அண்ணலாரின் நற்குணங்கள்
அல்லாஹ்வின் பேரருளால் [ربيع الأول ] ரபீ[ع]உல் அவ்வல் மாதத்தின் ஜுமுஆவில் அமர்ந்துள்ளோம். அல்ஹம்துலில்லாஹ்.
அன்புள்ளவர்களே! நம்மைப் படைத்த அல்லாஹ் ﷻ உலகத்திலே நான்கு விஷயங்களை உலகத்தார் அனைவருக்கும் பொதுவாக ஆக்கியிருக்கிறான். அந்த நான்கு விஷயங்களும் உலகத்தில் இருக்கிற அத்தனை மக்களுக்கும், அத்தனை படைப்புக்களுக்கும் பொதுவானது.
அது எனக்கு மட்டும் தான் என்றோ? அவைகள் எங்களுக்கு மட்டும் தான் என்றோ? யாரும் அதை சொந்தம் கொண்டாட முடியாது. அதிலே ஒன்று அல்லாஹ் ﷻ. இரண்டாவது அல்குர்ஆன். மூன்றாவது நபி ﷺ அவர்கள். நான்காவது பள்ளிவாசல்கள்.
- அல்லாஹ் ﷻ:- அல்லாஹுத்தஆலா அகிலத்தார் அனைவருக்கும் இறைவனாக இருக்கிறான். [7:121]
- உலகத்திருமறையான அல்குர்ஆன்:– அல்லாஹ் ﷻ அண்ணல் நபி ﷺ அவர்களுக்கு அருளிய அல்குர்ஆன் அகிலத்தார் அனைவருக்கும் உபதேசமாக இருக்கிறது. [26:192]
- நபி ﷺ அவர்கள்:- கண்மனி நாயகம் ﷺ அவர்கள் அகிலத்தார் அனைவருக்கும் அருட்கொடையாக இருக்கிறார்கள். [21:107}
- இறையில்லங்கள்:- அல்லாஹ்வுடைய பள்ளிவாசல்கள் எல்லோருக்கும் பொதுவானது. எந்த நாட்டினரும், எந்த மொழியினரும், ஏழை – பணக்காரர்; பதவியில் இருப்பார் – யாசகம் கேட்பவர் என்ற பாகுபாடின்றி யாரு வேண்டுமெனாலும் தொழலாம்; அல்லாஹ்விடம் பேசலாம். (72:18 )
ஆக அண்ணல் நபி ﷺ அவர்கள்
- மனித சமூகத்தினர் அனைவருக்கும்,
- மலக்குகள் அனைவருக்கும்,,
- ஜின் இனத்தவர் அனைவருக்கும்,
- முஸ்லிம்கள் அனைவருக்கும்,
- பிற மத சகோதரர்கள் அனைவருக்கும்,
- மிருகங்கள் அனைவருக்கும்,
- பறவைகள் அனைவருக்கும்,
- புழு பூச்சிக்கள் அனைவருக்கும், உலகத்தில் அல்லாஹ்வின் படைப்பு என்று எதுவெல்லாம் இருக்கிறதோ அவை அனைத்திற்கும் அண்ணலம் பெருமானார் ﷺ அவர்கள் ரஹ்மத்தாக, அருளாக, கிருபையாக [அருட்கொடையாக] இருக்கிறார்கள். என்பதைப் பற்றி இன்றைய ஜுமுஆவில் முழுமையாக தெரிந்து கொள்வோம் வாருங்கள்……
அல்லாஹு ﷻ சுப்ஹானஹுத்தஆலா நம் அனைவருக்கும் முஹம்மது ﷺ அவர்களின் நற்குணத்தை அப்படியே பின் பற்றி வாழும் பாக்கியத்தை எனக்கும், உங்களுக்கும் , தந்தருள் புரிவானாக! ஆமீன் என துஆ செய்தவனாக எனது ஜுமுஆ பேருரையை ஆரம்பம் செய்கிறேன்.
❈•••┈┈┈┈┈❀ ┈┈┈┈┈•••❈• ❀ ••❈•••┈┈┈┈┈┈┈┈┈┈•••❈
அன்புள்ளவர்களே! நாம் ரஸுலுல்லாஹி ﷺ அவர்களை பற்றி பயான் கேட்பதினால் முஹம்மத் என்ற வார்தையை அதிகமாக பயன்படுதப்படும். அதனால் முஹம்மத் ﷺ என்ற வார்த்தை எங்கெல்லாம். பயன்படுதப்படுகிறதோ அங்கெல்லாம் மாநபிமீது [ஸல் – அலைஹி வஸல்லம்] என்ற ஸலவாத்தை சொல்லுங்கள்.
❈•••┈┈┈┈┈❀ ┈┈┈┈┈•••❈• ❀ ••❈•••┈┈┈┈┈┈┈┈┈┈•••❈
♣ அல்லாஹ் [ﷻ] திருமறையில் கூறுகின்றான்:- قال الله تعالى ♣
وَمَاۤ اَرْسَلْنٰكَ اِلَّا رَحْمَةً لِّـلْعٰلَمِيْنَ
(நபியே!) நாம் உம்மை அகிலத்தாருக்கு எல்லாம் ரஹ்மத்தாக – ஓர் அருட் கொடையாகவேயன்றி அனுப்பவில்லை…. {அல்குர்ஆன் 21:107}
- رَحْمَةً ரஹ்மத் எனும் அரபிச் சொல் பொருட் செறிவானது. கருணை புரிதல், கிருபை, மனம் இரங்குதல், போன்ற பல பொருள்கள் அதற்கு உண்டு.
