பைத்தியங்கள் பல விதம் 13-01-22

பைத்தியங்கள் பல விதம் 

மனித வாழ்வில் மூன்று பருவங்கள் உண்டு.மூன்று பருவங்களைக் கொண்டு மனித வாழ்வை இறைவன் அமைத்திருக்கிறான். குழந்தைப்பருவம்இளமைப்பருவம்முதுமைப்பருவம். இறைவன் தந்திருக்கிற இந்த மூன்று பருவங்களில் மிக முக்கியமான எல்லா வகையான சிறப்பம்சங்களைப் பெற்ற எல்லா வகையான பாக்கியங்களையும் பெற்ற ஒரு பருவம் இளமைப்பருவம்.ஏனென்றால் குழந்தைப் பருவம் விளையாட்டுப் பருவம். அதில் கொஞ்சம் ஆற்றல் இருக்கும். ஆனால் அதற்குத்தேவையான அறிவும் பக்குவமும் இருக்காது. முதுமைப்பருவத்தில் கொஞ்சம் அறிவும் பக்குவமும் இருக்கும்.ஆனால் அதனை செயல்படுத்துவதற்குத் தேவையான ஆற்றல் இருக்காது. ஆனால் அறிவும் பக்கவமும் ஆற்றலும் நிறைவாக ஒரு சேர அமையப் பெற்றிருக்கிற ஒரு பருவம் வாலிபப்பருவம் தான்.எனவே குழந்தைப் பருவம் அறியாமைக்கும் விளையாட்டுக்கும் சொந்தமானது,வயோதிகப்பருவம் இயலாமைக்கும் பலவீனத்திற்கும் சொந்தமானது, வாலிபம் தான் ஆற்றலுக்கும் சாதனைக்கும் சொந்தமானது. 

இன்னும் அதைத் தொடாதவர்கள் சீக்கிரம் தொட வேண்டுமே என்று துடிக்கிற பருவமும் இளமைப்பருவம் தான்.அதைக் கடந்து வந்தவர்கள் கடந்து விட்டோமே என்று ஏங்குகிற பருவமும் இளமைப்பருவம் தான்.மீசை முளைக்காத சின்ன பசங்களுக்கு சீக்கிரம் அந்த பருவத்துக்கு வரனுமேன்னு ஆசையா இருக்கு.தள்ளாத வயதை அடைந்து விட்டவர்களுக்கு மீண்டும் அந்த பருவத்துக்கு திரும்பனுமேன்னு ஆசையா இருக்கு.என் வாலிபமும் என் இளமையும் திரும்ப வேண்டுமே என்று ஆசைப்படாதவர்கள் உலகில் யாரும் இருக்க முடியாது. அந்தளவு மிகவும் பாக்கியம் பெற்ற பருவம் இந்த இளமைப்பருவம்.

உலகில் சாதனையாளர்களாக வெற்றியாளர்களாக  வலம் வரக்கூடிய அத்தனை பேரும் அந்த சாதனைக்கான, அந்த வெற்றிக்கான விதையைத் தூவியது தங்களின் வாலிபப்பருவத்தில் தான். தங்கள் சாதனைக்கான பயணத்தை, தங்கள் வெற்றிக்கான பயணத்தை வாலிபத்திலிருந்து தான் தொடங்கினார்கள்.தங்கள் வெற்றிக்கான முதற்படிக்கட்டாக வாலிபத்தைத்தான் ஆக்கிக் கொண்டார்கள்.

எனவே இந்த வாலிபப்பருவம் எதையும் சாதிக்கிற பருவம்நினைத்ததை அடைந்து கொள்கிற ஆற்றல் பெற்ற பருவம்.எதையும் எதிர்கொள்கிற திறன் பெற்ற பருவம்.

اَللّٰهُ الَّذِىْ خَلَقَكُمْ مِّنْ ضُؔعْفٍ ثُمَّ جَعَلَ مِنْ بَعْدِ ضُؔعْفٍ قُوَّةً ثُمَّ جَعَلَ مِنْ بَعْدِ قُوَّةٍ ضُؔعْفًا وَّشَيْبَةً  ‌ يَخْلُقُ مَا يَشَآءُ ‌ وَهُوَ الْعَلِيْمُ الْقَدِيْرُ‏

அல்லாஹ் உங்களை (ஆரம்பத்தில்) பலவீனமான நிலைமையில் உற்பத்தி செய்கிறான். அந்தப் பலவீனத்திற்குப் பின்னர் அவனே (வாலிப) பலத்தையும் கொடுக்கிறான். அந்த பலத்திற்குப் பின்னர் வயோதிகத்தையும்பலவீனத்தையும் கொடுக்கிறான். (இவ்வாறெல்லாம்) அவன்தான் விரும்பியவாறு உங்களை ஆக்குகிறான். அவன் (அனைத்தையும்) நன்கறிந்தவனும் மிக்க ஆற்றலுடையவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் : 30:54)

இரண்டு பலவீனமான பருவத்திற்கு மத்தியில் மிகவும் பலம் பெற்ற பருவம் என்று இளமைப் பருவத்தைத்தான் அல்லாஹ் அடையாளம் காட்டுகிறான்.

Give me the Youth I SHALL make heaven on earth”  “என்னிடம் துடிப்புள்ள  இளைஞர்களைக் கொடுங்கள்.  நான்  இந்த உலகத்தை  சுவர்க்கப் பூஞ் சோலையாக மாற்றிக் காண்பிக்கிறேன் என்றான் ஓர் ஆங்கிலேய  அறிஞன்.  என்னிடம் நூறு இளைஞர்களைக் கொடுங்கள். நான் வலிமையான பாரதத்தை உருவாக்கிக் காட்டுகிறேன்என்றார் விவேகானந்தர். 


