வாலிபனே உன்னைத்தான் 04-11-22
இஸ்லாமிய உயர்வுக்கு வாலிபர்களின் பங்கு!
மனித வாழ்க்கையின் மூன்று பருவங்களில் வாலிபமே உயர்ந்து நிற்கிறது.
காரணம்
சிறுவயது அறியாமைக்குச்சொந்தமானது, வயோதிகம் இயலாமைக்குச்சொந்தமானது,
இளமையே சாதனைக்குச்சொந்தமானதாகும்.
உலகில் சாதனையாளர்களாக வலம்வருபவர்கள் தங்களின் சாதனைக்கான விதையை வாலிபத்தில் தான் தூவினார்கள்.
இதை அழகாக விவரிக்கிற அல்குர்ஆனின் வசனங்களை சற்று உற்றுநோக்கி கவனியுங்கள்.
الَّذِي خَلَقَكُم مِّن ضَعْفٍ ثُمَّ جَعَلَ مِن بَعْدِ ضَعْفٍ قُوَّةً ثُمَّ جَعَلَ مِن بَعْدِ قُوَّةٍ ضَعْفًا وَشَيْبَةً
يَخْلُقُ مَا يَشَاءُ ۖ وَهُوَ الْعَلِيمُ الْقَدِيرُ
அல்லாஹ் தான் உங்களை (ஆரம்பத்தில்) பலஹீனமான நிலையில் படைக்கிறான்; பலஹீனத்திற்குப் பின்னர், அவனே பலத்தை உண்டாக்குகிறான்; (அந்தப்) பலத்திற்குப் பின், பஹீனத்தையும் நரையையும் அவனே உண்டாக்குகிறான்; தான் நாடியதை அவன் படைக்கிறான் - அவனே எல்லாம் அறிந்தவன் பேராற்றலுடையவன்.
வாலிப பருவம் அல்லாஹ் நமக்கு அருளிய அனைத்து நிஃமத்துக்களும் முழுமையாக செயல்படும் பருவமாகும்.
அதனால் தான் அல்லாஹ் அதை பலமிக்கது என்று வர்ணிக்கிறான்.
வாலிபம் பாக்கியமானது தான்,அதேசமயம் ஆபத்தானது.இந்த பருவத்தில் நிகழும் தீய பழக்கங்களின் விளைவு முழுவாழ்வையும் சங்கடத்தில் ஆழ்த்தி விடும்.அதனால் தான், நபி ஸல் அவர்கள் நாளை மறுமையில் நடைபெறும் விசாரணை குறித்துச்சொல்லும்போது-
لن تزول قدما عبد يوم القيامة حتى يسأل عن أربع: عن عمره فيما أفناه، وعن شبابه فيما
أبلاه، وعن ماله من أين اكتسبه وفيما أنفقه، وعن علمه ماذا عمل به
நாளை மறுமையில் நான்கு கேள்விக்கு பதில் கூறாதவரை ஒரு அடியானின் கால்கள் செயல்படாது.
அவைகள்
1.வாழ்நாளை எப்படி கழித்தாய்? 2.வாலிபத்தை எப்படி அழித்தாய்? 3.பொருளை எப்படி சேர்த்தாய்?எப்படி செலவு செய்தாய்?
4.கற்ற கல்வியைக்கொண்டு என்ன அமல் செய்தாய்?
என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.
இந்த ஹதீஸில் கூறப்பட்ட வாழ்நாளுக்கு கீழ் வாலிபமும் வந்துவிட்டாலும் அல்லாஹ் வாலிபத்தை தனியாக விசாரிப்பான் என்பதிலிருந்து அதன் முக்கியத்துவத்தை புரிந்துகொள்ளலாம்.
இளமையும் உணர்வுகளும்!
ஒரு சமுதாயத்தின் இணையற்ற பாரிய சக்தி அச்சமூதாயத்தின் இளைஞர்களே ஆவார்கள். சமூக மாற்றத்தில் இளைஞர்களின் பங்களிப்பு என்பது மிகவும் இன்றியமையாத அம்சமாகும்.
இஸ்லாமிய வரலாறுகளில் இஸ்லாத்தின் வளர்ச்சிகளுக்கு ஈடு இணையற்ற பங்களிப்பை செய்தவர்களும் இளைஞர்களே ஆவார்கள்.
இன்றைய எமது முஸ்லிம் இளைஞர் யுவதிகளின் நிலைமைகளை உற்று பார்க்கும் பொழுது மிகவும் கவலைக்குறிய ஒரு பாதாள நிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதை காணலாம். நவீன ஊடகங்களின் அபரிமிதமான வளர்ச்சிகளுக்குள் மடிந்து முஸ்லிம் சமூகத்தின் வீழ்ச்சிகளுக்கு துணைபோகக்கூடியதும், உன்னத மார்கத்துக்கு கலங்கம் விளைவிக்க கூடிய ஒரு சமுதாயமாகவே நமது முஸ்லிம் இளைஞர் சமுதாயம் மாறிக் கொண்டிருப்பதை காணலாம்.
யூசுப் கர்ளாவி அவர்கள் கூறும் ஒரு கருத்து இங்கு மிகவும் குறிப்பிட்டு கூறத்தக்கது. ” நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவதை விட மூளைகளும், உணர்ச்சிகளும் ஆக்கிரமிக்கப்படுவது மிகவும் பயங்கரமானது”
கர்ளாவி அவர்கள் குறிப்பிடுவது போன்று எமது சமூகம் இது போன்றதொரு அபாய நிலையிலேயே சிக்கித் தவிக்கின்றது.