- இதே போன்று الْعٰلَمِيْنَۙ ஆலமீன் என்றால் அகிலம் முழுவதையும் அதாவது மனிதர்கள் உள்ளிட்ட பறப்பன, ஊர்வன மறைவான, பூமியிக்கு மேல் – கீழ் போன்ற எல்லா உயிரினங்களையும் பிற படைப்புகளையும் குறிக்கும்.
- அல்லாஹ் ﷻ எப்படி رَبِّ الْعٰلَمِيْنَۙ உலகின் ரப்பாக இருக்கிறானோ; அதுபோல ரசூலுல்லாஹி ﷺ அவர்கள் உலகின் رَحْمَةً لِّـلْعٰلَمِيْنَ ரஹ்மத்தாக – அருட் கொடையாக இருக்கிறார்கள்.
❈•••┈┈┈┈┈❀ ┈┈┈┈┈•••❈• ❀ ••❈•••┈┈┈┈┈┈┈┈┈┈•••❈.
♣ நபி ﷺ அவர்கள் கூறினார்கள்:- كما قال النبي صلى الله عليه وسلم ♣
قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم « إِنَّ مِنْ أَفْضَلِ أَيَّامِكُمْ يَوْمَ الْجُمُعَةِ فِيهِ خُلِقَ آدَمُ وَفِيهِ قُبِضَ وَفِيهِ النَّفْخَةُ وَفِيهِ الصَّعْقَةُ فَأَكْثِرُوا عَلَىَّ مِنَ الصَّلاَةِ فِيهِ فَإِنَّ صَلاَتَكُمْ مَعْرُوضَةٌ عَلَىَّ ». قَالَ قَالُوا يَا رَسُولَ اللَّهِ وَكَيْفَ تُعْرَضُ صَلاَتُنَا عَلَيْكَ وَقَدْ أَرِمْتَ يَقُولُونَ بَلِيتَ. فَقَالَ « إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ حَرَّمَ عَلَى الأَرْضِ أَجْسَادَ الأَنْبِيَاءِ
நபி ﷺ அவர்கள், நாட்களில் மிகச்சிறந்தது வெள்ளிக்கிழமையாகும். எனவே அன்று என்மீது ஸலவாத் அதிகமாகக் கூறுங்கள். நிச்சயமாக உங்களின் ஸலவாத் என்னிடம் எடுத்துக்காட்டப்படுகின்றது என்று கூறினார்கள். இறைத் தூதர் அவர்களே நீங்கள் மண்ணோடு மண்ணான நிலையில் எங்களின் ஸலவாத் எப்படி எடுத்துக் காண்பிக்கப்படும் என்று நபித்தோழர்கள் கேட்டனர். நிச்சயமாக நபிமார்களின் உடல்களை (சாப்பிட) பூமிக்கு அல்லாஹ் தடை விதித்துவிட்டான் என்று நபி ﷺ அவர்கள் கூறினார்கள். அபூதாவூத் (1047)
❈•••┈┈┈┈┈❀ ┈┈┈┈┈•••❈• ❀ ••❈•••┈┈┈┈┈┈┈┈┈┈•••❈.
【 அண்ணலார் ஓர் பேரருட்கொடை 】
! அண்ணலார் இவ்வுலகிற்கு ஓர் அருட்கொடையா? என்று பார்த்தால் ஆம்! அண்ணலார் இவ்வுலகிற்கு மட்டும் அருட்கொடையல்ல… ஈருலகிற்கும் ஓர் பேரருட்கொடைதான் என்று சொல்ல வேண்டும். எப்படி? என்பதனைப் பற்றி சற்று விரிவாக தெரிந்து கொள்வோம் வாருங்கள்……
அண்ணலார் மட்டும் இவ்வுலகிற்கு வராவிட்டால் நாம் அனைவரும் ஈருலகிலும் நாசமடைந்திருப்போம்.
- தகரம் போன்ற மனிதர்களெல்லாம் தங்கமாக மாற்றியது ஓர் அருட்கொடைதானே?
- சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் இரத்தத்தை ஓட்டும் காலத்தில் இரத்ததின் மதிப்பை உணர செய்வது ஓர் அருட்கொடைதானே? (5:32)
- வீட்டில் மது பானங்கள் டேங்கு. டேங்காக இருந்த சமயத்தில் அம்மதுபானங்களை தெருவில் ஊற்றி மது ஆறுகளாக ஓட வைத்தது ஓர் அருட்கொடைதானே? (5:90)
- பெண்குழந்தைகளை உயிரோடு புதைத்த காலத்தில் பெண்களின் மகிமையை எடுத்துச் சொன்னது ஓர் அருட்கொடைதானே? [புகாரி 7310]
- உயர்குலம், தாழ்குலம் என்று இருந்த போது அனைவரும் அல்லாஹ்வின் அடிமையே என்று சமத்துவப்படுத்தியது ஓர் அருட்கொடைதானே? [புகாரி 3490]
- மக்கத்து காஃபிர்கள் தமக்கு எவ்வளவு துன்பம் தந்தபோதிலும் அனைவரையும் மன்னித்தது ஓர் அருட்கொடைதானே?