عن عمر بن الخطاب ، أنه قال لأصحابه : تمنوا ، فقال رجل : أتمنى لو أن لي هذه الدار مملوءة ذهبا أنفقه في سبيل الله . ثم قال : تمنوا ، فقال رجل : أتمنى لو أنها مملوءة لؤلؤا وزبرجدا وجوهرا أنفقه في سبيل الله وأتصدق . ثم قال : تمنوا ، فقالوا : ما ندري يا أمير المؤمنين ، فقال عمر : أتمنى لو أن هذه الدار مملوءة رجالا مثل أبي عبيدة بن الجراح .  حلية الاولياء

ஒரு நாள் உமர் ரலி அவர்கள் தன் தோழர்களிடத்தில் உங்களது ஆசைகளைக் கூறுங்கள் என்றார்கள். ஒரு தோழர்இந்த வீடு முழுக்க தங்க கட்டிகள் இருக்க வேண்டும். அதை நான் அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்ய வேண்டும் என்றார். பின்பு இன்னொரு தோழர்இந்த வீடு முழுக்க முத்து மரகதம் மாணிக்கம் இருக்க வேண்டும். அதை நான் அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்ய வேண்டும் என்று கூறினார். அப்போது உமர் ரலி அவர்கள்அபூஉபைதாவைப் போன்ற மனிதர்கள் இந்த வீடு முழுக்க நிரம்பி இருக்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன் என்றார்கள். (ஹுல்யத்துல் அவ்லியா)

வாலிபர்களால் தான் இந்த தீன் உயிர் பெற்றது. இந்த தீனுக்கு உரம் சேர்த்தவர்கள் வாலிபர்கள் தான். இஸ்லாமிய  வரலாற்றைப் புரட்டிப்பார்த்தோமேயானால் அண்ணலம் பெருமானார் நபி  அவர்களின் 23 ஆண்டு கால நபித்துவ வாழ்க்கையில்  அவர்களோடு இந்த சத்திய சன்மார்க்கத்தை  நிலை  நிறுத்தும்  பணியில்  முன்  வரிசையில் நின்றவர்களில் அதிகம்  இளைஞர்கள் தான் என்பதை  யாரும் மறுக்க முடியாது.

இளமைப்பருவம் துடிப்புள்ள பருவம்,ஆற்றல் மிக்க பருவம்,ஒரு சமூகத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்க பருவம் என்பதைத்தான் இதுபோன்ற விஷயங்கள் நமக்கு வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது. அந்த வாலிபத்தை சரியாக பயன்படுத்த வேண்டும் என்று நபி  அவர்கள் கூறினார்கள்.


சொர்க்கம் செல்வதற்காக அல்லாஹ் தேர்வு செய்த பருவமும் இந்த இளமைப்பருவம் தான். ஒருவர் 40 வயதில் மரணித்தாலும் 50 வயதில் மரணித்தாலும் 80 வயதில் மரணித்தாலும் அவர் சொர்க்கம் செல்வது 33 வயதில் தான்.

يدخلُ أهلُ الجنَّةِ الجنَّةَ جُرْدًا مُرْدًا مُكحَّلِينَ أبناءَ ثلاثينَ أو ثلاثٍ وثلاثينَ سنةً

சொர்க்கவாதிகள் சொர்க்கத்தில் மீசை தாடி முளைக்காத கண்ணில் சுர்மா இடப்பட்ட 33 வயதுள்ள நிலையில் நுழைவார்கள். (திர்மிதி 2545)

எனவே எல்லா வகையான பாக்கியங்களையும் அருள் வளங்களையும் பெற்ற பருவம் இந்த இளமைப்பருவம் தான்.

வாழ்க்கையில் எண்ணற்ற சாதனைகளை செய்த எண்ணற்ற வெற்றிகளைப் பெற்ற சமூகத்திற்காக உழைத்த பாடுபட்ட அல்லாஹ்விற்காக தங்களை அர்பணித்த எத்தனையோ இளைஞர்கள் வாலிபர்கள் வரலாற்றில் இடம் பிடித்திருக்கிறார்கள்.குர்ஆனிலும் இடம் பிடித்திருக்கிறார்கள்.

இணைவைப்பின் கூடாரத்தில் பிறந்து   இளமையின் துவக்கத்தில் படைப்புக்களை ஆய்வு செய்து அதன் வழியே படைத்தவன் யார் என்பதை தெரிந்து கொண்டு உலகத்தையே ஆட்சி செய்த கொடுங்கோலன் நம்ரூதுக்கு முன் தன் ஆணித்தரமான கொள்கையை நிலைநாட்டி முஸ்லிம்களுக்கெல்லாம் முன்மாதிரியாக இருந்த இப்றாஹீம் நபி ஒரு இளைஞர் தான்.

தவறு செய்வதற்கு ஒரு சின்ன வாய்ப்பு கிடைக்காதா என்று இன்றைய இளைஞர்கள் காத்துக் கிடக்கின்ற போது தவறில் ஈடுபடுவதற்கு எல்லாவகையிலும் வாய்ப்பும் சந்தர்ப்பமும் கிடைத்த போதும் அதில் ஈடுபடாமல் இதை விட எனக்கு சிறையே விருப்பமானது என்று கூறி பத்தினித்தனத்திற்கும் மேலான ஒழுக்கத்திற்கும் சிறந்த உதாரணமாய் விளங்கிய யூசுப் நபி ஒரு இளைஞர் தான்.

ஒரு காலத்தில் ஒரு சமூகமே தவறான கொள்கையில் இருந்த போது தங்கள் ஈமானிய கொள்கைக்காக அந்த ஊரை எதிர்த்து போராடி இறுதியில் அந்த ஊரை விட்டே கிழம்பி உண்மையான ஈமானுக்கும் உறுதியான கொள்கை கோட்பாடுகளுக்கும் முன் உதாரணமாய் திகழ்ந்து குர்ஆனில் தங்கள் வரலாறுகளை பதிவு செய்திருக்கிற கஹ்ஃப் வாசிகள் இளைஞர்கள் தான்.

இப்படி எத்தனையோ இளைஞர்கள் எத்தனையோ வாலிபர்கள்  வரலாற்றின் வைர வரிகளாலும் குர்ஆனின் சத்திய வார்த்தைகளாலும் அலங்கரிக்கப்பட்டு இன்றைக்கும் நம் மனதில் நீங்கா இடம் பெற்றிருக்கிறார்கள்.

இந்த நேரத்தில் இன்றைய வாலிபர்களை நாம் யோசித்துப் பார்க்க வேண்டும். சாதனைகளுக்கும் மகத்தான ஆற்றலுக்கும் சொந்தமான வாலிபப்பருவத்தை இன்றைக்குள்ள வாலிபச் சமூகம் எதில் பயன்படுத்துகிறார்கள் என்பது வெட்ட வெளிச்சமானது. வீண் விளையாட்டுக்களிலும் கூத்து கும்மாளங்களிலும் வீணான காரியங்களிலும் தங்கள் வாலிபத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அல்ஜுனூனு ஃபுனூனு என்று ஒரு வார்த்தை சொல்வார்கள். பைத்தியங்கள் பல வகை.இன்றைக்குள்ள வாலிபர்களுக்கு இந்த வார்த்தை சரியாகப் பொருந்தும். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விஷயத்தில் பைத்தியமாக இருக்கிறார்கள். மொபைல் பைத்தியங்களாக, இன்டர்நெட் பைத்தியங்களாக, கேம்ஸ் - விளையாட்டுப் பைத்தியங்களாகசினிமா பைத்தியங்களாக, போதைப் பைத்தியங்களாக, காதல் பைத்தியங்களாக, இப்படி இன்றைக்குள்ள வாலிபச் சமூகம் பல்வேறு விஷயங்களில் பைத்தியம் பிடித்து அலைகின்றது.

