மிஃராஜூம் அதன் காரணங்களும் (2) 16-02-23.
- Get link
- X
- Other Apps
சங்கையான ரஜப் மாதத்தின் இறுதி ஜூம்ஆ நாளில் அமர்ந்திருக்கிறோம்
இந்த பரக்கத்தான நாட்களில் நாம் மிக முக்கியமான ஒரு விஷயத்தை நினைவில் கொள்ள கடமைப்பட்டுள்ளோம் அது தான் மகத்தான மிஃராஜ் இரவு இதற்கு "இஸ்ரா" என்றும் கூறப்படும்
இந்த விண்ணுலக பயணம் பற்றிய தகவல் அல்குர்ஆனில் ஆணித்தரமான முறையில் இடம்பெற்றுள்ளது. இக்கூற்றினை எவராவது ஒருவர் மறுத்தால், அவர் குர்ஆனையே மறுத்தவராவார். இத்தகைய செயலின் காரணமாக, இறைமறுப்பிற்கும் ஆளாகிவிடுவார்.
மிஃராஜ் பயணம் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஹிஜ்ரத் செய்வதற்கு ஒரு வருடத்திற்கு முன்பு ரஜப் மாதம் பிறை 27 ல் நடந்ததாக பிரபல்யமான கருத்தாக கூறப்படுகிறது.
நூல்-:- முஹம்மது ரஸூலுல்லாஹ்.
அல்லாஹ் அருள்மறைக் குர்ஆனில் கூறுகின்றான்.
سُبْحٰنَ الَّذِىْۤ اَسْرٰى بِعَبْدِهٖ لَيْلًا مِّنَ الْمَسْجِدِ الْحَـرَامِ اِلَى الْمَسْجِدِ الْاَقْصَا الَّذِىْ بٰرَكْنَا حَوْلَهٗ لِنُرِيَهٗ مِنْ اٰيٰتِنَا اِنَّهٗ هُوَ السَّمِيْعُ الْبَصِيْرُ. ١٧/١
தன் அடியாரை (கஅபாவாகிய) சிறப்புப் பெற்ற பள்ளியிலிருந்து (பைத்துல் முகத்தஸிலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு, இரவின் ஒரு பகுதியில் பயணம் செய்வித்தானே அத்தகையவன் மிகப் பரிசுத்தமானவன், (மஸ்ஜிதுல் அக்ஸாவாகிய) அது எத்தகையதென்றால் நாம் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை அபிவிருத்தியடையச் செய்திருக்கிறோம், நம்முடைய அத்தாட்சிகளை அவருக்குக் காண்பிப்பதற்காகவே (அழைத்துச் சென்றோம்.) நிச்சயமாக (உமதிரட்சகனாகிய) அவனே செவியேற்பவனும் கூர்ந்து நோக்குபவனும் ஆவான்.
ஸூரத்து பனீ இஸ்ராயீல் : வசனம் 1.
பொதுவாக திருக்குர்ஆனில் ஏனைய சில அத்தியாயங்களின் முகப்பில் الحمد لله என்பதாகவே துவங்கப்பட்டிருக்கும். ஆனால் இந்த விண்ணேற்ற பயணத்தைப் பற்றி திருக்குர்ஆன் சொல்லும்போது, துவக்கமாக سبحان االذي என்பதாகச் சொல்கிறது. அதற்கு காரணம் கற்பனையிலும் எண்ணிப் பார்க்க முடியாத, ஒரே இரவில் சிறிது நேரத்தில் உடலோடு நிகழ்ந்த "மிஃராஜ்" எனும் அற்புத விண்ணேற்ற பயணம், ஆச்சரியமானது என்பதை உணர்த்துவதற்காகவே, அவ்வாறு சொல்லப்பட்டிருக்கிறது.
நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை, அல்லாஹு ரப்புல் ஆலமீன் விண்ணுலகத்திற்கு அழைத்து சென்றதின் காரணம் என்ன?
திருமறை விரிவுரையாளர்கள் "மிஃராஜ்" எனும் விண்ணேற்ற பயணம் நிகழ்வதற்கு 10 விதமான காரணங்களை குறிப்பிடுகிறார்கள்.
1) لرفع الدرجة.
அந்தஸ்தால் உயர்ந்த அர்ஷு, குர்ஸு, வானங்கள் இவையெல்லாவற்றையும் விட, அல்லாஹ்வின் ஹபீப் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், அந்தஸ்த்தால் மிக உயர்ந்தவர்கள் என்பதை சுட்டிக்காட்டுவதற்காக.
2) اظهار قدرة الله.
வானத்தில் உள்ள அனைத்தையும் என்னால் ஒரே இரவில் காட்ட முடியும் என்ற இறையாற்றலை வெளிக்காட்டுவதற்காக.
3) اثبات الربوبية والنبوة
3) எங்கெல்லாம் ருபூபிய்யத் (படைத்தாளும் தன்மை) உள்ளதோ, அங்கெங்கெல்லாம் நுபுவ்வத்தை (தூதுத்துவத்தை) நிலைநாட்டுவதற்காக.
4) اظهار الحسن
4) ஹழ்ரத் ஜுலைகா (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள், இறைத்தூதர் யூசுஃப் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் புறஅழகை காட்டுவதற்காக, தன்னை குறை கூறிய பெண்களையெல்லாம், ஓரிடத்தில் சங்கமிக்கச் செய்தார்கள். அதேபோன்று அல்லாஹு ரப்புல் ஆலமீன், அனைத்து மலக்குகளையும், அத்தனை நபிமார்களையும் ஒன்று திரட்டி, முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் அகஅழகை காட்டுவதற்காக.
