மனிதர்களில் சிறந்தவர்கள் யார்? 18-11-2022
FRIDAY, NOVEMBER 18, 2022
மனிதர்களில் சிறந்தவர் யார் ?
வருடந்தோறும் நவம்பர் 19 ம் தேதி INTERNATIONAL MENS DAY தேசிய ஆண்கள் தினம் அனுசரிக்கப்படுகிறது.அல்லாஹுத்தஆலா மனிதர் களில் ஆண் பெண் என்ற இரு பாலினத்தைப் படைத்திருக்கிறான். பேச்சுக்களில் தன்மைகளில் நடைமுறைகளில் பழக்க வழக்கங்களில் ஆண்,பெண் இருவருக்குமிடையில் நிறைய வித்தியாசங்கள் உண்டு. ஒரு சில மார்க்க சட்ட திட்டங்களில் கூட இருவருக்கும் வித்தியாசங்கள் இருப்பதை நாம் காணலாம். ஆண்,பெண் இரு பாலர்களில் பொதுவாக ஆண்கள் என்றைக்கும் தங்களை உயர்வாகவே நினைக்கும் குணம் கொண்டவர்கள். பெண்களை விட தாங்கள் தான் சிறந்தவர்கள் என்று நினைத்துக் கொள்வதில் அனைத்து ஆண்களும் ஒன்றாகத்தான் இருக்கிறார்கள். ஆனால் உண்மையும் யதார்த்தமும் என்னவென்றால் பல விஷயங்களில் ஆண்களை விட பெண்கள் தான் சிறந்தவர்களாக இருக்கிறார்கள்.
1 கற்றுக் கொள்வதில் பெண்கள் சிறந்தவர்கள். எதையும் பெண்கள் எளிமையாகக் கற்றுக்கொள்வார்கள். கற்றல் திறன் எல்லோருக்கும் பொதுவானதாக இருந்தாலும் ஆண்களுக்குப் பொறுமை குணம் குறைவு. எனவே தான், வகுப்புகளில் பெரும்பான்மை பெண்களே முதலிடம் பிடிக்கிறார்கள்.
2 சுகாதார விஷயத்தில் பெண்கள் எப்போதும் பல படிகள் மேலே என்பதை யாராலும் மறுக்க முடியாது. ஒரு வீட்டையோ, அலுவலகத்தின் குறிப்பிட்ட ஓர் இடத்தையோ பார்க்கும் போதே அந்த இடத்தில் இருப்பவர் ஆணா, பெண்ணா என்று சொல்லி விடலாம். பெண்கள், தன்னைச் சுற்றியுள்ள எல்லாமே சுத்தமாக இருக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்துவார்கள்.
3 தைரியத்தில் பெண்களுக்கே முதல் இடம். ஒரு இன்டெர்வியூ, அல்லது ஒரு பரிட்சை என்றால் எல்லாருக்கும் பயம் வரும். பெண்களுக்கும் அந்த பயம் உண்டு. ஆனால், அதை வெளிக்காட்டாமல் கூலாக அதை கையாள்வதில் சாமர்த்தியர்கள். அதனால் தான், செல்லும் இடங்களில் எல்லாம் வெற்றி பெறுகிறார்கள்.
4 ரொம்ப மெச்சூர்டாக செயல்படுவதும் பெண்கள் தான். அவர்கள் தன்மானத்தைக் காத்துக்கொள்வதில் பெரும் பங்காற்றுபவர்கள்.
5 எந்த ஒரு விஷயத்திலும் பெண்கள் தெளிவான உறுதி கொண்டவர்களாக இருப்பார்கள். ஆனால், ஆண்கள் கொஞ்சம் குழப்பவாதிகள். ஓர் செயலில் ஈடுபடுவதற்கு முன்னரே யோசித்து, அதற்கு தகுந்தபடி செயல்படுவதே பெண்களின் வெற்றிகளுக்குக் காரணமாக இருக்கிறது.
6 பிறருக்கு மரியாதை செலுத்துவதிலும் பெண்கள் மேலானவர்கள். தன்னை விட வயதில் குறைந்தவர்களாக இருந்தாலும், அவர்களிடம் மரியாதையோடு செயல்படுவதையே விரும்புவார்கள்.
7 அறிவியல், கணிதம் சார்ந்த கல்விகளில் பெண்கள் லேசுபட்டவர்களல்ல. தங்களுக்குப் பிடிக்காத சப்ஜெக்ட்டாக இருந்தாலும், அதிலும் தேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்றே விரும்புவார்கள். எனவே அதிலும் அவர்கள் முதலிடம் பிடித்து விடுவார்கள்.
8 நோய் எதிர்ப்பு சக்தி பெண்களுக்குத் தான் அதிகம் என்கிறது அமெரிக்க ஆய்வு ஒன்று. அவர்களது உடலில் உற்பத்தியாகும் ஹார்மோன்கள், நோய்க்கிருமிகளை எளிதில் அழித்து விடும். அதனால் தான், மனதளவிலும் சக்தி வாய்ந்தவர்களாகப் பெண்கள் இருக்கிறார்கள்.
9 பெற்றோர்கள் மீது அக்கறை செலுத்துவதில் பெண்களுக்கே முதலிடம் என்றால் மிகையாகாது. 36 சதவிகிதப் பெண்கள், பெற்றோர்களுக்கு மிகுந்த ஆதரவு அளிப்பார்கள். ஆனால், 16 சதவிகித ஆண்களே பெற்றோர்களைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்துவார்கள் என்பது ஒரு ஆய்வின் முடிவு.
10 சேமிப்பு என்று வந்து விட்டால், அதிலும் பெண்கள் தான் சிறந்தவர்கள். ஆண்களுக்கு அதில் பக்குவம் குறைவு என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். மேக்கப், டிரெஸ்ஸிங், காஸ்மெடிக்ஸ் என்று பெண்கள் செலவு செய்தாலுமே, பிற்காலத் தேவைக்கும் பயன்படும் வகையில் பணத்தை சேமிப்பார்கள்.
இதல்லாமல் ஒரு குடும்பத்தை அழகான முறையில் நிர்வகிப்பதில் பெண்கள் தான் சிறந்தவர்கள், குழந்தைகளைக் கவனிப்பதில், அவர்களை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்வதில், அவர்களை நல்ல முறையில் வளர்த்து உருவாக்குவதில் பெண்கள் தான் சிறந்தவர்கள், தொழுகை போன்ற வணக்க வழிபாடுகளில் பெண்கள் தான் சிறந்தவர்கள், இறைவனுக்கு அஞ்சி நடப்பதிலும் பெண்கள் தான் சிறந்தவர்கள். இப்படி எந்த விஷயத்தை எடுத்துக் கொண்டாலும் அதில் ஆண்களை விட பெண்களே சிறந்தவர்களாக இருக்கிறார்கள்.
அப்படியானால் ஆண்கள் எந்த விஷயத்தில் தான் சிறந்தவர்களாக, தனித்துவம் உடையவர்களாக விளங்குகிறார்கள் என்று பார்த்தால், சமூக சேவைகளில், சமுதாயத்திற்கு ஆற்றும் அறும் பணிகளில் பிற மக்களுக்கு பயனளிக்கும் காரியங்களில் ஈடுபடுவதில் தான் ஆண்கள் சிறந்தவர்களாக இருக்கிறார்கள். பெண்களின் உலகம் மிகவும் சிறியது. பெற்றோர்கள், கணவன், பிள்ளைகள் என ஒரு சிறிய வட்டத்திற்குள் அவர்களின் உலகம் சுருங்கி விடுகிறது. ஆனால் ஆண்களின் உலகம் மிகப்பெரியது. தினம் தினம் எண்ணற்ற மனிதர்களைப் பார்க்கிற, சந்தக்கின்ற, பழகுகின்ற வாய்ப்பினைப் பெற்ற ஆண்கள் தன்னைச் சுற்றியிருப்பவர்களுக்கு பலன் தருபவர்களாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டும் தான் அவர்கள் சிறந்தவர்கள். இல்லையென்றால் அவர்கள் பெண்களை விட எந்த விஷயத்திலும் உயர்ந்தவர்களாக கருதப்பட மாட்டார்கள்.
للذكر مثل حظ الانثيين
ஒரு ஆணுக்கு இரு பெண்களுக்குரியது போன்ற பாகம் உண்டு. (அல்குர்ஆன் : 4 ; 11)
பெண்கள் பலவீனமானவர்கள். ஆண்களைப் போன்று பொருளீட்டும் ஆற்றல் இல்லாதவர்கள். நியாயமாக பார்த்தால் பெண்களுக்குத் தான் சொத்து அதிகமாக கொடுக்க வேண்டும். ஆனால் அவ்வாறிருந்தும் அந்த பெண்களை விட ஆண்களுக்கே அதிகமாக கொடுக்க வேண்டும் என்று அல்லாஹ் சொன்ன காரணம் ;
الرجل لكمال عقله يصرف المال الي ما يفيده نحو بناء الرباطات واعانة الملهوفين والنفقة علي الايتام والارامل
மடங்களைக் கட்டுவது,அநீதம் இழைக்கப்பட்டவர்களுக்கு உதவுவது, அநாதைகள் மற்றும் விதவைகளுக்கு உதவுவது போன்ற நன்மையான காரியங்களை ஆண்கள் தான் செய்வார்கள். எனவே தான் பெண்களை விட அவர்களுக்கு அதிகமாக கொடுக்கும் படி அல்லாஹ் கூறுகிறான். (தஃப்ஸீர் ஜலாலைன் ஓரக்குறிப்பு)
ஒருவன் சிறந்தவன் என்பதற்கான அடையாளம் பிறருக்கு பயன் தருபவனாக இருப்பது.
