கௌஸூல் அஃலம் முஹியத்தீன்‌ (ரஹ்) 28-10-22.

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

Wednesday, 26 October 2022
ஜும்ஆ பயான் 28/10/2022

முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்)

اَلَاۤ اِنَّ اَوْلِيَآءَ اللّٰهِ لَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُوْنَ ‏ 

(முஃமின்களே!) அறிந்து கொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ்வின் நேசர்களுக்கு எவ்வித அச்சமும் இல்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.(அல்குர்ஆன் : 10:62)

பிறப்பு..
கௌதுல் அஃழம், முஹிய்யத்தீன் அப்துல் காதிர் ஜைலானி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் ஹிஜ்ரி 470 ரமழான் மாதம் பிறை 1 திங்கட்கிழமை இரவு ஸஹர் நேரத்தில் (கி. பி. 1078 - மார்ச் 19 ஆம் தேதி) ஈரான் நாட்டின் ஜீலான் என்னும் நகரை ஒட்டிய நீப் என்னும் கிராமத்தில் பிறந்தார்கள்.

பிறப்பின் சிறப்பு.
முஹிய்யதீன் அப்துல் காதிர் ஜீலானி (ரலியல்லாஹு அன்ஹு)அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அன்னவர்களின் 11 வது வழித்தோன்றலில் பிறந்த பேரப்பிள்ளையாவார்கள். இவர்களின் தந்தையின் பெயர் ஸைய்யது அபூஸாலிஹ் இப்னு மூஸா (ரழியல்லாஹு அன்ஹு). தாயாரின் பெயர் உம்முல் கைர் என்னும் அமத்துல் ஜப்பார் என்பதாகும்.

இவர்களின் தந்தையார் ஒரு ஸூஃபி மகானாகவும், தாயார் சிறந்த தக்வாவுடையவராகவும் விளங்கினார்கள். இவர்கள் பிறக்கும் போது தாயாருக்கு வயது அறுபது. 

முஹிய்யதீன் அப்துல் காதர் ஜீைானி (ரழியல்லாஹு அன்ஹு)அவர்கள் தந்தை வழியில் ஹஸனியாகவும் தாய் வழியில் ஹுஸைனியாகவும் விளங்குகிறார்கள். அதாவது ஹஸனி என்றால் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அன்னாரின் திருப்பேரர் ஸைய்யதுனா ஹஸன் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வம்சாவழியிலும் ஹுஸைனி என்றால் மற்றோரு திருப்பேரர் ஹுஸைன் (ரழியல்லாஹு அன்ஹு) அன்னாரின் வம்சாவழியில் பிறந்தவர்கள் என்பதாகும்.

இறையச்சம் உள்ள தந்தை.
தந்தை ஒரு நாள் கடும் பசியுடன் காட்டில் நடந்து செல்லும் போது ஆப்பிள் ஒன்று ஆற்றில் மிதந்து வர அதை எடுத்து சாப்பிட்டு பசி தீர்த்துக் கொள்கிறார்கள். யாருடைய ஆப்பிள் தெரியவில்லையே' என்ற உறுத்தல் வரவே அந்த ஆறு ஒடிவரும் திசையை நோக்கி பலமைல் தூரம் நடந்து சென்று ஒரு வீட்டை அடைந்து அங்குள்ள மரத்தின் உரிமையாளரிடம் ஹலால் தேடுகிறார்கள். அவர், என் மகளைத் திருமணம் செய்தால் ஹலால் செய்கிறேன்' ஆனால் அவள் குருடி; ஊமை; நொண்டி; இரண்டு கையும் சூகை; என்கிறார். பரவாயில்லை. என் உடலில் ஹராமான ஒரு உணவு கூட இருக்கக்கூடாது. அதை ஹலாலாக்கிவிடுங்கள். அதற்காக என்ன பரிகாரத்தையும் நான் ஏற்கத் தயார். திருமணம் முடிந்து மணமகளைப் பார்த்து பரவசம் அடைந்தனர். ஏனெனில் அழகென்றால் அழகு அவ்வளவு அழகு. ஒரு குறை இல்லை. பிறகு ஏன் உன் தந்தை இப்படி சொன்னார் ? என்றதற்கு அந்த பெண் விளக்கம் சொன்னார் இவர் நல்ல இறையச்சம் உடையவராக இருந்தார். என் தந்தை சொன்னது உன்மைதான்.

கல்வி.......
மாகபரும் தவசீலர் முஹிய்யதீன் அப்துல் காதிர் ஜீலானி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் பச்சிளம் பருவத்திலேயே அன்னாரின் தந்தையார் இறையடி எய்தினார்கள். தாயின் அரவணைப்பில் வளர்ந்த குதுபு நாயகம் அவர்கள். குழந்தை பருவத்திலேயே கல்வியில் சிறப்புற்று விளங்கினார்கள். ஆரம்பத்தில் கல்வியை தனது சொந்த ஊரான ஜீலான் நகரத்தில் கற்றார்கள்.ஆறு வயதில் பள்ளிக்கு அனுப்பப்பட்ட அவர்கள் ஏனைய மாணவர்கள் மனனம் செய்ய ஒரு வாரம் பிடிக்கும் ஒரு பாடத்தை ஒரே நாளில் மரணம் செய்து விடுவார்கள் சிறுவயதிலேயே குர்ஆனை மனனம் செய்து விட்டார்கள்.

சிறுவயதிலேயே புரட்சி.
பதினெட்டாம் வயது அடைந்த போது உயர்கல்வி கற்பதற்காக பக்தாது செல்ல முடிவு செய்தார்கள். அதற்காக தம் அன்னையிடம் அனுமதி கோரினார்கள். முதலில் தம் மகனை விட்டு பிரிய மனமின்றி அழுதார்கள். ஆனாலும் அன்னாரின் இந்த முடிவை கேட்டு மனம் மகிழ்ந்து, உடனே அனுமதி அளித்தார்கள். அன்னாரின் தாயார் அவர்கள். 

தந்தையார் அபூஸாலிஹ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் தம் குடும்பத்தினருக்காக விட்டுச் சென்ற 80 பொற்காசுகளில் 40 பொற்காசுகளை அவர்களின் சட்டை பையில் வைத்து தைத்து கல்வி கற்க அனுப்பி வைத்தார்கள் தாயார் அவர்கள்.

