நாயகத்தின் நற்குணங்கள் 22-09-23
இந்த உலகில் நீங்கள் யாருடைய பெயரைக் கூறினாலும் இரு உதடுகளும் ஒட்டி முத்தத்துடன் பெயர் வராது. ஆனால் நம் கண்மணி நாயகம் (ﷺ) அவர்களின் பெயரைக் கூறும் பொழுதே இரு உதடுகளும் ஒட்டி முத்தத்துடன் பெயர் வெளி வரம்.. மாஷா அல்லாஹ்
- இந்த உலகில் தமது 63 வருட வாழ்க்கையில் ஒரே ஒரு பொய் கூட சொல்லாமல் வாழ்ந்த மாமனிதர் யாரென்று தெரியுமா?
- இந்த உலகில் யாரையும் ஏமாற்றியதாகவோ, யாருக்கும் அநீதி இழைத்ததாகவோ என்று குறையில்லாமல்
புனித வாழ்க்கை வாழ்ந்தவர் யாரென்று தெரியுமா? - இந்த உலகில் தமது செல்வத்தைப் பிறருக்கு வாரி வழங்குவதில் இன்பம் கண்டவர் யாரென்று தெரியுமா?
- இந்த உலகில் சுயநலமில்லாமல், பொது நலத்துடன் வாழ்ந்த மாமனிதர் யாரென்று தெரியுமா?
- இந்த உலகில் நூறு சதவிகிதம் இவரை நம்பலாம் என்று போற்றும் அளவிற்க்கு நம்பிக்கையுடன் வாழ்ந்தவர் யாரென்று தெரியுமா?
- இந்த உலகில் கடந்த கால வாழ்க்கையை மக்களுக்கு நினைவூட்டி என்னை நம்புங்கள் எனக் கூறிய மாமனிதர் யாரென்று தெரியுமா?
- இந்த உலகில் அடுத்தவர் சிந்திய சளியை அகற்றிய அதிபர் யாரென்று தெரியுமா? [புகாரி 405]
- இந்த உலகில் நாசத்தைக் கூறிய நயவஞ்சகனிடமும் நளினத்தை காட்டியவர் யாரென்று தெரியுமா? (அஸ்ஸாமு அலைக்கும் சம்பவம்) [புகாரி 6024]
- இந்த உலகில் சிறுவர்களிடம் முந்திக்கொண்டு முகமன் கூறும் மாமனிதர் யாரென்று தெரியுமா? புகாரி 6247]
- போரிலும் கூட கெட்ட போர் முறைகளை மாற்றி திருத்தம் செய்த மாமனிதர் யாரென்று தெரியுமா? [புகாரி 3014]
இது போன்ற அவர்களது பொற்குணங்கள் ஏராளம் ஏராளம்! இன்னும் அடிக்கி கொண்டே போகலாம்.
மேற்கண்ட எல்லா கேள்விகளுக்கான பதிலும், மேற்கண்ட எல்லா நற்குணங்களின் பிறப்பிடமாகவும், விளங்கியவர்கள் அல்லாஹ்வின் இறைத்தூதர் முஹம்மது (ﷺ) அவர்கள் ஆவார்கள்.
அல்லாஹ் இறைத்தூதர் முஹம்மது (ﷺ) அவர்களை சங்கை செய்யும் முகமாக திருகுர்ஆனில் ஸூரத்து முஹம்மது(ஸல்) [47] என்ற ஒரு தனி அத்தியாயத்தை இறக்கியுள்ளான்.
அல்லாஹ்வின் தனது ஹபீபாகிய [“ ஹபீபுல்லாஹ்” (இறை நேசர்] என்று நற்பெயர் பெற்ற முஹம்மது (ﷺ) அவர்களின் சிறப்பை பற்றியும், அவர்களின் நற்குணகளின் தரத்தை பற்றியும் இன்றைய ஜூமுஆ பேருரையில் நாம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
அல்லாஹூ சுப்ஹானஹூதஆலா நம் அனைவருக்கும் முஹம்மது (ﷺ) அவர்களின் நற்குணத்தை அப்படியே பின் பற்றி வாழும் பாக்கியத்தை எனக்கும் உங்களுக்கும் , தந்தருள் புரிவானாக! ஆமீன் என துஆ செய்தவனாக எனது ஜூமுஆ பேருரையை ஆரம்பம் செய்கிறேன்.
♣ அல்லாஹ் [ﷻ] திருமறையில் கூறுகின்றான்:- قال الله تعالى
وَمَاۤ اَرْسَلْنٰكَ اِلَّا رَحْمَةً لِّـلْعٰلَمِيْنَ
”நபியே! நாம் உம்மை உலக மக்கள் அனைவருக்கும் ரஹ்மத்தாக , அருட்கொடையாகவே அனுப்பியுள்ளோம்”. அல்குர்ஆன்:21:107.
ﻭَﺍِﻧَّﻚَ ﻟَﻌَﻠٰﻰ ﺧُﻠُﻖٍ ﻋَﻈِﻴْﻢٍ
(நபியே) நிச்சயமாக நீர் மிக உயர்ந்த மகத்தான நற்குணம் உடையவராக இருக்கின்றீர். (68:4)
لَقَدْ كَانَ لَكُمْ فِىْ رَسُوْلِ اللّٰهِ اُسْوَةٌ حَسَنَةٌ لِّمَنْ كَانَ يَرْجُوا اللّٰهَ وَالْيَوْمَ الْاٰخِرَ وَذَكَرَ اللّٰهَ كَثِيْرًا ؕ
அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது. 33:21.
♣ நபி ﷺ அவர்கள் கூறினார்கள்:- كما قال النبي صلى الله عليه وسلم
عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ “ فَوَالَّذِي نَفْسِي بِيَدِهِ لاَ يُؤْمِنُ أَحَدُكُمْ حَتَّى أَكُونَ أَحَبَّ إِلَيْهِ مِنْ وَالِدِهِ وَوَلَدِهِ ”.
‘என்னுடைய உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மீது ஆணையாக, உங்களில் ஒருவருக்கு அவரின் தந்தையையும் அவரின் மக்களையும் விட நான் மிக்க அன்பானவராகும் வரை அவர் ஈமான் எனும் இறைநம்பிக்கை உள்ளவராக மாட்டார்’ என்று இறைத்தூதர் ﷺ அவர்கள் கூறினார்கள்: [புகாரி 14]
– عَنْ مَالِكٍ اَنَّهُ بَلَغَهُ اَنَّ رَسُوْلَ اللهِ ﷺ قَالَ: بُعِثْتُ لِأُتَمِّمَ حُسْنَ اْلاَخْلاَقِ
நற்குணத்தை முழுமையாக்க நான் அனுப்பப்பட்டுள்ளேன்” என்று ரஸூலுல்லாஹி ﷺ அவர்கள் கூறிய ஹதீஸ் எனக்குக் கிடைத்துள்ளது என ஹஜ்ரத் மாலிக் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். (முத்தா மாலிக்)
அல்லாஹ் மேற்குறிய வசனங்களில் உள்ள நான்கு கேள்விகளுக்கு விடைதான் இக்குறிப்புரை:
கேள்வி:
- ”நபியே! நாம் உம்மை உலக மக்கள் அனைவருக்கும் ரஹ்மத்தாக , அருட்கொடையாகவே அனுப்பியுள்ளோம். 21:107.
- (நபியே) நிச்சயமாக நீர் மிக உயர்ந்த மகத்தான நற்குணம் உடையவராக இருக்கின்றீர். (68:4)
- அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது. 33:21.
- நற்குணத்தை முழுமையாக்க நான் அனுப்பப்பட்டுள்ளேன்” (முத்தா மாலிக்)
மேற்குறிய நான்கு கேள்விகளுக்கு விடையாக அவர்களின் புனித வாழ்வை ஆதாரத்துடன் பார்ப்போம் வாருங்கள்…
【ஈருலகிலும் முதலிடம் பெறும் பெருமானார் ﷺ அவர்கள்..】
சிந்தனையாளர்கள், சீர்திருத்தவாதிகள், ஆட்சித் தலைவர்கள், பயனுள்ள பல கண்டுபிடிப்புகளை உலகுக்கு வழங்கியவர்கள், மாபெரும் புரட்சியை ஏற்படுத்தியவர்கள், மாவீரர்கள், வாரி வழங்கிய வள்ளல்கள், பண்டிதர்கள் மற்றும் மதங்களைத் தோற்றுவித்தோர் என பல்லாயிரக்கணக்கான சாதனையாளர்கள் உலகில் தோன்றி மறைந்துள்ளனர்.
இத்தகைய சாதனையாளர்களிலிருந்து முக்கியமான இடத்தைப் பிடித்த நூறு சாதனையாளர்களைத் தேர்வு செய்து த ஹன்ட்ரட் (the hundred) என்ற நூலை மைக்கேல் ஹார்ட் (micheal harte) எனும் வரலாற்று ஆய்வாளர் எழுதினார். இது நூறு பேர் என்ற பெயரில் தமிழிலும் மொழி பெயர்த்து வெளியிடப்பட்டது.
மனித குலத்தில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர்களை அவர் வரிசைப்படுத்தும் போது நபிகள் நாயகம் ﷺ அவர்களுக்கு முதல் இடத்தை அளித்தார். முதல் சாதனையாளராக நபிகள் நாயகம் ﷺ அவர்களை அந்த நூலில் அவர் குறிப்பிடுகிறார்.
மைக்கேல் ஹார்ட் கிறித்தவ மதத்தில் ஆழ்ந்த நம்பிக்கையுள்ளவராக இருந்தும் கூட மக்களிடம் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர் என்றால் முதலிடம் நபிகள் நாயகத்துக்குத் தான் என்று குறிப்பிடுகிறார்.
வரலாற்று நாயகர்கள் குறித்து நடுநிலையோடும், காய்தல் உவத்தலின்றியும் யார் ஆய்வு செய்தாலும், எந்தக் கோணத்தில் ஆய்வு செய்தாலும் அவரால் நபிகள் நாயகத்துக்குத் தான் முதலிடத்தைத் தர முடியும்.
பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்து மறைந்த ஒரு மனிதர் அன்று கூறிய, நடைமுறைப்படுத்திக் காட்டிய அனைத்தையும் அப்படியே பின்பற்றும் ஒரு சமுதாயம் உலகில் இருக்கிறது என்றால் அது நபிகள் நாயகம் ﷺ அவர்களின் சமுதாயம் மட்டும் தான்.
வணக்க வழிபாடுகள் மட்டுமின்றி கொடுக்கல் வாங்கல், குடும்ப வாழ்க்கை, தனிப்பட்ட வாழ்க்கை என எந்தப் பிரச்சினையானாலும் நபிகள் நாயகம் ﷺ அவர்கள் கட்டளையிட்டவாறு நடக்கக் கூடிய சமுதாயம் பதினான்கு நூற்றாண்டுகளாக உலகில் இருந்து வருகிறது.
அனைத்துப் பிரச்சினைகளுக்கும் நபிகள் நாயகம் ﷺ அவர்கள் தாம் வழிகாட்டி என்று உலகில் கால் பகுதிக்கும் அதிகமான மக்கள் நம்புகின்றார்கள். இத்தகையோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்லும் காட்சியையும் உலகம் காண்கிறது.
உலகில் எந்தத் தலைவருக்கும் இந்தச் சிறப்புத் தகுதி கிடைத்ததில்லை என்பதை யாராக இருந்தாலும் ஒப்புக் கொள்ளத் தான் வேண்டும்.
மனைவி, மக்கள், பெற்றோர், உற்றார் மற்றும் அனைவரையும் விட, ஏன் தம் உயிரையும் விட நபிகள் நாயகம் ﷺ அவர்களை அதிகம் நேசிக்கக் கூடிய பல கோடிப் பேர் இன்றும் வாழ்கிறார்கள்.
