ஷஃபான் மாதத்தின் சிறப்புகள்



1️⃣ஷஃபான் மாதத்தின் சிறப்புகள்

வணக்கங்கள் புரியவும், நன்மைகளையும், பரகத்துகளையும் பெறவும் உகந்த மாதமாக ஷஃபானுடைய மாதம் திகழ்கிறது.ஷஃபானுடைய மாதம் மிக உயர்ந்த மாதமாகும்.நல்அமல்கள் புரிய மிக ஏற்றமான மாதமாகும்.
ரஜபிற்கும், ரமளானிற்கும் இடையிலுள்ள இம்மாதத்தை விட்டும் அதிகமான மக்கள் பொடுபோக்காக உள்ளார்கள்.இறைப் பொருத்தத்தை பெறுவதற்காக மக்களில் குறைவான நபர்களே இம்மாதத்தை நல்அமல்களில் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஷஃபான் மாதத்தில் அதிகமாக நோன்பு நோற்றுள்ளார்கள்.பிற மாதங்களைக் காண இம்மாதத்தில் அதிக நோன்புகளை நோற்றுள்ளார்கள்.

عَنْ عَائِشَةَ رَضِي اللَّهم عَنْهَا قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ يَصُومُ حَتَّى نَقُولَ لَا يُفْطِرُ وَيُفْطِرُ حَتَّى نَقُولَ لَا يَصُومُ فَمَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ اسْتَكْمَلَ صِيَامَ شَهْرٍ إِلَّا رَمَضَانَ وَمَا رَأَيْتُهُ أَكْثَرَ صِيَامًا مِنْهُ فِي شَعْبَانَ (متفق عليه).

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நோன்பை விடமாட்டார்கள் என்று நாம் சொல்லுமளவுக்கு நோன்பு வைப்பவர்களாக இருந்தார்கள். நோன்பு வைக்கவில்லை என்று நாம் சொல்லுமளவுக்கு நோன்பு வைக்காதவர்களாகவும் இருந்தார்கள். நபியவர்கள் ரமழானைத் தவிர முழமையாக நோன்பு நோற்ற வேறொரு மாதத்தை நான் பார்க்கவில்லை. நபியவர்கள் அதிகம் நோன்பு வைத்த மாதம் ஷஃபானாகும். என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: முத்தபகுன் அலைஹி).

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي قَيْسٍ سَمِعَ عَائِشَةَ تَقُولُ كَانَ أَحَبَّ الشُّهُورِ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَصُومَهُ شَعْبَانُ ثُمَّ يَصِلُهُ بِرَمَضَانَ (أبوداود, نسائي).

நபியவர்கள் நோன்பு வைப்பதற்கு அதிகம் விரும்பிய மாதம் ஷஃபானும், அதைத் தொடர்ந்துள்ள ரமழானுமாகும். என்று ஆயிஷா (ரலி) அவர்களிடம் செவிமடுத்தாக அப்துல்லாஹ் இப்னு கைஸ் (ரலி) குறிப்பிடுகிறார். (அபூதாவுத், நஸாயி)

ஷஃபான் மாதத்தில் ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அதிக நோன்புகளை நோற்றதின் ஹிக்மத் யாதெனில்,ரஜப் மாதத்திற்கும்,ரமளான் மாதத்திற்கும் இடையில் வரும் ஷஃபான் மாதத்தில் மக்கள் நல் அமல்கள் செய்வதை விட்டும் அதிக பொடுபோக்குடன்  இருக்கிறார்கள்.
மேலும் ஷஃபான் மாதத்தில்தான்  அல்லாஹுதஆலாவின் அளவில் நம்முடைய அமல்கள் உயர்த்தப்படுகிறது.எனவே தான் நபியவர்கள் தான் நோன்பு நோற்ற நிலையில் தன் அமல்கள் உயர்த்தப்படுவதை மிகவும் விரும்பினார்கள்.

நபியவர்கள் ஷஃபான் மாதத்தில் அதிக நோன்புகளை நோற்றதை கண்ட ஸஹாபா பெருமக்கள் அதன் ரகசியத்தை நபியவர்களிடம் கேட்டார்கள்.அப்பொழுது நபியவர்கள் இவ்வாறு கூறினார்கள்.

قَالَ حَدَّثَنِي أَبُو سَعِيدٍ الْمَقْبُرِيُّ قَالَ حَدَّثَنِي أُسَامَةُ ابْنُ زَيْدٍ قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ لَمْ أَرَكَ تَصُومُ شَهْرًا مِنَ الشُّهُورِ مَا تَصُومُ مِنْ شَعْبَانَ قَالَ ذَلِكَ شَهْرٌ يَغْفُلُ النَّاسُ عَنْهُ بَيْنَ رَجَبٍ وَرَمَضَانَ وَهُوَ شَهْرٌ تُرْفَعُ فِيهِ الْأَعْمَالُ إِلَى رَبِّ الْعَالَمِينَ فَأُحِبُّ أَنْ يُرْفَعَ عَمَلِي وَأَنَا صَائِمٌ (نسائي, أحمد).

