ஸலவாத்தின் மகிமை 26-09-2025
பயான் தலைப்பு
ஸலவாத்தின் மகிமை
ரபியுல் அவ்வல் மாதம் மூன்றாம் ஜும்ஆவில் அமர்ந்து இருக்கிறோம். அகிலத்தின் அருட் கொடை அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறந்த மாதம் அதிகம் அதிகம் ஸலவாத் சொல்ல நாம் கடமைப்பட்டுள்ளோம்
அன்பிற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே..
எந்த ஒரு அமல் என்றுமே அழியாத ஒருவனால் செய்யப்படுகிறதோ அதுவே அழியாத அமல்.
என்றுமே அழிவில்லாதவன் நீடித்து நிலைத்திருப்பவன் “காயிமும் பிஜ்ஜாத்” தான்தானாகவே இருப்பவன்,யாரைக்கொண்டும் எப்போதும் தேவையற்றவன் அப்படிப்பட்ட அல்லாஹ் ஒருவன் மட்டுமே.
அத்தகைய மேன்மைமிக்க அல்லாஹ் தான் செய்வதாக எந்த ஒரு அமலை கூறுகிறானோ, அதுவே அழியாத அமல்.
அப்படி இறைவனால் கூறப்பட்ட சிறப்பும் கண்ணியமும் மிக்க அமல்தான் ஸலவாத்.
இறைவன் அமல்களின் பக்கம் தேவையுள்ளவனா? என்ற கேள்வி வரக்கூடாது.
அல்லாஹ் அனைத்தை விட்டும் தேவையற்றவன். .
என்றாலும் தன் ஹபீபின் மீதான நேசத்தினால் ஸலவாத் சொல்கிறான் வழிகாட்டுகின்றான்.
اِنَّ اللّٰهَ وَمَلٰٓٮِٕكَتَهٗ يُصَلُّوْنَ عَلَى النَّبِىِّ يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا صَلُّوْا عَلَيْهِ وَسَلِّمُوْا تَسْلِيْمًا
நிச்சயமாக அல்லாஹ்வும் அவனுடைய மலக்குகளும் நபியின் மீது ஸலவாத்துச் சொல்கின்றார்கள். ஆகவே, நம்பிக்கையாளர்களே! நீங்களும் அவர்கள் மீது ஸலவாத்துச் சொல்லி ஸலாமும் கூறிக் கொண்டிருங்கள்.
(அல்குர்ஆன் : 33:56)
இந்த வசனத்திற்கு விளக்கம் என்னவென்றால் “வானவர்களிடம் அவன் நபியைப் புகழ்ந்து பேசுகின்றான்” என கூறுகிறார்கள்.
“யுஸல்லூன” என்றால் ஏதோ ஒரு நேரத்தில் புகழ்ந்துவிட்டு அமைதியாகிவிடுவதல்ல. நிரந்தரமாக புகழ்ந்துகொண்டே இருக்கிறான் என்றே பொருள்..
அதுமட்டுல்ல நாம் செய்யும் பிற வணக்கங்கள் இறைவனால் ஏற்றுக்கொள்ளப்படலாம் , இறைவன் நிராகரிக்கலாம். ஆனால் நாம் கூறும் ஸலவாத்தை இறைவன் நிராகரிப்பதே இல்லை.
அல்லாஹ் தான் ஸலவாத் சொல்வதாக . சங்கை மிக்க மலக்குகளும்
ஸலவாத் சொல்வதாக கூறி, அனைத்து உயிரினங்களும் மரங்களும் ஸலவாத் சொல்கிறது எனவே அனைத்து முஃமீன்களையும் ஸலவாத் சொல்லுங்கள் என கட்டளையிடுகிறான்.
உயிரினங்களின் ஸலவாத் எப்படி பட்டது தெரியுமா ஓர் உதாரணத்தை தேனீயை குறித்து குறிப்பிடலாம்.
தேன் இனிக்க காரணம் என்ன தெரியுமா
அறிவியல் ரீதியாக இல்லை !
ஆய்வு ரீதியாகவும் இல்லை !
மெய்சிலிர்க்க வைக்கும் அர்ப்புதமான காரணம்… !
தேனிக்கும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கும் இடையேயான
அந்த அற்புதமான நிகழ்வு :
நபி (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் )அவர்கள் தேனியே !
நீ எப்படி தேனை உற்பத்தி
செய்கிறாய்..? என்று கேட்டர்கள்
அதற்க்கு தேனீ : நாங்கள் பூஞ்சோலைகளுக்குசென்று
அங்குள்ள மலர்களின் மகரந்தத்துகள் களையும்,
அமுதினையும் எங்கள் வாய்களால் உறிஞ்சி
சேகரித்து வைத்துக்கொள்வோம்.
சேகரிக்கப்பட்டதை எங்கள் கூட்டிலே உமிழ்ந்து
(துப்பி) விடுவோம்.
நபி (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் ) அவர்கள் கேட்டார்கள் ; சரி . பூக்கள் பலவகையுண்டு. சில
பூக்களின் மகரந்தம் இனிக்கும். இன்னும் சில
பூக்களின் மகரந்தம் கசக்கும். இன்னும் சில
புளிக்கும்.
ஆனால் எல்லாவற்றையும் கலந்து சாப்பிட்ட ஓர்
தேனி அதை எப்படி மிகுந்த
சுவையானதாகவும், அமுதமாகவும்
மாற்றுகிறது……..?
தேனீ சொன்னதாம்…………,,, ?
தேனீ ; நபி அவர்களே.. (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) தாங்கள் சொல்வது சரிதான்.
பல இனிப்பு, கசப்பு, புளிப்பு போன்வற்றை
சாப்பிட்டு வரும் எங்களுக்கு அல்லாஹ்
தங்களின் மீது ஸலவாத் ஓத கற்றுக் கொடுத்தான்.
எங்கள் கூட்டை அடையும் வரை விடாது
தங்கள் மீது ஸலவாத் ஓதிக்கொண்டே
வருவோம்.
கூட்டை அடைந்ததும் நாங்கள்
சேகரித்தவைகளை உமிழும்போது,
ஸலவாத்தின் பரக்கத்தினால் அது சுவைமிகு
அமுதமாய் மாறிவிடுகிறது.
நூல்; மஸ்னவி ஷரீஃப
இது ஒரு அற்புதமான வரலாறு ஸலாவாதின் சிறப்பை விளக்குகிற வரலாறு .இறைவன் தன் நேசர் ஹபீபுல்லாவின் மீது வைத்து உள்ள அன்புக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கிறது.
பெயரை கேட்டாலே ஸலவாத் சொல்ல வேண்டும்
இன்றைக்கு உலகம் முழுவதும் உள்ள மற்ற ஜீவன்கள் மலக்குமார்களும் ஜின்களும் பறவை இனங்கள் தாவர இனங்கள் விலங்கு இனங்கள் ஸலவாத் சொல்லும் போது மனிதர்களாகிய நாம் அலட்சியம் செய்து கொண்டு இருக்கிறோம்.
ஸலவாத்தை மொழிபவரும் மொழிய கேட்பவரும் உயரிய ஸலவாத்தை உடனே உரைக்க வேண்டும்; உரக்கவும் உரைக்கலாம்; மெல்லவும் சொல்லலாம். இட, கால சூழலைப் பொறுத்து எப்படி சொல்ல வேண்டுமோ அப்படி சொல்லலாம்.
