இயற்கை சீற்றங்களும் நாம் பெற வேண்டிய படிப்பினைகளும் 10-2-23


பேரிடர்களும், பேரிழப்புகளும் கற்பிக்கும் பாடம் என்ன?...

மனித வாழ்வென்பது நிரந்தரமில்லைஆனால்மனித வாழ்வில் இன்பம்துன்பம்வெற்றி தோல்விலாபம் நஷ்டம்ஏற்றம் இறக்கம் என்பது மாறி மாறி இடம்பெருவது நிரந்தரம்.

இந்த இரட்டை வரையறைகளை அல்லாஹ் மனித வாழ்வோடு இணைத்து வைத்திருப்பதின் தத்துவமே மனிதன் மகத்தான பாடங்களையும்படிப்பினைகளையும் பெறவேண்டும் என்பதற்காகத்தான்.

என்றாலும்பெரும்பாலான மனிதர்கள் இந்த இருநிலைகளிலும் பாடங்களையோபடிப்பினைகளையோ கற்றுக் கொள்வதில்லை.

அதிலும் குறிப்பாக இழப்புகளோஅழிவுகளோ ஏற்படும் போது மிகத் தீர்க்கமான பாடத்தையும் படிப்பினையையும் பெறவேண்டும்.

அழிவு, இழப்பு என்பது அடிப்படையில் இந்த உலகில் அனைத்துப் படைப்பினங்களுக்கும் சொந்தமானதுஅதிலும் குறிப்பாக மனித வாழ்வோடு சம்பந்தப்பட்ட விஷயம்.

துருக்கி நாட்டின் நர்டஹி நகரில் இருந்து 23 கிலோமீட்டர் கிழக்கே 17 கிலோமீட்டர் ஆழத்தில் துருக்கி - சிரியா எல்லை அருகே பிப்ரவரி 7,2023 அன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.

அந்நாட்டு நேரப்படி அதிகாலை 3.20 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவானது. 

நிலநடுக்கத்தால் பெரிய கட்டிடங்கள் மற்றும் வீடுகள் குலுங்கியதை அடுத்து அதிகாலை வேளையில் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு வெளியேறி சாலையில் தஞ்சமடைந்தனர்.

தென்கிழக்கு துருக்கியின் காலியென்டெப் பகுதியில் கட்டடங்கள் இடிந்து சேதமடைந்துள்ளன, இதனால் மக்கள் எல்லாரும் கட்டடங்களை விட்டு வெளியேறி வீதிகளில் இறங்கியுள்ளனர்.

துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கம் லெபனான், ஜோர்டான், பிரிட்டன், ஈராக் உள்ளிட்ட நாடுகளிலும் உணரப்பட்டது. 

மேலும் துருக்கில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் சிரியா, லெபனான், இஸ்ரேல் உள்பட அண்டை நாடுகளில் உணரப்பட்டுள்ளது.

இதுவரை ஆயிரக்கணக்கானோர் காயமடைந்திருப்பதாகவும், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்திருப்பதாகவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்திருக்கின்றனர். 

துருக்கியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் காரணமாக, சிரியாவிலும் கட்டடங்கள் இடிந்து விழுந்தன. அங்கும் தீவிர மீட்புப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. 

துருக்கியின் தொழில்நகரான காசியான்டேப் நகரில் ஏற்பட்ட பூகம்பம் துருக்கியையும், சிரியாவையும் நிலைகுலைய வைத்துள்ளது. 

நிலநடுக்கம் ஏன்❓

என்னுடைய இந்த உம்மத் மறுமையில் அல்லாஹ்வினால் கிருபை செய்யப்படும் உம்மத்தாகும். மறுமையில் நிரந்தர வேதனை இந்த உம்மத்திற்குக் கிடையாது. அதற்குப் பதிலாக இந்த உலகில் மூன்று வித சோதனைகள் ஏற்படலாம். 1.குழப்பங்கள் 2.நில நடுக்கங்கள் 3. அதிகம் கொல்லப்படுதல்.                                 

விளக்கம்- இதுவரை நடைபெற்ற பூகம்பங்களில் அதிகம் உயிரிழந்தவர் முஸ்லிம்கள் தான் என்ற புள்ளி விபரங்கள் உள்ளன. மேலும் அநியாயமாக கொல்லப்பட்ட ஷுஹதாக்களின் பட்டியலிலும் முஸ்லிம்கள் தான் அதிகம் உள்ளனர் அதற்குக் காரணம் முஸ்லிம்கள் செய்யும் பாவங்களுக்காக மறு உலகின் கொடுக்கப்படும் கடினமான வேதனைகளை விட்டும் பாதுகாப்பதற்காக அல்லாஹ் ஏற்படுத்தும் இவ்வுலகின் சோதனைகள் தான் இவையாகும்.

