மரணம் 23-09-22. 02-05-23. 05-12-25.


 
அன்பிற்குரிய சகோதரர்களே,

அல்லாஹ் சுப்ஹானல்லாஹு வதஆலா நாம் திருந்தி நேர்வழி பெற வேண்டும் என்பதற்காக பல விஷயங்களை அவ்வப்போது அல்லாஹ் தஆலா நினைவுபடுத்துவது உண்டு அதிலும் குறிப்பாக அதிகம் அதிகம் நினைவூட்டக்கூடிய விஷயம்  என்றால் அது  மரணம் மண்ணரை மறுமை போன்ற ஆகிரத் சம்மந்தப்பட்ட விஷயங்களே ஆகும்.

சமீபத்தில் கூட நமக்கு அண்டை நாடான இலங்கையில் புயல் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 410. இருநூறுக்கும் மேற்பட்டோரை காணவில்லை. 14 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தோனேசியாவில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 753.
504 பேர் காணவில்லை என்றும், 2,600 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
மேற்கண்ட செய்திகள் நமக்கு எதை உணர்த்துகிறது?
உலக வாழ்க்கை ஒரு நிழல் போல, நிலையற்றது. நாம் ஒவ்வொருவரும் ஏதேனும் ஒரு நாளில் மரணம் என்னும் தவிர்க்க முடியாத முடிவைச் சந்திக்க வேண்டியவர்கள். அல்லாஹ் திருமறையில்,
"உங்களில் எவருக்கு மரணம் எங்கு, எப்போது வரும் என்பதை ஒருவரும் அறிய முடியாது. ஆனால், நிச்சயமாக மரணம் வந்தே தீரும்."
என்று கூறுகிறான். பொதுவாக, மனிதர்கள் நோய்வாய்ப்பட்டு, அல்லது முதுமையின் காரணமாக மரணத்தைத் தழுவுவதுண்டு. ஆனால், சமீப காலங்களில், எந்தவித முன்னறிவிப்புமின்றி, திடீர் மரணங்கள் நிகழ்வது அதிகரித்து வருகிறது. ஆரோக்கியமாக இருந்த ஒரு நபர், அடுத்த கணம் இவ்வுலகில் இல்லை என்ற செய்தி அதிர்ச்சியையும், ஆழ்ந்த சிந்தனையையும் ஏற்படுத்துகிறது.
திடீர் மரணம் என்பது, உலகளாவிய ஒரு சோக நிகழ்வு மட்டுமல்ல; இது ஒரு முஸ்லிமின் வாழ்வில் மறுமையின் நினைவுறுத்தலாகவும் ஒரு கடுமையான எச்சரிக்கையாகவும் இஸ்லாம் பார்க்கிறது. ஏனெனில், மரணப் படுக்கையில் தவ்பா (பாவமன்னிப்பு) செய்யவோ, கடமைகளை நிறைவேற்றவோ ஒரு கணம் கூட அவகாசம் தராமல், திடீரென ஒருவரின் வாழ்வு முடிவுக்கு வரும்போது, அவர் எந்த நிலையில் மரணத்தைத் தழுவுகிறார் என்பதே மிக முக்கியமாகிறது. இது போன்ற சோதனைகள் இன்றி சுவனத்தை நாம் அடைந்து கொள்ள முடியாது.

மரணத்தை காணும் போது   இருந்த துக்கங்களும் கவலையும் மரணித்து ஒரு சில நாட்களில் நம்மிடம் இல்லை என்பதும் அன்று நாம் சிந்தித்த மரண சிந்தனை இன்று இல்லை என்பது தான் கசப்பான உண்மை

 நாம் சர்வ சாதாரணமாக அந்த மரண துக்கத்தைக் கடந்து அடுத்த விஷயங்களின் பக்கம் கவனம் செலுத்த துவங்கி விட்டோம்

 இருந்தாலும் இறைவன் மீண்டும் மீண்டும் தனது அருள் மறையாம் திருமறையிலே இவ்வாறு கூறி மரண சிந்தனையை விதைத்து கொண்டே இருக்கிறான்
 
قُلْ إِنَّ الْمَوْتَ الَّذِي تَفِرُّونَ مِنْهُ فَإِنَّهُ مُلَاقِيكُمْ
 
நபியே! அவர்களை நோக்கி நீங்கள் கூறுங்கள். வெருண்டோடும் மரணம் உங்களை நிச்சயமாக பிடித்துக் கொள்ளும் என்று சொல்லுங்கள். எந்த மரணத்தில் இருந்து நீங்கள் வெருண்டு ஓடுகிறீர்களோ, அந்த மரணத்தை பார்த்து பயந்து ஓடுகிறீர்களோ நிச்சயமாக அது உங்களை சந்தித்தே தீரும். (அல்குர்ஆன் 62 : 8)
 
أَيْنَمَا تَكُونُوا يُدْرِكْكُمُ الْمَوْتُ وَلَوْ كُنْتُمْ فِي بُرُوجٍ مُشَيَّدَةٍ
 
நீங்கள் எங்கிருந்த போதிலும் மரணம் உங்களை அடைந்தே தீரும். மிகப் பலமான உயர்ந்த கோட்டை கொத்தளத்தின் மீது நீங்கள் இருந்த போதிலும் சரியே. (அல்குர்ஆன் 4 : 78)
 
நாம் நினைக்க வேண்டிய மிக முக்கியமான காரியங்களில் ஒன்று, ஒவ்வொருவரும் தன்னுடைய மரணத்தைப்பற்றி அதற்காக நான் என்ன செய்து வைத்திருக்கிறேன்? என்னுடைய கப்ருக்காக நான் என்ன தேடி இருக்கிறேன்? என்னுடைய கப்ரு விசாலமாவதற்கு, என்னுடைய கப்ரு ஒளி நிறைந்ததாக சொர்க்கத்தின் இன்பங்கள் நிறைந்ததாக ஆவதற்கு நான் என்ன செய்து வைத்திருக்கிறேன்? 
 
அதற்கு முன்பாக என்னுடைய சகராத் எனக்கு இலகுவாக ஆவதற்கு நான் என்ன தேடி வைத்திருக்கிறேன்? மரண நேரத்தில் அல்லாஹ்வின் நினைவு வருவதற்கு நான் என்ன தேடி வைத்திருக்கிறேன்? என்பதை கட்டாயம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
 
இதுவெல்லாம் ஒவ்வொரு நாளும் நாம் சிந்திக்க வேண்டிய, இதற்காக அல்லாஹ்விடத்தில் நாம் துஆ செய்ய வேண்டிய காரியங்கள். ஆனால் நாம் எத்தகைய மறதியில் இருக்கின்றோம்! 
 
இந்த மரணத்தை நாம் மறந்தாலும் இந்த மரணம் நம்மை மறக்காது. நாம் மறந்துவிடுவோம். நம்முடைய தந்தையை அடக்கம் செய்த அதே நேரத்தில் மரணத்தை மறந்து விடுகின்றோம். தாயை அடக்கம் செய்துவிட்டு மரணத்தை மறந்து விடுகின்றோம். மனைவியை அடக்கம் செய்து விட்டு மறந்து விடுகின்றோம். பிள்ளைகளை அடக்கம் செய்துவிட்டு மரணத்தை மறந்து விடுகின்றோம். இப்படியாக நம்முடைய உறவுகளை நம்முடைய நண்பர்களை அடக்கம் செய்கிறோம். 
 
ஆனால் அடக்கம் செய்த அதே இடத்திலேயே நம்மில் பலருக்கு மரணத்தின் மறதி வந்து விடுகிறது. ஏதோ அவருக்கு தான் மரணம் அவர் மரணித்து விட்டார் தனக்கு மரணம் இல்லை என்பதை போன்ற ஒரு மனநிலையில் நாம் அந்த இடத்தில் இருந்து திரும்பி வருகின்ற நிலைமை இன்று நம்மில் பலருக்கு உள்ளது.
 
மறதி இருக்கத்தான் செய்யும். ஆனால் மறதியில் மிக மோசமானது மறுமையை மறப்பது, சகராத்தை மறப்பது, மவ்த்தை மறப்பது, கப்ரை மறப்பது.
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிய ஹதீஸை கவனியுங்கள்.
 
 مِن اقْترابِ الساعةِ أَنْ يَظْهَرَ مَوْتُ الْفُجأَةِ
 
மறுமையின் அடையாளங்களில் ஒன்று திடீர் மரணங்கள் அதிகமாகிவிடும்.
 
அறிவிப்பாளர்: அனஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல்: தப்ரானி, எண்: 1132.
 
அல்லாஹ்வின் அடியார்களே! மறுமை நாள் குறித்து ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னென்ன சிறிய அடையாளங்களை கூறினார்களோ, அவற்றில் பெரும்பாலான அடையாளங்கள் இன்று நமக்கு முன்னால் வந்து விட்டது. இன்னும் சில பெரிய அடையாளங்களை தவிர. 
 
மறுமை மிக சமீபம் ஆகிவிட்டது என்பதற்கான அடையாளங்களில் ஒன்று திடீர் மரணங்கள் அதிகமாகிவிடும். வெளிப்படையாக பரவலாக ஆகிவிடும். நேற்று வரை நம்மோடு உணவருந்தி கொண்டவர், பேசியவர், பழகியவர், இன்று சந்தூக்கிலே செல்வதை பார்க்கிறோம். அவரை சுமந்து சென்றவர் சில தினங்களிலேயே அவர் சுமக்க படுவதைப் பார்க்கிறோம். 

வேறொருவருக்காக தோண்டப்பட்ட கப்ரு குழியில் அவரயே‌ அடக்கம் செய்யப்படக் கூடிய அளவுக்கு இன்றைய காலகட்டத்தில் திடீர் மரணங்கள் என்பது அதிகரித்து வருவதை நாம் கண்கூடாக பார்க்கலாம் 
 
இப்படியாக மரணத்தை சுற்றி சுற்றி நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். ஆனால் மரணத்தை மறந்தவர்களாக இருக்கிறோம். அதற்காக என்ன தயாரிப்பு செய்திருக்கிறோம்? நம்முடைய அமல்களை என்ன சீர்திருத்தி இருக்கின்றோமா? பாவங்களை விட்டு விலகி இருக்கிறோமா? செய்கின்ற பாவங்களுக்காக தவ்பா செய்திருக்கிறோமா? இப்படி ஒவ்வொருவரும் தன்னை தானே விசாரிக்க வேண்டியிருக்கிறது.
 
தாவூத் அலை அவர்களின் வாழ்க்கை வரலாற்று அறிவிப்புகளில் வருகிறது. தாவூத் அலைஹிவஸல்லம் வணக்க வழிபாட்டுக்காக, யாரும் தொந்தரவு செய்து விடாமல் வணக்க வழிபாட்டில் மிக கவனத்தோடு, அந்த திக்ரிலே தொழுகையிலே மூழ்கி இருப்பார்கள். திடீரென்று ஒரு மனிதர் வருகிறார். அப்போது தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கேட்கிறார்கள். நீங்கள் யார் என்று. அவர் கூறுகிறார், நான்தான் மலக்குல் மவ்த். தாவூத் அலைஹி வஸல்லம் திகைத்து நிற்கிறார்கள், மலக்குல் மவ்த் சொல்கிறார்கள்;
 
أنا من لا يهاب الملوك ، ولا تمنع منه القصور ، ولا يقبل الرشوة
 
மன்னர்களை நான் பயப்படமாட்டேன். அவர்களின் அரண்மனை என்னை தடுத்து நிறுத்தாது. நான் யாரிடமும் லஞ்சம் வாங்க மாட்டேன். 
 
அப்போது தாவூத் அலைஹி வஸல்லம் சொல்கிறார்கள்; அப்படி என்றால் நீங்கள் மலக்குல் மவுத் ஆக தான் இருக்க வேண்டும் என்று. 
 
-ஒவ்வொரு வார்த்தையும் தாவூத் அலைஹி வஸல்லம் தர்தீப் செய்து வைத்திருப்பார்கள். மக்களை சந்தித்து நற்செய்தி கூறுவதற்காக, ஆட்சி அதிகாரங்களை நிர்வகிப்பதற்காக, குடும்பத்திற்காக, பிறகு அல்லாஹ்வை வணங்குவதற்காக. முற்றிலும் வணக்க வழிபாட்டை தவிர வேறு எதையும் அந்த நாளில் செய்ய மாட்டார்கள். அல்லாஹ் தஆலா தாவூத் அலைஹி வஸல்லம் அவர்களுடைய இபாதத்களை போற்றி புகழ்ந்து அல்குர்ஆனிலே நமக்கு நினைவூட்டுகிறான்-
 
وَوَهَبْنَا لِدَاوُودَ سُلَيْمَانَ نِعْمَ الْعَبْدُ إِنَّهُ أَوَّابٌ
 
தாவூதுக்கு சுலைமானை நாம் மகனாக தந்தருள் புரிந்தோம். அவர் மிக நல்லடியார். மெய்யாகவே அவர் ஒவ்வொரு விஷயத்திலும் நம்மை நோக்கி நின்றார். (அல்குர்ஆன் 38 : 30)
 
என அல்லாஹ் தாவூத் அலைஹி வஸல்லம் அவர்களை குர்ஆனிலே நினைவு கூறுகிறான். அவர்கள் சொல்கிறார்கள்.;
 
أتيتني ولم أستعد بعد
 
மலக்குல் மவ்த் என்னிடத்தில் வந்துவிட்டீரே! இன்னும் நான் அதற்கான தயாரிப்பு செய்யவில்லையே! 
 
அதற்க்கு மலக்குல் மவுத் சொல்கிறார்;
 
يا داود أين فلان قريبك ؟ أين فلان جارك ؟ قال : مات ، قال : أما كان لك في هؤلاء عبرة لتستعد ؟!
 
தாவூதே!உன்னுடைய இன்ன உறவினர் எங்கே? உன்னுடைய இன்ன அண்டை வீட்டார் எங்கே? யாரெல்லாம் இறந்து விட்டார்களோ அவர்களை எல்லாம் நினைவு கூறி உன்னுடைய அந்த உறவினர் எங்கே? உன்னுடைய அந்த அண்டைவீட்டார் எங்கே? என்று கேட்கிறார். 
 
அப்போது தாவூத் அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்கிறார்கள். அவர்கள் எல்லாம் இறந்து விட்டார்கள் என்று. உடனே மலக்குல் மவ்த் கேட்கிறார். அவர்கள் இறந்ததை நீங்கள் பார்த்தீர்கள் அல்லவா? உமக்கு அவர்களிலே படிப்பினை இருக்கவில்லையா?
 
