குர்ஆன் தான் நம்பர் ஒன்

லைலதுல் கத்ரு தலைப்பு:_ குர்ஆன் தான் நம்பர் 1...

إن الحمد لله نحمده ونستعينه ، ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل ومن يضلل فلا هادي له ، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا

🌹اَلصَّلٰوةُ وَالسَّلَامُ عَلَيۡكَ يَاسَيِّدِي ياَرَسُوۡلَ الله ﷺ🌹 🌹اَلصَّلٰوةُ وَالسَّلَامُ عَلَيۡكَ يَاسَيِّدِي ياَحَبِيۡبَ‌ اللهﷺ🌹

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்).

 அல்லாஹ்வின் ﷻ மாபெரும் கருணையை கொண்டு ரமலான் மாதத்தின் இரண்டு பத்தை முடித்து விட்டு மூன்றாம் பத்தை அடைந்துள்ளோம். அல்லாஹ்வுக்காக இன்று இருபத்தி ஆறாம் நோன்பாக‌ பகலில் நோன்பிருந்தோம். அல்லாஹ் ﷻ நம் அனைவரின் நோன்பையும் கபூல் செய்வானாக! ஆமீன்.

நாம் இப்போது இருபத்தி ஏழாம் நோன்பிற்க்கான‌ தராவிஹ் தொழுகை தொழுது விட்டு இருபத்தி ஏழாவது நோன்பை நோற்க்க தயாராக உள்ளோம். அல்லாஹ் ﷻ நம் அனைவருக்கும் மீதமுள்ள எல்லா நோன்பையும், இதர வணக்க, வழிபாடுகளையும் எவ்வித தடங்கல் இன்றி பரிபூரணமாக நிறைவேற்றுகிற நற்பேற்றினை நம் அனைவருக்கும் நல்குவானாக! ஆமீன்!!

 இன்று தராவிஹ் தொழுகையில்  30 ஆம் ஜுஸ்வு ஓதப்பட்டது.

 وَالضُّحٰىۙ‏ وَالَّيْلِ اِذَا سَجٰىۙ‏ مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلٰىؕ‏

என்ற ஸுரத்துள் ளுஹா 93:1 வசனத்தில் ஆரம்பித்து…

قُلْ اَعُوْذُ بِرَبِّ النَّاسِۙ‏ مَلِكِ النَّاسِۙ‏ اِلٰهِ النَّاسِۙ‏ ‏

என்ற ஸுரத்துந் நாஸ் 114:1 வசனம் வரை ஓதினேன்,

இந்த கால் ஜுஸ்வில் ஸுரத்துள் ளுஹா -வில் ஆரம்பித்து.. ஸுரத்துந் நாஸ் வரைக்கும் 21 ஸுராகளை ஓதினேன்.

அல்லாஹ்வின் பேருதவியை கொண்டு இன்றோடு புனித குர்ஆன் நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ்

இன்ஷா அல்லாஹ் இன்று லைலத்துல் கத்ர் இரவாக இருக்க வாய்ப்புள்ளதால் நாமெல்லாம் இன்று அதை அடைய ஒன்று கூறியுள்ளோம்.

عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ “‏ تَحَرَّوْا لَيْلَةَ الْقَدْرِ فِي الْوِتْرِ مِنَ الْعَشْرِ الأَوَاخِرِ مِنْ رَمَضَانَ ‏”‏‏.‏

‘ரமளானின் கடைசிப் பத்து நாள்களில் உள்ள ஒற்றைப்படை இரவுகளில் லைலத்துல் கத்ரைத் தேடுங்கள்!’ புகாரி 2017 

இப்போது குர்ஆன் தான் நம்பர் 1. என்ற சிறு தலைப்பின் கீழ் உங்களிடம் கொஞ்ச நேரம் பேச ஆசைபடுகிறேன். 

வல்ல ரஹ்மான் நாம் சொன்ன படி, நாம் கேட்ட படி அமல் செய்யும் பாக்கியத்தை தந்தருள்புரிவானாக. ஆமீன்!!. என துஆ செய்தவனாக எனது சிற்றுரையை ஆரம்பம் செய்கிறேன்.

✍🏻 *அன்புள்ளவர்களே!* குர்ஆன் என்பது உலக மக்கள் அனைவருக்கும் நேர்வழி காட்டுவதற்காக இறைவனால் நபி (ﷺ) அவர்களுக்கு இறக்கியருளப்பட்ட வேதமாகும். 