உஸாமதிப்னு ஸைத் (ரலி) அவர்கள் நபியவர்ளிடம்: அல்லாஹ்வின் தூதரே! ஷஃபானை போன்று வேறொரு மாதத்தில் நீங்கள் நோன்பு நோற்பதை நான் காணவில்லை என்று கூறிய போது, நபியவர்கள்: மனிதர்கள் ரஜப், ரமழான் ஆகிய இரு மாதங்களுக்கு மத்தியிலுள்ள ஒரு மாதம் விஷயத்தில் பாராமுகமாக இருக்கின்றனர். அது எப்படிப்பட்ட மாதம் எனில் அகிலத்தாரின் அதிபதியாகிய அல்லாஹ்வின்பால் வணக்க வழிபாடுகள் உயர்த்தப்படக்கூடிய மாதமாகும். எனது வணக்க வழிபாடுகள் நான் நோன்பாளியாக இருக்கும் நிலையில் உயர்த்தப்பட வேண்டுமென விரும்புகிறேன் என கூறினார்கள். (ஆதாரம்: நஸாயி, அஹ்மத்).

மேலும் ஷஃபான் மாத நோன்பு எதிர்வரும் ரமளான் நோன்பிற்கான பயிற்சியாக அமைகிறது.ஷஃபான் மாத நோன்பு ஃபர்ளான தொழுகைக்கு முன்னால் தொழப்படும் முன் சுன்னத்துகளுக்கு ஒப்பாக உள்ளது.மேலும் ரமளானுக்கு பின்வரும் ஷவ்வாலின் ஆறுநாட்களின் நோன்பு ஃபர்ளான தொழுகைக்குப் பின்னால் தொழப்படும் பின் சுன்னத்துக்களைப் போன்றதாகும்.ஏனெனில் எவ்வாறு ஃபர்ளான தொழுகைகளில் ஏற்படும் குற்றங்குறைகளுக்கு நஃபிலான தொழுகைகள் பரிகாரமாக ஆக்கப்படுகிறதோ அதேபோன்று ஃபர்ளான ரமளான் நோன்பில் ஏற்படும் குற்றங்களுக்கு பரிகாரமாக ஷஃபானுடைய நோன்பும்,ஷவ்வாலுடைய நோன்பும் அமைகிறது.

கியாமத் நாளன்று, மனிதனுடைய அமல்களில் முதன் முதலாக தொழுகையைப் பற்றி கேட்கப்படும், தொழுகை சரியாக இருந்தால் அவர் வெற்றியடைந்துவிடுவார், தன் நோக்கத்தை அடைந்துவிடுவார், தொழுகை சரியில்லையென்றால், அவர் தோல்வி அடைந்து நஷ்டமும் அடைவார், பர்ளுத் தொழுகையில் குறையிருந்தால், பர்ளின் குறைகளை நிவர்த்தி செய்ய எனது அடியானிடம் நஃபில்கள் ஏதேனும் இருக்கிறதா பாருங்கள்'' என்று அல்லாஹ் மலக்குகளிடம் கூறுவான், நஃபில்கள் இருந்தால் அவற்றைக் கொண்டு பர்ளுகளின் குறைகளை நிறைவு செய்யப்படும், இவ்வாறே மற்ற அமல்கள் நோன்பு, ஸகாத், போன்றவைகளின் கணக்கு வழக்கு நடைபெறும். (பர்ளான நோன்புகளின் குறை நஃபில் நோன்புகள் மூலம் நிறைவு செய்யப்படும், ஸகாத்தின் குறை நஃபிலான தர்மத்தால் நிறைவு செய்யப்படும்)'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(திர்மிதி)

1)மக்கள் பாராமுகமாக இருக்கும் நேரத்தில் நல்அமல்கள் புரிவதின் சிறப்புகள்!

நபியவர்கள் ஷஃபான் மாதத்தைப் பற்றி கூறும்பொழுது "மக்கள் அதில் பாராமுகமாக இருக்கிறார்கள்" எனக் குறிப்பிடுகிறார்கள்.

இதன் மூலம் மக்கள் பாராமுகமாக இருக்கும் நேரங்களில் வணக்கங்கள் புரிவது சிறந்தது என்பதை நாம் அறிகிறோம்.

அதாவது மக்கள் எல்லாம் வேறு விஷயங்களில் மூழ்கி இருக்கும் சமயங்களில்,குறிப்பிட்ட சில நேரங்களை விட்டும் மக்கள பாராமுகமாக  இருக்கும் நிலையில் செய்யப்படும் நல்அமல்கள் அல்லாஹ்விற்கும், அவனுடைய தூதருக்கும் மிகப் பிரியமானவையாக ஆகிவிடுகின்றது.

எனவேதான் நம் முன்னோர்களான நல்லோர்கள் மஃரிபிற்கும், இஷாவிற்குமிடையில் உள்ள நேரங்களில் நஃபிலான வணக்கங்கள் புரிவதை விரும்பத்தக்கதாக கருதினார்கள்.காரணம்,அந்நேரம் "மக்கள் பாராமுகமாக இருக்கும் நேரம் என்பதால்" அந்நேரத்தில் வணக்கம் புரிவதை விரும்பினார்கள்.

மேலும் இரவின் கடைசிப் பகுதியில் நின்று வணங்குவதும் இதன் காரணமாகவே சிறப்பித்து கூறப்பட்டுள்ளது.காரணம் "அந்நேரத்தை விட்டும் மக்கள் அனைவரும் பாராமுகமாக இருப்பார்கள்".அந்நேரத்தில் ஒருவர் அல்லாஹ்வை நினைவு கூறுவது என்பது மிகச் சிறப்பானதாகும்.