சகோதரர்களே! ஒரு நபியுடைய நிலைமை இப்படி என்றால், நம்முடைய நிலையை நாம் சிந்தித்து பார்க்கவேண்டும்? மரணம் சாதாரணமானது அல்ல. ரப்புல் ஆலமீன் வர்ணிப்பதை பாருங்கள்;
 
إِذْ يَتَلَقَّى الْمُتَلَقِّيَانِ عَنِ الْيَمِينِ وَعَنِ الشِّمَالِ قَعِيدٌ
 
வலது புறத்தில் ஒருவரும், இடது புறத்தில் ஒருவருமாக இருவர் அவன் செய்யும் செயலை குறிப்பெடுத்து கொண்டிருக்கின்றனர். (அல்குர்ஆன் 50 : 17)
 
مَا يَلْفِظُ مِنْ قَوْلٍ إِلَّا لَدَيْهِ رَقِيبٌ عَتِيدٌ
 
மனிதன் எதை கூறிய போதிலும் அதனை எழுத காத்துக்கொண்டிருக்கும் ஒருவர் அவனிடம் இல்லாமலில்லை. அவன் வாயிலிருந்து புறப்படும் ஒவ்வொரு வார்த்தையும் உடனுக்குடன் பதியப்படுகிறது. (அல்குர்ஆன் 50 : 18)
 
وَجَاءَتْ سَكْرَةُ الْمَوْتِ بِالْحَقِّ ذَلِكَ مَا كُنْتَ مِنْهُ تَحِيدُ
 
மரணத்தின் கஷ்டம் மெய்யாகவே வந்து விடும் பட்சத்தில் அவனை நோக்கி நீ தப்பிவிட கருதியது இதுதான் என்று கூறப்படும். (அல்குர்ஆன் : 50:19)
 
ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்; 
 
عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ كَانَ آخِرُ كَلَامِهِ لَا إِلَهَ إِلَّا اللَّهُ دَخَلَ الْجَنَّةَ» سنن أبي داود 3116 -)]حكم الألباني] : صحيح
 
யாருடைய இறுதிப் பேச்சு லாயிலாஹ இல்லல்லாஹ் என்று இருக்குமோ அவர் சொர்க்கம் செல்வார்.
 
அறிவிப்பாளர்: முஆத் இப்னு ஜபல் ரழியல்லாஹு அன்ஹு, நூல்: அபூதாவுத், எண்: 3116.
 
எப்போது கலிமா நினைவுக்கு வரும்? முதலில் அது நம் உள்ளத்திலே இருக்க வேண்டும். அல்லாஹ்வின் மீது அன்பு இருக்க வேண்டும். அவன் மீது பயம் இருக்க வேண்டும். மார்க்கத்தின் மீது மதிப்பு இருக்க வேண்டும். 
 
அப்போது தான் அந்த கலிமா நினைவுக்கு வரும். அல்லாஹ்வின் அன்பு உள்ளத்தில் இல்லை. உலக மோகம் உள்ளத்தின் இடங்களை எல்லாம் அப்படியே ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. உள்ளம் எப்போதும் இந்த துன்யாவை நினைத்துக்கொண்டே இருக்குமேயானால் அந்த மரண நேரத்தில் எப்படி அல்லாஹ்வை நினைப்பான்? அல்லாஹ் சொல்கிறான்;
 
وَجَاءَتْ سَكْرَةُ الْمَوْتِ بِالْحَقِّ ذَلِكَ مَا كُنْتَ مِنْهُ تَحِيدُ
 
கருத்து : மரணத்தின் கஷ்டம் மெய்யாகவே வந்துவிடும். அந்த நேரத்தில் மலக்கு சொல்வார். மனிதனே இதிலிருந்து தானே நீ பயந்து ஓடிக் கொண்டிருந்தாய். இதிலிருந்து தப்பிப்பதற்காக நீ எங்கு எங்கெல்லாம் ஓடினாய். இதிலிருந்து தப்பிப்பதற்காக நீ எவ்வளவோ முயற்சி செய்தாய். (அல்குர்ஆன் : 50:19)
 
அல்லாஹு அக்பர். நேரம் வந்துவிட்டால், நாம் கண்ணை மூடித்தான் ஆக வேண்டும். பார்த்துக்கொண்டு இருந்த உலகத்தை பார்க்க முடியாமல் போய்விடும். பார்க்காமல் இருந்த ஒரு உலகத்தை அப்போது பார்க்க நேரிடும். 
 
அல்லாஹ் தஆலா சொல்லிக் காட்டுகின்றான்;
 
فَلَوْلَا إِذَا بَلَغَتِ الْحُلْقُومَ
 
உங்களில் மரணிக்கும் ஒருவரின் உயிர் தொண்டைக் குழியை அடைந்தால், (அல்குர்ஆன் 56 : 83)
 
وَأَنْتُمْ حِينَئِذٍ تَنْظُرُونَ
 
அந்நேரத்தில் நீங்கள் இருப்பவனுக்கு சமீபமாய் இருந்தும் பரக்க பரக்க விழிக்கின்றீர்கள். (அல்குர்ஆன் 56 : 84)
 
وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْكُمْ وَلَكِنْ لَا تُبْصِرُونَ
 
ஆயினும் நாம் அவனுக்கு உங்களை விட மிக சமீபமாக இருக்கின்றோம். எனினும் நீங்கள் நம்மை பார்ப்பதில்லை. (அல்குர்ஆன் 56 : 85)
 
فَلَوْلَا إِنْ كُنْتُمْ غَيْرَ مَدِينِينَ
 
நீங்கள் எவருக்குமே கட்டுப்படாமல் பூரண சுதந்திரம் உடையவர்களாக இருந்து, (அல்குர்ஆன் 56 : 86)
 
تَرْجِعُونَهَا إِنْ كُنْتُمْ صَادِقِينَ
 
மெய்யாகவே நீங்கள் இதில் உண்மை சொல்பவர்களாகவும் இருந்தால், இறந்த அவனுடைய உயிரை நீங்கள் மீள வைப்பது தானே. (அல்குர்ஆன் 56 : 87)
 
வசனத்தின் கருத்து : யாருக்கும் நாங்கள் கட்டுப்பட தேவை இல்லை. எங்களுக்கு மார்க்கம், இபாதத், தீன் தேவையில்லை என்ற திமிரிலே இருந்தீர்களே! எங்களுடைய கட்டுப்பாட்டில் எல்லாம், எங்களுடைய திறமையில் எல்லாம், எங்களுடைய அறிவியலில் எல்லாம், எங்களது ஆற்றலில் எல்லாம், எங்களது மருத்துவத்தில் எல்லாம் என்ற ஆணவத்தில் இருந்தீர்களே! உங்களால் முடிந்தால் நீங்கள் சொல்வது உண்மை என்றால், இப்போது நாம் உயிர் வாங்குகிறோமே உயிர் வாங்கி விட்டோமே இந்த உயிரை திரும்பக் கொண்டுவந்து காட்டுங்கள் பார்க்கலாம். உங்களால் முடிந்தால் அந்த உயிரை மீட்டுப் பாருங்கள்.
 
அல்லாஹ்வின் அடியார்களே! உலகத்திலே ஏதாவது ஒரு சக்தி இருக்கிறதா என்று யோசித்துப் பாருங்கள். யாருக்காவது ஏதாவது அப்படிப்பட்ட ஆற்றல் அறிவியல் இருகிறதா? உலகத்தில் உள்ள அத்தனை விஞ்ஞானிகளும் மருத்துவர்களும் கை விரிக்கக்கூடிய சில சமயங்கள் இருக்கிறது என்று சொன்னால் அதில் முதலாவதாக மரணம். இனி எங்களால் எதுவும் செய்ய முடியாது என்று கை விரித்து விடுவார்கள்.
 
கண்ணியத்திற்குரியவர்களே! யார் அல்லாஹ்வை நினைத்து, மார்க்கத்தை நினைத்து, மறுமையை பயந்து அதற்கான தயாரிப்பில் இருந்தார்களோ அவர்களை குறித்து ரப்பு சொல்லிக்காட்டுகிறான்;
 
إِنَّ الَّذِينَ قَالُوا رَبُّنَا اللَّهُ ثُمَّ اسْتَقَامُوا تَتَنَزَّلُ عَلَيْهِمُ الْمَلَائِكَةُ أَلَّا تَخَافُوا وَلَا تَحْزَنُوا وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنْتُمْ تُوعَدُونَ
 
எனினும், எவர்கள் எங்கள் இறைவன் அல்லாஹ்தான் என்று கூறி, (அதன் மீது) உறுதியாக நிலைத்து இருந்தார்களோ அவர்களிடம் நிச்சயமாக வானவர்கள் வந்து (அவர்களை நோக்கி) ‘‘நீங்கள் (ஒன்றுக்கும்) பயப்படாதீர்கள்; கவலைப்படாதீர்கள். உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட சொர்க்கத்தைக் கொண்டு சந்தோஷமடையுங்கள்'' என்றும், (அல்குர்ஆன் : 41:30)
 
نَحْنُ أَوْلِيَاؤُكُمْ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَفِي الْآخِرَةِ وَلَكُمْ فِيهَا مَا تَشْتَهِي أَنْفُسُكُمْ وَلَكُمْ فِيهَا مَا تَدَّعُونَ
 
‘‘நாங்கள் அவ்வுலக வாழ்க்கையிலும் உங்களுக்கு நண்பர்களாக இருந்தோம்; மறுமையிலும் (நாங்கள் உங்களுக்கு நண்பர்களே). சொர்க்கத்தில் உங்கள் மனம் விரும்பியதெல்லாம் உங்களுக்கு உண்டு. அதில் நீங்கள் கேட்பதெல்லாம் உங்களுக்குக் கிடைக்கும்''(அல்குர்ஆன் 41 : 31)
 
نُزُلًا مِنْ غَفُورٍ رَحِيمٍ
 
‘‘பாவங்களை மன்னித்து மகா கருணை செய்பவனின் விருந்தாளியாக (அதில் தங்கி) இருங்கள்'' என்றும் (வானவர்கள்) கூறுவார்கள். (அல்குர்ஆன் : 41 : 32)
 
வசனத்தின் கருத்து : எவர்கள் எங்கள் இறைவன் அல்லாஹ்தான் என்று கூறி அதன் மீது உறுதியாக நிலைத்து இருந்தார்களோ, -நாங்கள் அவனை தான் வணங்குவோம். வணக்கம் தான் எங்களுடைய வாழ்க்கை. அல்லாஹ்வை வணங்குவதற்கு தான் அவன் வாழ்க்கையை கொடுத்து இருக்கிறான் என்று. வணக்கத்தை முன்வைத்து, இபாதத்தை முன்வைத்து, அல்லாஹ் நமக்கு பட்டியலிட்ட வழிபாடுகளை முன்வைத்து, யார் வாழ்ந்தார்களோ அதிலே உறுதியாக இருந்தார்களோ மரண நேரத்தில் மலக்குகள் வந்து விடுவார்கள். அவர் பார்ப்பார் நாம் பார்க்க முடியாது. நம்மை விட்டு அவர்களுடைய பார்வை தடுக்கப்பட்டு விடும்.
 
அந்த மலக்குகள் சொல்வார்கள். நீங்கள் முன்னால் உள்ளதை பற்றி பயப்பட வேண்டாம். பின்னால் உள்ளதை பற்றி கவலைப்பட வேண்டாம். -முன்னால் உள்ளது என்றால் நீங்கள் அடுத்து கப்ரை சந்திக்க வேண்டுமே, மறுமையை சந்திக்க வேண்டுமே, பயப்படாதீர்கள்-.
 
இதைத்தான் ஸலஃப்கள் சொல்கிறார்கள். உலகத்திலேயே அல்லாஹ்வை பயந்து, மறுமையை பயந்து, கப்ரை பயந்து, வாழ்ந்து கொண்டால் அல்லாஹு தஆலா மறுமையிலே பயம் அற்ற நிலையை கொடுப்பான். யார் இந்த உலகத்திலேயே அல்லாஹ்வை, மறுமையை, ஆகிரத்தை, பயப்படாமல் வாழ்ந்தார்களோ அவர்களின் மரணத்திற்குப் பிறகு பயமே பயம்தான். நல்லவர்களுக்கு எத்தகைய பெரிய பயமும் அவர்களுக்கு திடுக்கத்தை கவலையை துக்கத்தை கொடுக்காது .
 
لَا يَحْزُنُهُمُ الْفَزَعُ الْأَكْبَرُ
 
மறுமையில் ஏற்படும் பெரும் திடுக்கம் அவர்களை துக்கத்திற்குள்ளாக்காது. (அல்குர்ஆன் 21 : 103)
 
மலக்குகள் சொல்வார்கள்; உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட சுவனபதியை கொண்டு சந்தோஷம் அடையுங்கள். உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட சொர்க்கம் உங்களுக்கு உண்டு. கிடைத்துவிடும். (அல்குர்ஆன் 41 : 30)
 
அல்லாஹ்வின் அடியார்களே! அவரிலிருந்தே சொர்க்க வாழ்க்கை ஆரம்பமாகிவிடும். ரொம்ப தூரமாக பார்க்க வேண்டாம். ஒரு மனிதர் மரணித்து விட்டால் அவருடைய கியாமத் ஏற்பட்டுவிடுகிறது. அவருடைய கப்ரிலே அவருக்கு ஒரு விசாரணை. அந்த விசாரணைக்கு ஏற்ப அவருக்கு சொர்க்கமோ நரகமோ அது அங்கே முடிவு செய்யப்படுகிறது. 
 
அந்த மலக்குகள் மேலும் சொல்வார்கள். உலகத்திலே நாங்கள் உங்களுக்கு நண்பர்களாக இருந்தோம். மறுமையிலும் இருப்போம். மறுமை வாழ்க்கையில் உங்களுக்கு மனம் விரும்பியதெல்லாம் கிடைக்கும்.
 
இன்னும் நீங்கள் கேட்பதெல்லாம் கிடைக்கும். மகா மான்னிப்பாளனாகிய கருணையாளனாகிய அல்லாஹ்வின் புறத்திலிருந்து விருந்தாக கொடுக்கப்படும். (அல்குர்ஆன் 41 : 31)
 
மரண நேரத்தை குறித்து ரப்புல் ஆலமீன் எச்சரிக்கை செய்கிறான். பாவிகள் உயிர் வாங்கப்படும் போது எத்தகைய திடுக்கத்தையும், எத்தகைய பயங்கரமான காட்சியையும் சந்திப்பார்கள்.
 
وَلَوْ تَرَى إِذِ الظَّالِمُونَ فِي غَمَرَاتِ الْمَوْتِ وَالْمَلَائِكَةُ بَاسِطُو أَيْدِيهِمْ أَخْرِجُوا أَنْفُسَكُمُ الْيَوْمَ تُجْزَوْنَ عَذَابَ الْهُونِ بِمَا كُنْتُمْ تَقُولُونَ عَلَى اللَّهِ غَيْرَ الْحَقِّ وَكُنْتُمْ عَنْ آيَاتِهِ تَسْتَكْبِرُونَ
 
(நபியே!) கற்பனையாக அல்லாஹ்வின் மீது பொய் கூறுபவனைவிட அல்லது வஹ்யி மூலம் அவனுக்கு எதுவும் அறிவிக்கப்படாமலிருக்க ‘‘தனக்கும் வஹ்யி வந்தது'' என்று கூறுபவனைவிட அல்லது ‘‘அல்லாஹ் இறக்கிய இ(வ்வேதத்)தைப் போல் நானும் இறக்குவேன்'' என்று கூறுபவனைவிட மகா அநியாயக்காரன் யார்? இவ்வக்கிரமக்காரர்கள் மரண வேதனையில் இருக்கும் சமயத்தில் நீர் அவர்களைப் பார்ப்பீராயின், வானவர்கள் தங்கள் கைகளை நீட்டி (அவர்களை நோக்கி) ‘‘உங்கள் உயிர்களைக் கொடுங்கள். இன்றைய தினம் இழிவு தரும் வேதனையே உங்களுக்குக் கூலியாகக் கொடுக்கப்படும். நீங்கள் உண்மையல்லாததை அல்லாஹ்வின் மீது (பொய்யாகக்) கூறி, நீங்கள் அவனுடைய வசனங்களை பெருமை கொண்டு புறக்கணித்ததுவே இதற்குக் காரணமாகும்'' (என்று கூறுவதை நீர் காண்பீர்).
 