- நாசத்தைக் கூறிய நயவஞ்சகனிடமும் நளினத்தை காட்டியதும் ஓர் அருட்கொடைதானே? (அஸ்ஸாமு அலைக்கும் சம்பவம்) [புகாரி 6024]
- தன்னை கல்லால், சொல்லால், துன்புறுத்தியவர்களுக்கும் நல்ல வாழ்க்கை அமைய துஆ செய்தது ஓர் அருட்கொடைதானே? [புகாரி 3477]
- உணவில் விஷம் கலந்தவரிடம், பேச்சில் விஷம் கலந்தவரிடம் [முனாஃபிக்], தன் மீது தினமும் குப்பையை கொட்டியவரிடம் அன்புடன் நடந்து கொண்டது ஓர் அருட்கொடைதானே? [புகாரி 2617]
- போரிலும் கூட பெண்களையும், குழந்தைகளையும் கொல்வதைக் கண்டித்தது ஓர் அருட்கொடைதானே? [புகாரி 3014]
- தீயவர்களிடம் கூட நல்ல முறையில் நடந்து கொண்ட விதம் ஓர் அருட்கொடைதானே? [புகாரி 6032]
- தன் வாழ்வில் ஒரு முறை கூட பாவம் செய்யாமல் வாழ்வது ஓர் அருட்கொடைதானே?
- தன் வாழ்வில் தன்னிடம் யாரு வந்து உதவி கேட்டு வந்தாலும் ஒரு முறை கூட இல்லை என்று சொல்லாத தாராள மனம் ஓர் அருட்கொடைதானே? [புஹாரி :6034]
- நம்மை சுவர்கத்திற்கு அழைத்து செல்லுவதும் ஓர் அருட்கொடைதானே? [புகாரி-3883]
இது போன்ற அவர்களின் அருட்கொடையான விஷயங்கள் ஏராளமாக உள்ளன. நம் வாழ் நாளெல்லாம் போதாதே வல்லல் நபியின் வாழ்வை சொல்ல…
【அண்ணலாரின் வாழ்க்கை – ஓர் அருட்கொடை】
! இவ்வுலகில் அல்குர்ஆனின் ஒரு வசனத்தை பின்பற்றி வாழ்வதே பெரும் பாக்கியம் [அருட்கொடை] அல்குர்ஆனே தன் வாழ்வாக ஆக்கி கொண்டால் அது மிகப்பெரும் பாக்கியம் [அருட்கொடை] தானே?
وَكَانَ أُصِيبَ يَوْمَ أُحُدٍ. فَقُلْتُ يَا أُمَّ الْمُؤْمِنِينَ أَنْبِئِينِى عَنْ خُلُقِ رَسُولِ اللَّهِ -صلى الله عليه وسلم قَالَتْ أَلَسْتَ تَقْرَأُ الْقُرْآنَ قُلْتُ بَلَى. قَالَتْ فَإِنَّ خُلُقَ نَبِىِّ اللَّهِ -صلى الله عليه وسلم- كَانَ الْقُرْآنَ
நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம், நபி ﷺ அவர்களின் குணத்தைப் பற்றி எனக்கு சொல்லுங்கள் என்று கேட்டேன். அதற்கு அவர்கள் நபி ﷺ அவர்களின் குணம் குர்ஆனாகவே இருந்தது என்று கூறினார்கள்.
【அண்ணலாரின் பேச்சு – ஓர் அருட்கொடை】
عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ كَانَ إِذَا تَكَلَّمَ بِكَلِمَةٍ أَعَادَهَا ثَلاَثًا حَتَّى تُفْهَمَ عَنْهُ، وَإِذَا أَتَى عَلَى قَوْمٍ فَسَلَّمَ عَلَيْهِمْ سَلَّمَ عَلَيْهِمْ ثَلاَثًا
‘நபி ﷺ அவர்கள் ஏதாவது ஒரு வார்த்தை பேசினால் அது அவர்களிடமிருந்து நன்கு புரிந்து கொள்ளப்பட வேண்டும் என்பதற்காக மும்முறை அதைத் திரும்பக் கூறுவார்கள். ஏதாவது ஒரு சமூகத்தாரிடம் சென்றால் மும்முறை ஸலாம் கூறுவார்கள்’ [புகாரி 95]
«بُعِثْتُ بِجَوَامِعِ الكَلِمِ، நான் ஒருங்கிணைந்த பொருள்கள் கொண்ட வார்த்தைகள் (ஜவாமிஉல் கலிம்) வழங்கப்பட்டு அனுப்பப்பட்டு உள்ளேன். புகாரி (7013)
நபி ﷺ அவர்கள் பெரும்பாலும் எல்லா நேரங்களிலும் மௌனமாகவே (இறை) தியானத்தில் இருப்பார்கள். அவசியம் ஏற்பட்டால் மட்டும் பேசுவார்கள். அவசியம் இல்லையெனில் மௌனம் காப்பார்கள். மேலும் நபியவர்கள் கூறுவார்கள் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொண்டவர் பேசினால் நல்லதைப் பேசட்டும் அல்லது வாய்மூடி இருக்கட்டும். என்று. [புகாரி 6018]
【அண்ணலாரின் அங்கிகாரம் – ஓர் அருட்கொடை】
! ரஸுலுல்லாஹி ﷺ அவர்கள் ஒரு விஷயத்தை [சொல்லும் போது, செய்யும் போது, அங்கிகாரம் தரும் போது] அது மார்க்க சட்டமாகி விடும். ஆனால் நம் உம்மத்து அதிக சிரமப்படக்கூடாதென பல இபாதத்துக்களில் சலுகைதந்துள்ளார்கள். அது நமக்கு கிடைத்த அருட்கொடைதானே? [உதாரணமாக]
عَنْ أَبِي هُرَيْرَةَ ؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: لَوْلاَ أَنْ أَشُقَّ عَلَي أُمَّتِي لأَمَرْتُهُمْ بِالسِّوَاكِ عِنْدَ كُلِّ صَلوةٍ. رواه مسلم.
