Skip to main content

பஜ்ரு தொழுகை September 16 /22 13-12-23

தலைப்பு:

அதிகாலை (பஜ்ர்) தொழுகை


முன்னுரை
اَقِمِ الصَّلٰوةَ لِدُلُوْكِ الشَّمْسِ اِلٰى غَسَقِ الَّيْلِ وَقُرْاٰنَ الْـفَجْرِ‌ اِنَّ قُرْاٰنَ الْـفَجْرِ كَانَ مَشْهُوْدًا‏

(நபியே!) சூரியன் சாய்ந்ததிலிருந்து இரவின் இருள் சூழும் வரையில் (ளுஹர், அஸர், மஃரிப், இஷா ஆகிய நேரத்) தொழுகைகளைத் தொழுது வாருங்கள். ஃபஜ்ர் தொழுகையும் தொழுது வாருங்கள். ஏனென்றால், நிச்சயமாக ஃபஜ்ர் தொழுகையானது மலக்குகள் கலந்துகொள்ளும் தொழுகையாகும்.
(அல்குர்ஆன் : 17:78)


இயற்கையோடு இணைந்து வாழ்ந்த நம் முன்னோர்கள், சூரிய உதயத்திற்க்கு முன் எழுந்திருப்பதும், சூரியன் மறைந்த பின் படுக்கைக்குச் செல்வதும் வழக்கமாகக்கொண்டிருந்தார்கள்.

ஆனால், இரவையும் பகலாக்கும் இன்றைய நவீன வாழ்க்கை முறையில், தூக்கம் தொலைத்து அவதிப்படுகிறோம்.

நாம், காலங்காலமாக இந்த இயற்கை நியதியைப் பின்பற்றி வந்ததால்தான், முன்பு நமக்கு தொற்றுநோய்த் தாக்குதல்களைத் தவிர, மன அழுத்தம், ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் பெரிய அளவில் இல்லாமல் இருந்தன.

இன்று, இரவில் நீண்ட நேரம் விழிப்பதும் பகலில் நெடுநேரம் கழித்து எழுவதும் சகஜமாகிவிட்டதால், நம் மூளையில் இருக்கும் மன சுழற்சிக் கடிகாரம் (Circadian rhythms) இயற்கையின் விதிகளுக்குப் புறம்பாக மாறிவிட்டது.

அதிகாலை எழுவதால் ஏற்படும் மருத்துவ பலன்கள்

மூளை நரம்பு இயக்கங்கள் சீராகச் செயல்படும். மூளை சுறுசுறுப்பாக இயங்கும். இதனால், தன்னம்பிக்கையும் உற்சாகமும் அதிகரிக்கும்.

மன அழுத்தம் குறையும். அன்றைய நாளில் என்னென்ன வேலைகள் இருக்கின்றன? அவற்றில் எதனை, எப்போது, எங்கே, எப்படி முடிப்பது என எளிதாகத் திட்டமிட முடியும்.

உடற்பயிற்சி செய்ய நேரம் ஒதுக்க முடியும். காலை நேரத்தில் உடற்பயிற்சி செய்யும்போது, அதிக ஈடுபாட்டுடன் சிறப்பாகச் செய்ய முடியும்.

அதிகாலை எழுவதால், காலை வேளையில் பசி எடுக்கும். காலையில் சாப்பிடுவதால், உடல் பருமன், சர்க்கரைநோய் வருவது குறையும்.

மேலும், இரவு 9-10 மணிக்குள் உறக்கம் தானாக வர ஆரம்பிக்கும். இரவு சரியான நேரத்துக்குத் தூக்கம் வருவதால், மன அழுத்தம், ரத்த அழுத்தம் வராது. வளர்சிதை மாற்றம் சீராக இருக்கும்.

காலையில் மாசற்ற தூய்மையான ஆக்சிஜனைச் சுவாசித்தால், நுரையீரல் வலுவடையும். ஆஸ்துமா, சைனஸ் போன்ற பிரச்னைகள் வராது.

அதிகாலை 4.30 – 5.30 மணிக்குள் மூச்சுப் பயிற்சி, யோகா செய்வது, உடலில் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் நலம் பயக்கும்.

அதிகாலை எழுவதால் சரியான நேரத்தில் மலம், சிறுநீர் கழிந்து, உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேற உதவும். நச்சுக்கள் சீராக வெளியேறுவதால் சிறுநீர், கல்லீரல், பெருங்குடல் போன்ற உறுப்புகள் சீராக இயங்கும். உடல் நலனுக்கு மட்டுமல்ல. மன நலனுக்கும் அதிகாலையில் எழுவது சிறந்தது.

ஆராய்ச்சி முடிவு சொல்லும் உளவியல் உண்மை

அதிகாலையில் விழிப்பவர்களிடம் நேர்மறை எண்ணங்கள், எளிதாகத் திருப்தியடையும் மனப்பான்மை, வாழ்வின் மீது அதிக நம்பிக்கை போன்ற நற்குணங்கள் கூடுதலாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

டெக்சாஸ் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், அதிகாலையில் எழுந்து படித்த குழந்தைகள், கல்வியில் சிறந்து விளங்கியதாகக் குறிப்பிடுகிறது. இரவில் அதிக நேரம் கண் விழிப்பவர்களுக்கு ‘சோர்வுற்ற மனநிலை’  வருவதற்கான சாத்தியம், அதிகாலையில் துயில் எழுபவர்களைவிட மூன்று மடங்கு அதிகம் என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன

இஸ்லாத்தில் அதிகாலையின் சிறப்பு

١٨٠- عَنْ صَخْرِ نِ الْغَامِدِيِّؓ عَنِ النَّبِيِّ ﷺ: اَللّهُمَّ بَارِكْ لِأُمَّتِي فِي بُكُورِهَا وَكَانَ إِذَا بَعَثَ سَرِيَّةً أَوْ جَيْشاً بَعَثَهَا مِنْ أَوَّلِ النَّهَارِ، وَكَانَ صَخْرٌ رَجُلاً تَاجِرًا، وَكَانَ يَبْعَثُ تِجَارَتَهُ مِنْ أَوَّلِ النَّهَارِ، فَأَثْرَي وَكَثُرَ مَالُهُ.

