ஆஷூரா தினம் 04-08-2022



ஆஷூரா தினம் (முஹர்ரம்-10)


முன்னுரை

وَلَيَالٍ عَشْرٍۙ‏

மேலும், பத்து இரவுகளின் மீதும்,

(அல்குர்ஆன் : 89:2)

இந்த வசனம் துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து, முஹர்ரம் மாதத்தின் முதல் பத்து, ரமலான் மாதத்தின் கடைசி பத்து, என்று அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள்.

அல்லாஹ்வின் மாதம் முஹர்ரம்
முஹர்ரம் மாதத்தை நபி (ஸல்) அவர்கள் ‘ஷஹ்ருல்லாஹ்’ அல்லாஹ்வின் மாதம் என்று கூறியுள்ளார்கள். பொதுவாக எல்லா மாதங்களும் அல்லாஹ்வின் மாதம்தான் என்றாலும் முஹர்ரம் மட்டும் ஏன் அல்லாஹ்வின் மாதம் என்று அழைக்கப்படுகின்றது என்றால்..

ஏதாவது ஒன்று அல்லாஹ்வுடன் இணைத்துக் கூறப்பட்டால் அது அப்பொருளின் சிறப்பைக் குறிப்பதாக இருக்கும்.

அல்லாஹ் ஸாலிஹ் (அலை) அவர்களின் ஒட்டகத்தை அல்குர்ஆன் ‘நாகதுல்லாஹ்’ – அல்லாஹ்வின் ஒட்டகம் என்று குறிப்பிடுகின்றது. எல்லா ஒட்டகங்களும் அல்லாஹ்வுடையதுதான். என்றாலும் ஸாலிஹ் நபியின் ஒட்டகம் விசேஷமானது என்று கூறவே அல்லாஹ்வின் ஒட்டகம் என்று கூறப்படுகின்றது. இந்த அடிப்படையில் நபி (ஸல்) அவர்கள் முஹர்ரம் மாதத்தை அல்லாஹ்வின் மாதம் என்று இம்மாதம் முக்கியத்துவமானது தனிச்சிறப்பானது என்பதை உணர்த்தியுள்ளார்கள்.

ஆஷூரா தினம் என்பது
முஹர்ரம் மாதத்தின் முதல் நாளிலிருந்து எண்ணி வரும் பத்தாம் நாளே ஆஷூராவுடைய நாள் என்று அழைக்கப்படுகிறது.

யூதர்கள் தங்கள் ஆண்டின் துவக்க மாதத்தை “திஷ்ரீ” என்று கூறுவார்கள்.

அறியாமைக்கால அரபியர்களின் மாதமும் யூதர்களின் மாதமும் ஒன்றாகவே வந்தது.

அவ்வகையில் அரபிகளின் முஹர்ரம் மாதத்தின் பத்தாம் நாள் வந்த அன்றே யூதர்கள் “திஷ்ரீ”மாதத்தின் பத்தாம் நாளும் வந்து கொண்டிருந்தது. எனவேதான் அது பத்தாம் நாள் என்ற பொருள்பட யவ்முல் ஆஷூரா என அழைக்கப்பட்டதாகக் கூறப்பட்டுகிறது.

ஆஷூரா நோன்பை நோற்க ஆர்வமூட்டல் :-

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆஷுரா தினத்தின் காலையில் அன்ஸாரிகளின் கிராமங்களுக்கு ஆளனுப்பி யார் நோன்பாளியாக காலைப் பொழுதை அடைந்தாரோ அவர் நோன்பை தொடரட்டும், யார் நோன்பு நோற்காதவராகக் காலைப் பொழுதை அடைந்தாரோ அவர் இன்றைய தினத்தின் மீதியுள்ள நேரத்தை உண்ணாமல் இருக்கட்டும் என அறிவிக்கச் செய்தார்கள். நாங்கள் அதன் பின் நோன்பு வைக்கலானோம். எங்கள் சிறுவர்களையும் நோன்பு நோற்க வைப்போம். இன்னும் நாங்கள் பள்ளிக்கும் செல்வோம், கம்பளியாலான விளையாட்டுப் பொருட்களை அவர்களுக்காக நாங்கள் செய்வோம். அவர்களில் யாரும் அழுதால் நோன்பு திறக்கும் வரை அந்த விளையாட்டுப் பொருளை அவர்களுக்காக கொடுப்போம்.’ என்று றுபைய்யிஃ பின்த் முஅவ்வத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள். (புகாரி, முஸ்லிம்)

