தியாகத் திருநாள் வந்தது.. தியாகத்தை வளர்க்கச் சொன்னது… 17-06-2024



✍ தியாகத் திருநாள் வந்தது.. தியாகத்தை வளர்க்கச் சொன்னது…

بسم الله، والحمد لله، والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن اهتدى بهداه. أما بعد قال الله سبحانه وتعالى في كتابه العزيز {لَنْ يَّنَالَ اللّٰهَ لُحُـوْمُهَا وَلَا دِمَآؤُهَا وَلٰـكِنْ يَّنَالُهُ التَّقْوٰى مِنْكُمْ‌ؕ } -[سورة الحج – الآية 37] – صدق الله العظيم / قال رسول الله ﷺ «عَنْ عَائِشَةَ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ “‏ مَا عَمِلَ ابْنُ آدَمَ يَوْمَ النَّحْرِ عَمَلاً أَحَبَّ إِلَى اللَّهِ عَزَّ وَجَلَّ مِنْ هِرَاقَةِ دَمٍ وَإِنَّهُ لَيَأْتِي يَوْمَ الْقِيَامَةِ بِقُرُونِهَا وَأَظْلاَفِهَا وَأَشْعَارِهَا وَإِنَّ الدَّمَ لَيَقَعُ مِنَ اللَّهِ عَزَّ وَجَلَّ بِمَكَانٍ قَبْلَ أَنْ يَقَعَ عَلَى الأَرْضِ فَطِيبُوا بِهَا نَفْسًا »‏‏ [إلخ], الى آخره, (رواه الترمذي ، وابن ماجه .) أو كما عبر الرسول صلى الله عليه وسلم


✍🏻 அன்புள்ளவர்களே! அல்லாஹ்வின் ﷻ பேரருளால் புனித‌ [ ذو الحجة ] துல்ஹஜ் மாதத்தை அடைந்து; அதில் முதல் பத்து நாட்களான முத்தான பத்து நாட்களில் அதிகமான‌ நன்மையான அமல்களை செய்து,. நோற்று அல்லாஹ்வுக்கு ﷻ பிடித்தமான அரஃபாவுடைய‌ நோன்பை நோற்று,. இன்று [ஈதுல் அழ்ஹாவுடைய] நாளில் மனிதன் செய்கின்ற நற்செயல்களில் இறைவனுக்கு விருப்பமான செயலான குர்பானியை கொடுப்பதற்க்காக காத்துக்கொண்டிருக்கிறோம். நாம் செய்த அனைத்து ந‌ல் அமல்களையும் அல்லாஹ் ﷻ பொருந்திக்கொள்வானாக! ஆமீன்.
நாம் வாழும் காலமெல்லாம்; இன்றைய நாள் போல எப்போதும் தியாக உணர்வோடும், மன மகிழ்வோடும், சந்தோஷமாக, ஒற்றுமையாக வாழ வல்லோன் அருள் புரிவானாக! ! ஆமீன்.
تقبَّل اللَّه منَّا ومنكم. وغفر لنا ولكم. وجعل العيد علينا وعليكم مباركًا தகப்பல்லல்லாஹு மின்னா வமின்கும்.
அனைவருக்கும் எனது ஈதுல் அழ்ஹா / ஹஜ்ஜுப்பெருநாள் நல்வாழ்துக்களை தெரிவித்தவனாக! இன்றைய நாளின் சிறப்பைபற்றி தெரிந்து தியாகத் திருநாள் வந்தது.. தியாகத்தை வளர்க்க சொன்னது… என்று உரக்க உரைத்திடுவோமாக…!…
பேசுகிற எனக்கும், கேட்கிற உங்களுக்கும், கேட்ட‌தின் படி அமல் செய்யும் பாக்கியத்தை வ‌ல்ல நாயகன் நம்மனைவருக்கும் தந்த‌ருள்புரிவானாக! ஆமீன் ✍
[தியாகத் திருநாள்:-]

✍🏻 அன்புள்ளவர்களே! தியாகத் திருநாள் என்று போற்றப்படும் இன்றைய நாள் இப்ராஹிம் அலைஹிஸ்ஸலாம், இஸ்மாயில் அலைஹிஸ்ஸலாம், ஹாஜிரா அலைஹிஸ்ஸலாம், அவர்களின் தியாகத்தின் வெளிப்பாட்டின் மூலம் இறைவனின் மீது நாம் எந்த அளவுக்கு ஈடுபாடும், நம்பிக்கையும் வைக்க‌ வேண்டும் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம் வாருங்கள்……