رواه ابو داؤد، باب في الابتكار في السفر، رقم:٢٦٠٦

ஹஜ்ரத் ஸக்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், (اَللّهُمَّ بَارِكْ لِأُمَّتِي فِي بُكُورِهَا) யாஅல்லாஹ், என்னுடைய சமுதாயத்தினருக்கு அதிகாலையில் பரக்கத் செய்வாயாக!” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் துஆச் செய்துள்ளார்கள். மேலும், அன்னார் சிறிய படை அல்லது பெரும்படையை அனுப்பிவைக்கும் போது அவர்களைக் காலை நேரத்தில் அனுப்பிவைப்பார்கள். ஹஜ்ரத் ஸக்ர் (ரலி) அவர்கள் வியாபாரியாக இருந்தார்கள், அவர்கள் தமது வியாபாரப் பொருட்களைக் காலைப் பொழுதில் தன் வேலையாட்கள் மூலம் விற்பனைக்கு அனுப்பி வைப்பார்கள். அதனால் அவர்கள் செல்வந்தரானார்கள், (அவர்களின் செல்வம் பெருகிவிட்டது).

(அபூதாவூத்)

தெளிவுரை:- என்னுடைய சமுதாயத்தினர் அதிகாலையில் பயணம் செய்யட்டும், உலகம் அல்லது மார்க்கம் சம்பந்தமான வேலைகளில் அந்நேரத்தில் எதைச் செய்தாலும் அதில் அவர்களுக்கு பரக்கத் கிடைக்கும்” என்பது இந்த ஹதீஸில், ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் செய்துள்ள துஆவின் நோக்கமாகும்.

அதிகாலையில் ஆரோக்கியம் உள்ளது

தூக்கத்தில் இருந்து அதிகாலையில் எழுந்திருப்பவர்கள் உடல் எடை குறைந்து ஆரோக்கியத்துடன் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்று இங்கிலாந்தில் நடத்தப்பட்ட ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

லண்டன் ரோஹம்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மனிதனின் உடல் நிலை மற்றும் தூங்கும் பழக்கவழக்கங்கள் குறித்த ஆய்வொன்றை நடத்தினர்.

அதன் விவரம்: தூக்கத்தில் இருந்து சராசரியாக காலை 5.00 மணிக்கு எழுந்திருக்கும் நபர்களையும், காலை 8.00 மணி வரை தூங்கிய பிறகு எழுந்திருப்பவர்களின் நடவடிக்கை, உடல் நிலை பற்றி அறியப்பட்டது.

அதில் காலையில் நேரம் கழித்து எழுந்திருக்கும் நபர்களை விட, விடியற்காலை கண்விழித்து எழும் நபர்கள் உற்சாகமாக காணப்படுவது தெரியவந்தது.

அத்துடன் அவர்களது உடல் எடை குறைந்து ஆரோக்கியமாக இருந்தனர். தோல் சுருக்கமின்றி இளமையாக காணப்பட்டனர். உடல்வாகும் அழகாக தோற்றமளித்தது.

பஜ்ர் தொழுகை என்றாலே ஆரோக்கியம்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் உறங்கிக்கொண்டிருக்கும் போது அவரது தலையின் பின் பக்கத்தில் ஷைத்தான் மூன்று முடிச்சுகளைப் போட்டு விடுகிறான். ஒவ்வொரு முடிச்சிலும், “இன்னும் உனக்கு நீண்ட இரவு இருக்கிறது (நன்றாக உறங்கு)” என்று கூறி ஊதுகிறான். அவர் (அவனது போதனையைக் கேட்காமல் அதிகாலையில்) கண்விழித்து அல்லாஹ்வை நினைவுகூர்ந்தால் ஒரு முடிச்சு அவிழ்ந்துவிடுகிறது. அவர் அங்கத்தூய்மை (உளூ) செய்தால் இரண்டாவது முடிச்சு அவிழ்ந்துவிடுகிறது. அவர் (தஹஜ்ஜுத் அல்லது ஃபஜ்ர்) தொழுதுவிட்டால் முடிச்சுகள் முழுவதுமாக அவிழ்ந்துவிடுகின்றன. அவர் சுறுசுறுப்புடனும் நல்ல மனநிலையுடனும் காலைப் பொழுதை அடைவார். இல்லையென்றால் மந்தமான மனநிலையுடனும் சோம்பலுடனும் காலைப் பொழுதை அடைவார்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

ஸஹீஹ் புகாரி 3269
ஸஹீஹ் முஸ்லிம் 1425

பஜ்ர் தொழுகைக்கும் சுறுசுறுப்புக்கும் எவ்வளவு தொடர்பு இருக்கிறது என்பதை மேற்கண்ட ஹதீஸ் தெளிவாக விளக்குகின்றது. சுறுசுறுப்புடன் அன்றைய தினத்தைத் தொடங்குபவர் பஜ்ர் தொழுதவராவார். சோம்பல் நிறைந்தவராக அன்றைய தினத்தை அடைந்தவர் ஷைத்தானோடு சேர்ந்து உறங்கி, பஜ்ர் தொழுகையை தொழாதவர் ஆவார். மேற்கண்ட இரண்டு பிரிவினரில் நாம்எந்தப் பிரிவைச் சேர்ந்தவர் என்பதை நம்மை நாமே கேட்டுக் கொள்ள கடமைப்பட்டுள்ளோம்.

