இறுதி நிமிடங்களும் நமகுண்டான படிப்பினைகளும் 21-10-22
அன்சாரிகளைப் பற்றி நான் விசேஷமாக அறிவுரை கூறுகிறேன். அவர்கள் எனது ஈரலும் இதயமும் ஆவார்கள். அவர்கள் தங்களது கடமையை நிறைவேற்றி விட்டார்கள். அவர்களுடைய உரிமையும், சலுகையும் மீதமிருக்கிறது. அவர்களில் நல்லோர்களின் செயலை ஏற்றுக் கொள்ளுங்கள். அவர்களில் தவறிழைப்போரை மன்னியுங்கள்.'
மேலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்: 'தனது நட்பாலும் பொருளாலும் எனக்கு மக்களில் அதிகமதிகம் உபகாரம் செய்தவர் அபூபக்கர் ஆவார். என் இறைவனே! உன்னைத் தவிர மற்றெவரையும் உற்ற நண்பனாக ஆக்கிக் கொள்வதாக இருந்தால் அபூபக்கரை உற்ற நண்பராக ஆக்கியிருப்பேன்.
மரணத்திற்கு நான்கு நாட்களுக்கு முன், வியாழக்கிழமை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு வலி கடுமையானது. மக்களை நோக்கி 'வாருங்கள்! நான் உங்களுக்கு ஒன்றை எழுதித் தருகிறேன். அதன்பின் ஒருக்காலும் நீங்கள் வழி தவறமாட்டீர்கள்' என்று கூறினார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இறப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு கூற, தான் கேட்டதாக ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்: 'அறிந்து கொள்ளுங்கள்! உங்களில் எவரும் அல்லாஹ்வின் மீது நல்லெண்ணம் கொண்டவராகவே தவிர மரணிக்க வேண்டாம்.' (நூல்கள்: தபகாத் இப்னு ஸஅது, முஸ்னத் அபூதாவூது, முஸ்னத் அபூ யஃலா)
இந்நிகழ்ச்சி பற்றி பின்பு ஒரு நாள் ஃபாத்திமாவிடம் விசாரித்தோம். எனக்கு ஏற்பட்ட இதே வலியினாலே நான் இறந்து விடுவேன் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியபோது நான் அழுதேன். அவர்களது குடும்பத்தாரில் நான்தான் முதலில் அவர்களை சென்றடைவேன் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியபோது நான் சிரித்தேன்' என்று ஃபாத்திமா ரளியல்லாஹு அன்ஹா பதில் கூறினார்கள். (நூல்: ஸஹீஹுல் புகாரி)
மேலும், 'அகில உலக பெண்களின் தலைவி ஃபாத்திமா' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நற்செய்தி கூறினார்கள். (ரஹ்மத்துல் லில் ஆலமீன்)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ஏற்பட்ட கடுமையான நிலைமையைக் கண்ட ஃபாத்திமா ரளியல்லாஹு அன்ஹா 'எனது தந்தைக்கு ஏற்பட்ட கஷ்டமே!' என்று வேதனைப்பட்டார்கள். உன் தந்தைக்கு இன்றைக்குப் பிறகு என்றுமே சிரமம் இருக்காது என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஆறுதல் கூறினார்கள். (நூல்: ஸஹீஹுல் புகாரி)
ஹசன், ஹுசைனை (ரளியல்லாஹு அன்ஹும்) வரவழைத்து அவர்களை முத்தமிட்டு அவர்களுடன் நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டுமென அறிவுறுத்தினார்கள். மனைவிமார்களை அழைத்து அவர்களுக்கும் உபதேசமும் அறிவுரையும் நல்கினார்கள்.