இவர்கள் கல்வி கற்க சென்ற வழியில் ஒரு கொள்ளைக் கூட்டம் திருடமுயன்றதும், அவர்களிடம் உண்மை உரைத்தார்கள் திருடர்கள் மனம் மாறி மார்க்கத்தை ஏற்றதும் பிரபல்யமானது. தப்ஸீரிலும், ஹதீஸிலும், ஃபிக்ஹு பாடங்களிலும் சிறந்து விளங்கினார்கள். ஒவ்வொரு பாடத்துக்கும் பிரபலமாக இருந்த மார்க்க அறிஞர்களிடம் சென்று கல்வி கற்றார்கள்.

பேச்சில் ஒரு புரட்சி...
பக்தாதுக்கு வந்து அபூஸஈதில் மக்ரமீ உடைய மதரஸாவில் இணைந்தார். அவருடை ஷைகு ஜீலானி ரஹ் அவர்களின் சொல்லில் இருந்த வலிமையை அறிந்து மதரஸாவுக்கு முன்புறமாகவே ஒரு மேடை அமைத்துக் கொடுத்து அங்கிருந்து பயான் செய்யுமாறு கூறினார். 

ஆரம்பத்தில் அதை மறுத்த ஷைகு ஜீலானி ரஹ் அவர்கள் பின்னர் அவர்களுடைய கனவில் பெருமானார் (ஸல்) தோன்றி பயான் செய்யுமாறு கூறவே அங்கு பயான் செய்யத் தொடங்கினார்,ஞாயிற்றுக் கிழமை வெள்ளிக் கிழமை செவ்வாய்க் கிழமை என வாரத்திற்கு 3 நாள் பயான் செய்யத்த் தொடங்கினார். 521 வருடம் பயான் தொடங்கியது, அந்த சொற்பொழிவுக்கு பெரும் மனிதரக்ள் தூரப் பகுதிகளில் இருந்தெல்லாம் வந்தார்கள்.

இன்று பயான் செய்வதற்காக அறிஞர்கள் உலகெங்கும் பயணம் செய்கிறார்கள், அப்துல் காதிர் ஜீலானி ரஹ் அவர்களின் சொற்பொழுவை கேட்பதற்காக உலகமே பக்தாதுக்கு திரண்டது.உணர்ச்சிமயமான அவரது சொற்பொழிவில் பலர் முஸ்லிம்களாயினர். ஏராளமானோ தம் தவற்றை உணர்ந்து திருந்தி நல்லவர்களானார்கள். ஒரு பெரிய மறுமலர்ச்சி மார்க்கப் புரட்சியும் ஏற்படலாயிற்று,மக்கள் அவரது சொற்பொழிவை மெய் மறந்து கேட்பார்கள்.

ஒரு நாள் தனது உரையில் அவர்கள் கூறினார்:
ﺃﻧﺖ ﻣﻌﺘﻤﺪ ﻋﻠﻴﻚ ، ﻭﻋﻠﻲ ﺍﻟﺨﻠﻖ ، ﻭﺩﻧﺎﻧﻴﺮﻙ

ﻭﺩﺭﺍﻫﻤﻚ ، ﻭﻋﻠﻲ ﺑﻴﻌﻚ ﻭﺷﺮﺋﻚ ، ﻭﻋﻠﻲ ﺳﻠﻜﺎﻥ

ﺑﻠﺪﻙ ، ﻛﻞ ﻣﻦ ﺇﻋﺘﻤﺪﺕ ﻋﻠﻴﻪ ﻓﻬﻮ ﺇﻟﻬﻚ ، ﻭﻛﻞ ﻣﻦ

ﺧﻔﺘﻪ ﻭﺭﺟﻮﺗﻪ ﻓﻬﻮ ﺇﻟﻬﻚ، ﻛﻞ ﻣﻦ ﺭﺃﻳﺘﻪ ﻓﻲ ﺍﻟﻀﺮ

ﻭﺍﻟﻨﻔﻊ ، ﻭﻟﻢ ﺗﺮ ﺃﻥ ﺍﻟﺤﻖ ﻳﺠﺮﻱ ﺫﻟﻚ ﻋﻠﻲ ﻳﺪﻳﻪ ﻗﻬﻮ

ﺇﻟﻬﻚ : ﺍﻟﻔﺘﺢ ﺍﻟﺮﺑﺎﻧﻲ - ﺍﻟﻤﺠﻠﺲ

நீ உன்னை நம்புகிறாய! படைப்புக்களை நம்புகிறாய்! உனது தீனார்களையும் திர்ஹம்களையும் நம்புகிறாய்! உனது கொடுக்குதல் வாங்குதலை நம்புகிறாய்! உனது ஊரின் சுல்தானை நம்புகிறாய்! யார் மீது நீ பிடிமானம் கொண்டிருக்கிறாயோ அது தான் உனது கடவுள். யாரை நீ பயப்படுகிறாயோ! ஆசைப்படுகிறாயோ அது தான் உனது கடவுள். அல்லாஹ் தான் எல்லாவற்றையும் நட்த்துபவன் என்று எண்ணாமல் நன்மையும் தீமையும் யார் வழியாக ஏற்படுகிறதோ அதை நீ நம்பினால் அது தான் உன்னுடைய கடவுள்.

இறைநேசர்களின் தலைவர்.
முஹ்யித்தீன்அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) வாழ்வும் வாக்கும் இஸ்லாம் கண்ட மிகப்பெரிய சீர்திருத்த வாதி.முஸ்லிம் சமுதாயம் அறிவு வழி பயணித்தாலும் ஆன்மீக வழியில் சென்றாலும் இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாட்டிலிருந்து வழி தவறிவிடக்கூடாது என்பதை அழுத்தமாக போதித்தவர்கள். இறைச்சிந்தனையே வாழ்வாக கொண்டு நடப்பதில்முன்னோடி உலக ஆசாபாசங்களையே வாழ்க்கையாக கொண்டு வாழ்ந்து விடாமல் இறைச்சிந்தனையோடும் மக்கள் வாழ்வதற்காகவே காதிரிய்யா தரீக்காவின் முறையை கொடுத்தவர். பல்வேறு ஷைகுகளின் வழிகாட்டுதலின் படி உருவான பக்தி மார்க்கமான தரீக்காக்களை (ஷாதுலிய்யா, நக்ஷபந்திய்யா ,சிஸ்திய்யா) ஒருங்கிணைத்தவர்கள். ஆன்மீகம் என்பதற்கு சரியான இலக்கணம் கொடுத்தவர்கள். கேட்போரை அப்போதே ஈர்த்துவிடும் அற்புதமான ஈர்ப்பு சக்திமிக்க சொற்பொழிவுகளால் எராளமான குற்றவாளிகளை திருத்தினார்கள் 50ஆயிரம் பேர் இஸ்லாத்தை தழுவ காரணமானவர்கள். ஏராளமானஅற்புதங்களுக்கு சொந்தக்காரர்கள். அவர் மீது நிறைய மரியாதை வைத்திருக்கிறோம்.வழக்கம் போல அவரைப்பற்றி நமக்கு தெரியாது.

இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படை பாதைக்கு மக்களை பெருமளவில் அழைத்து வந்த புரட்சிகரமான மாற்றங்கள் நிகழ்ந்ததால் முஹ்யித்தீன் மார்க்கத்திற்கு உயிரூட்டியவர் என்று சிறப்பு பெயரிட்டு அழைக்கப்பட்டார்கள்.

அன்னாரது உபதேசங்கள் நன்மையை ஏவி தீமையை தடுப்பதில் சக்திமிக்கதாக அமைந்த்திருந்த்து. 



அறிஞப்பெருமக்களின் கூற்று:அல்லாஹுத்தஆலா அருள் மழைப்பொழிபவன்,நம் கண்மணி நாயகம் ﷺஅவர்கள் அதனை பங்கிடுபவர்கள்.இறைநேசச்செல்வர்களும்,உலமாக்களும் அதனை அடைந்துக்கொள்ள உதவிப்புரிபவர்களாவார்கள்.

அல்லாஹ்வின் (மஃரிபத்தை) உள்ளமையை அறிந்தக்கொள்ளவதற்கு, உம்மதே முஹம்மதியாவில் மஷாயிக்குகள் மற்றும் உலமாக்களின் பங்களிப்பை இப்படி விவரிப்பார்கள்;

அல்லாஹ்வோடு அடியான் ஒன்றுவதற்கு நாயகம் ﷺஅவர்கள் உதவுவதைப்போலவே,நாயகம் ﷺஅவர்களின் வழிநடக்க இறைநேசச்செல்வர்கள் வழிக்கோலாக இருக்கின்றனர்.

வலிகள் கோமான் கௌதுல் அஃளம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ(ரஹ்)அவர்கள்.
இறைநேசர்களில் முதல் தலைமுறையினர் நாயகம் ﷺஅவர்களின் தோழமையைப் பெற்ற ஸஹாபப்பெருமக்கள்,அவர்களுக்கு அடுத்த அந்தஸ்தில் தாபியீன்களும்,தபவுத்தாபியீன்களும் வருவார்கள்.

ஷரிஅத்தை காக்க போராடிய இமாம்களும்,தஸவ்வுஃப்பில்(இறைஞானப்பாதையில்)கரைக்கண்ட சூஃபிகளும்,வலிமார்களும்( اولیا اللہ)இறைநேசர்களில் அடுங்குவர்.

இறைநேசர்கள் பலர் வாழ்ந்தார்கள், வாழ்ந்துக்கொண்டிருக்கின்றார்கள், கியாம நாள் வரை வந்துக்கொண்டே இருப்பார்கள்.ஆனால் வலிமார்களில் கல்வி,சிறப்பு,அகப்பார்வை,கராமத்கள், முற்றும் துறந்த துறவரம், அற்பணிப்பு, சிறந்த வம்சத்தொடர் இப்படி பல தனித்துவமான சிறப்புகளை ஒருங்கேப் பெற்றவர் வலிகள் கோமான் கௌதுல் அஃளம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ(ரஹ்)அவர்கள் தாம்.

அதனால் தான் அன்னவர்கள் வலிமார்களின் தலைவர் எனப் போற்றப்படுகின்றார்கள்.அன்னவர்கள் வாழ்ந்த காலத்தில் «قطب الأقطاب»،வலிமார்களின் தலைவர் என்கிற சிறப்பை பெற்றார்கள்.

இதற்கு சான்றாக பல வரலாற்றாசிரியர்கள் ஒரு சம்பவத்தை குறிப்பிடுவார்கள்:

கௌதுல் அஃளம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ(ரஹ்)அவர்கள் ஒரு தடவை பெரும் கூட்டத்தவர்களிடத்தில் பயான் செய்துக்கொண்டிருந்தார்கள்.அக்கூட்டத்தில் அக்காலத்தில் வாழ்ந்த குத்புகளும்,அப்தால்களும்,நல்லோர்களும்,நாதாக்களும் பெரும் திரளாக கலந்துக்கொண்டனர். 

கௌதுல் அஃளம் (ரஹ்)அவர்கள் தங்களின் பயானின் இடையில் "அல்லாஹ் தம்மை வலிமர்களின் தலைராக ஆக்கியுள்ளான்" என்பதை இவ்வாறு கூறினார்கள்.

قدمی هذا علی رقبة کل ولی الله

"எனது இப்பாதம் அல்லாஹ்வின் வலிமார்கள் அனைவரின் சிரசுகளின் மீது உள்ளது"

அப்போது அக்கூட்டத்தில் இருந்த எல்லா வலிமார்களும் தங்களின் சிரசுகளை தாழ்த்தினார்கள்.அக்கூட்டத்தில் பங்கேற்காத உலகின் மூளைமுடுக்குகளில் உள்ள எல்லா வலிமார்களும் தங்களின் சிரசுகளைத் தாழ்த்தினார்கள்.

இந்தியாவின் வலி ஹழ்ரத் கவாஜா முஈனுத்தீன் சிஷ்தீ அஜ்மீரீ (ரஹ்)அவர்களும் அன்நேரம் தங்களின் சிரசைத் தாழ்த்தி"வலிகள் கோமனே தங்களின் பாதங்கள் என் தலையின் மீதும்,என் சிரசின் மீதும் உள்ளன"என்று கூறினார்கள்.