மகள் பாத்திமா (ரலி) அவர்களை பஜ்ர் தொழுகைக்கு எழுப்பிய தருணத்தில் நபி (ஸல்) அவர்கள் கூறும் வார்த்தைகளை கவனிக்க கடமைபட்டுள்ளோம்

ஃபாத்திமா (ரலி) அறிவிக்கின்றார்: அதிகாலை நேரத்-தில் நான் படுக்கையில்
புரண்டு படுத்துக் கொண்டிருந்தேன். அந்நேரம் அண்ணலார் (ஸல்) என்னருகே
வந்து தங்களது பாதங்களால் என்னை உசுப்பிவிட்டு இவ்வாறு கூறினார்கள்:

“அருமை மகளே! எழு! அல்லாஹ்வின் வாழ்வாதாரங்கள் வழங்கப்படும் நேரத்திற்கு
சாட்சியாளராக இரு. அலட்சியப் படுத்துபவராக மாறிவிடாதே. அதிகாலை
நேரத்திற்கும் சூரிய உதயத்திற்கும் இடையே இறைவன் (ரிஸ்க் எனும்)
வாழ்வாதாரத்தை வழங்குகிறான்.” (பைஹகீ)

அதிகாலை பஜ்ர் தொழுவதன் சிறப்புகள்


பஜ்ர் தொழுதால் இறைவனைக் காணலாம்

عَنْ جَرِيرٍ بن عبد الله رضي الله عنه قَالَ : كُنَّا عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَنَظَرَ إِلَى الْقَمَرِ لَيْلَةً – يَعْنِى الْبَدْرَ – فَقَالَ : ” إِنَّكُمْ سَتَرَوْنَ رَبَّكُمْ كَمَا تَرَوْنَ هَذَا الْقَمَرَ لاَ تُضَامُّونَ _ تضارون _ فِي رُؤْيَتِهِ ، فَإِنِ اسْتَطَعْتُمْ أَنْ لاَ تُغْلَبُوا عَلَى صَلاَةٍ قَبْلَ طُلُوعِ الشَّمْسِ وَقَبْلَ غُرُوبِهَا فَافْعَلُوا ” يعني الفجر والعصر ، ثُمَّ قَرَأَ : { وَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ قَبْلَ طُلُوعِ الشَّمْسِ وَقَبْلَ الْغُرُوبِ } [ متفق عليه ]

ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் (முழு நிலவுள்ள ஓர் இரவில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தோம். அப்போது அவர்கள் முழு நிலாவைக் கூர்ந்து பார்த்தவாறு, “நீங்கள் இந்த நிலாவை நெரிசல் இல்லாமல் காண்பதைப் போன்றே உங்கள் இறைவனையும் (மறுமையில்) காண்பீர்கள். எனவே, சூரியன் உதிக்கும் முன்னருள்ள தொழுகையிலும் சூரியன் மறையும் முன்னருள்ள தொழுகையிலும் (அதாவது அஸ்ரிலும் ஃபஜ்ரிலும்) (உறக்கம் போன்ற) எதற்கும் ஆட்படாமல் இருக்க உங்களால் இயலுமானால் (அவ்வாறே செய்யுங்கள்; இறைவனை நீங்கள் தரிசிக்கலாம்)” என்று கூறினார்கள்.
இதன் அறிவிப்பாளரான கைஸ் பின் அபீஹாஸிம் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
பிறகு ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள், “சூரியன் உதயமாகும் முன்னரும், மறையும் முன்னரும் உங்கள் இறைவனைப் போற்றித் துதியுங்கள்” எனும் (20:130ஆவது) இறைவசனத்தை ஓதிக்காட்டினார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் 1113

அல்லாஹ்வின் பொருப்பில் வருவார்

مَنْ صَلَّى صَلاَةَ الصُّبْحِ فَهْوَ فِي ذِمَّةِ اللَّهِ

رواه مسلم ]

பஜ்ர் தொழுதவர் அல்லாஹ்வின் பாதுகாப்பை பெற்றுவிட்டார் என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்

இறைவனின் சந்தோசம் கிடைக்கின்றது

அதிகாலைத் தொழுகைக்குச் செல்லும் ஒருவரைப் பார்த்து இறைவன்
வியக்கும்காட்சியை நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு விவரிக்கின்றார்கள்:

“படுக்கை, போர்வை,மனைவி, மக்களின் அரவணைப்பு அத்தனையையும் உதறிவிட்டு
அதிகாலையில் எழும்மனிதனைப் பார்த்து இறைவன் வியப்படைகின்றனான்.
வானவர்களிடம் கேட்கின்றான்:“வானவர்களே! எனது இந்த அடியானைப் பாருங்கள்..!

படுக்கை, போர்வை, மனைவி,மக்கள் அத்தனையையும் உதறி-விட்டு அதிகாலையில்
எழுந்துவிட்டான். எதற்காக..?என்ன வேண்டும் இந்த அடியானுக்கு..? எனது
அருள்மீது ஆசை வைத்தா…? எனதுதண்டனையைப் பயந்தா…?” பின்னர் வானவர்களிடம்
அல்லாஹ்வே கூறுகின்றான்:“உங்களை சாட்சி வைத்துக் கூறுகின்றேன்: அவன்
ஆசைப்பட்டதை நான் அவனுக்குநிச்சயம் கொடுப்பேன். அவன் எதைப்
பயப்படுகின்றானோ அதிலிருந்து நிச்சயம்அவனுக்கு நான் பாதுகாப்புக்
கொடுப்பேன்.” (அஹ்மத்)

வானவர்களின் நெருக்கம் கிடைக்கிறது


அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ உமாமா (ரலி) அறிவிக்கின்றார்:
யார் ஒளு செய்தபின் பள்ளிவாசலுக்கு வந்து ஃபஜ்ருக்கு முன் இரண்டு ரக்அத்
தொழுது பின்னர் ஃபஜ்ர் தொழுகையையும் தொழுகின்றாரோ அவர் நன்மக்களின்
பட்டியலிலும்,அல்லாஹ்வின் தூதுக்குழுவினரின் பட்டியலிலும்
எழுதப்படுகின்றார்.”

