பாவ மன்னிப்பை பெற்றுத்தரும் பாக்கியமிகு இரவு 3-3-23, 23-02-24
பாவமன்னிப்பை பெற்றுத் தரும் பாக்கியமிகு இரவு!
1️⃣பராஅத் இரவின் சிறப்புகள்!
2⃣பராஅத் இரவில் பாவ மன்னிப்பு வழங்கப்படாத 14 நபர்கள்!
3️⃣பராஅத் நோன்பு!
4️⃣பராஅத் இரவில் செய்ய வேண்டியவையும்,தவிர்க்க வேண்டிய விஷயங்களும்!
1)தஸ்பீஹ் நஃபில் ஜமாஅத்தாக தொழுகலாமா?
2)பித்அத்துகளின் விவைுகள்
3)தர்க்கம் செய்ய வேண்டாம்!
5️⃣தவ்பாவின் நிபந்தனைகள்!
6️⃣தவ்பாவின் பலன்கள்!
1️⃣பராஅத் இரவின் சிறப்புகள்!
ஷஃபான் மாதத்தின் பதினைந்தாம் இரவிற்கு "ஷபே பராஅத்" என்று கூறப்படுகிறது.
இமாம் இக்ரிமா ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களும் கூறியுள்ளார்கள். பராஅத் எனும் அரபி சொல்லுக்கு விடுதலை என்பது பொருளாகும். புனிதமிக்க அவ்விரவில் நரகவாசிகள் விடுதலை பெறுகிறார்கள் என்பதால் அந்த இரவிற்கு லைலதுல் பராஅத் (விடுதலை பெறும் இரவு) என பெயர் வந்தது.
(ரூஹுல் பயான் பாகம் 13,பக்கம் 110,111)
எவ்வாறு பூமியில் முஸ்லிம்களுக்கு இரு ஈகைப் பெருநாட்கள் உள்ளதோ அதேபோன்று வானிலுள்ள வானவர்களுக்கு லைலதுல் கத்ர் மற்றும் பராஅத்துடைய இரவு ஈதுடைய இரு இரவுகள் ஆகும்.முஸ்லிம்களின் ஈது பகலில் அமைகிறது.காரணம் இரவில் அவர்கள் தூங்கி விடுகிறார்கள்.எனினும் மலக்குகளின் ஈது இரவில் அமைகிறது.காரணம் அவர்கள் இரவிலும் தூங்குவதில்லை.
(غنية الطالبين)
ஹதீஸ்களில் பராஅத் இரவு சம்மந்தமாக அதிகமான சிறப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
1)முதலாவது சிறப்பு:
இவ்விரவில் அதிகமான மக்களுக்கு பாவமன்னிப்பு வழங்கப்படுகிறது.
நபி ஸல்லலாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: ஷஃபான் மாதத்தின் 15 ம் இரவில் இறைவன் அடியார்களை நெருங்கி வருகிறான். இணை வைப்பவன் மற்றும் விரோதம் கொள்பவன் இவ்விருவரை தவிர மற்ற எல்லோரையும் மன்னிக்கிறான்.
(இப்னு ஹிப்பான் 5665, தப்ரானி (முஃஜமுல் அவ்ஸத்) 6776 அபூ மூஸல் அஷ்அரீ (ரலியல்லாஹு அன்ஹு) இப்னு மாஜா 1390)
2)இரண்டாவது சிறப்பு:
சுப்ஹ் வரை அல்லாஹ் அடியார்களை இவ்விரவில் அழைக்கிறான்.
நபி (ஸல்) அவர்கள் ஷஃபான் மாதத்தின் 15 ம் நாள் வந்துவிட்டால் அந்நாளில் இரவின் நின்று வணங்குங்கள் ! பகலில் நோன்பு வையுங்கள் ! ஏனென்றால், நிச்சியமாக இறைவன் (அவ்விரவில்) கூறுகிறான்.
என்னிடம் பாவமன்னிப்பு தேடுவோர் உண்டா? அவர்களை நான் மன்னித்து விடுகிறேன்.. என்னிடம் ரிஜ்க் தேடுவோர் உண்டா? அவர்களுக்கு ரிஜ்க் தருகிறேன். என்னிடம் கேட்போர் உண்டா? அவர்களுக்கு நான் தருகிறேன். சுபுஹ் தொழுகையின் நேரம் வரை இவ்வாறு பலவற்றை சொல்லி கேட்டுக் இருப்பார்கள். (ஆதாரம்: இப்னு மாஜா – 1388)
3)மூன்றாவது சிறப்பு:
அதாகமான நரக வாசிகளுக்கு இவ்விரவில் விடுதலை வழங்கப்படுகிறது.
கண்மணி நாயகம் ஸல்லலாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்: ஜிப்ரயீல் அலைஹி வஸ்ஸலாம் என்னிடம் வந்து தெரிவித்தார்கள். இந்த இரவு ஷஃபான் மாதம் பிறை 15 ம் நாள் இரவாகும். கல்ப் கூட்டத்தாரின் ஆடுகளிலுள்ள உரோமங்களின் எண்ணிக்கை அளவிற்கு நரகவாசிகளை அல்லாஹ் இந்த இரவில் விடுதலை வழங்குகிறான்.
(பைஹகி ஷுஃபுல் ஈமான் 3837)
4)நான்காம் சிறப்பு:
இவ்விரவில் துஆக்கள் கபூலாகிறது.
இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்:
ஐந்து இரவுகளில் துஆக்கள் மறுக்கப்படுவதில்லை.அவை ஜும்ஆவுடைய இரவு,ரஜப் மாதத்தின் முதல் இரவு,ஷஃபான் மாதத்தின் பதினைந்தாம் இரவு,ஈதுடைய இரு இரவுகள் ஆகும்.
(ஷுஅபுல் ஈமான் பைஹகி)
இமாம் ஷாபிஈ றஹிமஹு ல்லாஹ் அவர்கள் தனது “அல்உம்மு” எனும் நூலில், ஷஃபானுடைய 15 ஆம் இரவும் துஆக்கள் அங்கீகரிக்கப்படக்கூடிய இரவாகும் என்று கூறியுள்ளார்கள்.
*2⃣பராஅத் இரவில் பாமன்னிப்பு கிடைக்கப் பெறாதவர்கள் யார்?*
عن أبي مُوسَى الْأَشْعَرِيِّ عن رسول الله -صلى الله عليه وسلم- قال: «إِنَّ اللَّهَ لَيَطَّلِعُ في لَيْلَةِ النِّصْفِ من شَعْبَانَ فَيَغْفِرُ لِجَمِيعِ خلقة إلا لِمُشْرِكٍ أو مُشَاحِنٍ» (رواه أحمد وابن ماجه )
ஹழ்ரத் அபூமூஸா (ரலி)அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஷஃபான் மாதத்தின் பதினைந்தாம் இரவில் அல்லாஹுத்தஆலா தனது அடியார்களில் இணைவைத்தவர்கள் ,பகைமைகொண்டவர்கள் தவிர அனைவரின் பாவங்களையும் மன்னிக்கிறான் என்று நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல் : அஹ்மத் இப்னுமாஜா)
عن أبي ثعلبة الخشني ” اذا كان ليلة النصف من شعبان اطلع الله الي خلقه فيغفر للمؤمنين ويملي للكافرين ويدع أهل الحقد بحقدهم حتي يدعوه (كنز العمال)
அபீ ஸஃலபா ஹூஷனீ அறிவித்தார்கள் ” ஷஃபானுடைய பதினைந்தாவது இரவு வந்து விட்டால் அல்லாஹ் தன் படைப்பினங்களுக்கு முன் வந்து முஃமின்களுடைய பாவங்களை மன்னிக்கிறான் நிராகரிப்பாளர்களுக்கு (திருந்த) அவகாசமளிக்கிறான். குரோதம் கொள்பவர்கள் அவர்கள் அதை விடும் வரை (பாவங்களை மன்னிக்காது) விட்டு விடுகிறான்”
(நூல்: கன்ஜூல் உம்மால்)
இவ்வாறு 14 வகையான நபர்களுக்கு இவ்விரவில் பாவமன்னிப்பு வழங்கப்படுவதில்லை என்பதை பல்வேறு ஹதீஸ்களின் மூலம் நாம் அறிகிறோம்.(எனவே இப்பாவங்களில் ஈடுபட்டிருப்போர் தவ்பா செய்து அல்லாஹ்விடம் மீண்டு கொள்ள வேண்டும்.)
*(شعب الايمان 3/382,383,الترغيب والترهيب 2/73,مظاهر حق 2/221,222)*
1)ஷிர்க் வைப்பவன் அது எந்த வகையான ஷிர்க்காக இருப்பினும் சரியே...
اِنَّ اللّٰهَ لَا يَغْفِرُ اَنْ يُّشْرَكَ بِهٖ وَيَغْفِرُ مَا دُوْنَ ذٰ لِكَ لِمَنْ يَّشَآءُ وَمَنْ يُّشْرِكْ بِاللّٰهِ فَقَدْ ضَلَّ ضَلٰلًا بَعِيْدًا
நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணை வைப்பதை மன்னிக்கவே மாட்டான்; இது அல்லாத (பாவத்)தைத் தான் நாடியவருக்கு மன்னிப்பான்; எவன் ஒருவன் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றானோ, அவன் நிச்சயமாக வெகு தூரமான வழிகேட்டில் ஆகிவிட்டான்.
