நபிகளின் பிறப்பு 30-9-2022.


நபி ﷺ அவர்களின் அற்புதப் பிறப்பும்!

நபி ﷺ அவர்களின் அளவிலாச் சிறப்பும்!!

வசந்த காலம் வந்துவிட்டது..
ரபிஉல் அவ்வல் மாதம் மனித இனத்திற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவொன்று. ஏனெனில் மனிதசமூகத்தை இருளிலிருந்து ஒளியின் பால், வழிகேட்டிலிருந்து நேர்வழியின் பக்கம் வழி நடத்த வந்த நபி முஹம்மது (ஸல்) அவர்கள் பிறந்த மாதம் இது.
‘ரபீஉன்’ என்றால் வசந்தம் என்பது பொருள். வசந்தகாலம் பூமிக்கு பசுமையையும் அழகையும் வனப்பையும் கொண்டு வருகின்றது.
அதுபோல் வசந்தம் எனப் பொருள்படும் ‘ரபிஉல் அவ்வலில்’ பிறந்த நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் மனித சமூகத்திற்கு சுபீட்சத்தையும்,வெற்றியையும்,மகிழ்ச்சியையும்,மனநிறைவையும், பிரகாசத்தையும் கொண்டுவந்தார்கள்.

பிறப்பதற்கு முன்பே பிரகாசமாய்...
''அரபுப் பாலைவனத்தில் அரிய மாணிக்கம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது;
அதன் ஒளி அகிலமனைத்தையும் ஆட்கொண்டுள்ளது ''
என்றான் ஆங்கிலக் கவிஞன்.
ஆம் உண்மைதான். ஆதம் அலைஹிஸ் சலாம் மண்ணிற்கும் தண்ணீருக்குமிடையில் இருக்கும்போதே ஒளியாக பிரகாசித்த பெருமானாரின் ஜோதி, பிறப்பின்போதும் காட்சி வழங்கி, வாழ்க்கையில் பல கட்டங்களில் பலருக்கும் பயன் தந்தது.

ஆதம் அலைஹிஸ்ஸலாமைப் படைப்பதற்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அன்னாரின் ஒளி அல்லாஹ்வை துதித்தவண்ணம் இருந்தது. ஆதமைப் படைத்து அவர்களின் முதுகந்தண்டில் அந்த நூரை செலுத்தினான். அதன் பிறகு அதன் நிலையை அண்ணலாரே விவரிக்கிறார்கள்: ஆதமின் முதுகந்தண்டின் மூலம் அல்லாஹ் என்னை புவியில் இறக்கினான். அதன் பின் நூஹ் அலைஹிஸ் ஸலாம், இப்றாஹீம் அலைஹிஸ் ஸலாம் இப்படியாக சங்கைக்குரியவர்களின் முதுகந்தண்டுகளிலும் பரிசுத்த கருவறைகளிலும் இறக்கி. பின்னர் என் பெற்றோர்கள் மூலம் என்னை அவதரிக்கச் செய்தான். அவர்கள் தீய நடத்தை உள்ளவர்களாக ஒருபோதும் இருந்ததில்லை 

நபி பிறப்பதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே அப்துல் முத்தலிபின் உடல் அமைப்பைக் கண்டு எமன் நாட்டு யூதப் பண்டிதர் ஒருவர் உம் ஒரு கையில் ஆட்சியையும் மறு கையில் நபித்துவத்தையும் காண்கிறேன் என்று முன்னறிவிப்பு செய்த நிகழ்ச்சி:
عن ابن عباس ، عن أبيه ، قال : قال عبد المطلب : « قدمت اليمن في رحلة الشتاء ، فنزلت على حبر من اليهود ، فقال لي رجل من أهل الزبور : يا عبد المطلب : أتأذن لي أن أنظر إلى بدنك ؟ فقلت : انظر ما لم يكن عورة . قال : ففتح إحدى منخري فنظر فيه ، ثم نظر في الآخر ، فقال : أشهد أن في إحدى يديك ملكا ، وفي الأخرى نبوة ،وأرى ذلك في بني زهرة ، فكيف ذلك ؟ فقلت : لا أدري . قال : هل لك من شاعة ؟ قال : قلت : وما الشاعة ؟ قال : زوجة . قلت : أما اليوم فلا . قال : إذا قدمت فتزوج فيهن . فرجع عبد المطلب إلى مكة ، فتزوج هالة بنت وهب بن عبد مناف ، فولدت له : حمزة ، وصفية . وتزوج عبد الله بن عبد المطلب ، آمنة بنت وهب ، فولدت رسول الله صلى الله عليه وسلم
நான் ஏமனில் தங்கிருந்போது ஒரு வேதப் பண்டிதர் என் உடல் அமைப்பை ஆராய்ந்துவிட்டு, “அப்துல் முத்தலிபே! உமது ஒரு கையில் அரசாட்சியையும் மறுகையில் நபித்துவத்தையும் நான் காண்கிறேன். அது பனூ ஸஹ்ரா குடும்பத்திலிருந்து ஏற்படலாம் என்று கருதுகிறேன்” என்றார். “அது எப்படி?” என்று நான் கேட்டேன்.
“எப்படி என்று தெரியாது. ஆனால் இது நடக்கும். உமக்குத் திருமணம் ஆகிவிட்டதா?
“தற்போது இல்லை.”
“அப்படியானால் நீர் ஊர் திரும்பியதும் அந்தக் குடுபத்தில் ஒரு பெண்ணை மணமுடித்துக் கொள்ளும்.”
அப்துல் முத்தலிப் மக்கா திரும்பி ஹாலா பின்த் வஹ்ப் என்ற பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார்கள்.......... அப்துல்லாஹ் அவர்கள் திருமணம் செய்த ஆமினா பின்த் வஹ்ப் அவர்கள் பனூ ஸஹ்ரா குடும்பத்தில் உள்ளவர்கள்தான்.

பிறந்த அன்று...
மக்காவில் வாழ்ந்த ஒரு யூதன் , நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பிறந்த அன்றிரவு குறைஷிகளின் கூட்டத்தில் வந்து இன்றிரவு உங்களில் யாருக்காவது ஒரு குழந்தை பிறந்துள்ளதா? என்று கேட்க, அல்லாஹ்வின் மீது ஆணையாக அப்படி ஒன்றும் நாங்கள் அறியவில்லையே/ என்றார்கள் குறைஷிகள். அவன் கூறினான்: நான் கூறுவதை நன்றாகக் கவனியுங்கள். இன்றிரவு உங்களில் ஒரு நபி பிறந்துள்ளார். அவரின் இரு புஜங்களுக்கிடையில் ஒரு அடையாளம் இருக்கும். அதில் சில ரோமங்கள் இருக்கும்.....
இதைக்கேட்டு அவர்கள் ஆச்சரியத்துடன் கலைந்து சென்றனர். தங்கள் இல்லம் சென்று மனைவிமார்களிடம் இதுபற்றி விசாரித்தபோது அப்துல்லாஹ்விற்கு ஒரு ஆண்குழந்தை பிறந்திருப்பதாகவும் முஹம்மது என்று பெயர் வைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தனர். அந்த யூதனிடம் தெரிவிக்கப்பட்டபோது அவன் வந்து பார்த்தான். அந்த குழந்தையின் முதுகில் நபித்துவ முத்திரையின் அடையாளம் இருப்பதைக் கண்டு மயக்கம்போட்டு விழுந்தான். மயக்கம் தெளிந்து எழுந்து கூறினான்;
அல்லாஹ்வின்மீது ஆணையாக! நபித்துவம் பனூ இஸ்ரவேலர்களிடமிருந்து எடுபட்டுவிட்டது. குறைஷிகளே! உங்களுக்கு ஒரு மகத்தான ஆட்சி அதிகாரம் கிடைக்கப்போகிறது; அந்த செய்தி கிழக்கிலிருந்து மேற்குவரை பரவப் போகிறது. (دلايل النبوة للبيهقي)