தற்காலிகமான இந்த உலகில் பெரும்பாலும் முஃமின்கள் பெரும்பாலும் சோதிக்கப்படுவார்கள்.

இறை மறுப்பாளர்கள் பெரும்பாலும் சுகமாக வாழ வைக்கப்படுவார்கள்.

وَلَوْلَا أَنْ يَكُونَ النَّاسُ أُمَّةً وَاحِدَةً لَجَعَلْنَا لِمَنْ يَكْفُرُ بِالرَّحْمَنِ لِبُيُوتِهِمْ سُقُفًا مِنْ فِضَّةٍ وَمَعَارِجَ عَلَيْهَا يَظْهَرُونَ (33) وَلِبُيُوتِهِمْ أَبْوَابًا وَسُرُرًا عَلَيْهَا يَتَّكِئُونَ (34) وَزُخْرُفًا وَإِنْ كُلُّ ذَلِكَ لَمَّا مَتَاعُ الْحَيَاةِ الدُّنْيَا وَالْآخِرَةُ عِنْدَ رَبِّكَ لِلْمُتَّقِينَ (35)الزخرف

கருத்து- முஃமின்கள் மனம் துவண்டு விடுவார்கள் என்பது இல்லா விட்டால் ஒவ்வொரு காஃபிருடைய வீட்டையும் நான் தங்கமாக மாற்றியிருப்பேன். ஏனெனில் அவர்களுக்கு இங்கு மட்டும் தான் இன்பம் - அல்குர்ஆன்


அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம் ஒருவர் வந்து நிலநடுக்கம் ஏன் ஏற்படுகிறது? என்று கேட்டார். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள் மூன்று காரணங்களைக் கூறினார்கள். 1. பெண்கள் அந்நிய ஆண்களுக்காக (வெளியே செல்லும் போது, திருமண நிகழ்சிகளுக்கு செல்லும் போது, பள்ளிக்கூடம், காலேஜ் செல்லும் போது) நறுமணம் பூசும்போது நிலநடுக்கம் ஏற்படும். 2. பெண்கள் அந்நிய ஆண்களுக்கு முன்னிலையில் நிர்வாணமாக இருப்பதில் கூச்சப்படமாட்டார்கள். (விபச்சாரம் பரவலாகி விடும். 3. மதுவும் இசையும் பரவலாகிவிடும். இவையெல்லாம் நடக்க ஆரம்பித்துவிட்டால் நிலநடுக்கத்தை எதிர்பார்க்கலாம். (ஜல்ஜலா ... முஷாஹதாதோவாகிஆத் - முஸ்தத்ரக் ஹாகிம் - 8575)

எந்த சமுதாயத்தில் வட்டியும் விபச்சாரமும் சர்வசாதாரணமாக நடக்க ஆரம்பித்துவிடுமோ அவர்கள் தங்களைத் தாங்களே அல்லாஹ்வின் தண்டனைக்கு ஆளாக்கிக் கொள்கிறார்கள், என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்னத் அஹ்மத் - 3809)

இன்று இந்த இரண்டு பாவங்களும் சர்வசாதாரணமாக நடந்து கொண்டிருக்கின்றன. உலகின் பொருளாதாரமே வட்டியின் மீது தான் அஸ்திவாரமிடப்பட்டிருக்கிறது. விகாரமான அசிங்கமான காரியங்கள் சட்டஅங்கீகாரம் பெற்றுக்கொண்டிருக்கின்றன. முளஃபராபாதில் ஒரு தடவை நிலநடுக்கம் ஏற்பட்டது. அங்கு ஒருஹோட்டலில் இசைத்திருவிழா நடந்து கொண்டிருந்தது. அதில் இளம் வயது ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர். அப்பொழூது ஏற்பட்ட நிலநடுக்கத்தில அந்த ஹோட்டல் புதையுண்டு போனது. பிறகு, மீட்புப்பணி மேற்கொள்ளப்பட்டபோது அரைநிர்வாணத்தில் ஆண்கள், பெண்களுடைய சடலங்கள் மீட்கப்பட்டன. (ஜல்ஜலா.... முஷாஹதாதோ வாகிஆத்)

அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியது போல் இசையும் இன்று பரவலாகிவிட்டது. அதைவிட்டும் தப்பிக்க நினைத்தாலும் தப்பிக்க முடிவதில்லை. பயணத்தில் இருந்தாலும் இசை. பள்ளிவாசலுக்கு வந்தாலும் மொபைல் இசை. செல்போன் இசை எந்த இடத்தையும் விட்டு வைக்கவில்லை. முஸ்லிமல்லாதர்கள் ஹரமுக்குள் வரக்கூடாது. ஆனால் அவர்களுடைய இசை எல்லா இடத்தையும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. தவாஃப் செய்யும் போதும் செல்போன் இசை. ஜியாரா செய்யும் போதும் கைபேசி இசை.

இதற்கு முன்னரும் கூட நாம் இது போன்ற   நிலநடுக்கம்பூகம்பம்சுனாமிபுழுதிவாரி தூற்றும் சூறாவளிபுயல்வெள்ளம் இயற்கைப் பேரிடர்களை கண்டிருக்கின்றோம்.

எனினும்இத்தகைய பேரிடர்கள் மூலமாக, அழிவுகளின் மூலமாக நாம் என்ன பாடத்தைக் கற்றிருக்கின்றோம்? என்ன படிப்பினைகளைப் பெற்றிருக்கின்றோம்?...


டைட்டானிக்:

இறைவனை மட்டுமே நினைக்க வேண்டிய பேரபாயத்தைக் கடந்து செல்லும் கப்பல்களில் கூட நாடக அரங்கு, திரைப்படத் தியேட்டர், சொகுசு ஹோட்டல், நீச்சல் குளம் போன்றவை இருக்கின்றன. டைட்டானிக் என்ற சொகுசுக்கப்பல் மூழ்கியது நவீன கப்பல் பயணத்தின் மிகப் பெரிய வடு. மேற்கத்திலய பணக்கார நாட்டவர் அதை லேஸில் மறக்கமாட்டார்கள். 

அல்லாஹ்வை நினைக்க வேண்டிய கடலில் ஆடம்பரமும் உல்லாசமும் உச்சகட்டத்தை அடைந்தால் அல்லாஹ்வின் கருணை எங்கிருந்து கிடைக்கப்போகிறது? 1912 ல் டைட்டானிக் தன்னுடைய முதல் பயணத்திலேயே பெரிய பனிப்பாறையில் மோதி மூழ்கியது. இதில் 1500 பேர் இறந்தனர். அந்தக் கப்பல் மூழ்கிய இடத்தல் இன்றும் ஆராய்ச்சி நடக்கிறது. இன்றும் கடலுக்கடியில் கிடைக்கும் பழைய அலங்காரப் பொருள்கள் எல்லாம் ரொம்பத் தலைக் கிறுக்கி ஆடாதே! என்று மனிதனுக்கான எச்சரிக்கைகள். (வினவுஙக்ள் விடைதருவோம்) 

பாவத்தில் மூழ்கிக்கிடப்பவர்களை தலை தூக்கிப்பார்ப்பதற்கே இந்த நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. இரத்த ஓட்டம் சீராக நடப்பதற்கு இதயம் இயங்குகிறது. அவ்வாறே இறைதியானத்திலும் இதயம் இயங்கிக் கொண்டே இருக்க வேண்டும். இதில் குறை ஏற்பட்டுவிட்டால் மாரடைப்பு வருவது போல் நிலநடுக்கமும் ஏற்படுகிறது. நபி (ஸல் அவர்களுடைய காலத்தில் ஒரு தடவை நிலநடுக்கம் ஏற்பட்டது. நபியவர்கள் தங்களுடைய கரங்களை நிலத்தின் மீது வைத்தார்கள். நிறுத்து! இன்னும் உனக்கு நிலநடுக்கத்திற்கான உத்தரவு வரவில்லை, என்று கூறினார்கள். பிறகு தோழர்களை முன்னோக்கி, நீங்கள் பாவமன்னிப்பு தேடவேண்டுமென்று உங்களுடைய இரட்சகன் விரும்புகிறான். எனவே நீங்கள் பாவமன்னிப்பு தேடுங்கள் என்று கூறினார்கள். 