சுவர்க்கத்தில் உள்ளே உள்ளவை வெளியேயும், வெளியில் உள்ளவை உள்ளேயும் காட்சியளிக்கக் கூடிய மாடங்கள் உள்ளன. இம்மாடங்களை மக்களுக்கு உணவளித்து மக்களுக்கு மத்தியில் ஸலாமைப் பரப்பியும், மக்கள் யாவரும் தூங்கும் போது இரவு நேரத்தில் தொழுதும் வந்தவர்களுக்காக அல்லாஹ் தயாரித்து வைத்துள்ளான்'' என்று ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூமாலிக் அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(இப்னு ஹிப்பான்)

எனவே எந்த இடங்களில் எல்லாம் மக்கள் அல்லாஹ்வின் நினைவை விட்டும் பாராமுகமாக உள்ளார்களோ அந்த இடங்கள் அனைத்திலும் அல்லாஹ்வை நினைவு கூறுவது முஸ்தஸப் ஆகும்.உதாரணமாக:கடைவீதிகளிலும்,வீணான சபைகளிலும்...

பயணத்தில் அல்லாஹ்வை நினைவு கூறுதல்...

எவரேனும் ஒரு பிரயாணி தான் பிரயாணத்தின் போது, உலக அலுவல்களிலிருந்து அகன்று அல்லாஹ்வின் நினைவில் திளைத்திருந்தால் அவருடன் ஒரு மலக்கு இணைந்து கொள்கிறார். வீணான கவிதைகள் (அல்லது) தேவையற்ற காரியங்களில் ஈடுபட்டிருந்தால் ஷைத்தான் அவருடன் இணைந்து கொள்கிறான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் உக்பத் இப்னு ஆமிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(தபரானீ, மஜ்மஉஸ்ஸவாயித்)

இன்று பயணத்தில் வீணான விஷயங்களை கேட்பதை நாம் பழக்கமாக்கி வைத்துள்ளோம்.அதுதான் இனிமையான பயணம் என்றும் கூறிக் கொள்கிறோம்.ஆனால் அந்நேரத்தில் அல்லாஹ்வை நினைவு கூறுவது என்பது மிகச் சிறந்த விஷயமாகும்.

படுக்கையில் அல்லாஹ்வை நினைவு கூறுவது...

மிருதுவான படுக்கைகளில் இருந்தவாறு அல்லாஹ்வை திக்ரு செய்யும் பலரை, அல்லாஹ் அவர்களது திக்ரின் பரக்கத்தால் சுவனத்தின் உயர் பதவிகளில் நுழையச் செய்வான்'', என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஸஈத் குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(அபூயஃலா, மஜ்மஉஸ்ஸவாயித்)

பொதுவாக மக்கள் படுக்ககையில் திக்ரை விட்டும் பாராமுகமாக இருப்பார்கள்.அந்த இடத்திலும் அல்லாஹ்வை நினைவு கூறுபவருக்கு சிறந்த வெகுமானம் கிடைக்கிறது.

கடைவீதியில் அல்லாஹ்வை நினைவு கூறுபவருக்கும் அல்லாஹ் தன் கருணையால் நன்மைகளை வாரி வழங்குகிறான்.

ஒருவர் கடைவீதியில் நுழையும்போது, (لاَ إِلهَ إِلاَّ اللهُ وَحْدَهُ لاَشَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ يُحْيِي وَيُمِيتُ وَهُوَ حَيٌّ لاَ يَمُوتُ بِيَدِهِ الْخَيْرُ وَهُوَ عَلي كُلِّ شَيْءٍ قَدِيرٌ) வணக்கத்திற்குரிய நாயன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை அவன் தனித்தவன், அவனுக்கு இணை, துணை இல்லை. அவனுக்கே ஆட்சி சொந்தமானது, அவனுக்கே அனைத்துப் புகழும்!. அவன் மரித்தவர்களை உயிர்ப்பிப்பான், அவனே உயிருள்ளவைகளை மரணிக்கச் செய்வான், அவன் உயிருடன் இருப்பவன்; மரணமடையமாட்டான். அவன் எல்லாப் பொருட்களின் மீதும் சக்தி பெற்றவன்'' என்று கூறுவாரானால், அல்லாஹுதஆலா அவருக்குப் பத்து லட்சம் நன்மைகளை எழுதுகின்றான். அவருடைய பத்து லட்சம் தீமைகளை அழிக்கிறான். அவருக்குப் பத்து லட்சம் தகுதிகளை உயர்த்துகிறான்'' என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் உமரிப்னு கத்தாப் (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.பத்து லட்சம் தகுதிகள் உயர்த்தப்படும் என்பதற்குப் பதில் சுவனத்தில் ஒரு மாளிகை அமைக்கப்படும் என இன்னோர் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
(திர்மிதி)

2️⃣அமல்கள் உயர்த்தப்படும் மூன்று தருணங்கள்

நாம் வருடம் முழுவதும் செய்த அமல்கள் ஷஃபானுடைய மாதம் அல்லாஹுதஆலாவின் அளவில் உயர்த்தப்படுகிறது.நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தான் நோன்பு நோற்ற நிலையில் தன் அமல்கள் உயர்த்தப்படுவதை விரும்பினார்கள்.ஏனெனில் உயர்த்தப்படும் அமல்கள் அல்லாஹ்விடம் ஏற்கப்படுவதற்கும்,அந்தஸ்துகள் உயர்த்தப்படுவதற்கும் இவ்வாறு நோன்பு நோற்பது ஏற்றமானதாகும்.எனவே நாமும் நபியவர்களை பின்பற்றி ஷஃபானுடைய மாதத்தில் அதிக நோன்பு நோற்க முயற்சிக்க வேண்டும்.