வசனத்தின் கருத்து : நபியே! அந்தக் காட்சி எப்படி இருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள். என்ன காட்சி? அநியாயக்காரர்களை மலக்குகள் உயிர் வாங்க வரும்போது, அந்த அநியாயக்காரர்கள் மவுத்தின் மயக்கத்தில் இருக்கும் போது, மவுத்தின் திடுக்கத்தில் இருக்கும் போது, அந்த மவுத் என்ற திடுக்கத்திலே ஆபத்திலே மூழ்கும் போது தங்களுடைய கைகளை ஏந்தி உங்களுடைய உயிரை வெளியேற்றுங்கள் என்று கூறுவார்கள். 
 
மலக்குல் மவுத்தை பார்க்கும்போது இந்த காஃபிர்களுடைய பாவிகளுடைய உயிரோ பயந்து நடுங்கி உடலை கவ்விப் பிடித்துக் கொள்ளும். மலக்கு கடுமையாக பிடித்து இழுப்பார். நல்லவர்களோ சந்தோஷத்தில் எங்களை விரைவாக அழைத்துச் செல்லுங்கள் என்று மலக்கோடு செல்வதற்கு தயாராகிவிடும். இலகுவாக எடுத்துச் செல்வார். அல்லாஹ்வின் அடியார்களே! மலக்குகள்  சொல்வார்கள்.
 
அல்லாஹ்வின் மீது பொய்யுத்துரைத்தீர்களே, அல்லாஹ்வின் அத்தாட்சிகளை, சட்டங்களை கேட்காமல் பெருமை அடித்தீர்களே, உங்களுக்கு இன்று கேவலமான தண்டனை, உங்களை இழிவுபடுத்தும் வேதனை உண்டு என அந்த மலக்கு கூறுவார்.
 
கண்ணியத்திற்குரிய நல்லடியார்களே! அல்லாஹ் ஏற்படுத்தி இருக்கின்ற இந்த மரணம் என்பது உண்மையில் கற்பனைக்கு அப்பாற்பட்ட ஒன்று. நம்முடைய சிந்தனைக்கு அப்பாற்பட்ட ஒன்று. யோசிக்க முடியாது. திட்டமிட முடியாது. ஒவ்வொரு நாளும் அதற்கான தயாரிப்பில் நினைவில் யார் இருந்தார்களோ அவர்கள்தான் பிழைத்தார்கள். யார் ஒவ்வொரு நாளும் காலை மாலை என்று ஒவ்வொரு நேரத்திலும் தனக்குத்தானே அந்த மரணத்தை நினைவூட்டிக் கொண்டு, இஸ்திஃபார் செய்து, தவ்பா செய்து, இபாதத்துகளை செய்து, ஹக்குகளை கொடுத்து, அமானிதங்களை பேணி, நேர்மையோடு வாழ முயற்சி செய்தார்களோ, அவர்கள் தான் தப்பிப்பார்கள். சிறிது அலட்சியம் செய்தாலும் சரி. 
 
ஒருவர் வணங்குகிறார். அதே நேரத்தில் வணக்கத்திற்கு பிறகு பாவம், பிறகு கொஞ்சம் வணக்கம், பிறகு பாவம், சந்தர்ப்பம் கிடைத்தால் மொத்தமாக பாவத்திலே மூழ்கி விடுவது. இது பயங்கரமான நிலை.
 
அறிஞர்களில் ஒருவர் கூறுகிறார். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எச்சரிக்கையும் செய்துள்ளார்கள். அல்லாஹ்வுடைய தூதர் கூறிய கூற்றிற்கு இப்னு உமர் (ரலி) நமக்கு விளக்கம் கூறினார்கள்;
 
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: أَخَذَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمَنْكِبِي، فَقَالَ: «كُنْ فِي الدُّنْيَا كَأَنَّكَ غَرِيبٌ أَوْ عَابِرُ سَبِيلٍ» وَكَانَ ابْنُ عُمَرَ، يَقُولُ: «إِذَا أَمْسَيْتَ فَلاَ تَنْتَظِرِ الصَّبَاحَ، وَإِذَا أَصْبَحْتَ فَلاَ تَنْتَظِرِ المَسَاءَ، وَخُذْ مِنْ صِحَّتِكَ لِمَرَضِكَ، وَمِنْ حَيَاتِكَ لِمَوْتِكَ»
(صحيح البخاري 6416 -)
 
இந்த உலக வாழ்க்கையிலே நீங்கள் ஒரு பயணியை போல், ஒரு பரதேசியை போல் இருந்து கொள்ளுங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள். 
 
அறிவிப்பாளர்: இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி, எண்: 6416.
 
இந்த ஹதீஸிற்கு இப்னு  உமர் அவர்கள் விளக்கம் கூறுகிறார்கள். என்ன பொருள் தெரியுமா? நீங்கள் காலையை அடைந்தபோது மாலையை எதிர்பார்க்காதீர்கள். மாலை பொழுதில் இருக்கும் பொழுது காலைப் பொழுதை எதிர்பார்க்காதீர்கள். அந்த அளவு மரணத்துக்கு உண்டான நினைவிலேயே இருங்கள்.
 
ஒரு கவிஞர் கூறுகிறார்;
 
تَزَوَّدْ مـن التقـوى فإنك لا تـدري *** إذا جَنَّ ليلٌ هـل تعيشُ إلى الفجرِ
 
இந்த துன்யாவிலிருந்து மரணத்துக்கான தயாரிப்பை செய்துகொள். சகோதரனே! உனக்கு தெரியாது. இரவின் இருள் சூழ்ந்து விடும் போது காலை ஃபஜ்ரு வரை நீ இருப்பாயா என்று. 
 
ஆகவேதான் இஷாவுக்குப் பிறகு தூங்கும் போதே துஆக்களை ஓதி தவ்பா இஸ்திக்ஃபார் செய்து அதற்கான தயாரிப்போடு உறங்க வேண்டும். 
 
அல்லாஹ்வுடைய தூதரின் துஆக்களை பாருங்கள். 
 
رَبِّ قِنِي عَذَابَكَ يَوْمَ تَبْعَثُ عِبَادَكَ 
 
ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்கள் தூக்கத்தின்போது, தன்னுடைய கண்ணை மூடும் போது, அவர்கள் செய்த இறுதி வார்த்தையிலே ஒன்று, இறுதி துஆக்களிலே ஒன்று, என்னுடைய ரப்பே! உன்னுடைய அடியார்களை நீ மறுமையிலே ஒன்று சேர்க்கும் நாளில் உன்னுடைய தண்டனையிலிருந்து என்னைப் பாதுகாத்துக் கொள்வாயாக. 
 
அறிவிப்பாளர்: பரா இப்னு ஆசிப் ரழியல்லாஹு அன்ஹு, நூல்: திர்மிதி, எண்: 3399.
 
وكم من صحيحٍ مات من غير علةٍ *** وكم من عليلٍ عاش حيناً من الدهرِ
 
எத்தனையோ ஆரோக்கியமானவர்கள் நோயற்றவர்களாக இறந்துவிட்டார்கள் இன்னும். நோயுற்ற எத்தனையோ பேர் பல காலம் வாழ்ந்து கொண்டிருக்கிறார்களே!  
 
ஆகவே நோயை வைத்து, ஆரோக்கியத்தை வைத்து, மரணத்தை முடிவு செய்யாதீர்கள். 
 
وكم من صغارٍ يُرْتَجَى طولُ عمرهم *** وقد أُدخلت أجسامُهم ظلمـةَ القبرِ
 
எத்தனையோ வாலிபர்களை சிறுவர்களை பார்க்கிறோம். நீண்டகாலம் வாழ்வார்கள் என்று பெற்றோர்களும் உறவினர்களும் ஆதரவு வைக்கிறார்கள். ஆனால் அவர்கள் எல்லாம்  கப்ரிலே நுழைக்கப்பட்டு அவர்களின் உடல்கள் மண்ணாகிவிட்டனவே! கப்ரின் இருளிலே அவர்களின் உடல்கள் புதைக்கப்பட்டு விட்டனவே!
 
وكم من عروسٍ زينوهـا لزوجهـا *** وقد قُبضت أرواحُهـم ليلةَ القدرِ
 
எத்தனையோ மணப்பெண்கள் அவர்களுடைய கணவன்மார்களுக்கு அலங்கரிக்கப்பட்டு அவர்களை கொண்டுவருவதற்கான முயற்சியில் மக்கள் இருக்கின்றார்கள். ஆனால் அந்தப் பெண்ணுடைய கஃபனோ தயார் செய்யப்பட்டு விட்டது. அது அவளுக்கு தெரியாது. 
 
அல்லாஹ்வின் அடியார்களே! இதுதான் மரணம். அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்)  அவர்கள் கூறினார்கள்;
 
أكثروا ذكرَ هاذمِ اللَّذاتِ : الموتِ ؛ فإنَّه لَم يذْكُرْه أحدٌ في ضيقٍ مِن العَيشِ إلَّا وسَّعَه علَيهِ ، و لا ذَكرَه في سَعةٍ إلَّا ضيَّقَها عليهِ. الراوي: أنس بن مالك وأبو هريرة | المحدث: الألباني | المصدر:  صحيح الجامع الصفحة أو الرقم:  1211 خلاصة حكم المحدث: حسن
 
உங்களுடைய சிற்றின்பங்களை, உங்களது அற்ப ஆசைகளை விட்டு உங்களை துண்டிக்க வைக்கக்கூடிய மரணத்தை நினைவு கூறுங்கள். 
 
வாழ்க்கையில் நெருக்கடியாக இருக்கும் போது மரணத்தை நினைவு கூர்ந்தால் அந்த வாழ்க்கை மரணத்தின் நினைவை விசாலமாக்கி விடும். ஒருவன் வசதியாக இருக்கும் போது, விசாலமான வாழ்க்கையில் இருக்கும் போது, மரணத்தை நினைத்தால் அந்த மரணம் அவனது அந்த வாழ்க்கையை நெருக்கடி ஆக்கிவிடும். 
 
அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல்: ஸஹீஹுல் ஜாமிஃ, எண்: 1211.
 
எவ்வளவு அழகான தத்துவத்தை சொன்னார்கள். ஒரு மனிதன் வறுமையிலே இருக்கிறான் என்றால் அவன் மரணத்தை நினைவு கூர்ந்தால் அந்த வறுமை அல்லது அந்த நோய் அவனுக்கு இலகுவாகி விடும். 
 
நான் இந்த கஷ்டத்திலே பொறுமையாக இருந்தால் மரணத்திற்குப் பிறகு அல்லாஹ் எனக்கு வசதியான வாழ்க்கையை கொடுப்பான் என்று. அவனிடம் இருக்கும் நம்பிக்கை அந்த சிரமத்தை அவனுக்கு லேசாக்கிவிடும். ஒருவன் மிகப்பெரிய ஆடம்பரமான வாழ்க்கையில் இருக்கிறான். அதனுடைய மோகத்திலே பெருமையிலே இருக்கிறான். அவனுக்கு மரணத்தின் நினைவு வந்து விட்டால் அவன் பார்க்கக்கூடிய அந்த ஆடம்பரமான வாழ்க்கையிலே வெறுப்பு வந்துவிடும்.
 
அல்லாஹ்வுடைய அடியார்களே! நம்முடைய ஸலஃப்கள் கூறுகிறார்கள். யார் மரணத்தை அதிகமாக நினைக்கிறார்களோ அல்லாஹு தஆலா அவருக்கு மூன்று விஷயங்களைக் கொண்டு கண்ணியப்படுத்துவான். 
 
1. ஒன்று அவர் தவ்பாவை மிக விரைவாக செய்து பாவங்களிலிருந்து விலகி இருப்பார். 
 
2. இரண்டாவது அவரது உள்ளத்தில் போதும் என்ற தன்மை இருக்கும், மனநிறைவு இருக்கும். 
 
3. மூன்றாவதாக வணக்க வழிபாட்டில் அவருக்கு ஆர்வம் இருக்கும். 
 
யார் மரணத்தை மறப்பாரோ மூன்று விஷயங்களை கொண்டு அவர் தண்டிக்கப்படுவார். 
 
1. ஒன்று, நாளை மன்னிப்பு கேட்டுக் கொள்ளலாம். நாளை தவ்பா கேட்டுக் கொள்ளலாம். பாவமன்னிப்பு தேடுவதை தள்ளி போட்டு கொண்டே இருப்பார்கள். 
 
2. போதுமான செல்வத்தைக் கொண்டு வாழ்க்கையை கொண்டு அவருக்கு மன திருப்தி ஏற்படாது. 
 
3. வணக்க வழிபாட்டிலே சோம்பேறித்தனமாக இருப்பார். 
 
அல்லாஹ் சொல்கிறான், வணக்க வழிபாட்டுக்கு விரைந்து வாருங்கள்; ஓடி வாருங்கள் என்று.
 
فَفِرُّوا إِلَى اللَّهِ إِنِّي لَكُمْ مِنْهُ نَذِيرٌ مُبِينٌ
 
ஆகவே, (பாவத்திலிருந்து விலகி) அல்லாஹ்வின் பக்கம் வெகு தீவிரமாக நீங்கள் விரைந்து செல்லுங்கள். நிச்சயமாக நான் அவனைப் பற்றி உங்களுக்குப் பகிரங்கமாகவே அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறேன். (அல்குர்ஆன் 51 : 50)
 
وَسَارِعُوا إِلَى مَغْفِرَةٍ مِنْ رَبِّكُمْ وَجَنَّةٍ عَرْضُهَا السَّمَاوَاتُ وَالْأَرْضُ أُعِدَّتْ لِلْمُتَّقِينَ 
 
உங்கள் இறைவனின் மன்னிப்புக்கும், சொர்க்கத்துக்கும் விரைந்து செல்லுங்கள். அதன் விசாலம் வானங்கள், பூமியின் விசாலத்தைப் போன்றது. (அது) இறையச்சம் உடையவர்களுக்காக(வே) தயார்படுத்தப்பட்டுள்ளது. (அல்குர்ஆன் 3 : 133)
 
ஆனால் நம்மிடத்தில் எவ்வளவு சோம்பேறித்தனம் இருக்கிறது. அல்லாஹ்வுடைய நினைவிலே, குர்ஆன் ஓதுவதிலே, இன்ன இன்ன இபாதத்துகளிலே. காரணம் என்ன? மவுத்தை நினைக்காமல் இருப்பது தான்.
 
அல்லாஹ்வின் நல்லடியார்களே! நேரத்தை நாம் நினைக்க வேண்டும். தன்னுடைய முடிவை குறித்த பயம் நமக்கு வேண்டும். 
 