(அல்குர்ஆன் : 4:116)
“எவர் அல்லாஹ்வுக்கு இணை வைக்காத நிலையில் அல்லாஹ்வைச் சந்திப்பாரோ, அவர் சுவனம் செல்வார். மேலும் எவர் அல்லாஹ்வுக்கு இணைவைத்த நிலையில் அல்லாஹ்வைச் சந்திப்பாரோ அவர் நரகம் செல்வார்’’ என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறத் தாம் கேட்டதாக ஹஜ்ரத் ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்லிம்)
ஹஜ்ரத் முஆத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். “முஆதே! அடியார்கள் அல்லாஹ்வுக்குச் செய்ய வேண்டிய கடமை என்ன? அடியார்களுக்கு அல்லாஹ்விடமிருந்து கிடைக்கவேண்டிய உரிமை என்ன? என்று உமக்குத் தெரியுமா?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டபோது, “அல்லாஹ்வும் அவனது தூதருமே மிக்க அறிந்தவர்கள்’’ என நான் பதில் கூறினேன். “அல்லாஹ்வுக்கு எப்பொருளையும் இணைவைக்காமல் அவனையே வணங்குவதுதான் அடியார்கள் அல்லாஹ்வுக்குச் செய்யவேண்டிய கடமையாகும். எந்த அடியான் அல்லாஹ்வுக்கு எந்த ஒன்றையும் இணைவைக்கவில்லையோ அவனை வேதனை செய்யாமலிருப்பது அல்லாஹ்விடமிருந்து அடியார்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமையாகும்’’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(முஸ்லிம்)
2)தக்க காரணமின்றி பிறர் மீது விரோதம்,குரோதம் வைத்திருப்பவர்..
தன் முஸ்லிம் சகோதரருடன் மூன்று இரவுகளுக்கு மேல் (நட்பை முறித்து) பிரிந்து, இருவரும் சந்திக்கும் போது ஒருவர் மற்றவரை புறக்கணித்து முகத்தைத் திருப்பிக் கொள்வது எந்த ஒரு முஸ்லிமுக்கும் ஆகுமானதல்ல! நட்புக்கொள்வதற்காக ஸலாம் சொல்ல முந்திக் கொள்பவரே அவ்விருவரில் சிறந்தவர்'' என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூய்யூப் அன்ஸாரி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்லிம்)
தன் முஸ்லிம் சகோதரனுடன் மூன்று நாட்களுக்கு மேல் நட்பை முறித்து இருப்பது எந்த ஒரு முஸ்லிமுக்கும் ஆகுமானதல்ல! எவர் மூன்று நாட்களுக்கும் அதிகமாகத் நட்பை முறித்து அதே நிலையில் இறந்துவிட்டால் அவர் நரகத்திற்குச் செல்வார்'' என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(அபூதாவூத்)
எவர் தன் முஸ்லிம் சகோதரருடன் (கோபம் கொண்டு) ஓர் ஆண்டு காலம் வரை நட்புகொள்ளாமல் இருப்பது அவரது இரத்தத்தை ஒட்டியதைப் போன்று!'' (வருடம் முழுவதும் நட்பை முறித்த பாவமும், அநியாயமாகக் கொலை செய்த பாவமும் ஒன்றுக்கொன்று சமமானது)'' என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறத் தாம் கேட்டதாக ஹஜ்ரத் அபூகிராஷ் ஸுலமீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(அபூதாவூத்)
ஒவ்வொரு திங்கள், வியாழக்கிழமையும் அல்லாஹுதஆலாவிடம் அடியார்களின் அமல்கள் சமர்ப்பிக்கப்படுகின்றன, அந்த நாளில் அல்லாஹுதஆலா தனக்கு இணை வைக்காதவர்களை மன்னித்து விடுவான். ஆனால், யார் தனது (முஸ்லிம்) சகோதரனுடன் பகைமை கொண்டுள்ளாரோ, அந்த மனிதர் இந்த மன்னிப்புக் கிடைக்காமல் பாக்கியமற்றுவிடுவார். அவ்விருவரும் தமக்குள் சமாதானம் செய்து கொள்ளும் வரை அவ்விருவரையும் விட்டுவிடுங்கள், தமக்குள் சமாதானம் செய்துகொள்ளும் வரை அவ்விருவரையும் விட்டு விடுங்கள்'' என்று (அல்லாஹுதஆலாவின் புறத்திலிருந்து மலக்குகளுக்கு) கூறப்படும்'' என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்லிம்)
3)உண்மையான கூட்டத்தாரை விட்டும் ஒதுங்கி தனியாக செல்பவர்
மூன்று வகையான பழக்கங்கள் முஃமினுடைய உள்ளத்தை கபடம், மோசடி (போன்றவை) களை விட்டும் சுத்தமாக்கிவிடுகிறது. 1. அல்லாஹுதஅலாவின் திருப்திக்காகச் செயல்படுதல் 2. தலைவர்களின் நலனை நாடுதல் 3. முஸ்லிம்களின் ஜமாஅத்துடன் சேர்ந்திருத்தல். ஏனேனில், ஜமாஅத்திலுள்ளவர்களின் துஆக்கள் ஜமாத்துடன் சேர்ந்திருப்பவர்களை நாலாபுறங்களிலும் சூழ்ந்து கொள்கின்றன'' (அதன் காரணமாக ஷைத்தானின் தீங்கிலிருந்து பாதுகாப்புக் கிடைக்கிறது) என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் ஸைதுப்னு ஸாபித் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்
(இப்னு ஹிப்பான்)
4)விபச்சாரம் புரியும் பெண் மற்றும் ஆண்
5)உறவை முறித்து வாழ்பவர்
நற்காரியங்கள் செய்வது தீய மரணத்தைத் தடுக்கிறது, இரகசியமாக தர்மம் செய்வது அல்லாஹுதஆலாவின் கோபத்தைத் தணிக்கிறது. உறவு முறையினைப் பேணுவது (சொந்த பந்தங்களுடன் அழகிய முறையில் நடந்து கொள்வது) ஆயுளை அதிகரிக்கிறது'' என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஉமாமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(தபரானீ, மஜ்மஉஸ்ஸவாயித்)
தெளிவுரை:- தன் சம்பாத்தியத்திலிருந்து உறவினர்களுக்குப் பொருளுதவி செய்வதும், அல்லது தன்னுடைய நேரத்தை அவர்களுடைய காரியங்களுக்காக ஒதுக்குவதும் உறவு முறையைப் பேணுவதில் கட்டுப்பட்டதாகும்.
(மஆரிஃபுல் ஹதீஸ்)
ஆயுளை அதிகரிப்பது என்பதன் பொருள் சொந்த பந்துக்களை சேர்ந்து வாழ்பவருடைய வயதில் பரகத் செய்யப்படுகிறது, நற்காரியங்கள் செய்ய நல்லுதவி வழங்கப்படுகிறது, மறுமையில் பலன் தரும் காரியங்களில் இவருடைய நேரங்கள் செலவாகும்.
(நவவீ)
எவர் அல்லாஹுதஆலாவின் மீதும், மறுமை நாளின் மீதும் நம்பிக்கை கொண்டாரோ, அவர் தனது விருந்தினரை உபசரிக்கவும். எவர் அல்லாஹுதஆலாவின் மீதும், மறுமை நாளின் மீதும் நம்பிக்கை கொண்டாரோ அவர் உறவினரைச் சேர்ந்து வாழவும். எவர் அல்லாஹுதஆலாவின் மீதும் மறுமை நாளின் மீதும் நம்பிக்கை கொண்டாரோ அவர் நல்லதையே பேசட்டும்!, இல்லையெனில் மவுனமாக இருக்கட்டும்!'' என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
புகாரி
எவர் தமது தேவைக்குரிய சாதனங்கள், ஆயுள் நீளமாக்கப்படவும் விரும்புவாரோ, அவர் தம்முடைய சொந்த பந்தங்களுடன் சேர்ந்து வாழவும்'' என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அனஸிப்னு மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(புகாரி)
இரு உறவினர்களும் பரஸ்பரம் நன்முறையில் நடந்து கொள்வது உறவினரைச் சேர்ந்து வாழ்வதாக கணிக்கப்படமாட்டாது (உறவினர் தன்னுடன் நல்லமுறையில் நடந்து கொள்வதற்காகத் தாம் உறவைப் பேணி நடப்பது உறவு முறையைப் பாதுகாத்ததாக ஆகாது) உறவினர் உறவைத் துண்டித்து வாழ்ந்தாலும் தாம் அவருடன் சேர்ந்து வாழ்பவரே உறவினரைச் சேர்ந்து வாழ்பவராக கருதப்படும்'' என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அப்துல்லாஹிப்னு அம்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்னத் அஹ்மத், பஸ்ஸார், மஜ்மஉஸ்ஸவாயித்)
உறவைத் துண்டிப்பவர் சுவர்க்கம் செல்லமாட்டார்'' என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறத் தாம் கேட்டதாக ஹஜ்ரத் ஜுபைருப்னு முத்இம் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
புகாரி
தெளிவுரை:- உறவு முறையைத் துண்டிப்பது அல்லாஹுதஆலாவிடம் எத்தனை கடுமையான பாவமென்றால், இந்தப்பாவக் கறையுடன் யாரும் சுவர்க்கம் செல்ல முடியாது. ஆனால், அதற்குரிய தண்டனை கொடுக்கப்பட்டு அந்தக் கறையைவிட்டும் சுத்திகரிக்கப்பட்டால் அல்லது ஏதேனுமொரு காரணத்தால் அவர் மன்னிக்கப்பட்டு விட்டால் சுவனத்திற்குச் செல்ல முடியும்.