இறைவனின் சோதனைகள் பலவற்றில் வென்று சாதனை படைத்து இறைவனின் நெருங்கிய நேசர் [கலில்] என்ற சிறப்பு பெயரையும் பெற்ற‌ நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் [4:125] அவர்கள் தனது தள்ளாத வயதில், தன்னையும் – தனது மனைவியையும் பக்கத் துணையாக இருந்து பாதுகாத்திட ஓர் வாரிசு வேண்டும் என்று இறைவனிடம் விரும்பி வேண்டிக் கேட்டார்கள். அதற்கிணங்க இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு இறைவன் நீண்ட காலம் கழித்து தாமதமாகவே குழந்தை பாக்கியத்தை கொடுத்தான் [11:72] அதாவது இப்ராஹிம் நபிக்கு வயது 86– அவரது மனைவிக்கு ஹாஜிராவுக்கு 70 –வது வயதில் தான் அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு இஸ்மாயில் என்று பெயரிட்டார்கள்.

தவமாய் தவமிருந்து பெற்றெடுத்த குழந்தையோ! ஆழகானது… அறிவானது… ஆச்சரியமானது.

அந்த குழந்தை தந்தையின் கட்டளையை அப்படியே ஏற்று நடக்கும் குழந்தையாக வளர்ந்தது. [37:100] நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு ஒரே குழந்தை, செல்ல குழந்தையாக இருந்ததினால்; அக் குழந்தையிடம் மிக அதிகமாக‌ பாசமாக இருந்தார்கள்.

 இப்ராஹிம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் அன்பு மகனார் இஸ்மாயில் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு 13 – வயதாக இருந்தபோது; நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு கனவின் மூலம் இறை கட்டளை பிறந்தது அதாவது:- தனது மகன் இஸ்மாயில் அலைஹிஸ்ஸலாம் அவர்களை அறுத்துப் பலியிட வேண்டும் என்பதாக‌:-

இதை த‌ம் மகனிடம் தெரிவித்தபோது:- அவர் “என்னருமைத் தந்தையே! நீங்கள் ஏவப்பட்டபடியே செய்யுங்கள். அல்லாஹ் நாடினால் – என்னை நீங்கள் பொறுமையாளர்களில் நின்றுமுள்ளவனாகவே காண்பீர்கள்.” [37:100-111] என்று மறுப்பேதும் இன்றி ஏற்றுக் கொண்டு இறைவனுக்காக; தன் உயிரைத் தரவும் இஸ்மாயில் நபி இசைந்தார்கள்.   

அன்னை ஹாஜிரா இதனை அறிந்து அழுது புழம்பியே துடித்தார்கள். கண்மணி மகனை கட்டியனைத்து கண்ணீரை மழையாய் பொழிந்தார்கள்.

குர்பானி கொடுக்க‌ மகனை அழைத்துச் செல்லும் சமயம் வழியில் ஷைத்தான் குறுக்கிட்டு மூவர் மனதிலும் அச்செயலைச் செய்யவிடாமல் மாய‌ வார்த்தைகளைக் கூறினான், அதனை அவர்கள் செவியேற்கவில்லை.

இஸ்மாயில் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இறைவனின் கட்டளையை என் தந்தை நிறைவேற்றும் போது என் முகத்தைப்பார்த்தால் தந்தைக்கு ஈவு, இரக்கம் வந்துவிடக்கூடும் ஆதலால் அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்றுவதில் சற்று தாமதம் ஏற்பட்டு விடும் என்பதற்க்காக தம் தலையை தந்தையை பார்க்காது திரும்பிக் கொண்டார்கள்.

இப்ராஹிம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் அன்பு மகனை மலை பகுதிக்கு அழைத்துச் சென்று அறுத்துப் பலி கொடுக்க சென்றார்கள் ஆனால் கத்தி அறுக்க மறுத்தது. இதனால் ஆத்திரமடைந்த இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அந்த கத்தியை பாறையின் மீது எறிந்த போது அந்த பாறை இரண்டு துண்டாக உடைந்தது. அவ்வளவு கூர்மையாக இருந்த போதிலும் அந்த கத்தி இஸ்மாயில் அலைஹிஸ்ஸலாம் அவர்களை அறுக்க‌ முடியவில்லை. காரணம் இது:- இறைவனின் செயல் தானே; அப்போது இறைவனின் அறிவிப்பு ஜீப்ரயில் (அலை) மூலமாக‌ வெளியானது.

قَدْ صَدَّقْتَ الرُّءْيَا ‌ ‌ۚ اِنَّا كَذٰلِكَ نَجْزِى الْمُحْسِنِيْنَ‏

“திடமாக நீர் (கண்ட) கனவை மெய்ப்படுத்தினீர். நிச்சயமாக நன்மை செய்வோருக்கு நாம் இவ்வாறே கூலி கொடுத்திருக்கிறோம். 37:105.

