முத்தான மூன்று பாக்கியங்களைப் பெற்றுத் தரும் ஸியாரத்!! 07-03-23
- Get link
- X
- Other Apps
ஒரு முஸ்லிமுடைய எல்லா வகையான வெற்றிக்கும் அடிப்படையாக இஸ்லாம் மூன்று அம்சங்களை அடையாளப்படுத்துகின்றது.
1.உலக பற்றற்ற நிலை, 2.மரண சிந்தனை, 3.மறுமை நாளைப் பற்றிய பயம்.
இம்மூன்று அம்சங்களை முஸ்லிம் சமூகம் கொண்டிருக்கின்ற காலமெல்லாம் வெற்றிப் பாதையிலேயே பயணிக்கும். இம்மூன்று அம்சங்களும் ஒன்று இன்னொன்றோடு மிக நெருங்கிய தொடர்புடையது.
இந்த மூன்று படித்தரங்களின் படி வாழ்க்கையை அமைத்துக் கொள்வதற்கு ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக மிகப்பெரிய அளவிலான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியதிருக்கும்.
எனினும், இந்த மூன்று அம்சங்களை இலகுவாப் பெற்று விட முடியும்? என்று நம்பிக்கை தருகின்றது நபி {ஸல்} அவர்களின் நபி மொழி.
ஆம்! ஒரு அமல் இருக்கின்றது அந்த அமலை ஒரு முஸ்லிம் செய்து வருகின்றார், தவறாது கடைபிடித்து வருகின்றார் என்றால் இந்த மூன்று பாக்கியங்களையும் பெற்றுக் கொள்ள முடியும்.
இன்றைய பராஅத் இரவில் மக்ரிப் தொழுகைக்குப் பின்னர் மூன்று யாஸீன் ஓதி நம் நலனுக்காக துஆச் செய்து விட்டோம் அல்லவா?
அடுத்து இஷாத் தொழுது விட்டு சிறப்பு அமல்களின் ஒரு பகுதியாக இதோ பயான் பேசிக் கொண்டும், கேட்டுக் கொண்டும் இருக்கின்றோம் அல்லவா?
அடுத்து என்ன செய்யப்போகின்றோம். திக்ர் மஜ்லிஸ், அதற்கடுத்து தஸ்பீஹ் தொழுகை, அதற்கடுத்து சிறப்பு துஆ.
அதற்கடுத்து இறந்து போன நமது மூதாதையர்களின் மண்ணறையைச் சந்தித்து அவர்களுக்கு ஸலாம் சொல்லி, அவர்களுக்காக ஈஸால் ஸவாபு செய்து துஆச் செய்ய இருக்கின்றோம்.
இன்றைக்கு நாம் செய்து கொண்டிருக்கின்ற அமல்களில் ஒரு அமல் தான் அது.
ஆம்! அந்த அமல் தான் “ஸியாரத்துல் குபூர் – மண்ணறையைச் சந்தித்தல்” ஆகும். நாம் கடைசியாக செய்ய இருக்கும் அமல் தான் அது.
عن عائشة قالت فقدت رسول الله صلى الله عليه وسلم ليلة فإذا هو بالبقيع فقال أكنت تخافين أن يحيف الله عليك ورسوله ؟ قلت يا رسول الله إني ظننت أنك أتيت بعض نسائك فقال إن الله تعالى ينزل ليلة النصف من شعبان إلى السماء الدنيا فيغفر لأكثر من عدد شعر غنم كلب رواه الترمذي وابن ماجه وزاد رزين ممن استحق النار وقال الترمذي سمعت محمدا يعني البخاري يضعف هذا الحديث
ஒரு நாள் இரவு நான் மாநபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களை காணவில்லை. (உடனே எங்கே போயிருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டு அவர்களைத் தேட ஆரம்பித்தேன்) அன்னவர்களோ ஜன்னத்துல் பகீஃ என்ற மதீனாவிலுள்ள முஸ்லிம்களின் மையவாடியில் தன் தலையை வானத்தின் பக்கம் உயர்த்தியவர்களாக இருந்தார்கள்.
(நான் திகைத்துப் போய் இருப்பதைக் கண்ட) மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் “அல்லாஹ்வும் ரஸூலும் உங்களுக்கு அநீதம்
செய்துவிடுவார்கள் என்று பயப்படுகிறீர்களோ” என்று கேட்டார்கள்.
நான் அதற்கு தங்களுடைய மனைவிமார்களில் எவருடைய வீட்டிற்கேனும் தாங்கள் வந்திருப்பீர்கள் என்று தான் நினைத்தேன் என்று கூறினேன்.
அப்போது, மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் நிச்சயமாக அல்லாஹுதஆலா (பராஅத்துடைய இரவாகிய) ஷஃபான் மாதத்துடைய 15வது நாளின் இரவில் முதலாவது வானத்தில் இறங்கி பனீ குலைப் என்ற கோத்திரத்தார் வைத்திருக்கும் ஆடுகளினுடைய முடிகளின் எண்ணிக்கையை விட அதிகமான ஆட்களுக்கு பாவங்களை பொறுத்தருள்கிறான் என்று கூறினார்கள்” என அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அறிவிக்கிறார்கள். ( நூல்கள்: திர்மிதி 739, இப்னு மாஜா 1389, அஹ்மத் 6-238, மிஷ்காத் 1299 )
பாக்யமும், மகத்துவமும் நிறைந்த பராஅத் இரவொன்றில் மாநபி {ஸல்} அவர்கள் பள்ளியில் அமர்ந்து இறைவணக்கத்தில் ஈடுபடுவதற்கு பதிலாக இறந்து போனவர்கள் நல்லடக்கம் செய்யப்பட்டிருக்கிற மண்ணறைகளுக்கு சென்று அவர்கள் மீது இறைவனின் மன்னிப்பும் கருணையும் கிடைக்க வேண்டும் என்பதை விரும்பினார்கள் என்றால் மண்ணறைவாசிகள் மீதான நம் கவனம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை நாம் உணர வேண்டும்.
ஸியாரத் என்றால்…
ஸியாரத் என்ற அரபுச் சொல்லுக்கு சந்தித்தல் என்பது பொருள். ஸியாரதுல் குபூர் என்றால் மண்ணறைகளைச் சந்தித்தல் என்பது பொருள். மனிதர்களுக்கு மரண பயம் ஏற்பட வேண்டும்; மறுமை வாழ்கையைப் பற்றிச் சிந்திக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக மண்ணறைகளுக்குச் சென்றுவர வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஸியாரத் எதற்காக…
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ وَمَحْمُودُ بْنُ غَيْلَانَ وَالْحَسَنُ بْنُ عَلِيٍّ الْخَلَّالُ قَالُوا حَدَّثَنَا أَبُو عَاصِمِ النَّبِيلُ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ عَلْقَمَةَ بْنِ مَرْثَدٍ عَنْ سُلَيْمَانَ بْنِ بُرَيْدَةَ عَنْ أَبِيهِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ كُنْتُ نَهَيْتُكُمْ عَنْ زِيَارَةِ الْقُبُورِ فَقَدْ أُذِنَ لِمُحَمَّدٍ فِي زِيَارَةِ قَبْرِ أُمِّهِ فَزُورُوهَا فَإِنَّهَا تُذَكِّرُ الْآخِرَةَ رواه الترمذي
புரைதா (ரலி) அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மண்ணறைகளைச் சந்தியுங்கள். ஏனென்றால் அவை மறுமையை நினைவூட்டுகின்றன. நூல் : திர்மிதி
"கப்ருகளை ஸியாரத் செய்யுங்கள். ஏனெனில் நிச்சயமாக அது இவ்வுலகத்தில் பற்றற்ற நிலையை உண்டாக்கி மறுவுலக வாழ்வைப் பற்றிய நினைவையும் ஏற்படுத்த வல்லது" என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியிருக்கிறார்கள். (இப்னு மாஜா 1569, மிஷ்காத் பக்கம் 154)
قال رسول الله صلى الله عليه وسلم (( أَلا إِنِّي قَدْ كُنْتُ نَهَيْتُكُمْ عَنْ ثَلاثٍ ثُمَّ بَدَا لِي فِيهِنَّ: نَهَيْتُكُمْ عَنْ زِيَارَةِ الْقُبُورِ، ثُمَّ بَدَا لِي أَنَّهَا تُرِقُّ الْقَلْبَ وَتُدْمِعُ الْعَيْنَ وَتُذَكِّرُ الآخِرَةَ فَزُورُوهَا
இன்னொரு அறிவிப்பில்.. “உள்ளங்களை மென்மையாக்கும், கண்களில் கண்ணீரை சொறியச் செய்யும்” ஆகவே, நீங்கள் ஸியாரத் செய்யுங்கள் என்று நபி {ஸல்} அவர்கள் கூறியதாக இடம் பெற்றுள்ளது.
நபி {ஸல்} அவர்கள் ஜியாரத்தை அனுமதிக்கும் போது அனுமதி அளிப்பதற்குரிய காரணத்தையும் சேர்த்துக் கூறியுள்ளனர். இது முதலில் கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
மறுமையை நினைவுபடுத்தும் என்பது தான் அவர்கள் கூறிய காரணம். வேறு சில அறிவிப்புகளில் மரணத்தை நினைவு படுத்தும் என்றும் மற்றும் சில அறிவிப்புகளில் உலகப் பற்றைக் குறைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஸியாரத் தொடர்பான சட்ட வழிகாட்டல்...
قال ابن عبد البر رحمه الله : " في هذا الحديث من الفقه : إباحة الخروج إلى المقابر وزيارة القبور
மேற்கூறிய ஹதீஸ்களில் இருந்து ஸியாரத் செய்வது, ஸியாரத் செய்வதற்காக வெளியே செல்வது ஷரீஅத்தில் அனுமதிக்கப்பட்ட ஒன்றாக இருக்கின்றது என இப்னு அப்துல் பர் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்.
وقال النووي رحمه الله : " اتفقت نصوص الشافعي والأصحاب على أنه يستحب للرجال زيارة القبور , وهو قول العلماء كافة ; نقل العبدري فيه إجماع المسلمين
இமாம் நவவீ (ரஹ்) அவர்கள் இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்களின் நிலைப்பாட்டைக் கூறும் போது “ஆண்களுக்கு முஸ்தஹப் ஆகும்” என்று கூறுகின்றார்கள்.
قال الإمام ابن حزم رحمه الله تعالى في المحلي: ونستحب زيارة القبور، وفرض ولو مرة،
இமாம் இப்னு ஹஸ்ம் அஷ்ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
وزيارة القبور مستحبةٌ للنساء عند الأحناف، وجائزةٌ عند الجمهور،.
ஸியாரத் என்பது ஹனஃபிய்யாக்களிடம் பெண்கள் விஷயத்தில் முஸ்தஹப்பாகும். மேலும், பெரும்பான்மையான இமாம்களிடத்தில் ஜாயிஸ் – அனுமதிக்கப்பட்ட ஒன்றாகும்.