خير الناس انفعهم للناس
மக்களுக்கு பயன் தருபவரே மக்களில் சிறந்தவர். (தப்ரானீ)
மனிதனாகப் பிறந்தவன் பிறருக்கு உபகாரம் செய்ய வேண்டும், தேவைப்படுவோருக்கு உதவிகள் புரிய வேண்டும். அவனைச் சுற்றியிருப்பவர்கள் அவனைக் கொண்டு பயனடைய வேண்டும். இல்லையென்றால் அவன் மனிதனாகவும் இருக்க முடியாது, சிறந்தவனாகவும் இருக்க முடியாது.
பிறருக்கு உதவி புரிதல் என்பது நபிகள் நாயகம் ﷺ அவர்களின் மேலான பண்புகளில் ஒன்றாக இருக்கிறது.
قَالَتْ لَهُ خَدِيجَةُ: كَلا، أَبْشِرْ، فَوَاللهِ، لا يُخْزِيكَ اللهُ أَبَدًا، وَاللهِ، إِنَّكَ لَتَصِلُ الرَّحِمَ، وَتَصْدُقُ الْحَدِيثَ، وَتَحْمِلُ الْكَلَّ، وَتُكْسِبُ الْمَعْدُومَ، وَتَقْرِي الضَّيْفَ، وَتُعِينُ عَلَى نَوَائِبِ الْحَقِّ
அல்லாஹ்வின் மீது ஆணையாக உங்களை ஒரு போதும் அல்லாஹ் இழிவுபடுத்த மாட்டான். (ஏனெனில்) தாங்கள் உறவினர்களுடன் இணங்கி இருக்கின்றீர்கள். (சிரமப்படுவோரின்) சுமைகளைத் தாங்கள் சுமந்து கொள்கிறீர்கள். வறியவர்களுக்காக உழைக்கிறீர்கள், விருந்தினர்களை உபசரிக்கிறீர்கள். உண்மையான சோதனைகளில் (ஆட்பட்டோருக்கு) உதவி புரிகின்றீர்கள் என்று அன்னை கதீஜா ரலி அவர்கள் கூறினார்கள். (புகாரி ; 4953)
ஒருவர் ஒரு உதவி என்றாலோ அல்லது ஒரு பிரச்சனை என்றாலோ உடனே முன்னால் வந்து நிற்பது நபி ﷺ அவர்கள் தான்.
وذات يوم، أقبل رجل من بلد اسمها (إراش) إلى مكة، فظلمه أبو جهل، وأخذ منه إبله، فذهب الرجل إلى نادي قريش يسألهم عن رجل ينصره على
أبي جهل، وهنا وجد الكفار فرصة للتسلية والضحك والسخرية من رسول الله صلى الله عليه وسلم، فأمروا الرجل أن يذهب إلى الرسول صلى الله عليه وسلم ليأخذ له حقه، فذهب الرجل إلى رسول الله صلى الله عليه وسلم، وأخذوا ينظرون إليه ليروا ما سيحدث، فقام النبي صلى الله عليه وسلم مع الرجل ليعيد له حقه من أبي جهل، فأرسلوا وراءه أحدهم؛ ليرى ما سوف يصنعه أبوجهل مع رسول الله صلى الله عليه وسلم، فذهب الرسول صلى الله عليه وسلم إلى بيت أبي جهل، وطرق بابه، فخرج أبو جهل من البيت خائفًا مرتعدًا، وقد تغير لونه من شدة الخوف، فقال له رسول الله صلى الله عليه وسلم: (أعطِ هذا الرجل حقه) فرد أبو جهل دون تردد: لا تبرح حتى أعطيه الذي له، ودخل البيت مسرعًا، فأخرج مال الرجل، فأخذه، وانصرف.
وعندما أقبل أبو جهل على قومه بادروه قائلين: ويلك! ما بك؟ فقال لهم: والله ما هو إلا أن ضرب عليَّ وسمعت صوته فملئت منه رعبًا، ثم خرجت إليه، وإن فوق رأسه لفحلا من الإبل ما رأيتُ مثلَه قط، فوالله لو أبَيتُ لأكلني. [البداية والنهاية
இராஷ் என்ற ஊரிலிருந்து ஒரு வியாபாரி மக்கா நகருக்கு வந்திருந்தார். அபூஜஹ்ல் அவரிடமிருந்து ஒரு ஒட்டகத்தை வாங்கி விட்டு அதற்கான விலையை தராமல் அநீதம் செய்து விட்டான். அதனால் மக்காவில் இருக்கிற முக்கிய தலைவர்களை சந்தித்து தனக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று முறையிட்டார். நபியவர்களை கேலி செய்வதற்கும் பரிகாசம் செய்வதற்கும் அவகாசத்தை தேடிக்கொண்டிருந்த மக்கா வாசிகளுக்கு இது ஒரு நல்ல சந்தர்ப்பமாக அமைந்தது. எனவே மக்காவாசிகள் அந்த வியாபாரியை நபியிடத்தில் சென்று நீ முறையீடு. அவர் உனக்கு உதவி செய்வார் என்று சொல்லி அனுப்பினார்கள். அவரும் நபியிடத்தில் சென்றார். அங்கே என்ன நடக்கிறது என்பதை பார்ப்பதற்காக ஒருவரையும் அவருக்கு பின்னால் அனுப்பி வைத்தார்கள். அந்த வியாபாரி தனக்கு நடந்ததை நபியிடத்தில் எடுத்துச் சொன்னதும் நபியவர்கள் அந்த வியாபாரியை அழைத்துக்கொண்டு அபூஜஹ்லின் வீட்டிற்கு சென்றார்கள். சென்று அவனுடைய வீட்டின் கதவைத் தட்டி தன் குரலை எழுப்பினார்கள். நபியின் அந்த கம்பீரமான குரலைக் கேட்டவுடன் முகமெல்லாம் மாறியவனாக உடல் நடுங்கியவனாக பயந்த நிலையில் வெளியே வந்தான். அவனைப் பார்த்ததும் நபியவர்கள் இவனுக்கு கொடுக்கவேண்டிய பணத்தைக் கொடு என்று சொன்னார்கள். உடனே அபூஜஹ்ல் இங்கேயை நில்லுங்கள். நான் எடுத்து வருகிறேன் என்று சொல்லி வேகமாக சென்று அந்த ஒட்டகத்திற்குரிய பணத்தை எடுத்துக்கொண்டு வந்து அந்த வியாபாரியிடத்தில் கொடுத்தான். மக்காவாசிகள் அனுப்பிய அந்த மனிதர் இந்த நிகழ்வுகளையெல்லாம் பார்த்து விட்டு நடந்ததை மக்காவாசிகளிடத்தில் வந்து சொன்னார். உடனே அவர்கள் அபூஜஹ்லை அழைத்து, உங்களுக்கு என்ன ஆனது? ஏன் இப்படி நடந்து கொண்டீர்கள்? உங்களிடத்திலே நபியை அனுப்பியக் காரணமே, அவரிடம் நீ ஏதாவது சொல்ல வேண்டும். அதைப் பார்த்து நாங்கள் சிரிக்க வேண்டும். அவர்களை கேலி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் தான். ஆனால் ஏன் இப்படி நடந்து கொண்டீர்கள் என்று கேட்ட பொழுது, அவருடைய குரலைக் கேட்டவுடன் என் உடலெல்லாம் நடுங்க ஆரம்பித்து விட்டது. மட்டுமல்ல அவருடைய தலைக்கு மேல் நான் ஒரு ஒட்டகத்தைப் போன்ற ஒரு தோற்றத்தை பார்த்தேன். இதுவரை அதைப்போன்ற ஒட்டகத்தை நான் கண்டதில்லை. ஒருவேளை நான் கொடுக்காமல் மறுத்திருந்தால் என்னை அது கடித்து சாப்பிட்டு விடுவோ என்று நான் பயந்தேன் என அபூஜஹ்ல் கூறினான். (அல்பிதாயா வன்நிஹாயா)
இந்த நிகழ்வை கொஞ்சம் நாம் ஆய்வு செய்து பார்ப்போம்.வெளியூரிலிருந்து ஒருவர் வந்திருக்கிறார்.அவர் யாரென்று தெரியாது. அவருடன் நட்போ உறவோ பழக்கமோ எதுவும் இல்லை.அவருக்கு ஒரு பிரச்சனை என்றவுடன் எதையும் யோசிக்காமல் நபி ﷺ அவர்கள் செல்கிறார்கள்.அப்படி எதையும் யோசிக்காமல் செல்வார்கள் என்று மக்காவாசிகளுக்கும் தெரியும்.அதனால் தான் அவரை நபியிடத்தில் அனுப்பி வைக்கிறார்கள். இங்கே நாம் யோசிக்க வேண்டிய இன்னொரு விஷயம், அபூஜஹ்ல் ரொம்ப மோசமானவன்.. فرعون هذه الامة இந்த உம்மத்தின் ஃபிர்அவ்ன் என்று சொல்லப்படுகிற அளவுக்கு ரொம்ப ஆபத்தானவன். ஒவ்வொரு நேரத்தில் நபிக்கு எதிராக செயல்படக்கூடியவன், எத்தனையோ சமயங்களில் நபியைக் கொல்வதற்கும் திட்டங்கள் தீட்டியவன்.இவை அனைத்தும் நபிக்கு தெரியும். இருந்தாலும் அவனிடத்தில் செல்கிறார்கள்.