கடந்த இரண்டு மூன்று நாட்களாக அனைத்து மீடியாக்களிலும் இரண்டு செய்திகள் வலம் வருவதைப் பார்த்திருப்போம். ஒன்று சேலத்தில் பிரதீப் என்ற வாலிபர் சமீபத்தில் வெளியான ஒரு சினிமாவைப் பார்ப்பதற்கு சென்று கதவு மேல் ஏறி கீழே விழுந்ததில் அவரின் கால் முறிந்து விட்டது. பக்கத்தில் இருந்தவர்கள் ஆம்புலன்ஸை வரவழைத்து அவனை சிகிச்சைக்காக அனுப்ப முயற்சித்த போது முடியாது, நான் இந்த சினிமாவின் முதல் காட்சியைப் பார்க்காமல் இந்த இடத்தை விட்டு நகர மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்தார். அவரை மிரட்டி அடித்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றால் அங்கும் சென்று தன் கால் உடைந்ததைக் கூட பொருட்படுத்தாமல் அந்த சினிமா நடிகரின் பெயரைச் சொல்லிக் கொண்டிருந்தார். உனக்கு உன் குடும்பம் முக்கியமில்லையா? உன் பெற்றோர்கள் முக்கியமில்லையா? என்று கேட்டதற்கு எனக்கு என் குடும்பத்தை விட என் பெற்றோரை விட அவர் தான் முக்கியம் என்று அந்த சினிமா நடிகரைக் குறிப்பிட்டுச் சொன்ன செய்தி ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. மட்டுமல்ல, முதல் காட்சியைத்தான் பார்க்க முடிய வில்லை, இரண்டாவது காட்சியையாவது பார்த்து விட வேண்டும் என்று மருத்துவமனையிலிருந்து தப்பித்து சென்றது அதில் மிகவும் ஹைலட்டானது.

இரண்டாவது செய்தி, சென்னை கோயம்பேடு பகுதியில் சினிமா பார்ப்பதற்காக சென்ற பரத்குமார் என்ற ஒரு வாலிபர் லாரி மீது ஏறி ஆட்டம் போட்டதில் கீழே விழுந்து உயிரிழந்தார். நம் இஸ்லாமிய வாலிபர்களும் அவர்களோடு இணைந்து கொண்டு ஆட்டம் போடுவதும் கட் அவுட் வைப்பதும் கேக் வெட்டி கொண்டாடுவதும் மிகவும் வேதனை தரும் செய்தி.

 இன்றைக்குள்ள சூழல் என்னவென்றால் பெற்றோர்கள் 1000 ரூபாயை வாங்குவதற்காக நியாய விலை கடையில் வரிசையில் நிற்கிறார்கள். ஆனால் பிள்ளைகள் அந்த 1000 ரூபாயை ஹராமான வழியில் செலவு செய்வதற்காக வரிசையில் நிற்கிறார்கள் என்று ஒருவர் அழகாக எழுதியிருந்தார்.அந்த வார்த்தை உண்மையானது.

அந்தளவு இன்றைக்குள்ள வாலிபர்கள் எதைப் பற்றியும் யோசிக்காமல் எந்த இலட்சியமும் இல்லாமல் குடும்பத்தைப் பற்றி யோசிக்காமல்  தான்தோன்றித்தனமாக சினிமா நடிகர்களுக்குப் பின்னாலும் போதைப் பொருட்களுக்குப் பின்னாலும் போயிக் கொண்டிருக்கிறார்கள்.     

இந்த நேரத்தில் நபி  அவர்களின் காலத்தில் வாழ்ந்த வாலிபர்களை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். அவர்கள் முழுக்க முழுக்க தங்கள் உள்ளங்களில் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் சுமந்திருந்தார்கள். இன்றைக்குள்ள வாலிபர்கள் காதல் மயக்கத்தில் நீ மழையில் நனைந்தால் எனக்கு ஜலதோசம் பிடிக்கிறது என்று அந்தப் பெண்ணைப் பார்த்துச் சொல்கிறார்கள். ஆனால் இதை விட பன்மடங்கு உண்மையான காதலையும் பிரியத்தையும் சத்திய ஸஹாபாக்கள் நபி  அவர்களின்  மீது கொண்டிருந்தார்கள்.

عن عبد الله بن عامر بن ربيعة، قال: سمعت عائشة رضي الله عنها، تقول: كان النبي صلى الله عليه وسلم سَهِر، فلما قدم المدينة، قال: "ليت رجلاً من أصحابي صالحاً يحرسني الليلة"، إذ سمعنا صوت سلاح، فقال: "من هذا؟"، فقال: أنا سعد بن أبي وقاص جئت لأحرسك، ونام النبي صلى الله عليه وسلم

நபி  அவர்கள் மதீனாவுக்கு வந்த பின்முதலில் இரவில் கண் விழித்திருந்தார்கள். மதீனாவுக்கு வந்து சிறிது காலம் கழித்து, ‘என் தோழர்களிடையே எனக்கு இரவில் காவல் காப்பதற்கு ஏற்ற மனிதர் ஒருவர் இருந்தால் நன்றாயிருக்குமே” என்று கூறினார்கள். அப்போது நாங்கள் ஆயுதத்தின் ஓசையைக் கேட்டோம். நபி  அவர்கள், ‘யாரது?’ என்று கேட்டார்கள். வந்தவர், ‘நானே ஸஅத் இப்னு அபீ வக்காஸ். தங்களுக்குக் காவல் இருப்பதற்காக வந்துள்ளேன்” என்று கூறினார். பிறகு நபி  அவர்கள் (நிம்மதியாக) உறங்கினார்கள். (புகாரி 2885)

இன்றைக்கு பாதுகாப்பிற்கு ஒரு தோழர் வேண்டுமே என்று நபி  அவர்கள் எண்ணுகிறார்கள். அதேவேலையில் நபியவர்களைப் பாதுகாக்க வேண்டுமே என்ற எண்ணம் அந்த நபித்தோழருக்கு ஏற்படுகிறது. இது தான் ஸஹாபாக்கள் நபியவர்களை நேசித்த விதம்.