எனது உம்மத்துக்கு சிரமம் ஏற்படும் என்ற அச்சம் மட்டும் எனக்கு இல்லையென்றால், ஒவ்வொரு நேரத் தொழுகைக்கும் பல் துலக்க (மிஸ்வாக் செய்ய) அவர்களுக்கு உத்தரவிட்டிருப்பேன்” . (முஸ்லிம்)
எனது உம்மத்துக்கு சிரமம் ஏற்படும் என்ற அச்சம் மட்டும் எனக்கு இல்லையென்றால், தஹஜ்ஜத் தொழுகையை தினமும் தொழுமாறு உத்தரவிட்டிருப்பேன்” [ஹதீஸ்]
ஒருவர் ரஸுலுல்லாஹி ﷺ அவர்களிடத்தில் ஹஜ் ஒரு முறை கடமையா? இரு முறை கடமையா? என்று கேட்டார் அதற்கு ரஸுலுல்லாஹி ﷺ அவர்கள் மவுனமாக இருந்தார்கள். [இரு முறை ஹஜ் கடமைதான் என்று சொன்னால்] எல்லோருக்கும் சிரமமாகிவிடும்.
【அண்ணலார் உம்மத்தின் மீது கவலை – ஓர் அருட்கொடை】
عَنْ هِنْدِ بْنِ أَبِي هَالَةَؓ قَالَ: كَانَ رَسُولُ اللهِ ﷺ مُتَوَاصِلَ اْلاَحْزَانِ دَائِمَ الْفِكْرَةِ لَيْسَتْ لَهُ رَاحَةٌ طَوِيلَ السَّكْتِ لاَ يَتَكَلَّمُ فِي غَيْرِ حَاجَةٍ
நபி ﷺ அவர்கள் (தன் உம்மத்தைப்பற்றி) தொடர்ந்த கவலையுடையவர்களாகவும், எப்பொழுதும் கவலையுற்றவர்களாகவும் இருப்பார்கள், (உம்மத்தைப் பற்றிய இந்தக் கவலை காரணமாக) அன்னார் எந்நேரமும் நிம்மதியற்று இருப்பார்கள், அதிகம் மௌனமாகவே இருப்பார்கள், தேவையின்றிப் பேசமாட்டார்கள்”
நபியவர்களுக்கு கல்லடிகளாலும், சொல்லடிகளாலும் வேதனையளித்த தாஃயிப் நகர மக்களுக்கு எதிராக நபியவர்கள் பிரார்த்திக்கவில்லை. அவர்கள் திருந்தாவிட்டாலும் அவர்களுடைய சந்ததிகளாவது திருந்துவார்கள் என்று கொள்கைக்காக அவர்கள் செய்த அநியாயங்களையெல்லாம் பொறுத்துக் கொண்டார்கள்.
【அண்ணலாரின் அணுகுமுறை – ஓர் அருட்கொடை】
! உலகத்தின் அத்துணை ஆட்சியாளர்களாலும் கைவிடப்பட்டவர்கள் அரேபியர்கள்.
அவர்களின் காட்டுமிராண்டித்தனத்தால் அவர்களின் பூமியைக் கைப்பற்ற நினைத்து படை திரட்டி வந்த பல மன்னர்கள் பின் நாளில் வருந்தி, திரும்பிச் சென்றதும் உண்டு.
அப்படி திரும்பியவர்களில் அலெக்ஸாண்டர் கூட விலகிப் போனதாக ஓர் வரலாறு உண்டு. அவர்களின் அருகே நெருங்க நினைத்தவர்களை விட, அவர்களை விட்டும் விரண்டோடியவர்கள் ஏராளம், தாராளம். ஆனால், அவர்களின் வரலாற்றுத் தியரியை அடியோடு மாற்றிக் காட்டி, நாகரீகத்தின் உச்சத்திற்கே கொண்டு சென்று, உலகாளும் ஆட்சியாளர்களாய், ஆளுமைத் திறன் மிக்கவர்களாய், மனிதர்களாய், மனிதப் புனிதர்களாய் மிளிரச் செய்தவர்கள் அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள்.
