக்டராக பிரபலமான போது, மிகப் பெரிய மருத்துவமனை ஒன்றை நிறுவி, அதன் தலைமை மருத்துவரானார்.
அந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக ஒரு வயது முதிர்ந்த பெண்மணி நோயாளியாக வந்து சேர்ந்தார். அவள் நோயின் தீவிரம் அவசர சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நிலையில் இருந்தது.
ஒரு நாள் அவள் வார்டில் நுழைந்த டாக்டர் கோபர்ட், அவளது கேஷ் சீட்டைப் பார்த்தார். அவள் கொடுத்திருந்த முகவரியை பார்த்ததும் அப்படியே ஷாக்காகிப் போனார். அவளிடம் பேச்சுக் கொடுத்து அவள் முகவரி குறித்து விசாரித்தார். தாம் அந்த முகவரியில் கடந்த 60 ஆண்டுகளாக வசித்து வருவதாக அப்பெண்மணி குறிப்பிட்டார்.
மேற்கொண்டு எதுவும் பேசாமல் அங்கிருந்து கிளம்பினார். அப்போதே தமது மருத்துவ குழுவினர்களை அழைத்து, ”அப்பெண்மணிக்கு எத்தகைய உயர்சிகிச்சை செய்ய வேண்டுமானாலும் செய்யுங்கள். உடனே செய்யுங்கள். அவருக்கு தேவையான அத்துணை வசதிகளையும் செய்து கொடுங்கள்.” என்று உத்தரவிட்டார்.
அவருக்கு அளித்த ராஜ சிகிச்சையில் நோய் நீங்கி முழுமையாக குணமானாள். தலைமை டாக்டர் வந்து சென்றது முதலே, தமக்கு அளிக்கப் பட்ட சிகிச்சை முறையை அப்பெண்மணியும் அறிந்துவைத்திருந்தாள்.
ஆனாலும், தமக்கான பில் எவ்வளவு வருமோ என்கிற கவலையில் இருந்த போது, நீங்கள் டிஸ்சார்ஜ் ஆகலாம் என தலைமை மருத்துவர் கூறிவிட்டார்” என்று நர்ஸ் ஒருவர் கூறிவிட்டு, பில்லை நீட்டினார்.
பில்லை வாங்கிய அந்தப் பெண் அந்தச் சீட்டில் தலைமை டாக்டர் இப்படி எழுதியிருந்ததைப் பார்த்தாள். அதில் “இந்தப் பெண்ணின் சிகிச்சைக்கான பில் 40 வருடத்திற்கு முன்பே ஒரு கோப்பை பாலில் தீர்க்கப்பட்டு விட்டது.” என்று எழுதியிருந்தது.
அப்போது தான் அந்தப் பெண்னுக்கே அந்த தலைமை டாக்டர் யார் என்பது தெரியவந்தது. அவர் பசியின் கொடுமையில் சிக்கித் தவித்த போது கொடுத்த ஒரு கோப்பை பாலுக்கு இப்படி நன்றியுணர்வோடும் ஒருவரால் நடந்து கொள்ளமுடியுமா? என வியந்தவாறு அப்பெண்மணி வீட்டிற்குச் சென்றாள்.
(நன்றி:தினத்தந்தி குடும்பமலர்,4.8.2013, பக்கம்:11)
நன்றியுணர்வோடு வாழ்ந்திட அனுதினமும் அல்லாஹ்விடம் முறையிடுவோம்! ஏனெனில், அதுவும் கூட அல்லாஹ்வின் ஒரு அருட்கொடைதான்.
முஆத் பின் ஜபல் {ரலி} அவர்களை ஏமனுக்கு நபிகளார் அனுப்பிய போது, அவர்களிடம் ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னரும் “அல்லாஹ்வே! உன்னை நினைவு கூர்வதற்கும், உன் அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துவதற்கும், உன்னை அழகிய முறையில் வணங்குவதற்கும் எனக்கு உதவி புரிவாயாக!” என்று பிரார்த்திக்குமாறு வஸிய்யத் செய்தார்கள்.
நபி சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களும் அல்லாஹ்விடம் நன்றியுணர்வாடு வாழ்ந்திட உதவிபுரியுமாறு பிரார்த்தித்ததை அல்குர்ஆனின் 27:19-வது வசனம் கூறுகின்றது.
உமர் {ரலி} அவர்கள் ஆட்சிக்காலத்தில் ஒரு நாள் அவர்கள் பள்ளிக்குள் நுழந்தார்கள். அங்கே ஒருவர் அழுது துஆ கேட்டுக் கொண்டிருந்தார். அருகே சென்ற அவருக்கு ஆச்சர்யம் அவர் ”அல்லாஹ்வே! என்னை குறைவான எண்ணிக்கை கொண்டவர்களில் ஒருவனாக ஆக்குவாயாக! (அல்லாஹும் மஜ்அல்னீ மினல் அகல்லீன்) என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
அவர் துஆ கேட்டு முடிந்ததும், அவரை அழைத்து உமர் {ரலி} அவர்கள் விளக்கம் கேட்டார்கள். அதற்கவர் “அல்லாஹ் ஹூத் அத்தியாயத்தின் 40-வது வசனத்திலும், ஸபா அத்தியாயத்தின் 13-வது வசனத்திலும், ஸாத் அத்தியாயத்தின் 24-வது வசனத்திலும்” கூறியிருப்பதைத் தான் நான் என் துஆவில் கேட்டேன் என்றார்.
உடனே உமர் {ரலி} அவர்கள் “ நீர் உண்மையைத் தான் உரைத்தீர்” என்று கூறினார்கள்.
(நூல்: குலஃபாவுர் ரஸூல் {ஸல்}, பக்கம்:121)
அல்லாஹ்வின் பொருத்தத்தையும், அருட்கொடைகளையும் அள்ளித்தருகின்ற நன்றியுணர்வை நமதாக்குவோம்.
நன்றியுணர்வை வெளிப்படுத்தி நல்லதொரு வாழ்வை அமைத்திடுவோம்.
அல்லாஹ் நம் அனைவரையும் நன்றியுணர்வுள்ளவர்களாக ஆக்கியருள்புரிவானாக!
ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்! வஸ்ஸலாம்!!
நன்றி வெள்ளி மேடை பிலஸ்