படைத்த இறைவன் எம்முடைய உடல் உறுப்புகளை தவறான செயல்களை செய்வதை விட்டும் பாதுகாக்குமாறு ஏவியிருக்கிறான். அவ்வாறு ஒவ்வொரு மனிதர்களும் தவறான காரியங்களை செய்வதை விட்டும் உடல் உறுப்புகளை பாதுகாப்பதானது அல்லாஹ் தந்த அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துவதாகப் பார்க்கப்படுகின்றது. இப்படிப்பட்ட இந்த அருட்கொடைகளை பாவ காரியங்களின் பக்கம் திருப்புபவர்களை அல்லாஹ் கடுமையான வேதனையைக் கொண்டு எச்சரிக்கை செய்திருக்கிறான்.

அல்லாஹ் தந்த உறுப்புகளில் முக்கியானவைகள்தான் செவிப்புலனும் பார்வைப்புலனுமாகும். இந்த இரண்டும் மனிதனது உள்ளத்தை தவறான பாதையின் பக்கம் அழைத்துச் செல்பவைகளாக இருந்து கொண்டிருக்கின்றன. அல்லாஹ்வுத்தஆலா அவன் தந்த உறுப்புகளை எப்படி பயன்படுத்தினோம் என்று மறுமையில் விசாரிக்க இருக்கிறான்.

“நிச்சயமாக செவிப்புலன்கள், பார்வைப்புலன்கள் உள்ளங்கள் இவை ஒவ்வொன்றும் அவைகள் பற்றி விசாரிக்கப்பட இருக்கின்றன” (ஸுரதுல் இஸ்ரா:36)
என்று அல்லாஹ் கூறியிருக்கிறான்.

இமாம் இப்னுல் கையும் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள்

“உடல் உறுப்புகள் ஏழாகும். அவைகளாவன: கண்கள், காதுகள், வாய், மர்ம உறுப்பு, கைகள், கால்களாகும். இந்த உறுப்புகள் வெற்றிக்கும் கைசேதத்துக்கும் மத்தியில் இணைக்கப்பட்டிருக்கின்றன. யார் கவனமில்லாமல் அவைகளை பாதுகாக்கவில்லையோ அவன் கைசேதத்திற்குரியவனாவான். யார் அவைகளை கண்காணித்து பேணி பாதுகாத்து வருகிறாரோ அவர் வெற்றி பெற்றவராவார். அந்த உறுப்புகளை பாதுகாப்பது நலவுகளின் அஸ்திவாரமாகும். அவைகளை பாதுகாக்காமல் புறக்கணிப்பது எல்லா தீங்குகளுக்குறிய அஸ்திவாரமாகும். அல்லாஹ் கூறுகிறான்
“விசுவாசிகள் தங்களது பார்வைகளை தாழ்த்திக் கொள்ளுமாறும் மர்ம உறுப்புகளை பாதுகாக்குமாறும் (நபியே) நீர் கூறுவீராக…. (ஸூரதுன் நூர்30)”
(இஹாததுன் லிஹான்:1/80)

மேற்கண்ட அல்குர்ஆன் வசனத்தில் சொல்லப்படுகின்ற பார்வையை தாழ்த்துதல், மர்ம உறுப்பைப் பாதுகாத்தல் என்ற விடயங்களை ஒன்று சேர்த்து பார்க்கின்ற போது பார்வையை தாழ்த்துவதானது மர்ம உறுப்பை பாதுகாப்பதற்குரிய காரணியாக இருந்து கொண்டிருக்கின்றது. பார்வையை தவறான பாதையில் செலுத்துவது மானக்கேடான காரியங்கள் இடம்பெறுவதற்குரிய காரணியாக அமையும் என்ற செய்தியை சுட்டிக் காட்டியிருக்கிறது.

அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள்.
“கண்ணுடைய விபச்சாரம் தவறான விடயங்களை பார்ப்பதாகும். நாவினுடைய விபச்சாரம் கெட்ட வார்த்தைகளைப் பேசுவதாகும். கையினுடைய விபச்சாரம் மோசமானவைகளை தொடுவதாகும். காலினுடைய விபச்சாரம் மோசமானவைகளின் பக்கம் நடந்து செல்வதாகும். உள்ளம் ஆசை கொள்கின்றது. மர்ம உறுப்பு அதனை உண்மையாகவும் பொய்யாகவும் ஆக்குகின்றது” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (புஹாரி:2643, முஸ்லிம்:2657)

இமாம் அல் அமீன் அஷ்ஷின்கீதீ ரஹிமகுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்

“இந்த ஹதீஸில் சொல்லப்படுகின்ற “கண்ணுடைய விபச்சாரம் தவறான விடயங்களை பார்ப்பதாகும்” என்ற செய்தியில் வருகின்ற கண்ணுடைய விபச்சாரம் என்பது ஹலாலாக்கப்படாதவைகளை பார்ப்பைக் குறித்து நிற்கின்றது. எனவேதான் இப்படிப்பட்டவைகளை பார்ப்பது ஹராம் என்பதற்கும் இவைகளிலிருந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்குரிய தெளிவான ஆதாரமாக இது இருந்து கொண்டிருக்கின்றது. இந்த நபிமொழிகள் இது போன்ற அதிகமான தகவல்களை தருகின்றன.

(மோசமான) பார்வைகள் விபச்சாரத்திற்குரிய காரணம்தான் என்பது அறியப்பட்ட விடயமாகும். உதாரணத்திற்கு பார்வைகளில் அதிகமானவைகள் அழகான பெண்ணின் பால் செல்கின்றன. அதன் காரணமாக சிலவேளைகளில் அந்தப் பெண்ணை நேசிப்பது அவனுடைய உள்ளத்தில் உருவாகி அது அவனை அழிவின் பக்கம் செல்வதற்கும் காரணமாக அமைகிறது. – அல்லாஹ் எங்களைப் பாதுகாப்பானாக- எனவேதான் (தவறான) பார்வைகள் விபச்சாரத்திற்குரிய ஊடகங்களாகும். (அழ்வாஉல் பயான் 5/510)

எனவேதான் இப்படியான ஒவ்வொரு செய்திகளையும் நுணுக்கமாக வசிக்கின்ற போது மனிதனை தவறான நடத்தைகளுக்கு அழைத்து செல்பவைகளாக கண்களும் காதுகளும் காணப்படுகின்றன. அவைகளைக் கொண்டு மனிதன் தவறான ஆபாசமான விடயங்களைப் பார்ப்பதானது, கேட்பதானது மனிதனை பாவத்தின் பால் அழைத்து செல்கின்றன.