இதை அல்லாஹ் தனது திருமறையில் கூறும் போது,

[*அல்லாஹ் திருமறையில் கூறுகின்றான்: وَقَوْلِ اللَّهِ تَعَالَى Allah says in the Qur’an:*] 

 شَهْرُ رَمَضَانَ الَّذِىْٓ اُنْزِلَ فِيْهِ الْقُرْاٰنُ هُدًى لِّلنَّاسِ وَ بَيِّنٰتٍ مِّنَ الْهُدٰى وَالْفُرْقَانِۚ

இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது. (அது) மனிதர்களுக்கு நேர் வழிகாட்டும். நேர் வழியைத் தெளிவாகக்கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக்காட்டும். (அல்குர்ஆன் 2:185)

اِنَّ هٰذَا الْقُرْاٰنَ يَهْدِىْ لِلَّتِىْ هِىَ اَقْوَمُ وَ يُبَشِّرُ الْمُؤْمِنِيْنَ الَّذِيْنَ يَعْمَلُوْنَ الصّٰلِحٰتِ اَنَّ لَهُمْ اَجْرًا كَبِيْرًا ۙ‏

இந்தக் குர்ஆன் நேரானதற்கு வழி காட்டுகிறது. “நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோருக்கு பெரிய கூலி உள்ளது” என்று நற்செய்தியும் கூறுகிறது. (அல்குர்ஆன் 17:9)

تَبٰـرَكَ الَّذِىْ نَزَّلَ الْـفُرْقَانَ عَلٰى عَبْدِهٖ لِيَكُوْنَ لِلْعٰلَمِيْنَ نَذِيْرَا ۙ‏

(பொய்யையும் உண்மையையும்) பிரித்துக் காட்டும் வழி முறையை அகிலத்தாருக்கு எச்சரிக்கை செய்யக் கூடியதாக தனது அடியார் மீது அருளியவன் பாக்கியமானவன். (அல்குர்ஆன் 25:1)
இந்தக் குர்ஆனுக்கு இன்னும் பல சிறப்புகள் இருக்கின்றன. 

 [*நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: قال رسول الله صلي الله عليه وسلم The Prophet said:*]   
  
    [*ஒன்றுக்குப் பத்து நன்மை. :–*] …

✍🏻 அன்புள்ளவர்களே! இந்த உலகத்தில் எந்த ஒரு நன்மையையும் பெற்றுக் கொள்ள வேண்டுமென்றால் அதற்காக சில கஷ்டங்களை அனுபவித்த பிறகே அதன் பலனை அனுபவிக்கமுடிகின்றது. ஆனால் அவை எல்லாமே இந்த உலகத்துடன் அழிந்து போய் விடுகின்றன.எந்த அளவிற்கு என்றால், ஒரு சில காரியங்களை நாம் மிகவும் சிரமப்பட்டுச்செய்கின்றோம். ஆனால் அதன் பலன் ஒரு மணி நேரத்திலோ, ஒரு நாளிலோ அல்லதுஒரு மாதத்திலோ அல்லது ஒரு வருடத்திலோ முடிந்து விடுகின்றது. இந்த அளவிற்குத்தான் அதன் பலன்கள் நிலையற்றவையாக உள்ளன.

ஆனால் நிலையானதும், மிகவும் எளிதாக நன்மையைப் பெற்றுத் தருவதுமான செயல்ஒன்று இருக்கும் என்றால் அது வல்ல ரஹ்மானின் திருமறைக் குர்ஆனை ஓதுவதில்தான் இருக்கும். இந்தக் குர்ஆனை ஓதுவதற்காக நாம் எந்த ஒரு சிரமத்தையும்மேற்கொள்ளத் தேவையில்லை.

அதாவது தொழுகை என்ற வணக்கத்தை எடுத்துக் கொண்டால் குறிப்பிட்ட நேரத்தில்தொழ வேண்டும்; உளூச் செய்ய வேண்டும்; ஆண்களாகயிருந்தால் பள்ளிக்குச் சென்று ஜமாஅத்துடன் தொழ வேண்டும் என்ற நிபந்தனைகள் இருக்கின்றன. இதன்அடிப்படையில் செய்தால் தான் தொழுகையின் முழுமையான நன்மைகளை அடையமுடியும்.
குர்ஆன் ஓதுவதைப் பொறுத்த வரையில் இது போன்ற எந்த ஒரு நிபந்தனையும்இல்லை. இருந்த இடத்தில் இருந்து கொண்டே அதிகமான நன்மைகளை அள்ளிவிடலாம். இது தொடர்பாக நபி (ﷺ) அவர்கள் கூறிய சில பொன்மொழிகளைப் பார்ப்போம்.