இப்னு மஸ்வூத் (ரலி) அறிவிக்கக்கூடிய ஹதீஸை பாருங்கள். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்;
 
فَإِنَّ الرَّجُلَ مِنْكُمْ لَيَعْمَلُ حَتَّى مَا يَكُونُ بَيْنَهُ وَبَيْنَ الجَنَّةِ إِلَّا ذِرَاعٌ، فَيَسْبِقُ عَلَيْهِ كِتَابُهُ، فَيَعْمَلُ بِعَمَلِ أَهْلِ النَّارِ، وَيَعْمَلُ حَتَّى مَا يَكُونُ بَيْنَهُ وَبَيْنَ النَّارِ إِلَّا ذِرَاعٌ، فَيَسْبِقُ عَلَيْهِ الكِتَابُ، فَيَعْمَلُ بِعَمَلِ أَهْلِ الجَنَّةِ
 
யாரை தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாரும் இல்லையோ, அந்த அல்லாஹ்வின் மீது சத்தியமாக! உங்களில் ஒருவர் பார்ப்பதற்கு சொர்க்கவாசிகளின் அமல்களை செய்து கொண்டே இருப்பார். அவருக்கும் மரணத்திற்கும் இடையே ஒரு முழம் மட்டுமே இருக்கும். அல்லாஹ்வுடைய விதி முந்தி விடும். நரகவாசிகளின் அமல்களை செய்து நரகத்திலே சென்றுவிடுவார். அதுபோன்று உங்களில் ஒருவர் பார்ப்பதற்கு நரகவாசிகளின் அமல்களை செய்து கொண்டிருப்பார். அவருக்கும் மரணத்திற்கும் ஒரு முழத்தை தவிர வேறு இருக்காது. அல்லாஹ்வுடைய விதி முந்திவிடும். சொர்க்கவாசிகளின் அமல்களை செய்து அவர் சொர்க்கத்தில் சென்றுவிடுவார். (1)
 
அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் ரழியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி, எண்: 3208.
 
இது மிகப்பெரிய எச்சரிக்கை. என்னுடைய முடிவை எனக்கு அழகாக்கிக் கொடு யா அல்லாஹ்! என்னுடைய மரண நேரத்தில் எனக்கு ஈமானை இஸ்லாமை கொடு! அந்த பிரார்த்தனை இருப்பதோடு வாழ்நாளெல்லாம் அதை மொழிந்து கொண்டே இருக்க வேண்டும். 
 
அல்லாஹ்வுடைய அடியார்களே! அப்படி வாழும் போது தான் இந்த உலக வாழ்க்கையை பயன்படுத்திக்கொள்ள முடியும். ஒவ்வொரு நேரத்தையும் வீணாக்காமல் இபாதத்திலே மறுமைக்கான தயாரிப்பிலே சொர்க்கத்திற்கான அந்த நிலையிலே நாம் கழிக்க முடியும். 
 
أنَّ رسولَ اللهِ مرَّ بقبرٍ فقال مَن صاحِبُ هذا القبرِ فقالوا فلانٌ فقال ركعتانِ أحَبُّ إلى هذا مِن بقيَّةِ دُنياكم. الراوي: أبو هريرة | المحدث: الطبراني | المصدر:  المعجم الأوسط الصفحة أو الرقم:  1/282 خلاصة حكم المحدث: لم يرو هذا الحديث عن أبي مالك إلا حفص بن غياث تفرد به حفص بن عبد الله
 
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கக்கூடிய ஹதீஸில் பாருங்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஒரு கப்ரை கடந்து சென்றபோது இந்தக் கப்ரிலே யார் அடக்கம் செய்யப்பட்டு இருக்கிறார் என்று பாருங்கள். மக்கள் சொன்னார்கள்; இன்னார் அடக்கம் செய்யப்பட்டிருக்கிறார் என்று. அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்;
 
இப்போது இந்த மனிதருக்கு உலக செல்வங்களை எல்லாம் கொட்டிக் கொடுக்கிறோம். அது வேண்டுமா? அல்லது இரண்டு ரக்ஆத் தொழுகை வேண்டுமா? என்று கேட்டால் இரண்டு ரக்அத் தொழுகை இவருக்கு விருப்பம் ஆனது. உங்களின் உலகச் செல்வங்கள் அத்தனையும் விட. 
 
அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல்: தப்ரானி, எண்: 282/1.
 
இப்போது எவ்வளவு நேரம் இருக்கிறது? எவ்வளவு நேரம் எவ்வளவு வாய்ப்பிருக்கிறது? தவற விடுகிறோமே! 
 
இன்னொரு அறிவிப்பில் வருகிறது. 
 
رَكْعتانِ خَفيفتانِ بِما تَحقِرُونَ وتَنفِلُونَ يَزيدُهما هذا في عملِهِ أحَبُّ إليه من بقيَّةِ دُنياكُمْ. الراوي: أبو هريرة | المحدث: الألباني | المصدر:  صحيح الجامع الصفحة أو الرقم:  3518 خلاصة حكم المحدث: صحيح التخريج: 
 
லேசான இரண்டு ரக்அத்துகள், சுருக்கமான இரண்டு ரக்அத்துகள், நீங்கள் சாதாரணமாக கருதுகிறீர்களே! நீங்கள் தொழக்கூடிய இரண்டு ரக்அத்துகள் இவருடைய அமலை அதிகப்படுத்தி விடுவது. இவருடைய நன்மைகளை அதிகப்படுத்தி விடுவது. இவருக்கு இப்போது மிக விருப்பமானது உங்களுடைய துன்யாவின் செல்வங்கள் எல்லாம் கிடைப்பதைக் காட்டிலும்.
 
அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல்: ஸஹீஹுல் ஜாமிஃ, எண்: 3518.
 
நினைத்துப் பாருங்கள் சகோதரர்களே! நம்மில் எத்தனை பேர் ஃபர்ளுகளை பாழாக்கி கொண்டிருக்கிறார்கள். கடமையான தொழுகைகளை, கடமையான நோன்புகளை, ஜகாத்தை, இன்னும் எத்தனை பேர் ஹஜ் கடமையாகியும் ஹஜ் செய்யாமல் தள்ளிப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். 
 
அல்லாஹ் கூறுகின்றான். ஒரு வசனத்தை கூறி நிறைவு செய்கிறோம். ரப்புல் ஆலமீன் நமக்கு நினைவூட்டுகிறான்,
 
وَأَنِيبُوا إِلَى رَبِّكُمْ وَأَسْلِمُوا لَهُ مِنْ قَبْلِ أَنْ يَأْتِيَكُمُ الْعَذَابُ ثُمَّ لَا تُنْصَرُونَ
 
ஆகவே, (மனிதர்களே!) உங்களை வேதனை வந்தடைவதற்கு முன்னதாகவே, நீங்கள் உங்கள் இறைவன் பக்கம் திரும்பி, அவனுக்கு முற்றிலும் பணிந்து வழிபட்டு நடங்கள். (வேதனை வந்து விட்டாலோ,) பின்னர் (ஒருவராலும்) நீங்கள் உதவி செய்யப்பட மாட்டீர்கள். (அல்குர்ஆன் 39 : 54)
 
وَاتَّبِعُوا أَحْسَنَ مَا أُنْزِلَ إِلَيْكُمْ مِنْ رَبِّكُمْ مِنْ قَبْلِ أَنْ يَأْتِيَكُمُ الْعَذَابُ بَغْتَةً وَأَنْتُمْ لَا تَشْعُرُونَ
 
(மனிதர்களே!) நீங்கள் அறியாத விதத்தில் திடீரென உங்களிடம் வேதனை வருவதற்கு முன்னதாகவே உங்கள் இறைவனால் உங்களுக்கு இறக்கிவைக்கப்பட்ட, (வேதங்களில்) மிக அழகான (இ)தைப் பின்பற்றுங்கள். (அல்குர்ஆன் 39 : 55)
 
أَنْ تَقُولَ نَفْسٌ يَاحَسْرَتَا عَلَى مَا فَرَّطْتُ فِي جَنْبِ اللَّهِ وَإِنْ كُنْتُ لَمِنَ السَّاخِرِينَ
 
(உங்களில்) எவரும், ‘‘அல்லாஹ்வைப் பற்றி நான் (கவனிக்க வேண்டியவற்றைக் கவனிக்காது) தவறிவிட்டேன். என் கேடே! நான் (இவற்றைப்) பரிகாசம் செய்து கொண்டிருந்தேனே!'' என்று கூறாமல் இருப்பதற்காகவும்; (அல்குர்ஆன் 39 : 56)
 
வசனத்தின் கருத்து : அடியார்களே! உங்களின் ரப்பின் பக்கம் நீங்கள் திரும்பி விடுங்கள். அவனுக்கு முன்னால் பணிந்து விடுங்கள். வணக்க வழிபாடுகளில் வந்துவிடுங்கள். மரணத்தின் வேதனை உங்களுக்கு வருவதற்கு முன்னால். அப்போது உங்களுக்கு உதவுவதற்கு யாரும் இருக்க மாட்டார்கள். உங்கள் ரப்பிடம் இறக்கப்பட்ட மிக அழகான இந்த மார்க்கத்தை பின்பற்றுங்கள். திடீரென்று உங்களுக்கு வேதனை வரும் முன்னால் அந்த வேதனை எப்போது எந்த நிலையில் உங்களுக்கு வரும் என்பதை நீங்கள் உணர மாட்டீர்கள். அந்த நேரத்திலே ஒரு ஆன்மா கதறும். அல்லாஹ்வுடைய இபாதத்திலே வணக்க வழிபாட்டிலே நான் இவ்வளவு பெரிய அநியாயம் செய்து விட்டேனே! குறை செய்துவிட்டேனே! எனக்கு ஏற்பட்ட கைசேதமே! துக்கமே! என்று அந்த நஃப்ஃஸ் கதறும். 
 
மார்க்கத்தை ஏளனமாக சாதாரணமாக பரிகாசம் செய்யக் கூடியவர்களிலே நான் இருந்து விட்டேனே! என்று கதறும். ரப்பு சொல்கிறான். அந்த நாள் வருவதற்கு முன்னால் நீங்கள் ரப்பிடம் திரும்பி விடுங்கள். அவனுக்கு முன்னால் பணிந்து விடுங்கள். கொடுத்த அழகிய மார்க்கத்தை பின்பற்றுங்கள் என்று.


 
 நiம்முடைய ரூஹ் இலகுவாகக் கைப்பற்றப் பட வேண்டுமா? அல்லது பற்றி இழுக்கப்பட வேண்டுமா?

ஏனெனில், ரூஹ் இலகுவாகக் கைப்பற்றப் பட வேண்டுமானால், ரூஹ் பற்றியிழுக்கப் படக் கூடாது என்றால் அதற்கென ஓர் உன்னதமான வாழ்க்கையை வாழ வேண்டியது இருக்கும்.

அப்படியான வாழ்க்கையை மேற்கொண்டால் மூன்று வகையான சோபனங்கள் அந்த மனிதனுக்கு உயிர் பிரியும் நேரத்தில் அல்லாஹ்வால் வழங்கப்படும்.

முதல் சோபனம்…

إِنَّ الَّذِينَ قَالُوا رَبُّنَا اللَّهُ ثُمَّ اسْتَقَامُوا تَتَنَزَّلُ عَلَيْهِمُ الْمَلَائِكَةُ أَلَّا تَخَافُوا وَلَا تَحْزَنُوا وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنْتُمْ تُوعَدُونَ (30) نَحْنُ أَوْلِيَاؤُكُمْ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَفِي الْآخِرَةِ وَلَكُمْ فِيهَا مَا تَشْتَهِي أَنْفُسُكُمْ وَلَكُمْ فِيهَا مَا تَدَّعُونَ (31) نُزُلًا مِنْ غَفُورٍ رَحِيمٍ (32)

“எவர்கள் அல்லாஹ் எங்கள் இறைவன் என்று கூறி பின்னர் அதில் உறுதியாக நிலைத்து நின்றார்களோ, ( அவர்களின் உடலை விட்டும் உயிர் பிரியும் போது ) திண்ணமாக, அவர்கள் மீது வானவர்கள் இறங்குகின்றார்கள்.

மேலும், அவர்களிடம் அவ்வானவர்கள் கூறுவார்கள் “ ( உலகில் நீங்கள் விட்டுச் செல்கின்றவைகள் குறித்து ) அஞ்சாதீர்கள்! ( நாளை மறுமையில் என்ன நடக்குமோ என்று ) கவலைப் படாதீர்கள்! உங்களுக்கு வாக்களிக்கப்பட்டிருக்கும் சுவனத்தின் நற்செய்தியினால் மகிழ்ச்சியடையுங்கள்! நாங்கள் உங்களுக்கு உற்ற துணையாக இருப்போம்! இந்த உலக வாழ்விலும் மறுமையிலும்!

இரண்டாவது சோபனம்….

فَأَمَّا إِنْ كَانَ مِنَ الْمُقَرَّبِينَ (88) فَرَوْحٌ وَرَيْحَانٌ وَجَنَّتُ نَعِيمٍ (89) وَأَمَّا إِنْ كَانَ مِنْ أَصْحَابِ الْيَمِينِ (90) فَسَلَامٌ لَكَ مِنْ أَصْحَابِ الْيَمِينِ

“இறக்கின்ற மனிதர் இறைவனுக்கு நெருக்கமானவர்களுள் ஒருவராய் இருந்தால் அவருக்கு சுகமும், உயர்தரமான உணவும், அருட்கொடைகள் நிறைந்த சுவனமும் இருக்கின்றன. மேலும், அவர் வலப்பக்கத்தார்களுள் ஒருவராய் இருந்தால் “சாந்தி உண்டாகட்டும்! உம் மீது!” நீர் வலப்பக்கத்தாருள் ஒருவராய் இருக்கின்றீர்! என்று கூறி வரவேற்கப்படுவார்”.                         ( அல்குர்ஆன்: 56: 88 – 91 )

மூன்றாவது சோபனம்….

يَا أَيَّتُهَا النَّفْسُ الْمُطْمَئِنَّةُ (27) ارْجِعِي إِلَى رَبِّكِ رَاضِيَةً مَرْضِيَّةً (28) فَادْخُلِي فِي عِبَادِي (29) وَادْخُلِي جَنَّتِي (30)

“ஓ அமைதியடைந்த ஆன்மாவே! செல் உன் இறைவனின் பக்கம்! உன் நல்ல முடிவைக் கொண்டு மகிழ்ந்த நிலையில், மேலும், உன் இறைவனின் திருப்தியைப் பெற்ற நிலையில்! இணைந்து விடு, என்னுடைய நல்லடியார்களுடன்! மேலும், புகுந்து விடு, என்னுடைய சுவனத்தில்!”                     ( அல்குர்ஆன்: 89: 27-30 )

பர்ராஃ இப்னு ஆஸிப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

அன்சாரித் தோழர் ஒருவரின் ஜனாஸாவை நல்லடக்கம் செய்வதற்காக பகீஉல் ஃகர்கத் எனும் மையவாடிக்கு நபி (ஸல்) அவர்களுடன் சென்றோம்.

மண்ணறையின் அருகே சென்ற போது உட்குழி தோண்டப்படாத நிலையில் இருந்ததால் நபி (ஸல்) அவர்கள் கப்ருக்கு அருகில் அமர்ந்து கொண்டு ஒரு குச்சியினால் பூமியை கிளறிக் கொண்டிருந்தார்கள்.

எங்களின் தலைகளின் மீது பறவைகள் அமர்ந்திருப்பது போன்று நாங்களும் அந்தக் கப்ருக்கு அருகாமையில் (அமைதியாக) அமர்ந்திருந்தோம்.