இன்னும் ஒரு அறிவிப்பில்: அவர்கள் எங்களிடம் உணவு கேட்டால் அவர்களின் நோன்பை முழுமைபடுத்தும் வரை அவர்களின் பசியை போக்கும் அளவுக்கு அவர்களுக்கு அந்த விளையாட்டுப் பொருளை கொடுப்போம் என்று வந்திருக்கின்றது.

(பின்வரும் அறிவிப்பை) மக்களுக்கு அறிவிக்கும்படி அஸ்லம் கோத்திரத்தைச் சேர்ந்த ஒருவருக்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள், யாராவது உணவு உண்டிருந்தால் மீதியுள்ள நேரத்தை உண்ணாமல் இருக்கட்டும். யாராவது (இதுவரை) உண்ணவில்லையானால் அவர் நோன்பை நோற்கட்டும், காரணம் இன்றைய தினம் ஆஷுரா தினமாகும். (புகாரி, முஸ்லிம்)

முஸ்லிமின் இன்னும் ஒரு அறிவிப்பில்: கைபர் வாசிகள் (யூதர்கள்) ஆஷுரா தினத்தில் நோன்பு நோற்பவர்களாக இருந்தார்கள், அதை பெருநாள் தினமாகவும் கொண்டாடுவார்கள். அவர்களின் பெண்களுக்கு ஆபரணங்களையும் அழகிய ஆடைகளையும் அணிவிப்பார்கள். ஆகவே! நீங்கள் அந்த நாளில் நோன்பு நோற்றுக் கொள்ளுங்கள் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)


2087. அல்ஹகம் பின் அல்அஃரஜ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் ”ஸம்ஸம்” கிணற்றுக்கருகில் தமது மேல்துண்டைத் தலையணையாக வைத்துச் சாய்ந்திருந்தபோது அவர்களிடம் நான் சென்றேன். ”ஆஷூரா நோன்பு பற்றி எனக்குச் சொல்லுங்கள்!” என அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், ”முஹர்ரம் மாதத்தின் (முதல்) பிறையை நீர் கண்டதும் (அன்றிலிருந்து நாட்களை) எண்ணிக்கொள்வீராக! ஒன்பதாவது நாள் காலையில் நீர் நோன்பாளியாக இருப்பீராக!” என்று சொன்னார்கள். ”இவ்வாறுதான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்த (ஆஷூரா) நோன்பை நோற்றார்களா?” என்று நான் கேட்டேன். அதற்கு, ”ஆம்” என்று அவர்கள் விடையளித்தார்கள்.

ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 13.


நோன்புகளில் சிறந்தது முஹர்ரம் :-

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
‘ஆஷூரா எனும் இந்த நாளையும் (ரமளான் எனும்) இந்த மாதத்தையும் தவிர, வேறெதையும் ஏனையவற்றைவிடச் சிறப்பித்துத் தேர்ந்தெடுத்து நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்பதை நான் பார்த்ததில்லை!’
ஸஹீஹ் புகாரி : 2006.

عَنْ أَبِي هُرَيْرَةَ ؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: أَفْضَلُ الصِّيَامِ بَعْدَ رَمَضَانَ، شَهْرُ اللهِ الْمُحَرَّمُ، وَأَفْضَلُ الصَّلوةِ بَعْدَ الْفَرِيضَةِ، صَلوةُ اللَّيْلِ.
رواه مسلم باب فضل صوم المحرم،رقم:٢٧٥٥

ரமலானுடைய நோன்புக்குப் பிறகு நோன்புகளில் சிறந்தது முஹர்ரம் மாத நோன்பு, பர்ளுத் தொழுகைகளுக்குப் பிறகு தொழுகைகளில் சிறந்தது இரவுத் தொழுகையாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அறியாமை காலம் தொட்டே நோன்பு :-

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அறியாமைக் காலத்தில் குறைஷியர் ஆஷூரா (முஹர்ரம் பத்தாவது நாள்) அன்று நோன்பு நோற்றுவந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அந்நாளில் நோன்பு நோற்று வந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு நாடு துறந்து சென்றதும் (அங்கும்) ஆஷூரா நோன்பு நோற்றார்கள்; அந்நாளில் நோன்பு நோற்குமாறு (மக்களையும்) பணித்தார்கள்.