«مَنْ قَرَأَ حَرْفًا مِنْ كِتَابِ اللَّهِ فَلَهُ بِهِ حَسَنَةٌ، وَالحَسَنَةُ بِعَشْرِ أَمْثَالِهَا، لَا أَقُولُ الم حَرْفٌ، وَلَكِنْ أَلِفٌ حَرْفٌ وَلَامٌ حَرْفٌ وَمِيمٌ حَرْفٌ»

“அல்லாஹ்வின் வேதத்திலிருந்து ஓர் எழுத்தை ஓதுபவருக்கு ஒரு நன்மை உண்டு! ஒரு நன்மை பத்து நன்மைகளைப் போன்றதாகும். “அ-ஃப், லாம், மீம்’ என்பதை ஓர்எழுத்துஎன்று சொல்ல மாட்டேன். மாறாக, அ-ஃப் ஓரெழுத்து, லாம் ஓரெழுத்து, மீம் ஓரெழுத்துஎன்றுதான் கூறுவேன்” என்று அல்லாஹ்வின் தூதர் (ﷺ) அவர்கள் கூறினார்கள். திர்மிதி 2910

*மறுமையில் பரிந்துரை:–*

இன்றைய முஸ்லிம்களைப் பொறுத்த வரை, குரங்கு கையில் பூமாலை என்பது போன்று இந்தக் குர்ஆனுடைய அருமை, பெருமை தெரியாமல் இருக்கின்றார்கள். தங்களுடையநேரங்களை இதுபோன்ற நல்ல வழியில் செலவழிக்காமல் பொய், புறம், கோள், அவதூறுபேசியே நேரத்தை வீணடிக்கிறார்கள்.

அது மட்டுமல்லாமல், இந்த உலக வாழ்க்கைக்காக என்னென்ன முயற்சிகள் செய்யவேண்டுமோ அவை அனைத்தையும் சிரமம் பார்க்காமல் செய்கின்றார்கள். உதாரணமாக ஒரு வேலை வேண்டும் என்றால் அதற்காகப் பல மனிதர்களை சிபாரிசுக்காகத் தேடி அலைகின்றார்கள். நிலையற்ற உலகிற்கு இப்படி முயற்சி செய்கின்றார்கள். ஆனால் நிலையான மறுமை வாழ்க்கைக்கு சிபாரிசாக வரக் கூடிய குர்ஆனை மறந்து விடுகின்றார்கள். இதைப் பற்றி நபி (ﷺ) அவர்கள் கூறும் போது,

“நீங்கள் குர்ஆனை ஓதுங்கள். நிச்சயமாக அது மறுமை நாளில் அதைச்சார்ந்தவருக்குப் பரிந்துரையாக வரும்” என்று நபி (ﷺ) அவர்கள் கூறினார்கள். முஸ்லிம் 804

*இரு மடங்கு நன்மை:–*

குர்ஆன் ஓதத் தெரியவில்லையே என்று நினைப்பவர்களுக்கும் மார்க்கம் ஒரு நற்செய்தி கூறுகின்றது. அதாவது முயற்சி திருவினையாக்கும் என்பது போன்று, ஒரு மனிதன் குர்ஆனை ஓதுவதற்கு முயற்சி செய்கின்றான்; அதன் மூலம் அவனுக்குப் பல சிரமங்கள் ஏற்படுகின்றன; அதையும் பொருட்படுத்தாமல் அவன் திக்கித் திணறி ஓதுகின்றான் என்றால் அதற்காக அவனுக்கு இரு மடங்குகூலி இருக்கின்றது.

عَنْ عَائِشَةَ قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم الْمَاهِرُ بِالْقُرْآنِ مَعَ السَّفَرَةِ الْكِرَامِ الْبَرَرَةِ وَالَّذِى يَقْرَأُ الْقُرْآنَ وَيَتَتَعْتَعُ فِيهِ وَهُوَ عَلَيْهِ شَاقٌّ لَهُ أَجْرَانِ

“குர்ஆனை நன்கு மனனம் செய்து தங்கு தடையின்றி சரளமாக ஓதுபவர் இறைவனுக்குக் கட்டுப்பட்ட கண்ணியமிக்க வானவத் தூதர்களுடன் இருக்கின்றார். சிரமம் மேற்கொண்டு தட்டுத் தடுமாறி ஓதுபவருக்கு இரு கூலிகள் இருக்கின்றன” என்று அல்லாஹ்வின் தூதர் (ﷺ) அவர்கள் கூறினார்கள். முஸ்லிம் 1462

*மனிதரில் சிறந்தவர்:–*

இந்த உலகில் நமக்குப் பிடித்தவர்கள் நம்மைப் பாராட்டினால் மகிழ்ச்சியாக இருக்கின்றது. ஆனால் நம் அனைவருக்கும் உயிரை விடவும் மேலான நபி (ﷺ) அவர்களின் வாயால் சிறந்தவர் என்ற பாராட்டைப் பெற வேண்டும் என்றால் அது திருக்குர்ஆன் மூலமே கிடைக்கின்றது.