உலக மக்களால் காட்டுமிராண்டிகள் வாழும் பூமியாக ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த பாலைவனத்தில் பிறந்த ஒருவரால் இவ்வளவு உயர்ந்த நிலையை அடைய முடிந்தது எப்படி?
இக்கேள்விக்கான விடை தான் இந்த ஜுமுஆ குறிப்புரை..
【சிறுநீர் கழித்தவரிடம் நாயகம் ﷺ அவர்களின் நற்குணம்…】
ஒரு கிராமவாசி வந்து பள்ளிவாசலில் சிறுநீர் கழிக்கலானார். மக்கள் அவரை விரட்டலானார்கள். அப்போது நபிகள் நாயகம் ﷺ அவர்கள் அவரை விட்டு விடுங்கள்! அவர் சிறுநீர் கழித்த இடத்தில் ஒரு வாளித் தண்ணீரை ஊற்றுங்கள்! மென்மையாக நடந்து கொள்ளுமாறு தான் நீங்கள் கட்டளையிடப்பட்டுள்ளீர்கள்! கடுமையாக நடந்து கொள்ளுமாறு கட்டளையிடப்படவில்லை என்றார்கள். [புகாரி: 220, 6128]
…. அவர் சிறுநீர் கழிக்கும் வரை அவரை விட்டு விடுங்கள் என்றார்கள். அவர் சிறுநீர் கழித்து முடிந்ததும் அவரை அழைத்தார்கள். இது அல்லாஹ்வின் ஆலயம். இதில் சிறுநீர் கழிப்பதோ மற்ற அருவருப்பான செயல்களைச் செய்வதோ தகாது. தொழுகை நடத்துவதற்கும் இறைவனை நினைவு கூர்வதற்கும் உரியது என்று அறிவுரை கூறினார்கள். [முஸ்லிம்: 429]
சிறுநீர் கழிப்பவர் அதை அடக்கிக் கொள்வதற்காகச் சிரமப்படக் கூடாது என்பதற்காக அவர் சிறுநீர் கழிக்கும் வரை காத்திருந்து அவரை அழைத்து அறிவுரை கூறுகிறார்கள். குறைந்த பட்சம் கடுமையான வார்த்தைகளால் அவரை ஏசியிருக்கலாம். அல்லது அவரையே சுத்தம் செய்து தருமாறு கட்டளையிட்டிருக்கலாம். அறியாமையின் காரணமாக அவர் செய்வதை மென்மையான முறையில் போதனை செய்கிறார்கள்.
எந்தச் சந்தர்ப்பத்திலும் கோபம் வராத, நிதானம் தவறாதவர்களாக அவர்கள் இருந்தார்கள் என்பதற்கு இதுவும் காரணமாக உள்ளது.
【பிற மத்தவரிடம் நாயகம் ﷺ அவர்களின் நற்குணம் 】
நபிகள் நாயகம் ﷺ அவர்கள் காலத்தில் இஸ்லாத்தை ஏற்றவர்களில் பலரது உறவினர்களும் குடும்பத்தாரும் இஸ்லாத்தை ஏற்காமல் இருந்தனர்.
இஸ்லாத்தை ஏற்காத தங்களின் உறவினருக்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்யலாமா? என்று இஸ்லாத்தை ஏற்றவர்கள் கேட்டபோதெல்லாம் உறவினருக்கான கடமைகளைச் செய்தாக வேண்டும் என்பது தான் நபிகள் நாயகத்தின் அறிவுரையாக இருந்தது.
இஸ்லாத்தை ஏற்காத நிலையில் என் தாய் என்னிடம் வந்தார். அவரை என்னோடு வைத்துக் கொள்ளலாமா? என்று நபிகள் நாயகத்திடம் நான் கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் ஆம்! கண்டிப்பாக உன் தாயை உன்னோடு சேர்த்துக் கொள் எனக் கட்டளையிட்டனர் என்று அஸ்மா (ரலி) அறிவிக்கிறார். [புகாரி 2620, 3183, 5979]
நோயாளிகளை நோயாளிகளாக மட்டுமே பார்க்க வேண்டும். அவர் என்ன சாதி? அவர் என்ன மதம்? அவர் நிறம் என்ன? அவர் மொழி என்ன? அவர் ஏழையா? அவர் பணக்காரரா? அவர் சிறியவரா? அவர் பெரியவரா? என்றெல்லாம் பார்க்கக்கூடாது. இத்தகைய உயர்ந்த பண்பாட்டை உத்தம நபி ﷺ அவர்கள் உலகத்தாருக்கு கற்றுத்தருகிறார்கள்.
عن أنس قال : كان غلام يهودي يخدم النبي صلى الله عليه وسلم فمرض فأتاه النبي صلى الله عليه وسلم يعوده فقعد عند رأسه فقال له : ” أسلم ” . فنظر إلى أبيه وهو عنده فقال : أطع أبا القاسم . فأسلم . فخرج النبي صلى الله عليه وسلم وهو يقول : ” الحمد لله الذيأنقذه من النار ” . رواه البخاري
அனஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: நபி ﷺ அவர்களுக்கு பணிவிடை செய்து கொண்டிருந்த யூதச்சிறுவன் உடல்நலம் குன்றியபோது நபி (ஸல்) அவர்கள் அவனிடம் நலம் விசாரிக்கச் சென்று அவனது தலைமாட்டில் அமர்ந்தார்கள். பின்பு அச்சிறுவனிடம் ‘நீ இஸ்லாமை ஏற்றுக்கொள்’ என்று கூறினார்கள். அச்சிறுவன் அருகிலிருந்த தனது தந்தையைப் பார்த்தான். அவர் ”நீ அபுல் காஸிமுக்கு கட்டுப்படு!” என்று கூறினார். அச்சிறுவர் இஸ்லாமை ஏற்றுக் கொண்டார். நபி ﷺ அவர்கள், ”இச்சிறுவரை நரக நெருப்பிலிருந்து காத்த அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும்” என்று கூறியவர்களாக வீட்டை விட்டு வெளியேறினார்கள். (ஸஹீஹுல் புகாரி 1356)
முஸ்லிம் அல்லாத ஒருவர் நோய்வாய்ப்பட்டிருந்தால், அவரையும் சென்று சந்தித்து ஆறுதல் கூற வேண்டும் என்பது இஸ்லாம் கற்றுத்தரும் உயர் பண்பாடாகும்.
காதிஸிய்யா எனும் இடத்தில் ஸஹ்ல் பின் ஹுனைஃப் (ரலி), கைஸ் பின் ஸஃது (ரலி) ஆகிய இரு நபித்தோழர்கள் அமர்ந்திருந்தனர். அப்போது அவர்களை ஒரு பிரேத ஊர்வலம் கடந்து சென்றது. உடனே அவ்விருவரும் எழுந்து நின்றார்கள். இறந்தவர் வேறு மதத்தவர் என்று அவ்விரு நபித்தோழர்களிடம் தெரிவிக்கப்பட்டது. அப்போது அவ்விருவரும் பின்வருமாறு கூறினார்கள்:-
நபிகள் நாயகம் ﷺ அவர்களைப் பிரேதம் ஒன்று கடந்து சென்றது. உடனே நபிகள் நாயகம் ﷺ அவர்கள் எழுந்து நின்றனர். இது யூதருடைய பிரேதம் என்று அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. அதற்கு நபிகள் நாயகம் ﷺ அவர்கள் அதுவும் ஓர் உயிர் அல்லவா? என்று கேட்டனர். [புகாரி 1313]
மற்றொரு அறிவிப்பில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது:
எங்களைப் பிரேதம் ஒன்று கடந்து சென்றது. அதற்காக நபிகள் நாயகம் ﷺ அவர்கள் எழுந்து நின்றார்கள். நாங்களும் நின்றோம். அல்லாஹ்வின் தூதரே! இது யூதருடைய பிரேதம் என்று நாங்கள் கூறினோம். அதற்கு நபிகள் நாயகம் ﷺ அவர்கள் நீங்கள் பிரேதத்தைக் கண்டால் எழுந்து நில்லுங்கள் எனக் கூறினார்கள். [புகாரி 1311]
【கடன் வாங்கியவரிடம் நாயகம் ﷺ அவர்களின் நற்குணம் .】
மனிதரிடம் வாங்கிய கடனைக் குறித்த நேரத்தில் கொடுக்க இயலவில்லை. அப்போது நடந்தது என்ன என்பதைப் பாருங்கள்!
நபிகள் நாயகம் ﷺ அவர்களுக்குக் கடன் கொடுத்திருந்த ஒரு மனிதர் அதை வசூலிப்பதற்காக நபிகள் நாயகம் ﷺ அவர்களிடம் வந்தார். அப்போது கடுமையான முறையில் அவர் நடந்து கொண்டார். நபிகள் நாயகத்தின் தோழர்கள் அவரைத் தாக்க முயன்றனர். அப்போது நபிகள் நாயகம் ﷺ அவர்கள் அவரை விட்டு விடுங்கள்! ஏனெனில் கடன் கொடுத்தவருக்கு (கடுமையாகப்) பேசும் உரிமை உள்ளது எனக் கூறினார்கள். மேலும், அதே வயதுடைய ஒட்டகத்தை இவருக்குக் கொடுங்கள் எனக் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே! அதை விடக் கூடுதல் வயதுடைய ஒட்டகம் தான் உள்ளது என்று நபித்தோழர்கள் கூறினார்கள். அவருக்கு அதைக் கொடுங்கள். ஏனெனில், அழகிய முறையில் கடனைத் திருப்பிச் செலுத்துபவரே உங்களில் சிறந்தவராவார் எனக் கூறினார்கள். [புகாரி 2306, 2390, 2401, 2606, 2609]
கொடுத்த கடனைத் திரும்பக் கேட்டு வந்தவர் கடுஞ்சொற்களைப் பயன்படுத்தி கடனைத் திருப்பிக் கேட்கிறார். நபித்தோழர்கள் அவர் மேல் ஆத்திரப்படும் அளவுக்குக் கடுமையாக நடந்து கொள்கிறார்.
தமது மரியாதையை விட மற்றவரின் உரிமையைப் பெரிதாக மதித்ததால் தான் இதைச் சகித்துக் கொள்கிறார்கள்.
மேலும் உடனடியாக அவரது கடனைத் தீர்க்கவும் ஏற்பாடு செய்கிறார்கள். கடனாக வாங்கிய ஒட்டகத்தை விடக் கூடுதல் வயதுடைய ஒட்டகம் தான் தம்மிடம் இருக்கிறது என்பதை அறிந்த போது அதையே அவருக்குக் கொடுக்க உத்தரவிடுகிறார்கள்.
கடுஞ்சொற்களை என்ன தான் சகித்துக் கொண்டாலும் இத்தகையவருக்கு வாங்கிய கடனை விட அதிகமாகக் கொடுக்க யாருக்கும் மனம் வராது. முடிந்த வரை குறைவாகக் கொடுக்கவே உள்ளம் தீர்ப்பளிக்கும்.
ஆனால், இந்த மாமனிதரோ தாம் வாங்கிய கடனை விட அதிகமாகக் கொடுக்குமாறு உத்தரவிட்டதுடன் இவ்வாறு நடப்பவர்களே மனிதர்களில் சிறந்தவர் எனவும் போதனை செய்கிறார்கள்.