ஆபாச இணையத்தளங்கள் ஊடாக உணர்சிகள் தூண்டப்பட்டு ஒரு சமூக கட்டமைப்பை சீரழிக்கக் கூடிய நிலைக்கு இட்டு செல்கின்றது.
சமுக வளைத்தளங்கள் ஊடாக கால, நேரம் வீணாக்கப்படுவது மாத்திரமன்றி காதல், வீடியோ கேம் வழிகேடு என தவரிய பாதையின்பால் இட்டு செல்கின்றது. இது மாத்திரமன்றி நவீன கால ஜாஹிலிய கலாச்சாரங்களால் மூழ்கடிக்கப்பட்டு மூளைகள் மந்தமாக்கப்பட்டுக் கொண்டிருகின்றது. இஸ்லாம் பற்றிய அடிப்படை அறிவு கூட அற்ற, இஸ்லாமிய கடமைகளில் பராமுகமும், இஸ்லாம் அறிவு பற்றிய ஒரு இழிவான எண்ணமும், இஸ்லாமிய கலாச்சாரங்கள் பற்றிய ஒரு கேவலமான பார்வையும் கொண்ட ஒரு இளைஞர் கூட்டமே முஸ்லிம்களுக்கு மத்தியில் உருவாகிக் கொண்டிருப்பதை காணலாம்.
இஸ்லாம் கூறும் இளைஞன்!
(நபியே) இன்னும், உம் இறைவன் வானவர்களை நோக்கி “நிச்சயமாக நான் பூமியில் ஒரு பிரதிநிதியை அமைக்கப் போகிறேன்” (2 : 30)
அல்லாஹ் மனிதனை தனது பிரதிநிதியாக இவ்வுலகில் படைத்து கண்ணியபடுத்தியுள்ளான். அதுமாத்திரமன்றி அனைத்து விடயங்களையும் சீரான வழிகாட்டலுடன் மிகவும் இலகுவாக்கி, இறைவனின் படைப்புகளில் ஒரு சக்திமிக்க படைப்பாக படைத்து ஆட்சி செய்யும் அதிகாரத்தையும் சக்தியையும் மனிதனுக்கே வழங்கியுள்ளான். மனிதன் ஒரு பிரதி நிதி என்ற அடிப்படையில் தனது கடமையை, இறைவன் தனக்கு இட்ட கட்டளையை இறைவனுக்காக செய்யத்தவறியுள்ளான்.
ஒரு நிறுவனத்தின் அல்லது ஒரு நாட்டின் பிரதி நிதியாக நாம் செல்கின்ற பொழுது நமது மேல் அதிகரிகளால் இடப்பட்ட கட்டளைகளை ஆர்வத்துடன், நற்பெயருக்ககாக நிறைவேற்றுவது போன்று அல்லாஹ்வினால் அவனது பிரதிநிதியாக படைக்கப்பட்டு அழகிய முறையில் வழிகாட்டப்பட்ட நாம் எவ்வளவு தூரம் அவனது ஏவல்களை நிறைவேற்றுகின்றோம் என்பது கேள்விக்குறியே?
இளமை பருவத்தின் முக்கியதுவத்தை உணர்த்துவதற்கு பின்வரும் ஹதீஸ்கள் போதுமானவையாகும்.
.
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத அந்நாளில் அல்லாஹ் ஏழு நபர்களுக்கு நிழல் கொடுப்பான்.
1. நீதமாக நடந்து கொண்ட ஆட்சியாளன்
2. அல்லாஹ்வின் வணக்கத்திலேயே வளர்ந்த இளைஞன்
3. தனது உள்ளத்தைப் பள்ளியுடன்; தொடர்பு படுத்திக் கொண்டிருந்த மனிதன்
4. அல்லாஹ்வுக்காக நேசம் கொண்டு அதற்காகவே இணைந்து அதற்காகவே பிரிந்த இரு மனிதர்கள்
5. அந்தஸ்தும் அழகுமுள்ள பெண் தவறு செய்ய அழைத்தபோது நிச்சயமாக நான் அல்லாஹ்வைப் பயப்படுகிறேன் எனக் கூறிய மனிதன்
6. வலது கை கொடுப்பதை இடது கை அறியாவண்ணம் தர்மம் செய்யும் மனிதன்
7. தனித்திருந்து அல்லாஹ்வை நினைவு கூர்ந்து கண்ணீர் வடித்த மனிதன்.
இது ஆண்களுக்கு மட்டுமல்ல. பெண்களுக்கும் தான். அவர்களும் தம் செயல்கள் குறித்து விசாரிக்கப்படுவார்கள். அவர்களின் செயல்கள் நல்லவையாகயிருந்தால் நன்மையும் தீயவையாக இருந்தால் தீமையும் உண்டு. கேள்வி கணக்கும் கூலியும் தண்டனையும் ஆண்களுக்கு இருப்பது போலவே பெண்களுக்கும் உண்டு.
ஒரு மனிதனின் வாழ்க்கைக் கட்டிடத்தில் வாலிபப் பருவம் சிக்கல்களும் போராட்டங்களும் நிறைந்தது. அதில் அவதானமாகவும் நிதானமாகவும் செயற்படுவது நமது கடமையாகும். விட்டில் பூச்சிகள் விளக்கின் ஒளியை பூவாக நினைத்து ஏமாந்து அதில் தமது உயிரை மாய்த்துக் கொள்வது போல சில இளைஞர்கள் தமது வாலிபத்தை அழித்துக் கொள்கின்றனர். தமது விரல்களாலே தமது கண்களை குத்திக் கொள்கின்றனர்.
இஸ்லாத்தின் வரலாறுகளில் இளைஞர்களின் பங்களிப்பு!
