நிம்மதியை இழக்கச் செய்யும் பொறாமை குணம் 22-11-23, 24-11-2023

கடந்த வாரத்தில் நிம்மதியை எப்படி பெறுவது அதற்குண்டான வழிகள் என்ன நிம்மதியை இழக்கும் செயல்கள் என்ன என்பதில் முதலாவதாக பேராசையை பற்றி பார்த்தோம் இரண்டாவதாக நம்முடைய நிம்மதியை இழக்க செய்யக்கூடிய  செயல் என்னவென்றால் அது பொறாமையாக இருந்து கொண்டிருக்கின்றது

பொறாமை….

அல்லாமா ஸமர்கந்தீ (ரஹ்) அவர்கள் தமது நூலான தம்பீஹூல் ஃகாஃபிலீனில் இப்படிக் குறிப்பிடுவார்கள்..

வானத்திலே நடந்த முதல் பாவமும், பூமியில் நடந்த முதல் பாவமும் பொறாமை எனும் தீயகுணத்தால் தான்.

ஷைத்தான் ஆதம் (அலை) அவர்களுக்கு ஸஜ்தாச் செய்ய மறுத்ததும் பொறாமையால் தான்.

قَالَ أَنَا خَيْرٌ مِنْهُ خَلَقْتَنِي مِنْ نَارٍ وَخَلَقْتَهُ مِنْ طِينٍ ()

ஷைத்தான் இறைவனிடம் “ நான் அவரை விட உயர்ந்தவன் என்னை நெருப்பால் படைத்தாய், (ஆதமை) அவரை களிமண்ணால் படைத்தாய்” என்றான். ( அல்குர்ஆன்: 7:12 )

ஆதம் (அலை) அவர்களின் சந்ததிகளில் காபீல் ஹாபீலைக் கொன்றதும் பொறாமையால் தான்.


فَطَوَّعَتْ لَهُ نَفْسُهُ قَتْلَ أَخِيهِ فَقَتَلَهُ فَأَصْبَحَ مِنَ الْخَاسِرِينَ ()

“இறுதியில் தன்னுடைய சகோதரனைக் கொலை செய்யும்படி அவனுடைய மனம் அவனைத் தூண்டியது. அதனால் அவரை அவன் கொலை செய்தான். ஆதலால் அவன் பேரிழப்பிற்கு ஆளாகிவிட்டான்.”  ( அல்குர்ஆன்: 5:30 )

 اَمْ يَحْسُدُوْنَ النَّاسَ عَلٰى مَاۤ اٰتٰٮهُمُ اللّٰهُ مِنْ فَضْلِهٖ‌ فَقَدْ اٰتَيْنَاۤ اٰلَ اِبْرٰهِيْمَ الْـكِتٰبَ وَالْحِكْمَةَ وَاٰتَيْنٰهُمْ مُّلْكًا عَظِيْمًا‏
அல்லாஹ் தன் அருளினால் மனிதர்களுக்கு வழங்கியவற்றின்மீது இவர்கள் பொறாமை கொள்கின்றார்களா? இன்னும் நாம் நிச்சயமாக இப்ராஹீமின் சந்ததியினருக்கு வேதத்தையும், ஞானத்தையும் கொடுத்தோம்; அத்துடன் மாபெரும் அரசாங்கத்தையும் அவர்களுக்குக் கொடுத்தோம்.
(அல்குர்ஆன் : 4:54)
 
وَمِنْ شَرِّ حَاسِدٍ اِذَا حَسَدَ‏
பொறாமைக்காரன் பொறாமை கொள்ளும் போதுண்டாகும் தீங்கை விட்டும் (காவல் தேடுகிறேன்).  
(அல்குர்ஆன் : 113:5)

மனிதன் நாகரீக வளர்ச்சி அடைந்தாலும் அவன் படைக்கப்பட்ட காலத்தி­ருந்த தீய குணங்கள் இன்று வரை மாறாமல் தொடர்ந்து கொண்டுதான் வருகிறது .அதிலேயும் மிகுந்த நாசத்தை விளைவிக்கக் கூடிய ஒரு பண்பு தான் பொறாமை. இது தொன்றுதொட்டு நமது முன்னோர்களிடமிருந்து வந்து கொண்டிருக்கிறது. இதற்கு மதங்கள் மொழிகள் காலங்கள் வேறுபாடு கிடையாது.

அடுத்தவர் நன்றாய் வாழ்ந்தால்
அடுத்தவர் நல்ல உடை உடுத்தினால்
அடுத்தவர் உயரமாய் இருந்தால்
அடுத்தவர் கணவர் பொருத்தமாய் இருந்தால்
அடுத்த வீட்டு பெண் வசதியாய் இருந்தால்
பொறாமை
யார் எப்படி பொறாமைப்படுவது என்று விவஸ்தையே இல்லாமல் போய்விட்டது. 

முதலில் பொறாமையின் தன்மையை நாம் ஆராய முற்பட வேண்டும்.

ஒவ்வொரு மனிதனுக்கும் ஏதோ தான் 200 ஆண்டுகள் உடல் நலத்துடன் வாழப்போவதாகவும், அதனால் தான் நினைத்த காரியம் நடத்திக்காட்டி, தான் பெரியவன் என்று உலகத்தார் மூக்கின் மேல் விரல் வைக்குமாறு காட்டப் போகிறேன் என்று எண்ணத்தில் நான்தான் எல்லாரையும் விட சிறப்பாக இருக்க வேண்டும், என்னைவிட அதிக குணநலன்கள் உடையவனை எனக்கு பிடிக்காது. என் விருப்பத்துக்கு மாறாக நடப்பவர்களை வெறுக்கிறேன். அவர்களை எப்படியாவது கஷ்டப்பட வைத்து அதைக் கண்டு ஆனந்தம் அடையப்போகிறேன்! என்று மனக்கணக்குகள் போடுகிறான்.
இதில், அடுத்தவரைப் பார்த்து ஏங்குவதும் பெருமூச்சு விடுவதும் அவர்களது உயர்வு கண்டு உள்ளம் புழுங்குவதும் பொறாமை எனப்படுகிறது.

பெரும்பாலும் இந்த பொறாமை தனக்கு நிகரான ஒருவர் மீதே எற்படுகிறது. பிச்சைக்காரன் ஒருவன் பணக்காரணைப் பார்த்து, ‘அவ்வளவு செல்வம் நம்மிடம் இல்லையே!’ என்று பொறாமைப்படுவதில்லை. அதே நேரம், தன்னுடன் ஒரே மரத்தடியில் உறங்கும் சக பிச்சைக்காரனுக்கு, தன்னை விட அதிகம் பிச்சை கிடைத்துவிட்டால், அவன் மேல் பொறாமை வருகிறது.

பொறாமை கொள்வது:

அருளாளன் அல்லாஹ்வின் அருள் மனிதருக்கு மனிதர் வித்தியாசமானது. அறிவு, புலமை, செல்வம், மதிப்பு, செல்வாக்கு, அந்தஸ்து, பதவி என எல்லாமே அளவில் வித்தியாசமானவை. இது அல்லாஹ்வின் ஏற்பாடு. அது மாறாதது. மாற்ற முடியாதது.

 எனவே ஒவ்வொரு மனிதனும் தனக்கு கிடைத்துள்ள அருட்கொடைகளை பெரிதாக மதித்து, திருப்தியுற்று, நன்றி செலுத்தி வாழ வேண்டும்.
தனது அண்டை வீட்டார் நலமுடன் வாழ்வதை விரும்ப வேண்டிய முஸ்லிம், அவர்கள் மீது பொறாமை கொண்டு வாழ்வதைப் பார்க்கின்றோம். அன்டை வீட்டார்களின் பிள்ளைகள் கல்வியில் முன்னேறுவது, அவர்களுக்குத் தொழில் கிடைப்பது, பக்கத்து வீட்டுப் பெண்ணுக்கு நல்ல மாப்பிள்ளை கிடைப்பது, அன்டை வீட்டார்களின் பொருளாதார வளர்ச்சி என அனைத்தையும் பொறாமைக் கண் கொண்டு நோக்கும் நிலை நீடிக்கின்றது.

ஈமானும், பொறாமையும் ஒரு உள்ளத்தில் ஒன்றாக இருக்க முடியாது. சிலர் எல்லை மீறி அன்டை வீட்டாருக்குக் கிடைக்கும் நன்மைகளைக் கூட கெடுக்க முற்படுவர். மற்றும் சிலர் கோல் சொல்லித் திருமணங்களையும், கொடுக்கல்-வாங்கல்களையும் தடுத்து விடுவர். 