【தன்னை துன்புறுத்தியவரிடம் நாயகம் ﷺ அவர்களின் நற்குணம் 】
– عَنْ عَائِشَةَ ؓ اَنَّ يَهُوْدَ اَتَوُا النَّبِيَّ ﷺ فَقَالُوْا: اَلسَّامُ عَلَيْكُمْ فَقَالَتْ عَائِشَةُ: عَلَيْكُمْ وَلَعَنَكُمُ اللهُ وَغَضِبَ اللهُ عَلَيْكُمْ، قَالَ: مَهْلاً يَاعَائِشَةُ! عَلَيْكِ بِالرِّفْقِ، وَاِيَّاكِ وَالْعُنْفَ وَالْفُحْشَ، قَالَتْ: اَوَلَمْ تَسْمَعْ مَاقَالُوْا؟ قَالَ: اَوَلَمْ تَسْمَعِيْ مَاقُلْتُ؟ رَدَدْتُ عَلَيْهِمْ فَيُسْتَجَابُ لِيْ فِيْهِمْ، وَلاَ يُسْتَجَابُ لَهُمْ فِيَّ
ஹஜ்ரத் ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், யூதர்கள் சிலர் நபி ﷺ அவர்களிடம் வந்து, அஸ்ஸாமு அலைக்கும்” (உமக்கு மரணம் உண்டாகுக) என்று கூறினர். நான் அவர்களுக்கு பதில் தரும் வகையில், உங்களுக்கே மரணம் வரட்டும்!, மேலும் உங்கள் மீது அல்லாஹ்வின் சாபமும், கோபமும் உண்டாகட்டும்! என்று சொன்னேன். ஆயிஷாவே! பொறு! மென்மையைக் கடைப்பிடி! கடுமை, தகாத வார்த்தையைத் தவிர்த்துக்கொள்” என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். இவர்கள் சொன்னதைத் தாங்கள் கேட்கவில்லையா?’ என நான் கேட்டேன், ”அவர்களுக்கு பதிலாக நான் என்ன சொன்னேன் என்று நீ கேட்கவில்லையா? (உங்கள் மீதே வரட்டும்) என்று அவர்களின் சொல்லை அவர்கள் மீதே திருப்பிவிட்டேன். அவர்கள் மீது நான் இட்ட சாபம் ஏற்றுக் கொள்ளப்பட்டது, அவர்கள் என் மீது இட்ட சாபம் ஒப்புக் கொள்ளப்படவில்லை” என்று நபி ﷺ அவர்கள் கூறினார்கள். (புகாரி 6401)
யூதப் பெண் ஒருத்தி நபிகள் நாயகம் ﷺ அவர்களிடம் விஷம் கலந்த ஆட்டிறைச்சியைப் பொரித்துக் கொண்டு வந்தார். அதை நபிகள் நாயகம் ﷺ சாப்பிட்டனர். உடனே அவள் பிடித்து வரப்பட்டாள். இவளை நாங்கள் கொன்று விடட்டுமா? என்று நபிகள் நாயகம் ﷺ அவர்களிடம் கேட்கப்பட்டது. வேண்டாம் என்று அவர்கள் விடையளித்தார்கள். அந்த விஷத்தின் பாதிப்பை அவர்கள் உள்வாயின் மேற்பகுதியில் நான் பார்ப்பவனாக இருந்தேன் என்று அனஸ் ரலி) கூறுகிறார்கள். [ புகாரி 2617]
நபிகள் நாயகத்திற்கு எதிரிகளாகவும், சிறுபான்மையினராகவும் இருந்த யூத இனத்துப் பெண்மணி விஷம் கலந்த ஆட்டிறைச்சியைக் கொண்டு வந்து தந்த போது அதைப் பெற்றுக் கொள்ளும் அளவுக்கு அவர்களின் பெருந்தன்மை இருந்தது.
அவள் விஷம் கலந்த செய்தி தெரிந்தவுடன் அவள் பிடித்து வரப்பட்டாள். அவளைக் கொன்று விடலாமா? என்று நபித் தோழர்கள் கேட்ட போது, வேண்டாம் எனக் கூறி மறுத்து விட்டார்கள்.
நான் நபிகள் நாயகம் ﷺ அவர்களுடன் நடந்து சென்று கொண்டிருந்தேன். நஜ்ரான் நாட்டில் தயாரிக்கப்பட்ட, ஓரப்பகுதி கடினமாக இருந்த போர்வையை அவர்கள் மேலாடையாக அணிந்திருந்தார்கள். அவர்களை எதிர்கொண்ட ஒரு கிராமவாசி அப்போர்வையைக் கடுமையான வேகத்தில் இழுத்தார். அவர் கடுமையாக இழுத்ததால் நபிகள் நாயகத்தின் தோள் பகுதியில் அந்த அடையாளம் பதிந்ததை நான் கண்டேன். இழுத்தது மட்டுமின்றி அக்கிராமவாசி உம்மிடம் இருக்கும் அல்லாஹ்வின் செல்வத்திலிருந்து ஏதேனும் எனக்குத் தருமாறு உத்தரவிடுவீராக என்று கூறினார். அவரை நோக்கித் திரும்பிய நபிகள் நாயகம் ﷺ அவர்கள் சிரித்தார்கள். அவருக்கு அன்பளிப்பு வழங்குமாறு ஆணையிட்டார்கள். [புகாரி 3149, 5809, 6088]
சாதாரண மனிதன் கூட பொது இடங்களில் தனது சட்டையைப் பிடித்து இழுப்பதைச் சகித்துக் கொள்ள மாட்டான். தனக்கு ஏற்பட்ட அவமானமாக அதை எடுத்துக் கொள்வான்.
இவ்வளவு நடந்த பிறகும் மிக மிகச் சாதாரணமாக அந்தக் கிராமவாசியை நோக்கி நபிகள் நாயகத்தால் சிரிக்க முடிகின்றது. அவரது கோரிக்கையை அவர்களால் ஏற்க முடிகிறது.
நபிகள் நாயகம் ﷺ பதவியைப் பெற்ற பின் சாதாரண மனிதனுக்குக் கிடைக்கின்ற மரியாதையும், கௌரவத்தையும் கூட தியாகம் செய்தார்கள் என்பதற்கு இதை விட வேறு என்ன சான்று வேண்டும்?.
நாங்கள் நபிகள் நாயகம் ﷺ அவர்களுடன் பள்ளிவாசலில் இருந்தோம். அவர்கள் எழுந்ததும் நாங்கள் எழுந்தோம். அவர்கள் பள்ளிவாசலின் மையப்பகுதிக்கு வந்த போது அவர்களைக் கண்ட ஒருவர் அவர்களின் பின்புறமிருந்து மேலாடையை இழுத்தார். அவர்களின் மேலாடை முரட்டுத் துணியாக இருந்ததால் அவர்களின் பிடரி சிவந்து விட்டது. முஹம்மதே எனது இரு ஒட்டகங்கள் நிறையப் பொருட்களைத் தருவீராக! உமது செல்வத்திலிருந்தோ, உமது தகப்பனாரின் செல்வத்தில் இருந்தோ நீர் தரப்போவதில்லை என்று அந்த மனிதர் கூறினார். இழுத்துக் கொண்டிருக்கும் என் மேலாடையை விடும் வரை பொருட்களைத் தர மாட்டேன் என்று நபிகள் நாயகம் ﷺ கூறினார்கள். நான் விட மாட்டேன் என்று அவர் கூறினார். இவ்வாறு மூன்று முறை நபிகள் நாயகம் ﷺ கூறிய போது மூன்று முறையும் அவர் விட மாட்டேன் என்றார். அந்தக் கிராம வாசியின் கூற்றை நாங்கள் செவியுற்ற போது அவரை நோக்கி விரைந்தோம். நான் அனுமதிக்கும் வரை தமது இடத்தை விட்டு யாரும் நகரக் கூடாது என்று நபிகள் நாயகம் ﷺ கூறினார்கள். பின்னர் கூட்டத்திலிருந்த ஒருவரை நோக்கி இவரது ஒரு ஒட்டகத்தில் கோதுமையையும், இன்னொரு ஒட்டகத்தில் பேரீச்சம் பழத்தையும் ஏற்றி அனுப்புவீராக என்றார்கள். பின்னர் மக்களை நோக்கி நீங்கள் புறப்படுங்கள்! என்றார்கள். இதை நபிகள் நாயகத்தின் தோழர் அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார். [நஸாயீ 4694, அபூதாவூத் 4145]
நபிகள் நாயகத்தின் ஆட்சி எந்த அளவுக்குச் செழிப்பாக இருந்தது என்பதற்குச் சான்றாக இந்த நிகழ்ச்சியை முன்னரும் குறிப்பிட்டுள்ளோம். அவர்களின் பெருந்தன்மைக்கும், தன்னடக்கத் திற்கும் இதில் சான்று உள்ளதால் மீண்டும் இதைக் குறிப்பிடுகிறோம்.
பள்ளிவாசலில் நபிகள் நாயகத்தின் உற்ற தோழர்கள் இருக்கும் போது யாரெனத் தெரியாத ஒருவர் சட்டையைப் பிடித்து இழுக்கிறார். பிடரி சிவந்து போகும் அளவுக்கு இழுத்தும் நபிகள் நாயகம் ﷺ கோபப்படாமல் இருக்கிறார்கள். அவருக்கு இரண்டு ஒட்டகங்கள் உடைமையாக இருந்தும் அவற்றில் ஏற்றிச் செல்லும் அளவுக்குப் பொருட்களைக் கேட்டும் அதையும் சகித்துக் கொண்டார்கள்.
பிடித்த சட்டையை விடாமலே தனது கோரிக்கையைக் கேட்கிறார். சட்டையை விடும்படி நபிகள் நாயகம் கேட்ட பிறகும் சட்டையை விடாமல் கோரிக்கையில் பிடிவாதமாக இருக்கிறார். இப்படி ஒரு நிலையை எவ்வித அதிகாரமும் இல்லாத நம்மைப் போன்ற சாதாரண மனிதர்கள் கூட சகித்துக் கொள்ள இயலுமா? இவ்வளவு நடந்த பின்பும் உமது அப்பன் சொத்தைக் கேட்கவில்லை; பொதுநிதியைத் தான் கேட்கிறேன் என அவர் கூறிய பிறகும் அவரது கோரிக்கையை ஏற்று இரு ஒட்டகங்கள் நிறைய வாரி வழங்க நமது மனம் இடம் தருமா? இந்த மாமனிதரின் உள்ளம் இடம் தருகிறது.
【பதவியையும், அதிகாரத்தையும் விரும்பாத நாயகம் ﷺ அவர்களின் நற்குணம் 】
இந்த நிகழ்ச்சியும் மாமனிதரின் சுயநலன் கலக்காத பண்புக்குச் சான்றாகவுள்ளது.
ஒரு அடக்கத்தலத்தின் அருகில் அழுது கொண்டிருந்த ஒரு பெண்ணை நபிகள் நாயகம் ﷺ கடந்து சென்றார்கள். இறைவனை அஞ்சிக் கொள்! பொறுமையைக் கடைபிடி! என்று அப்பெண்ணுக்கு அவர்கள் அறிவுரை கூறினார்கள். அப்பெண் நபிகள் நாயகத்தை அறியாததால் உன் வேலையைப் பார்த்துக் கொண்டு போ! எனக்கேற் பட்ட துன்பம் உனக்கு ஏற்படவில்லை எனக் கூறினார். அறிவுரை கூறியவர் நபிகள் நாயகம் ﷺ என்று பின்னர் அவரிடம் தெரிவிக்கப்பட்டது. உடனே அப்பெண் நபிகள் நாயகத்தின் வீட்டுக்கு வந்தார். வாசலில் எந்தக் காவலர்களையும் அவர் காணவில்லை. அப்பெண் உள்ளே வந்து உங்களைப் பற்றி அறியாமல் பேசி விட்டேன் எனக் கூறினார். அதற்கு நபிகள் நாயகம் ﷺ அவர்கள் துன்பத்தின் துவக்கத்தில் ஏற்படுவது தான் பொறுமை எனக் கூறினார்கள். [ புகாரி 1283, 7154]
நபிகள் நாயகம் ﷺ அவர்கள் அழுது கொண்டிருந்த பெண்ணுக்கு அறிவுரை கூறுகிறார்கள். தமக்கு அறிவுரை கூறுபவர் மாபெரும் சாம்ராஜ்யத்தின் அதிபதி என்பது அப்பெண்ணுக்குத் தெரியவில்லை. சாதாரண மனிதர்களைப் போல் சாதாரண உடையில் நபிகள் நாயகம் இருந்ததும், பல்லக்கில் வராமல் நடந்தே வந்ததும், அவர்களுடன் பெரிய கூட்டம் ஏதும் வராததுமே நபிகள் நாயகத்தை அப்பெண் அறிந்து கொள்ள இயலாமல் போனதற்குக் காரணமாகும்.