(اخبار الاخيار، شمائم امدادية، سفينة اوليا، قلائدالجواهرِ، نزهته الخاطر، فتاویٰ افريقه کرامات غوثية اعلی حضرت)

இறை ஞானப்பாதையில் (தஸவ்வுஃபில்)தம்மை அர்ப்பணித்தல்.
சையத் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்)அவர்கள் ஹிஜ்ரி 488 முதல் 496 வரை உயர்கல்வி அனைத்தையும் கற்று தேறினார்கள்.அதன் பிறகு 25 வருடங்கள் கடும் தவத்திலும் தியானத்திலும் ஈடுபட்டார்கள். தங்களை முழுமையாக அல்லாஹ், ரஸுலுக்கு அர்பணித்து வணக்க வழிப்பாடுகளில் மூழ்கினார்கள்.26வயதில் உலக ஆசாபாசங்களை துறப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல.

ஷேக் அபு அப்துல்லா நஜ்ஜார் (ரஹ்)அவர்கள்கூறுகிறார்கள்:, ஷேக் அப்துல் காதிர் ஜீலானி(ரஹ்) அவர்கள் ஒரு முறை என்னிடம் தங்களுக்கு நடந்த சம்பவங்களை விவரித்தார்கள்;

"நான் இறைவனை அடைய எவ்வளவு சிரமங்களை மேற்கொண்டேனென்றால் என் சிரமங்களை மலையின் மீது வைத்தால் மலை சுக்குநூறாகிவிடும்,சிரமங்களை சகித்துக்கொள்ள இயலாமல் போகும் போதெல்லாம் நான் தரையில் விழுந்து فَاِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا ۙ

اِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا ‏

(ஆதலின் நிச்சயமாகத் துன்பத்துடன் இன்பம் இருக்கிறது.நிச்சயமாக துன்பத்துடன் இன்பம் இருக்கிறது.)என்ற வசனத்தை ஓதுவேன்,அது என் உள்ளத்தை சாந்தப்படுத்தும்."(கலாயித் அல்-ஜவாஹிர் பக். 10)

அன்னவர்கள் இராக்கின் காடுகளையும், பாலைவனங்களையும் தங்களின் இருப்பிடங்களாக ஆக்கிக்கொண்டார்கள். மக்கள் தூக்கியெரியும் ரொட்டித்துண்டுகளை தங்களின் உணவாக்கிக்கொண்டார்கள். அதிகமதிகம் நோன்பு நோற்பார்கள்.

தங்களின் இளமைப்பருவத்திலே இறையாலயத்தை ஹஜ் செய்யும் பாக்கியம் பெற்றார்கள்,எந்நேரமும் (அங்கசுத்தி)ஒளுவோடும்,இறைவணக்கத்தில் அதீத ஈடுபாடும் கொண்டிருப்பார்கள்.

இஸ்லாமிய மார்க்கத்தில் கௌதுல் அஃளம் (ரஹ்)அவர்ளின் புரட்சி மற்றும் சீர்திருத்தங்கள்.
சையத் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்)பாக்தாத்திற்கு வந்த நேரத்தில், இஸ்லாமியப் பேரரசு சரிந்து சிதைந்து கொண்டிருந்தது. முதல் சிலுவைப் போர் தொடங்கியிருந்து. முஸ்லிம்களிடம் அரசியல் சீரழிவுடன், ஒழுக்க சீர்கேடு அதிகரித்து வந்தது. 

இஸ்லாமிய உலகின் நிலை மோசமாக இருந்தது. முஃதஸிலாக்கள் மற்றும் பித்அத்வாதிகளின் குழப்பங்கள் உச்சத்தில் இருந்தன.அவர்களின் வழிகெட்ட கொள்கைகளான خلق قرآن குர்ஆன் படைப்பு ,மற்றும் تقدیرவிதி போன்ற மஸ்அலாக்கள், மக்களின் ஈமானிய நம்பிக்கையை ஆட்டம்காணசெய்தன , தீய உலமாக்கள்,போலி சூஃபிசத்துவம் பேசுவோர் போன்றவர்களால் குழப்பங்கள் இன்னும் அதிகரித்தன. விபச்சாரம், துரோகம் மற்றும் منافقت பாசாங்குத்தனத்தின் சந்தை சூடாக இருந்தது.

இப்படிப்பட்ட இக்கட்டான காலக்கட்டத்தில் கௌதுல் அஃளம் (ரஹ்)அவர்கள் களத்தில் இறங்கி சமய மறுமலர்ச்சிப் போராட்டத்தைத் தொடங்கி, சீர்திருத்தப் பணிகளையும், வழிகாட்டுதலையும் தொடங்கினார்கள். அன்னவர்கள் தங்களின் பிரசங்கங்கள் மற்றும் அறிவுரை, போதனைகளால் மக்களின் இதயங்களில் நம்பிக்கையின் மெழுகுவர்த்தியை ஏற்றி வைத்தார்கள். பல தெய்வ வழிபாட்டிற்கு எதிரான அறைக்கூவல், இஸ்லாமிய உலகிற்கு புது உத்வேகத்தையும்,மறுமலர்ச்சியையும் தந்தது. சூஃபிகள் குறித்த தவறான புரிதலை அகற்றி,சரியான விளக்கத்தை மக்களுக்கு வழங்கினார்கள். 

அன்னவர்கள் குர்ஆன் மற்றும் சுன்னாவின் அடிப்படையில் ஆதாரப்பூர்வமாக தங்களின் போதனைகள் மற்றும் ஃபத்வாக்களை மக்களுக்கு வழங்கினார்கள். இஸ்லாத்தின் மறுமலர்ச்சியையே முக்கிய நோக்கமாகக் கொண்டு வாழ்ந்தார்கள். 

இதனாலேயே, அன்னவர்கள் "முஹ்யித்தீன்" என்ற பட்டத்தைப் பெற்றார்கள். ஆறாம் நூற்றாண்டின் "முஜத்தித்" என்று போற்றப்பட்டார்கள்.

"குதுஸ்" மீட்புப் போராட்டத்தில் கௌதுல் அஃளம் அவர்களின் சீடர்கள்.
இஸ்லாமியர்களிடமிருந்து பறிக்கப்பட்டு கிட்டத்தட்ட 88 ஆண்டுகள் சிலுவைப் போராளிகளின் ஆதிக்கத்தின் கீழ் இருந்த "பைத்துல் முகத்தஸ்" கௌதுல் அஃளம்(ரஹ்)அவர்களின் காலத்தில் மீட்கப்பட்டது.