நபியின் நட்சத்திரம் உதயமானதைக் கூட நன்கு அறிந்திருந்த யூத அறிஞர்கள் 

عن حسان بن ثابت ، قال : « إني لغلام يفعة ابن سبع سنين أو ثمان ، أعقل كل ما رأيت وسمعت ، إذا يهودي بيثرب يصرخ ذات غداة (1) : يا معشر يهود فاجتمعوا إليه وأنا أسمع ، قالوا : ويلك ما لك ؟ قال : طلع نجم أحمد الذي ولد به في هذه الليلة »(المطالب العالية لابن حجر العسكلاني)

ஹஸ்ஸான் இப்னு தாபித் (ரலி) கூறுகிறார்கள்:
நான் ஏழு எட்டு வயது சிறுவனாக- சொல்வதைப் புரிந்துகொள்ளக்கூடிய பருவத்தில் இருக்கும்போது ஒருநாள் ஒரு யூதன் யத்ரிபின் (மதீனாவின்) வீதியில் நின்று அலறினான்: ''ஓ யூதர்களே!''
''என்ன ஆயிற்று உனக்கு? (ஏன் இப்படி கத்துகிறாய்?) என்று மற்ற யூதர்கள் ஒன்று கூடி வினவினர்.
'' இந்த இரவில் பிறக்கும் 'அந்த குழந்தைக்கான' வின்மீண் வானில் தோன்றிவிட்டது'' என்றான்.

ஆமினாவின் பிரசவத்தை நேரில் கண்ட ஒரு பெண்மணியின் வாக்குமூலம்:

அன்று இரவில் இல்லத்திலிருந்த அனைத்தும் ஒளிர்ந்தன; வின்மீண்கள் எங்கே அவை என்மீது விழுந்து விடுமோ என்று நான் எண்ணுகிற அளவுக்கு மிக நெருக்கமாக வந்தன:

عن عثمان بن أبي العاص ، قال : حدثتني أمي ، أنها شهدت ولادة آمنة بنت وهب رسول الله صلى الله عليه وسلم ، ليلة ولدته . قالت : « فما شيء أنظر إليه في البيت إلا نور ، وإني لأنظر إلى النجوم تدنو حتى إني لأقول : ليقعن علي »

பிறக்கும்போதே கண்மூடிப் பழக்கத்தை மண்மூடிப் புதைத்த மாநபி:
பிறந்த குழந்தை கண் திறந்ததும் வானைப் பார்க்கக்கூடாது என்று குழந்தையை சட்டியைக் கொண்டு மூடி வைப்பர். அதுபோலவே இந்த குழந்தையையும் மூடிவைத்துவிட்டு காலையில் வந்து பார்த்தபொழுது என்ன அதிசயம் அந்த சட்டி இரண்டாகக் உடைந்து கிடந்தது நபியவர்களோ விழி திறந்தவர்களாக வானை நோக்கியவர்களாக இருப்பதைக் கண்டு அதிசயப்பட்டனர்.

பிறப்பு வியப்பு :
 காலிரண்டும் முந்தினதாகவும், வானத்தை பார்த்தவர்களாகவும், புன் சிரிப்புடையவர்களாகவும் கண்களில் சுருமா வும் எண்ணையும் போடப்பட்டவர்களாகவும் அவர்கள் உதித்தார்கள். இன்னும் மற்றவர்கள் காணக்கூடாதென்பதற்காக அவர்களின் இடது கரத்தால் தன் இரகசிய இடத்தை மறைத்தவர்களாவும், கத்னா செய்யப்பட்டவர்களாகவும் இன்னும் அல்லாஹ் ஒருவனே என்று சைக்கினை செய்வதற்காக தன் வலது கரத்தின் கலிமா விரலை உயர்த்தினவர்களாகவும் அவர்கள் பிறந்தார்கள்.
கடைசி நபி பிறந்தவுடன்,
Ø இணை வைப்போர்களால் வணங்கப்பட்ட சிலைகள் குப்புற வீழ்தன.
Ø சைத்தான்களின் தலைவன் இப்லீஸின் சிம்மாசனம் உடைந்தது. அவன் தன் தலையில் மண்ணை வாரி போட்டுக் கொண்டான்.
Ø உண்மை வந்து விட்டது என அறிவிக்கும் சைகையாக முஸ்லிம்களால் பயன்படுத்தப்பட்ட, வற்றிருந்த ஸமாவா எனும் சிற்றாறு பொங்கி ஓடத் துவங்கியது.
Ø பொய் அழிந்து விடும் என அறிவிக்கும் சமிக்கையாக காபிர்களால் பயன்படுத்தப்பட்ட, ஸாவா விலிருந்த ஓடிக்கொண்டிருந்த புஹைரா எனும் சிறு கடல் வற்றியது.  
Ø ஆட்சி கைமாறி விட்டது என அறிவிக்கும் சைக்கினையாக கிஸ்ரா வின் கோட்டைகளும் 14 கொத்தலங்களும் தரையில் உடைந்து வீழ்தன.
Ø ஆயிரக்கணக்கான வருடங்களாக அணையாமல் இருந்த, பாரிஸீகளால் வணங்கப்பட்டுக் கொண்டிருந்த தீ அணைந்து விட்டது.
Ø சாஸ்திரிகளின் தவம் இயற்றும் மாளிகைகள் உடைந்தன
.சைத்தானும் அதன் குட்டிகளும் அண்டம் இழந்தன

நபி பிறந்தபொழுது அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் ரலி அவர்களின் தாயார் கண்ட அதிசயக் காட்சியை அவர்களே வர்ணிக்கிறார்கள்:
அந்த குழந்தை பிறந்து என் கரத்தில் வந்தபோது அந்த இல்லத்தின் மூலையிலிருந்து ஒரு அசரீரி முழங்கியது: “உம் இறைவன் உமக்கு அருள் புரிவானாக! ''
அதன் பின் அங்கு பிரகாசம் தோன்றியது. அதன் ஒளியில் சிரியாவின் கோட்டைகளெல்லாம் காட்சி அளித்தது

உலகத்தில் ஏழு பிறப்புகள் எதிர் பார்க்கப்பட்டது. ஆறு மனிதர்களில் ஒன்று உயிரினத்தில் என்று குர்ஆன் சொல்கிறது.