(மஆரிஃபுல் ஹதீஸ்)
6)கரண்டைக்கு கீழ் ஆடை அணிபவர்
மூன்று மனிதர்களிடம் அல்லாஹுதஆலா கியாமத் நாளன்று பேசவும்மாட்டான், அவர்களை ரஹ்மத்துடைய பார்வையால் பார்க்கவும் மாட்டான், பாவங்களிலிருந்து அவர்களைப் பரிசுத்தப்படுத்தவும் மாட்டான், அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு'' என்ற ஆயத்தை நபி (ஸல்) அவர்கள் மூன்று முறை ஓதினார்கள். யாரஸூலுல்லாஹி நஷ்டமடைந்துவிட்ட, தோல்வியடைந்துவிட்ட அம்மக்கள் யார்?'' என ஹஜ்ரத் அபூதர் (ரலி) அவர்கள் கேட்டார்கள், தமது கைலியைக் கரண்டைக் காலுக்குக் கீழே தொங்கவிடுபவர், உபகாரம் செய்துவிட்டுச் சொல்லிக்காட்டுபவர், பொய்ச் சத்தியம் செய்து தமது பொருளை விற்பவர்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஹஜ்ரத் அபூதர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்லிம்)
7)பெற்றோருக்கு மாறு செய்பவர்
எவருக்குப் பெற்றோர்களில் இருவரோ அல்லது அவர்களில் ஒருவரோ இருந்து, அவர்களுடன் நல்ல முறையில் நடந்து கொள்ளவில்லை என்றால், அவர் நரகத்தில் நுழைவார். மேலும், அல்லாஹுதஆலா அவனைத் தனது அருளை விட்டும் தூரமாக்கிவிடுவான், ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிம் அடிமையை உரிமையிடுவது அவரை நரகத்திலிருந்து காப்பாற்றுவதற்குக் காரணமாகிவிடும்'' என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறத் தாம் கேட்டதாக ஹஜ்ரத் மாலிக் அல்லது இப்னு மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(அபூயஃலா, முஸ்னத் அஹ்மத், தபரானீ, தர்ஙீப்)
கேவலமடையவும்! மீண்டும் கேவலமடையவும்! மீண்டும் கேவலமடையவும்!'' என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியபோது, யாரஸூலல்லாஹ், யார் கேவலமடைவான்?'' எனக் கேட்கப்பட்டது. தனது பெற்றோரில் இருவர் அல்லது ஒருவர் முதுமை அடைந்த நிலையில் இருக்க, (அவர்களுக்கு பணிவிடை செய்து அவர்களை மகிழ்வித்து) சுவர்க்கத்தில் நுழையாதவன் கேவலமடையவும்!'' என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் பதில் கூறினார்கள் என்று ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்லிம்)
ஹஜ்ரத் அப்துல்லாஹிப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது: ஒருவர் ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களின் சமுகத்திற்கு வந்து, யாரஸூலல்லாஹ், நான் பெரும் பாவமொன்றைச் செய்து விட்டேன். என்னுடைய (தவ்பா) ஏற்றுக் கொள்ளப்படுமா?'' என்று கேட்டார். உமது தாயார் உயிருடன் உள்ளாரா?'' என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கேட்க இல்லை' என்றார் அவர், உமது தாயின் சகோதரி உள்ளாரா?'' என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் வினவ, ஆம்' என்று சொன்னார், நீர் அவருடன் அழகிய முறையில் நடந்துகொள்ளும் (அதன் காரணமாக அல்லாஹுதஆலா உமது தவ்பாவை ஏற்றுக்கொள்வான்)'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
(திர்மிதி)
8)மது அல்லது வேறு ஏதாவது போதை வஸ்துக்கு அடிமையாக இருப்பவர்
போதைப் பொருளை அருந்துபவனுக்கு ‘தீனதுல் கபால்’ எனும் பானத்தைப் புகட்டுவதாக அல்லாஹ்விடம் ஒரு வாக்குறுதி உள்ளது’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது, ‘அல்லாஹ்வின் தூதரே! ‘தீனதுல் கபால்’ என்றால் என்ன?’ எனத் தோழர்கள் கேட்டதும் அல்லாஹ்வின் தூதரவர்கள், ‘நரகவாசிகளின் வியர்வை அல்லது நரகவாசிகளின் சீழ் என பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம்.
‘மதுப்பழக்கத்திற்கு அடிமையான நிலையில் ஒருவன் மரணமடைந்து விட்டால் அவன் விக்கிரக ஆராதனை செய்தவன் போலவே அல்லாஹ்வை சந்திப்பான்’ என்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: தப்ரானி.
புத்தியை பேதலிக்கச் செய்து, போதையை ஏற்படுத்தக் கூடிய அனைத்தும் – அது குறைவாக இருந்தாலும் அதிகாமாக இருந்தாலும் – ஹராமாகும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘போதை தரக்கூடியது அதிகமாக இருந்தாலும், குறைவாக இருந்தாலும் ஹராமாகும்’ அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்: அபூதாவூத்
9)பிறரை கொலை செய்தவர்
“எந்த ஒன்றையும் அல்லாஹ்வுக்கு இணைவைக்காத நிலையிலும், மார்க்கத்தில் தடுக்கப்பட்ட (முறையில்) எவருடைய ரத்தத்தையும் (கொலை செய்து) ஓட்டாத நிலையிலும் எவர் மரணிப்பாரோ, அவர் சுவன வாசல்களில் தான் விரும்பிய வாசல் வழியாக நுழைவிக்கப்படுவார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் ஜரீர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்
(தப்ரானீ, மஜ்மஉஸ்ஸவாயித்)
10)நிர்பந்தமாக வரி வசூல் செய்பவர்
11)சூனியம் செய்பவன்
12)கைகளைப் பார்த்து மறைவான விஷயங்களை கூறி ஜோசியம் ஜாதகம் பார்ப்பவர்கள்
13)நட்சத்திரங்களை பார்த்து ஃபால் கிதாப் மூலமாக தகவல் சொல்பவன்
சூனியம் மற்றும் ஜோஸியக்காரனிடம் சென்று, அவன் கூறுவதை உண்மை என நம்புபவன் இஸ்லாத்தை விட்டும் வெளியாகிவிட்ட காஃபிர் ஆவான்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள்:
مَنْ أَتَى كَاهِنًا أَوْ عَرَّافًا فَصَدَّقَهُ بِمَا يَقُولُ فَقَدْ كَفَرَ بِمَا أُنْزِلَ عَلَى مُحَمَّدٍ
சூனியக்காரனிடமோ, ஜோஸியக்காரனிடமோ சென்று அவன் கூறுவதை உண்மை என நம்புகின்றவன், நிச்சயமாக முஹம்மது நபி(ஸல்)அவர்களின் மீது இறக்கப்பட்ட (மார்க்கத்)தை நிராகரித்து விட்டான். (அறிவிப்பவர்: அபூஹுரைரா -ரலி, நூல்: அஹமத் 9171)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள்.
مَنْ أَتَى عَرَّافًا فَسَأَلَهُ عَنْ شَيْءٍ لَمْ تُقْبَلْ لَهُ صَلَاةٌ أَرْبَعِينَ لَيْلَةً
யாரேனும் குறிகாரனிடம் வந்து அவனிடம் ஏதேனும் கேட்டால் அவனுடைய நாற்பது நாட்களின் தொழுகை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. (அறிவிப்பவர்: ஸஃபிய்யா -ரலி, நூல்: முஸ்லிம் 4137)
அவனுடைய தொழுகை ஏற்றுக் கொள்ளப்படாவிட்டாலும் நாற்பது நாட்களும் தொழுவது அவன் மீது கடமையாகும். மேலும் அவன் தான் செய்த இப்பாவத்திற்காக அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேட்கவேண்டும்.
14) இசைக்கருவிகள் வீணை வாசிப்பவன் ஆகிய இவனின் துஆவும் பராஅத்துடைய இரவில் ஏற்க்கொள்ளப்படாது
*3️⃣பராஅத் நோன்பு*
– حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْخَلَّالُ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ أَنْبَأَنَا ابْنُ أَبِي سَبْرَةَ عَنْ إِبْرَاهِيمَ بْنِ مُحَمَّدٍ عَنْ مُعَاوِيَةَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ جَعْفَرٍ عَنْ أَبِيهِ عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ قَالَ
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا كَانَتْ لَيْلَةُ النِّصْفِ مِنْ شَعْبَانَ فَقُومُوا لَيْلَهَا وَصُومُوا نَهَارَهَا
سنن ابن ماجه بحاشية السندي – (ج 3 / ص 178)
1378 – قَوْله ( فَقُومُوا لَيْلهَا )
”ஷஃபான் மாதத்தின் பதினைந்தாம் இரவு வந்துவிட்டால் அவ்விரவில் நின்று வணங்குங்கள். பகலில் நோன்பு பிடியுங்கள். என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அலி (ரழி) அறிவிக்கிறார்கள்.