அப்புனிதப் போரில் கௌதுல் அஃளம்(ரஹ்)அவர்களின் சீடர்கள் பெருமளவில் பங்கேற்றார்கள்.

மறுமை நாளுக்கு முன்னால் நிகழவிருக்கும் ஆறு முக்கிய நிகழ்வுகள் என்ற ஒரு ஹதீஸின் தொடரில் فتح بيت المقدس பைத்துல் மக்திஸ்) வெற்றி கொள்ளப்படுவதும் ஒன்று" என நபி (ஸல்) அவர்கள் கூறிய செய்தியானது தனது காலம் கூட அதற்கான பலத்தை எட்டவில்லை, தனது தோழர்களின் காலம் அதை எட்டும் என்ற பொருளில்தான் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

இறைத் தூதரின் காலத்தில் முன்னறிவிப்பு செய்யப்பட்டு இரண்டாம் கலீஃபா உமர் (ரழி) அவர்களின் ஆட்சியில் ஹிஜ்ரி 16ம் ஆண்டு (கி.பி. 636) அந்த முன்னறிவிப்பு நடந்தேறியது. 


மாவீரர் ஸலாஹுத்தீன் (ரஹி) அவர்களின் குத்ஸ் வெற்றி முன்னெடுப்புக்கள்...

ஷாம் தேச சிறு குழுக்களையும் நகரங்களையும் தனது ஆழுகையின் கீழ் கொண்டு வந்து -ஆலிம்- அறிஞர்கள், ஊரின் முக்கியஸ்தர்கள், படைவீரர்கள் எனப் பலரோடு கலந்தாலோசனை செய்த பின்னர், சிலுவைப் போராளிகளிடம் இருந்து பாலஸ்தீன குத்ஸ் மண்ணை மீட்க தனது படைகளைத் குத்ஸ் நோக்கி நகர்த்தினார் மாவீரர் ஸலாஹுத்தீன் அய்யூபி (ரஹி) அவர்கள்.

ஒருநாள் மதியம் கைலூலாவுடைய நேரத்தில் மஜ்லிஸில் தூங்கிக் கொண்டிருந்தபோது, நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கௌது நாயகம் அவர்களின் கனவில் தோன்றி, 'மக்களைத் தீய வழியிலிருந்து திருத்த நீர் ஏன் அவர்களுக்கு உபதேசம் செய்யக் கூடாது? என்று கேட்க, அதற்கவர்கள் நானோ அரபியல்லாதவன். அரபிமொழி பண்டிதர்களின் மத்தியில் நான் எப்படி அரபி மொழியில் திறமையாக பேசுவேன்? என்று பதில் கூற, அதற்கு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது உமிழ் நீரை அவர்கள் வாயில் ஏழுமுறை உமிழ்ந்தார்கள். அன்றுமுதல் நமது நாயகமவர்கள் திறமையாக பேசும் ஆற்றல் பெற்றார்கள். முதல் முறையாக பேச ஆரம்பித்தவுடன் இமாமுனா அலி நாயகம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தோன்றி, தங்களுடைய உமிழ்நீரை ஆறுமுறை உமிழ்ந்து சென்றார்கள். இதன் பலனாக அவர்கள் சாதுரியமாக பேசும் வல்லமை பெற்றார்கள்.( நூல்: கலாயிதுல் ஜவாஹிர்.)

இதனால் இவர்களது சொற்பொழிவு கேட்போர் மனதை கவர்வதாகவும், கல்நெஞ்சையும் கரைப்பதாகவும் சொற்சுவை, பொருள் பொலிவு ஆகியவை நிறைந்ததாக இருந்தது. அன்னாரின் பேச்சைக் கேட்க வருவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் பெருகிக் கொண்டே வந்தது. சுமார் அறுபதனாயிரம், எழுபதனாயிரம் பேர் கூடிவிடுவார்கள். அவர்களின் பிரசங்கத்தை ஏறக்குறைய 400 எழுத்தாளர்களுக்கு மேல் எழுதிக் கொண்டிருப்பார்கள்.அன்னவர்களின் சொற்பொழிவு கடும் பாறை போன்ற உள்ளத்தையும் கரைத்துவிடும்.அவர்களின் சொற்பொழிவால் பல ஆயிரக்காணக்கான இல்லங்களும்,இலட்சக்கணக்கான உள்ளங்களும் நேர்வழிப் பெற்றன.(நூல்:அக்பாருள் அக்யார்)

ஷரீஅத்தில் உறுதியாக இருப்பதே உண்மையான (தஸவ்வுஃப்)ஆன்மீகம்.
கௌதுல் அஃளம் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களின் மற்றொரு மகத்தான பணி ஆன்மீகம் அன்னாரின் மற்றுமொரு சிறப்பு , ஆன்மீகம் தரீக்கா என்பது ஷரீஅத்தை மீறி நடப்பதல்ல எனபதை ஆணித்தரமாக உணர்த்தினார்கள். இதனால் இஸ்லாம் பக்தியின் பெயரால் தவறான வழியில் செல்லாமல் காப்பாற்றப்பட்டது.

அவரது வாழ்வில் ஒரு முக்கிய நிகழ்ச்சி ஒரு நாள் தவத்தில் (முராகபாவில்)இருந்த போது சபிக்கப்பட்டவனே!அவூதுபில்லாஹி மினஷ்ஷைத்தானிர் ரஜீம்,லாஹவ்ல வலாகுவ்வத்த இல்லாபில்லாஹ்... தூரப்போ ஷைத்தானே என்று அவர் துப்பினார். சீடர்கள் காரணம் விசாரித்தனர். என்னிடம் ஒளியை ப்போல வந்த சைத்தான் அல்லாஹ் பேசுவது போல நடித்து என்னைப் பாராட்டி விட்டு,தாகமாக இருந்த என்னிடம் ஓர் தங்கப்பாத்திரத்தில் தண்ணீரை வைத்துவிட்டு "ஹராம் அனைத்தும் இன்று முதல் உமக்கு ஹலால்" என்றான். அவனை விரட்டினேன் ஒளியாக இருந்தவன் இருளாக மறைந்துப்போனான் என்றார்கள்.