பொறாமை கொள்வதும், அதன் அடிப்படையில் செயற்படுவதும் ஹறாமாகும். 
எனவே பொறாமையைத் தவிர்த்தல் வேண்டும். அதிலும் குறிப்பாக அன்டை வீட்டார்களின் மீது பொறாமை கொள்வது கடுமையான ஹறாமாகும்.

அல்-குர்ஆன் கூறுகிறது, ‘இன்னும் அல்லாஹ் உங்களில் சிலரைவிட எதனைக் கொண்டு மேன்மை யாக்கி வைத்துள்ளானோ அதனை நீங்கள் ஆசைப்படாதீர்கள்!’ (04 : 32)

ஒருவரிடமுள்ள அருட்கொடை அவரி டமிருந்து இல்லாது போக வேண்டுமென ஆவல் கொள்வது பொறாமையாகும். தன்னிட முள்ள இறை அருட் கொடைகளை குறைத்து மதிப்பிடுவது, பிறரிடமுள்ள அருட்கொடை மீது ஆசை வைப்பது, பகைமை, விவாதம், பெருமை, பதவி மோகம்,, தலைமைத்துவ வன்மூச்சு, கெட்ட எண்ணம், கையாலாகாத்தனம் போன்றவை மனித உள்ளங்களில் இலகுவில் பொறாமையை விதைத்து விடுகின்றன.

வயிற்றெரிச்சல் ஒரு பொல்லாத நோய். ஆன்மீக வறுமையின் வெளிப்பாடு. இஸ்லாம் இதனைத் தடுத்துள்ளது. மனிதன் படாத பாடுபட்டு புரிகின்ற நல்ல காரியங்களையும் கூட அழித்தொழித்து விடும். பின்வரும் ஹதீஸ் இதனை விளக்குகிறது.
‘பொறாமையைத் தவிர்ந்து கொள்ளுங்கள். ஏனெனில் நெருப்பு விறகைத் தின்பது போல் நிச்சயமாக பொறாமை நற் செயல்களைத் தின்று விடுகிறது.’ (அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரழியல்லாஹு அன்ஹ்), நூல் : ஸ¤னன் அபீ தாவூத்)

பொறாமையின் இன்னொரு பக்கம். ‘நான்’ என்ற அகந்தை,
வாழ்ந்தவர் கோடி; மறைந்தர் கோடி; மக்கள் மனதில் நின்றவர் யார்?
அகந்தைதான் அழிவுக்கு அடிக்கல் என்று எத்தனையோ பேர் உலகில் தோன்றி பாடங்கள் சொல்லிக் கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால் பாவம் மனிதனின் மனம் திரும்பத் திரும்ப தவறுகள் இழைத்துக் கொண்டே இருக்கிறது.

இந்த பொறாமை தான் உயர்ந்த நிலையில் இருந்த ஒருவனை மிகவும் கேவலமானவனாக மாற்றியது,

சகோதரத்துவத்தோடும், வாஞ்சையோடும் வாழவேண்டிய ஒருவனை கொலைக் குற்றவாளியாகவும் மாற்றியது.

ஆதலால் தான் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் ”அருட்கொடைகள் நிரப்பமாக வழங்கப்பட்டிருப்பவரை பார்க்காதீர்கள்” என்று எச்சரிக்கை செய்தார்கள்.

இன்று பெரும்பாலானவர்கள் பிறரின் வளங்களையும், நிஃமத்களையும் கண்டு பொறாமை கொள்கின்றனர். எனவே, அவர்களுக்கு மனநிம்மதி கிடைப்பதில்லை.

عن أبي هريرة -رضي الله عنه- قال‏:‏ قال رسول الله -صلى الله عليه وسلم-‏:‏ ‏‏(انظروا إلى من هو أسفل منكم، ولا تنظروا إلى من هو فوقكم، فهو أجدر أن لا تزدروا نعمة الله عليكم)‏ ‏ متفق عليه‏ .

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “(செல்வம், உலக வசதி வாய்ப்புகள், செல்வாக்கு ஆகியவற்றில்) உங்களுக்குக் கீழிருப்பவர்களைப் பாருங்கள். (உலகாதாய நோக்கங்களின் அடிப்படையில் பார்க்கும் போது) உங்களை விட மேலிருப்பவர்களைப் பார்க்காதீர்கள். ஏனெனில், அல்லாஹ் உங்களுக்கு அருளியிருக்கிற அருட்கொடைகள் உங்களுடைய பார்வையில் மதிப்பிழந்து போய் விடாமல் இருப்பதற்கு இந்த நடத்தையே அதிகப் பொருத்தமானதாகும்” என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள். ( நூல்: புகாரி, முஸ்லிம் )

பிறரின் வளங்களைப் பொறாமைக் கண் கொண்டு பார்ப்பதால் இறைவனுக்கு நன்றி செலுத்துகிற உணர்வு போய், மனக்குறைகளும், மனக்கசப்புகளும் ஏற்பட்டு மனநிம்மதியும், மனஅமைதியும் பறிபோய்விடும்.

இந்த மாதிரி தருணங்களில் அல்லாஹ் நமக்கு ஒரேயொரு வாய்ப்பைத் தந்திருக்கின்றான்.

وَاسْأَلُوا اللَّهَ مِنْ فَضْلِهِ

“அல்லாஹ்விடம் அவனுடைய அருள்வளங்களைக் கேட்டுப் பெற்றுக் கொள்ளுங்கள்”. ( அல்குர்ஆன்: 4:32 )

நபித்தோழர்களின் வாழ்க்கையை வாசித்துப் பார்க்கும் வாய்ப்பு கிடைப்போர் வாசித்துப் பார்த்து விட்டு வியப்பின் விளிம்பிற்கே வந்து விடுவார்கள்.

அவ்வளவு ஆச்சர்யமான வாழ்வை அவர்கள் வாழ்ந்து சென்றிருக்கின்றார்கள். 


லட்சத்திற்கும் மேற்பட்ட நபித்தோழர்கள் இருக்க, ”பத்து தோழர்களை பெயர் குறிப்பிட்டு இவர் சுவனத்தில் இருப்பார், இவர் சுவனத்தில் இருப்பார்” என்று பெருமானார் {ஸல்} அவர்கள் திருவாய் மலர்ந்த போது…

ஏனைய நபித்தோழர்களில் ஒருவர் கூட “அல்லாஹ்வின் தூதரே! நான் இந்த மார்க்கத்திற்காக எவ்வளவு தியாகங்களைச் செய்திருக்கின்றேன், எவ்வளவு இழப்புகளைச் சந்தித்திருக்கின்றேன், நான் எவ்வளவு இபாதத்களைச் செய்திருக்கின்றேன், நான் இன்னின்னவரை விட எதில் குறைந்து போனேன், ஏன் என்னைக் குறித்தும் நீங்கள் சோபனம் சொல்லவில்லை என்று வினா எழுப்ப வில்லையே?”

எந்த ஒரு நபித்தோழரும் வேறெந்த நபித்தோழருக்கு வழங்கப்பட்டிருந்த எந்த ஒன்றைக் கண்டும் கண நிமிடம் கூட பொறாமை கொண்டதாகவோ, பேராசை கொண்டதாகவோ வரலாற்றின் எந்த ஒருப் பக்கத்திலும் நாம் பார்த்திட முடியாது.

அப்படி அப்பழுக்கற்ற, தூய்மையான ஆச்சர்யம் மிக்க வாழ்க்கையை அவர்கள் வாழ்ந்து சென்றிருக்கின்றார்கள்.

பொறாமைக் கண் மிகக் கெட்டது.

 இதனால் தான் பொறாமைக்காரனிடமிருந்து பாதுகாப்புத் தேடுமாறு ரஸூல் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை அல்லாஹ் பணித்தான். ‘மேலும் பொறாமைக்காரனின் தீங்கை விட்டும் அவன் பொறாமைகொள்ளும் போது (நான் பாதுகாவல்) கோருகிறேன்)’ (அல்-குர்ஆன் – 113 : 05)

‘அல்லது மனிதர்களை அல்லாஹ் தன் அருளிலிருந்து அவர்களுக்கு வழங்கியுள்ளவற்றின் மீது அவர்கள் பொறாமைப்படுகிறார்களா?’ (அல்-குர்ஆன் – 04 : 04) என அல்லாஹ் கேட்பது இந்த வகையில்தான்.