(இப்னு மாஜா)
ஹஜ்ரத் அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் இந்த ஹதீஸின் அடிப்படையில் ஷஃபான் மாத பதினைந்தாவது இரவில் நோன்பு நோற்பது உம்மத்தின் நடைமுறையாக உள்ளது.இந்த ஹதீஸ் ஹதீஸ் கலை வல்லுநர்களின் ஏகோபித்த முடிவின் படி மிகவும் பலவீனமான ஹதீஸாகும்.காரணம் இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களில் ஒருவரான அபூபக்கர் இப்னு அப்துல்லாஹ் இப்னு முஹம்மது இப்னு அபீ சபுரா அவர்கள் மீது ஹதீஸை இட்டுக்கட்டுபவர் என்ற குற்றச்சாட்டு உள்ளது.
அவரின் மீதுள்ள இக்குற்றச்சாட்டின் காரணமாக நாம் இந்த ஹதீஸை் இட்டுக்கட்ட ஹதீஸ் என கூறிவிட முடியாது.
அவர் மீதுள்ள இக்குற்றச்சாட்டு என்பது உண்மைதான்.எனினும் இந்த ஹதீஸை அவ்வாறு இட்டுக்கப்பட்டது என்று நாம் கூற முடியாது.
அவ்வாறு நாம் கூறுவதற்கான முதற்காரணம்:
உஸுலே ஹதீஸ் மற்றும் பல நூற்களில் தெளிவாக கூறப்பட்டுள்ள விஷயம் யாதெனில்,ஹதீஸை அறிவிக்கும் அறிவிப்பாளர்களில் ஒருவர் இட்டுக்கட்டுபவராக இருந்தால் அதன் காரணமாக மட்டும் அந்த ஹதீஸை இட்டுக்கட்டப்பட்டதாக நாம் கூற முடியாது.மாறாக இந்த ஹதீஸ் இட்டுக்கட்டப்பட்டது என்பதற்கு வேறொரு ஆதாரமும் சேர்ந்தால் மட்டுமே அந்த ஹதீஸை் மவ்லூஃ என நாம் கூறுவோம்.
அஹ்லே ஹதீஸைச் சார்ந்த பிரபல்லயமான ஆலிம் மவ்லானா அப்துர் ரஹ்மான் முபாரக் பூரி அவர்கள் இந்த ஹதீஸை முன்வைத்து பராஅத் இரவு சிறப்பு மிகுந்தது என்று எடுத்து இயம்புகிறார்கள்.இந்த ஹதீஸ் இட்டுக்கட்டப்படதாக இருப்பின் இவ்வாறு அவர்கள் கூறியிருக்க மாட்டார்கள்.
இரண்டாவது காரணம்:
இந்த ஹதீஸ் இப்னு மாஜா எனும் நூலில் இடம்பெற்றுள்ளது.சில உலமாக்கள் இப்னு மாஜாவில் இடம்பெற்றுள்ள இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களை தனியாக எடுத்து ஒரு நூலை தொகுத்துள்ளார்கள்.அவ்வாறு தொகுக்கப்பட்ட ஹதீஸ்களில் இந்த ஹதீஸ் இடம்பெறவில்லை.
மூன்றாவது காரணம்:
அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மூலம் அறிவிக்கப்படும் இவ்வறிப்பு இட்டுக்கட்டப்பட்டது இல்லை.இதை மவ்லூஃ எனக் கூறுவது முஹத்திஸீன்களின் அடிப்படைக்கு மாற்றமானதாகும்.மேலும் இந்த ஹதீஸ் பலஹீனமானது என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.லயீஃப் என்பதால் அமல் செய்யக் கூடாது என்பதுமில்லை.
சிறப்புகளின் விஷயத்தில் லயீஃபான ஹதீஸ்களைக் கொண்டு அமல் செய்யலாம் என்பதும் முஹத்திஸீன்கள் வகுத்த தெளிவான அடிப்படையாகும்.
இமாம் அஹ்மது,அப்துர் ரஹ்மான் இப்னு மஹ்தி,அப்துர் ரஹ்மான் இப்னு முபாரக் ரஹுமஹுல்லாஹு அன்ஹும் ஆகியோரிடமிருந்து அறிவிக்கப்படுகிறது.நாம் ஹலால்,ஹராமுடைய விஷயங்களில் ஹதீஸ்களை அறிவிக்கும் பொழுது மிகப் பேணுதலுடன்,மிகக் கடுமையாக நடந்து கொள்வோம்.சிறப்புகளை எடுத்து இயம்பும் ஹதீஸ்களில் கடுமை காட்ட மாட்டோம்.
*(فتح المغيث 2/48,)*
*(اللآلي المصنوعة 1/99)*
எனவே பராஅத் இரவின் நோன்பு என்பது சுன்னத்தும் இல்லை.பித்அத்தும் இல்லை.மாறாக முஸ்தஹப்பான காரியமாகும்.காரணம் லயீஃபான ஹதீஸின் இதனுடைய சிறப்பு நிரூபணமாகியுள்ளது.
எனவே சிறப்பு யாதெனில் ஷஃபானுடைய அதிகமான நாட்களில் நோன்பு வைக்க முயற்சிக்க வேண்டும்.அது இயலவில்லையெனில் ஷஃபான் மாதத்தின் முதல் பதினைந்து நாட்களில் நோன்பு வைக்க வேண்டும்.அதுவும் இயலவில்லையெனில் அய்யாமுல் பீல் உடைய மூன்று நாட்களில் நோன்பு வைக்க முயற்சிக்க வேண்டும்.அதுவும் இயலவில்லையெனில் ஷஃபான் பதினைந்தாம் இரவில் நோன்பு நோற்கலாம்.இந்த நோன்பிற்கு இன்ஷா அல்லாஹ்விடம் கூலி கிடைக்கும்.
*4️⃣பராஅத் இரவில் செய்ய வேண்டிய விஷயங்களும்,தவிர்க்க வேண்டிய காரியங்களும்!*
1)ஹனபி மத்ஹபைச் சேர்ந்த இமாம் இப்னு நுஜைம் றஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்: ரமழானுடைய பத்து இரவுகள், இரண்டு பெருநாட்களுடைய இரவுகள், துல் ஹிஜ்ஜாவின் பத்து இரவுகள், ஷஃபானுடைய 15 ஆம் இரவு ஆகிய இரவுகளை அமல்களைக் கொண்டு உயிர்ப்பிப்பது சுன்னத்துகளில் உள்ளதாகும். (அல் பஹ்ருர் றாஇக்)
وقال ابن نجيم من الحنفية: “ومن المندوبات إحياء ليالي العشر من رمضان، وليلتي العيدين، وليالي عشر ذي الحجة، وليلة النصف من شعبان، كما وردت به الأحاديث” “البحر الرائق”.
2)நஃபிலான வணக்கங்களை தனிமையில் தன்னுடைய வீட்டில் நிறைவேற்றுவது மிகச் சிறந்ததாகும்.எனவே ஷபே பராஅத்துடைய வணக்கங்களையும் வீட்டில் நிறைவேற்றிக் கொள்ள வேண்டும்.
3)ஷபே பராஅத் இரவிலும்,அதேபோன்று கத்ருடைய இரவிலும் குறிப்பிட்ட முறையில் வணக்கம் செய்ய வேண்டுமென எந்த முறையும் கிடையாது.திக்ர்,திலாவத்,நஃபிலான தொழுகைகள்,தஸ்பீஹ் தொழுகை என எவ்வணக்கங்களிலும் ஈடுபடலாம்.
4)தன்னால் முடிந்தளவு வணக்கங்களில் ஈடுபட வேண்டும்.நோயாளி ஆகுமளவு விழித்திருப்பது சரியானதல்ல.
5)ஆண்டு முழுவதும் ஃபர்ளான தொழுகைகளில் கவனம் செலுத்துவது அவசியமாகும்.வெறும் பராஅத்துடைய இரவில் நஃபிலான வணக்கங்கள் செய்து விட்டு தான் சுவர்க்கத்திற்கு தகுதியாகி விட்டேன் என நினைப்பது தவறாகும்.
6)இவ்விரவில் குறிப்பிட்ட முறையில் இரண்டு ரக்அத் நஃபில் தொழுது விட்டால் தன்மீதுள்ள களாவான தொழுகைகள் நிறைவேறி விடும் என்ற தவறான நம்பிக்கை உள்ளது.இது தவிர்க்கப்பட வேண்டும்.
7)பராஅத்துடைய இரவில் வீணாக இரவில் விழித்திருப்பது,தெருக்களிலும்,ஹோட்டர்களிலும் நேரங்களை கழிப்பது வீணாண மற்றும் நன்மைகளை அழிக்கும் காரியங்களாகும்.
8)மண்ணறைக்குச் செல்லுதல்...
நபியவர்கள் இவ்விரவில் மண்ணறைக்கு சென்றார்கள் என்று ஹதீஸில் வந்துள்ளது.எனினும் இந்த அமலை நபியவர்கள் தன் துணைவியாரான ஹஜ்ரத் ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களுக்கு கூட தெரியாமல் மறைவாக செய்துள்ளார்கள்.மேலும் நபியவர்கள் மண்ணறைக்கு தன்னுடன் எந்த ஸஹாபியையும் அழைத்து செல்லவில்லை.மேலும் அதற்குப் பின்பு அது சம்மத்தமாக எந்த ஆர்வமூட்டலையும் எந்த ஸஹாபிக்கும் நபியவர்கள் தரவில்லை.