இஸ்லாத்துக்கு அன்றைய முஸ்லிம் இளைஞர்கள் ஆற்றிய பணியும் மகத்தான சேவைகளின் துளிகளுமே இன்று பரந்த விரிந்து கிளைவிட்டு காணப்படும் முஸ்லிம் சமூகம்.
சிந்து சமவெளியை
முஹம்மத் பின் காஸிம் (ரஹ்)அவர்கள் கைப்பற்றிய போது அவர்களிம் வயது (17)
பைஸாந்திய சாம்ராஜ்ஜியத்தை முஹம்மத் பின் பாதிஹ்(ரஹ்)
அவர்கள் கைப்பற்றிய பொழுது அவர்களின் வயது (23)
ஸ்பெயினை
தாரிக் பின் ஜியாத் (ரஹ்)அவர்கள் கைப்பற்றிய பொழுது அவர்களின் வயது (21)
இது போன்ற வீரதீர செயல்களை செய்து இஸ்லாத்தின் வளர்சிக்கு தூண்களாக இருந்த இளைஞர்கள் இன்று எமது சமூகத்தில் எங்கே?
நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு இஸ்லாத்தை போதிப்பதற்காக அனுப்பப்பட்ட ஸஹாபி முஸ் அப் பின் உமைர் (ரழி)அவர்கள் ஒரு இளைஞர். அபிசீனியாவுக்கு முதன் முதலில் ஹிஜ்ரத் செய்த ஆண்களும், பெண்களும் இளைஞர்களும், யுவதிகளுமே ஆவார்கள்.
யெமனுக்கு நீதிபதியாகவும், விரிவுறையாளராகவும் அனுப்பட்ட முஆத் பின் ஜபல் (ரழி)அவர்கள் ஒரு இளைஞர்.
அபூபக்கர் (ரழி) அவர்களது காலத்தில்
குர் ஆனை ஒன்றுதிரட்டும் பணியில் பங்கு கொண்டர்வகளுள் பலர் இளைஞர்களே ஆவார்கள்.
ஸூரா கஹஃப் குறிப்பிடப்படும் இளைஞர்களின் வரலாறு என பல்லாயிரம் படிப்பினைகளை கொண்டுள்ள அந்த இளைஞர்கள் எங்கே?
எமது இன்றைய முன்மாதிரி இளைஞர்கள் எங்கே?
மது, மாது, அனாச்சாரம், அட்டூழியம், என ஜாஹிலியத்தின் உச்ச நிலையில் அந்த குறைஷிக் குலத்தில் உத்தமராக வாழ்ந்த நபி முஹம்மத் (ஸல்) அவர்களும் இளைஞர்களே.
இஸ்லாம் மார்கத்தை வளரப்பதற்கு தமது உயிர்களை தியாகம் செய்த, பல இன்னோரன்ன துன்பங்களை, இன்னல்களை அனுபவித்த, நபி (ஸல்) அவர்கள் காட்டிய ஒழுக்க முன்மாதிரிகளை அணுவளவும் பிசகாது வாழ்ந்த ஸஹாப்பக்களும் இளைஞர்களே ஆவார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் அவர்களை ஆரம்பத்தில் ஆதரித்தவர்கள் அனைவரும் இளைஞர்கள் நிராகரித்தவர்களில் அதிகமானோர் முதியவர்கள் என்றும்.
இது போன்று ஆயிரம், ஆயிரம் முன்மாதிரிகளை கொண்டுள்ள இன்றைய எமது சமூகத்தின் முன்மாதிரிகள் யார்?
வாலிபம் ஒருவகையான பைத்தியம்” என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள். இது பலம் குறைந்த ஹதீஸ்தான் என்றாலும் அதன் கருத்தை நிதர்சனமாக நாம் பார்க்கிறோம்.
பெண் மீது பைத்தியம், பொன்மீது பைத்தியம், ஆடையின் மீது பைத்தியம், மொபைல் மீது பைத்தியம், பைக், கார் மீது பைத்தியம் இயக்கவெறி பைத்தியம், என இளைஞர்களை பலவகையிலும் பாடாய் படுத்திக்கொண்டிருக்கிறது. இந்த வாலிபம்
v அறிவை முழுவதுமாக அடமானம் வைத்து, மூடப்பழக்க வழக்கங்களில் மூழ்கியவர்கள் ஒருபுறமென்றால், அறிவுக்கே அடிமையாகிப்போனவர்கள் இன்னொரு புறம்.
v குர்ஆன், ஹதீஸ் கூறும் உபதேசங்களை உள்ளபடி புரிந்து கொள்ளாமல் உணர்ச்சிவசப்படுபவர்கள் ஒருபுறமென்றால், உண்மையற்ற உளரல்களையும் வேதவாக்காக உயர்த்திப்பிடிப்போர் மறுபுறம்.
v கூத்தாடிகளின் அசைவுக்கேற்ப ஆடுபவர்கள் ஒருபுறமென்றால், உலமாக்களையும் உமராக்களையும் உதறி தள்ளி தடம் புரண்டோர் இன்னொரு புறம்.
பெற்றோர்கள், பெரியவர்கள்[?] சொன்னால், ஹராமையும் ஹலாலாக்க காத்திருக்கும் காவாலி கூட்டம் ஒருபுறமென்றால், என் இயக்கத்தலைவன் ஒருவனிருக்க எவன் சொல்லையும் ஏற்கமாட்டேன் என்று அடம்பிடிக்கும் அடாவடிக்கூட்டம் மறுபுறம்.
இத்தகைய காலச்சூழலில் வாழும் நம் இளைஞர்களை இஸ்லாமிய இலட்சிய வாதிகளாக உருவாக்குவதும் அவர்களால் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் உயர்வு ஏற்படும் விதம் வழிநடத்துவதும் காலத்தின் அவசரத்தேவை.