நபியவார்களிடம் இருந்த இதே குணம், இதே தன்மைகள் ஸஹாபாக்களிடமும் இருந்தது. குறிப்பாக அபூபக்கர் சித்தீக் ரலி அவர்களிடம் இருந்தது.நபி ﷺ அவர்களைப் பார்த்து கதீஜா ரலி அவர்கள் என்ன வார்த்தைகளை சொன்னார்களோ அந்த வார்த்தைகளில் சற்றும் வித்தியாசமின்றி அபூபக்கர் ரலி அவர்களைப் பார்த்து இப்னு தகினா கூறினார்.
فَلَمَّا ابْتُلِيَ المُسْلِمُونَ، خَرَجَ أَبُو بَكْرٍ مُهَاجِرًا قِبَلَ الحَبَشَةِ، حَتَّى إِذَا بَلَغَ بَرْكَ الغِمَادِ لَقِيَهُ ابْنُ الدَّغِنَةِ، وَهُوَ سَيِّدُ القَارَةِ، فَقَالَ: أَيْنَ تُرِيدُ يَا أَبَا بَكْرٍ؟ فَقَالَ أَبُو بَكْرٍ: أَخْرَجَنِي قَوْمِي، فَأَنَا أُرِيدُ أَنْ أَسِيحَ فِي الأَرْضِ، فَأَعْبُدَ رَبِّي، قَالَ ابْنُ الدَّغِنَةِ: إِنَّ مِثْلَكَ لاَ يَخْرُجُ وَلاَ يُخْرَجُ؛ فَإِنَّكَ تَكْسِبُ المَعْدُومَ، وَتَصِلُ الرَّحِمَ، وَتَحْمِلُ الكَلَّ، وَتَقْرِي الضَّيْفَ، وَتُعِينُ عَلَى نَوَائِبِ الحَقِّ، وَأَنَا لَكَ جَارٌ، فَارْجِعْ فَاعْبُدْ رَبَّكَ بِبِلاَدِكَ
முஸ்லிம்கள் சோதனைக்குள்ளாக்கப்பட்ட போது அபூபக்ர் (ரலி) அவர்கள் தாயகம் துறந்து அபிசீனியாவை நோக்கிச் சென்றார்கள். பர்குல் ஃகிமாத் எனும் இடத்தை அடைந்த போது அப்பகுதியின் தலைவர் இப்னு தகினா என்பவர் அவர்களைச் சந்தித்தார். அவர் அவர்களிடம் எங்கே செல்கிறீர்? என்று கேட்டார். அபூபக்ர் (ரலி) அவர்கள் என் சமுதாயத்தினர் என்னை வெளியேற்றி விட்டனர். எனவே பூமியில் பயணம் சென்று என் இறைவனை வவ்ங்கப் போகிறேன் என்று கூறினார்கள். அதற்கு இப்னு தகினா அவர்கள் உம்மைப் போன்றவர் வெளியேறவும் கூடாது. வெளியேற்றப்படவும் கூடாது. ஏனெனில் நீர் ஏழைகளுக்காக உழைக்கிறீர். உறவினர்களுடன் இணங்கி வாழ்கிறீர். பிறருக்காகச் சிரமங்களைத் தாங்கிக் கொள்கிறீர். விருந்தினர்களை உபசரிக்கிறீர். துன்பமுற்றவர்களுக்கு உதவுகிறீர். எனவே நான் உமக்கு அடைக்கலம் தருகிறேன். ஆகவே திரும்பி உமது ஊருக்குச் சென்று உமது இறைவனை வணங்குவீராக என்று கூறினார். (புகாரி ; 2297)
உண்மையில் ஸஹாபாக்களின் வாழ்வு முழுக்க முழுக்க மற்றவர்களுக்கு பயன் தரும் ஒரு அற்புத வாழ்வாகத்தான் இருந்தது என்பதை வரலாறு பதிவு செய்திருக்கிறது.
روى الترمذي عن أنس بن مالك رضي الله عنه، قال: لما قدم النبي صلى الله عليه وسلم المدينة أتاه المهاجرون، فقالوا: يا رسول الله، ما رأينا قومًا أبذل من كثير ولا أحسن مواساةً من قليل - (أي من مال قليل) - من قوم - (أي الأنصار) - نزلنا بين أظهرهم - (أي عندهم) - لقد كفونا المؤنة، وأشركونا في المهنأ - (أي: أحسنوا إلينا؛ سواء كانوا كثيري المال، أو فقيري الحال) - حتى لقد خفنا أن يذهبوا بالأجر كله، فقال النبي صلى الله عليه وسلم: ((لا، ما دعوتم الله لهم وأثنيتم عليهم))؛ (حديث صحيح)، (صحيح الترمذي ، حديث 2020).
நபி ﷺ அவர்கள் மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்த வந்த நேரத்தில் முஹாஜிர்கள் நபி ﷺ அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதர் அவர்களே அன்ஸாரிகளை விட தங்களுடைய பொருளாதாரத்தை அதிகம் செலவு செய்கின்ற ஒரு கூட்டத்தை நாங்கள் கண்டதில்லை. மேலும் அவர்களை விட பிறருக்கு ஆதரவளிக்கின்ற ஒரு சமூகத்தை நாங்கள் கண்டதில்லை. எங்களுக்காக அதிகம் அவர்கள் சிரமத்தை தாங்கிக் கொள்கிறார்கள். எங்களுக்கு அதிகம் உபகாரம் செய்கிறார்கள். அனைத்து நன்மைகளையும் அவர்களே எடுத்துச் சென்று விடுவார்களோ என்று நாங்கள் அஞ்சுகிறோம் என்று கூறினார்கள். அப்போது பெருமானார் ﷺ அவர்கள் கூறினார்கள் ; அவர்கள் செய்யும் நற்காரியங்களை நீங்கள் புகழ்ந்து அவர்களுக்காக நீங்கள் துஆ செய்து கொண்டிருந்தால் அவர்களின் உபகாரத்திற்கு நீங்கள் பிரதி உபகாரம் செய்தவர்களாக ஆகி விடுவீர்கள் என்றார்கள். (திர்மிதி ; 2487)
நன்மைகள் அனைத்தையும் அவர்களே எடுத்துச் சென்று விடுவார்களோ என்று அஞ்சும் அளவிற்கு அன்ஸாரிகளின் உபகாரங்கள் இருந்தது என்பதை பார்க்கிறோம்.
روى أبو نعيم عن مالك الداراني: أن عمر بن الخطاب رضي الله تعالى عنه أخذ أربعمائة دينار فجعلها في صرة، فقال للغلام: اذهب بها إلى أبي عبيدة بن الجراح، ثم انتظر ساعةً في البيت حتى تنظر ما يصنع، فذهب بها الغلام، فقال: يقول لك أمير المؤمنين: اجعل هذه في بعض حاجتك، فقال: وصله الله ورحمه، ثم قال: تعالي يا جارية، اذهبي بهذه السبعة إلى فلان، وبهذه الخمسة إلى فلان، وبهذه الخمسة إلى فلان، حتى أنفذها، فرجع الغلام إلى عمر رضي الله تعالى عنه، وأخبره فوجده قد أعد مثلها لمعاذ بن جبل، فقال: اذهب بها إلى معاذ وانتظر في البيت ساعةً حتى تنظر ما يصنع، فذهب بها إليه، فقال: يقول لك أمير المؤمنين: اجعل هذه في بعض حاجتك، فقال: رحمه الله ووصله، تعالي يا جارية، اذهبي إلى بيت فلان بكذا، اذهبي إلى بيت فلان بكذا، فاطلعت امرأة معاذ، فقالت: ونحن والله مساكين فأعطنا، ولم يبق في الخرقة إلا ديناران، فدحا - (ألقى) - بهما إليها - (أي: أعطاهما) - ورجع الغلام إلى عمر، فأخبره، فسُرَّ بذلك، وقال: "إنهم إخوة بعضهم من بعض"؛ (حلية الأولياء؛ لأبي نعيم، ج1، ص237).
உமர் ரலி அவர்கள் 400 தீனாரை ஒரு பையில் வைத்து தன் அடிமையிடம் கொடுத்து அபூஉபைதா ரலி அவர்களிடம் கொடுத்து விட்டு, அவர், அதை என்ன செய்கிறார் என்று நின்று பார்த்து வரும் படி சொன்னார்கள். அவரும் அதை கொடுத்து விட்டு அங்கு நின்று பார்த்துக் கொண்டிருந்தார். அபூஉபைதா ரலி அவர்கள் அதைப் பெற்றுக் கொண்டு அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து தேவையுடையோருக்கு கொடுத்து அனைத்தையும் முடித்து விட்டார்கள். பிறகு உமர் ரலி அவர்கள் மீண்டும் ஒரு பையில் அதேபோன்று 400 தீனாரை வைத்து முஆத் பின் ஜபல் ரலி அவர்களிடம் கொடுத்து வரும் படி சொன்னார்கள். அவர்களும் அபூஉபைதாவைப் போன்றே அனைத்தையும் கொடுத்து விட்டார்கள். முஆத் ரலி அவர்களின் மனைவி, நாமும் தேவையுடையவர்கள் தான். எங்களுக்கும் தாருங்கள் என்று சொன்ன போது மீதியிருந்த 2 தீனாரை மட்டும் கொடுத்தார்கள். நடந்த விஷயத்தை அந்த அடிமை உமர் ரலி அவர்களிடம் வந்து சொன்ன போது அவர்கள் ரொம்பவும் மகிழ்ச்சியடைந்தார்கள். (ஹுல்யதுல் அவ்லியா)
நபிமார்கள் அத்தனை பேரிடத்திலும் இந்த உபகாரம் செய்யும் குணம் இருந்ததாக அல்குர்ஆன் கூறுகிறது.