பிறகு உமர் (ரலி) அவர்களுடைய ஆட்சி காலத்திலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்பொழுது உமர் (ரலி) அவர்கள் மக்களிடம், நீங்கள் புதிது புதிதாக செய்யும் (பாவங்களினால் தான்) நிலநடுக்கம் ஏற்படுகிறது. இனிமேல் இவ்வாறு ஏற்பட்டால் நான் உங்களுடைன் ஒருபோதும் இருக்கமாட்டேன் என்று கூறினார்கள். (அல்உகூபாத்- 18)

உமர் இப்னு அப்துல் அஜீஸ் (ரஹ்) அவர்கள் ஒரு தடவை ஒரு சட்ட மசோதாவை எழுதி தங்களுடைய ஆட்சிக்குட்பட்ட பெரிய பெரிய நகரங்களுக்கு அதை அனுப்பிவைத்தார்கள். அதில் அவர்கள் பின்வருமாறு எழுதியிருந்தார்கள்: எங்காவது நிலநடுக்கம் ஏற்பட்டால் நீங்கள் நான்கு காரியங்களைச் செய்ய வேண்டும். 1. ஆரம்பமாக அல்லாஹ்விடம் தங்களுடைய பாவங்களுக்காக மன்னிப்பு தேடவேண்டும். இஸ்திக்பார் செய்யவேண்டும். நாம் செய்த பாவங்களை அல்லாஹ்வுக்கு முன்னிலையில் ஏற்றுக்கொள்ள வேண்டும். 2. நீங்கள் தனித்தனியாக அல்லாஹ்விடம் துஆ செய்யவேண்டும். கெஞ்ச வேண்டும். வீட்டிலோ அல்லது மஸ்ஜிதிலோ தனித்தனியாக துஆ செய்ய வேண்டும். 3. விரும்பினால் அனைவரும் மைதானாத்திற்கு சென்று துஆ செய்யலாம். 4. உங்களுடைய செல்வத்தை அல்லாஹ்வுடைய பாதையில் ஸதகா செய்ய வேண்டும். தர்மம் வரக்கூடிய பேராபத்துகளை நிறுத்திவிடுகிறது. (அல்ஜவாபுல் காஃபீ- ஐல்ஐலா)

*நல்லவர்களுக்கும்:*

சுனாமி, பூகம்பம் போன்ற பேராபத்துகளில் ஏராளமான நல்லவர்களும் சிக்கிக்கொள்கிறார்களே! என்ற கேள்வி எழலாம். ஆனால் உலகில் தீமைகள் மிகைத்துவிட்டால் வரக்கூடிய அழிவு நல்லவர்களையும் விட்டுவைக்காது. தீமைகள் நடக்கும் போது அதைத் தடுப்பதற்கு முனைய வேண்டும். நமக்கென்ன? என்று இருந்துவிட்டால் அது நல்லவர்களையும் தாக்கும். சமூகத்தில் பாவங்கள் மலிந்து விடுவதைப் பார்த்தபின்பும் மக்கள் அவற்றைத் தடுக்கவில்லையானால் அநியாயக்காரன் அநியாயம் செய்வதை பார்த்த பின்பும் அவனைத் தடுக்கவில்லையானால் அல்லாஹ்வின் வேதனை அனைவரின் மீதும் வருவது நெருக்கமாகிவிடும், என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூதாவூத்) 

எனவே, இது போன்ற ஆபத்துகள் வருவதற்கு முன் நன்மையை ஏவி தீமையைத் தடுக்கும் காரியத்தில் ஈடுபடவேண்டும். அப்படி ஏதாவது ஆபத்து உலகில் எங்காவது நிகழ்ந்து விட்டாலும் அது உலகின் மற்றமக்களுக்கு ஒரு எச்சரிக்கை மணியாகவே எடுத்துக் கொள்ள வேண்டும். ஒர் இடத்தில் வேதனை இறங்கினால் அது நல்லோர் பொல்லோர் எல்லோருக்கும் அது வேதனையாகி விடாது. நல்லவர்களுக்கு அது அந்தஸ்தை உயரச்செய்து விடும். மரணிப்பவர்களில் அதிகமானோர் நோன்பாளிகளாக இருக்கலாம். திடீர் மரணம் கூட ஷஹிதுடைய அந்தஸ்தைத் தேடித்தந்துவிடும். எனவே, எங்கு வேதனை வருகிறதோ அங்குள்ள அனைவரையும் பாவிகளாக எண்ணிவிடக்கூடாது. ஒவ்வொரு மனிதரும் தங்களைத் தாங்களே குற்றவாளிகளாகக் கருத வேண்டும். அல்லாஹ்வின்பால் மீள வேண்டும்.