கல்வி, அநீதிக்கெதிரான போராட்டம், அழைப்ப்புப்பணி, சமூக சேவை என்று மனித வாழ்வின் அனைத்து துறைகளிலும் இளம் வயதில் பங்காற்றிய பெருமக்களை முன்மாதிரியாக கொள்ள வேண்டிய முஸ்லிம் இளைஞர்கள் இன்று நடந்து கொள்ளும் விதம் கவலையளிக்கிறது.
நடிகர்கள், நடிகைகள், விளையாட்டு வீரர்கள், செல்வந்தர்கள், அரசியல்வாதிகள் என இவர்களின் பின்னால் குடைபிடித்துத் திரியும் இளைஞர்கள் இது போன்று இஸ்லாம் கூறும், இஸ்லாமிய வரலாறுகளில் கண்ட உதராண புருஷர்களாக மாறுவது எப்போது
வாழ்நாளில் வாலிபம் ஒரு அமானிதம்.இனிக்கும் இளமையை இன்பமாக மட்டுமே கழித்துவிட்டவர்கள் காலம் கடந்தேனும் வருந்துவார்கள். எதையும் செய்யும் துடிப்புள்ள அப்பருவத்தை பயனுள்ளதாக மாற்றிக்கொண்டவர்களே மிகச்சிறந்த புத்திசாலிகள்.
வாலிபப் பருவம் அபார சக்திகளைக் கொண்ட வீரதீரமிக்கதொரு பருவம். உருவாக்கங்களைச் செய்கின்ற பருவம்.
அன்று சஹாபக்விகள் தாம் ஏற்றுக் கொண்ட இஸ்லாமியக் கொள்கைக்காக தண்டனைகளையும் துன்பங்களையும் அனுபவித்த நேரம் அவர்கள்
வளர்ந்து வரும் பருவ
வயதை உடைய இளைஞர்களாகவே இருந்தனர்.
சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அலீ (ரலி) அவர்கள் கைபர் போரின்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (போருக்குச்) செல்லாமல் பின்தங்கி விட்டிருந்தார்கள்.
அவர்களுக்குக் கண் வலி ஏற்பட்டிருந்தது. அப்போது அவர்கள் ”நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (போருக்குச்) செல்லாமல் பின்தங்கிவிட்டேனே!” என்று (வருத்தத்துடன்) கூறிவிட்டுப் புறப்பட்டுச் சென்று, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் சேர்ந்துகொண்டார்கள்.
எந்த நாளின் காலைப் பொழுதில் கைபரை அல்லாஹ் வெற்றிகொள்ளச்செய்தானோ அதற்கு முந்தைய மாலை நேரம் வந்தபோது,
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ”நாளை ”(முஸ்லிம்களின்) கொடியை ஒரு மனிதரிடம் தரப்போகிறேன்”; அல்லது ”ஒரு மனிதர் (முஸ்லிம்களின்) கொடியைப் பிடித்திருப்பார்”. ”அவரை அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நேசிக்கிறார்கள்”; அல்லது ”அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் அவர் நேசிக்கிறார்”. அவருக்கு அல்லாஹ் வெற்றியளிப்பான்” என்று கூறினார்கள்.
நாங்கள் எதிர்பார்க்காத நிலையில் அலீ (ரலி) அவர்களும் (வந்து) எங்களுடன் இருந்தார்கள். அப்போது மக்கள், ”இதோ அலீ (வந்துவிட்டார்)” என்று சொன்னார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்தக் கொடியை அலீ (ரலி) அவர்களிடமே கொடுத்தார்கள். அவர்களுக்கே அல்லாஹ் வெற்றியளித்தான்.
ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 44. நபித்தோழர்களின் சிறப்புகள் 4781.
இன்று நமது இளைஞர்கள் விளையாட்டுக்காகவும், வீண்களியாட்டங்களுக்காகவும், பொழுது போக்குகளுக்காகவும் போட்டியிட்டுக் கொண்டிருக்கின்றானர்.
முஸ்லிம் இளைஞர்களுக்கு முன் இருக்கும் அச்சுறுத்தல்களும் சவால்களும்
1. போதைப் பொருட்களுக்கு அடிமையாகுதல்:-
இன்றைய இளைஞர்களில் அதிகமானவர்கள் சூழல் தாக்கத்தின் காரணமாக விஸ்கி, பியர், ஹெரோயின், கஞ்சா, அபின், பீடா, பான்பராக் போன்ற போதைப் பொருட்களை உபயோகிக்க பழகுகின்றனர்..
இன்று புதிய புதிய பெயர்களில் போதைப் பொருட்கள், விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன. இவற்றிற்கு இளைஞர்கள் அடிமையாகி தமது நிரந்தர இருப்பிடமாக நரகத்தை தெரிவு செய்துகொள்கின்றனர்.
2. சம வயதுக் குழுக்களின் தாக்கம்:-
عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «الرَّجُلُ عَلَى دِينِ خَلِيلِهِ، فَلْيَنْظُرْ أَحَدُكُمْ مَنْ يُخَالِلُ» سنن أبي داود
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் 'ஒருவர் தனது நண்பனின் மார்க்கத்தில் இருப்பார். எனவே உங்களில் ஒருவர் தன் நட்பு கொள்கின்றவரை நன்றாக அவதானிக்கட்டும்.' அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா(ரலி) (நூல்: அபூதாவூது).