அது சைத்தான் என எப்படி கண்டு கொண்டீர் என சீடர்கள் கேட்டனர். ஹலால் ஹராம் என்பது பெருமானாரோடு முடிந்து விட்டது. வேறு யாருக்கும் அதில் அதிகாரம் கிடையாது அதை வைத்து அவனை அடையாளம் கண்டு கொண்டேன் என்றார்கள்.சைத்தான் அப்துல் காதிர் ஜீலானி(ரஹ்) அவர்களிடம் "இதே போல நாற்பது பேரை ஏமாற்றியிருக்கிறேன் நீர் மார்க்கஞானம் பெற்றிருந்ததால் தப்பித்துவிட்டீர்"என்றான்.அப்பொழுதும் அன்னவர்கள் அவனின் சூழ்ச்சி வலையில் சிக்கிக்கொள்ளாமல் "சபிக்கப்பட்டவனே!இல்லை இப்பொழுதும் என் இறைவனின் கிருபையினால் தான் உன்னிடமிருந்து பாதுகாக்கப்பட்டேன்"என்றார்கள்.


முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களின் உபதேசங்களும் வழிகாட்டுதல்களும் மக்களது உள்ளங்களை கொள்ளை கொண்டு மகத்தான தாக்கத்தை ஏற்படுத்தியது என்றால் அதற்கு காரணம் அன்னாரின் இறைபக்தியும், உளத்தூய்மையான இஸ்லாமிய வாழ்க்கையுமாகும்.


இறைத்தூதர்கள் செய்த பணியை அவர்கள் இடத்தில் இருந்து நிறைவேற்றுவதற்கு அல்லாஹ்வினால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் வலிமார்கள். தங்களுக்கென்று தனி அடையாளங்களோடு தனி முகவரிகளோடு இல்லாமல் மக்களோடு மக்களாக மனிதர்களில் மனிதர்களாக இருக்கிற காரணத்தினால் நிறைய வலிமார்கள் அறியப்படுவதில்லை.நிறைய வலிமார்கள் தங்களை யாரென்று காட்டிக் கொள்வதுமில்லை 

மக்களோடு மக்களாக இருக்கிற வலிமார்கள் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளா விட்டாலும் தங்களை யாரென்று இனம் காட்டா விட்டாலும் அவர்களிடம் இருக்கும் சில தன்மைகள் மூலம் சில குணங்கள் மூலம் அவர்களை நாம் அறிந்து கொள்ள முடியும்.

முதல் அடையாளம் ; அல்லாஹ் குர்ஆனில் வலிமார்களை அறிமுகப்படுத்துகிற போது

أَلَا إِنَّ أَوْلِيَاءَ اللَّهِ لَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ

அறிந்து கொள்ளுங்கள். நிச்சயமாக இறை நேசர்களுக்கு பயமும் இருக்காது. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள். (அல்குர்ஆன் : 10 ; 62)

قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ مِنْ عِبَادِ اللَّهِ لَأُنَاسًا مَا هُمْ بِأَنْبِيَاءَ وَلَا شُهَدَاءَ يَغْبِطُهُمْ الْأَنْبِيَاءُ وَالشُّهَدَاءُ يَوْمَ الْقِيَامَةِ بِمَكَانِهِمْ مِنْ اللَّهِ تَعَالَى قَالُوا يَا رَسُولَ اللَّهِ تُخْبِرُنَا مَنْ هُمْ قَالَ هُمْ قَوْمٌ تَحَابُّوا بِرُوحِ اللَّهِ عَلَى غَيْرِ أَرْحَامٍ بَيْنَهُمْ وَلَا أَمْوَالٍ يَتَعَاطَوْنَهَا فَوَاللَّهِ إِنَّ وُجُوهَهُمْ لَنُورٌ وَإِنَّهُمْ عَلَى نُورٍ لَا يَخَافُونَ إِذَا خَافَ النَّاسُ وَلَا يَحْزَنُونَ إِذَا حَزِنَ النَّاسُ وَقَرَأَ هَذِهِ الْآيَةَ

{ أَلَا إِنَّ أَوْلِيَاءَ اللَّهِ لَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ }

அல்லாஹ்வின் அடியார்களில் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் நபிமார்களும் அல்ல. இறைவனின் பாதையில் உயிர் நீத்தவர்களும் அல்ல. இவர்களுக்கு அல்லாஹ் விடத்தில் கிடைக்கும் அந்தஸ்தைப் பார்த்து நபிமார்களும் தியாகிகளும் பொறாமைப்படுவார்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். சஹாபாக்கள், அவர்கள் யார்? என எங்களுக்குக் கூறுங்கள் அல்லாஹ்வின் தூதரே என்று கேட்டார்கள். அதற்கு நபியவர்கள் தங்களுக்கிடையே இரத்த உறவிற்காகவோ, கொடுத்து வாங்கிக் கொள்ளும் செல்வங்களுக்காகவோ அல்லாமல் அல்லாஹ்விற்காக ஒருவரையொருவர் நேசித்துக் கொண்டவர்கள். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நிச்சயமாக அவர்களுடைய முகங்கள் ஒளியாக இருக்கும். அவர்கள் ஒளியின் மீது இருப்பார்கள். மக்கள் அஞ்சும் போது அவர்கள் அஞ்சமாட்டார்கள். மக்கள் கவலைப்படும் போது அவர்கள் கவலைப்பட மாட்டார்கள் என்று கூறி விட்டு அல்லாஹ்வின் நேசர்களுக்கு எந்த  பயமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள் என்ற வசனத்தை படித்துக் காட்டினார்கள்.  (அபூதாவூத் : 3060)

கடந்த காலத்தைப்பற்றிய கவலையோ எதிர்காலத்தைப்பற்றிய அச்சமோ அவர்களுக்கு இருக்காது என்று குறிப்பிடுகிறான்.நம்மிடம் இருக்கிற மிகப்பெரிய பலவீனமே இந்த இரண்டும் தான். கடந்த காலத்தைப்பற்றிய கவலையும் எதிர்காலத்தைப்பற்றிய அச்சமும். இப்படி ஆகி விட்டதே அப்படி ஆகி விட்டதே இது நடந்து விட்டதே அது நடந்து விட்டதே வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டு விட்டதே போட்ட முதலெல்லாம் வீணாப் போய் விட்டதே பயிரெல்லாம் வாடிப் போய் விட்டதே என்று கடந்த காலத்தைப் பற்றிய கவலை ஒரு பக்கம்.அப்படி ஆகி விடுமோ இப்படி ஆகி விடுமோ வியாபாரம் நஷ்டமாகி விடுமோ போட்ட முதல் வீணாப்போய் விடுமோ பயிர் வாடிப்போய் விடுமோ வாழ்க்கையில் தோற்றுப் போய் விடுவோமோ என்று எதிர் காலத்தைப் பற்றிய அச்சம் ஒரு பக்கம்.கல்யாணம் ஆகாதவர்களுக்கு கல்யாணம் செய்ய வேண்டும் என்ற  கவலை, கல்யாணம் ஆனவர்களுக்கு கல்யாணம் ஆகி விட்டதே இனி என்ன நடக்க போகிறதோ என்ற அச்சம், வீட்டை கட்டுவதற்கு முன்பு வீட்டை கட்ட வேண்டுமென்ற  கவலை,கட்டி முடித்த பிறகு வாங்கிய கடனை அடைக்க வேண்டுமென்ற அச்சம்.