ஒவ்வொரு பிறப்புக்கு பின்னரும் மகத்தான பிண்ணனியும் வரலாறும் இருப்பதை அல்குர்ஆன் பதிவு செய்திருக்கிறது. ஒவ்வொரு பிறப்பும் அற்புதங்களைச் சுமந்ததாகவே அமைந்தது.

இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் சந்ததிகளான இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம் இஸ்ஹாக் அலைஹிஸ்ஸலாம் மற்றும் ஜகரிய்யா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மகனார் யஹ்யா அலைஹிஸ்ஸலாம் மூவருமே பிறப்பதற்கு முன்பே இவர்களின் பிறப்பு குறித்த முன்னறிவிப்பு - சோபனம் இறைவன் புறத்திலிருந்து வந்திருந்தது.

ஒரு பிறப்பு இரு வேறு சமுதாய மக்களின் (கிப்தீ - பனீ இஸ்ராயீல்) எதிர்பார்ப்பாக இருந்தது. அது மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பிறப்பு.

ஒரு பிறப்பு மாபெரும் ஒரு சமுதாயத்தின் (பனீ இஸ்ராயீல்) எதிர்பார்ப்பாக இருந்தது. அது ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பிறப்பு

உயிரினத்தின் அந்த பிறப்பும் கூட ஒரு சமுதாய மக்களால் எதிர்பார்க்கப்பட்டது. ஸாலிஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் காலத்தில் சூழ் ஒட்டகத்தில் இருந்து பிறந்த ஒட்டகக் குட்டி.

இதில் ஒரேயொரு பிறப்பு மட்டுமே உலகம் தோன்றுவதற்கு முன்பிருந்தே, ஆன்மாவின் உலகிலிருந்தே உலகம் தோன்றியதிலிருந்து லட்சத்துக்கும் மேற்பட்ட நபிமார்களால் அந்த நபிமார்களின் சமுதாய மக்களால் எதிர் பார்க்கப்பட்டது.

ஆம்! அந்த பிறப்பு மாநபி ﷺ அவர்களின் பிறப்பாகும்.

இந்த ஆறு பிறப்புகளுக்குப் பின்னாலும் அழுத்தமான ஒரு செய்தி நமக்கு உணர்த்தப்படுகிறது. பிறப்பு என்பது அவ்வளவு சாதாரணமாக கடந்து போகிற நிகழ்வு அல்ல. பிறப்பு என்பது சில போது சரித்திரமாகவும், சாதனையாகவும் அமையும்.

உலகத்தில் பிறக்கிற எல்லோரும் ஒரு முறையே தான் பிறக்கிறார்கள். ஆனால், ஒரேயொருவர் மட்டுமே பிறந்த அந்த கணத்தில் இருந்து இந்த உலகை விட்டு சென்றதன் பின்னரும் வாழ்ந்து கொண்டே இருக்கிறார்.

ஆம்! மாநபி ﷺ அவர்களின் ஒரு செயல், ஒரு சொல், ஒரு அங்கீகாரம், ஒரு நடைமுறை இந்த உம்மத்தில் ஒருவர் செயல் படுத்தும் போதெல்லாம் நமது நபி ﷺ அவர்கள் பிறந்து கொண்டே இருக்கிறார்கள். நம்முடன் வாழ்ந்து கொண்டே இருக்கிறார்கள். இதை பின் வரும் இரண்டு இறை வசனங்கள் நமக்கு உணர்த்துகின்றன.

وَاعْلَمُوْۤا اَنَّ فِيْكُمْ رَسُوْلَ اللّٰهِ‌ؕ


அறிந்துகொள்ளுங்கள்: நிச்சயமாக உங்களிடையே அல்லாஹ்வின் தூதர் இருக்கிறார் ( அல்குர்ஆன்: 49: 7 )

وَمَا كَانَ اللّٰهُ لِيُعَذِّبَهُمْ وَاَنْتَ فِيْهِمْ‌ؕ وَمَا كَانَ اللّٰهُ مُعَذِّبَهُمْ وَهُمْ يَسْتَغْفِرُوْنَ‏

(நபியே!) நீர் அவர்களிடையே இருக்கும் வரையிலும் அல்லாஹ் அவர்களை வேதனை செய்ய மாட்டான்; மேலும் அவர்கள் பாவமன்னிப்பைக் கேட்டுக் கொண்டிருக்கும் போதும் அல்லாஹ் அவர்களை வேதனை செய்பவனாக இல்லை. ( அல்குர்ஆன்: 8: 33 )

குர்ஆன் என்பது முக்காலத்திற்கும் பொருந்துகிற, நடைமுறையில் இருக்கிற வேதமாகும். நபி ஸல் அவர்கள் வாழ்ந்த காலத்தில் இந்த இரண்டு வசனங்களும் இறக்கியருளப்பட்டாலும் ஒரு ஸுன்னத் உயிர் கொடுக்கப்படும் போது உள்ளபடியே நம் உள்ளுணர்வோடு நமது நபி ﷺ அவர்கள் நம்முடன் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றார்கள்.

 

واذ اخذ الله ميثاق النبيين لما آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لتومنن به ولتنصرنه۔۔۔(3:81)

 

நபியே நினைவு கூறுவீராக! அல்லாஹ் நபிமார்களிடம் உறுதிமொழி வாங்கிய போது, நான் உங்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் கொடுத்திருக்கிறேன்.பின்னர் உங்களிடம் இருப்பதை உண்மைப்படுத்தும் தூதர் வருவார். நீங்கள் அவர் மீது திடமாக ஈமான் கொண்டு அவருக்கு உறுதியாக உதவி செய்ய வேண்டும் என்று கூறினான். ( அல்குர்ஆன்: 3: 81 )

உங்களுக்குப் பின்னால் ஒரு நபி வருவார். அவர்களை ஈமான் கொள்ள வேண்டும். அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று சொல்லப்பட்டு தான் அத்தனை நபிமார்களும் அனுப்பப்பட்டார்கள். அவர்களின் நபித்துவத்தின் ஒரு அம்சமாகவே அது இருந்தது.

உலகத்தில் பிறக்கிற எல்லோருக்கும் அவர்களின் பிறப்பு ஒரு நிகழ்வு ஆனால், நமது நபியின் ﷺ பிறப்பு ஒரு சிறப்பான அற்புதங்கள் பல நிறைந்த ஒரு சரித்திரம். வல்லோன் அல்லாஹ் அவர்களின் அற்புதமான பிறப்பை சுமந்து நிற்கும் இந்த மாதத்தில் அவர்களின் மாண்புகளையும், சிறப்புகளையும் விளங்கும் பாக்கியத்தைத் தந்தருள்வானாக! ஆமீன்!  