 اِنَّ هٰذَا لَهُوَ الْبَلٰٓؤُا الْمُبِيْنُ‏

“நிச்சயமாக இது தெளிவான ஒரு பெருஞ் சோதனையாகும்.” 37:106.

وَفَدَيْنٰهُ بِذِبْحٍ عَظِيْمٍ‏

ஆயினும், நாம் ஒரு மகத்தான பலியைக் கொண்டு அவருக்குப் பகரமாக்கினோம். 37:107.

 وَتَرَكْنَا عَلَيْهِ فِى الْاٰخِرِيْنَ‌ۖ‏

இன்னும் அவருக்காகப் பிற்காலத்தவருக்கு (ஒரு ஞாபகார்த்தத்தை) விட்டு வைத்தோம்: 37:108.

سَلٰمٌ عَلٰٓى اِبْرٰهِيْمَ‏

“ஸலாமுன் அலா இப்ராஹீம்” (இப்ராஹீம் மீது ஸலாம் உண்டாவதாக)! 37:109.

நபி இப்ராஹீம் / இஸ்மாயில் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தியாகங்களை போற்றும் வகையிலும், இந்த தியாகத்தை நினைவுபடுத்தும் வகையிலும், ஹஜ்ஜுப் பெருநாள் என்றும் பக்ரீத் பண்டிகை என்றும், இந்த தியாக திருநாளை கொண்டாடுகிறோம்.  

இந்த நாளில் ஒவ்வொரு முஸ்லிமும் தன்னையே இறைவனுக்கு தியாகம் செய்யவேண்டும். என்ற உள்ளுணர்வுடன் ஆட்டுக்கிடாய் ஒன்றை குர்பானி கொடுத்து; தமது கடமையை நிறைவேற்றுகிறார்க‌ள். இந்த நாளில் இறைவனுக்காக தியாகம் செய்யும் செயல்களில் நாமும் நம்மை ஈடுபடுத்திக் கொண்டு பிறர் நலம் பேணி பெருநாளை கொண்டாடுவோமாக… ஈத் முபாரக்!

[தியாகத் திருநாளின் மூலம் நாம் பெற வேண்டிய பாடங்களும் / படிப்பிணைகளும் :-]

✍🏻 அன்புள்ளவர்களே! மேற்கண்ட சம்பவத்தின் மூலம் நாம் பெற்ற / நாம் பெற வேண்டிய பாடங்கள் / படிப்பிணைகள் என்னென்ன என்பதைபற்றிப் பார்ப்போம் வாருங்கள் :-

நீண்ட நாட்களாக‌ குழந்தை பாக்கியம் இல்லாமல் தவமாய் தவமிருந்து பெற்றெடுத்த குழந்தையை அல்லாஹ் குர்பானி கொடுக்க சொன்ன போது இப்ராஹிம் அலைஹிஸ்ஸலாமும்,, ஹாஜிரா அம்மையாரும், எந்தவொரு மறுப்பேதும் தெரிவிக்காமல் அல்லாஹ்வின் கட்டளைக்கு கட்டுப்பட்டது.
இஸ்மாயில் (عَلَيْهِ السَّلاَمُ) அவர்களை தன் தந்தை அறுத்துப் பலியிட வேண்டும் என்று சொன்னதற்க்கு எவ்வித மறுப்பும் / எதிர்ப்பும் தெரிவிக்காதது?
அல்லாஹ்வின் கட்டளைக்கு முன்னால் என்பிள்ளை எவ்வளவு ஆழகாக இருந்தாலும்… அறிவானதாக இருந்தாலும்…. அல்லாஹ்வின் நேசத்திற்க்கு முன்னால் அவனை அர்பணிப்பேன் என்று கூறியது.
அன்னை ஹாஜிரா [அலை] அவர்கள் தன் மகனின் மீதுள்ள பாசத்தால் அழுது புழம்பியே துடித்தார்கள். கண்மணி மகனை கட்டியனைத்து கண்ணீரை மழையாய் பொழிந்தார்கள். என் பாசத்தை விட இறைவனின் நேசம்தான் நமக்கு முக்கியம் என்று கூறியது.
குர்பானி கொடுக்க‌ மகனை அழைத்துச் செல்லும் சமயம் வழியில் ஷைத்தான் குறுக்கிட்டு மூவர் மனதிலும் அச்செயலைச் செய்யவிடாமல் மாய‌ வார்த்தைகளைக் கூறியும், அதனை அவர்கள் செவியேற்காதது.
அல்லாஹ் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் இஸ்மாயில் அலைஹிஸ்ஸலாம் அவர்களை குர்பானி கொடுங்கள் என்று சொன்னதும்; ஏன்? எதற்கு? என்று காரணம் கேட்காமல். அல்லாஹ்வின் கட்டளை இது எனச் செய்தது.
இஸ்மாயில் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இறைவனின் கட்டளையை என் தந்தை நிறைவேற்றும் போது என் முகத்தைப் பார்த்தால் தந்தைக்கு ஈவு, இரக்கம் வந்துவிடக்கூடும் ஆதலால் அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்றுவதில் சற்று தாமதம் ஏற்பட்டு விடும் என்பதற்க்காக தம் தலையை தந்தையை பார்க்காது திரும்பிக் கொண்டது.
✍🏻 அன்புள்ளவர்களே! இப்ராஹிம் (عَلَيْهِ السَّلاَمُ) அவர்கள் குர்பான் எனும் அமலின் மூலம்; தன் மகனை அல்லாஹ்வுக்காக அர்பணம் செய்தார்கள். நாம் தம் மகன்/ மகளை அல்லாஹ்வுக்காக எந்த விஷயத்தில் அர்பணம் செய்துள்ளோம். [பிள்ளைகளை ஒழுங்காக வளர்பதிலா? பிள்ளைகளுக்கு மார்க்க கல்வி கொடுப்பதிலா? என்பதனை இந்த நேரத்தில் சிந்தித்து பார்க்க கடமைப்பட்டுள்ளோம்.