உன் வேலையைப் பார்த்துக் கொண்டு போ என்று அப்பெண் கூறும் போது நீ யாரிடம் பேசுகிறாய் தெரியுமா? என்று அப்பெண்ணிடம் அவர்களும் கேட்கவில்லை. உடன் சென்ற அவர்களின் பணியாளர் அனஸ் என்பாரும் கேட்கவில்லை. இதைச் சர்வ சாதாரணமாக எடுத்துக் கொண்டு நபிகள் நாயகம் ﷺ சென்று விடுகிறார்கள்.
தமக்கு அறிவுரை கூறியவர் தமது நாட்டின் அதிபதி என்று அறிந்து கொண்டு ஏனைய அதிபதிகளைப் போல வாயிற்காப்போரின் அனுமதி பெற வேண்டியிருக்குமோ என்று நினைத்துக் கொண்டு அவர் வருகிறார். ஆனால் நபிகள் நாயகத்தின் வீட்டுக்கு எந்தக் காவலாளியும் இருக்கவில்லை. உலகிலேயே காவலாளி யாரும் இல்லாத ஒரே ஆட்சித் தலைவர் நபிகள் நாயகம் ﷺ அவர்களாகத் தான் இருக்க முடியும்.
தனது செயலுக்கு மன்னிப்புக் கேட்கத் தான் அப்பெண்மணி வருகிறார். உங்களை அறியாமல் அலட்சியமாக நடந்து விட்டேன் எனக் கூறுகிறார். நபிகள் நாயகம் ﷺ அதைப் பொருட்படுத்தவே இல்லை. மாறாக, இந்த நிலையிலும் அவருக்கு முன்னர் கூறிய அறிவுரையைத் தான் தொடர்கிறார்கள். துன்பம் வந்தவுடனேயே அதைச் சகிப்பது தான் பொறுமை என்று போதனை செய்கிறார்கள். அப்பெண்ணின் அலட்சியம் நபிகள் நாயகத்தைக் ﷺ கடுகளவு கூட பாதிக்கவில்லை என்பதற்கு இது சான்றாகவுள்ளது.
பதவியையும், அதிகாரத்தையும் பயன்படுத்தி எந்த மரியாதையையும் அடைய அவர்கள் விரும்பவில்லை என்பதை இதிலிருந்து அறியலாம்.
【சாதாரண நண்பருடன் பேசுவது போல் பேசிய நாயகம் ﷺ அவர்களின் நற்குணம் …】
என்னை நபிகள் நாயகம் ﷺ அவர்கள் ஏமனுக்கு ஆளுநராக அனுப்பினார்கள். நான் ஏமன் நோக்கிப் புறப்படும் போது நபிகள் நாயகம் ﷺ அவர்கள் என்னுடன் ஊர் எல்லை வரை வந்தார்கள். நான் வாகனத்தில் அமர்ந்திருக்க நபிகள் நாயகம் ﷺ அவர்கள் வாகனத்திற்குக் கீழே தரையில் கூடவே என்னுடன் நடந்து வந்தார்கள். விடை பெறும் போது, முஆதே! இவ்வருடத்திற்குப் பின் அநேகமாக என்னைச் சந்திக்க மாட்டீர்! அல்லது எனது பள்ளிவாசலையோ, எனது அடக்கத்தலத்தையோ தான் சந்திப்பீர் எனக் கூறினார்கள். இதைக் கேட்டு நான் அழலானேன். நபிகள் நாயகம் ﷺ அவர்கள் முகத்தைத் திருப்பி மதீனாவை நோக்கி நடந்தார்கள். [அஹ்மத் 21040, 21042]
தம்மால் நியமனம் செய்யப்பட்ட ஒரு அதிகாரி வாகனத்தில் இருக்க, அவரை நியமனம் செய்த அதிபர் அவருடன் கூடவே நடந்து சென்ற அதிசய வரலாற்றை உலகம் கண்டதில்லை.
அவரிடம் பேச வேண்டியவைகளை ஊரிலேயே பேசி அனுப்பி இருக்கலாம். சாதாரண நண்பருடன் பேசுவது போல் பேச வேண்டியவைகளைப் பேசிக் கொண்டு செல்கிறார்கள் என்றால் இவர்கள் புகழுக்காக பதவியைப் பெற்றிருப்பார்கள் என்று கற்பனை கூட செய்ய முடியுமா?
【 அறிவுரையிலும் அளவுடன் நடந்த நாயகம் ﷺ அவர்களின் நற்குணம்..】
நபிகள் நாயகம் ﷺ அவர்களின் நெருங்கிய தோழர் அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) தமது வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சியைக் கூறுகிறார்.
நான் அதிகமாக நோன்பு நோற்று வரும் செய்தி நபிகள் நாயகம் ﷺ அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. உடனே, அவர்கள் என்னிடம் வந்தார்கள். கூளம் நிரப்பப்பட்ட தலையணையை அவர்கள் அமர்வதற்காக எடுத்துப் போட்டேன். அவர்கள் அதில் அமராமல் தரையில் அமர்ந்தார்கள். எனக்கும் அவர்களுக்குமிடையே தலையணை கிடந்தது. மாதந்தோறும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பது உனக்குப் போதுமானதில்லையா? என்று என்னிடம் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே! ஐந்து நாட்கள் நோன்பு வைக்கலாமா? என்று கேட்டேன். ஐந்து நாட்கள் நோன்பு வைத்துக்கொள் எனக் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே! ஏழு நாட்கள் நோன்பு வைத்துக் கொள்ளட்டுமா? என்று நான் கேட்டேன். ஏழு நாட்கள் நோன்பு வைத்துக் கொள் என்றார்கள். அல்லாஹ்வின் தூதரே! ஒன்பது நாட்கள் நோன்பு வைத்துக் கொள்ளட்டுமா என்று கேட்டேன். ஒன்பது நாட்கள் நோன்பு வைத்துக் கொள் என்றார்கள். அல்லாஹ்வின் தூதரே! பதினோரு நாட்கள் நோன்பு வைக்கட்டுமா என்று நான் கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் ﷺ அவர்கள் ஒரு நாள் விட்டு ஒரு நாள் நோன்பு நோற்பதை விட சிறந்த நோன்பு ஏதுமில்லை என்ற கூறினார்கள். [புகாரி 1980, 6277]
இந்த நிகழ்ச்சியில் நபிகள் நாயகம் ﷺ அவர்களின் பல்வேறு குணநலன்கள் பிரதிபலிக்கின்றன.
நபிகள் நாயகம் ﷺ காட்டிய ஆன்மீக நெறியில் வரம்புக்கு உட்பட்டே வணக்க வழிபாடுகள் நிகழ்த்த வேண்டும். கடவுளுக்குப் பணி செய்கிறேன் என்று நினைத்துக் கொண்டு மனைவி மக்களை, மனித குலத்தை மறந்து விடக்கூடாது.
அப்துல்லாஹ் பின் அம்ர் என்ற நபித்தோழர் எப்போது பார்த்தாலும் நோன்பு நோற்றுக் கொண்டிருக்கிறார். மனைவி மக்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளை இதனால் சரியாகச் செய்யவில்லை. நபிகள் நாயகத்திடம் இவரைப் பற்றிய புகார் வந்ததும் அவர்கள் அவரை அழைத்து வரச் செய்திருக்கலாம். நபிகள் நாயகம் ﷺ அழைக்கிறார்கள் என்றால் அவர் ஓடோடி வந்திருப்பார். ஆனால், அவருக்கு அறிவுரை கூறுவதற்காக அவரைத் தேடி நபிகள் நாயகம் ﷺ அவர்கள் புறப்பட்டுச் சென்றுள்ளனர். தமது பதவியைப் பயன்படுத்தி அதிகாரம் செலுத்துவதை நபிகள் நாயகம் ﷺ விரும்பியதில்லை என்பதை இதிலிருந்து அறியலாம்.
【தம் தோழர்களிடம் சகஜமாக நடந்த நாயகம் ﷺ அவர்களின் நற்குணம்…】
நபிகள் நாயகம் ﷺ அவர்களுக்கு ஆடு ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அப்போது உணவுகள் குறைவாக இருந்த காலம். தமது குடும்பத்தாரிடம் இந்த ஆட்டைச் சமையுங்கள் என்று கூறினார்கள். நான்கு பேர் சுமக்கக் கூடிய பெரிய பாத்திரம் ஒன்று இருந்தது. அதில் அந்த உணவு வைக்கப்பட்டு கொண்டு வரப்பட்டது. உணவு கிடைக்காத தோழர்கள் எல்லாம் அழைக்கப்பட்டனர். உணவுத் தட்டைச் சுற்றி அனைவரும் அமர்ந்து சாப்பிடலானார்கள். நபிகள் நாயகம் ﷺ அவர்களும் அவர்களுடன் அமர்ந்து கொண்டனர். கூட்டம் அதிகமாகச் சேர்ந்ததால் நபிகள் நாயகம் ﷺ அவர்கள் மண்டியிட்டு அமர்ந்து மற்றவர்களுக்கு இடம் கொடுத்தார்கள். அப்போது ஒரு கிராமவாசி என்ன இப்படி உட்கார்ந்திருக்கிறீர்கள்? என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் ﷺ அவர்கள் அல்லாஹ் என்னை அடக்குமுறை செய்பவனாகவும், மமதை பிடித்தவனாகவும் ஆக்கவில்லை. பெருந்தன்மை மிக்க அடியானாகவே ஆக்கியுள்ளான் என்று விடையளித்தார்கள். [அபூதாவூத் 3773, பைஹகீ 14430]
ஒரு உணவுத் தட்டைச் சுற்றி அனைவரும் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது உயர்ந்த நிலையில் உள்ளவர்கள் மற்றவர்களுடன் சேர்ந்து அமர்வதை மரியாதைக் குறைவாகவே கருதுவார்கள். பலரும் கைகளைப் போட்டுச் சாப்பிடும் தட்டில் சாப்பிடுவதை அருவருப்பாகக் கருதுபவர்களும் உள்ளனர்.
ஆனால், நபிகள் நாயகம் ﷺ அவர்கள் மற்றவர்களுடன் சேர்ந்து மற்றவர்கள் கைகளைப் போட்டுச் சாப்பிடும் அதே தட்டில் தாமும் சாப்பிட்டார்கள். அது மட்டுமின்றி பொதுவாக சம்மணமிட்டு அமர்வது தான் சாப்பிடுவதற்கு வசதியானது. மண்டியிட்டு அமர்வது வசதிக் குறைவானது என்பதை அறிவோம்.
மேலும் அன்றைய சமூக அமைப்பில் மண்டியிட்டு அமர்வது தாழ்த்தப்பட்டவர்களுக்கு உரியதாகக் கருதப்பட்டு வந்ததால் தான் கிராமவாசி அதைக் குறை கூறுகிறார். தாம் ஒரு ஆட்சியாளர் என்றோ, மதத்தின் தலைவர் என்றோ, வீட்டின் உரிமையாளர் என்றோ நபிகள் நாயகம் ﷺ அவர்கள் நினைக்கவில்லை. மற்றவர்களைப் போல் பசித்திருக்கக் கூடிய ஒரு மனிதராக மட்டும் தான் தம்மைக் கருதினார்கள்.
நபிகள் நாயகம் ﷺ அவர்கள் தமக்கு வந்த உணவைத் தான் மற்றவர்களுக்கு வழங்கினார்கள். எனவே வீட்டில் தமக்கென எடுத்து வைத்துக் கொண்டு தனியாகச் சாப்பிட்டிருக்க முடியும்.