அப்படியென்றால், அந்த மனிதர்களை நல்வழிப் படுத்த எத்துணை ஆண்டுகளை மாநபி ﷺ எடுத்திருப்பார்கள்?. சற்றேரக்குறைய வெறும் 23 ஆண்டுகளில் தான் இச்சாதனையை செய்து முடித்தார்கள். மாநபி ﷺ அவர்களின் அறிவார்ந்த, அழகிய அணுகுமுறைகள் தான், அம்மக்களை அறியாமையிலிருந்து அறிவுடமையின் பக்கமும், காட்டுமிராண்டித்தனத்திலிருந்து நாகரீகத்தின் உச்சத்திற்கும் கொண்டு வந்தது
أَنَسٌ ـ رضى الله عنه ـ قَالَ خَدَمْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم عَشْرَ سِنِينَ، فَمَا قَالَ لِي أُفٍّ. وَلاَ لِمَ صَنَعْتَ وَلاَ أَلاَّ صَنَعْتَ
நான் நபி ﷺ அவர்களுக்குப் பத்து ஆண்டுகள் சேவகம் புரிந்தேன். (மனம் வேதனைப்படும்படி) என்னை ‘ச்சீ’ என்றோ, ‘(இதை) ஏன் செய்தாய்’ என்றோ, ‘நீ (இப்படிச்) செய்திருக்கக் கூடாதா?’ என்றோ அவர்கள் சொன்னதில்லை [புகாரி 6038]
ஒரு கிராமவாசி பள்ளியில் சிறுநீர் கழித்தார். சஹாபிகள் அவரைத் தடுக்க முற்பட்டபோது; நபியவர்கள், அவரிடம் நடந்து கொண்ட அணுகுமுறை தான் 300 நபர்களை இஸ்லாத்தில் கொண்டு வந்து சேர்த்தது.
அப்துல்லாஹிப்னு உபை எனும் முனாஃபிக்கிற்கு தொழ வைத்தபோது சஹாபிகளில் பலரும் அதை விரும்பவில்லை. நபி கூறினார்கள்: والله اني كنت أرجو ان يسلم به ألف من قومه’ நபியின் எண்ணம் போலவே ஆயிரம் நபர்கள் இஸ்லாத்தை தழுவினார்கள்.
ஆக நபியின் அணுகுமுறைக்கும்; பிற மனிதர்களின் அணுகுமுறைக்கும் நிறைய வித்தியாசம் உள்ளன.
【அண்ணலார் பிறமத சகோதரர்களுக்கு – ஓர் அருட்கொடை】
இது மட்டுமல்ல! இஸ்லாத்திற்கு எதிராக செயல்படக்கூடிய காஃபிர்களுக்கும் கூட அண்ணல் நபி ﷺ அவர்கள் அருளாக இருக்கிறார்கள். அன்றைக்கு மக்கத்து குரைஷிகள் நபி ﷺ அவர்களுக்கு எத்தனையோ கஷ்டங்களையும் துன்பங்களையும் இடையூறுகளையும் கொடுத்தார்கள். அவர்களை சொல்லால் அடித்தார்கள், கல்லால் அடித்தார்கள், உடலைக் காயப்படுத்தினார்கள். உள்ளத்தைக் காயப்படுத்தினார்கள். பற்களை உடைத்தார்கள். அவர்கள் செல்லும் பாதையில் முற்களையும்; கற்களையும் புதைத்து வைத்தார்கள். கொலை செய்ய முயற்சித்தார்கள். இறுதியில் ஊரை விட்டே துறத்தினார்கள்.
தன் ஹபீபான அண்ணலுக்கு இத்தனை துன்பங்களைத் தந்தால் அல்லாஹ்வால் தாங்கிக் கொள்ள முடியுமா? எனவே அல்லாஹ் வானவரை அனுப்பி அவர்களை அழித்து விடவா? என்று கேட்டான். அப்போது கருணை நபி ﷺ அவர்கள் சொன்ன வார்த்தை என்ன தெரியுமா? இவர்கள் ஈமான் கொள்ளா விட்டாலும் இவர்களுடைய சந்ததிகளாவது ஈமான் கொள்வார்கள் என்று சொன்னார்கள்.
அருமையானவர்களே! நாம் இங்கே ஒன்றை சிந்தித்துப் பார்க்க வேண்டும். நமக்கு ஒருவன் ஒரு துரோகம் செய்து விட்டால் அவனுக்கு மட்டுமில்லாமல் அவனுடைய சந்ததிகளுக்கும் சேர்த்து நாம் பத்வா செய்வோம். ஆனால் நபி ﷺ அவர்கள் அந்த மக்கள் மட்டுமல்ல அவர்களுடைய சந்ததிகளின் நலவிலும் அக்கரை காட்டினார்கள் என்றால் இதுபோன்ற ஒரு அன்பையும் ஒரு பாசத்தையும் கருணையும் வேறு எங்காவது பார்க்க முடியுமா ?