5) لقاء الله
நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு, தனிப்பெரும் சிறப்பாக நேரடியான தனது சந்திப்பை கொடுப்பதற்காக.
6, நபிகள் நாயகம் [ஸல்] அவர்களின் நபித்துவ வாழ்வின் தொடக்கத்தில் எதிரிகளிடமிருந்து எதிர்ப்புகளும்,தொந்தரவுகளும் வந்த நேரத்தில் அவர்களுக்கு எல்லா வகையிலும் பெரும் உருதுணையாக இருந்தது இரண்டு பேர்.
ஒன்று ; அவர்களின் சிறிய தந்தை அபூதாலிப் அவர்கள்.
எதிரிகளின் சூழ்ச்சிகளும்,அவர்களின் தந்திரங்களும் நபியைத் தொடாமல் இருக்க பெரும் உதவியாக இருந்தது இவர்கள் தான்.
யாரசூலல்லாஹ்! உங்களுக்காக கோபம் கொண்டு உங்களுக்கு அரணாக இருந்த உங்களின் சிறிய தந்தை அவர்களுக்கு நீங்கள் கைமாறு செய்துள்ளீர்களா? என வினவப்பட்ட போது,ஆம் அவர்கள் நரகின் மேல் தட்டில் இருக்கிறார்கள்.நான் மட்டும் இல்லையெனில் அவர்கள் நரகின் அடிப்பகுதியில் இருந்திருப்பார்கள் என்றார்கள்.
இரண்டாவது ; நபிகளாரின் அன்பு மனைவி அன்னையர் திலகம் அன்னை கதீஜா [ரலி] அவர்கள்.
பெரும் செல்வச் சீமாட்டியான அன்னை அவர்கள் நபிக்காக தன் அனைத்து சொத்துக்களையும் செலவு செய்தார்கள்.நபித்துவத்திற்கு முன்பு அண்ணல் அவர்கள் ஹிரா குகையில் தன்னை தனிமைப் படுத்திக் கொண்டு இறை வணக்கத்தில் ஈடுபட்ட போது தன் வயோதிக நிலையிலும் மிக கறடு முறடான பாதைகளைக் கடந்து நபியவர்களுக்கு பல நாட்களாக உணவு எடுத்துச் சென்றார்கள்.
முதன் முதலாக ஜிப்ரயீல் (அலை)அவர்களை சந்தித்த அதிர்ச்சியில் பதட்டத்துடனும், படபடப்புடனும் வந்த நபியவர்களை அமைதிபடுத்தி பின்பு என்ன நடந்தது என்று விசாரித்தறிந்து அவர்களுக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறியதை வரலாறு பதிவு செய்துள்ளது ;
அதனால் தான் அன்னை கதீஜா இறந்த விட்ட பிறகும் ஏந்தல் நபி (ஸல்) எப்பொழுதும் அவர்களைப் பற்றி பேசிக் கொண்டே இருப்பார்கள்.ஏதாவது பொருட்கள் அன்பளிப்பாக வந்தால் முதன் முதலாக அன்னை அவர்களின் நெருக்கமானவர்களுக்கு வழங்கும் படி கூறுவார்கள்.
ஒரு நாள் நபியவர்கள் அன்னையைப் பற்றி பேசியதைக் கண்டு ஆயிஷா [ரலி] அவர்களே ரோஷம் கொண்டு யாரசூலல்லாஹ்! உங்களுக்கு நாங்களெல்லாம் இல்லையா? என்று கேட்டு விட்டார்கள். கடுமையாக கோபமுற்ற அருமை நாயகம் [ஸல்] அவர்கள் ; ஆயிஷாவே ! கதீஜா அவர்களுக்குப் பிறகு அவர்களை விட சிறந்த பகரத்தை அல்லாஹ் எனக்கு வழங்கவே இல்லை
மக்களெல்லாம் என்னை பொய்யாக்கிய போது என்னை உண்மைப்படுத்தியது அவர்கள் தான். மக்களெல்லாம் என்னை கைவிட்ட பொழுது எனக்காக தன் சொத்துக்களை தியாகம் செய்தது அவர்கள் தான்.என் மனைவிகளில் அவர்களின் மூலம் தான் எனக்கு குழந்தைப் பேற்றையும் இறைவன் வழங்கினான் என்றார்கள்.
இந்தளவு நெருக்கடியான நேரத்தில் ஆதரவாகவும்,பெரும் உருதுணையாகவும் இருந்து உதவிகள் புரிந்த இவ்விருவரும் அடுத்தடுத்து மரணத்தை தழுவுகிறார்கள். நபி [ஸல்] அவர்களின் ஐம்பத்தி ஓராவது வயதில் இருவரும் இரு மாத இடைவெளியில்,இன்னொரு கருத்தின் படி மூன்று நாட்கள் இடைவெளியில் உலகை விட்டுப் பிரிகிறார்கள்.
மிகப்பெரிய இழப்பையும் நெருக்கடியையும் சந்தித்த நபி [ஸல்] அவர்களுக்கு ஆறுதல் அளிப்பதற்காகவும் அவர்களின் உள்ளத்தில் படிந்த துயரத்தை துடைப்பதற்காகவும் தான் இந்த அற்புதமான நிகழ்வு நடந்தது.
7) அகில உலகிற்கும் அருள் நபியாக வந்தவர்களுக்கு, அகிலத்தையே சுற்றிக்காட்டுவதற்காக.
8) இறுதி நபிக்கு சுவர்க்கத்தையும் நரகத்தையும் நேரலையில் காண்பிப்பதற்காக.
9) பூமியைப்போல வானத்திற்கும் சிறப்பு செய்வதற்காக.
10) வணக்கங்களில் தலையான ஐங்காலத் தொழுகைகளை, நேரில் நினைவுப் பரிசாக வழங்குவற்காக.