மண்ணறைகளை ஸியாரத் செய்வதில் நான்கு வகைகள் உள்ளன.
முதல்வகை: பெருமானார் {ஸல்} அவர்களின் ரவ்ளாவை ஸியாரத் செய்வது.
أجمعت الأمة الإسلامية على جواز زيارة قبر النبي -صلى الله عليه وسلم-، وذهب جمهور العلماء إلى أنّها سنةٌ مستحبةٌ، وقال بعضهم: زيارة قبر النبي -صلى الله عليه وسلم- سنةٌ مؤكدةٌ.
பெருமானார் {ஸல்} அவர்களின் ரவ்ளாவை ஸியாரத் தொடர்பாக சில இமாம்கள் ஸுன்னத் முஸ்தஹப் என்றும் சில இமாம்கள் ஸுன்னத் முஅக்கதா என்றும் கூறுகின்றனர். இன்னும் சிலர் வாஜிப் என்றும் கூறுகின்றனர்.
وكذلك حديث (من زار قبري وجبت له شفاعتي) أخرجه الدارقطني في سننه (2/278)
"எவர் என் கப்ரை தரிசிக்கிறாரோ அவருக்கு எனது ஷபாஅத் (பரிந்துரைப்பு) கடமையாகி விட்டது" (தாரகுத்னி பாகம் 2 பக்கம் 278 பைஹகீ 3/490) என்றும் "என்னை ஸியாரத் செய்வதற்கென்றே தயாராகி எவர் என்னை தரிசிக்கிறாரோ அவர் நாளை மறுமையில் என் அருகில் இருப்பார்" (மிஷ்காத் 240) என்றும் ஹதீஸ் வந்துள்ளது.
இந்த ஹதீஸை அடிப்படையாகக் கொண்டு சில பெரிய அறிஞர்கள் ஹஜ்ஜுக்கு என்று ஆயத்தமாகி மக்கா நகரம் செல்வது போன்றே புனித ஸியாரத்தை மாத்திரம் நோக்கமாகக் கொண்டு புனித மதீனாப் பயணம் மேற் கொண்டுள்ளார்கள் என்பதை வலிமார்களின் மற்றும் நல்லவர்களான ஸாலிஹீன்களின் வரலாறுகளில் காணமுடிகிறது.
لما روى الدارقطني بإسناده عن ابن عمر: قال: قال رسول الله -صلى الله عليه وسلم-: من حج فزار قبري بعد وفاتي فكأنما زارني في حياتي»،
"எவர் ஹஜ்ஜு செய்து விட்டு என் வபாத்திற்குப் பிறகு என் கப்ரை ஸியாரத் செய்கின்றாரோ அவர் என்னை என் ஹயாத்திலேயே சந்தித்தவரைப் போன்றவராகிவிடுகிறார்" (மிஷ்காத் 241) என்று ஹதீஸ் வந்துள்ளதால் ஹஜ்ஜுக்குச் செல்பவர்கள் பெருமானாரின் புனித ரவ்ழா ஷரீபை தரிசிக்க கடமைப்பட்டவர்களாக இருக்கிறார்கள்.
இரண்டாம் வகை: இறை நேசர்களின் மண்ணறையை ஸியாரத் செய்வது..
كان النبي يقوم بزيارة قبور الشهداء في أحد وبدر ويدعو لأصحابها وزيارة قبر أمه صلى الله عليه وسلم
நபி {ஸல்} அவர்கள் ஒவ்வொரு ஆண்டின் ஆரம்பத்திலும் ஷுஹதாக்களின் கப்ருகளை ஸியாரத் செய்பவர்களாக இருந்தார்கள். மேலும் அபூபக்கர் ஸித்தீக் (ரலி) அவர்களும் உமர் இப்னு கத்தாப் (ரலி) அவர்களும் உஸ்மான் பின் அஃப்ஃபான் (ரலி) அவர்களும் அப்படியே செய்பவர்களாக இருந்தார்கள். (தபரானி பாகம் 3 பக்கம் 241 கிதாபுல் ஜனாஇஸ்)
روي أن علي بن أبي طالب رضي الله عنه لما رجع من صفين ودخل أوائل الكوفة، رأى قبرا. فقال قبر من هذا؟ فقالوا: قبر خباب بن الارت. فوقف عليه وقال: "رحم الله خبابا. أسلم راغبا. وهاجر طائعا. وعاش مجاهدا. وابتلى في جسمه أخرا..
ஹல்ரத் அலீ (ரலி) அவர்கள் ஸிஃப்ஃபீன் போர் முடிந்து வந்து கொண்டிருக்கையில் ஓரிடத்தில் ஒரு மண்ணறையைப் பார்க்கிறார்கள்.
அது சமீபத்தில் இறந்து போன ஒருவருடைய மண்ணறை என்பதை உணர்ந்தார்கள். பின்பு அருகில் இருந்த தமது தோழர்களிடத்தில் இது யாருடைய மண்ணறை என வினவினார்கள்.
தோழர்கள் அது “ஃகப்பாப் இப்னு அல் அரத் (ரலி) அவர்களுடையது என்றார்கள்.
கேட்டதும் தான் தாமதம் தாரை தாரையாய் கண்ணீர் வடித்தார்கள். தேம்பித் தேம்பி அழுதவர்களாக…
யாஅல்லாஹ்! ஃகப்பாப் (ரலி) அவர்களுக்கு அருள் புரிவாயாக! பேரார்வத்தோடு முஸ்லிமானார்! உன் உவப்பையும், உன் தூதரின் நெருக்கத்தையும் பெறுவதற்காகவே ஹிஜ்ரத்தும் செய்தார்! தான் ஏற்றுக் கொண்ட ஏகத்துவ கொள்கைக்காக பல் வேறு இன்னல்களை தாங்கிக் கொண்டார்! யாஅல்லாஹ் ஃகப்பாப் (ரலி) அவர்களின் மீது உன் கருணை மழையைப் பொழிவாயாக! ( நூல்: ரிஜாலுன் ஹவ்லர் ரஸூல் {ஸல்}, பக்கம்:234 )
فقد روي أن الإمام الشافعي رضي الله عنه كان يزور قبري الإمامين أبي حنيفة وموسى الكاظم رضي الله عنهما ويدعو لهما ويدعو عندهما. وكذلك كان يفعل الإمام احمد بن حنبل رضي الله عنه الذي كان يزور قبر معروف الكرخي. وكان الحسن الخلال يزور قبر موسى الكاظم
இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள் இமாமுல் அஃளம் அபூஹனீஃபா (ரஹ்) அவர்கள் மற்றும் இமாம் மூஸல் காழிம் (ரஹ்) ஆகியோரின் மண்ணறைகளை ஸியாரத் செய்ய வருவார்கள். அவர்களுக்காக துஆச் செய்வார்கள். தங்களுக்காக துஆச் செய்யுமாறு வேண்டிக் கொள்வார்கள்.
இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் (ரஹ்) அவர்கள் மஅரூஃபுல் கர்ஃகீ (ரஹ்) அவர்களின் மண்ணறையை ஸியாரத் செய்ய வருவார்கள்.
இமாம் ஹஸனுல் ஃகிலால் (ரஹ்) அவர்கள் இமாம் மூஸல் காழிம் (ரஹ்) அவர்களின் மண்ணறையை ஸியாரத் செய்ய வருவார்கள்.
மூன்றாம் வகை: பெற்றோர் மற்றும் சகோதரர்கள் & உறவுகளின் மண்ணறையை ஸியாரத் செய்வது.
عن أبي هريرة - رضي الله عنه- قال: قال رسول الله - صلى الله عليه وسلم-: «من زار قبر والديه أو أحدهما كل جمعة غفر له وكتب بارًا».
"எவர் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தோறும் தனது பெற்றோர்களில் இருவரையோ அல்லது ஒருவரையோ ஸியாரத் செய்து வந்தால் அவரின் பாவங்கள் பொறுக்கப்படுவதுடன் நல்லவர் என்று எழுதப்படும்" என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். (பைஹகீ, மிஷ்காத் பக்கம் 154)
و كانت عائشة رضي الله عنها تزور قبر أخيها عبد الرحمن بن أبي بكر رضي الله عنهما
عن عبدِ اللهِ بنِ أبي مُلَيكةَ،
أنَّ عائشَةَ رَضِيَ اللَّهُ عنها أقبلَتْ ذاتَ يومٍ من المقابِرِ، فقُلْتُ لها: يا أمَّ المؤمنينَ مِن أينَ أقبَلْتِ؟ قالت: مِن قَبرِ أخي عبدِ الرحمنِ بنِ أبي بكرٍ. فقلت لها: أليسَ كان رسولُ اللهِ صلَّى الله عليه وسلَّم نهى عن زيارَةِ القبورِ؟ قالت: نعم، كان نهى، ثُمَّ أَمَرَ بزيارَتِها )) .
4- عن عائشة رَضِيَ اللَّهُ عنها، قالت: ((ألَا أُحَدِّثُكم عنِّي وعن رسولِ الله صلَّى الله عليه وسلَّم، قلنا: بلى.. الحديث، وفيه: قالت: قلْتُ: كيف أقولُ لهم يا رسولَ الله؟ قال: قولي: السَّلامُ على أهلِ الدِّيارِ من المؤمنينَ والمُسْلمينَ، ويَرْحَمُ اللهُ المُستَقدِمينَ مِنَّا والمُستَأخرينَ، وإنَّا إن شاءَ الله بكم لَلاحقونَ
அப்துல்லாஹ் பின் அபீ மலீகா (ரலி) கூறுகிறார் :ஒரு நாள் ஆயிஷா (ரலி) அவர்கள் கப்ருகளை ஜியாரத் செய்து விட்டு வந்து கொண்டிருந்தார்கள். அப்போது நான் அவர்களிடம் இறைநம்பிக்கையாளர்களின் தாயாரே நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்? என்று கேட்டேன். அதற்கு அவர்கள் என் சகோதரர் அப்துர் ரஹ்மான் பின் அபூபக்ர் (ரலி) அவர்களின் மண்ணறையிலிருந்து வருகிறேன் என்று பதிலளித்தார்கள். மண்ணறைகளுக்குச் சென்றுவரக் கூடாது என அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் தடைசெய்யவில்லையா? என்று அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் ஆம் முதலில் தடைசெய்திருந்தார்கள். பிறகு அவற்றைச் சந்தித்துவருமாறு ஏவினார்கள் எனக் கூறினார்கள்.
وكانت سيدتنا الزهراء بنت رسول الله صلى الله عليه وسلم تزور قبر عمها حمزة رضي الله عنه ومعها بعض النساء،
அன்னை பாத்திமா நாயகி ரலியல்லாஹுஅன்ஹா ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தோறும் ஹம்ஸா ரலியல்லாஹு அன்ஹு அவர்களை ஸியாரத் செய்து வந்தார்கள். நூல்: முஸ்னத் அப்துர் ரஸ்ஸாக் 3-572, முஸ்தத்ரக் 1- 377
நான்காம் வகை: முஸ்லிம்களின் கப்ருகளை ஸியாரத் செய்வது.