அண்ணல் நபி (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ‘மேலும் நீங்கள் ஒருவருக்கொருவர் பொறாமைகொள்ள வேண்டாம்’ என்றார்கள். (அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரழியல்லாஹு அன்ஹ்) நூல் : சஹீஹ் அல் – புகாரி)

பிறரின் முன்னேற்றத்தைக் கண்டு வயிறெரிவோர் பலர் உள்ளனர். அவர் அந்நிலையை எய்துவதற்கு என்னென்ன பாடுகள் பட்டிருப்பார், எப்படி எப்படியெல்லாம் முயற்சி செய்திருப்பார் என ஒரு கணமேனும் சிந்தித்துப் பார்ப்பதில்லை. தனது முன்னேற்றத்துக்காக முயன்றிடுவதுமில்லை. சோம்பேறியாக, இருந்து கொண்டு அடுத்தவரின் வளர்ச்சியை மனப்புழுக்கத்துடன் பார்ப்பது இவர்களின் வாடிக்கை.
அடுத்தவரின் உயர்வை,  பொறுத்துக்கொள்ளாத சிலர் அவரின் தொடர் வளர்ச்சியைத் தடுக்கவும், அவரின் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டைப் போடவும், அவரது வழியில் குறுக்கே நிற்கவும் தயங்குவதில்லை. இன்னும் ஒரு படி மேலே சென்று அவரின் உடமைகளுக்கு, உடம்புக்கு, உயிருக்கு, நற்பெயருக்கு உலைவைத்தும் விடுகின்றனர். இவை பொறாமையின் அதி உச்ச தீய விளைவுகள் ஆகும்.

நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களுக்கு முன் சென்ற சமுதாயத்தவர்களுக்கு ஏற்பட்டுள்ள பொறாமை வெறுப்பு என்ற நோய் உங்களுக்கும் பரவியுள்ளது. வெறுப்பு என்பது மக்கி விடக்கூடியது. நான் முடியை மக்குக்குவதை சொல்லவில்லை மார்க்கத்தை மக்க செய்து விடும். முஹம்மதின் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக! ஒருவரை ஒருவர் நேசம் கொள்கின்றவரை நீங்கள் நம்பிக்கையாளராகமாட்டீர்கள். எதை நீங்கள் செய்தால் ஒருவருக்கொருவர் நேசம் கொள்வீர்களோ அதை பற்றி உங்களுக்கு அறிவிக்கட்டுமா? உங்களுக்கிடையே ஸலாம் சொல்லுவதை பரப்புங்கள்!
அறிவிப்பவர்:அஸ்ஸ‚பைர்(ர­)
நூல் : அஹ்மது 1338

.இந்த பொறாமையையோடு வெறுப்பையும் சேர்த்து ஒரு நோயாகவும்  தலையில் உள்ள முடிகளை ம­க்கக்கூடியதை போன்று மார்க்கத்தை அழித்துவடக்கூடியதாக கூறுகிறார்கள்.பொறாமை மனதில் இருந்தால் வெறுப்பும் சேர்ந்து வந்துவிடும். இதனால் தான் நண்பர்கள் என்ற உறவு முறிகிறது. மக்களுக்கு நற்பணியாற்றிய இயக்கங்கள் காணமால் போகிறது. ஒரு நாட்டில் உள்ள இயற்கை வளத்தை பார்த்து பொறாமைப்பட்டு அந்நாட்டை அபகரிப்பதற்காக பக்கத்து நாடு போர் தொடுக்கிறது. கடந்த  காலங்களில் உலகை உலுக்கிய உலகப்போர்கள் இதனால் தான் ஏற்பட்டு பல்லாயிரக்கணக்கான மனித உயிர்கள் இறப்பதற்கு காரணமாக அமைந்தது.   இந்த பொறாமை என்பது பிரிவினை வெறுப்பை ஏற்படுத்தும் 

எப்போது பொறாமை கொள்வது கூடும்?

  நபிகள் நாயகம் (ஸல்) அவாகள் சில விஷயங்களில் பொறாமை பட அனுமதியளித்துள்ளார்களே என்று நம் மனதிற்குள் கேள்வி எழலாம்.
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இரண்டு விஷயங்களில் தவிர வேறெதிலும் பொறாமை கொள்வது அனுமதி இல்லை. மார்க்க ஞானத்தை ஒருவருக்கு அல்லாஹ் வழங்குகிறான். அதனடிப்படையில் இரவு பகலாக அவர் நடக்கிறார். அல்லாஹ் செல்வத்தை வழங்கிய ஒருவர் அதனை இரவு பகலாக( அல்லாஹ்வின் பாதையில்) செலவழிக்கிறார்.(இவர்களை பார்த்து பொறாமை கொள்ளலாம்)
அறிவிப்பவர்:இப்னுஉமர்(ர­)   நூல்: புகாரி 5025

இதில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பொறாமை கொள்வது அனுமதியைப் போன்று கூறியுள்ளார்கள். அது போல பொறாமையைக் குறிக்கின்ற ஹஸத் என்ற வார்த்தைக்கு மற்றவர்களுக்குள்ள சிறப்பை அவர்களிடமிருந்து நீக்குவதற்கு நாடுவது என்று ­ஸானுல் அரபு போன்ற ஆதாரப்பூர்வமான அகராதி நூற்களில் கூறப்பட்டுள்ளது.
ஆனால் நபியவர்கள் இந்த பொறாமையை கூறவில்லை. நன்மையான காரியங்களில் போட்டி போட்டு நாமும் அந்த நன்மையை செய்ய வேண்டும் என்பதை தான் கூறுகிறார்கள். இது இன்னொரு அறிவிப்பில் (புகாரி 5026) மார்க்க ஞானம்  செல்வம் வழங்கப்பட்டவர் செய்யும் நற்செயல்களை கேள்விபட்ட அவருடைய அண்டை வீட்டுக்காரர் இவரைப் போன்று நமக்கும் இருந்தால் நாம் இன்னென்ன நன்மைகள் எல்லாம் செய்திருக்கலாமே என்று நன்மையான காரியத்திற்கு ஆதங்கப்படக்கூடியவர். என்று  வருகிறது.
இதைத் தான் நபித்தோழர்களின் வாழ்க்கையில் பல சம்பவங்களில் தெரிந்துகொள்ளலாம்.

முஹாஜரின்களில் ஏழ்மையானவர்கள் நபி(ஸல்) அவர்களிடத்தில் வந்து (அல்லாஹ்வின் தூதரே!) செல்வந்தர்கள் சென்று விட்டார்கள் என்றார்கள் அதற்கு நபி(ஸல்) அவர்கள் என்ன விஷயம் என்று அவர்களிடத்தில் கேட்டார்கள். அதற்கு அவர்கள் சொன்னார்கள் அவர்கள் தொழுவதைப் போன்று நோன்பு நோற்பதைப் போன்று நாங்ளும் தொழுகிறோம் நோன்பு வைக்கிறோம். ஆனால் அவர்கள் தர்மம் செய்கிறார்கள். அடிமையை விடுதலை செய்கிறார்கள் எங்களால் தர்மம் செய்யவோ அடிமையை விடுதலை செய்யவோ முடியவில்லை. அதற்கு நபி(ஸல்) அவர்கள் உங்களை (நன்மையால்) முந்தியவர்களை அடைவதற்கும் உங்களுக்குப் பின்னால் வருபவர்களை நீங்கள் முந்துவதற்கும் நீங்கள் செய்ததைப் போன்று அதனை செய்பவரைத் தவிர வேறு யாரும் உங்களை விட சிறந்தவராக இருக்கமாட்டாரே அந்த விஷயத்தை உங்களுக்கு சொல்லட்டுமா?அதற்கு அவர்கள் ஆம் சொல்லுங்கள்  அல்லாஹ்வின் தூதரே என்றார்கள்.ஒவ்வொரு தொழுகைக்குப் பின்பும் ஸ‚ப்ஹானல்லாஹ் 33 அல்ஹம்து ­ல்லாஹ் 33 அல்லாஹ் அக்பர் 33 தடவை சொல்லுங்கள் என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர்:அபூ ஹ‚ரைரா(ர­) நூல்:முஸ்­ம்936 (மற்ற அறிவிப்புகளில் வெவ்வேறு எண்ணிக்கையுடைய செய்திகளும் ஆதரப்பூர்வமாகவருகிறது)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்தில் நபித்தோழர்கள் பதவிக்கோ பொருளுக்கோ போட்டி போடவில்லை. நாம் ஏழ்மைநிலையில் இருப்பதனால் பொருளாதாரரீதியான நன்மைகளை செய்ய முடியவில்லையே ஆனால் பணக்காரர்கள் வணக்கவழிபாட்டிலும் பொருளாதாரத்திலும் சேர்த்து இரட்டிப்பு கூ­களை அடைகிறார்களே என்று அவர்கள் மீது பொறாமை கொள்ளாமல் கவலைப்பட்டு தானும் அந்த நன்மைகளை அடையவேண்டும் என்ற நோக்கில் கேட்கிறார்கள். இப்படி தான் அனைத்து நபித்தோழர்களின் வாழ்க்கையும் இருந்தது. இது போன்ற அவர்களின் வாழ்நாளில் ஏராளமான சம்பவங்களை காணலாம்.

