Skip to main content

சம்பாத்தியம்


 ஹலாலான முறையில் உழைப்போம்..!!! ஹராமானவைகளை வெறுப்போம் !!!   ” 


தாவது  ஆண்டுதோறும் விவசாயிகள் தினம் டிசம்பர் 23-ம் தேதி [வரும் ஜுமுஆவிற்க்கு அடுத்த நாள் அதாவது சனிக்கிழமை.] இந்தியாவில் கொண்டாடப்பட்டு வருகிறது.  விவசாயிகளின் தேசிய பங்களிப்பைச் சொல்லும் வகையில் விவசாயிகள் தினம் ஆண்டுதோறும் இந்நாளில் கொண்டாடப்பட்டு வருகிறது. நம் இஸ்லாமியர்கள்  அதிக மக்கள் உழவர்களாக இல்லை உழைப்பவர்களாக உள்ளன.   அதனை கருத்தில் கொண்டும். விவசாயிகளை / விவசாயங்களை மட்டும் தனித்து குறிப்பிட்டால் ஒரு சிலரின் மட்டுமே அதனுடைய பங்களிப்பை அதனுடைய சிறப்பை அடைய முடியும். ஆதலால் பொதுவாக “சம்பாத்தியம்” என்ற தலைப்பின் கீழ் நாம் வெளியீடு செய்தால் எல்லோருக்கும் பிரயோஜனமாக இருக்கும் என்ற மேலான எண்ணத்தில் ஹலாலான முறையில் உழைப்போம்!!! ஹராமானவைகளை வெறுப்போம்!!!! 


 ல்லாஹ்வின் ﷻ பேரருளால்  [ جمادى الآخرة  ]     ஜுமாதல் ஆகிரா  மாதத்தின்   ரண்டாம்   வார ஜுமுஆவில் அமர்ந்துள்ளோம். ல்ஹம்துலில்லாஹ்.

போன வார‌ ஜுமுஆ‍வுடைய‌ பேருரையில் :-


✍🏻 ஆக‌ இன்றைய ஜுமுஆ‍வுடைய‌ பேருரையில் :-

1️⃣. ✍🏻 நாளைய‌ தினமான டிசம்பர் 23-ம் தேதி சனிக்கிழமை. விவசாயிகள் தினமாக இந்தியாவில் கொண்டாடப்பட்டு வருகிறது. விவசாயிகளின் தேசிய பங்களிப்பைச் சொல்லும் வகையில் விவசாயிகள் தினம் ஆண்டுதோறும் இந்நாளில் கொண்டாடப்பட்டு வருகிறது. நம் இஸ்லாமியர்கள் அதிக மக்கள் உழவர்களாக இல்லை உழைப்பவர்களாக உள்ளன. அதனை கருத்தில் கொண்டும். விவசாயிகளை / விவசாயங்களை மட்டும் தனித்து குறிப்பிட்டால் ஒரு சிலரின் மட்டுமே அதனுடைய பங்களிப்பை அதனுடைய சிறப்பை அடைய முடியும். ஆதலால் பொதுவாக “சம்பாத்தியம்” என்ற தலைப்பின் கிழ் இஸ்லாம் சொல்லித்தரும் ஒழுக்க வாழ்வியலை தெரிந்து கொள்வோம் வாருங்கள்.  

  ‘மக்கு கிடைத்துள்ள இஸ்லாமிய மார்க்கம் வாழ்வின் அனைத்து துறைகளிலும் வழிகாட்டியாக அமைந்துள்ளது. அதன் போதனைகள் இம்மைக்கும், மறுமைக்கும் பயனளிக்கும் விதத்தில் அமைந்துள்ளன. உலகத்தில் நிம்மதியாக வாழ்வதற்கு இஸ்லாமிய மார்க்கம் அனைத்து வழிகளையும் காட்டியுள்ளது. வெறும் இறைவனுக்கு செய்ய வேண்டிய வணக்கங்களை மட்டும் இஸ்லாமிய மார்க்கம் போதிக்காமல், ஒரு நிம்மதியான குடும்ப வாழ்க்கைக்கு தேவையான அனைத்து உபதேசங்களையும் வழங்கியுள்ளது.

நிம்மதியான குடும்ப வாழ்விற்கு பொருளாதாரம் முக்கிய பங்கு வகிக்கிறது. பொருளாதாரத்தை ஈட்டுவதற்கு உழைப்பதை இஸ்லாமிய மார்க்கம் வலியுறுத்துகிறது. 

விதைக்காமல் விளைச்சலை பார்க்க முடியாது போல‌; உழைக்காமல் உயர்வை பெற முடியாது. உழைப்புதான் நம்மை நன்றாகவும்,  வெற்றி வீரராகவும் வாழ வைக்கும். உழைப்பின் முயற்சி வெற்றியாகத்தான் இருக்க முடியும்.

பெரிய கல்விமான்கள் மாமேதைகளிடம்  தங்களின் முன்னேற்றத்தின் இரகசியம் என்னவென்று கேட்டபோது, அவர்கள் சொல்லும் பதில் கடுமையான உழைப்பும் தோல்வியின் போது பொருமையாக இருப்பது என்பதுதான். நாமும் நம் வாழ்வில் வெற்றி பெற‌ கடுமையான உழைப்பும் தோல்வியின் போது பொருமையாக இருந்தால் நாமும் கல்விமான்கள் மாமேதைகளாக ஆகலாம்.

கடின உழைப்பும் அறிவு சார்ந்த உழைப்புமானது முடியாது என்பதைக்கூட நம் கைபிடியில் கொண்டு வந்து சேர்க்கும் அளவுக்கு சக்திவாய்ந்தது.

உலகம் ஒரு கடல், வாழ்க்கை என்பது கடலில் செல்லும் கப்பல் .அந்தக் கப்பலை ஓட்டச் செய்வது உழைப்புதான்.

உழைக்காதவன் முன்னேற முடியாதுஅது மட்டுமல்லாது நாட்டின் முன்னேற்றத்தையும் உழைக்காதவன் கெடுக்கிறான். உழைக்காமல் சோம்பேறியாக இருந்துகொண்டு பிறரில் தங்கி வாழ்பவனை முஹம்மத் (ஸல்) அவர்கள் கடுமையாக எச்சரித்துள்ளார்கள். அடுத்தவர்களிடம் கையேந்துபவன் சிறப்புக்குறியவனாக இருக்கமுடியாது என்றும், வாங்கும் கையை விட கொடுக்கும் கையே சிறந்தது (முஸ்லிம்) எனவும் கூறியுள்ளார்கள்.

வாழ்க்கையில் ஒவ்வொரு விஷயத்திலும் ஹலால் – ஹராமை பேணி நடக்க வேண்டும். ஒவ்வொரு விஷயம் என்று சொல்லும் போது; எங்களுடைய அன்றாட வாழ்க்கையில் சாப்பிடும் உணவாக இருக்கலாம், உடுக்கும் உடுப்பாக இருக்கலாம், செய்யும் தொழிலாக அல்லது வியாபாரமாக இருக்கலாம், தாய், தகப்பர்களோடு நடந்துக்கொள்ளும் முறையாக இருக்கலாம், பிள்ளைகளை வளர்க்கும் முறையாக இருக்கலாம், அடுத்த வீட்டுக்காரர்கள், சொந்தக்காரர்கள் இவர்களோடு நடந்துக்கொள்கிற முறையாக இருக்கலாம். இப்படி வாழ்க்கையில் உள்ள ஒவ்வொரு விஷயங்களை பற்றியும் இஸ்லாம் எங்களுக்கு சொல்லித்தந்திருக்கிறது. அதில் எது எல்லாம் ஹலால், எது எல்லாம் ஹராம் என்று எங்களுக்கு தெளிவாக சொல்லித்தந்திருக்கிறது. இஸ்லாம் இப்படி எங்களுக்கு சொல்லித்தந்த பின்பும் நாங்கள் அதனை படித்து எங்களுடைய வாழ்க்கையில் ஹலால், ஹராமை பேணி நடக்காமல் ஏதோ எங்களுடைய விருப்பப்படி வாழ்ந்தால், நாங்கள் நாளை மறுமையில் அல்லாஹ்வுடைய கோபத்துக்கு ஆளாகி நரக வேதனையை அனுபவிக்க வேண்டி வரும். மஆதல்லாஹ். அல்லாஹ் ந‌ம் அனைவரையும் பாதுகாப்பானாக! – ஆமீன்.

  • க இது தொடர்பாக இஸ்லாம் தரும் தீர்வினைப்பற்றி  A TO Z வரை  இன்றைய ஜுமுஆவில் தெரிந்து கொள்வோம் வாருங்கள்…. ஆக, அல்லாஹு சுப்ஹானஹுதஆலா நம்மையும், நம் குடும்பத்தாரையும், உலக மக்களையும் ஹலால் ‍-  ஹராம் பேணி வாழும் பாக்கியத்தை    தந்த‌ருள் புரிவானாக! ஆமீன்,  என துஆச் செய்தவனாகவும், 
  • பேசுகிற எனக்கும், கேட்கிற உங்களுக்கும் , கேட்ட‌தின் படி அமல் செய்யும் பாக்கியத்தை வ‌ல்ல நாயகன் ﷻ நம்மனைவருக்கும் தந்த‌ருள்புரிவானாக! ஆமீன்  ✍ என துஆ செய்தவனாக எனது ஜுமுஆ பேருரையை ஆரம்பம் செய்கிறேன்.

❈•••┈┈┈┈┈❀ ┈┈┈┈┈•••❈• ❀ ••❈•••┈┈┈┈┈┈┈┈┈┈•••❈

♣ அல்லாஹ் [ﷻ]  திருமறையில் கூறுகின்றான்:-قال الله تعالى ♣ 

【அல்லாஹ்வுடைய அருளைத் [சம்பாத்தியத்தை] தேடிக் கொள்ளுங்கள்:-】

【ஆசிரியரின் குறிப்பு】 அன்புள்ள உஸ்தாதுகளே!! தாங்கள் ஜுமுஆ பேருரையாற்றும் போது; கீழுள்ள‌ குர்ஆன் வசனங்களை ஓதும் போது கிராஅத்தாக ஓதுங்கள்.