எனவே பராஅத்துடைய இரவில் கூட்டமாக சேர்ந்து மண்ணறைக்கு செல்லுதல்,அதை பராஅத் இரவின் ஒரு வணக்கமாக கருதுதல்,பாதையில் லைட்டுகளை போடுதல் இது மார்க்கத்தில் வரம்பு மீறிய செயலாகும்.எந்த முக்கியத்துவமும் தராமல்,எந்த கட்டுப்பாடுமின்றி கப்ருக்கு சென்று வருவதில் எந்த தவறில்லை.
9)லைட்டுகளை போடுதல்
பராஅத் இரவில் சில மக்கள் வீடுகளிலும்,மஸ்ஜிதுகளிலும்,கப்ருஸ்தான்களிலும் லைட்டுகளை போடுகின்றனர்.இது இஸ்லாத்திற்கு மாற்றமின செயலாகும்.மேலும் மாற்றார்கள் கொண்டாடும் தீபாவிளிக்கு ஒப்பானதாகும்.
அல்லாமா பத்ருதீன் அய்னி ரஹிமஹுல்லாஹ் எழுதுகிறார்கள்:
லைட்டுகள் போடுவதின் ஆரம்பம் யஹ்யா இப்னு காலித் பர்மகி என்ற நபரிடமிருந்து உண்டானதாகும்.அவர் ஆரம்பத்தில் நெருப்பு வணங்கியாக இருந்தார்.அவர் இஸ்லாத்தை ஏற்றப் பின் நெருப்பிற்கு பதிலாக விளக்குகளை எறிய விட்டார்.பின்பு இது இஸ்லாமியர்களிடத்தில் பொதுவாகி விட்டது.எந்தளவெனில் முஸ்லிம்கள் இதை தங்களின் மார்க்க அடையாளமாக கருத தொடங்கி விட்டனர்.
(உம்ததுல் காரி 11/117)
அதேபோன்று முஸ்லிமல்லாத மக்களுடன் கலந்திருப்பதின் காரணமாக இப்பழக்கம் நம்முடன் வந்து சேர்ந்து விட்டது.
10)இனிப்பு சமைத்து சாப்பிடுவது
பராஅத் இரவில் சிலர் இனிப்பான பண்டங்களை சமைத்து சாப்பிடுகிறார்கள்.இதற்கு ஷரீஅத்தில் எந்த ஆதாரமும் இல்லை.
11)வீடுகளில் பெயிண்ட் அடிப்பது,புத்தாடை அணிவது,வாசனைத் திரவியங்களை பற்ற வைப்பது போன்ற விஷயங்கள் பராஅத்துடைய இரவில் மேற்கொள்ளப்படுகிறது.மக்கள் இதுபோன்ற விஷயங்களை மரணித்தவர்களின் ரூஹ்கள் இவ்விரவில் வீட்டிற்கு வருகை தருவதாக எண்ணி செய்கிறார்கள்.மேலும் அந்த ரூஹ்களை வரவேற்பதற்காக இவ்வாறு செய்வதாகும் கூறுகிறார்கள்.இவ்வாறான நம்பிக்கை தவறானதாகும்.எனவே இதுபோன்ற அனைத்து பித்அத்துகளை விட்டும் நாம் தவிர்ந்து கொள்ள வேண்டும்.
*12)தஸ்பீஹ் நஃபில் ஜமாஅத் கூடுமா?*
சில மக்கள் இவ்விரவிலும், கத்ருடைய இரவிலும் நஃபில் தொழுகைகளை ஜமாஅத்தாக நிறைவேற்றுகிறார்கள்.தஸ்பீஹ் நஃபிலை ஜமாஅத்தாக தொழுவதற்கு எந்த ஆதாமுமில்லை.மாறாக அது மார்ககத்தில் தடுக்கப்பட்ட செயலாகும்.
இது சம்மந்தமாக ஒரு அடிப்படையை நாம் புரிய வேண்டும்.அதாவது ஃபர்ளு தொழுகை மற்றும் நபியவர்கள் எந்த தொழுகைகளை ஜமாஅத்தாக நிறைவேற்றினார்களோ அந்த தொழுகைகளை தவிர மற்ற அனைத்து தொழுகையையும் ஒருவர் வீட்டில் தனியாக நிறைவேற்றுவதே சிறந்ததாகும்.
ஃபர்ளு தொழுகைகளை ஜமாஅத்தாக தொழுவது தான் மார்க்கத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.சுன்னத் மற்றும நஃபிலான தொழுகைகளை வீட்டிலேயே நிறைவு செய்ய வேண்டும் என்பதுதான் பொதுவிதியாகும்.
மக்கள் வீட்டிற்கு சென்ற பின் சுன்னத்துகளை விட்டு விடுகிறார்கள்.அதன் காரணமாகவே ஃபுகஹாக்கள் சுன்னத்துகள் விடுபடும் என்ற பயமிருந்தால் மஸ்ஜிதுகளில் நிறைவேற்றலாம் எனக் கூறியுள்ளார்கள்.
நஃபில்களை வீட்டில் நிறைவேற்றுவதுதான் சிறப்பானதாகும் என்பது அனைத்து ஃபுகஹாக்களின் ஒருமித்த கருத்தாகும்.
ஹனஃபிய்யாகளிடத்தில் நஃபில்களை ஜமாஅத்தாக நிறைவேற்றுவது மக்ரூஹே தஹ்ரீமியாகும்.நஃபிலை ஜமாஅத்தாக நிறைவேற்றினால் நன்மைக்கு பகரமாக பாவம்தான் கிடைக்கும்.
*13)பெண்கள் ஜமாஅத்தாக தொழுவது கூடுமா?*
பெண்கள் ஜமாஅத்தாக தொழுவது விரும்பத்தகுந்த விஷயமல்ல.அது ஃபர்ளாக இருந்தாலும்,சுன்னத்தாக இருந்தாலும்,நஃபிலாக இருந்தாலும் சரி.பெண்கள் வீட்டில் தனியாக தொழுகையை நிறைவு செய்ய வேண்டும் என்பதே மார்க்கத்தின் கட்டளையாகும்.
மார்க்கம் என்பது பின்பற்றி நடப்பதற்கு கூறப்படும்.நம்முடைய உள்ளம் விரும்பியதல்லாம் மார்க்கம் ஆகிவிடாது.எனவே இவ்வாறு தொழுவதை உள்ளம் விரும்பினாலும் மார்க்கத்தில் தடுக்கப்பட்டதாகும்.
நம்முடைய உள்ளம் அதிகமான விஷயங்களை விருப்பம் கொள்கிறது.அவ்வாறு விருப்பாமனவையெல்லாம் தீன் ஆகிவிடாது.
*பித்அத்துகளின் விளைவுகள்*
ஒரு விஷயத்தை நாம் எப்பொழுதும் நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.என்னுடைய தந்தை ஹஜ்ரத் முஃப்தி ஃஷஃபி ஸாஹிப் அவர்கள் எப்பொழுதும் கூறி வருவார்கள்.அதாவது,ஒரு மனிதர் பித்அத்துகளில் மூழ்கி விட்டால் அவருக்கு சுன்னத்தான அமல்களின் தெஃபீக் குறைந்து போய் விடுகிறது.இதை நாம் நடைமுறையிலும் பார்க்கலாம்.சில மனிதர்கள் நீண்ட நேரம் தஸ்பீஹ் தொழுகையை ஜமாஅத்துடன் நிறைவேற்றுகிறார்கள்.அவ்வாறான மக்கள் ஐந்து நேரத் தொழுகையை நிறைவேற்றுவதில்லை.
எம்மக்கள் பித்அத்துகளில் மூழ்கி விடுகிறார்களோ அவர்கள் ஃபர்ளுகளை விட்டும் பொடுபோக்காக இருக்கிறார்கள்.தொழுகையை களா செய்கிறார்கள்.தொழுகையை விட்டு விடுகிறார்கள்.அதைப் பற்றி எந்த கவலையும் இல்லாமல் இருக்கிறார்கள்.
*தர்க்கம் வேண்டாம்.*
மேற்கூறப்பட்ட விஷயங்கள் அனைத்தும் பராஅத்துடைய இரவின் சுருக்கமான சட்டங்களாகும்.இவ்விஷயங்களை முன்வைத்து நாம் அமல் செய்து கொள்ள வேண்டும்.இதை தவிர்த்து வேறு எந்த தர்க்கத்திலும் நாம் ஈடுபடத் தேவையில்லை.
பொதுவாக இன்று யாராவது ஒருவர் ஒன்றை கூறிவிட்டால் உடனே தர்க்கம் ஆரம்பாகி விடுகிறது.எனவே நீங்கள் நம்பிக்கை வைத்துள்ள ஒரு ஆலிம் ஒரு விஷயத்தை சொல்லிவிட்டால் அதன்படி அமல் செய்யுங்கள்.மற்றொரு ஆலிம் வேறு விதமாக கூறினால் அதை வைத்து தர்க்கம் செய்ய வேண்டாம்.
ஏனெனில் நபியவர்கள் இவ்வாறு தர்க்கம் செய்வதை தடுத்துள்ளார்கள்.மேலும் மாலிக் ரஹிமஹுல்லாஹ் இவ்வாறு கூறுவார்கள்:இவ்வாறாக தர்க்கமிடுவது இல்முடைய பிரகாசத்தை அணைத்து விடுகிறது.