முன்பை விட வேதனை அதிகமானது. கைபர் போரின் போது உட்கொண்ட உணவில் கலக்கப்பட்ட விஷத்தின் விளைவை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உணர ஆரம்பித்தார்கள். 'ஆயிஷாவே! கைபர் தினத்தில் நான் உண்ட உணவின் வேதனையை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். இந்த நேரத்தில் அந்த விஷத்தினால் எனது நரம்புகள் துண்டாவதை நான் உணர்கிறேன்' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (நூல்: ஸஹீஹுல் புகாரி)
இந்நிலையில் சிலவற்றை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். அதுவே அவர்களது கடைசி பேச்சாகும். அதாவது: அல்லாஹ்வின் சாபம் யூத, கிறிஸ்தவர்கள் மீது உண்டாகட்டும்! அவர்கள் தங்களது இறைத்தூதர்களின் அடக்கத்தலங்களை வணங்குமிடமாக மாற்றிக் கொண்டார்கள். அரபிகளின் பூமியில் இரண்டு மார்க்கங்கள் இருக்கக் கூடாது.' (நூல்கள்: ஸஹீஹுல் புகாரி, தபகாத் இப்னு ஸஅத்)
தொழுகையையும் நீங்கள் உரிமையாக்கிக் கொண்டவர்களையும் (அடிமைகள்) பேணுங்கள் என்று பலமுறை அறிவுறுத்தினார்கள். (நூல்: ஸஹீஹுல் புகாரி)
நபியின் மரணமும் அல்லாஹ்வின் இரங்கலும்:
لما مرض رسول الله صلى الله عليه وسلم أتاه جبريل فقال: "يا محمد! إن الله أرسلني إليك تكريما لك, وتشريفا لك, خاصة لك يسألك عما هو أعلم به منك يقول: كيف تجدك؟ قال: أجدني يا جبريل! مغموما وأجدني يا جبريل مكروبا". ثم جاءه اليوم الثاني, فقال له ذلك فرد عليه النبي صلى الله عليه وسلم كما رد أول يوم, ثم جاءه اليوم الثالث, فقال له كما قال أول يوم ورد عليه كما رد عليه, وجاء معه ملك يقال له و: إسماعيل على مائة ألف ملك, كل ملك على مائة ألف ملك فاستأذن عليه, فسأله عنه. ثم قال جبريل: هذا ملك الموت يستأذن عليك. ما استأذن على آدمي قبلك, ولا يستأذن على آدمي بعدك. فقال: ائذن له, فأذن له فسلم عليه, ثم قال: يا محمد! إن الله أرسلني إليك فإن أمرتني أن أقبض روحك قبضت, وإن أمرتني أن أتركه تركته فقال: وتفعل يا ملك الموت؟ قال: نعم بذلك أمرت, وأمرت أن أطيعك. قال: فنظر النبي صلى الله عليه وسلم إلى جبريل عليه السلام, فقال جبريل: يا محمد! إن الله قد اشتاق إلى لقائك, فقال النبي صلى الله عليه وسلم لملك الموت: " امض لما أمرت به" فقبض روحه فلما توفي رسول الله صلى الله عليه وسلم وجاءت التعزية سمعوا صوتا من ناحية البيت : السلام عليكم أهل البيت ورحمة الله وبركاته إن في الله عزاء من كل مصيبة وخلفا من كل هالك ودركا من كل فائت فبالله فثقوا وإياه فارجوا فإنما المصاب من حرم الثواب . فقال علي : أتدرون من هذا ؟ هو الخضر عليه السلام. (بيهقى فى دلائل النبوة-7:267)
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவாகள் நோய்வாய்ப்பட்டிருந்த போது ஜிப்ரீல் (அலை) அவர்கள் (நலம் விசாரிக்க) வந்து, முஹம்மதே! உங்களுக்கு சங்கையும் மரியாதையும் செய்யுமாறு அல்லாஹ் என்னை உம்மிடம் அனுப்பியுள்ளான். குறிப்பாக உம்மைப்பற்றி முழுமையாக அவன் அறிந்திருந்தும் உம்மை நலம் விசாரித்து வரும்படியாக கூறினான். ஆகவே, (சொல்லுங்கள் முஹம்மதே!) உடல் நிலை எப்படி இருக்கிறது? என்று (முதல்நாள்) கேட்டார்கள். அதற்கு நபியவர்கள், ஜிப்ரயீலே! எனக்கு ஒரே மயக்கமாகவும் கஷ்டமாகவும் இருக்கிறது என்றார்கள். (ஜிப்ரயீல் சென்றுவிட்டார்.) இரண்டாம் நாள் வந்து, முஹம்மதே! உடல் நிலை எப்படி