وَلَمَّا وَرَدَ مَآءَ مَدْيَنَ وَجَدَ عَلَيْهِ اُمَّةً مِّنَ النَّاسِ يَسْقُوْنَ وَوَجَدَ مِنْ دُوْنِهِمُ امْرَاَتَيْنِ تَذُوْدٰنِ قَالَ مَا خَطْبُكُمَا قَالَـتَا لَا نَسْقِىْ حَتّٰى يُصْدِرَ الرِّعَآءُ ٚ وَاَبُوْنَا شَيْخٌ كَبِيْرٌ
(அவ்வாறு சென்ற அவர்) மத்யன் நகரத்தி(ன் வெளியி) லிருந்த ஒரு கிணற்றின் சமீபமாக வந்தபொழுது ஒரு கூட்டத்தினர் (தங்கள் ஆடு, மாடு, ஆகிய கால்நடைகளுக்குத்) தண்ணீர் புகட்டிக் கொண்டிருப்பதையும், அதற்கருகில் இரு பெண்கள் (தங்கள் ஆட்டு மந்தையை) வளைத்து(த் தடுத்து நிறுத்தி)க் கொண்டிருப்பதையும் கண்டு (அப்பெண்களை நோக்கி) "உங்கள் விஷயமென்ன? (எதற்காக நீங்கள் தேங்கி நிற்கிறீர்கள்?)" என்று கேட்டார். அதற்கு அவ்விரு பெண்களும் "இம்மேய்ப்பர்கள் (தங்கள் கால்நடைகளுக்குத் தண்ணீர் புகட்டிக்கொண்டு இங்கிருந்து) விலகும் வரையில் நாங்கள் (எங்கள் ஆடுகளுக்குத்) தண்ணீர் புகட்ட முடியாது. எங்கள் தந்தையோ வயதடைந்த கிழவர். (அவர் இங்கு வர முடியாததால் நாங்களே இவைகளை ஓட்டி வந்திருக்கிறோம்)" என்றார்கள். (அல்குர்ஆன் : 28:23)
فَسَقٰى لَهُمَا ثُمَّ تَوَلّٰٓى اِلَى الظِّلِّ فَقَالَ رَبِّ اِنِّىْ لِمَاۤ اَنْزَلْتَ اِلَىَّ مِنْ خَيْرٍ فَقِيْرٌ
(இதைச் செவியுற்ற மூஸா) அவ்விரு பெண்களுடைய கால்நடைகளுக்குத் தண்ணீர் (இறைத்துப்) புகட்டிவிட்டு(ச் சிறிது) விலகி ஒரு (மரத்தின்) நிழலில் அமர்ந்துகொண்டு "என் இறைவனே! எதை நீ எனக்குத் தந்தபோதிலும் நிச்சயமாக நான் அதனை விரும்பக் கூடியவனாகவே இருக்கிறேன்" என்று பிரார்த்தித்தார். (அல்குர்ஆன் : 28:24)
மூஸா நபி அவர்கள் மிஸ்ரிலிருந்து மத்யன் நகரத்திற்கு வந்திருக்கிறார்கள். பயணக்கலைப்பு ஒரு பக்கம். தன் குடும்பத்தையும் தன் சமூகத்தையும் விட்டு வந்த சோகம் ஒரு பக்கம். ஃபிர்அவ்னும் அவனுடைய கூட்டத்தார்களும் தன்னைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள் என்ற அச்சம் ஒரு பக்கம். ஒரு புதிய ஊருக்கு வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு அங்கு யாரையும் தெரியாது. யாருக்கும் அவர்களைத் தெரியாது. அடுத்து என்ன செய்யப் போகிறோம் என்று தெரியாது. பொதுவாக இந்த மாதிரியான நெருக்கடியான நிர்கதியான நேரங்களில் தன் நிலை என்னவாகும் என்று அச்சப்படும் நேரங்களில் யாரையும் நாம் கண்டு கொள்ள மாட்டோம்.ஆனால் அந்த நேரத்திலும் அவர்கள் அப்பெண்களுக்கு உதவி உபகாரம் செய்தார்கள் என்பது இங்கே கவனிக்கத்தக்கது.
ஒருவர் தன்னை மட்டும் நினைக்காமல் பிறரைப் பற்றியும் நினைத்துப் பார்க்க வேண்டும். பிறரைப் பற்றியும் கவலைப்பட வேண்டும். அவரே சிறந்த முஃமினாக இருக்க முடியும்.
ليس المؤمنُ بالذي يشبعُ وجارُه جائِعٌ إلى جنبَيْهِ
பக்கத்து வீட்டுக்காரன் பசித்திருக்க வயிறு நிரம்ப சாப்பிடுபவன் முஃமினல்ல. (ஸஹீஹுல் ஜாமிவு)
மனிதர்களில் சிறந்தவர்கள்
மனிதர்கள் தங்களுக்கு இருக்கும் வாழ்க்கை நிலையில் மட்டுமல்ல, பண்புகளிலும் பழக்க வழக்கங்களிலும் வேறுபட்டும் வித்தியாசப்பட்டும் இருக்கிறார்கள். ஆகையால், ஒருவரை சிறந்தவர் என்று முடிவு செய்வதற்கு ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமான காரணங்களைக் குறிப்பிடுகிறார்கள். வேறுபாடான வித்தியாசமான கருத்துக்களை முன்வைக்கிறார்கள்.
ஒருவருடைய காரியத்தையோ பண்பையோ காரணமாக வைத்து அவரைச் சிறந்தவர் என்று சொல்வது ஒருவருடைய பார்வையில், கண்ணோட்டத்தில் சரியாக இருக்கும். அதேசமயம், மற்றவர்களின் பார்வையில் தவறாக இருக்கும். காரணம், ஒருவரிடம் தாங்கள் விரும்பும் எதிர்பார்க்கும் பண்பு இருப்பதைப் பொறுத்து அவரை நல்லவர் என்று முடிவு செய்கிறார்கள். தங்களது சுய விருப்பு வெறுப்புகளை அடிப்படையாக வைத்து தீர்மானம் செய்கிறார்கள்.
நம்மைப் பற்றி முழுமையாக அறிந்திருக்கும் ஏகஇறைவனும் அவனிடம் இறைச்செய்தியைப் பெறும் இறைத்தூதரும், ஒருவரைச் சிறந்தவர் என்று சொல்வது இவ்வாறு இருக்காது. உண்மையில் அவர்கள் சிறந்தவர்களாக இருப்பார்கள். மக்களிடம் இருக்கும் எண்ணங்கள் மற்றும் செயல்களை மையமாக வைத்து அவர்களில் சிறந்தவர்கள் யார்? என்பது குறித்து மார்க்கம் கூறும் சில தகவல்களைத் தெரிந்து கொள்வோம்.
ஏக இறைவனை நம்பியவர்கள்
காரணமில்லாமல் காரியமில்லை என்று சொல்வார்கள். எந்தவொரு செயலுக்குப் பின்னாலும் ஏதாவதொரு காரணம் கண்டிப்பாக இருக்கும். மிகப் பிரமாண்டமாக இருக்கும் இந்தப் பிரபஞ்சத்தின் தோற்றம் மற்றும் அதன் சீரான இயக்கத்திற்குப் பின்னாலும் காரணகர்த்தாவாக ஒரேயொரு இறைவன் இருக்கிறான். இத்தகைய இறைவன் ஒருவன் இருப்பதை ஒப்புக்கொள்ள மறுக்கும் மக்கள், ஏராளமாக இருக்கிறார்கள். அவன் கொடுத்திருக்கும் பகுத்தறிவைச் சரியாக முறையாகப் பயன்படுத்தாமல் இருக்கிறார்கள். ஆகையால், அவனுடைய இடத்தில் படைப்பினங்களை வைத்து அவனுக்கு இணைக் கற்பிக்கிறார்கள். இவர்களுக்கு மத்தியில் சிலர், ஏக இறைவன் ஒருவன் இருக்கிறான் என்றும், அவன் மட்டுமே அனைத்து ஆற்றல்களையும் அதிகாரங்களையும் கொண்டவன் என்றும் நம்பிக்கைக் கொண்டு வாழ்கிறார்கள். இத்தகைய மக்கள், இவ்வாறு இல்லாத மற்ற மக்களைக் காட்டிலும் சிறந்தவர்கள்; உயர்ந்தவர்கள் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை. இதைப் பின்வரும் வேதவரிகள் மூலம் விளங்கிக் கொள்ளலாம்.