فَاِذَا قُضِيَتِ الصَّلٰوةُ فَانْتَشِرُوْا فِى الْاَرْضِ وَابْتَغُوْا مِنْ فَضْلِ اللّٰهِ وَاذْكُرُوا اللّٰهَ كَثِيْرًا لَّعَلَّكُمْ تُفْلِحُوْنَ‏

பின்னர், (ஜுமுஆ) தொழுகை நிறைவேற்றப்பட்டு விட்டதும், (பள்ளியிலிருந்து வெளிப்பட்டு) பூமியில் பரவிச் சென்று அல்லாஹ்வுடைய அருளைத் தேடிக் கொள்ளுங்கள்; அன்றியும், நீங்கள் வெற்றியடையும் பொருட்டு, அல்லாஹ்வை அதிகமதிகம் தியானம் செய்யுங்கள். {அல்குர்ஆன் 62:10.}

يٰٓاَ يُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا کُلُوْا مِنْ طَيِّبٰتِ مَا رَزَقْنٰكُمْ وَاشْكُرُوْا لِلّٰهِ اِنْ کُنْتُمْ اِيَّاهُ تَعْبُدُوْنَ‏

நம்பிக்கை கொண்டவர்களே! நாம் உங்களுக்கு அளித்துள்ளவற்றில் தூய்மையானவற்றையே உண்ணுங்கள்; நீங்கள் அல்லாஹ்வையே வணங்குபவர்களாக இருப்பீர்களாயின், அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தி வாருங்கள். {அல்குர்ஆன் 2:172..}

الَّذِىْ جَعَلَ لَـكُمُ الْاَرْضَ فِرَاشًا وَّالسَّمَآءَ بِنَآءً وَّاَنْزَلَ مِنَ السَّمَآءِ مَآءً فَاَخْرَجَ بِهٖ مِنَ الثَّمَرٰتِ رِزْقًا لَّـكُمْ‌ۚ فَلَا تَجْعَلُوْا لِلّٰهِ اَنْدَادًا وَّاَنْـتُمْ تَعْلَمُوْنَ ‏

அ(ந்த இறை)வனே உங்களுக்காக பூமியை விரிப்பாகவும், வானத்தை விதானமாகவும் அமைத்து, வானத்தினின்றும் மழை பொழியச்செய்து; அதனின்று உங்கள் உணவிற்காகக் கனி வர்க்கங்களை வெளிவரச் செய்கிறான்; (இந்த உண்மைகளையெல்லாம்) நீங்கள் அறிந்து கொண்டே இருக்கும் நிலையில் அல்லாஹ்வுக்கு இணைகளை ஏற்படுத்தாதீர்கள். [திருக்குர்ஆன் 2:22..]

அல்லாஹ்வின் பாதையில் செலவழிப்பதற்கு கூட உழைத்து சம்பாதித்து அதில்தான் செலவிட வேண்டும் என அல்லாஹ் கட்டளையிடுகிறான்.

“நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் சம்பாதித்ததில் தூய்மையானவற்றையும்,பூமியிலிருந்து உங்களுக்கு நாம் வெளிப்படுத்தியதிலிருந்தும் (நல் வழியில்) செலவிடுங்கள்! கண்ணை மூடிக் கொண்டே தவிர எதை வாங்கிக் கொள்ள மாட்டீர்களோ அத்தகைய மட்டமான பொருளைச் செலவிட நினைக்காதீர்கள்! அல்லாஹ் தேவையற்றவன்,புகழுக்குரியவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்!” (அல்குர்ஆன் 2:267)

♣ நபி ﷺ அவர்கள் கூறினார்கள்:-  كما قال النبي صلى الله عليه وسلم ♣

【நபி ﷺ  அவர்கள் ஒவ்வொரு தொழுகையிலும் ஹலாலான சம்பாத்தியத்தை /  நலவை கேட்பார்கள்:-】

✍🏻 அன்புள்ளவர்களே நபியவர்கள் ஒவ்வொரு தொழுகையிலும் ஹலாலான நலவை / சம்பாத்தியத்தை கேட்பார்கள். பிறரையும் அவ்வாறு கேட்டுக் கொள்ளுமாறு வேண்டிக் கொள்வார்கள். 

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «طَلَبُ كَسْبِ الْحَلَالِ فَرِيضَةٌ بَعْدَ الْفَرِيضَةِ» . رَوَاهُ الْبَيْهَقِيُّ فِي شعب الْإِيمَان

கடமையான தொழுகைகளுக்கு பிறகு சிறந்தது எது என்று நபி ﷺ அவர்களிடத்தில் கேட்கப்பட்டது அதற்கு நபிﷺ அவர்கள் ஹலாலான சம்பாத்தியத்தை தேடுவது என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، أَخْبَرَنَا يَحْيَى بْنُ حَسَّانَ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ إِسْحَاقَ، عَنْ سَيَّارٍ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ عَلِيٍّ، رضى الله عنه أَنَّ مُكَاتَبًا، جَاءَهُ فَقَالَ إِنِّي قَدْ عَجَزْتُ عَنْ كِتَابَتِي فَأَعِنِّي ‏.‏ قَالَ أَلاَ أُعَلِّمُكَ كَلِمَاتٍ عَلَّمَنِيهِنَّ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لَوْ كَانَ عَلَيْكَ مِثْلُ جَبَلِ صِيرٍ دَيْنًا أَدَّاهُ اللَّهُ عَنْكَ قَالَ ‏ “‏ قُلِ اللَّهُمَّ اكْفِنِي بِحَلاَلِكَ عَنْ حَرَامِكَ وَأَغْنِنِي بِفَضْلِكَ عَمَّنْ سِوَاكَ ‏”‏ ‏.‏ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ ‏.‏

அல்லாஹ்ஹும்மஹ்ஃபினி பிஹலாலிக அன் ஹராமிக வ அஃக்னினீ பி ஃபள்லிக அம்மன் ஸிவாக்.

பொருள் : யா அல்லாஹ்! நீ விலக்கியதை விட்டும் நீ ஆகுமாக்கியதை கொண்டும் எனக்கு போதுமாக்குவயாக! மேலும் உனது கிருபை கொண்டு உன்னை தவிர உள்ள அனைத்தை விட்டும் என்னை தேவையற்றவனாக ஆக்குவாயாக! திர்மிதி 3563

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى وَمُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالاَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ أَبِى إِسْحَاقَ عَنْ أَبِى الأَحْوَصِ عَنْ عَبْدِ اللَّهِ عَنِ النَّبِىِّ صلى الله عليه وسلم- أَنَّهُ كَانَ يَقُولُ « اللَّهُمَّ إِنِّى أَسْأَلُكَ الْهُدَى وَالتُّقَى وَالْعَفَافَ وَالْغِنَى ».

இறைவா! நல்வழியையும், இறையச்சத்தையும், சுயக் கட்டுப்பாட்டையும், பொருளாதாரத் தன்னிறைவையும் உன்னிடம் வேண்டுகிறேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிரார்த்தித்து வந்தார்கள்.  முஸ்லிம் 7079

[ஹலாலான வருமானத்தின் அவசியம்:-]

✍🏻 அன்புள்ளவர்களேமனிதன் இவ்வுலகில் உயிர் வாழவும் உடலைப் பேணவும் வருமானம் ஈட்டுவது அவசியமாகின்றது. வருமானத்தை ஈட்டினால்தான் பிறரிடம் கையேந்தி யாசிக்காமல் தன்மானத்தோடு அவன் வாழ முடியும். எனவேதான் வல்ல இறைவன் வாழ்க்கைக்கு தேவையான பொருளை வருமானத்தை ஈட்டிக் கொள்வதை ஹலாலாக ஆக்கியுள்ளான். வரம்பு மீறாமல் அத்து மீறாமல் மற்றவர்களின் உரிமைகளை அபகரிக்காமல் மற்றவர்களின் பொருளில் கை வைக்காமல் வருமானம் ஈட்டுமாறு கட்டுப்பாடுகளோடு அனுமதிக்கிறான். தன்னுடைய தேவைகளையும் தன்னை சார்ந்து வாழ் வோரின் தேவைகளையும் நிறைவேற்ற தேவையான போதுமான செல்வத்தை ஒவ்வொரு மனிதனும் ஈட்டிக் கொள்வது ஆகுமாக்கப்பட்டுள்ளது.

ஓவ்வொருவரும் உழைத்து உண்ண ஆரம்பிக்கும் போது தனிமனித குடும்ப சமூகவாழ்வு மேம்படுகிறது. ஒவ்வொரு தனிமனிதனும் தொழில் புரியும் போது அவர்களது மானம் காக்கப்படுவதோடு குடும்பம் நடுத்தெருவில் விடுபடுவதும் தவிர்க்ப்படுகின்றது.

தனிமனிதன் உழைக்க எடுக்கும் முயற்சியினால் சமூகத்திற்கு பல்வகை நன்மைகள் ஏற்படுகின்றன. இதனால் சமூக அங்கத்தவர்களின் சொத்து, சுகம், மானம்,  மரியாதை ,என்பன பாதுகாக்கப்படுவதோடு திருட்டு கொள்ளை கொலை மோசடி போன்ற தீமைகள் அகற்றப்படுகின்றன. இதனால் தனிமனிதர்களின் உள்ளம் அமைதிபெறுகிறது; குடும்பம் இன்புறுகிறது; சமூகம் வளம்பெறுகிறது; தேசம் அபிவிருத்தியடைகிறது; உலகம் செழிப்புறுகிறது.

இதுபோன்று விவசாயம், கை;தொழில், வியாபாரம், வணிகம் என்பவற்றை மேற்கொள்பவர்கள் தனது வயிற்றுப்பசியை மட்டுமல்ல, தேசத்தினதும், உலகினதும் பசியையே தீர்க்கின்றனர். இவை அனைத்தும் இஸ்லாத்தின் நெறிநின்று மேற்கொள்ளப் படும்போது, இம்மையில் மட்டுமின்றி மறுமைப் பேற்றையும் பெற்றுத் தருகின்றன.

‘ஒரு முஸ்லிம் விதையொன்றை நாட்டி, அது வளர்ந்த பின்னர் அதனை ஒரு மனிதனோ, விலங்கோ, ஒரு பூச்சியோ சாப்பிட்டு விட்டால், அதனை விதைத்தவருக்கு மறுமை நாள்வரை அது ஸதகாவாக (தர்மமாக) அமைகிறது’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.   (முஸ்லிம்)

[நபிமார்களும் ஹலாலான தொழில் செய்துள்ளார்கள்:-]

✍🏻 அன்புள்ளவர்களேஅல்லாஹ்வின் கட்டளைகளை மக்களுக்கு போதிக்க வந்த நபிமார்களும் கூட உழைத்து த்து ; உண்டு இருக்கிறார்கள். தம்முடைய தேவைகளுக்காக பிறரிடம கையேந்து வதைவிட உழைத்து உண்பதை சிறப்பித்து காட்டுகிறது இஸ்லாமிய மார்க்கம்.

حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، أَخْبَرَنَا عِيسَى بْنُ يُونُسَ، عَنْ ثَوْرٍ، عَنْ خَالِدِ بْنِ مَعْدَانَ، عَنِ المِقْدَامِ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «مَا أَكَلَ أَحَدٌ طَعَامًا قَطُّ، خَيْرًا مِنْ أَنْ يَأْكُلَ مِنْ عَمَلِ يَدِهِ، وَإِنَّ نَبِيَّ اللَّهِ دَاوُدَ عَلَيْهِ السَّلاَمُ، كَانَ يَأْكُلُ مِنْ عَمَلِ يَدِهِ»

ஒருவர் தமது கையால் உழைத்து உண்பதைவிடச் சிறந்த உணவை ஒருபோதும் உண்ண முடியாது. தாவூத் நபி (அலை) அவர்கள் தமது கையால் உழைத்து உண்பவர்களாகவே இருந்தார்கள். புகாரி 2072

அல்லாஹ் அனுப்பிய அனைத்து நபிமார்களும் ஆடு மேய்த்துள்ளார்கள். அல்லாஹ்வின் தூதரே! நீங்களுமா? என நபித்தோழர்கள் கேட்க ஆம்! நானும்தான்; சிறு தொகைப் பணத்தை கூலியாகப் பெற்றே மக்காவாசிகள் சிலருக்கு நான் ஆடு மேய்த்துள்ளேன்’என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.’  (புஹாரி 2262)

‘நபி ஸகரியா (அலை) இரும்புக் கொல்லராக (இருந்து உழைத்து) வாழ்ந்துள்ளார்கள். ‘(முஸ்லிம்)

حَدَّثَنَا يَحْيَى بْنُ مُوسَى، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ هَمَّامِ بْنِ مُنَبِّهٍ، حَدَّثَنَا أَبُو هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَنَّ دَاوُدَ النَّبِيَّ عَلَيْهِ السَّلاَمُ، كَانَ لاَ يَأْكُلُ إِلَّا مِنْ عَمَلِ يَدِهِ»

தாவூத் நபி (அலை) அவர்கள் தமது கையால் உழைத்தே தவிர உண்ண மாட்டார்கள்.  புகாரி 2073

حَدَّثَنِي مُحَمَّدٌ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يَزِيدَ، حَدَّثَنَا سَعِيدٌ، قَالَ: حَدَّثَنِي أَبُو الأَسْوَدِ، عَنْ عُرْوَةَ، قَالَ: قَالَتْ عَائِشَةُ رَضِيَ اللَّهُ عَنْهَا: كَانَ أَصْحَابُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عُمَّالَ أَنْفُسِهِمْ، وَكَانَ يَكُونُ لَهُمْ أَرْوَاحٌ، فَقِيلَ لَهُمْ: «لَوِ اغْتَسَلْتُمْ»،

நபித்தோழர்கள் பலர் உழைத்து உண்பவர்களாக இருந்தனர். இதனால் அவர்களிடம் (வியர்வை) வாடை வீசும். இதன் காரணமாகவே நீங்கள் குளிக்கக் கூடாதா? என்று அவர்களிடம் கூறப்பட்டது.  புகாரி 2071

வல்ல அல்லாஹ்வை வணங்குகிறேன் என சொல்லிக்கொண்டு, குடும்பத்திற்காக உழைக்காமல் ; இருப்பதையும் இஸ்லாமிய மார்க்கம் வன்மையாக கண்டிக்கிறது.

அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னி ஆஸ் (ரலி) அறிவித்தார். நபி (ஸல்) அவர்கள் என்னிடம், ‘அப்துல்லாஹ்வே! நீர் பகலெல்லாம் நோன்பு நோற்று, இரவெல்லாம் நின்று வணங்குவதாக எனக்குக் கூறப்படுகிறதே!’ என்று கேட்டார்கள். நான் ‘ஆம்! இறைத்தூதர் அவர்களே!’ என்றேன். நபி (ஸல்) அவர்கள் ‘இனி அவ்வாறு செய்யாதீர்!

(சில நாள்கள்) நோன்பு வையும்; (சில நாள்கள்)விட்டுவிடும்! (சிறிது நேரம்) தொழும்; (சிறிது நேரம்) உறங்கும்! ஏனெனில், உம் உடலுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் உமக்கிருக்கின்றன் உம் கண்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உமக்கிருக்கின்றன் உம் மனைவிக்குச் செய் வேண்டிய கடமைகளும் உமக்கிருக்கின்றன் உம் விருந்தினருக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உமக்கு இருக்கின்றன!

ஒவ்வொரு மாதமும் மூன்று நாள்கள் நீர் நோன்பு நோற்பது உமக்குப் போதுமானதாகும்! ஏனெனில், (நீர் செய்யும்) ஒவ்வொரு நற்செயலுக்கும் பகரமாக உமக்கு அது போன்ற பத்து மடங்கு (நன்மை)கள் உண்டு! (இந்தக் கணக்குப்படி) இது காலமெல்லாம் நோன்பு நோற்றதாக அமையும்!’ என்று கூறினார்கள். நான் சிரமத்தை வலிந்து ஏற்றுக் கொண்டேன்; அதனால், என்மீது சிரமம் சுமத்தப்பட்டுவிட்டது!

இறைத்தூதர் அவர்களே! நான் வலுவுள்ளவனாக இருக்கிறேன்!’ என்று கூறினேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘தாவூத் நபி (அலை) அவர்கள் நோன்பு நோற்றவாறு நீர் நோன்பு நோற்பீராக! அதை விட அதிகமாக்க வேண்டாம்!’ என்றார்கள். தாவூத் நபி (அலை)யின் நோன்பு எது? என்று கேட்டேன். ‘வருடத்தில் பாதி நாள்கள்!’ என்றார்கள். (புகாரி 1975)

அதேபோல் குடும்பத்திற்கு உழைக்க கடல் கடந்து வந்து குடும்பத்தைப்பற்றி சிந்திக்காமலும் அவர்களுக்கு பொருளாதாரதத்தை அனுப்பாமலும் அவர்களுடன் எவ்வித தொடர்பில்லாமலும், கேளிக்கைகளிலும், இஸ்லாம் தடை செய்த மது மற்றும் போதை பொருட்களுக்கு அடிமையாகி வாழ்க்கையை கழிப்பவர்கள் பின்வரும் நபிமொழி களையாவது படித்து திருந்தி குடும்ப பொறுப்பை சரிவர நிறைவேற்ற சபதம் எடுக்க வேண்டும்.

ஒரு மனிதர் நபியவர்களிடம் “மனைவிக்குக் கணவன் செய்ய வேண்டிய கடமைகள் என்ன?” என்று கேட்டார் அதற்கு நபி(ஸல்) அவர்கள் “நீ உண்ணும் போது அவளுக்கு உணவளிப்பதும் நீ அணியும் போது அவளுக்கு அணிவிப்பதும் (கண்டிக்கும் போது) முகத்தில் அடிக்காதிருப்பதும் கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தாமல் இருப்பதும் வீட்டில் தவிர மற்ற இடங்களில் வெறுக்காமல் இருப்பதும் ஆகும்” என்று கூறினார்கள். அபூதாவூத் 1830 அஹ்மத் 19162

தன் பொறுப்பில் உள்ளவர்களை (கவனிக்காமல்) வீணாக்குவது அவன் பாவி என்பதற்குப் போதுமானதாகும்” என்று நபியவர்கள் சொன்னார்கள்.  அபூதாவூத்1442

குடும்பத்திற்காக உழைப்பவர்கள் தாம் ஈட்டும் பொருளாதாரம் ஹலாலானதா? மார்க்கம் அனுமதித்த வகையில்தான் பொருளாதாரத்தை ஈட்டுகிறோமா? என்பதையும் யோசிக்க வேண்டும். மார்க்கத்திற்கு தடை செய்த வழிகளில் பொருளாதாரத்தை தேடினால் அதற்கு வல்ல அல்லாஹ் தண்டனை அளிப்பதுடன் நம்முடைய பிராத்தனைகளை ஏற்றுக்கொள்ள மாட்டான். அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்…

[கண்ணியமிகு ஸஹாபாக்களின்  ஹலால் – ஹராமை பேணுதல்:-]

✍🏻 அன்புள்ளவர்களே!  கண்ணியமிகு ஸஹாபாக்கள் ஹலால், ஹராமை, பேணும் விஷயத்தில் மிக ஜாக்கிரதையோடு நடந்துக்கொண்டார்கள். ஹராமான சாப்பாடு கொஞ்சம் கூட தமது வாய்க்குள் சென்று விடாமல் மிக பேணுதலாக இருந்தார்கள்.

عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ كَانَ لأَبِي بَكْرٍ غُلاَمٌ يُخْرِجُ لَهُ الْخَرَاجَ، وَكَانَ أَبُو بَكْرٍ يَأْكُلُ مِنْ خَرَاجِهِ، فَجَاءَ يَوْمًا بِشَىْءٍ فَأَكَلَ مِنْهُ أَبُو بَكْرٍ فَقَالَ لَهُ الْغُلاَمُ تَدْرِي مَا هَذَا فَقَالَ أَبُو بَكْرٍ وَمَا هُوَ قَالَ كُنْتُ تَكَهَّنْتُ لإِنْسَانٍ فِي الْجَاهِلِيَّةِ وَمَا أُحْسِنُ الْكِهَانَةَ، إِلاَّ أَنِّي خَدَعْتُهُ، فَلَقِيَنِي فَأَعْطَانِي بِذَلِكَ، فَهَذَا الَّذِي أَكَلْتَ مِنْهُ. فَأَدْخَلَ أَبُو بَكْرٍ يَدَهُ فَقَاءَ كُلَّ شَىْءٍ فِي بَطْنِهِ.

அபூபக்கர் ஸித்தீக் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட தொகையைச் செலுத்தி வந்த அடிமையொருவன் இருந்தான். அபூபக்கர் ஸித்தீக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அவன் செலுத்தும் தொகையிலிருந்து உண்டு வந்தார்கள்.

ஒரு நாள் அவன் ஏதோ ஒரு பொருளைக் கொண்டு வந்தான். அதிலிருந்து அபூபக்கர் ஸித்தீக் ரலியல்லாஹு அன்ஹு சிறிது உண்டார்கள். அப்போது அந்த அடிமை அவர்களிடம், ‘இது என்ன என்று உங்களுக்குத் தெரியுமா?’ என்று கேட்டான்

அபூபக்கர் ஸித்தீக் ரலியல்லாஹு அன்ஹு, ‘இது என்ன?’ என்று கேட்டார்கள். அவன், ‘நான் அறியாமைக் காலத்தில் ஒரு மனிதருக்குக் குறி சொல்லிவந்தேன்; எனக்கு நன்றாகக் குறி சொல்லத் தெரியாது; ஆயினும் (குறி சொல்லத் தெரிந்தவன் போல் நடித்து) அவரை நான் ஏமாற்றி விட்டேன். அவர் அதற்காக எனக்குக் கூலி கொடுத்தார். நீங்கள் உண்டது (குறி சொன்னதற்காக) எனக்குக் கூலியாகக் கிடைத்த அந்தப் பொருளிலிருந்து தான்” என்று சொன்னான்.

 உடனே அபூபக்கர் ஸித்தீக் ரலியல்லாஹு அன்ஹு தம் கையை (வாய்க்குள்) நுழைத்துத் தம் வயிற்றிலிருந்து அனைத்தையும் வாந்தியெடுத்துவிட்டார்கள். வாந்தியெடுத்த பிறகு கூறினார்கள். யாஅல்லாஹ் இதையும் தாண்டி என் குடலுக்குள் அதனுடைய சாறு கலந்திருந்தால் என்னை மன்னிப்பாயாக. இந்த செய்தியை நபியிடம் சொன்னபோது உண்மையாளரின் வயிற்றுக்குள் தூய்மையான உணவைத்தவிர வேரெதுவும் செல்ல முடியாது என்று கூறினார்கள். [புஹாரி 3842]

இந்த செய்தியில் அபூபக்கர் ஸித்தீக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தனது அடிமை மூலம் தனக்கு கிடைக்கவேண்டிய  அடிமை தொகையை உண்கிறார்கள். பின்பு அந்த அடிமை ஹராமான வழியில் பொருளீட்டியதைதான் நம்மிடத்தில் தந்துள்ளான். அதைத்தான் நாம் சாப்பிட்டுவிட்டோம் என்பதை அறிந்தவுடன் தனது வாய்க்குள் விரலை விட்டு வாந்தி எடுக்கிறார்கள் என்றால், அபூபக்கர் ஸித்தீக் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் பேணுதல்களை எண்ணிப்பாருங்கள்..

✍🏻 அன்புள்ளவர்களே இதேபோன்று தான் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடைய வாழ்விலும் ஒரு சம்பவம் நடந்தது. ஸதகா கொடுப்பதற்கு இருந்த ஒட்டகமொன்றின் பாலை தவறுதலாக உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் குடித்து விட்டார்கள். பின்னர் தொண்டைக்குள் விரலை போட்டு வாந்தி எடுத்து பின்தான் அவர்கள் நிம்மதி அடைந்தார்கள்.