(சப்தமாக ஸலவாத் ஓதுவதை கேட்கும் மற்றவர்கள் ஸலவாத் சொல்வதை தூண்டும்)
அறிவிப்பாளர் : இமாம் தஹாலி (ரஹ்) அவர்கள்.
நூல் : பஹ்ருல் உலூம் .
ஸலவாத்தை மஹராக்கிய முதல் மனிதர்
ஹஜ்ரத் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை அல்லாஹ் படைத்து அவர்களின் விலா எலும்பைக் கொண்டு ஹவ்வா அலைஹிஸ்ஸலாமவர்களை உருவாக்கினான். ஆதம் நபியவர்கள் ஹவ்வாவைக் கண்டபோது, ஹவ்வாவின் மீது ஆசை மேலோங்கவே, ஆதம் நபியவர்கள் அல்லாஹ்விடம், இறைவா! ஹவ்வாவை எனக்கு நிகாஹ் செய்து கொடு எனக் கேட்க, ஆதமே!ஹவ்வாக்குரிய மஹ்ரை முதலில் கொடுத்து விடும் என்று சொன்னான்.
அதற்கு ஆதம் நபி ஹவ்வாக்குரிய மஹர் என்ன? எனக் கேட்க, அதற்கு இறைவன், ஆதமே! அர்ஷின் தலைவாயிலில் எனது பெயரோடு சேர்த்து எழுதப்பட்டுள்ள எனது ஹபீபான முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது பத்து முறை ஸலவாத்துச் சொல்வீராக. அதுதான் நீர் ஹவ்வாவுக்குச் செலுத்தும் மஹ்ர் என்று கூறிட அவ்வாறே ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் முஹம்மத் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலவாத்தை ஓதி ஹவ்வாவுக்கு மஹ்ராகத் தந்தனர்.
பாங்கு முடிந்ததும் ஸலவாத்
عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ ؓ أَنَّهُ سَمِعَ النَّبِيَّ ﷺ يَقُولُ: إِذَا سَمِعْتُمُ الْمُؤَذِّنَ فَقُولُوا مِثْلَ مَايَقُولُ، ثُمَّ صَلُّوا عَلَيَّ فَإِنَّهُ مَنْ صَلَّي عَلَيَّ صَلاَةً صَلَّي اللهُ عَلَيْهِ بِهَا عَشْرًا، ثُمَّ سَلُوا اللهَ لِيَ الْوَسِيلَةَ، فَإِنَّهَا مَنْزِلَةٌ فِي الْجَنَّةِ لاَ تَنْبَغِي إِلاَّ لِعَبْدٍ مِنْ عِبَادِ اللهِ وَأَرْجُو أَنْ أَكُونَ أَنَا هُوَ، فَمَنْ سَأَلَ لِيَ الْوَسِيلَةَ حَلَّتْ عَلَيْهِ الشَّفَاعَةُ.
رواه مسلم باب استحباب القول مثل قول المؤذن لمن سمعه…، رقم:٨٤٩
முஅஃத்தினுடைய சப்தத்தை நீங்கள் கேட்டால், முஅஃத்தின் கூறுவது போன்று நீங்களும் கூறுங்கள், பிறகு என் மீது ஸலவாத் சொல்லுங்கள். என் மீது ஒரு முறை ஸலவாத் சொன்னால் அல்லாஹ் அவர் மீது பத்து ரஹ்மத்துகளைப் பொழிவான். பிறகு எனக்காக அல்லாஹ்விடம் வஸீலாவைக் கேளுங்கள், ஏனேனில், வஸீலா என்பது அல்லாஹ் வின் அடியார்களில் ஓர் அடியாருக்காக சுவனத்தில் ஒதுக்கப்பட்ட ஒரு குறிப்பான தகுதியாகும். அந்த அடியான் நானாகவே இருப்பேன் என்று அல்லாஹ்விடம் ஆதரவு வைக்கிறேன், எவர் எனக்காக வஸீலாவைக் கேட்பாரோ நான் அவருக்காகப் பரிந்து பேசுவதற்குரிய (சிபாரிசு பெறுவதற்குரிய) தகுதியைப் பெறுவார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அப்துல்லாஹிப்னு அம்ருப்னுஆஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இன்றைக்கு பலர் பாங்கின் சப்தங்களை கேட்டாலும் பதில் சொல்வதில்லை, துஆவும் ஓதுவதில்லை இதற்கு அலட்சியம் தான் முதல் காரணமாக இருக்கிறது.
இன்றைக்கு சங்பரிவார கூட்டங்களால் சொல்லப்படும் வார்த்தைகளை அதாவது பாங்கு சப்தம் அதிகமாக இருக்கு தூக்கம் கலைந்து போகுது , காது கிழிக்கிற அளவிற்கு சப்தம் இருக்கு , எங்க வீட்டுக்கு நேராக ஸ்பீக்கர் இருக்கு , என்று முஸ்லிம்களில் சிலர் நிர்வாகிகளிடம் சண்டை போடுகிறார்கள். ஆனால் ஒரு பிரபலமான கட்சியின் சார்பில் இன்று வைக்கப்படும் ஸ்பீக்கர் அலறல் கடினமான நெஞ்சில் பதற்றம் ஏற்படுத்தும் அளவிற்கு இருந்தாலும் கண்டுக்கொள்ளாமல் செல்கிறார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தொழுகைக்காக (பாங்கு சொல்லி) அழைக்கப்படும் போது ஷைத்தான் பாங்கு சப்தத்தைக் கேட்கக் கூடாது என்பதற்காக சப்தத்துடன் காற்றை விட்டுக் கொண்டு திரும்பி ஓடுகிறான். பாங்கு சொல்லி முடித்ததும் முன்னே வருகின்றான். தொழுகைக்கு இகாமத் சொல்லப் பட்டால் (மீண்டும்) திரும்பி ஓடுகிறான். இகாமத் சொல்லி முடித்ததும் முன்னே வருகின்றான். (தொழுகையில் ஈடுபட்டுள்ள) மனிதருடைய உள்ளத்தில் ஊடுருவி ஊசலாட்டத்தை ஏற்படுத்தி, ‘இதை நினைத்துப் பார்; அதை நினைத்துப் பார்” என்று அவர் அதற்கு முன்நினைத்திராத விஷயங்களை அவருக்கு நினைவூட்டிக் கூறுகின்றான். எந்த அளவிற்கென்றால், அந்த மனிதர் தாம் எத்தனை ரக்அத்கள் தொழுதோம் என்பதை அறியாதவராக மாறிவிடுகிறார்.
அறிவிப்பவர்: அபூஹீரைரா (ரலி) அவர்கள்
நூல்: புகாரி 608
ஒவ்வொரு துஆவிலும் ஸலவாத்
عَنْ فَضَالَةَ بْنِ عُبَيْدٍ ؓ قَالَ: بَيْنَا رَسُولُ اللهِ ﷺ قَاعِدٌ إِذْ دَخَلَ رَجُلٌ فَصَلَّي فَقَالَ: اَللّهُمَّ اغْفِرْلِي وَارْحَمْنِي فَقَالَ رَسُولُ اللهِ ﷺ: عَجِلْتَ أَيُّهَا الْمُصَلِّي إِذَا صَلَّيْتَ فَقَعَدْتَ فَاحْمَدِ اللهَ بِمَا هُوَ أَهْلُهُ وَصَلِّ عَلَيَّ ثُمَّ ادْعُهُ، قَالَ: ثُمَّ صَلَّي رَجُلٌ آخَرُ بَعْدَ ذلِكَ فَحَمِدَ اللهَ وَصَلَّي عَلَي النَّبِيِّ ﷺ فَقَالَ لَهُ النَّبِيُّ ﷺ: أَيُّهَا الْمُصَلِّي اُدْعُ تُجَبْ.