ஒவ்வொரு நாளும் வானவர்கள் இரு தடவை இந்தப் பூமிக்கு வருகை
தருகின்றார்கள். அவர்கள் அனைவரும் அஸர் தொழுகையிலும் ஸுபுஹ் தொழுகையிலும்
சந்தித்துக் கொள்கின்றார்கள். பணி முடித்துத் திரும்பும் வானவர்களிடம்

அனைத்தையும் அறிந்து வைத்திருக்கும் அல்லாஹ் கேட்கின்றான்:
“எனது அடியார்களை எந்நிலையில் சந்தித்தீர்கள்? எந்நிலையில் விட்டு
வந்தீர்கள்?” அதற்கு வானவர்கள் கூறுவார்கள்:“அவர்கள் தொழுகையில்
இருக்கும் நிலையில் சந்தித்தோம். தொழுகையில் இருக்கும் நிலையிலேயே விட்டு
வந்தோம்.” (திர்மிதி)

வானவர்கள் துஆ கிடைக்கின்றது

عَنْ علي بن أبي طالب رضي الله عنه قَالَ : سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ : ” مَنْ صَلَّى الْفَجْرَ ثُمَّ جَلَسَ فِي مُصَلاَّهُ ، صَلَّتْ عَلَيْهِ الْمَلاَئِكَةُ ، وَصَلاَتُهُمْ عَلَيْهِ : اللَّهُمَّ اغْفِرْ لَهُ ، اللَّهُمَّ ارْحَمْهُ ” [ رواه أحمد ] .

யார் பஜ்ர் தொழுதுவிட்டு அந்த இடத்தில் சிறிதுநேரம் உட்கார்ந்திருப்பாரோ அவருக்காக மலக்குகள் பாவமன்னிப்பு தேடுகின்றனர்.

யா அல்லாஹ் இவரை மன்னித்து இரக்கம் காட்டுவாயாக என துஆச்செய்கின்றனர்.

வானவர்கள் சாட்சி கூறுகின்றார்கள்

إِنَّ قُرْآنَ الْفَجْرِ كَانَ مَشْهُوداً

நிச்சயமாக ஃபஜ்ரு தொழுகை சான்று கூறுவதாகயிருக்கிறது.

அதாவது மலக்குகளால் அந்த தொழுகைக்கு சாட்சி சொல்லப்படும்.

عن أَبي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ : سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ : ” تَجْتَمِعُ مَلاَئِكَةُ اللَّيْلِ وَمَلاَئِكَةُ النَّهَارِ فِي صَلاَةِ الْفَجْرِ ” ، ثُمَّ يَقُولُ أَبُو هُرَيْرَةَ : فَاقْرَءُوا إِنْ شِئْتُمْ : { إِنَّ قُرْآنَ الْفَجْرِ كَانَ مَشْهُوداً } [ متفق عليه ]

பஜ்ர் தொழுகையில் பகல் மலக்குகளும் இரவு மலக்குகளும் ஒன்றுசேர்கின்றனர் என நபி ஸல் அவர்கள் கூறினார்கள் என அறிவித்த அபூஹுரைரா ரலி அவர்கள் மேல்வசனத்தை மேற்கோள்காட்டினார்கள்.

இரவு முழுவதும் வணங்கிய கூலி வழங்கப்படும்

عن عُثْمَانُ بْنُ عَفَّانَ رضي الله عنه قال : سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ : ” مَنْ صَلَّى الْعِشَاءَ فِي جَمَاعَةٍ فَكَأَنَّمَا قَامَ نِصْفَ اللَّيْلِ ، وَمَنْ صَلَّى الصُّبْحَ فِي جَمَاعَةٍ فَكَأَنَّمَا صَلَّى اللَّيْلَ كُلَّهُ ” [ رواه مسلم ] .

இஷாவை ஜமாஅத்துடன் தொழுதவர் பாதி இரவு நின்று வணங்கியவரைப் போலாவார்.எவர் பஜ்ரை ஜமாஅத்துடன் தொழுதாரோ அவர் இரவு முழுவதும் நின்று வணங்கியவரைப்போலாவார்

அறிவிப்பாளர்: உஸ்மான் (ரலி) அவர்கள்

நூல் :முஸ்லிம்

பரக்கத்தை பெற்றுத்தருகின்றது

قال صلى الله عليه وسلم \اللهم بارك لأمتي في بكورها

யா அல்லாஹ் அதிகாலையில் என் உம்மத்திற்கு பரக்கத் செய்வாயாக என நபி ஸல் அவர்கள் துஆச்செய்தாரகள்.

قال ابن القيم – ونومة الصبح تمنع الرزق لانه وقت تقسم فيه الأرزاق

சுபுஹ் தொழாமல் தூங்குவது ரிஸ்கை தடுத்துவிடும்,ஏனெனில் அந்த நேரத்தில்தான் அன்றைய தினத்தின் ரிஸ்குகள் பங்கு வைக்கப்படுகிறது என இப்னுல் கய்யிம் ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.