மண்ணறைகளுக்குச் சென்று அங்கு அடக்கம் செய்யப்பட்டிருப்பவர்கள் முஸ்லிம்களாக இருந்தால் அவர்களுக்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுக் கொடுத்த பிரார்த்தனையைச் செய்துவிட்டு வருதல் ஒரு வகையாகும். இதற்குப் பின்வரும் நபிமொழி ஆதாரமாக உள்ளது.
ـ حدّثنا يَحْيَى بْنُ يَحْيَى التَّمِيمِيُّ وَ يَحْيَى بْنُ أَيُّوبَ وَ قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ قَالَ يَحْيَى ابْنُ يَحْيَى: أَخْبَرَنَا. وقَالَ الآخَرَانِ حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ عَنْ شَرِيكٍ وَهُوَ ابْنُ أَبِي نَمِرٍ عَنْ عَطَاءِ ابْنِ يَسَارٍ عَنْ عَائِشَةَ، أَنَّهَا قَالَتْ: كَانَ رَسُولُ اللّهِ كُلَّمَا كَانَ لَيْلَتُهَا مِنْ رَسُولِ اللّهِ يَخْرُجُ مِنْ آخِرِ اللَّيْلِ إِلَى الْبَقِيعِ. فَيَقُولُ:السَّلاَمُ عَلَيْكُمْ دَارِ قَوْمٍ مُؤْمِنِينَ. وَأَتَاكُمْ مَا تُوعَدُونَ غَداً. مُؤَجَّلُونَ. وَإِنَّا، إِنْ شَاءَ اللّهُ، بِكُمْ لاَحِقُونَ. اللَّهُمَّ اغْفِرْ لأَهْلِ بَقِيعِ الْغَرْقَدِ وَلَمْ يُقِمْ قُتَيْبَةُ قَوْلَهُ وَأَتَاكُمْ
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் இறுதி நாட்களில்) என்னுடன் தங்கியிருந்த ஒவ்வோர் இரவின் பிற்பகுதியிலும் (மதீனாவிலுள்ள) பகீஉல் ஃகர்கத் பொது மையவாடிக்குச் செல்வார்கள். அங்கு (பின்வருமாறு) கூறுவார்கள்: அஸ்ஸலாமு அலைக்கும் தார கவ்மின் முஃமினீன். வ அத்தாக்கும் மா தூஅதூன. ஃகதன் முஅஜ்ஜலூன். வ இன்னா இன்ஷா அல்லாஹு பிக்கும் லாஹிகூன். அல்லாஹும்மஃக்ஃபிர் லி அஹ்லி பகீஇல் ஃகர்கத்.
வாழ்ந்துகொண்டிருப்பவர்கள் இறந்தோருக்காக தர்மம் செய்தல், தொழுதல், நோன்பு நோற்றல், ஹஜ்-உம்ரா செய்தல், குர்பானி கொடுத்தல், ஏழை எளியோருக்கு உணவளித்தல், குர்ஆன் ஓதுதல், பிழைப்பொறுக்கப் பிரார்த்தித்தல், (திக்ரு தஸ்பீஹ் எனும்) இறைதியானம் செய்தல், கடன் அடைத்தல் போன்ற நற்காரியங்கள் செய்வது மூலம் இறந்தோர் பயனடைவர் என்பது இஸ்லாமிய நம்பிக்கையாகும். இதைத்தான் இஸ்லாமிய வழக்கில் “ஈஸால் ஸவாப்” எனப்படுகிறது.
இறந்தவர்களால் அணுவளவு நற்செயலைக்கூட செய்ய இயலாது. ஏனெனில், மண்ணறை என்பது செயலாற்றும் இடம் அல்ல. இதுவரை செய்தவைக்கு கூலி வழங்கப்படும் ஆரம்ப இடமாகும். எனவே, வாழ்பவர்கள் ஏதேனும் நன்மைகள் செய்து அதை நமக்கு அன்பளிப்பு செய்யமாட்டார்களா? என்று எதிர்பார்ப்பார்கள்.
மூன்று நல்லறங்கள்
அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إِذَا مَاتَ الإِنْسَانُ انْقَطَعَ عَنْهُ عَمَلُهُ إِلاَّ مِنْ ثَلاَثَةٍ إِلاَّ مِنْ صَدَقَةٍ جَارِيَةٍ أَوْ عِلْمٍ يُنْتَفَعُ بِهِ أَوْ وَلَدٍ صَالِحٍ يَدْعُو لَهُ ) மனிதன் இறந்துவிட்டால் அவனுடைய மூன்று செயல்களைத் தவிர மற்ற அனைத்தும் நின்றுவிடுகின்றன. 1. நிலையான அறக்கொடை 2. பயன்பெறப்படும் கல்வி 3. அவனுக்காகப் பிரார்த்திக்கும் (அவனுடைய) நல்லபிள்ளை. அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- முஸ்லிம்-3358, அபூதாவூத்-2494, திர்மிதீ-1297, நஸாயீ-3591, முஸ்னது அஹ்மத்-8489
கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إِنَّ مِمَّا يَلْحَقُ الْمُؤْمِنَ مِنْ عَمَلِهِ وَحَسَنَاتِهِ بَعْدَ مَوْتِهِ عِلْمًا عَلَّمَهُ وَنَشَرَهُ وَوَلَدًا صَالِحًا تَرَكَهُ وَمُصْحَفًا وَرَّثَهُ أَوْ مَسْجِدًا بَنَاهُ أَوْ بَيْتًا لاِبْنِ السَّبِيلِ بَنَاهُ أَوْ نَهْرًا أَجْرَاهُ أَوْ صَدَقَةً أَخْرَجَهَا مِنْ مَالِهِ فِي صِحَّتِهِ وَحَيَاتِهِ يَلْحَقُهُ مِنْ بَعْدِ مَوْتِهِ ) இறைநம்பிக்கையாளர் இறந்த பின்பும் அவரைச் சென்றடையும் நல்லறங்களுள் பின்வருபவையும் அடங்கும்: 1. அவர் (பிறருக்குக்) கற்பித்துப் பரப்பிய கல்வி, 2. அவர் விட்டுச்சென்ற நல்லபிள்ளை, 3. அவர் விட்டுச் சென்ற (நல்ல) நூல் (அல்லது குர்ஆன்) 4. அவர் கட்டிய பள்ளிவாசல், அல்லது அவர் எழுப்பிய பயணியர் விடுதி, அல்லது அவர் வெட்டிய ஆறு, அல்லது அவர் ஆரோக்கியத்தோடு வாழ்ந்த காலத்தில் தம் பொருளிலிருந்து செய்த தர்மம் ஆகியவையே அவை. அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- இப்னுமாஜா-238, இப்னு குஸைமா-2490, ஷுஅபுல் ஈமான் லில்பைஹக்கி
ஒரு மனிதன் இறந்துவிட்டால் அவனுடைய நல்லறங்கள் அதாவது அவற்றுக்குக் கிடைக்கும் நன்மைகள் அதோடு நின்று விடும். இனி அவற்றுக்குப் புதிதாக நன்மைகள் கிடைக்காது. ஆனால், அவன் உயிர் வாழும் போது செய்த மூன்று நல்லறங்களுக்கான நன்மைகள் மட்டும் அவன் இறந்த பின்னரும் தொடர்ந்து கிடைத்துக் கொண்டிருக்கும்.
1. தொடர்ந்து நடக்கும் நல்லறம் என்பது நீண்ட காலம் நிலைத்து நின்று பயனளிக்கும் அறத்தைக் குறிக்கும். அதாவது (வக்ஃப் எனும்) அறக்கொடை. உதாரணமாக: பள்ளிவாசல், கல்வி நிலையம், மருத்துவமனை, மக்கள் தங்கும் விடுதி, தண்ணீர் தொட்டி போன்றவை கட்டுதல், மேலும், ஆறு வெட்டுதல், கிணறு வெட்டுதல், சாலையின் இரு மருங்கிலும் மரம் நடுதல், மார்க்கக் கல்வி கூடத்திற்கு பள்ளிவாசலுக்கு குர்ஆன் மற்றும் பயன்பெறும் வகையிலான நூல்களை வாங்கி அன்பளிப்புச் செய்தல். இது போன்ற அறக்கொடைகள் செயல்பட்டுவரும்வரை, அதற்கான நன்மை உருவாக்கியவருக்கு கிடைத்துக் கொண்டே இருக்கும். அவரது மறைவுக்குப் பின்னும் நன்மை தொடரும். அவற்றை உருவாக்கியவர் அவர்தாம் என்பதே காரணம்.
2. மக்களுக்குப் பயனளிக்கும் கல்வி. அதாவது, ஒரு கல்வியாளர் அவர் உயிர் வாழும் போது, பல மாணவர்களுக்குக் கல்வி போதித்துள்ளார். அவர்களால் அந்தக் கல்விச் சேவை தொடர்கிறது. அல்லது அவர் நூல்கள் எழுதினார். அவற்றை மக்கள் வாசித்துப் பயனடைந்துவருகின்றனர். இதன் நன்மையும் அந்த கல்வியாளருக்கு தொடர்ந்து கிடைக்கும்.
3. அவருக்காக இறைவனிடம் பிரார்த்திக்கும் நல்லபிள்ளை. அவனைப் பெற்றெடுத்து ஆளாக்கியவர் அவர்தாம் என்பதால், அந்தப் பிள்ளையின் பிரார்த்தனையின் பலன் அவருக்கு கிடைத்துக்கொண்டே இருக்கும். நூல்:- அல்மின்ஹாஜ், தக்மிலா
மனித வாழ்க்கை மிகவும் குறுகிய காலமே. குறிப்பிட்ட காலம் மட்டும் வாழ்ந்திடும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ள மனிதனுக்கு நீண்ட காலம் வாழ்ந்தால் எவ்வளவு நன்மை கிடைக்குமோ அவ்வளவு நன்மைகளை பெற்றிட அல்லாஹ் நல்வாய்ப்பை வழங்கியுள்ளான்.
ஒருவர் உயிருடன் வாழ்ந்த காலங்களில் அவர் செய்த நன்மைகளின் பலாபலன்கள் அவர் மரணித்த பின்னரும் தொடர்வதால் அவர் இறந்தும் வாழ்கிறார். அவருடைய உடலின் எந்தப் பகுதியும் மிஞ்சாது போதிலும் அவரின் அறங்களால் அவர் அழியாமல் இருக்கிறார்.
தொழுகலாம்
அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, "நாயகமே! என்னுடைய பெற்றோர் உயிரோடு இருந்தபோது அவர்களுக்கு நான் நல்ல முறையில் பணிவிடை செய்து வந்தேன். இப்போது அவர்கள் இறந்து விட்டனர். இனியும் அவர்களுக்கான நற்சேவை செய்ய நான் ஆசைப்படுகிறேன். அதற்கான வழி என்ன? என்று வினவினார்.