அந்தடிப்படையில்தான் இன்றைய முஸ்லிம்கள் எந்தவொரு வயது வித்தியாசமுமின்றி திரைப்படங்கள் சினிமாக்களுக்கு அடிமையாகி இருக்கிறார்கள். சினிமாக்கள் ஆபாசம் நிறைந்ததாகவும், பெண்கள் அரைகுறை ஆடைகளுடன் நடிப்பததனாலும் மனித உள்ளங்களில் ஒரு விதமான தவறான எண்ணங்களை அது தோற்றுவிக்கின்றன.

ஆகவேதான் முஃமினான ஆண்களையும் பெண்களையும் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு அல்லாஹ் கூறி இருப்பதனால் சினிமாக்கள் பார்ப்பது முஃமின்கள் மீது ஹராமான ஒன்றாக காணப்படுகின்றது.


ஆன்டனி குயின் அழுத்தமான வார்த்தை

சினிமாத் துறையின் சர்வதேச உயர் விருதாகிய ஆஸ்கார் விருது பெற்ற ஆன்டனி குயின் (Antony Queen) சினிமா பற்றிச் சொல்லும்போது, “சினிமா என்பது கொச்சைத்தனம் கோலோச்சும் களம்” (cinema is the area of the vulgarity) என்றார்.

நடிப்புத் துறையில் நடைபெறும் அவலங்கள், ஒழுக்கச் சிதைவுகள், கோடிகளில் பணம் புரண்டும் நிம்மதியற்ற வாழ்க்கை, தற்கொலைகள், அதிகமான விவாகரத்துகள், ஆபாசங்கள், இயற்கையாக ஏற்படக்கூடிய காம உணர்வை முக்கால் நிர்வாணத்துடன் நடித்து விரசத்தை தூண்டி பணத்துக்காக எதையும் செய்யும் நடிகைகள், மனிதனை மிருகமாக்கும் குரூர சிந்தனை கொண்ட வசனங்கள், இரட்டை அர்த்தம் கொண்ட ஆபாச வசனங்கள், ஏகத்துவத்துக்கே வேட்டு வைக்கும் பாடல் வரிகள், தீவிரவாத செயல்களுக்கு வழிவகுக்கும் சண்டைக் காட்சிகள், சினிமாவைப் பார்த்து கொலை செய்தேன் என்று கூறும் வாலிபர்கள்.. அப்பப்பா பட்டியல் நீள்கிறது! இதுதான் இன்றைய சினிமாவின் எதார்த்த நிலை என்பதை யாராலும் மறுக்க முடியாது.

ஆபாசத்தின் இருப்பிடம் சினிமா. ஆபாசத்தை உற்று நோக்கும் ஒருவனின் கடைசி நிலை கண்டிப்பாக விபச்சாரமாகத்தான் இருக்கும். தொடர்ந்து சினிமா பார்க்கும் ஒருவன் கடைசி வடிகால் விபச்சாரம்.

وعن أبي هريرة رضي الله عنه إن النبي صلى الله عليه وسلم قال : " لا يزني الزاني حين يزني

‘விபச்சாரனோ, விபச்சாரியோ முஃமினான நிலையில் இருக்கும்போது விபச்சாரம் செய்வதில்லை’ எனற ஹதிஸை இந்த இடத்தில் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.


சாமானியர்கள் முதல் சாமியார்களிடம் வரை விபச்சாரம் பெருகி வருவதைப் பார்க்கும் போது எதிர்கால சமுதாயம் பற்றிய அக்கறை கவலை கொள்ளச் செய்கிறது.
 “விபசாரத்தை ஒழிக்க முடியாவிட்டால் அதை சட்டபூர்வமாக்க வேண்டியது தானே?”

 என்று அண்மையில் உயர்நீதிமன்றம் கூறியதை இங்கு நினைவு கொள்ள வேண்டியது அவசியம். இது சினிமா செய்த சாதனை.

عن أبي هريرة، رضي الله عنه، قال: قال رسول الله صلى الله عليه وسلم: "كُتِبَ على ابن آدم حَظّه من الزنى، أدرَكَ ذلك لا محالة. فَزنى العينين: النظر. وزنى اللسان: النطقُ. وزنى الأذنين: الاستماع. وزنى اليدين: البطش

‘கண்ணால் பார்ப்பது கண் செய்யும் விபச்சாரம். காதால் கேட்பது காது செய்யும் விபச்சாரம், கையால் தொடுவது கை செய்யும் விபச்சாரம். 

 இவை எல்லாவற்றையும் மர்மஸ்தான உறுப்பு உண்மைப்படுத்தும் அல்லது ஒதுக்கித் தள்ளிவிடும்’ – ஹதீஸின் சுருக்கம். 


சினிமாவில் நடிப்பவர்கள், மனித சமுதாயம் முழுவதையும் அழித்துக் கொண்டிருக்கிறார்கள்.

قَالَ رَبِّ بِمَا أَغْوَيْتَنِي لَأُزَيِّنَنَّ لَهُمْ فِي الْأَرْضِ وَلَأُغْوِيَنَّهُمْ أَجْمَعِينَ

“நான் கட்டாயம் பூமியில் மனிதர்களுக்கு (தவறான வழியினை) அழகு வாய்ந்ததாகக் காட்டி, அவர்கள் அனைவரையும் வழிதவறச் செய்வேன்” (15:39) 

என்று திருக்குர்ஆனில் ஒரு வசனம் இடம்பெறுகிறது. இது சொர்க்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டபோது ஷைத்தான் அல்லாஹ்விடம் போட்ட சபதம் ஆகும்.

 ஆதமின் புதல்வர்களுக்கு அசிங்கமானவற்றை அழகாக்கிக் காட்ட இப்லீஸ் கையிலெடுத்துள்ள சாதனங்களில் மிக முக்கியமானது தொலைக்காட்சியும் சினிமாவும் என்று சொல்லலாம்

சைத்தானின் ஆயுதம்.