"மிஃராஜ்" எனும் புனித பயணத்தை நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு வழங்கினான்.
மிஃராஜில் இரண்டு வகையுண்டு!
1) மிஃராஜே ரூஹானிய்யத்! இது உடல் இல்லாமல் உயிர் மட்டும் அல்லாஹ்வை தரிசிப்பதற்கு சொல்லப்படுகிறது. இத்தகைய மிஃராஜ் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு) 33 தடவைகள் நிகழ்ந்துள்ளன. இந்த ரூஹானிய்யத்தான மிஃராஜ், ஏனைய நபிமார்களுக்கும், சஹாபாக்களுக்கும், இறைநேச செல்வர்களுக்கும் நிகழ்ந்துள்ளன.
2) மிஃராஜே ஜிஸ்மானிய்யத்! இது உடல், உயிர் ஆகிய இரண்டும் சேர்ந்த முழு மனிதராக, மண்ணிலிருந்து விண்ணுக்கு உயர்ந்து, அல்லாஹ்வை நேர்முகமாக தரிசித்த, நிகழ்விற்கு சொல்லப்படும். இத்தகைய உடல்ரீதியான மிஃராஜ் நபியவர்களுக்கு மாத்திரம் நிகந்தது.
ஹரமிலிருந்து பைத்துல் முகத்தஸ் செல்லும் வழியில் பல்வேறு சம்பவங்கள் நிகழ்ந்தன. அவற்றில் சிலதைப் பார்ப்போம்.
1) வழியில் ஒருவர் நின்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை அழைத்தபொழுது, நபியே! திரும்பிப் பார்க்காமல் செல்லுங்கள். இவன்தான் இப்லீஸ்! என்று ஜிப்ரயீல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் கூறினார்கள்.
2) மிஃராஜுக்கு செல்லும் வழியில் ஒரு கூட்டம் தங்களின் முகங்களையும், நெஞ்சங்களையும் பித்தளையால் ஆன நகங்களால் கிழித்துக் கொண்டிருந்தார்கள். இவர்கள் யாரென்று கேட்டபோது, மக்களைப் பற்றி புறம்பேசி, அவர்களை மானபங்கப்படுத்தியவர்கள் என்று ஜிப்ரயீல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் கூறினார்கள்.
3) நபியவர்கள் பயணம் செல்லும் வழியில் பேரீச்சை மரங்கள் நிறைந்த ஓரிடத்தில், இரண்டு ரகஅத் தொழுது முடித்து, பயணத்தைத் தொடர்ந்தபோது, நபியே! இதுதான் யத்ரிப் (மதீனா) என்று ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சொன்னார்கள்.
நூல்-:- இப்னு கஸீர் பாகம் 2 பக்கம் 21.
4) الدنيا - رءاها بصورة عجوز
பயணத்தின் இடையில் நபியவர்கள் ஒரு கிழவியைப் பார்த்தார்கள். இவள் யாரென்று கேட்டபோது, இவள்தான் உலகம்! இவளின் அழைப்பை ஏற்காதீர்கள் என்று ஜிப்ரயீல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் கூறினார்கள்.
5) خطباء الفتنة - رءاهم بصورة اناس تقرض السنتهم وشفاهم بمقاريض من نار وهم يخطبون بين الناس بالفتنة والكذب والغش
குழப்பத்தை உண்டாக்கும் பேச்சாளர்கள். நெருப்பு கத்திரிக்கோல்களால் அவர்களின் நாவுகளும் உதடுகளும் கத்திரிக்கப்பட்டு வேதனை நடப்பதை நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கண்டு, இவர்கள் யாரென்று கேட்டபோது, இவர்கள் மக்களுக்கிடையே குழப்பம், பொய், மோசடி பற்றி பேசியவர்கள் என்று ஜிப்ரயீல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் விளக்கினார்கள்.
6) شاربوا الخمر - رءاهم بصورة اناس يشربوم الصديد
மது குடிப்பவர்கள். இவர்கள் சீழ் சலத்தை குடிப்பதைப் பார்த்தார்கள்.
7) تاركوا الصلاة - رءا قوما ترضخ رؤوسهم ثم تعود كما كانت فقال جبرئيل هولاء الذيم ثقلت رؤوسهم عن تأدية الصلاة
தொழுகையை விட்டவர்கள். அவர்களின் தலைகள் நொறுக்கப்படுகின்றன. பிறகு சரியாகி விடுகின்றன. பிறகும் நொறுக்கப்படுகின்றன. இவர்கள் தொழுகையை நிறைவேற்றுவதை விட்டும் தலைக்கனமாக திரிந்தவர்கள் என்று ஜிப்ரயீல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் கூறினார்கள்.
8) الزناة رءاهم بصورة اناس يتنافسون علي اللحم المنتن ويتركون الجيد
விபச்சாரம் செய்பவர்கள். நல்ல இறைச்சியை விட்டுவிட்டு, நாற்றமெடுத்த இறைச்சியை விரும்புவார்கள். இவர்கள் யாரென்று கேட்டபோது, இவர்கள் வாழும்போது விபச்சாரத்தில் ஈடுபட்டவர்கள் என்று ஜிப்ரயீல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் கூறினார்கள்.
இந்நிகழ்வு நிச்சயம் நமது ஈமானை புதுப்பித்து பலப்படுத்தும் இன்ஷா அல்லாஹ்!
காரணம் ;- அல்லாஹ்வையும்,ரசூலையும்,அவர்களது அத்தாட்சிகளையும்,வஹியையும் வேறு எதையும் நேரடியாகப் பார்க்காமல் வெறும் படித்ததையும்,செவிமடுத்ததையுமே வைத்துக் கொண்டு மறைவான விஷயங்களை ஈமான் கொள்வது நிச்சயம் அது உயர்ந்த ஈமானாகத் தான் இருக்கும்.