ஆனால் நபிகள் நாயகம் ﷺ அவர்கள் எந்த விதமான கவுரவமும் பார்க்கவில்லை. மண்டியிட்டு அமர்ந்து சாப்பிட்டது மட்டுமின்றி இன்னொருவர் அமரக்கூடிய இடத்தை ஆக்கிரமித்து வசதியாக அமர்வதைக் கூட அடக்குமுறையாக அவர்கள் கருதுகிறார்கள். பெருந்தன்மை மிக்க அடியானாக இருப்பது தான் தமக்கு விருப்பமானது எனவும் குறிப்பிடுகிறார்கள்.
【கவுரவத்தை விரும்பாத எளிமையான நாயகம் ﷺ அவர்களின் நற்குணம்.】
ஒரு மனிதர் முதன் முதலாக நபிகள் நாயகத்தைச் ﷺ சந்திக்க வந்தார். பொதுவாக மன்னர்கள் முன்னிலையில் நடுநடுங்கிக் கொண்டு தான் மக்கள் நிற்பார்கள். நபிகள் நாயகத்தையும் அது போல் கருதிக்கொண்டு உடல் நடுங்கிட வந்தார். சாதாரணமாக இருப்பீராக! உலர்ந்த இறைச்சியைச் சாப்பிட்டு வந்த குரைஷி குலத்துப் பெண்ணுடைய மகன் தான் நான் என்று அவரிடம் கூறி அவரை சகஜ நிலைக்குக் கொண்டு வந்தார்கள். [இப்னு மாஜா 3303]
உலகம் முழுவதும் அவர்களை மாபெரும் அதிகாரம் படைத்தவராகப் பார்க்கிறது. அவர்களோ, தம்மை ஏழைத்தாயின் புதல்வன் என்றே நினைக்கிறார்கள். இந்தப் பதவி, அதிகாரத்தால் தமக்கு எந்த மதிப்பும் இல்லை என்பதையும் தெளிவுபடுத்துகிறார்கள்.
பதவியைப் பயன்படுத்தி சொத்து சுகம் சேர்க்காவிட்டாலும் இது போன்ற கவுரவத்தையாவது அவர்கள் பெற்றிருக்கலாம். அதைக் கூட விரும்பாத எளிமை அவர்களுடையது.
【அன்பாக சொல்லிக்கொடுத்த நாயகம் ﷺ அவர்களின் நற்குணம் .】
அவர்களின் எளிமைக்கு மற்றொரு சான்றைப் பாருங்கள்.
அறுக்கப்பட்ட ஆட்டின் தோலை ஒரு இளைஞர் உரித்துக் கொண்டிருந்தார். அவரைக் கடந்து சென்ற நபிகள் நாயகம் ﷺ அவர்கள் ஒதுங்கிக் கொள்! உனக்கு எப்படி உரிப்பது என்று காட்டித் தருகிறேன் என்றார்கள். தோலுக்கும், இறைச்சிக்குமிடையே தமது கையை அக்குள் வரை விட்டு உரித்தார்கள். [அபூதாவூத் 157, இப்னுமாஜா 3170]
ஒருவருக்கு ஆடு உரிக்கத் தெரியாவிட்டால் அவர்கள் கண்டு கொள்ளாமல் போய்க் கொண்டிருக்கலாம். அல்லது இப்படித் தான் உரிக்க வேண்டும் என்று வாயால் கூறலாம். போயான எந்தக் கவுரவமும் பார்க்காமல் தாமே ஆட்டுத் தோலை உரித்துக் காட்டிக் கற்றுக் கொடுத்தார்கள்.
【சிறுவர்கள் மீது நாயகம் ﷺ அவர்களின் நற்குணம் .】
வீதியில் செல்லும் போது சிறுவர்களைக் கண்டால் அவர்கள் முந்திக் கொண்டு சிறுவர்களுக்கு சலாம் கூறுவார்கள். [புகாரி 6247]
நபிகள் நாயகம் ﷺ அவர்கள் சிறுவர்களாகிய எங்களுடன் கலந்து பழகுவார்கள். எனது தம்பி அபூ உமைரிடம் உனது குருவி என்ன ஆனது? என்று விசாரிக்கும் அளவுக்கு சிறுவர்களுடன் பழகுவார்கள். [புகாரி 6129]
நான் அபீஸீனியாவிலிருந்து வந்தேன். அப்போது நான் சிறுமியாக இருந்தேன். வேலைப்பாடுகள் செய்யப்பட்ட ஆடையை அவர்கள் எனக்கு அணிவித்தார்கள். அந்த வேலைப்பாடுகளைத் தொட்டுப் பார்த்து அருமை அருமை என்று கூறினார்கள். [புகாரி 3874]
நான் நபிகள் நாயகம் ﷺ அவர்களுடன் முதல் தொழுகையைத் தொழுதேன். பின்னர் அவர்கள் தமது குடும்பத்தாரிடம் சென்றார்கள். அவர்களுடன் நானும் சென்றேன். அப்போது எதிரில் சிறுவர்கள் சிலர் வந்து கொண்டிருந்தனர். அவர்கள் ஒவ்வொருவரின் கன்னத்தையும் தடவிக் கொடுத்துக் கொண்டே சென்றனர். [முஸ்லிம் 4297]
நபிகள் நாயகம் ﷺ அவர்கள் மிகச் சிறந்த நற்குணம் கொண்டவர்களாக இருந்தனர். ஒரு நாள் என்னை ஒரு வேலைக்கு அனுப்பினார்கள். நபிகள் நாயகம் கூறிய வேலையைச் செய்ய வேண்டும் என்று மனதுக்குள் எண்ணிக் கொண்டு அல்லாஹ்வின் மீது ஆணையாக போக மாட்டேன் எனக் கூறினேன். நான் புறப்பட்டு கடை வீதியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களுக்கருகில் வந்தேன். அப்போது நபிகள் நாயகம் ﷺ அவர்கள் என் பின்புறமாக எனது பிடரியைப் பிடித்தனர். அவர்களை நான் நோக்கிய போது அவர்கள் சிரித்தனர். அனஸ்! நான் கூறிய வேலையைச் செய்தாயா? எனக் கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதரே! இதோ செய்கிறேன் என்று கூறினேன். அல்லாஹ்வின் மீது ஆணையாக ஒன்பது வருடங்கள் அவர்களுக்கு நான் பணிவிடை செய்துள்ளேன். நான் செய்த ஒரு காரியம் குறித்து ஏன் இப்படிச் செய்தாய்? என்றோ, நான் செய்யாத ஒரு காரியம் குறித்து இப்படிச் செய்திருக்க மாட்டாயா? என்றோ அவர்கள் கடிந்து கொண்டதில்லை என அனஸ் (ரலி) அறிவிக்கிறார். [முஸ்லிம் 4272]
சிறுவர்கள் மீது நபிகள் நாயகம் ﷺ அவர்கள் அன்பு செலுத்திய நிகழ்ச்சிகள் ஏராளம் உள்ளன. இத்தகைய பண்பாளர் தமது பதவியைப் பயன்படுத்தி மரியாதையையும், புகழையும் எதிர்பார்த்திருக்க முடியுமா?
【வீட்டில் பெருமானார் ﷺ அவர்களின் நற்குணம்】
வீட்டில் தமது செருப்பைத் தாமே தைப்பார்கள். தமது ஆடையின் கிழி சலையும் தாமே தைப்பார்கள். வீட்டு வேலைகளையும் செய்வார்கள். [அஹ்மத் 23756, 24176, 25039]
தரையில் (எதுவும் விரிக்காமல்) அமர்வார்கள். தரையில் அமர்ந்து சாப்பிடுவார்கள். ஆட்டில் தாமே பால் கறப்பார்கள். அடிமைகள் அளிக்கும் விருந்தையும் ஏற்பார்கள். [தப்ரானி கபீர் 12494]
மதீனாவுக்கு வெளியே உள்ள சிற்றூர் வாசிகள் இரவு நேரத்தில் தோல் நீக்கப்படாத கோதுமை ரொட்டியைச் சாப்பிட நபிகள் நாயகம் ﷺ அவர்களை அழைப்பார்கள். பாதி இரவு கடந்து விட்டாலும் அந்த விருந்தையும் நபிகள் நாயகம் ﷺ ஏற்றுக் கொள்வார்கள். [தப்ரானி (ஸகீர்) 41]
அகழ் யுத்தத்தின் போது நபிகள் நாயகம் ﷺ அவர்களும் மக்களுடன் சேர்ந்து அகழ் வெட்டினார்கள். மண் சுமந்தார்கள். நபிகள் நாயகம் ﷺ அவர்களின் வயிற்றை மண் மறைத்தது. [புகாரி 2837, 3034, 4104, 4106, 6620, 7236]
நபிகள் நாயகம் ﷺ அவர்கள் மதீனா வந்தவுடன் பள்ளிவாசலைக் கட்டிய போது அவர்களும் மக்களோடு சேர்ந்து கல் சுமந்தார்கள். [புகாரி 3906]
இப்படி எல்லா வகையிலும் நபிகள் நாயகம் ﷺ அவர்கள் சாதாரண மனிதராகத் தான் வாழ்ந்தார்கள். ஒரு தடவை கூடத் தமது பதவியைக் காரணம் காட்டி எந்த உயர்வையும் அவர்கள் பெற்றதில்லை.
【 இதை முன்பே என்னிடம் தெரிவித்திருக்கக் கூடாதா? பெருமானார் ﷺ 】
மிக்தாத் (ரலி) என்னும் நபித்தோழர் அறிவிக்கிறார்கள்.
நானும், எனது இரு நண்பர்களும் பசியின் காரணமாக செவிகள் அடைத்து, பார்வைகள் மங்கிய நிலையில் (மதீனா) வந்தோம். நபிகள் நாயகம் ﷺ அவர்களின் தோழர்களிடம் எங்களின் நிலையை எடுத்துச் சொன்னோம். எங்களை ஏற்று தங்க வைத்து உணவளிக்க யாரும் முன் வரவில்லை. பின்னர் நபிகள் நாயகம் ﷺ அவர்களிடம் நாங்கள் சென்றோம். அவர்கள் எங்களைத் தமது வீட்டுக்கு அழைத்துச் சென்றார்கள். அங்கிருந்த மூன்று ஆடுகளைக் காட்டி இந்த ஆடுகளில் பால் கறந்து நம்மிடையே பங்கு வைத்துக் கொள்வோம் என்று கூறினார்கள். எனவே நாங்கள் பால் கறந்து எங்களில் ஒவ்வொருவரும் தமது பங்கை அருந்தி விட்டு நபிகள் நாயகத்தின் பங்கை எடுத்து வைத்து விடுவோம்.
அவர்கள் இரவில் வந்து உறங்குபவரை எழுப்பாத வகையிலும், விழித்திருப்பவருக்குக் கேட்கும் வகையிலும் ஸலாம் கூறுவார்கள். பின்னர் பள்ளிவாசலுக்குச் சென்று தொழுது விட்டு தமது பங்கை அருந்துவார்கள்.
ஒரு நாள் என்னிடம் ஷைத்தான் வந்து விட்டான். நான் என் பங்கை அருந்தினேன். முஹம்மது அவர்கள் அன்ஸார்களிடம் செல்கிறார்கள்; அன்ஸார்கள் நபிகள் நாயகத்தைக் கவனிப்பார்கள்; எனவே இந்த மிடறுகள் அவர்களுக்குத் தேவைப்படாது என்று எனக்குள் கூறிக் கொண்டு நபிகள் நாயகத்திற்குரிய பங்கையும் அருந்தி விட்டேன்.
அது வயிற்றுக்குள் சென்றதும் தப்பிக்க எந்த வழியும் இல்லை என்பதை விளங்கிக் கொண்டேன்.
நீ என்ன காரியம் செய்து விட்டாய்! முஹம்மது அவர்களின் பங்கை யும் அருந்தி விட்டாயே! அவர்கள் வந்து பார்க்கும் போது தமது பாலைக் காணாவிட்டால் உனக்கு எதிராகப் பிரார்த்தனை செய்து விடுவார்களே! அவ்வாறு பிரார்த்தனை செய்து விட்டால் நீ அழிந்து விடுவாயே! உனது இவ்வுலக வாழ்வும், மறுமை வாழ்வும் நாசமாகி விடுமே என்று ஷைத்தான் எனக்குள் பலவாறாக எண்ணங்களை ஏற்படுத்தினான்.