ஒருவர் தான் யாருடன் பழகுகின்றேன் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். தீய நண்பர்களின் தூண்டுதலே எமது நெறிபிறழ்வுக்குக் காரணமாக அமைகின்றது. இதனை நபியவர்கள் விளக்கி பின்வருமாறு கூறினார்கள்.
عَنْ أَبِيهِ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَثَلُ الجَلِيسِ الصَّالِحِ وَالجَلِيسِ السَّوْءِ، كَمَثَلِ صَاحِبِ المِسْكِ وَكِيرِ الحَدَّادِ، لاَ يَعْدَمُكَ مِنْ صَاحِبِ المِسْكِ إِمَّا تَشْتَرِيهِ، أَوْ تَجِدُ رِيحَهُ، وَكِيرُ الحَدَّادِ يُحْرِقُ بَدَنَكَ، أَوْ ثَوْبَكَ، أَوْ تَجِدُ مِنْهُ رِيحًا خَبِيثَةً» صحيح البخاري
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"நல்ல நண்பனுக்கும் தீய நண்பனுக்கும் உதாரணம் கஸ்தூரி வைத்திருப்பவரும் கொல்லனின் உலையுமாகும்! கஸ்தூரி வைத்திருப்பவரிடமிருந்து இரண்டிலொன்று உமக்கு உறுதியாக கிடைக்கும். (1) நீர் அதை விலைக்கு வாங்கலாம்: (2) அல்லது அதன் நறுமணத்தையாவது பெறலாம்! கொல்லனின் உலை உம்முடைய வீட்டையோ உம்முடைய ஆடையையோ எரித்து விடும்; அல்லது அவனிடமிருந்து கெட்ட வாடையை நீர் பெற்றுக் கொள்வீர்!"
என அபூ மூஸா(ரலி) அறிவித்தார். நூல்: ஸஹீஹுல் புஹாரி 2101
3. கலாச்சார சீரழிவிற்கு விதை தூவும் திரைப்படங்களைப் பார்த்தல்:-
இன்று அதிகமான இளைஞர்களின் நேரங்கள் சினிமாக்களினால் வீணடிக்கப்படுகின்றன. ஓய்வு என்பது அல்லாஹ் எமக்கு அருளிய அருளாகும். அதனை இம்மைக்கும் மறுமைக்கும் பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும். இன்றைய ஆய்வுகளின்படி ஒரு மாணவன் வாரத்தின் பாடசாலை நாட்களாகிய திங்கள் முதல் வெள்ளி வரை மட்டும் 36 மணிகள் தொலைக்காட்சியில் செலவழிப்பதாகவும், வார இறுதி நாட்களான சனி, ஞாயிறுகளில் இது இரு மடங்காக அதிகரிப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
மேலும் சினிமாக்களை பார்ப்பதுடன் நின்றுவிடாமல் அங்கு வரும் நடிகர்கள், நடிகைகள் போன்று நடை, உடை, பாவனைகளை அமைத்துக் கொள்வதும் எமது ஈமானையும் இஸ்ஸலாமிய பற்றுதலையும் பாதிக்கிறது என்பது பேரபத்தான ஒன்றல்லவா?
4. பாடல்களையும் இசைகளையும் செவிமெடுத்தல்:-
பெரும்பாலான இளைஞர்கள் தமது கைகளில் உள்ள கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்தி விரசமான பாடல்களை வீதி ஓரங்களிலும், தூக்கத்தின் முன்னரும் கேட்டு மகிழ்கின்றனர். இவை உண்மையில் எமது ஈமானை பறித்துவிடும். எவ்வாறு பாலைவன மணலில் நீரை ஊற்றுகின்ற போது மிக வேகமாக உறிஞ்சி எடுப்பது போன்று இசையானது எமது ஈமானை உறிஞ்சி எடுத்துவிடும்.
5. கையடக்க தொலைபேசிகளை தவறாக பயன்படுத்தல்:-
இன்று கையடக்க தொலைபேசிகள் அவசியமான தொடர்புக்கு உதவியாக இருக்கும் அதே நேரத்தில் பல இளைஞர்களின் ஈமானிய உணர்வை அது சீரழித்துக் கொண்டிருக்கின்றது. அதில் திரைப்படங்களை பார்த்து ரசித்து கொண்டிருக்கின்றனர். ஷைத்தானின் ஓசைகள் இளைஞர்களின் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.
வீதி ஓரங்களில் சென்று கொண்டிருக்கின்ற வயது பெண்களை படம் எடுத்துக் கொள்கின்றனர். பெண்கள் இருக்கின்ற வீடுகளுக்கு அழைப்புகளை கொடுத்து தொல்லைப்படுத்துகின்றனர். இவை அனைத்தும் நரகத்தின் வேதனைக்கே எம்மைக் கொண்டு சேர்க்கும் என்பதை மறந்துவிடக் கூடாது.
6. இணையத்தளங்களுடன் தொடர்பு கொண்டு மோசமான விஷயங்களை கண்டுகளித்தல்:-
இணையத்தளங்களை தவறாக பயன்படுத்தி பாலியல் உணர்வுகளை தூண்டக் கூடிய படங்கள், காட்சிகளை பார்த்து ரசிக்கின்றனர். இதன் மூலமும் அல்லாஹ்வுடனான எமது நெருக்கம் துண்டிக்கப்படுகின்றது.
அல்லாஹ் ஏவியவற்றை எடுத்து நடப்பதுடன், விலக்கியவற்றை தவிர்ந்து வாழ வேண்டும். அதற்காக இஸ்லாம் மார்க்கம் பற்றிய தெளிவை பெற்று, அல்லாஹ்வினால் அமானிதமாக அருளப்பட்ட இவ்வுலக வாழ்கையை, இளமை பருவத்தை அல்லாஹ், இரசூலின் வழிகாட்டலுக்கேற்ப பெரியவர்கள் சொல் கேட்டு இவ்வுலகிலும் மறுஉலகிலும் வெற்றிபெறுவதற்க்கு முயற்சிக்க வேண்டும் .