உஹதுப் போர்க்களத்தில் மக்கத்து காஃபிர்கள் நபி ﷺ அவர்களுடைய பற்களை உடைத்தார்கள். அப்போது அவர்களுடைய புனிதமான மேனியிலிருந்து ரத்தம் வடிந்து கொண்டிருக்கிறது. அந்த கஷ்டமான நேரத்தில் அண்ணல் நபி ﷺ அவர்கள் சொன்ன வார்த்தை பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய வார்த்தை.அவர்கள் சொன்னார்கள் اللهم اغفر لقومي فانهم لا يعلمون யா அல்லாஹ் என் சமூகத்தை மன்னித்து விடு. அவர்கள் அறியாமல் தவறு செய்கிறார்கள். தனக்கு எல்லையில்லா கஷ்டங்களையும் துன்பங்களையும் வேதனைகளையும் கொடுத்த அந்த மக்களுக்கும் துஆ செய்கிறார்கள் என்றால் நபிகள் நாயகம் ரசூலுல்லாஹி ﷺ அவர்கள் எவ்வளவு பெரிய கருணை உள்ளம் கொண்டவர்கள் என்பதை சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை. அகிலத்தாரின் அருட்கொடையான அண்ணல் நபி ﷺ அவர்களை நாம் நேசிப்போம்!
【அண்ணலார் இறைநம்பிக்கையாளர்களுக்கு – ஓர் அருட்கொடை】
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : ” لِكُلِّ نَبِيٍّ دَعْوَةٌ مُسْتَجَابَةٌ ، فَتَعَجَّلَ كُلُّ نَبِيٍّ دَعْوَتَهُ ، وَإِنِّي اخْتَبَأْتُ دَعْوَتِي شَفَاعَةً لِأُمَّتِي يَوْمَ الْقِيَامَةِ ، فَهِيَ نَائِلَةٌ إِنْ شَاءَ اللَّهُ ، مَنْ مَاتَ مِنْ أُمَّتِي لَا يُشْرِكُ بِاللَّهِ شَيْئًا ” .
அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் கூறினார்கள்: “ ஒவ்வொரு நபிக்கும் அல்லாஹ் உடனே பதிலளிக்கும் ஒரு துஆவை நல்கியிருக்கின்றான். அனைத்து நபிமார்களும் அதை பயன் படுத்திவிட்டனர். ஆனால், நான் நாளை மறுமை நாளில் என் உம்மத்தில் அல்லாஹ்விற்கு இணை வைக்காத நிலையில் மரணித்து விட்டவர்களுக்கு பரிந்துரை செய்வதற்காக பிற்படுத்தி வைத்திருக்கின்றேன்” என்றார்கள். (நூல்: மிர்காதுல் மஃபாதீஹ், 9/1523)
【அண்ணலார் தமக்கு துன்பம் தந்தவருக்கும் – ஓர் அருட்கொடை】
(நபி ﷺ அவர்களிடம்) “அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் இணைவைப்பாளர் களுக்கெதிராக(ச் சாபமிட்டுப்) பிரார்த்தியுங்கள்” என்று கூறப்பட்டது. அதற்கு நபி ﷺ அவர்கள், “நான் சாபமிடுபவனாக அனுப்பப்படவில்லை. நான் அருளாகவே அனுப்பப்பெற்றுள்ளேன்” என்று கூறினார்கள். [முஸ்லிம் 5065]
ஒருவர் நபி ﷺ அவர்களிடம் (வீட்டுக்குள் வர) அனுமதி கேட்டார். அவரைக் கண்ட நபி ﷺ அவர்கள், ‘இவர் அந்தக் கூட்டத்தாரிலேயே மிகவும் தீயவர்’ என்று (என்னிடம்) கூறினார்கள். அவர் வந்து அமர்ந்தபோது அவரிடம் நபி ﷺ அவர்கள் மலர்ந்த முகத்துடன் இதமாக நடந்து கொண்டார்கள். அந்த மனிதர் (எழுந்து) சென்றதும் நான் (நபி ﷺ அவர்களிடம்) ‘இறைத்தூதர் அவர்களே! அந்த மனிதரைக் கண்டதும் தாங்கள் இவ்வாறு இவ்வாறு சொன்னீர்கள். பிறகு அவரிடம் மலர்ந்த முகத்துடன் இதமாக நடந்து கொண்டீர்களே’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘ஆயிஷா! நான் கடுமையாக நடந்து கொண்டதை நீ எப்போதாவது கண்டுள்ளாயா? எவரின் தீங்கை அஞ்சி மக்கள் (அவருடன் இயல்பாகப் பழகாமல்)விட்டு விடுகிறார்களோ அவரே மறுமை நாளில் அல்லாஹ்விடம் அந்தஸ்தில் மிகவும் மோசமானவராவார்’ என்று கூறினார்கள். [புகாரி 6032]