குர்ஆன் ஹதீஸுடைய ஆதாரங்களின் அடிப்படையில் நம்முடைய அமல்கள் மூன்று தருணங்களில் அல்லாஹ்விடம் உயர்த்தப்படுகிறது.

முதல் தருணம்:தினந்தோறும் உயர்த்தப்படும் அமல்கள்.

தினந்தோறும் பகல், இரவு என இருமுறை அல்லாஹ்வின் பால் அமல்கள் உயர்த்தப்படுகின்றன.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:பகலுடைய அமலுக்கு முன்பாக இரவின் அமல் அல்லாஹ்வின் பால் உயர்த்தப்படுகிறது.இரவின் அமலுக்கு முன்பாக பகலுடைய அமல் அவனளவில் உயர்த்தப்படுகிறது.
(முஸ்லிம்)

பகலுடைய அமல்கள் அதன் இறுதியிலும்,இரவுடைய அமல்கள் அதன் இறுதியிலும் உயர்த்தப்படுகிறது.மலக்குமார்கள் இரவின் அமல்களை அதன் இறுதியில் அதாவது பகலுடைய ஆரம்பத்தில் மேலே கொண்டு செல்கிறார்கள்.பகலுடைய அமல்களை அதன் இறுதியில் அதாவது இரவின் ஆரம்பத்தில் மேலே கொண்டு செல்கிறார்கள்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

இரவின் மலக்குமார்களும்,பகலின் மலக்குமார்களும் உங்களிடத்தில் பின்தொடர்ந்து வருகிறார்கள்.அவர்கள் ஃபஜ்ருடைய தொழுகையிலும்,அஸருடைய தொழுகையிலும் ஒன்று சேருகிறார்கள்.
(புகாரி,முஸ்லிம்)

எவர் அந்நேரத்தில் வணக்கம் புரிகிறாரோ அவருக்கு ரிஜ்கிலும்,அமலிலும் பரகத் செய்யப்படுகிறது.
(ஃபத்ஹுல் பாரி 2/37)

ழஹ்ஹாக் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் பகலின் இறுதியில் அழுவார்கள்.காரணம்,என் அமல் உயர்த்தப்படுகிறது.அதன் முடிவை பயந்து அழுவதாக கூறுவார்கள்.
(லதாயிஃபுல் மஆரிஃப், பக்:127)

இரண்டாம் தருணம்:ஒரு வாரத்தில் செய்த அமல்கள் அல்லாஹ்வின் பால் உயர்த்தப்படுதல்.

திங்கட்கிழமை,வியாழக்கிழமை என வாரத்தில் இரு நாட்கள் அமல்கள் உயர்த்தப்படுகிறது. 

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

ஒவ்வொரு வாரத்திலும் திங்கள்,வியாழன் இரு நாட்கள் மக்களுடைய அமல்கள் அல்லாஹ்விடம் சமர்ப்பிக்கப்படுகிறது.ஒவ்வொரு முஃமினான அடியானுக்கும் அந்நேரத்தில் மன்னிப்பு வழங்கப்படுகிறது.எனினும் தங்களுக்குள் சண்டையிட்டு பிரிந்து இருக்கும் அடியார்களுக்கு அல்லாஹ் அவர்கள் இருவரும் சமாதானம் ஆகாத வரை மன்னிப்பு வழங்குவதில்லை.
(முஸ்லிம்)

இப்ராஹும் நஹயீ ரஹிமஹுல்லாஹ் வியாழன்று தன் வீட்டாரிடம் "இன்றைய தினம் நம்முடைய அமல்கள் அல்லாஹுதஆலாவின் உயர்த்தப்படுகிறது" என்று கூறி அழுவார்கள்.
(லதாயிஃபுல் மஆஃரிஃப் பக்:127)

மூன்றாம் தருணம்:நாம் வருடம் முழுவதும் செய்த அமல்கள் ஷஃபானுடைய மாதத்தில் அல்லாஹ்வின் பால் உயர்த்தப்படுவதாகும்.

பின்பு நாம் ஆயுள் முழுவதும் செய்த அமல்கள் நம்முடைய மரணத்திற்கு பின் அல்லாஹ்விடம் சமர்ப்பிக்கப்படுகிறது.

இவ்வாறு ஒவ்வொரு தருணத்தையும் அல்லாஹ் ஏற்படுத்தியதின் நுட்பத்தை அல்லாஹ்வே மிக நன்கறிந்தவனாக இருக்கிறான்.

நம்முடைய பொறுப்பு யாதெனில்,அமல்கள் அல்லாஹ்வின் பால் உயர்த்தப்படும் நேரங்களில் நாம் நம்முடைய வணக்கங்களை அதிகமாக்கி கொள்ள வேண்டும்.திங்கட்கிழமையும்,வியாழக்கிழமையும் அமல்கள் உயர்த்தப்படுகிறது.அந்நேரங்களில் நோன்பு நோற்பது நபியின் வழிகாட்டலாகும்.அதேபோன்று ஷஃபானிலும் அமல்கள் உயர்த்தப்படுகிறது.அதிலும் நோன்பு நோற்பது நபியின் வழிகாட்டலாகும்.இதை நாம் பின்பற்ற வேண்டும்.