இப்படியில்லமால் அல்லாஹ்வின் பாதையில் செயலாற்றுவதற்காக ஒன்று சேர்ந்திருக்கக்கூடிய நமது ஸ்பானத்தில் ஒருவர் பொருளாதார உதவிகளை மற்றவர்களைவிடவும் அதிகமாக செய்வார்.ஒருவர் அறிவு சார்ந்த உதவிகளை செய்வார்.இன்னொருவர் உடல் உழைப்பை செய்வார். இதனால் மற்றவர்கள் பொறாமை கொண்டு இவருக்கு எப்படியாவது அவப்பெயரை ஏற்படுத்தி இவரை நீக்கி விட்டு நாம் அந்த இடத்தை நிரப்ப வேண்டும் என்று நினைக்கக்கூடாது.  இது தான் ஷைத்தான் தூக்கியெறியப்பட்டதற்கான காரணம்
அதிகபட்சம் 60 வருடங்கள் வாழகூடி உலகத்தில் அறிவு பொருளாதாரம் குறைந்திருந்தால் என்ன? இங்கே என்ன நடந்தாலும் மறு உலகத்தில் தான் நாம் நிலையாக இருக்கப்போகிறோம் என்ற எண்ணம் நமக்கு வர வேண்டும்.
இன்னும் அல்லாஹ் தான் விரும்பியவருக்கு அருட்கொடையை வழங்குவதாக கூறுகிறான்.அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்:
ذٰ لِكَ فَضْلُ اللّٰهِ يُؤْتِيْهِ مَنْ يَّشَآءُ‌ وَاللّٰهُ وَاسِعٌ عَلِيْمٌ‏
 இது அல்லாஹ்வின் அருட்கொடையாகும்; இதை அவன் நாடியவருக்குக் கொடுக்கின்றான்; அல்லாஹ் மிகவும் விசாலமானவனும் (எல்லாம்) நன்கறிந்தவனுமாக இருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 5:54)
  

இந்த அருட்கொடை வழங்குதல் அல்லாஹ்வின் அதிகாரம். இதை பார்த்து பொறாமை கொண்டால் அல்லாஹ்வின் அதிகாரத்தில் தலையிடுவதுபோன்றுதாகிவிடும்.
இந்த பொறாமை நம் உள்ளத்தில் குடி கொள்ளாமல் இருப்பதற்கு அல்லாஹ் ஒரு பிராத்தனையை கற்றுத் தருகிறான்

وَالَّذِيْنَ جَآءُوْ مِنْ بَعْدِهِمْ يَقُوْلُوْنَ رَبَّنَا اغْفِرْ لَـنَا وَلِاِخْوَانِنَا الَّذِيْنَ سَبَقُوْنَا بِالْاِيْمَانِ وَلَا تَجْعَلْ فِىْ قُلُوْبِنَا غِلًّا لِّلَّذِيْنَ اٰمَنُوْا رَبَّنَاۤ اِنَّكَ رَءُوْفٌ رَّحِيْمٌ‏
அவர்களுக்குப்பின் குடியேறியவர்களுக்கும் (இதில் பங்குண்டு). அவர்கள் “எங்கள் இறைவனே! எங்களுக்கும், ஈமான் கொள்வதில் எங்களுக்கு முந்தியவர்களான எங்கள் சகோதரர்களுக்கும் மன்னிப்பு அருள்வாயாக; அன்றியும் ஈமான் கொண்டவர்களைப் பற்றி எங்களுடைய இதயங்களில் பகையை ஆக்காதிருப்பாயாக! எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ மிக்க இரக்கமுடையவன்; கிருபை மிக்கவன்” என்றும் (பிரார்த்தித்துக்) கூறுவர்.
(அல்குர்ஆன் : 59:10)



இது நபித்தோழர்கள் செய்த பிராத்தனையாக குறிப்பிடுகிறான்.
அல்லாஹவின் அருட்கொடை வழங்கப்பட்டவர்கள் பொறாமைக்காரர்களின் தீங்கை விட்டும் பாதுகாவல் தேடும் படியும் அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்.
ومن شر حاسد اذا حسد
பொறாமைகாரன் பொறாமை கொள்ளும் போது ஏற்படும் தீங்கை விட்டும் பாதுகாவல் தேடுகிறேன்.  (அல் குர்ஆன் 113:5)

அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்
(முஹம்மதே!) சொல்வீராக உமது இறைவன் நாடியதை தவிர வேறொன்றும் எங்களுக்கு அணுகாது.
(அல் குர்ஆன் 9:51)
எனவே நன்மையும் தீமையும் அல்லாஹ்வின் புறத்தில் வருகிறது. என்று இருக்கும் போது யாரும் நினைத்தாலும் எந்த தீங்கும் நம்மையடையாது.  இத்தகைய பொறாமை எண்ணத்தை நம் உள்ளத்தில் அகற்றி ஈருலுகிலும் நன்மையடைவோமாக

இந்தப் பொறாமை சமுதாயத்தைச் சீரழிக்கும் கொடிய நோயாகவும் இருக்கிறது. அன்பு கொண்டு பழக முடியாமல், மனிதர்களுக்கிடையே குறுக்குச் சுவர்களை உண்டு பண்ணுகிறது.

பஞ்சுக்கள் வைத்த தீ புகைந்து எரிவது போல், நெஞ்சுக்குள் பொறாமை புகைந்து எரிகிறது.

நன்றாகச் சாப்பிட்டு,நன்றாக உடுத்திக்கொண்டு,கண்ணுக்கு குளிர்ச்சியாக வாழ்பவரைக் காணும்போதெல்லாம், ‘இவனுக்கு வந்த வாழ்வைப் பார்த்தாயா?’ என்று பெட்டிப்பாம்பாக பெருமூச்சு விட்டு, விட்டு இளைத்துப் போகிறான் பொறாமைக்காரன்!

இரவு-பகல் பாராமல் உழைத்து எவ்வளவோ சுகங்களைத் தியாகம் செய்து, ஒருவன் உயர்கிறான். ஆனாலும் அவனது உழைப்பு அவனை உயர்த்தியதாக எத்தனை பேர் பேசிக் கொள்கி றார்கள்?

அவனுக்கு ஏதோ புதையல் கிடைத்து விட்டது என்று நம்புகிறார்கள்.தகாத வழியில் சம்பாதிப்பதாகக் கிசுகிசுக்கிறார்கள்.

 வியாபாரி ஒருவர், சக வியாபாரிகளைப் புகழ்ந்து அவரின் உண்டா?

ஒரு தொழிலாளி சக தொழிலாளியை புகழ்ந்ததுண்டா?

ஒரு பள்ளிக்கூடம் மற்ற பள்ளிக்கூடங்களை புகழ்ந்ததுண்டா ?
இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்

இவையெல்லாம் இங்கே அபூர்வம். பொறாமை கொண்ட உலகில், எவரும் எவரையும் போற்றுவது இல்லை. அதனால் தான்.. மிகச் சிறந்த நபருக்கும் கூட அவர் இறந்த பிறகே அங்கீகாரம் கொடுக்கக்கூடியதாக பல ஊர்கள் அமைந்துள்ளன.

வாழும்போது ஒருவனை பொறாமை கொண்டு புறம் பேசும் ஊர்... அவன் மரணித்த பிறகு அவனது புகழைப் பேசுகிறது.