ரமளான் நோன்பு கடமையாக்கப்பட்டதும், நாடியவர் ஆஷூரா நோன்பு நோற்கலாம்; நாடியவர் அதை விட்டுவிடலாம்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

ஸஹீஹ் முஸ்லிம் : 2068.
ஸஹீஹ் புகாரி : 1893.


كان بعض السلف يصومون يوم عاشوراء في السفر، ومنهم ابن عباس وأبو إسحاق السبيعي والزهري،

· وكان الزهري يقول: ” رمضان له عدة من أيام أخر، وعاشوراء يفوت، ونص أحمد على أنه يصام عاشوراء في السفر”.

ஹஜ்ரத் இப்னு அப்பாஸ் ரலி போன்றவர்கள் பிரயாணத்திலும் ஆஷூரா நோன்பை நோற்றுள்ளார்கள்…

இமாம் ஜூஹ்ரீ ரஹ் அவர்கள் ரமளான் விடுபட்டால் களா உண்டு ஆனால் ஆஷூராவுக்கு களா இல்லை என்று இதை முக்கியத்துவப் படுத்தியுள்ளார்கள்.

இமாம் அஹ்மத் (ரஹ்) அவர்கள் பிரயாணத்திலும் ஆஷூரா நோன்பை நோற்க வலியுறுத்துகிறார்கள்.

யூதர்கள் நோன்பு வைத்தார்கள்
عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، لَمَّا قَدِمَ المَدِينَةَ، وَجَدَهُمْ يَصُومُونَ يَوْمًا، يَعْنِي عَاشُورَاءَ، فَقَالُوا: هَذَا يَوْمٌ عَظِيمٌ، وَهُوَ يَوْمٌ نَجَّى اللَّهُ فِيهِ مُوسَى، وَأَغْرَقَ آلَ فِرْعَوْنَ، فَصَامَ مُوسَى شُكْرًا لِلَّهِ، فَقَالَ «أَنَا أَوْلَى بِمُوسَى مِنْهُمْ» فَصَامَهُ وَأَمَرَ بِصِيَامِهِ

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனா வந்த போது யூதர்கள் ஆஷூரா நாளில் நோன்பு நோற்பதைக் கண்டார்கள். “இது என்ன நாள்” என்று கேட்டார்கள். “இது மாபெரும் நாள்! மூஸா (அலை) அவர்களை இந்த நாளில் தான் அல்லாஹ் காப்பாற்றினான். ஃபிர்அவ்னின் கூட்டத்தாரை (கடலில்) மூழ்கடித்தான். ஆகவே, மூஸா (அலை) அவர்கள் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தும் விதத்தில் இந்நோன்பை நோற்றார்கள்” என்று யூதர்கள் கூறினர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நான் அவர்களை விட மூஸாவுக்கு நெருக்கமானவன் என்று கூறிவிட்டு அந்த நாளில் தாமும் நோன்பு நோற்று, தம் தோழர்களுக்கும் நோன்பு நோற்கும்படி கட்டளை இட்டார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)

நூல் : புகாரி 3397

யூதர்களுக்கு மாற்றாக அமல் செய்தல் :-

நபி(ஸல்) அவர்கள் முஹர்ரம் 10 ஆம் தினத்தில் நோன்பு நோற்று மக்களையும் நோன்பு நோற்க ஏவிய போது நபித்தோழர்கள் அல்லாஹ்வின் தூதரே! இது யூதர்களும், கிறிஸ்தவர்களும் கண்ணியப்படுத்தும் நாளாயிற்றே! என்று கூறினார்கள். எதிர்வரும் ஆண்டில் இன்ஷா அல்லாஹ் 09 ஆம் நாளும் நோற்போம் எனக் கூறினார்கள். அடுத்த வருடம் முஹர்ரம் வருவதற்குள் நபி(ஸல்) அவர்கள் மரணித்துவிட்டார்கள்’

(அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள்

நூல்: முஸ்லிம்:1134, அபூதாவுத்: 2445)

இந்த இடத்தில் மற்றுமொரு முக்கியமான அம்சம் உணர்த்தப்படுகின்றது. முஸ்லிம் சமூகம் தனது தனித்துவத்தைப் பாதுகாப்பதன் அவசியம் இங்கே உணர்த்தப்படுகின்றது.

ஆஷூரா (முஹர்ரம்10) அன்று நோன்பு நோற்று கொள்ள்ளுங்கள். யஹூதிகளுக்கு மாற்றம் செய்யுங்கள். எனவே ஆஷூராவின் முன்போ/பின்போ ஒரு நாள் சேர்த்து நோன்பு நோற்று கொள்ள்ளுங்கள்.

நூல் : அஹ்மத் 2047.

அறிவிப்பாளர்:இப்னு அப்பாஸ்(ரலி)அவர்கள்.

யூதர்கள் போன்று பத்தாம் நாள் மட்டுமே நோன்பியிருக்காது 9, 10 அல்லது 10, 11 ஆகிய இரு நாட்களில் நோன்பியிருப்பதே விரும்பத் தக்கது.

ஆஷூரா நோன்பு வைப்பதில் மூன்று வகைகள் உண்டு.

1ம் வகை மூன்று நாள் நோன்பு.பிறை9,10,11.
யார் ஒருவன் முஹர்ரமில் 3 நோன்பு நோற்பானோ அவனுக்கு 9 வருடங்கள் நோன்பு நோற்ற நன்மை கிடைக்கும். அதிக நன்மைகள் பெற வேண்டும் என்ற ஆர்வத்தில் நோன்பு வைப்பது.

2ம் வகை இரண்டு நாள் நோன்பு பிறை 9 ,10 அல்லது 10,11.

யூதர்களுக்கு மாற்றம் செய்ய வேண்டும் என்று நபியவர்கள் கட்டளைக்கு ஏற்ப நோன்பு வைப்பது.

3ம் வகை ஒரு நோன்பு மட்டும் பத்தாம் நாள் மட்டும்.

குறைந்த பட்சம் ஒரு நோன்பாவது வைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் ஆஷுரா பத்தாம் நாள் மட்டும் வைத்துக் கொள்வது.

ஆஷுரா நோன்பின் பலன்
وَصِيَامُ يَوْمِ عَاشُورَاءَ أَحْتَسِبُ عَلَى اللَّهِ أَنْ يُكَفِّرَ السَّنَةَ الَّتِى قَبْلَهُ

ஆஷுரா நோன்பு அதற்கு முந்தைய ஆண்டு பாவத்திற்குப் பரிகாரமாக அமையும் என அல்லாஹ்வின் மீது நான் ஆதரவு வைக்கின்றேன்.

அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி),
நூல்: முஸ்லிம் 1976

وَسُئِلَ عَنْ صَوْمِ يَوْمِ عَاشُورَاءَ فَقَالَ « يُكَفِّرُ السَّنَةَ الْمَاضِيَةَ

நபி(ஸல்) அவர்களிடம் ஆஷூரா நோன்பு பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு, ‘அது கடந்த ஆண்டின் பாவத்திற்குப் பரிகாரமாகும்’ என்றார்கள்.

அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி),

நூல்: முஸ்லிம்(1977)

ஆஷூரா நோன்புகளின் சிறப்புகள் :-

1.பொதுவாக முஹர்ரம் மாதத்தின் நோன்பிருப்பவருக்கு அவருடைய ஒவ்வொரு நோன்புக்கும் முஹர்ரம் முப்பது நோன்புகளின் பலன்கள் அளிக்கப்படுமென அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹள்ரத் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

2.ஆஷூராவுடைய நாளில் நோன்பிருப்பவருக்கு (16000)பதினாயிரம் உயிர்த்தியாகிகளுடைய, (16000)பதினாயிரம் ஹஜ் ஹாஜிகளுடைய நன்மைகள் அளிக்கப்படும்.