ஆக இந்த இரண்டு இல்லாத மனிதர்களை அதிகம் பார்க்க முடியாது. நம் வாழ்வில் இருக்கிற சந்தோஷத்தையும் நிம்மதியையும் பறித்து நம்மை மீளாத் துயரத்தில் நிறுத்தி விடுகிற மிக ஆபத்தான விஷயங்கள் இந்த இரண்டும் தான். எனவே நம் வாழ்வில் சந்தோஷம் நிலைக்க வேண்டுமென்றால் நிம்மதி பெருக வேண்டுமென்றால் முதல்ல இந்த இரண்டையும் நம்மிலிருந்து தூக்கி எறிந்து விட வேண்டும்.வலிமார்களுக்கு இந்த இரண்டும் இருக்காது என்று அல்லாஹ் குறிப்பிடுகிறான். இந்த இரண்டும் இல்லாத அமைதியான உள்ளம் கொண்டவர்கள் வலிமார்கள்.

ஹள்ரத் கௌதுல் அஃலம் ரஹ் அவர்களிடம் உங்கள் கப்பல் கவிழ்ந்து விட்டது என்று சொல்லப்பட்ட போது அவர்கள் உள்ளம் கவிழ வில்லை.எது நடந்தாலும் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.இருப்பதைக் கொண்டு பொருந்திக் கொள்ள வேண்டும்.இது இறை நேசர்களின் தன்மை.

இறைநேசர்களுக்கான இரண்டாவது தன்மை ; இஸ்திகாமத்.எதையும் நிலையாகச் செய்வது, தொடர்படியாக செய்வது.மார்க்கம் கடமையாக்கி இருக்கிற மார்க்கம் வலியுறுத்துகிற நல்ல காரியங்களை தொடர்ந்து செம்மையாக செய்து வருவது இறைநேசர்களின் சிறந்த பண்புகளில் ஒன்று.

قال الإمام ابن حجر العسقلاني رحمه الله: المراد بولي الله: العالم بالله، المواظب على طاعته، المخلص في عبادته؛ (فتح الباري)

இறைநேசர் என்பவர் இறைவனை அறிந்தவர்,இறை வணக்கத்தின் மீது தொடர்படியாக இருப்பவர்,மனத்தூய்மையுடன் இறை வணக்கத்தில் ஈடுபடுபவர். (ஃபத்ஹுல் பாரி)

كن طالبا للاستقامة لا طالبا للكرامة

வலிமார்களிடம் நீங்கள் கராமத்தைத் தேடாதீர்கள். இஸ்திகாமத்தைத் தேடுங்கள் என்று ஞானிகள் கூறுவார்கள்.

عن سعيد بن المسبب - رحمه الله - قال: (ما فاتتني التكبيرة الأولى منذ خمسين سنة، وما نظرت في قفا رجل في الصلاة منذ خمسين سنة

ஐம்பது வருடங்களாக எனக்கு தக்பீர் தஹ்ரீமா தவறியதில்லை. ஐம்பது வருடங்களாக தொழுகையில் எனக்கு முன்னால் இருக்கும் மனிதரின் பின் கழுத்தை நான் பார்த்ததில்லை என்று ஸயீத் பின் முஸய்யப் ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.

ஜுனைதுல் பக்தாதி ரஹ் அவர்களிடம் ஒருவர் உங்களிடம் நான் எந்த அற்புதத்தையும் பார்க்க வில்லையே என்று கேட்பார். அதற்கு அவர்கள் நான் என்றைக்காவது ஜமாஅத் தொழுகையை விட்டு பார்த்திருக்கிறாயா என்று கேட்பார்கள். அவர் இல்லை என்று சொல்வார். இதை விட வேறு என்ன அற்புதத்தை நீ எதிர் பார்க்கிறாய் என்று கேட்பார்கள்.

இறைநேசர்களை அடையாளம் கண்டு கொள்ள சொல்லப்படும் மூன்றாவது  அடையாளம் ; நஃப்ஸை கட்டுப்படுத்தும் தன்மை.நஃப்ஸ் எதைச் சொல்கிறதோ அதற்கு மாற்றமாக நடப்பது.

காரியங்களில் பேணுதல் வேண்டும் என்று நாம் சொல்கிறோம்.பேணுதல் என்றால்

كل ما شككت فيه فالورع اجتنابه

சந்தேகம் வரும் காரியத்தை விட்டு விடுவதற்குப் பெயர் தான் பேணுதல்.

ஒரு பொருள் ஹலால் என்று உறுதியாக தெரிந்தால் அதை நாம் செய்வோம்.ஹராம் என்று உறுதியாக தெரிந்தால் அதை விட்டு விடுவமோ.ஆனால் ஒரு பொருள் ஹலாலா ஹராமா என்பதில் சந்தேகம் ஏற்படுகிறது.வெளியூரில் ஒரு கடைக்கு சாப்பிட செல்கிறோம்,அங்கை இறைச்சி ஹலாலா ஹராமா என்பதில் சந்தேகம் ஏற்படுகிறது.குழப்பம் ஏற்படுகிறது என்றால் அதை தவிர்ந்து கொள்ள வேண்டும்.இதற்குப் பெயர் தான் பேணுதல்.