رواه الترمذي وقال:هذاحديث حسن باب في ايجاب الدعاء …،رقم:٣٤٧٦
ஹஜ்ரத் ஃபழாலத்திப்னு உபைத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், ஒரு நாள் ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் பள்ளியில் அமர்ந்திருந்தார்கள். ஒருவர் பள்ளிக்கு வந்து தொழுதார். தொழுத பிறகு, யாஅல்லாஹ், என்னை மன்னிப்பாயாக! என் மீது அருள் புரிவாயாக!” என்று துஆச் செய்தார். இதைக் கேட்ட ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள், தொழுகையாளியே, நீர் துஆக் கேட்பதில் அவசரப்பட்டுவிட்டீர், நீர் தொழுது முடித்ததும், முதலில் அல்லாஹ்வை அவனது அந்தஸ்துக்குத் தக்கவாறு புகழ்வீராக! அடுத்து என் மீது ஸலவாத் சொல்லியபின் துஆச் செய்வீராக!” என்று சொன்னார்கள். ஹஜ்ரத் ஃபழாலத்துப்னு உபைத் (ரலி) அவர்கள் சொல்கிறார்கள், மற்றொருவர் தொழுதார், அவர் தொழுது முடித்துவிட்டு, அல்லாஹ்வைப் புகழ்ந்து நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் சொன்னார்’. நபி (ஸல்) அவர்கள் அவரிடம், இப்பொழுது துஆக் கேளும், ஏற்றுக் கொள்ளப்படும்’, என்று கூறினார்கள்.
(திர்மிதீ)
கண்மணி நாயகம் ஸல்லலாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறியதாக அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: கண்மணி நாயகம் ஸல்லலாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் மீது ஸலவாத் சொல்லப்படும் வரை எல்லா துஆக்களுக்கும் வானத்திற்கும் இடையில் திரை இருக்கும். ஸலவாத் ஓதப்பட்டால் அந்த திரை கிழிந்துவிடும். அந்த துஆவிற்கு பதில் (பலன்) வழங்கப்படும். ஸலவாத் ஓதப்படாவிட்டால் அந்த துஆவிற்கு பதில் (பலன்) வழங்கப்படமாட்டாது.
(நூல்: பைஹகி – 1576)
உமர் ரலியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்: (யாதொரு) துஆவும் வானுக்கும், பூமிக்கும் இடையில் தடுத்து வைக்கப்படும். உங்களது நாயகம் ஸல்லலாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் மீது நீங்கள் ஸலவாத் ஓதும் வரை அங்கிருந்து அது (இறைசமூகம்) சென்றடையாது.
(நூல்: திர்மிதி – 486)
பாத்திமா ரலியல்லாஹு அன்ஹா அறிவிக்கிறார்கள்: கண்மணி நாயகம் ஸல்லலாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் பள்ளிக்குள் நுழையும் போது ஸலவாத் ஓதிய பின்பு ரப்பே! என் பாவங்களை பொறுத்தருள்வாயாக! உனது ரஹ்மத்துடைய வாயில்களை எனக்கு திறந்தருள்வாயாக என்ற துஆவினை ஓதுவார்கள். மேலும் பள்ளியிலிருந்து வெளியே வரும்போது ஸலவாத் ஓதியபின் ரப்பே! என் பிழைகளைப் பொருத்தருள்வாயாக! உனது சிறப்பின் வாயில்களை எனக்குத் திறந்தருள்வாயாக என்னும் துஆவினை ஓதுவார்கள்.
(நூல்கள்: திர்மிதி – 314 , இப்னு மாஜா – 771 , பைஹகி – 67 , இப்னு அபிஷைபா – 29755 , முஸ்னத் அஹமத் – 25878 , 25887)
ஷெய்கு அபூ ஸுலைமான் தாரானீ ரஹிமஹுல்லாஹு அவர்கள் அறிவிக்கின்றனர்: நமது ஒவ்வொரு வணக்கமும் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கோ அல்லது மறுக்கப்படுவதற்கோ உரிய சாத்தியங்களுண்டு. ஆனால் இறைவனின் இனிய நேசரான முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஓதப்படும் ஸலவாத்து அங்கீகாரத்தைத் தவிர எந்நிலையிலும தள்ளப்படுவதே இல்லை.
திக்ரு மஜ்லிஸிலும் ஸலவாத்
عَنْ أَنَسٍؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: إِنَّ لِلّهِ سَيَّارَةً مِّنَ الْمَلاَئِكَةِ يَطْلُبُونَ حِلَقَ الذِّكْرِ فَإِذَا أَتَوْا عَلَيْهِمْ وَحَفُّوا بِهِمْ ثُمَّ بَعَثُوا رَائِدَهُمْ إِلَي السَّمَاءِ إِلَي رَبِّ الْعِزَّةِ تَبَارَكَ وَتَعَالَي فَيَقُولُونَ: رَبَّنَا أَتَيْنَا عَلَي عِبَادٍ مِنْ عِبَادِكَ يُعَظِّمُونَ آلاَءَكَ وَيَتْلُونَ كِتَابَكَ وَيُصَلُّونَ عَلَي نَبِيِّكَ مُحَمَّدٍ ﷺ وَيَسْاَلُونَكَ لِآخِرَتِهِمْ وَدُنْيَاهُمْ فَيَقُولُ تَبَارَكَ وَتَعَالَي: غَشُّوهُمْ رَحْمَتِي فَيَقُولُونَ يَا رَبِّ إِنَّ فِيهِمْ فُلاَناً الْخَطَّاءُ إِنَّمَا اِعْتَنَقَهُمْ اِعْتِنَاقاً فَيَقُولُ تَبَارَكَ وَتَعَالَي: غَشُّوهُمْ رَحْمَتِي فَهُمُ الْجُلَسَاءُ لاَ يَشْقَي بِهِمْ جَلِيسُهُمْ.
رواه البزار من طريق زائدة بن ابي الرقاد عَنْ زياد النميري وكلاهما وثق علي ضعفه فعاد هذا اسناده حسن مجمع الزوائد:١٠ /٧٧
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: திக்ருடைய சபைகளைத் தேடி மலக்குகளின் ஒரு கூட்டம் சுற்றித் திரிந்து கொண்டிருக்கும், திக்ருடைய சபைகளுக்கு அவர்கள் வந்துவிட்டால் சபையிலுள்ளோரைச் சூழ்ந்து கொள்கிறார்கள், தங்களின் சார்பாக தங்களில் ஒருவரை அல்லாஹ்விடம் தூது அனுப்புகிறார்கள், எங்கள் இரட்சகனே! உன்னுடைய பாக்கியங்களைப் பெருமைப்படுத்தியும், உன் வேதத்தை ஓதிக்கொண்டும், உன் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் மீது ஸலவாத் ஓதியும், தமது இம்மை மறுமையின் நலவுகளை உன்னிடம் வேண்டுகின்ற உனது அடியார்களிடமிருந்து நாங்கள் வந்துள்ளோம்” என்பார்கள், அவர்களை எனது அருளைக் கொண்டு மூடுங்கள்’ என்று அல்லாஹ் கூறுவான். எங்கள் இரட்சகா! அவர்களுடன் ஒரு பாவியும் உள்ளான்!’ என மலக்குகள் சொல்வர், அவர்கள் அனைவரையும் எனது அருளை கொண்டு மூடுங்கள், காரணம் இச்சபையினருடன் அமர்பவனும் (அல்லாஹ்வின் அருளை விட்டும்) விலக்கப்படமாட்டான்” என்று அல்லாஹ் கூறுவான்.