ஆஷூராவுடைய நாளில் ஒரு நாள் நோயின் காரணமாக நோன்பிருக்க இயலாதாகிவிட்ட நபித் தோழர் ஹழ்ரத் அனஸ் இப்னு மாலிக்(ரலி) அவர்கள் அழுது கொண்டிருக்கக் கண்டு தோழர்கள் காரணம் வினவினார்கள். ஆஷூராவுடைய நாளில் நோன்பிருந்தவரை நரக நெருப்பு தீண்டாது என அண்ணல் நபி(ஸல்)அவர்கள் கூறியிருக்க, இவ்வாண்டு அவ்வாய்ப்பினை இழந்துவிட்டேன் என ஹழ்ரத் அனஸ் (ரலி) அவர்கள் கவலையுற்றார்கள்.


கஃபாவின் திரை போர்த்தப் படும் நாள் ஆஷுரா :-
ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

وَكَانَ يَوْمًا تُسْتَرُ فِيهِ الكَعْبَةُ

ரமளான் நோன்பு கடமையாக்கப்படுவதற்கு முன்னால் மக்கள் ஆஷுரா (முஹர்ரம் 10ம் நாளில்) நோன்பு நோற்று வந்தார்கள். அதுதான் கஅபாவுக்குப் புதிய திரை போடப்படும் நாளாக இருந்தது.

நூல் : புகாரி 1592

அமல்களால் அலங்கரீக்கப்படும் ஆஷூரா :-

புனித மாதங்களில் நாம் செய்யும் ஒவ்வொரு அமலுக்கும் பல மடங்கு சிறப்பு இருக்கிறது எனவே ஒவ்வொரு அமலுக்கும் தனிச்சிறப்பு என்று பலஹீனமான ஹதீஸ்களில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் கண்ணியமிக்க மாதங்களில் அதிக அளவில் அமல்கள் செய்யும் மாதம் என்பதை ஒவ்வொரு முஃமின்களும் விளங்கி கொள்வார்கள்.
இதன் அடிப்படையில் சில அமல் செய்யப்படுகிறது.

ஆஷூரா இரவில் அமல்கள் செய்வதின் சிறப்பு :-

அன்றைய இரவை அருள் நிறைந்த ஓர் இரவாகக் கணித்துக் கூறும் இமாம் கஸ்ஸாலீ(ரஹ்) அவர்கள், நஃபிலான அதிகப்படியான வணக்கங்களால் இந்த இரவை உயிர்ப்பிக்கும் படியாக தங்களின் இஹ்யா உலூமித்தீன் கிதாபில் பதிவு செய்கிறார்கள்.

ஆஷூராவுடைய இரவில் விழித்திருந்து வணங்கி, அன்றைய பகலில் நோன்பிருந்தவருக்கு அறுபதாண்டுகால வணக்கத்தின் பலன் கிடைப்பதாக பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்களென ஹழ்ரத் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

ஆஷூராவுடைய இரவில் விழித்திருந்து வணங்கும் பழக்கமுடையவருக்கு அவர் மரணம் குறித்து முன்கூட்டியே அறிவிக்கப்படுவான் என்று- ஆன்மீக மாமேதை முகையித்தீன் அப்துல் காதிர் ஆண்டகை (கத்) அவர்கள் எழுதுகிறார்கள்.