மனிதா!துர்க்குறியை வெளியே தேடாதே,என்றைக்கு நீ பஜ்ர் தொழவில்லையோ அன்றைய தினம் உனக்கு துர்க்குறிதான்

மறுமையில் ஒளி கிடைக்கும்

மறுமையில் ஸிராதுல் முஸ்தகீம் பாலத்தில் இருளில் ஒளியின்றி
நடப்பவர்களுக்கு நற்செய்தியாக நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள்:

“(பள்ளிவாசலை நோக்கி அதிகாலை) இருளில் நடந்து செல்பவர்களுக்கு மறுமையில்
முழுமையான ஒளி கிடைக்கும் எனும் நற்செய்தியைக் கூறுங்கள்” (பைஹகீ)

பஜ்ர் தொழுகைக்கு வராமல் தூங்குபவர் பற்றி இஸ்லாம்


நயவஞ்சகத்தின் அடையாளம்

أُبَىِّ بْنِ كَعْبٍ رضي الله عنه قَالَ : صَلَّى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم صَلاَةَ الصُّبْحِ ، ثُمَّ أَقْبَلَ عَلَيْنَا بِوَجْهِهِ فَقَالَ : ” أَشَاهِدٌ فُلاَنٌ ؟ ” فَقَالُوا لاَ ، فَقَالَ : ” أَشَاهِدٌ فُلاَنٌ ” فَقَالُوا لاَ ، لِنَفَرٍ مِنَ الْمُنَافِقِينَ لَمْ يَشْهَدُوا الصَّلاَةَ فَقَالَ : ” إِنَّ هَاتَيْنِ الصَّلاَتَيْنِ _ الفجر والعشاء _ أَثْقَلُ الصَّلاَةِ عَلَى الْمُنَافِقِينَ

உபை இப்னு கஅப் (ரலி)அறிவிக்கின்றார்: ஒரு நாள் அண்ணலார் (ஸல்) அவர்கள்
ஸுபுஹ் தொழுகை முடித்தபின் எங்களை நோக்கித் திரும்பியவாறு
கேட்டார்கள்:“இன்ன மனிதர் தொழுகைக்கு வந்தாரா?” மக்கள், “இல்லை..” என்று
கூறினர். மீண்டும், “இன்னவர் வந்தாரா..?”
என்று கேட்க, மக்களும் “இல்லை” என்று கூற, பெருமானார் (ஸல்) அவர்கள்
வேதனையுடன் இவ்வாறு கூறினார்கள்:

“நயவஞ்சகர்களுக்கு இந்த இரு தொழுகைகளும் (ஸுபுஹ், இஷா) கடினமானவையாக
இருக்கும். இந்த இரு தொழுகைகளில் கிடைக்கும் நன்மைகளை இவர்கள் அறிந்து
கொண்டால் தவழ்ந்தேனும் இதற்காக வருவார்கள்.” (புகாரி,முஸ்லிம்)

ஆம். நபித்தோழர்களின் காலத்தில் இறை-நம்பிக்கை-யாளர்களை அளக்கும்
அளவுகோலாக இந்த இருவேளைத் தொழுகைகள்தாம் இருந்தன. இப்னு உமர் (ரலி)
கூறுகின்றார்: “ஸுபுஹ் தொழுகைக்கும் இஷா தொழுகைக்கும்

யார் வழக்கமாக வருவதில்லையோ அவர்களைக் குறித்து நாங்கள் (அதாவது நயவஞ்சகர்கள் என்று).
மோசமாகவே எண்ணியிருந்தோம்”

யூதர்களின் பார்வை


கோல்டா மேயர் என்ற பெண் அமைச்சரிடம் யூதப் பத்திரிக்கையாளர்கள் பேட்டி எடுத்தனர். “”கடைசிக் காலத்தில் யூதர்களை முஸ்லிம்கள் கல்லால் அடித்துக் கொல்லும் ஒரு நேரம் வரும் என்று முஸ்லிம்களின் நபி கூறியுள்ளாராமே” அதைக் குறித்துத் தாங்கள் என்ன கூறுகின்றீர்கள்? இதுதான் கேள்வி.

அதற்கு அந்தப் பெண் அமைச்சர் என்ன கூறினார் தெரியுமா? “”ஆம், நாம் அதனை நம்புகின்றோம். ஒருநாள் அவர்கள் நம்முடன் போர் புரிவார்கள்.”

“அப்படி என்றால் அந்த நாள் எப்போது வரும்?” என்று மீண்டும் அவர்கள் கேள்வி கேட்க, அப் பெண்மணி கூறினார்: “”ஜும்ஆ தொழுகைக்கு வருவதைப் போன்று என்றைக்கு முஸ்லிம்கள் ஸுபுஹ் தொழுகைக்கு வருகின்றார்களோ அன்று வேண்டுமென்றால் அது நடக்கலாம் அதுவரை நாம் அஞ்ச வேண்டியதில்லை”.

அப்பெண்மணியின் மதி நுட்பத்தைப் பாருங்கள். இஸ்லாமியச் சமூகத்தை எவ்வாறு எடைபோட்டு வைத்துள்ளார் என்பதைக் கவனியுங்கள்.

பஜ்ர் தொழாதர் வீட்டை எரிக்க நினைத்தார்கள்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நயவஞ்சகர்களுக்கு மிகவும் சிரமமான தொழுகை, இஷாவும் ஃபஜ்ரும் ஆகும். அவர்கள் அவ்விரு தொழுகைகளில் உள்ள சிறப்பை அறிவார்களானால் (முழங்கால்களில்) தவழ்ந்தாவது அத்தொழுகைகளுக்கு வந்து சேர்ந்துவிடுவார்கள். நான் தொழுகைக்கு (பாங்கும்) இகாமத்(தும்) சொல்லுமாறு கட்டளையிட்டுப் பின்னர் ஒருவரை மக்களுக்குத் தலைமையேற்றுத் தொழுவிக்குமாறு பணித்துவிட்டுப் பிறகு விறகுக் கட்டைகள் சகிதமாக என்னுடன் மக்களில் சிலரை அழைத்துக்கொண்டு, கூட்டுத் தொழுகையில் கலந்துகொள்ளாத மக்களை நோக்கிச் சென்று, அவர்களை வீட்டோடு சேர்த்து எரித்துவிட வேண்டும் என எண்ணியதுண்டு.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