காலை “பஜ்ர்” தொழுகைக்குப்பின் சற்று நேரம் “தஸ்பீஹ், திக்ர்” செய்தப்பின் “இஷ்ராக்” தொழுகையை நிறைவேற்ற வேண்டும்: அப்பால் இறைவனிடம் தமது தேவைகளை “துஆ”க்களின் வாயிலாக கேட்டு விட்டு உலக அலுவல்களில் ஈடுபட வேண்டும் என்பது நபி (ஸல்) அவர்கள் வகுத்தவைகளில் ஒன்று.

ஹழ்ரத் அபூதுஜானா (ரலி) அவர்கள் இதற்கு மாற்றமாக பஜ்ர் தொழுதவுடன் தமது வீட்டிற்கு சென்று விடுவார்கள்.இதைக் கவனித்து வந்த நபி (ஸல்) அவர்கள் அபூதுஜானவை அழைத்து “உமக்கு இறைவனின் எந்தத் தேவையும் இல்லையா? என்று கேட்பார்கள்.
அதற்கவர் “யாரசூலல்லாஹ் இறைவனிடம் எனக்கு நிரம்ப தேவைகள் இருக்கிறது” என்றார். அப்படியானால் உமது தேவைகளை இறைவனிடமிருந்து கேட்டுவிட்டு போகாமல், தொழுதவுடன் வீட்டிற்கு சென்று விடுகிறீரே! என்று நபியவர்கள் கேட்டார்கள்.

அதற்கு அபூதுஜானா (ரலி) அவர்கள் கூறினார்கள்:

“யாரசூலல்லாஹ் ! என்னுடைய வீட்டுக்கு அடுத்த வீட்டில் ஒரு பேரீத்த மரம் நிற்கிறது. அந்த மரத்தின் கிளைகள் என் வீட்டு முற்றத்தில் படர்ந்து நிர்ப்பதால், அதன் பழங்கள் என் வீட்டில் உதிர்ந்து விடுகிறது. அவைகளை என்னுடைய பிள்ளைகள் எடுத்து புசித்து விடுகிறார்கள். அது அன்னியன் உடமை, அவைகளை என் குழைந்தைகள் தின்று விடுவதால் ஹராமான (விலக்கப்பட்ட) பொருளை உண்டவர்களாகி விடுகிறார்கள். ஆதலால் நான் தொழுதவுடன் வீட்டிற்க்குச் சென்று என் பிள்ளைகள் கண் விழிப்பதற்கு முன் அப்பழங்களை எடுத்து அவர் வீட்டில் போட வேண்டியதாயிருக்கிறது: அதனால்தான் நான் ஜமாஅத் தொழுகை முடிந்தவுடன் வீட்டிற்க்குச் சென்று விடுகிறேன். என்றார்கள்.

ஹழ்ரத் அபூதுஜானா (ரலி) அவர்களின் நேர்மையையும், பேணுதலையும் கண்ட நபி (ஸல்) அவர்கள் இதற்கொரு சரியான பரிகாரம் காண முயற்சித்தார்கள். அந்த மரம் இருந்ததோ ஒரு “முனாபிக்” (முஸ்லிமை போல் நடிக்ககூடியவர்) வுடைய வீட்டில். இறுதியில் அந்த மரத்தை அபூதுஜானாவுக்கே சொந்தப் படுத்திக் கொடுத்துவிட முடிவு செய்யப்பட்டது.
நபி (ஸல்)அவர்கள் ஒரு ஸஹாபியை மரச் சொந்தக்காரரிடம் அனுப்பி, அடுத்த வீட்டுக்காரார் அபுதுஜானாவுக்கு மரத்தை விற்றுவிடும்படி சொல்லுங்கள் என அனுப்பினார்கள். அதற்கு அந்த முனாபிக் முடியாது என்று சொல்லிவிட்டார். இரண்டாவது தடவை நபியவர்கள் தங்களுக்கே விலைக்கு தரும்படி கேட்டனுப்பினார்கள். அதற்கும் அந்த முனாபிக் முடியாது என சொல்லிவிட்டார். மூன்றாவது தடவையாக சுவர்க்கத்தின் ஒரு மரத்திற்கு பகரமாக தரும்படி கேட்டனுப்பினார்கள். அதற்கும் முடியாது என்றே பதில் வந்தது. கடைசியாக மதினாவில் பத்துக்கும் மேற்பட்ட மரங்களைக் கொண்ட ஒரு தோட்டத்திற்கு பகரமாக அவர் வீட்டு முற்றத்தில் நிற்கக்கூடிய அந்த ஒரு மரத்தை மட்டும் தரும்படி கேட்டனுப்பினார்கள்.

பேராசைக்கொண்ட அந்த முனாபிக் “ஒரு மரத்திற்குப் பதில் பத்து மரங்கள் கிடைக்கிறது. இந்த ஒரு மரமும் நமது வீட்டில்தான் நிற்கிறது. எனவே இரவோடு இரவாக வீட்டிலுள்ள மரத்தின் கனிகளையும் நாமே பரித்துகொள்ளலாம். வெளியுலுள்ள மரங்களின் கனிகளும் நமக்கு கிடைக்கும்”. என்று தம் மனதிற்குள் நினைத்தபடி நபியவர்களின் கடைசி கோரிக்கைக்கு இணங்கினார். ஒப்பந்தப்படி தம் வீட்டு முற்றத்திலுள்ள மரத்தை அபூதுஜனாவுக்கே விற்று விட்டார். அடுத்த நாள் காலையில் மரம் அபூதுஜானவுடைய வீட்டு முற்றத்தில் நிற்பதைக் கண்டு முனாபிக் திடுக்கிட்டார். (தப்ஸீருல் பஹவி)

​[ஒரு உண்மையான முஃமீன்  உழைத்து உண்ணுவார்:-]

✍🏻 அன்புள்ளவர்களேபல்வேறு நபிமொழிகள் சொந்தமாக உழைத்து உண்பதை வலியுறுத்தி பிறரிடம் யாசித்து இரந்து வாழ்வதை கடிந்துரைக்கின்றது.

حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصِ بْنِ غِيَاثٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الأَعْمَشُ، حَدَّثَنَا أَبُو صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ” لَأَنْ  يَأْخُذَ أَحَدُكُمْ حَبْلَهُ ثُمَّ يَغْدُوَ – أَحْسِبُهُ قَالَ: إِلَى الجَبَلِ – فَيَحْتَطِبَ، فَيَبِيعَ، فَيَأْكُلَ وَيَتَصَدَّقَ، خَيْرٌ لَهُ مِنْ أَنْ يَسْأَلَ النَّاسَ ” قَالَ أَبُو عَبْدِ اللَّهِ: «صَالِحُ بْنُ كَيْسَانَ أَكْبَرُ مِنَ الزُّهْرِيِّ، وَهُوَ قَدْ أَدْرَكَ ابْنَ عُمَرَ»

என் உயிர் எவன் கைவசத்தில் உள்ளதோ அவன் மீது சத்தியமாக உங்களில் ஒருவர் கயிற்றை எடுத்துக் கொண்டு காலைப் பொழுதில் மலைக்குச் சென்று விறகு வெட்டி விற்று, தாமும் சாப்பிட்டுப் பிறருக்கும் தர்மம் செய்வது மக்களிடத்தில் யாசிப்பதை விடச் சிறந்ததாகும். புகாரி 1480, 1471

[ஒரு உண்மையான முஃமீனுக்கு ஹலால்- ஹராம் பேனுதலில்  சோதனை:-]

 عن أبيه .عن كعب بن عياض قال سمعت رسول الله يقول :المالُ فِتنةٌ؛ إنَّ لكلِّ أمَّةٍ فتنةً وفتنَةُ أمَّتي : المالُ 

ஒவ்வொரு சமுதாயத்திற்கும் சோதனைகள் இருக்கின்றன. என்னுடைய சமுதாயத்தின் சோதனை செல்வமாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர். [அஹ்மத் 17506]

சோதனை செல்வமாகும் என்றால் செல்வத்தை ஹலால் – ஹராம் பேணி சம்பாதிப்பதலாகும்.

[ஒரு உண்மையான முஃமீன் ஹலால் – ஹராம் விஷயத்தில் கவனமாக இருப்பார்:-]

தூய்மையாக பொருளீட்டுவது எப்படி? என ஒரு முறை கேட்கப்பட்டபோது, தனது கையால் உழைக்க வேண்டும். சந்தேகத்திற்குரிய செயலை செய்யாமல் எத்தகைய மோசடியிலும் ஈடுபடாமல் உழைத்தால் அதுதான் தூய உழைப்பு என அல்லாஹ்வின் தூதர்  ﷺ சொன்னார்கள். (அஹ்மத்)

ஒரு காலம் வரும் அக்காலத்தில் தனக்கு கிடைக்கும் செல்வம் எவ்வழியில் கிடைக்கின்றது என்பதைப் பற்றி, யாருமே யோசித்துப்பார்க்க மாட்டார்கள் என் கிறார்கள் இறைத்தூதர் அவர்கள். அப்படிப்பட்ட ஒரு கேடுகெட்ட காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அல்லாஹ்வின் தூதர் வ‌றுமையினால் வசதி யின்மையால் என்னுடைய உம்மத் அழிந்துவிடும் என நான் அஞ்சவில்லை. மாறாக உலக செல்வத்தின் அதிகரிப்பால் இந்த உம்மத் சோதனைக்குள்ளாக் கப்படும் என அஞ்சுகிறேன் என்றும் சொல்லியுள்ளார்கள்.

எப்படியாவது சம்பாதிப்பது என்னும் ஒரே குறிக் கோளில் நம்முடைய முஸ்லிம் சமுதாயம் இன்று இயங்கிக் கொண்டுள்ளது. உலகைச் சம்பாதிப்பது வேண்டும், செல்வத்தை சேகரிக்க வேண்டும் என்பது மட்டும் தான் அதன் ஒரே வாழ்க்கை குறிக்கோளாக உள்ளது. அதற்காக எப்படிப்பட்ட வழியை கடைப்பிடிக்கவும் முஸ்லிம்கள் தயாராக இருக்கிறார்கள். ஒரு வியாபாரத்தை செய்வதாக இருந்தால் அந்த வியாபாரத்தில் என்னென்ன தில்லுமுள்ளுகளை எல்லாம் செய்ய முடியுமோ அனைத்தையும் ஒன்றுவிடாமல் செய்வது. அந்த வியாபாரத்தில் வருமானம் அதிகமாக கிடைத் தால் அதை வேறு வழிகளில் முதலீடு செய்வது, அங்கிருந்தும் வருமானத்தை பெறுவது, வீட்டுமனைகளை வாங்கிப் போடுவது, வீடுகளைகட்டி வாட கைக்கு விடுவது, வேறு தொழில்களில் பங்குதாரர்களாக, ஸ்லீப்பிங்பார்ட்னர்களாக சேருவது, வாகனங்களை வாடகைக்கு விடுவது என கிடைத்த பணத்தை இருக்கும் பணத்தை எப்படியெல்லாம் இரட்டிப்பாக்க முடியுமோ அவ்வனைத்து வழிகளிலும் முஸ்லிம்கள் ஈடுபடுகிறார்கள். இதில் எந்த அளவுகோளையும் கடைப்பிடிக்க அவர்கள் தயாராக இல்லை. ஷரிஅத் என்ன சொல்கின்றது? ஹலாலா? ஹராமா? என எதைப்பற்றியும் யோசிக்க நினைப்பதே இல்லை.