ஆஷூரா தினத்தில் உணவில் பரக்கத் :-

நபி நூஹ் (அலை) அவர்களின் கப்பல் ஏறக்குறைய ஆறு மாதம் பயனித்தது. பின் முஹர்ரம் மாதத்தில் ஆஷுரா நாளில் (பத்தாவது நாளில் )அது கரை ஒதுங்கியது. நூஹ் நபி அவர்களும் நோன்பு வைத்தார்கள். அவர்களுடன் இருந்தவர்களையும் இறைவனுக்கு நன்றி செலுத்துவதற்காக நோன்பு வைக்க ஏவினார்கள் ‘

ஆதாரம் : தப்ஸீர் தபரீ பாகம் 15 பக்கம் 335எண்:18187

நபி நூஹ் அலை அவர்கள் ஆஷூரா நோன்பு வைத்திருக்கும் போது நோன்பு திறப்பதற்கு தேவையான உணவு இருக்கவில்லை எனவே ஒவ்வொருவரிடமும் மிச்சம் மீதியிருந்த உணவுதானியங்கள் அனைத்தும் ஒன்று சேர்க்கப்பட்டு அதில் பிஸ்மில்லாஹ் என்று ஓதி உணவு சமைத்தார்கள். அல்லாஹு அக்பர் என்ன ஆச்சரியம் ! அனைவரும் வயிறுநிரம்ப உண்ணும் அளவுக்கு அதில் பரக்கத் உண்டானது.

அதைத்தான் அல்லாஹ் கூறுகிறான் :

قِيلَ يَا نُوحُ اهْبِطْ بِسَلَامٍ مِّنَّا وَبَرَكَاتٍ عَلَيْكَ وَعَلَىٰ أُمَمٍ مِّمَّن مَّعَكَ ۚ وَأُمَمٌ سَنُمَتِّعُهُمْ ثُمَّ يَمَسُّهُم مِّنَّا عَذَابٌ أَلِيمٌ

நூஹே ! சாந்தியுடன் கப்பலிலிருந்து இறங்குவீராக! உம்மீதும் உம்முடன் உள்ள மக்களின் மீதும் பெரும் பாக்கியங்கள் பரக்கத்துகள் உண்டாவதாக ! (11:48)

இதுதான் பிரளயத்திற்கு பிறகு பூமியில் சமைக்கப்பட்ட முதல் உணவு. இதன் அடிப்படையில்தான் ஆஷூரா நாளில் உறவுகளுக்கும் ஏழைகளுக்கும் பறிமாறி உண்டால் ஆண்டு முழுதும் பரக்கத் பெருகும்;. (இஆனா 2/267)

நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் கூறினார்கள்- எவர் ஆஷூரா தினத்தில் தன் குடும்பத்தினர்களுக்காக தாராளமாக செலவு செய்வாரோ அவருக்கு அந்த வருடம் முழுவதும் அல்லாஹ் செழிப்பை ஏற்படுத்துவான் (பைஹகீ)

இதனை நாங்கள் ஐம்பது அல்லது அறுபது ஆண்டுகள் சோதனை செய்து பார்த்து உண்மையெனக் கண்டோம்’ என்று சுப்யான் இப்னு உயைனா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியுள்ளார்கள்.

ஆஷூரா தின மற்ற அமல்கள்
1. ஆஷுராவுடைய தினத்தில் குளிப்பது. இதனுடைய பலன் என்னவென்றால் அந்த வருடம் முழுவதும் நோய் ஏற்படாது.

2. கண்ணுக்கு சுர்மா இடுவது. இதனுடைய பலன் கண் நோய் வராது.

3. ஸதகா செய்வது. ஏனென்றால் ஹதீஸில் வருகிறது. எவரொருவர் ஒரு திர்ஹம் ஸதகா செய்கிறாரோ அவருக்கு எழுநூறு ஆயிரம் திர்ஹம் ஸதகா செய்த நன்மை கிடைக்கும்.

4. அனாதைகளின் மீது இரக்கம் காட்டுவது. யாரொருவன் ஆஷுராவுடைய தினத்தில் அநாதைக்கு இரக்கம் காட்டுவானோ அந்த அனாதையின் ஒவ்வொரு தலைமுடியின் அளவுக்கு ஸவாபு கிடைக்கும்.

5. நோயாளிகளை சந்திப்பது. நோயாளிகளை சந்திப்பதனால் ஷஹீதுடைய அந்தஸ்து கிடைக்கும்.

6. அதிகமான நபிலான தொழுகைகளை தொழுந்து கொள்ளுங்கள்.