 தந்தையின் சொல் பேச்சைக் கேட்ட தனயன், அவர்களின் விருப்பத்திற்கு மாறாக ஏதும் கூறாமல், முழுமனதுடன் தன்னைப் பலியிடச் சம்மதம் தெரிவித்தார். இஸ்மாயில் (அலை) அவர்களின் இந்த மன நிலைதான் அறிஞர் பெருமக்களால் “தசவ்வுஃப்‘ என்று சொல்லப்படுகின்றது. அதாவது இறைவனுக்கு என்று செயல்படும் பொழுது தன்னையும், உலகத்தையும், மறந்து முழுவதுமாக தன்னை அதற்காகத் தயார்படுத்திக் கொள்வது என்பதாகும்.

[உள்ஹிய்யாவின் சுன்னத்துக்கள், மற்றும் ஒழுக்கங்கள் :-

♣ அறுப்பின் பர்ளுகள் – 4 ♣

குர்பானி பிராணியை குர்பானி கொடுக்கும் போது அல்லாஹ்வுக்காக குர்பானி கொடுக்கிறேன் என நிய்யத் செய்வது.
குர்பானி பிராணியை அறுப்பவர் முஸ்லிமாக இருப்பது.
பிஸ்மில்லாஹ் சொல்லி அறுப்பது. அல்லது [بِسْمِ اللَّهِ وَاللَّهُ أَكْبَرُ] பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர் என்று சொல்வது மிகச் சிறப்பானதாகும்.
தொண்டை குழிக்கும் ‍- தொண்டைக்கும் மத்தியிலுள்ள இரத்தம் ஓடும் இரு குழாய்களையும், மூச்சுக்குழாய், உணவுக்குழாய், ஆகிய நான்கு குழாய்களையும் துண்டிப்பது. [நூல் ஹிதாயா]
♣ அறுப்பின் சுன்னத்துகள் – 7 ♣

கத்தியை கூர்மையாக்கி கொள்ளுதல்.
பிராணிகளுக்கு தண்ணீர் புகட்டுதல்.
வலப்பக்கம் தலையையும், இடப்பக்கம் காலும் வைக்கப்பட்டு, முகத்தை கிப்லாவின் திசையில் திருப்பி வைத்து அறுப்பது.
மூன்று கால்களைக் கட்டியும், ஒரு காலை [வலது காலை] கட்டாமலும் வைத்திருப்பது.
அறுப்பவர் கிப்லாவை முன்னோக்கி நின்று அறுப்பது.
இய‌ன்றால் குர்பானி கொடுப்பவரே அறுப்பது முடியாவிட்டால் அறுக்கும் போது அவ்விடத்தில் இருப்பது.
 اللهم منك وإليك اللهم تقبل مني كما تقبلت من إبراهيم خليلك யா அல்லாஹ் ! முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்தும், உனது கலீல் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடமிருந்தும் நீ ஏற்றுக் கொண்டது போல் என்னிடமிருந்தும் இதை [ குர்பானியை] ஏற்றுக் கொள்வாயாக என்று துஆ செய்வது. [நூல் ஹிதாயா]
♣ அறுப்பின் மக்ரூஹ்கள் [வெறுக்கத்தக்கவைகள்] – 3 ♣