நபி ﷺ அவர்களின் பிறப்பு அருட்கொடை:-

நமது நபி ﷺ அவர்களின் பிறப்புக்காகவே இந்த உலகில் அல்லாஹ் மகத்தான ஒரு குடும்பத்தின் பிறப்பு நிகழ்வுகளையே நிகழ்த்தினான். அந்த குடும்பத்தில் இருந்தே உலகின் அநேக இறைத்தூதர்களை இந்த உலகிற்கு அருட்கொடையாக தந்தான்.

அந்தக் குடும்பம் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் ஹாஜர் அலைஹஸ்ஸலாம் ஸாரா அலைஹஸ்ஸலாம் இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம் இஸ்ஹாக் அலைஹிஸ்ஸலாம் ஆகியோர் ஆவார்கள்.

ஆம்! இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தன் மகன் இஸ்மாயில் (அலை) அவர்கள் உதவியுடன் இறையில்லம் கஃபாவைக் கட்டி எழுப்பி விட்டு இப்படி ஒரு துஆவையும் கேட்கிறார்கள்.

“எங்கள் இறைவனே! அவர்களிடையே உன்னுடைய வசனங்களை ஓதிக் காண்பித்து; அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக் கொடுத்து; அவர்களைத் தூய்மைப்படுத்தக் கூடிய ஒரு தூதரை அவர்களிலிருந்தே எழுந்திடச் செய்வாயாக - நிச்சயமாக நீயே வல்லமை மிக்கோனுமாகவும், பெரும் ஞானமுடையோனாகவும் இருக்கின்றாய்”. ( அல்குர்ஆன்: 2: 129 )

அல்லாஹ் இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் சந்ததியில் இருந்து நபி ﷺ அவர்களை நமக்கு வழங்கினான்.

இந்த உலகம் தோன்றும் முன்பிலிருந்தும் உலகம் தோன்றி நபிமார்கள் வருகை வந்ததிலிருந்து எப்படி நபி ﷺ அவர்களின் வருகை எதிர் பார்க்கப்பட்டதோ அதே போன்று உலகம் தோன்றியதிலிருந்து உலக அழிவு நாள் வரை அல்லாஹ் எனும் பெயருக்கு அடுத்த படியாக நபி ﷺ அவர்களின் பெயரும் சொல்லப்பட்டே வருகிறது.

 

لمَّا اقترفَ آدمُ الخطيئةَ قالَ يا ربِّ أسألُكَ بحقِّ محمَّدٍ لَما غفرتَ لي فقالَ اللَّهُ عزَّ وجلَّ يا آدمُ وكيفَ عرفتَ محمَّدًا ولم أخلُقْهُ قالَ لأنَّكَ يا ربِّ لمَّا خلقتني بيدِكَ ونفختَ فيَّ من روحِكِ رفعتُ رأسي فرأيتُ على قوائمِ العرشِ مكتوبًا لا إلهَ إلَّا اللَّهُ محمَّدٌ رسولُ اللَّهِ فعلمتُ أنَّكَ لم تضِف إلى اسمِكَ إلَّا أحبَّ الخلقِ إليكَ فقالَ اللَّهُ عزَّ وجلَّ صدقتَ يا آدمُ إنَّهُ لأَحَبُّ الخلقِ إليَّ وإذ سألتَني بحقِّهِ فقد غفرتُ لكَ ولولا محمَّدٌ ما خلقتُكَ

ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் தங்களின் குற்றத்திற்காக தவ்பா செய்யும் போது என் இறைவா! "முஹம்மத் ﷺ அவர்களை உரிமையாக்கி கேட்கிறேன். என் குற்றத்தை மன்னிக்க மாட்டாயா? என்றார்கள். ஆதமே! நான் இன்னும் அவரைப் படைக்கவே இல்லையே?, எப்படி முஹம்மதை ﷺ அறிந்து கொண்டாய்? என்று அல்லாஹ் கேட்டான். அப்போது ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் "என்னை உன் கையால் படைத்து உன் ரூஹை என்னில் ஊதிய போது என் தலையை உயர்த்திப் பார்த்தேன். பிரம்மாண்டமான அர்ஷின் தூண்களில் லாயிலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரஸூலுல்லாஹி என்று எழுதப்பட்டிருப்பதைப் பார்த்தேன். படைப்புக்களில் உனக்கு மிகவும் பிரியமானவரைத் தவிர வேறு யாரையும் உன் பெயரோடு நீ இணைக்க மாட்டாய் என்று நான் அறிவேன்" எனவே அவர் உனக்கு மிகவும் பிரியமானவர் என்பதை அறிந்து கொண்டு அவர்களுக்காக என்னை மன்னித்து விடு என்று கேட்டேன் என்றார்கள். அதற்கு அல்லாஹ், ஆம்! ஆதமே! நீ உண்மையே சொன்னாய்! படைப்புகளிலேயே அவரே எனக்கு மிகவும் பிரியமானவர்! அவரின் உரிமையால் மன்னிப்பை கேட்டதினால் உன்னை நான் மன்னித்து விட்டேன்! அவர் இல்லையென்றால் உன்னை நான் படைத்திருக்க மாட்டேன்! என்று அல்லாஹ் கூறினான். ( நூல்: தலாயிலுன் நுபுவ்வா : 5/489 )

நபியின் பிறப்பு பேருபகாரம்:-


இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு இரண்டு ஆண் மக்கள். ஹாஜரா (அலை) அவர்கள் மூலம் பிறந்த இஸ்மாயீல் (அலை) சாரா (அலை) அவர்கள் மூலம் பிறந்த இஸ்ஹாக் (அலை). அரபு நாட்டினர் இஸ்மாயீல் (அலை) அவர்களின் வழி வந்தவர்கள். 

ஆரம்ப கால யூத, கிறிஸ்தவர்கள் இஸ்ஹாக் (அலை) அவர்களின் வழி வந்தவர்கள். இப்ராஹீம் (அலை) அவர்களின் மகன் இஸ்மாயீல் (அலை) அவர்களிலிருந்து இறுதி நபி صلى الله عليه وسلم அவர்களது காலம் வரை சுமார் 3500 ஆண்டுகால வரலாற்றின் இடையில் அரபுகளிடம் ஒரு நபியும் வரவில்லை. 

ஆனால், இதே காலகட்டத்தில் இஸ்ஹாக் (அலை) அவர்களிலிருந்து ஈஸா (அலை) அவர்களது காலம் வரை ஆயிரக்கணக்கான நபிமார்கள், குர்ஆன் சிறப்பித்துக் கூறும் பனீ இஸ்ரவேலர்களிடையே தோன்றியுள்ளனர்.