 (திடீரென) நபி (ஸல்) தன் தலையை உயர்த்தி நீங்கள் கப்ரின் வேதனையிலிருந்து அல்லாஹ்விடத்தில் பாதுகாப்புத் தேடுங்கள் என இரண்டு அல்லது மூன்று முறை கூறி பின்வரும் வார்த்தைகளைக் கூறினார்கள்.

இறைவிசுவாசியான அடியான் ஒருவன் உலகத் தொடர்புகளைத் துண்டித்துக்கொண்டு மறுமையை எதிர்நோக்கிக் கொண்டிருக்கையில், (சக்ராத்தின் நேரத்தில்) சூரிய ஒளிக்கு ஒப்பான பிரகாசம் கொண்ட முகத்துடன் வானத்திலிருந்து வானவர்கள் சிலர் அவரிடம் வருகை தருவார்கள்.

அவர்கள் தங்களுடன் சுவர்க்கத்து கபன் துணிகளிலிருந்து ஒரு கபன் துணியையும், சுவர்க்கத்தின் நறுமணங்களிலிருந்து ஒரு நறுமணத்தையும் வைத்துக் கொண்டு அவருடைய பார்வைக்கு எட்டும் தூரத்தில் அமர்ந்திருப்பார்கள்.

அப்பொழுது உயிரைக் கைப்பற்றும் வானவர் வந்து, அவரருகில் அமர்வார். அவரை நோக்கி, ”ஓ! நல்ல ஆன்மாவே! நீ ஏக இறைவனுடைய மன்னிப்பை நோக்கியும் அவனுடைய திருப்தியை நோக்கியும் இந்த உலகிலிருந்து வெளியேறிவிடு!” என்று கூறுவார்.

தோல் பையிலிருந்து நீர் வழிந்து விடுவது போன்று (அந்த ஆன்மா உடலில் இருந்து இலகுவாக) வெளியேறி விடும். அந்த உயிரை கைப்பற்றியதும் சற்று நேரம் கூட தாமதிக்காமல் அந்தக் கபனில் (கொண்டு வந்த) மணத்தோடு வைத்து விடுவார்கள்.

உலகத்தில் இருக்கும் கஸ்தூரி வாசனையை விட மிக மணம் வீசக்கூடியதாக அது இருக்கும். (பின்பு அந்த உயிரை அல்லாஹ்விடம் கொண்டு செல்வார்கள்) வானவர்கள் இருக்கும் கூட்டத்திற்கு அருகாமையில் அந்த உயிரை கொண்டு போகும் போதெல்லாம் இது யாருடைய நல்ல உயிர்? என அவ்வானவர்கள் கேட்பார்கள்.

அதற்கு உலகில் இவருக்கு சொல்லப்பட்ட நல்ல பெயரைக் கொண்டு இன்னாருடைய மகன் இன்னார் என்று சொல்லப்படும். இவருக்காக முதல் வானத்தை, திறக்கும்படி அவ்வானவர் வேண்டுவார்.

அவருக்காக முதல் வானம் திறக்கப்படும். ஒவ்வொரு வானத்திலும் உள்ள வானவர்கள் அடுத்த வானம் வரை (அந்த உயிரை) பின் தொடருவார்கள். இப்படி ஏழு வானம் வரை அதனை எடுத்துச் செல்வார்கள்.

அப்போது எல்லாம் வல்ல அல்லாஹ், ஆன்மாவைச் சுமந்து சென்ற வானவர்களை நோக்கி ”என் அடியானுடைய செயல்களை ‘இல்லிய்யீனிலே’ (நல்லடியார்களுடைய செயல்களின் பதிவேடுகள் இருக்குமிடத்திலே) பதிந்து விட்டு, (விசாரணைக்காக) பூமியிலுள்ள அவனுடைய உடலில் (கப்ரில் - மண்ணறையில்) அவருடைய ஆன்மாவைச் சேர்த்து விடுங்கள்!” என்று கூறுவான்.

(அந்த அடியானுக்கு மீண்டும் உயிர் கொடுக்கப்படும்) அப்போது, அவரிடத்தில் இரு வானவர்கள் வந்து அவரை அமரவைத்து...

”உன்னுடைய இறைவன் யார்? எனக் கேட்பார்கள். என் இறைவன் அல்லாஹ் என்று கூறுவார். உன்னுடைய மார்க்கம் எது? எனக் கேட்பார்கள், எனது மார்க்கம் இஸ்லாம் எனக் கூறுவார். உமக்கு அனுப்பப்பட்ட தூதர் யார்? எனக் கேட்பார்கள். அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் எனக் கூறுவார். அது உமக்கு எப்படித் தெரியும்? என அவ்விருவரும் கேட்பார்கள். நான் குர்ஆனை ஓதினேன். (அதன் மூலம்) அவர்களை ஈமான் கொண்டு உண்மைப்படுத்தினேன்!” எனக் கூறுவார்.

அப்போது வானத்திலிருந்து ஓர் அழைப்பாளர் அல்லாஹ் கூறியதாக அழைத்துச் சொல்வார் ”என் அடியான் உண்மை சொல்லிவிட்டான்!

ஆகவே, அவருக்காக சுவர்க்கத்திலிருந்து ஒரு விரிப்பை விரித்து விடுங்கள். இன்னும் சுவர்க்கத்திலிருந்து ஒரு வாசலையும் திறந்து விடுங்கள்! என்று அறிவிப்புச் செய்வார்.  

அதன் வழியாக அவருக்கு நல்ல வாசனைகளும், நறுமணமும் வந்து கொண்டிருக்கும். அவருடைய கண் எட்டிய தூரத்திற்கு அவருடைய கப்ரு விசாலமாக்கப்படும்.

மேலும், அவரிடத்திலே நறுமணம் வீசக்கூடிய, அழகிய ஆடை அணிந்த, அழகிய தோற்றமுள்ள ஒருவர் வந்து, இதுவே (உலகில்) உமக்கு வாக்களிக்கப்பட்ட நாளாகும்.

உமக்கு சந்தோஷம் தரக்கூடிய ஒன்றைக் கொண்டு நற்செய்தி கூறுகின்றேன் என்பார். (அதற்கு கப்ரில் அடக்கம் செய்யப்பட்டவர்) நற்செய்தி கூறுபவரைப் போன்றே உன் தோற்றம் இருக்கின்றதே! நீர் யார்? எனக் கேட்பார். நான் தான் உன் நல் அமல் என அம்மனிதர் கூறுவார்.

அப்போது அவர், ”இறைவா! என் குடும்பத்தார்களிடத்திலும், என் பொருளிடத்திலும் நான் விரைந்து செல்வதற்காக, கியாமத்து நாளை (வெகு சீக்கிரம்) கொண்டு வருவாயாக! இறைவா! கியாமத்து நாளை (வெகு சீக்கிரம்) கொண்டு வருவாயாக!” எனக் கூறுவார்.


உயர்வான வாழ்க்கையை மேற்கொள்ளாமல் தான் விரும்பியவாராக எல்லாம் வாழ்ந்த ஒருவனிடத்தில் அவனுடைய ரூஹைக் கைப்பற்ற வானவர்கள் வந்தால் உயிரை முழு உடலில் இருந்து பற்றி இழுத்து கைப்பற்றுவார்கள்.

இது மாதிரியான மனிதர்களின் உயிரைக் கைப்பற்றும் நிலை குறித்து அல்லாஹ் குர்ஆனில் விவரிக்கும் போது…

كَلَّا إِذَا بَلَغَتِ التَّرَاقِيَ (26) وَقِيلَ مَنْ رَاقٍ (27) وَظَنَّ أَنَّهُ الْفِرَاقُ (28) وَالْتَفَّتِ السَّاقُ بِالسَّاقِ (29) إِلَى رَبِّكَ يَوْمَئِذٍ الْمَسَاقُ (30)

“உயிர் தொண்டை வரை எட்டும் போது, மேலும், இந்த மரணத்திலிருந்து மீட்டு மந்திரித்து ஊதுபவர் எவரேனும் உண்டா? என்று கேட்கப்படும் போது,

மேலும், இது உலகை விட்டுப் பிரியும் நேரம் என்று மனிதன் புரிந்து கொள்ளும் போது, கெண்டைக்கால், கெண்டைக்காலுடன் பின்னிப் பிணையும் போது, அந்த நாளில் தான் உன் அதிபதியின் பக்கம் திரும்பிச் செல்ல வேண்டியிருக்கும்”.

                                                    ( அல்குர்ஆன்: 75: 26-30 )

فَلَوْلَا إِذَا بَلَغَتِ الْحُلْقُومَ (83) وَأَنْتُمْ حِينَئِذٍ تَنْظُرُونَ (84) وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْكُمْ وَلَكِنْ لَا تُبْصِرُونَ (85) فَلَوْلَا إِنْ كُنْتُمْ غَيْرَ مَدِينِينَ (86) تَرْجِعُونَهَا إِنْ كُنْتُمْ صَادِقِينَ (87)

“இறந்து போகின்ற ஒருவரின் உயிர் தொண்டைவரை வந்து அவர் இறந்து கொண்டிருப்பதை உங்கள் கண்களாலேயே நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றீர்கள்?

அந்நேரத்தில் வெளியேறிக் கொண்டிருக்கும் அவருடைய உயிரை நீங்கள் ஏன் திரும்பக் கொண்டு வருவதில்லை? அப்போது, உங்களைக் காட்டிலும் நாம் அவருக்கு மிக அண்மையில் இருக்கின்றோம்.

நீங்கள் யாராலும் கட்டுப்படுத்தப்படாதவர்களாய் இருந்தால், உங்களுடைய கருத்தில் நீங்கள் வாய்மையானவர்களாய் இருந்தால் போகிற உயிரை கொண்டு வாருங்கள் பார்ப்போம்!?”                                 ( அல்குர்ஆன்: 56: 83-87 )

பர்ராஃ இப்னு ஆஸிப் (ரலி) அவர்கள் அறிவிக்கிற ஹதீஸின் தொடரில்….

இதே வேளையில், நிராகரிப்பாளன் ஒருவன் மரண வேளையை நெருங்கி விட்டால், கறுத்த (விகாரமான) முகத்துடன் சில வானவர்கள் வந்து அவனுடைய கண்பார்வை எட்டும் தூரத்தில் அமர்ந்து விடுவார்கள். அவர்களிடத்தில் ஒரு கம்பளித் துணி இருக்கும்.
அப்பொழுது உயிரைக் கைப்பற்றக்கூடிய வானவர் வந்து அவனருகில் அமர்வார்.
 
அவர் அவனை நோக்கி, கெட்ட ஆன்மாவே! அல்லாஹ் அளிக்கவிருக்கும் இழிவை நோக்கியும் அவனுடைய கோபத்தை நோக்கியும் நீ வெளியேறி வா! என்று கூறுவார். 

அப்பொழுது அவ்வுயிர் ஒளிந்து கொள்வதற்காக உடல் முழுவதும் ஓட ஆரம்பித்து விடும். முள் வேலியிலிருந்து நனைத்த கம்பளி துணியை பிடுங்கி எடுப்பது போன்று உயிரைக் கைப்பற்றக்கூடிய வானவர் அவனுடைய உடலிலிருந்து (பலவந்தமாக) உயிரைப் பிடுங்கி எடுப்பார். 

(இவ்வாறு பலவந்தமாக அடித்துப் பிடுங்கி எடுத்த உயிரை) சற்று நேரம் கூட தாமதிக்காமல் அந்தக் கம்பளித் துணியில் வைத்துவிடுவார். இவ்வுலகில் வீசும் துர்நாற்றத்தை விட அதிகமான துர்நாற்றம் அதிலிருந்து வீசும். பின்பு அந்த உயிரை எடுத்துக் கொண்டு முதல் வானத்துக்குக் கொண்டு செல்வார் அந்த வானவர்.
வானவர்கள் இருக்கும் கூட்டத்திற்கு அருகாமையில் அந்த உயிரை கொண்டு போகும் போதெல்லாம் இந்த கெட்ட உயிர் யாருடையது? என அவ்வானவர்கள் கேட்பார்கள்.
அதற்கு உலகில் இவனுக்குச் சொல்லப்பட்ட கெட்ட பெயரைக் கொண்டு இன்னாருடைய மகன் இன்னார் என்று சொல்லப்படும்.
இவனுக்காக முதல் வானத்தை திறக்கும்படி அவ்வானவர் வேண்டுவார், ஆனால் வானம் அவனுக்காக திறக்கப்படமாட்டாது என்று கூறிவிட்டு பின்வரும்; ஆயத்தை நபி (ஸல்) அவர்கள் ஓதிக்காட்டினார்கள்.
إِنَّ الَّذِينَ كَذَّبُوا بِآيَاتِنَا وَاسْتَكْبَرُوا عَنْهَا لَا تُفَتَّحُ لَهُمْ أَبْوَابُ السَّمَاءِ وَلَا يَدْخُلُونَ الْجَنَّةَ حَتَّى يَلِجَ الْجَمَلُ فِي سَمِّ الْخِيَاطِ وَكَذَلِكَ نَجْزِي الْمُجْرِمِينَ ()
“உறுதியாக அறிந்து கொள்ளுங்கள்! எவர்கள் நம்முடைய வசனங்களைப் பொய்ப்பித்து, அவற்றைப் புறக்கணித்து, ஆணவம் கொண்டார்களோ அவர்களுக்கு (அல்லாஹ்வின் அருளுக்குரிய) வானத்தின் (அருள்) வாயில்கள் திறக்கப்படமாட்டாது, மேலும் ஊசியின் துவாரத்தில் ஒட்டகம் நுழையும் வரையில் அவர்கள் சுவனத்தில் நுழையமாட்டார்கள், மேலும், குற்றவாளிகளுக்கு நம்மிடம் இத்தகைய கூலி தான் கிடைக்கும். (அல்குர்ஆன் 7:40)

வல்ல நாயன் அல்லாஹ், உயிரைச் சுமந்து வந்த வானவரைப் பார்த்து, ”அவனுடைய செயல்களை பூமியின் அடிப்பாகத்திலுள்ள “ஸிஜ்ஜீன்” (ஸிஜ்ஜீன் என்றால் தீயவர்களின் செயல்கள் பதிவு செய்யப்படும் இடமாகும்) என்ற இடத்தில் பதியுமாறு உத்தரவிடுவான். பின்னர், அந்த உயிர் (முதலாம் வானத்திலிருந்து ஸிஜ்ஜீன் என்ற இடத்துக்கு) எறியப்படும்.

பிறகு பின்வரும் ஆயத்தை நபி (ஸல்) அவர்கள் ஓதிக்காட்டினார்கள்.

حُنَفَاءَ لِلَّهِ غَيْرَ مُشْرِكِينَ بِهِ وَمَنْ يُشْرِكْ بِاللَّهِ فَكَأَنَّمَا خَرَّ مِنَ السَّمَاءِ فَتَخْطَفُهُ الطَّيْرُ أَوْ تَهْوِي بِهِ الرِّيحُ فِي مَكَانٍ سَحِيقٍ ()

“இன்னும், எவன் அல்லாஹ்வுக்கு இணைவைக்கின்றானோ அப்பொழுது அவன், வானத்திலிருந்து (முகங்குப்புற) விழுந்து பறவைகள் அவனை இராய்ஞ்சிக் கொண்டு சென்றதைப் போன்றோ அல்லது (பெருங்) காற்று அவனை வெகு தூரத்தில் உள்ள இடத்திற்கு அடித்துக் கொண்டு சென்றதைப் போன்றோ இருக்கின்றான். (அல்குர்ஆன் 22:31)

இவ்வாறு ஸிஜ்ஜீனில் அவனுடைய செயல்கள் பதியப்பட்டு, பின்னர் அவனது உயிர் அவனுடைய உடலில் ஊதப்படும். 