என்னிடம் ஒரு போர்வை இருந்தது. அதனால் காலைப் போர்த்தினால் தலை தெரியும். தலையைப் போர்த்தினால் கால் தெரியும். எனக்குத் தூக்கமும் வரவில்லை. எனது இரு நண்பர்களும் நான் செய்த காரியத்தைச் செய்யாததால் தூங்கி விட்டார்கள்.
அப்போது நபிகள் நாயகம் ﷺ வந்தார்கள். வழக்கம் போல் ஸலாம் கூறினார்கள். பள்ளிவாசலுக்குச் சென்று தொழுதார்கள். பின்னர் தமது பானத்தை நோக்கி வந்தார்கள். அதைத் திறந்து பார்த்ததும் அதில் எதையும் காணவில்லை. உடனே தமது தலையை வானத்தை நோக்கி உயர்த்தினார்கள் இப்போது பிரார்த்தனை செய்யப் போகிறார்கள். நான் அழியப் போகிறேன் என்று நினைத்தேன். அவர்கள் இறைவா! எனக்கு உணவளித்தவருக்கு நீ உணவளிப்பாயாக! எனக்குப் பருகத் தந்தவருக்கு நீ பருகச் செய்வாயாக! என்று வழக்கம் போல் பிரார்த்தனை செய்தார்கள்.
நபிகள் நாயகம் ﷺ அவர்கள் பசியோடு இருப்பதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் போர்வையை இடுப்பில் கட்டிக் கொண்டு, கத்தியை எடுத்துக் கொண்டு ஆடுகளை நோக்கிச் சென்றேன். அந்த ஆடுகளில் நன்கு கொழுத்ததை அறுத்து நபிகள் நாயகத்திற்கு அளிக்க வேண்டும் என்று நினைத்தேன்.
ஆனால் அந்த ஆடு மடியில் பால் சுரந்து நின்றது. மற்ற ஆடுகளும் மடியில் பால் சுரந்து நின்றன. உடனே நபிகள் நாயகம் ﷺ அவர்களின் குடும்பத்தினரின் பாத்திரத்தை எடுத்துக் கொண்டு நுரை பொங்கும் அளவுக்கு பால் கறந்தேன். அதை நபிகள் நாயகத்திடம் கொண்டு சென்றேன். உங்கள் பங்கை நீங்கள் பருகி விட்டீர்களா? என்று அவர்கள் கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் பருகுங்கள் என்றேன். அவர்கள் அருந்திவிட்டு மீதியைத் தந்தார்கள்.
அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் பருகுங்கள் என்று மீண்டும் கூறினேன். மீண்டும் அருந்திவிட்டு என்னிடம் தந்தார்கள். அவர்களின் பசி அடங்கியது என்பதை அறிந்து கொண்டதும், அவர்களின் பிரார்த்தனைக்குரியவனாக நான் ஆகிவிட்டதை உணர்ந்த போது, நான் விழுந்து விழுந்து சிரித்தேன். நான் கீழே விழுந்து விடுவேனோ என்ற அளவுக்குச் சிரித்தேன். மிக்தாதே! ஆடையைச் சரிப்படுத்துவீராக என்று நபிகள் நாயகம் ﷺ கூறினார்கள்.
அல்லாஹ்வின் தூதரே! இப்படி இப்படி நடந்து விட்டேன் என்று அவர்களிடம் விளக்கினேன். அதற்கு நபிகள் நாயகம் ﷺ அவர்கள், இது அல்லாஹ்வின் அருள் தவிர வேறில்லை. இதை முன்பே என்னிடம் தெரிவித்திருக்கக் கூடாதா? நமது நண்பர்கள் இருவரையும் எழுப்பி அவர்களுக்கும் பருகக் கொடுத்திருக்கலாமே என்றார்கள். [முஸ்லிம் 3831]
【யாரையும் அற்பமாகக் கருதாத நாயகம் ﷺ அவர்களின் நற்குணம் 】
நபிகள் நாயகம் ﷺ அவர்களின் பள்ளிவாசலைக் கூட்டிப் பெருக்கிச் சுத்தம் செய்யும் வேலையை ஒரு கறுப்பு நிற மனிதர் செய்து வந்தார். அவர் திடீரென இறந்து விட்டார். அவரை அற்பமாகக் கருதிய நபித் தோழர்கள் அவரது மரணத்தை நபிகள் நாயகத்திடம் தெரிவிக்காததால் அவர் இறந்ததை நபிகள் நாயகம் ﷺ அவர்கள் அறியவில்லை. ஒரு நாள் அவரைப் பற்றி நினைவு வந்து அவர் எங்கே? என விசாரித்தனர். அவர் இறந்து விட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. அப் போதே எனக்கு இதைத் தெரிவித்திருக்க மாட்டீர்களா? என்று நபிகள் நாயகம் ﷺ அவர்கள் கேட்டனர். பின்னர் அவரது அடக்கத் தலத்தை எனக்குக் காட்டுங்கள் என்றனர். அவரது அடக்கத் தலத்தைக் காட்டி யதும் அங்கே சென்று அவருக்காகப் பிரார்த்தனை செய்தார்கள். [புகாரி 1337]
【தன்னடக்கம் நிறைந்த நாயகம் ﷺ அவர்களின் நற்குணம்…】
2411- حَدَّثَنَا يَحْيَى بْنُ قَزَعَةَ ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ ، عَنِ ابْنِ شِهَابٍ ، عَنْ أَبِي سَلَمَةَ وَعَبْدِ الرَّحْمَنِ الأَعْرَجِ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، قَالَ اسْتَبَّ رَجُلاَنِ رَجُلٌ مِنَ الْمُسْلِمِينَ وَرَجُلٌ مِنَ الْيَهُودِ قَالَ الْمُسْلِمُ وَالَّذِي اصْطَفَى مُحَمَّدًا عَلَى الْعَالَمِينَ فَقَالَ الْيَهُودِيُّ وَالَّذِي اصْطَفَى مُوسَى عَلَى الْعَالَمِينَ فَرَفَعَ الْمُسْلِمُ يَدَهُ عِنْدَ ذَلِكَ فَلَطَمَ وَجْهَ الْيَهُودِيِّ فَذَهَبَ الْيَهُودِيُّ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَأَخْبَرَهُ بِمَا كَانَ مِنْ أَمْرِهِ وَأَمْرِ الْمُسْلِمِ فَدَعَا النَّبِيُّ صلى الله عليه وسلم الْمُسْلِمَ فَسَأَلَهُ عَنْ ذَلِكَ فَأَخْبَرَهُ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم : لاَ تُخَيِّرُونِي عَلَى مُوسَى فَإِنَّ النَّاسَ يَصْعَقُونَ يَوْمَ الْقِيَامَةِ فَأَصْعَقُ مَعَهُمْ فَأَكُونُ أَوَّلَ مَنْ يُفِيقُ فَإِذَا مُوسَى بَاطِشٌ جَانِبَ الْعَرْشِ فَلاَ أَدْرِي أَكَانَ فِيمَنْ صَعِقَ فَأَفَاقَ قَبْلِي ، أَوْ كَانَ مِمَّنِ اسْتَثْنَى اللَّه
ஒரு முஸ்லிமும் ஒரு யூதரும் ஒருவரையொருவர் திட்டிக் கொண்டனர். அந்த முஸ்லிம், உலகத்தார் அனைவரை விடவும் முஹம்மது ﷺ அவர்களுக்கு மேன்மையை அத்தவன் மீது சத்தியமாக! என்று கூறினார். அந்த யூதர், உலகத்தார் அனைவரை விடவும் மூசாவுக்கு மேன்மையை அத்தவன் மீது சத்தியமாக! என்று கூறினார். அதைக் கேட்டு (கோபம் கொண்டு) அந்த முஸ்லிம் தன் கையை ஓங்கி யூதரின் முகத்தில் அறைந்து விட்டார். அந்த யூதர், நபி ﷺ அவர்கடம் சென்று தனக்கும் அந்த முஸ்லிமுக்கும் இடையே நடந்ததையெல்லாம் தெரிவித்தார். நபி ﷺ அவர்கள் அந்த முஸ்லிமை அழைத்து வரச் சொல்லி அது பற்றி அவரிடம் கேட்டார்கள். அவர் விபரத்தைக் கூறினார். நபி ﷺ அவர்கள், மூசாவை விட என்னைச் சிறப்பாக்கி (முதலிடம் தந்து உயர்த்தி) விடாதீர்கள். ஏனெனில், மக்கள் அனைவரும் மறுமை நால் மூர்ச்சையாகி விடுவார்கள். நானும் அவர் களுடன் மூர்ச்சையாகி விடுவேன். நான் தான் முதலாவதாக மயக்கம் தெந்து எழுவேன். அப்போது, மூசா (அலை), (அல்லாஹ்வுடைய) அர்ஷின் ஓரத்தைப் பிடித்துக் கொண்டிருப்பார். மக்களோடு சேர்ந்து அவரும் மூர்ச்சையாகி, பிறகு எனக்கு முன்பாகவே மயக்கம் தெந்து விட்டிருப்பாரா, அல்லது அல்லாஹ் அவருக்கு மட்டும் விதி விலக்கு அத்திருப்பானா என்று எனக்குத் தெரியாது என்று கூறினார்கள். [புகாரி 2411)
5673- حَدَّثَنَا أَبُو الْيَمَانِ ، أَخْبَرَنَا شُعَيْبٌ ، عَنِ الزُّهْرِيِّ ، قَالَ : أَخْبَرَنِي أَبُو عُبَيْدٍ مَوْلَى عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ أَنَّ أَبَا هُرَيْرَةَ قَالَ : سَمِعْتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم يَقُولُ لَنْ يُدْخِلَ أَحَدًا عَمَلُهُ الْجَنَّةَ قَالُوا ، وَلاَ أَنْتَ يَا رَسُولَ اللهِ قَالَ : لاََ ، وَلاَ أَنَا إِلاَّ أَنْ يَتَغَمَّدَنِي اللَّهُ بِفَضْلٍ وَرَحْمَةٍ فَسَدِّدُوا وَقَارِبُوا ، وَلاَ يَتَمَنَّيَنَّ أَحَدُكُمُ الْمَوْتَ إِمَّا مُحْسِنًا فَلَعَلَّهُ أَنْ يَزْدَادَ خَيْرًا وَإِمَّا مُسِيئًا فَلَعَلَّهُ أَنْ يَسْتَعْتِبَ
அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள், எவரையும் அவரது நற்செயல் (மட்டும்) சொர்க்கத்தில் ஒருபோதும் நுழைவிக்காது (அல்லாஹ்வின் தனிப்பெரும் கருணையாலேயே எவரும் சொக்கம் புகமுடியும்) என்று கூறினார்கள்.
மக்கள், தங்களையுமா? அல்லாஹ்வின் தூதரே? என்று கேட்டார்கள். நபி ﷺ அவர்கள், என்னையும் தான்; அல்லாஹ் (தனது) கருணையாலும் அருளாலும் என்னை அரவணைத்துக் கொண்டால் தவிர என்று கூறிவிட்டு, எனவே, நீங்கள் நேர்மையோடு (நடு நிலையாகச்) செயல்படுங்கள். நிதானமாக நடந்துகொள்ளுங்கள். உங்கல் எவரும் மரணத்தை விரும்பிட வேண்டாம். ஒன்று அவர் நல்லவராக இருப்பார்; அவர் (உயிர் வாழ்வதன் மூலம்) நன்மையை அதிகமாக்கிக் கொள்ளலாம். அல்லது அவர் தீயவராக இருப்பார்; அவர் (உயிர் வாழ்வதால்) மனம் திருந்தக்கூடும் என்று கூறினார்கள். [புகாரி 5673)
【நன்மையில் முந்திச் சென்ற நாயகம் ﷺ அவர்களின் நற்குணம்…】
நபிகளார் எந்தக் காரியத்தை ஆர்வமூட்டினாலும் அதை, தாம் முதலில் செய்பவர்களாக இருப்பார்கள். கட்சித் தலைவர்களாக இருக்கும் பலர் பத்திரிக்கைகளில் படம் வரவேண்டும் என்பதற்காகக் கேமரா முன் வந்து நின்று விட்டு மாயமாகி விடுவார்கள். ஆனால் எந்தக் காரியத்தை செய்யத் தூண்டினாலும் அதைச் செய்யும் முதல் நபராகவும் மற்றவர்களுக்கு வழிகாட்டியாகவும் நபிகளார் திகழ்வார்கள்.