இத்தகைய குணமிருந்தால், அதை விட்டுவிட வேண்டும். இதயம் அன்பினால், அமைதியும் நிம்மதியும் அடையும். அந்த அமைதியும் நிம்மதியும் உள்ள மனமே ஆன்மீக வாழ்க்கைக்கு ஏற்றது.

பொறாமை எனும் அழுக்கு மட்டும் மனதில் இல்லையெனில் மனம், மேகம் போல மெல்லியதாக மிதக்கும், பொறாமைக்காரனின் மனம், புகை கொண்ட வீடாக இருக்கிறது. 

இந்த உலக வாழ்க்கை இன்பமாகத் தோன்ற வேண்டும் எனில், பொறாமையை அழிக்க முயற்சிக்க வேண்டும்.

பொறாமைக்காரனின் வாழ்க்கை உடுப்பதற்கும் உண்பதற்கும் கூட முடியாத வறுமையில் அழியும் என்று வள்ளுவர் எச்சரித்த வரிகள் இங்கே கவனிக்க தக்கவை

பொறுமை கொள்பவரது வாழ்க்கையை அதன் சிறப்பை நினைத்துப் பார்ப்பதன் மூலம்... பொறாமை குறையும். இந்த உலகில் எது எது சிறப்பானதாக கருதப்படுகிறதோ, அவை அனைத்தும் நிலையில்லாதது தான்.

அழகு- உடல் விட்டு உடல் தாவி விடும். 
செல்வம்- ஆள் விட்டு ஆள் மாறி விடும். 
ஆம், புதைத்த மய்யத் மக்கிப் போகும் முன்பே, அடுத்த மய்யத் அந்த இடத்தில் புதைக்கும் இந்த உலகில், எதுவும் நிலையில்லை!

ஆக... நிலையற்ற செல்வங்களைக் கண்டு ஏங்குவதே அறியாமைதான்.

 இதில் அந்தச் செல்வம் அடுத்தவனுக்குக் கிடைத்து விடக் கூடாது என்று நினைப்பவன் அறியாமையின் உச்சத்துக்கே செல்கிறான். எனவே பொறாமை எனும் தீய குணத்தை முற்றிலும் அகற்ற வேண்டும் பொறாமைக்காரனை இறைவன் அழிப்பதில்லை. அவனது பொறாமையே அவனை அழித்துவிடும்!

நாம் அடுத்தவரைப் போல் தூண்டில் வாங்கலாம். நாமும் அதே நதியில் தூண்டில் வீசலாம். ஆனால், அந்தத் தூண்டிலில்... மீன் விழுவதும் விழாததும் உங்கள் கையில் இல்லை. படைத்த இறைவன் கையில் உள்ளதைப் புரிந்து கொள்வோம்.

அனஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்த போது சொர்க்கவாசிகளில் ஒருவர் இப்போது உங்களிடம் வருவார்! என்று கூறினார்கள். அப்போது அன்சாரித் தோழர் ஒருவர் தாடியில் உளுச் செய்த தண்ணீர் வடிந்து கொண்டிருக்க, இடது கையில் இரு செருப்புக்களையும் பிடித்தவராக வருகை தந்தார். மறுநாள் நபி (ஸல்) அவர்கள், இப்போது சொர்க்கவாசிகளில் ஒருவர் உங்களிடம் வருவார்! என்று கூறினார்கள். அப்போதும் அதே மனிதர் அதே தோற்றத்தில் வந்தார். அதற்கு அடுத்த நாளும் நபி (ஸல்) அவர்கள், இப்போது சொர்க்கவாசிகளில் ஒருவர் உங்களிடம் வருவார்! என்று கூறினார்கள். அப்போதும் அதே மனிதர் அதே தோற்றத்திலேயே வருகை தந்தார். நபி (ஸல்) அவர்கள் எழுந்து சென்றதும் அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு ஆஸ் (ரலி) அவர்கள் அம்மனிதரை பின் தொடர்ந்து சென்று அவரிடம், எனது தந்தையுடன் ஏற்பட்ட ஒரு பிரச்சினையின் காரணமாக அவரிடத்தில் மூன்று நாட்கள் தங்கமாட்டேன் என சத்தியம் செய்துவிட்டேன். எனவே அந்த நாட்களில் உங்களுடன் தங்க அனுமதியளித்தால் அதனை நான் நிறைவேற்றிவிடுவேன் என்று கூறினார். அதற்கவர் சம்மதம் தெரிவித்தார். ஒரு இரவோ, அல்லது மூன்று இரவுகளோ அவருடன் தங்கி அவரைக் கவனித்த அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) அவர்கள் அவரைப் பற்றிக் கூறும்போது,

அவர் இரவு தொழுகையை நிறைவேற்றியதாகத் தெரியவில்லை. ஆனால் படுக்கையில் புரண்டு படுக்கும் போதும் தூக்கத்திலிருந்து விழிக்கும் போதும் தக்பீர் மற்றும் திக்ர் செய்து கொள்வார். பிறகு ஃபஜ்ர் தொழுகைக்காக எழுந்து விடுவார். மேலும் நல்லவற்றைத் தவிர வேறு எதையும் அவர் பேச நான் கேட்கவில்லை. இவ்வாறு மூன்று இரவுகள் கழிந்த பிறகு நான் அவருடைய அமல்களை மிகவும் குறைவாக மதிப்பிடும் நிலைக்கு வந்துவிட்டேன். அப்போது நான் அவரிடம், அல்லாஹ்வின் அடிமையே! நிச்சயமாக எனக்கும் எனது தந்தைக்கும் மத்தியில் கோபத்தால் பிளவு ஏற்படும் அளவுக்கு எந்தப் பிரச்சினையும் நிகழவில்லை. நபி (ஸல்) அவர்கள் இப்போது சொர்க்கவாசிகளில் ஒருவர் உங்களிடம் வருவார்! என்று மூன்று தடவை உங்களைப் பற்றி கூறக் கேட்டேன். அந்த மூன்று தடவைகளும் நீங்கள்தான் வருகை தந்தீர்கள்! எனவே உங்களுடன் தங்கியிருந்து உங்கள் அமல்களை பார்த்து அதனைப் பின்பற்ற விரும்பினேன். நான் கண்டவரை நீங்கள் பெரிய அமல் எதுவும் செய்ததாகத் தெரியவில்லை. அப்படியிருக்க, நபி (ஸல்) அவர்கள் உங்களைப் பற்றி இவ்வாறு கூறும் அளவிற்கு உம்மை உயர்த்தியது எது? என்று அவரிடம் கேட்டேன். அதற்கவர், நீர் பார்த்தவைகளைத் தவிர வேறு எதனையும் நான் செய்யவில்லை! என்று கூறினார். இந்நிலையில் நான் அவரிடமிருந்து விடைபெற்றேன். நான் சிறிது தூரம் வந்த பிறகு அவர் என்னை அழைத்து, நீர் பார்த்தவைகளைத் தவிர வேறு எதனையும் நான் செய்யவில்லை. அதனுடன், எந்த முஸ்லிமுக்கும் மோசடி செய்ய நினைக்கமாட்டேன். மேலும் அல்லாஹ் அவர்களுக்கு வழங்கிய அருட்கொடைகள் பற்றி நான் பொறாமை கொள்ளவும் மாட்டேன் என்றார். அப்போது, இவைகள்தான் உம்மை அந்த அளவிற்கு உயர்த்தி விட்டது. இதனை செயல்படுத்த முடியாதவர்களாகத்தான் நாங்கள் உள்ளோம்! என அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் : அனஸ் -ரலி, நூற்கள் : அஹ்மத் 12236, நஸாயீ)


أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَابِ الْفِيلِ ﴿١﴾ أَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِي تَضْلِيلٍ ﴿٢﴾ وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ ﴿٣﴾ تَرْمِيهِم بِحِجَارَةٍ مِّن سِجِّيلٍ ﴿٤﴾ فَجَعَلَهُمْ كَعَصْفٍ مَّأْكُولٍ
1.யானை(ப்படை)க்காரர்களை உம் இறைவன் என்ன செய்தான் என்பதை நீர் பார்க்க வில்லையா? 2.அவர்களுடைய சூழ்சியை அவன் பாழாக்கி விடவில்லையா? 3.மேலும், அவர்கள் மீது பறவைகளைக் கூட்டங்கூட்டமாக அவன் அனுப்பினான். 4.சுடப்பட்ட சிறு கற்களை அவர்கள் மீது அவை எறிந்தன. 5.அதனால், அவர்களை மென்று தின்னப்பட்ட வைக்கோலைப்போல் அவன் ஆக்கி விட்டான்.