(பஸ்ஸார், மஜ்மஉஸ்ஸவாயித்)
ஒரு உதாரணமாக வரலாற்று நிகழ்வுகளை குறிப்பிடலாம்.
மூஸா அலைஹிஸ்ஸலாமவர்களின் காலத்தில் பனீ இஸ்ராயீல்களில் ஒரு மனிதன் இருந்தான். அவன் பெரும் அநியாயக் காரனாகவும், ஜனங்கள் மீது சதா அழிச்சாட்டியம் புரிபவனாகவும் இருந்தான். ஊர் மக்கள் அவனது தொல்லை தாங்காது அவனை ஊரை விட்டு காட்டுப் பக்கமாக விரட்டியடித்து விட்டனர். காட்டிற்குச் சென்று வாழ்ந்து இறுதியில் அவனை மரணம் சமீபித்து அங்கேயே இறந்தும் போனான்.
அவன் இறந்தபின் அல்லாஹ் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு வஹீ அறிவித்து, மூஸாவே! எனது நேசர்களில் ஒருவர் காட்டில் இறந்து கிடக்கிறார். நீர் ஊர் மக்களை உம்முடன் அழைத்துச் சென்று அவரை நன்முறையில் அடக்கம் செய்யுங்கள் என்று கட்டளையிட, மூஸா நபியவர்களும் ஊர் மக்களும் அங்கே சென்று பார்க்க, இறந்து கிடந்த அவர் ஊர் மக்களால் விரட்டியடிக்கப்பட்டவரே என்பதை அறிந்து, இவனது துன்பம் தாங்க முடியாமல் தானே இவனை விரட்டியடித்தோம். இவன் எப்படி இறைவனின் நேசனாக முடியும்? என்று ஊர் மக்கள் மூஸா நபியவர்களிடம் கேட்க, மூஸா நபி இறைவனிடம் இதுபற்றி விபரம் கேட்கவும், அல்லாஹ், மூஸாவே! இறந்து கிடக்கும் இவர் ஊர்மக்களால் துரத்தியடிக்கப்பட்டவர்தான். இந்த மனிதர் தன் வாழ்வில் தீமையைத் தவிர வேறு எதையும் செய்ததுமில்லை.
இருப்பினும் இவர் தனது மரணத்தருவாயில் என்னை நோக்கி, கருணாகரா! நான் என் வாழ்நாள் முழுவதும் தீங்கைத் தவிர வேறு எதையும் செய்ததில்லைதான். ஆனால் ஒருமுறை உனது ரஸூல் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஜனங்களுக்கு நல்லுபதேசம் வழங்கிக் கொண்டிருந்தபோது, அச்சபையில் நானும் அமர்ந்திருந்தேன். அப்போது மூஸா நபியவர்கள் எனக்குப்பின் ஒரு ரஸூல் இவ்வுலகிற்கு வருகை தருவார். அவர் பொருட்டே இறைவன் அனைத்தையும் படைத்தான். அவரின் புனிதமிகு திருப்பெயர் முஹம்மத் என்பதாகும். அவர்மீது ஒருமுறை ஸலவாத்துச் சொல்லும் ஒருவன் தனது பாவங்கள் அனைத்தையும் விட்டு தூய்மையடைவார் என்று சொன்னதை கேட்டு, நானும் அந்த உனது ஹபீபின் மீது அப்போதே ஸலவாத்துச் சொன்னேன். இறiவா! அந்த ஸலவாத்தின் பொருட்டு எனது பாவங்களை பொறுத்துக் கொள் என்று என் ஹபீபின் ஸலவாத்தை முன்னிறுத்தி கேட்டதால் அவனின் சகல பாவங்களையும் மன்னித்ததோடு அவனை எனது நேசர்களில்(வலி) ஒருவராக உயர்த்திக் கொண்டேன் என்று அல்லாஹ் கூறினான்.’
நூல்: அல்-கவ்லுல் பதீஃ
அனைத்து சபைகளிலும் ஸலவாத்
عَنْ أَبِي هُرَيْرَةَؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: مَاجَلَسَ قَوْمٌ مَجْلِساً لَمْ يَذْكُرُوا اللهَ فِيهِ وَلَمْ يُصَلُّوا عَلي نَبِيِّهِمْ إِلاَّ كَانَ عَلَيْهِمْ تِرَةً فَإِنْ شَاءَ عَذَّبَهُمْ وَإِنْ شَاءَ غَفَرَ لَهُمْ.
رواه الترمذي وقَالَ:هذاحديث حسن صحيح باب ماجاء في القوم يجلسون ولايذكرون الله رقم:٣٣٨٠
அல்லாஹ்வை திக்ரு செய்யாமலும், நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத்து சொல்லாமலும் இருக்கும் சபையில் அமர்பவர்களுக்கு நாளை கியாமத் நாளில் பெருத்த நஷ்டத்திற்கு அச்சபை காரணமாகிவிடும். அல்லாஹ் நாடினால் அவர்களை வேதனை செய்வான், அல்லது நாடினால் மன்னித்துவிடுவான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(நூல்கள்: நஸாயீ – 10242 , 10243 இப்னு ஹிப்பான் – 591 , பைஹகி – 542
திர்மிதி – 3380 , அஹ்மது – 9907)
வெள்ளிக்கிழமைகளில் அதிகம் ஸலவாத்
عَنْ أَبِي أُمَامَةَؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: أَكْثِرُوا عَلَّي مِنَ الصَّلاَةِ فِي كُلِّ يَوْمِ الْجُمُعَةِ فَإِنَّ صَلاَةَ أُمَّتِي تُعْرَضُ عَلَيَّ فِي كُلِّ يَوْمِ جُمُعَةٍ فَمَنْ كَانَ أَكْثَرَهُمْ عَلَيَّ صَلاَةً كَانَ أَقْرَبَهُمْ مِنِّي مَنْزِلَةً.