நபி (ﷺ) அவர்கள் கூறினார்கள் :உங்களில் சிறந்தவர் யார் என்றால், யார் குர்ஆனைத் தானும் கற்று, பிறருக்கும் கற்றுக் கொடுக்கின்றாரோ அவர்தான். புகாரி 5027

*அல்லாஹ்வின் அருள்:–*

குர்ஆனை ஓதும் போது நன்மைகள் கிடைப்பது போன்று பிறர் ஓதுவதைக் கேட்கும்போதும் நன்மை கிடைக்கும்.
குர்ஆன் ஓதப்படும் போது அதைச் செவிமடுங்கள்! வாய் மூடுங்கள்! நீங்கள் அருள்செய்யப்படுவீர்கள்! (அல்குர்ஆன் 7:204)

*ஷைத்தானை விரட்டும் மருந்து:–*

நமக்கெல்லாம் ஜென்ம விரோதியாக இருக்கின்ற ஆணவம் கொண்ட ஷைத்தானைவிரட்டும் ஒரு மருந்தாக இந்தக் குர்ஆன் இருக்கிறது.

“உங்கள் வீடுகளை மண்ணறை களாக ஆக்கி விடாதீர்கள். எந்த வீட்டில் சூரத்துல் பகரா ஓதப்படுகின்றதோ அந்த வீட்டை விட்டு ஷைத்தான் விரண்டு ஓடுகின்றான்” என நபி (ﷺ) அவர்கள் கூறினார்கள். முஸ்லிம் 780

*பாதுகாப்பு கிடைப்பது:–*

உலகில் பிறந்த அனைவருக்கும் பாதுகாப்பு என்பது முக்கியமான ஒன்றாக உள்ளது. அதிலும் குறிப்பாக ஷைத்தானை விட்டு பாதுகாப்புப் பெறுவது மிகவும் அவசியமான ஒன்றாகும். அவன் எல்லா நேரத்திலும் மனிதனை ஆட்டிப் படைப்பதில் குறிக்கோளாய் இருப்பான்.

உதாரணமாகச் சொல்வதென்றால், ஒரு மனிதனுக்கு நிம்மதியைப் பெற்றுத் தரக் கூடியதூக்கத்திலும் கெட்ட கனவை ஏற்படுத்தி, அதன் மூலம் நம்முடைய நிம்மதியைக் கெடுப்பான். இது போன்ற ஷைத்தானுடைய தீங்குகளை விட்டும் பாதுகாக்கக் கூடியதாக குர்ஆன் வசனம் அமைந்துள்ளது.

“நீங்கள் படுக்கைக்குச் செல்லும் போது ஆயத்துல் குர்ஸியை ஓதுங்கள். உங்களுடன் ஒரு பாதுகாவலர் (வானவர்) இருந்து கொண்டே இருப்பார். காலை வரை ஷைத்தான் உங்களை நெருங்க மாட்டான்” என்று நபி (ﷺ) அவர்கள் கூறினார்கள். புகாரி 3275

*அழகிய உதாரணத்துக்குரியவர்:–*

இவ்வுலகில் வாழும் அனைவரும் ஒரு நல்ல உதாரணமாக இருப்பதற்குத் தான்வி ரும்புவார்கள். கெட்டவனாக இருந்தாலும் கெட்ட உதாரணமாக இருப்பதற்கு விரும்பமாட்டான். இப்படி எல்லோருமே விரும்பக் கூடிய ஒரு நல்ல உதாரணத்தைப் பெறவேண்டும் என்றால் இந்தக் குர்ஆனை ஓதுவதன் மூலமே இந்தச் சிறப்பைப் பெற்றுக் கொள்ள முடியும்.

நபி (ﷺ) அவர்கள் கூறினார்கள்: குர்ஆனை ஓதுகின்ற (நல்ல)வரின் நிலையானது எலுமிச்சை போன்றதாகும். அதன்சு வையும் நன்று! வாசனையும் நன்று! (நல்லவராக இருந்து) குர்ஆன் ஓதாமல் இருப்பவர், பேரீச்சம் பழத்தைப் போன்றவராவார். அதன் சுவை நன்று; அதற்கு வாசனை கிடையாது. தீயவனாகவும் இருந்து கொண்டு குர்ஆனை ஓதி வருகின்றவனின் நிலை துளசிச்செடியின் நிலையை ஒத்து இருக்கின்றது. அதன் வாசனை நன்று, சுவையோ கசப்பு! தீமையும் செய்து கொண்டு குர்ஆனையும் ஓதாமல் இருப்பவனின் நிலை குமட்டிக்காயின் நிலையை ஒத்திருக்கின்றது. அதன் சுவையும் கசப்பு, அதற்கு வாசனையும் கிடையாது. புகாரி 5020