மேலும் பகல்,இரவு என அனைத்து நேரங்களிலும் நல்அமல்களை அதிமாக்கிக் கொள்ள வேண்டும்.அல்லாஹ்விற்கு பிடித்தமானதை செயல்படுத்தி,அவனுக்கு வெறுப்பானதை விட்டும் தவிர்ந்து கொண்டு அவன் நெருக்கத்தை பெற முயற்சிக்க வேண்டும்.

3️⃣பயிற்சி தரும் மாதம் ஷஃபான்

நாம் எந்த செயலில் ஈடுபடுவதற்கு முன்பாக அச்செயலில் சிறப்புடன் செயலாற்ற பயிற்சி மேற்கொள்கிறோம்.அதேபோன்று ரமளானில் நல்அமல்களில் ஈடுபடுவதற்கு முன்பாக ஷஃபான் மாதத்தில் அதனுடைய பயிற்சியை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். 

இம்மாதத்தில் நோன்பு நோற்பதிலும்,குர்ஆன் ஓதுவதிலும் நம்மை ஈடுபடுத்தி ரமளானிற்கான பயிற்சியை எடுத்துக் கொள்ள வேண்டும்.நம்முடைய உள்ளங்களை ரமளானிற்காக தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.உள்ளத்தால் ரமளானை வரவேற்க தயாராக வேண்டும்.

ஷஃபானில் நல்அமல்களின் பால் விரைந்து செயலாற்றுவதின் மூலமாக ஒவ்வொரு முஸ்லிமான ஆணும்,பெண்ணும் ரமளானை வரவேற்க வேண்டும்.இவ்வாறு செய்வதின் மூலம்  ரமளான் நோன்பில் ஏற்படும் சிரமங்கள் இலேசாகிவிடும்.நோன்பு நோற்ற பயிற்சி கிடைத்து விடும்.நோன்பின் ருசியை அறிந்து ரமளானை சுறுசுறுப்புடன் சந்திக்க ஏற்றமாக இருக்கும்.
(லதாயிஃபுல் மஆரிஃப், பக்:134)

சிலர் ரமளான் மாதத்தில் நோன்பு வைப்பத்தற்கும்,நின்று வணங்குவதற்கும்,குர்ஆனை ஓதி முடிப்பதற்கும் மிக சிரமப் படுகிறார்கள்.
ஏனெனில்,அவர்கள் ரமளான் மாதத்தைத் தவிர பிற மாதங்களில் நோன்பு நோற்பதில்லை.மேலும் நின்று வணங்குவதுமில்லை.இதனால்தான் ரமளானில் அவ்வாறான அமல்கள் அவர்களுக்கு மிக சிரமமாகி விடுகிறது.எனவே ஷஃபான் மாதத்தில் நல்அமல்களுக்கான பயிற்சி மாதமாக அவர்கள் ஆக்கிக்கொண்டால் ரமளானில் அமல்கள் செய்வது எளிதாகி விடும்.

எனவே தான் அபூபக்கர் பல்கி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் இவ்வாறு கூறுவார்கள்:

ரஜபுடைய மாதம் என்பது நிலத்தில் விதையை நட்டு வைப்பதைப் போன்றதாகும்.ஷஃபானுடைய மாதம் என்பது அந்நிலத்தில் தண்ணீர் பாய்ச்சுவது போன்றதாகும்.ரமளான் மாதம் என்பது அறுவடை செய்யும் மாதமாகும்.

மேலும் இவ்வாறு கூறுவார்கள்:

ரஜபுடைய மாதம் என்பது காற்றைப் போன்றதாகும்.ஷஃபானுடைய மாதம் மேகத்தைப் போன்றதாகும்.ரமளானுடைய மாதம் மழையைப் போன்றதாகும்.
(லதாயிஃபுல் மஆரிஃப், பக்:121)

எவர் ரஜபில் விதையை நடவில்லையோ,ஷஃபானில் தண்ணீர் பாய்ச்சவில்லையோ அவர் எவ்வாறு ரமளானில் அறுவடை செய்ய முடியும்?
ரமளானிற்கு முன்பாக தன் உள்ளத்தை நல்அமல்களுக்காக தயாராக்கி கொள்ளாதவர் எவ்வாறு ரமளானில் வணக்கத்தின் இன்பத்தை உணர முடியும்?

எனவே அல்லாஹ் நமக்கு கொடுத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு ஷஃபானில் அதிக நல்அமல்களை புரிவோம்.

யஹ்யா இப்னு மஆத் ரஹிமஹுல்லாஹ்  அவர்கள் தவறிப் போன வாய்ப்புகளை நினைத்து தான் அழுவதாக கூறுவார்கள்.
(ஹில்யதுல் அவ்லியா 10/51)

4️⃣ஷஃபானில் நம் முன்னோர்கள்...