رواه البيهقي باسناد حسن الاان مكحولا قيل:لم يسمع من ابي امامة الترغيب:٢ /٥٠٣
ஒவ்வொரு வெள்ளிக் கிழமையன்றும் மிக அதிகமாக என் மீது ஸலவாத் சொல்லுங்கள், ஏனேனில், என் சமுதாயத்தினர் என் மீது சொல்லும் ஸலவாத் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையன்றும் என்னிடம் சமர்ப்பிக்கப்படுகின்றன. எனவே எவர் எவ்வளவு அதிகமாக என்மீது ஸலவாத் சொல்வாரோ அவர் (கியாமத் நாளன்று) தகுதியால் என்னுடன் மிக நெருக்கமாக இருப்பார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூ உமாமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(பைஹகீ, தர்ஙீப்)
عن أنس رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي في كل يوم جمعة أربعين مرة محا الله عنه ذنوب أربعين سنة، ومن صلى علي مرة واحدة فتقبلت منه، محا الله عنه ذنوب ثمانين سنة.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஒவ்வொரு ஜூம்ஆ நாளிலும் நாற்பது முறை யார் என் மீது ஸலவாத் ஓதுகிறாரோ அவரது நாற்பது வருட பாவங்களை அல்லாஹ் மன்னித்து விடுகிறான். ஒரு முறை என் மீது ஸலவாத் ஓதினால் அது அவரிடமிருந்து ஏற்றுக் கொள்ளப்பட்டு எண்பது வருட பாவங்களை அல்லாஹ் அழித்து விடுகிறான்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி) அவர்கள்
நூல் : அத்தர்கீப் வத்தர்ஹீப், பாகம் : 2, பக்கம்: 329
அல்லாஹும்ம ஸல்லி அலா செய்யிதினா முஹம்மதின் அப்திக்க வநிய்யிக்க வரஸூலிக்கந்நபிய்யில் உம்மிய்யி வஅலா ஆலிஹி வஸஹ்பிஹி வபாரிக் வஸல்லிம்
ஒருவர் வெள்ளியன்று இந்த ஸலவாத்தை எண்பது முறை ஓதினால் அவரது எண்பது ஆண்டுப் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. ஒருவர் வெள்ளியன்று இரவிலோ, பகலிலோ நபிகளார் மீது இந்த ஸலவாத்தை 100 முறை ஓதினால் அல்லாஹ் அவரின் 100 தேவைகளை நிறைவேற்றித் தருகிறான் என நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருளுகின்றனர்.
ஒவ்வொரு நாளும் ஸலவாத்
قَالَ أُبَيٌّ فَقُلْتُ: يَارَسُولَ اللهِﷺ إِنِّي أُكْثِرُ الصَّلاَةَ عَلَيْكَ فَكَمْ أَجْعَلُ لَكَ مِنْ صَلاَتِي؟ قَالَ: مَا شِئْتَ قَالَ قُلْتُ: اَلرُّبُعَ؟ قَالَ: مَاشِئْتَ وَإِنْ زِدْتَ فَهُوَ خَيْرٌ لَكَ قُلْتُ: فَالنِّصْفَ؟ قَالَ: مَاشِئْتَ وَإِنْ زِدْتَ فَهُوَ خَيْرٌ لَكَ قَالَ: قُلْتُ: فَالثُّلُثَيْنِ؟ قَالَ: مَا شِئْتَ فَإِنْ زِدْتَ فَهُوَ خَيْرٌ لَكَ قُلْتُ: أَجْعَلُ لَكَ صَلاَتِي كُلَّهَا؟ قَالَ: إِذاً تُكْفي هَمَّكَ وَيَغْفَرُ لَكَ ذَنْبُكَ.
رواه الترمذي وقَالَ:هذا حديث حسن صحيح باب في الترغيب في ذكرالله …رقم:٢٧٥٤
உபையிப்னு கஅப் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள், நான் நபி (ஸல்) அவர்களிடம், யாரஸூலல்லாஹ், நான் தங்கள் மீது அதிகமாக ஸலவாத் ஓத விரும்புகிறேன். நான் துஆ, திக்ரு செய்யும் நேரத்தில் ஸலவாத்துக்காக எவ்வளவு நேரத்தை நிர்ணயிப்பது?’ என்று கேட்டேன். நீர் விரும்பிய அளவு” என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். யாரஸூலல்லாஹ், நான்கிலொரு பகுதி நேரம்?’ என்றேன். நீர் எவ்வளவு விரும்புவீரோ அவ்வளவு அதிகப்படுத்தினால் உமக்கு நல்லது’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், பாதி நேரம் ஒதுக்கட்டுமா?’ என்றேன். நீர் விரும்பிய அளவு, இன்னும் அதிகமாக்கினால் உமக்கு நல்லது” என நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள். மூன்றில் இரு பகுதிகள் ஒதுக்கவா?’ என்றேன். நீர் விரும்பிய அளவு, இன்னும் அதிகமாக்கினால் உமக்கு நல்லது என்றார்கள். என் நேரம் முழுவதையும் தங்கள் மீது ஸலவாத் சொல்ல நிர்ணயித்துக் கொள்கிறேன்” என்றேன். அப்படிச் செய்தீரென்றால், அல்லாஹுதஆலா உமது சகல கவலைகளையும் தீர்த்துவைப்பான், உமது பாவமும் மன்னிக்கப்படும்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(திர்மிதீ : 2754)
ஒவ்வொரு தொழுகையிலும் ஸலவாத்
عَنْ كَعْبِ بْنِ عُجْرَةَؓ قَالَ: سَأَلْنَا رَسُولَ اللهِ ﷺ فَقُلْنَا: يَارَسُولَ اللهِﷺ كَيْفَ الصَّلاَةُ عَلَيْكُمْ أَهْلَ الْبَيْتِ؟ فَإِنَّ اللهَ قَدْ عَلَّمَنَا كَيْفَ نُسَلِّمُ قَالَ: قُولُوا: اَللّهُمَّ صَلِّ عَلي مُحَمَّدٍ وَّعَلي آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلي إِبْرَاهِيمَ وَعَلي آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَّجِيدٌ اَللّهُمَّ بَارِكْ عَلي مُحَمَّدٍ وَّعَلي آلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلي إِبْرَاهِيمَ وَعَلي آلِ ابْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَّجِيدٌ.
رواه البخاري كتاب احاديث الانبياء رقم:٣٣٧٠
ஹஜ்ரத் கஅப் இப்னு உஜ்ரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், அல்லாஹுதஆலா தங்களுக்கு ஸலாம் சொல்லும் முறையை (தங்கள் மூலம்) எங்களுக்குக் கற்றுத் தந்துள்ளான். (நாங்கள் தஷஹ்ஹுதில்
( اَلسَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِـيُّ وَرَحْـمَةُ اللهِ وَبَرَكَاتُهُ )
என்று சொல்லித் தங்கள் மீது ஸலாம் சொல்கிறோம்) யாரஸூலல்லாஹ்! நாங்கள் தங்கள் மீதும் தங்கள் குடும்பத்தார் மீதும் எவ்வாறு ஸலவாத் சொல்வது?” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களிடம் கேட்டோம்.
( اَللّهُمَّ صَلِّ عَلي مُحَمَّدٍ وَّعَلي آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلي إِبْرَاهِيمَ وَعَلي آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَّجِيدٌ اَللّهُمَّ بَارِكْ عَلي مُحَمَّدٍ وَّعَلي آلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلي إِبْرَاهِيمَ وَعَلي آلِ ابْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَّجِيدٌ )
யா அல்லாஹ்! ஹஜ்ரத் இப்ராஹீம் (அலை) அவர்கள் மீதும், அவர்களின் குடும்பத்தினர் மீதும் ரஹ்மத்தைப் பொழிந்தது போல் ஹஜ்ரத் முஹம்மது (ஸல்) அவர்கள் மீதும், ஹஜ்ரத் முஹம்மது (ஸல்) அவர்கள் குடும்பத்தினர் மீதும், ரஹ்மத்தைப் பொழிவாயாக! நிச்சயமாக நீ புகழுக்குரியவன், மேன்மைமிக்கவன். யால்லாஹ்! நீ ஹஜ்ரத் இப்ராஹீம் (அலை) அவர்களின் மீதும், அவர்களின் குடும்பத்தார் மீதும் பரக்கத்தைப் பொழிந்ததைப்போல ஹஜ்ரத் முஹம்மத் (ஸல்) அவர்களின் மீதும் அவர்களின் கிளையார் மீதும் பரக்கத்தைப் பொழிவாயாக! நிச்சயமாக நீ புகழுக்குரியவன், மேன்மைக்குரியவன் என்ற ஸலவாத்தைச் சொல்லி வாருங்கள்!” என்று நபி (ஸல்) அவர்கள் பதில் சொன்னார்கள்.