7. உறவை துண்டித்தவர்களுடன் சேர்ந்து நடக்க வேண்டும்.

8. குடும்பத்தார்களுக்கு செலவழிப்பது

ஆஷுரா தினத்தில் யார் தம் குடும்பத்தாரிடம் தாராளமாக நடந்து கொள்கிறாரோ அல்லாஹ் அந்த வருடம் முழுவதும் அவருக்கு தாராளமாக அருள் வழங்குகிறான்.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் ( ஷுஅபுல் ஈமான் 3795)

9. துஆ கேட்பது மிகுதியாக பாவ மன்னிப்பு கேட்பது.

ஆஷூரா தினத்தில் நடைபெற்ற முக்கிய சம்பவங்கள் :-

1) இன்று தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பொருட்டினால் ஆதம் (அலை) அவர்களின் குற்றத்தை அல்லாஹ் மன்னித்து அவர்களை ஏற்றுக் கொண்டான்.

ஆதாரம் : தப்ஸுர் குர்துபி பாகம் 1 பக்கம் : 324

2) இன்றுதான் நபி நூஹ் (அலை) அவர்களின் கப்பல் ஜூதி எனும் மலையில் தரை தட்டியது.

3) இன்றுதான் நபி மூஸா (அலை) அவர்களும், நபி ஈஸா (அலை) அவர்களும் பிறந்தார்கள்.

4) இன்றுதான் நம்ரூத் எனும் சர்வாதிகாரி நபி இப்றாஹீம் (அலை) அவர்களை நெருப்புக் கிடங்கில் எறிந்தான்.

5) இன்றுதான் நபி யூனுஸ் (அலை) அவர்களின் சமூகத்தை விட்டும் வேதனை நீக்கப்பட்டது.

சிராஜுல் முனீர் பாகம்:2 பக்கம் 38

6) இன்றுதான் நபி ஐயூப் (அலை) அவர்களின் துன்பம் நோய் நீங்கியது.

7) இன்றுதான் நபி யஃகூப் (அலை) அவர்கள் தனது மகன் நபி யூசுப் (அலை) அவர்களை இழந்ததால் இழந்திருந்த கண்பார்வையை மீண்டும் பெற்றார்கள்.

8)இன்றுதான் பாழ் கிணற்றில் எறியப்பட்டிருந்த நபி யூசுப் (அலை) அவர்கள் வெளியேற்றப்பட்டார்கள்.

9) நபி ஈஸா (அலை) அவர்களும் நபி இத்ரீஸ் (அலை) அவர்களும் வானத்தின் பக்கம் உயர்த்தப்பட்டார்கள்.

بَلْ رَفَعَهُ اللَّهُ إِلَيْهِ وَكَانَ اللَّهُ عَزِيزًا حَكِيمًا (158நிஸா)

وقال الضحاك: رفعه في يوم عاشوراء بين صلاتي المغرب والعشاء. تفسير السمرقندي بحر العلوم 1ஃ 355

நூல் : தப்ஸீர் சமர்கன்தி பாகம் 1 பக்கம் 355.

10) இன்றுதான் நபி யூனுஸ் (அலை) அவர்களை மீனின் வயிற்றில் இருந்து காப்பாற்றிய தினம்.

11) இன்றுதான் நபி தாவூத் (அலை) அவர்களின் பாவத்தை மன்னித்த தினம்.

12) இன்றுதான் நபிமார்களான மூஸா (அலை) , ஹாரூன் (அலை)
ஆகியோரின் பிரார்த்தனையை ஏற்றுக் கொண்ட தினம்.

13) இன்றுதான் நபி ஹிழ்ர் (அலை) அவர்களின் அறிவை அதிகப்படுத்திய தினம்.

14) இன்றுதான் சுவர்க்கம், நரகம் இரண்டையும் படைத்த தினம்.

15) ஜிப்ரீல், மீக்காயீல், இஸ்ராபீல், இஜ்ராயீல் (அலை) ஆகியோரை படைத்த தினம்.

16) இன்றுதான் அர்ஷ், குர்ஸீ, லவ்ஹு, கலம், முதலானவற்றை படைத்த தினம்.