அதிலும் உலகில் அனைத்து விஞ்ஞான அறிஞர்களையும் மூக்கின் மேல் விரல் வைக்க வைத்த இந்த மிஃராஜ் பயணம்,நமது ஈமானை மெருகேற்றும் என்பதில் ஐயம் ஏதும் கிடையாது.
[
உங்களுக்குப் பின்னால் ஒரு சமுதாயம் வரும்.அவர்கள் எதையும் பார்த்திருக்க மாட்டார்கள்.வேதத்தைப் படித்து அதை ஈமான் கொண்டு அதை பின்பற்றுவார்கள்.இவர்கள் தான் மக்களிலேயே ஈமானில் சிறந்தவர்கள் என்று நபி [ஸல்] அவர்கள் கூறினார்கள்.
இந்நிகழ்வில் நாம் பல வினாக்களுக்கு விடை காண வேண்டும்.
இதில் என்ன நடந்தது?
எப்படி நடந்தது?
ஏன் நடந்தது?
இதில் என்ன படிப்பினைகள் உள்ளது?
இதய ஆன்மீக ஆபரேஷன்கள் எத்தனை முறை நடந்தது?
அல்லாமா இப்னு ஹஜர் அஸ்கலானி (ரஹிமஹுல்லாஹு) அவர்கள் கூறுகிறார்கள். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு நெஞ்சை பிளந்த நிகழ்வு மூன்று சந்தர்ப்பங்களில் நடந்தது.
1) செவிலித்தாய் ஹலீமத்துஸ் ஸஃதிய்யா (ரளியல்லாஹு அன்ஹா) அவர்கள் வீட்டில் வைத்து வளர்க்கப்படும் பொழுது, நபியவர்களுக்கு நான்கு வயது இருக்கையில் நடந்தது.
2) நபியின் நாற்பதாம் வயதில் நபித்துவம் அருளப்படும் தருணத்தில் நடந்தது.
3) மிஃராஜ் பயணம் புறப்படும் நேரத்தில் கஃபாவிற்கு அருகில் ஜிப்ரயீல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள், நபியின் நெஞ்சை பிளந்து, இதயத்தை தனியாக எடுத்து, சுவர்க்கத்திலிருந்து கொண்டு வரப்பட்ட, தங்க கிண்ணத்தில் வைத்து, ஜம் ஜம் நீரால் கழுவி, அதில் ஈமானையும், ஒளியையும் கல்வி ஞானத்தையும் நிரப்பினார்கள். இந்நிகழ்வு இன்றைக்கு இதய அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவ உலகிற்கு நல்லதொரு முன்மாதிரியாகும்.
நூல்-:- ஃபத்ஹுல் பாரி ஷரஹு ஸஹீஹுல் புகாரி.
மிஃராஜிற்கு ஐந்து வாகனங்களில் மாறிமாறிப் பயணம்.
1) புராக் (மின்னலாக கண்ணுக்கு எட்டும் தூரம் வரை ஒரே எட்டில் பறந்து செல்லும்) வாகனம். இதில் நபியவர்கள் கஃபாவிலிருந்து பைத்துல் முகத்தஸ் வரை பயணித்தார்கள்.
2) பைத்துல் முகத்தஸிலிருந்து முதல் வானம் வரை, மிஃராஜ் எனும் (எஸ்குலேட்டர்) தானியங்கி ஏணியில் பயணித்தார்கள்.
3) முதல் வானத்திலிருந்து ஏழாம் வானம் வரையிலும், ஒவ்வொரு மலக்குகளின் இறக்கைகளில் பயணித்தார்கள்.
4) ஏழாவது வானத்திலிருந்து சித்ரத்துல் முன்தஹா வரை, ஜிப்ரயீல் (அலைஹிஸ்ஸலாம்) இறக்கையில் பயணித்தார்கள்.
5) சித்ரத்துல் முன்தஹாவிலிருந்து, இறை சன்னிதானம் வரை, ரஃப்ரஃப் எனும் மெல்லிய பச்சை விரிப்பில் பயணித்தார்கள். முடிவில் அல்லாஹ்வின் சன்னிதானம் அடைந்து, "அத்தஹிய்யாத்து லில்லாஹி வஸ்ஸவாத்து வத்தையிபாத்து" (சொல், பொருள் செயல் சார்ந்த) அத்தனை வணக்கங்களும் அல்லாஹ்வுக்கே உண்டாகுக! என்ற காணிக்கையை முன்மொழிந்தார்கள். இதை கேட்ட அல்லாஹ் "அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹன் நபிய்யு வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு" என்று பதிலுரைத்தான். உடனே நபியவர்கள் பதிலுக்கு "அஸ்ஸலாமு அலைனா வஅலா இபாதில்லாஹிஸ்ஸாலிஹீன்" என்று கூறினார்கள். இதை கேட்ட மலக்குகள், "அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு, வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரஸுலுஹு" என்று சாட்சி கூறினார்கள். இந்த மிஃராஜின் காணிக்கையே, மறுமை நாள் வரை நினைவுச்சின்னமாக தொழுகையில் அத்தஹிய்யாத் இருப்பில் சொல்லும்படி ஏவப்பட்டுள்ளது.
மிஃராஜ் பயணத்தை பற்றி சுருக்கமாக........