இருக்கிறது? என்று ஜிப்ரயீல் (அலை) கேட்டதற்கு முதல்நாள் இருந்ததைப்போலத்தான் இன்றும் இருக்கிறது என்றார்கள். (ஜிப்ரயீல் சென்றுவிட்டார்.) மூன்றாம் நாள், முஹம்மதே! உடல் நிலை எப்படி இருக்கிறது? என்றார்கள். முன்புள்ளநாள் போலத்தான் இருக்கிறது என்றார்கள். (மூன்றாம் நாளில் ஜிப்ரயீலோடு) ஒரு மலக்கும் வந்திருந்தார். அவர் பெயர் 'இஸ்மாயீல்' என்பதாகும். அவர் தன்னோடு ஒரு இலட்சம் மலக்கு(வானவர்)களை அழைத்து வந்திருந்தார். இந்த ஒரு இலட்சம் மலக்குகளில் ஒவ்வொருவருக்கும் (உதவிக்கு) ஒரு இலட்சம் மலக்குகள் இருந்தார்கள். அ(ந்த இஸ்மாயில் என்ற வான)வர் நபி (ஸல்) அவர்களிடம் செல்ல அனுமதி கேட்டார். இவர் யார்? என்று நபியவர்கள் (ஜிப்ரயீலிடம்) கேட்டார்கள். இவர்தான் மலகுல் மவ்த் (உயிரை கைபற்றும் வானவர்) ஆவார். உங்கள் முபாரக்கான உயிரை கைபற்ற உம்மிடம் அனுமதி கேட்கிறார் என்றார்கள். இவர் உமக்கு முன்புள்ள எந்த மனிதர்களிடமும் அனுமதி கேட்டதுமில்லை¢ உமக்கு பின்னுள்ள எந்த மனிதர்களிடம் அனுமதி கேட்கவும் மாட்டார் என்றும் கூறினார். அவர்களை அனுமதியுங்கள் என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள். (அந்த மலக்குல் மவ்த்) நபியவர்களுக்கு ஸலாம் கூறிக்கொண்டார். பிறகு, முஹம்மதே! அல்லாஹ் என்னை தங்களிடம் அனுப்பிவைத்தான். நீங்கள் உங்கள் உயிரை கைப்பற்ற சொன்னால் கைபற்றுவேன்¢ கைபற்ற வேண்டாம் என்றால் கைபற்றமாட்டேன் என்று கூறினார். அவருக்கு நபியவர்கள், மலகுல் மவ்தே! சொன்னபடியே கைபற்றுவீரா? என்று கேட்டார்கள். அதற்கவர் ஆம்! அவ்வாறுதான் எனக்கு கட்டளை. ஆனாலும் (முஹம்மதே!) உங்களுக்கு கட்டுப்படுமாறும் அல்லாஹ் ஏவியிருக்கிறான் என்றார். நபியவர்கள், ஜிப்ரயீலைப் பார்த்தார்கள். ஜிப்ரயீல் (அலை) அவர்கள், 'முஹம்மதே! அல்லாஹ் உம்மை சந்திக்க ஆசையாக இருக்கிறான் என்றார்கள்.' அப்போது நபியவர்கள் மலகுல் மவ்திடம், உமக்கு கட்டளையிடப்பட்டதை செய்வீராக என்றார்கள். அதற்குபிறகுதான் பூமான் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் பரிசுத்தமான உயிரை அவர் கைப்பற்றினார். அப்பொழுது, அந்த வீட்டின் மூளையிலருந்து 'அஸ்ஸலாமு அலைக்கும் அஹ்லல் பைத் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு' என்று இறங்கள் சப்தம் கேட்டது. அந்த சப்தத்தை (அங்கிருந்தோர் அனைவரும்) கேட்டனர். (அந்த இறங்களில்) ஒவ்வொரு சோதனைக்கும் ஒர் இறங்கள் உண்டு, ஒவ்வொரு அழிவுக்கும் ஒரு பகரம் உண்டு மற்றும் ஒவ்வொரு இழப்பிற்கும் ஓர் இழப்பீடு உண்டு. எனவே, அல்லாஹ்வை பயந்துக்கொள்ளுங்கள், அவனையே ஆதரவு வையுங்கள். நன்மை தடுக்கப்பட்டவனே சோதனைக்கு ஆளக்கப்பட்டவனாவான் (என்று அந்த இறங்கள் சப்தம் இருந்தது) இது யாருடைய சப்தம் என்று உங்களுக்கு தெறியுமா? என்று அலி (ரளி) அவர்கள் கேட்டுவிட்டு, இது களிர் (அலை) அவர்களுடைய சப்தமாகும் என்று கூறினார்கள். (பைஹகீ-ஃபீ தலாயிலுன் நுபுவத் 7:267)
கடைசி வார்த்தையை மட்டும் மூன்று முறை நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள். உயர்த்திய அவர்களுடைய கை சாய்ந்தது. உயர்ந்தோனிடம் சென்றார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். ஹிஜ்ரி 11, ரபீஉல் அவ்வல் பிறை 12, திங்கட்கிழமை முற்பகல் முடியும் நேரத்தில் அவர்களுக்கு மரணம் ஏற்பட்டது. அப்போது நபி (ஸல்) அவர்களுக்கு 63 வயது, 4 நாட்கள் ஆகியிருந்தன.