பொதுவாகவே அறிவுரை கூறுவதையும் கண்டிப்பு செய்வதையும் இன்றைய இளைய தலைமுறை விரும்புவதே இல்லை. ஆனால் உளி படாத கற்கள் சிற்பமாகுவதில்லை. பட்டை தீட்டாத வைரங்கள் ஜொலிப்பதில்லை. என்பதை நினைவில் நிறுத்துவோம்!
இஸ்லாமிய தஃவாவின் ஆரம்ப காலப்பொழுதில் இருந்த இளம் இளைஞர்கள் போர்களில் கலந்து கொண்டு தங்களது இன்னுயிர்களை இஸ்லாத்தின் மறுமலர்ச்சிக்காக அர்பணித்து விடுவதற்காகப் போட்டியிட்டுக் கொண்டிருந்தனர்.
என் இஸ்லாமிய சகோதரனே! போர்களில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டதற்காக கண்ணீர் வடித்த இளைஞர்களைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கின்றீர்களா?
அப்போது அவர்கள் பருவ வயதைக் கூட அடைந்திருக்கவில்லை?
முஆத் இப்னு அல் ஹாரிஸ் (ரலி) அவரது சகோதரர் முஅவ்வத் (ரலி) ஆகிய இருவரும் மண் விளையாடும் சிறுபருவம்.
இவர்கள் அன்ஸாரி இளைஞர்கள். இவர்கள் மிகப் பெரும் பத்ர் யுத்தத்தில் கலந்து கொணடவர்கள்.
இரு இளைஞர்களும் யுத்தம் ஆரம்பிப்பதற்கு முன் இப்னு அவ்ப் (ரலி) அவர்களிடம் சென்று
அபூ ஜஹ்லை நீங்கள் அறிவீர்களா? அவன் தூதர் (ஸல்) அவர்களை துன்புறுத்துவதாக நாம் அறிகிறோம். அவனை எமக்குக் காட்டித் தாருங்கள் என்றார்கள். அவர் அவர்களுக்கு அவனை காட்டினார்கள்.
பின் யுத்தம் உச்சகட்டத்தை அடைகின்ற போது அவ்விரு இளைஞர்களும் அந்த அல்லாஹ்வின் விரோதியின் மீது பாய்கின்றார்கள். அவன் அப்படியே கீழே சாய்ந்து விடுகின்றான். உடன் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் அவனை தீர்த்துக் கட்டிவிடுகின்றார்கள். இவ்விரு இளவயது இளைஞர்களினுடைய
இவ் உயர்ந்த துணிவு, அப்போது இருந்த இணைவைப்பாளர்களது படைத்தளபதியை விடவும் அவர்களது துணிவை விடவும் குறைத்து மதிப்பிடுவதற்கில்லை.
உஹத் யுத்தத்தின் போது சிறுவயது என்ற காரணத்தினால் ரஸுல் (ஸல்) அவர்கள் யுத்தத்தில் கலந்து கொள்ள அனுமதி வழங்காது திருப்பி அனுப்பியவர்கள் ஏராளம். அவர்களில் ஒருவர் தான் அப்துல்லா இப்னு உமர் (ரலி) அவர்கள். இவர் உஹத் யுத்தத்தில் வைத்து திருப்பி அனுப்பப்பட்டார். ஹந்தக் யுத்தத்தில் கலந்து கொள்வதற்கு ரஸூல் (ஸல்) அவர்கள் அனுமதி வழங்கினார்கள்.
அவர்களில் மற்றும் ஒருவர் தான் உமைர் இப்னு அபீவக்காஸ். இவர் ஸஃத் இப்னு அபீ வக்காஸுடைய சகோதரர். ஸஃது (ரலி) அவர்கள் உமைர் (ரலி) அவர்களைப் பற்றி இவ்வாறு கூறுகின்றார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உமைர் (ரலி) அவர்களைக் கண்டு பத்ர் யுத்தத்தில் கலந்து கொள்வதைத் தடுக்காமல் இருப்தற்காக ஏனையவர்களுக்குப் பின்னால் மறைந்து கொண்டிருந்தார்.
இதனைக் கண்ட நான் என் அருமைச் சகோதரனே! நீ ஏன் இவ்வாறு மறைந்து கொண்டிருக்கின்றாய்? எனக் கேட்டேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னைக் கண்டால் நான் சிறியவன் எனக் கூறி என்னை யுத்தகளத்துக்கு வராமல் தடுத்து விடுவார்களோ! என நான் பயப்படுகின்றேன். ஆனால் நானோ யுத்தத்தில் கலந்து கொண்டு அல்லாஹ் எனக்கு ஷஹாதத் (வீர மரணத்தை) தர வேண்டும் என விரும்புகின்றேன் என்றார்.
இதோ ஹன்ழலா (ரலி) அவர்கள், இவரைப் பற்றி இன்றைய இளைஞர்கள் என்ன கூறுகின்றார்கள்?