நபி [ஸல்] அவர்கள் அவர்களின் சிறிய தந்தை அபூதாலிப் அவர்களின் மகளான உம்முஹானி [ரலி] அவர்களின் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது அவர்கள் எழுப்பப்பட்டு ஜம்ஜம் கிணற்றுக்கு அருகில் அழைத்து வரப்படுகிறார்கள். அங்கே அவர்களது நெஞ்சு பிழக்கப்பட்டு அதிலிருந்து அவர்களது இதயம் எடுக்கப்படுகிறது.அது ஜம்ஜம் நீரால் கழுகப்பட்டு ஞானத்தால் நிறப்பப்படுகிறது.பின்பு அங்கிருந்து ஃபலஸ்தீனிலுள்ள பைத்துல் முகத்தஸுக்கு வருகிறார்கள். அங்கே கூடியிருக்கிற அனைத்து நபிமார்களுக்கும் முன்னின்று தொழுகை நடத்துகிறார்கள்.
தொழுகை முடிந்த பிறகு ஒரு பாத்திரத்தில் மதுவும்,மறு பாத்திரத்தில் பாலும் கொண்டு வரப்படுகிறது.இவற்றில் எது வேண்டும் என்று கேட்ட போது பாலைத் தேர்ந்தெடுத்தார்கள்.
பின்பு அங்கிருந்து ஏழு வானங்களைக் கடந்து செல்கிறார்கள்.அங்கே எட்டு நபிமார்களை காணுகிறார்கள்.அதன் பிறகு சித்ரதுல் முன்தஹாவைக் கடந்து,பைத்துல் மஃமூரைக் கடந்தார்கள். சுவனத்தையும்,நரகத்தையும் கண்டார்கள்.இறுதியாக இறைவனை சந்தித்து தொழுகையை பரிசாகப் பெற்று வந்தார்கள்.
இந்நிகழ்வு அண்ணல் வாழ்வில் நடந்த பேரற்புதமாகும்
உலகில் வேறு எவருக்கும் வழங்கப்படாத உயர்நத அந்தஸ்தாகும்.
ஒளியின் வேகம் ஒரு வினாடிக்கு 86282 மைல் ஆகும்.இந்த வேகமுள்ள ஒளி நமக்கு அருகில் இருக்கும் நட்சத்திரத்திலிருந்து பூமிக்கு வர சுமார் நாளரை வருடமாகும் என்று அறிவியல் கூறுகிறது.
ஆனால் நபி [ஸல்] அவர்கள் அந்த நட்சத்திரம் மட்டுமல்ல எல்லா நட்சத்திரங்களையும் கடந்து ஏழு வானங்களையும் கடந்து யாரும் கடக்க முடியாத சித்ரத்துல் முன்தஹாவையும் கடந்து அல்லாஹ்வையும் தரிசித்து வந்தது ஒரு இரவின் சிறு பகுதி என்பது ஆச்சர்யத்தின் உச்சம் என்பது நாம் அறிந்த விஷயம்.
ஏழு வானங்களில் எட்டு நபிமார்களை சந்தித்த காரணம் :-
முதல் வானத்தில் ஆதம் நபி சந்தித்தார்கள் (அலை) அவர்களை சந்தித்தார்கள்.
1, நபிமார்களில் முதல் நபி என்பதினால்.
2, ஆதம் [அலை] அவர்கள் பிறந்த இடமான சுவனத்திலிருந்து வெளி யேற்றப்பட்டதைப் போல் நீங்கள் ஹிஜ்ரி 1 –ம் ஆண்டு மக்காவிலிருந்து வெளியேற்றப் படுவீர்கள். அந்த சுவனத்தைப் பிரிவால் அவர்கள் சங்கடப்பட்டதைப் போல் உங்களுக்கு மக்காவின் பிரிவு சிரமத்தைத் தரும்.
3, பின்பு அவர்கள் சுவனத்திற்கு திரும்பியதைப் போன்று நீங்கள் மக்காவிற்கு திரும்புவீர்கள்.
4, ஆதம் ( அலை) சுவனத்தை விட்டு வெளியேறிய காரணத்தினால் தான் மக்கள் பல்கிப் பெருகினார்கள்.அதுபோல நீங்கள் மதீனா சென்ற பிறகு தான் இஸ்லாம் பல்கிப் பெருகும் போன்ற அறிவிப்புகள் உள்ளன.
இரண்டாவது வானத்தில் ஈஸா,யஹ்யா [அலை] அவர்கள்.
1, யூதர்கள் ஈஸா நபியை பொய்யாக்கி அவர்களுக்கு நோவினை கொடுத்தனர்,இறுதியாக அவர்களை கொல்வதற்கு திட்டமிட்டனர்.
அதுபோல் உங்களுக்கு ஏற்படும்.
2, யஹ்யா நபியை அவர்களை கொலை செய்து விட்டார்கள். அவர்கள் ஷஹீதானார்கள். இதுபோன்று நபிக்கும் ஷஹாதத் கிடைக்கும் என்ற அறிவிப்பு இருக்கிறது. விஷம் வைக்கப்பட்ட உணவை சாப்பிட்டு அதன் பாதிப்பு நபியின் மரண வேளை வரை நீடித்தது என்று ஹதீஸ் கூறுகிறது.
3, யஹ்யா நபிக்கு முன்பு வேறு யாருக்கும் அந்த பெயர் வைக்கப்பட வில்லை.அது போன்று நபிக்கு முன்பு வேறு எவருக்கும் முஹம்மது என்ற பெயர் வைக்கப்பட வில்லை.
4, உங்களில் எனக்கு உதவி புரிபவர் யார் என ஈஸா நபி கேட்டார்கள். அப்போது நாங்கள் உதவி புரிகிறோம் என்று அவர்களின் தோழர்கள் கூறினார்கள்.அதுபோல் நபி [ஸல்] அவர்கள் ஹிஜ்ரி 2 –ம் ஆண்டு தன் தோழர்களை பத்ருக்காக அழைப்பார்கள்.அப்போது அவர்களின் தோழர்கள் அதற்கு பதிலளிப்பார்கள் என்ற அறிவிப்பு உள்ளது.