கவலையில் நபித்தோழர்கள்:
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மரணச் செய்தி எங்கும் பரவியது. மதீனா இருண்டுபோனது. இதைப் பற்றி “நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) எங்களிடம் வந்த தினத்தை விட மிக அழகிய, ஒளிமிகுந்த நாளை நான் கண்டதில்லை. நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) மரணித்த தினத்தைவிட இருண்ட, வெறுப்பான நாளை நான் கண்டதில்லை” என அனஸ் (ரழி) கூறுகிறார்கள். (முஸ்னத் தாரமி, மிஷ்காத்)
ஃபாத்திமா (ரழி) “எனது தந்தையே! அழைத்த இறைவனுக்கு பதில் அளித்துவிட்டீரே! எனது தந்தையே! ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் தங்களின் தங்குமிடமாயிற்றே! எனது தந்தையே! உங்களின் மரணச் செய்தியை நாங்கள் ஜிப்ரயீலிடம் கூற வேண்டுமே” எனக் கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)
உமரின் நிலை:
உமர் (ரழி) எழுந்து நின்று “சில நயவஞ்சகர்கள் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) இறந்துவிட்டார்கள் என்று நினைக்கின்றனர். நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் மரணிக்கவில்லை மூஸா பின் இம்ரான் (அலை) அல்லாஹ்வைச் சந்திக்கச் சென்று நாற்பது நாட்கள் தனது சமூகத்தாரை விட்டு மறைந்து இருந்த போது மக்கள் மூஸா மரணித்து விட்டார் என எண்ணினார்கள். ஆனால், மூஸா (அலை) திரும்பி வந்தார்கள். அவ்வாறே நபியவர்களும் தன் இறைவனைச் சந்திக்கச் சென்றுள்ளார்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக! நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) நிச்சயம் திரும்ப வருவார்கள். தான் மரணித்து விட்டதாகக் கூறியவர்களின் கைகளையும் கால்களையும் வெட்டுவார்கள்?” எனக் கூறினார்கள். (இப்னு ஹிஷாம்)
அபூபக்ரின் நிலை:
أَنَّ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا زَوْجَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَخْبَرَتْهُ قَالَتْ أَقْبَلَ أَبُو بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ عَلَى فَرَسِهِ مِنْ مَسْكَنِهِ بِالسُّنْحِ حَتَّى نَزَلَ فَدَخَلَ الْمَسْجِدَ فَلَمْ يُكَلِّمْ النَّاسَ حَتَّى دَخَلَ عَلَى عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا فَتَيَمَّمَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ مُسَجًّى بِبُرْدِ حِبَرَةٍ فَكَشَفَ عَنْ وَجْهِهِ ثُمَّ أَكَبَّ عَلَيْهِ فَقَبَّلَهُ ثُمَّ بَكَى فَقَالَ بِأَبِي أَنْتَ يَا نَبِيَّ اللَّهِ لَا يَجْمَعُ اللَّهُ عَلَيْكَ مَوْتَتَيْنِ أَمَّا الْمَوْتَةُ الَّتِي كُتِبَتْ عَلَيْكَ فَقَدْ مُتَّهَا (بخارى)
அபூபக்கர் (ரழி) இந்நேரத்தில் மஸ்ஜிது நபவியிலிருந்து சற்று தொலைவிலுள்ள ‘சுன்ஹ்’ என்ற இடத்திலுள்ள வீட்டில் தங்கியிருந்தார்கள். இந்தத் துக்கமானச் செய்தியைக் கேட்டவுடன் தனது குதிரையில் ஏறி மஸ்ஜிது நபவிக்கு வந்து, யாரிடமும் பேசாமல் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களைக் காண்பதற்காக ஆயிஷாவின் அறை நோக்கி நடந்தார்கள். நபி (ஸல்) ஹிபரா நாட்டு ஆடையால் போர்த்தப்பட்டிருந்தார்கள். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் முகத்திலிருந்து போர்வையை அகற்றி முகத்தைக் கட்டிப்பிடித்து முத்தமிட்டு அழலானார்கள். (நாயகமே!) “என் தாயும் தந்தையும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்". அல்லாஹ் தங்களுக்கு இரண்டு மரணத்தைத் தரமாட்டான். அல்லாஹ் உங்களுக்கு விதித்த முதல் மரணத்தையே நீங்கள் அடைந்து கொண்டீர்கள்” என்றும் கூறினார்கள்.