நம் முன்னோர்களான நல்லோர்கள் ஷஃபான் மாதத்தை குர்ஆன் ஓதுவதற்காக ஒதுக்கி விடுவார்கள்.மேலும் ஷஃபான் மாதத்தை குர்ஆனை ஓதுபவர்களின் மாதம் எனவும் குறிப்பிடுவார்கள்.
(லதாயிஃபுல் மஆரிஃப், பக்:135)

அம்ர் இப்னு கைஸ் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் ஷஃபான் மாதம் ஆரம்பித்து விட்டால் தன் கடையை மூடிவிட்டு குர்ஆன் ஓதுவதில் ஈடுபட்டு விடுவார்கள்.மேலும் ரமளானிற்கு முன்பாக தன் உள்ளத்தை சீராக்கியவருக்கு சோபனம் உண்டாவதாக என்றும் கூறுவார்கள்.
(லதாயிஃபுல் மஆரிஃப், பக்:138)

அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்:முஸ்லிம்கள் ஷஃபான் ஆரம்பித்து விட்டால் குர்ஆனில் ஈடுபட ஆரம்பித்து விடுவார்கள்.
(லதாயிஃபுல் மஆரிஃப்,பக்:135)

மேலும் ஷஃபான் மாதம் ஏழை எளியோருக்கு உதவுவதற்கும்,சதகா செய்வதற்கும் உகந்த மாதமாகும்.ஏனெனில் இவ்வாறான சதகாவின் மூலமாக ரமளானில் நோன்பு நோற்பதற்கும், நின்று வணங்குவதற்கும் அவர்களுக்கு பலம் உண்டாகும்.

அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுவார்கள்:முஸ்லிம்கள் தங்களின் ஜகாத்தை ஷஃபான் மாதத்தில் ஏழை எளியோருக்கு வழங்குவார்கள்.காரணம்,பலஹீனமானவர்கள் ரமளான் நோன்பு நோற்க பலம் பெற வேண்டும் என்பதற்காக இவ்வாறு செய்வார்கள்.
(லதாயிஃபுல் மஆரிஃப்,பக்:135)

5️⃣ஜகாத்தை தாமதப்படுத்த வேண்டாம்!

ரஜப் மாதத்திலும்,ஷஃபான் மாதத்திலும் ஜகாத் கடமையானவர்கள் ரமளான் மாதத்தில் ஜகாத்தை நிறைவேற்றுகிறார்கள்.காரணம்,ரமளான் மாதத்தில் ஜகாத்தை கொடுத்தால் அதிக கூலி கிடைக்கும் என்ற எண்ணத்தில் இவ்வாறு செய்கிறார்கள். 

பொருள் நிஸாபை அடைந்து ஒரு வருடம் பூர்த்தியாகி விட்டால் ஒருவருக்கு ஜகாத் கடமையாகிவிடும்.எனவே அவ்வாறு பூர்த்தியானவுடன் உடனடியாக ஜகாத்தை நிறைவேற்றி விட வேண்டும்.தாமதம் செய்யக் கூடாது.ரமளான் வரை அதை பிற்படுத்தக் கூடாது.

இவ்வாறு பிற்படுத்துவது ஏழைகளுக்கு இழைக்கும் அநீதியாகும்.மேலும் அல்லாஹ் விதித்த வரம்பை மீறிய பாவமாகும்.

அதேசமயம் ஏழைகளின் தேவைகளை கருத்தில் கொண்டு ஜகாத்தை முன்கூட்டியே நிறைவேற்றுவது கூடுமான செயலாகும்.

6️⃣களாவான நோன்புகளை பூர்த்தி செய்வோம்!

சென்ற வருட ரமளானின் களாவான நோன்புகளை இந்த வருட ரமளானிற்கு முன்பாக ஷஃபான் மாதத்தில் அதை களா செய்வது அவசியமாகும்.அதை நிறைவேற்ற சக்தியுள்ளவர் கண்டிப்பாக ரமளானிற்கு முன்பாக களா செய்து விட வேண்டும்.தகுந்த காரணம் இருப்பினும் ரமளானிற்கு பின்பாக களா செய்து கொள்ளலாம்.

முஃமீன்களின் அன்னையான ஹஜ்ரத் ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறுகிறார்கள்:

என்மீது ரமளானுடைய களா நோன்பு இருக்கும்.அதை நான் ஷஃபான் மாதத்தில் தான் களா செய்வேன்.காரணம்,நான் பிறமாதங்களில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பணிவிடையில் இருப்பேன்.(அதனாஉல் என்னால் ஷஃபான் மாதத்தில் தான் ரமளானில் விடுபட்ட நோன்புகளை களா செய்ய முடியும்.)
(புகாரி,முஸ்லிம்)

இமாம் இப்னு ஹஜர் ரஹிமஹுல்லாஹ் கூறுகிறார்கள்.ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் இவ்வறிப்பின் மூலமாக வரும் ரமளானிற்கு முன்பாக சென்ற வருட விடுபட்ட நோன்புகளை களா செய்ய வேண்டும் என்பதை அறிய முடிகிறது.
(ஃபத்ஹுல் பாரி 4/191)

எனவே ஆண்கள் தங்கள் வீட்டாரிடம் இது சம்மந்தமாக நினைவூட்டவது அவசியமாகும்.காரணம் அதிகமான நபர்கள் ரமளானை அடைந்த பின்பும் கூட தங்களின் விடுபட்ட நோன்புகளை களா செய்யாமல் பொடுபோக்காக உள்ளார்கள்.




7️⃣ ஷஃபான் மாத நோன்பின் சட்டங்கள்!

1)ஷஃபான் பதினைந்து பிறகு யார் நோன்பு நோற்கலாம்?யார் நோற்க கூடாது?