அவனிடத்தில் இரு மலக்குகள் வந்து அவனை அமரவைத்து உன்னுடைய இறைவன் யார்? எனக் கேட்பார்கள். “கை சேதமே, கை சேதமே எனக்குத் தெரியாது” என்பான். உன்னுடைய மார்க்கம் எது? எனக் கேட்பார்கள், “கை சேதமே, கை சேதமே எனக்குத் தெரியாது” என்பான். உமக்கு அனுப்பப்பட்ட தூதர் யார்? எனக் கேட்பார். “கை சேதமே, கை சேதமே எனக்குத் தெரியாது” என்பான். 

அப்போது வானத்திலிருந்து ஓர் அழைப்பாளர் அல்லாஹ் கூறியதாக அழைத்துச் சொல்வார் ”என் அடியான் பொய் சொல்லிவிட்டான்!

ஆகவே அவனுக்கு நரகத்திலிருந்து ஒரு விரிப்பை விரித்து விடுங்கள்! இன்னும் நரகத்திலிருந்து ஒரு வாசலையும் திறந்து விடுங்கள்!” என்று சொல்லப்படும்.

அதன் வழியாக அவனுக்கு அதன் சூடும் விஷக்காற்றும் வந்து கொண்டிருக்கும். அவனுடைய விலா எலும்புகள் ஒன்றோடு ஒன்று சேரும் அளவு கப்ரு அவனை நெருக்கும். இன்னும் அவனிடத்திலே கோர முகமுடைய, மோசமான ஆடை அணிந்த, துர்நாற்றமுள்ள ஒருவர் வந்து, இதுவே (உலகில்) உமக்கு வாக்களிக்கப்பட்ட நாளாகும்.

உமக்கு கவலை தரக்கூடிய ஒன்றைக் கொண்டு கெட்ட செய்தி கூறுகின்றேன் என்பார். (அதற்கு கப்ரில் அடக்கம் செய்யப்பட்டவர்) கெட்ட செய்தி கூறுபவரைப் போன்றே உன் தோற்றம் இருக்கின்றதே! நீ யார்? எனக் கேட்பார். நான்தான் உன்னுடைய கெட்ட செயல்கள் என அம்மனிதர் கூறுவார். அப்போது அவன், இறைவா! மறுமை நாளை கொண்டு வந்துவிடாதே என்று கூறுவான்.

( நூல்: ஷரஹ் அகீதா அத் தஹாவிய்யா, பாடம்: அதாபுல் கப்ரி வ நயீமிஹி )

இப்போது நாம் முடிவு செய்வோம்! நம்முடைய உயிர் எப்படி நம்மிடம் இருந்து பிரிய வேண்டும்? நம்முடைய மரணம் எப்படி அமைய வேண்டும்? என்று..

நம்முடைய உயிர் இலகுவாகப் பிரிய வேண்டுமானால் இந்த உலகில் நாம் முக்கியமாக ஐந்து கடமைகளை முழுமையாக நிறைவேற்றி விட வேண்டும்.

இந்த ஐந்து கடமைகளை எப்போது முழுமையாக நிறைவேற்றுகிறோமோ அப்போது தான் நம்முடைய மௌத்தின் நேரத்தில் அல்லாஹ்வின் சோபனங்களைப் பெற முடியும்.

என்ன அந்த ஐந்து கடமைகள்?

1. மௌத்துக்கு முன்னால் எல்லா பாவங்களில் இருந்தும் நாம் அல்லாஹ்விடம் மன்னிப்பைப் பெற்று விடவேண்டும்....

ஏனெனில், மௌத்தின் போது அல்லாஹ்விடம் கேட்கப்படும் பாவமன்னிப்பிற்கு மதிப்பு கிடையாது. பாவங்களுக்கு மன்னிப்பும் கிடையாது.

وَلَيْسَتِ التَّوْبَةُ لِلَّذِينَ يَعْمَلُونَ السَّيِّئَاتِ حَتَّى إِذَا حَضَرَ أَحَدَهُمُ الْمَوْتُ قَالَ إِنِّي تُبْتُ الْآنَ وَلَا الَّذِينَ يَمُوتُونَ وَهُمْ كُفَّارٌ أُولَئِكَ أَعْتَدْنَا لَهُمْ عَذَابًا أَلِيمًا ()

அல்லாஹ் கூறுகின்றான்: “எவர்கள் பாவங்கள் புரிந்தவாறு வாழ்ந்து விட்டு மரணம் நெருங்கும் போது “நான் இப்போது மன்னிப்புக் கோருகின்றேன்” என்று கூறுகின்றார்களோ அவர்களுக்கு மன்னிப்புக் கிடையாது. மேலும், இறுதி மூச்சு வரை நிராகரிப்பிலேயே மூழ்கியிருப்பவர்களுக்கும் பாவமன்னிப்புக் கிடையாது. இத்தகையோருக்கு துன்புறுத்தும் தண்டனையை நாம் தயார் செய்து வைத்திருக்கின்றோம்”.                                        ( அல்குர்ஆன்: 4: 18 )

2. மௌத்துக்கு முன்னால் அல்லாஹ்வின் பாதையில் தான தர்மங்களை செய்து விட வேண்டும்…

ஏனெனில், மௌத்தின் போது தான் தான தர்மங்கள் செய்திருக்க வேண்டுமே என்கிற ஏக்கமும், ஆசையும் பிறக்கும். என்ன செய்வது அப்போது அந்த ஆசைக்கு அல்லாஹ்விடம் மதிப்பேதும் இருக்காது.

وَأَنْفِقُوا مِنْ مَا رَزَقْنَاكُمْ مِنْ قَبْلِ أَنْ يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ فَيَقُولَ رَبِّ لَوْلَا أَخَّرْتَنِي إِلَى أَجَلٍ قَرِيبٍ فَأَصَّدَّقَ وَأَكُنْ مِنَ الصَّالِحِينَ () وَلَنْ يُؤَخِّرَ اللَّهُ نَفْسًا إِذَا جَاءَ أَجَلُهَا

அல்லாஹ் கூறுகின்றான்: “உங்களில் எவருக்கேனும் மரண நேரம் வருவதற்கு முன்பாக, நாம் உங்களுக்கு வழங்கியவற்றிலிருந்து நல் வழியில் செலவு செய்து விடுங்கள்! ஏனெனில், அந்த நேரத்தில் நல்வழியில் செலவு செய்யாதவர் “என் அதிபதியே! நீ எனக்கு இன்னும் சிறிது கால அவகாசம் அளிக்கக் கூடாதா? நான் தானதர்மம் செய்வேனே! நல்லோர்களில் ஒருவனாகி விடுவேனே!” என்று கூறுவார்.

ஆனால், ஒருவருக்கு அவர் செயல்படுவதற்கான அவகாசம் முடிவடையும் நேரம் வந்து விட்டாலோ எந்த மனிதனுக்கும் மேலும், கால அவகாசத்தை அல்லாஹ் கண்டிப்பாக வழங்குவதில்லை”.                               ( அல்குர்ஆன்: 63: 10 )

3. மௌத்துக்கு முன்னால் ஸாலிஹான எல்லா அமல்களையும் செய்து விட வேண்டும்…

ஏனெனில், மௌத்தின் போது தான் அமல்கள், இபாதத்கள் செய்திருக்க வேண்டுமே என்கிற ஏக்கமும், ஆசையும் பிறக்கும். என்ன செய்வது அப்போது அந்த ஆசைக்கு அல்லாஹ்விடம் மதிப்பேதும் இருக்காது.

حَتَّى إِذَا جَاءَ أَحَدَهُمُ الْمَوْتُ قَالَ رَبِّ ارْجِعُونِ (99) لَعَلِّي أَعْمَلُ صَالِحًا فِيمَا تَرَكْتُ كَلَّا إِنَّهَا كَلِمَةٌ هُوَ قَائِلُهَا

அல்லாஹ் கூறுகின்றான்: “இறுதியில் அவர்களில் எவருக்கேனும் மரணம் வந்து விடுமானால், “என் இறைவனே! நான் விட்டு வந்துள்ள உலகுக்கு என்னைத் திரும்ப அனுப்புவாயாக! அங்கு சென்று நான் நற்செயல் புரிந்து வருகின்றேன்!” என்று கூறுவான். அப்போது, இவ்வாறு ஒரு போதும் நடக்காது. இது அவன் பிதற்றிக் கொண்டிருக்கும் வெற்று வார்த்தைகள் தாம்!” என்று கூறப்படும்”. (அல்குர்ஆன்: 23: 99)

4. மௌத்துக்குமுன்னால் உலகில் நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட எல்லா பொறுப்புக்களையும் முழுமையாக நிறைவேற்றிட வேண்டும்…

ஏனெனில், மௌத்தாகும் நேரத்தில் தான் பொறுப்புணர்வு தோன்றும் ஆனால், பொறுப்பை நிறைவேற்றுவதற்கான அவகாசம் நமக்கு இருக்காது.

إِنَّا عَرَضْنَا الْأَمَانَةَ عَلَى السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَالْجِبَالِ فَأَبَيْنَ أَنْ يَحْمِلْنَهَا وَأَشْفَقْنَ مِنْهَا وَحَمَلَهَا الْإِنْسَانُ إِنَّهُ كَانَ ظَلُومًا جَهُولًا ()

அல்லாஹ் கூறுகின்றான்: “நாம் பொறுப்புகள் எனும் அமானிதத்தை வானங்கள் பூமி, மலைகள் ஆகியவற்றின் முன்பாக வைத்த போது அவை அதனை ஏற்கத் தயாராகவில்லை. மேலும், அதன் சுமையைக் கண்டு அஞ்சின. ஆனால், மனிதன் அதனை ஏற்றுக் கொண்டான். திண்ணமாக, அவன் பெரிதும் அநீதி இழைப்பவனாகவும் அறியாதவனாகவும் இருக்கின்றான்”.       ( அல்குர்ஆன்: 33: 72 )

إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَنْ تُؤَدُّوا الْأَمَانَاتِ إِلَى أَهْلِهَا

அல்லாஹ் கூறுகின்றான்: “ (முஸ்லிம்களே!) அல்லாஹ் உங்களுக்கு கட்டளை பிறப்பிக்கின்றான். அமானத் – பொறுப்புக்களை அவற்றிற்குரியவர்களிடம் நீங்கள் முழுமையாக நிறைவேற்றி விடுங்கள்”.                        ( அல்குர்ஆன்: 4: 58 )

நபி {ஸல்} அவர்கள் பொறுப்புகள் குறித்து விவரிக்கும் போது இவ்வாறு குறிப்பிடுவார்கள்.

حدثنا بشر بن محمد المروزي قال أخبرنا عبد الله قال أخبرنا يونس عن الزهري قال أخبرنا سالم بن عبد الله عن ابن عمر رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم يقول كلكم راع وزاد الليث قال يونس كتب رزيق بن حكيم إلى ابن شهاب وأنا معه يومئذ بوادي القرى هل ترى أن أجمع ورزيق عامل على أرض يعملها وفيها جماعة من السودان وغيرهم ورزيق يومئذ على أيلة فكتب ابن شهاب وأنا أسمع يأمره أن يجمع يخبره أن سالما حدثه أن عبد الله بن عمر يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول كلكم راع وكلكم مسئول عن رعيته الإمام راع ومسئول عن رعيته والرجل راع في أهله وهو مسئول عن رعيته والمرأة راعية في بيت زوجها ومسئولة عن رعيتها والخادم راع في مال سيده ومسئول عن رعيته قال وحسبت أن قد قال والرجل راع في مال أبيه ومسئول عن رعيته وكلكم راع ومسئول عن رعيته

அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளரும், பாதுகாவலரும் ஆவார். உங்களில் ஒவ்வொருவரும் அவரது கண்காணிப்பின், பொறுப்பின் கீழ் உள்ளவர்களைப் பற்றிக் கேட்கப்படுவார்.

ஆட்சியாளரும் பொறுப்பாளரே; அவரிடம் அவரது குடிமக்களைப் பற்றி வினவப்படும். கணவன் தன் வீட்டாருக்குப் பொறுப்பாளியாவான். பெண், தன் கணவனின் வீடு, அவனுடைய குழந்தைகளுக்குப் பொறுப்பாளியாவாள். பணியாள் தன் முதலாளியின் பொருளுக்குப் பொறுப்பாளியாவான்.

உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளரே! உங்களில் ஒவ்வொருவரிடமும் அவர்களின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டவர்களைப் பற்றிக் கேட்கப்படும்”.

                                                  ( நூல்: புகாரி, முஸ்லிம் )

5. மௌத்துக்கு முன்னால் நம்மால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தகுந்த இழப்பீட்டை கொடுத்து விட வேண்டும். மௌத்துக்கு முன்னால் நமக்கு உதவி, உபகாரம் செய்தவர்களுக்கு உபகாரம் செய்து விட வேண்டும்…

قال - صلى الله عليه وسلم -:

مَن أعطى شيئًا فوجَد، فليَجزِ به، ومَن لم يجد، فليُثنِ به، فإنَّ أَثنى به، فقد شكَره، وإنْ كتَمه، فقد كفَره، ومن تَحلَّى بما لَم يُعطِ، فإنَّه كلابس ثَوبَي زُورٍ

“எவருக்கு ஒரு உபகாரம் செய்யப்பட்டதோ, அவரிடம் வசதி இருந்தால் உபகாரம் செய்தவருக்கு அவர் பகரம் செய்யட்டும். இல்லையாயின் இன்னார் எனக்கு உபகாரம் செய்தார் என மக்களிடம் கூறி அவருக்காக துஆ செய்யட்டும். எவர் அவ்விதம் நடந்து கொள்கின்றாரோ அவர் நன்றி செலுத்திவிட்டார். எவர் மக்களிடம் மறைத்துப் பேசுவாரோ அவர் நன்றி கொன்றவாகி விட்டார்” என மாநபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.
                                                                  ( நூல்:திர்மிதீ )

حدثنا آدم بن أبي إياس حدثنا ابن أبي ذئب حدثنا سعيد المقبري عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من كانت له مظلمة لأخيه من عرضه أو شيء فليتحلله منه اليوم قبل أن لا يكون دينار ولا درهم إن كان له عمل صالح أخذ منه بقدر مظلمته وإن لم تكن له حسنات أخذ من سيئات صاحبه فحمل عليه

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் கூறினார்கள்: “எவராவது உலகில் வாழும் காலத்தில் தன் சக முஸ்லிம் ஒருவருக்கு அநீதி இழைத்திருப்பாரேயானால், அவர் எந்த தீனாரும், எந்த திர்ஹமும் எந்த வித பயன்பாட்டையும் தந்திடாத மறுமை நாளைக்கு முன் வாழும் காலத்திலேயே, இந்த உலகத்திலேயே அவர் அதற்கான பரிகாரத்தைத் தேடிக் கொள்ளட்டும்!