இணை கற்பிக்கும் பெண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களைத் திருமணம் செய்யாதீர்கள்! இணை கற்பிப்பவள் எவ்வளவு தான் உங்களைக் கவர்ந்தாலும் அவளைவிட நம்பிக்கை கொண்ட அடிமைப் பெண் சிறந்தவள். இணை கற்பிக்கும் ஆண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களுக்கு (உங்கள் பெண்களை) மணமுடித்துக் கொடுக்காதீர்கள்! இணை கற்பிப்பவன் உங்களை எவ்வளவுதான் கவர்ந்தாலும் அவனைவிட நம்பிக்கை கொண்ட அடிமை சிறந்தவன். அவர்கள் நரகத்திற்கு அழைக்கின்றனர். அல்லாஹ், தனது விருப்பப்படி சொர்க்கம் மற்றும் மன்னிப்பிற்கு அழைக்கிறான். படிப்பினை பெறுவதற்காக (இறைவன் தனது வசனங்களை மனிதர்களுக்குத் தெளிவுபடுத்துகிறான்.
ஹ (திருக்குர்ஆன் 2:221)
இறையச்சம் கொண்டவர்கள்
ஒவ்வொரு மனிதனும் இறைவன் ஒருவன் இருக்கிறான் என்பதை நம்புவதோடு அவனுக்குப் பயந்து வாழ்வது அவசியமாகும். இத்தகைய இறையச்சம் என்பது அனைவரிடமும் இருக்க வேண்டிய இன்றியமையாத பண்பாகும். தனிமனிதனும் சமுதாயமும் நன்றாக இருப்பதற்கு இந்தப் பண்பு முக்கியமான ஒன்று. அனைத்தும் அறிந்திருக்கும் அகிலத்தின் இரட்சகனுக்கு அஞ்சி வாழும் மனிதர்கள், எல்லா விதமான காரியத்திலும் நல்ல முறையில் நடந்து கொள்வார்கள். எல்லா நேரத்திலும் இடத்திலும் இறைவனால் கவனிக்கப்படுகிறோம், அவனால் கண்காணிக்கப்படுகிறோம் என்பதைக் கவனத்தில் கொண்டு செயல்படும் மக்கள், எப்போதும் நல்வழியில் வாழும் நல்லவர்களாக சிறந்தவர்களாகத் திகழ்வார்கள்.
மனிதர்களே! உங்களை ஓர் ஆண் ஒரு பெண்ணிலிருந்தே நாம் படைத்தோம். நீங்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்காக உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். உங்களில் (இறைவனை) அதிகம் அஞ்சுவோரே அல்லாஹ்விடம் அதிகம் சிறந்தவர். அல்லாஹ் அறிந்தவன்; நன்கறிபவன். (குர்ஆன் 49:13)ஹ
"அல்லாஹ்வின் தூதரே! மக்களில் கண்ணியத்திற்குரியவர் யார்?'' என்று (நபி (ஸல்) அவர்களிடம்) கேட்கப்பட்டது. அதற்கு நபியவர்கள், "அவர்களில் இறையச்சம் உடையவரே'' என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), ஆதாரம் : புகாரி (3490), (3353)
நற்காரியங்களைச் செய்பவர்கள்
அனைத்து விதமான அருட்கொடைகளையும், வாய்ப்புகளையும் மனிதர்கள் அனைவருக்கும் அல்லாஹ் அளிக்கவில்லை. மாறாக, அவன் சிலருக்கு அதிகமாகவும் சிலருக்கு குறைவாகவும் கொடுத்து இருக்கிறான். இந்நிலையில், ஏக இறைவன் நமக்குக் கொடுத்திருப்பதைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டு, நற்காரியங்களைச் செய்பவர்களாக நாம் இருக்க வேண்டும். இறைவனை நம்பிக்கை கொள்வதோடு மட்டும் நின்றுவிடாமல், அவனது பாதையில் அதிகம் அதிகமாக நல்ல அமல்களைச் செய்வதன் மூலம், ஹமனிதர்களிலேயே சிறந்தவர்கள் என்ற உயர்வான, உன்னதமான நிலையை அடைந்து கொள்ள இயலும்.
(ஏக இறைவனை) மறுப்போராகிய வேதமுடையோரும் இணை கற்பிப்போரும் நரக நெருப்பில் இருப்பார்கள். அதில் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். அவர்களே படைப்புகளில் மிகவும் கெட்டவர்கள். நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோரே படைப்புகளில் மிகச் சிறந்தவர்கள். (திருக்குர்ஆன் 98 : 6,7)
கிராமவாசி ஒருவர், அல்லாஹ்வின் தூதரே! மனிதர்களில் சிறந்தவர் யார்? என்று கேட்டார். அதற்கு, ஹமனிதர்களில் சிறந்தவர் எவரது ஆயுள் நீண்டதாகவும், நல்லமல்கள் அழகானதாகவும் இருக்கின்றதோ அவர்தான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் புஸ்ர் (ரலி)
அஹ்மத் (19519), திர்மிதீ 2251)
நன்மை ஏவி தீமையைத் தடுப்பவர்கள்
மனிதகுலம் வாழ்வும் வளர்ச்சியும் பெறுவதற்குரிய நன்மையான காரியங்களை இஸ்லாம் தெளிவாகப் போதித்து இருக்கிறது. அதுபோன்று அதை இகழ்ச்சிக்கும் வீழ்ச்சிக்கும் தள்ளுக்கிற அனைத்து விதமான தீமைகளையும் குறித்து எச்சரிக்கை செய்திருக்கிறது. இருப்பினும், அதிகமான மக்கள் நன்மைகளைக் காட்டிலும் தீமைகளைச் செய்வதில் மிகவும் தீவிரமாக இருக்கிறார்கள். நன்மையான செயல்களை மறந்தவர்களாக அல்லது அவற்றைப் புறக்கணித்தவர்களாக இருக்கிறார்கள். ஆகையால், அல்லாஹ்வும் அவனது தூதரும் கற்றுத்தந்த சத்தியத்தின் அடிப்படையில் நன்மையை ஏவி, தீமையைத் தடுப்பவர்களாக நாம் இருக்க வேண்டும். இது இறைவனிடம் இருக்கும் சிறந்தவர்களின் பட்டியலில் நம்மை இடம் பெறச் செய்யும்.
நீங்கள், மனித குலத்துக்காகத் தேர்வு செய்யப்பட்ட சிறந்த சமுதாயமாக இருக்கிறீர்கள்! நன்மையை ஏவுகிறீர்கள்! தீமையைத் தடுக்கிறீர்கள்! அல்லாஹ்வை நம்புகிறீர்கள்! வேதமுடையோர் நம்பிக்கை கொண்டிருந்தால் அது அவர்களுக்குச் சிறந்ததாக இருந்திருக்கும். அவர்களில் நம்பிக்கை கொண்டோரும் உள்ளனர். அவர்களில் அதிகமானோர் குற்றம் புரிபவர்கள்.
(திருக்குர்ஆன் 3:110)
மார்க்கத்திற்காகப் போராடுபவர்கள்
படைத்தவனின் மகத்தான கிருபையால் இந்த இஸ்லாமிய மார்க்கம் நமக்குக் கிடைத்திருக்கிறது. நாம் முஸ்லிம்களாக இருக்கிறோம். நமக்குக் கிடைத்திருக்கும் சத்திய நெறிமுறைகள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற தூய எண்ணமும் அதற்குத் தோதுவான செயல்பாடுகளும் நம்மிடம் இருக்க வேண்டும். இந்த கருத்தினைப் பிரதிபலிக்கும் வகையில், சத்திய மார்க்கம் மேலோங்க செய்வதற்காக உளமாற உழைப்பவர்கள் இருக்கிறார்கள். அதற்காக தங்களிடம் இருக்கும் அனைத்தையும் அர்ப்பணம் செய்பவர்களும் இருக்கிறார்கள். இவ்வாறு, இறைவனின் போதனைகளை பாதுகாப்பதற்கு போராடும், எட்டு திக்கும் பரப்புவதற்கு பாடுபடும் மக்கள், என்றும் சிறந்தவர்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
ஒரு மனிதர், "அல்லாஹ்வின் தூதரே! மக்களில் சிறந்தவர் யார்?'' என்று கேட்டார். அதற்கு, "அல்லாஹ்வின் பாதையில் தமது உயிராலும் பொருளாலும் போராடுகின்ற இறைநம்பிக்கையாளரே (மக்களில் சிறந்தவர்)'' என்று பதிலளித்தார்கள். "பிறகு யார்?'' என்று அந்த மனிதர் கேட்டார். அதற்கு, "பிறகு (மக்களில் சிறந்தவர் யாரெனில், குழப்ப நேரங்களில்) மலைக் கணவாய்களில் ஒன்றில் ஒதுங்கி, தம் இறைவனை வழிபட்டவாறு தம்மால் மக்களுக்குத் தீங்கு நேராமல் தவிர்த்து வருகின்ற இறைநம்பிக்கையாளர் ஆவார்'' என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர் : அபூசயீத் அல்குத்ரீ(ரலி)
ஆதாரம் : புகாரி (2786), (3836)
தூய உள்ளம் கொண்டவர்கள்
அனைத்துச் செயல்களும் எண்ணங்களின் அடிப்படையிலேயே அமைகின்றன என்று போதிக்கும் மார்க்கம் இஸ்லாம். எந்தவொரு காரியத்தையும் மறுமையில் இறைவனிடம் நற்கூலியைப் பெற்று வெற்றி பெற வேண்டும் என்ற தூய நோக்கத்துடன் செயல்படுத்த வேண்டும். ஏதேனும் ஒரு நற்காரியத்தை செய்ய வேண்டும் என்று நினைத்தாலே அதற்கும் நமக்காக நன்மை பதிவு செய்யப்படும். எனவே எந்நேரமும் நமது உள்ளத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். எந்த வகையிலும் தீமையான எண்ணங்களை, நோக்கங்களை குடியேற விடாமல் விழிப்புடன் வாழ வேண்டும். இவ்வாறு, தீய உணர்வுகளை சிந்தனைகளை தவிர்த்து விட்டு உள்ளத்தை தூய்மையாக வைத்துக் கொள்பவர்கள், மக்களில் உயர்ந்தவர்கள் என்பதை இப்போது தெரிந்து கொள்வோம்.