திருமண இரவன்று தன் மனைவியுடன் இருந்த அவர் போருக்காக அழைப்பு விடுக்கப்பட்ட உடனேயே மனைவியை உதறித்தள்ளி விட்டு அதற்கு விடையளிக்கின்றார்கள். அந்த உஹத் யுத்தத்தில் அவர் ஷஹீதாக்கப்படுகின்றார்கள். பின்பு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூடி இருந்த ஸஹாபாக்களைப் பார்த்து உங்களது தோழர் ஹன்ழலாவை மலக்குகள் குளிப்பாட்டிக் கொண்டிருக்கின்றார்கள். அவரைப் பற்றி அவரது மனைவியிடம் வினவப்பட்ட போது, யுத்தத்துக்கான அழைப்பு விடுக்கப்பட்டதை கேட்ட உடனேயே குளிப்பு கடமையாகி இருக்கும் நிலையிலேயே அவர் யுத்த களத்தை நோக்கிச் சென்றார் என விடையளித்தார். இதனால் தான் மலக்குகள் குளிப்பாட்டினார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு இஸ்ஹாக் (ரஹ்) அறிவித்தார்கள் .
இளம் வாலிபத் தளபதிகளில் ஒருவர் தான் உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்கள்.
ரஸுல் (ஸல்) அவர்கள் மரணிக்கும் போது உஸாமா (ரலி) வுக்கு வயது இருபது. அப்போது அவருக்கு பதினெட்டு என்றும் சிலர் குறிப்பிடுகின்றனர். ரஸுல் (ஸல்) அவர்கள் உஸாமாவை ஒரு பெரும் படைக்கு அமீராக நியமிக்கின்றார்கள். ஆனால் அப்படை புறப்படு முன்பே ரஸுல் (ஸல்) அவர்கள் மரணித்து விடுகின்றார்கள். எனவே உடன் அபுபக்கர் (ரலி) அவர்கள் ஷாம் தேசத்தில் ரோமர்களுடன் போராடுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அப்படையை உஸாமாவின் தலைமையின் கீழ் அனுப்பி வைக்கின்றார்கள். அதில் உமர் இப்னு கத்தாப் (ரலி) அவர்களும் இருக்கின்றார்கள். அவர் உஸாமாவை சந்திக்கும் பொழுதெல்லாம் அமீர் அவர்களே! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்! நீங்கள் எனக்கு அமீராக இருக்கும் நிலையில் ரஸுல் (ஸல்) அவர்கள் மரணித்து விட்டார்கள் என்று கூறாமல் சந்திப்பது கிடையாது. அப்படை ஷாம் தேசத்தை அடைந்த போது ஒரு பெரும் மேகக் கூட்டம் அவர்களை அப்படியே மறைத்துக் கொள்கின்றது. இது எதிரிகளின் கண்களில் படாமல் அவர்களது பாதுகாப்பு அரண்களை உடைத்து அவர்களைத் தாக்குவதற்கு வாய்ப்பாக அமைந்தது என உர்வத் இப்னு அஸ் ஸுபைர் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்.
அறிவியல் துறையில் சாதித்தவர்கள்!
அறிவியல் துறையிலும் சாதனைகளைப் படைத்துள்ளார்கள். இவர்கள் அறிவின் தேர்ச்சியில் உச்சகட்டத்தை அடைந்திருந்தனர். இவ்வாறு தேர்ச்சி பெற்ற நபித்தோழர்களில் ஒருவர் தான் அப்துல்லா இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள்.
அல் குர்ஆனுக்கு விளக்கமளிப்பதில் சிறந்து விளங்கிய ஒருவர் தான் அப்துல்லா இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள். நபித்தோழர்கள் அவரை அல் ஹப்ரு (அறிஞர்) என்ற பெயர் கொண்டு அழைத்தனர்.
இவர்கள் நபி (ஸல்) அவர்களது ஹதீஸ்களைத் தேடிப்பிடிக்கக் கூடியவராகக் காணப்பட்டார்.
நபி(ஸல்) அவர்கள் மரணிக்கும் போது இவர்களது வயது பதிமூன்று,
அவர்கள் தன்னைப் பற்றி ஒரு முறை இவ்வாறு கூறியுள்ளார்.
எங்கேனும் ஒரு மனிதரிடத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது ஒரு ஹதீஸ் இருக்கும் செய்தி எனக்குக் கிடைத்து விட்டால் உடனே அவரைத் தேடி அவரது இடத்திற்குச் செல்வேன். அவர் வரும் வரைக்கும் அவரது வீட்டு வாசலில் எனது போர்வையைத் தலையணையாக வைத்து படுத்துக் கொள்வேன். வீசுகின்ற காற்று மண்ணை வாரி என் மீது இறைத்து விடும். அவர் வெளியே வந்து (நான் இருக்கும் நிலையில்) என்னைக் காண்பார். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்களது சிறிய தந்தையின் மகனே! நீங்கள் எதற்காக இங்கு வந்தீர்கள்?
நீங்கள் எனக்குத் தூது அனுப்பி இருக்கக் கூடாதா? நான் உங்களிடம் வந்திருப்பேனே! எனக் கூறுவார். அதற்கு இல்லை! நான் தான் உங்களிடம் வரவேண்டும் என்று கூறி அவரிடம் ஹதீஸைக் கேட்பேன் என்கிறார்கள், அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள்.
இமாம்களின் இளமை கால சேவைகள்!
இமாம் அஹ்மத் (ரஹ்) அவர்கள் தனது பதினாறாவது வயதிலேயே ஹதீஸ்களைத் தேடுவதில் மிகவும் திறமை வாய்ந்தவர்களாகக் காணப்பட்டார்கள். அவர் அனாதையாக வளர்ந்தார். அவரை அவரது தாய் பராமரித்து வந்தார். அவரது அறிவுத் திறமை பல பகுதிகளைலும் பிரபல்யமாகியது.
அவர்கள் தனது பதினைந்தாவது வயதிலேயே அறிவு தேட ஆரம்பித்தார் என்றும் கூறப்படுகின்றது.