பிராணியின் முன்னாள் கத்தியை தீட்டுவது.
ஒரு பிராணியின் முன்னால் மற்றொரு பிராணியை அறுப்பது,
பிராணியின் கழுத்தின் மேல் பாகத்தில் இருந்து அறுப்பது.
♣ அறுப்பின் ஹராம் ♣

குர்பானி பிராணியை அறுத்து உடனயே தோலை உரிப்பது ஹராமாகும். அறுக்கப்பட்டு அதன் உயிர் போன பின்னர் உடல் சூடு தணிந்து பரிபூரணமாக குளிர்ச்சியான பின்பே தோலை உரிக்க வேண்டும்.

♣ குர்பானி இறைச்சியின் சட்டங்கள் ♣

குர்பானி பிராணியின் இறைச்சியை மூன்று பங்குகளாகப் பிரித்து ஒன்றைத் தமது குடும்பத்திற்காக வைத்துக் கொண்டு, இரண்டாவதை தமது உறவினர்களுக்கும், மூன்றாவதை ஏழைகளுக்கும் கொடுத்துவிட வேண்டும். இதுவே சிறந்த முறையாகும்.
இறைச்சி முழுவதையும் தேவைக் கருதி தமது குடும்பத்திற்காக வைத்துக் கொள்வதும் கூடும். அதேபோல் தாம் எதையும் எடுக்காமல் அனைத்தையும் பிறருக்கு கொடுத்து விடுவதும் கூடும்.
குர்பானியின் இறைச்சியை ஏழை, செல்வந்தர், முஸ்லிம், முஸ்லிமல்லாதவர்கள் அனைவருக்கும் கொடுக்கலாம்.
இறைச்சியாகக் கொடுப்பது / சமைத்துக் உணவாகக் கொடுப்பது இரண்டும் கூடும்.
இறைச்சியை பதப்படுத்தியோ, உப்பிட்டுக் காயவைத்தோ, நீண்ட நாள் பயன்படுத்துவதும் கூடும்.
இறைச்சியை அறுப்பவருக்கு கூலியாகத்தருவதோ, விற்பனை செய்வதோ கூடாது.
ஒருவர் இறப்பதற்கு முன் தன் சார்பாக குர்பானி கொடுக்குமாறு வஸிய்யத் செய்து அதற்கான தொகையையும் விட்டுச் சென்றிருந்தால் அவருக்காக குர்பானி கொடுப்பது அவர் குடும்பத்தார் மீது கடமையாகும். அப்போது அதன் இறைச்சி முழுவதையும் ஏழைகளுக்கு தர்மம் செய்து விட வேண்டும். வீட்டினர் யாரும் சாப்பிடக் கூடாது. செல்வந்தர்களுக்கும், முஸ்லிமல்லாதவருக்கும் கொடுக்கக் கூடாது.
உயிரோடு உள்ளவர் ஏதேனும் ஒரு காரியத்திற்காக குர்பானி செய்வதாக நேர்ச்சை செய்திருந்தால் அந்த இறைச்சிக்கும் இதே சட்டம்தான்.
♣ குர்பானி இறைச்சியில் கழிக்கப்பட வேண்டிய உறுப்புகள் என்ன ? ♣

1.ஆண்குறி. 2. பெண்குறி .3. இரண்டு விதைகள். 4 நீர்பை. 5. இரத்தம். 6. கட்டி. களலை. 7 .பித்தப்பை. ஆடு, மாடு , ஒட்டகம், ஆகியவற்றில் எந்த பிராணியாக இருந்தாலும் மேற்கண்ட உறுப்புகளை சாப்பிடக்கூடாது.  

✍ இன்னும் சொல்ல வேண்டியது நிறைவாய் உள்ளது நேரத்தின் நலனை கருதி முடித்துக் கொள்கிறேன் வ ஆகிரு தஃவானா அனில் ஹம்து லில்லாஹி ர‌ப்பில் ஆலமீன்.

****** صلى الله وسلم على محمد وعلى آله وصحبه أجمعين والحمد لله رب العالمين *******


Popular posts from this blog

ஈஸா (அலை) செய்த அற்புதங்களும் நாம்பெறவேண்டிய படிப்பினைகளும். 23-12_22

குர்பானி ஏற்படுத்தும் மாற்றங்களும்,அரஃபா நாள் நோன்பும், அய்யாமுத் தஷ்ரீக் தக்பீரும்… 13-06-2024

பைத்துல் முகத்தஸ்