.
மூன்றாவது வானத்தில் யூசுப் [அலை] அவர்கள்.
இது நபியின் மூன்றாவது நிலையை அறிவிக்கிறது.
1, யூசுப் நபி அவர்களை அவர்களது சகோதரர்கள் தங்களை விட்டும் வெளியேற்றினர்.ஆனால் யூசுப் நபி அவர்கள் அவர்களை வெற்றி கொண்டு அவர்களை மன்னித்தார்கள். அதுபோல் உங்களை வெளியேற்றிய மக்களை நீங்கள் வெற்றி கொண்டு அவர்களை மன்னிப்பீர்கள்.
2, யூசுப் அவர்கள் இறந்து விட்டார்கள் என்று யஃகூப் [அலை] அவர்கள் எண்ணி சங்கடப்பட்டதைப் போல் ஹிஜ்ரி 3 –ம் ஆண்டு உஹது போர் களத்தில் நீங்கள் இறந்து விட்டீர்கள் என்று மக்கள் பீதி அடைவார்கள் என்ற அறிவிப்பு உள்ளது.
நான்காவது வானத்தில் இத்ரீஸ் [அலை] அவர்கள்.
இது நபியின் நான்காவது நிலையை அறிவிக்கிறது.
முதன் முதலாக பேனா கொண்டு எழுதி எழுத்துக்கலையை உருவாக்கியது இத்ரீஸ் [அலை] அவர்கள் தான். அதுபோன்று எல்லா மன்னர்களும் பார்த்து பயப்படும் அளவுக்கு நபியின் அந்தஸ்து உயரும். அந்நேரத்தில் எல்லாருக்கும் கடிதம் மூலம் இஸ்லாத்தின் பக்கம் அழைப்பு விடுப்பார்கள் என்ற அறிவிப்பு உள்ளது.
ஐந்தாவது வானத்தில் ஹாரூன் [அலை] அவர்கள்.
1, ஆறாவது வானத்தில் மூஸா நபி அவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு நெருக்கமானவர்களாக இருந்த காரணத்தினால் ஹாரூன் நபி அவர்கள் ஐந்தாவது வானத்தில் இருந்தார்கள்.
2, ஒரு கட்டத்தில் ஹாரூன் [அலை] அவர்கள் மீது கோபம் கொண்ட மக்கள் பின்பு அவர்களை நேசிக்க ஆரம்பித்தனர். அதுபோல் நபியை விரோதம் கொண்டவர்கள் பின்பு நேசம் கொள்வார்கள் என்ற அறிவிப்பு உள்ளது.
3, அல்லாஹ்வுடன் உரையாடுவதற்காக சென்ற மூஸா நபி அவர்கள் அந்நேரத்தில் ஹாரூன் நபியை தனக்குப் பகரமாக மக்களிடம் விட்டுச் சென்றார்கள். ஆனால் அம்மக்கள் ஒப்பந்தத்தை மீறி ஹாரூன் [அலை] அவர்களை கொல்ல முயற்சித்தனர்.காளைக் கன்றை தெய்வமாக்கி
வணங்க ஆரம்பித்தனர்.
அதுபோல் யூதர்கள் அனைவரும், நபிக்கு உதவி புரிவோம்
என்ற ஒப்பந்தத்தை மீறி ஒன்று திரண்டு குறைஷிகளையும் தங்களுடன் இணைத்துக் கொண்டு நபியுடன் போர் செய்ய முனைந்தனர்.அப்போது அவர்களைத் தடுப்பதற்காகத் தான் நபி [ஸல்] அவர்கள் அகழ் தோண்டும் படி உத்தரவிட்டார்கள்.இது ஹிஜ்ரி 5 –ம் ஆண்டு நடந்தது.
ஆறாவது வானத்தில் மூஸா [அலை] அவர்கள்.
மூஸா [அலை] அவர்கள் பைத்துல்முகத்தஸை கைப்பற்றுவதற்காக அங்கே சென்று போரிடுவதற்கு தன் சமூகத்தை அழைத்தார்கள். அப்போது அவர்கள்,நாங்கள் வர மாட்டோம்,வேண்டுமென்றால் நீங்களும் உங்கள் இறைவனும் சேர்ந்து போரிடுங்கள் என்று கூறி மறுத்து விட்டனர். உள்ளே செல்ல வில்லை. அதுபோன்று நபி [ஸல்] அவர்களும் ஹிஜ்ரி 6 –ம் ஆண்டு மக்காவிற்குள் நுழைய முற்படும் போது தடுக்கப்படுவார்கள் என்பதை அறிவிக்கிறது.
ஏழாவது வானத்தில் இப்ராஹீம் [அலை] அவர்கள்.
1, நபி [ஸல்] அவர்கள் ஹபீபுல்லாஹ்.இப்ராஹீம் [அலை] அவர்கள் கலீலுல்லாஹ். கலீலுல்லாஹ் என்பது ஹபீபுல்லாஹ்விற்கும் அடுத்த அந்தஸ்தாகும்.எனவே நபி [ஸல்] எல்லாவற்றையும் கடந்து அல்லாஹ்வை தரிசித்த போது அதற்கு அடுத்த நிலையில் இப்ராஹீம் நபியை அல்லாஹ் வைத்தான்.
2, ஹிஜ்ரி 7 –ம் ஆண்டு தான் நபியவர்கள் இப்ராஹீம் நபியின் சுன்னத்தான உம்ராவை நிறைவு செய்வதற்காக மக்காவுக்கு சென்றார்கள்.இந்த அறிவிப்பும் இதில் உண்டு.