அண்ணலார், "நீர் உமக்காகத் தொழுவதுடன் அவர்களுக்காகவும் (உபரியாக) தொழுவீராக! நீர் உமக்காக உமது நோன்பு நோற்பதுடன் அவர்களுக்காகவும் (உபரியாக) நோன்பு நோற்பீராக! நீர் உமக்காக தர்மம் செய்வதுடன், அவர்களுக்காகவும் (உபரியாக) நீர் தர்மம் செய்வீராக! இது, பணிவிடைக்குப் பின்னர் செய்யப்படக்கூடிய நற்காரியங்களில் மிகச் சிறந்ததாகும்" என்று பதிலளித்தார்கள். அறிவிப்பாளர்:- ஹஜ்ஜாஜ் பின் தீனார் (ரலி) அவர்கள் நூல்:- இப்னு அபீஷைபா, தாரகுத்னீ
(பர்ளு எனும்) கட்டாயக் கடமைகளைத் தவிர்த்து (நபில் எனும்) உபரியான நற்காரியங்கள் யாவற்றையும் இறந்தவருக்காக செய்யலாம். அதன் பலன் அவர்களுக்கு உண்டு.
நோன்பு நோற்கலாம்
அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒரு பெண் கடலில் பயணித்தார். அப்போது அவர், "வளமும் உயர்வும் மிக்க அல்லாஹ், பாதுகாப்பாகத் தம்மைக் கரை சேர்த்தால், ஒரு மாதம் நோன்பு நோற்பேன்" என்று நேர்ச்சை செய்தார். வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் அவரை பாதுகாப்பாகக் கரை சேர்த்தான். ஆனால் அப்பெண் நோன்பு நோற்காமல் இறந்துவிட்டார்.
அப்போது அவருடைய உறவுக்காரப் பெண் ஒருவர் (அவருடைய மகள், அல்லது சகோதரி) அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் வந்து நடந்ததை எடுத்துரைத்தார். அண்ணலார், ( صُومِي ) "அவர் சார்பாக நீ நோன்பு வை" என்று கூறினார்கள். நூல்:- முஸ்னது அஹ்மத்-1764
இறந்து போனவர் தவறவிட்ட நேர்ச்சை அல்லது கடமையான நோன்பை அவருக்காக அவருடைய உறவினர் யாரும் நோன்பு நோற்றால் ஹஜ் போலவே நோன்பும் செல்லும் (இறந்தவருக்கு பலன் தரும்) என தெரிகிறது. நூல்:- ஹாஷியத்துஸ் ஸிந்தீ
அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒரு பெண்மணி கண்மணி பெருமானார் (ஸல்) அவர்களிடம் வந்து, "நாயகமே! ஒரு மாத நோன்பு கடமையாக இருந்த நிலையில் என் தாயார் இறந்துவிட்டார். அதை அவர் சார்பாக நான் நிறைவேற்றலாமா? (அதன் நற்பலன் அவருக்கு கிடைக்குமா?) என்று வினவினார். அதற்கு அண்ணலார், ( لَوْ كَانَ عَلَى أُمِّكِ دَيْنٌ أَكُنْتِ قَاضِيَتَهُ ) "உன் தாயார் மீது கடனேதும் இருந்தால், (அவர் சார்பாக) அதை நீ நிறைவேற்றுவாய் தானே?" என்று கேட்டார்கள். அதற்கு அப்பெண்மணி, "ஆம்" என்றார். அண்ணலார், ( فَدَيْنُ اللَّهِ أَحَقُّ أَنْ يُقْضَى ) "அவ்வாறாயின், நிறைவேற்றப்படுவதற்கு மிகவும் தகுதி வாய்ந்தது வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்வின் கடனே" என்று கூறினார்கள். நூல்:- முஸ்னது அஹ்மத்-1901
தானதர்மம் செய்யலாம்
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம், "என் தந்தை சொத்துக்களை விட்டுவிட்டு இறந்து போனார். அவர் இறுதி விருப்பம் எதுவும் தெரிவிக்கவுமில்லை. இந்நிலையில் அவருக்காக நான் தர்மம் செய்தால், அவருக்கு அது பரிகாரம் ஆகுமா? என்று கேட்டார். அதற்கு அண்ணலார், "ஆம்" என்றார்கள். நூல்:- முஸ்லிம்-3355, நஸாயீ-3592
அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். உங்களில் ஒருவர் தானதர்மங்கள் செய்து அதன் நன்மைகள் தங்களுடைய பெற்றோருக்கு கிடைக்க வேண்டும் என்று எண்ணினால், அந்த நன்மைகள் அவர்களுக்கும் கிடைத்துவிடும். (அல்லாஹ்வின் கிருபையால்) அவருடைய நன்மையிலும் குறைவு ஏற்படாது. அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் நூல் :- தப்ரானீ
இறந்துவிட்ட பெற்றோரின் சொத்தை அனுபவிக்கும் பிள்ளைகள் அதிலிருந்து தானும் அனுபவித்து கொண்டு, மண்ணறையில் வாழும் தம்முடைய பெற்றோருக்கும் நன்மைகள் கிடைக்கும் வகையில் தானதர்மங்கள் செய்யவேண்டும். இதுவே, நன்றியுள்ளவர்களின் பண்பாகும்.
குர்பானி கொடுக்கலாம்
ஹனஷ் பின் அல்முஅதமிர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது. அலீ (ரலி) அவர்கள் இரு செம்மறியாட்டுக் கடாக்களை குர்பானி கொடுத்துவந்தார்கள். அவற்றில் ஒன்றை அண்ணல் நபி (ஸல்) அவர்கள் சார்பாகவும் மற்றொன்றைத் தம் சார்பாகவும் குர்பானி கொடுத்தார்கள். இது குறித்து அவர்களிடம் (விளக்கம்) கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ( أَمَرَنِي بِهِ يَعْنِي النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ- فَلاَ أَدَعُهُ أَبَدًا ) "அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தான் இவ்வாறு எனக்கு உத்தரவிட்டார்கள். இதை நான் ஒருபோதும் கைவிட மாட்டேன்" என்று பதிலளித்தார்கள். நூல்:- அபூதாவூத்-2792, திர்மிதீ-1415
அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் (இறந்துவிட்ட) தங்களது சகோதரர் அப்துர் ரஹ்மான் (ரலி) அவர்களுக்காக இஃதிகாஃப் இருந்துள்ளார்கள். மேலும் அன்னையவர்கள் தங்களது சகோதரருக்காக அடிமையை உரிமையும் விட்டிருக்கிறார்கள். அறிவிப்பாளர்:- யஹ்யா பின் சயீத் (ரஹ்) அவர்கள் நூல்:- அல்முவத்தா மாலிக், தஃப்சீர் குர்துபீ அந்நஜ்மு வசனம்-39
அல்ஆஸ் என்பவர் அறியாமைக் காலத்தில் நூறு ஒட்டகங்களை அறுத்து குர்பானி கொடுப்பேன் என்று நேர்ச்சை செய்திருந்தார். அவருடைய மகனார் ஹிஷாம் என்பவர் அவருடைய பங்கில் ஐம்பது ஒட்டகங்களை அறுத்து குர்பானி கொடுத்தார். இதுபற்றி அவருடைய மற்றொரு மகனான அம்ரு (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வினவினார். அண்ணலார், "உமது தந்தை இறைநம்பிக்கையாளராக இறந்திருப்பாராயின், அவருக்காக நீர் நோன்பு நோற்றாலும், தர்மம் செய்தாலும் அது அவருக்கு பலன் தரும்" என்று பதிலளித்தார்கள். அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் அம்ரு பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் நூல்:- அபூதாவூத்-
திருக்குர்ஆன் ஓதலாம்
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إذا مات أحدُكم فلا تَحْبِسُوهُ، وأَسْرِعُوا به إلى قبرِهِ، وَلْيَقْرَأْ عند رأسِه فاتحةَ البقرةِ، وعندَ رِجْلَيْهِ بخاتمةِ البقرةِ ) உங்களில் ஒருவர் மரணம் அடைந்து விட்டால் அவரை நல்லடக்கம் செய்வதில் காலதாமதம் செய்யாதீர்கள். நல்லடக்கம் செய்வதை விரைவுபடுத்தி கொள்ளுங்கள். (நல்லடக்கம் செய்த பின்) அவருடைய தலைமாட்டில் அல்பகரா அத்தியாயத்தின் ஆரம்பத்தில் வசனங்களை ஓதிக் கொள்ளுங்கள். கால்மாட்டில் அல்பகரா அத்தியாயத்தின் இறுதி வசனங்களை ஓதிக் கொள்ளுங்கள். அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் நூல்:- தப்ரானீ, ஷுஅபுல் ஈமான் லில்பைஹகீ, மிஷ்காத் பக்கம்-149
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். உங்களில் இறந்தோருக்காக யாஸீன் அத்தியாயத்தை ஓதிக் கொள்ளுங்கள். அறிவிப்பாளர்:- மஅகில் பின் யசார் (ரலி) அவர்கள் நூல்:- அபூதாவூத்-3121
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَن دخلَ المقابرَ فقرأَ سورةَ ( يس ) خفَّفَ عنهُم يومَئذٍ ، وكان لهُ بِعَددِ مَن فيها حَسناتٌ ) ஒருவர் மையவாடியில் நுழைந்து யாசீன் அத்தியாயத்தை ஓதி அதன் நன்மைகளை அங்குள்ள மண்ணறைவாசிகளுக்கு அன்பளிப்பு செய்தால், அதன்மூலம் அந்த மண்ணறைவாசிகளுக்கு வேதனைகள் இலேசாக்கப்படுகிறது. மேலும், இதை ஓதியவருக்கு அந்த மண்ணறையில் அடக்கம் செய்யப்பட்டிருபவர்களின் எண்ணிக்கை அளவு நன்மைகள் வழங்கப்படுகிறது. அறிவிப்பாளர்:- அனஸ் (ரலி) அவர்கள் நூல்:- தஃப்சீர் குர்துபீ, அல்ஃபவாயிதுல் மஜ்மூஆ இமாம் ஷவ்கானீ, மிர்காத்
கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَنْ مَرَّ عَلَى الْمَقَابِرِ وَقَرَأَ (قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ) إِحْدَى عَشْرَةَ مَرَّةً، ثُمَّ وَهْبَ أَجْرَهُ لِلْأَمْوَاتِ ، أُعْطِيَ مِنَ الْأَجْرِ بِعَدَدِ الْأَمْوَاتِ ) மண்ணறைகளை கடந்து செல்பவர் அங்கு பதினோரு தடவை குல்ஹுவல்லாஹு அஹத் (112வது) அத்தியாயத்தை ஓதி இறந்தவர்களுக்காக அதன் நன்மையை அன்பளிப்புச் செய்வாரானால், (அன்பளிப்பு செய்த) அவருக்கு அந்த மண்ணறையில் அடக்கம் செய்யப்பட்டிருபவர்களின் எண்ணிக்கை அளவு நன்மைகள் வழங்கப்படும். நூல்:- கன்ஸுல் உம்மால், ஷரஹுஸ் ஸுதூர்
இமாம் நவவீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது. நபித்தோழர்களில் பலரும், "நான் மரணித்து என்னை நல்லடக்கம் செய்த பின்னர் எனது மண்ணறைக்கு அருகில் நின்று கொண்டு குர்ஆனின் அல்பகரா அத்தியாயத்தை ஓதிக் கொள்ளுங்கள்" என்று (வசிய்யத் எனும்) இறுதிவிருப்பம் தெரிவித்துள்ளார்கள். அவர்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவர் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் ஆவர்.