பின்பு அறையிலிருந்து வெளியேறி அபூபக்கர் (ரழி) மஸ்ஜிது நபவிக்கு வந்தார்கள். அங்கு உமர் (ரழி) மக்களிடம் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது அபூபக்கர் (ரழி) “உமரே! அமருங்கள்” என்றுரைத்தும் உமர் (ரழி) அமர மறுத்துவிட்டார்கள். அபூபக்கர் (ரழி) மிம்பரில் ஏறி சப்தமிட்டு தஷஹ்ஹுத் முழங்கினார். மக்கள் உமர் (ரழி) அவர்களை விட்டு நீங்கி அபூபக்கர் (ரழி) அவர்களை நோக்கி விரைந்தனர். அப்போது அபூபக்கர் (ரழி) “உங்களில் யார் முஹம்மதை வணங்கிக் கொண்டிருந்தாரோ! நிச்சயம் முஹம்மது மரணித்தார் என்பதைத் தெரிந்து கொள்ளட்டும்! உங்களில் யார் அல்லாஹ்வை வணங்கினாரோ! நிச்சயமாக அல்லாஹ் என்றென்றும் உயிருடன் இருப்பவன் மரணிக்க மாட்டான். அல்லாஹ் கூறுகிறான்:
முஹம்மது (நபி) ஒரு தூதரேயன்றி (இறக்காமல் இருக்கக் கூடிய இறைவன்) அல்ல. அவருக்கு முன்னரும் (இவ்வாறே) பல தூதர்கள் சென்றிருக்கின்றனர். அவர் இறந்துவிட்டால் அல்லது வெட்டப்பட்டு விட்டால் நீங்கள் புறங்காட்டிச் சென்று விடுவீர்களோ? (அவ்வாறு) எவரேனும் புறங்காட்டிச் சென்று விட்டால் அதனால் அவன் அல்லாஹ்வுக்கு ஒன்றும் நஷ்டம் உண்டாக்கி விடமாட்டான். நன்றி அறிபவர்களுக்கு அல்லாஹ் அதிசீக்கிரத்தில் (நற்)கூலியைத் தருவான். (அல்குர்ஆன் 3:144) என்று உரையாற்றினார்கள். (புகாரி)
இப்னு அப்பாஸ் (ரழி) கூறுகிறார்கள்: “அபூபக்கர் (ரழி) இந்த வசனத்தை ஓதிக் காட்டும் வரை அல்லாஹ் இதனை இறக்கி வைத்ததை மக்கள் அறியாதது போல் இருந்தனர். அபூபக்கரிடமிருந்து அதை செவியேற்ற மக்கள் அதனையே திரும்பத் திரும்ப ஓதினர்.”
இப்னுல் முஸய்யப் (ரழி) கூறுகிறார்: “அல்லாஹ்வின் மீது ஆணையாக! அபூபக்ர் (ரழி) அந்த வசனத்தை ஓதியவுடன் அவர்கள் கூறுவதுதான் உண்மை என நான் அறிந்து கொண்டேன். என்னுடைய கால்கள் சோர்ந்து என்னால் நிற்க இயலவில்லை. அப்படியே பூமியில் சாய்ந்து விட்டேன். நபி (ஸல்) இறந்து விட்டார்கள் என்பதையும் அறிந்து கொண்டேன்.” (ஸஹீஹுல் புகாரி)
அஸ்வத் இப்னு யஸீத் (ரஹ்) அறிவித்தார் ”நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அலீ (ரலி) அவர்களிடம் (தமக்குப் பின் ஆட்சியாளராக இருக்கும்படி) இறுதிவிருப்பம் (வஸிய்யத்) தெரிவித்துவிட்டார்களாமே” என்று ஆயிஷா (ரலி) அவர்களிடம் கூறப்பட்டது. அதற்கவர்கள், “இதைச் சொன்னவர் யார்?“ என்ற கேட்டுவிட்டு, “(நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் இறுதி வேளையில்) நான் அவர்களை என் நெஞ்சோடு அணைத்துக்கொண்டிருந்தேன். அப்போது அவர்கள் (எச்சில் துப்புவதற்காகப்) பாத்திரம் கொண்டு வரும்படி கூறிவிட்டு அப்படியே ஒரு பக்கம் சரிந்து இறந்துபோய்விட்டார்கள். (அவர்கள் இறந்ததைக் கூட) நான் உணரவில்லை. (நடந்தது இவ்வாறிருக்க) அலீ அவர்களுக்கு (ஆட்சிப் பொறுப்பை) எப்படி அவர்கள் சாசனம் செய்திருப்பார்கள்?“ என்று கேட்டார்கள். (ஸஹீஹ் புகாரி)
அடக்கம் செய்ய ஏற்பாடுகள்:
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை அடக்கம் செய்வதற்கு முன்னதாக முஸ்லிம்களின் காரியங்களை நிர்வகிக்கும் கலீஃபாவை நிர்ணயம் செய்வதில் மக்கள் ஈடுபட்டனர். பனூ சாம்தாவின் வீட்டு வராண்டாவில் இது தொடர்பாக நடந்த விவாதங்களுக்கும் கருத்து பரிமாற்றங்களுக்கும் பிறகு, முஹாஜிர்களும் அன்சாரிகளும் ஒரு மனதாக அபூபக்ரை கலீஃபாவாக நிர்ணயித்தனர். இந்த வேலையில் திங்கட்கிழமையின் பகல் முழுதும் முடிந்து இரவும் முழுமையாக முடிந்தது. அது வரை நபி (ஸல்) அவர்களின் புனித உடல் ஹிபரா போர்வையுடன் இருந்தது. நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் குடும்பத்தார்கள் அறையை மூடி வைத்திருந்தனர். செவ்வாய் பகல் அன்று நபி (ஸல்) அவர்களின் ஆடையைக்களையாமல் அப்படியே குளிப்பாட்டினர். இப்பணியில் அப்பாஸ், அலீ, ஃபழ்ல் இப்னு அப்பாஸ், குஸம் இப்னு அப்பாஸ், நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் முன்னாள் அடிமை ஷுக்ரான், உஸாமா இப்னு ஜைத், அவ்ஸ் இப்னு கவ்லீ (ரழி) ஆகியோர் ஈடுபட்டனர். அப்பாஸ், ஃபழ்ல், குஸம் (ரழி) ஆகியோர் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் உடலைப் புரட்ட, உஸாமாவும் ஷுக்ரானும் நீர் ஊற்ற, அலீ (ரழி) குளிப்பாட்டினார்கள். அவ்ஸ் (ரழி) நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை தனது நெஞ்சின் மீது சாய்த்திருந்தார்கள். (இப்னு மாஜா)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் புனித உடல் ஹிபரா போர்வையுடன் இருந்தது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் குடும்பத்தார்கள் அறையை மூடி வைத்திருந்தனர். செவ்வாய் பகல் அன்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஆடையைக் களையாமல் அப்படியே குளிப்பாட்டினர்.