சுமார் 3500 ஆண்டுகள் இடைப்பட்ட காலத்தில் மக்களை நேர்வழிப் படுத்தும் ஒரு நபியும் அரபுகளிடையே தோன்றவில்லை என்றால் அவர்கள் எந்த அளவு வழிகேட்டிலும் மூட நம்பிக்கையிலும், மூடச்சடங்கு சம்பிரதாயங்களிலும் மூழ்கி இருந்திருப்பார்கள் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

நபி صلى الله عليه وسلم அவர்கள் அந்த மக்களிடையே சத்திய மார்க்கத்தை எடுத்து வைக்கும்போது அந்த அரபு மக்களிடையே இருந்த அறியாமைக்கு அவர்களுக்கு முன் வாழ்ந்த வேறு எந்த சமூகத்தாரையும் உதாரணம் காட்ட முடியாது. 

அந்த அளவுக்கு அவர்களை விட வழிகேட்டில், மூட நம்பிக்கைகளில், சடங்கு சம்பிரதாயங்களில் வேறு எந்த சமூகமும் அன்று உலகில் இருக்கவில்லை. 365 சிலைகளை ஏக இறைவனின் வீடான கஃபத்துல்லாஹ்வின் உள்ளே வைத்து வணங்கி வழிபட்டு வந்தார்கள். 

குடி, விபச்சாரம், கொலை, கொள்ளை போன்றவற்றில் மூழ்கிக் கிடந்தார்கள்.. பஞ்சமா பாதகங்கள் அனைத்தும் அவர்களிடம் வீர, தீரச் செயல்களாகப் பெருமை பேசப்பட்டு வந்தன.

பல்லாண்டு ஊற வைத்த மதுப்பீப்பாய்கள் இருப்பது கொண்டு பெருமை பேசினர். குடம் குடமாக குடித்த பின்னரும் நிதானமாக இருப்பதாக பெருமை பேசினர். தங்களுடைய வாட்களால் எத்தனை பேருடைய தலைகளைச் சீவியுள்ளோம் என்று பெருமை பேசினர்.

தந்தைக்கு பல மனைவிகள் என்றால் அந்தத் தந்தை இறந்தவுடன் அவனது பிள்ளைகள் அந்தத் தந்தையின் மனைவிகளை பங்கு போட்டு தங்களின் மனைவிகளாக ஆக்கிக் கொண்டு பெருமை பேசினர். இப்படி ஆகாத செயல்கள் அத்தனைகளிலும் பெருமை பேசினர்.

இப்படி பங்கு போடுவதிலும், வேறு பல காரியங்களிலும் மனவருத்தம் ஏற்பட்டுவிட்டால், அதற்காகத் தலைமுறை தலைமுறையாகச் சண்டையிட்டுக் கொண்டார்கள். 

அன்றைய அரபு நாட்டில் பல்வேறு பிரிவினர்களாக, குழுக்களாகப் பிரிந்து நின்று பெறுமை பேசுவதோடு, மற்றப் பிரிவினரை இழிவாக, கேவலமாக எண்ணி ஏகத்தாளம் பேசுவதோடு, அதனால் போட்டி பொறாமை ஏற்பட்டு காலமெல்லாம் சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள். இப்படி மனித உள்ளம் படைத்தவர்கள் செய்யக் கூடாத அத்தனைக் காரியங்களையும், சுருக்கமாகச் சொன்னால் மனிதர்கள் எனும் பெயரில் மிருகத்துக்கு நிகராக வாழ்ந்து வந்தார்கள்.

இவர்களின் இந்த இழி நிலைகள் பலதை குறித்து அல்குர்ஆனின் அல்அன்ஆம் அத்தியாயத்தில் 136 – வது வசனத்தில் இருந்து 165 –வது வசனம் வரை தொடர்ச்சியாக அல்லாஹ் குறிப்பிடுகிறான்.

மனித வர்க்கத்தின் இழிவான, மோசமான ஒரு நிலையே இல்லை என்றும் சொல்லும் அளவிற்கு வீழ்ந்து கிடந்தனர். 

இந்த நிலையில் தான் இறுதி நபியாக அந்த அரபு மக்களிடையே நமது நபி ஸல் வரும்போது அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நபி ஸல் அவர்களின் பிறப்பை வருகையை பேருபகாரம் என்கிறான்.

நபி {ஸல்} அவர்களின் பிறப்பு ஈடேற்றம்:-

ஹிஜ்ரி 8 ஷவ்வால் மாதம் நடைபெற்ற யுத்தம் தான் ஹுனைன் யுத்தமாகும். மக்கா வெற்றி அரபிகள் யாரும் எதிர்பார்த்திடாத வெற்றியாகும்.                                                         

இதை அக்கம் பக்கத்திலுள்ள அநேக கூட்டத்தினர்கள் அதை ஒப்புக்கொள்ளமுடியாமல் ஹவாஸின், ஸகீஃப் ஆகிய கோத்திரத்தார்களின் தலைமையில் முஸ்லிம்களை எதிர்த்திட அணி திரண்டனர்.                                           

முஸ்லிம்களின் மக்கா வெற்றியை ஏற்றுக்கொள்வதை பெரும் தன்மானப் பிரச்சனையாகவும், கண்ணியக்குறைவாகவும் கருதிய கைஸ், ஜுஷம், நஸ்ர், ஸஅத் இப்னு பக்ர், ஆகிய கோத்திரத்தாரும் கைகோர்த்துக் கொண்டனர்.

இறுதியில் முஸ்லிம்கள் வெற்றி பெற்றனர்.ஹுனைன் யுத்தத்தில் முஸ்லிம்களுக்கு ஏராளமான கனீமத் பொருட்கள் கிடைத்தன. 

கிட்டத்தட்ட ஆராயிரம் அடிமைகள், இருபத்தி நான்காயிரம் ஒட்டகைகள், நாற்பதாயிரத்திற்கும் அதிகமான ஆடுகள், நான்காயிரம் ஊக்கியா வெள்ளிகள், கனீமத்தாக {வெற்றிப் பொருளாக} கிடைத்தன. கனீமத் பொருட்களை மாநபி {ஸல்} அவர்கள் பங்கு வைத்த போது, இக்ரிமா இப்னு அபூஜஹ்ல் {ரலி}, அபூ சுஃப்யான் {ரலி} போன்றோருக்கும், இன்னும் சில முஹாஜிரீன்களுக்கும் கொஞ்சம் அதிகமாகக் கொடுத்தார்கள்.

 புதிதாக இஸ்லாமைத் தழுவிய குறைஷித் தலைவர்களுக்கும் நிறைய கொடுத்தார்கள்.  

ஆனால், நீண்ட காலமாக தங்களோடு உற்ற துணையாக இருந்த அன்ஸாரிகளுக்கு அந்த அளவு வழங்கவில்லை. இதனால் மன வருத்தமடைந்த சில அன்ஸாரிகள் பலவாறாகப் பேசினர். அவர்களில் சிலர் “ அல்லாஹ்வின் மீது சத்தியமாக நபி {ஸல்} அவர்கள் தங்களது கூட்டத்தினருக்கே வாரி வாரி வழங்குகின்றார்கள்” என்று பேசினார்கள்.    