இமாம் ஷஅபி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். மதீனத்து அன்சாரிகளில் யாராவது இறந்துவிட்டால் அவர்கள் இறந்தவரின் மண்ணறைக்கு வரப் போக இருப்பார்கள். இறந்தவருக்கு நன்மைகள் கிடைக்கவேண்டும் என்றெண்ணி குர்ஆன் ஓதுவார்கள். நூல்:- கிதாபுர் ரூஹ் பக்கம்-14, ஷரஹுஸ் ஸுதூர் பாபுன் பீ கிராஅத்தில் குர்ஆனிலில் மய்யித்தி
நேர்த்திக்கடன்
அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. சஅத் பின் உபாதா (ரலி) அவர்கள், கண்மணி பெருமானார் (ஸல்) அவர்களிடம், "என் தாயார்மீது ஒரு நேர்த்திக்கடன் கடமையாயிருக்க (அதை நிறைவேற்றும் முன்பே) அவர் இறந்து போய்விட்டார். (என்ன செய்வது?)" என்று விளக்கம் கேட்டார். அப்போது அண்ணலார், ( اقْضِهِ عَنْهَا ) "அவர் சார்பாக நீங்கள் அந்த நேர்த்திக்கடனை நிறைவேற்றுங்கள்" என்றார்கள். நூல்:- புகாரீ-2761, முஸ்லிம்-3367, அபூதாவூத்-2876, திர்மிதீ-1466, இப்னுமாஜா-2123, முஸ்னது அஹ்மத்-1795 முவத்தா மாலிக்-895
அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. (உக்பா பின் ஆமிர் என்றழைக்கப்பட்ட) ஒரு மனிதர் அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் சென்று, "நாயகமே! என் சகோதரி ஹஜ் செய்வதாக நேர்ந்து கொண்டு (அதை நிறைவேற்றாமல்) இறந்து விட்டார்" என்றார். அதற்கு அண்ணலார், ( لَوْ كَانَ عَلَيْهَا دَيْنٌ أَكُنْتَ قَاضِيَهُ ) "உன் சகோதரிக்கு கடன் இருந்தால் நீதானே அதை நிறைவேற்றுவாய்?" என்று கேட்டார்கள். அவர், "ஆம் (நான்தான் நிறைவேற்றுவேன்)" என்றார். அண்ணலார், ( فَاقْضِ اللَّهَ، فَهْوَ أَحَقُّ بِالْقَضَاءِ ) "அல்லாஹ்வின் கடனை நிறைவேற்று. கடன் நிறைவேற்றப்பட அவனே அதிகம் உரிமை படைத்தவன்" என்றார்கள். நூல்:- புகாரீ-6699
இறுதி விருப்பம்
ஷரீத் பின் சுவைத் அஸ்ஸகஃபீ (ரலி) அவர்கள் கூறியதாவது. நான் அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, என் தாய் தன் சார்பாக ஓர் அடிமை விடுதலை செய்யப்பட வேண்டும் என்று இறுதி விருப்பம் தெரிவித்தார்.
என்னிடம் 'நூபியா' நாட்டுஅடிமைப் பெண் ஒருத்தி இருக்கிறாள். அவர் சார்பாக நான் அவளை விடுதலை செய்தால் அதுவே போதுமாகுமா?" என வினவினேன். அண்ணலார், ( ائْتِنِي بِهَا ) "அவளை என்னிடம் அழைத்து வா" என்று கூறினார்கள். ஆகவே நான் அவளை அண்ணலாரிடம் அழைத்துச் சென்றேன். அப்போது அவளிடம் அண்ணலார், ( مَنْ رَبُّكِ ) "உன்னுடைய இறைவன் யார்?" என்று கேட்டார்கள். "அல்லாஹ்" என்று பதிலளித்தாள். (பிறகு தம்மைக் குறித்து) ( مَنْ أَنَا ) "நான் யார்?" என்று கேட்டார்கள். "நீங்கள் அல்லாஹ்வின் தூதர்" என்று பதிலளித்தாள். அண்ணலார், ( فَأَعْتِقْهَا فَإِنَّهَا مُؤْمِنَةٌ ) "இவளை விடுதலை செய்து விடு. (அதுவே போதும்) ஏனென்றால், இவன் இறை நம்பிக்கை கொண்டவள்" என்று கூறினார்கள். நூல்:- நஸாயீ-3593
பொருளாதாரம் சார்ந்த நேர்த்திக்கடன் ஒன்றை நேர்ந்து கொண்ட நிலையில் அதை நிறைவேற்றுவதற்கு முன்பே ஒருவர் இறந்து விட்டால், அதற்கான செல்வத்தை விட்டுவிட்டு அவர் போயிருந்தால் அவரது சொத்திலிருந்து அந்த நேர்த்திக்கடனை அவருடைய வாரிசுகள் கண்டிப்பாக நிறைவேற்ற வேண்டும். பொருள் சாராத நேர்த்திக்கடன் என்றால் (எ.கா. நோன்பு, ஸகாத், ஹஜ், உம்ரா போன்றவை) அதை நிறைவேற்றுவது வாரிசுகள் மீது கடமையன்று.
அவ்வாறே பொருள் சார்ந்த நேர்த்திக்கடனாக இருந்து அதற்குத் தேவையான சொத்தை அவர் விட்டு விட்டுச் செல்லவில்லையெனில், அப்போதும் அந்த நேர்த்திக்கடனை நிறைவேற்றுவது அவருடைய வாரிசுகள் மீது அவசியம் இல்லை. ஆயினும், அவ்வாறான நேர்த்திக்கடன்களை நிறைவேற்றுவது விரும்பத்தக்கதாகும். பெரும்பான்மை அறிஞர்களின் கூற்று இதுவேயாகும். நூல்:- துஹ்ஃபத்துல் அஹ்வதீ, அல்முஃக்னீ
பிரார்த்திக்கலாம்
எங்கள் இறைவா! எனக்கும், என் தாய் தந்தைக்கும், மற்ற நம்பிக்கையாளர்களுக்கும் கேள்வி கணக்குக் கேட்கும் (மறுமை) நாளில் மன்னிப்பளிப்பாயாக!" (என்று இறைத்தூதர் இப்ராஹீம் – அலை பிரார்த்தித்தார்.) திருக்குர்ஆன்:-14:41
என் இறைவா! நான் குழந்தையாக இருந்தபொழுது (மிக்க அன்பாக) என்னை அவர்கள் வளர்த்துப் பாதுகாத்தவாறே நீயும் அவ்விருவர் மீதும் அன்பும் அருளும் புரிவாயாக!" என்றும் நீங்கள் பிரார்த்தியுங்கள்! திருக்குர்ஆன்:- 17:24
அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். நீங்கள் இறந்தவருக்காக தொழுத பின்னர் மனத்தூய்மையுடன் அவருக்காக பிரார்த்தியுங்கள். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- அபூதாவூத்-3199, இப்னுமாஜா, இப்னுஹிப்பான்
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது. அண்ணல் நபி (ஸல்) அவர்கள் உஹுத் போர் முடிந்து திரும்பியபோது, பாதையில் கொல்லப்பட்டுக் கிடந்த முஸ்அப் பின் உமைர் (ரலி) அவர்களுக்கருகில் நடந்து சென்றார்கள். (அவர்களைக் கண்டதும்) அவர்களிடம் நின்று அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்தார்கள். நூல்:- தலாயிலுந் நுபுவ்வா இமாம் பைஹகீ, அல்பிதாயா வந்நிஹாயா
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது. கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் (தம் இறுதி நாட்களில்) என்னுடன் தங்கியிருந்த ஒவ்வொரு இரவின் பிற்பகுதியிலும் (மதீனாவிலுள்ள) 'பகீஉல் ஃகர்கத்' பொது மையவாடிக்குச் செல்வார்கள். அங்கு சென்று, ( اللَّهُمَّ اغْفِرْ لأَهْلِ بَقِيعِ الْغَرْقَدِ ) “இறைவா! பகீஉல் ஃகர்கதில் உள்ளோருக்கு நீ மன்னிப்பாயாக!” என்று பிரார்த்திப்பார்கள் நூல்:- முஸ்லிம்-1773
உம்மு சல்மா (ரலி), அபூசயீத் (ரலி), அபூஹுரைரா (ரலி), இப்னு உமர் (ரலி) ஆகியோர் கூறியதாவது. ஃபாத்திமா (ரலி) அவர்கள் உஹுத் போரில் கொல்லப்பட்டோரின் அடக்கத்தலத்திற்குச் சென்று அவர்களுக்காக அழுது பிரார்த்தனை செய்வார்கள். நூல்:- மஃகாஸீ, அல்பிதாயா வந்நிஹாயா
அருமை நாயகம் (ஸல்) அவர்கள், மரணமடைந்த ஒரு நபித்தோழரை நல்லடக்கம் செய்த பின்னர் அவருடைய மண்ணறைக்கு அருகில் போய் நின்றுகொண்டு, ( اسْتَغْفِرُوا لأَخِيكُمْ وَسَلُوا لَهُ التَّثْبِيتَ فَإِنَّهُ الآنَ يُسْأَلُ ) "உங்களுடைய சகோதரரின் பாவங்கள் மன்னிக்கப்படுவதற்காக இறைவனிடம் பிரார்த்தியுங்கள். மேலும், (நன்மைகள், கலிமா தய்யிபாவின் மீது) உறுதி நிலைப்பாட்டுக்காகவும் பிரார்த்தியுங்கள். இதோ இப்போது அவர் கேள்வி கேட்கப்படுகின்றார்" என்று கூறினார்கள். உஸ்மான் பின் அப்பான் (ரலி) அவர்கள் நூல்:- அபூதாவூத்-3221, ஹாகிம்