*குர்ஆனை அதிகம் அறிந்தவர் யார்? :–*

நபி(ﷺ) அவர்கள், உஹதுப் போரில் கொல்லப்பட்டவர்களில் இரண்டிரண்டு நபர்களை ஒரே ஆடையில் கஃபனிட்டுவிட்டு, ‘இவர்களில் குர்ஆனை அதிகம் அறிந்தவர் யார்?’ எனக் கேட்டார்கள். இருவரில் ஒருவர் சுட்டிக் காட்டப்பட்டதும் அந்த ஒருவரின் உடலைக் கப்ரின் உட்குழியில் முதலில் வைத்துவிட்டு, ‘இவர்களுக்கு மறுமை நாளில் நானே சாட்சியாகுவேன்’ எனக் கூறினார்கள். பின்பு இரத்தத்தோடே அடக்குமாறு ஏவினார்கள். இவர்கள் குளிப்பாட்டப்படவோ இவர்களுக்கு தொழுகை நடத்தப்படவோ இல்லை. புகாரி 1343. 

‘ஒவ்வொரு மாதமும் மூன்று நாள்கள் நோன்பு நோற்பீராக!’ என்று என்னிடம் இறைத்தூதர் (ﷺ) அவர்கள் கூறினார்கள். ‘இதை விட அதிகமாக எனக்குச் சக்தி உள்ளது!’ என்று கூறினேன். முடிவில், ஒரு நாள் நோன்பு நோற்று ஒரு நாள்விட்டு விடுவீராக!’ என்று கூறினார்கள். மேலும் ‘ஒவ்வொரு மாதமும் (ஒரு முறை) குர்ஆனை (முழுமையாக) ஓதும்!’ என்று கூறினார்கள். புகாரி 1978.. 

*அழகாக ஓதுபவர்:–*

. ‘மூவர் இருந்தால் ஒருவர் இமாமத் செய்யட்டும். அவர்களில் யார் அதிகம் அழகாக ஓதுபவராக இருக்கின்றாரோ அவரே இமாமத்துக்குத் தகுதியானவராவார்’ என நபி (ﷺ) அவர்கள் கூறினார்கள். முஸ்லிம் 672-

ஒரு சமூகத்தை அவர்களில் குர்ஆனை அழகாக ஓதுபவர் தொழுவிக்கட்டும். கிராஅத்தில் அனைவரும் சமமாக இருந்தால் அவர்களில் சுன்னாவை அதிகம் அறிந்தவர் தொழுவிக் கட்டும். சுன்னாவை அறிவது (பின்பற்றுவது என்பவற்றில் சமமாக இருந்தால் ஹிஜ்ரத்தில் முதியவர் தொழுவிக்கட்டும். ஹிஜ்ரத்தில் அனைவரும் சமகாலத்தவர் என்றால் இஸ்லாத்தை ஏற்றதில் முதியவரை முற்படுத்துங்கள். ஒருவரின் அதிகாரத்தில் மற்றொருவர் இமாமத் செய்ய வேண்டாம். ஒருவரது வீட்டில் அவருக்கென்று இருக்கக் கூடிய பிரத்தியேக இடத்தில் அவரது அனுமதியின்றி அமர வேண்டாம்’ என நபி (ﷺ) அவர்கள் கூறினார்கள். முஸ்லிம் 673