ஸஹீஹ் முஸ்லிம் 1154

தூங்குபவரின் காதில் சிறுநீர்


அப்துல்லாஹ்(ரலி) அறிவித்தார்.
ஒருவர் விடியும் வரை தூங்கி கொண்டே இருக்கிறார். தொழுகைக்கு எழுவதில்லை என்று நபி(ஸல்) அவர்களிடம் கூறப்பட்டது. அதற்கு நபி(ஸல்) அவர்கள் ‘ஷைத்தான் அவர் காதில் சிறுநீர் கழித்துவிட்டான்’ என்று விடையளித்தார்கள்.
ஸஹீஹ் புகாரி 1144

அதிகாலை நேரத்தின் பரக்கத்

ஒருவர் அலீ (ரழி) அவர்களிடம் கேட்டார்…..!!

நாய் ஒரே நேரத்தில் 6, 7 குட்டிகளை ஈன்றெடுக்கின்றது ஆனால் ஆடுகளோ ஒரு நேரத்தில் 2 அல்லது 3 குட்டிகளையே ஈன்றெடுக்கின்றது.

ஆயினும் எல்லா இடங்களிலும் ஆடுகளின் எண்ணிக்கை நாய்களின் எண்ணிக்கையை விட அதிகமாக இருக்கிறதே..?

நாம் ஆடுகளை நாள்தோறும் பலியிடுகிறோம்,அறுக்கின்றோம். அப்படி இருந்தும் அவை எப்போதும் நாய்களை விட அதிகமாகவே இருக்கின்றன. ஏன்..?

அலீ (ரழி) அவர்கள் பதில் கூறினார்கள்…..!

இதுதான் பரக்கத் (அருள்) ஆகும்.

அதற்கு அவர் பரக்கத் ஆடுகளிடம் மட்டும் ஏன் இருக்கிறது..?
நாய்களிடம் ஏன் இருப்பதில்லை..?? எனக் கேட்டார்…!!

அலீ (ரழி) அவர்கள் கூறினார்கள்…!

ஆடுகள் இரவின் முற்பகுதியிலேயே தூங்கி விடுகின்றன.

மேலும் ரஹ்மத்தின் (அருளின்) வேளையாகிய ஃபஜ்ர் நேரத்தில் விழித்தெழுகின்றன.
எனவே அருளைப் பெற்றுக் கொள்கின்றன.

ஆனால் நாய்கள் இரவு முழுக்க குலைத்து விட்டு ஃபஜ்ர் நேரம் நெருங்கும்போது தூங்குகின்றன.

எனவே அவற்றின் ரிஸ்கில் ரஹ்மத்தும் பரக்கத்தும் இருப்பதில்லை.
எனவே நான் உமக்கு அறிவுரை கூறுகிறேன்…!!

நீர் இரவில் சீக்கிரம் தூங்குவீராக. ஃபஜ்ரில் சீக்கிரம் எழுவீராக.
இதுவே வாழ்வாதாரத்திலும் சந்ததிகளிலும் அபிவிருத்திக்கான வழிமுறையாகும்……!!

அதிகாலையில் அழிந்த சமூகங்கள்

இறைவனை ஏற்றுகொள்ளாத, பயப்படாத, நினைக்காத,பாவம் மிகைக்கும் சந்தர்ப்பத்தில்
உலகில் அழித்து நாசமாக்கப்பட்ட சமூகங்கள் எல்லாம் அதிகாலை நேரத்தில்தான் அழித்து ஒழிக்கப்பட்டிருக்கின்றன.

லூத் (அலை) சமூகம்


قَالَ اِنَّ هٰٓؤُلَاۤءِ ضَيْفِىْ فَلَا تَفْضَحُوْنِۙ‏

(லூத் நபி அவர்களை நோக்கி) “நிச்சயமாக இவர்கள் என்னுடைய விருந்தாளிகள். ஆகவே, (அவர்கள் முன்பாக) நீங்கள் என்னை இழிவுபடுத்தாதீர்கள்.
(அல்குர்ஆன் : 15:68)

قَالُوْا يٰلُوْطُ اِنَّا رُسُلُ رَبِّكَ لَنْ يَّصِلُوْۤا اِلَيْكَ‌ فَاَسْرِ بِاَهْلِكَ بِقِطْعٍ مِّنَ الَّيْلِ وَلَا يَلْتَفِتْ مِنْكُمْ اَحَدٌ اِلَّا امْرَاَتَكَ‌ اِنَّهٗ مُصِيْبُهَا مَاۤ اَصَابَهُمْ‌ اِنَّ مَوْعِدَهُمُ الصُّبْحُ‌ اَلَيْسَ الصُّبْحُ بِقَرِيْبٍ‏
(விருந்தினராக வந்த வானவர்கள்) கூறினார்கள்: “மெய்யாகவே நாம் உம்முடைய இறைவனின் தூதர்களாகவே இருக்கின்றோம்; நிச்சயமாக அவர்கள் உம்மை வந்தடைய முடியாது; எனவே இரவின் ஒரு பகுதி இருக்கும்போதே உம் குடும்பத்துடன் (இவ்வூரை விட்டுச்) சென்றுவிடும்! உம்முடைய மனைவியைத் தவிர, உங்களில் யாரும் திரும்பியும் பார்க்க வேண்டாம். நிச்சயமாக அவர்களுக்கு வரக்கூடிய ஆபத்து அவளையும் பிடித்துக் கொள்ளும். (வேதனை வர) அவர்களுக்கு நிச்சயமாக வாக்களிக்கப்பட்ட நேரம் விடியற்காலையாகும்; விடியற்காலை சமீபித்து விடவில்லையா?”
(அல்குர்ஆன் : 11:81)