17) இன்றுதான் சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் யாவையும் படைத்த தினம்.

18) இன்றுதான் வானங்கள், பூமி யாவையும் படைத்த தினம்.

19) இன்றுதான் உலகம் படைப்பதற்கு ஆரம்பிக்கப்பட்ட நாள்.

20) இன்றுதான் பூமியில் முதன் முதலாக மழை பெய்த நாள்.

21)இன்றுதான் அல்லாஹ்வின் அருள் பூமியிலுள்ளவர்களுக்கு முதன் முதலில் இறங்கியது.

22) இன்றுதான் நபி நூஹ் (அலை) அவர்களின் காலத்தில் ஏற்பட்ட பயங்கர வெள்ளப் பெருக்கின் பின்பு முதன் முதலாக இப்பூமியில் சமையல் செய்யப்பட்டது பத்தாம் நாளான ஆஷூறா தினம்தான். நபி நூஹ் (அலை) அவர்கள்தான் முதலில் சமையல் செய்தார்கள்.

23) இன்றுதான் சுலைமான் நபி (அலை) அவர்களுக்கு முழுவுலக ஆட்சியும் வழங்கப்பட்டது.

24) இன்று தான் நபி ஸகரிய்யா (அலை) அவர்களுக்கு நபி யஹ்யா (அலை) அவர்கள் மகனாகப் பிறந்தார்கள்.

25) இன்றுதான் நபி மூஸா (அலை) அவர்கள் பிர்அவ்னையும், அவனுடைய சூனியக்காரர்களையும் தோற்கடித்தார்கள்.

26) இன்றுதான் பிர்அவ்ன் நீரில் மூழ்கி இறந்தான்.

27) இன்றுதான் நபிகள் நாயகம் (ஸல்) அன்னவர்களின் பேரர் ஹுஸைன் (ரலி) ஷஹீதாக்கப்பட்டார்கள். அஹ்லுல் பைத் என்று அழைக்கப்படுகின்ற நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் குடும்பத்தார்கள் அநேகர் ஷஹீதாக்கப்பட்டார்கள்

இது ஒரு மிகப்பெரிய துயர சம்பவம். முஸ்லீம் சமூகத்தால் ஏற்றுக் கொள்ள முடியாத நிகழ்வு. இந்த துயர சம்பவம் குறித்து நாம் இந்த ஆஷூரா தினத்தை அனுக கூடாது.


ஆஷூரா தின இரவின் அமல்கள் :-
ஆஷூராவுடைய இரவில் நான்கு ரக்அத்துகள் நஃபிலாக ஒவ்வொரு ரக்அத்திலும் ஃபாத்திஹா சூராவை அடுத்து ஆயத்துல்குர்ஸீ ஒவ்வொரு முறையும் குல்ஹுவல்லாஹு சூராவை மும்மூன்று முறையும் ஓதித் தொழுது முடித்து, குல்ஹுவல்லாஹு சூராவை நூறு முறை ஓதி இறைஞ்சுபவர் பிழைகள் பொறுக்கப்பெற்று சுவனப் பேறுகள் அருளப் பெறுவார் என “ஃபலாயிலுஷ்ஷுஹூரு வஸ்ஸியாம்” என்னும் நூலில் எழுதப் பெற்றுள்ளது.

முடிவுரை

அல்லாஹ்வின் மாதம் முஹர்ரம், புனிதமிக்க மாதம் முஹர்ரம்,ஆஷூரா தினத்தின் சிறப்பு இப்படி அதிகளவில் சிறப்பித்துக் கூறப்படும் இந்த முஹர்ரம் மாதத்தையும் ஆஷூரா தினத்தையும் அமல்கள் செய்யாமல் நாம் கடந்து விடக் கூடாது.


Popular posts from this blog

ஹழ்ரத் அபூபக்கர் சித்திக் (ரலி)

எச்சரிக்கை! இந்த ஐந்து தீய குணங்கள் 30-10-2025

அற்புதங்கள் நிறைந்த ஆஷூரா தினம்...... 12-07-2024 04-07-2025