அல்லாவுக்கு மாறு செய்த ஷைத்தான் அல்லாஹ் பூமிக்கு விரட்டிய சமயத்தில் அவன் இறைவனிடம் சில உதவிகள் வேண்டினான் அல்லாஹ் அவனிடம் உனது வீடு குளியல் அறை என்றான் கடைதெருக்கள் உனது இருப்பிடமாகும் என்றும் பிஸ்மில்லாஹ் சொல்லப்படாத பண்டங்கள் உனது உணவு என்றும் போதை தருபவைகள் உனது குடிபானம் என்றும் கூறினான் இறைவா எனக்கு அழைப்பாளரை தா என்ற பொழுது அல்லாஹ் அவனிடம் கருவிகள் தான் உனது அழைப்பாளன் என்றான் எனக்கு வேதம் கொடு என்று ஷைத்தான் கேட்க அல்லாஹ் சொன்னான் தீய கவிதைகள் தான் உனது வேதம் என்றான்

 ஒருவன் இசைப்பாட்டுக்களைக் கொண்டு தனது சப்தத்தை உயர்த்தினால் அல்லாஹ் இவன் பக்கம் இரு ஷைத்தான்களை அனுப்பிவைக்கின்றன். அவ்விருவரும் அவனுடைய தோல் புஜத்தில் அமர்ந்து தனது இரு கால்களைக் கொண்டும் அவனுடைய நெஞ்சில் அடித்து தடவுகின்றார்கள் அவன் தனது சப்தத்தை நிறுத்தும் வரை இவ்வாறு செய்கின்றார்கள்

நூல் இஹ்யாஉலூமுத்தீன்பாகம்3                                         



மனிதன் பொன்னான காலத்தையும் வாழ்வையும் வீணாக்கி நல்லோர்களின் உள்ளத்தை புண்ணாக்கிய தீமைகளில் இன்று முதலிடத்தில் இருப்பது சினிமாவாகும் அல்லாவை பயந்து ஒழுக்கமான வாழ்வை உறுதிகொண்டு வெளியே சுற்றாமல் வீட்டில் அடக்கமாக இருக்கும் பெண்களையும் கெடுக்கதுடிக்கும் நாசகார சக்தி இந்த சினிமா

நம் குழந்தைகளின் நாவிலும் உள்ளத்திலும் நாம் அல்லாவை கொண்டு சேர்க்கும் முன்பே இதனுடைய விஷம் அவர்களின் உடல் முழுவதும் கலந்து அந்த பிஞ்சு உள்ளங்களை நஞ்சாக்கிவிடுகிறது இதயத்தை கோரமாக்கும்

இதனுடைய தீமைகளை நாம் அறிந்து மனித சமூகத்தை காப்பது நம்மீது கடமையாகும் திருமறையில் இறைவன் வழி கேடர்கள் தான் தீயகவிஞர்களை பின்பற்றுவார்கள் என்று கூறுவதின் மூலம் இசைப்பிரியர்களை கண்டிக்கின்றான் இங்கு சொல்லப்படுகின்ற விஷயங்கள் சினிமாவையும் இசையையும் கண்டிக்கின்றது அது டிவி. செல்போன். நெட் ரேடியோ. இவற்றில் எதன் மூலம் பார்கப்பட்டாலும் சரியே; 
                                             
இசையும். நபியின் கோபமும்;

 தொலைக்காட்சியில் வரும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் ஆடல், பாடல், இசை ஆகியவற்றுடனேயே ஒளிபரப்பாகிறது. இசை என்பது மார்க்கத்தின் பார்வையில் தடை செய்யப்பட்ட ஒன்றாகும்.

عن أَبي مَالِك الْأَشْعَرِيّ عن النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ لَيَكُونَنَّ مِنْ أُمَّتِي أَقْوَامٌ يَسْتَحِلُّونَ الْحِرَ وَالْحَرِيرَ وَالْخَمْرَ وَالْمَعَازِفَ وَلَيَنْزِلَنَّ أَقْوَامٌ إِلَى جَنْبِ عَلَمٍ يَرُوحُ عَلَيْهِمْ بِسَارِحَةٍ لَهُمْ يَأْتِيهِمْ يَعْنِي الْفَقِيرَ لِحَاجَةٍ فَيَقُولُونَ ارْجِعْ إِلَيْنَا غَدًا فَيُبَيِّتُهُمْ اللَّهُ وَيَضَعُ الْعَلَمَ وَيَمْسَخُ آخَرِينَ قِرَدَةًوَخَنَازِيرإِلَىيَوْمِالْقِيَامَةِ

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் சமுதாயத்தாரில் சில கூட்டத்தார் தோன்றுவர். அவர்கள் விபசாரம் புரிவது, (ஆண்கள்) பட்டுத்துணி அணிவது, மது அருந்துவது, இசைக் கருவிகள் இசைப்பது ஆகியவற்றை அனுமதிக்கப்பட்டவையாகக் கருதுவர்.

 (ஸஹீஹுல் புகாரீ தமிழாக்கம்-5590)

அவ்வாறே பாடகிகளின் குரலைக் கேட்பதும் நடனம் ஆடும் பெண்களைப் பார்ப்பதும் தடுக்கப்பட்ட செயல் ஆகும்.

قد روي مرفوعا هذا المعنى من حديث أبي موسى الاشعري أنه قال قال رسول الله صلى الله عليه وسلم:
(من استمع إلى صوت غناء لم يؤذن له أن يسمع الروحانيين).
فقيل: ومن الروحانيون يا رسول الله ؟ قال: (قراء أهل الجنة) خرجه الترمذي الحكيم أبو عبد الله في نوادر الاصول،

யார்(இவ்வுலகில்)பாட்டுசப்தத்தை கேட்கிறாரோ அவருக்கு சுவர்க்கத்தில் ரூஹானிய்யீன்(சுவனத்துகாரிகளின்) சப்தத்தை கேட்க அனுமதிக்கப்படமாட்டாது.என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்(அறிவிப்பாளர்:அபூமூஸா(ரலி)

 நூல்: தப்ஸீர் குர்துபி

عن عائشة قالت قال رسول الله صلى الله عليه وسلم: (من مات وعنده جارية مغنية فلا تصلوا عليه)

பாடகிகளை தன்னுடன் வைத்திருந்த ஒருவர் மரணித்துவிட்டால் அவர்மீது (ஜனாஸா) தொழவைக்காதீர்கள் என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்..(அறிவிப்பாளர்: ஆயிசா(ரலி).

நூல்:தப்ஸீர் குர்துபி                                                       

சினிமாவும் பூகம்பமும்                                                                

حدثني أبو مالك الأشعري ، أنه سمع رسول الله صلى الله عليه وسلم ، يقول : « يشرب ناس من أمتي الخمر ، يسمونها بغير اسمها ، يضرب على رءوسهم بالمعازف والقينات ، يخسف الله بهم الأرض ، ويجعل منهم القردة والخنازير

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என்னுடைய சமுதாயத்தாரில் சிலர் மதுவருந்துவர். அவர்கள் மதுவுக்கு மாற்றுப் பெயர் சூட்டிக்கொள்வர். அவர்களின் தலைகளுக்கு மேல் வாத்தியக் கருவிகளின் இசையும் பாடகிகளின் பாடலோசையும் ஒலிக்கும். அத்தகையோரை அல்லாஹ் பூமியில் புதையுறச் செய்வான். அவர்களில் சிலரை அல்லாஹ் குரங்குகளாகவும் பன்றிகளாவும் உருமாற்றுவான்.