    فعندما دخل عليه سعد بن عبادة، قال: يا رسول الله إن هذا الحي من الأنصار قد وجدوا عليك في أنفسهم؛ لما صنعت في هذا الفيء الذي أصبت، قسمت في قومك وأعطيت عطايا عظاماً في قبائل العرب، ولم يكن في هذا الحي من الأنصار منها شيء! قال

 (فَأَيْنَ أَنْتَ مِنْ ذَلِكَ يَا سَعْدُ) قال

 يا رسول الله، ما أنا إلا من قومي قال

 (فَاجْمَعْ لِي قَوْمَكَ فِي هَذِهِ الْحَظِيرَةِ) قال

 فجاء رجال من المهاجرين فتركهم فدخلوا، وجاء آخرون فردهم، فلما اجتمعوا أتى سعد فقال: قد اجتمع لك هذا الحي من الأنصار، فأتاهم رسول الله -صلى الله عليه وسلم-، فحمد الله وأثنى عليه بما هو أهله، ثم قال

 (يَا مَعْشَرَ الْأَنْصَارِ: مَا قَالَةٌ بَلَغَتْنِي عَنْكُمْ؟ وَجِدَةٌ وَجَدْتُمُوهَا فِي أَنْفُسِكُمْ؟ أَلَمْ آتِكُمْ ضُلّالًا فَهَدَاكُمْ اللّهُ بِي؟ وَعَالَةً فَأَغْنَاكُمْ اللّهُ بِي؟ وَأَعْدَاءً فَأَلّفَ اللّهُ بَيْنَ قُلُوبِكُمْ؟) قَالُوا

 اللّهُ وَرَسُولُهُ أَمَنّ وَأَفْضَلُ. ثُمّ قَالَ (أَلَا تُجِيبُونِي يَا مَعْشَرَ الْأَنْصَارِ؟) قَالُوا

 بِمَاذَا نُجِيبُك يَا رَسُولَ اللّهِ؟ لِلّهِ وَلِرَسُولِهِ الْمَنّ وَالْفَضْلُ. قَالَ

 (أَمَا وَاَللّهِ لَوْ شِئْتُمْ لَقُلْتُمْ فَلَصَدَقْتُمْ وَلَصُدّقْتُمْ

 "أَتَيْتَنَا مُكَذّبًا فَصَدّقْنَاكَ، وَمَخْذُولًا فَنَصَرْنَاكَ، وَطَرِيدًا فَآوَيْنَاكَ، وَعَائِلًا فَآسَيْنَاكَ"، أَوَجَدْتُمْ عَلَيّ يَا مَعْشَرَ الْأَنْصَارِ فِي أَنْفُسِكُمْ فِي لُعَاعَةٍ مِنْ الدّنْيَا تَأَلّفْتُ بِهَا قَوْمًا لِيُسْلِمُوا؟، وَوَكَلْتُكُمْ إلَى إسْلَامِكُمْ، أَلَا تَرْضَوْنَ يَا مَعْشَرَ الْأَنْصَارِ أَنْ يَذْهَبَ النّاسُ بِالشّاءِ وَالْبَعِيرِ وَتَرْجِعُونَ بِرَسُولِ اللّهِ إلَى رِحَالِكُمْ؟ فَوَاَلّذِي نَفْسُ مُحَمّدٍ بِيَدِهِ لَمَا تَنْقَلِبُونَ بِهِ خَيْرٌ مِمّا يَنْقَلِبُونَ بِهِ، وَلَوْلَا الْهِجْرَةُ لَكُنْتُ امْرَءًا مِنْ الْأَنْصَارِ، وَلَوْ سَلَكَ النّاسُ شِعْبًا وَوَادِيًا، وَسَلَكَتْ الْأَنْصَارُ شِعْبًا وَوَادِيًا لَسَلَكْتُ شِعْبَ الْأَنْصَارِ وَوَادِيَهَا، الْأَنْصَارُ شِعَارٌ وَالنّاسُ دِثَارٌ5، اللّهُمّ ارْحَمْ الْأَنْصَارَ وَأَبْنَاءَ الْأَنْصَارِ، وَأَبْنَاءَ أَبْنَاءِ الْأَنْصَارِ) فبكى القوم حتى أخضلوا لحاهم وقالوا

 رضينا برسول الله -صلى الله عليه وسلم- قسماً وحظاً، ثم انصرف رسول الله -صلى الله عليه وسلم- وتفرقوا                                             

 சூழ்நிலை வேறு விதமாக சென்று கொண்டிருப்பதை உணர்ந்த ஸஅத் இப்னு உப்பாதா {ரலி} அவர்கள் வேகமாக நபிகளாரிடம் வந்து “அன்ஸாரிகளில் சிலர் உங்களின் மீது வருத்தமாக உள்ளனர். உங்களுக்கு கிடைத்த கனீமத் பொருட்களில் உங்கள் கூட்டத்தாருக்கும், ஏனைய கோத்திரத்தாருக்கும் வாரி வழங்குனீர்கள்.

ஆனால், அன்ஸாரிகளுக்கு அந்த அளவுக்கு நீங்கள் வழங்கவில்லை. இது தான் அவர்களின் மன வருத்தத்திற்கு காரணம்” என்றார்கள். அப்போது நபி {ஸல்} அவர்கள் “ஸஅதே! நீங்கள் அது குறித்து என்ன நினைக்கின்றீர்கள்?” என்று கேட்டார்கள்.                                  

நானும் எனது கூட்டத்தாரில் ஒருவன் தானே!” என்று ஸஅத் {ரலி} அவர்கள் பதில் கூறினார்கள்.                                  

 உடனே நபி {ஸல்} அவர்கள் “சரி எனக்காக உங்கள் கூட்டத்தார்களை தடாகத்திற்கருகே ஒன்று சேர்த்துவிட்டு என்னை வந்து அழையுங்கள்” என்றார்கள்.                            

அங்கிருந்து வெளியேறிய ஸஅத் {ரலி} அவர்கள் உடனடியாக தமது கூட்டத்தாரிடம் வந்து குறிப்பிட்ட தடாகத்தில் ஒன்று கூடுமாறு கட்டளையிட்டார்கள். அனைவரும் ஒன்று கூடினார்கள்.

அங்கே சில முஹாஜிர்களும் வந்தார்கள். அவர்களுக்கும் அங்கே அமர்வதற்கு ஸஅத் {ரலி} அவர்கள் அனுமதி வழங்கினார்கள்.   

 இது கேள்விப் பட்டு மேலும் சில முஹாஜிர்கள் அங்கு வந்தனர். ஆனால், ஸஅத் {ரலி} அவர்கள் கூட்டத்தில் பங்கெடுக்க அவர்களுக்கு அனுமதி மறுத்து விட்டார்கள். 