  யானைப்படை அழிந்த வரலாறு :-

   நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறப்பதற்குக் கொஞ்ச காலத்திற்கு முன், அப்ரஹா என்ற பெயருள்ள அரசன் மக்காவிற்கு கிழக்கிலுள்ள எமன் நாட்டில் ஆட்சி செய்து வந்தான். இயற்கையில் அவன் துற்குணமுள்ளவன். மக்காவிலுள்ள  கஃபாவானது  அரபியர்களிடம்  விசேஷ மதிப்பு  பெற்றிருந்தது  பற்றி அவன் பொறாமை கொண்டு தன் நாட்டின் தலைநகர் ஸன்ஆ விலும் ஒரு பெரிய கோவிலை கட்டினான். மக்காவிற்குச் ஹஜ்ஜு செய்யக் கூடாதென்றும் தன்னுடைய கோவிலுக்கே எல்லோரும் வரவேண்டுமென்றும் பிரகடன படுத்தினான். இவன் வார்த்தைக்கு ஒருவரும் மதிப்பு கொடுக்கவில்லை.
   அரபியர்கள் வழக்கப்படி கஃபாவிற்கே ஹஜ்ஜூக்கு போனார்கள் இவன் கட்டிய கோவிலுக்கு யாரும் வரவில்லை. அதைப்பற்றி அவனுக்கு அதிக வருத்தம் உண்டு. இப்படியிருந்து வரும் சமயம் இவனுடைய கோவிலில் மலம் ஜலம் கழித்து அசுத்தம் செய்துவிட்டார்கள். அதைப்பற்றி  விசாரிக்கும்போது அவ்வாறு செய்தது  மக்காவாசி என்று தெரிந்தது. சிறிது  காலத்திக்குப்பின்  அந்தக்  கோவிலும்  தீப்பற்றி எரிந்து விட்டது. விசாரணையில்  மக்காவாசியே தீ வைத்ததாக  தெரிந்தது.  இவ்விரு  சம்பவங்களாலும் இயற்கையில் அவனுக்கு கஃபாவின் மீதும் மக்காவாசிகளின் மீதும் இருந்து வந்த கோபம் மிகவும் அதிகமாகி விட்டது.
   கஃபாவை இடித்து நாசம் செய்துவிட வேண்டுமென்று தீர்மானித்து, ஒரு பெரிய படையுடன் மக்காவை நோக்கி புறப்பட்டான்.அப்படையில் யானைகள் அதிகம் இருந்ததால் யானைப் படைகள் என்று கூறப்பட்டது. அதில் மிகப்பெரிய யானையின் பெயர் மஹ்மூது. கஃபாவை மட்டும்தான் இடித்துத் தகர்க்கப் போவதாகவும் பொதுமக்களுக்கு எத்தகைய  இடையூறும் விளைவிக்கப்  போவதில்லையென்றும் ஆனால் இடிப்பதை எவராவது தடுத்தால் எல்லோரையும் தொலைத்து விடுவதாகவும்  முற்கூட்டியே மக்காவாசிகளுக்கு  சுற்றறிக்கை அனுப்பி விட்டான். இதனால்  நபி (ஸல்) அவர்களின்  பாட்டனார்  அப்துல் முத்தலிபைத்  தவிர்த்து  பாக்கியுள்ள மக்காவாசிகள் அனைவரும் பீதியினால் மக்கமாநகரை விட்டும் பக்கத்திலுள்ள மலைகளில் போய் மறைந்து கொண்டார்கள்.

   அப்துல் முத்தலிபும் அப்ரஹாவும்

   அப்ரஹாவின் படைகள் மக்காவிற்குச் சிறிது தூரத்திலுள்ள வாதியே முகஸ்ஸர் என்ற இடத்தில் தங்கி இருந்தன. ஒரு தினம் அப்துல் முத்தலிப் அவர்கள் அப்ரஹாவிடம் விஜயம் செய்ய, அப்ரஹா அவர்களை வரவேற்று உமது தேவை என்ன என வினவினான். எனது ஒட்டகைகளை உமது படையினர் பிடித்துக் கொண்டார்கள், அதனைப் பெற்றுச் செல்லவே வந்திருக்கிறேன் என்றார். இதைக்கேட்ட அப்ரஹா வியப்புடன் உமது ஒட்டகையைப் பற்றிய விஷயத்தைத் தான் தெரிவிக்கிறீர், நான் கஃபாவை இடிக்க வந்திருக்கிறேனே அதைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லையே என்று அப்ரஹா சொல்ல அதற்கு முத்தலிப் ஒட்டகைக்கு நான் சொந்தக்காரன் என் பொருளை நான் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் கஃபாவின் சொந்தக்காரன் வேறு. அவன் உடமையை அவன் காப்பாற்றிக்கொள்வான். என அழுத்தமான அர்த்தமுடன் பதிலுரைத்தார். ஒட்டகைகளைக் கொடுத்து அப்துல் முத்தலிபை அனுப்பிவிட்டு அப்ரஹா காஃபாவை இடித்து தரை மட்டமாக்கும்படி தனது யானைப்படைக்கு உத்தரவு பிறப்பித்தான். கட்டளையை நிறைவேற்ற யானைப்பாகர்கள், யானைகளை எவ்வளவுதான் அடித்து மிரட்டியும் அவை ஒரு அடிகூட முன் எடுத்து வைக்கவில்லை. ஏனேன்றால் மஹ்மூது என்ற தலைமை யானை கஃபாவை நோக்கிச் செல்ல மறுத்து முன்னால் படுத்து விட்டது. அதைக் கிளப்ப அவர்களால் முடியவில்லை. எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தும் அவைகள் முழுச் சத்தியாக்கிரகம் செய்துவிட்டன.
  அந்த சமயத்தில் கரு நிறமான பறவைகள் ஜித்தா கடற்கறையின் திசையிலிருந்து கரு நிறமான பறவைகள் கூட்டங் கூட்டமாக பறந்து வந்தன. ஒவ்வொரு பறவையின் இரு கால்களிலும் அலகிலும் பொடிக் கற்கள் இருந்தன. யானைப் படையினர் நேருக்கு நேர் அவை வந்ததும் ஆகாயத்தில் பறந்துக்கொண்டே அப்பொடிக் கற்களை படைகள் மீது எறிந்தன. அக்கற்கள் யார்மீது விழுந்தனவே அவர்கள் மெல்லப் பட்ட வைகோள்களின் சக்கை போன்று ஆயினர்.
   கஃபாவை இடித்துத் தள்ள கட்டளை பிறந்தபொழுது மறுத்துச் சத்தியாக்கிரஹம் செய்த யானைகளைத் தவிர்த்து மற்றெல்லாப் படையினரும் இக்கதிக்குள்ளாயினர். ஆங்காங்கே மலைகளில் மறைந்துக் கொண்டிருந்த மக்காவாசிகள், குரைஷிகள் கண்கூடாக பார்த்தனர். கஃபாவை தாக்க வந்த பெரும்படை சிறிய  பரவைகளால்  நாசமாக்கப்பட்டது, நபி (ஸல்) அவர்கள் பிறப்பதற்கு முன்னறிக்கையான அற்புதம் என்றும் கூறப்படுகின்றது. இச்சம்பவம் நடந்த 55 வது நாள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறந்தார்கள்.
   எனவே, தங்களின் படை பலத்தாலோ, செல்வச் செருக்காலோ, நாவன்மையாலோ அல்லாஹ்வின் மார்க்கத்தை அழித்துவிடக் கணவு காண்பவர்கள், யானைப் படையின் கதியும், அதன் சம்பவமே போதிய சான்றாகும்.
பொறாமைப் பேய் பிடித்தவர்கள் பிறருக்கு தீங்கிழைப்பதோடு தமக்கும் தீமையை உண்டாக்கிக் கொள்வார்கள்.
வயிற்றெரிச்சல்(பொறாமை) கொள்வது நம் நிம்மதியான வாழ்க்கையை எந்த அளவுக்குப் பாதிக்கும் என்பதில் நாம் அனைவருமே அறிந்ததே!!

நினைவில் கொள்ளுங்கள்: ஒருவரின் தினசரி வாழ்வு அவரின் விதியால் பரிணாமம் பெறுவதோடு, அதுவே அவரின் இப்போதைய நிஜமாகவும் ஆகிறது. 