அவர்கள் தனது இருபதாவது வயதிலேயே காலநடையாக வந்து தனது ஹஜ் கடமையை நிறைவேற்றினார். ஹஜ் கடமையை நிறைவேற்ற வரும் போது அவர்களிடம் ஒரு பையைத் தவிர வேறு எதுவும் இருக்கவில்லை. அதில் அவர்களின் புத்தகங்களே இருந்தன.
தான் களைப்புறும் போது அப்பையை ஒரு கல்லின்; மீது வைத்து அதில் தனது தலையை வைத்து ஓய்வெடுப்பார்.
இந்த உம்மத்தின் மற்றுமோர் அறிஞர் தான் இமாம் புஹாரி (ரஹ்) அவர்கள். அவரையும் அவரது தாயே வளர்த்தார்கள்.
அவர்களது பதினாறு வயதிலேயே பிரபல்யமான இஸ்லாமிய நூற்களைப் படிக்க ஆரம்பித்தார்கள். ஸஹாபாக்கள், தாபியீன்கள் பற்றிய நூற்களையும் அவர்களது கருத்துக்கள் பொதிந்த நூற்களையும் அவர்கள் தனது பதினெட்டாவது வயதில் எழுதினார். அவர்கள் இரவில் நபி (ஸல்) அவர்களது மண்ணறைக்குப் பக்கத்தில் இருந்து கொண்டு நிலா ஒளியில் ஹத்யுஸ் ஸாரி முகத்திமது பத்ஹுல் பாரி எனும் வரலாற்று நூலை எழுதினார்கள்.
இத்தகைய அறிஞர்கள் தாம் படித்த தமது ஆசிரியர்களுக்கு முன்னால் மிகவும் தாழ்மையுடனேயே நடந்து கொண்டார்கள்.
இமாம் அஹ்மத் (ரஹ்) அவர்கள் இமாம் ஷாபிஈ (ரஹ்) அவாகளிடம் சுன்னாவையும் வேறு சில அறிவுரைகளையும் கற்றுக் கொண்டார்கள்.
பின்பு அவர் எகிப்துக்கு வந்து அங்கு மரணமடைந்தார்கள். நான் முப்பது வருடங்களாக இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்களுக்காகப் பிரார்த்திக்காமல், அவருக்காக பாவமன்னிப்புக் கேட்காமல் நித்திரை செய்தது கிடையாது என இமாம் அஹ்மத் (ரஹ்) அவர்கள் கூறிக் கொண்டிருந்தார்கள்.
அவரது மகன் அப்துல்லாஹ்விடம் இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்கள் எப்படிப்பட்ட ஒரு மனிதராக இருந்தார்கள் என்று கேட்கப்பட்ட போது, என் அருமை மகனே, ஷாபிஈ (ரஹ்) அவர்கள் உலகுக்கு ஒரு சூரியனாகவும், உடலுக்கு ஆரோக்கியமாகவும் இருந்தார்கள், பின் வந்தவர்களில் எவரும் இந்த இரண்டிற்கும் இருக்கின்றார்களா?, என்று கூறினார்கள்.
எனது அன்பின் வாலிபச் சகோதரர்களே! இவர்கள் யாவரும் உங்களுக்குரிய முன்மாதிரிகள்.
முன்சென்ற சமூகத்தின் முன்னேற்றகரமான இளைஞர்கள்,
அவர்கள் வீண் விளையாட்டுக்களிலும், கேளிக்கைகளிலும் மூழ்கியிருந்த இளைஞர் பரம்பரையன்று.
நாம் இந்த உதாரணங்களை இன்றைய இளைஞர்களான உங்களுக்கு முன்னால் வைக்கின்றோம்.
ஏனெனில் இதில் உங்களுக்கு அழகிய முன்மாதிரிகள் இருக்கின்றன. அதனை முன்மாதிரியாகக் கொள்ளும் ஒவ்வொரு இளைஞனும் அவர்களைப் போன்று உயர்ந்த இடத்தை அல்லாஹ்வின் உதவியுடன் இன்றும் என்றும் அடையலாம்.
இன்னும் அல்லாஹ்வின் நிழலை, அன்று வேறு எந்த ஒரு நிழலும் இல்லாத அந்த மறுமை நாளில் அல்லாஹ் நிழல் கொடுக்கின்ற ஏழு பிரிவினரில் ஒருவராக நீங்களும் ஆகலாம்.
அல்லாஹ் கூறுகிறான்..
நம்பிக்கையாளர்களுக்கு அவர்களின் உள்ளங்கள் அல்லாஹ்வின் நினைவினால் உருகுவதற்கும்,
அவன் இறக்கி வைத்த சத்தியத்தின் முன் பணிவதற்கும் நேரம் இன்னும் வரவில்லையா?
மேலும், முன்னர் வேதம் வழங்கப்பட்டவர்களைப் போன்று அவர்கள் ஆகிவிட வேண்டாம். (பிறகு) நீண்ட காலம் அவர்கள் மீது உருண்டு ஓடி விட்ட பொழுது, அவர்களின் இருதயங்கள் இறுகிப் போய் விட்டன. (இன்று) அவர்களில் பெரும்பாலோர் தீயவர்களாகி விட்டிருக்கின்றனர்.
(அல் குர்ஆன்-57:16).
ஆகவே அன்பான இஸ்லாமிய கவலர்களான இளைங்கர்களே இனி வரும் காலத்திலாவது .கட்சிகளை
இயக்கங்களை கடந்து ஈமானிய உணர்வுடன் ஒற்றுமையுடனும் வாழ முயற்ச்சி செய்வே ாமாக....ஆமீன்
வஸ்ஸலாம்