அனைவரும் ஒன்று சேர்ந்ததும், நபி {ஸல்} அவர்களிடம் சென்று ஸஅத் {ரலி} அவர்கள் “வாருங்கள்! அல்லாஹ்வின் தூதரே! அனைவரும் ஒன்று சேர்ந்து விட்டனர்” என்றார்கள்.                                                      

 நபி {ஸல்} அவர்கள் அங்கு வந்ததும் அல்லாஹ்வை புகழ்ந்துவிட்டு “ ஓ! அன்ஸாரிகளே! உங்களைப் பற்றி என்னிடம் சொல்லப்பட்ட செய்தி உண்மையா? என் மீது நீங்கள் கோபம் அடைந்துள்ளீர்களாமே?...                                                        

 “நீங்கள் வழி கேட்டில் இருக்கும் போது நான் உங்களிடம் வரவில்லையா? அல்லாஹ் என்னைக் கொண்டு உங்களுக்கு நேர்வழி காட்டினான்.

  நீங்கள் வறியோர்களாக, ஏழைகளாக இருந்தீர்கள். என்னைக் கொண்டு அல்லாஹ் உங்களை செல்வச் சீமான்களாக்கினான். நீங்கள் ஒருவருக்கொருவர் பகைவர்களாகவும், எதிரிகளாகவும் இருந்தீர்கள். என்னைக் கொண்டு அல்லாஹ் உங்களுக்கிடையே நேசத்தை ஏற்படுத்தினான்.” என்று கூறினார்கள். அதற்கு அன்ஸாரிகள் “ஆம்! அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் கூறியது முற்றிலும் உண்மைதான்.”                                                      

அல்லாஹ்வும் அவன் தூதரும் எங்கள் மீது பெருங் கருணையோடும், பேருபகாரத்தோடும் நடந்து கொண்டனர்.” என்று கூறினார்கள்.

பின்னர் மீண்டும் அன்ஸாரிகளை நோக்கி நபி {ஸல்} அவர்கள் “ஓ! அன்ஸாரிகளே! நீங்கள் எனக்கு பதிலளிக்க மாட்டீர்களா?” என்று கேட்டார்கள்.  

அதற்கு அன்ஸாரிகள் “ அனைத்து கருணையும், பேருபகாரமும் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்குமே உரித்தானது எனும் போது நாங்கள் உங்களிடம் என்ன பதில் கூறப் போகிறோம்? என்றார்கள்.

அதற்கு மாநபி {ஸல்} அவர்கள் “அறிந்து கொள்ளுங்கள்! அல்லாஹ்வின் மீது சத்தியமாக! பொய்ப்படுத்தப்பட்டவராக நீங்கள் எங்களிடம் வந்தீர்கள்; நாங்கள் உங்களை உண்மை படுத்தினோம். மக்களால் கைவிடப்பட்ட நிலையில் எங்களிடம் வந்தீர்கள்; நாங்கள் தான் உங்களுக்கு உதவியும், உபகாரமும் செய்தோம். சொந்த மக்களால் விரட்டப்பட்ட நிலையில் வந்தீர்கள்; நாங்கள் தான் உங்களுக்கு அடைக்கலம் கொடுத்தோம். நீங்கள் பெரும் சுமையுடன் வந்தீர்கள்; நாங்கள் தான் உங்களுக்கு ஆதரவளித்தோம்.” என்று ஒருவேளை நீங்கள் பதில் கூறலாம். 

அப்படிக் கூறினால் அதுவும் உண்மைதான். அதையும் நாம் ஏற்றுக்கொள்கின்றோம்.   

 அன்ஸாரிகளே! இவ்வுலகின் அற்பப் பொருள் விஷயத்திற்காகவா நீங்கள் என் மீது கோபப்பட்டீர்கள்?” ஒரு விஷயத்தை நீங்கள் மறந்து விட்டீர்கள். “மக்களில் சிலரின் இஸ்லாம் பூரணமாக வேண்டும் என்பதற்காக நான் அப்படி வாரி வாரி வழங்கினேன்.

 உங்களை உங்களது சங்கையான இஸ்லாமிய மார்க்கத்திடமே ஒப்படைத்து விட்டேன். {உங்களது இஸ்லாம் மிகவும் வலிமை மிக்கது என்பதை நான் அறிவேன்}     

அன்ஸாரிகளே! மற்ற மக்களெல்லாம் தமது இல்லங்களுக்கு ஆடுகளையும், ஒட்டகங்களையும் அழைத்துச் செல்லும் போது, நீங்கள் உங்களது இல்லங்களுக்கு அல்லாஹ்வின் தூதரையல்லவா அழைத்துச் செல்கின்றீர்கள்? உங்களுக்கு அது மகிழ்ச்சியைத் தந்திருக்க வேண்டாமா?”

  இந்த முஹம்மதின் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது ஆணையாக! ஹிஜ்ரத் என்ற சிறப்பு மட்டும் இல்லையாயின் நான் அன்ஸாரிகளில் ஒருவனாக இருந்திருப்பேன். மக்களெல்லாம் ஒரு வழியில் சென்று, அன்ஸாரிகள் மட்டும் வேறு வழியில் செல்வார்களாயின் நான் அன்ஸாரிகளின் வழியில் தான் சென்றிருப்பேன். 

யா அல்லாஹ்! அன்ஸாரிகளுக்கும், அவர்களின் சந்ததியினருக்கும், அவர்களின் சந்ததியினரின் சந்ததியினருக்கும் அருள் புரிவாயாக!”” என்று கூறி மாநபி {ஸல்} அவர்கள் தங்களது உரையை முடித்தார்கள்.                                               

இந்த உரையைக் கேட்டுக் கொண்டிருந்த அன்ஸாரிகளெல்லாம் தங்களின் தாடிகள் நனையுமளவுக்கு அழுதார்கள்.  

 ”அல்லாஹ்வின் தூதரே! எங்களது பங்கை நாங்கள் பொருந்திக் கொண்டோம். நீங்கள் எங்களுக்குக் கொடுத்த பங்கைக் கொண்டு நாங்கள் திருப்தி அடைந்தோம்.” என்றார்கள். பின்னர் நபி {ஸல்} அவர்கள் அங்கிருந்து சென்றார்கள். அதன் பின்னர் அன்ஸாரிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். ( நூல்:தஹ்தீப் ஸீரத் இப்னு ஹிஷாம், பக்கம்:244,245,246., தப்ரானீ, ஹதீஸ் எண்:3994, முஸ்னத் அப்து ஹுமைத், ஹதீஸ் எண்:923. அஹ்மத், ஹதீஸ் எண்:11153. )

நபி {ஸல்} அவர்களின் அளவிலாச் சிறப்பு:-

நபி {ஸல்} அவர்களின் சிறப்புகளை சொல்வதென்றால் எங்கிருந்து எப்படித் துவங்குவது? எவைகளைச் சொல்வது? குர்ஆனிலும் நபிமொழிக் கிரந்தங்களிலும் அவ்வளவு செய்திகள் நிரம்பிக் கிடக்கின்றன. ஒன்றிரண்டு செய்திகளை இந்த வார ஜும்ஆவில் பார்ப்போம்.