நாம் இந்த பேராபத்தான பொறாமை குணம் கொண்டவர்களாக இல்லாமல் நிம்மதிகரமான வாழ்க்கை வாழ வேண்டும் என்று விதிக்கப்பட்டிருந்தால், இந்த உலகில் எதுவுமே அதனைத் தடுக்க முடியாது. அல்லது நாம் பொறாமை குணம் கொண்டு நிர்கதியாக வேண்டும் என்று விதிக்கப்பட்டிருக்கவில்லை  என்றால், அவ்வாறு ஆவதற்கு எதுவுமே உதவவும் செய்யாது. 

 பொறாமை- நம்மை எங்குமே கொண்டு சேர்க்காது; அது நம் மன நிம்மதியைக் கெடுத்து விடும் 

நமது வளர்ச்சிக்கு, உயர்வுக்கு நாமே முயல்வோம்! அடுத்த சகோதரரின் முன்னேற்றத்தைக் கண்டு சந்தோஷப்படுவோம்! பொறாமையைக் கைவிட்டு பரந்து, விரிந்த மனத்துடன் வாழ்வோம்!

................வஸ்ஸலாம் .................

நீ வாழ… பிறரைத் துன்புறுத்தாதே…

எப்படி நாம் நிம்மதியாக வாழவேண்டும் என விரும்புகின்றோமோ, அது போன்றே பிறரின் நிம்மதியைக் கெடுக்காமல் வாழவும் வேண்டும்.

ஆனால், சமூகத்தில் இன்று ”எனக்கு ஒரு கண் போனால் பரவாயில்லை, என் பக்கத்து வீட்டானுக்கு இரண்டு கண்களும் போகவேண்டும்” என்ற எண்ணம் உள்ளவர்கள் தான் அதிகம்.

இஸ்லாம் ஓர் உயரிய பண்பாட்டை இந்த உம்மத்திற்கு கற்றுக் கொடுத்து, கடைபிடிக்கவும் வலியுறுத்துகின்றது.

முகத்தால் கூட நிம்மதி இழக்கச் செய்து விடாதே…

فعن أبي ذر رضي الله عنه قال
 قال رسول الله ـ صلى الله عليه وسلم  
تَبَسُّمُك في وَجْه أَخِيك لك صدقة  
رواه الترمذي
அபூதர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “உம்முடைய சகோதரனை முகமலர்ச்சியோடு சந்திப்பதும் கூட உமக்குத் தர்மமாகும்” என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.                                                      ( நூல்: திர்மிதீ )

கரத்தாலும்.. நாவாலும் கூட…

في صحيح البخاري عن عبد الله بن عمرو رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال المسلم
 من سلم المسلمون من لسانه ويده
அப்துல்லாஹ் இப்னு அம்ரு (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “எவர் தம் சக முஸ்லிம் ஒருவருக்கு கரத்தாலும், நாவாலும் துன்பம் தரவில்லையோ அவரே உண்மையான முஸ்லிம் ஆவார்” என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள். ( புகாரி )

فقد روى البخاري (6290) ومسلم (2184) عن عبد الله بن مسعود رضي الله عنه قال : قال النبي صلى الله عليه وسلم : ( إِذَا كُنْتُمْ ثَلَاثَةً فَلَا يَتَنَاجَى رَجُلَانِ دُونَ الْآخَرِ حَتَّى تَخْتَلِطُوا بِالنَّاسِ أَجْلَ أَنْ يُحْزِنَهُ ) .
وروى الترمذي (2825) عن عبد الله بن مسعود قال : قال رسول صلى الله عليه وسلم : ( إِذَا كُنْتُمْ ثَلَاثَةً فَلَا يَتَنَاجَى اثْنَانِ دُونَ صَاحِبِهِمَا ) . وصححه الشيخ الألباني في " صحيح سنن الترمذي " .

அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “நீங்கள் மூன்று பேர் இருக்கும் போது மூன்றாமவரை விட்டுவிட்டு இரண்டு பேர் மட்டும் இரகசியம் பேச வேண்டாம். நீங்கள் மூவரும் மக்களுடன் கலக்கும் வரை! ஏனெனில், (அவ்வாறு மூன்று பேர் இருக்கும் போது இருவர் மட்டும் பேசும்போது) மூன்றாமவர் நிம்மதி இழக்கக்கூடும்” என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள். ( நூல்: புகாரி )

பிறர் நிம்மதி இழந்து தவிப்பதை அல்லாஹ்வும், அவன் தூதரும் விரும்புவதில்லை…

وروي أنه لحق بني إسرائيل قحط على عهد موسى عليه السلام ، فاجتمع الناس إليه ، فقالوا : يا كليم الله ، ادع لنا ربك أن يسقينا الغيث ، فقام معهم ، وخرجوا إلى الصحراء وهم سبعون ألفا أو يزيدون ، فقال موسى عليه السلام : إلهي اسقنا غيثك ، وانشر علينا رحمتك ، وارحمنا بالأطفال الرضع ، والبهائم الرتع ، والمشايخ الركع ، فما زادت السماء إلا تقشعا ، والشمس إلا حرارة ، فقال موسى : إلهي إن كان قد خلق جاهي عندك ، فبجاه النبي الأمي محمد صلى الله عليه وسلم الذي تبعثه في آخر الزمان ، فأوحى الله إليه : ما خلق جاهك عندي ، وإنك عندي وجيه ، ولكن فيكم عبد يبارزني منذ أربعين سنة بالمعاصي، فناد في الناس حتى يخرج من بين أظهركم ، فبه منعتكم ، فقال موسى : إلهي وسيدي أنا عبد ضعيف ، وصوتي ضعيف ، فأين يبلغ وهم سبعون ألفا أو يزيدون ، فأوحى الله إليه منك النداء ، ومني البلاغ ، فقام مناديا ، وقال : يا أيها العبد العاصي الذي يبارز الله منذ أربعين سنة ، اخرج من بين أظهرنا ، فبك منعنا المطر ، فقام العبد العاصي ، فنظر ذات اليمين وذات الشمال ، فلم ير أحدا خرج ، فعلم أنه المطلوب ، فقال في نفسه : إن أنا خرجت من بين هذا الخلق افتضحت على رءوس بني إسرائيل ، وإن قعدت معهم منعوا لأجلي ، فأدخل رأسه في ثيابه نادما على فعاله ، وقال : إلهي وسيدي عصيتك أربعين سنة ، وأمهلتني وقد أتيتك طائعا ، فاقبلني فلم يستتم الكلام حتى ارتفعت سحابة بيضاء ، فأمطرت كأفواه القرب ، فقال موسى : إلهي وسيدي ، بماذا سقيتنا وما خرج من بين أظهرنا أحد ؟ فقال : يا موسى ، سقيتكم بالذي به منعتكم ، فقال موسى : إلهي أرني هذا العبد الطائع ؟ فقال : يا موسى ، إني لم أفضحه وهو يعصيني ، أأفضحه وهو يطيعني.

மூஸா (அலை) அவர்கள் காலத்தில் ஒரு தடவை பெரும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டது. உடனே சமூக மக்கள் அனைவரையும் பெரிய மைதானம் ஒன்றில் ஒன்று திரட்டி தண்ணீர் பஞ்சம் நீங்க மழைவேண்டி துஆச்செய்தார்கள் மூஸா (அலை) அவர்கள்.

ஆனால், துஆச் செய்து வெகு நேரமாகியும் துஆவிற்கான பதில் ரப்பிடமிருந்து வராததை உணர்ந்த மூஸா ( அலை ) அவர்கள் “இறைவா! எப்பொழுதும் என் பிரார்த்தனைக்கு உடனடியாகப் பதிலளிக்கும் நீ இன்று ஏன் பதிலளிக்கவில்லை” என்று அல்லாஹ்விடம் கேட்டார்கள்.

அதற்கு அல்லாஹ் “மூஸாவே! இங்கு கூடியிருக்கும் ஜனத்திரளில் ஒருவர் சுமார் நாற்பதாண்டு காலமாக எனக்கு மாறு செய்து கொண்டிருக்கின்றார். அவரின் காரணமாகவே நான் பதில் தரவில்லை. அவரை அங்கிருந்து வெளியேறச் சொல்லுங்கள்! உங்கள் துஆவை ஏற்று உங்களுக்கு நான் மழை பொழிவிக்கிறேன்” என்றான்.