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

ஷஃபான் பதினைந்து தினம் ஆகிவிட்டால் மீதமுள்ள நாட்களில் நோன்பு நோற்க வேண்டாம்.
(திர்மிதி 
,738)

இந்த அறிவிப்பை முன்வைத்து மார்க்க சட்ட நிபுணர்கள் ஷஃபான் பதினைந்துக்கு மேல் நோன்பு நோற்பதை மக்ரூஹ் என்று கூறியுள்ளார்கள்.எனினும் சிலருக்கு மட்டும் ஷஃபான் பதினைந்துக்கு பிறகும் நோன்பு வைக்க அனுமதி உண்டு.

1)ஒருவர் நோன்பு களா செய்ய வேண்டியிருந்தால் அல்லது கஃப்பாரா போன்ற வாஜிபான நோன்புகள் நோற்க வேண்டியிருந்தால் அவர் நோற்று கொள்ளலாம்.

2)ஷஃபான் ஆரம்பம் முதலே தொடர்ச்சியாக நோன்பு நோற்று வருபவர் நோன்பு நோற்று கொள்ளலாம்.

3)ஒருவருக்கு வியாழன்,திங்கள் போன்ற குறிப்பிட்ட நாட்களில் நோன்பு நோற்கும் பழக்கம் உள்ளது.இவ்வாறான தினங்கள் ஷஃபானுடைய இறுதி தினங்களாக இருந்தாலும் இவர் நோன்பு நோற்பதில் எவ்வித தடையுமில்லை.எனினும் ரமளான் நோன்பு முடியாத அளவு அவரிடம் பலஹீனம் ஏற்பட்டு விடக் கூடாது என்பது நிபந்தனையாகும்.
(தர்ஸே திர்மிதி 2/579)

பதினைந்து நாட்களுக்குப் பின் ஏன் நோற்க தடை?

இதைப் பற்றி ஹகீமுல் உம்மத் அஷ்ரஃப் அலி தானவி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் இவ்வாறு எழுதுகிறார்கள்:ஷஃபான் மாதம் இரவில் விழித்து வணங்குவதும்,நோன்பு நோற்பதும் ரமளானுடைய முன் தயாரிப்பிற்கே ஆகும்.இந்த தயாரிப்பிற்கான போதுமான காலங்கள் ஷஃபானுடைய முந்திய பதினைந்து நாட்களில் கிடைத்து விடுகிறது.

பின்பு நோன்பு வைக்க தடை என்பது அதுவும் ரமளானுடைய தயாரிப்பிற்காகவே கூறப்பட்டுள்ளது.தடை என்பதின் கருத்து சாப்பிடுங்கள்,குடியுங்கள்,ரமளானிற்கு தயாராகுங்கள்,மேலும் நோன்பு எளிதாகி விடும் என்ற நம்பிக்கை வையுங்கள்.(இந்த உற்சாகத்தை ஏற்படுத்தவே தடை எனக் கூறப்பட்டுள்ளது.)

(குதுபாதே ஹகீமுல் உம்மத் 7/391)

2)ஷஃபானுடைய இறுதி நாட்களில் ஏன் நோன்பு நோற்க தடை உள்ளது?

ஷஃபான் மாதத்தின் இறுதி இரண்டு,மூன்று தினங்களில் நோன்பு நோற்க கூடாது.இதற்கு ஹதீஸில் தடை வந்துள்ளது.இதற்கான பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.

ரமளான் மாதத்திற்கும் ஷஃபான் மாதத்திற்கும் இடையில் கலப்படம் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக இவ்வாறு தடை என்பது முதல் காரணமாகும்.

இரண்டாம் காரணம்,ரமளான் மாதத்திற்கு முன்பாக இரண்டு மூன்று நாட்கள் நோன்பு நோற்காமல் இருந்து ரமளான் நோன்பிற்கு புதுப்பொலிவுடன் தயாராக வேண்டும் என்பதற்காக..

எனினும் ஒருவர் வழக்கமாக திங்கள், வியாழன் போன்ற நாட்களில் நோற்று வருகிறார் எனில், இந்நாட்கள் ஷஃபானுடைய இறுதி நாட்களில் வருமேயானால் அச்சமயம் அவருக்கு நோன்பு வைப்பது கூடுமானதாகும்.

அதே போன்று ஷஃபான் மாதம் ஆரம்பித்தது முதல் தொடராக நோன்பு இருப்பவரும் ஷஃபான் இறுதி நாட்களில் நோன்பு நோற்றுக் கொள்ளலாம்.

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِي اللَّهم عَنْهم عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا يَتَقَدَّمَنَّ أَحَدُكُمْ رَمَضَانَ بِصَوْمِ يَوْمٍ أَوْ يَوْمَيْنِ إِلَّا أَنْ يَكُونَ رَجُلٌ كَانَ يَصُومُ صَوْمَهُ فَلْيَصُمْ ذَلِكَ الْيَوْمَ (البخاري, ومسلم)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ரமளானுக்கு முந்தைய நாளும் அதற்கு முந்தைய நாளும் நோன்பு நோற்காதீர்கள். (வழக்கமாக அந்த நாளில்) ஏதேனும் நோன்பு நோற்கும் மனிதரைத் தவிர! அவர் அந்நாளில் நோன்பு நோற்கட்டும். – இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(ஸஹீஹ் முஸ்லிம்:1976 அத்தியாயம் : 13. நோன்பு)

(ஆதார நூற்கள்:ஃபதாவா ஹின்திய்யா,ரத்துல் முக்தார்,மிர்காத்,தாருல் இஃதா ஜாமிஅதுல் உலூமில் இஸ்லாமிய்யா பின்னூரி டவுன்)

8️⃣ஷஃபான் மாதத்தில் நடைபெற்ற முக்கியமான நிகழ்வுகள்!