நல்லடக்கத்தில் கலந்து கொண்டவர்கள் அந்த மரணித்தவருக்காக, "இறைவா! இவருக்கு மண்ணறை விசாரணையின் போது தூய திருக்கலிமாவை தடையின்றி தயக்கமின்றி கூறுகின்ற சக்தியையும், உறுதியையும் கொடுப்பாயாக! மேலும், இவரின் பாவங்களை மன்னித்து இவருக்கு நல்வாழ்க்கை நல்குவாயாக!" என்று (நமக்கு தெரிந்த மொழியில்) பிரார்த்திக்க வேண்டும் என்பதே இந்த நபிமொழியின் கருத்து.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَا الْمَيّتُ في القَبْرِ إِلاّ كَالْغَرِيْق الْمُتَغَوِّثِ يَنتَظِرُ دَعْوَةً تَلحَقُه مِن أبٍ أوْ أُمٍّ أوْ أخٍ أوْ صَدِيقٍ فإذا لَحِقَتْهُ كَانَتْ أحَبَّ إِلَيهِ مِن الدُّنيَا ومَا فِيهَا وَإنَّ اللهَ عزّ وجلّ لَيُدخِلُ عَلَى أهْلِ القُبُورِ مِن دُعاءِ أهْلِ الأَرْضِ أمْثَالَ الجِبالِ وإنَّ هَديَّةَ الأَحْيَاءِ إلى الأَمْوَاتِ الاِسْتِغفارُ لَهُم ) மரணித்து மண்ணறையில் இருப்பவர் (கடலில்) தத்தளித்து கொண்டு (யாரேனும் வந்து காப்பாற்ற மாட்டார்களா? என்ற எண்ணத்தில்) அபயம் தேடுபவரைப் போன்றவராவார். தந்தை அல்லது தாய் அல்லது சகோதரன் அல்லது நண்பன் ஆகியோரிடமிருந்து பிரார்த்தனையை எதிர்பார்க்கிறார். அவருக்காக அவர்கள் பிரார்த்தனை செய்துவிட்டால், அது அவருக்கு உலகமும் அதில் இருப்பவைகளை விடவும் மிக உவப்பானதாக இருக்கும். நிச்சயமாக அல்லாஹ் மண்ணறைவாசிகள் மீது பூமியில் உள்ளவர்களின் பிரார்த்தனையால் மலைகள் போன்றவைக(ளான அருள் வளங்க)ளை வழங்குகிறான். மரணித்தவர்களுக்கு உயிர் வாழ்பவர்கள் கொடுக்கும் காணிக்கை என்பது அவர்களுக்காக பிழைபொறுக்க தேடுவதாகும் அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் நூல்:- ஷுஅபுல் ஈமான் லில்பைஹக்கி, மிஷ்காத் பக்கம்-206
ஸஈது இப்னு முஸய்யப் (ரஹ்) அவர்கள், ''ஒரு மனிதர் அவருக்குப் பின் அவரது மகனின் பிரார்த்தனை காரணமாகவே உயர்த்தப்படுவார்” என தன் இரண்டு கைகளையும் வானத்தை நோக்கி உயர்த்திக் காட்டியவராக கூறுவார்கள். அறிவிப்பாளர்:- யஹ்யா இப்னு ஸஈத் (ரஹ்) அவர்கள் நூல்:- முவத்தா மாலிக்-506
அபூ உசைத் (ரலி) அவர்கள் கூறியதாவது. அருமை நாயகம் (ஸல்) அவர்களிடம் நாங்கள் இருந்தபோது, பனூ சலமா கூட்டத்தைச் சேர்ந்த ஒருவர் வந்து, ( يَا رَسُولَ اللَّهِ هَلْ بَقِيَ مِنْ بِرِّ أَبَوَيَّ شَيْءٌ أَبَرُّهُمَا بِهِ بَعْدَ مَوْتِهِمَا ) "நாயகமே! என் பெற்றோர் இறந்த பின் அவ்விருவருக்கும் நான் நன்மை செய்வதற்கு வேறு ஏதேனும் கடமைகள் உண்டா?" என்று வினவினார். அண்ணலார், ( نَعَمِ الصَّلاَةُ عَلَيْهِمَا وَالاِسْتِغْفَارُ لَهُمَا ) "ஆம்! அவ்விருவருக்காகவும் நீ பிரார்த்தனை செய்வது, அவ்விருவருக்காகவும் நீர் மன்னிப்புக் கோருவது" என்று கூறினார்கள். நூல்:- அபூதாவூத்-5142, இப்னுமாஜா, முஸ்னத் அஹ்மத், ரியாளுஸ்ஸாலிஹீன்-343
சயீத் பின் ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது. ஓர் இறை நம்பிக்கையாளர் சொர்க்கத்தில் நுழைந்ததும் தன்னுடைய தந்தை, மகன், சகோதரன் ஆகியோர் எங்கே? என்று விசாரிப்பார். அதற்கு, "நல்லறங்கள் புரிவதில் உனது படித்தரத்தை அவர்கள் எட்டவில்லை" என்று பதில் கூறப்படும். அப்போது அந்த இறைநம்பிக்கையாளர், ( إِنِّي إِنَّمَا عَمِلْتُ لِي وَلَهُمْ ) "நான் செய்த நல்லறங்கள் எனக்கும் அவர்களுக்கும் சேர்த்துத்தான்" என்பார். பின்னர் அந்த உறவினர்கள் தகுதியில் அவருடன் சேர்க்கப்படுவர். பிறகு அன்னார் இந்த (40:8) வசனத்தை ஓதிக்காட்டினார்கள். நூல்:- தப்ஃசீர் இப்னு கஸீர்
இறந்தவரின் குடும்பத்தினர் அதிலும் குறிப்பாக அவருடைய பிள்ளைகள் இறைவனிடம் பிரார்த்திப்பதே சாலச்சிறந்தது. அவ்வாறு பிள்ளைகளை நாம் இஸ்லாமிய ஒழுக்கப் பயிற்சி கொடுத்து வளர்க்க வேண்டும். அப்போதுதான், நாம் மரணித்தால் நமது பிள்ளைகள் நமக்காக இறைவனிடம் பாவமன்னிப்பு தேடுவார்கள்.
நமது பெற்றோர் மற்றும் முன்னோருக்காக நற்காரியங்கள் செய்வதை நமது பிள்ளைகளின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். அல்லது அந்த நற்காரியங்களை அவர்கள் பார்க்கும் விதமாக செய்ய வேண்டும். இது ஒருவகையான பயிற்சியே!
தினந்தோறும் நாம் காலையில் தஹஜ்ஜுத் தொழுகை அல்லது ஃபஜ்ரு தொழுகை முடித்துவிட்டு பிரார்த்திக்கும் போது, “இறைவா! இன்றைய நாள் முழுவதும் நான் செய்யும் நல்லறங்களின் நன்மைகளை என்னுடைய பெற்றோருக்கும் மரணித்துவிட்ட இன்னார் இன்னாருக்கும் கொடுப்பாயாக!” என்று பிரார்த்திக்கலாம்.
பிறர் செய்கின்ற பிரார்த்தனை மற்றவருக்கு பயனளிக்கும் என்று கூறுவதன் கருத்தாவது, பிறருடைய நற்செயல்களும் பயனளிக்கும் என்பதன் சுருக்கமாகும்.
அறக்கொடை
சஅத் பின் உபாதா (ரலி) அவர்கள் கூறியதாவது. என்னுடைய தாய் இறந்துவிட்டார். (எனவே நான் அண்ணல் நபி - ஸல் அவர்களிடம் சென்றேன்) "நாயகமே! என் தாயார் இறந்து விட்டார். அவர் சார்பாக நான் தர்மம் செய்யலாமா?" என்று கேட்டேன். அதற்கு அண்ணலார், "ஆம் (தர்மம் செய்யலாம்)" என்று பதிலளித்தார்கள். ( فَأَيُّ الصَّدَقَةِ أَفْضَلُ ) "எந்தத் தர்மம் மிகச் சிறந்தது?" என்று கேட்டேன். அதற்கு அண்ணலார், ( سَقْيُ الْمَاءِ ) "குடிநீர் வழங்குதல்" என்று கூறினார்கள். எனவேதான் மதீனாவில் காணப்படுகின்ற 'சஅத் நீர்த்தடாகம்' உண்டானது. நூல்:- நஸாயீ-3606
குடிநீர் வழங்குவதற்காக சஅத் பின் உபாதா (ரலி) அவர்கள் மதீனாவில் ஒரு கிணறு தோண்டினார்கள். அப்போது மதீனாவில் தண்ணீர் இல்லாத பஞ்ச காலமாக இருந்தது. அந்தக் கிணற்றைத் தோண்டி, இது சஅதியின் தாயாருக்காக (வக்ஃப் செய்யப்பட்டது) என்று கூறினார்கள்.
மரணமடைந்தவரின் சார்பாக வக்ஃப் செய்வதை அண்ணல் நபி (ஸல்) அவர்கள் பெரிதும் விரும்பியுள்ளார்கள். ஏனெனில், அதற்கான நன்மை தொடர்ந்து அவருக்கு கிடைத்துக்கொண்டே இருக்கும். அண்ணலாரின் காலத்திலேயே அது செயல்படுத்தப்பட்டது.
அங்கத்தூய்மை செய்ய தண்ணீர் வசதி செய்து கொடுத்தல், கிணறு பம்ப் செட், தண்ணீர் தொட்டி, தண்ணீர் குழாய் அமைத்தல், மற்றும் மதரசா, பள்ளிவாசல், கல்வி நிலையம் மருத்துவமனை என நிலையான தர்மங்களை அமைத்து இறந்தவர்களின் சார்பில் வக்ஃப் செய்யலாம்.
உலகம் முழுக்க இருக்கும் பல வக்ஃப் சொத்துகள் இவ்வாறுதான் உருவானது.
கடன் அடைத்தல்
சஅத் பின் அல்அத்வல் (ரலி) அவர்கள் கூறியதாவது. முன்னூறு வெள்ளிக் காசுகளை விட்டுவிட்டு என்னுடைய சகோதரர் இறந்துவிட்டார். அவருக்கு ஒரு குடும்பம் இருந்தது. எனவே, நான் அவற்றை அவருடைய குடும்பத்தாருக்கு செலவழிக்க நாடினேன்.
அப்போது அருமை நாயகம் (ஸல்) அவர்கள், ( إِنَّ أَخَاكَ مُحْتَبَسٌ بِدَيْنِهِ فَاقْضِ عَنْهُ ) "உம்முடைய சகோதரர் கடனால் (சொர்க்கத்திற்குள் நுழைய முடியாமல்) தடுக்கப்பட்டுள்ளார். எனவே, அவருடைய கடனை நிறைவேற்றுவாயாக!" என்று கூறினார்கள்.
அப்போது நான், "நாயகமே! ஒரு பெண் கேட்ட இரண்டு தங்கக் காசுகளைத் தவிர அவருடைய எல்லாக் கடனையும் நான் நிறைவேற்றிவிட்டேன். அப்பெண்ணிடம் அதற்கான ஆதாரம் இல்லை" என்று கூறினேன். அதற்கு நபியவர்கள், ( فَأَعْطِهَا فَإِنَّهَا مُحِقَّةٌ ) "அப்பெண்ணுக்கு (அவருடையக் கடனைக்) கொடுத்து விடு! அவள் உண்மையே கூறுகிறாள்" என்றார்கள். நூல்:- இப்னுமாஜா-2424, முஸ்னது அஹ்மத்-16593, பைஹகீ
ஒருவர் கடனாளியாக இறந்துவிட்டார். அவர்மீது இரக்கம் கொண்ட மற்றொருவர் அந்த கடனை அடைக்கும்போது, அதன்மூலம் இறந்தவருக்கு நிம்மதி கிடைக்கிறது என்கிறது இந்த நபிமொழி. உயிர் வாழ்பவர்கள் செய்யும் நற்காரியங்களால், இறந்தவர்கள் நிம்மதி பெறுகிறார்கள்.