யூதர்களில் ஒரு குழுவினர் இறைத்தூதர் ﷺ அவர்களிடம் வந்து, ‘அஸ்ஸாமு அலைக்கும்’ (உங்களுக்கு மரணம் உண்டாகட்டும்) என்று (சற்றே மாற்றி சலாம்) கூறினர். அவர்கள் கூறியதைப் புரிந்துகொண்ட நான் அவர்களுக்கு ‘வ அலைக்கும் அஸ்ஸலாமு வல்லஅனா (-அவ்வாறே உங்களின் மீது மரணமும் சாபமும் உண்டாகட்டும்)’ என்றேன். அப்போது இறைத்தூதர் ﷺ அவர்கள் , ‘ஆயிஷா! நிதானம்! எல்லா விஷயங்களிலும் நளினத்தைக் கையாளுவதையே அல்லாஹ் விரும்புகிறான்’ என்று கூறினார்கள். அப்போது நான், ‘இறைத்தூதர் அவர்களே! அவர்கள் சொன்னதை நீங்கள் கேட்கவில்லையா?’ என்று கேட்டேன். அதற்கு நபிﷺ அவர்கள், ‘நான்தான் ‘வ அலைக்கும்’ (அவ்வாறே உங்களுக்கு உண்டாகட்டும்) என்று சொல்லிவிட்டேனே! (அதை நீ கவனிக்கவில்லையா?)’ என்று கேட்டார்கள். [புகாரி 6024]
ஒரு கிராமவாசி பள்ளிவாசலினுள் சிறுநீர் கழித்தார். அவரை நோக்கி நபித் தோழர்கள் (வேகத்துடன்) எழுந்தனர். அப்போது இறைத்தூதர் ﷺ அவர்கள் ‘(அவர் சிறுநீர் கழிப்பதை) இடை மறிக்காதீர்’ என்று கூறிவிட்டுப் பிறகு ஒரு வாளியில் தண்ணீர் கொண்டு வரக் கூறினார்கள். பிறகு (தண்ணீர் கொண்டு வரப்பட்டு) அது சிறுநீர் மீது ஊற்றப்பட்டது. [புகாரி 6025]
【அண்ணலார் ஜீவகாருண்யங்களுக்கு – ஓர் அருட்கொடை】
கால்நடைகளுக்கு உதவியதற்கும் நற் கூலி உண்டா? எனத் தோழர்கள் வினவினர். அதற்கு உயிருள்ள இதயமுள்ள எதற்கு உதவி செய்தாலும் நன்மை உண்டு எனக் கூறினார்கள்” (புஹாரி: 2303)
أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ “ قَرَصَتْ نَمْلَةٌ نَبِيًّا مِنَ الأَنْبِيَاءِ، فَأَمَرَ بِقَرْيَةِ النَّمْلِ فَأُحْرِقَتْ، فَأَوْحَى اللَّهُ إِلَيْهِ أَنْ قَرَصَتْكَ نَمْلَةٌ أَحْرَقْتَ أُمَّةً مِنَ الأُمَمِ تُسَبِّحُ اللَّهِ.”
இறைத்தூதர்களில் ஒருவரை எறும்பு ஒன்று கடித்துவிட்டது. உடனே, அந்த எறும்புப் புற்றையே எரித்து விடும்படி அவர் கட்டளையிட்டார். அவ்வாறே அது எரிக்கப்பட்டுவிட்டது. (இதைக் கண்ட) அல்லாஹ், ‘ஓர் எறும்பு உங்களைக் கடித்துவிட்ட காரணத்தால் அல்லாஹ்வின் தூய்மையை எடுத்துரைத்துக் கொண்டிருந்த சமுதாயங்களில் ஒன்றையே நீங்கள் எரித்து விட்டீர்களே’ என்று (அவரைக் கண்டிக்கும் விதத்தில்) அவருக்கு அறிவித்தான்..[5] புஹாரி 3019.
عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم “ أَنَّ رَجُلاً رَأَى كَلْبًا يَأْكُلُ الثَّرَى مِنَ الْعَطَشِ، فَأَخَذَ الرَّجُلُ خُفَّهُ فَجَعَلَ يَغْرِفُ لَهُ بِهِ حَتَّى أَرْوَاهُ، فَشَكَرَ اللَّهُ لَهُ فَأَدْخَلَهُ الْجَنَّةَ ”.
‘ஒரு நாய் தாகத்தின் காரணமாக ஈர மண்ணை (நக்கி) சாப்பிடுவதை ஒருவர் பார்த்தார். உடனே அவர், தான் அணிந்திருந்த காலுறையை எடுத்து அதில் தண்ணீர் மொண்டு அந்நாய் தாகம் தீரும் வரை கொடுத்தார். எனவே அல்லாஹ் அம்மனிதருக்கு கருணை காட்டி அவரைச் சுவர்க்கத்தில் புகத்தினான்’ புஹாரி 173.
عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ “ دَخَلَتِ امْرَأَةٌ النَّارَ فِي هِرَّةٍ رَبَطَتْهَا، فَلَمْ تُطْعِمْهَا، وَلَمْ تَدَعْهَا تَأْكُلُ مِنْ خِشَاشِ الأَرْضِ ”. قَالَ وَحَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم مِثْلَهُ.
ஒருபெண், பூனையொன்றைக் கட்டி வைத்தாள். அதற்கு அவள் தீனி போடவுமில்லை; பூமியிலுள்ள புழு பூச்சிகளைத் தின்று (பிழைத்துக் கொள்ளட்டும் என்று அதை அவிழ்த்து) விடவுமில்லை. அதன் காரணத்தால் அவள் நரகம் புகுந்தாள்.புஹாரி 3318..
அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) குரைஷி குல இளைஞர்களைக் கடந்து செல்லும்போது, ஒரு பறவையைக் கட்டி வைத்து அதன் மீது அம்பு எய்திக் கொண்டிருப்பதைப் பார்த்தார்கள். தவறிய ஒவ்வொரு அம்பும் பறவையின் சொந்தக்காரரைச் சேர்ந்த்தாகி விட்டது. அவர்கள், இப்னு உமரைப்பார்த்தவுடன் அவ்விடத்தை விட்டு சென்று விட்டார்கள். அப்போது இப்னு உமர் ‘இதை யார் செய்தது? இதைச் செய்பவரை அல்லாஹ் சபித்திருக்கிறான்.’ என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், உயிருடனிருக்கும் ஒன்றை (தன்னுடைய அம்பெரியும் திறமைக்கு) இலக்காக ஆக்கிக் கொள்பவர் மீது சாபம் ஏற்படட்டும் என்று கூறினார்கள். [முஸ்லிம்]
‘உங்களுடைய விலங்கின் முதுகை பல்லக்கு போல் நடத்தாதீர்கள். நிச்சயமாக, அல்லாஹ், நீங்கள் சிரமமும், கடினமும் இல்லாமல் போக முடியாத ஒரு ஊருக்கு உங்களைச் சுமந்து செல்வதற்காகவே அவற்றை உங்களுக்கு வசப்படுத்தி கொடுத்துள்ளான்.’ [அபு தாவூது]
ஒரு நாள், சில நபித் தோழர்கள் ஒரு தாய்ப்பறவையையும் அதன் இரண்டு குஞ்சுகளையும் பார்த்தார்கள். அந்த குஞ்சுகளை எடுத்துச் சென்று விட்டார்கள். அத்தாய்ப்பறவை சிறகுகளை வேக, வேகமாக அடித்துக் கொள்ள ஆரம்பித்தது. நபி (ஸல்) அவர்கள் அதைப் பார்த்த போது,
‘யார் அதன் குஞ்சுகளின் காரணமாக இதை வருத்தத்திற்குள்ளாக்கியது? உடனே அதன் குஞ்சுகளைத் திரும்பக் கொடுங்கள்.’ என்று கூறினார்கள். [அபு தாவூது]
ஒருநாள், நபிகளார் அவ்வழியே சென்றார். வழியிலிருந்த தோட்டத்தில் நுழைந்தார்.தோட்டத்தின் ஒரு மூலையில் ஓர் ஒட்டகம் நின்றிருந்தது. அதை நபிகளார் கண்டார்.
ஒட்டகம் ஒரு கம்பத்தில் கட்டப்பட்டிருந்தது. அதனிடமிருந்து பரிதாபமான முனகல் சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது. நபிகளார் ஒட்டகத்தின் அருகே சென்றார். ஒட்டகத்தின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்துகொண்டிருந்தது. அதன் முகத்தில், தாரைத்தாரையாக ஈரக் கோடுகள் படிந்திருந்தன. எலும்பும் தோலுமாய் ஒட்டகம் மெலிந்து காணப்பட்டது. இந்தக் காட்சியைக் கண்டதும், நபிகளாரின் மனம் பதறிவிட்டது. ஒட்டகத்தின் நிலைமை அவரைக் கலங்கடித்தது.
நபிகளார் ஒட்டகத்தைப் பரிவுடன் தடவிக் கொடுத்தார். அதன் கண்ணீரைத் துடைத்து விட்டார். அந்த இதமான வருடல் ஒட்டகத்திடம் அமைதியை ஏற்படுத்தியது. முனகலும் நின்று போனது. நபிகளார், தோட்டத்தில் இருந்தவர்களைப் பார்த்தார். இதன் உரிமையாளர் யார் என்று விசாரித்தார்.
அதைக் கேட்டு ஒட்டகத்தின் உரிமையாளர் நபிகளாரிடம் ஓடோடி வந்தார். ஒட்டகம் சரியான பராமரிப்பு இல்லாமல் மெலிந்திருப்பதையும், அதிகப் பணிச்சுமை தாங்காமல் பலவீனமாகிவிட்டதையும் அந்த உரிமையாளரிடம் சுட்டிக்காட்டினார்.
“இந்த வாயில்லாத ஜீவனான ஒட்டகத்தின் விஷயத்தில் இறைவனின் பயம் உமக்கு ஏற்படவில்லையா?” என்று கேட்டார்.
கடைசியில், ஒட்டகத்தை நல்ல முறையில் கவனித்துக் கொள்ளும்படி அதன் உரிமையாளரிடம் நபிகளார் அறிவுறுத்தினார். அவரும் தனது தனது தவறைப் புரிந்து கொண்டார்.
எல்லா உயிர்களிடத்தும் இரக்கம் காட்டு என்பதை நபிகளார் செயலுருவமாகச் செய்து காட்டினார்கள்.
இறைத்தூதர் ﷺ அவர்களின் மீது அதிகம் அதிகம் ஸலவாத்தை ஓதி அன்னவர்களின் அன்பை பெற்றுக்கொள்ள வேண்டும். எனவே நம்மையும் நபிகள் நாயகம் ﷺ அவர்களை நம் உயிரை விட நேசித்த கூட்டத்தில் சேர்த்து அருள் புரிவானாக!!! ஆமீன்.