فَاَخَذَتْهُمُ الصَّيْحَةُ مُشْرِقِيْنَۙ‏

ஆகவே, சூரியன் உதித்ததற்கு பின்னுள்ள நேரத்தை அடைந்தபோது அவர்களை இடிமுழக்கம் பிடித்துக் கொண்டது.
(அல்குர்ஆன் : 15:73)

ஷூஐபு அலை சமூகம் அழிந்த வரலாறு

وَاِنْ كَانَ اَصْحٰبُ الْاَيْكَةِ لَظٰلِمِيْنَۙ‏

(இவர்களைப் போலவே ஷுஐபுடைய மக்களாகிய) தோப்புடையவர்களும் நிச்சயமாக அநியாயக்காரர்களாகவே இருந்தனர்.
(அல்குர்ஆன் : 15:78)

فَانْتَقَمْنَا مِنْهُمْ‌ۘ وَاِنَّهُمَا لَبِاِمَامٍ مُّبِيْنٍ

ஆகவே, அவர்களையும் நாம் பழி வாங்கினோம். (அழிந்த) இவ்விரு (மக்களின்) ஊர்களும் பகிரங்கமான வழியில்தான் இருக்கின்றன.
(அல்குர்ஆன் : 15:79)

فَاَخَذَتْهُمُ الصَّيْحَةُ مُصْبِحِيْنَۙ‏

அவர்களையும் விடியற்காலையில் (பெரும்) சப்தம் பிடித்துக்கொண்டது.
(அல்குர்ஆன் : 15:83)

ஹூத்(அலை) அவர்களின் ஆத் கூட்டத்தை அழித்ததைக் குறித்து


وَاذْكُرْ اَخَا عَادٍ اِذْ اَنْذَرَ قَوْمَهٗ بِالْاَحْقَافِ وَقَدْ خَلَتِ النُّذُرُ مِنْ بَيْنِ يَدَيْهِ وَمِنْ خَلْفِهٖۤ اَلَّا تَعْبُدُوْۤا اِلَّا اللّٰهَ اِنِّىْۤ اَخَافُ عَلَيْكُمْ عَذَابَ يَوْمٍ عَظِيْمٍ‏

(நபியே!) நீங்கள் (ஹூத் நபியாகிய) “ஆது” உடைய சகோதரரை நினைத்துப் பாருங்கள். அவருக்கு முன்னும், பின்னும் தூதர்கள் பலர் (அவர்களிடம்) வந்திருக்கின்றனர். தன்னுடைய மக்களை (அவர்) “அஹ்காஃப்” என்ற (மணற்பாங்கான) இடத்தில் (சந்தித்து அவர்களை நோக்கி) அச்சமூட்டி எச்சரிக்கை செய்து “அல்லாஹ்வையன்றி (மற்றெவரையும்) நீங்கள் வணங்காதீர்கள். (வணங்கினால்,) நிச்சயமாக மகத்தான நாளின் வேதனை உங்கள் மீது இறங்கி விடுமென்று நான் பயப்படுகின்றேன்” (என்றார்).
(அல்குர்ஆன் : 46:21)

فَلَمَّا رَاَوْهُ عَارِضًا مُّسْتَقْبِلَ اَوْدِيَتِهِمْ ۙ قَالُوْا هٰذَا عَارِضٌ مُّمْطِرُنَا‌ بَلْ هُوَ مَا اسْتَعْجَلْتُمْ بِهٖ ‌ رِيْحٌ فِيْهَا عَذَابٌ اَ لِيْمٌۙ‏

பின்னர், (வேதனைக்கு அறிகுறியாக வந்த) மேகம் அவர்கள் இருந்த பள்ளத்தாக்குகளை நோக்கி வருவதை அவர்கள் காணவே, “இது எங்களுக்கு மழை பெய்ய வரும் மேகம்தான்” என்று கூறினார்கள். (அதற்கு அவர்களை நோக்கி) “அல்ல! இது நீங்கள் அவசரப்பட்ட வேதனைதான் என்றும், இது ஒரு காற்று; இதில் துன்புறுத்தும் வேதனை இருக்கின்றது” (என்றும் கூறப்பட்டது).
(அல்குர்ஆன் : 46:24)

تُدَمِّرُ كُلَّ شَىْءٍ ۭ بِاَمْرِ رَبِّهَا فَاَصْبَحُوْا لَا يُرٰٓى اِلَّا مَسٰكِنُهُمْ‌ كَذٰلِكَ نَجْزِى الْقَوْمَ الْمُجْرِمِيْنَ‏

ஆகவே, அது தன் இறைவனின் கட்டளைப்படி எல்லாவற்றையும் அழித்து விட்டது. அவர்கள் இருந்த வீடுகளைத் தவிர, (அனைவரும் அழிந்து ஒருவருமே) காணப்படாமல் ஆகிவிட்டார்கள். இவ்வாறே குற்றம் செய்யும் மக்களுக்கு நாம் கூலி கொடுக்கின்றோம்.
(அல்குர்ஆன் : 46:25)

ஸாலிஹ் (அலை) சமூகம் அழிந்த வரலாறு

كَذَّبَتْ ثَمُوْدُ الْمُرْسَلِيْنَ‌ ‌‏

“ஸமூது” மக்களும் அவர்களிடம் அனுப்பப்பட்ட (நம்முடைய) தூதரைப் பொய்யாக்கினார்கள்.
(அல்குர்ஆன் : 26:141)

اِذْ قَالَ لَهُمْ اَخُوْهُمْ صٰلِحٌ اَلَا تَتَّقُوْنَ‌‏

அவர்கள் சகோதரர் ஸாலிஹ் (நபி) அவர்களை நோக்கி “நீங்கள் (பாவத்தை விட்டு) விலகிக்கொள்ள வேண்டாமா?”
(அல்குர்ஆன் : 26:142)

فَعَقَرُوْهَا فَاَصْبَحُوْا نٰدِمِيْنَۙ‏

(இவ்வாறு கூறியிருந்தும்) அவர்கள் அதன் கால் நரம்பைத் தறித்து விட்டார்கள். (அதனால் வேதனை வருவதன் அறிகுறியைக் கண்டபொழுது) அவர்கள் துக்கத்தில் ஆழ்ந்துவிட்டார்கள்.
(அல்குர்ஆன் : 26:157)

அதிகாலை எழுவதற்க்கான தீர்வுகள்


டி.வி பார்க்கும் நேரத்தைக் குறைக்கலாம்!