நபி (ஸல்) அவர்களிடம் மக்களில் சிறந்தவர் யார்? என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் உண்மை பேசும் ஒவ்வொருவரும் மற்றும் தூய உள்ளம் கொண்டவரும் ஆவர் என்று பதிலளித்தார்கள். அப்போது மக்கள் உண்மை பேசுபவரைப் பற்றி அறிவோம். ஆனால் தூய உள்ளம் கொண்டவர் என்றால் யார்? என்று வினவினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் தூய உள்ளம் கொண்டவர் யாரெனில் அவரது உள்ளத்தில் பாவமோ, அநியாயமோ, குரோதமோ, பொறாமையோ இருக்காது என்றார்கள். அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
நூல் : இப்னுமாஜா (4206)
நற்குணம் கொண்டவர்கள்
ஒருவர் எல்லா வகையிலும் சிறந்தவராக இருக்க வேண்டும் என்றால், அவர் நற்குணம் நிறைந்தவராக இருக்க வேண்டும். நற்குணம் இல்லாதவர் எண்ணற்ற திறமைகளை ஆற்றல்களை கொண்டிருந்தாலும் அவை அனைத்தும் அர்த்தமற்றதாக ஆகிவிடும். நற்குணங்களை நடைமுறையில் தொலைத்துவிட்டு, எவ்வளவுதான் சத்தியக் கொள்கையைக் குறித்து உரக்கக் கூறினாலும், அவை அனைத்தும் வீணாகிவிடும். எனவே, சத்தியத்தை ஏற்று, அதை அழகிய முறையில் செயல்படுத்தி, அடுத்தவர்களுக்கு எடுத்துச் சொல்லும் பணியில் இருக்கும் நாம் நற்குணங்களைப் பிரதிபலிக்கும் நன்மக்களாக இருக்க வேண்டும். அவை, நம்மை சிறந்தவர்களாக மிளிர வைக்கும்.
நபி (ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. "உங்களில் சிறந்தவர் உங்களில் நற்குணமுடையவரே'' என்று அவர்கள் கூறுவார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
நூல் : புகாரி (3559)
மஸ்ரூக் பின் அஜ்தஉ அவர்கள் கூறியதாவது: முஆவியா (ரலி) அவர்களுடன் (இராக்கிலுள்ள) கூஃபா நகருக்கு வந்திருந்த அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்களிடம் நாங்கள் சென்றோம். அப்போது அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நினைவுகூர்ந்து, "அவர்கள் இயற்கையாகவும் அருவருப்பாகப் பேசுபவராக இருக்கவில்லை; செயற்கையாகவும் அருவருப்பாகப் பேசுபவராக இருக்கவில்லை'' என்று கூறிவிட்டு, "நற்குணமுடையவரே உங்களில் மிகவும் சிறந்தவர்'' என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள் என்றும் கூறினார்கள்.
நூல் : புகாரி (6029)
பிறருக்குத் துன்பம் தராதவர்கள்
நமது வாழ்நாளில் அனைத்து காரியங்களும் நன்றாக இருக்க வேண்டும்; எப்போதும் இன்பமாக சந்தோசமாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். எந்தவொரு நிகழ்விலும் தீமை ஏற்பட்டு விடக்கூடாது; துன்பத்தில் சிக்கிக் கொள்ளக் கூடாது என்று நினைக்கிறோம். இதே எதிர்பார்ப்பும் எச்சரிக்கை உணர்வும் அடுத்தவர் விஷயத்திலும் நமக்கு இருக்க வேண்டும். பிற மக்களுக்கு நம்மால் முடிந்த நன்மை செய்பவர்களாக இருக்க வேண்டும். நன்மைகளைச் செய்யாவிட்டாலும், ஒருபோதும் தீமையைச் செய்துவிடக் கூடாது. இவ்வாறு பிறருக்கு எந்த விதத்திலும் தொல்லைகள், இடையூறுகள், தீங்குகள் தாராமல் வாழ்பவர்கள், சமூகத்தில் இருக்கும் சிறந்த மனிதர்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.
ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், "முஸ்லிம்களில் சிறந்தவர் யார்?'' என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "எவருடைய நாவிலிருந்தும் கரத்தில் இருந்தும் மற்ற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெற்றிருக்கிறார்களோ அவரே (முஸ்லிம்களில் சிறந்தவர்)'' என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர்(ரலி)
நூல் : புகாரி 11,முஸ்லிம் (64)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அமர்ந்திருக்கும் மக்களுக்கு முன்னால் வந்து நின்று, உங்களில் சிறந்தவர் யார்? கெட்டவர் யார்? என்பதை உங்களுக்கு அறிவிக்கட்டுமா? என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் (மக்கள்) அமைதியாக இருந்தார்கள். எனவே, நபியவர்கள் அதே வார்த்தையை மூன்று முறை மீண்டும் கூறினார்கள். அப்போது ஒரு மனிதர், நிச்சயமாக, அல்லாஹ்வின் தூதரே! எங்களில் சிறந்தவர் யார், கெட்டவர் யார் என்பதை எங்களுக்கு அறிவியுங்கள் என்று கூறினார். அதற்கு, உங்களில் எவரிடம் இருந்து நன்மையான காரியங்கள் (மக்களிடம்) எதிர்பார்கப்படுமோ, தீமையான காரியங்கள் குறித்து பயப்படப்படாதோ அவர்தான் உங்களில் சிறந்தவர். மேலும், உங்களில் எவரிடம் இருந்து நன்மையான காரியங்கள் (மக்களிடம்) எதிர்பார்க்கப்படாதோ, தீமைக்கள் காரியங்கள் பயப்படப்படுமோ அவர்தான் உங்களில் கெட்டவர் என்று நபியவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),
நூல் : திர்மிதீ (2189)
பதவியை வெறுப்பவர்கள்
உலக இன்பங்கள் மனிதனை மார்க்கத்தை மறந்து வாழும் மோசமான நிலைக்குத் தள்ளிவிடுகின்றன. ஹஅத்தகைய சுகபோகங்களுள் முக்கிய ஒன்றாக இருப்பது பதவி. பதவி சுகமும் அதை அடைவதற்காக இருக்கும் அளப்பறிய ஆசையும் மனிதர்களை மார்க்கத்தின் வரம்புகளை மீற வைக்கின்றன. நாலுபேராவது நமக்குக் கீழே கட்டுப்பட்டு இருக்க வேண்டும் என்ற பேராசை, அவர்களைப் பொறுப்பில் அல்லது பதவியில் அமரத் துடிக்க வைக்கிறது. நாளடைவில் அதற்காக அநியாயமான காரியங்களில் கூட சகஜமாக இறங்கிவிடுகிறார்கள். எனவே, பதவி மோகத்திற்கு அடிமையாகி விடாமல், அதற்காக அலைந்து திரிபவர்களாக இல்லாமல், தங்களது கடமைகளை சரிவர செய்யும் சிறந்தவர்களாக நாம் இருக்க வேண்டும்.
மக்களை நீங்கள் சுரங்கங்களாகக் காண்கிறீர்கள். அவர்களில் அறியாமைக் காலத்தில் சிறந்தவர்களாக இருந்தவர்கள் இஸ்லாத்திற்கு வந்த பின்பும் சிறந்தவர்களாக இருப்பார்கள்; மார்க்க அறிவைப் பெற்றுக் கொண்டால். இந்த (ஆட்சி அதிகாரத்தின்) விஷயத்தில் மக்களிடையே சிறந்தவர்கள் அவர்களில் அதிமாக இதை வெறுப்பவர்கள் தாம் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: புகாரி (3493)
கடனைத் திருப்பிச் செலுத்துபவர்கள்
இறைவழியில் உயிரை இழந்த தியாகியாக இருந்தாலும், தாம் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தாதவராக இருந்தால், அவர் சொர்க்கம் செல்ல இயலாது என்று இஸ்லாம் எச்சரிக்கிறது. இதன் மூலம் கடனைத் திருப்பிச் செலுத்தாமல் இருப்பது எந்தளவிற்கு மிகப்பெரும் குற்றம் என்பதை விளங்கிக் கொள்ள முடிகிறது. எனவே, நாம் பிறரிடம் பெற்றிருக்கும் கடனை அழகிய முறையில் திருப்பித் தருபவர்களாக இருக்க வேண்டும். நமக்கு உதவிய நல்லுள்ளம் கொண்டவர்களை ஏமாற்றாமல், அவர்களிடம் வாங்கிய கடனை அழகிய முறையில் திருப்பிச் செலுத்தும் நாணயமான மக்களாக இருக்க வேண்டும். இந்தச் சிறப்புக்குரிய செயலை செய்பவர்கள், இறைவனின் பார்வையில் சிறந்தவர்கள் ஆவர்.