[ஒரு உண்மையான முஃமீன் ஹராமை விட்டும் விலகி இருப்பார்:-]

وحَدَّثَنِي أَبُو كُرَيْبٍ مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، حَدَّثَنَا فُضَيْلُ بْنُ مَرْزُوقٍ، حَدَّثَنِي عَدِيُّ بْنُ ثَابِتٍ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ،قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” أَيُّهَا النَّاسُ، إِنَّ اللهَ طَيِّبٌ لَا يَقْبَلُ إِلَّا طَيِّبًا، وَإِنَّ اللهَ أَمَرَ الْمُؤْمِنِينَ بِمَا أَمَرَ بِهِ الْمُرْسَلِينَ، فَقَالَ: {يَا أَيُّهَا الرُّسُلُ كُلُوا مِنَ الطَّيِّبَاتِ وَاعْمَلُوا صَالِحًا، إِنِّي بِمَا تَعْمَلُونَ عَلِيمٌ} [المؤمنون: 51] وَقَالَ: {يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُلُوا مِنْ طَيِّبَاتِ مَا رَزَقْنَاكُمْ} [البقرة: 172] ثُمَّ ذَكَرَ الرَّجُلَ يُطِيلُ السَّفَرَ أَشْعَثَ أَغْبَرَ، يَمُدُّ يَدَيْهِ إِلَى السَّمَاءِ، يَا رَبِّ، يَا رَبِّ، وَمَطْعَمُهُ حَرَامٌ، وَمَشْرَبُهُ حَرَامٌ، وَمَلْبَسُهُ حَرَامٌ، وَغُذِيَ بِالْحَرَامِ، فَأَنَّى يُسْتَجَابُ لِذَلِكَ؟ “

மக்களே! அல்லாஹ் தூயவன். தூய்மையானதையே அவன் ஏற்கின்றான். அல்லாஹ் தன்னுடைய தூதர்களுக்குக் கட்டளையிட்டவற்றையே இறை நம்பிக்கையாளர்களுக்கும் கட்டளையிட்டுள்ளான்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிவிட்டு(ப் பின்வரும் இரு வசனங்களை 23:51) ஓதிக் காட்டினார்கள் :தூதர்களே! தூய்மையான பொருள்களிலிருந்து உண்ணுங்கள். நற்செயலைச் செய்யுங்கள். நீங்கள் செய்வதை நான் நன்கு அறிபவன் ஆவேன்.

பின்னர் ஒரு மனிதரைப் பற்றிச் சொன்னார்கள். “அவர் தலைவிரி கோலத்துடனும், புழுதி படிந்த நிலையிலும் நீண்ட பயணம் மேற்கொள்கிறார். அவர் தம் கரங்களை வானை நோக்கி உயர்த்தி என் இறைவா என் இறைவா என்று பிரார்த்திக்கிறார். ஆனால், அவர் உண்ணும் உணவு தடை செய்யப்பட்டதாக இருக்கிறது; அவர் அருந்தும் பானம் தடை செய்யப்பட்டதாக இருக்கிறது; அவர் அணியும் உடை தடை செய்யப்பட்டதாக இருக்கிறது; தடை செய்யப்பட்ட உணவையே அவர் உட்கொண்டிருக்கிறார். இத்தகையவருக்கு எவ்வாறு (அவரது பிரார்த்தனை) ஏற்கப்படும்?” என்று கூறினார்கள்.  முஸ்லிம் 2393

இந்த நபிமொழியை கொஞ்சம் ஆழமாக கவனித்துப் பாருங்கள். துஆ ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு துணையாய் இருக்கின்ற அம்சங்கள் யாவும் இந்த மனிதரிடம் காணப்படுகின்றன. நெடுந்தொலைவு பயணம் செய்து வந்திருக்கிறார். நெடுந்தொலைவு பயணம் செய்ததால் உள்ளம் நெகிழ்ந்து காணப்படுகின்றது. எளிமையோடும் தாழ்மையோடும் அவர் காட்சியளிக்கிறார். எளிமையோடு தாழ்மையோடு காட்சியளித்தால் துஆ ஏற்கப்பட வேண்டுமல்லவா? ஆனால் ஏற்காமல் மறுக்கப்படுகின்றது. என்ன காரணம்? ஏன்? அவனது உணவும் ஹராம், குடிப்பும் ஹராம், உடையும் ஹராம்.

உண்ணும் உணவு தூய்மையாக இருந்தால்தான் நீங்கள் செய்யும் பிரார்த்தனைகள் ஏற்றுக் கொள்ளப்படும் என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தெளிவாக சொல்லியிருக்கிறார்கள். ஒரு நபித்தோழரைப் பார்த்து, ஸஅதே உன் உணவை தூய்மையானதாக ஆக்கிக்கொள். அப்போதுதான் பிரார்த்தனைகள் அங்கீகரிக்கப்படுபவனாக நீ மாறுவாய் என்றார்கள். (அத்தர்கீப் வத்தர்கீப்)

ஹலாலான வருமானத்தை ஈட்டுகின்ற விஷயத்தில் ஒரு மனிதன் எந்தளவுக்கு அலட்சியம் காட்டுகிறானோ தூய வருவாயை தேடுவதில் அக்கறை செலுத்த மறுக்கிறானோ அந்தளவிற்கு அவனுடைய உடல் பாகங்கள் ஹராமான உடல் பாகங்களாக மாறிக் கொண்டே போகும். இதன் விளைவாக தன்னைப் படைத்த இறைவனிடம் கையேந்தி அவன் கோருகின்ற துஆக்கள் ஏற்றுக் கொள்ளப்படாது. அல்லாஹ்விடத்தில் ரிஜ்கை கேட்டு துஆ செய்தாலோ தனக்கு நேருகின்ற ஆபத்திலிருந்து சிக்கலிருந்து காக்குமாறு துஆ செய்தாலோ எந்த துஆவைச் செய்தாலும் அது ஏற்றுக் கொள்ளப்படாது. சந்தேகத்திற்கு இடமளிக்காமல் ஹராமிற்கு அறவே இடம்கொடாமல் தூய உணவை நீங்கள் உட்கொண்டு வந்தால், ரிஜ்கை கேட்டால் அல்லாஹ் ரிஜ்க் கொடுப்பான், ஆபத்திலிருந்து பாது காக்கக் கோரினால் பாதுகாப்பான். உங்களுக்காக நீங்கள் கேட்கும் பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்படும். பிற முஸ்லிம் சகோதரர்களுக்காக நீங்கள் துஆ செய்தாலும் அங்கீகரிக்கப்படும். தூய உணவால் கிடைக்கின்ற பின் விளைவுகள் இவையாவும்.

[ஹராமான வழியில் பொருளீட்டுவது மறுமை நாளின் அடையாளம்:-]

حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، حَدَّثَنَا سَعِيدٌ المَقْبُرِيُّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «لَيَأْتِيَنَّ عَلَى النَّاسِ زَمَانٌ،  يُبَالِي المَرْءُ بِمَا أَخَذَ المَالَ، أَمِنْ حَلاَلٍ أَمْ مِنْ حَرَامٍ»

தாம் சம்பாதித்தது ஹலாலா ஹராமா என்று மனிதர்கள் பொருட்படுத்தாத ஒரு காலம் வரும்.  புகாரி 2083 

ஹராமை ஹலாலாகச் சித்தரித்து தவறான முறையில் பொருளீட்டுவதை நம்மில் சிலர் நியாயப்படுத்துவதைப் பார்க்கிறோம். இப்படித் தந்திரம் செய்து ஹராமை ஹலாலாக்குவது பற்றியும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ عَطَاءِ بْنِ أَبِي رَبَاحٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، أَنَّهُ: سَمِعَ رَسُولَ اللَّهِصَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ عَامَ الفَتْحِ وَهُوَ بِمَكَّةَ: «إِنَّ اللَّهَ وَرَسُولَهُ حَرَّمَ بَيْعَ الخَمْرِ، وَالمَيْتَةِ وَالخِنْزِيرِ وَالأَصْنَامِ»، فَقِيلَ: يَا رَسُولَ اللَّهِ، أَرَأَيْتَ شُحُومَ المَيْتَةِ، فَإِنَّهَا يُطْلَى بِهَا السُّفُنُ، وَيُدْهَنُ بِهَا الجُلُودُ، وَيَسْتَصْبِحُ بِهَا النَّاسُ؟ فَقَالَ: «لاَ، هُوَ حَرَامٌ»، ثُمَّ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عِنْدَ ذَلِكَ: «قَاتَلَ اللَّهُ اليَهُودَ إِنَّ اللَّهَ لَمَّا حَرَّمَ شُحُومَهَا جَمَلُوهُ، ثُمَّ بَاعُوهُ، فَأَكَلُوا ثَمَنَهُ»

மதுபானம், செத்தவை, பன்றி, உருவச் சிலைகள் ஆகியவற்றை விற்பனை செய்வதை அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் தடை செய்துள்ளனர் என்று மக்கா வெற்றியின்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அவர்களிடம், அல்லாஹ்வின் தூதரே! செத்தவற்றின் கொழுப்புகள் கப்பல்களுக்குப் பூசப்படுகின்றன; தோல்களுக்கு அவற்றின் மூலம் மெருகேற்றப்படுகின்றது; மக்கள் விளக்கெரிக்க அவற்றைப் பயன்படுத்துகின்றனர்; ஆகவே, அதைப் பற்றிக் கூறுங்கள் எனக் கேட்கப்பட்டது. அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், கூடாது! அது ஹராம்! எனக் கூறினார்கள். அப்போது தொடர்ந்து, அல்லாஹ் யூதர்களைத் தனது கருணையிலிருந்து அப்புறப்படுத்துவானாக! அல்லாஹ் யூதர்களுக்குக் கொழுப்பை ஹராமாக்கியபோது, அவர்கள் அதை உருக்கி விற்று, அதன் கிரயத்தைச் சாப்பிட்டார்கள்! என்று கூறினார்கள். புகாரி 2236

[ஒரு உண்மையான முஃமீன் தன் உழைப்பில் சந்தேகமானதை விட்டுவிடுவார்:-]

✍🏻 அன்புள்ளவர்களே!  சில வகைப் பொருளாதாரங்கள் அனுமதிக்கப்பட்டதா? தடை செய்யப்பட்டதா என்ற சந்தேகம் நமக்கு அவ்வப்போது ஏற்படும். அதுபோன்ற சந்தர்ப்பங்களில் சந்தேகமானதை விட்டும் நாம் விலகிக் கொள்ளும் வகையில் நம்மைப் பக்குவப்படுத்திக் கொண்டால் ஹராமானதில் இருந்து விலகுவது நம்முடைய இயல்பாகவே மாறி விடும்.

நம்மிடம் ஒரு குவளை பால் தரப்படுகிறது. அப்போது அருகில் இருக்கும் ஒருவர் அதில் விஷம் கலந்துள்ளது என்று கூறுகிறார். இன்னொருவர் அதில் தேன் கலந்துள்ளது என்கிறார். இப்போது நாம் என்ன செய்வோம்?

தேன் கலந்திருக்கவும் வாய்ப்பு உள்ளது; விஷம் கலந்திருக்கவும் வாய்ப்பு உள்ளது என்ற போதும் நாம் அதை அருந்த மாட்டோம். ஹலாலா ? ஹராமா ? என்று சந்தேகம் ஏற்படும்போது இது போன்ற மனநிலையை நாம் அடைய வேண்டும்.

حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا زَكَرِيَّاءُ، عَنْ عَامِرٍ، قَالَ: سَمِعْتُ النُّعْمَانَ بْنَ بَشِيرٍ، يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: ” الحَلاَ بَيِّنٌ، وَالحَرَامُ بَيِّنٌ، وَبَيْنَهُمَا مُشَبَّهَاتٌ لاَ يَعْلَمُهَا كَثِيرٌ مِنَ النَّاسِ، فَمَنِ اتَّقَى المُشَبَّهَاتِ اسْتَبْرَأَ لِدِينِهِ وَعِرْضِهِ، وَمَنْ وَقَعَ فِي الشُّبُهَاتِ: كَرَاعٍ يَرْعَى حَوْلَ الحِمَى، يُوشِكُ أَنْ يُوَاقِعَهُ، أَلاَ وَإِنَّ لِكُلِّ مَلِكٍ حِمًى، أَلاَ إِنَّ حِمَى اللَّهِ فِي أَرْضِهِ مَحَارِمُهُ، أَلاَ وَإِنَّ فِي الجَسَدِ مُضْغَةً: إِذَا صَلَحَتْ صَلَحَ الجَسَدُ كُلُّهُ، وَإِذَا فَسَدَتْ فَسَدَ الجَسَدُ كُلُّهُ، أَلاَ وَهِيَ القَلْبُ “

அனுமதிக்கப்பட்டவையும் மிகத் தெளிவானவை. அனுதிக்கப்படாதவையும் தெளிவானவை. இவ்விரண்டிற்கும் இடையில் சந்தேகத்திற்கு இடமானவையும் இருக்கின்றன. அவற்றை மக்களில் அதிகம் பேர் அறிய மாட்டார்கள். எனவே எவர் சந்தேகத்திற்கு இடமானவற்றைத் தவிர்த்துக் கொள்கிறாரோ அவர் தமது மார்க்கத்தையும், மானத்தையும் காப்பாற்றிக் கொள்கிறார். எவர் சந்தேகத்திற்கிடமானவைகளில்) தலையிடுகிறாரோ அவர், (அனுமதிக்கப்படாதவைகளில் தலையிட நேரும்.) வேலியோரங்களில் (கால்நடைகளை) மேய்ப்பவர் வேலிக்குள்ளேயே (கால்நடைகளை) மேயவிட நேரும். எச்சரிக்கை! ஒவ்வொரு மன்னனுக்கும் ஓர் எல்லை இருக்கின்றது. அல்லாஹ்வின் பூமியில் அவனது எல்லை (வேலி) அவனால் தடை விதிக்கப்பட்டவையே. அறிந்து கொள்க : உடலில் ஒரு சதைத் துண்டு இருக்கிறது. அது சீர்பெற்று விட்டால் உடல் முழுவதும் சீர்பெற்று விடும். அது சீர்குலைந்து விட்டால் முழு உடலும் சீர்குலைந்து விடும். அறிந்து கொள்ளுங்கள்: அதுதான் உள்ளம்.  புகாரி 52

சந்தேகமானதை விட்டு விடுவதில் நபிகள் நாயகம் (ஸல்) கடுமையான போக்கைக் கடைப்பிடித்துள்ளனர். தமது தோழர்களுக்கும் அவ்வாறே பயிற்சி அளித்துள்ளனர்.

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ أَبَانَ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ إِدْرِيسَ، قَالَ: أَنْبَأَنَا شُعْبَةُ، عَنْ بُرَيْدِ بْنِ أَبِي مَرْيَمَ، عَنْ أَبِي الْحَوْرَاءِ السَّعْديِّ، قَالَ: قُلْتُلِلْحَسَنِ بْنِ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: مَا حَفِظْتَ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قَالَ: حَفِظْتُ مِنْهُ: «دَعْ مَا يَرِيبُكَ إِلَى مَا لَا يَرِيبُكَ»

நீ சந்தேகமானதை விட்டுவிட்டு சந்தேகம் இல்லாததின் பக்கம் திரும்பி விடு. நிச்சயமாக உண்மை என்பது நிம்மதியாகும். பொய் என்பது சந்தேகமானதாகும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். நஸாயீ 5711.

சந்தேகமானதை விட்டு விலகிக் கொள்வதில் மற்றவர்களுக்கு அறிவுரை கூறிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாமும் அதில் உறுதியாக இருந்தார்கள்.

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ مَنْصُورٍ، عَنْ طَلْحَةَ، عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: مَرَّ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِتَمْرَةٍ فِيالطَّرِيقِ، قَالَ: «لَوْلاَ أَنِّي أَخَافُ أَنْ تَكُونَ مِنَ الصَّدَقَةِ لَأَكَلْتُهَا»

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பாதையில் கிடந்த ஒரு பேரீச்சம் பழத்தைக் கடந்து சென்றார்கள். “இது சதகா(தர்ம)ப் பொருளாக இருக்குமோ என்ற அச்சம் எனக்கில்லாவிட்டால் இதை நான் சாப்பிட்டிருப்பேன்” என்று கூறினார்கள்.  புகாரி 2431.

தர்மப் பொருள்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஹராம். அதனால் கீழே கிடக்கின்ற பேரீச்சம்பழம் தர்மப் பொருளாக இருக்குமோ என்று அவர்களுக்குச் சந்தேகம் வந்ததால் அதை விட்டு விலகி விட்டார்கள்.

சந்தேகமானதை எல்லாம் விட்டு விட்டால் நம்முடைய வருவாய் பாதிக்குமே என்ற தயக்கம் சிலருக்கு ஏற்படலாம். அல்லாஹ்வின் அருளில் சரியான முறையில் நம்பிக்கை வைத்துள்ளவர்கள் இப்படி தயக்கம் கொள்ளத் தேவை இல்லை. சந்தேகமானதை விட்டு விலகிக் கொள்வதால் வருவாய் குறையும் என்று நம்முடைய அறிவு கூறினாலும் அதனால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்கு உத்தரவாதம் தருகிறார்கள்.

حدثنا عبد الله حدثني أبي ثنا إسماعيل ثنا سليمان بن المغيرة عن حميد بن هلال عن أبي قتادة وأبي الدهماء قالا كانا يكثران السفر نحو هذاالبيت قالا أتينا على رجل من أهل البادية فقال البدوي : أخذ بيدي رسول الله صلى الله عليه و سلم فجعل يعلمنى مما علمه الله تبارك وتعالى وقال إنَّكَ لن تدَعَ شيئًا اتِّقاءَ اللَّهِ، جَلَّ وعَزَّ، إلَّا أعطاكَ اللَّهُ خيرًا منهُ

நீ அல்லாஹ்விற்குப் பயந்து ஏதேனும் விசயத்தை விட்டால் அதை விடச் சிறந்ததை அல்லாஹ் உனக்குத் தருவான் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அஹ்மது  20758.

அல்லாஹ்வுக்கு அஞ்சி சந்தேகமானதை விட்டு நாம் விலகிக் கொண்டால் நாம் நினைத்துப் பார்க்காத வேறு வழிகளை அல்லாஹ் நமக்குக் காட்டுவான். சந்தேகத்தின் காரணமாக நாம் எதைத் தவிர்த்துக் கொண்டோமோ அதை விடச் சிறந்ததை அல்லாஹ் தருவான்.

சந்தேகமானதை விட்டு விடச் சொல்லும்போது அதை ஷைத்தான் பெரிய விஷயமாக நமக்குச் சித்தரித்துக் காட்டி அதில் நம்மைத் தள்ளப் பார்க்கிறான். ஆனால் மார்க்க விஷயத்தில்தான் இப்படியெல்லாம் மனிதன் விதண்டாவாதம் செய்கிறான். ஆனால் உலக வாழ்க்கையில் சந்தேகத்துக்கு இடமானவைகளைத் தவிர்த்துக் கொள்வதுதான் மனிதனின் இயல்பாக இருக்கிறது.

[ஒரு உண்மையான முஃமீன் பிறரிடம் யாசகம் கேட்கமாட்டார்:-]

✍🏻 அன்புள்ளவர்களே!  உழைக்காமல் பிறரின் உழைப்பில் தங்கள் காலத்தை கழித்துவிடலாம் என்று எண்ணுபவர்களை இஸ்லாம் அங்கீகரிக்கவில்லை. அதேபோல் உழைக்காமல் இறைவன் கொடுப்பான் என்று பள்ளிவாசலில் முடங்கி கிடப்பதிலும் எந்த பிரயோசனமும் இல்லை என்பதை இஸ்லாம் அழுத்திச் சொல்கிறது. உடலில் வலு இருந்தும் உழைக்காமல் யாசகம் கேட்பதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை.

நபிகள் நாயகம் அவர்களிடம் ஓர் இளைஞன் வந்து யாசகம் கேட்டான். அவனைப் பார்த்த நபியவர்கள் ‘உன்னுடைய வீட்டில் ஏதேனும் இருக்கிறதா?’ எனக் கேட்டார்கள். ‘ஒரே ஒரு போர்வைதான் உள்ளது’ என்று அந்த இளைஞன் கூறினான். அந்த போர்வையை கொண்டு வரச் செய்த நபியவர்கள், அந்த போர்வையை ஏலம் விட்டார்கள். அந்த பணத்தைக் கொண்டு கோடரி ஒன்றை வாங்கி அந்த இளைஞனிடம் கொடுத்துவிட்டு ‘காட்டிற்கு சென்று விறகு வெட்டிப் பிழைத்துக்கொள். யாசகம் கேட்பதைவிட அதுதான் சிறந்தது’ என்று கூறி அந்த இளைஞனை அனுப்பி வைத்தார்கள்.

பதினைந்து நாட்கள் கழித்து மீண்டும் வந்தான் அந்த இளைஞன், ‘தற்போது நானும் என் குடும்பமும் மகிழ்ச்சியுடன் இருக்கிறோம். தங்களுக்கு நன்றி கூறவே வந்தேன்’ என்று நன்றி சொல்லி விடைபெற்று சென்றான்.

பொருள் வேண்டுவோருக்கு பொருளைக் கொடுப்பதைவிட பொருள் ஈட்டக் கற்றுக்கொடுக்க வேண்டும். அதற்கு வழிவகைகளை செய்து கொடுக்க வேண்டும் என்பதுதான் நபிகள் நாயகம் அவர்களின் மூலம் மனித சமூகத்திற்கு இஸ்லாம் வழங்கியிருக்கும் நற்செய்தியாகும்.

உழைக்காமல் பிறர் தயவை நாடும் சோம்பேரிகளை இஸ்லாம் விரும்பவில்லை. மற்றவர்களிடம் ஒரு மனிதன் கையேந்த ஆரம்பித்தால், அல்லாஹ் அவனின் வறுமையின் வாயிலைத் திறந்து விடுகிறான்‘ எனக் கூறி யாசகம் கேட்பது மென்மேலும் வருமையின் கோரப்பிடிக்கே கொண்டு செல்லும் என நபி (ஸல்) அவர்கள் கண்டித்துள்ளார்கள்.

حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي جَعْفَرٍ، قَالَ: سَمِعْتُ حَمْزَةَ بْنَ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، قَالَ: سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَرَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا يَزَالُ الرَّجُلُ يَسْأَلُ النَّاسَ، حَتَّى يَأْتِيَ يَوْمَ القِيَامَةِ لَيْسَ فِي وَجْهِهِ مُزْعَةُ لَحْمٍ»

(மார்க்கம் அனுமதித்துள்ள காரணம் இன்றி) மக்களிடம் யாசிப்பவன் தன் முகத்தில் சிறிதளவுகூடச் சதை இல்லாதவனாக மறுமை நாளன்று வருவான்.  புகாரி 1474

[ஒரு உண்மையான முஃமீன் ஹராமை விட்டும் விலகி இருப்பார்:-]

 اِنَّمَا حَرَّمَ عَلَيْکُمُ الْمَيْتَةَ وَالدَّمَ وَلَحْمَ الْخِنْزِيْرِ وَمَآ اُهِلَّ بِهٖ لِغَيْرِ اللّٰهِ‌ۚ فَمَنِ اضْطُرَّ غَيْرَ بَاغٍ وَّلَا عَادٍ فَلَاۤ اِثْمَ عَلَيْهِ‌ؕ اِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ‏

தானாகவே செத்ததும், இரத்தமும், பன்றியின் மாமிசமும், அல்லாஹ் அல்லாத பெயர் சொல்லப்பட்டதும் ஆகியவைகளைத்தான் உங்கள் மீது ஹராமாக ஆக்கியிருக்கிறான்; ஆனால் எவரேனும் பாவம் செய்யாத நிலையில் – வரம்பு மீறாமல் (இவற்றை உண்ண) நிர்ப்பந்திக்கப்பட்டால் அவர் மீது குற்றமில்லை; நிச்சயமாக அல்லாஹ் கருணைமிக்கோனும், மன்னிப்பவனுமாக இருக்கின்றான். {அல்குர்ஆன் 2:173..}

பிஸ்மில்லாஹ் சொல்லி அறுக்கப்படாத மாமிசங்களை முஸ்லிம் மக்கள் சாப்பிட்டு ஹராமான சதையை உடம்பில் வளர்கின்றனர்.

ஒரு உண்மையான முஃமீன் தங்களிடம் இருப்பதைக் கொண்டு திருப்தி அடைவார். பேராசைப் பட்டு ஹராமிற்கு செல்லமாட்டார்:

இறைவன் நமக்கு எதைக் கொடுத்திருக்கிறானோ அதில் திருப்தி அடைய வேண்டும் அதுதான் சிறந்த‌  வழி.

நம்மைப் படைத்த இறைவன் நமது தேவைகளையும் நமது நிலைகளையும் நம்மை விட நன்கு அறிந்தவன். அவன் நமக்குக் குறைவாகக் கொடுத்தாலும் அதில் நமது தேவையை நிறைவு செய்வான். அல்லது நமக்குச் சிரமத்தைக் கொடுத்துச் சோதித்துப் பார்ப்பதற்காக நமக்கு அளவோடு தந்திருப்பான் என்று நாம் கருதிக் கொண்டால் நமக்குக் கிடைத்திருப்பதில் திருப்தி ஏற்பட்டுவிடும். திருப்தி ஏற்பட்டு விட்டால் நம்முடைய நிம்மதிக்கு எந்தப் பங்கமும் ஏற்படாது.

حَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ وَابْنُ نُمَيْرٍ قَالاَ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ عَنْ أَبِى الزِّنَادِ عَنِ الأَعْرَجِ عَنْ أَبِى هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « لَيْسَ الْغِنَى عَنْ كَثْرَةِ الْعَرَضِ وَلَكِنَّ الْغِنَى غِنَى النَّفْسِ ».

வாழ்க்கை வசதிகள் அதிகமாக இருப்பது செல்வமன்று; மாறாக, போதுமென்ற மனமே (உண்மையான) செல்வமாகும்.  முஸ்லிம் 2467

இருப்பதை வைத்து திருப்தி அடையாதவன் மற்றவர்களைப் பார்த்து பொறாமைப்படுகிறான். கடன் வாங்கி பெருமை அடிக்கிறான். வசதி படைத்தவர்கள் வீடு கட்டுவதையும், கார் வாங்குவதையும் இன்ன பிற ஆடம்பரப் பொருட்களை வாங்கி தன்னை தானே சிரமத்திற்கு உள்ளாக்குகிறான் இவையெல்லாம் போதுமென்ற மனமில்லாததே காரணமாகும்.

கடன் வாங்கிவிட்டு அதைக் கட்ட முடியாமல் திணறுவதற்கும் கடன் கொடுத்தவன் முன்னால் கூனிக் குறுகி நிற்பதற்கும் காரணம் போதுமென்ற மனமில்லாததே.

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِى شَيْبَةَ حَدَّثَنَا أَبُو عَبْدِ الرَّحْمَنِ الْمُقْرِئُ عَنْ سَعِيدِ بْنِ أَبِى أَيُّوبَ حَدَّثَنِى شُرَحْبِيلُ – وَهُوَ ابْنُ شَرِيكٍ – عَنْ أَبِى عَبْدِالرَّحْمَنِ الْحُبُلِىِّ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ « قَدْ أَفْلَحَ مَنْ أَسْلَمَ وَرُزِقَ كَفَافًا وَقَنَّعَهُ اللَّهُ بِمَا آتَاهُ ».

யார் இஸ்லாத்தை ஏற்று போதுமான வாழ்வாதாரம் வழங்கப்பட்டு, அல்லாஹ் வழங்கியதைப் போதுமெனக் கருதினாரோ அவர் (வாழ்க்கையில்) வெற்றி பெற்று விட்டார். நூல் : முஸ்லிம் 2473

حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ أَبُو المُنْذِرِ الطُّفَاوِيُّ، عَنْ سُلَيْمَانَ الأَعْمَشِ، قَالَ: حَدَّثَنِي مُجَاهِدٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَرَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: أَخَذَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمَنْكِبِي، فَقَالَ: «كُنْ فِي الدُّنْيَا كَأَنَّكَ غَرِيبٌ أَوْ عَابِرُ سَبِيلٍ» وَكَانَ ابْنُ عُمَرَ، يَقُولُ: «إِذَا أَمْسَيْتَ فَلاَ تَنْتَظِرِ الصَّبَاحَ، وَإِذَا أَصْبَحْتَ فَلاَ تَنْتَظِرِ المَسَاءَ، وَخُذْ مِنْ صِحَّتِكَ لِمَرَضِكَ، وَمِنْ حَيَاتِكَ لِمَوْتِكَ»

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என் தோளைப் பிடித்துக் கொண்டு “உலகத்தில் நீ வெளியூர்வாசியைப் போன்று, அல்லது வழிப்போக்கனைப் போன்று இரு” என்று சொன்னார்கள். புகாரி 6416

حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ قَالَ قُتَيْبَةُ حَدَّثَنَا وَقَالَ يَحْيَى أَخْبَرَنَا الْمُغِيرَةُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الْحِزَامِىُّ عَنْ أَبِى الزِّنَادِ عَنِ الأَعْرَجِ عَنْ أَبِى هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ « إِذَا نَظَرَ أَحَدُكُمْ إِلَى مَنْ فُضِّلَ عَلَيْهِ فِى الْمَالِ وَالْخَلْقِ فَلْيَنْظُرْ إِلَى مَنْ هُوَ أَسْفَلَ مِنْهُ مِمَّنْ فُضِّلَ عَلَيْهِ ».

உங்களுக்குக் கீழிருப்பவர்களைப் பாருங்கள். உங்களை விட மேலிருப்பவர்களைப் பார்க்காதீர்கள். அதுவே அல்லாஹ் புரிந்திருக்கும் அருட்கொடைகளை நீங்கள் குறைத்து மதிப்பிடாமலிருக்க மிகவும் ஏற்றதாகும். முஸ்லிம் 7619

حَدَّثَنَا إِسْمَاعِيلُ عَنْ يُونُسَ حَدَّثَنِي أَبُو الْعَلَاءِ بْنُ الشِّخِّيرِ حَدَّثَنِي أَحَدُ بَنِي سُلَيْمٍ وَلَا أَحْسَبُهُ إِلَّا قَدْ رَأَى رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّ اللَّهَتَبَارَكَ وَتَعَالَى يَبْتَلِي عَبْدَهُ بِمَا أَعْطَاهُ فَمَنْ رَضِيَ بِمَا قَسَمَ اللَّهُ عَزَّ وَجَلَّ لَهُ بَارَكَ اللَّهُ لَهُ فِيهِ وَوَسَّعَهُ وَمَنْ لَمْ يَرْضَ لَمْ يُبَارِكْ لَهُ

அல்லாஹ் தன் அடியானுக்கு வழங்கியதில் சோதிக்கிறான். அல்லாஹ் பங்கிட்டுத் தந்ததை யார் பொருந்திக் கொள்கிறாரோ அவருக்கு அல்லாஹ் தந்தவற்றில் பரக்கத் செய்கிறான். மேலும் விசாலமாக்குகிறான். எவர் பொருந்திக் கொள்ளவில்லையோ அவருக்கு அல்லாஹ் பரக்கத் செய்ய மாட்டான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.. அஹ்மத் 19398

[ஹராமான சம்பாத்தியதில் செல்வம் குவியும் போது இறை நினைவை மறக்கடிக்கப்படுகிறது:-]

✍🏻 அன்புள்ளவர்களே!  செல்வம் குவியும் போது அது படைத்த இறைவனை மறக்கடிக்கச் செய்து விடும் என்பது தீய‌ பொருளாதாரத்தினால் ஏற்படும் மற்றொரு தீமையாகும்.

ஹராமான சம்பாத்தியதில் செல்வம் குவியும் போது இறை நினைவை  மறந்து விடுவதை நாம் பார்க்கிறோம். இதைப்பற்றி அல்லாஹ் பின்வருமாறு எச்சரிக்கிறான்.

  يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تُلْهِكُمْ اَمْوَالُكُمْ وَلَاۤ اَوْلَادُكُمْ عَنْ ذِكْرِ اللّٰهِ‌ۚ وَمَنْ يَّفْعَلْ ذٰلِكَ فَاُولٰٓٮِٕكَ هُمُ الْخٰسِرُوْنَ‏

நம்பிக்கை கொண்டோரே! உங்களின் பொருட்செல்வமும், மக்கட்செல்வமும் அல்லாஹ்வின் நினைவை விட்டு உங்களைத் திசை திருப்பி விட வேண்டாம். இதைச் செய்வோரே நஷ்டமடைந்தவர்கள். திருக்குர்ஆன் : 63:9

[ஒரு உண்மையான மீனுக்கு ஹலாலான‌ குறைந்த செல்வத்திலும் பரக்கத் உண்டு:-]

✍🏻 அன்புள்ளவர்களே!  சிலருக்கு அதிகமான செல்வம் கிடைத்தும் தேவைகள் நிறைவேறாமல் போவதையும் வேறு சிலருக்கு குறைந்த அளவு செல்வத்திலும் அதிகமான தேவைகளை அல்லாஹ் நிறைவேற்றி விடுவதையும் நாம் காண்கிறோம். இது பரக்கத் எனும் மறைமுக அருளாகும்.

100 ரூபாய் நமக்குத் தேவை என்று நினைக்கும்போது 50 ரூபாய்தான் கிடைக்கிறது என்றால் அது பற்றாக்குறை என்று நமக்குத் தோன்றும்.

ஒரு முஸ்லிமைப் பொருத்தவரை இப்படித் தோன்ற வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் நூறு ரூபாயில் நிறைவேற வேண்டிய தேவை 50 ரூபாயில் நிறைவேறலாம்.