அப்பாஸ், ஃபழ்ல், குஸம் ரளியல்லாஹு அன்ஹு ஆகியோர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உடலைப் புரட்ட, உஸாமாவும் ஷுக்ரானும் நீர் ஊற்ற, அலீ ரளியல்லாஹு அன்ஹு குளிப்பாட்டினார்கள்.
இவ்வாறே இலந்தை இலை கலந்த நீரால் மும்முறை குளிப்பாட்டினார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைக் குளிப்பாட்டுவதற்காக ஸஅதுப்னு கைஸமாவுக்குச் சொந்தமான ஷகர்ஸ் என்ற கிணற்றிலிருந்து நீர் கொண்டு வரப்பட்டது. இந்நீரையே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வாழ்நாளில் அருந்தி வந்தார்கள். (நூல்: தபகாத் இப்னு ஸஅத்)
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை வெள்ளை நிற யமன் நாட்டு பருத்தி ஆடையினால் (கஃபன்) போர்த்தினார்கள். அதில் தைக்கப்பட்ட சட்டையோ தலைப்பாகையோ ஏதுமில்லை. (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
அடக்கம் செய்வது
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை எங்கு அடக்கம் செய்வது என்று கேள்வி எழுந்தது. அப்போது அபூபக்கர் (ரழி) “இறைத்தூதர்களின் உயிர் எங்கு பிரிகிறதோ அங்குதான் அவர்கள் அடக்கம் செய்யப்படுவார்கள்” என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூற, நான் கேட்டிருக்கிறேன் என்றார்கள். உடனடியாக நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) மரணித்த இடத்திலுள்ள விரிப்பை அகற்றி அங்கேயே அபூ தல்ஹா (ரழி) குழி தோண்டி அதில் பக்கவாட்டில் ஒரு குழி அமைத்தார்கள். மக்கள் பத்து பத்து பேர் கொண்ட கூட்டம், கூட்டமாக நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் அறைக்குள் சென்று தனித்தனியாக தொழுதார்கள். முதலில் நெருங்கிய குடும்பத்தார்களும், பின்பு முஹாஜிர்களும், அடுத்து அன்சாரிகளும், தொடர்ந்து சிறுவர்களும், பின்னர் பெண்களும் தொழுதனர். சிலர், “பெண்கள் முதலிலும் அடுத்து சிறுவர்களும் தொழுததாக அறிவிக்கின்றனர். (முவத்தா மாலிக், தபகாத் இப்னு ஸஅத்)
'இரவின் நடுநிசியில் மண்வெட்டிகளின் சப்தத்தை வைத்தே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அடக்கம் செய்யப்பட்டதை அறிந்து கொண்டோம்.' இரவின் கடைசிப் பகுதியில் நல்லடக்கம் நடைபெற்றதாகவும் ஓர் அறிவிப்பு உள்ளது. (நூல்: முஸ்னது அஹ்மது)
நபி (ஸல்) அவர்களது மரணத்தில் நமக்கு சில முக்கியமான அறிவுரைகளிலும் எச்சரிக்கைகளிலும் நம் சமுதாயத்திற்குப் பல்வேறு படிப்பினைகளும் பாடங்களும் உள்ளன.