3965- حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ ، حَدَّثَنَا حَمَّادٌ ، عَنْ عَاصِمٍ ، عَنْ زِرٍّ ، عَنِ ابْنِ مَسْعُودٍ ، قَالَ كَانُوا يَوْمَ بَدْرٍ بَيْنَ كُلِّ ثَلاَثَةِ نَفَرٍ بَعِيرٌ ، وَكَانَ زَمِيلَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلِيٌّ وَأَبُو لُبَابَةَ ، قَالَ : وَكَانَ إِذَا كَانَتْ عُقْبَةُ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، قَالاَ لَهُ : ارْكَبْ حَتَّى نَمْشِيَ عَنْكَ ، فَيَقُولُ : مَا أَنْتُمَا بِأَقْوَى مِنِّي ، وَمَا أَنَا بِأَغْنَى عَنِ الأَجْرِ مِنْكُمَا
பத்ர் போர் நடந்த நாட்களில் நாங்கள் மூன்று பேர் ஒரு ஒட்டகத்தில் செல்லும் நிலைமையில் இருந்தோம். அபூலுபாபா (ரலி), அலீ (ரலி) ஆகியோர் நபிகளாருடன் சேர்ந்திருந்தார்கள். (இருவர் பயணம் செய்ய, மூன்றாம் நபர் நடந்து வருவார். இவ்வாறு பயணத்தை வைத்திருந்தனர்) நபிகளார் நடந்து வரும் முறை வந்த போது இரு நபித்தோழரும், நாங்கள் உங்களுக்காக நடக்கிறோம் (நீங்கள் ஒட்டகத்தில் அமர்ந்து வாருங்கள்) என்று கூறிய போது நீங்கள் இருவரும் என்னை விட வலிமை வாய்ந்தவர்கள் இல்லை. மேலும் உங்களை விட நன்மையில் தேவையற்றவனாகவும் இல்லை என்று பதிலளித்தார்கள். [அஹ்மத் 3706]
நபி ﷺ அவர்கள் இரவு நேரத்தில் தம் பாதங்கள் வீங்கும் அளவிற்கு நின்று வணங்குவார்கள். ஆகவே நான், ஏன் இப்படிச் செய்கிறீர்கள், அல்லாஹ்வின் தூதரே! தங்கன் முந்தைய பிந்தைய தவறுகளை அல்லாஹ் மன்னித்து விட்டானே? என்று கேட்டேன். அவர்கள், நான் நன்றியுள்ள அடியானாக இருக்க விரும்ப வேண்டாமா? என்று கேட்டார்கள். (தம் வாழ்நான் கடைசிக் காலத்தில்) நபி ﷺ அவர்கன் உடல் சதை போட்ட போது அமர்ந்து தொழுதார்கள். ருகூஉ செய்ய நினைக்கும் போது, எழுந்து (சிறிது நேரம்) ஓதுவார்கள். பிறகு, ருகூஉ செய்வார்கள். [புகாரி 4837)
【தம் தோழர்களைப் பாதுகாத்த நாயகம் ﷺ அவர்களின் நற்குணம்…】
தம் தோழர்களைப் பாதுகாக்கும் கேடயமாக நபிகளார் திகழ்ந்துள்ளார்கள். பிரச்சனைகள், சிக்கல்கள் தம் தோழர்களுக்கு வந்து விட்டால் அதை நிவர்த்தி செய்யும் விதமாக முதலில் களத்தில் ஈடுபடும் மாபெரும் வீரராகவும் நபிகளார் திகழ்ந்துள்ளார்கள்.
6033- حَدَّثَنَا عَمْرُو بْنُ عَوْنٍ ، حَدَّثَنَا حَمَّادٌ ، هُوَ ابْنُ زَيْدٍ – عَنْ ثَابِتٍ ، عَنْ أَنَسٍ قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم أَحْسَنَ النَّاسِ وَأَجْوَدَ النَّاسِ وَأَشْجَعَ النَّاسِ ، وَلَقَدْ فَزِعَ أَهْلُ الْمَدِينَةِ ذَاتَ لَيْلَةٍ فَانْطَلَقَ النَّاسُ قِبَلَ الصَّوْتِ فَاسْتَقْبَلَهُمُ النَّبِيُّ صلى الله عليه وسلم قَدْ سَبَقَ النَّاسَ إِلَى الصَّوْتِ وَهْوَ يَقُولُ لَنْ تُرَاعُوا لَنْ تُرَاعُوا وَهْوَ عَلَى فَرَسٍ لأَبِي طَلْحَةَ عُرْىٍ مَا عَلَيْهِ سَرْجٌ فِي عُنُقِهِ سَيْفٌ فَقَالَ لَقَدْ وَجَدْتُهُ بَحْرًا ، أَوْ إِنَّهُ لَبَحْرٌ
நபி ﷺ அவர்கள் (குணத்தாலும் தோற்றத்தாலும்) மக்கலேயே மிகவும் அழகானவர்களாகவும் மக்கலேயே அதிகக் கொடை குணம் கொண்டவர்களாகவும் மக்கலேயே அதிக வீரமுடையவர்களாகவும் இருந்தார்கள்.
(ஒரு முறை) மதீனாவாசிகள் இரவு நேரத்தில் (எதிரிகள் படையெடுத்து வருவதாகக் கேள்விப்பட்டு) பீதியடைந்தார்கள். சப்தம் வந்த திசையை நோக்கி மக்கள் நடந்தனர். அப்போது நபி ﷺ அவர்கள் மக்களை எதிர் கொண்டார்கள். சப்தம் வந்த திசையை நோக்கி மக்களுக்கு முன்பே நபி ﷺ அவர்கள் சென்று விட்டிருந்தார்கள். அப்போது நபி ﷺ அவர்கள் தமது கழுத்தில் வாளைத் தொங்கவிட்டபடி அபூதல்ஹா (ரலி) அவர்களது சேணம் பூட்டப்படாத வெற்றுடலான குதிரையின் மீது அமர்ந்த வண்ணம், பீதியடையாதீர்கள். பீதியடையாதீர்கள் என்று (மக்களைப் பார்த்துச்) சொன்னார்கள். பிறகு, (தங்கு தடையின்றி) ஓடும் கடலாக இந்தக் குதிரையை நாம் கண்டோம் அல்லது இந்தக் குதிரை (தங்கு தடையின்றி) ஓடும் கடல் என்று கூறினார்கள். [புகாரி 6033)
நல்ல வார்த்தைகள்:
அடுத்தவரைக் கண்டிக்கும் போதோ அல்லது சாதாரணமாகப் பேசும் போதோ அருவருக்கத்தக்க வார்த்தைகளைப் பேசும் வழக்கமுள்ள தலைவர்கள் ஏராளம். பல கட்சிகளில் அருவருப்பாகப் பேசும் பழக்கமுடையவர்களை மாநிலப் பேச்சாளர்களாகவும் நியமித்துள்ளனர். ஆனால் நபி ﷺ அவர்களின் பேச்சில் கண்ணியமும் மரியாதையும் நிறைந்திருக்கும்.
6035- حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصٍ ، حَدَّثَنَا أَبِي ، حَدَّثَنَا الأَعْمَشُ ، قَالَ : حَدَّثَنِي شَقِيقٌ ، عَنْ مَسْرُوقٍ قَالَ كُنَّا جُلُوسًا مَعَ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو يُحَدِّثُنَا إِذْ قَالَ لَمْ يَكُنْ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم فَاحِشًا ، وَلاَ مُتَفَحِّشًا وَإِنَّهُ كَانَ يَقُولُ : إِنَّ خِيَارَكُمْ أَحَاسِنُكُمْ أَخْلاَقًا
நாங்கள் அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்களுடன் அமர்ந்திருந்தோம். அவர்கள் எங்கடம் பேசினார்கள். அப்போது அவர்கள், அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் இயற்கையாகவும் அருவருப்பாகப் பேசுபவராக இருக்கவில்லை; செயற்கையாகவும் அருவருப்பாகப் பேசுபவராக இருக்கவில்லை. மேலும், நபி ﷺ அவர்கள், நற்குணமுடையவரே உங்களில் சிறந்தவர் என்று கூறுவார்கள் என்று சொன்னார்கள். புகாரி (6035)
6046- حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سِنَانٍ ، حَدَّثَنَا فُلَيْحُ بْنُ سُلَيْمَانَ ، حَدَّثَنَا هِلاَلُ بْنُ عَلِيٍّ ، عَنْ أَنَسٍ قَالَ لَمْ يَكُنْ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم فَاحِشًا ، وَلاَ لَعَّانًا ، وَلاَ سَبَّابًا كَانَ يَقُولُ عِنْدَ الْمَعْتَبَةِ مَا لَهُ تَرِبَ جَبِينُه
கெட்ட வார்த்தைகள் பேசுபவராகவோ, சாபமிடுபவராகவோ, ஏசுபவராகவோ அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் இருக்கவில்லை. (ஒருவரைக்) கண்டிக்கும் போது கூட அவருக்கென்ன நேர்ந்தது? அவருடைய நெற்றி மண்ணில் படட்டும் என்றே கூறுவார்கள். [புகாரி 6046)
பெரியவர்களுக்கு மரியாதை
தம்மை விட வயதில் மூத்தவர்களுக்கு நபிகளார் மரியாதை தருபவர்களாக இருந்தார்கள். இவ்வுலகின் இறுதி நாள் வரை உள்ள மக்களுக்காக அனுப்பப்பட்ட இறுதி நபி என்ற ஆணவம் அவர்களிடம் இருக்கவில்லை. தம்மை, சிறு வயதில் எடுத்து வளர்த்த உம்மு ஐமன் (ரலி) அவர்களை மரியாதை நிமித்தம் அவர்களின் வீட்டுக்கே சென்று நலம் விசாரித்து வருவார்கள். அவர்கள் கோபப்படும் போது அமைதியாக இருப்பார்கள்.
6471 – حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ عَنْ سُلَيْمَانَ بْنِ الْمُغِيرَةِ عَنْ ثَابِتٍ عَنْ أَنَسٍ قَالَ انْطَلَقَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- إِلَى أُمِّ أَيْمَنَ فَانْطَلَقْتُ مَعَهُ فَنَاوَلَتْهُ إِنَاءً فِيهِ شَرَابٌ – قَالَ – فَلاَ أَدْرِى أَصَادَفَتْهُ صَائِمًا أَوْ لَمْ يُرِدْهُ فَجَعَلَتْ تَصْخَبُ عَلَيْهِ وَتَذَمَّرُ عَلَيْه
அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள், உம்மு ஐமன் (ரலி) அவர்களிடம் (அவர்களது இல்லத்திற்குச்) சென்றார்கள். அவர்களுடன் நானும் சென்றேன். உம்மு ஐமன் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்களிடம் ஒரு பாத்திரத்தைக் கொடுத்தார்கள். அதில் ஏதோ குடிபானம் இருந்தது. அப்போது அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் நோன்பாளியாக இருந்தார்களோ, அல்லது அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் அ(ந்தப் பானத்)தை விரும்பவில்லையோ தெரியவில்லை. (அதை அவர்கள் பருக மறுத்து விட்டார்கள்.)