மத்ஹபு ரீதியான தர்க்கங்கள் இதனால் நேரங்கள்தான் வீணாகின்றனவே தவிர இதனால் எப்பயனும் கிடைப்பதில்லை.அறிவாளிகள் தான் இவ்வாறான தர்க்கங்களை முன்னெடுக்கிறார்கள்.எனவே நீங்கள் நம்பும் ஆலிமிடம் கேட்டு அமல் செய்யுங்கள்.இன்ஷா அல்லாஹ் வெற்றி கிடைக்கும்.மற்றொரு ஆலிம் வேறு விதமாக கூறினால் நீங்கள் தடுமாற வேண்டிய அவசியமில்லை.
*5️⃣தவ்பாவின் நிபந்தனைகள்:*
*தவ்பா நிறைவேறவும், அதன் பயன்களைப் பெறவும் சில அடிப்படையான நிபந்தனை கள் இருக்கின்றன. அவற்றை முதலில் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.*
*1- தவறை அல்லாஹ்வுக்காக விடுதல்:*
தான் செய்த தவறை விட்டும் ஒதுங்கிய ஒருவனால் மட்டுமே தவ்பாச் செய்ய முடியும். குறித்த தவறைச் செய்துகொண்டே நான் தவ்பா செய்கின்றேன் எனக் கூற முடியாது. அதேவேளை, தவறை அல்லாஹ்வுக்காக விட வேண்டும் என்பதும் கவனத்திற்குரியதாகும்.
*2- செய்த தவறுக்காக வருந்துதல்:*
தான் செய்த தவறு குறித்து வருத்தம் ஏற்பட வேண்டும். அந்த வருத்தமும் அல்லாஹ்வுக்காக ஏற்பட வேண்டும். நான் என் இரட்சகனுக்கு மாறு செய்து விட்டேனே! இப்படி செய்திருக்கக் கூடாதே என்றெல்லாம் வருத்தம் ஏற்பட வேண்டும். இந்தத் தவறைச் செய்ததால் இவ்வளவு செலவாகிவிட்டதே! டைம் வேஷ்ட்டாகி விட்டதே என்றெல்லாம் எண்ணம் வந்தால் அது தவ்பாவிற்குரிய வருத்தமாக இருக்காது!
*“தவ்பா என்பதே (செய்த தவறைக் குறித்து) கவலை கொள்வதே என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்” (இப்னு மாஜா).*
*3- இந்தத் தவறை இனிச் செய்வதில்லை என்று உறுதி கொள்ளல்:*
தான் செய்த தவறை மீண்டும் செய்வதில்லை என்று உறுதிகொள்ள வேண்டும். ஏதேனும் பலவீனத்தால் அதே தவறை மீண்டும் செய்து விட்டால் அவர் தவ்பாவைப் புதுப்பித்து தன்னைத் திருத்திக்கொள்ள வேண்டும்.
*4- மரணத்தறுவாய் வரை தாமதிக்காதிருத்தல்:*
*சிலர் கடைசி நேரத்தில் தவ்பா செய்து கொள்ளலாம் என எண்ணலாம். இது சாத்தியப்படுமா என்பது ஒரு பிரச்சினை; அடுத்து ஸகராத் ஹாலில் தவ்பா செய்தால் அது அங்கீகரிக்கப் படாது என்பது கவனிக்கத்தக்கதாகும்.*
*“இன்னும் எவர்கள் தீவினைகளைத் (தொடர்ந்து) செய்து கொண்டேயிருந்து, முடிவில் அவர்களை மரணம் நெருங்கிய போது, “நிச்சயமாக இப்பொழுது நான் (பாவங்களுக்காக வருந்தி) மன்னிப்புத் தேடுகிறேன்” என்று கூறுகின்றார்களோ, அவர்களுக்கும், எவர் காஃபிர்களாகவே மரிக்கிறார்களோ அவர்களுக்கும் பாவமன்னிப்பு இல்லை, இத்தகையோருக்குத் துன்பம் கொடுக்கும் வேதனையையே நாம் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்” (4:18).*
“தொண்டைக் குழியில் உயிர் ஊசலா டாதவரையில் அடியானிடமிருந்து தவ்பாவை அல்லாஹ் அங்கீகரிக்கின்றான் என நபி (ஸல்) கூறியுள்ளார்கள்” (திர்மிதி).
எனவே, அந்த நிலைக்கு முன்னரே ஒவ்வொருவரும் தவ்பா செய்து கொள்ளவேண்டும்.
*5- சூரியன் மேற்கில் உதிக்கும் முன்னர்:*
உலக அழிவின் பெரிய அடையாளங் களில் சூரியன் மேற்கில் உதிப்பதும் ஒன்றா கும். இந்த அடையாளம் நிகழ்ந்த பின்னர் செய்யப்படும் தவ்பா பயனளிக்காது.
*“யார் சூரியன் மேற்கிலிருந்து உதிப்பதற்கு முன்னர் தவ்பா செய்கின்றாரோ அவருக்கு அல்லாஹ் மன்னிப்பளிப்பான்” என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (முஸ்லிம்)*
*6- உரியவரிடம் மன்னிப்புக் கோரல்:*
இவை பொதுவாக எல்லாவகை பாவங்களும் மன்னிக்கப்படுவதற்கான நிபந்தனைகளாகும். ஆனால், புரியப்பட்ட குற்றம் அல்லாஹ்வுடன் சம்பந்தப்பட்டதாக இருந்தால் இந்த நிபந்தனைகளே போதுமானதாகும். ஆனால், மற்ற மனிதர்களுக்குப் புரிந்த குற்றத்தை குறித்த பாதிக்கப்பட்ட நபரின் மன்னிப்பின் பின்பே அல்லாஹ் மன்னிப்பான். இந்த வகையில் மனி தன் மனிதனுக்குச் செய்த குற்றமாக இருந்தால் பாதிக்கப்பட்டவரிடம் மன்னிப்புக்கோர வேண்டும். அடுத்தவருக்கு அநீதியிழைத்திருந்தால் அதற்குப் பரிகாரம் காணவேண்டும். பொருட்களை அபகரித்திருந்தால் அதனை உரியவரிடம் திருப்பிக்கொடுக்க வேண்டும். இது சாத்தியம் இல்லையெனில் அதிகமதிகம் பாவமன்னிப்புக் கோரி, புரிந்த குற்றத்திற்குப் பரிகாரம் காணும் விதத்தில் நல்லறங்களை அதிகரிக்க வேண்டும்.
*6️⃣தவ்பாவின் பலன்கள்*
*ஆன்மீகப் பயன்கள்:*
*தவ்பாவின் மூலம் பல்வேறு பட்ட ஆன்மீகப் பயன்களை நாம் பெறுகின்றோம். அவற்றையும் அறிந்து கொள்ள முயல்வோம்.*
*1- பாவமீட்சி:*
குற்றம் புரிந்தவன் பாவ மன்னிப்புப் பெற்று மீட்சி பெறுகின்றான். அவன் குற்றவுணர்விலிருந்து விடுபடுகின்றான். இது மிகப்பெரும் ஆன்மீக ஆதாயமாகும்.
*2- அல்லாஹ்வின் நேசம்:*
*” … பாவங்களை விட்டு மீள்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் நேசிக்கிறான். இன்னும் தூய்மையாக இருப்போரையும் நேசிக்கின்றான்” (2:222).*
*அல்லாஹ்வின் நேசம் என்பது சாதாரணமானதல்ல. அல்லாஹ்வின் நேசம் மலக்குகளினதும் நல்லடியார்களினதும் நேசத்தைப் பெற்றுத் தருகின்றது.*
*“அல்லாஹ் ஒரு அடியானை நேசித்தால் ஜிப்ரீலை அழைத்து நான் இன்ன நபரை நேசிக்கின்றேன். நீரும் அவரை நேசிப்பீராக என்பான். எனவே, ஜிப்ரீல்(அலை) அவரை நேசிப்பார். பின்னர் ஜிப்ரீல்(அலை) வானவர்களை அழைத்து அல்லாஹ் இந்நபரை நேசிக்கின்றான். எனவே, நீங்களும் அவனை நேசியுங்கள் என்பார். வானவர்களும் அவரை நேசிப்பார்கள். பின்னர் பூமியில் அவருக்கு (பிற மக்களின்) அங்கீகாரம் கிடைக்கும்” (புகாரி).*
எனவே, அல்லாஹ்வின் நேசத்தைப் பெறவும் தூயமனதுடன் தவ்பா செய்ய வேண்டும்.
அடுத்து இந்த வசனத்தில் பயன்படுத்தப்பட்ட “தவ்வாபீன்” என்ற பதம் அடிக்கடி தவ்பா செய்வோர் என்பதைக் குறிக்கும். எனவே, அதிகமதிகம் தவ்பா, இஸ்திஃபார் புரிதல் ஏற்றம் மிக்கதாகும்.