1- முதலாவதாக நபி (ஸல்) அவர்களைப் போல ஒவ்வொரு முஸ்லிமும் இவ்வுலகில் உள்ள இன்பங்களை விடவும் மறுமையில் உள்ள இன்பங்களுக்கு அதிக ஆர்வம் காட்ட வேண்டும். ஏனெனில் இவ்வுலகில் உள்ள இன்பங்கள் அழிந்து போகக்; கூடியவை. மறுமையின் பேறுகளே நிரந்தரமானவை. ஒரு முஸ்லிம் இவ்வுலகில் நீடித்திருக்கின்ற ஒவ்வொரு நேரமும் மறுமையில் அவனது அந்தஸ்துகiளை உயர்த்துவதற்காகப் பாடுபட வேண்டும். நாளைக்கே அவனுக்கு மரணம் ஏற்பட்டாலும் நபி(ஸல்) அவர்களைப் போல சந்தோசமாக மரணத்தைத் தழுவுவதற்கு தயாராக இருக்க வேண்டும்.
2- அபூபக்கர் (ரலி) அவர்களின் சிறப்பு இங்கு உணர்த்தப்படுகிறது. எல்லா நேரத்திலும் எல்லா வகையிலும் நபி(ஸல்) அவர்களுக்கு உறுதுணையாக நின்றவர் அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்கள். நபி(ஸல்) அவர்கள் மக்காவில் இருக்கும் போது அவர்களின் தலைக்கு விலை பேசப்பட்ட நேரத்தில் நபியவர்கள் தன்னந்தனியாக மதினாவுக்கு ஹிஜ்ரத் செய்ய நேர்ந்தபோது அவர்களுடன் இருந்தவர் அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்கள். ஸவ்ர் குகையில் நபியவர்கள் பதுங்கி இருந்த போதும் அவர்ளுடன் இருந்தவர் அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்களே.
3- 'அல்லாஹ்வின் தூதரே! எங்கள் தாயும் தந்தையும் தங்களுக்கு அர்ப்பணம்!' என்று நபித்தோழர்கள் நபியவர்களிடம் வாயளவில் மட்டும் சொல்லவில்லை. மாறாக அவர்கள் தங்கள் பிள்ளைகள், தங்கள் பெற்றோர், தங்களின் மனைவியர் மற்றும் பிற மக்கள் அனைவரை விடவும், ஏன் தங்கள் உயிரை விடவும அதிகமாக நபி(ஸல்) அவர்களை உண்மையாகவே நேசித்தார்கள். மற்ற எல்லாவற்றையும் விட நபி(ஸல்) அவர்களுக்கு முன்னுரிமை வழங்கினார்கள். இந்த நிலை ஒவ்வொரு முஸ்லிமிடத்திலும் வர வேண்டும். ஏனெனில். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவருக்கு அவருடைய தந்தை, அவருடைய பிள்ளை, ஏனைய மக்கள் அனை வரையும்விட நான் நேசத்திற்குரியவனாக ஆகாதவரை அவர் முஃமினாக மாட்டார். அறிவிப்பவர்: (ரலி), நூல்: முஸ்லிம் 15
4- கப்ருகளில் வழிபாடு நடத்துவது, அவற்றுக்குத் திருவிழா கொண்டாடுவது கப்ருகளில் கட்டடங்களை எழுப்புவது, பள்ளிவாசல்களில் கப்ருகளை ஏற்படுத்துவது, அங்கே நல்லடியார்களின் படங்களை வைப்பது ஆகிய அனைத்தையும் நபி (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள். இது விசயத்தில் சமுதாயம் எச்சரிக்கை யாக இருக்க வேண்டும் என்று தமது இறுதி நேரத்திலும் எச்சரித்துள்ளார்கள். உலகில் நபி(ஸல்) அவர்களின் கப்ருக்கே திருவிழா கிடையாது என்றால் வேறு யாருடைய கப்ருக்குத்தான் திருவிழா கொண்டாட முடியும் என்பதை சமுதாயம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
5- முஸ்லிம்கள் குர்ஆனைக் கற்று அவற்றைத் தங்கள் வீடுகளில் ஓதி வர வேண்டும். முஸ்லிம் வீடுகளில் குர்ஆன் ஓதும் பழக்கம் இருக்க வேண்டும். குர்ஆன் ஓதப்படாத வீடுகள் கப்ருகளுக்குச் சமம். ஏனெனில் கப்ருகளில்தான் குர்ஆன் ஓதப்படக் கூடாது.
6- முஸ்லிம்கள் ஐவேளைத் தொழுகைகளை முறையாகப் பேணி ஜமாஅத்துடன் தொழுது வர வேண்டும். ஏனெனில் ஒரு மனிதன் இறைநிராகரிப்பிலும் இணைவைப்பிலும் இருக்கிறான் என்பதன் அடையாளம் தொழு கையை விடுவதாகும் எனவும் நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (முஸ்லிம் 256)
7- அடிமைகளை நல்ல முறையில் நடத்த வேண்டும் என்பதையும் நபி(ஸல்) அவர்கள் வலியுறுத்தி யுள்ளார்கள். தற்போது அடிமை முறை இல்லாததால் அந்த இடத்தில் வேலைக்காரர்களும், தொழிலாழர்க ளும் உள்ளனர். ஆகவே அவர்களை நல்ல முறையில் நடத்த வேண்டும்.