இரவு நேரத்தில், தொலைக்காட்சித் திரையில் இருந்து வெளிப்படும் ஊதா நிற கதிர்கள், உடலில் `மெலட்டனின்’ ( Melatonin) என்ற தூக்கத்தை உண்டாக்கும் ஹார்மோன் சுரப்பைப் பாதிக்கும்.
எனவே T.V பார்க்க கூடாது என்று சொன்னால் நாடக பிரியர்கள் கேட்கப்போவதில்லை…
ஆதலால் இரவு 8 மணிக்கு மேல் தொலைக்காட்சி பார்க்கும் வழக்கத்தைத் தவிர்க்கவும்.

இரவில் தாமதமாக படுக்கைக்குச் செல்வதை தவிர்க்க வேண்டும்!

நம்மில் பலர் இரவில் தாமதமாக உறங்கி காலையில் மிகவும் தாமதமாக எழுந்திருக்கக் கூடியவர்களாக இருக்கிறோம். இதுவும் நபி (ஸல்) அவர்களின் வழக்கத்திற்கு மாறான செயலாகும். நபி (ஸல்) அவர்கள் இரவில் முன்னேரத்தில் உறங்கி, தஹஜ்ஜத் தொழுகைக்காக சீக்கிரம் எழுந்திருக்கக் கூடியவர்களாக இருந்தார்கள். ஆகையால் நாம் சீக்கிரமாக உறங்கி, அதிகாலையில் எழுந்திருக்கும் பழக்கத்தை மேற்கொண்டால் சோம்பலில் இருந்து தவிர்ந்துக் கொள்ளலாம்.

உறுதியேற்குதல்

தூங்கு முன் நாளை கண்டிப்பாக ஸுபுஹ் தொழுவேன் (இன்ஷா அல்லாஹ்) என்ற உறுதியுடன் படுக்கைக்குச் செல்லுங்கள் (எழுந்தால் பார்த்துக் கொள்ளலாம் என்றல்ல!)

படுக்கும் முன் அல்லாஹ்விடம் துஆ கேளுங்கள்.

தவறிய தொழுகைகளுக்காக பாவமன்னிப்புக் கேளுங்கள்.

நாம் தொழுதால்தான் நமது பிள்ளைகள் தொழுவார்கள் என்பதை நினைவில் வையுங்கள்

அலாரம் வைத்துக் கொண்டு தூங்குங்கள்.

சீக்கிரம் தூங்கி அதிகாலையில் எழுவது கட்டாயம் என்பதை நினைவில் வையுங்கள்

தொழுகைக்கே வராத கெட்ட முஸ்லிம்களுக்கு நாமே முன்னுதாரண-மாக அமைந்துவிடக்கூடாது என்பதாக உறுதி எடுங்கள்.

வழக்கமாக ஸுபுஹ் தொழும் நல்லவர்களுடன் தொடர்பை ஏற்படுத்துங்கள்.

ஒளுவுடன் தூங்குவதற்கு முயலுங்கள்.

தம்பதிகளாக இருந்தால் முதலில் எழும் ஒருவர் மற்றவரைத் தண்ணீர்தெளித்தாவது எழுப்ப முயலுங்கள். அல்லாஹ்வின் அருள் அதில்தான் அடங்கியுள்ளது.

தொழுகையை தொடர்ந்து கடைபிடிக்க ஓதும் துஆ

நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் தொழுகைக்காக அல்லாஹ்விடம் இப்படி துஆச்செய்வார்கள்.

رَبِّ اجْعَلْنِىْ مُقِيْمَ الصَّلٰوةِ وَمِنْ ذُرِّيَّتِىْ‌‌ رَبَّنَا وَتَقَبَّلْ دُعَآءِ‏
என் இறைவனே! என்னையும், என் சந்ததிகளையும் (உன்னைத்) தொழுது வருபவர்களாக ஆக்கிவை. எங்கள் இறைவனே! என்னுடைய பிரார்த்தனையை அங்கீகரித்துக் கொள்வாயாக!
(அல்குர்ஆன் : 14:40)

அல்லாஹுத்தஆலா இந்த துஆவை ஒப்புக்கொண்டான் என்பதை இன்னொரு வசனம் உணர்த்துகிறது.

وَكَانَ يَأْمُرُ أَهْلَهُ بِالصَّلَاةِ وَالزَّكَاةِ وَكَانَ عِندَ رَبِّهِ مَرْضِيًّا

அவர் தம் குடும்பத்தினரைத் தொழுகையைக் கடைப்பிடிக்கவும்,ஜகாத்து கொடுத்து வரும்படியும் ஏவுபவராக இருந்தார் தம் இறைவனிடத்தில் மிகவும் விரும்பப்பட்டவராகவும் அவர் இருந்தார்.

வஸ்ஸலாம்


Popular posts from this blog

ஹழ்ரத் அபூபக்கர் சித்திக் (ரலி)

எச்சரிக்கை! இந்த ஐந்து தீய குணங்கள் 30-10-2025

அற்புதங்கள் நிறைந்த ஆஷூரா தினம்...... 12-07-2024 04-07-2025