குர்ஆன் குறித்து குர்ஆன் கூறுவது:–

1. குர்ஆனை புரிந்து கொள்வது எளிது – நிச்சயமாக இக்குர்ஆனை நன்கு நினைவுபடுத்திக் கொள்ளும் பொருட்டே எளிதாக்கி வைத்திருக்கின்றோம்; எனவே இதிலிருந்து நல்லுணர்வு பெறுவோர் உண்டா? (அல்-குர்ஆன் 54:32)
2. சிந்திக்கத் தூண்டும் குர்ஆன் 
– மேலும் அவர்கள் இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது அவர்கள் இருதயங்கள் (இருக்கின்றனவே) அவற்றின் மீது பூட்டுப் போடப்பட்டு விட்டனவா? (அல்குர்ஆன் 47:24)
3. குர்ஆன் விசுவாசிகளுக்கு அருமருந்து – இன்னும், நாம் முஃமின்களுக்கு ரஹ்மத்தாகவும், அருமருந்தாகவும் உள்ளவற்றையே குர்ஆனில் (படிப்படியாக) இறக்கிவைத்தோம் ஆனால் அக்கிரமக் காரர்களுக்கோ இழப்பைத் தவிர வேறெதையும் (இது) அதிகமாக்குவதில்லை. (அல்-குர்ஆன் 17:82)
4. குர்ஆன் மனிதர்களின் இதய நோய்நிவாரணி – மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு நிச்சயமாக ஒரு நல்லுபதேசமும் வந்துள்ளது. (உங்கள்) இதயங்களிலுள்ள நோய்களுக்கு அருமருந்தும் (வந்திருக்கிறது) மேலும் (அது) முஃமின்களுக்கு நேர்வழிகாட்டியாகவும், நல்லருளாகவும் உள்ளது. (அல்-குர்ஆன் 10:57)
5. குர்ஆனை ஓதும் முன்பு ஷைத்தானிய தீண்டுதலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருதல் – மேலும் (நபியே!) நீர் குர்ஆனை ஓதுவீராயின் (முன்னதாக) விரட்டப்பட்ட ஷைத்தானை விட்டும் அல்லாஹ்விடம் காவல் தேடிக்கொள்வீராக. (அல்-குர்ஆன் 16:98)
6. குர்ஆன் எழுத்து வடிவில் நபிக்கு அருளப்படவில்லை – காகிதத்தில் (எழுதப்பட்ட) ஒரு வேதத்தையே நாம் உம் மீது இறக்கி வைத்து, அதனை அவர்கள் தம் கைகளால் தொட்டுப் பார்த்தபோதிலும், இது குர்ஆன் நபியின் சொந்த கூற்றல்ல – அகிலத்தாருக்கெல்லாம் இறைவனிடமிருந்து (இது) இறக்கியருளப்படடதாகும். அன்றியும், நம்மீது சொற்களில் சிலவற்றை இட்டுக் கட்டிக் கூறியிருப்பாரானால், அவருடைய வலக்கையை நாம் பற்றிப் பிடித்துக் கொண்டு பின்னர், அவருடைய நாடி நரம்பை நாம் தரித்திருப்போம். (அல்-குர்ஆன் 69: 43-46)