ஆனால் பேணுதலில் உச்சகட்டம் என்பது ترك بعض الحلال خشية الوقوع في الحرام  ஹராம் நிகழந்து விடுவமோ என்ற அச்சத்தில் ஹலாலையே விட்டு விடுவது. ஆனால் வலிமார்களின் தன்மை என்னவென்றால் ஹலால் ஹராம் என்றெல்லாம் பிரித்துப் பார்க்காமல் நஃப்ஸ் கேட்கிற அத்தனைக்கும் மாற்றம் செய்வார்கள். இன்றைக்கு நாம் என்ன செய்வோம், மீன் சாப்பிட வேண்டுமென்ற ஆசை வந்தால் மீன் சாப்பிடுவோம்,கறி சாப்பிட வேண்டுமென்ற ஆசை வந்தால் கறி சாப்பிடுவோம், ஆனால் வலிமார்கள் ஒரு விஷயத்தில் ஆசை வரும் போது அதை செய்ய மாட்டார்கள்.

هشام بن حسان قال: مررت بالحسن البصري وهو جالس وقت السحر فقلت: يا أبا سعيد مثلك يجلس في هذا الوقت ؟ قال: إني توضأت وأردت نفسي على الصلاة فأبت علي، وأرادتني على أن تنام فأبيت عليها

ஹிஷாம் ரஹ் அவர்கள் கூறுகிறார்கள் ; ஹஸன் பஸரி ரஹ் அவர்களை நான் கடந்து சென்றேன். அவர்கள் ஸஹருடைய வேளையில் அமர்ந்திருந்தார்கள். உங்களைப் போன்றவர்கள் இந்த நேரத்தில் அமர்ந்திருக்க வேண்டுமா என்று கேட்டேன். அதற்கவர்கள் தொழ வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஆனால் அதை என் நஃப்ஸ் மறுக்கிறது. தூங்க வேண்டும் என்று என் நஃப்ஸ் விரும்புகிறது. அதை நான் மறுக்கிறேன் என்றார்கள்.

وعن سري السقطي أنه منذ أربعين سنة يشتهي أن يغمس جزرة في دبس فما فعل

ஸிர்ரி ஸிக்தி ரஹ் அவர்கள் நாற்பது ஆண்டுகளாக கேரட்டை ஒரு இனிப்புடன் சேர்த்து சாப்பிட வேண்டும் என்று விரும்பினார்கள். ஆனால் அதை அவர்கள் செய்யவே இல்லை.

இது நஃப்ஸோடு போராடும் போராட்டம். மனிதனுக்கு மிகப்பெரிய மூன்று எதிரிகள் உண்டு. மனோஇச்சை, ஷைத்தான், நஃப்ஸ். இதில் மிகப்பெரிய எதிரி நஃப்ஸ். அந்த நஃப்ஸோடு போராடும் போராட்டம் மிகவும் கடினமானது. இது எல்லாருக்கும் சாத்தியமாகாது.வலிமார்களாக இருப்பவர்களுக்கு மட்டுமே சாத்தியம்.

قل يا أيها الذين هادوا إن زعمتم أنكم أولياء لله من دون الناس فتمنوا الموت إن كنتم صادقين

யூதர்களே! மற்ற மனிதர்களை விட நீங்கள் தான் அல்லாஹ்வின் நேசர்கள் என்று எண்ணினால் மேலும் [ அவ்வெண்ணத்தில் ] உண்மையாளர் களாக  இருந்தால் நீங்கள் மரணத்தை விரும்புங்கள் (அல்குர்ஆன் : 62 ; 6) 

இந்த வசனத்திலிருந்து,  ஒருவர் அல்லாஹ்வின் நேசராக இருந்தால் அவருக்கு மரணத்தின் மீது ஆசை வரும். வர வேண்டும்.

 மரணப்படுக்கையில் இருந்த ஹழ்ரத் பிலால் {ரலி} அவர்களைப் பார்த்து வேதனைப்பட்ட அவர்களின் மகளிடம் இன்றைக்குப் பிறகு உன் தந்தைக்கு என்றைக்கும் கஷ்டம் இல்லையே!

  محمدا واصحابه  غدا نلقي    என் நேசர் ரசூல் ﷺ அவர்களையும், அவர்களின் தோழர்களையும் சந்திக்கப் போகிறேன் என்று கூறினார்கள். (வஸாயா ரசூல்)

 

இப்படி இறைநேசர்களுக்கு பல தன்மைகள் பல அடையாளங்கள் சொல்லப்பட்டாலும் எல்லாவற்றும் முத்தாய்ப்பாக நபி ﷺ அவர்கள் ஒரு அடையாளத்தைச் சொன்னார்கள்.

قالَ رجلٌ يا رسولَ اللَّهِ مَن أولياءُ اللَّهِ قالَ الَّذينَ إذارُءوا ذُكِرَ اللَّهُ  (صحيح الجامع)

இறைநேசர்கள் யார் என்று ஒருவர் கேட்டார். அப்போது நபி ﷺ அவர்கள், அவர்களைக் கண்டால் இறைவனின் நினைவு வரும் என்றார்கள்.

ஒருவர் என்ன துறையில் இருக்கிறாரோ அந்த துறை சார்ந்த விஷயங்கள் தான் அவரைப் பார்க்கிற போது நம் நினைவுக்கு வரும்.ஒரு மருத்துவரைப் பார்க்கிற போது நோய்நொடிகளும் மருத்துவமனையும் நம் ஞாபகத்திற்கு வரும், ஒரு வக்கீலைப் பார்க்கிற போது சட்டப் பிரச்சனைகளும் நீதிமன்றமும் நம் எண்ணத்திற்கு வரும்,ஒரு நாட்டின் அரசியல் தலைவரைப் பார்க்கிற போது நாட்டின் நிலவரங்கள் நம் சிந்தனையை தட்டி எழுப்பும். இப்படி ஒவ்வொரு துறை சார்ந்தவர்களும் நமக்கு ஒவ்வொரு விஷயத்தை நினைவுபடுத்துவதைப் போல வலிமார்கள் நமக்கு அல்லாஹ்வை நினைவுபடுத்துகிறார்கள்.யாரைப் பாரத்தவுடன் அல்லாஹ்வின் நினைவு நமக்கு வருகிறதோ அவர் தான் வலியுல்லாஹ்,இறை நேசர்.

Popular posts from this blog

ஹழ்ரத் அபூபக்கர் சித்திக் (ரலி)

எச்சரிக்கை! இந்த ஐந்து தீய குணங்கள் 30-10-2025

அற்புதங்கள் நிறைந்த ஆஷூரா தினம்...... 12-07-2024 04-07-2025