(புகாரி)
கடிதங்கள் எழுதும் போதும் ஸலவாத்
عَنْ رَجُلٍ مِنْ اَهْلِ الْمَدِيْنَةِ قَالَ: كَتَبَ مُعَاوِيَةُ ؓ اِلَي عَائِشَةَؓ اَنِ اكْتُبِيْ اِلَيَّ كِتَابًا تُوْصِيْنِيْ فِيْهِ وَلاَ تُكْثِرِيْ عَلَيَّ، قَالَ: فَكَتَبَتْ عَائِشَةُؓ اِلَي مُعَاوِيَةَؓ: سَلاَمٌ عَلَيْكَ اَمَّا بَعْدُ فَاِنِّيْ سَمِعْتُ رَسُوْلَ اللهِ ﷺ يَقُوْلُ: «مَنِ الْتَمَسَ رِضَا اللهِ بِسَخَطِ النَّاسِ كَفَاهُ اللهُ مُؤْنَةَ النَّاسِ، وَمَنِ الْتَمَسَ رِضَا النَّاسِ بِسَخَطِ اللهِ وَكَلَهُ اللهُ اِلَي النَّاسِ» وَالسَّلاَمُ عَلَيْكَ.
رواه الترمذي، باب منه عاقبة من التمس رضا الناس…، رقم:٢٤١٤
மதீனா முனவ்வராவைச் சேர்ந்த ஒருவர் கூறுகிறார், ஹஜ்ரத் முஆவியா (ரலி) அவர்கள், தமக்கு உபதேசம் எழுதி அனுப்பும் படியும், அது சுருக்கமாக இருக்க வேண்டும் என்பதாகவும், ஹஜ்ரத் ஆயிஷா (ரலி) அவர்களுக்குக் கடிதம் எழுதினார்கள். ஹஜ்ரத் ஆயிஷா (ரலி) அவர்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்து, நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் ஸலாம் எழுதியதற்குப் பிறகு, ஒருவர் மக்களுடைய வெறப்பையும் பொருட்படுத்தாமல் அல்லாஹுதஆலாவின் பொருத்தத்தைத் தேடுவதில் ஈடுபட்டிருந்தால், மக்களுடைய வெறுப்பின் தீங்கைவிட்டுப் பாதுகாக்க அல்லாஹுதஆலா அவருக்குப் போதுமானவனாக ஆகிவிடுவான். மேலும், ஒருவன் அல்லாஹுதஆலாவின் வெறுப்பை பொருட்படுத்தாமல் மக்களைத் திருப்திபடுத்துவதில் ஈடுபட்டிருந்தால், அல்லாஹுதஆலா அவனை மக்களிடமே ஒப்படைத்து விடுவான்” என நான் நபி (ஸல்) அவர்கள் கூறக் கேட்டுள்ளேன். தங்களின் மீது சலாம் உண்டாகட்டும் என்று ஹஜ்ரத் முஆவியா (ரலி) அவர்களுக்கு பதில் எழுதி அனுப்பினார்கள்.
(திர்மிதீ)
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ صَلَّى عَلَيَّ فِي كِتَابٍ لَمْ تَزَلِ الْمَلائِكَةُ تَسْتَغْفِرُ لَهُ مَا دَامَ اسْمِي فِي ذَلِكَ الْكِتَابِ
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
யார் என் மீது புத்தகத்தில் (எழுத்தில்) ஸலவாத் சொல்வாரோ அப்புத்தகத்தில் என் பெயர் இருக்கும் வரை மலக்குமார்கள் அவருக்காக பாவமன்னிப்பு கோரிக் கொண்டே இருப்பார்கள்.
அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரலி) அவர்கள்
தப்ரானீ 447, முஃஜமுல் அவ்ஸத் 1835,
ஏராளமான நன்மைகள் நிறைந்த ஸலவாத்
பத்து மடங்கு நன்மைகள்
عَنْ عُمَيْرِ نِ اْلاَنْصَارِيِّؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: مَنْ صَلَّي عَلَيَّ مِنْ أُمَّتِي صَلاَةً مُخْلِصًا مِنْ قَلْبِهِ صَلَّي اللهُ عَلَيْهِ بِهَا عَشْرَ صَلَوَاتٍ وَرَفَعَهُ بِهَا عَشْرَ دَرَجَاتٍ وَكَتَبَ لَهُ بِهَا عَشْرَ حَسَنَاتٍ وَمَحَا عَنْهُ عَشْرَ سَيِّئَاتٍ.
رواه النسائي في عمل اليوم والليلة رقم:٦٤
என் உம்மத்தைச் சார்ந்த ஒருவர் மனத் தூய்மையுடன் என் மீது ஸலவாத் சொன்னால், அதற்குப் பகரமாக அவர் மீது அல்லாஹுதஆலா பத்து ரஹ்மத்துகளைப் பொழிகிறான், பத்து அந்தஸ்துகளை உயர்த்துகிறான். பத்து நன்மைகளை எழுதுகிறான், பத்துப் பாவங்களை அழிக்கிறான்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் உமைர் அன்ஸாரி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(நூல் : நஸாயீ 64)
6099862878714010437.jpg)
நபிகளாரின் பரிந்துரை
عَنْ رُوَيْفِعِ بْنِ ثَابِتٍؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: مَنْ صَلَّي عَلَي مُحَمَّدٍ وَقَالَ: اَللّهُمَّ أَنْزِلْهُ الْمَقْعَدَ الْمُقَرَّبَ عِنْدَكَ يَوْمَ الْقِيَامَةِ وَجَبَتْ لَهُ شَفَاعَتِي.
رواه البزار والطبراني في الاوسط والكبير واسانيدهم حسنة مجمع الزوائد:١٠ /٢٥٤
எவரேனும் முஹம்மது (ஸல்) அவர்கள் மீது
( اَللّهُمَّ أَنْزِلْهُ الْمَقْعَدَ الْمُقَرَّبَ عِنْدَكَ يَوْمَ الْقِيَامَة )
யாஅல்லாஹ், முஹம்மது (ஸல்) அவர்களை கியாமத் நாளன்று உன்னிடத்தில் நெருக்கமான பிரத்யேகமான பதவியில் அமரச் செய்வாயாக!’ என்ற ஸலவாத்தைச் சொன்னால் அவருக்குப் பரிந்துரைப்பது என் மீது கடமை ஆகிவிட்டது” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் ருவைஃபிப்னு ஸாபித் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(பஸ்ஸார், தபரானீ, மஜ்மஉஸ்ஸவாயித்)
عَنْ أَبِي الدَّرْدَاءِ َؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: مَنْ صَلّي عَلَيَّ حِينَ يُصْبِحُ عَشْرَا وَحِينَ يُمْسِي عَشْرَا أَدْرَكَتْهُ شَفَاعَتِي يَوْمَ الْقِيَامَةِ.