8- முள் குத்துவது உட்பட ஒரு முஸ்லிமுக்கு ஏற்படும் எந்தத் துன்பமானாலும் அதற்குப் பகரமாக அல்லாஹ் அவனது பாவங்களை மன்னித்து விடுகின்றான்.
9- குர்ஆன் வசனங்களைக் கொண்டு ஓதிப் பார்ப்பது கூடும். அதுவும் நபியவர்கள் கற்றுத் தந்த வசனங் களைக் கொண்டு மட்டும்தான். அல்ஹம்து சூரா, குல்ஹுவல்லாஹு அஹத், குல் அவூது பிரப்பில் பலக், குல் அவூது பிரப்பிந்நாஸ் ஆகிய அத்தியாயங்களைக் கொண்டு ஓதிப் பார்க்க நபி(ஸல்) அனுமதித் துள்ளார்கள். நோயாளி தனக்குத் தானே ஓதிப்பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த அத்தியாயங்களை ஓதத் தெரியாத வருக்கு, அல்லது ஓத முடியாத நிலையில் இருப்பவருக்கு அடுத்தவர் ஓதிப் பார்க்கலாம்.
10- இரகசியத்தைப் பாதுகாப்பது மார்க்கத்தின் நடைமுறையாகும்.
11- நபி(ஸல்) அவர்களின் மகள் ஃபாத்திமா (ரலி) அவர்களின் சிறப்பு இங்கு கூறப்பட்டுள்ளது. ஃபாத்திமா (ரலி) அவர்கள் சொர்க்கத்துப் பெண்களின் தலைவியாக இருப்பார்கள். முஃமினான பெண்களின் தலைவியும் அவர்கள்தான்.
12- நபி(ஸல்) அவர்கள் தமது மகள் ஃபாத்திமா மீது அதிக அன்பும் அக்கரையும் செலுத்தியது போல் நாமும் நம்முடைய பிள்ளைகள் மீது அதிக அன்பும் அக்கரையும் காட்ட வேண்டும். நபியவர்களைப் போல் நாமும் நமது பிள்ளைகளுக்கு பேருபகாரம் செய்ய வேண்டும். அவர்களை நல்லொழுக்கமுள்ள பிள்ளைகளாக வளர்க்க வேண்டும். அவர்களுக்கு நல்லொழுக்கமுள்ள துணைகளைத் தேர்வு செய்து மணமுடித்து வைக்கவும் வேண்டும்.
13- நபியின் குடும்பத்தாரில் நபியவர்களுக்குப் பிறகு முதன் முதலில் மரணமடைந்தவர் ஃபாத்திமா (ரலி) அவர்களே ஆவர்.
இந்தப் பாடங்களை நாம் வாழ்வில் நடைமுறைப்படுத்த நம் அனைவருக்கும் அல்லாஹ் அருள் செய்வானாக
மண்ணில் புதைக்கப்பட்டவர்களில் சிறந்தவரே!
உங்கள் எலும்புகளின் நறுமணத்தால்
மண்ணும் மலைக்குன்றும் மணம் கமழ்கின்றன.
நீங்கள் துயிலுறும் இந்த மண்ணரைக்கு என் உயிர் அர்ப்பணம்!
தன்னடக்கம் இங்குதான் அடங்கியிருக்கிறது
தயாள குணமும் பெருந்தன்மையும் இங்குதான் உறங்குகின்றன. (இப்னு கஸீர்)
எனவே, இந்த உலகைவிட்டும் நம் உயிர் பிறிவதற்கு முன்பாகவே, மறைந்தும் வாழும் மாநபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை பலமுறை ஜியாரத் செய்யும் பாக்கியத்தையும் அவர்களின் ரவ்ளாவிற்கு முன்நின்று அவர்கள்மீது அதிகமதிகம் ஸலவாத்தையும் ஸலாமையும் கூறும் பாக்கியத்தையும். அதைக்கொண்டு அவர்களது அன்பைப்பெற்று மறுமையில் அவர்களது திருக்கரத்தால் ஹவ்லுள் கவ்ஸர் தடாகத்திலிருந்து நீர் அருந்தும் பாக்கியத்தையும் நம் அனைவருக்கும் அல்லாஹ் வழங்கியருள்வானாக! அவர்களோடு சுவர்க்கத்தில் இருக்கும் உயர்ந்த பாக்கியத்தையும் நம்மவர்களுக்கு தந்தருள் புரிவானாக! ஆமீன்!! யாரப்பல் ஆலமீன்.!!!