அப்படி எவராவது பரிகாரம் தேடிக்கொள்ளாமல், நாளை அல்லாஹ்வின் சந்நிதானத்திற்கு கொண்டு வரப்பட்டால் அநீதம் இழைக்கப்பட்டவருக்கு பரிகாரமாக அநீதி இழைத்தவரிடத்திலிருந்து அவர் இழைத்த அநீதத்தின் அளவுக்கு நற்செயல்களை எடுத்து அல்லாஹ் கொடுத்து விடுவான்.

அப்படி, நற்செயல்கள் ஏதும் அவரிடத்தில் இல்லையெனில்,  அநீதம் இழைக்கப்பட்டவரிடமிருந்து பாவத்தை எடுத்து அநீதி இழைத்தவருக்கு கொடுத்து விடுவான். இதன் காரணமாக, அவர் நரகத்திற்கு தூக்கி வீசப்படுவார்.”

                                                           ( நூல்: புகாரி )
குறிப்பு:

( இந்த ஐந்தாவது கடமையை நிறைவேற்றுகிற விஷயத்தில் பெருமானார் {ஸல்} அவர்களின் சொந்த வாழ்வில் அவர்கள் கடைபிடித்த நெறிமுறைகளை நாம் புகழோடு இப்பூவுலகை விட்டும் பிரிந்த பூமான் நபி {ஸல்} அவர்கள் எனும் தலைப்பில் நிறைய குறிப்பிட்டு இருந்தோம். அதிலிருந்து ஏதேனும் சம்பவங்களை இதன் கீழ் இணைத்துக் கொள்ளவும்.

மேலும், மூன்றாவது கடமையை நிறைவேற்றுகிற விஷயத்தில் ஸாலிஹீன்களாக வாழ ஆசைப்படுவோம் எனும் தலைப்பில் கூறப்பட்ட சம்பவங்களை இணைத்துக் கொள்ளவும். முதல் இரண்டு கடமைகளை நிறைவேற்றுகிற விஷயத்தில் உள்ள சம்பவங்களை கீழே தருகின்றேன் )

1. மௌத்துக்கு முன்னால் எல்லா பாவங்களில் இருந்தும் நாம் அல்லாஹ்விடம் மன்னிப்பைப் பெற்று விடவேண்டும்....

ஸஅலபா இப்னு அப்துர்ரஹ்மான் (ரலி) அவர்களின் நெகிழ்ச்சியான வரலாறு…

روى عن جابر بن عبد الله رضي الله عنهما قال
إن فتى من الأنصار يقال له ثعلبة بن عبد الرحمن أسلم ، فكان يخدم النبي صلى الله عليه وسلم ، بعثه في حاجة ، فمر بباب رجل من الأنصار ، فرأى امرأة الأنصاري تغتسل ، فكرر النظر إليها ، وخاف أن ينزل الوحي على رسول الله صلى الله عليه وسلم ، فخرج هاربا على وجهه ، فأتى جبالا بين مكة والمدينة فولجها ، ففقده رسول الله صلى الله عليه وسلم أربعين يوما ، وهي الأيام التي قالوا ودعه ربه وقلى ، ثم إن جبريل عليه السلام نزل على رسول الله صلى الله عليه وسلم ، فقال : يا محمد ! إن ربك يقرأ عليك السلام ويقول : إن الهارب من أمتك بين هذه الجبال يتعوذ بي من ناري . فقال رسول الله صلى الله عليه وسلم : يا عمر ويا سلمان ! انطلقا فأتياني بثعلبة بن عبد الرحمن ، فخرجا في أنقاب المدينة ، فلقيهما راع من رعاء المدينة يقال له : ذفافة . فقال له عمر : يا ذفافة ! هل لك علم بشاب بين هذه الجبال ؟ فقال له ذفافة لعلك تريد الهارب من جهنم ؟ فقال له عمر : وما علمك أنه هارب من جهنم ؟ قال : لأنه إذا كان جوف الليل خرج علينا من هذه الجبال واضعا يده على رأسه وهو يقول : يا ليتك قبضت روحي في الأرواح ، وجسدي في الأجساد ولم تجردني في فصل القضاء . قال عمر : إياه نريد . قال : فانطلق بهم رفاقة ، فلما كان في جوف الليل خرج عليهم من بين تلك الجبال واضعا يده على أم رأسه وهو يقول : يا ليتك قبضت روحي في الأرواح ، وجسدي في الأجساد ، ولم تجردني لفصل القضاء . قال : فعدا عليه عمر فاحتضنه فقال : الأمان الخلاص من النار . فقال له عمر : أنا عمر بن الخطاب . فقال : يا عمر ! هل علم رسول الله صلى الله عليه وسلم بذنبي ؟ قال : لا علم لي إلا أنه ذكرك بالأمس فبكى رسول الله صلى الله عليه وسلم . يا عمر ! لا تدخلني عليه إلا وهو يصلي ، وبلال يقول : قد قامت الصلاة . قال : أفعل . فأقبلا به إلى المدينة ، فوافقوا رسول الله صلى الله عليه وسلم وهو في صلاة الغداة ، فبدر عمر وسلمان الصف ، فما سمع قراءة رسول الله صلى الله عليه وسلم حتى خر مغشيا عليه ، فلما سلم رسول الله صلى الله عليه وسلم قال : يا عمر ويا سلمان ! ما فعل ثعلبة بن عبد الرحمن ؟ قالا : هو ذا يا رسول الله . فقام رسول الله صلى الله عليه وسلم قائما فقال : ثعلبة ! قال : لبيك يا رسول الله ! فنظر إليه فقال : ما غيَّبك عني ؟ قال : ذنبي يا رسول الله . قال : أفلا أدلك على آية تكفر الذنوب والخطايا ؟ قال : بلى يا رسول الله ! قال : قل : اللهم آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار . قال : ذنبي أعظم يا رسول الله ! فقال رسول الله صلى الله عليه وسلم : بل كلام الله أعظم . ثم أمره رسول الله صلى الله عليه وسلم بالانصراف إلى منزله . فمرض ثمانية أيام ، فجاء سلمان إلى رسول الله صلى الله عليه وسلم فقال : يا رسول الله ! هل لك في ثعلبة نأته لما به ؟ فقال رسول الله صلى الله عليه وسلم : قوموا بنا إليه . فلما دخل عليه أخذ رسول الله صلى الله عليه وسلم رأسه فوضعه في حجره ، فأزال رأسه عن حجر رسول الله صلى الله عليه وسلم . فقال له رسول الله صلى الله عليه وسلم : لم أزلت رأسك عن حجري ؟ قال : إنه من الذنوب ملآن . قال : ما تجد ؟ قال : أجد مثل دبيب النمل بين جلدي وعظمي . قال : فما تشتهي ؟ قال : مغفرة ربي . قال : فنزل جبريل عليه السلام على رسول الله صلى الله عليه وسلم فقال : إن ربك يقرأ عليك السلام ويقول : لو أن عبدي هذا لقيني بقراب الأرض خطيئة لقيته بقرابها مغفرة . فقال له رسول الله صلى الله عليه وسلم : أفلا أعلمه ذلك ؟ قال : بلى . فأعلَمَه رسول الله صلى الله عليه وسلم بذلك . فصاح صيحة فمات . فأمر رسول الله صلى الله عليه وسلم بغسله وكفنه وصلى عليه ، فجعل رسول الله صلى الله عليه وسلم يمشي على أطراف أنامله ، فقالوا : يا رسول الله ! رأيناك تمشي على أطراف أناملك ؟ قال : والذي بعثني بالحق نبيا ما قَدِرت أن أضع رجلي على الأرض من كثرة أجنحة مَن نزل لتشييعه من الملائكة .
رواه أبو نعيم في "حلية الأولياء" (9/329-331) وفي "معرفة الصحابة" (1/498))

ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “நபி {ஸல்} அவர்களுக்கு பணிவிடைகள் செய்த நபித்தோழர்களில், அன்ஸாரிகளைச் சார்ந்த ஸஅலபா இப்னு அப்துர் ரஹ்மான் (ரலி) அவர்களும் ஒருவர்.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் அன்றொரு நாள் ஸஅலபா (ரலி) அவர்களை ஏதோ பணி நிமித்தமாக எங்கோ அனுப்பினார்கள்.

சென்ற ஸஅலபா (ரலி) அவர்கள் மீண்டும் அண்ணலாரின் சமூகத்திற்கு வரவே இல்லை. அண்ணலாரும் அவர் வருவார். நியமித்த பணியை நிறைவேற்றி விட்டு இதோ இன்று வந்து விடுவார், நாளை வந்து விடுவார் என எதிர்பார்த்து காத்து இருந்தார்கள்.

நாட்கள் மட்டும் அடுத்தடுத்து வந்ததே தவிர ஸஅலபா (ரலி) அவர்கள் இன்னும் வரவில்லை.
ஒரு நாள் இரண்டு நாள் அல்ல, ஒரு வாரம் இரண்டு வாரம் அல்ல நாற்பது நாட்கள் நகர்ந்து விட்டது இன்னும் ஸஅலபா வரவில்லை.

எங்கு போனார்? என்ன ஆனார்? அவரைப் பற்றி எந்த தகவலும் இல்லை.

இந்த நிலையில், ஜிப்ரயீல் (அலை) அவர்கள் ”அண்ணலாரின் சமூகத்திற்கு வருகை தந்து அல்லாஹ் ஸலாம் சொல்லி அனுப்பியதாகவும், உங்களிடம் உங்களது தோழர் ஒருவர் மக்கா, மதீனாவிற்கு இடையே இருக்கிற மலை முகடு ஒன்றில் இருந்து அல்லாஹ்விடம் கடந்த நாற்பது நாட்களாக பாவமன்னிப்பையும், நரக ஈடேற்றத்தையும் கேட்டு மன்றாடிக் கொண்டிருக்கிறார் என்கிற செய்தியை சொல்லி விட்டு வருமாறு என்னை அனுப்பி வைத்திருக்கின்றான்” என்று கூறி விடை பெற்றுச் சென்றார்கள்.

உடனே, அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் இந்த மன்றாட்டத்திற்கு உரியவர் காணாமல் போன ஸஅலபாவாகத் தான் இருக்கும் என்று தீர்மானித்து விட்டு, உமர் மற்றும் ஸல்மான் (ரலி – அன்ஹுமா) ஆகியோரை அழைத்து ”என்னிடம் ஸஅலபாவைக் கொண்டு வாருங்கள்!” என்று பணித்தார்கள்.

இருவரும் ஸஅலபாவைத் தேடி மக்கா, மதீனாவிற்கு இடையே இருக்கிற மலைப்பகுதியின் அடிவாரத்திற்கு வந்து, அங்கே ஆடு மேய்த்துக் கொண்டிருந்த துஃபாஃபா என்கிற இடையனிடம் ஸஅலபா குறித்தும், அவரின் மன்றாட்டம் குறித்தும் கூறி விசாரித்தார்கள்.

அதற்கு, அந்த இடையர் ஆம்! சமீப நாட்களாக இங்கே வசிக்கிற நாங்கள் “என் ஆன்மாவைக் கைப்பற்றும் ஆற்றல் கொண்டவனே! என் உடலை மீட்டும் ஆற்றல் பெற்றவனே! நாளை மறுமையில் என்னைத் தண்டித்து விடாதே! எனக்கு நரகத்தை விட்டும் நீ பாதுகாப்புத் தர வேண்டும்!” என்று ஒருவர் மன்றாடுவதை கேட்டுக் கொண்டிருக்கின்றோம்.

நீங்கள் சொன்ன இன்னின்ன அடையாளம் கொண்ட அந்த நபரை நான் பார்த்திருக்கின்றேன். இதோ இந்த பகுதியில் தான் அவர் இருப்பார். இன்னும் சற்று நேரத்தில் அவரின் மன்றாட்டம் கேட்கும் என்று கூறினார்.

சற்று நேரம் தாமதித்த பின்னர், மலை முகட்டில் இருந்து ஸஅலபா (ரலி) அவர்களின் மன்றாட்டம் ஒலித்தது. ஒலி வந்த திசையை நோக்கி இருவரும் நடந்து ஸஅலபா (ரலி) அவர்களை அடைந்து கொண்டனர்.

இருவரையும் பார்த்த ஸஅலபா (ரலி) அவர்கள் மீண்டும் அழுதார்கள். அப்போது, உமர் (ரலி) அவர்கள் “அல்லாஹ் உம்மை மன்னிப்பான். உம்மை நரகில் இருந்து பாதுகாப்பான்!” நபி {ஸல்} அவர்கள் உம்முடைய இந்த மன்றாட்ட நிலை குறித்து கேள்வி பட்டு நேற்று அழுதார்கள். மேலும், உம்மை அழைத்து வருமாறு எங்களிடம் கூறி இங்கே அனுப்பி வைத்திருக்கின்றார்கள்.” வாருங்கள்! ஸஅலபா செல்வோம்” என்றார்கள்.

இது கேட்ட ஸஅலபா (ரலி) அவர்கள் “அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் நான் செய்த பாவம் குறித்து அறிந்து கொண்டார்களா?” என்று வினவினார். இல்லை என்று உமர் (ரலி) பதில் பகர்ந்ததும் அப்படியானால், நபி {ஸல்} அவர்கள் தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் என்னை அழைத்துச் செல்லுங்கள்! பாவியான நான் அண்ணல் நபி {ஸல்} அவர்களை முகம் பார்த்து பேச வெட்கப்படுகின்றேன்!” என்று கூறினார்கள்.

அவரை அழைத்துக் கொண்டு இருவரும் மஸ்ஜிதுன் நபவீக்கு வந்து இஷாத் தொழுகையின் இகாமத்தை பிலால் (ரலி) அவர்கள் கூறும் வரை காத்திருந்து பின்னர் தொழுகை ஆரம்பித்ததும் தொழுகையில் இணைந்து கொண்டனர்.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் தொழுகையில் அத் தகாஸுர் சூராவை ஓதினார்கள். முதல் இரு வசனங்களை கேட்ட மாத்திரத்திலேயே ஸஅலபா (ரலி) மயக்கமாகி கீழே விழுந்து விட்டார்கள்.

தொழுகை முடிந்ததும் உமர் மற்றும் ஸல்மான் (ரலி) இருவரையும் கண்ட பெருமானார் {ஸல்} அவர்கள் எங்கே ஸஅலபா? என்று கேட்டார்கள்.

இதோ! அல்லாஹ்வின் தூதரே! மயக்கமுற்று கீழே விழுந்து கிடக்கின்றார் என்றார்கள் இருவரும்.

முகத்தில் தண்ணீர் தெளித்து, அருகே அமர வைத்து அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் அன்பொழுக “ஸஅலபா! உமக்கு என்ன நேர்ந்து விட்டது? ஏன் இவ்வளவு நாளாக எங்கு சென்றீர்?” என்று கேட்டார்கள்.

”லப்பைக்க யாரஸூலுல்லாஹ்! நான் செய்து விட்ட ஒரு பாவம் தான் அல்லாஹ்வின் தூதரே! காரணம்” என்றார் நா தழுதழுத்தவராக!

”யாஅல்லாஹ்! இவ்வுலகிலகிலும் எனக்கு நீ சிறந்ததைக் கொடு! மறுமையிலும் சிறந்ததைக் கொடு! மேலும், நரக வேதனையில் இருந்து என்னைக் காத்துவிடு!” என்று இறைஞ்சுங்கள்” உமது பாவத்திற்கு பரிகாரமாக அமைந்து விடும் என்றார்கள் பெருமானார் {ஸல்} அவர்கள்.