உடனே, மூஸா (அலை) அவர்கள் அங்கு கூடியிருந்த மக்களிடம் ”இங்கு கூடியிருக்கிற மக்களில் ஒருவர் சுமார் நாற்பதாண்டு காலமாக அல்லாஹ்வுக்கு மாறு செய்து கொண்டிருக்கின்றார். அவரின் காரணமாகவே அல்லாஹ் மழையைத் தராமல் தடுத்து வைத்திருக்கின்றான். ஆகவே, அவர் இங்கிருந்து உடனடியாக வெளியேறிச் செல்லவும். இல்லையெனில் ஒட்டு மொத்த சமூகமும் பாதிக்கப்படுவோம்” என்று கூறினார்கள்.

உடனே, கூட்டத்தில் இருந்த அந்த மனிதர் தன்னைத்தான் மூஸா (அலை) அவர்கள் கூறுகின்றார்கள் என்பதை உணர்ந்து கொண்டார். இங்கிருந்து இப்போது வெளியேறினால் தம்மை அடையாளம் கண்டு சமூக மக்கள் கேவலமாகக் கருதுவார்கள் என்று எண்ணிய அவர் தான் அணிந்திருந்த ஆடையின் ஒரு பகுதியைக் கொண்டு தன் தலைக்கு முக்காடிடுக் கொண்டு…

“அல்லாஹ்வே! இதோ இந்த இடத்தில் உன்னிடம் நான் ஒரு உறுதி மொழியைத் தருகின்றேன்! இனி எப்போதும் ஒரு கணமேனும் உனக்கு நான் மாறு செய்யமாட்டேன்! என் காரணத்தால் என் சமூக மக்களை நீ தண்டித்து விடாதே!” என்று பிரார்த்தித்தார்.

அடுத்த நொடியில் மழை பொழியத்தொடங்கியது. மூஸா (அலை) அவர்களுக்கு ஆச்சர்யம் கூட்டத்தை விட்டு எவரும் வெளியேற வில்லை, ஆனால், மழை பொழிகிறது.

அல்லாஹ்விடம் கையேந்தினார் மூஸா (அலை) அவர்கள். “அல்லாஹ்வே! எவரும் தான் வெளியேற வில்லையே! பின் ஏன் மழையைப் பொழிவித்தாய்!”.

அதற்கு, அல்லாஹ் “மூஸாவே! எந்த மனிதரின் காரணத்தால் நான் மழையைத் தடுத்து வைத்திருந்தேனோ, அவர் இப்போது மனம் திருந்தி என்னிடம் மன்னிப்புக் கோரிவிட்டார். அவரின் காரணத்தினாலேயே நான் இப்போது இந்த மழையை உங்களுக்கு தந்திருக்கின்றேன்” என்று பதில் கூறினான்.

அப்போது, மூஸா (அலை) அவர்கள் “அப்படியென்றால் நீ எனக்கு அவரை அடையாளம் காட்டு” என்று அல்லாஹ்விடம் கேட்டார்கள்.

அதற்கு, அல்லாஹ் “மூஸாவே! 40 ஆண்டுகளாக எனக்கு மாறு செய்து கொண்டிருந்த போது அவரைப் பிறரிடம் காட்டிக்கொடுத்து அவமானப் படுத்தாத நான்.. தற்போது மனம் திருந்தி என் அருள் வாசலுக்கு வந்த பின்னரா பிறருக்கு நான் காட்டிக் கொடுப்பேன்” என்று பதில் கூறினான்.

                                                     ( நூல்: இப்னு கஸீர் )

ஓர் அடியான் கேவலப்பட்டு மக்கள் மன்றத்திலே நிறுத்தப்பட்டு, நிம்மதியின்றி வாழ்வதை அல்லாஹ்வே விரும்பவில்லை.

حدثنا سليمان بن داود العتكي حدثنا حماد حدثنا واصل مولى أبي عيينة قال سمعت أبا جعفر محمد بن علي يحدث عن سمرة بن جندب أنه كانت له عضد من نخل في حائط رجل من الأنصار قال ومع الرجل أهله قال فكان سمرة يدخل إلى نخله فيتأذى به ويشق عليه فطلب إليه أن يبيعه فأبى فطلب إليه أن يناقله فأبى فأتى النبي صلى الله عليه وسلم فذكر ذلك له فطلب إليه النبي صلى الله عليه وسلم أن يبيعه فأبى فطلب إليه أن يناقله فأبى قال فهبه له ولك كذا وكذا أمرا رغبه فيه فأبى فقال أنت مضار فقال رسول الله صلى الله عليه وسلم للأنصاري اذهب فاقلع نخله

ஸமுரா இப்னு ஜுந்துப் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “அன்ஸாரித் தோழர் ஒருவரின் தோட்டத்தில் எனக்கு ஒரு வரிசை கொண்ட பேரீச்சமரங்கள் இருந்தன. அவரும் அவரின் குடும்பத்தினரும் அத்தோட்டத்தில் தான் வசித்து வந்தனர்.

ஆனால், நான் என் மரங்களைப் பார்வையிட அத்தோட்டத்திற்கு அடிக்கடி செல்வதுண்டு. இதனால் அந்த நபித்தோழருக்கு சிரமம் ஏற்பட்டது. எனவே, அவர் அம்மரங்களுக்குப் பகரமாக வேறு இடத்தில் உள்ள தமக்குரிய மரங்களைத் தந்து விடுவதாகக் கூறினார். அதற்கு நான் மறுத்து விட்டேன்.

உடனே, அவர் நபி {ஸல்} அவர்களிடம் சென்று இது பற்றி முறையிட்டார். அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் என்னை அழைத்து ”அவருக்கு விற்று விடுமாறு என்னிடம் கூறினார்கள். அதற்கு நான் மறுத்து விட்டேன். பின்னர், அதற்குப் பகரமாக வேறு இடத்தில் உள்ள மரங்களை எடுத்துக் கொள்ளுமாறு கூறினார்கள். அதற்கும் நான் மறுத்து விட்டேன்.

அப்பொழுது, நபி {ஸல்} அவர்கள் “தங்களுக்கு அவற்றை அன்பளிப்பாகத் தந்து விடுமாறும் அதற்குப் பிரதிபலனாக இன்ன இன்ன நற்பலன்கள் கிடைக்கும்” என்று சொல்லி என்னை உற்சாகப் படுத்தினார்கள்.

அதற்கும் நான் மறுத்து விடவே, அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் என்னை நோக்கி “நீர் உமது பக்கத்திலுள்ளவருக்கு தீங்கிழைப்பவராக இருக்கின்றீர்” என்று கூறிவிட்டு, அந்த அன்ஸாரித்தோழரிடம் “நீர் சென்று அம்மரங்களை அடியோடு வெட்டி எறிந்து விடும்” என்று பணித்தார்கள்.         ( நூல்: அபூதாவூத் )

பிறரின் நிம்மதியைக் கெடுப்பது எவ்வளவு பெரிய தவறு என்பதைச் சுட்டிக்காட்டிய நபி {ஸல்} அவர்கள் அன்ஸாரித்தோழரின் மன உளைச்சலுக்கு எப்படியாவது ஈடு செய்திட வேண்டும் என முயற்சியும் செய்தார்கள் என்பதை மேற்கூறிய நிகழ்ச்சி நமக்கு உணர்த்துகின்றது.

வாழ்க்கையின் அடிப்படைத் தத்துவங்களைப் புரிந்து வாழ முயற்சிப்போம்! நிம்மதியிழக்கச் செய்திடும் தீய அம்சங்களிலிருந்து விலகி வாழ்வோம்! பிறிரின் நிம்மதியையைக் கெடுக்கிற காரியத்தின் அருகே கூட செல்லாதிருப்போம்!

அல்லாஹ் அத்தகைய நற்பேற்றை உங்களுக்கும், எனக்கும் தந்தருள் புரிவானாக! ஆமீன்! ஆமீன்!! யாரப்பல் ஆலமீன்!!!
                           வஸ்ஸலாம்!!!

Popular posts from this blog

ஹழ்ரத் அபூபக்கர் சித்திக் (ரலி)

எச்சரிக்கை! இந்த ஐந்து தீய குணங்கள் 30-10-2025

அற்புதங்கள் நிறைந்த ஆஷூரா தினம்...... 12-07-2024 04-07-2025