رواه الطبراني باسنادين واسناد احدهمَا جيد ورجاله وثقوا مجمع الزوائد:١٠ /١٦٣
எவர் காலை, மாலையில் பத்து முறை என் மீது ஸலவாத் சொல்வாரோ, அவருக்கு கியாமத் நாளன்று என்னுடைய பரிந்துரை வந்தடையும்” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூதர்தா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(தபரானீ, மஜ்மஉஸ்ஸவாயித்)
ஒரு தொண்டன் தனது தலைவரின் கவனத்தை ஈர்ப்பதற்காக, தனது தலைவருக்கு தனது அன்பின் பரிமாணம் தெரிய வேண்டும் என்பதற்காக மிகப் பெரிய முயற்சிகளை மேற்கொள்வதைப் பார்க்கிறோம். உடல் உறுப்புக்களைச் சேதப்படுத்துதல், தன்னையே அழித்துக் கொள்ளுதல் போன்ற ஆபத்தான அழிவுப் பாதையை இதற்காகத் தேர்ந்தெடுக்கின்றான். இஸ்லாம் இந்த உளவியல் ரீதியான பிரச்சனையை உரிய வகையில் கையாள்கின்றது.
(தன்னை பற்றி நபியவர்களிடம் தெரியப்படுத்த விரும்பினால் அவர்) என் மீது ஸலவாத்தை அதிகமாக்குங்கள். உங்களது ஸலவாத் என்னிடம் எடுத்துக் காட்டப்படுகின்றது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே! எங்களது ஸலவாத் உங்களுக்கு எப்படி எடுத்துக் காட்டப்படும்? நீங்கள் தான் வபாஅத் ஆகி இருப்பீர்களே! என்று நபித்தோழர்கள் கேட்ட போது, ”நிச்சயமாக அல்லாஹ் நபிமார்களின் உடல்களை பூமி அரிப்பதை விட்டும் தடுத்து விட்டான்” என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர் : அவ்ஸ் பின் அவ்ஸ், நூல் : அபூதாவூத் 883
”நிச்சயமாக பூமியில் சுற்றித் திரியும் மலக்குகள் அல்லாஹ்விடம் உள்ளனர். அவர்கள் என்னிடம் ஸலாமை எடுத்துரைக்கின்றார்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி), நூல் : நஸயீ 1265
மறுமை நாளின் ஒளி ஸலவாத்
الصلاة علي نور على الصراط
என் மீது ஸலவாத் சொல்வது (மறுமையின் இருள் நிறைந்த) ஸிராத் எனும் பாலத்தில் ஒளி தருவதாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அத்தர்கீப் ஃபீ பழாயிலி அஃமால்
ஒருநாள் காலை இமாம் ஹஸன் பஸரீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களிடம். ஒரு பெண் கண்ணீர் வடித்தபடி வருகிறார்,
தன்னுடைய இளம் வயது மகள் கடந்த சில நாட்களுக்கு முன் இறந்து விட்டாள், நேற்றிரவு என் கனவில் அவள் தலைவிரி கோலமாக எரியும் நெருப்பின் மத்தியில் என்னைக் காப்பாற்றுங்கள்! என்னைக் காப்பாற்றுங்கள்! என ஓலமிடுவதைக் கண்டேன். இதன் பொருள் என்ன? என்று கேட்க, அதற்கு இமாம் ஹஸன் பஸரீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் தங்கள் மகள் நரகத்தில் இருக்கிறாள். அவளுக்காக சதகா செய்யுங்கள் என்று கூறி அனுப்பினார்கள்.
அன்றிரவு ஹஸன் பஸரீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கனவில் புதுப்பெண் கோலத்தில் ஒரு பெண் வந்து, சலாம் கூறி என்னைத் தெரியவில்லையா? என்று கேட்க, அவர்களும் நீ யார்? என்று வினவுகிறார்கள்.
அதற்கு அந்தப் பெண் நேற்று காலை தங்களிடம் ஒரு பெண் வந்து என்னைப் பற்றி என் நிலையினைப் பற்றி தங்களிடம் கூறியபோது என் பேரில் சதகா அதிகம் செய்யும்படி கூறி அனுப்பினீர்கள் அல்லவா! அவரின் மகள்தான் நான்’ என்று கூற… அதற்கு இமாம் அவர்கள் நீ எப்படி சொர்க்கத்திற்குள் வந்தாய்? என்று கேட்க…, நேற்று காலை எனது கப்ரின் வழியாகச் சென்ற ஒரு வழிப்போக்கர் என் தாய் கொடுத்த ஸதகாவிற்க்காக செல்லும் வழியில் ஒரே ஒரு ஸலவாத்தை சொல்லி அதன் தவாபை எனக்கு எத்தி வைக்க, அல்லாஹ்விடம் துஆ கேட்டுவிட்டுச் சென்றார். அந்த ஸலவாத்தின் பொருட்டு அல்லாஹ் என்ககு சொர்க்கத்தை வழங்கிவிட்டான் என்று கனவில் தோன்றிய பெண் சொன்னாள்.
நபிகளாரின் அருகில் இருக்கும் பாக்கியம்
عَنْ عَبْدِ اللهِ بْنِ مَسْعُودٍؓ أَنَّ رَسُولَ اللهِ ﷺ قَالَ: أَوْلَي النَّاسِ بِي يَوْمَ الْقِيَامَةِ أَكْثَرُهُمْ عَلَيَّ صَلوةً.
رواه التـرمذي وقال: هذا حديث حسن غريب، باب ما جاء في فضل الصلاة علي النبي ﷺ رقم:٤٨٤
என் மீது அதிகமாக ஸலவாத் ஓதுபவர் கியாமத் நாளில் என்னுடன் மிக நெருக்கமாக இருப்பார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அப்துல்லாஹிப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(திர்மிதீ)
மலக்குமார்களால் கிடைக்கும் அந்தஸ்து
இறைவனின் இனிய தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றார்கள்: ‘என்னிடம் வானவர் கோமான் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாமவர்கள் வருகைதந்து, ஒருவர் தங்கள் மீது பத்து முறை ஸலவாத்துச் சொல்வாரேயாயின் நான் அவரது கரம் பற்றி சிராத்துல் முஸ்தகீம் பாலத்தை எளிதாக தாண்டச் செய்வேன். மீக்காயில் அலைஹிஸ்ஸலாம் வந்து, அவருக்குத் தங்களின் ஹெளழுல் கௌஸரின் தடாகத்திலிருந்து தண்ணீர் புகட்டுவேன். இஸ்ராபீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வந்து, நான் அவருக்காக இறைவனின் திருமுன் ஸுஜுது செய்து அவரது பாவங்கள் மன்னிக்கப்படும் வரை எனது தலையை நான் ஸுஜூதிலிருந்து உயர்த்த மாட்டேன். இஜ்றாயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வந்து, நான் அவரது ரூஹை நபிமார்களின் ரூஹை கைப்பற்றுவது போன்று எளிதாகக் கைப்பற்றுவேன் என்று கூறினர்.