இஸ்லாமியப் பார்வையில்…..

இது போன்று ஏற்படுகிற பேரிடர்களை இயற்கைச் சீற்றங்களாகவும், இயக்கங்களில் ஏற்படுகிற மாற்றங்களாகவும் மட்டுமே மனித சமூகம் பார்த்துக் கொண்டு வருகிறது.

ஆனால், இஸ்லாமோ இப்படி அபத்தமான சாயங்கள் பூசப்படுவதை ஒரு போதும் ஏற்றுக் கொள்வதில்லை. ஏனெனில், உலகில் ஏற்படும் எந்த ஒரு அசைவானாலும் அது தானாக ஏற்படுவதில்லை. படைத்த இறைவனாகிய அல்லாஹ் தான் அண்ட சராசரங்கள் அனைத்தையும் இயக்கிக் கொண்டிருக்கின்றான் என்று உறுதியிட்டுக் கூறுகின்றது.

மேலும், அந்த அல்லாஹ் தான் இத்தகைய பூகம்பங்களையும், நிலநடுக்கங்களையும், சுனாமிகளையும் ஏற்படுத்துகின்றான்.

உலகில் முதன் முதலாக ஏற்பட்ட மிகப்பெரும் பேரிடராக நபி நூஹ் (அலை) அவர்களின் காலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பிரளயத்தை தற்காலப் பாஷையில் சொல்வதானால் சுனாமியை அல்குர்ஆன் ஹூத் அத்தியாயத்தில் 36 முதல் 49 வரையிலான வசனங்களில் குறிப்பிடுகின்றது.

இந்த மானுட சமூகம் தீய வழிகளிலிருந்து விலகி நேர்வழியில் தொடர்ந்து பயணிக்க வேண்டும், பாவங்களில் இருந்து தம்மை சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும், இறைவன் வகுத்த வரம்புகளில், எல்லைகளில் கவனத்தோடு செயல்பட வேண்டும் என்பன போன்ற பல பாடங்களையும், படிப்பினைகளையும் பெற வேண்டும் என்பதற்காகத்தான் இவ்வாறான பேரிடர்களையும், பேரிழப்புக்களையும் அல்லாஹ் ஏற்படுத்துகின்றான்.

أَأَمِنْتُمْ مَنْ فِي السَّمَاءِ أَنْ يَخْسِفَ بِكُمُ الْأَرْضَ فَإِذَا هِيَ تَمُورُ () أَمْ أَمِنْتُمْ مَنْ فِي السَّمَاءِ أَنْ يُرْسِلَ عَلَيْكُمْ حَاصِبًا فَسَتَعْلَمُونَ كَيْفَ نَذِيرِ ()

“வானத்திலிருப்பவன் உங்களைப் பூமியினுள் ஆழ்த்தி விடுவதையும், அப்போது உடனே பூமி அதிரத்தொடங்குவதையும் குறித்து நீங்கள் அச்சமின்றி இருக்கின்றீர்களா? அல்லது வானத்திலிருப்பவன் உங்கள் மீது கற்களைப் பொழியும் காற்றை அனுப்புவது குறித்து நீங்கள் அச்சமின்றி இருக்கின்றீர்களா? இவைகள் வந்து விட்டால் பிறகு உங்களுக்கு தெரிந்து விடும் எனது எச்சரிக்கை எப்படி இருக்கின்றது என்று!”                                                    ( அல்குர்ஆன்: 67:16,17 )

ظَهَرَ الْفَسَادُ فِي الْبَرِّ وَالْبَحْرِ بِمَا كَسَبَتْ أَيْدِي النَّاسِ لِيُذِيقَهُمْ بَعْضَ الَّذِي عَمِلُوا لَعَلَّهُمْ يَرْجِعُونَ ()
“மனிதர்களின் கரங்கள் செய்த தீய வினைகளினால் அம்மனிதர்கள் படிப்பினைப் பெற்று திருந்தி திரும்ப வேண்டும் என்பதற்காக அத்தீய வினைகள் சிலதின் பிரதிபலனை தண்டனையை அவர்களுக்கு அல்லாஹ் உணரச்செய்வதற்காக கடலிலும், கரையிலும் பெரும் ஆபத்துக்களை விளைவிக்கின்றான்”.
           (அல்குர்ஆன்:30:41)