நபி (ஸல்) அவர்கள் ஒரு மனிதருக்கு, குறிப்பிட்ட வயதுடைய ஒட்டகம் ஒன்றை (கடனாகப் பெற்றதைத் திருப்பிச் செலுத்தும் வகையில்) கொடுக்க வேண்டியிருந்தது. அதை அவர் (திருப்பிச் செலுத்தும்படி) கேட்டு வந்தார். நபி (ஸல்) அவர்கள் (தம் தோழர்களிடம்) அவருக்கு அதைக் கொடுத்து விடுங்கள்!” என்றார்கள். அந்த வயதுடைய ஒட்டகத்தைத் தேடிய போது, அதைவிட அதிக வயதுடைய ஒட்டகத்தைத் தான் தோழர்கள் கண்டார்கள். அதை கொடுத்துவிடுங்கள்! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அதற்கு அம்மனிதர், எனக்கு நீங்கள் நிறைவாகத் தந்துவிட்டீர்கள். அல்லாஹ்வும் உங்களுக்கு நிறைவாகத் தருவான்’ என்று கூறினார். அப்போது நபி (ஸல்) அவர்கள், அழகிய முறையில் திருப்பிச் செலுத்துபவரே உங்களில் சிறந்தவர் என்றார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா(ரலி)
ஆதாரம் : புகாரி (2390), (2609)
குழப்பங்களைத் தவிர்ப்பவர்கள்
குழப்பம் விளைவிப்பது கொலையைவிடக் கொடியது என்பது குர்ஆனின் போதனை. இதன் மூலம் குழப்பத்தின் கோரமுகத்தை, அதன் விஷத்தன்மையை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. குழப்பம் என்பது குடும்பம், நாடு, சமுதாயம் என்று எந்த இடத்தில் இருந்தாலும் அதை அடியோடு பாழ்படுத்திவிடும். இதையறிந்தும், தங்களது ஆதாயங்களுக்காக மக்களுக்கு மத்தியில் பிரச்சனைகளை, பிணக்குகளை கிளப்பிவிடுபவர்கள் இருக்கிறார்கள். தங்களது சுயநலத்துக்காக குழப்பங்களை ஏற்படுத்துபவர்கள் அல்லது இருக்கும் குழப்பத்தை வளர்த்துவிடுபவர்கள் இருக்கிறார்கள். இவ்வாறு, நம்பிக்கையாளர்கள் ஒருபோதும் இருந்துவிடக் கூடாது. குழப்பமான தருணங்களின்போது அதைத் தீர்ப்பதற்கு, நீக்குவதற்கு முடிந்தளவு முயல வேண்டும். இல்லாவிடின், அதை வளர்த்து விடாமல் அதைவிட்டும் விலகிக் கொள்ள வேண்டும். இது மார்க்கம் காட்டும் சிறப்பான வழிமுறை ஆகும்.
விரைவில் நிறையக் குழப்பங்கள் தோன்றும். (அந்த நேரத்தில்) அவற்றுக்கிடையே (மௌனமாகி) அமர்ந்திருப்பவன் (அவற்றுக்காக) எழுந்து நிற்பவனை விடச் சிறந்தவன் ஆவான். அவற்றுக்கிடையே எழுந்து நிற்பவன் (அவற்றை நோக்கி) நடந்து சென்று விடுபவனை விடச் சிறந்தவன் ஆவான். அப்போது நடந்து சென்று விடுபவன் (அவற்றை நோக்கி) ஓடுபவனை விடச் சிறந்தவன் ஆவான். எவர் அதை அடைகின்றாரோ அது அவரை வீழ்த்தி அழித்துவிட முனையும். அப்போது எவர் புகலிடத்தையோ, அபயம் தரும் இடத்தையோ பெறுகின்றாரோ அவர் அதைக் கொண்டு பாதுகாப்பு பெற்றுக் கொள்ளட்டும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : புகாரி (3601)
ஒரு மனிதர், "அல்லாஹ்வின் தூதரே! மக்களில் சிறந்தவர் யார்?'' என்று கேட்டார். அதற்கு, "அல்லாஹ்வின் பாதையில் தமது உயிராலும் பொருளாலும் போராடுகின்ற இறைநம்பிக்கையாளரே (மக்களில் சிறந்தவர்)'' என்று பதிலளித்தார்கள். "பிறகு யார்?'' என்று அந்த மனிதர் கேட்டார். அதற்கு, "பிறகு (மக்களில் சிறந்தவர் யாரெனில், குழப்பமான நேரங்களில்) மலைக் கணவாய்களில் ஒன்றில் ஒதுங்கி, தம் இறைவனை வழிபட்டவாறு தம்மால் மக்களுக்குத் தீங்கு நேராமல் தவிர்த்து வருகின்ற இறைநம்பிக்கையாளர் ஆவார்'' என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர் : அபூசயீத் அல்குத்ரீ(ரலி)
ஆதாரம் : புகாரி (2786), (3836)
குர்ஆனைக் கற்றுக் கொடுப்பவர்கள்
மனிதர்களை நேர்வழியில் அழைத்துச் செல்வதற்கு அல்லாஹ்வினால் இறுதித் தூதராக நியமிக்கப்பட்டவர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள். அல்லாஹ்விடம் இருந்து அவர்களுக்கு அருளப்பெற்ற அற்புதங்களில் மிகவும் சிறந்தது, திருமறைக் குர்ஆன். இது, சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்துக் காட்டும் ஒப்பற்ற வேதம். திருக்குர்ஆன் போதிக்காமல் மீதமாக விட்டிருக்கும் வழிகாட்டுதல் என்று ஏதுமில்லை. ஆன்மீகம், அரசியல், அறிவியல் என்று அது அனைத்துத் துறைகளைப் பற்றியும் பேசுகிறது. வழிகேடு எனும் இருந்து மீண்டு நேர்வழி பக்கம் பயணிப்பதற்கு ஒளிவீசும் கலங்கரையாக இருக்கும் குர்ஆனைக் கற்று, பிறருக்குக் கற்றுத்தரும் சிறந்த மக்களாக நாம் இருக்க வேண்டும்.
குர்ஆனைத் தாமும் கற்று பிறருக்கும் அதைக் கற்றுக் கொடுத்தவரே உங்களில் சிறந்தவர் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : உஸ்மான் பின் அஃப்பான் (ரலி)
ஆதாரம் : புகாரி (5028)
இணக்கம் கருதி சலாம் சொல்பவர்கள்
நமக்கும் நம்மைச் சுற்றியிருக்கும் மற்றவர்களுக்கும் மத்தியில் எதாதொரு விஷயத்திலும் எந்தவொரு மனஸ்தாபமும் வரவே வராது என்று எவராலும் உறுதியிட்டு கூற முடியாது. காரணம், மனிதர்கள் என்ற அடிப்படையில் நம்மிடம் இருக்கும் குறைகளால் மனக்கசப்புகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இதுபோன்ற தருணங்களில் ஒருவருக்கொருவர் குரோதம் கொண்டு பழிவாங்கும் காரியங்களில் இறங்குபவர்கள் இருக்கிறார்கள். பல நாட்கள் பகைமை கொண்டு வழியில் முறைத்துக் கொள்கிறார்கள்; உறவை நட்பை முறித்துக் கொள்கிறார்கள். பல நாட்கள் பேசாமல் இருக்கிறார்கள். இவ்வாறு இல்லாமல், தவறை மறந்து மன்னித்து முதலில் சலாம் சொல்பவர் சிறந்தவர் என்று மார்க்கம் கூறுகிறது.
ஒரு முஸ்லிம் தம் சகோதரரிடம் (மனஸ்தாபம் கொண்டு) மூன்று நாட்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்ட தன்று. அவர்கள் இருவரும் சந்தித்து இவரை விட்டு அவரும், அவரை விட்டு இவரும் முகம் திருப்பிக்கொள்வர். (இவ்விதம் செய்யலாகாது.) இவர்கள் இருவரில் சலாமை முதலில் சொல்பவரே சிறந்தவர் ஆவார் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஅய்யூப் அல்அன்சாரி (ரலி)
ஆதாரம் : புகாரி (6077), (6237)
படைத்தவனைத் துதிப்பவர்கள்
ஏழு வானங்கள், பூமி மற்றும் அவற்றுள் இருக்கின்ற அனைத்துக்கும் உரிமையாளனாக இருக்கும் ஏக இறைவன், மிகப் பெரியவன். அவனது அனுமதி இல்லாமல் அணுவும் அசையாது. ஆதலால், அவனே அனைத்துப் புகழுக்கும் உரித்தானவன்; தகுதியானவன். அவன் அனைத்து விதமான தேவைகள், பலவீனங்களை விட்டும் பரிசுத்தமானவன்; தூயவன். இதை நினைவில் கொண்டு முஃமின்கள் அவனது திருப்பெயர்களை குறிப்பிட்டு துதிக்க வேண்டும். அவனது அரும் பெருமைகளை மறக்காமல் போற்றிப் புகழ ஹவேண்டும். நித்திய ஜீவனை நினைவு கூறும் பண்பினை கொண்டவர்கள், வாழும் மக்களிலேயே மிகச் சிறந்தவர்கள் என்பதை கீழ்வரும் நபிமொழி மூலம் அறியலாம்.