*குர்ஆன் குறித்து நபிமொழிகள் கூறுவது:–*

1. நிச்சயமாக இந்தக் குர்ஆன் பரிந்துரை செய்யக்கூடியதாகும். அது ஏற்கப்படக்கூடியதுமாகும். அதனைப் பின்பற்றினால் அவரை அது சுவனத்தில் சேர்க்கும். அதனை பின்பற்றாமல் விட்டு விட்டால் அல்லது நிராகரித்தால் அவன் நரகின் அடித்தளத்தில் தள்ளப்படுவான். முஸ்லிம்)
2. குர்ஆனை ஓதி அதன்படி அமல் செய்தவரையும், குர்ஆனையும் நாளை மறுமையில் கொண்டு வரப்படும், குர்ஆனின் இரண்டு அத்தியாயங்கள் அல்பகரா, ஆலஇம்ரான் முன் வந்து அந்த இரண்டையும் ஓதியவருக்காக அல்லாஹ்விடத்தில் வாதாடும் என நபி(ﷺ) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: முஸ்லிம்)
3. குர்ஆனின் விஷயத்தில் தர்க்கம் புரிவது இறை மறுப்புச் செயலாகும். அபூதாவூத்
4. குர்ஆனைத் தானும் கற்று பிறருக்கும் கற்றுக் கொடுப்பவரே உங்களில் சிறந்தவர். புகாரி
5. இக்குர்ஆனின் ஒரு முனை அல்லாஹ்வின் கையிலும் மறுமுனை உங்கள் கைளிலும் உள்ளது. எனவே இதனை உறுதியாகப் பிடித்துக் கொள்ளுங்கள்; நீங்கள் இம்மையில் வழிதவறமாட்டீர்கள், மறுமையில் அழிவுறவும் மாட்டீர்கள். தப்ரானி )
6. பேச்சுக்களில் மிகச் சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிகாட்டுதல்களில் மிகச்சிறந்தது முஹம்மது(ﷺ) அவர்களின் பாதையாகும். தீனில் தீமையானது மார்க்கத்தில் புதிதாகப் புகுத்தப்பட்டதாகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். முஸ்லிம்)
7. இவ்வேதத்தைக் கொண்டே அல்லாஹ் சில கூட்டத்தாரை உயர்த்துகிறான். மற்றோரு கூட்டத்தினரை இதனைக் கொண்டே தாழ்த்துகிறான். சமுதாய உயர்வு, தாழ்வுக்கு காரணம் குர்ஆனே. : முஸ்லிம்)
8. குர்ஆனின் சிறு பகுதியேனும் யார் உள்ளத்தில் மனனம் இல்லையோ அவர் உள்ளம் பாழடைந்த வீட்டைப் போன்றது. திர்மிதி
9. எவர் குர்ஆனிலிருந்து ஒரு எழுத்தை ஓதினால் நன்மை இருக்கிறது. ஒரு நன்மை அதுபோன்று பத்து மடங்காக்கப்படும். “அலீஃப், லாம், மீம்” ஒரு எழுத்து என்று சொல்லமாட்டேன். மாறாக அலீஃப் ஒரு எழுத்து, லாம் ஒரு எழுத்து, மீம் ஒரு எழுத்துமாகும் என்று நபி(ﷺ) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி, தாரமி.)
10. குர்ஆனை ஓதக்கூடியவருக்கு உவமைகளையும், ஓதாமல் இருப்பவருக்கு உவமைகளையும் பெருமானார்(ﷺ) அவர்கள் மொழிந்துள்ளார்கள். குர்ஆனை ஓதக்கூடிய முஃமினின் உவமை பழத்தைப் போன்றது. அதனுடைய வாசனையோ மணமானது. அதனுடைய சுவையோ ருசிக்கத்தக்கது. குர்ஆனை ஓதாத மூஃமீனின் உவமை பேரித்தம் பழத்தை போன்றது. அதற்கு வாசனை இல்லை. அதனுடைய சுவையோ இனிப்பானது. குர்ஆனை ஓதாத நயவஞ்சகனின் உவமை குமட்டிக்காய் போன்றது. அதற்கு வாசனை இல்லை. அதனுடைய சுவையோ கசப்பானது. குர்ஆனை ஓதக்கூடிய நயவஞ்சகனின் உதாரணம் துளசி செடியை போன்றது. அதனுடைய வாசனை மணமானது. அதனுடைய சுவையோ கசப்பானது என்று நபி(ﷺ) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
11. யார் குர்ஆனை ராகமாக (தஜ்வீத்துடன்) ஓதவில்லையோ அவர் நம்மைச் சார்ந்தவரல்ல. (அபூதாவூத்)
12. குர்ஆனைக் கற்றுக் கொள்ளுங்கள் மேலும் அதை ஓதுங்கள். குர்ஆனைக் கற்று அதனை ஒதி அதன் அடிப்படையில் நடப்போருக்கு உவமையானது கஸ்தூரியால் நிரப்பப்பட்ட பையைப் போன்றது. அது அனைத்து இடங்களிலும் மணம் வீசிக்கொண்டிருக்கும். குர்ஆனைக் கற்று அது அவருடைய உள்ளத்தில் பசுமையாய் பதிந்தும் அதனடிப்படையில் நடக்கவில்லையோ அவரின் உவமை கஸ்தூரியால் நிரப்பப்பட்ட பையை அது பரவாமல் கட்டிக்கொண்டவரைப் போல என நபி(ﷺ) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி, நஸயீ, இப்னுமாஜா)
13. நாங்கள் திண்ணையில் அமர்ந்து இருக்கிற சமயத்தில் பெருமானார்(ﷺ) எங்களிடம் வந்து உங்களிடம் பாவம் செய்யாது சொந்த பந்தங்களை துண்டிக்காத நிலையில் ஒவ்வொரு நாளும் புத்ஹான் அல்லது ஹதீக் என்ற இடத்திற்கு சென்று திமில்களுடைய இரண்டு ஓட்டகங்களை கொண்டு வர யார் விரும்புவார்? என வினவினார்கள். நாங்கள் அனைவரும் இதை விரும்புவோம் என்று பதிலளித்தோம். உங்களில் ஒருவர் பள்ளிவாசல் பக்கம் செல்லக்கூடாதா? அவ்வாறு சென்று அல்லாஹ்வுடைய வேத்தில் இரண்டு வசனங்களை ஓதுதல் அல்லது கற்றல் இரண்டு ஒட்டகங்களை விட சிறந்தது. மூன்று வசனங்களை ஓதுவது மூன்று ஒட்டகங்களை விட சிறந்தது. நான்கு வசனங்களை ஓதுவது நான்கு ஒட்டகங்களை விட சிறந்தது என நபி(ﷺ) அவர்கள் கூறினார்கள். உங்களில் ஒருவர் தன்னுடைய இல்லத்திற்கு செல்லும்போது தன்னுடன் நல்ல கொழுத்த மூன்று ஒட்டகங்களை பெற்றுச் செல்லவேண்டும் என்று விரும்புவாரா? என்று வினவினார்கள். நாங்கள் அனைவரும் அதை விரும்புவோம் என்று கூறினோம். மூன்று (குர்ஆனிய) வசனங்களை உங்களில் ஒருவர் தன்னுடைய தொழுகையில் ஓதுவது அவருக்கு நல்ல கொழுத்த மூன்று ஒட்டகங்கள் கிடைப்பதை விட சிறந்தது என்று நபி(ﷺ) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம், இப்னுமாஜா)
14. குர்ஆனை ஓதுவதில் தேர்ச்சி பெற்றவர் கண்ணிமிக்க வானவர்களுடன் இருப்பார். குர்ஆனை ஒதுவது சிரமமாக இருப்பினும் அதைத் திருப்பித்திருப்பி சிரமத்துடன் ஓதுவாரானால் அவருக்கு இரண்டு கூலி இருக்கிறது என்று நபி(ﷺ) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
15. மறுமை நாளில் குர்ஆனை ஓதி அதனடிப்படையில் நடந்தவரிடம் குர்ஆனிய தோழரே ஓதுவீராக என்று கூறப்படும். மேலும் உலகத்தில் எவ்வாறு நிறுத்தி நிதானமாக ஓதினீரோ அவ்வாறு ஓதுவீராக! நிச்சயமாக எந்த வசனத்தை கடைசியாக ஓதி முடிப்பாரோ அதுதான் சொர்க்கத்தில் உமது அந்தஸ்தாகும் என்று கூறப்படும் என நபி(ﷺ) அவர்கள் கூறினார்கள். (அபூதாவுத், திர்மிதி)
16. குர்ஆனை ஓதிய தோழர் மறுமையில் வருவார். அப்போது குர்ஆன் இறைவா இவருக்கு ஆடையை அணிவி என்று சொல்லும் அப்போது அவருக்கு உயர்ந்த கிரீடம் அணிவிக்கப்படும். இறைவா இவருக்கு உன் அருளை வழங்குவாயாக! என்று கூறும். அப்போது அவருக்கு உயர்ந்த சீருடை அணிவிக்கப்படும். பிறகு குர்ஆன் இவரை பொருந்திக் கொள்ளுமாறு சொல்லும் அவரை இறைவன் பொருந்திக் கொள்வான். அம்மனிதரிடம் குர்ஆனை நிறுத்தி நிதானமாக ஒதுவீராக!, அவர் ஒதுகிறபோது ஒவ்வொரு வசனத்திற்க்கும் ஒரு நன்மை அதிகப்படுத்தப்படும் என்று நபி(ﷺ) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி)