மிஃராஜ் தரும் படிப்பினைகளில் சில.....
1, அல்லாஹ்வை நெருங்க வேண்டுமெனில் உள்ளப் பரிசுத்தம் தேவை என்பதை நபியின் உள்ளம் ஜம்ஜம் நீரால் கழுகிய நிகழ்வு உணர்த்துகிறது.
2, மக்காவிலிருந்து புறப்பட்டு பைத்துல் முகத்தஸ் செல்வதற்கு முன்பு ஜிப்ரயீல் அலை அவர்கள் நபி ஸல் அவர்களை ஒரு சில முக்கியமான இடங்களுக்கு அழைத்துச் சென்று அங்கே தொழும்படி கூறுகிறார்கள்.எனவே புனிதஸ்தலங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை இது உணர்த்துகிறது.
3, அல்லாஹ்வை நோக்கி பயணிக்க வேண்மெனில் ஒரு பூரணத்துவம் அடைந்த வழிகாட்டி வேண்டும் என்பதை இப்பயணத்தில் ஜிப்ரயீல் [அலை] அவர்களின் தோழமை உணர்த்துகிறது.
4, இப்பயணம் நபித்துவத்திலிருந்து 11 வது வருடத்தின் இடையில் நடந்தது.அதாவது நபியின் 52 வது வயதில் நபித்துவம் 23 ஆண்டுகள் என்றால் இந்நிகழ்வு சரியாக அதன் மத்தியில் நடை பெற்றிருக்கிறது.
வெள்ளிக்கிழமை வார நாட்களில் முதல் நாளாகும்.அந்த அடிப்படையில் இந்நிகழ்வு நடந்த திங்கள்கிழமை வாரத்தின் மத்தியாகும். எனவே இதன் மூலம் எதிலும் நடுநிலமை வேண்டும் என்று உணர்த்தப்படுகிறது.
5, உயர்நத அந்தஸ்தைக் குறித்து பேசும் இடத்தில் கூட “அடியாரை அழைத்துச் சென்றான்” என்று எளிமையான பெயரை பயன்படுத்தி யிருப்பது எப்பொழுதும் பணிவு வேண்டும்.அது தான் மனிதனை உயர்த்தும் என்ற பாடத்தை தருகிறது.
இன்றைக்கு உலகிலே பலருக்கு நிறைய திறமை, நிறைய அறிவு இருந்தும் தங்கள் வாழ்வில் ஒவ்வொன்றையும் பல போராட்டங்கள், பல முயற்சிகள், பல தடைக் கற்களைத் தாண்டியே பெற்றுக் கொள் வார்கள்.
ஆனால் அந்த அளவு திறமையும், புத்திசாலித் தனமும் இல்லாத ஒரு சிலர் எளிதாக நல்ல வேலை,அந்தஸ்து, பதவி என உயர்ந்த நிலைக்குப் போய் விடுவார்கள். அவர்கள் விரும்பிய அனைத்தும் எளிதில் கிடைத்து விடும்.அவர்களுக்கு தொட்டதெல்லாம்
துலங்கும்.
இந்த இரு சாராரின் குணங்களை நாம் சற்று ஆராய்ந்தால்
அவர்களுக்கிடையே நிலவும் இந்த வேறுபாட்டை புரிந்து கொள்ளலாம். வாழ்வில் மேலும் மேலும் உயர்ந்து கொண்டே செல்பவர்களை நாம் நோக்கினால் நிச்சயம் அவரிகளிடம் பணிவு, அடக்கம் மேலோங்கி இருப்பதைக் காண முடியும்.
இந்தப் பணிவைக் கொண்டு தான் நபி ஸல் அவர்கள் இவ்வளவு பெரிய மகத்தான அந்தஸ்தைப் பெற்றார்கள் என்பதையும் உணர்த்துகிறது.
6, 50 நேரத்தொழுகை பல முறை திரும்பத் திரும்பக் கேட்டு கொஞ்சம் கொஞ்சம் குறைக்கப்பட்டு 5 நேரமாக ஆனது.எத்தனை முறை நாம் அல்லாஹ்விடம் இறைஞ்சினாலும் அவன் கொடுக்கத் தயங்க மாட்டான் என்ற பாடம் இதில் உண்டு.
7, அல்லாஹ் நினைத்தால் எதுவும் நடக்கும்,நம் அறிவுக்கு எட்டாததும் சாத்தியமாகும் என்பதை இந்நிகழ்வு காட்டி விட்டது. அறிவை வைத்துக் கொண்டு நாம் மார்க்கத்தை அளவீடு செய்யக் கூடாது.மார்க்கம் என்று வந்து விட்டால் அது அறிவுக்கு எட்டா விட்டாலும் அதை ஏற்க வேண்டும்.
அது தான் உண்மையான ஈமானின் அடையாளம்.
8, அபூதாலிப் மற்றும் அன்னை கதீஜாவின் மரணத்திற்குப் பிறது தான் மிஃராஜ் நிகழ்ந்தது.எனவே கஷ்டம் வரும்போது பொருமை காண்டால் அல்லாஹ் நிச்சயம் அதற்கு சிறந்த பகரத்தைத் தருவான் என்ற பாடம் இதில் இருக்கிறது.
நாம் வாழ்கின்ற இந்த உலக வாழ்க்கை, இன்பமும்,துன்பமும் கலந்த கலவை.துன்பத்தை அனுபவிக்காமல் இன்பத்திலேயே மூழ்கியவனும் கிடையாது.இன்பத்தை சுவைக்காமல் துன்பத்திலேயே சிக்கியவனும் கிடையாது. நம்மைப் படைத்த இறைவன் இரண்டையும் ஒன்றன் பின் ஒன்றாகத் தருகிறான்.