ஏழைகள் (சிலர்) நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "செல்வச் சீமான்கள் உயர்வான பதவிகளையும் நிலையான இன்பங்களையும் (தட்டிக்)கொண்டு போய்விடுகின்றனர். நாங்கள் தொழுவது போன்றே அவர்களும் தொழுகின்றனர். நாங்கள் நோன்பு நோற்பதுபோன்றே அவர்களும் நோன்பு நோற்கின்றனர். ஆயினும் தங்களது அதிகப்படி யான செல்வங்கள் மூலம் அவர்கள் ஹஜ் செய்கின்றனர்; உம்ரா செய்கின்றனர்; அறப்போருக்காகச் செலவளிக்கின்றனர்; தான தர்மம் செய்கின்றனர். (ஏழைகளாகிய எங்களால் இவற்றைச் செய்ய முடிவதில்லையே)'' என்று கூறினர்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், "நான் உங்களுக்கு ஒன்றைத் தெரிவிக்கட்டுமா? அதை நீங்கள் கடைப்பிடித்தால் (இந்த சமுதாயத்தில்) உங்களை முந்திவிட்ட (செல்வர்)வர்களையும் நீங்கள் பிடித்துவிடலாம். உங்களுக்குப் பின்னால் வரும் எவராலும் உங்களைப் பிடிக்க இயலாது. நீங்கள் எந்த மக்களிடையே வாழ்கிறீர்களோ அவர்களில் சிறந்தவர்கள் ஆவீர்கள். உங்களைப் போன்று மற்றவரும் அதைச் செயல்படுத்தினால் தவிர (அவர்களாலும் அச்சிறப்பை அடைய முடியாது.) (அந்தக் காரியமாவது:) நீங்கள் ஒவ்வொரு தொழுகைக்குப் பின்பும் 33 தடவை தஸ்பீஹ் (சுப்ஹானல்லாஹ்) சொல்லுங்கள்; 33 தடவை தஹ்மீத் (அல்ஹம்துலில்லாஹ்) கூறுங்கள்; 33 தக்பீர் (அல்லாஹு அக்பர்) சொல்லுங்கள்'' என்று கூறினார்கள். நாங்கள் இது தொடர்பாக கருத்து வேறுபாடு கொண்டோம். எங்களில் சிலர் சுப்ஹானல்லாஹ் 33 தடவை, அல்ஹம்துலில்லாஹ் 33 தடவை, அல்லாஹு அக்பர் 34 தடவை கூறவேண்டும்'' என்றனர். ஆகவே நான் நபி (ஸல்) அவர்களிடமே திரும்பி (ச் சென்று இதுபற்றி வினவி)னேன். நபியவர்கள், "சுப்ஹானல்லாஹி வல்ஹம்துலில்லாஹி, வல்லாஹு அக்பர் (அல்லாஹ் தூயவன்; அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும்; அல்லாஹு மிகப் பெரியவன்) என்று 33 தடவை சொல்! இதனால் அவற்றில் ஒவ்வொன்றும் 33 தடவை கூறியதாக அமையும்'' என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : புகாரி (843)
மனைவியரிடம் சிறந்தவர்கள்
ஒருவர், தாம் அவ்வப்போது சந்திக்கிற சமுதாய மக்களிடம் தமது சுய குணங்களை மறைத்து விடலாம். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசி போலியாக நடிக்க முடியும். ஆனால், எப்போதும் தொடர்பு கொள்கின்ற, அடிக்கடி சந்திக்கின்ற தமது குடும்பத்தாரிடம் இப்படி இருக்க முடியாது. அவர்களிடம் தமது உண்மையான பண்புகளை வாழ்நாள் முழுவதும் மறைத்து விட இயலாது. அந்த வகையில், ஒருவருடைய இயல்புகள் குறித்து பிற மக்களை காட்டிலும் அவருடைய வாழ்க்கை துணைவியாக இருப்பவர், அதிகமாக முழுமையாக அறிந்து வைத்திருப்பார் என்பதே உண்மை. இந்த நிலையில், தமது மனைவியிடம் சிறந்த பண்பாளர் என்ற பெயரைப் பெற்றிருக்கும் ஒருவர் நிச்சயம் சிறந்தவர்தான்.
இறை நம்பிக்கை கொண்டவர்களில் முழுமையான இறை நம்பிக்கை கொண்டவர் அவர்களில் நற்குணம் கொண்டவரே! உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவியரிடம் நற்பண்பால் சிறந்து விளங்குபவரே!’என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : திர்மிதி (1082)
உண்மையைப் பேசுபவர்கள்
உண்மை என்பது நன்மையின் பக்கம் வழிகாட்டும்; நன்மை என்பது சொர்க்கத்திற்கு வழிகாட்டும் என்பதை என்றும் நினைவில் கொண்டு நாம் செயல்பட வேண்டும். உண்மைக்கு புறம்பாக பொய்யை மட்டுமே மூலதனமாக கொண்டு வாழ்பவர்கள் உலகெங்கும் இருக்கிறார்கள். உலக வாழ்வின் நலனுக்காக வேண்டி, உண்மையை மறைத்து பொய்யை பேசுபவர்கள், அதைப் பரப்புகிறவர்கள் எங்கும் உள்ளார்கள். இவர்களுக்கு மாற்றமாக, எந்தச் சூழ்நிலையிலும் இக்கட்டான நிலையிலும் உண்மையை உரைப்பவர்களும் இருக்கிறார்கள் என்பதை மறுக்க இயலாது. இதன் இவர்கள் இறைவனிடம் சிறந்த நிலையை அடைவதைப் போன்று நாமும் திகழ, உண்மையை பேசுவதில் உறுதியாக இருக்க வேண்டும்.
நபி (ஸல்) அவர்களிடம் மக்களில் சிறந்தவர் யார்? என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் உண்மை பேசும் ஒவ்வொருவரும் மற்றும் தூய உள்ளம் கொண்டவரும் ஆவர் என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
நூல் : இப்னுமாஜா (4206)
மனவலிமை கொண்டவர்கள்
அல்லாஹ்வின் நாட்டப்படியே அனைத்தும் நடக்கும் என்ற ஆழமான நம்பிக்கை நம்மிடம் இருக்க வேண்டும். அவனது அனுமதி இன்றி எந்தவொரு துன்பமும் சிக்கலும் நம்மை அணுகாது என்ற நம்பிக்கை ஹஇருக்க வேண்டும். முழுமையான நம்பிக்கையாளர்கள், எந்தவொரு பிரச்சனைகள் வந்தாலும் துவண்டு விடாமல் தளர்ந்து விடாமல் படைத்தவனின் மீது ஆதரவு வைத்து செயல்படுவார்கள். எனவே, நமது வாழ்வில் நடந்து முடிந்த துன்பத்தை நினைத்து கவலையில் வீழ்ந்துவிடாமல் மன வலிமை கொண்டவர்களாக இருக்க வேண்டும். எல்லா நிலையிலும் மனதளவிலும் செயலளவிலும் உறுதியாக வலிமையாக இருப்பதற்கு இன்றே சபதம் ஏற்போமாக.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பலமான இறை நம்பிக்கையாளர், பலவீனமான இறை நம்பிக்கையாளரைவிடச் சிறந்தவரும் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான வரும் ஆவார். ஆயினும், அனைவரிடமும் நன்மை உள்ளது. உனக்குப் பயனளிப்பதையே நீ ஆசைப்படு. இறைவனிடம் உதவி தேடு. நீ தளர்ந்துவிடாதே. உனக்கு ஏதேனும் துன்பம் ஏற்படும்போது, "நான் (இப்படிச்) செய்திருந்தால் அப்படி அப்படி ஆயிருக்குமே!'' என்று (அங்கலாய்த்துக்) கூறாதே. மாறாக, "அல்லாஹ்வின் விதிப்படி நடந்துவிட்டது. அவன் நாடியதைச் செய்துவிட்டான்'' என்று சொல். ஏனெனில், ("இப்படிச் செய்திருந்தால் நன்றாயிருந்திருக்குமே' என்பதைச் சுட்டும்) "லவ்' எனும் (வியங்கோள் இடைச்)சொல்லானது ஷைத்தானின் செயலுக்கே வழி வகுக்கும்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : முஸ்லிம் (5178)
தங்கள் மீது நல்ல கண்ணோட்டம் கொண்டிருக்கும் மக்களிடம் சிறந்தவர்களாக இருக்க வேண்டும் என்பதற்காக தங்களை அவர்களுக்கு தோதுவாக மாற்றிக் கொள்ளும் மக்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள். இதற்காக மார்க்கத்திற்கு மாற்றாமாக அவர்கள் விரும்பும் காரியங்களையும் செய்யத் துணிந்து விடுகிறார்கள். இத்தகையவர்கள் இதன் மூலம் இவ்வாறு ஒரு சில மனிதர்களிடம் பாராட்டினைப் பெறலாம். அதேநேரம், இதற்காக இவர்கள் செய்யும் தீமையான அநியாயமான மோசமான காரியங்களின் காரணத்தால் மறுமையில் ஒட்டுமொத்த மக்களுக்கும் முன்னிலையில் பழிப்புக்கும் இகழ்ச்சிக்கும் ஆளாவார்கள்.
எனவே, மார்க்கம் கூறும் செயல்களைச் செய்வதில்தான் உண்மையான சிறப்பு இருக்கிறது. இதன் மூலம் மட்டுமே அல்லாஹ்வும் அவனது தூதரும் ஈருலகிலும் அங்கீகரிக்கும் சிறந்தவர்கள் எனும் பாராட்டும் பாக்கியமும் கிடைக்கும். இதை உணர்ந்து நன்முறையில் வாழ்வோமாக.