பூமிக்கு மேல் இருப்பவர்களுக்கும்...
ஒருவர் நற்காரியங்கள் செய்து அதன் நன்மைகளை இறந்தவர்களுக்கு மட்டுமல்ல, இருப்பவர்களுக்கும் (அதாவது தற்போது வாழ்பவர்களுக்கும்) அன்பளிப்பு செய்யலாம். உதாரணமாக: எளியோருக்கு உணவளித்து விட்டு, "இறைவா! இதன் நன்மைகளை உலகத்தில் வாழும் என் பெற்றோருக்கும், உடன்பிறப்புகளுக்கும், மனைவி மக்களுக்கும் வழங்குவாயாக!" என்றும் பிரார்த்திக்கலாம். அதன் நன்மைகள் இவர்களுக்கும் கிடைக்கும். தர்மம் செய்தவருக்கும் கிடைக்கும்.
அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒரு பெண்மணி தன் குழந்தையை உயர்த்திக் காட்டி, "அல்லாஹ்வின் தூதரே! இவனுக்கு ஹஜ் உண்டா? என்று கேட்டார். அண்ணல் நபி (ஸல்) அவர்கள், ( نَعَمْ وَلَكِ أَجْرٌ ) "ஆம்; (அதற்காக) உனக்கும் நற்பலன் உண்டு" என்று விடையளித்தார்கள். நூல்:- முஸ்லிம்-2597
ஃபள்ல் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. கஸ்அம் குலத்தைச் சேர்ந்த ஒரு பெண் அருமை நாயகம்- ஸல் அவர்களிடம்), "என் தந்தை முதியவராக உள்ளார். இந்நிலையில், அவருக்கு அல்லாஹ் விதியாக்கிய ஹஜ் கடமை ஏற்பட்டுள்ளது. அவரால் தமது ஒட்டகத்தின் முதுகில் அமர இயலாது" என்றார். அதற்கு அண்ணலார், ( فَحُجِّي عَنْهُ ) "அவர் சார்பாக நீ ஹஜ் செய்யலாம்" என்றார்கள். நூல்:- புகாரீ-1853, முஸ்லிம்-2595
இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள். (நோன்பு நோற்க இயலாத) முதிய வயோதிகர்களுக்கு ஒவ்வொரு நோன்பிற்கும் பகரமாக ஒரு ஏழைக்கு சஹர் மற்றும் இஃப்தார் உணவு உண்ணக் கொடுக்க வேண்டும். அவர்கள் அந்த நோன்புகளை நோற்க வேண்டியது இல்லை என்று (அண்ணல் நபி - ஸல் அவர்களால்) சலுகை அளிக்கப்பட்டது. நூல்:- தாரகுத்னீ, ஹாக்கிம், புலூகுல் மராம்-695
ஒருவருக்கு ஹஜ்ஜுக்கு செல்ல முடியாத அளவுக்கு உடல் ரீதியான இயலாமை இருக்குமேயானால் அவருக்காக மற்றவர் செய்யும் ஹஜ் "பத்லி ஹஜ்" எனப்படும். நான் இன்னாருக்காக "பத்லி ஹஜ்" செய்கிறேன் என்று மனதில் நினைத்து செய்துகொண்டால் போதும். (ஹஜ் இயலாதவருக்கு ஹஜ் செய்த நற்கூலி வழங்க அல்லாஹ் போதுமானவன்.) ஆனால், பத்லி ஹஜ் செய்யக்கூடியவர் அதற்கு முன் தன்மீது கடமையாக உள்ள ஃபர்ளான ஹஜ்ஜை நிறைவேற்றியவராக இருப்பது சிறந்தது என்கிறார்கள் மார்க்க அறிஞர்கள்.
பருவ வயதை அடையாத சிறுவ சிறுமியர்கள் தொழுகை, நோன்பு, ஹஜ் போன்ற நற்காரியங்கள் எதைச் செய்தாலும், அது செல்லும். அதற்கான நன்மைகள் அந்த சிறு பிள்ளைகளுக்கும் அவர்களின் பெற்றோருக்கும் கிடைக்கும் என்கின்றனர் மார்க்க அறிஞர்கள்.
கடும் வியாதிக்காரர். அவர் இனி நோன்பு நோற்றால் உயிருக்கு ஆபத்து என்ற நிலையில் இருப்பவர், இனி எப்போதும் நோன்பு நோற்க சக்தி பெறாத வயோதிகர் ஆகியோர் நோன்பு நோற்க தேவையில்லை. ஆனால், ஒவ்வொரு நோன்பிற்கும் பகரமாக ஃபித்யா எனும் நஷ்டஈடு கொடுப்பது அவசியம்.
இந்நிலையில் உள்ள பெற்றோருக்கு அவர்களுடைய பிள்ளைகள் நோன்பிற்குரிய நஷ்டஈட்டை அவர்கள் சார்பாக வழங்கிவிட்டால், அந்த பெற்றோருக்கு நோன்பு நோற்ற நன்மைகளை அல்லாஹ் தர போதுமானவன்.
விரும்பத்தக்க காரியமே!
இறந்தவருக்கு (ஈஸால் ஸவாப் செய்தல் எனும்) பாத்திஹா ஓதுவது (ஃபர்ளு எனும்) நிர்பந்தமான காரியமன்று. மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட (முஸ்தஹப் எனும்) விரும்பத்தக்க காரியமாகும். ஆனால், இக்காரியங்கள் முகஸ்துதிக்காகவும், பெருமைக்காகவும் செய்யலாகாது. இதில் தேவையில்லாத ஆடம்பரம் கூடாது. கடன்பட்டோ அல்லது வட்டிக்கு வாங்கியோ செய்தே தீரவேண்டும் என்று எண்ணலாகாது. வருவாய்க்குத் தக்க செலவிற்குள் செய்து முடிப்பதே சாலச்சிறந்தது.
ஒரு நற்காரியம் செய்து அதன் நன்மையை இறந்தவருக்கு அர்ப்பணிப்பதற்கு மார்க்கம் ஒரு குறிப்பிட்ட வழிமுறை குறிப்பிடவில்லை. ஒரு நற்காரியத்தை செய்த பிறகு, “இறைவா! இதன் நன்மையை இன்னாருக்கு கொடுத்து விடு!” மனதளவில் அல்லது நாவில் சொல்லி கொண்டாலே போதுமானது.
நாம் நமது செல்வத்தை ஒருவருக்கு கொடுத்து விட்டால், அவர் செல்வந்தராக ஆகிவிடுகிறார். இதுபோன்றுதான் ஈஸால் ஸவாப் எனும் இறந்தோருக்கு செய்யும் நற்காரியங்கள். ஆனால், ஒரு வித்தியாசம் என்னவெனில், செல்வத்தை மற்றவருக்கு தந்தவர் ஒன்றும் இல்லாதவராக ஆகிவிடுகிறார். இதை பலருக்கு பங்கு வைத்தால் தலைக்கு கொஞ்சம் என்று கிடைக்கும். ஆனால் ஈஸால் ஸவாப் அப்படியல்ல. எத்தனைப் பேருக்கு தந்தாலும் முன்னவர்க்கு கிடைத்த அளவே கிடைக்கும். இதில் ஈஸால் ஸவாப் செய்தவருக்கும் முழுமையாய் கிடைக்கும்.
எப்படியெனில், ஒருவர் சிலருக்கு குர்ஆனை கற்றுத் தந்தார் எனில், அவர் யார் யாருக்கு குர்ஆனை கற்பித்தாரோ, அவர்கள் அனைவரும் குர்ஆன் கற்றவர்களாகிவிட்டார்கள். இதனால் கற்பித்தவர் குர்ஆனை இழந்தா போய்விட்டார்? இல்லையே. மாறாக அவரும், அதனை கற்கவேண்டியவரும் கற்றுத் தெளிந்தவராகிவிடுகின்றனர்.
(நபில் எனும்) உபரியாக தொழுகுதல், நோன்பு நோற்றல், தர்மம் செய்தல், ஹஜ்-உம்ரா செய்தல், குர்பானி கொடுத்தல், ஏழை எளியோருக்கு உணவளித்தல், குர்ஆன் ஓதுதல், பிழைப்பொறுக்கப் பிரார்த்தித்தல், (திக்ரு தஸ்பீஹ் எனும்) இறைதியானம் செய்தல், கடன் அடைத்தல் ஆகிய நற்காரியங்களை செய்தவருக்கும் யாருக்காக செய்யப்பட்டதோ அவர்களுக்கும் அதன் நற்கூலி கொஞ்சமும் குறைக்கப்படாமல் விசாலமாக அல்லாஹுத்தஆலா வாரி வழங்கப் போதுமானவன். எனவே, நாம் ஈஸால் ஸவாப் எனும் நற்காரியங்களை நிரப்பமாக செய்ய வேண்டும்
இறந்து போனவர்களின் குடும்பத்தார், வறுமையிலும், கடனிலும் சிக்கி நிலைகுலைந்து போய் இருந்தால் ஓடோடிச் சென்று உதவிட வேண்டும்…
அபூ ஸயீத் அல் குத்ரீ (ரலி) அவர்கள அறிவிக்கிறார்கள்:- “நபி (ஸல்) அவர்களின் முன் இறந்து போன ஒருவரின் ஜனாஸா தொழுவிப்பதற்காக வைக்கப்பட்டுள்ளது.
அப்போது நபி (ஸல்) அவர்கள் இறந்து போன இவர் மீது ஏதேனும் கடன் உள்ளதா?எனக் கேட்டார்கள். அதற்கு மக்கள் “ஆம் இவர் மீது கடன் உண்டு” என்றனர்.
கடனை நிறைவேற்றுமளவுக்கு அவர் ஏதேனும் பொருளை விட்டுச் சென்றுள்ளாரா?என மீண்டும் நபி (ஸல்) அவர்கள் வினவினார்கள்.
மக்கள் இல்லை என்று கூறினார்கள்.
அவ்வாறென்றால் நீங்களே அவருக்கு ஜனாஸா தொழுகை தொழுது கொள்ளுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இந்நிலையைக் கண்ட அலீ (ரலி) அவர்கள்: அல்லாஹ்வின் தூதரே! அக்கடனை அடைக்கும் முழு பொறுப்பையும் நான் ஏற்றுக்கொள்கிறேன் என்றார்கள்.
அதன் பிறகு நபி (ஸல்) அவர்கள் முன்வந்து தொழ வைத்தார்கள்.