அடுத்து இந்த வசனத்தில் கவனிக்கத் தக்க மற்றுமொரு அம்சமும் உள்ளது. அல்லாஹ் தவ்பா செய்பவர்களையும் பரிசுத்தவான்களையும் நேசிப்பதாக இவ்வசனம் கூறுகின்றது. இந்த இடத்தில் பரிசுத்தவான்கள் எனக்கூறப்படுவது குற்றங்களை விட்டும் பரிசுத்தமானவர்களைக் குறிக்கும் என்பது அறிஞர்களின் அபிப்பிராயமாகும். அவ்வாறெனில் அல்லாஹ்வின் நேசத்திற்கு தவ்பா செய்பவர்கள் முற்படுத்தப்பட் டிருக்கிறார்கள் என்பது கவனிக்கத்தக்கதாகும்.
*இது குறித்து இமாம் குர்தூபி பேசும் போது “பாவம் செய்துவிட்டு மன்னிப்புக் கேட்பவனை பாவமே செய்யாதவனை விட தனது நேசத்திற்கு அல்லாஹ் ஏன் முற்படுத்தினான் எனில், குற்றமிழைத்தவன் அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழந்து விடக்கூடாது! குற்றமிழைக்காதவன் நான் தான் சுத்தவாளி என மமதை கொண்டுவிடக்கூடாது என்பதற்காகும்” எனக் குறிப்பிடுகின்றார்கள் (தப்ஸீர் குர்தூபி).*
*3- அல்லாஹ்வின் புகழ்ச்சி:*
தவ்பா செய்பவர்களை அல்குர்ஆனில் பல இடங்களில் அல்லாஹ் புகழ்ந்து கூறுகின் றான்.
*“மன்னிப்புக்கோரி மீண்டவர்கள், (அவனை) வணங்கு பவர்கள், (அவனைப்) புகழ்பவர்கள், நோன்பு நோற்பவர்கள், ருகூஃ செய்பவர்கள், ஸுஜுது செய்பவர்கள் (தொழுபவர்கள்), நன்மை செய்ய ஏவுபவர்கள், தீமையை விட்டு விலக்குபவர்கள், அல்லாஹ்வின் வரம்புகளைப் பேணிப் பாதுகாப்பவர்கள் – இத்தகைய (உண்மை) முஃமீன்களுக்கு (நபியே!) நீர் நன்மாராயம் கூறுவீராக!” (9:112).*
மேற்படி வசனத்தில் முஃமீன்களின் பண்புகளில் முதல் தரமானதான இப்பண்பு குறிப்பிடப்பட்டிருப்பது கவனிக்கத் தக்கதாகும்.
*4- மலக்குகளின் பிரார்த்தனை:*
தவ்பா செய்பவர்களுக்காக மலக்குகள் அதிலும் குறிப்பாக அல்லாஹ்வின் அர்ஷை சுமந்து கொண்டிருக்கும் வானவர்களும், அல்லாஹ்வைச் சூழ இருப்பவர்களும் பிரார்த்திக்கின்றனர்.
*“அர்ஷை சுமந்துகொண்டிருப்பவர்களும், அதைச் சுற்றியுள்ளவர்களும் தங்கள் இறைவனின் புகழைக் கொண்டு அவனைத் தஸ்பீஹ் செய்து கொண்டும் இருக்கிறார்கள். அவன் மேல் ஈமான் கொண்டவர்களாக மற்ற ஈமான் கொண்டவர்களுக்காக மன்னிப்புக் கோருகின்றனர். “எங்கள் இறைவனே! நீ ரஹ்மத்தாலும், ஞானத்தாலும் எல்லாப் பொருட்களையும் சூழ்ந்து இருக்கிறாய்! எனவே, பாவமீட்சி கோரி உன் வழியைப் பின்பற்றுபவர்களுக்கு, நீ மன்னிப் பளிப்பாயாக. இன்னும் அவர்களை நரக வேதனையி லிருந்தும் காத்தருள்வாயாக!” (40:7).*
*“எங்கள் இறைவனே! நீ அவர்களுக்கு வாக்களித்திருக்கும், நிலையான சுவர்க்கத்தில், அவர்களையும், அவர்கள் மூதாதையர்களிலும், அவர்கள் மனைவியர்களிலும், அவர்கள் சந்ததியார்களிலும் நன்மை செய்தோரையும் பிரவேசிக்கச் செய்வாயாக. நிச்சயமாக நீ தான் (யாவரையும்) மிகைத்தவன்; ஞானம் மிக்கவன்.”(40:8)*
*மேற்படி வசனத்தில் தவ்பா செய்பவர் களுக்காக பின்வரும் விடயங்களை வேண்டி மலக்குகள் பிரார்த்திப்பதாகக் கூறப்படுகின்றது.*
(1) அல்லாஹ்வின் வழிமுறையைப் பின்பற்றி வாழும் தவ்பாதாரிகளுக்கு பாவமன்னிப்பை நல்குவாயாக!
(2) நரகத்தை விட்டும் அவர்களைக் காப்பாற்றுவாயாக!
(3) அவர்களையும், அவர்களது பெற்றோர்கள், மனைவிகள், சந்ததிகளில் நல்லவர்களையும் சுவனத்தில் நுழையச் செய்வாயாக!
(4) பாவங்களையும் தீங்குகளையும் விட்டும் அவர்களை நீ பாதுகாப்பாயாக!
மலக்குகளின் மேற்படி துஆ மூலமாக தவ்பாவின் மகத்துவத்தையும் உணர்ந்துகொள்ளலாம். தவ்பாவின் மூலம் தவ்பாச் செய்பவர் மட்டுமன்றி அவரின் பெற்றோர், சந்ததிகள், மனைவியர்களில் நல்லோர்களும் இந்தப் பாக்கியத்தைப் பெறுகின்றனர்.
5- நன்மைகளாக மாறும் தீமைகள்:
“ஆனால், (அவர்களில் எவர்) தவ்பா செய்து ஈமானுங் கொண்டு, ஸாலிஹான (நற்) செய்கைகள் செய்கிறார்களோ – அவர்களுடைய பாவங்களை அல்லாஹ் நன்மையாக மாற்றி விடுவான். மேலும், அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், மிக்க கிருபையுடையோனாகவும் இருக்கின்றான்” (25:70).
அர்ரஹ்மானின் அடியார்கள் பற்றிப் பேசும் போது அவர்கள் இணை வைக்க மாட்டார்கள். கொலை, விபச்சாரம் புரியமாட்டார் கள் என்றெல்லாம் கூறிய பின்னரே இந்த வசனம் இடம்பெற்றுள்ளது. இத்தகைய பாவங்கள் செய்தவர்கள் கூட தூய முறையில் தவ்பா செய்து அதன் பிறகு நல்லறங்களில் ஈடுபட்டால் அவர்களின் பாவங்களே நன்மைகளாக மாற்றப்படுகின்றன. இது மாபெரும் அருளாகும். அல்லாஹ்வின் அளவற்ற அன்பையும், அருளையும் வெளிப்படுத்தும் இத்தன்மை குறித்து சுவாரஸ்யமான ஒரு நிகழ்ச்சியை நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
“மறுமையில் ஒரு மனிதர் கொண்டுவரப்படுவார். அவரின் சின்னச் சின்னப் பாவங்களை அவருக்கு எடுத்துக் காட்டுங்கள். பெரிய குற்றங்களை உயர்த்திவிடுங்கள் என்று கூறப்படும். அவரிடம் “நீ இன்னின்ன நாளில் இப்படி இப்படியெல்லாம் செய்தாய்” என்று சின்னச் சின்ன குற்றங்கள் எடுத்துக்காட்டப்படும். அவன் அதை மறுக்கமுடியாது. அவற்றை ஒப்புக் கொள்வான். அதே வேளை தனது பெரும் குற்றங்கள் எடுத்துக் காட்டப்படுமோ என்று அஞ்சியவனாக இருப்பான். சிறிய பாவங்கள் காட்டப்பட்ட பின் “உனது ஒவ்வொரு பாவத்திற்கும் ஒரு நன்மை பதியப்படும்” என்று கூறப்படும். உடனே அவன் “எனது இரட்சகனே! நான் இன்னும் பல பாவங்கள் செய்துள்ளேன். அவற்றை நான் காணவில்லையே” என்று கூறுவான் என நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டு தனது கடைவாய்ப் பற்கள் தெரியுமளவுக்கு சிரித்தார்கள்” என அபூதர்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (முஸ்லிம்).
6- அமல்கள் அங்கீகரிக்கப்படல்:
“அவன் வாலிபமாகி, நாற்பது வயதை அடைந்ததும், “இறைவனே! நீ என் மீதும், என் பெற்றோர் மீதும் புரிந்த நிஃமத்துக்காக, (அருட்கொடைகளுக்காக) நன்றி செலுத்தவும், உன்னுடைய திருப்தியை அடையக்கூடிய ஸாலிஹான நல்ல அமல்களைச் செய்யவும் எனக்கு அருள் பாலிப்பாயாக! (இதில் எனக்கு உதவுவதற்காக) என் னுடைய சந்ததியையும் ஸாலிஹானவர்களாக (நல்லது செய்பவர்களாக) சீர்படுத்தியருள்வாயாக! நிச்சயமாக நான் உன் பக்கமே திரும்புகிறேன். அன்றியும், நான் முஸ்லிம்களில் நின்றுமுள்ளவனாக (உனக்கு முற்றிலும் வழிப்பட்டவனாக) இருக்கின்றேன்” என்று கூறுவான்.