ஹஜ்ரத் அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றனர், ஹஜ்ரத் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள், உங்களில் யாராவது என்னை கண்ணியப்படுத்தும் பொருட்டு என்மீது ஸலவாத்துச் சொல்வாரேயாயின், அல்லாஹ் அவரது ஸலவாத்தைக் கொண்டு ஒரு வானவரை உருவாக்குகிறான். அந்த மலக்கின் ஒரு இறக்கை கிழக்கு திசையிலும் மற்றோர் இறக்கை மேற்குத் திசையிலும் அகன்று விரிந்திருக்கும். அவரை நோக்கி அல்லாஹ், என் ரஸூலின் மீது ஸலவாத்துச் சொன்ன அந்த மனிதர் மீது ஸலவாத்துச் சொல் எனக் கட்டளையிடுகிறான். அவ்வானவரும் மறுமைநாள் வரை அவர்மீது ஸலவாத்துச் சொல்லிக் கொண்டிருப்பார்.
தாஹா நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்நவின்றார்கள். அல்லாஹ் உடைய வானவர் ஒருவர் இருக்கிறார். அவரின் ஒரு இறக்கை கிழக்கிலும், மற்றொன்று மேற்கிலும் விரிந்துள்ளது. எவரேனும் என்மீது மிகுந்த நேசத்தோடு ஸலவாத்துச் சொன்னால் உடனே அவ்வானவர் தண்ணீரில் மூழ்கி எழுந்து தனது இறக்கையை உதறுகிறார். அந்த இறக்கையிலிருந்து எத்தனை சொட்டுத் தண்ணீர் விழுகிறதோ, ஒவ்வொரு தண்ணீர் துளியிலிருந்தும் ஒரு மலக்கை அல்லாஹ் படைக்கிறான். அம்மலக்குகள் அனைவரும் தனது ரஸூலின் மீது ஸலவாத்துச் சொன்ன அந்த மனிதரின் பாவ மன்னிப்புக்காக மறுமை நாள்வரை இறைவனிடம் இறைஞ்சுகின்றனர்.
அறிவிப்பாளர் : இமாம் ஸகாவீ ரஹிமஹுல்லாஹு அவர்கள் (நூல் : முஸ்த்ததாபுல் கலாம்)
வறுமையை போக்கும் ஸலவாத்
அல்லாமா அபுல் ஹஸன் இப்னு ஹாரிஸ் லைஸி ரஹிமஹுல்லாஹு அவர்கள் கூறுகின்றனர்:
நான் ஒருமுறை மிகுந்த வறுமையிலும், கஷ்டத்திலும் உழன்று கொண்டிருந்தபோது பெருநாள் வந்து விட்டது. பொழுது விடிந்தால் பெருநாள், என்பிள்ளைகளுக்கு பெருநாள் அன்று நல்ல உணவோ, உடுத்திக் கொள்ள நல்ல ஆடைகளோ இல்லை. நாளை பெருநாளாயிற்றே! என்ன செய்யப் போகிறோம் என கவலையில் மூழ்கியவனாக ஸலவாத்தை ஓதிக் கொண்டு இரவை கழித்துக் கொண்டிருந்தேன்.
நடு நிசியில் திடீரென்று எனது வீட்டுக் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு நான் கதவைத் திறக்க, சிலர் தங்களின் கைகளில் தட்டுகளை ஏந்தியவர்களாக நின்று கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவர் அந்த ஊரிலேயே மிகவும் வசதி படைத்தவர். அவர் எனக்கு முன்னால் வந்து, சகோதரா! நான் வீட்டில் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தேன். என்னவென்று சொல்லுவேன்? எனது நாதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை கனவில் கண்டிடும் பேறு பெற்றேன்.
ஆம்! எனது ரஸூலை கண்டேன். வந்த வள்ளல் நபி என்னை நோக்கி, அபுல் ஹஸன் மற்றும் அவரது குடும்பத்தினர் மிகுந்த கஷ்டத்தில் இருக்கின்றனர். உனக்கு அல்லாஹ் அளவுக்கதிகமாகவே தந்திருக்கிறான். போ. அவருக்கு வேண்டிய பணிவிடைகளை செய். நீ போகும்போது அவரின் குழந்தைகளுக்குத் தேவையான துணிகளையும் கொண்டு செல். அவர் கையில் கொஞ்சம் பணமும் கொடு. நாளை அவர்கள் பெருநாளை நல்லவிதமாகக் கொண்டாட்டும் என்று கூறினர். அபுல் ஹஸன்! உங்களுக்கும் உங்கள் வீட்டாருக்கும் தேவையான அனைத்தையும் கொண்டு வந்திருக்கிறேன் அதனைப் பெற்று எனது ரஸூலின் உத்திரவை நிறைவேற்றிய பாக்கியத்தை எனக்கு நல்கிட வேண்டும். அவ்வாறே பெற்றுக் கொள்ளப்பட்டு அபுல்ஹஸன் இல்லத்தினர் மறுநாள் பெருநாளை மகிழ்வோடு கொண்டாடினர்.
ஸலவாத் சொல்லாதவனின் நிலை
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَغِمَ أَنْفُ رَجُلٍ ذُكِرْتُ عِنْدَهُ فَلَمْ يُصَلِّ عَلَيَّ وَرَغِمَ أَنْفُ رَجُلٍ دَخَلَ عَلَيْهِ رَمَضَانُ ثُمَّ انْسَلَخَ قَبْلَ أَنْ يُغْفَرَ لَهُ وَرَغِمَ أَنْفُ رَجُلٍ أَدْرَكَ عِنْدَهُ أَبَوَاهُ الْكِبَرَ فَلَمْ يُدْخِلَاهُ الْجَنَّةَ رواه الترمذي
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
ஒருவனிடம் என்னைப் பற்றிக் கூறப்பட்டு அவன் என் மீது ஸலவாத்துச் சொல்லவில்லை என்றால், அவனுடைய மூக்கு மண்ணைக் கவ்வட்டும். ஒருவன் ரமளான் மாதத்தை அடைந்து அவனது பாவங்கள் மன்னிக்கப்படாமல் அம்மாதம் கழிந்தால் அவனுடைய மூக்கும் மண்ணை கவ்வட்டும். ஒருவன் வயது முதிர்ந்த பெற்றோர்களைப் பெற்றும் அவனை அவர்கள் சொர்க்கத்திற்குள் கொண்டு செல்லவில்லையென்றால் அவனுடைய மூக்கும் மண்ணைக் கவ்வட்டும்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : திர்மிதீ
عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْبَخِيلُ الَّذِي مَنْ ذُكِرْتُ عِنْدَهُ فَلَمْ يُصَلِّ عَلَيَّ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ رواه الترمذي
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
ஒருவனிடம் என்னைப் பற்றி கூறப்பட்டு என் மீது அவன் ஸலவாத்துச் சொல்லவில்லையென்றால் அவனே கஞ்சனாவான்.
அறிவிப்பவர் : அலீ பின் அபீ தாலிப் (ரலி) அவர்கள்
நூல் : திர்மிதீ
முடிவுரை
அன்பிற்குரியவர்களே.. நாமும் அழியாத அமலாகிய சிறப்புமிக்க ஸலவாத்தை கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மீது அதிகம் அதிகம் ஓதி நிறைய நன்மைகளையும் அல்லாஹ் மற்றும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் அன்பையும் அருளையும் ஸபாஅத்தையும் பெற்றுக்கொள்வோமாக.. ஆமீன்..ஆமீன்..யாரப்பல் ஆலமீன்.
ஆக்கம்
வஸ்ஸலாம்