ஒரு நொடியில் ஏற்படும் துன்பம், அடுத்த நொடியில் ஏற்படும் இன்பத்தால் மறைந்து போய்விடும். ஓர் உயிரிழப்பு ஏற்பட்டு துன்பத்தில் துவண்டு கொண்டிருக்கும் ஒரு வீட்டில், புது வரவாக ஒரு குழந்தை பிறப்பது, அந்த வீட்டில் குதூகலத்தை ஏற்படுத்துகிறது. பொருளாதாரத்தில் மிகுந்த நஷ்டத்தை சந்தித்து மனம் நொந்து போன ஒருவனுக்கு சிறந்த ஊதியத்தில் பணி கிடைக்கிற போது, நஷ்டத்தைக் குறித்த கவலை காணாமல் போகிறது. இது மனித வாழ்கையின் தாத்பரியம்.இந்த தாத்பரியத்தை ஒருவன் புரிந்து கொண்டால் கஷ்டங்களை சுலபமாக எதிர்கொள்ளும் பக்குவத்தைப் பெற்று விடுவான்.
அறிஞர் லுக்மான் அலைஹிஸ் ஸலாம் அவர்கள் தன் மகனை அழைத்துக் கொண்டு அவசரமாக ஒரு ஊருக்குப் புறப்படுகிறார்கள். வழியில் ஒரு காட்டுப் பகுதியில் மகனின் காலில் முள் ஒன்று தைத்து இரத்தம் வழிகிறது. கடுமையான வலி. நடக்க முடியவில்லை. சரி இன்றிரவு இங்கேயே பொழுதைக் கழித்து விட்டு வலி குறைந்ததும் பயணிக்கலாம் என்று அங்கு தங்குகிறார்கள். மறுநாள் காலையில் புறப்பட்டு அந்த ஊருக்கு சென்று பார்த்தபோது ஒரே மயானமாக காட்சி தந்தது . அன்று அதிகாலையில் நடந்த பூகம்பத்தில் அந்த ஊரே காணாமல் போயிருந்தது.மகனே! ஒருவேளை உன் காலில் முள் குத்தாமல் இருந்திருந்தால் நாமும் பூமிக்குள் புதையுண்டிருப்போம்
என்று அறிஞர் லுக்மான் {அலை} அவர்கள் தன் மகனிடம் கூறினார்கள்
பொருமை
இருந்தால் நிச்சயம் மேன்மையை அடைய முடியும் என்பதை பல்வேறு நிகழ்வுகள் உணர்த்துகின்றன
9, இந்த விஷயத்தை மக்களிடம் சொல்ல வேண்டாம்.மக்கள் நம்ப மாட்டார்கள் என்று உம்முஹானீ [ரலி] அவர்கள் தடுத்த போதும் தாஹா நபியவர்கள் தயங்காமல் வெளிப்படுத்தினார்கள். உண்மையை உரைப்பதற்கு யாருக்கும் அஞ்சக் கூடாது என்று இதன் மூலம் உணர்த்தப் படுகிறது.
10, பெண்கள் தங்கள் கணவன்களுக்கும் மரியாதை அளிக்க வேண்டும்.
11,அமல்கள் குறைவாக இருந்தாலும் நிறைவான பாக்கியம் கிடைக்கும்.
12, முக்கியமான பயணங்கள் புறப்படும் போது நல்லோர்களின் ஆசியைப் பெற வேண்டும் என்பதை பைத்துல் முகத்தஸில் எல்லா
நபிமார்களையும் சந்தித்த நிகழ்வு உணர்த்துகிறது.
அல்லாஹ்வை சந்தித்தல்,அல்லாஹ்வை பார்த்தல் என்பது உலகத்திலேயே ஈடு இணையற்ற இன்பம்.அதற்கு நிகராக வேறெந்த இன்பமும் உலகிலும் இல்லை,மறுமையிலும் இல்லை.
சுவனவாசிகளுக்கு அல்லாஹ்வின் தரிசனம் கிடைத்தால் அவர்கள் சுவனத்தின் அனைத்து இன்பங்களையும் மறந்து விடுவார்கள் என ஹஸன் பஸரி ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.
قال الحسن: «إذا تجلى لأهل الجنة نسوا كل نعيم الجنة
அல்லாஹ்வைப் பார்க்கும் இன்பம் உலகமே கிடைத்ததைப் போன்று.சுவனத்தின் மற்ற இன்பங்கள் அந்த உலகத்தில் ஒரு சிறு
சிட்டுக்குருவியைப் போன்று என்று கூறுவார்கள்
சுவனத்தின் மற்ற இன்பங்கள் அனைத்தையும் மறக்கச் செய்யும் அத்தகைய மாபெறும் இன்பத்தின் போது கூட அண்ணலம் பெருமானார் ஸல் அவர்கள் தன் உம்மத்தை மறக்காமல் நினைத்துப் பார்த்தார்கள் என்றால் அவர்கள் எந்தளவு தன் உம்மத்தின் மீது அளவு கடந்த அன்பு வைத்துள்ளார்கள் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.
அத்தகைய நாயகத்தை என்றும் நினைத்துப் பார்ப்போம்.
இன்ஷா அல்லாஹ் அவர்களோடு சுவனத்தில் இணைவோம்.
இன்னும் எண்ணற்ற பாடங்களை இந்த விண்ணேற்றப் பயணம் தாங்கி நிற்கிறது.இதிலுள்ள அகமியங்களையும் பாடங்களையும் படிப்பினை களையும் விளங்கி அதைப் பின்பற்றி ஈருலக வெற்றிகளைப் பெறுவதற்கு வல்லோன் அல்லாஹ் அருள்புரிவானாக ஆமீன்.
- Get link
- X
- Other Apps