“என் சமூகத்தினர் பதினைந்து வகையான பாவங்களை மிகச் சாதாரணமாகக் கருதி செய்ய ஆரம்பித்து விட்டால் அவர்களின் மீது சோதனைகளும் வேதனைகளும் இறங்கிவிடும்” என நபி {ஸல்} அவர்கள் கூறியபோது…

அல்லாஹ்வின் தூதரே! அவைகள் என்ன? என்று நபித்தோழர்கள் வினவ, அப்போது நபி {ஸல்} அவர்கள் “ஃகனீமத் சொந்தப்பொருளாகவும், அமானிதம் ஃகனீமத் பொருளாகவும் பயன்படுத்த ஆரம்பித்து விட்டால், ஜகாத்தை கடன் சுமை போன்று கருத ஆரம்பித்து விட்டால், கணவன் மனைவிக்கு அடிபணிபவனாக ஆகிவிட்டால், தன் தாய்க்கு நோவினை கொடுத்து, தன் நண்பனுக்கு முன்னுரிமை அளித்து, தந்தைக்கு அநீதம் இழைத்தால், ஒரு மனிதனுக்கு அவனுடைய தீங்கை நினைத்து கண்ணியம் கொடுக்கப்பட்டால், சமுதாயத் தலைவர்கள் கீழ்த்தரமானவர்களாக மாறி விட்டால், மஸ்ஜித்களில் உலகப்பேச்சு பெருகி விட்டால், மது பகிரங்கமாக அருந்தப்பட்டால், பட்டாடைகள் அணியப்பட்டால், பாடகிகளையும், இசைக் கருவிகளையும் பிரதானமாகக் கருத ஆரம்பித்தால், இந்த உம்மத்தின் மேன்மக்களான முன்னோர்கள் பின்னோர்களால் தூற்றப்பட்டால்”  நீங்கள் கொடுங்காற்றையும், பூமியில் புதையுண்டு போவதையும், உருமாற்றம் செய்யப்படுவதையும் எதிர் பாருங்கள்” என நவின்றார்கள்.                                     ( நூல்: திர்மிதீ )

ஒரு சமயம் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் நபித்தோழர்களோடு அமர்ந்திருக்கும் ஓர் சபையில் நில நடுக்கத்தின் பிரதிபலிப்பை மக்களோடு அண்ணலாரும் உணர்ந்த போது தோழர்களை நோக்கிய நபிகளார் “மக்களே! உங்கள் இறைவன் உங்களுக்கு தண்டனை கொடுக்க நாடுகின்றான். எனவே, நீங்கள் அவனிடம் பாவமன்னிப்புக் கோரி தண்டனையிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள்” என்று கூறினார்கள்.                                   ( நூல்: இப்னு அபீ ஷைபா )

எனவே, நம்மைச் சுற்றி அன்றாடம் நடக்கிற நிகழ்வுகளில் இருந்தும், எப்போதாவது, என்றைக்காவது நடக்கிற நிகழ்வுகளில் இருந்தும் தீர்க்கமான பாடத்தையும், தெளிவான படிப்பினையையும் பெற்றுக் கொள்ள வேண்டும்.

அதிலும் குறிப்பாக இரத்தத்தை உறைய வைக்கிற, உள்ளத்தை பதற வைக்கிற கோரமான பேரிடர்களில் இருந்து நிறைவான பாடத்தைப் பெற வேண்டும்.

அப்போது தான் இந்த உலக வாழ்க்கை மன நிறைவாகவும், மறு உலக வாழ்க்கை சோபனம் நிறைந்ததாகவும் ஆகும்.

அல்லாஹ் நம் அனைவர்களையும் அவன் ஆற்றலை விளங்கி, முழுக்க முழுக்க அவனை அஞ்சி, வணங்கி வழிபட்டு வாழும் பாக்கியத்தைத் தந்தருள் புரிவானாக! ஆமீன்!! ஆமீன்!! யாரப்பல் ஆலமீன்!!
                       
                         வஸ்ஸலாம்!!!


1 comment:

  1. சம்பவங்கள் யாவும் அற்புதமே இயற்கைசீற்றத்தால் ஏற்படும் காரணம்
    அற்புதமே
    தங்களின் சீறிய சிந்தனையும் அற்புதமே

    Reply

Popular posts from this blog

ஹழ்ரத் அபூபக்கர் சித்திக் (ரலி)

எச்சரிக்கை! இந்த ஐந்து தீய குணங்கள் 30-10-2025

அற்புதங்கள் நிறைந்த ஆஷூரா தினம்...... 12-07-2024 04-07-2025