“சுவனவாசிகளான இ(த்தகைய)வர்கள் செய்தவற்றில் அழகான – நன்மையானவற்றை நாம் அங்கீகரித்துக் கொண்டு, இவர்களின் தீவினைகளைப் பொறுப்போம். இவர்களுக்கு அளிக்கப்பட்டிருந்த வாக்குறுதி உண்மை யான வாக்குறுதியாகும்” (46:15-16)
மேற்படி வசனம் தவ்பா செய்பவர்களின் அமல்கள் அங்கீகரிக்கப்படும் என்றும், அவர்கள் புரிந்த குற்றங்கள் விஷயத்தில் விட்டுக் கொடுத்து நடத்தப்படுவார்கள் என்றும் அவர்கள் சுவனவாசிகளைச் சேர்ந்தவர்களென்றும் கூறப் படுகின்றது.
7- சுவனம் செல்லல்:
அடியான் அடையும் அனைத்து அருள் களிலும் மேலானது சுவனமே! தவ்பாதாரிகள் அதனை அடைவார்கள் எனக் குர்ஆன் குறிப்பிடுகின்றது.
“ஈமான் கொண்டவர்களே! கலப்பற்ற (மனதோடு) அல்லாஹ் விடம் தவ்பா செய்து, பாவமன்னிப்புப் பெறுங்கள்; உங்கள் இறைவன் உங்கள் பாவங்களை உங்களை விட்டுப்போக்கி உங்களைச் சுவனச் சோலைகளில் பிரவேசிக்கச் செய்வான், அவற்றின் கீழே ஆறுகள் (சதா) ஓடிக்கொண்டே இருக்கும். (தன்) நபியையும், அவருடன் ஈமான் கொண்டார்களே அவர்களையும் அந்நாளில் அல்லாஹ் இழிவு படுத்தமாட்டான். (அன்று ஈடேற்றம் பெற்ற) அவர்களுடைய பிரகாசம் (ஒளி) அவர்களுக்கு முன்னும், அவர்களுடைய வலப்புறத்திலும் விரைந்து கொண்டிருக்கும், அவர்கள் “எங்கள் இறைவா! எங்களுக்கு, எங்களுடைய பிரகாசத்தை நீ முழுமையாக்கி வைப்பாயாக! எங்களுக்கு மன்னிப்பும் அருள்வாயாக! நிச்சயமாக நீ எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றலுடையவன்” என்று கூறி(ப் பிரார்த்தனை செய்து) கொண்டு இருப்பார்கள்” (66:8).
மேற்படி வசனத்தில் தவ்பா செய்பவர் களது பாவங்கள் மன்னிக்கப்படுவதுடன் அவர்களுக்கு “ஒளி” வழங்கப்படும் என்றும் அவர்கள் சுவனத்தில் நுழைவிக்கப்படுவர் என்றும் கூறப்படுகிறது!
8- சுவனம் அருகில் கொண்டுவரப்படல்:
தவ்பாதாரிகள் சுவனம் செல்வதுடன் மிகுந்த கண்ணியத்தையும் இது விடயத்தில் பெறுவர். இது குறித்து இமாம் குஷைரி (ரஹ்) விளக்கம் கூறும் போது “மனிதர்கள் மூன்று வகையினர்.
(1) சுவனத்தை நோக்கி நடந்தவர்களாக செல்பவர்கள். தமது இரட்சகனை அஞ்சி நடந்தோர் கூட்டம் கூட்டமாக சுவனத்தை நோக்கி கொண்டு வரப்படுவார்கள்.
“எவர் தம் இறைவனுக்கு பயபக்தியுடன் நடந்து கொண்டார்களோ அவர்கள் கூட்டங்கூட்டமாக சுவர்க்கத்தின் பால் கொண்டு வரப்படுவார்கள்.
(39:73)
(2) கண்ணியமாக ஒன்றுசேர்க்கப்படுவோர்
“அர்ரஹ்மானாகிய நம்மிடத்தில் பயபக்தியுடையவர்களை நாம் கூட்டமாக ஒன்று சேர்க்கும் நாளில்;” (19:85)
(3) விசாரனை செய்யப்படும் இடத்திற்கே இவர்களை நோக்கி சுவனம் கொண்டுவரப்படும்.
“(அன்றியும் அந்நாளில்) பயபக்தியுடையவர் களுக்கு சுவர்க்கம் தொலைவில்லாத நிலையில் மிகவும் சமீபமாக்கப்படும்.”
“இது தான் உங்களுக்கு வாக்களிக்கப் பட்டதா(ன சுவர்க்கமா)கும்; எப்பொழுதும் இறைவனையே நோக்கி, (பாவத்தை தவிர்த்துப்) பேணி நடந்த ஒவ்வொருவருக்கும் (இது உரியது).” (50:31-32)
இவர்களுக்கு சிறப்பளிக்கும் விதத்தில் இப்படிக் கூறப்படுகின்றது. இவர்கள் மிக உயர்ந்தவர்கள் என்று தனது “லதாயிபுல் இஷாராத்” என்ற நூலில் குறிப்பிடுகின்றார்கள். இது தவ்பா தாரிகளின் சிறப்பைத் தெளிவுபடுத்துகின்றது.
*உலகியல் பயன்கள்:*
*தவ்பா செய்வதனால் பல் வேறுபட்ட உலகியல் நலன்களும் கிடைக்கப்பெறுகின்றன என குர்ஆன் குறிப்பிடுகின்றது!*
*1- அழகிய வாழ்க்கை:*
“நீங்கள் உங்கள் இறைவனிடம் மன்னிப்பைத் தேடி (பாவங்களை விட்டு) அவனிடம் திரும்புங்கள்; (நீங்கள் அவ்வாறு செய்தால்) அவன் ஒரு குறித்த தவணைவரை உங்களுக்கு வாழ்க்கை வசதிகளை ஏற்படுத்துவான்; இன்னும், அருளுடைய ஒவ்வொருவருக்கும் (மறுமையில்) தன் அருளை (அதிகமாகவே) கொடுப்பான்;. ஆனால் நீங்கள் (ஈமான் கொள்வதைப்) புறக்கணித்தால், மாபெரும் நாளின் வேதனை குறித்து நிச்சயமாக உங்களுக்காக நான் பயப்படுகிறேன் ” (11:03)
இந்த வசனம் தவ்பா கேட்பவர்களுக்கு இவ்வுலகில் நல்வாழ்வு வழங்கப்படும் என்றும் மறுமையில் நற்கூலி நல்கப்படும் என்றும் கூறுகின்றது.
“மேலும், “நீங்கள் உங்களுடைய இறைவனிடம் மன்னிப்புத் தேடுங்கள்; நிச்சயமாக அவன் மிகவும் மன்னிப்பவன்” என்றுங் கூறினேன்”
“(அப்படிச் செய்வீர்களாயின்) அவன் உங்கள் மீது தொடர் ந்து மழையை அனுப்புவான்”
“அன்றியும் அவன் உங்களுக்குப் பொருள் களையும், புதல்வர்களையும் கொண்டு உதவி செய்வான்;
இன்னும், உங்களுக்காகத் தோட்டங்களை உண்டாக்குவான்; உங்களுக்காக ஆறுகளையும் (பெருக்கெடுத்து ஓடுமாறு) உண்டாக்குவான்” (71:10, 11, 12)
மேற்படி வசனங்கள் தவ்பாவின் மூலம் மழை பொழியும் என்றும், உற்பத்தி அதிகரிக்கும் என்றும், குழந்தைப் பாக்கியம் கிடைக்கும் என்றும் உணர்த்தப்படுகின்றது.
*2- பலம் அதிகரித்தல்:*
“என்னுடைய சமூகத்தார்களே! நீங்கள் உங்களுடைய இறைவனிடம் பிழை பொறுக்கத் தேடுங்கள்;. இன்னும் (தவ்பா செய்து) அவன் பக்கமே மீளுங்கள்; அவன் உங்கள் மீது வானத்திலிருந்து தொடராக மழையை அனுப்புவான்; மேலும் உங்களுடைய வலிமையுடன் மேலும் வலிமை பெருகச் செய்வான் – இன்னும் நீங்கள் (அவனைப்) புறக்கணித்துக் குற்றவாளிகளாகி விடாதீர்கள்” (என்றும் எச்சரித்துக் கூறினார்). (11:52)
இந்த வசனம் தௌபாவின் மூலம் தொடரான மழையைப் பெறலாம் என்றும் அதன் மூலம் எமது சக்தி சகல விதங்களிலும் அதிகரிக்கப்படும் என்பதையும் அறியலாம்.
*உலகியல், மறுமை வெற்றி:*
தவ்பாவின் மூலம் ஒரு மனிதன் ஈருலக வெற்றியையும் பெறலாம்.
“மேலும், முஃமின்களே! (இதில் உங்களிடம் ஏதேனும் தவறு நேரிட்டிருப்பின்,) நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி), நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள்” (24:31).
“ஆனால், எவர் தவ்பா செய்து நன்னம்பிக்கை கொண்டு, நல்ல அமல்கள் செய்கிறார்களோ அவர்கள் சித்தியடைந்தோரில் ஆகுவார்கள்” (28:67).
மேற்படி வசனங்கள் வெற்றியைப் பெற் றுத்தரும் என அறிவுறுத்துகின்றன. இவ்வாறான எண்ணற்ற பலன்களை தவ்பா மூலம் நாம் பெறலாம். எனவே, உரிய முறையில் தவ்பா செய்து உயரிய பயனை அடைய முயற்சிப் போமாக!