நூல். (இப்னுமாஜா-4010)

ஒருமுறை நபி (ஸல்) அவர்கள், “இறுதிக் காலத்தில் என்னுடைய சமுதாயத்தாரில் சிலர் குரங்குகளாகவும் பன்றிகளாகவும் உருமாற்றப்படுவார்கள்” என்று கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள், “அல்லாஹ்வின் தூதரே! அவர்கள் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் ஆவார்கள் என்றும் உறுதிமொழிவார்கள் அல்லவா?” என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “ஆம், அவர்கள் நோன்பும் நோற்பர்; தொழுவர்; ஹஜ்ஜெல்லாம்கூட செய்வர்” என்றார்கள். அப்போது நபித்தோழர்கள், “அல்லாஹ்வின் தூதரே! பின் ஏன் அவர்களுக்கு இந்த நிலை?” என்று கேட்டனர். நபி (ஸல்) அவர்கள், “அவர்கள் வாத்தியக் கருவிகளையும் மேளதாளங்களையும் பாடகிகளையும் பயன்படுத்துவார்கள். மதுவருந்தவார்கள். அந்தக் குடி கூத்து கும்மாளத்திலேயே தூங்கச் செல்வார்கள். மறுநாள் காலை வேளையில் உருமாற்றம் செய்யப்பட்டவர்களாக ஆகிவிடுவர்” என்றார்கள்

நூல். இப்னு அபித்துன்யா. அஹ்மத். பைஹகீ

  இசைக்கருவிகளை உடைத்து எரியத்தான் நான் அனுப்பப்பட்டுள்ளேன். என்று நம் நபி சொல்லியிருக்க டிவி போன்ற இசைக்கருவிகளை உடைக்கும் பணியை செய்யவேண்டிய இஸ்லாமிய சமூதாயமே அதை நடு வீட்டில் வைத்துக் கொண்டாடுவது இதயத்தில் வலியை தருகின்றது. நாயகம் ஒழிக்க உறுதி பூண்ட இவற்றை பணம் கொடுத்து வளர்க்கும் இந்த உம்மத் நாளை மறுமையில் எந்த முகத்தைக் கொண்டு நபியை சந்திக்கும்

وأخرج ابن أبي الدنيا والبيهقي عن نافع قال : كنت أسير مع عبد الله بن عمر رضي الله عنهما في طريق ، فسمع زمارة راع ، فوضع أصبعيه في أذنيه ، ثم عدل عن الطريق ، فلم يزل يقول : يا نافع أتسمع؟ قلت : لا . فأخرج أصبعيه من أذنيه وقال : هكذا رأيت رسول الله صلى الله عليه وسلم صنع 
 
ஹள்ரத் نافع (ரலி)அவர்கள் ஒரு நிகழ்வை சொல்கின்றார்கள்
நான் இப்னு உமர்(ரலி)அவர்களுடன் ஒரு வழியில் செல்லும் போது ஒரு இடையனின் இசைக்கும் சப்தம் கேட்டது உடனே இப்னு உமர்(ரலி) அவர்கள் தன் இரு விரல்களையும் காதில் வைத்துக்கொண்டு அவ்விடத்தை விட்டும் வேகமாக சென்றுவிட்டார்கள்.சற்று தூரம் சென்றபின்பு என்னிடம் ஓநாபிஃ ஏதேனும் சப்தம் கேட்கின்றதா என்று என்னிடம் கேட்க நான் இல்லை என்று கூறவும் உடனே காதுகளை விட்டும் கையை எடுத்துவிட்டு என்னிடம் இவ்வாறே நபி அவர்கள் செய்வதை நான் கண்டேன் என்றார்கள்                        

 
சொர்க்கம் செல்ல வேண்டுமா ?

 முஹம்மது பின் முன் கதிர்(ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்.
 நாளை மறுமையில் அல்லாவின் அழைப்பாழர் வீண் விளையாட்டுக்களை விட்டும் ஷைத்தானின் இசைக்கருவிகள விட்டும் தங்களை பாதுகாத்துக்கொண்டவர்கள் எங்கே என்று கேட்பார் அவர்கள் வருவார்கள் அவர்கள் கஸ்தூரி மணம் கமலும் சொர்க்கத்தின் பூங்காவில் தங்கவைக்கப்படுவார்கள் பிறகு அல்லாஹ் மலக்குகளிடம் சொல்வான் எனது புகழையும் பெருமையையும் அவர்களின் செவிகளுக்கு கேட்கச்செய்யுங்கள் இன்னும் அவர்கள் மீது எந்த பயமும் இல்லை அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள் என்பதை அறிவித்து விடுங்கள் என்று கூறுவான்;
 நூல்; இப்னு அபித்துன்யா.
                  
 சினிமாவின் மூலம் ஏற்படும் பதிப்புகள்

1)அந்நிய பெண்ணைப் பார்த்தல் ஆசை வைத்தல்                                     

2) விலை மதிப்பற்ற நேரம் வீணாக்குதல்                                              

3) பாவத்தில் பணம் செலவாகுதல்                                                    

4) டிவி மோகம் பெற்றோர் பிள்ளைகளை கண்கானிக்க விடாமல் தடுத்தல்                         

5) உடல் நிலை கெட்டுப்போதல். கண் பாஅர்வை மங்குதல்                                    

6) தொழுகையின் ஆரம்ப நேரமும் சில சமயம் தொழுகையும் தவறுதல்                            

 7) பெண்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு பணிவிடை செய்யாமல் தடுத்தல்                             

 8) ஈமானின் ஒரு பகுதியான ஈமான் ஒட்டுமொத்தமாக குடும்பத்தை விட்டும் வெளியேறுதல்

  இன்னும் பலபல பாதிப்புகள்

 عن ابن مسعود رضي الله تعالى عنه قال : قال رسول الله صلى الله عليه وسلم « الغناء ينبت النفاق في القلب كما ينبت الماء البقل

தண்ணீர் விளை நிலத்தை வளர்ப்பது போன்று இசை இதயத்தில் நயவஞ்சக குணங்கள் வளர்ந்து விடும்

 நூல்(மிஷ்காத்)
 
இந்த ஹதீஸுக்கு வலு சேர்க்கும் சில செய்திகள் கீழே தரப்படுகின்றது. சினிமாவின் சீரழிவுகள் சமீப காலத்தில் நிறைய இருந்தாலும் கூட இதை விட ஆச்சரியம் என்ன என்றால் செல்போன் இண்டர் நெட்டின் கலாச்சாரம் பரவலாக இல்லாதசுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பே இந்த சினிமாவின் தாக்கம் பயங்கரமாக இருந்திருக்கின்றது.