1)ஹிஜ்ரி 2-ம் ஆண்டு  ஷஃபான் 15-ம் நாள் (பிப்ரவரி 11,624) லுஹருடைய தொழுகையின் சமயம் பைத்துல் முகத்தஸிலிருந்து பைத்துல்லாஹ்வின் பக்கம் கிப்லா மாற்றம் செய்யப்பட்டது.

2)ஹிஜ்ரி 2-ம் ஆண்டு ஷஃபானுடைய இறுதிப் பகுதியில் (பிப்ரவரி 20,624) ரமளானுடைய நோன்பு கடமையாக்கப்பட்டது.

3)ஹிஜ்ரி 3-ம் ஆண்டு ஷஃபான் மாதம் (ஜனவரி 625) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹஃப்ஸா ரலியல்லாஹு அன்ஹா அவர்களை மணமுடித்தார்கள். 

4)ஹிஜ்ரி 5-ம் ஆண்டு ஷஃபான் 3-ம் நாள் பனூ முஸ்தலிக் போர் நடைபெற்றது.

5)ஹிஜ்ரி 5-ம் வருடம் ஷஃபான் பிறை 3-ம் நாள் தயம்முடைய சட்டம் இறக்கி அருளப்பட்டது.

6)ஹிஜ்ரி 5-ம் வருடம் ஷஃபான் மாதத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஜுவைரியா ரலியல்லாஹு அன்ஹா அவர்களை மணமுடித்தார்கள்.

7)ஹிஜ்ரி 6-ம் வருடம் ஷஃபான் மாதத்தில் தவ்மதுல் ஜன்தல் போர் நடைபெற்றது.

8)ஹிஜ்ரி 9-ம் ஆண்டு ஷஃபான் இறுதியில் மஸ்ஜித் ழிரார் எரிக்கப்பட்டது.

9)ஹிஜ்ரி 12-ம் வருடம் ஷஃபான் மாதத்தில் முஸய்லமதுல் கத்தாப் கொலை செய்யப்பட்டான்.

10)ஹிஜ்ரி 50-ம் வருடம் ஷஃபான் மாதத்தில் ஹஜ்ரத் முஈரா இப்னு ஷுஃபா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மரணமடைமடைந்தார்கள்.

11)ஹிஜ்ரி 54-ம் வருடம் ஷஃபான் மாதத்தில் ஹஜ்ரத் சவ்பான் அன்ஹு அவர்கள் மரணமடைமடைந்தார்கள்.

12)ஹிஜ்ரி 75-ம் வருடம் ஷஃபான் மாதத்தில் ஹஜ்ரத் இர்பாழ் இப்னு சாரியா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மரணமடைமடைந்தார்கள்.

13)ஹிஜ்ரி 93-ம் வருடம் ஷஃபான் மாதத்தில் ஹஜ்ரத் அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மரணமடைமடைந்தார்கள்.

14)ஹிஜ்ரி 110-ம் வருடம் ஷஃபான் மாதத்தில் ஹஜ்ரத் ஹஸன் பஸரி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் மரணமடைமடைந்தார்கள்.

15)ஹிஜ்ரி 150-ம் வருடம் ஷஃபான் 2-ம் நாள் இமாம் அபூஹனீஃபா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் மரணமடைமடைந்தார்கள்.

16)ஹிஜ்ரி 161-ம் வருடம் ஷஃபான் மாதத்தில் இமாம் சுஃப்யான் சவ்ரி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் மரணமடைமடைந்தார்கள்.

17)ஹிஜ்ரி 189-ம் வருடம் ஷஃபான் 22-ம் நாள் இமாம் முஹம்மது இப்னு ஹஸன் ஷைபானி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் மரணமடைமடைந்தார்கள்.

18)ஹிஜ்ரி 456-ம் வருடம் ஷஃபான் 27-ம் நாள் அல்லாமா இப்னு ஹஜம் ழாஹிரி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் மரணமடைமடைந்தார்கள்.

19)ஹிஜ்ரி 1262-ம் வருடம் ஷஃபான் 23-ம் நாள் மவ்லானா முஹம்மது இல்யாஸ் காந்தலவி  ரஹிமஹுல்லாஹ் அவர்கள் மரணமடைமடைந்தார்கள்.

20)ஹிஜ்ரி 1377-ம் வருடம் ஷஃபான் 23-ம் நாள் மவ்லானா அபுல் கலாம் ஆசாத்  ரஹிமஹுல்லாஹ் அவர்கள் மரணமடைமடைந்தார்கள்.

Popular posts from this blog

ஈஸா (அலை) செய்த அற்புதங்களும் நாம்பெறவேண்டிய படிப்பினைகளும். 23-12_22

குர்பானி ஏற்படுத்தும் மாற்றங்களும்,அரஃபா நாள் நோன்பும், அய்யாமுத் தஷ்ரீக் தக்பீரும்… 13-06-2024

பைத்துல் முகத்தஸ்