குர்ஆன் உயிருடன் இருக்கும் போதே படித்து நேர்வழி பெறுவதற்குத்தானேயொழிய இறந்த பின் மரணித்தவர்களுக்கு குர்ஆனை அஞ்சல் செய்வதற்கு இல்லை.

(இது) உயிரோடிருப்பவர்களை அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறது. நிராகரிப்பவர்களுக்கு (தண்டனையுண்டு என்ற) வாக்கை உண்மையென உறுதிப்படுத்துகிறது (அல்குர்ஆன் 36: 70)

குர்ஆனை அல்லாஹ் நமக்கு அருளிய நோக்கம் நாம் அதைப் படித்து, சிந்தித்துச் செயல்பட வேண்டும் என்பதற்குத்தான். ஆனால் முதிய வயதை அடைந்தும் குர்ஆனை ஓதத் தெரியாதவர்கள் நம்மில் பலர் உள்ளனர். இது கவலை தரக்கூடிய ஒன்றாகும். முதிய வயதாகிவிட்டாலும் குர்ஆனைக் கற்றுக் கொள்ள முடியும் என்பது உண்மை. உங்களை மரணம் வந்தடைவதற்கு முன் குர்ஆனை ஓதத் தெரிந்தவர்களிடம் சென்று குர்ஆனை ஓதத் தெரிந்து கொள்ளுங்கள். புதிதாக இஸ்லாத்தை ஏற்ற பல சகோதரர்கள் குர்ஆனை சரளமாக ஓதவும், அதன்படி செயல்படவும் செய்கின்றார்கள். நாமோ பரம்பரை முஸ்லிம் என்று சொல்லிக்கொண்டு நமது வழிகாட்டியாகிய குர்ஆனைப் பற்றி எதுவும் தெரியாதவர்களாக இருக்கின்றோம். குர்ஆனைப் படியுங்கள். அதைப்படிப்பது மிகவும் இலகுவானது.

இது போன்று ஏராளமான சிறப்புக்கள் திருக்குர்ஆனுக்கு இருக்கின்றன. நாம் அனைவரும்அதன் சிறப்புக்களை உணர்ந்து செயல்பட வல்ல ரஹ்மான் அருள் புரிவானாக! (وَآخِرُ دَعْواهُمْ أَنِ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعالَمِينَ)


Popular posts from this blog

ஈஸா (அலை) செய்த அற்புதங்களும் நாம்பெறவேண்டிய படிப்பினைகளும். 23-12_22

குர்பானி ஏற்படுத்தும் மாற்றங்களும்,அரஃபா நாள் நோன்பும், அய்யாமுத் தஷ்ரீக் தக்பீரும்… 13-06-2024

பைத்துல் முகத்தஸ்