  சென்னையில் ஒரு இடத்தில் கொள்ளை அடித்த 4 மாணவர்களை காவல் துறை கைது செய்த பொழுது அந்த மாணவர்கள் கொடுத்த வாக்குமூலம் இதோ நாங்கள் 4பேரும் பத்தாம் வகுப்பில் தோற்றுப்போனோம் இதனால் விரக்தி கொண்டு வீட்டில் பணம் திருடி மும்பை சென்றோம்

நாயகன் படத்தில் வரும் நாயகனைப் போல் வாழ்க்கை நடத்தலாம் என்ரு விரும்பினோம் நாங்கள் மர்மக் கதைகளையும் படித்துள்ளோம் அவற்றில் வருவதுபோல் கொள்ளை அடிக்கலாம் என்று திட்டம் போட்டோம்.

  தினத்தந்தி..14-8-1988.

சென்னையை அடுத்த விருகம்பாக்கத்தில் ஒரே நாளில் 9 கொலைகள் செய்த ஜெயம்பிரகாஷ் என்பவன் கூறியது. நூறாவது நாள் என்ற படம் பார்த்தேன் அதில் கொலை செய்யும் காட்சிகள் வந்தன அதைப்பார்த்து இந்த கொலை வெறி என் மனதில் வந்தது..

ஆஸ்ரேலியாவில் உள்ள ஐ டி ஐ என்ற இதய நோய் மருத்துவமனை தந்த தகவல் அங்குள்ள சர்க்கில் என்ற பத்திரிக்கையில் இடம் பெற்றுள்ளது. அது என்னவென்றால் ஒரு நாளைக்கு நான்கு மணி நேரத்துக்கு மேல் அதிகமாக டி வி பார்ப்பவர்களுக்கு ஹார்ட் அடாக் வருவதற்கு 80 சதவீதம் வாய்ப்புள்ளது.

அனைத்து சமூக குற்றங்களுக்கும் காரணம் சினிமா”, என மதுரை ஐகோர்ட் கிளையில் நடந்த வழக்கு விசாரணையின் போது நீதிபதி வேதனை தெரிவித்தார். - இது 2010ம் ஆண்டு செய்தி.

இந்திய உள்துறை அமைச்சகத்தின் தேசிய குற்ற ஆவணக் காப்பக மையம்,1953ம் ஆண்டில் நாட்டில் பதிவான குற்றங்கள் எண்ணிக்கையையும் அதேபோல் 2011ம் ஆண்டில் பதிவான குற்றங்களின் எண்ணிக்கையையும் ஒப்பிட்டு வளர்ச்சியினை(!) பட்டியலிட்டுத் தரும் விகிதாச்சாரமோ கதிகலங்க வைக்கிறது.

கொலைக்குற்றம் - 250%, கற்பழிப்பு - 873%, ஆட்கடத்தல் - 749%, வழிப்பறி - 194% மற்றும் சமூக வன்முறை - 234% ஆக மொத்த குற்றங்களின் வளர்ச்சி 286% வளர்ந்திருப்பதாக புள்ளிவிபரம் அலறுகிறது.



சுற்றுச்சூழல் மாசடைவது பற்றி நாம் அதிகம் கவலைப்படுகிறோம். நம் வீட்டுக்குமுன் யாராவது குப்பையைக் கொட்டினாலோ டயரைக் கொளுத்தினாலோ கழிவுநீரை ஊற்றினாலோ மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் புகார் அளிக்கிறோம். ஆனால், மனதை மாசுபடுத்தும் சூழலைப் பற்றிக் கவலைப்படுவதற்கு நாம் தயாரில்லை. மனதை மாசுபடுத்துவதில் பெரும் பங்கு தொலைக்காட்சிக்கும் சினிமாவுக்கும் உண்டு.

புறச்சூழல் மாசுபட்டால் அதை அகற்ற மாற்று வழியுண்டு. ஆனால், ஒரு சமுதாயத்தின் மனம் மாசுபட்டால் அந்தச் சமுதாயம் மெல்லக் கொல்லும் நஞ்சை உட்கொண்டதாகப் பொருள். படிப்படியாக அதன் அழிவு நெருங்கிவரும். அதன் நாகரீகம், பண்பாடு, மனிதாபிமானம், நாணம் எல்லாமே காலப்போக்கில் காணாமல் போய்விடும்.

எனவே, கால் பங்கு நன்மை முக்கால் பங்கு தீமை எனும் நிலையில் உள்ள தொலைக்காட்சியை நன்மைக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். அப்படி பயன்படுத்த முடியும் என்ற நம்பிக்கை இல்லாதவர்கள் அதை முற்றிலுமாக ஒதுக்கிவிட வேண்டும். இதையே இஸ்லாம் நம்மிடம் எதிர்பார்க்கிறது.

நாம் குடியிருக்கும் வீடு அல்லாஹ் நமக்கு வழங்கிய அருட்கொடை. அது அமைதியும் அருளும் தவழும் இடமாக இருக்க வேண்டும். அதில் அல்லாஹ்வுக்குப் பிடிக்காத சூழலை உருவாக்குவது நமது ஈமானைப் பலவீனப்படுத்திவிடும்.

இன்றைய மோசமான காலகட்டத்தில் நம் வாலிபர்களை சீர்படுத்தும் நோக்கில் தான் இன்ஷா அல்லாஹ் ஈரோட்டில் நடக்கயிருக்கிற மாநாட்டில் வாலிபர்களுக்கென்று தனி அரங்கத்தை மாநில ஜமாஅத்துல் உலமா ஏற்பாடு செய்திருக்கிறது. அதற்கு நம் வாலிபர்களை தயார்படுத்துவோம்.அல்லாஹ் உதவி புரிவானாக

எனவே இஸ்லாம் முழுமையாக இசையையும்.சினிமாவையும்.தடைசெய்கிறது. அவ்விரண்டையும்
விட்டு நாம் தவிர்ந்து இருப்போமாக. ஆமீன்     



Popular posts from this blog

ஹழ்ரத் அபூபக்கர் சித்திக் (ரலி)

எச்சரிக்கை! இந்த ஐந்து தீய குணங்கள் 30-10-2025

அற்புதங்கள் நிறைந்த ஆஷூரா தினம்...... 12-07-2024 04-07-2025