அல்லாஹ் நபியவர்களை பெயர் சொல்லி அழைக்கவில்லை..

நபி {ஸல்} அவர்களின் சிறப்புகளில் ஒன்று, அல்லாஹ் நபி தாவூது, மூஸா, ஸக்கரியா (அலை) போன்ற நபிமார்களை பல முறை நேரடியாக அழைத்துள்ளது போல், நபி {ஸல்} அவர்களை ஒரு முறை கூட குர்’ஆனில் நேரடியாக, ‘யா முஹம்மது’ என்று அழைக்கவில்லை. மாறாக, அல்லாஹ் “நபியாக இருப்பவரே”, “போர்வை போர்த்திக் கொண்டிருப்பவரே”, “போர்த்திக் கொண்டிருப்பவரே” போன்ற அன்பான வார்த்தைகளாலேயே அழைக்கிறான்.

அல்லாஹ் நபி (ஸல்) அவர்களுடைய குடும்பத்தாரையும், அவர்களைப் பின்பற்றுபவர்களையும் பாதுகாக்கிறான்

அல்லாஹ் பல முறை குர்’ஆனில் நபி (ஸல்) அவர்களை பொய்யான குற்றச்சாட்டுகளிலிருந்து பாதுகாத்துள்ளான். அது மட்டுமல்ல, அவன் நபியவர்களின் குடும்பத்தினரையும், நண்பர்களையும் கூட குறிப்பிட்டு அவர்களையும் பாதுகாத்துள்ளான்.

நபி (ஸல்) அவர்களுடைய மனைவிமார்களை நோக்கி, “விசுவாசிகளின் தாய்மார்கள்” என்ற கௌரவமான அடைமொழியுடன் பேசும் வசனங்கள் உள்ளன. அதே போல, அவர்களுடைய வளர்ப்பு மகன் ‘ஸைத்’ (ரலி) அவர்களின் பெயரும் குர்’ஆனில் உள்ளது. அன்னை ஆயிஷா (ரலி) அவர்களைப் பற்றிய அவதூறு சம்பவத்தின் போது, அல்லாஹ் அவர்கள் குற்றமற்றவர்கள் என்பதை சூரா நூரில் 20 வசனங்களுக்கு மேலாக அருளி அவர்களுடைய கண்ணியத்தைக் காப்பாற்றினான்.

அல்லாஹ் நபி {ஸல்} அவர்களுக்கு ஆறுதல் அளித்தான்.

பல சந்தர்ப்பங்களில் நபி (ஸல்) அவர்கள் கவலையாகவோ, துக்கமாகவோ இருக்கும் போதும், அல்லது நெருங்கிய உறவினரின் மறைவால் பாதிக்கப்பட்டிருக்கும்போதும் அல்லாஹ் அவர்களுக்கு ஆறுதல் அளிக்கக்கூடிய வசனங்களையும் சூராக்களையும் இறக்கியருளினான்.

சூரா ளுஹா, சூரா இன்ஷிரஹ், சூரா தாஹா, சூரா யூசுஃப், சூரா மர்யம் போன்றவைகள் நபியவர்களின் மனதிற்கு ஆறுதல் அளிப்பதற்காகவே அருளப்பட்டன.

ஏழு வானுக்கு அப்பாலிருந்து இறங்கிய அல்லாஹ்வுடைய சொந்த வார்த்தைகளால் இதயம் ஆறுதல் பெறும் அளவிற்கு அத்தனை உயரிய கண்ணியத்துக்குரியவர்களாக அவர்கள் இருந்தார்கள்.

அல்லாஹ் நபி {ஸல்} அவர்களின் உள்ளத்து உணர்வுகளுக்கும் உயிர்ப்பூட்டினான்..

நபி (ஸல்) அவர்கள் முதன் முதலில் மதினாவுக்கு இடம்பெயர்ந்து சென்ற போது, கிப்லா மக்காவை நோக்கி இல்லாமல் ஜெருஸலத்தை நோக்கியே இருந்தது. அவர்கள் தொழும்போது மக்காவின் திசையில் முதுகைக் காட்டிக் கொண்டு தொழுவதை மிகவும் சிரமமாக நபி (ஸல்) அவர்கள் உணர்ந்தார்கள். ஒரு நாள், அவர்கள் தொழுகையில் வானை நோக்கினார்கள். அவர்கள் துவாவோ, கோரிக்கையோ எதுவும் செய்யவில்லை, மேலே பார்த்தார்கள் அவ்வளவு தான். அவர்களுடைய உள்ளம் நாடியதை அல்லாஹ் அருளியது மட்டுமல்லாமல், அதை குர்’ஆனிலும் குறிப்பிட்டுள்ளான். அல்லாஹ் தன் தூதரின் மேல் தனக்குள்ள அன்பை வெளிப்படையாக குர்’ஆனில் பிரகடனப்படுத்துகிறான்.

(நபியே!) நாம் உம் முகம் அடிக்கடி வானத்தை நோக்கக் காண்கிறோம்; எனவே நீர் விரும்பும் கிப்லாவின் பக்கம் உம்மைத் திடமாக திருப்பி விடுகிறோம்; ஆகவே நீர் இப்பொழுது (மக்காவின்) மஸ்ஜிதுல் ஹராம் பக்கம் உம் முகத்தைத் திருப்பிக் கொள்ளும். (முஸ்லிம்களே!) இன்னும் நீங்கள் எங்கிருந்தாலும் (தொழுகையின் போது) உங்கள் முகங்களை அந்த (கிப்லாவின்) பக்கமே திருப்பிக் கொள்ளுங்கள்; நிச்சயமாக எவர்கள் வேதம் கொடுக்கப்பட்டிருக்கின்றார்களோ அவர்கள், இது அவர்களுடைய இறைவனிடமிருந்து வந்த உண்மை என்பதை நிச்சயமாக அறிவார்கள்; அல்லாஹ் அவர்கள் செய்வது பற்றிப் பாராமுகமாக இல்லை. ( அல் குர்’ஆன்: 2: 144 )

எல்லாம் வல்ல அல்லாஹ் நமது நபி {ஸல்} அவர்களின் அற்புதமான பிறப்பை சுமந்து நிற்கும் இந்த மாதத்தில் அவர்களின் அளவிலா மாண்புகளையும், சிறப்புகளையும் விளங்கும் பாக்கியத்தைத் தந்தருள்வானாக! ஆமீன்!  


Popular posts from this blog

ஹழ்ரத் அபூபக்கர் சித்திக் (ரலி)

எச்சரிக்கை! இந்த ஐந்து தீய குணங்கள் 30-10-2025

அற்புதங்கள் நிறைந்த ஆஷூரா தினம்...... 12-07-2024 04-07-2025