இல்லை, அல்லாஹ்வின் தூதரே! என்னுடைய பாவம் மிகப் பெரியது! என்றார் ஸஅலபா (ரலி). தோழரே! அல்லாஹ்வின் வார்த்தை அதை விட மிகப் பெரியது! இதைக் கூறுங்கள் அல்லாஹ் உம் குற்றங்களை மன்னிப்பான்” என்றார்கள்.

மீண்டும் அவர் முன்பு போல் கூறவே, அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் மேற்கொண்டு எதுவும் கேட்காமல் அவரின் வீட்டில் கொண்டு விட்டு வருமாறு தோழர்களிடம் கூறினார்கள்.

வீட்டிற்குச் சென்ற ஸஅலபா இந்தக் கவலையால் நோய்வாய்ப் பட்டு படுத்த படுக்கையானார். எட்டு நாட்கள் ஆகியும் அவர் பள்ளிக்கு வரவில்லை.

அப்போது, ஸல்மான் (ரலி) அவர்கள் “அல்லாஹ்வின் தூதரே! நாம் சென்று ஸஅலபாவை நலம் விசாரித்து விட்டு வருவோமே! அவர் எட்டு தினங்களாக பள்ளிக்கும் வரவில்லை. அவர் குறித்து எந்தத் தகவலும் இல்லை” என்றார்கள்.

நபி {ஸல்} அவர்கள் அங்கிருந்த தோழர்களை அழைத்துக் கொண்டு ஸஅலபா (ரலி) வீட்டிற்கு சென்றார்கள்.

படுத்த படுக்கையாய் கிடக்கிற ஸஅலபாவின் தலையை தங்களது புனித மடியில் கிடத்தி “ஸஅலபாவே! உமக்கு என்ன? நீர் அப்படி என்ன தான் பாவம் செய்து விட்டீர்? என்று கேட்டார்கள்.

அப்போது, ஸஅலபா (ரலி) அவர்கள் “எனக்கு இன்ன வேலையைச் செய்து வருமாறு என்னை நீங்கள் அனுப்பிய போது, அதைச் செய்வதற்காக நான் விரைந்து போய்க்கொண்டிருந்தேன்! மதீனாவின் இன்ன தெருவைக் கடந்து செல்கிற போது வீட்டின் கொல்லைப் புறத்தில் ஒரு பெண் குளித்துக் கொண்டிருந்தார்.

நான் என்னையும் அறியாமல் திரும்பத் திரும்ப பார்த்துக் கொண்டிருந்தேன். பின்பு அது பாவம் எனத் தெரியவே அங்கிருந்து விலகி விட்டேன். என்றாலும், அல்லாஹ் என்னுடைய இந்த பாவம் குறித்து, ஏதேனும் இறைவசனத்தை இறக்கி தண்டித்து விடுவானோ என நான் பயந்து மலை முகட்டுக்குச் சென்று விட்டேன்” என்று கூறினார்.

அல்லாஹ்வின் தூதரே! இந்த மாபெரும் பாவத்தை அல்லாஹ் மன்னிப்பானா? என்னையே நான் வெறுக்கின்றேன்! என் உடல் முழுவதும் புழு பூச்சிகள் ஊர்ந்து செல்வது போல் அருவருப்பாக உணர்கின்றேன் என்றார் ஸஅலபா.

அப்போது, அங்கே வருகை தந்தார்கள் வானவர் கோமான் ஜிப்ரயீல் (அலை) அவர்கள். தொடர்ந்து “அல்லாஹ் ஸலாம் சொல்லி அனுப்பியதாகவும், உங்களிடம் என்னுடைய அடியான் பூமி முழுவதும் பாவத்தோடு என்னை நெருங்கி வந்தால், அதே பூமி முழுவதும் மன்னிப்போடு நான் அவனை நெருங்கி வருகின்றேன்” இதோ! இவரின் பாவத்தை அல்லாஹ் மன்னித்து விட்டான்” என்கிற செய்தியை சொல்லி விட்டு வருமாறு என்னை அனுப்பி வைத்திருக்கின்றான்” என்று கூறி விடை பெற்றுச் சென்றார்கள்.

ஸஅலபாவே! உமக்கு ஒரு விஷயத்தை நான் சொலட்டுமா? என்று கூறிவிட்டு அல்லாஹ் உம்மை மன்னித்து விட்டான் என்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

இது கேட்ட ஸஅலபா (ரலி) பெரும் சப்தம் ஒன்றை எழுப்பியவாறு மரணித்து விட்டார்கள். இன்னாலில்லாஹ்…

பின்னர் நபி {ஸல்} அவர்கள் அவருக்கு குளிப்பாட்டுமாறும், கஃபன் செய்யுமாறும் ஆணையிட்டு விட்டு அவருக்கு ஜனாஸா தொழுகை நடத்தினார்கள்.

அதன் பின்னர், அவரின் ஜனாஸாவைப் பின் தொடர்ந்து சென்ற நபி {ஸல்} அவர்கள் தங்களின் பெருவிரலால் ஊன்றி, ஊன்றி மிகவும் சிரமப்பட்டு நடந்து சென்றார்கள்.

மண்ணறையில் அடக்கம் செய்து முடித்ததும், நபித்தோழர்கள் இது குறித்து வினவிய போது, அவரின் ஜனாஸாவை மலக்குமார்களில் லட்சக்கணக்கானோர் பின் தொடர்ந்து வந்தனர். எங்கு நோக்கினும் வானவர்கள் இறக்கைகளையே நான் கண்டேன். வானவர்களின் இறக்கைகளை மிதித்து விடாதிருக்கவே நான் அவ்வாறு பெரு விரலால் நடந்து வந்தேன்” என்று பதில் கூறினார்கள்.

{ நூல்: அல் இஸாபா ஃபீ மஅரிஃபதிஸ் ஸஹாபா, ஹுல்யத்துல் அவ்லியா )

சின்னஞ்சிறிய தவறைக் கூட பெரும் பாவமாக நினைத்து நபித்தோழர் ஒருவர் இந்தளவுக்கு அல்லாஹ்விடம் மன்றாடினார் என்றால் அனுதினமும் ஆயிரமாயிரம் பாவங்கள் செய்யும் நாம் எந்தளவு அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோர வேண்டும் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

2. மௌத்துக்கு முன்னால் அல்லாஹ்வின் பாதையில் தான தர்மங்களை செய்து விட வேண்டும்…

عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ، قَالَ : أُتِيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِجِنَازَةٍ لِيُصَلِّيَ عَلَيْهَا ، فَتَقَدَّمَ لِيُصَلِّيَ ، فَالْتَفَتَ إِلَيْنَا ، فَقَالَ : " هَلْ عَلَى صَاحِبِكُمْ دَيْنٌ ؟ " قَالُوا : نَعَمْ ، قَالَ : " هَلْ تَرَكَ لَهُ مِنْ وَفَاءٍ ؟ " قَالُوا : لا ، قَالَ : " صَلُّوا عَلَى صَاحِبِكُمْ " ، قَالَ عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ رَضِيَ اللَّهُ عَنْهُ : عَلَيَّ دَيْنُهُ يَا رَسُولَ اللَّهِ ، فَتَقَدَّمَ فَصَلَّى عَلَيْهِ ، وَقَالَ : " جَزَاكَ اللَّهُ يَا عَلِيُّ خَيْرًا كَمَا فَكَكْتَ رِهَانَ أَخِيكَ ، مَا مِنْ مُسْلِمٍ فَكَّ رِهَانَ أَخِيهِ إِلا فَكَّ اللَّهُ رِهَانَهُ يَوْمَ الْقِيَامَةِ "

அபூ ஸயீத் அல் குத்ரீ (ரலி) அவர்கள அறிவிக்கிறார்கள்:-

“நபி (ஸல்) அவர்களின் முன் இறந்து போன ஒருவரின் ஜனாஸா தொழுவிப்பதற்காக வைக்கப்பட்டது.

அப்போது நபி (ஸல்) அவர்கள் இறந்து போன இவர் மீது ஏதேனும் கடன் உள்ளதா?எனக் கேட்டார்கள்.அதற்கு மக்கள் “ஆம் இவர் மீது கடன் உண்டு” என்றனர்.

கடனை நிறைவேற்றுமளவுக்கு அவர் ஏதேனும் பொருளை விட்டுச் சென்றுள்ளாரா? என மீண்டும் நபி (ஸல்) அவர்கள் வினவினார்கள்.
மக்கள் இல்லை என்று கூறினார்கள்.

அவ்வாறென்றால் நீங்களே அவருக்கு ஜனாஸா தொழுகை தொழுது கொள்ளுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இந்நிலையைக் கண்ட அலீ (ரலி) அவர்கள்: அல்லாஹ்வின் தூதரே! அக்கடனை அடைக்கும் முழு பொறுப்பையும் நான் ஏற்றுக்கொள்கிறேன் என்றார்கள்.

அதன் பிறகு நபி (ஸல்) அவர்கள் முன்வந்து தொழ வைத்தார்கள்.
பின்பு அலீ (ரலி) அவர்களை நோக்கி“அலீயே! அல்லாஹ் உம்மை நரகிலிருந்து காப்பானாக!முஸ்லிம் சகோதரர் ஒருவரின் கடனை அடைக்கும் எந்த முஸ்லிமையும் அல்லாஹ் மறுமை நாளில் நரகிலிருந்து விடுதலை செய்யாமல் இருக்க மாட்டான்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.        ( நூல்: ஷரஹூஸ் ஸுன்னா )

உஸ்மான் தின் நூரைன், உஸ்மானில் கனீ என்றழைக்கப்பட்ட உஸ்மான் (ரலி) அவர்களின் சமூகத்தொண்டும், அல்லாஹ்விற்காக வாரி வாரி வழங்கியதும் அளப்பரியது.

நபி (ஸல்) அவர்கள் ஹிஜிரத் செய்து மதீனா வந்த புதிதில் முஸ்லிம்களுக்கு தண்ணீர் தேவை அதிகரித்தது வறட்சியான காலமும் கூட அது. அருகிலிருக்கும் ஒரு யூதனின் பிஃர-ரூமா எனும் கிணற்றிலிருந்து தான் முஸ்லிம்கள் ஒரு முத்து விலையாக கொடுத்து ஒரு பாத்திரம் (ஒரு குடம்) தண்ணீர் பெற்றுக் கொண்டிருந்தனர்.

விலையில்லாமல் அந்த தண்ணிரை மக்களுக்கு யாராவது பெற்றுத் தர மாட்டார்களா? என நபி (ஸல்) தமது விருப்பத்தை தெரிவித்தபோது, ஹல்ரத் உஸ்மான் (ரலி) 12,000 தீனார் கொடுத்து ஒரு நாள் யூதனுக்கும், ஒரு நாள் முஸ்லிம்களுக்கும் தண்ணீர் எடுத்துக் கொள்ளும் உரிமையை பெற்றுத்தந்தார்கள். மீண்டும் நெருக்கடி ஏற்படவே மீண்டும் 12,000 தீனார் கொடுத்து முழுக்கிணற்றையும் விலைக்கு வாங்கி மதினமாநகர் முழுவதுமுள்ள மக்களெல்லாம் பயன்பெறுமளவுக்கு அதை அர்ப்பணித்தார்கள்.

அல்லாஹ்வின் மார்க்கத்தில் சாரை சாரையாய் மக்கள் இணைந்து கொண்டிருந்த தருணம் அது.

மஸ்ஜித் நவபி நெருக்கடியில் திக்குமுக்காடியது.அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “அருகிலிருக்கும் இடத்தை யாராவது பெற்றுத்தந்தால் மஸ்ஜித் நவபீயை இன்னும் விஸ்தரித்து இடநெருக்கடியை குறைத்து கொள்ளலாமே?என தமது விருப்பத்தை வெளிப்படுத்திய போதும் உஸ்மான் (ரலி) அவர்களே15,000 தீனார் கொடுத்து மஸ்ஜிதுக்கு அருகாமையில் இருந்த இடத்தை வாங்கி அர்ப்பணித்தார்கள்.

மாபெறும் வெற்றியான ஃபத்ஹ்-மக்காவிற்குப்பின் இஸ்லாமிய எழுச்சி ஹரம் ஷரீஃபிலும் எதிரொலித்தது! ஆம் அங்கும் இட நெருக்கடி 10,000 தீனார் விலை கொடுத்து அருகே இருந்த இடத்தை வாங்கி (விஸ்தரிக்க) அர்பணித்தார்கள்.

முஸ்லிம்களின் தேவைகள் அதிகமான போதெல்லாம் தாமாகவே முன்வந்து ஒவ்வொரு முறையும் உஸ்மான் (ரலி) அவர்கள் இறை திருப்தியை மட்டுமே நோக்கமாகக் கொண்டு தமது செல்வத்தின் மூலம் பல சமூக சேவைகள் புரிந்துள்ளார்கள்.              ( நூல்: குலஃபாவுர்ரஸுல் (ஸல்) பக்கம் 185, 186  )

எனவே, மௌத்துக்கு முன்னால் இந்த ஐந்து கடமைகளையும் நாம் நிறைவேற்றி விட்டோம் என்றால் நம்முடைய மரண நேரமும், மண்ணறை வாழ்க்கையும், மஹ்ஷர் வாழ்க்கையும் வெற்றிக் குரியதாய் அமைந்து விடும்.

அல்லாஹ் நாம் மௌத்தாகும் முன்னரே இந்த ஐந்து கடமைகளையும் முழுமையாக நிறைவேற்றி விட்டு மௌத்தாகும் நற்பேற்றைத் தந்தருள் புரிவானாக!


கண்ணியத்திற்குரிய சகோதரர்களே! அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா அவனை நினைப்பதற்கு அவனுடைய மார்க்கத்தின் பக்கம் திரும்புவதற்கு நமக்கு வாய்ப்புகளை நினைவூட்டல்களை கொடுத்துக் கொண்டே இருக்கிறான். யார் விழித்தார்களோ, யார் சிந்தித்தார்களோ, உணர்வு பெற்றார்களோ, படிப்பினை பெற்றார்களோ, அவர்கள் நற்பாக்கியம் பெறுவார்கள். யார் மறந்தார்களோ, அலட்சியம் செய்தார்களோ, புறக்கணித்தார்களோ, கண்டிப்பாக அவர்கள் நஷ்டம் அடைந்தே தீருவார்கள். அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா நஷ்டத்திலிருந்து, இழிவிலிருந்து, இம்மை மறுமையின் கேவலத்தில் இருந்து, என்னையும் உங்களையும் பாதுகாப்பானாக. அல்லாஹ்வின் வேதத்தைக் கொண்டும், நபியின் உபதேசத்தைக் கொண்டும், படிப்பினை பெற்று அல்லாஹ்வை வணங்கி வழிபட்டு தவ்பா செய்து மறுமைக்கான தயாரிப்புகளை செய்து கொள்ளக்கூடிய நல்லோரில் என்னையும் உங்களையும் ஆக்கி அருள்வானாக!
 
ஆமீன்

Popular posts from this blog

ஹழ்ரத் அபூபக்கர் சித்திக் (ரலி)

எச்சரிக்கை! இந்த ஐந்து தீய குணங்கள் 30-10-2025

அற்புதங்கள் நிறைந்த ஆஷூரா தினம்...... 12-07-2024 04-07-2025