பின்பு அலீ (ரலி) அவர்களை நோக்கி “அலீயே! அல்லாஹ் உம்மை நரகிலிருந்து காப்பானாக! முஸ்லிம் சகோதரர் ஒருவரின் கடனை அடைக்கும் எந்த முஸ்லிமைடும் அல்லாஹ் மறுமை நாளில் நரகிலிருந்து விடுதலை செய்யாமல் இருக்க மாட்டான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( நூல்: ஷரஹூஸ் ஸுன்னா )
உஹதில் ஷஹீதாகிப் போன தம் தந்தை, ஏராளமான கடன் சுமை, வயதுக்கு வந்த ஒன்பது சகோதரிகள், ஏழ்மையான சூழ்நிலை என ஏராளமான பிரச்சனைகளோடு நடமாடிக் கொண்டு, கிடைக்கும் சந்தர்ப்பங்களிலெல்லாம் அல்லாஹ்வின் பாதையில் பகைவர்களை எதிர்த்துப் போரிட முதல் ஆளாய் வந்து நிற்கிற இளைஞர் ஜாபிர் பின் அப்துல்லாஹ் {ரலி} அவர்களைப் பார்க்கிற போதெல்லாம் காருண்ய நபியவர்கள் அவருக்கு பெரிய அளவில் உதவிட வேண்டும், அந்த உதவி அவரின் முழுச் சூழ்நிலைகளையும் மாற்றிட வேண்டும். என தருணம் பார்த்துக் காத்துக் கொண்டிருந்தார்கள்.
ஏனெனில், தன்மான உணர்வும், உயர்குலத்தில் பிறந்த சிறப்பும் பெற்றிருந்தவர். நேரிடையாகச் சென்று அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் உதவிட தயக்கம் காட்டியதற்கு இது தான் காரணமாய் அமைந்திருந்தது.
அன்று அருமையாய் ஒரு சந்தர்ப்பம் அதை நழுவ விட அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களுக்கு மனமில்லை.
இன்றைக்கு எப்படியாவது அவரின் துயர் துடைத்திடும் உதவியை செய்தேயாக வேண்டும் என்ற தீர்க்கமான முடிவோடு தயாரானார்கள். தாதுர் ரிகாஃ ஹிஜ்ரி நான்கில் பனூ ஃகத்ஃபான் கிளையாரை எதிர்த்துப் போரிட மாநபி {ஸல்} அவர்களின் தலைமையில் நபித்தோழர்கள் சென்றனர்.
பெரிய அளவில் போரெல்லாம் நடைபெறவில்லை. முஸ்லிம்கள் வெற்றியோடு திரும்பினார்கள். போர் முடிந்து எல்லோரும் கிளம்பிச் சென்று கொண்டிருந்தனர். இறுதியாக, அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களும் ஜாபிர் {ரலி} அவர்களும் எஞ்சியிருந்தனர்.
மெதுவாகப் பேச்சை துவக்கினார்கள் பெருமானார் {ஸல்} அவர்கள் ”என்ன ஜாபிர்? ஏன் இவ்வளவு தாமதம்?” அதுவா? அல்லாஹ்வின் தூதரே!? கிழட்டு ஒட்டகம் ஆதலால் தான் தாமதம் என்றார்கள் ஜாபிர் {ரலி}.
கீழிறங்கி என்னிடம் தாருங்கள் என்று ஜாபிரிடம் கூறிவிட்டு, அதை வாங்கிய அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் ஒட்டகத்தின் மீதேறி, பிஸ்மில்லாஹ் கூறி தடவிக்கொடுத்தார்கள். ஒட்டகம் வேகமாகச் செல்ல ஆரம்பிக்கின்றது. அதன் பின்னர் அல்லாஹ்வின் ரஸூல் ஜாபிர் அவர்களிடம் ஒட்டகத்தைக் கொடுத்தார்கள்.
அதன் மீதேறி அமர்ந்த ஜாபிர் {ரலி} ஒட்டகம் வேகமாகச் செல்வதைக் கண்டதும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்கள்.
மீண்டும் பேச்சைத் தொடர்கின்றார்கள் நபி {ஸல்} அவர்கள் “ஜாபிர் திருமணம் முடித்து விட்டீர்களா?” ஆம்! என்றார் ஜாபிர் {ரலி}. ”கன்னிப் பெண்ணா? விதவைப் பெண்ணா?” என்று நபிகளார் கேட்டார்கள். அதற்கவர் “விதவைப் பெண்ணை திருமணம் செய்திருக்கின்றேன்” என்றார்கள்.
”ஏன் ஒரு கன்னிப் பெண்ணை திருமணம் செய்திருக்கலாமே? மண வாழ்வு மகிழ்ச்சி மிக்கதாய் அமைந்திருக்குமே? “ என்று மாநபி {ஸல்} அவர்கள் கேட்டார்கள்.
ஜாபிர் {ரலி} சொன்னார்கள் “இல்லை அல்லாஹ்வின் தூதர் அவர்களே! எனக்கு ஒன்பது சகோதரிகள். தந்தை உஹதில் ஷஹீதாகி விட்டார். கடனும் ஏராளமாய் இருக்கின்றது.
இந் நிலையில் நான் என் சகோதரிகளைக் கவனிக்க என் சகோதரிகளின் ஒத்த வயதினில் உள்ள ஒரு கன்னிப் பெண்ணை திருமணம் செய்தேனென்றால் அது நன்றாக இருக்காது என்பதற்காகத்தான் விதவைப் பெண்னை மணம் முடித்திருகின்றேன்”.
ஜாபிரே! நாம் மதீனாவின் எல்லையை நெருங்குகிற போது உடனடியாக நீர் ஊருக்குள் நுழைந்திட வேண்டாம். உமது வருகையை உமது மனைவிக்கு தெரிவித்து விடுங்கள். உமது மனைவி உமக்காக தலையணையைச் சரி செய்து வைப்பார்கள்” என்றார்கள் மாநபி {ஸல்} அவர்கள்.
அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் சாடையை புரிந்து கொள்ள முடியாமல் “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! என் வீட்டில் தலையணைகளே இல்லை அல்லாஹ்வின் தூதரே! என்றார் ஜாபிர் {ரலி}.
அல்லாஹ் நாடினால்… இனி வரும்..என்றார்கள் சிரித்துக் கொண்டே நபி {ஸல்} அவர்கள். தொடர்ந்தார்கள் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} தங்களது உரையாடலை “ஜாபிரே! உமது ஒட்டகத்தை எனக்கு விலைக்குத் தருகின்றீரா?”….
என்னது என் ஒட்டகத்தையா? அது விலை போகாது இறைத்தூதரே! வேண்டுமானால் நான் அன்பளிப்பாக உங்களுக்குத் தந்து விடுகின்றேன்” என்றார் ஜாபிர் {ரலி} அவர்கள். ”இல்லை, ஜாபிர் விலைக்குத் தருவதாக இருந்தால் கூறுங்கள். அன்பளிப்பாகவெல்லாம் தர வேண்டாம்” என்றார்கள் மாநபி {ஸல்} அவர்கள்.
அப்படியானால், ”நீங்களே ஒரு விலையைக் கூறுங்கள்” என்றார் ஜாபிர் {ரலி}. அப்போது நபி {ஸல்} அவர்கள் “ஒரு திர்ஹம்” என்றார்கள். என் ஒட்டகம் அவ்வளவு தான் விலை போகுமா? அல்லாஹ்வின் தூதரே! என்று கேட்டார் ஜாபிர் {ரலி}.
அப்போது நபி {ஸல்} அவர்கள் “இரண்டு திர்ஹம்” என்றார்கள். “வேண்டாம் அல்லாஹ்வின் தூதரே! அன்பளிப்பாகவே எடுத்துக் கொள்ளுங்கள்!” என்றார் ஜாபிர் {ரலி}.
ஒவ்வொரு திர்ஹமாக உயர்த்தி, உயர்த்தி இறுதியாக அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் 700 எழுநூறு திர்ஹமாக அந்த ஒட்டகத்திற்கு விலையாக நிர்ணயித்தார்கள்.
விலை பேசி நபியவர்கள் முடித்த போது உடனடியாக ஒட்டகத்தின் மேல் இருந்து கீழிறங்கிய ஜாபிர் அவர்களைப் பார்த்த நபியவர்கள் “நீங்களே ஓட்டி வாருங்கள் ஊர் வந்ததும் வாங்கிக் கொள்கின்றேன்” என்று கூறினார்கள்.
மதீனா வந்ததும் நேராக மஸ்ஜிதுன் நபவீக்குச் சென்று அங்குள்ள ஒரு தூணில் ஒட்டகத்தை கட்டிப் போட்டு விட்டு, வீட்டுக்கு வந்து விடுகின்றார்கள் ஜாபிர் {ரலி}.
அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் பள்ளிவாசலுக்குள் நுழைகிற போது அங்கே ஒட்டகம் கட்டப்பட்டிருப்பதை பார்த்து விட்டு, அதை அங்கே கட்டியவர் யார்? என அங்கிருந்தவர்களிடம் விசாரிக்கின்றார்கள்.
மக்கள் ஜாபிர் என்று கூறினார்கள். உடனடியாக, அங்கிருந்த பிலால் {ரலி} அவர்களை அழைத்து 700 திர்ஹத்தை ஒருபையிலே போட்டுக் கொடுத்து, இந்த ஒட்டகத்தையும், இந்த பணமுடிப்பையும் ஜாபிர் அவர்களிடம் “அல்லாஹ்வின் தூதர் இந்த பண முடிப்பை உங்களிடம் தரச் சொன்னார்கள்.
மேலும், இந்த ஒட்டகத்தை உமக்கு அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் அன்பளிப்பாக தந்திருக்கின்றார்களாம்” என்று கூறிடுமாறு அனுப்பி வைத்தார்கள். பிலால் {ரலி} அவர்களும் அப்படியே சொல்லி கொடுத்து விட்டுச் சென்றார்கள்.
இந்தச் செய்தியை அறிவிக்கின்ற அறிவிப்பாளர் ஜாபிர் பின் அப்துல்லாஹ் {ரலி} அவர்கள் ”அதற்குப் பின்னர் தாம் எப்போதுமே வாழ்வில் ஏழ்மை நிலைக்குத் தள்ளப் பட்டதில்லை. அது எங்களின் பொருளாதரத்தை பல்கிப் பெருக்கியது” என்று கூறுகின்றார்கள். ( நூல்: தஹ்தீப் ஸீரத் இப்னு ஹிஷாம், பாடம்: ஃகஸ்வது தாதுர் ரிகாஃ, பக்கம்:164,165. )
ஆகவே, மௌத்தாக்களின் மீதான நம் உரிமைகள்சையும், கடமைகளையும் உணர்ந்து செயலாற்றுவோம்!!!
யாஅல்லாஹ்! மரணித்து போன எங்களின் குடும்பத்தார், உறவினர், நண்பர்கள்
எனவே, வருடத்திற்கு ஒரு முறை என்றில்லாமல் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் ஸியாரத் செய்வோம். இறை நேசர்களின் ஸியாரத்தை விரும்பி செய்வோம். உயிருக்கு உயிரான உயிரினும் மேலான நாயகம் ஸல் அவர்களின் ரவ்ளாவை ஸியாரத் செய்து கொண்டே இருப்போம்.
அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம் அனைவருக்கும் அந்த பாக்கியத்தை நஸீபாக ஆக்குவானாக!
- Get link
- X
- Other Apps