அதற்காக உம்மு ஐமன் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்களை உரத்த குரலில் கோபமாகக் கடிந்து கொண்டார்கள். [முஸ்லிம் 4848)
قَالَ أَبُو بَكْرٍ رضى الله عنه بَعْدَ وَفَاةِ رَسُولِ اللَّهِ -صلى الله عليه وسلم- لِعُمَرَ انْطَلِقْ بِنَا إِلَى أُمِّ أَيْمَنَ نَزُورُهَا كَمَا كَانَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- يَزُورُهَا. فَلَمَّا انْتَهَيْنَا إِلَيْهَا بَكَتْ فَقَالاَ لَهَا مَا يُبْكِيكِ مَا عِنْدَ اللَّهِ خَيْرٌ لِرَسُولِهِ -صلى الله عليه وسلم-. فَقَالَتْ مَا أَبْكِى أَنْ لاَ أَكُونَ أَعْلَمُ أَنَّ مَا عِنْدَ اللَّهِ خَيْرٌ لِرَسُولِهِ -صلى الله عليه وسلم- وَلَكِنْ أَبْكِى أَنَّ الْوَحْىَ قَدِ انْقَطَعَ مِنَ السَّمَاءِ. فَهَيَّجَتْهُمَا عَلَى الْبُكَاءِ فَجَعَلاَ يَبْكِيَانِ مَعَهَا
அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்களின் இறப்புக்குப் பின் (கலீஃபா) அபூபக்ர் (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களிடம், நம்மை (அம்மையார்) உம்மு ஐமன் (ரலி) அவர்களிடம் அழைத்துச் செல்லுங்கள். அவரை அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் சந்தித்து வந்ததைப் போன்று நாமும் சந்தித்து வருவோம் என்று கூறினார்கள்.
அவ்வாறே உம்மு ஐமன் (ரலி) அவர்களிடம் நாங்கள் சென்ற போது அவர்கள் அழுதார்கள். அப்போது அவர்கள் இருவரும், ஏன் அழுகிறீர்கள்? (நம்மிடம் இருப்பதை விட) அல்லாஹ்விடம் இருப்பது அவனுடைய தூதர் ﷺ அவர்களுக்குச் சிறந்ததாயிற்றே? என்று கேட்டார்கள்.
அதற்கு உம்மு ஐமன் (ரலி) அவர்கள், அல்லாஹ்விடம் இருப்பது அவனுடைய தூதர் ﷺ அவர்களுக்குச் சிறந்ததாகும் என்பதை நான் அறியாமல் அழவில்லை. மாறாக, வானிலிருந்து இறைச் செய்தி (வஹீ) வருவது நின்றுவிட்டதே! (அதற்காகத் தான் அழுகிறேன்) என்று கூறி, அவர்கள் இருவரையும் அழச் செய்து விட்டார்கள். அவருடன் சேர்ந்து அவர்கள் இருவருமே அழலாயினர். [முஸ்லிம் 4849)
【தமது மனைவியரிடம் நாயகம் ﷺ அவர்களின் நற்குணம் 】
மாமனிதர் நபிகள் நாயகம் ﷺ அவர்கள் தமது மனைவியரிடம் நடந்து கொண்ட முறை ஆண்கள் அனைவருக்கும் மிகச் சிறந்த முன்மாதிரியாகத் திகழ்கிறது.
நபிகள் நாயகம் ﷺ அவர்கள் வீட்டில் என்ன செய்து கொண்டிருப்பார்கள்? என்று ஆயிஷா (ரலி)யிடம் நான் கேட்டேன். அதற்கவர், தமது குடும்பத்தினரின் பணிகளில் ஈடுபடுவார்கள். தொழுகை நேரம் வந்ததும் தொழுகைக்காகப் புறப்படுவார்கள் என விடையளித்தார். [புகாரி 676, 5363, 6039]
நபிகள் நாயகம் ﷺ அவர்கள் தமது வீட்டில் என்ன செய்து கொண்டிருப்பார்கள் என்று ஆயிஷா (ரலி)யிடம் கேட்கப்பட்டது. அதற்கவர், தமது (கிழிந்த) ஆடையைத் தைப்பார்கள், (பழுதுபட்ட) தமது செருப்பைச் சரி செய்வார்கள், மற்ற ஆடவர்கள் தமது வீட்டில் செய்யும் எல்லா வேலைகளையும் செய்வார்கள் என்று விடையளித்தார். [முஸ்னத் அஹ்மத் 23756, 24176, 25039]
நபிகள் நாயகம் ﷺ அவர்கள் தமது தனிப்பட்ட வேலையைத் தாமே செய்து கொள்வார்கள் என்பதும், தமது மனைவியர் செய்யும் வேலைகளில் ஒத்தாசை செய்வார்கள் என்பதும் இவ்விரு நிகழ்ச்சிகளிலிருந்தும் தெரிகிறது.
மனைவியரின் வேலைகளில் ஒத்தாசையாக இருத்தல், காய்கறி நறுக்குதல், வீட்டைப் பெருக்கிச் சுத்தம் செய்தல் போன்ற வேலைகள் பெண்கள் மட்டுமே செய்ய வேண்டிய வேலைகள் என ஆண்களில் பலர் எண்ணுகின்றனர். இந்தப் பணிகளில் துணை செய்வது ஆண்மைக்கு இழுக்கு எனவும் நினைக்கின்றனர். ஆனால் நபிகள் நாயகம் ﷺ அவர்கள் வீட்டுப் பணிகள் அனைத்திலும் மனைவியருக்கு ஒத்தாசையாக இருந்துள்ளனர்.
அபீஸீனிய வீரர்கள் வீர விளையாட்டில் ஈடுபட்டிருந்த போது, நபிகள் நாயகத்தின் பின்னால் நின்று நானும் பார்த்துக் கொண்டிருப்பேன். நானாகத் திரும்பும் வரை அவர்கள் எனக்குத் துணை நிற்பார்கள் என்று ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார். [புகாரி 5190]
என்னுடைய விளையாட்டுத் தோழிகள் என்னுடன் விளையாடிக் கொண்டிருக்கும் போது நபிகள் நாயகம் ﷺ வருவார்கள். அவர்களைக் கண்டதும் எனது தோழிகள் மறைந்து கொள்வார்கள். என்னுடன் விளையாடுவதற்காக அவர்களை நபிகள் நாயகம் ﷺ அனுப்பி வைப்பார்கள் என்றும் ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார். [புகாரி 6130]
ஒரு பயணத்தில் சென்ற போது நானும் நபிகள் நாயகம் ﷺ அவர்களும் ஓட்டப் பந்தயம் வைத்தோம். அதில் நான் முந்தி விட்டேன். பின்னர் நான் உடல் பருமனாக ஆன போது மற்றொரு முறை நடந்த ஓட்டப் பந்தயத்தில் அவர்கள் என்னை முந்தி விட்டார்கள். அப்போது அதற்கு இது சரியாகி விட்டது என்று நபிகள் நாயகம் ﷺ கூறினார்கள். [அபூதாவூத் 2214]
நபிகள் நாயகம் ﷺ அவர்கள் தமது மனைவியை வாழ்க்கைத் துணைவியாகவும், தோழியாகவும் தான் நடத்தினார்களே தவிர அடிமையாகவோ, வேலைக்காரியாகவோ நடத்தவில்லை என்பதை இந்நிகழ்ச்சிகள் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.
【தொழுகையிலும் நாயகம் ﷺ அவர்களின் நற்குணம் 】
நீண்ட நேரம் தொழுகை நடத்த வேண்டும் என்ற எண்ணத்தில் தொழுகை நடத்த நிற்கிறேன். அப்போது பின்னால் நின்று தொழும் பெண்ணுடைய குழந்தையின் அழுகுரல் எனக்குக் கேட்கிறது. அக்குழந்தையின் தாய்க்குச் சிரமம் தரக் கூடாது என்பதற்காகத் தொழுகையைச் சுருக்கமாக முடித்துக் கொள்கிறேன் என்று நபிகள் நாயகம் ﷺ கூறினார்கள். [புகாரி 707, 708, 709, 710, 868]
【தன் பக்கத்து அண்டை வீட்டாரிடம் நாயகம் ﷺ அவர்களின் நற்குணம் 】
‘தன் பக்கத்து அண்டை வீட்டார் பசித்திருக்க தான் மட்டும் வயிறார உண்பவர் ஓர் இறைநம்பிக்கையாளராய் இருப்பதில்லை’ [மிஷ்காத்]
‘அபூதர்ரே! நீர் குழம்பு சமைத்தால் தண்ணீரை அதில் அதிகப்படுத்தும், உம் அண்டை வீட்டாரையும் சற்று கவனியும்’ [முஸ்லிம்]
இவ்வாறு ஜாதி மத பேதங்கள் கடந்து அண்டை வீட்டாராக இருக்கக்கூடிய எல்லோரிடத்திலும் மிகவும் இணக்கமாக இருக்கவேண்டும் என்பதை நபி(ஸல்) அவர்கள் பெரிதும் வலியுறுத்தினார்கள். அதனுடைய தாக்கம் எந்தளவுக்கு இருந்ததென்றால் அப்துல்லாஹ் இப்னு அம்ரு (ரலி) என்ற நபித்தோழரின் வீட்டில் ஒரு ஆடு அறுக்கப்பட்டது. அவர் வீட்டுக்கு வந்தவுடன் நமது அண்டை வீட்டில் உள்ள யூதருக்கு கொடுத்தீர்களா? என இரு முறை கேட்டுவிட்டு, “அண்டை வீட்டாரை எனது வாரிசாக அறிவித்து விடுவாரோ என்று நான் என்னும் அளவுக்கு ஜிப்ரீல் (அலை) எனக்கு வலியுறுத்திக்கொண்டே இருந்தார்” என்று நபி ﷺ அவர்கள் சொன்னதாகவும் கூறினார்கள். [திர்மிதீ]
அண்டை வீட்டாரோடு நபி ﷺ அவர்கள் நடந்துக் கொண்ட முறையைப் பார்த்தால் நிச்சயமாக ஆச்சரியப்படாமல் இருக்க முடியாது. ‘உமரே! (அண்டை வீட்டாராகிய) நம்மோடு நபி(ஸல்) அவர்கள் நடந்துக்கொண்ட முறையை நினைவில் கொள்ளுங்கள். அவர்களுக்கு வரும் அன்பளிப்புகளை நமக்கு அனுப்புவார்கள். நாம் பயன்படுத்திவிட்டு மீதமுள்ளதை அவர்களுக்கு அனுப்புவோம். அந்தளவுக்கு நம்மை நேசித்தார்கள்’ என்று அபூபக்கர்(ரலி) அவர்கள் கூறியிருக்கிறார்கள்.
【 நபி ﷺ அவர்களின் சிறப்புகள் சம்பந்தமாக தனி அத்தியாமே உள்ளன】
ஸஹீஹுல் புகாரியில் 61 ஆவது அத்தியாயத்தில் நபி(ஸல்) அவர்களின்) சிறப்புகள் சம்பந்தமாக ஒரு தனி அத்தியாமே உள்ளன.
ஸஹீஹ் முஸ்லிமில் 43. ஆவது அத்தியாயத்தில் நபிமார்களின் சிறப்புகள் சம்பந்தமாக ஒரு தனி அத்தியாமே உள்ளன.
அல்லாஹ் இறைத்தூதர் முஹம்மது (ﷺ) அவர்களை சங்கை செய்யும் முகமாக திருகுர்ஆனில் ஸூரத்து முஹம்மது(ஸல்) [47] என்ற ஒரு தனி அத்தியாயத்தை இறக்கியுள்ளான்.
✍🏻✍🏻நன்றியுரை:-
“ بَلِّغُوا عَنِّي وَلَوْ آيَةً، என்னிடமிருந்து ஒரேயொரு (சிறு) செய்தி கிடைத்தாலும் சரி, அதை(ப் பிறருக்கு) எடுத்துரையுங்கள். புகாரி 3461.