பொதுவாக ஒருவேளை உணவுக்கு 200 கிராம் அரிசி ஒருவருக்குத் தேவைப்படுகிறது. ஆனால் சில குடும்பங்களில் 200 கிராம் அரிசியை இரண்டு பேர் வயிறார உண்ணுவதை நாம் காணமுடிகிறது. அதாவது இந்த அரிசி இரு மடங்கு பயனளிக்கிறது. நம்முடைய கணக்கை மிஞ்சும் வகையில் மறைமுகமான அருள் இதில் ஒளிந்திருப்பதை நாம் உணர்கிறோம்.

ஒருவன் பத்தாயிரம் ரூபாய் சம்பாதிக்கிறான். அவனால் இரு குழந்தைகளைக்கூடப் படிக்க வைக்க முடியவில்லை. ஆனால் ஒருவன் இரண்டாயிரம் ரூபாய்தான் சம்பாதிக்கிறான். அதில் அவன் ஐந்து குழந்தைகளைப் படிக்க வைத்து, தனது ஏனைய தேவைகளையும் அதிலேயே பூர்த்தி செய்து விடுகிறான் என்றால் இதில்தான் பரக்கத் உள்ளது.

எண்ணிக்கையில் வேண்டுமானால் பத்தாயிரம் என்பது பெரிதாக இருக்கலாம் ஆனால் பயனளிப்பதில் இந்த இரண்டாயிரம்தான் சிறந்தது.

முஸ்லிமல்லாத சமுதாயங்களில் ஒரு குடும்பத்தில் ஏழு உறுப்பினர்கள் இருந்தால் ஏழு பேரும் சம்பாதிப்பார்கள். ஒரு நபர் தினமும் முன்னூறு ரூபாய் சம்பாதித்தால் ஏழு பேரும் சேர்ந்து ஒரு நாளைக்கு இரண்டாயிரத்து நூறு ரூபாய்கள் சம்பாதிக்கிறார்கள். இவர்களின் மாத வருமானம் அறுபத்து மூவாயிரம் ரூபாய்களாகும். இவ்வளவு அதிக வருமானம் வந்தும் இவர்களில் அதிகமானோர் குடிசைகளில்தான் வசிக்கிறார்கள்.

முஸ்லிம்களின் குடும்பங்களில் பெரும்பாலும் ஒருவர்தான் சம்பாதிக்கிறார். தாயையோ, மனைவியையோ, மகளையோ, தந்தையையோ பெரும்பாலும் முஸ்லிம்கள் வேலைக்கு அனுப்ப மாட்டார்கள். ஆனாலும் ஒருவரின் ஐயாயிரம் ரூபாய் வருமானத்தில் குடும்பத்தின் அனைத்துத் தேவைகளும் நிறைவேறுவதை நாம் பார்க்கிறோம்.

அல்லாஹ்வை அறைகுறையாக நம்பிய நாமே இந்தப் பயனை அடைகிறோம் என்றால் அல்லாஹ்வை முறையாக நம்பினால் எப்படிப்பட்ட அதிசயத்தை அல்லாஹ் நிகழ்த்துவான் என்பதை நாம் சற்றே சிந்திக்க வேண்டும்.

உழைப்பின் அருமையை நாம் அனைவரும் உணர்ந்துகொண்டு, அதற்கு ஏற்ப இறைவனை வணங்கி, உழைத்து வாழ்வோம். 

【 மக்தப் மாணக்கர்களுக்கு…!!.】

✍🏻 அன்புள்ளவர்களே! 【 மழைக்காலத்தில் ஓதும் துஆ】 தற்போது மழைக்காலமாக இருப்பதினால் மழைக்காலத்தில் ஓத வேண்டிய சுன்னத்தான சில துஆக்கள் உள்ளன. அவைகளை நம் பள்ளி போடில் எழுதி போடப்பட்டுள்ளது. அதை கொஞ்சம் கொஞ்ச‌மாக மனனம் செய்ய முயற்சிப்போமாக! ஆமீன்.

அன்புள்ள உஸ்தாதுகளே ! தற்போது மழைக்காலமாக இருப்பதினால்

  • மழை வேண்டும் போது ஓதும் துஆ,
  • மழை பொழியும் போது ஓதும் துஆ,
  • மழை பொழிந்த பின் ஓதும் துஆ   
  • தேவைக்கு அதிகமாக மழை பெய்யும்போது

என கீழ்கண்ட துஆவை மஸ்ஜித்   போர்டில் எழுதி ஞாபக &  விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள் . இதன் மூலம் ஹிதாயத் கிடைக்கும் இன்ஷா அல்லாஹ்.

 【 மழை வேண்டும் போது】

اللَّهُمَّ اسْقِنَا غَيْثًا مُغِيثًا ، مَرِيئًا مُرِيعًا ، نَافِعًا غَيْرَ ضَارٍّ ، عَاجِلًا غَيْرَ آجِلٍ

அல்லாஹும்ம அஸ்கினா ஃகைஸன் முஃகீஸன் மரீஅன் மரீஃஅன் நாஃபிஅன் ஃகைர ளார்ரின் ஃஆஜிலன் ஃகைர ஆஜிலின்

பொருள் : யா அல்லாஹ்! எங்களுக்கு உதவிகரமான, மகிழ்ச்சிகரமான, பசுமை ஏற்படுத்தக்கூடிய மழையைப் பொழிய செய்வாயாக! நன்மை தரக்கூடிய நட்டம் ஏறபடுத்தாத விரைவான தாமதமாகாத மழையை பொழியச் செய்வாயாக!.  அபூதாவுத்

اَللّهُمَّ أَغِثْنَا اَللّهُمَّ أَغِثْنَا اَللّهُمَّ أَغِثْنَا

அல்லாஹ்ஹும்ம அஃகிஸ்னா, அல்லாஹ்ஹும்ம அஃகிஸ்னா, அல்லாஹ்ஹும்ம அஃகிஸ்னா,

பொருள் : யா அல்லாஹ்! மழை பொழிய செய்வாயாக! யா அல்லாஹ்! மழை பொழிய செய்வாயாக! யா அல்லாஹ்! மழை பொழிய செய்வாயாக!  புகாரி, 

اللَّهُمَّ اسْقِ عِبَادَكَ وَبَهَائِمَكَ ، وَانْشُرْ رَحْمَتَكَ ، وَأَحْيِ بَلَدَكَ الْمَيِّتَ

அல்லாஹும்மஸ்கி இபாதக வ பஹாயிமக வன்ஷுர் ரஹ்மதக வ அஹ்யீ பலதகள் மய்யித

பொருள் :யா அல்லாஹ்! உன் அடியார்களுக்கும் விலங்குகளுக்கும் தண்ணீர் புகட்டுவாயாக! மேலும் உனது அருளை பரப்புவாயாக! வறண்டு கிடக்கும் இந்த உனது ஊருக்கு உயிர் கொடுப்பாயாக! [அபூதாவுத்]

【 மழை பொழியும் போது 】

اَللّهُمَّ صَيِّبًا نَافِعًا அல்லாஹும்ம ஸய்யிபன் நாஃபிஅன் பொருள் : இறைவா! பயனுள்ள மழையாக இதை ஆக்கு! [புகாரி]

【 மழை பொழிந்த பின் 】

مُطِرْنَا بِفَضْلِ اللهِ وَرَحْمَتِهِ முதிர்னா பி ஃபள்லிலில்லாஹி வரஹ்மதிஹி

பொருள் : அல்லாஹ்வின் அருளினாலும், அவனது கிருபையினாலும் நம்மீது மழை பொழிந்தது. [புகாரி, முஸ்லிம்]

【தேவைக்கு அதிகமாக மழை பெய்யும்போது】

اَللّهُمَّ عَلَى الآكَامِ وَالْجِبَالِ وَالآجَامِ وَالظّرَابِ وَالأَوْدِيَةِ وَمَنَابِتِ الشَّجَرِ

அல்லாஹும்ம அலல் ஆகாமி வல் ஜிபாலி வல் ஆஜாமி வள்ளிராபி வல் அவ்திய(த்)தி வ மனாபிதிஷ் ஷஜரி.

பொருள் : யா அல்லாஹ்! மேடுகளிலும், மலைகளிலும், குன்றுகளிலும், ஓடைகளிலும், கோட்டைகளிலும், மரங்கள் முளைக்கும் இடங்களிலும் இந்த மழையை பொழியச் செய்வாயாக. [புகாரி, முஸ்லிம்]

சபதம் எடுங்கள்…

✍🏻 அன்புள்ளவர்களே! இன்ஷா அல்லாஹ் இன்றிலிருந்து. எனது மவ்த் வரைக்கும் ஹலால் – ஹராமைப் பேணி வாழவேன் என்று.. ..  எல்லாம் வல்ல அல்லாஹ்   அவனது பேரருளை ஈருலகிலும் நிரப்பமாக‌ தந்தருள்வானாக!!! மின் என துஆ செய்தவனாக எனது ஜுமுஆ குறிப்புரையை நிறைவு செய்கிறேன்.  (وَآخِرُ دَعْواهُمْ أَنِ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعالَمِينَ****** صلى الله وسلم على محمد وعلى آله وصحبه أجمعين والحمد لله رب العالمين *******  வாஆகிறு தஃவானா அனில்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்.

✍🏻✍🏻நன்றியுரை:-  تقبل الله منا ومنكم صالح الأعمال نسأل الله أن ييسر لنا أمورنا  ويشرح صدورنا

 “‏ بَلِّغُوا عَنِّي وَلَوْ آيَةً، என்னிடமிருந்து ஒரேயொரு (சிறு) செய்தி கிடைத்தாலும் சரி, அதை(ப் பிறருக்கு) எடுத்துரையுங்கள். புகாரி 3461.

இது போன்று அல்லாஹ்வும், அவனது தூதரும் காட்டி தந்த வழி முறைகளை பின் பற்றி ஹலால் – ஹராமைப் பேணி வாழ‌  வல்ல ரஹ்மான் அருள் புரிவானாக!   ஆமின் என துஆ செய்தவனாக எனது ஜுமுஆ குறிப்புரையை நிறைவு செய்கிறேன்(وَآخِرُ دَعْواهُمْ أَنِ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعالَمِينَ)

✍ இன்னும் சொல்ல வேண்டியது நிறைவாய் உள்ளது நேரத்தின் நலனை கருதி முடித்துக் கொள்கிறேன் வ ஆகிரு தஃவானா அனில் ஹம்து லில்லாஹி ர‌ப்பில் ஆலமீன்.

****** صلى الله وسلم على محمد وعلى آله وصحبه أجمعين والحمد لله رب العالمين *******

✍🏻✍🏻நன்றியுரை:-

“‏ بَلِّغُوا عَنِّي وَلَوْ آيَةً، என்னிடமிருந்து ஒரேயொரு (சிறு) செய்தி கிடைத்தாலும் சரி, அதை(ப் பிறருக்கு) எடுத்துரையுங்கள். புகாரி 3461.


Popular posts from this blog

ஈஸா (அலை) செய்த அற்புதங்களும் நாம்பெறவேண்டிய படிப்பினைகளும். 23-12_22

குர்பானி ஏற்படுத்தும் மாற்றங்களும்,அரஃபா நாள் நோன்பும், அய்யாமுத் தஷ்ரீக் தக்பீரும்… 13-06-2024

பைத்துல் முகத்தஸ்